Pages

Friday, May 29, 2015

அடியார்கள் - வாரணாசி சுப்புலக்‌ஷ்மியம்மாள்



வாரணாசி சுப்புலக்‌ஷ்மியம்மாள் நிறைய விரதம் இருப்பார், அளவுக்கு மீறி இப்படி இருப்பதை பார்த்து பகவான் இப்படி இருக்கத்தேவையில்லை என்றார். அவளோ சாஸ்த்திர புத்தகத்தை எடுத்து வந்து காட்டினாள். அதில் தேகத்தையும் போஷித்து தன்னையும் உணர விரும்புபவன் முதலையை தெப்பம் என நினைத்து ஆற்றை கடக்கப்பவன் போல்என்று இருந்தது.
பகவான் அதுக்கு இப்படி பட்டினி இருக்கணும்ன்னு அர்த்தமில்லை. உடம்பை வருத்தக்கூடாது. அதுக்கு அர்த்தம் உடம்புக்கு தேவைக்கு மேலே தரக்கூடாது. மனசுக்கு விரதத்தை கொடு. உடம்புக்கு தேவையானதை கொடுத்து அது ஒரு தடையா இல்லாம இருக்கச்செய்யணும். அதுக்கு மிதமான சாத்வீக ஆகாரம் போதுமானதுஎன்று கூறினார்.

வாரணாசி சுப்புலக்‌ஷ்மியம்மாவுக்கு நிறைய படிக்கப்பிடிக்கும். ஒரு சமயம் பக்த விஜயம் படித்துக்கொண்டு இருந்தார், அதில் நாமதேவர் பாண்டுரங்கனிடம் பேசிக்கொண்டு இருப்பார்; சேர்ந்து சாப்பிடுவார் என்றெல்லாம் எழுதி இருந்தது. இதெல்லாம் உண்மைதானா என்று சந்தேகம் எழுந்தது. பகவானிடமே கேட்டுவிடலாம் என்று நினைத்தார்.
 ஒரு நாள் காலை பகவான் உணவு முடித்து சாவதானமாக அமர்ந்திருந்த போது அவருக்கு வெந்நீர் கொடுத்துவிட்டு பகவானே! நாமதேவர் பாண்டுரங்கன் கூட உக்காந்து பேசி சாப்டு எல்லாம் செஞ்சிருக்காராமே? உண்மையா?” என்று கேட்டார்.
பகவான் ஆமா! அப்படித்தான் எழுதி இருக்கா! இப்ப நீயும் நானும் எவ்வளவு உண்மையோ அவ்வளவு அதுவும் உண்மை!என்றார். இது நிஜம்னா அதுவும் நிஜம்தான். இது பொய்ன்னா அதுவும் பொய்தான்! எல்லாம் பாவனைதான்! ஆனாலும் அப்படிச்சொல்லப்படாது. பக்தியோட ரசம் போயிடும். பக்தியே பாவனைதானே? பக்தியின் முதிர்ச்சிலே பக்தனுக்கு தான் வேறு பகவான் வேறுன்னு தோணாது. ஆனாலது வரைக்கும் பகவான் இப்படி எல்லாம் தன்னை வெளிப்படுத்திக்க வேண்டி இருக்கு! என்ன செய்யறது? பக்தன் கேட்கிறதை எல்லாம் கொடுக்க வேண்டி இருக்கு. நான் யார்ன்னு தெரிஞ்சா இப்படி எல்லாம் பாவனை தோன்றாது. பார்க்கிற நாமளேதான் பார்க்கப்படுவது எல்லாமும்! பார்க்கிறவரைத்தவிர எதுவும் உண்மையில்லை!என்றார்.


No comments: