Pages

Monday, June 26, 2017

அந்தணர் ஆசாரம் - 19 ஹோமங்கள்- 4




போன வாரம் முழுக்க தெரியாத்தனமா மாட்டிண்ட ஒரு வேலையில நேரம் போயிடுத்து. போஸ்ட் போட முடியலை. மன்னிக்க!

ஹோமங்களை நமக்கு நாமே செய்து கொள்ளலாம். அதுவே உசிதம். சங்கல்பம் செய்த பலனை நாம் எந்த அளவிற்கு சரியாக செய்தோமோ அதை பொருத்து பெறுவோம்.
நாமே செய்து கொள்ள முடியாமலும் போகலாம். நோயால் படுத்த படுக்கை ஆனவர் தனக்குத்தானே எப்படி செய்வது? இன்னொருவரை நியமிக்க வேண்டும்.

ஸ்ரௌத்த கர்மாக்கள் வேதத்திலேயே சொல்லப்பட்டவை. வேதத்தின் கர்ம காண்டத்தில் இவற்றின் நடைமுறைகள் விவரிக்கப்பட்டு இருக்கும். வேதமே இந்த நடைமுறையை விவரிக்கும்போது என்ன தக்ஷிணை தர வேண்டுமென்று குறிப்பிட்டு இருக்கும். ஏனைய கர்மாக்களில் அப்படி இல்லை. நாம் என்ன பேசிக்கொள்கிறோமோ அவ்வளவுதான். இஷ்டியில் இதற்கு மந்திரத்தில் "காமோ தாதா காமப் ப்ரதிக்ரஹீதா" என்று வரும். காமமே கொடுக்கிறது; காமமே வாங்கிக்கொள்கிறது. ஹோமம் செய்விப்பவர் எதையோ ஒன்றை விரும்பித்தானே செய்வித்தார்? அதே போல செய்து கொடுத்தவரும் தக்ஷிணையை விரும்பித்தானே செய்தார்?

ஆனால் இப்படி த்ரவ்யத்தை பெற்றுக்கொள்வது கொஞ்சம் இழிவாகத்தான் சொல்லப்படுகிறது. ஹோமத்தின் பலனில் பதினாறில் ஒரு பங்கு செய்தவருக்கு கிடைக்கும். அதே சமயம் கொஞ்சம் தபோ சக்தி அவரை விட்டுப்போகும். இதை மீண்டும் சமன் செய்ய அக்னி காரியம் செய்யலாம்; காயத்ரி ஜபிக்கலாம்; புண்ய தீர்த்தங்களில் நீராடலாம்.
நாங்கள் தனுஷ்கோடிக்கு சென்ற போது அழைத்துச்சென்ற சாஸ்த்ரிகள் எங்களுக்கு சங்கல்பம் செய்து வைத்து நீராட சொல்லிவிட்டு தானும் சங்கல்பம் செய்து நீராடினார். பின்னர் சொன்னார் "எத்தனையோ பேருக்கு ப்ராயச்சித்த கர்மாக்கள் செய்து வைக்கிறேன். அதனால் எனக்கும் கொஞ்சமாவது பாபம் சேரும். அதை இப்படி அவ்வப்போது போக்கிக்கொள்கிறேன்".

நித்தியம் சஹஸ்ர காயத்ரி ஜபம் செய்பவருக்கும் அக்னி காரியம் - ஔபாசனம் - செய்பவருக்கும் பாபம் சேருவதில்லை. அது அவரை அடையும்போதே அவர் ஏற்கெனெவே செய்துள்ள தபசால் நசிந்துவிடுகிறது.


காலப்போக்கில் வைதிகர்கள் இந்த இரண்டையும் விட்டுவிட்டனர்
(தொடரும்)

No comments: