Pages

Friday, September 7, 2012

தினசரி பூஜை - 15

 
அபிஷேகத்துக்கு சுலபமாக சந்தன நீர், தேன், பால், சுத்த நீர் இவற்றை பயன்படுத்தலாம்

 சந்தன நீர் கொஞ்சம் சந்தனத்தை கரைத்து செய்வதாக இருக்க வேண்டும். சந்தனம் அரைத்தபின் அந்த சந்தன கட்டையையும் கல்லையும் கழுவி சேகரிக்கக்கூடாது. அது அஶ்வத்தாமாவுக்கு உரியது.  
தேன் ஒரு உத்தரணியில் (ஈரமில்லாமல் இருப்பதை பார்த்துக்கொள்ளுங்கள்) எடுத்தால் மெல்லிய கம்பி போல ஒழுக விட்டு நேரத்தை நீட்டிக்கலாம். விஸ்தாரமாக ருத்ரம், சமகம் என்று சொல்லி அபிஷேகம் செய்வோருக்கு இது சௌகரியம்.
 பால் நிறைய இருந்தாலும் சின்ன வெள்ளி கிண்ணத்தில் எடுத்து செய்வதும் நேரத்தை நீட்டிக்கும். பால் அபிஷேகத்துக்கு தாமிர தட்டு உதவாது என்பது நினைவிருக்கட்டும்
 அதே போல விபூதி சுட்டு விரலையும் சுண்டு விரலையும் நீக்கி மற்ற மூன்றால் விபூதியை வைத்துக்கொண்டு மெதுவாக 'அரைப்பதன்' மூலம் சிறுக சிறுக அபிஷேகம் செய்யலாம்

 இதற்கு முன் எல்லா சிலாக்களையும் துடைத்துவிட்டால் இந்த விபூதியை அபிஷேகம் முடிந்த பின் சேகரித்து வைத்துக்கொண்டு நெற்றிக்கு இட்டுக்கொள்ள (நீர் சேர்க்காமல் மாலை நேரத்துக்கு இட்டுக்கொள்வது போல) உபயோகிக்கலாம். எல்லாவற்றுக்கும் கடைசியில் நீரால் அபிஷேகம் செய்ய சுத்தம் செய்வது எளிதாகும்.

நான் பூஜை ஆரம்பித்தபோது முதலில் அபிஷேகம் செய்த போது இரண்டு தாம்பாளம் நிறைய அபிஷேக 'நீர்' இருந்தது! இதை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக செயலை திருத்தி இப்போது பால் கிண்ணத்திலேயே அத்தனையும் சேமித்து கடைசியில் குடித்து விடுகிறேன்
 
புருஷ சூக்தம் சொல்லியும் அபிஷேகம் செய்யலாம். வேதம் தெரியாதவர்கள்/ அதிகாரமில்லாதவர்கள் இறைவன் பெயரை சொல்லியே செய்யலாம். சந்தேகமில்லாமல் சரியே! பக்தி மார்கத்தில் மனசு ஊன்றுவதே முக்கியம். இறைவன் நம் சிரத்தையையே பார்க்கிறான். வேறு எதையுமில்லை.

ஐந்து சிலாக்களையும் அபிஷேகம் செய்ய வேண்டும். அதில் நெடு நேரம் நமக்கு இஷ்டமான இறை உருவத்துக்கு செய்யலாம். மற்றதை விட்டுவிடக்கூடாது என்பதற்காக சொன்னேன்.
அபிஷேகம் முடிந்து சுத்தமான மடித்துணியால் எல்லாவற்றையும் துடைத்து பூஜை செய்ய இருக்கும் தட்டில் வைக்க வேண்டும். வைப்பது முன் வைத்த அதே முறையில்தான்.

அபிஷேகம் முடிந்த பின் ஆசமனம். ஆவாஹிதாப்யோ தேவாதாப்யோ நமஹ ஸ்நாநாநந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி என்று மும்முறை நீர் முன் இருக்கும் கிண்ணத்தில் விட வேண்டும். வஸ்த்ரம், உபவீதம் அணிவிக்க வேண்டும். சிரத்தையுள்ள சிலர் தனியாக பட்டில் தைத்து வைத்திருப்பர். பட்டு என்பதால் ஏற்கெனெவே அணிவித்தது என்ற தோஷம் வராது. பட்டாக இல்லாத உடையை நனைத்து காய வைத்து மடியாக எடுத்து வைத்தால்தால் சரிப்படும். இதனால்தான் இந்த விஷயமே வேண்டாம் என்று அக்ஷதையை பயன்படுத்துகிறார்கள்,
ஆவாஹிதாப்யோ தேவாதாப்யோ நமஹ வஸ்தர உத்தரீய, உபவீதார்த்தே அக்ஷதான் சமர்பயாமி.
குடும்பஸ்தர்கள் ஒரு உடை மட்டும் உடுக்கக்கூடாது. அதாவது ஒரு வேஷ்டி மட்டும் கட்டிக்கொண்டு இருப்பது போல. மேலே ஒரு உடையும் இருக்க வேண்டும்; துண்டு, அங்கவஸ்திரம் போல. அதே போல இறைவனுக்கு உடை அணிவிக்கும்போதும் இரண்டு வஸ்திரங்கள் இருக்க வேண்டும். தினசரி பூஜையில் இப்படி வருவதில்லை. பிள்ளையார் சதுர்த்தி, ஸரஸ்வதி பூஜை என்று செய்யும் போது இந்த நிலை வரும். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன். நினைவிருக்க வேன்டுமே!

பரமாச்சாரியார் வாத்தியார் சொல்லி வைத்தே பூஜை செய்வார். வாத்தியாரை விட இவருக்கு அதிகம் தெரியும் என்றாலும் அவர் சொல்லச்சொல்லதான் இவர் செய்வார். இது கண் பார்வை சரியாக இல்லாத வாத்யார் தட்டுத்தடுமாறி சொல்ல பொறுமையாக காத்திருந்து இவர் லகுவாக அதை திருப்பிச்சொல்லும் போதுதான் வெளியே தெரியும். ஒரு நாள் மௌனம். வாத்தியார் சொல்லச்சொல்ல பூஜை போய்கொண்டு இருந்தது. வஸ்த்ர யுக்மம் சமர்பயாமி என்ற போது பூஜை நின்று விட்டது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்புறம் சிலர் ஊன்றிப்பார்த்து "வஸ்த்ர யுக்மம் என்றால் இரண்டு வஸ்த்ரம் இருக்க வேண்டுமே ஒன்றுதானே இருக்கிறது!" என்று சொல்ல இரண்டாம் துணி வந்த உடன் இரண்டு துணியையும் சமர்பித்து பூஜையை தொடர்ந்தார்.

ஆபரணங்களையும் சிலர் விசேஷமாக செய்து வைத்து அணிவிப்பதுண்டு. குறிப்பாக சாக்தர்கள்."ஆபராணி சமர்பயாமி"  

அடுத்து "திவ்ய பரிமள கந்தாந்தாரயாமி" என்று சொல்லி சந்தனமிட வேண்டும். வேல் பூஜையில் வைத்து இருந்தால் வேலின் நுனியை மூடும் படி சந்தனம் உருண்டையாக நுனியில் சொருக வேண்டும். இல்லாவிட்டால் தீ விபத்து நிகழும் வாய்ப்பு அதிகம்.

கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் சமர்பயாமி” என்று சொல்லி குங்குமம் இடுகிறார்கள். சூத்திரத்தில் இல்லை என்றே நினைக்கிறேன், இடை செருகலாக வந்து சேர்ந்திருக்கலாம். இந்த சந்தனத்தை அப்புறம் வாயில் போட்டுக்கொள்ள முடியாது என்பது தவிர பிரச்சினை ஒன்றும் இல்லை. செய்வதில் தவறில்லை. சுத்த மஞ்சள் குங்குமமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/

Post a Comment