Pages

Wednesday, April 11, 2012

முன்வினை...


ஆசான் ஜீவ்ஸ் சமீபத்தில நல்ல நண்பர்களா இருந்தவங்க காணாமல் போறதைப்பத்தி வருத்தப்பட்டு இருந்தார்.
பல வருஷங்கள் முன்னே பி.வி. ராமனின் ஜோதிட பத்திரிகையில் இதே போல ஒத்தர் கேள்வி எழுப்பி இருந்தார். உசுருக்குசிரா இருந்த நண்பன் ஏன் இப்ப பாரா முகமா இருக்கான்?
இதுக்கு ஜோதிடர் ஒருத்தரோட பதில் : க்ரஹ அமைப்புகள் மாறிவிட்டன. உங்க ஜாதகம் இப்படி, நண்பர் ஜாதகம் இப்படி. இன்னின்ன க்ரஹங்கள் ஆட்சியில இருந்தப்ப ஒத்துப்போச்சு; இப்ப அவை இடம் மாறி போனதால நட்பும் போயிடுத்து. திரும்பி வர சான்ஸ்? ஹும், சாதகமான அமைப்பு  திருப்பி வர இத்தனை வருஷமாகும். அப்போ நடக்கலாம்.
பின்னால் பல விஷயங்களை யோசித்துக்கொண்டு வரப்ப இன்னும் சில விஷயங்கள் புரிய வந்தது.
க்ரஹங்களேவா ஒரு பலனை கொடுக்கின்றன?
இல்லை. அவை போஸ்ட் மேன் மாதிரி. நமக்கு வர வேண்டிய தபாலை போஸ்ட் மேன் வர வேண்டிய நேரத்தில கொடுத்துட்டுப் போற மாதிரி. நமக்குன்னு விதிச்சு இருக்கிறதை தகுந்த நேரத்தில அவை கொடுத்துட்டுப் போயிடும். அப்படி சொல்கிறது கூட தப்புன்னு நினைக்கிறேன்.
பதஞ்சலி தன் யோக சாஸ்த்திரத்துல சொல்கிறார்: ஒருவர் பிறக்கும் போதே அவருடைய ஆயுசு, போகம் ஆகியன நிர்ணயிக்கப்படுகின்றன. அதாவது அவருக்கு இருக்கும் கர்மாவில இந்த ஜன்மாவில அவர் அனுபவிக்கப்போறது என்ன? அது எப்போ? எவ்வளவு நாள்? இதெல்லாமே பிறவியின் போது நிர்ணயிக்கப்படும்.
வர வேண்டியதும் போக வேண்டியதும் அதனதன் நேரத்தில நடக்கும். அது எந்த நேரம் என்பதை ஜோதிட வல்லுனர்கள் சொல்ல முடியும்.
அது சரி. நமக்கு வர வேண்டிய கர்மாவை நாமேதான் நிர்ணயித்து இருக்கிறோம். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' இல்லையா?
அது சரி, இதுக்கும் நண்பர்களுக்கும் என்ன சம்பந்தம்?
என்னன்னா இவர்கள் அந்த கர்மாவில சம்பந்தப்பட்டு இருக்காங்க.
போன ஒரு ஜன்மத்தில ஒத்தரை கஷ்டப்படுத்தினோம். இப்ப அவர் நம்மை கஷ்டப்படுத்த இருவர் கர்மாவும் பாலன்ஸ் ஆயிடும். முன்னொரு ஜன்மத்தில நல்லது செய்திருக்க அவர் அதை இப்ப திருப்பி செய்ய கர்மா பாலன்ஸ் ஆகும். ஆக முன் ஜன்மங்களில தொடர்பு இருந்தவங்கதான் இப்பவும் நம் தொடர்புக்கு வராங்க! (விடாது கருப்பு!)
இப்படி ஜனங்கள் ஜன்மா ஜன்மாவா தொடர்போட இருக்காங்ன்னு ஒரு தியரியை முன் வைத்தவர் Dr. Brian Weiss என்கிற சைக்கியாட்ரிஸ்ட். அவர் அவரோட நோயாளி நர்ஸ் ஒருத்திக்கு ஹிப்னாடிஸ மருத்துவம் கொடுக்கப்போய் பல ஆச்சரியமான விஷயங்களை கண்டு பிடிச்சார். ஹிப்னாடிஸ தூக்கத்தில அந்த நர்ஸ் தன் முந்தைய பல பிறவிகளில் நடந்ததை அனுபவிச்சு சொல்ல அதை எல்லாம் அவர் டாக்குமென்ட் செய்தார். இதை எல்லாம் ஆராய்ச்சி செய்து அவர் எழுதினதுலதான் அவர் பல பிறவிகளும் ஒண்ணா பிறந்து ஊடாடி முன்னேறுகின்றன ன்னு தியரைஸ் செய்தார். ( souls evolve in groups)

அப்ப, நண்பர்களாகட்டும் எதிரிகளாகட்டும் கர்மாவை தீர்க்கவே நம் வாழ்கைக்குள்ள வராங்க! ஒரு வேளை கொஞ்ச நாட்களில கர்மா தீர்ந்து போச்சுன்னா,  அனேகமா விலகிவிடுவாங்க! பல்மான கர்மாவா இருந்தா கூட இருந்துகிட்டே இருப்பாங்க!

ஆக இந்த பதிவை நீங்க படிச்சீங்கன்னா உங்களுக்கும் எனக்கும் இருக்கிற முன் தொடர்பு ஒரு காரணம்.  படிச்சுட்டு என்னை திட்டினீங்கனா, அது முன் வினைப்பயன்! ரோஜாப்பூ கொடுத்தாலும் அது முன் வினைப்பயனே!