Pages

Monday, August 29, 2011

ஹோமங்கள்


அக்னிஹோத்ரிகள் காணாம போய்க்கொண்டு இருக்கிற இந்த காலத்திலே அடுத்த சாய்ஸ் என்ன?
அடுத்த சாய்ஸ் ஹோமங்கள்தான்.

பாவங்களை தொலைக்க வேதத்திலே சொன்னது கூஶ்மாண்ட ஹோமம். கூஷ்மாண்டம் ன்னா சம்ஸ்க்ருதத்திலே பூசனிக்காய். இது அந்த விஷயம் இல்லை. ஸ்பெல்லிங் வேற. தமிழ்ல சரியா எழுத முடியாது. ஔபாசனம் செய்யக்கூடியவங்க இதை அந்த அக்னியிலே செய்யலாம்.

பொதுவா நாம் பார்க்கிற ஹோமங்களில பாரம்பரியமா இரண்டு வகை.

வைதீக முறை ஒண்ணு. தாந்த்ரிக முறை ஒண்ணு.

இப்பல்லாம் ரெண்டும் கெட்டானா மூணாவதா இரண்டையும் கலந்துகட்டி புதுசு புதுசா பலர் செய்ய ஆரம்பிச்சு இருக்காங்க. அதாவது வைதீகமா ஆரம்பிச்சு முடிக்கிறது. ஹோம மந்திரங்களை இஷ்டத்துக்கு மாத்திக்கறது. அப்புறம் எப்படி ரெண்டையும் சம்புடிதம் பண்ணேன் பாத்தீங்களா ன்னு பெருமை வேற! நாராயணா! யார் இவங்களுக்கு எல்லாம் இப்படி செய்ய சாங்ஷன் கொடுத்தாங்ன்னு தெரியலை.

30- 40 வருஷம் முன்னே ஹோமம் செய்கிற எஜமானனுக்கு ஹோம சமாசாரங்கள் தெரியும். அதனால ஏமாத்த முடியாது. இப்பல்லாம் செய்து வைக்கிறவங்க வெச்சதுதான் சட்டம். சரியா கேள்வி கேட்க ஆளில்லை. ஆனா விஷயம் தெரிஞ்ச வைதீகர் வித்தியாசமா செய்தா உடனே கேள்வி வருது. என்ன இப்படி செய்யலை? ஏன் அப்படி செஞ்சீங்க? பத்து விரல்லேயும் மோதிரம் போட்ட தீக்ஷிதர் இப்படித்தான் செஞ்சார்....

சரி சரி இப்படியே எழுதிட்டு போனா பொலம்பல் போஸ்ட் ஆகிடும்.

வைதீக முறை ஒழுங்கா வேத அத்யயனம் செய்தவங்க செய்யக்கூடிய முறை. ஏன்னா செய்முறையில நிறைய வேத மந்திரங்கள் வரும். எல்லா ஹோமத்துக்குமே ஸ்தாலீபாகம் என்கிற ஹோமமே பேசிக். மத்தது எல்லாமே அதோட வேறு வடிவங்கள்தான். ஆரம்பிக்கிற முடிக்கிற ப்ரொசீஜர் எல்லாத்துக்கும் ஏறக்குறைய ஒண்ணே. நடுவிலே தேவதை, ஹோமம் செய்கிற பொருள், மந்திரங்கள் மாறும். அவ்வளவே. அதனால ஹோமம் செய் முறை கத்துக்கிறது ஒண்ணும் கஷ்டம் இல்லை. செய்கிறதும் ரொம்ப ஒண்ணும் கஷ்டம் இல்லை. ஆனாலும் பாருங்க, பெரும்பாலும் இவை பலன் தரதில்லை. ஏன்?

மந்திரங்களுக்கு ஒரு தாள கதி இருக்கு. இவ்வளவு நேரம் சொல்லணும்ன்னு இருக்கு. இப்படி ஸ்வரம் இருக்கணும்ன்னு இருக்கு. சீக்கிரமா ஹோமம் முடிச்சுட்டு ஆபீஸ் ஓடணூம்ன்னு அவசரப்படுத்தினா ஆகாது. வாத்தியாருக்கு என்ன தக்ஷிணைதான் கிடைச்சுடுமே. அவரும் அவசர அவசரமா மந்திரம் சொல்லி, சிலதை விட்டு ஒப்பேத்திவிட்டு போய் விடுவார்.

ஹோமம் செய்விக்கிறவர் ஆசார அனுஷ்டானத்தோட இருக்கணும்ன்னு இருக்கு. சந்தியாவந்தனமே செய்யாதவர் ஹோமம் செய்வித்து என்ன பலன் அடைய முடியும்?

ஹோமம் செய்கிறவரும் ஆசார அனுஷ்டானத்தோட இருக்கணும். பெரு நகரங்களிலே பல சாலைகள் வழியாதான் பைக்கிலே போகிறாங்க. போகிற இடத்திலே குளித்து சுத்தி செய்து கொள்ளலாம். எத்தனை பேருக்கு சாத்தியம்? காலை முதல் நீர் கூட குடிக்காம இருந்து செய்யணும். எனக்கு வேதம் சொல்லி கொடுத்த குருவை தவிர இப்படி யாரும் செய்து இன்னும் பார்க்கலை. காலை காபி இல்லாவிட்டா ஒண்ணுமே ஓடறதில்லயே! நாமேதான் உபசாரம்ன்னு பால் சாப்பிடறீங்களா ன்னு கேட்கிறோமே!

இதான் மந்திர லோபம் தந்திர லோபம் என்கிறது. என்னதான் ஹோமத்தின் கடைசியில இதுக்கெல்லாம் ப்ராயச்சித்தம் செய்தாலும் முழு பலன் கிடைக்காதுதான்.

பக்தி லோபமும் உண்டு. ஏதோ யாரோ சொன்னாங்கன்னு செய்யலாம்ன்னு இறங்கி வாத்யார்கிட்டதான் தர்பையை கொடுத்தாச்சேன்னு ஹோமத்தை கவனிக்காம அந்த நேரத்தில வருகிற நண்பர்கள் கூட பேசிகிட்டு இருக்கறவங்களை பாத்து இருக்கேன். நம்பிக்கை இல்லாம எவ்வளோ பலன் கிடைக்கும்?

திருப்பி பொலம்பலா போயிட்டு இருக்கா?
சரிசரி..

இப்ப புதுசா பல பல ஹோமங்கள் வேற உருவாகிகிட்டு இருக்கு....

Friday, August 26, 2011

டிமன்ஷன்...உரத்த சிந்தனை:

உரத்த சிந்தனை தொடரும்போது வேற இடத்தில தொடருது, அப்படியே விடுவோம்.

இந்த தேவர்கள் எங்கே இருக்காங்க? தேவலோகம்ன்னு ஒரு தனி இடமா? நம்ம உலகம் இருக்கிற மாதிரி பிரபஞ்சத்தில வேற ஒரு இடமா?

பல இடங்களிலேயும் தேவலோகம்ன்னு குறிப்பிட்டு இருந்தாலும் அது எங்கோ இல்லை; இங்கேயேதான் வேற டிமன்ஷன்ல இருக்குன்னு என் அனுமானம். அதென்ன வேற டிமன்ஷன்?

அட்வகேட் ராமசாமியை தேடிப்போறேன். அவர் இன்ன நகரிலே எட்டாவது தெருல இருக்கார்ன்னு சொல்கிறாங்க. அந்த எட்டாவது தெருவுக்கு போனால் ஒண்ணும் புரியலை. விசாரிக்கிறேன். ஓ, இங்கே இன்னும் அம்பது மீட்டர் போய் வலது பக்கம் திரும்புங்க சார். ரெண்டாவது குறுக்குத்தெரு. அங்கேதான் இருக்கார்ன்னு சொல்லறாங்க. ரெண்டாவது குறுக்குத்தெரு போகிறேன். விசாரிக்கிறேன். ஒரு 40 அடி தூரம் போங்க. வலது பக்கம் 4 ஆம் நம்பர் வீடு என்கிறாங்க. அங்கே போகிறேன். ராமசாமி அட்வொகேட் 2 ஆம் மாடி ன்னு போர்ட் போட்டு இருக்கு. இரண்டாம் மாடி ஏறுகிறேன். அங்கே விசாரிக்கிறேன். அடடா, அவர் மூணு நாள் முன்னே வரை இங்கதான் சார் இருந்தார். இப்ப ஊருக்கு போயிட்டார்,வர இன்னும் ரெண்டு நாளாகும் என்கிறாங்க.

இந்த எட்டாவது தெருவிலே 50 மீட்டர் என்கிறது முதல் டிமென்ஷன்.
வலது பக்கம் திரும்பி 40 அடி என்கிறது இரண்டாவது டிமென்ஷன்.
இரண்டாம் மாடி என்கிறது மூன்றாவது டிமென்ஷன்.
மூணு மாசம் முன்னே என்கிறது நாலாவது டிமென்ஷன்.

இந்த நாலும் சரியா பிக்ஸ் பண்ணாத்தான் ஆசாமியை பார்க்கலாம்.

தேவர்கள் இதெல்லாமும் இல்லாம இன்னும் ஒரு டிமன்ஷன்ல இருக்காங்க. எப்படி க்ரவுண்ட் ப்லோர்லேந்து பார்க்க முடியாதோ, அப்படியே மாடி ஏறிப்போனா பார்க்கலாமோ அப்படி ஒரு வழியா அந்த டிமன்ஷனுக்கு பயணம் செஞ்சா பார்க்க முடியலாம்.

எப்படி இந்த டிமென்ஷனுக்கு போகிறது?

ஹா! அதான் சமாசாரம்.

இறை சக்தி எங்கேயும் நிறைஞ்சு இருந்தாலும் சாதாரணமா நாம் அதை அணுக முடியறதில்லை. அதை அணுக ஏதோ ஒண்ணு விசேஷமா வேண்டி இருக்கு. இதை ஒரு கதவு - போர்டல் என்கிறாங்களே - அதுன்னு வைச்சுக்கலாமா?

தினசரி பூஜை செய்கிற விக்கிரஹம், ஆகம விதிகளாலே பிரதிஷ்டை செய்த மூர்த்திகள், ஹோம குண்டம் இப்படி சிலது உடனடியா தோணுது. பூக்கள், அரைத்து 4 மணி நேரமாகாத சந்தனம், மங்கள அக்ஷதை இப்படி சிலதுக்கும் அந்த மாதிரி ஒரு சிறப்பு சக்தி இருக்கணும். அதனாலதான் குறிப்பா இதை எல்லாம் பூஜைக்கு பயன்படுத்தறோமோ?

மேலும் சில தேவதைகளுக்கு சிலது பிடிக்கும், சிலது பிடிக்காது என்றெல்லாம் சொல்கிறோம். பிள்ளையார் என்றால் மஞ்சள்பொடியால செய்து அல்லது சோனா பத்ரத்தில் ஆவாஹனம் செய்து பூஜை செய்கிறோம். சாளகிராமத்தில் எப்போதும் விஷ்ணு இருக்கிறதாக சொல்கிறோம். தங்கம் தாமிரம் இதை குறிப்பா பூஜைக்கு பயன்படுத்தறோம். இதுக்கெல்லாம் இப்படித்தான் ஒரு சிக்னிபிகன்ஸ் இருக்கோன்னு யோசனை.

நாலு டிமன்ன்ஷனுக்கு மேலே கிடையாது, இந்த கூடுதல் டிமன்ஷன் எல்லாம் உடான்ஸ் ன்னு நினைச்சா இந்த பக்கத்தை பாருங்க. சயன்ஸ் 10 -11 டிமன்ஷன் இருக்கிறதா இப்ப ஒத்துகொண்டு இருக்கு. அதைப்பத்தி மேலே ஆராய்ச்சி நடக்குது.

Thursday, August 25, 2011

உரத்த சிந்தனை.. யாகங்கள்..தேவர்களை குறித்து இஷ்டி செய்கிறார்கள்.

ஒரே இஷ்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட தேவர்களுக்கு ஹவிஸ் கொடுப்பதுண்டு. காம்ய இஷ்டி என்கிறது ஒரு விஷயத்தை விரும்பி செய்வது. இன்ன இன்ன ஆசைக்கு இன்ன இன்ன இஷ்டி என்று நிர்ணயம் செய்து இருக்கு.

எதை குறித்து செய்கிறோம் என்கிறதை பொருத்து ஒரே தேவதை வேற வேற ரூபத்திலும் வரும். அக்னியே வெவ்வேறு ரூபத்தில் அக்நிபவமானன், அக்னி பாவகன், அக்னி சுசன் என வரலாம். சில சமயம் இரண்டு தேவதைகள் சேர்ந்தும் வரலாம். இந்த்ராக்னி (இந்திரன் + அக்னி) , மித்ரா வருணன் என்பது போல.

இந்த இஷ்டிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அதனால செய்கிறதும் கஷ்டம். சும்மா நாலு பேரை கூட்டிக்கொண்டு செய்ய முடியாது. விஷயம் தெரிஞ்ச நாலு பேராவது வேணும். நிறைய தயாரிப்பு வேணும். செய்கிறவர் ஆசார அனுஷ்டானத்தோட இருக்கணும். அவரோட ஆத்ம சக்தியை பொருத்தே பலனும் அமையும்.

காம்ய இஷ்டிக்கு இன்னும் அதிக கட்டுப்பாடுகள். யாகம் செய்கிறவர் மழையில் நனைந்தால்.. ன்னு எல்லாம் சொல்லி சிலது சொல்லி இருக்கும். படுக்கையில் படிக்காதே, பிச்சை எடுத்து சாப்பிடுன்னு கூட விரதம் சொல்லி இருக்கும்.

யாகம் செய்கிற காலமும் வெவ்வேறா இருக்கும். தொடர்ந்து ஒரு வருஷம் செய்கிற சத்திர யாகங்கள் இருக்கு. இந்த ஒரு வருஷமும் தீக்ஷை இருக்கணும். அதுக்கு பல கட்டுப்பாடுகள்.

மழை விரும்பி செய்கிறது காரீரேஷ்டி . பல கட்டுப்பாடுகள். தமிழ்நாட்டில் மழை மிகக்குறைந்து கஷ்டப்பட்ட நேரத்தில் சிலர் போது பொது நலம் கருதி அதை செய்தாங்க. மழை ஒண்ணும் பெரிசா பெய்யலை. மஹா பெரியவரிடம் போய் முறையிட்டார்கள். "ஏண்டா, உப்பில்லாமல் பத்தியம் இருக்கணுமே? அப்படி எல்லாரும் இருந்தாங்களோ ? " என்று கேட்டாராம். உண்மைதான்; இஷ்டி செய்கிற டீமில் ஒத்தர் அதை தவற விட்டுட்டார். தலையை தொங்க போட்டுக்கொண்டு திரும்பினார்கள்.

ஒரு சமயம் பூலோகத்தில் கோவில், நதிக்கரை, கிராமம் ன்னு எல்லா இடங்களும் பலரும் ருத்ர பாராயணம் செய்ய ஆரம்பித்துவிட்டார்களாம். அப்படிப்பட்ட இடங்களை யமதூதர்கள் அணுக முடியலை. அதனால யம பட்டினத்துக்கு வர ஆசாமிகள் குறைஞ்சு போனாங்க. யமன் பிரம்மாகிட்ட போய் , என் வேலையை செய்ய முடியலைன்னு முறையிட்டாராம். அவரும் அவித்யா என்பவளோட இரண்டு பெண்களை பூலோகத்துக்கு அனுப்பினார். அவங்க பேர் அச்ரத்தா, துர்மேதா. இவங்க பூலோகத்தில நடமாட ஜனங்களும் சிரத்தை இல்லாமலும் கெட்ட புத்தி உடையவர்களாகவும் ஆகிவிட்டார்கள். இப்படி ஆனதும் அவர்கள் செய்த ருத்ர பாராயணத்துக்கு சக்தி குறைந்து போய்விட்டது. யமப்பட்டிணத்துக்கும் ஆட்கள் போக நேர்ந்தது.

பாராயணத்துக்கு இப்படி ன்னா யாகத்துக்கு சொல்ல வேண்டாம் இல்லையா? எவ்வளவு சிரத்தை பற்றோட செய்கிறோமோ அவ்வளவுதான் பலனும். சிரமப்படாம பலன் கிடைக்கறதில்லை. வெகு சிரமங்கள் நிறைந்த இந்த யாகங்களை விட்டு அடுத்ததை பார்க்கலாம்.

Wednesday, August 24, 2011

தேவர்கள் ஆராதனை...உரத்த சிந்தனையா இருக்கறதால கொஞ்சம் டைக்ரஸ் ஆகிவிட்டோம். அடுத்து தேவர்களை பார்க்க திருப்பியும் போகலாம்.
----
ஒரு தரம் திருப்பி நினைவு படுத்திக்கலாம்.
அஷ்ட வசுக்கள் யார் யார்? ஆபன், த்ருவன், சோமன், தாரன், அனிலன், அனலன், ப்ரத்யுஷா, ப்ரபாஸா.
ஒத்தர் (http://hindustories.blogspot.com/2008/06/ashta-vasus.html) இந்த அஷ்டவசுக்களை இயற்கை சக்திகள் என்கிறார். பட்டியலும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. எங்கிருந்து எடுத்ததுன்னு உசாத்துணை இல்லை.
ஆபன் (நீர்),  சோமன் (சந்திரன்), தாரன் (நிலம்), அனிலன் (வாயு), அனலன் (நெருப்பு), த்யௌ (வானம்) அந்தரிக்ஷம், நக்ஷத்திரம் (?த்ருவன்).

அடுத்து ஏகாதச ருத்திரர்கள்: அஜைகபாத், அஹிர்புத்னியன், விரூபாக்ஷ்தன், ரைவதன், ஹரன், பஹுரூபன், த்ரையம்பகன், சாவித்ரன், ஜயந்தன், பினாகி, அபராஜிதன்.

இந்த வைவஸ்வத மந்வந்தரத்துக்கு 12 ஆதித்யர்கள்:
இந்திரன், தத்தன், பகன், த்வஷ்டா, மித்ரன், வருணன், அர்யமா, விவஸ்வான், சவிதா, பூஷா, அம்ஷுமான், விஷ்ணு.

அஷ்டவசுக்களை நாம் கேள்வி பட்டிருக்கோம், மஹாபாரத கதையில வரதால. பீஷ்மர் எட்டாவது வசு.
வசிஷ்டர்கிட்டே காமதேனு இருந்தது. அது நாம் கேட்டதெல்லாம் கொடுக்கும். அஷ்ட வசுக்களில் பிரபாசனின் மனைவி தன் தோழிக்காக காமதேனுவின் பாலைக்கேட்க அஷ்ட வசுக்கள் அதைத்திருட முற்பட்டனர். ஆனால் வசிஷ்டர் இதை அறிந்து பூமியில் பிறக்க இவர்களுக்குச் சாபம் கொடுத்தார். பிரபாசன்தான் பீஷ்மரா பிறந்தது. அருமையான கதை இங்கே பாருங்க.

ஏகாதச ருத்திரர்களை நாம் தெரிஞ்சிருக்க மாட்டோம்.
அதே போலத்தான் த்வாதச ஆதித்யர்களும்; ஆனா இந்த லிஸ்டில சில பெயர்கள் தெரிஞ்சு இருக்கும். வேதம் அத்யயனம் செய்தவங்களுக்கு இந்த ரெண்டு லிஸ்ட் பேர்களும் அறிமுகம் ஆகி இருக்கும்.

எப்படின்னா வேத மந்திரங்கள் இந்த தேவதைகளை குறித்து செய்கிற யாகங்களை குறிப்பிட்டு அதுக்கான மந்திரங்களை, ப்ரொசீஜரை எல்லாம் சொல்லி இருக்கு.
இந்த லிஸ்டில இந்திரன் வருணன் விஷ்ணு மூணு பேரையும் நாம கேள்வி பட்டிருக்கோம். இந்த மூணு பேர்ல விஷ்ணுவுக்குத்தான் வழிபாடு இன்னும் இருக்கு. (தீவிர வைணவர்கள் யாரும் சண்டைக்கு வர வேண்டாம். வேதத்தில இருக்கிறதைதானே சொல்ல முடியும்.)
இந்த வேதத்தில சொல்லி இருக்கற தேவதைகளை திருப்தி  செய்கிறது எப்படி?

யாகங்கள் யக்ஞங்கள் மூலமாக.
(இது ரெண்டுத்துக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு.)

அடிப்படையில இஷ்டி என்கிற வேள்வி. அதிலே தேவதை, (அதுக்கான மந்திரங்கள்) ஹோமம் செய்கிற பொருள், தக்ஷிணை இந்த மூன்றும் குறிப்பா சொல்லி இருக்கும்.
மத்தபடி எல்லாத்துக்கும் சில அடிப்படை யாகத்தை ஒட்டியே ப்ரொசீஜர் இருக்கும்.
ஹோமம் செய்கிற பொருள்ன்னா அதில ஆடு, மாடு, குதிரை ஏன் மனுஷன் கூட உண்டு. அதெல்லாம் வேற யுகத்தில. இந்த யுகத்துக்குன்னு போட்ட சட்டதிட்டங்களில கலி யுகத்தில விலக்க வேண்டியவை என்கிற லிஸ்ட்டிலே பல விஷயங்கள் இருக்கு. அதில இந்த பசு, குதிரை, மனுஷ யாகங்களும் உண்டு.

இப்படிப்பட்ட யாகங்களை எல்லாரும் செய்ய முடியாது. அக்னி ஆதானம் செய்து அக்னிஹோத்திரம் செய்து, ஒவ்வொரு அமாவாசை பௌர்ணமியையும் ஒட்டி வருகிற பிரதமை திதிகளிலே இஷ்டி செய்து வருபவர்கள் மட்டுமே செய்யலாம். மற்றவர்கள் செய்விக்கலாம்.

தமிழ்நாட்டிலேதான் இன்னும் இப்படி செய்யக்கூடியவங்க இன்னும் கொஞ்சம் இருக்காங்க. அடுத்தபடியா ஆந்திரா. கர்நாடகா கொஞ்சமா. குஜராத்லேயும் உண்டு. கேரளாவும் மிகக்குறைவு.

அக்னிஹோத்திரிகள் எண்ணிக்கை கண்ணெதிரேயே குறைந்து போய்க்கொண்டு இருக்கிறது. பகவான்தான் காப்பாத்தணும்.

Tuesday, August 23, 2011

பத்ம புராணத்தில சொன்ன மற்றவர்கள்....


போகிற போக்கில் அப்படியே பத்ம புராணத்தில சொன்ன மற்றவர்களை பத்தியும் பாத்துடலாம்:

அசுரர்கள் திதிக்கும் கஷ்யபருக்கும் பிறந்தவர்கள்: ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன்.

ஹிரண்யகசிபுவுக்கு 4 புத்திரர்கள். ஆயுஷ்மான், ஷிபி, வாஷ்காலி, விரோசனன்.

விரோசனன் க்கு பலி என்ற புகழ் பெற்ற மகன் உண்டு. பலிக்கு பாணாசுரன் உள்ளிட்ட 100 புதல்வர்கள். பாணாசுரன் வில்வித்தையில் மிகவும் தேர்ச்சி பெற்றவன்.  இவனுக்கு சிவன்  மஹாகாலன் என பெயர் கொடுத்து தன் பரிவாரத்தில் வைத்துக்கொண்டார்.

ஹிரண்யாக்ஷனுக்கு 4 புதல்வர்கள். உலூகன், சகுனி, புதசந்தாபன், மஹா பீம்.
இவர்கள் மூலம் 27 கோடி தானவர்கள் உண்டானார்கள்.

தனுவுக்கும் கஷ்யபருக்கும் 100 மகாவீரர்கள் பிறந்தனர். 

அவர்களில் முக்கியமானவர்கள்: விப்ரசித், ஸ்வர்பானு, மயன், வ்ருஷபர்வன், வைஷ்வாநரன். மயனின் புதல்வி மண்டோதரி. வைஷ்வாநரனின் புதல்வி புலோமா. இவளுக்கு பவுலோம என்ற புதல்வியும் காலகேயன் என்ற புதால்வனும் உண்டு. (காலகேயன் ப்ரம்மாவிடன் பல வரங்கள் வாங்கி மூவுலகையும் கலங்கடித்து கடைசியில் மஹாபாரத போரில்  அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.)
விப்ரசித் சிம்மிகையை மணந்தான். இவர்களது புத்திரன் ராஹு. இவன் அம்ருதத்தை அருந்தி சாகா நிலை அடைந்தான்.

கஷ்யபரின் இன்னொரு மனைவி தாம்ரா. இவளுக்கு ஆறு புதல்விகள். இவர்கள் மூலம் பறவையினம் உண்டாயிற்று. சுகி மூலம் கிளிகளும், ஆந்தைகளும் உருவாயின. ஷைனி மூலம் அதே பெயர் கொண்ட பறவைகளும் பசி மூலம் கிர் பறவைகளும் க்ருத்ரி மூலம் கழுகு, கருடன்களும் சும்ருஹ்னி மூலம் புறாக்களும் உண்டாயின. சுசி மூலம் அன்னங்களும் சாரஸ், கராண்டா, ப்லவம் என்ற பறவைகளும் உண்டாயின.

தேவி வினதி கஷ்யபரின் ஆன்மிக சிந்தனை உள்ள மனைவி. இவளுக்கு கருடனும் அருணனும் புதல்வர்கள்.  இவளுக்கு சௌதாமினி என்ற பெண்ணுமுண்டு. இவள் க்ஷண நேரம் தோன்றி மறையும் மின்னல் போல வானில் அவ்வப்போது தோன்றுவாள்.
அருணனுக்கு சாம்பாதி ஜடாயு என இரண்டு புதல்வர்கள்.

சுரசை கஷ்யபரின் இன்னொரு மனைவி. இவள் ஆயிரக்கணக்கான பாம்புகளை பெற்று எடுத்தாள்.

கத்ரு மேன்மையான விரதத்தை கடைபிடித்து ஆயிரம் தலை கொண்ட நாகங்களை பெற்றாள்....

Monday, August 22, 2011

ஸ்ரீ ப்ரஹ்ம புராணத்தில் இருந்து....உரத்த சிந்தனையில் தேவர்கள் பத்தி எழுதறோமே; ஒரு லிஸ்ட் எடுக்கலாம்ன்னு ஆராய்ஞ்சா ரெபரென்ஸ் ப்ரஹ்ம புராணத்தில கிடைச்சது. கொஞ்சம் தலையை சுத்தியது. சரி சரி, யாம் பெற்ற இன்பம்... ன்னு நினைச்சுகொண்டு எடுத்து எழுதிட்டேன்...

முதலில் சங்கல்பத்தாலும், தர்சனத்தாலும், ஸ்பர்சத்தாலுமே பிரஜைகள் உண்டாயின. தக்ஷப்ரஜாபதி ஆண் பெண் உறவால் ப்ரஜைகள் உண்டாகட்டும் என விதித்தார். இதனால் ப்ரஜா உற்பத்தி விரைவாகவும் நிச்சயமாகவும் ஆயிற்று. வீரிணி என்ற தக்ஷப்ரஜாபதியின் மனைவி இரண்டு தர்மர்கள், 13 கஷ்யபர்கள், 27 சந்திரன்கள், 4 அக்னிஷ்டோமிகர்கள், இரண்டு ப்ருகு புத்திரர்கள், இரண்டு குஷாஸ்வஸ், இரண்டு மகரிஷி ஆங்கீரஸ் ஆகியோரை பெற்று எடுத்தாள்.

தர்மரின் மனைவிகள்: அருந்ததி, வசு, ஜாமி, லம்பா, பானு, மருத்வதி, சங்கல்பா, முஹூர்தா, சந்த்யா, விஷ்வா. இவர்களிடம் பிறந்தவர்களே தேவர்கள்.

விஷ்வாவுக்கு விஸ்வேதேவர்கள் பிறந்தனர்;
சந்த்யாவுக்கு சந்த்யா நாம தேவர்கள்;
வசுவுக்கு அஷ்ட வசுக்கள்;
மருத்வதிக்கு மருத் தேவர்கள்;
பானுவுக்கு பானு;
முஹூர்தாவுக்கு முஹூர்தாமி தேவர்கள்;
லம்பாவுக்கு கோஷ்.
ஜாமிக்கு நாக கன்யைகள்.
அருந்ததி எல்லா ப்ராணிகளுக்கும் தாய் ஆனாள்.
சங்கல்பாவுக்கு சங்கல்ப தேவதை.

சரி, அஷ்ட வசுக்கள் யார் யார்?
ஆபன், த்ருவன், சோமன், தாரன், அனிலன், அனலன், ப்ரத்யுஷா, ப்ரபாஸா.

ஆபனுக்கு 4 மகன்கள். ஷாந்தன், வைதண்டன், சாம்பன், பப்ரு முனி.

இவர்கள் யக்ஞங்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் ஆவர்.
த்ருவனின் புத்திரன் காலன்;
சோமனின் புத்திரன் வர்சஸ்.
தாரனின் புத்திரர்கள் த்ரவிணா, ஹவ்யவாஹன்.
அனிலன் க்கு ப்ராணன், ரமணன், சரீரன் என மூன்று புத்திரர்கள்.
அனலனுக்கு அக்னி போன்ற பல புத்திரர்கள். இவர்கள் கடற்கரை புற்களுக்கு பிறந்தவர்கள். ஷாகா, உபஷாகா, நாய்கமேயன் என சிலர் முக்கியமானவர்கள்.
ப்ரத்யுஷாவின் புதல்வர் தேவல முனி.
ப்ரபாஸாவின் புதல்வன் விஸ்வகர்ம ப்ரஜாபதி. இவர்தான் தேவர்களின் ஆர்கிடெக்ட்.

அடுத்து ஏகாதச ருத்திரர்கள்: அஜைகபாத்.
அஹிர்புத்னியன்
விரூபாக்ஷ்தன்
ரைவதன்
ஹரன்
பஹுரூபன்
த்ரையம்பகன்
சாவித்ரன்
ஜயந்தன்
பினாகி
அபராஜிதன்.
இவர்கள் 84 கோடி ருத்ர கணங்களுக்கு தலைவர்கள்.

கஷ்யபரின் மனைவிகள்: அதிதி, திதி, தனு, அரிஷ்டா, சுரசா, சுரபி, வினதா, டாம்னா, க்ரோதவஷா, இரா, கத்ரு, காசா, முனி முதலாக பலர்.

இந்த வைவஸ்வத மந்வந்தரத்துக்கு 12 ஆதித்யர்கள்: இவர்கள் அதிதிக்கும் கஷ்யபருக்கும் பிறந்தவர்கள்.
இந்திரன்
தத்தன்
பகன்
த்வஷ்டா
 மித்ரன்
வருணன்
அர்யமா
விவஸ்வான்
சவிதா
பூஷா
அம்ஷுமான்
விஷ்ணு.

Thursday, August 18, 2011

நடக்க வேண்டி இருந்தா அது நடந்தே தீரும்...ஏன்?

எதிர் பாராம இங்கே ஒரு கமா போட்டுட்டேன். பதிவு நீளம் அதிகமா போச்சுன்னு வெட்டின
துல இங்கே நின்னு போச்சு. இது ஒரு எதிர்பார்ப்பை தோற்றுவிக்கும்ன்னு யோசனை பண்ணலை. இருந்தாலும்....

இது இப்படின்னு எந்த சாஸ்திரத்திலேயும் இல்லை. உரத்த சிந்தனையில் இது ஒரு பகுதி; அவ்வளவே. குழந்தையா இருந்தப்பவே திருமணம் செய்து வெச்சது ஒரு காலம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தள்ளி போக ஆரம்பிச்சது. காலேஜ் படிக்கும் போது திருமணம்ன்னு ஆச்சு. அப்புறம் பெண்களும் படிக்கணும், அப்புறம் கல்யாணம்ன்னு ஆச்சு. அப்புறம் பெண்கள் படிச்சு மேல் படிப்பும் படிச்சு.. அப்புறம் படிச்சு வேலைக்கும் போய்... அப்புறம் வேலைக்கு போய் கொஞ்சம் கையில சம்பாதிச்சும் வெச்சு கொண்டு... இப்படியாகவே போய் இப்பல்லாம் கல்யாணம் ஆகிற போது அரை கிழவன் அரை கிழவி ஆகிறதாக போச்சு.

இதோட விஷயம் -நல்லதா கெட்டதா எல்லாம் - இப்ப விவாதிக்கலை. விஷயம் என்னன்னா கல்யாணம் ஆவதற்கான / குழந்தை பெறுவதற்கான கிரக நிலை வந்து போயிடுது. (அதாவது அதற்கான சூழ்நிலை வந்து போயிடுது. அதை கிரக நிலை காட்டுது.) அப்புறம் வருந்தி இல்லாத வைத்தியம், பிராயச்சித்தம் ன்னு அலையறதுல என்ன விஷயம் இருக்கு? பஸ்ஸை கோட்டை விட்டவங்க அடுத்த பஸ் வர வரை காத்து இருக்க வேண்டியதுதான். சிலர் பஸ்ஸை காணமேன்னு இன்னொரு பஸ்ஸை பிடிச்சு சில மாசங்களுக்குள்ள "இன்கம்பாடபில்" ன்னு சொல்லி இறங்கற சமாசாரமும் அதிகமாயிட்டு வருது. சமூகத்தில பாரம்பரிய சிந்தனை உள்ளவங்க பலருக்கும் இது வருத்தம் தரக்கூடியதா இருக்கு.


ஜோதிடத்தை பத்தி எழுதினதுல சில பின்னூட்டங்கள். எனக்கு மிகவும் சரியாவே இருந்தது என்பது முதல் எனக்கு முழுக்க முழுக்க தப்பா சொன்னாங்க, அதனால் எனக்கு நம்பிக்கை இல்லை என்பது வரை. என் அனுபவமும் முழுக்க முழுக்க இந்த ஸ்பெக்ட்ரம்ல இருக்கு. சிலர் சொல்வது பலிக்குது. அந்த சிலரே வேறு நபர்களுக்கு சொல்லி பலிக்கலை. எல்லாத்துக்கு நேரம் காலம் சரியா இருக்கணும் போல இருக்கு. அதான் முன்னேயே சொன்னேனே - ஆனானப்பட்ட வசிஷ்டர் சொன்னதே வொர்க் அவௌட் ஆகலைன்னு. ஒரு விஷயம் சர்வ நிச்சயமா நடக்க வேண்டி இருந்தா அது நடந்தே தீரும். பெரிய ஜோதிஷ சக்ரவர்த்தின்னு பட்டம் வாங்கி இருந்தாலும் அப்போதைக்கு கண்ணை மறைச்சுடும். திருப்பி ஒரு நாள் ஜாதகத்தை பாக்கிற அதே ஆசாமி " அடடா! நான் அப்படியா சொன்னேன்? இதை எப்படி பார்க்காம விட்டேன்?” ன்னு வருத்தப்படறதையும் கேள்விப்பட்டு இருக்கேன்.

வரதை அப்படியே ஏத்துக்கவும் ஏத்துக்கலாம். இது மிக அரிதுன்னு சொன்னேன். தலை வலி வந்தா அப்படியே அனுபவிக்கவும் அனுபவிக்கலாம். இல்லை ஒரு வலி நிவாரண மாத்திரை சாப்பிடவும் சாப்பிடலாம். இல்லை டாக்டர்கிட்டே போகவும் போகலாம். சாய்ஸ் நம்மகிட்டே இருக்கு. மாத்திரை சாப்பிடறது இல்லை டாக்டர்கிட்டே போகிறது என்பது இன்னொரு செயல். செயல்தானே கர்மா? இந்த கர்மாவும் பலன் தரனுமே? எதிர்பார்க்கிற பலன் வலி நிவாரணம். இதுவும் நடக்கலாம். இல்லை இன்னிக்கு அவஸ்தை பட்டுத்தான் தீரணும்ன்னு இருந்தா தலைவலி போய் வயத்து வலி வரலாம். பலமான கர்மா எப்படியும் ஒரு பலனை கொடுத்துவிட்டே போகும்.

வெகு நாட்கள் மைக்ரேன் தலைவலியால கஷ்டப்பட்டு இருக்கேன். எங்க அப்பா ஹோமியோபதி மருந்து கொடுப்பதுண்டு. பலருக்கும் நிவாரணம் கிடைச்சு இருக்கு. அலோபதி மருந்துகள் சரி வரலைன்னு அப்பாகிட்டே மருந்து கேட்டேன். அவரும் விலாவரியா விசாரிச்சுட்டு மருந்து கொடுத்தார். அப்புறம்தான் இந்த தமாஷை அனுபவிக்க ஆரம்பிச்சேன்! தலைவலி வரது நின்னு போய் வயித்து வலி வர ஆரம்பிச்சது. அதுக்கு மருந்து கொடுத்தார். வாய்ப்புண் வந்து அவஸ்தை. அதுக்கு மருந்து கொடுத்தார். திருப்பி தலைவலி. இப்படி ஒண்ணு மாத்தி ஒண்ணு வர கடைசியில ஹோமியோபதி மருத்துவத்தை கை விட வேண்டி வந்தது.

இதுக்காக ஹோமியோபதி மருத்துவத்தை சரி இல்லைன்னும் சொல்ல முடியாது. அல்லது எங்க அப்பா நல்ல ஹோமியோபதி மருத்துவர் இல்லைன்னும் சொல்ல முடியாது. சின்ன குழந்தைகளுக்கு அவர் கொடுக்கிற மருந்துகள் நல்லாவே கேக்கும். ஹெர்பீஸ் சீக்கிரம் குணமாகும். குறிப்பா வயசானவங்களுக்கு … இந்த மருந்துல 'போஸ்ட் ஹெர்பிடிக் ந்யூரால்ஜியா' என்கிற அக்கி வந்து போன பிறகு வருகிற வலி வராது. ஆக அனுபவிக்க வேண்டிய கர்மா பலமாக இருக்க அனுபவிச்சே தீர வேண்டியது. உரத்த சிந்தனையா இருக்கறதால கொஞ்சம் டைக்ரஸ் ஆகிவிட்டோம். அடுத்து தேவர்களை பார்க்க திருப்பியும் போகலாம்.

Tuesday, August 16, 2011

கிரகங்கள்..


தேவர்களை ஆராதனை செய்து வேண்டியதை பெற்றுக்கொள்ளலாம் ன்னு பாத்தோம். சரிதான். எதுக்கு எந்த தேவதையை எப்படி ஆராதிக்கணும்? இங்கே நிறைய பிரச்சினை இருக்கு. இதுக்கு நிறைய பேர் போகிறது ஜோதிடர்கள்கிட்டேதான். ஜோதிடத்தை நம்புகிறார்கள், நம்பாதவர்கள் இருக்காங்க. இது அனுபவ விஷயம். ஆனானப்பட்ட வசிஷ்டர் குறித்த தேதியே வொர்க் அவௌட் ஆகலையே!

ஜோதிஷம் வெறும் கணக்கு இல்லை. பார்க்கிறவரோட ஆசார அனுஷ்டானம், தெய்வ பலம், மந்திர சித்தி இவற்றோட ஜாதகரின் பூர்வ புண்ணியம் முதலானவைகளும் சேரும். ஒத்தன் அனுபவிச்சு தீர வேண்டிய கர்மாவை அனுபவிச்சே தீரணும். அதுக்கு ப்ராயச்சித்தம் இருந்தாலும் ஜோதிஷருக்கு கண்ணுக்கு படாது. அல்லது ஜோதிஷர் சொல்லியும் நிறைவேற்றுவதில சிக்கல் ஏற்படலாம், தள்ளிப்போகலாம்... ஜோதிஷர்கள் கிரகங்களை பார்த்து ஏதேனும் பரிகாரம் சொல்கிறார்கள். இது எத்தனை தூரம் சரின்னு புரியலை. கிரகங்கள் ஒரு பலனை நேரடியா தருதா இல்லை இருக்கிற கர்மாவை அனுபவிக்க வைக்குதா? சனிக்கிரகம் நல்ல இடத்துல இல்லை, பிரச்சினை என்கிறாங்க. இதுல தனி நபர் மேலே எந்த கிரகத்துக்கும் காழ்ப்பு உணர்ச்சி இருக்குமா? வேணும்ன்னு கெடுதல் செய்யுமா? இல்லை பிடிச்சு இருக்குன்னு எங்கான மேலே தூக்கி கொண்டு விடுமா?

சட்டியில் இருக்கறதை எடுத்துக்கொடுக்கிற அகப்பைக்கு இருக்கிற முக்கியத்துவம்தான் கிரகங்களுக்கு. இல்லாததை எடுத்தும் கொடுக்க முடியாது. இருக்கிறதை இல்லைன்னு சொல்லவும் முடியாது. என்ன கால தாமதம் இல்லாம பலனை கொடுக்கவோ இல்லை ஒரு லிமிட்டுக்குள் கொஞ்சம் அதிகம் கொஞ்சம் குறைவு ன்னு கொடுக்கவோ முடியுமோ என்னவோ!

நவ கிரக பிராயச்சித்தத்துக்கு எனக்கு அதிக நம்பிக்கை இல்லாததுக்கு இன்னொரு காரணம் இருக்கு. என்ன பிராயச்சித்தம் சொல்கிறாங்க? இவ்வளவு ஆவிருத்தி ஹோமம் பண்ணுங்க என்கிறதுதான் முக்கியமா சொல்வது. ஹோமத்தில சொல்கிற இந்த மந்திரம் வேதத்தில எங்கே வருதுன்னு பாத்தா ஆச்சரியமா இருக்கு. பல கிரகங்களுக்கும் அதுக்கான மந்திரத்தின் பொருளுக்கும் சம்பந்தமே இல்லாம இருக்கும். அப்புறம் எப்படி அது கிரகத்தை மகிழ்விக்கிறதாகவோ ப்ராயச்சித்தமாகவோ ஆக முடியும்?

இது பத்தி இன்னும் ஒரு தீர்மானத்துக்கு வர முடியலை.

ஒருவர் பிறந்த உடனேயே இவருக்கு இவ்வளவு ஆயுள் இன்ன இன்ன போகம் என்றெல்லாம் நிர்ணயம் ஆகிவிடுகிறது. ஜாதகத்தை ஆராயும் போது இந்த இந்த கால கட்டத்தில் இந்த இந்த விஷயம் அனுபவிப்பார் ன்னு சொல்லலாம். சில சமயம் அதுக்கு தகுந்தாப்போல வாழ்க்கையை அமைச்சுக்கலாம். ஸ்கூல் பைனல் முடிச்ச பின்னே ஒண்ணும் பிரமாதமா படிக்கலையேன்னு ஜோதிஷர்கிட்டே ஜாதகத்தை காட்ட அவர் பாத்துட்டு இது வரைக்கும் கிரக நிலை அவ்வளோ சாதகமா இல்லை; ஆனா இனிமே நல்லா இருக்கு, படிக்க வைங்கன்னும் சொல்லலாம். இல்லை கிரகநிலை இவன் வியாபாரத்துல நல்லா வருவான்னு சொல்லுது; பிசினெஸ் வெச்சு கொடுத்துடுங்கன்னும் சொல்லலாம். இப்படி அடுத்து என்ன செய்யணும்ன்னு திட்டமிட வசதியா இருக்கும்.
இப்ப பலருக்கும் இருக்கிற பிரச்சினை கல்யாணம் ஆகலை; குழந்தை பிறக்கலை; இப்படி... காலாகாலமா இதெல்லாம் பிரச்சினையா இருந்து வந்தாலும், முன் எப்போதையும் விட இப்பல்லாம் இது அதிகமா இருக்கு போல தோணுது.
ஏன்?

Monday, August 15, 2011

ப்ராயச்சித்தம்.....தேவர்களை அண்டி காரியம் சாதிச்சுக்கறது ஒண்ணும் இழுக்கு இல்லை. முந்தின பதிவில "ஒத்தருக்கு ஒத்தர் உதவி செய்து கொண்டு வாழுங்கன்னு சொல்லிட்டாராம்." ன்னு எழுதி இருக்கேன் இல்லையா? பலரும் நினைக்கிற மாதிரி வேதங்கள் பிலாசபி மட்டும் சொல்லலை. அது வேதாந்தம் என்பது. வேத அந்தம் -வேதத்தின் கடைசியில் வருவது. அதுக்கு முன்னே இருக்கிறதெல்லாம் வேத மந்திரங்கள், அவற்றை ப்ரயோகம் செய்ய ப்ரொசீஜர்ஸ். வாழ்க்கையை நல்லா வாழு; அப்புறம் கூடவே பிலாசபி தெரிஞ்சுக்கோ என்கிறது வேதம். அது கொஞ்சம் கொஞ்சமா புரியட்டும். அப்புறம் அதுல ருசி வந்து சாதனை செய்கிறதானால் செய்யலாம். வாழ்க்கையை நல்லபடி வாழ நிறைய சமாசாரங்கள் சொல்லி இருக்கு. இன்ன இன்ன ஆசைக்கு இன்ன இன்ன ஹோமம் செய்ன்னு சொல்லி இருக்கு.

நமக்கு என்ன கிடைக்கும் என்கிறது நம்ம கர்மாவால நிர்ணயிச்சு இருக்கு இல்லையா? அதை ஏன் மாத்தணும், எப்படி மாத்த முடியும் ன்னு கேட்டா.... கிடைக்கிறதை வெச்சு வாழ்க்கையை ஓட்டறது ன்னு மனசு வந்துட்டா இப்படி எதுவும் செய்ய வேண்டாம்தான். ஆண்டவன் கொடுக்கிறது எதுவோ அதை நான் அப்படியே ஏத்துக்கிறேன் ன்னு உள் மனசிலேந்து யாரும் சொன்னா அவங்க கால்ல விழுந்து கும்பிடலாம். ஆனா அப்படி ஒரு மனசு இருக்கிறவங்களை பார்க்கிறது அரிதே!

எப்படி மாத்த முடியும்ன்னு கேட்டா.. நாம் செய்யும் ஹோமமும் ஒரு கர்மாதானே? அப்ப இரண்டு கர்மாக்கள் பாலன்ஸ் ஆகி மத்தியமாக ஒரு பலன் கிடைக்கும்.

கர்மாக்களில பல விதம். சிலதை ஒரு ப்ராயச்சித்தம் செய்து நிவர்த்தி செய்துக்கலாம். சிலதை அப்படி நீக்க முடியாது; அது அனுபவித்தே தீர வேண்டியது. ஒரு உதாரண நிகழ்ச்சி. மஹா பெரியவர் காலம். ஒரு தனவந்தர் வருகிறார். அவருக்கு அந்த காலத்தில் தீர்க்க முடியாத நோய் ஒன்று உண்டு. அதனால் வழக்கமாக் தூரத்திலேயே இருந்து தரிசனம் செய்து போய் விடுவார். இன்று பெரியவர் கிட்டே வருமாறு சைகை செய்கிறார். அவரும் தயங்கி தயங்கி வருகிறார். " நீ மடத்துக்கு பல நாட்களாக சேவை செய்து கொண்டு இருக்கிறாய். உனக்கு இருக்கும் இந்த நோய் நீங்க ஒரு ப்ராயச்சித்த ஹோமம் இருக்கிறது. அதை செய்ய வேண்டிய நாளும் தற்செயலாக இன்றே அமைந்து இருக்கிறது. இந்த ஹோமம் செய்ய எல்லாருக்கும் தெரியாது. அதிர்ஷ்ட வசமாக அது தெரிந்த ஒருவர் இன்றைக்கு இங்கே வந்து இருக்கிறார். ஆகவே அதை இப்போது செய்துக்கொள்" தனவந்தர் தயங்கினார், யோசித்தார். "தயங்க வேண்டாம். இன்று விட்டால் இதே போல சரியான நாள் அமைவது கடினம். இன்னும் அதே போன்ற அமைப்பு வர பல வருஷங்கள் ஆகும்." "நான் தயாராக வரவில்லையே?" "பரவாயில்லை. ஹோமத்துக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடும் மடமே செய்யும். நீ சும்மா எஜமானனாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்." தனவந்தர் மனைவியுடன் கலந்து ஆலோசித்து வருவதாக சொல்லி வெளியே போனார். பெரியவரின் பக்கக்தில் இருந்தவர்கள் கேட்டார்கள்." ஏன் இவர் இதுக்கு இவ்வளவு யோசிக்கிறார்?" பெரியவர் சொன்னார். கர்மா மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தால் அது தடை செய்யும். ப்ராயச்சித்தம் இருந்தால் கூட அதை செய்ய விடாது." "இவர் செய்வாரா?" "மாட்டார் போலத்தான் இருக்கு" தனவந்தரும் திரும்பி வந்து இப்போது வேண்டாம் என்கிறார்கள் என்று சொல்லி நமஸ்காரம் செய்துவிட்டு போய்விட்டார்.
ஆனால் நடை முறையில இந்த ப்ராயச்சித்தங்கள் பெரிய ப்ரச்சனைகளாகவே இருக்கு......

Saturday, August 13, 2011

என்னுடையது!

ஒரு கிழவி இறந்து போனாள். யமனிடம் அழைத்துப்போனார்கள். சித்திர குப்தன் கணக்கு பார்த்தான். "ஐயா! இவள் செய்த ஒரே நல்ல காரியம் ஒரு பிச்சைக்காரனுக்கு இரக்கப்பட்டு ஒரு காரட்டை கொடுத்ததுதான். வேறு ஒரு புண்ணிய காரியமும் செய்யவில்லை" என்றான். யமன் யோசனையில் ஆழ்ந்தான். ஒரே ஒரு புண்ணிய காரியமானாலும் அதற்கு இவள் சுவர்க்கம் போக வேண்டுமே? அனுப்புங்கள் என்றான். அவள் பிச்சைக்காரனுக்கு கொடுத்த காரட் கொண்டுவரப்பட்டது. அதை அவள் பிடித்துக்கொண்டதும் அவள் மேலே போக ஆரம்பித்தாள். எங்கே போகிறோம் என்று மேலே பார்த்தாள். ஒரு ஒளி மிக்க இடம் தென் பட்டது. ஓ, அதுதான் சுவர்கம் போலும்! அவளுடைய காலை ஒரு பிச்சைக்காரன் பிடித்துக்கொண்டான். அவளுக்கு அது தெரியவே இல்லை. அவனும் அவளுடன் மேலே போய்ச்க்கொண்டு இருந்தான். பிச்சைக்காரன் காலை இன்னொருவன் பிடித்துக்கொண்டான். அவனும் மேலே போக ஆரம்பித்தான். இப்படியாக ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு சுவர்க்கம் நோக்கி போய்க்கொண்டு இருந்தனர். இதோ கிட்டே வந்துவிட்டது. கிழவி அப்போது கீழே பார்த்தாள். இத்தனை பேர் இந்த காரட்டை பிடிக்க வருகிறார்களா? கையை பலமாக ஆட்டிக்கொண்டு கத்தினாள்! ஏன் எல்லாரும் இந்த காரட்டுக்கு போட்டி போடுகிறீர்கள்? இது என்னுடையது! ஆட்டின கையில் இருந்து காரட் நழுவியது. கிழவியுடன் சேர்ந்து அத்தனை பேரும் கீழே விழுந்தார்கள்! நான், என்னுடையது போகும் வரை பிரச்சினைதான்!

Thursday, August 11, 2011

நீ யார்?மாருஃப் கர்கி ஒரு முஸ்லிம் மாஸ்டர். ஒரு நாள் ஒருஇளைஞன் அவரிடம் வந்து கேட்டான்." ஐயா, உங்களைப்பற்றி பல விதமாக கேள்விப்படுகிறேன்.
யூதர்கள் உங்களை அவர்களில் ஒருவர் என்கிறார்கள். கிறிஸ்துவர்கள் உங்களை அவர்களுடைய புனிதராக கருதுகிறார்கள். முஸ்லிம்கள் இஸ்லாத்துக்கு நீங்கள் ஒரு பெருமை என்கிறார்கள்."
மாருஃப் சொன்னார்: " ஆமாம். இங்கே பாக்தாதில் அப்படித்தான் சொல்கிறார்கள். நான் ஜெருஸலேமில் இருந்த போது யூதர்கள் என்னை கிறிஸ்துவன் என்றார்கள்; கிறிஸ்துவர்கள் என்னை முஸ்லிம் என்றார்கள்; முஸ்லிம்கள் என்னை யூதன் என்றார்கள்!"
"அப்போது நாங்கள் உங்களை என்னவென்று நினைப்பது?"
" என்னை புரியாதவர்கள் என்னை மதிப்பதில்லை. என்னை திட்டுபவர்களும் என்னை புரிந்து கொள்ளவில்லை! இப்படி சொல்லிக்கொள்ளும் ஒரு மனிதனாக நினை!"

 நம் நண்பர்களும் எதிரிகளும் நம்மைப்பற்றி நினைப்பது போல நம்மை நாம் நினைத்தால் நம்மை நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை!


 

Friday, August 5, 2011

தேவர்கள் மனிதர்கள் - ௨உரத்த சிந்தனை:

ம்ம்ம் இப்படி ஒரு காலத்துல தேவர்களுக்கு சமமா இருந்தாங்கன்னு சொல்கிறதால தேவர்கள் மட்டம் இல்லை. பாருங்களேன்... பூமி ஒரு இன்ச் விரிசல் விடுது. அதனால சுனாமியே ஏற்படுது! வீட்டில ஏசி போட்டுக்கிட்டு அவஸ்தை படறோம். பத்து நிமிஷ மழை ஊருக்கே ஏசி போடுது. இயற்கையில் தேவர்கள் சக்தி அளக்க முடியாதது.
ஒரு குட்டி தேவதையை ஜப தபங்களால் வசப்படுத்திகொண்டாக்கூட போதும்; அதுகிட்ட ஒரு பொருளை கொடுத்து மறைய வைக்க முடியுது. அதுகிட்ட கொடுத்து பின்னால வாங்கி மாஜிக் காட்ட முடியுது.
ஆமாம். பெரிய லிஸ்டே இருக்கு, இந்த தேவர்கள், தேவதைகள் பத்தி. ஊர் கோவிலில் பல தேவதைகள் இருக்கும். அங்கே இருக்கிற ஒவ்வொரு தூண் சிற்பத்திலும். மேலே போட்டிருக்கிற கல் தளங்கள் , போல எல்லாவத்திலும்.
தேவதைகளிலே உக்கிரமா இருக்கிற தேவதை, ஸௌம்யமா இருக்கிற தேவதைன்னு உண்டு.
உக்கிர தேவதைகள் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமா கோவில்ல இருக்கும்.

இந்திரன் முதல் இப்படி ஊர் தேவதை வரை இருக்கிற இந்த ஏராளமான தேவர்கள் தேவதைகளிலே நமக்குன்னு சிலது இருக்கும். அதை குல தெய்வம்ன்னு சொல்வாங்க. யாருக்கு பூஜைகள் செய்யரோமோ இல்லையோ இவங்களுக்கு தவறாம செய்யணும். எப்படி பணம் கொடுக்க கோர்ட் உத்திரவு போட்டாலும் கடைசிலே கவுண்டர் ஆசாமி தயவு வேண்டி இருக்கோ அப்படி என்னதான் நமக்குன்னு விதிச்சு இருந்தாலும் எல்லாமும் இந்த குல தெய்வம் வழியாகவே கிடைக்கணும். வருஷம் ஒரு முறையாவது குல தெய்வத்தை பாத்துட்டு வரணும்.

உரத்த சிந்தனையா இருக்கிறதுல எங்கேயோ போயிட்டேன்.

ஒரு காலத்துல மனிதன் சக்தி தேவர்களுக்கு அதிகமா இல்லாட்டாக் கூட சமமா இருந்து இருக்கு. தபஸ் பண்ண முனிவர்கள் ரிஷிகள் வம்பு பண்ண தேவர்களுக்கு சாபம் கொடுத்து வலு இல்லாம செஞ்சு இருக்காங்க. அப்படி இருந்தவங்க எப்படி இப்படி ஆயிட்டோம்?

நாம் பார்க்கிறது எவலூஷன் இல்லை. நேர்மாறான திசையில் போயிட்டு இருக்கோம் ன்னு தோன்றுகிறது அப்பப்ப. அஞ்சு தலை முறை முன்ன இருந்தவங்களோட நினைவாற்றல் இப்ப இல்லை. ராமாயணம் மகாபாரதம் எல்லாம் ஒரு சாதாரண கிராமவாசி ஒப்பிக்க முடிஞ்சது. நாலு வேதம் ஒத்தர் கத்துக்கொண்டு பாடம் சொல்ல முடிஞ்சது. இப்ப நாலு செய்யும் பாடம் பண்ண முடியலை.

ஜெய்பூர்ல பிரதாப்சிம்மன் போட்டு இருந்த கவசங்கள் இருக்காம். அதை இப்ப தூக்க நாலு ஆளு வேண்டி இருக்காம். என்ன பலம்? அந்த காலத்துல அவர் இதை போட்டுக்கிட்டு சண்டை வேற போட்டு இருக்கார்!
ரைவத நாட்டை ஆண்டு வந்த அரசன் ரைவதன் என்பவருடைய மகள் ரேவதி. ரைவதன் இவளை யாருக்கு கல்யாணம் செய்து கொடுக்கலாம்ன்னு யோசனை பண்ணி பண்ணி சரியா முடிவுக்கு வர முடியாம யோசனை கேட்க பிரம்மதேவர்கிட்ட போனாராம். அவரோ பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தாதால டிஸ்டர்ப் பண்ணாம கொஞ்ச நேரம் காத்திருந்தாங்க. பிரம்மா கண் முழிச்சதும் கேட்க, அடடா, நீங்க இங்க காத்து இருந்த நேரம் பூ லோகத்துல யுகமே மாறியாச்சு. சரி யார் இவளை தொடும் போது இவள் சாதாரண உயரமாக மாறுவாளோ அவருக்கு கல்யாணம் செய்து வைங்கன்னு சொன்னார்.
புரியலை.
திருப்பி நாட்டுக்கு வந்து பாத்தா எல்லாம் மாறியாச்சு! இப்ப பார்க்கிற மனுஷங்க எல்லாம் 'குள்ளமா' ஆறடிக்குத்தான் இருக்காங்க. கடைசில பலராமர் இவளை தொட அவள் உயரம் குறைந்து போய்விட்டாள். சரி இவன்தான் மாப்பிள்ளை என்று தீர்மானம் செய்து கொண்டு கல்யாணம் பண்ணி வைத்தார் ரைவதர்.
யுகம் மாற மனிதனோட உடம்பே மாறி இருக்கு!
தேக பலம்., மனோ பலம் எல்லாமும்தான் மாறி இருக்கணும்!
இப்படி க்ஷீணமா போயிட்ட நாம் இப்ப தேவர்களை அண்டிதான் காரியம் சாதிக்க வேண்டி இருக்கிறது.
(இன்னும் வரும்)

Thursday, August 4, 2011

தேவர்கள்...மனிதர்கள்...


தேவர்கள் நம்மை மாதிரித்தான். படைப்பின் போது மனிதனையும் தேவர்களையும் அசுரர்களையும் மற்றவற்றையும் படைத்தார் இறைவன் என்று ஒரு கருத்து. ஒத்தருக்கு ஒத்தர் உதவி செய்து கொண்டு வாழுங்கன்னு சொல்லிட்டாராம். தேவர்கள் மழை வெயில் காத்து இவைகள் மேலே இருக்கிற ஆளுமை சக்தியாலே மனிதர்களுக்கு உதவி செய்ய முடியும். மனிதர்களோட பூஜைகள், யாகங்கள், ஜபங்கள் தேவர்களுக்கு சக்தி ஊட்டும்.

தேவர்கள் மறைந்து இருப்பாங்க, பார்க்க முடியாதுன்னு சொல்கிறாங்க. "பரோக்ஷ ப்ரியா ஹி தேவாஹா" என்று வேதம். மறைந்திருக்கிறதை விரும்பறாங்களாம். ஆனா புராணங்கள் இதிஹாசங்களை படிச்சா அந்த காலத்தில தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை ஏற்படும் போது மனிதர்களும் தேவர்கள் பக்கம் இருந்து சண்டை போட்டு இருக்காங்க. தசரதர் அப்படி பண்ணி இருக்கார். அந்த மாதிரி சண்டை ஒண்ணிலதானே கைகேயி வரம் வாங்கினா? கழன்று போன தேர் கடையாணிக்கு பதில் தன் விரலை கொடுத்து....

முசுகுந்த சக்கரவர்த்தியும் சண்டை போட்டு இருக்கார். களைச்சு போய் சண்டை முடிஞ்ச பிறகு தூங்கப்போறேன், யார் எழுப்பினாலும் அவங்க தலை வெடிக்கணும் ன்னு வரம் ஒண்னை வாங்கி தூங்கினார். இந்த வரத்தை நம்ம ரணசோட் சாமர்த்தியமா பயன்படுத்தி கொண்டான்!

ஒருசமயம் சனி பகவான் கிருத்திகா நக்ஷத்திரத்திலிருந்து ரோகிணியைப் பிளந்துகொண்டு போக இருந்தான். அதனை ஜோதிடர் மூலம் தசரதன் அறிந்தான். உடனே தசரதன் வசிஷ்டரை அணுகி, "இதற்கு என்ன செய்யலாம்?" என்று கேட்டான்.

வசிஷ்டர்,"ரோகிணியைப் பிளந்துகொண்டு சனி சென்றால் பன்னிரண்டு ஆண்டுகள் பெரும் வற்கடம் என்னும் பஞ்சம்  ஏற்படும். மக்கள் விலங்கு முதலியவை மிகவும் அவதியுறும். அதனால் நேரில் சென்று தடுக்க முயற்சி செய்யவேண்டும்" அப்படின்னார். தசரதனும் தேர் ஒண்ணில ஏறி சனி பகவானோட சண்டைக்கு போனானாம். அதை பாத்து அதிசயப்பட்டு "எல்லாரும் என்ன பாத்தா ஓடறாங்க, நீ சண்டைக்கே வரியே! என்ன வேணும்?" ன்னு கேட்டான். தசரதனும் "பஞ்சம் ஏற்படும் என்கிறதால ரோகிணியை பிளந்துகொண்டு போக வேண்டாம்" ன்னு வரம் கேட்டான்.  வேற? ன்னு கேட்க, "எப்பவுமே நீ ரோகிணியை தாண்டி போறதால ஜனங்களுக்கு  கஷ்டம் எதுவும் வரக்கூடாது" ன்னு கேட்டான். அப்படியே ஆகட்டும் என்ற சனி பகவானை ஒரு ஸ்தோத்திரம் சொல்லி ஆராதிச்சார் தசரதர்.

மகிழ்ந்து போய் " தசரதரே! நீர் துதித்த இந்த ஸ்தோத்திரத்தைக் காலையிலும் மாலையிலும் கூறுகிறவருக்குத் தோஷங்களை நீக்கிச் சுப பலனை அளிப்பேன்" ன்னு சொன்னாராம் சனி பகவான்.

எதுக்கு சொன்னேன்? மனிதர்கள் தேவர்களுடன் சமமாக வாழ்ந்த காலம் கூட இருந்திருக்கு போல இருக்கு. இப்ப என்னடான்னா நவ க்ரஹங்களை பாத்து நடுங்கறோம். கோவில்களில மூலவரை விட இவங்களுக்குத்தான் மதிப்பு அதிகமா இருக்கு.
(இன்னும் வரும்)

Tuesday, August 2, 2011

தேவர்கள் ...ஒரு நாள் யோசனை இப்படி போச்சு.

சிலர் அடிக்கடி சொல்கிறார்கள், இந்த பகவானுக்கு கருணையே இல்லையா?

நாத்திகர்கள் பலரது வாதமும் இதை ஒட்டியே போகும். பரம தயாளன் கருணாகரன் ன்னு எல்லாம் சொல்கிற கடவுளுக்கு ஏன் இப்படி பாரபட்சம்?

கோவில் போய் சாமி கும்பிட்டாதான் அது நல்லது பண்ணுமா? இல்லை கேட்டது பண்ணும்ன்னா அது என்ன சாமி?

{ஹிஹி கெட்டது ன்னுதான் டைப் பண்ணேன்! கூகுள் கருவி இப்படி செய்துவிட்டது. சாமி கேட்டது பண்ணும்தானே?}

இதெல்லாம் சரியா புரிய நாம் தேவர்களை பத்தி கொஞ்சம் சரியா தெரிஞ்சுக்கணும்.

அதுக்கு முன்னே நம்மோட புரிதலை கொஞ்சம் சரி செய்துக்கலாமா?

ஒரு நிலை பிரம்ம நிலை. எல்லாம் பிரம்மமயம். இதுலே அப்புறமா கேள்வி கேட்கன்னு ஒண்ணுமே இல்லை! அதனால் இதை விட்டுடுவோம்!

அடுத்து பிரம்மா, விஷ்ணு, சிவன் ன்னு ஒரு கான்செப்ட்!

ஒரே பிரம்மம் மாய நிலையில: உருவாக்கும்போது பிரம்மா, காக்கும்போது விஷ்ணு, அழிக்கும்போது சிவன் ன்னு பெயரோட இருக்கு என்கிராங்க. ம்ம்ம்ம்ம்? அப்ப இவங்க  எல்லாரும் மாயையில இருப்பாங்களா?

உள்ளுக்குள்ள பிரம்ம சத்ய நிலையை தெரிஞ்சு கொண்டே வெளியே இருக்கிற மாயா லோகமும் இவர்களுக்கு தெரியும். அது சரி, அப்படி இருந்தாதானே அந்த லோகங்களில மாறுதல்களை ஏற்படுத்த முடியும்?

இதையும் விட்டு இன்னும் கீழே இறங்கலாம். மேலே சொன்ன மும்மூர்த்திகளைத்தவிர இவர்களுக்கு கன்சார்ட் வந்தாச்சு! மனைவின்னு சொல்லலை. கவனியுங்க!

இவங்களுக்கு பரிவாரங்களும் வந்தாச்சு. புராணங்களில இவங்க கதைகளை படிக்கலாம்.

இங்க கீழே இறங்காம சைட்ல போனா முப்பத்து மூணு தேவர்கள். இந்த கான்சப்ட்ல ஹையார்கி பிரஜாபதி மேலே, இந்திரன், அஷ்ட வசுக்கள், (8) ஏகாதச ருத்திரர்கள் (11), த்வாதச ஆதித்யர்கள்.(12)

ஆக மொத்தம் 33. இவங்களுக்கு அசிஸ்டென்ட் 100. இந்த ஒவ்வொரு அசிஸ்டென்டுக்கும் அசிஸ்டென்ட் 100. அவங்களுக்கு அசிஸ்டென்ட் 1000. ஆக மொத்தம்  33,00,00,000. அதான் முப்பது முக்கோடி தேவர்கள்.

இவங்க எல்லாம் ஒரு வகையில் நம்ம மாதிரி. இதெல்லாம் போஸ்ட் தான். ஆட்சி மாறினா ஆளும் மாறும்!

இந்த முப்பத்து மூணு கோடியோட மேனிபெஸ்டேஷன் அல்லது இன்னும் குட்டி தேவதைகளும் உண்டு.

இந்த தேவர்கள் நம்மை மாதிரின்னு சொன்னேன் இல்லையா? அமிர்தம் குடிச்சு இவங்களுக்கு சாவு இல்லை பசி , தாகம் இல்லைன்னாலும் நம்ம மாதிரி  கோப தாபங்கள் உண்டு. இவங்களை திருப்தி பண்ணா சந்தோஷமா நமக்கு வேண்டியதை கொடுக்கிறாங்க. ஒரு லிமிட் வரை அவங்களுக்கு இந்த சக்தி இருக்கு. அதே சமயம் இவங்களுக்கு கோபம் வரா மாதிரி நாம நடந்துகொண்டா நமக்கு கஷ்டமும் கொடுப்பாங்க! இவங்களை கடவுள் ன்னு நாம நினைச்சா, ஆமாம் கடவுள் கோபப்படும், சந்தோஷப்படும்!

(இன்னும் வரும்)