Pages

Friday, September 30, 2011

மோனம்...


ஒரு ஊரில் ஒரு வயோதிகர். கோவிலில் சன்னதி எதிரே மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பார்.

ஒரு நாள் ஒரு அர்ச்சகர் கேட்டார். "கடவுள் உங்ககிட்ட என்ன சொல்லறார்?”
"கடவுள் ஒண்ணும் சொல்லறதில்லை. அவர் கேட்டுக்கிட்டே இருப்பார்.”
“சரி அப்ப நீங்க அவர்கிட்ட என்ன சொல்லறீங்க?”
“நானும் ஒண்ணும் சொல்லறதில்லை! கேட்டுக்கிட்டே இருப்பேன்!”

ப்ரார்த்தனையின் நான்கு படிகள். நான் பேசுகிறேன், நீ கேட்கிறாய். நீ பேசுகிறாய், நான் கேட்கிறேன். இருவரும் பேசவில்லை, கேட்கிறோம். இருவரும் பேசுவதுமில்லை, கேட்பதுமில்லை. மோனம்.

Wednesday, September 28, 2011

அன்பு...


முன் ஒரு காலத்தில் ஒரு சிறுமி ஒரு நோயால் இறந்து கொண்டு இருந்தாள். மருந்துகள் மாத்திரைகள் என்று பிரபலமாகாத காலம். வைத்தியர் என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

அவளது சகோதரன் கொஞ்ச நாள் முன்தான் இதே நோய் தாக்கி பிழைத்து இருந்தான். அப்போது அவன் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும்.

டாக்டர் பையனை கேட்டார். "உன் சகோதரி பிழைக்க வேண்டுமானால் உன் ரத்தத்தை அவளுக்கு கொடுக்க வேண்டும். சம்மதமா? "

பையனுக்கு தூக்கி வாரி போட்டது. பயந்து போனான். அரை நிமிடம் சென்றபின் "சரி, எடுத்துக்கொள்ளுங்கள்" என்றான்.
தேவையான அளவு மட்டும் ரத்தம் எடுக்கப்பட்டு சிறுமிக்கு செலுத்தப்பட்டது. ஒரு மணி சென்றது. சிறுமி நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது. இனி பிழைத்துவிடுவாள் என்றார் வைத்தியர்.

சிறுவன் சிறிது தயங்கிவிட்டு கேட்டான். நல்லது டாக்டர், நான் எப்போது செத்து போவேன்? அப்போதுதான் டாக்டருக்கு புரிந்தது. சிறுவன் தன் ரத்தத்தை கொடுப்பதால் தன் உயிரையே கொடுப்பதாக நினைத்தான் என்று!

Thursday, September 22, 2011

ஹோமங்கள் -இப்ப நாம என்ன செய்யலாம்?


ம்ம்ம் சரி, ஹோமங்களில நல்ல பலன் இருந்தாலும் அதை சரியா செய்ய இப்பல்லாம் வசதி குறைவாத்தான் இருக்கு.

என் கதை வேற. நானே செய்ய பழகிட்டேன். மத்தவங்க? நல்லா செய்யற ஆசாமியை சொல்லு, எனக்கு வேணும்ன்னு நண்பர்கள் கேட்டத்தான் இதோட சீரியஸ்னஸ் சரியா புரிஞ்சது...

இப்படி ஒரு சூழலில ஆர்ய சமாஜ் துவக்கின அக்னிஹோத்ரமே பரவாயில்லைன்னு தோணிடுத்து. வேண்டியதெல்லாம் ஒரு பிரமிட் - தலைவெட்டி கவிழ்த்த தோற்றத்தில ஒரு தாமிர பத்திரம். விலைக்கு கிடைக்கும்ன்னு நினைக்கிறேன். சரியான சூரிய உதய சூரிய அஸ்தமன நேரம் என்கிறதை முக்கிய கண்டிஷனா வெச்சு இருக்காங்க. அதே மாதிரி சுத்தமான நெய், சுத்தமான நாட்டு மாட்டு சாணத்தில செய்த வரட்டி. அந்தந்த வேளைக்கு அக்னி எழுப்பி சரியான நேரத்துக்கு இரண்டே -அக்னிக்கும் ப்ரஜாபதிக்கும்- ஹோமம். யார் வேணுமானாலும் செய்யலாம் என்கிறாங்க.

வெற்றிடம் இயற்கை இல்லை. ஒரு காரியம் கெட்டுப்போச்சுன்னா இன்னொன்னு அதோட இடத்தை பிடிச்சுக்கும். அது மாதிரி க்ளாசிகல் அக்னிஹோத்ரம் காணாம போகிற இந்த நாட்களில இது பிரபலம் ஆகிட்டு இருக்கு. அக்னிஹோத்திரம் என்கிறது போபால் விஷ வாயு நிகழ்ச்சிக்கு அப்புறமா ப்ரபலமாயிடுத்து. ஒத்தர் வீட்டில அக்னிஹோத்திரம் செய்ய அந்த வீட்டில இருந்தவங்க பாதிப்படையலை ன்னு செய்தி எல்லாம் வந்தது. அவர் செய்துகிட்டு இருந்தது இந்த மாதிரியான அக்னிஹோத்திரம்தான். இதுக்கே இவ்வளவு சக்தின்னா க்ளாசிகல் அக்னிஹோத்திரம் எவ்வ்வளோ சக்தி வாய்ந்ததுன்னு நினைப்பை தவிர்க்க முடியலை.

சீர்காழியில ஒரு வீட்டில தங்கி அக்னிஹோத்திரம் செய்ய ஆள் தேடிகிட்டு இருக்கோம். வீடு, அதோட பராமரிப்பு இலவசம். கர்மா கெடாத வரை தானே சுயமா சம்பாதிக்க வேலைக்கு போகலாம். மாசம் ரெண்டு இஷ்டி, தினசரி அக்னிஹோத்திரம் செய்ய உதவித்தொகை ரூபாய் 7000 கொடுக்க ரெடி. யாரும் முன் வரலை. என்ன செய்யலாம்? :-((((((

சரி இன்னைய சூழ்நிலையில என்ன நம்மால செய்ய முடியும்? வீடு நம்மதா இருந்தா அக்னிக்கு ஒரு இடம் ஒதுக்கி தினசரி ஹோமம் செய்யலாம். அது க்ளாசிகலாவோ ஆர்ய சமாஜ் வழியாவோ இருக்கலாம். க்ளாசிகலா செய்யறவங்க வேதத்துக்கு அதிகாரம் இல்லைன்னா அக்னயே நமஹ, அக்னயே ஸ்விஷ்டக்ருதே நமஹ ன்னு ஹோமம் செய்யலாம். அரிசியை களைந்து ஹோமம். வலது கையில் கட்டை விரல் நீக்கி நான்கு விரல்களில இருக்கிற 12 ரேகைகளும் மறைகிற அளவு ஒரு ஆஹுதின்னு கணக்கு. இரண்டாவது ஹோமத்துக்கு முதல் ஹோமத்தைவிட கொஞ்சம் அதிகமாக இருக்கணும்.

அக்னி வழிபாடு மறைய மறைய அக்னியில் தோன்றிய முருகன் வழிபாடு அதிகமாகிட்டு இருக்கோன்னு ஒரு எண்ணம்.....

Thursday, September 8, 2011

உரத்த சிந்தனை... விடாது கருப்பு..


  பார்வையாளரில் ஒத்தர் சண்டைக்கே போயிட்டார். "ஒண்ணும் பண்ணாதுன்னு ஏன் சொல்லறீங்க? அப்படின்னா ஏன் ஹோமம் பண்ணனும்? நல்லது பண்ணும்ன்னு சொல்லுங்க.” :-))))

--

அது என்னவோ சரிதான். சாஸ்திரத்துல எந்த புகை நல்லது எது கெட்டதுன்னு எழுதி வெச்சு இருக்கு. அதுபடி ஹோமப்புகை நல்லதே.

இருபது வருஷம் முன்னே எங்க ஆஸ்பத்திரில ஹோமம் செய்து வெச்ச ஒத்தர் சொன்னார்: “புகைன்னு கண்ணை எல்லாரும் கசக்கறாங்க. ஆனா ஹோமப்புகை நல்லது. இவ்வளோ வருஷமா ஹோமம் செய்து கொண்டு வரேன். இன்னும் கண்ணாடி போடலை பாருங்க.” (அப்ப அவருக்கு 50 வயசு இருக்கும்.) எனக்கும் அப்படிதான் இருக்கு. 17 வருஷமா அக்னி காரியம் செய்து வரேன். எங்க செட்டிலேயே நான்தான் கடைசியா சாலேச்வர கண்ணாடி போட்டவன். இப்ப கூட கணினி திரையை பாக்க மட்டுமே கண்ணாடி வேண்டி இருக்கு. மத்தபடி கண்ணாடி இல்லாமலே ஊரை சுத்தலாம்; பேப்பர் படிக்கலாம்... பிரச்சினையே இல்லை.

வீட்டிலேயே ஹோமம் செய்யறது ஒண்ணும் கஷ்டம் இல்லை. எனக்கு தெரிஞ்ச ஆடிட்டர் ஒத்தர் தினமும் கணபதி ஹோமம் செய்யறார். என்ன சொந்த வீடா இருக்கறது நல்லது....

நண்பர் ஒருவர் வீட்டிலேயே ஔபாசனம் செய்ய யோசிச்சார். இது பத்தி வீட்டு சொந்தக்காரர்கிட்டே சொன்னப்ப தாராளமா பண்ணுங்க நல்லதுதான்னேன்னார். நண்பர் அறை புகை படிஞ்சு கறுப்பாகும். அப்புறமா வெள்ளை அடிச்சு தறேன்னார். வீட்டுக்கார அதெல்லாம் பரவாயில்லைன்னார். நண்பரும் சந்தோஷமா செய்ய ஆரம்பிச்சார். சில மாசங்கள் கழிச்சு வீட்டு சொந்தக்காரர் பிரச்சினை பண்ண ஆரம்பிச்சார். ஹோமத்துக்கு ஆட்சேபனை தெரிவிச்சார்.

சரின்னு ஹோமத்தை நிறுத்திட்டு நண்பரும் வேற வீடு பார்க்க ஆரம்பிச்சார். அது சாதாரணமா முடியற காரியமா இல்லை. இதுக்குள்ள ரூமுக்கு வெள்ளை அடிச்சு தரனுமேன்னு வேலையில இறங்கினார். பெய்ண்டர் வந்து பாத்துட்டு ஒரு கொட்டேஷன் கொடுத்துட்டு போயிட்டான். இவரும் லிஸ்ட் சாமான் எல்லாம் வாங்கி வெச்சுட்டு அவனை கூப்பிட்டார். தேய் தேய் ன்னு தேச்சு தேச்சு அப்புறம் பெயின்ட் அடிச்சா இன்னமும் கருப்பா தெரியறது. பெய்ண்டர் ஜகா வாங்கிட்டார். இதே போல இன்னும் நாலு பேர் வந்து முடியாம து.கா.து.கா ன்னு ஓடிட்டாங்க. எக்ஸ்பெர்ட் எல்லாம் வந்து பத்து ஆளுக்கு ஆள் சஜஷன் கொடுத்து அது படி மெஷின் கொண்டு வந்து டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ன்னு சத்தமா தேச்சு தேச்சு ஒண்ணும் நடக்கலை. வீதி எல்லாம் வெள்ளையா சுண்ணாம்பு பறந்ததே ஒழிய கருப்பு போகலை.

அடுத்து வந்த ஆசாமி விக்ரமாதித்யன் வம்சம் போல இருக்கு. விடாம லேயர் மேலே லேயர் அடிச்சு பன்னிரண்டு கோட் அடிச்சும் போகலை.

நண்பருக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. அந்த ரூமுக்கு போய் பிரார்த்தனை பண்ணிண்டார். “ஸ்வாமி தயை செஞ்சு வந்துடுங்கோ, நான் கொடுத்த வாக்கை நிறைவேத்தனும்” ன்னு வேண்டிண்டார். அன்னிக்கு விக்ரமாதித்யன் அனுப்பின பெய்ண்டர் வந்து “என்ன செய்யட்டும் சார்?” ன்னு கேட்டார். நண்பர், சாமிக்கு வேண்டிகிட்டு பெயின்ட் பண்ணுப்பான்னார். நான் கிரிஸ்தவன் சார், ஹிந்து இல்லைன்னார் பெய்ண்டர். “அதனால என்னப்பா? கடவுள் நம்பிக்கை இருக்கு இல்லே? நீ உங்க சாமிகிட்டேயே வேண்டிக்க” ன்னார் நண்பர். அவரும் கொஞ்சம் நேரம் வேண்டிக்கொண்டு வேலையை ஆரம்பிச்சார். ஒரு கோட் அடிச்சு முடிச்சதுமே படு ஆச்சரியத்துல விக்கிரமாதித்யனுக்கு போன் பண்ணார். “சார், வெள்ளையா ஆயிடுச்சு!” ஆச்சரியம் தாங்காம விக்ரமாதித்யனும் பக்கத்து ஊருக்கு பாதி வழி போய்கிட்டு இருந்தவர் திரும்பி வந்துட்டார் அதிசயத்தை பாக்க. நடந்த கதையை சொல்லிட்டேன். இதில என்ன சாரம்ன்னு நீங்க முடிவு பண்ணுங்க.

Tuesday, September 6, 2011

உரத்த சிந்தனை: மேலும் ஹோமங்கள்...


வைதிகம், தாந்திரிகம் இல்லாம மூணாவதா இருக்கிறது ஆகம ரீதியா செய்கிறது. இது கோவில்களில கடைபிடிக்கிறது. கோவில் அர்ச்சகரை கூப்பிட்டு ஹோமம் பண்ணித் தரச்சொன்னா இந்த வழியிலதான் செய்வார். ஒரு வழியில இதுவும் தாந்திரிகம்தான்.

தாந்த்ரிக ஹோமங்கள் வைதிக ஹோமங்களிலேந்து நிறையவே வித்தியாசமானது. வைதீக ஹோமங்களில இன்னதுதான் அக்னியில போடலாம்ன்னு இருக்கு. சுத்தி போடுகிற தர்பைகளுக்குள்ள இன்னது மட்டுமே இருக்கலாம்ன்னு இருக்கு. இன்னதுதான் ஹோம த்ரவ்யம். இது இல்லைன்னா இதுன்னு லிஸ்ட் போட்டு வெச்சு இருக்கு. எரிகிற விறகா பால் உள்ள மரத்தை மட்டுமே பயன்படுத்தலாம். கண்ட கண்ட மரத்தை இல்லை. பூ, மங்கள அக்ஷதை போல பல விஷயங்களை அக்னியில போடுவதில்லை.

ஆனா தாந்த்ரிக ஹோமங்களில பல வேற விஷயங்களை அக்னியில போடுவாங்க. பட்டுப் புடவையே போடுகிறதை கூட பார்க்கிறோம். பட்டுப்புடவையில பல பொருட்களை கட்டி மூட்டையா கடைசியிலே போடுவது உண்டு.

தேவர்களை ஆவாஹனம் செய்ய சிலது உண்டு.

ஒரு ப்ராஹ்மணன் மேலே ஆவாஹணம் செய்யலாம். பித்ரு தேவதைகளை அப்படி செய்துதான் ச்ராத்தம் நடக்கிறது.

அக்னியில செய்யலாம். எந்த தேவதையை குறித்தும் மந்திரம் சொல்லி அக்னியில ஹோமம் செய்ய அக்னி அந்தந்த தேவதைக்கு அதை கொண்டு போய் கொடுத்துடுவார். ஆதி காலத்துல அவருக்கு இந்த வேலை மட்டுமே இருந்ததாம். இதுக்கு பதிலா ஒண்ணுமில்லை. அதனால வெறுத்து போய் ஒளிஞ்சு கொண்டார். மனிதர்கள் செய்த ஹோமங்களோட பலன் தேவர்களுக்கு போய் சேரலை. அவஸ்தை பட்ட அவர்கள் தேடி தேட அக்னியை கண்டு பிடிச்சு சமாதானப்படுத்தினாங்க. எந்த ஹோமம் செய்தாலும் உனக்குத்தான் முதல் ஆஃபர் ன்னு சொல்லிட்டாங்க. அக்னிக்கு ஒரு வழியா ஹவிர்பாகம் கிடைக்க அவரும் உற்சாகமா அப்புறம் தேவர்களுக்கு கொண்டு கொடுக்க ஆரம்பிச்சார். இது நான் சொல்லலை. வேதத்தில இருக்கற கதை.

ஆவாஹனம் செய்யறது தண்ணியில செய்யலாம். ஒரு செப்பு குடத்தை வைத்து சுத்த மடி ஜலம் நிரப்பி அதில் ஆவாஹணம் செய்யலாம். கும்பாபிஷேகம் அப்படித்தானே நடக்கிறது? ஜல கும்பத்தில் தேவதைகளை மந்திரத்தாலே இழுத்து ஹோம கூடத்துக்கு எடுத்துப்போய் ஹோமங்கள் செய்து சக்தியூட்டி திருப்பி அந்த அந்த கடத்து ஜலத்தை அபிஷேகம் செய்து சிலைகளுக்கு தெய்வ சக்தியை ஊட்டுகிறார்கள்.

இதில ஒரு விஷயம் பாருங்க. எவ்வ்வளவு பூஜைகள் செய்து இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு ஹோமங்கள் செய்து சக்தி ஊட்ட வேண்டியிருக்கு. பூஜைகளை விட ஹோமங்கள் இன்னும் சக்தி மிகுந்தவைன்னு புரிஞ்சுக்கலாம்.

லௌகீக ரீதியா ஹோமங்கள் செய்கிறவங்க நிறைய அலங்காரங்கள் செய்கிறாங்க. அட்டகாசமா அலங்காரம் செய்து பூஜை எல்லாம் விமரிசையா செய்து பட் தம் தும் ன்னு பலமான சப்தம் எழுப்பி (மந்திரமாம்!) நிறைய நெய்யை அக்னியில கொட்டிட்டா பார்க்கிற மக்கள் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகிடுவாங்க. மந்திரமாவது, ப்ரொசீஜராவது? அதெல்லாம் யாருக்கு தெரியும்?

பல வருஷங்களுக்கு முன்னே என் நண்பர் வீட்டில் ஹோமம் நடந்தது. செய்கிறவர் சில பல கமென்ட்ரியோடவே செய்தார். புகை கொஞ்சம் அதிகமா இருந்தது. சிலர் கண்ணை கசக்கினாங்க. அதை பாத்துட்டு குருக்கள் சொன்னார், “ அது ஒண்ணும் பண்ணாது, கவலைப்படாதீங்க" பார்வையாளரில் ஒத்தர் சண்டைக்கே போயிட்டார். "ஒண்ணும் பண்ணாதுன்னு ஏன் சொல்லறீங்க? அப்படின்னா ஏன் ஹோமம் பண்ணனும்? நல்லது பண்ணும்ன்னு சொல்லுங்க.” :-))))

Monday, September 5, 2011

உரத்த சிந்தனை... தாந்திரிக ஹோமங்கள்..


இப்ப புதுசா பல பல ஹோமங்கள் வேற உருவாகிகிட்டு இருக்கு....
-----

தனக்கு பிடிச்சதை எல்லாம் ஹோமத்தில புகுத்திட்டாங்க.

இன்ன ஆன்மீக தலைவரை பிடிச்சு இருக்கா? அவருக்கு ஒரு ஹோமம். என்ன மந்திரம்? அது என்ன பெரிய விஷயம்? அவர் பேரையே சொல்லி ஸ்வாஹா ன்னு சொல்லிட்டா போச்சு! இல்லை அவரை ரொம்ப பிடிச்ச ஒத்தர் ஒரு சஹஸ்ர நாமாவளியே எழுதி இருப்பார். அதை சொல்லியே ஹோமம் செய்துடலாம். ம்ம்ம்ம் போதும் இது இப்ப.

தாந்த்ரீக வழியிலே ஹோமங்கள் செய்யலாம். அது வைதீக முறைக்கு அதிகாரம் இல்லாதவர்களுக்கு குறிப்பா சொல்லப்பட்டாலும் எல்லோருமே செய்கிறாங்க. வேதம்தான் படிக்கலையே அப்புறம் என்னன்னு யோசனை போல இருக்கு. அந்த காலத்து கதைகளிலே மந்திரவாதி வருவான். அவன் எப்ப ஹ்ரீம் க்லீம் ன்னு சொல்லறானோ அப்ப மந்திரம் போடறான்னு தெரிஞ்சுப்போம்! ஹ்ரீம் க்லீம் எல்லாம் பீஜாக்ஷரங்கள்.

பீஜாக்ஷரங்கள்? பீஜ = விதை அக்ஷரம் = எழுத்து.

இன்ன இன்ன தேவதைக்கு இன்ன இன்ன அக்ஷரம் ன்னு வரையரை இருக்கு. அதன் படி மந்திரம் அமையும். என்ன தேவதை என்ன அக்ஷரம்ன்னு யாரானா லிஸ்ட் தயார் செய்தா தேவலை!

பல சமயம் தேவதைகள் தனியா இருக்காது. கூட சில தேவதைகளும் இருக்கும். சில சமயம் அவை சொல்லப்படும். பல சமயம் இல்லை. முதன்மை தேவதையோட த்யான ஸ்லோகத்தை ஆராய்ஞ்சு பாத்தா என்ன என்ன தேவதைகள் கூட இருக்குன்னு தெரிஞ்சுடும். உதாரணமா தாமரை கையிலே இருந்தா சூரியன் இருப்பார்.  இப்படி பலது. காயத்ரியை ஆராய்ஞ்சு பாத்து என்ன என்ன தேவதை கூட இருக்காங்கங்கன்னு சொல்லுங்களேன்!

யார்கிட்டேயாவது போய் கிஞ்சித் ஹிரண்யம் கொடுத்து மந்திரம் எழுதி வாங்கி நெட்டுரு பண்ணி ஹோமம் செய்வதில பெரிய பலன் இருக்காது. ஐடியலா ஹோமம் செய்கிறவர் மந்திர சித்தி அடைஞ்சு இருக்கணும். மந்திர சித்திக்கு புரச்சரம் என்கிற ப்ரொசீஜர் உண்டு. அந்த மந்திரத்தை பல முறை -அக்ஷர லக்ஷம் ன்னு சொல்வதுண்டு- உருப்போட்டு மந்திர சித்தி பெற்றவர் செய்கிற ஹோமம் ஒரு சில ஆவர்த்தி ஆனாலும் நல்ல பலன் இருக்கும். சும்மா 'ஆல்சோ ரேன்' மக்கள் செய்கிற ஹோமத்துக்கு பலன் எவ்வளோ ஆயிரம் ஆவர்த்தி ஆனாலும் 'ஸோ ஸோ தான். இந்த மாதிரி இந்த காலத்துல ஆளை கண்டு பிடிக்கறது அரிதுதான். குறைஞ்ச பக்ஷம் நிறைய காயத்ரியாவது பண்ணி ஆத்ம சக்தியை பெருக்கிகொண்டவரா இருக்கணும்.
இல்லையே, இன்னார் இப்படி பண்ணினார், எனக்கு பலன் கிடைச்சுடுத்துன்னு சொல்கிறவங்களுக்காக இப்பவே ஒரு டிஸ்கி போட்டு வைக்கிறேன். அது பல விஷயங்களையும் தாண்டி பலன் கொடுத்துடும். அது மெதுவா அப்புறம் சொல்லறேன்.
தாந்திரிகம் அதிகமா இன்னும் இருக்கிறது கேரளாவிலே. அங்கே உதிச்ச ஆதி சங்கரர்தான் நிறைய மந்திரங்களை தொகுத்து எழுதினார். ப்ரபஞ்சசாரம் என்று பெயர்.

ஒரே தேவதைக்கு பல மந்திரங்களும் இருக்கும். நரசிம்ஹருக்கு முன்னூத்தி சொச்சம்ன்னு நினைவு.

எது எப்படி இருந்தாலும், ஹோமத்துக்கு முன்னே குறிப்பிடத்தக்க அளவு மந்திரத்தை ஜபம் செய்து விட்டு ஹோமம் செய்வதே உசிதம். அப்பதான் கொஞ்சமாவது பலன் கிடைக்கும்.

Thursday, September 1, 2011

என் ப்ரெண்ட்!


இன்னிக்கு நம் ஃப்ரெண்ட் பிள்ளையாரோட விசேஷ நாளான பிள்ளையார் சதுர்த்தி என்கிறதாலே நம் சிந்தனையை எல்லாம் கொஞ்சம் ஓரம் கட்டிட்டு அவர் பக்கம் திருப்பலாம்.

அவரை பத்தி தெரியாத ஆன்மீகவாதி இருக்க முடியாது. அவர் சிவன் பார்வதிக்கு மூத்த பிள்ளை; எப்படி யானை தலை வந்தது; விக்கினங்களை உண்டாக்குகிறது / போக்குகிறது; அச்சர பாக்கம் கதை; உச்சி பிள்ளையார் கதை; ஔவையாருக்கு அருளியது; திருக்கோவிலூரில் ஔவையார் இவருக்கு பூஜை செய்தது; ஔவையாரை அப்படியே கைலாசம் கொண்டு விட்டது ன்னு பல கதைகளும் பலரும் எழுதியும் படித்தும் சலிக்காது!

ஒத்தர் சிவனை கும்பிடலாம் முருகனை கும்பிடலாம், அம்பாளை கும்பிடலாம். எந்த ஹிந்து மத கடவுளை கும்பிடறவங்களும் ஒத்துக்கொள்ளும் தேவர் இவரே. சாதாரணமாக மற்ற தெய்வங்களை ஒப்புக்கொள்ளாத ஸ்ரீ வைஷ்ணவர்களும் விஷ்வக்சேனராக இவரை கும்பிடறாங்க. யாருக்கு பூஜை, ஹோமம் ன்னு ஆரம்பிச்சாலும் முதல் பூஜை பிள்ளையாருக்கே! எவ்வ்வளோ பெரிய யாகம் செய்தாலும் கூட பிள்ளையாருக்கு பூஜை இல்லாம ஆரம்பிக்கறதில்லை.

கொஞ்சம் ஆச்சரியமாக இன்னைக்கு என் நண்பர் ஒத்தர் பௌத்த பிள்ளையார் பத்தி பதிவு போட்டு இருக்கார்.

பக்தி மார்கத்திலே இருக்கிரவங்க ரொம்ப விரும்பரவர் இவர். சிவனை பாத்து கொஞ்சம் பயப்படணும். எவ்வளவுக்கெவ்வளவு ஆசுதோஷியோ அவ்வளவுக்கவ்வளவு கோவக்காரர். விஷ்ணு ஜாலியா தூங்கிட்டு இருந்துடுவார். அவர்கிட்டே காரிய சாதகம் பண்ணிக்க அவரோட வீட்டுகாரம்மாகிட்டே அப்ளிகேஷன் போடணும்! :-) சாக்தம் சொல்லவே வேண்டாம்; கரணம் தப்பினா....

ஆனா பாருங்க பிள்ளையாரை பாத்து பயப்படறதா கேள்விபட்டு இருக்கீங்களா? அவர் மேலே ஆழ்ந்த பக்தியும் செலுத்தலாம். மித்ர பாவத்தோட சல்லாபிக்கவும் செய்யலாம்.

மஞ்சள் பிள்ளையார், சாணி பிள்ளையார், களிமண் பிள்ளையார் எல்லாம் பாரம்பரியம். சோனா பத்ரம் என்கிற சோன் நதி கல்- சிவப்பா இருக்கும்- பஞ்சாயதன பூஜை செய்கிறவங்க பயன்படுத்தறது. (இயற்கையா தண்ணீர் அரிச்சதா பாத்து வாங்கணும். பெரிய கல்லை சம்மட்டி வெச்சு உடச்சு விஷயம் தெரியாதவங்களுக்கு வித்துடுவாங்க.) இந்த சிலாவை பாத்தா ஆச்சரியமா பல முண்டு முடிச்சுகள் இருக்கும். கொஞ்சம் கவனமா பார்க்க ஒவ்வொரு கோணத்துலேந்தும் ஒரு பிள்ளையார் உருவம் - தும்பிக்கை, மண்டை தெரியும்.

எத்தனையோ தெய்வங்களோட உரு வரைஞ்சு இருக்காங்க. ஆனா இப்படித்தான் இருக்கணும்ன்னு வரையரை இருக்கும். பிள்ளையாரைப்போல ஆளுக்கு ஆள் கற்பனையை தட்டிவிட்டி வரைஞ்ச தெய்வங்கள் இல்லை. கல்லால பிள்ளையார், இலையால பிள்ளையார், தேங்காயால பிள்ளையார், டிஜிட்டல் பிள்ளையார்... யப்பாடா எவ்வளோ வகை! இன்னிக்குத்தான் 'நான்' பிள்ளையார் பாத்தேன்.

ஒவ்வொரு வினாயக சதுர்த்தி போதும் மக்கள் கற்பனை பறக்க ஆரம்பிச்சுடுது. வீரப்பன் பிள்ளையார், அன்னா ஹசாரே பிள்ளையார் ன்னு சமயத்துக்கு தகுந்தாப்போல உருவாவார். யாரும் மனக்கஷ்டப்படறதில்லை! பிள்ளையாரும் எல்லாத்தையும் சிரிச்சுகிட்டே ஏத்துகிட்டு நல்லது பண்ணிடறார்.

நாம் ரொம்ப ரொம்ப ப்ரெண்டிலியா நினைக்கலைன்னா இப்படி எல்லாம் இவரை படுத்த முடியுமா? யாருக்கு எப்படியோ, எனக்கு பிள்ளையார் ஒரு ப்ரெண்டு. அப்படியே வெச்சுக்கலாம்!