Pages

Showing posts with label பாபங்கள். Show all posts
Showing posts with label பாபங்கள். Show all posts

Friday, April 19, 2013

ஹாப்பி ராம நவமி!


சில மாதங்கள் முன் ஒரு பெரியவரிடம் கேட்ட கதை. அயோத்தி நாட்டில் ஒரு ஏழை ப்ராம்ஹணர் இருந்தார். (அந்த காலத்து கதைகள் முக்காலே மூணு வீசம் இப்படித்தான் ஆரம்பிக்கும்!) குடிசை போட்டுக்கொண்டு எளிய வாழ்க்கை. அவர் பாட்டுக்கு வேதங்கள், சாஸ்த்ரங்கள் அத்யயனம் செய்து கொண்டு, சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தார். பொருள் சம்பாதிக்க வேண்டும் என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல்..... தினசரி ஜீவனம் ஓடிக்கொண்டு இருந்தாலும் நாளையை பற்றிய எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல்.... அவர் பொறுத்த வரை நிம்மதியாக இருந்தாலும் அவரது மனைவி நிம்மதியாக இல்லை. "இந்த ஆண்களுக்கு எங்கே இருக்கிறது பொறுப்புணர்ச்சி? இத்தனை குழந்தைகள் இருக்கின்றனவே அத்தனயும் கடை தேற வேண்டாமா? கவலையே இல்லாம இருக்கிறாரே இந்த மனுஷன்! என்ன செய்யலாம்" என்று சிந்தனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஊரில் பரப்பரப்பாக பேச்சு எழுந்தது. தசரதர் ராமனை காட்டுக்கு போகச்சொல்லி விட்டாராம். அவரும் தன் உடமை எல்லாவற்றையும் தானம் செய்து விட்டு காட்டுக்கு போகப்போகிறாராம்! பட்டாபிஷேகத்துக்கு நாள் குறித்து இருக்கும் போது இப்படி ஒரு திருப்பம்!
இந்த ஸ்திரீக்கும் 'கொக்குக்கு மீன் மீதே குறி' என்பது போல மக்கள் பேசிக்கொண்டதில் ஒன்று நன்றாக மனதில் பதிந்தது. ராமர் அவரது சொத்தை தானம் செய்துவிட்டு.... ஆஹா! நம் வறுமை நீங்க இதோ ஒரு உபாயம் கிடைத்துவிட்டது! உடனே போய் தன் கணவனின் கவனத்தை அவரது சாஸ்த்ர படனத்தில் இருந்து இழுத்தார்.
"ஓய் ப்ராம்ஹணா! நீர் பாட்டுக்கு குடும்பத்தின் கவலை ஏதும் இல்லாமல் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறீரே! வரிசையாக ஏழு பெண்கள் திருமணத்துக்கு நிற்பதை பாரும். கல்யாணத்தை வெறும் கையாலா செய்ய முடியும்? போய் ஏதேனும் பொருள் சம்பாதிக்கும் வழியை பாரும்! ராமர் காட்டுக்கு போகிறாராம். தன் சொத்தை எல்லாம் தானம் செய்துவிட்டு போகப்போகிறாராம். போய் கொஞ்சமாவது வாங்கிக்கொண்டு வாருங்கள்!"

ப்ராம்ஹணனுக்கோ ப்ரதிக்ரஹம் வாங்குவதில் சம்மதம் இல்லை. யாரிடம் ப்ரதி க்ரஹம் வாங்கினாலும் அவரது பாபங்களையும் சேர்த்துதானே வாங்கிக்கொள்கிறோம்? அத்தனையும் இல்லா விட்டாலும் ஒரு பகுதி பாபமாவது? அதை எப்படி தீர்ப்பது? கொடுப்பது ராமரே ஆனாலும் மனசு ஒப்ப மாட்டேன் என்கிறதே? ஆனாலும் மனைவி சொல்வதிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது?
கணவனுக்கும் மனைவிக்கும் நடந்த சம்வாதத்தில் மனைவியின் கட்சியே ஜெயித்தது!

இந்த ப்ராம்ஹணரும் ராமர் இருக்கும் இடத்தை அடைந்தார். வேத ப்ராம்ஹணனாச்சே! ராமரும் வரவேற்றார். என்ன வேண்டும் என்று கேட்டார். ப்ராம்ஹணருக்கோ கேட்க நா எழவில்லை!
ராமருக்கு விஷயம் புரிந்துவிட்டது. இவரது கோலத்தை பார்த்தாலே இவரது ஏழ்மை புரிந்துவிட்டது. காசுக்கு ஆசைபடாத ப்ராம்ஹணனாக இருக்க வேண்டும். சொத்தை தானம் செய்யும் செய்தி கேட்டு வந்திருக்க வேண்டும். ஆனால் ப்ரதிக்ரஹம் வாங்க கூச்சப்பட்டுக்கொண்டு நிற்கிறார்.
இங்கேதான் ராமரின் மேன்மை வெளிப்பட்டது. வலுக்கட்டாயமாக  தானம் கொடுத்து அவரை சங்கடப்படுத்தாமல் மெதுவாக பேசலானார். "ப்ராம்ஹணரே, என் சொத்து அத்தனையும் ஏறத்தாழ தானம் செய்துவிட்டேன். என் பசுக்கள் மட்டுமே இன்னும் எஞ்சியவை. இதோ அரண்மனையின் வெளியே மேயும் கூட்டம்தான் அவை. ஒரு போட்டி வைக்கப்போகிறேன். யாரேனும் இந்த கழியை  இங்கிருந்து வீசினால் அவருக்கு இங்கிருந்து அந்த கழி வீசப்படும் இடம் வரை உள்ள பசுக்களை பரிசாக அளிக்கப்போகிறேன்! முயற்சி செய்து பார்க்க விருப்பமா?"
ப்ராம்ஹணருக்கு பரம சந்தோஷமாகிவிட்டது! பெறுவது பரிசல்லவா? தானம் இல்லையே? கௌபீனத்தை இறுக்கிக்கட்டிக்கொண்டு ஓடி வந்து கழியை வீசி எறிந்தாராம். அது சரயு நதிக்கு அப்பால் போய் விழுந்ததாம்! ராமர் அவரை நமஸ்கரித்து "இங்கிருந்து கழி விழுந்த இடம் வரை உள்ள பசுக்கள் உங்களுடையது. ஓட்டிக்கொண்டு போங்கள்!" என்றாராம்!
 --
பெரியவர் சொன்ன கதைக்கு கொஞ்சமே கொஞ்சம் கண், மூக்கு எல்லாம் வைத்து இருக்கிறேன்.
ஹாப்பி ராம நவமி!

 

Saturday, August 18, 2012

கோளாறான எண்ணங்கள் - 7

 
போன பதிவில் ப்ராது கொடுத்துட்டு விட்டுடலாம்ன்னு சொன்னேன்.
பலருக்கும் இது கஷ்டமாக இருக்கும். அதெப்படி விட்டுடறது? சொள்ளையா இவ்வளவு பணமாச்சே! என்றால்..

அந்த பணம் நம்ம கர்ம வினையால போக வேண்டியதான்னு நமக்குத்தெரியாது. அப்படி போக வேண்டியதா இருந்தா என்ன செய்தாலும் அது திரும்பி வராது. ஒரு வேளை அது திரும்பி வர வேண்டியதா இருந்தால் அதுக்கு நம்முடைய பாபங்கள் சிலதே கூட தடையா இருக்கலாம். இந்த பாபங்கள் நீங்க தடையும் நீங்கும்; நமக்கு கிடைக்க வேண்டியதும் கிடைச்சுடும். கார்த்தவீர்யார்ஜுனா, காணாமல் போன இது கிடைக்கட்டும்; நான் உனக்கு இன்னது செய்யறேன் என்பது சும்மா ஒரு வியாபாரம் இல்லை. தேவதையை திருப்தி செய்து சின்ன பாபத்தை போக்கிக்கிற சமாசாரம்.


பின்னே மனிதனை விட தேவர்களுக்கும் இறைவனுக்கும் அதிக ஆற்றல் இருக்கா இல்லையா? நம்மால முடியாதது அவர்களாலே முடியும். அவங்க முன்னேயே ஏன் செய்யக்கூடாது, இப்ப ஏன் செய்யணும்?

நாமா நம்மாலே முடியும்ன்னு நினைச்சு செய்கிறப்ப நம் அஹங்காரம் தலை தூக்குகிறது. பகவானும் சரி செய்யட்டுமே ன்னு தள்ளி நின்னு வேடிக்கை பார்ப்பான். படற கஷ்டம் எல்லாம் வேடிக்கை பார்த்தபின் சரி பாவம் போகட்டும்ன்னு நிறைவேத்தி கொடுத்தாலும் கொடுப்பான். அப்படியே விட்டாலும் விட்டுடுவான். ஆனால் நாம் வேண்டிக்கொண்டால் அவனால செய்யாம இருக்க முடியாது - பலமான கர்மவினை தடையா இருந்தாலே ஒழிய. அதென்ன அவனால முடியாததும் உண்டான்னு சிலர் சண்டைக்கு வரலாம். முடியும் சாமி, முடியும். ஆனா அப்படி அவன் ஏன் செய்யணும். கர்மவினை என்கிறதும் அவன் போட்ட ரூல்தானே? அதை அவனே மீறினால் யார் அப்புறம் அதை மதிப்பார்கள்? அதனால சின்ன கர்மவினை தடையா இருந்தா போனாப்போறதுன்னு கொஞ்சம் கருணை காட்டி வேலை நடக்கலியேன்னு நாம் படுகிற தவிப்பையே தண்டனையா கருதி செய்து கொடுத்துடுவான்.

இப்படி எல்லாம் இல்லாமல் மேலே ஒரு படி போய் "பகவானே நீ என்ன தரயோ அதை வைத்துக்கொண்டு நான் வாழ்வேன்; நல்லதோ கெட்டதோ இரண்டுமே உன் ப்ரசாதம்" ன்னு வாழ கத்துக்கிட்டவங்க பாக்கியசாலிகள்! அவர்களுக்கு என் நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறேன்!
இதுக்கும் மேலே... அப்படி இன்னும் மேலே போக முடியுமா என்ன? ஆமாம், முடியும்!
இதுக்கும் மேலே ஒரு படி போய் நம் செயல்கள் எல்லாமே அவன் செயலாகும் போது எல்லாமே நடக்க வேண்டிய படி நடக்கும். அதெப்படி?
நான், என் என்கிற அஹங்காரம் போய்விட்டால். எப்போது நம் கையில் ஒன்றும் இல்லை, எல்லாம் அவனே பார்த்துக்கொள்ளட்டும்ன்னு ஒரு சரணாகதி செய்ய முடிகிறதோ, அப்போது நம் செயல்கள் என்று ஒன்றும் இராது. எல்லாவற்றையுமே அவன் நடத்திக்கொண்டு போகும்போது நம் கர்ம வினைகள் எல்லாம் தொலையும். அந்த பக்குவத்தில் துன்ப இன்பங்கள் இரண்டையுமே சமமா கருதுகிற புத்தி இருக்கும். அதனால் "ஐயோ இப்படி நடக்கிறதே!" என்று நினைக்கிற சமாசாரமே கிடையாது.
அப்படி வாழ்கிற மஹான்களை நமஸ்கரித்து இந்த பதிவுகளை சமர்ப்பணம் செய்து நிறைவு செய்கிறேன்.
நல்லதே நடக்கட்டும்! நாராயணா!

Friday, August 17, 2012

கோளாறான எண்ணங்கள் -6


ரைட், ஏறத்தாழ இந்த பதிவுகளின் கடைசிக்கு வந்துட்டோம். அதிகம் தொல்லை தர மாட்டேன்! ;-)

நானும் பாப காரியம் எல்லாம் செய்யாம இருக்கத்தான் பார்க்கிறேன். இந்த மனசு விட மாட்டேங்குது! மனசில இருக்கிற காமும் குரோதமும் படுத்துது. என்ன செய்யலாம்?
நானா ஒண்ணும் பண்னலை. இந்த ஆசாமி இன்ன காரியத்தை பண்ணித்தரேன்னு பணம் வாங்கிண்டு போய் ஏமாத்திட்டான். சும்மாவா இருக்க முடியும். மனசு அதையே சுத்தி சுத்தி வருது. அவனை திட்டிக்கொண்டே இருக்கிறேன். அவனை பாத்தா சட்டையை பிடிச்சு நாலு அறை விடத்தோணுது. நிஜமாவே அப்படி செய்துடுவேனோ ன்னு பயமா இருக்கு! என்ன என்னவோ செய்து பாத்தாச்சு. ஒண்ணும் சரிப்படலை. என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்ன்னா நிதானமா யோசிக்கலாம். தீதும் நன்றும் பிறர் தர வாரா ன்னு ஒரு பாட்டு நினைவு இருக்கா? (எதுக்கும் இருக்கட்டும்ன்னு கடைசியில் கொடுத்து இருக்கேன், எங்கிருந்து எடுத்தேன்னு நினைவு இல்லை. அந்த புண்ணியவான் வாழ்க!)

தண்ட செலவு ஆகணும்ன்னு நம் கர்மா நம்ம தலையில எழுதி இருந்தா அது ஆகியே தீரும். நாம் இருபது ரூபாக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தின்னு அதுல ரெண்டு ரூபா ஒத்தருக்கு லாபம் கிடைக்கணும்ன்னு இருந்தா அது நடந்தே தீரும். நாம் நஷ்டப்படணும்ன்னு இருந்தா நஷ்டப்பட்டே தீருவோம்.

பல வருஷங்கள் முன்னே சில ஊர்களுக்கு போய் போய் வருவேன். மோட்டார் பைக்கில்தான் பெரும்பாலும் பயணம். போகும் போது ஸ்லோகம் / மந்திரம் சொல்லிக்கொண்டே போவேன்.  நெய்வேலி போக வேண்டி இருந்தது. வெளியூர் ஆசாமிங்களுக்கு அது பாடாவதி ஊர்! நகரத்துக்குள்ள ஒரு போக்கு வரத்து வசதியும் கிடையாது. ஆட்டோவில போக வேண்டிய இடத்துக்கு போயிடலாம். திரும்பறது? அப்பல்லாம்  அலைபேசி எல்லாம் கிடையாது. ஒரு கல்யாண ரிசப்ஷன் அடெண்ட் பண்ண பஸ்ல போய் திரும்ப பட்ட பாட்டிலே இனிமே வாகனம் இல்லாம வரக்கூடாதுன்னு முடிவு செய்திருந்தோம்.

சரி.  அதனால் ஒரு விழாவுக்கு பைக்ல போயிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தேன். நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து போன காலம்; தீட்டு என்பதால் மந்திர ஜபம் செய்யவில்லை. திரும்பும் போது ஏறத்தாழ மணி எட்டாகிவிட்டது. மேல்பட்டாம் பாக்கம் என்னும் ஊரை தாண்டிக்கொண்டு இருந்த போது திடீரென்று நாய் ஒன்று குறுக்கே வந்தது. சடன் ப்ரேக் போட்டு வண்டி சரிந்து கீழே விழுந்தேன். ஜனங்கள் வந்து உதவி செய்தார்கள். நன்றி சொல்லிவிட்டு பைக்கை கையில் தாங்கிய போது இட்து க்லாவிகிள் உடைந்து போயிற்று என்று புரிந்துவிட்டது.

எவ்வளவு அருமையான செட் அப்?! பஸ்ஸிலா போகிறாய்? இந்தா அதுக்கு ஒரு தடை. மந்திரமா சொல்லி தப்பிக்கிறாய? இந்தா அதுக்கும் ஒரு தடை. கீழே விழு; எலும்பை முறித்துக்கொள். அது உன் கர்ம வினை.

எல்லாம் சரி. இந்த எனக்கு அநியாயம் பண்ண ஆசாமியை என்ன செய்ய?
ஒண்ணும் செய்ய வேண்டாம். எப்ப நம்மால ஒண்ணும் செய்ய முடியலைன்னு தெரியறதோ அப்ப கருப்பு சாமிகிட்டே ப்ராது கொடுத்துட்டு மறந்துடலாம்.

இப்படி எனக்கு துரோகம் செஞ்ச ஒத்தர் பட்ட பாட்டை பார்க்கலாமா?

ஃப்லாட்கள் கட்டினேன். தாத்தா கட்டிய வீடு. பூர்வீக சொத்து. பல வருஷங்கள் ஆகி அதன் வாழ்நாள் முடிகிறது என்று தோன்றியதால் இடித்துவிட்டு கட்ட முடிவு செய்தோம். அது சரி யார் பூனைக்கு மணி கட்டுவது? வீட்டுக்கு பாத்யதை இருந்தவர்கள் எங்கெங்கோ இருந்தார்கள். என் அப்பா தவிர நான் ஒருத்தன்தான் லோக்கல். அப்பாவுக்கு கஷ்டம் வைக்க வேண்டாம் என்று தலையில் அக்‌ஷதை போட்டுக்கொண்டு இறங்கிவிட்டேன். அந்த அனுபவங்கள் ஒரு தனி தலையணை சைஸ் புத்தகம். நாம் பார்க்க வேண்டியது மிஸ்டர் எம் செய்ததை மட்டுமே! 

இரண்டு தொகுப்புகள் கட்டினோம். முதலில் லிப்ட் வேண்டாம் என்று நினைத்து பின் லிப்ட் அமைக்க நேரிட்டது. அதற்கு இயக்குவதற்கு தகுதி சான்று வாங்க வேண்டும். அதை நாமே போய் வாங்க முடியாது. அதற்கென்று சில சர்டிபைட் ஆசாமிகள் இருப்பார்கள். அவர்கள்தான் “சோதித்து விட்டு சர்டிபை செய்து சான்றிதழ் வாங்கி” தருவார்கள். ஹிஹிஹி அதாவது புரோக்கர்கள்! கம்பெனியில் இருந்து நம்முடன் பேச்சு வார்த்தை நடத்தும் ஆசாமியே அந்த ஆசாமியையும் பிடித்துக்கொடுத்து காரியத்தை முடிப்பார். முதல் கட்டிடம் ஒரு பிரச்சினையும் இல்லை. இரண்டாவது கட்டிடத்துக்கு பிரச்சினை ஆரம்பித்தது. காலா காலத்தில் வரவில்லை. இதோ அதோ என்று ஏமாற்றிக்கொண்டே இருந்தார். கம்பெனி ஆசாமியோ வேலையை மாற்றிக்கொண்டு துபாய் போய்விட்டார்.

 பெரிய கதையை சின்னதாக்கி விடலாம். அனுமார்கிட்டே முறையிட்டுவிட்டு என்ன ஆச்சு என்று மட்டும் விசாரித்துக்கொண்டு இருந்தேன். இவருக்கு அப்புறம் என்ன ஆச்சு? இவரது அம்மா கிட்னி பெய்லியர் என ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி மூன்று மாதம் போச்சு. பின் அவர் இறந்து போனார். சொத்து பிரிப்பதில் தகராறு வந்து குடும்பம் சிதைந்தது. மனைவி டைவோர்ஸ் செய்து விட்டு போய்விட்டார். இவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து படுத்தார். தேறி வந்த போது இன்னொரு  ஹார்ட் அட்டாக். அப்புறம் விசாரிப்பதை விட்டு விட்டேன். தண்டம் 15 ஆயிரம். இன்னொரு ஆசாமியை பிடித்து சான்றிதழ் வாங்கிக்கொண்டேன்.
இந்த பதிவு பெரிசாகப்போய் விட்டது. அதனால் தீதும் நன்றும் அடுத்த பதிவில்…

 

Thursday, August 16, 2012

கோளாறான எண்ணங்கள் -5


இது சம்பந்தமான கோளாறான எண்ணங்களை நீங்களும்தான் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்!
--
இப்படி எழுதினேன். பலத்த மௌனம்தான் பதில்! போகட்டும்!
--
ப்ராயச்சித்தத்தில் முக்கிய விஷயம் பச்சாத் தாபம் என்று பார்த்தோம். நாம் வேண்டுமென்று செய்யாத பாபங்களுக்கு ஐயோ பாவம்(!) இப்படி ஆகிவிட்டதே என்று வருந்துவதே ஒரு வகை சின்ன ப்ராயச்சித்தமாக போய் விட்டது.
அவ்வப்போது விரதங்கள் இருப்பது இதுக்குத்தான். ப்ராயச்சித்தமாகத்தான். நம்மை நாமே வருத்திக்கொள்வது ப்ராயச்சித்தமாகிறது. காஞ்சி மஹா பெரியவரே ஒரு உதாரணமாக இருந்தார். மடத்தை சேர்ந்த ஒருவரால் ஒரு தீங்கு இழைக்கப்பட்டு விட்டது. போன இடத்தில் சூழ்நிலை காரணமாக அப்படி ஆகிவிட்டது. இதற்கு மடாதிபதி நேரடி பொறுப்பு இல்லை என்றாலும் ‘வைக்காரியஸ் ரெஸ்பான்சிபிலிடி’ என்பதான மறைமுக பொறுப்பு அவருடையதாயிற்று. இதைப்பற்றி வெளியே யாருக்கும் தெரியாது. இருந்தாலும் இவரே க்ரிமினல் பீனல்கோட் புத்தகத்தை கொண்டு வரச்சொல்லி தனக்குத் தானே தண்டனை விதித்துக்கொண்டாராம்! இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாக இருப்பவர்களை இப்போதெல்லாம் பார்ப்பது அரிது.
வேத பாராயணம் செய்வது இந்த காலத்தில் எல்லோருக்கும் சாத்தியமில்லை. யாருக்கெல்லாம் காயத்ரி உபதேசிக்கப்பட்டு இருக்கிறதோ அவர்கள் தினசரி ஆயிரம் அல்லது அதற்கும் மேல் ஜபம் செய்து வருவது பாபங்களை சர்வ நிச்சயமாக தொலைக்கும்.
புராணங்களில் பலரும் கதைகளை மட்டும் படிக்கிறார்கள். சிலர் அப்படி  படித்துவிட்டு கேலி செய்து கொண்டும், இடக்காக கேள்விக்கேட்டுக் கொண்டும் திரிகிறார்கள். அவற்றில் பல இடங்களில் பல ஸ்லோகங்கள் சிவ பெருமான் முருகனுக்கு சொன்னது, பார்வதிக்கு சொன்னது என்ற ரீதியில் சொல்லப்பட்டு இருக்கின்றன. பல உபாசனைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றை கடைபிடிப்பதன் மூலம், பாராயணம் செய்வதன் மூலம் யாரும் பாபங்களை தொலைத்துக் கொள்வதுடன் பல விஷயங்களை- கடன் தொல்லை தீருவது போல - வேண்டிப்பெறலாம்.
பகவான் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வழியில் படியளந்து கொண்டு இருக்கிறான். வெயில் மழை தாக்க முடியாதபடி ஒரு கூரை, உடுத்திக்க கிழிசல் இல்லாமல் ஒரு துணி, பசியில்லாமல் இருக்க சாப்பாடு கிடைச்சாச்சுன்னா நம்ம அடிப்படை தேவைகள் பூர்த்தி ஆயாச்சு. இதுக்கும் மேலே நமக்கு கொடுத்து இருக்கிறதெல்லாம் போனஸ்தான்.
அதனால நம்மகிட்ட சேருகிற பணத்தை வெளியே அனுப்ப பார்க்கணும். இதன் மூலமா நம் பாபங்கள் தொலையும். பொதுவா புண்ணிய கணக்கு வேறே பாப கணக்கு வேறே “தானிக்கி தீனி சரி போயிந்தி” ன்னு ஆகாதுன்னு சொன்னாலும் இன்னொரு பக்கம் ரிஷிகள் புண்யே பாபம் அபநுததி  - புண்ணியத்தால் பாபம் விரட்டப்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்கள். முன்னேயே “கலிக்காக சொல்லிய ப்ராயச்சித்தங்களின் பிரதிநிதியாக சொன்னதில் ஒன்று திரவியத்தை தானமாக கொடுத்துவிடுவது. யத் கலுவாவ தப இத்யாஹுஹு யத் ஸ்வயம் ததாதீதி….. ஸ்ருதியே இதை ஒரு தபஸ் என்கிறது.” என்று பார்த்தோம். ஆகவே அவரவர் சக்திக்கு தகுந்த படி தானம் செய்வதை மேற்கொள்ளலாம்.

Wednesday, August 15, 2012

கோளாறான எண்ணங்கள் -4



இப்ப பிரச்சினை இதை எல்லாம் வாங்கிகிட்ட நாங்க இந்த பாபங்களை எங்கே கொண்டு தொலைக்கிறது? :-)
 ---
அது எப்படியோ தொலையட்டும்!

நம் செயல்கள் எல்லாமே பாபம் இல்லாம இருக்கான்னு யோசிச்சா இல்லைன்னே தோணும். பெரும்பாலான செயல்கள் பாபம் புண்ணியம் கலந்ததாவே இருக்கும். குழந்தைக்கு வலிக்குமே, நோய் வருமேன்னு கொசுவை கொல்லப்போனா அதுவும் பாபமாகிறது. நடந்தால் கொண்டால் எத்தனையோ ஜீவ ராசிகள் மிதி பட்டு செத்துப்போகின்றன. காலம் கெட்டு மழை பெய்யறதே ஒரு வென்னீர் வெச்சு குடிக்கலாம்ன்னு பாத்தா அடுப்பு ஏத்தினதிலேயும் தண்ணீரை கொதிக்க வெச்சதிலேயும் சிலது செத்துப்போச்சு. சரி ஒண்ணுமே செய்யாம இருப்போம்ன்னாலும் நாம் எடுக்கிற மூச்சிலே சில ஜீவராசிகள் உள்ளே போய் செத்துப்போகுது. மூச்சு விடாமலே இருக்க முடியுமா என்ன?

ஜைனர்களின் அடிப்படை கொள்கை ஜீவ காருண்யமா இருக்கிறதாலே அவங்க நிறைய விஷயம் பாலோ பண்ணறாங்க. ஜைன துறவிகள் வாய் மூடி போட்டுக்கிறாங்க. (முகமூடின்னு எழுதப்போனேன், அது சரிதான்னாலும் கொஞ்சம் குழப்புமோன்னு…) நடக்கும் போது முன்னாலே பெருக்கிக்கிட்டே போவாங்க. தண்ணீரை துணியாலே பில்டர் செய்வாங்க.

என்ன செய்தாலும்  நம்மால சில உயிர்கள் போவதை தடுக்க முடியாது.

உம். ஆனால் இதுக்காக ரொம்ப கவலைப்பட வேண்டாம். அஹிம்சை என்கிறது சன்னியாசிகளுக்குத்தான் பரம தர்மம். குடும்ப பாரம் சுமக்கிறவங்களுக்கு இல்லே. அவங்களால இதை முழுக்க கடைப்பிடிக்க முடியாதுன்னு தெரிஞ்சே சாத்திரங்கள் தினசரி நடவடிக்கையாவே சில ப்ராயச்சித்தங்களை வெச்சு இருக்கு. வைச்வதேவம் என்கிற அந்த ப்ராயச்சித்தங்களை இன்னிக்கு தினசரி செய்கிறவங்களையும் காணோம்!

இப்படியாக நம் வாழ்கை முறைகள் மாறினதிலே புண்ணியங்கள் செய்வதிலிருந்து வெகு தூரம் விலகிவிட்டோம். பாபங்களை பெருக்கிக்கொண்டுவிட்டோம்.  என்னதான் செய்யலாம்? இது சம்பந்தமான கோளாறான எண்ணங்களை நீங்களும்தான் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்!

 

Friday, August 10, 2012

கோளாறான எண்னங்கள் - 3


  
பல வருஷங்களுக்கு முன்னே என் பெரியம்மா இறந்து போனார். காரியம் நடக்குமிடத்தில் நான் இருந்தேன். அப்போதுதான் சில விஷயங்களை கற்றுக்கொண்டு இருந்தேன், கவனிக்க ஆரம்பித்து இருந்தேன். விஷயம் தெரிவது சில சமயங்களில் சங்கடம்

 ஒருவர் இறந்து போனால் பல ப்ராயச்சித்தங்கள் செய்ய நேரிடலாம். இறந்த நாள், திதி, நக்‌ஷத்திரம் பொருத்து சில சமயம், சில ப்ராயச்சித்தங்கள். இதற்கு காரியம் செய்து வைத்த வாத்தியார் அங்கே - ஞானவாபி என்கிறார்களே அது போன்ற இடத்தில் - இருந்த ப்ராம்ஹணர் இரண்டு பேரை கூப்பிட்டார். இன்ன விஷயமாக ப்ராயச்சித்தமாக என்னால் காவேரிக்குப்போய் துலா ஸ்நானம் செய்ய முடியதாகையால் எனக்காக நீ செய் என்று சொல்லி பத்து ரூபாயை கொடுத்தார். அந்த பத்து ரூபாயில் பஸ் ஸ்டாண்டுக்கு கூட போக முடியாது. செய்பவரும் கொடுத்தார். அவருக்கு ஏன் என்ன என்று தெரியவில்லை; சொன்னபடி செய்தார். வாங்கிக்கொண்டவரும் வாங்கிக்கொண்டார்; அவருக்கும் ஏன் என்ன என்று தெரியவில்லை! வாங்கிக்கொண்டவரின் கால்களை கவனிக்க நேர்ந்தது.

இந்த மாதிரி வாங்கிக்கொள்கிறார்களே அவர்கள் கால்களை அடுத்த முறை கவனியுங்கள். ப்ராயச்சித்தம் செய்யாமல் எவ்வளவு வாங்கி இருக்கிறார் என்று புரிந்து போகும்! எக்ஸீமா என்று ஒன்றை அது வரை பார்க்காமல் இருந்தால் அதை பார்த்துவிடலாம்! இது லேசில் ஆறவும் ஆறாது, உயிரை எடுக்கவும் எடுக்காது, சரியாகவும் ஆகாது!

பல பாபங்களை போக்க கடைசியில் பல மக்கள் எங்களிடம்தான் மருத்துவர்களிடந்தான் - வருகிறார்கள். பல வருஷங்கள் முன் ஒரு விஷயம் கவனிக்க ஆரம்பித்தோம். யாருக்கு எளிதில் தீராத வியாதி வருகிறது? யார் எங்கே வேலை செய்கிறார் என்று பார்த்தால் நிறைய வாங்கும் துறைஇல் இருப்பார்! இது பற்றி பேசிக்கொண்டு இருந்த போது திருச்சியில் ஒரு குழந்தைகள் வைத்தியர் இதே போல ஆராய்ச்சி செய்ததாகவும் இதே போல் ரிசல்ட் என்றும் தெரிய வந்தது. அப்புறம்தான் வாங்காத துறையே இல்லை என்றாகிப்போனது!
இப்ப பிரச்சினை இதை எல்லாம் வாங்கிகிட்ட நாங்க இந்த பாபங்களை எங்கே கொண்டு தொலைக்கிறது? :-)

Thursday, August 9, 2012

கோளாறான எண்ணங்கள் 2


சரீ, எப்ப பாத்தாலும் எல்லாம் ப்ராம்ஹணுக்கு கொடுக்கவே சொல்லி இருக்கே? அநியாயம் இல்லே? அவன் என்ன அப்படி உசத்தியா?
ஹும்! அப்படி எல்லாமில்லே!
எனர்ஜி கேன் நாட் பி க்ரியேடட் ஆர் டெஸ்ட்ராய்ட் மாதிரிதான் பாபத்தை அழிக்க முடியாது.  ப்ராம்ஹணனுக்கு கொடுன்னு சொல்லி இருக்கு இல்லையா? அது பசுவோ, அல்லது அதுக்கு பதிலா நிஷ்கம்- ன்னு சொன்ன பணமோ அதை கொடுக்கிறப்ப நம்ம பாபத்தின் பெரும் பகுதி அந்த கொடுக்கப்பட்ட பொருளோடேயே போய் வாங்கிக்கறவரை சேரும். அதனாலத்தான் விஷயம் தெரிஞ்ச ப்ராம்ஹணர்கள் இப்படி வாங்கிக்கறதில்லை. பலருக்கும் விஷயம் எதுவும் தெரியாம போயிட்டதால அசட்டுத்தனமா வாங்கிக்கறாங்க. பின்னால் கஷ்டப்படும் போது அது ஏன் வந்ததுன்னு புரியறதில்லை!
அட, அப்படின்னா ஏன் கொடுக்கச்சொன்னாங்க? விஷயம் தெரிஞ்சவங்களும் வாங்கிக்கறாங்கன்னா…. அதுதான் தர்மம். அந்தணர்களுக்கு விதிச்ச தொழில் ஆறுல தானம் வாங்கிக்கறதும் ஒண்ணு.
அப்ப தானம் வாங்கி பாபத்தை சேத்துண்டே இருக்கணுமா? இல்லை, அது வாங்கிண்ட பாபத்தை பொருத்து நித்திய அக்னி காரியம் செய்யும்போதோ, சந்தியாவந்தனம் செய்யணும் போதோ, வேதம் ஓதும் போதோ போயிடும். பசு மாடு தானம் வாங்கின மாதிரி கொஞ்சம் பெரிய விஷயங்களுக்கு குறிப்பா 10 ஆயிரம் காயத்ரி செய்ய அது போகும். எங்க போகும்? நீங்கதான் இட் கேன் நாட் பி டெஸ்ட்ராய்ட் ன்னு சொன்னீங்களேன்னாஅது வேத மந்திரங்கள் ஜபிக்க வேதத்துக்கு போகும். வேதம் பரப்ரம்ஹ ஸ்வரூபம். இந்த ப்ரபஞ்சமே ப்ரம்ஹம். ஆகவே நல்லது கெட்டது, பாப புண்ணியங்கள் எல்லாமே ப்ரம்ஹம் ஆனதால அங்கே போய் சேர்ந்த பிறகு கடலில கரைச்ச பெருங்காயம் மாதிரி செயலிழக்கும். அது யாரையும் ஒன்றும் செய்யாது.
பின்ன ஏன் அசட்டுத்தனம்ன்னு சொன்னீங்க?
தானம் வாங்கிக்கலாம். அதுக்கு ஏத்தபடி காயத்ரியோ, அக்னியில் ஹோமமோ, வேத பாராயணமோ செய்யணுமே? அதை செய்யறதில்லையே? பரிகாரத்தை செய்யாம தானம் வாங்கிண்டே இருந்தா எப்படி?
பாவம், (!) அவர்களுக்கு ஏது நேரம்? இப்பல்லாம் காலை 4 மணிக்கு கணபதி ஹோமம் ஆரம்பிச்சு என்கிற ரீதியில்தான் ப்ரோக்ராம் எல்லாம் இருக்கு. சிம்பிளா செய்ய வேண்டிய ஹோமத்தோட நிக்காது. ஒரு கணபதி ஹோமம், ம்ருத்யுஞ் ஜய ஹோமம், நவக்ரஹ ஹோமம் (எது செய்யறோமோ இல்லையோ இது மஸ்ட்!),ஆயுஷ் ஹோமம்,  சுதர்சன் ஹோமம்….  முடிய மதியம் ரெண்டு மணி ஆகிடும். காலாகாலத்தில் சந்தியாவந்தனம் செய்யக்கூட நேரமில்லை! வெளிப்படையா இல்லாமல் மனசில செய்யறேன் ன்னு காம்ப்ரமைஸ் ஆரம்பிக்கும். அப்புறம் மெதுவா அதுவும் காணாமல் போகும்!

Wednesday, August 8, 2012

கோளாறான எண்ணங்கள் -1



என் நண்பர் ஒருத்தர் இருக்கார். அவர் சொல்வது “கடவுளோட கம்யூட்டர் டேடா பேஸ் ரொம்பி வழியுது; அதனால இப்பல்லாம் அடிக்கடி உடனேயே பலனை கொடுத்துடறார்.
நாட்டு நடப்பை பாத்தா எனக்கு அப்படித்தான் தோணுது.
யோசிச்சு பாத்தா ஒரு விஷயம் தோணியது.
பாபங்களோட விளைவு 2. முதலாவது நரக வாசம். ரெண்டாவது என்ன? ஊரை விட்டு தள்ளி வெச்சுடுவாங்க. அவங்களோட உறவுக்காரங்களோ ஊர் ஜனங்களோ எந்த தொடர்பும் வெச்சுக்கக்கூடாது.
 இப்ப என்ன நடக்குது? அவங்க என்ன தள்ளி வைக்கறது? நாமே தள்ளி வந்துட்டோம். நகர புறங்களை பாத்தா முக்காலே மூணு வீசம் 3 தலைமுறைக்குள்ள அங்கே குடி வந்தவங்கதான். பக்கத்துல இருக்கிற வீட்டுக்காரர் யாருன்னே தெரியாத நிலை கூட இருக்கு. அண்டை அசல்ல தெரிஞ்சவங்க யாருமே கிடையாது. அவங்களோட போக்கு வரத்தே கிடையாது. பேச்சு வார்த்தை கிடையாது. காலை எழுந்து பறந்து பறந்து வேலை முடிச்சு அலுவலகம் போய் மாலை லேட்டா திரும்பி சாப்பிட்டு தூங்கிஇப்படியே வாழ்கை போகிறது.
இப்படி ஒரு நூறு வருஷம் முன்னால நம் வாழ்கை இருந்தது? ஊரில் ஒத்தரை ஒத்தர் நல்லா தெரியும். அனேகமா உறவாவேக்கூட இருப்பாங்க. நல்லது கெட்டதுன்னா எல்லாரும் ஆஜராகிடுவாங்க; வேலை செய்வாங்க. கல்யாணம் கார்த்தின்னா நாலு நாள் நடக்கும். அப்பவே பல உறவுகள் ஒத்தரை ஒத்தர் பார்த்து குசலம் விசாரிச்சு, உறவுகள் பலப்படும். சில கல்யாணங்கள் கூட பிக்ஸ் ஆகும்.
இப்ப? கல்யாணமா? முந்தின நாளே ரிசப்ஷன். காலை சர சரன்னு எல்லாம் முடிச்சு, மதியம் 12 மணிக்குள்ள மண்டபம் காலி செய்துடணும். வருகிற உறவினர்களை, நினைச்சாக்கூட வீட்டுல தங்க வைக்கிற மாதிரி இல்லை. கொஞ்சம் வசதி உள்ளவங்க உள்ளூர் ஹோட்டல்ல ரூம் போட்டு தங்கி திரும்பிடுவாங்க. இந்த கல்யாணம் தவிர்த்த மங்கல காரியங்கள் முக்காவாசிக்கும் வாழ்த்து தந்திதான். பையன்/ பொண்ணு ஸ்கூல் போகணுமே! லீவு கிடையாது! அந்த பசங்களும் உறவுகள் யாருன்னே தெரியாம வளருவாங்க.
யாரும் ‘ஊரு’க்கு போய்ட்டா மொபைல் போன்ல கூப்டு சொல்லிட்டு இதோ ரெண்டு நாள்ல வந்துடறேன் ன்னு சொன்னதால ஐஸ்பெட்டில மூணு நாள் வெச்சு மெதுவா கர்மா நடக்கிறது!
இப்படியாக தனிமைப்படுத்துவது தானாகவே நடக்குது!
சரி... அடுத்து நரக வாசம்.
நகர வாசமே நரகவாசம்ன்னு சத்தியம் செய்யறவங்க பலர் இருக்காங்க! மேலே சொல்ல வேண்டாமில்லையா? :-) தண்ணீர் விலைக்கு விற்பாங்கன்னு நினைச்சுக் கூட பார்க்கலை 20, 30 வருஷம் முன்னே! தெருக் குழாயில தண்ணி பிடிச்சு குடிச்சுட்டு ஓடிகிட்டு இருந்தோம், சின்ன பசங்களா இருக்கும்போது! ஹும்!
வியாதிங்க அதிகமாயிட்டு வருது! மூக்கை உறிஞ்சிகிட்டு “எனக்கு சைனஸ்” என்கிறது வெகு சகஜமா போச்சு. இந்தியர்களில் சர்க்கரை வியாதி மூணில ஒத்தருக்கு இருக்காம்! உடம்பில் யாருக்கும் பலமே இல்லை. கால் மூட்டை அரிசி ஒரு பக்கம், காய்கறி பெரிய பையில் ஒரு பக்கம், தலையில வாழைத்தார் ன்னு தூக்கிட்டு வயல் வரப்புல நடந்து பத்து மைல் போய் பொண்னை பாத்து கொடுத்துட்டு வந்த கதை எல்லாம் கதையாவே இருக்கு! நம்பக்கூட முடியாது போல இருக்கு.
புதுசு புதுசா வியாதிங்க! ஏதோ ஒரு பெயரை கொடுத்து, போகவும் விடாம இழுத்து அடிச்சு கடைசி நேரத்தில நிம்மதியா போவோம்ன்னு யாரும் நினைக்கிறதில்லை. ஆஸ்பத்ரிக்கு அவசரமா கூட்டிப்போய் அரை மணி நேரத்தில அரை லட்சம் செலவழிச்சு மூக்கு வாய் ன்னு இருக்கிற துவாரங்கள் எல்லாத்திலேயும் ட்யூப் போட்டு நரக வேதனைக்கு ஒரு ட்ரெய்லர் காட்டிடறாங்க!
நாம் சுவாசிக்கிற காத்து, குடிக்கிற தண்ணீர் எல்லாமே விஷமா ஆகிட்டு இருக்கு. நாலு நாள் முன்னே ஒரு பத்திரிகையிலே ஒரு செய்தி. அனுபவஸ்தர் ஒத்தர், “ நீங்க சாப்பிடுகிற காய்கறியில எல்லாம் நிறைய நச்சுப்பொருட்கள் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி என்கிற பெயரில கலந்து இருக்கு. இது மூணு தலை முறையை பாதிக்கும்ன்னாராம். என்னடா தீர்வுன்னு யோசிக்கும் போது பூச்சி புழு இருக்கிற காய்கறிகளை வாங்கி சாப்பிடுங்க. அதில பூச்சிக்கொல்லி கலந்து இருக்காதுன்னு அட்வைஸ் பண்ணாராம்! நிலமைய பாருங்க!
சரீ, எப்ப பாத்தாலும் எல்லாம் ப்ராம்ஹணுக்கு கொடுக்கவே சொல்லி இருக்கே? அநியாயம் இல்லே? அவன் என்ன அப்படி உசத்தியா?
ஹும்! அப்படி எல்லாமில்லே!
 

Tuesday, August 7, 2012

பாபங்கள், ப்ராயச்சித்தங்கள் -11


 சரி ப்ராயச்சித்தம் செய்தாச்சு. அது சரியா இருந்ததா, பாபம் நீங்கித்தான்னு எப்படி தெரியும்?
பாபம் செய்தோம் என்று ஒரு பச்சாதாபம் இருந்தது அல்லவா? அது நீங்கி விடும். இல்லை அப்படியும் சந்தேகம் என்றால் ஒரு பிடி பச்சைபுல்லை எடுத்துக்கொண்டு ஒரு பசு மாட்டை தேடி போக வேண்டும். சற்று தூரத்திலேயே நின்று கொண்டு அதை புல்லை காட்டி கூப்பிட வேண்டும். அது கண்டு கொள்ளாமல் இருந்தால் பாபம் போகவில்லை என்று பொருள். (முதல்ல அது கட்டிப்போடாம இருக்கான்னு பாத்துக்குங்க!) நெருங்கி வந்து புல்லை வாங்கி சாப்பிட்டால் பாபம் நிவர்த்தி ஆயிற்று என்று தெரிந்து கொள்ளலாம்.

சுருக்கமாக (?) பாபங்கள் பற்றியும் ப்ராயச்சித்தங்கள் பற்றியும் பார்த்தோம். மிக விரிவாக சாத்திரங்கள் எதெல்லாம் பாபம் அவற்றுக்கு ப்ராயச்சித்தங்கள் என்னென்ன என்று விவரிக்கிறது சிரத்தை இருப்பவர்கள் அதை தேடி கண்டு பிடித்து படிக்கலாம்.

இது வரை பொறுமையாக பிடித்து வந்திருந்தால் சிலதை உள் வாங்கி இருக்கலாம்.
பாபங்கள் பலது. ஏதோ புண்யமும் செய்து இருப்பதால்தான் இந்த மனுஷ ஜன்மம் கிடைத்தது இருக்கிறது. இந்த ஜன்மத்தில்தான் நமக்கு நல்லது கெட்டது என்கிற ஆறாவது அறிவும் கொடுத்து இருக்கிறான் இறைவன். அதனால இதை வீணாக்கக்கூடாது. நாம் பாபங்களை தொலைத்து விட வேண்டும்.

சொல்லிய இருக்கிற ப்ராயச்சித்தங்கள் கடை பிடிக்க கடினமானவை. நல்ல காலமாக ரிஷிகள் கலி காலத்துக்கு தகுந்த படி இலகுவாக செய்யக்கூடிய ப்ராயச்சித்தங்களை சொல்லிய இருக்கிறார்கள்

பாபங்கள் பலது. தினசரி வாழ்கையில் நாம் பாபங்கள் செய்வதை தவிர்ப்பதும் அரிதே. கூடிய வரை தெரிந்து பாபங்களை செய்வதை தவிர்க்க வேண்டும்.

இத்துடன் தப்பி விட்டதாக யாரும் நினைக்க வேண்டாம். கோளாறான எண்ணங்கள் இதை தொடர்கின்றன!
 

Sunday, August 5, 2012

பாபங்கள், ப்ராயச்சித்தங்கள் -10


பஞ்சகவ்யம்: பொதுவாக பல பாபங்களுக்கு, முக்கியமாக சாப்பிடக் கூடாததை சாப்பிட்டதற்கு பஞ்சகவ்யம் உயர்ந்த ப்ராயச்சித்தமாக விதிக்கப்படுகிறது. இதை செய்வதும் கொஞ்சம் சுலபமே. ஒரு அரை கட்டைவிரல் அளவு கோமியம் (நாட்டு மாட்டு பசுஞ் சாணம்), ஒன்றரை  பலம் கோ மூத்திரம், மூன்று பலம் தயிர், ஒரு பலம் நெய், ஏழு பலம் பால் ஒரு பலம் குச தர்ப்பையால் நீர் என்று ஒரு கணக்கு. கருப்பு பசுவிலிருந்து கோ மூத்ரம், வெள்ளை பசுவிலிருந்து கோமியம், தாம்ர வர்ண பசுவின் பால், சிவப்பு பசுவின் தயிர், காராம் பசுவின் நெய் இவற்றை பயன்படுத்த வேண்டும். அல்லது இதெல்லாமே ஒரே கருப்பு நாட்டு பசு மாட்டிலிருந்து பெற வேண்டும். அதாவது முன்னேயே திட்டமிட்டு பால் காய்ச்சி தயிராக்கி நெய் எடுத்து பத்திரப்படுத்த வேண்டும். 

இன்னொரு அளவு கணக்கை ப்ரஜாபதி சொல்கிறார்.கோமியம் ஒரு பங்கு, கோமூத்ரம் அதைப்போல இரண்டு பங்கு, நெய் அதைப்போல 4 மடங்கு, அதைப்போல எட்டு மடங்கு பால், அதைப்போல ஐந்து மடங்கு தயிர். (கடைசியில் தயிர் 320 மடங்காகும்!)

இவற்றை ஒன்று சேர்க்க மந்திரங்கள் உண்டு. கலக்கிய பின் ஜபிக்க மந்திரங்கள் உண்டு.
இப்படி செய்து எடுத்து பச்சை தர்பங்கள் ஏழால் அக்னி, சோமன், ஸவிதா இவர்களுக்கு ஹோமம் செய்து மீதி உள்ளதை பலாச (புரசு) இலையாலோ தாம்ர பாத்திரத்தாலோ அருந்த வேண்டும்.

இப்படி சதுர்தசியில் உபவாஸம் விரதம் இருந்து பௌர்ணமி அன்று செய்வது சிறப்பு.
பஞ்சகவ்யம் செய்த ஒரு சில மணிகளுக்குள்ளேயே சாப்பிட்டுவிட்டால் அதில் ஒரு தோஷமும் தெரியாது! அருவருப்பு அடைய வேண்டாம்!
முக்கிய அதிகாரி இலகுவை அனுஷ்டிக்கக்கூடாது. நம் புத்தி எப்பவுமே இப்படித்தானே வேலை செய்யணும்? செய்யறத்துக்கு சுலபமான விஷயமா பார்ப்போம்! இந்த கலி யுகத்துக்காக பரம கருணையோடு செய்ய சக்தி இல்லாதவர்களுக்காக இளக்கி கொடுத்த வழிகளை சக்தி உள்ளவர்கள் செய்ய முயற்சிக்கக்கூடாது.வேதத்துக்கு அதிகாரம் உண்டு என்றால் அந்த ரீதியிலான ப்ராயச்சித்தங்களைத்தான் செய்ய வேண்டும். இல்லயானால் மட்டுமே ப்ராஜாபத்ய க்ருச்சிரம் முதலானவற்றை அனுஷ்டிக்க வேண்டும்.

இப்படி இல்லாமல் லகு ப்ராயச்சித்தத்தை கைக்கொள்வது தோஷமாக சொல்லப்பட்டு இருக்கிறது. இதற்கு பலன் கிடைக்காதாம்! ஆகவே ஆத்ம வஞ்சனை செய்யாமல் தான் அசக்த அதிகாரிதானா என்று பரிட்சித்தே முடிவு செய்ய வேண்டும்.

சரி ப்ராயச்சித்தம் செய்தாச்சு. அது சரியா இருந்ததா, பாபம் நீங்கித்தான்னு எப்படி தெரியும்?

 

Friday, August 3, 2012

பாபங்கள், ப்ராயச்சித்தங்கள் - 9


சாந்தராயணத்துக்கு சமமானவை: ம்ருகாரேஷ்டி, பவித்ரேஷ்டி, மித்ராவிந்தா பசு, மூன்று மாதங்கள் அனுஷ்டிக்கும் க்ருச்சிரம், பத்தாயிரம் தில ஹோமம், இரண்டு பராக க்ருச்சிரம், லக்ஷம் காயத்ரீ, இவை சமமாகும்.

ப்ரத்யாம்னாய விஷயத்தில் ப்ராஜாபத்யத்துக்கு ஒரு பசு தானம் கொடுப்பது, சாந்தராயணத்துக்கு இரண்டு, பராக, தப்த க்ருச்சிரங்களில் மும்மூன்று என சொல்லி இருக்கிறது.

இப்படி பசு தானம் செய்ய சக்தி இல்லை என்றால் என்ன செய்வது? 12 ஆயிரம் முஷ்டி (பிடி) புல்லை பசு மாட்டுக்கு கொடுக்க வேண்டும். சக்தி இருக்கிறது, ஆனால் சரியாக வாய்ப்பு அமையவில்லை என்றால் (இந்த பிரச்சினை இப்போது அதிகமாகவே இருக்கிறது!) பசுவுக்கான விலையை கொடுக்கலாம்.

மஹாநதியில் ஸ்நாநம் என்றால் எவை மஹாநதிகள்?

பட்டியல் இதோ: கங்கை, ஸரஸ்வதீ, யமுனா, நர்மதா, பிபாசா, விதஸ்தா, கௌசிகீ, நந்தா, விரஜா, சந்த்ரபாகா, ஸரயூ, சராவதீ, ஸிந்து, க்ருஷ்ணவேனீ, சோணா, தாபினீ, பாஷாணகா, கோமதீ, கண்டகீ, பாஹுதா, பம்பா, தேவிகா, காவேரீ, துங்கபத்ரா, ஸுசக்ஷு, அருணா.
(இதெல்லாம் எங்கே இருக்குன்னு பாத்து சொலுங்கப்பா!)

ப்ராயச்சித்தம் விதிக்கும் போது நபரை பார்த்து விதிக்கப்படும். (விபரீத பொருள் செய்து கொள்ளக்கூடாது!) வேத பராயணம், ஹோமங்கள் செய்யக்கூடியவர்களுக்கு அவற்றை விதிக்க வேண்டும். தர்மம் இல்லாதவர்களுக்கும் வித்யை இல்லாதவருக்கும், ப்ராம்ஹணன் என்று பெயருக்கு மட்டும் இருப்பவர்களுக்கு ப்ராஜாபத்யாதி க்ருச்சிரங்கள்; பணம் உள்ளவர்களுக்கு அபராதம் - இப்படி ப்ராயச்சித்தம் சொல்ல வேண்டும்.

சாதாரண பாபங்களுக்கு ஸ்நாநம், ஸந்த்யோபாசனம், ப்ராணாயாமம், உபவாஸம், பஞ்சகவ்யம் உட்கொள்ளுதல் ஆகியவற்றை செய்யலாம். நித்தியம் செய்யணும்  என்கிற அனுஷ்டானங்களிலேயே பல பாபங்களுக்கு ப்ராயச்சித்தம் வந்து விடுகிறது.

க்ரியா ப்ராயச்சித்தங்கள்: இதெல்லாம் இல்லாமல் ஜபம் ஹோமம் போன்றவற்றை செய்யணும் போதே கூட சில தவறுகள் நடக்கலாம். மந்தர லோபம், க்ரியா லோபம் , சிரத்தா லோபம் என்றெல்லாம் சொல்வார்கள். இதற்கெல்லாம் அந்தந்த கர்மாவை சொல்லும் கல்பத்திலேயே –புத்தகத்திலேயே-  ப்ராயச்சித்தம் சொல்லப்பட்டு இருக்கும்.

ப்ராஜாபத்ய ப்ரதிநிதிகள்: ஒரு கன்னுக்குட்டியுடன் கூடிய பால் கறக்கும் பசுவை நான்கு மாதத்துக்கு தேவையான உணவு (வைக்கோல்), பால் பாத்திரம், மணி, கயிறு போன்றவற்றுடன் தானம் செய்வது ஒரு ப்ராஜாபத்ய க்ருச்சிரத்துக்கு ப்ரதிநிதி ஆகும். இப்படி கொடுக்க முடியாதவர்கள் அதற்கான விலையாக ஒரு நிஷ்கம் கொடுக்கலாம். இந்த நிஷ்கம் தங்கத்தின் அளவு என்று தெரிகிறது. எவ்வளவு என்று தெரியவில்லை. ப்ராயச்சித்தம் செய்யும் நபரின் சக்தியை பொருத்து முடியாவிட்டால் அரை நிஷ்கம், அதுவும் முடியாவிட்டால் கால் நிஷ்கம் என்று கோமூல்யத்தை கொடுக்கச்சொல்லி இருக்கிறது. இந்த அனுகல்ப ப்ராஜாபத்யம் முழுக்க முழுக்க சாஸ்த்ர சம்மதம். சிஷ்டர்களாலும் கடைபிடிக்கப்படுகிறது. இதுவே இந்த காலத்தில் சகலருக்கும் ப்ரயோஜனமாகக் கூடியது என்று தோன்றுகிறது.

 
 

Thursday, August 2, 2012

பாபங்கள், ப்ராயச்சித்தங்கள் - 8



இந்த சுலபமானதெல்லாம் அந்தணர்களுக்கு இல்லை; ஹோமங்கள் கூடிய கடுமையான க்ருச்சிரம்தான் செய்யணும் என்கிறார் கௌதமர். ஸூர்யன் குறித்து ஹோமங்கள் தர்பணங்கள், சில வேத மந்திரங்கள் ஜபங்கள்; அந்த மிஞ்சின ஹவிஸ் (ஹோமம் செய்து மிஞ்சிய அன்னம்) மட்டுமே சாப்பிடலாம். மத்தபடி அதே 3 நாள் பகல், இரவு, கிடைத்தது, பட்டினி கதைதான். பகலில் நிற்க வேண்டும். இரவில் உட்காரலாம், படுக்கக்கூடாது, அதிகம் பேசக்கூடாது. பேசினாலும் உண்மையே பேச வேண்டும், இன்னாருடன் மட்டும் பேச வேண்டும் என சட்ட திட்டங்கள். 13 ஆம் நாள் ஹோமங்கள் செய்து ப்ராம்ஹணர்களுக்கு அன்னமிட்டு பூர்த்தி செய்ய வேண்டும்.

அதி க்ருச்சிரம் என்பது ப்ராஜாபத்ய க்ருச்சிரம் போல. ஆனால் ஒரு கபளம் (சக்தி இல்லாதவனுக்கு ஒரு கையளவு என்றும் ஒரு வெர்ஷன்) மட்டுமே சாப்பிடலாம்.
க்ருச்ராதி க்ருச்சிரம் என்று ஒன்று. ப்ராஜாபத்ய க்ருச்சிரம் போலவே நாள் கணக்கு. ஆனால் சாப்பாடே கிடையாது. தண்ணீர் மட்டுமே குடிக்கலாம். பட்டினி என்று சொன்ன 3 நாட்களுக்கு அதுவும் இல்லை. அசக்தனுக்கு 21 நாள் பால் மட்டும் குடித்து என்று யாக்ஞவல்கியர்.

இதே போல ஸாந்தபன க்ருச்சிரம் (பஞ்ச கவ்யம் செய்யும் பொருட்களை ஒவ்வொன்று ஒரு நாள் மட்டும் உண்ணுதல்) பராக க்ருச்சிரம் (12 நாள் முழு பட்டினி) பர்ண க்ருச்சிரம் ( இலைகளை கொதிக்க வைத்த நீர் மட்டும் அருந்தலாம்- 5 நாட்கள்), பல க்ருச்சிரம் (ஒரு மாதம் பழங்கள் மட்டும் உண்ணுதல்) மேலும் வாருண, ஸ்த்ரீ, ஸௌம்ய, துலா புருஷ க்ருச்சிரம், அகமர்ஷண க்ருச்சிரம், தைவத க்ருச்சிரம், யக்ஞ க்ருச்சிரம், யாவக, ப்ரஸ்ருதி யாவக, என பல வகைகள் உள்ளன.

சாந்த்ராயண க்ருச்சிரம் என்று ஒன்று. அமாவாசைக்கு பட்டினி. அடுத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கபளம் கூடுதல். பௌர்ணமி முடிந்தால் அதே போல குறைத்துக்கொண்டே வந்து நிறைவு. அதே போல பௌர்ணமிக்கு 15 கபளத்துடன் ஆரம்பித்து குறைத்து என்ற ரீதியில் செய்வதும் உண்டு. இதிலும் பல நியமங்கள் உண்டு.பல வகைகளும் உண்டு.
ப்ராஜாபத்யம் முதலான க்ருச்சிரத்துக்கு சமமானதாக சிலது சொல்லப்படுகின்றன. இவை "ப்ரத்யாம்நாயம்" எனப்படும். எக்காரணத்தாலாவது ப்ராஜபத்யாதி க்ருச்சிரங்களை அனுஷ்டிக்க முடியாத நில ஏற்பட்டால் இவற்றை விதிக்கக்கூடும். பதினாயிரம் காயத்ரி ஜபம்; ஜலத்தில் வசிப்பது, ஒரு ப்ராம்ஹணனுக்கு கோதானம் செய்வது. இவை ப்ராஜாபத்யத்துக்கு சமமாகும்.

மேலும் காயத்ரியால் ஆயிரம் தில ஹோமம், வேதபாராயணம், 12 ப்ராம்ஹணர்களுக்கு போஜனம், பவமான இஷ்டி, பாவகேஷ்டி, 200 ப்ராணாயாமம், புண்ய தீர்த்தத்தில் காய்ந்த தலையுடன் 12 முறை ஸ்நாநம் இவையும் சமமாக கருதப்படும். ஒரு முறை மூழ்கி எழுந்த பின் துவட்டிக்கொண்டு தலை காய காத்திருக்க வேண்டும். பின் மீண்டு முழுக வேண்டும். 12 ப்ராம்ஹண போஜனம் என்றது பணமில்லாதவனைப்பற்றியது. பணமுள்ளவன் 12 நாட்களுக்கு தினம் ஐந்து பேர் வீதம் 60 ப்ராம்ஹணர்களுக்கு போஜனம் செய்விக்க வேண்டும். இன்னும் சிலது உண்டு. மேலும் பார்ப்போம்.


 

Wednesday, August 1, 2012

பாபங்கள் ப்ராயச்சித்தங்கள் - 7


பாபங்களுக்கு சாத்திரங்களால் விதிக்கப்பட்ட எல்லா ப்ராயச்சித்தங்களையும் சொல்லியது போல அனுசரிக்க கலியில் சாத்தியமில்லை என்று சொல்லி மஹரிஷி பராசரர் எளிய ப்ராயச்சித்தங்களை விதித்துள்ளார். இந்த காலத்தில் இவை அனுசரிக்கக்கூடியவை. சாந்த்ராயணம் என்பது ஒரு மாதம் வரையில் செய்யக்கூடிய பிராயச்சித்தம். இது போல பலவும் பல நாட்கள் விரதமிருந்து செய்யக்கூடியவை. இலகுவாக நினைக்கும் ப்ராஜாபத்ய க்ருச்சிரமே 12 நாட்கள் செய்ய வேண்டிய விரதம்.அதை சரியான முறையில் அனுஷ்டிப்பதும் கடினம்.

கலிக்காக சொல்லிய ப்ராயச்சித்தங்களின் பிரதிநிதியாக சொன்னது ஒன்று திரவியத்தை தானமாக கொடுத்துவிடுவது. யத் கலுவாவ தப இத்யாஹுஹு யத் ஸ்வயம் ததாதீதி….. ஸ்ருதியே இதை ஒரு தபஸ் என்கிறது. பணம் அபராதமாக விதிப்பது எல்லா நாடுகளிலும் நீதி மன்றங்களில் நடப்பதை பார்க்கிறோம்.

இந்த காலத்துக்கு பல நாள் சாத்தியமான தபஸ் களை ப்ராயச்சித்தமாக அனுஷ்டிக்க கடினம் என்பதால், ஜபம், ஹோமம், உபவாஸம், பிராணாயாமம், த்ரவ்யதானமாகிய இலகுவானவற்றை செய்து சுத்தியடைய சாத்திரங்கள் அனுமதிக்கின்றன.

ப்ராஜாபத்யம் என்னும் க்ருச்சிரத்தை ப்ராயச்சித்தத்தை- சகல பாபங்களுக்கும் பிரதிநிதியாக அனுஷ்டிக்க சாத்திரம் அனுக்ரஹித்து இருக்கிறது.உசநஸ் என்ற மஹரிஷியும் வேறு சில ரிஷிகளும் இதை கூறுகிறார்கள். மஹாபாதகமானாலும் அல்லது வேறு எந்த தண்டனை விதிக்கப்படாத பாபத்துக்கும் ப்ராயசித்தமாக இதையே பெருக்கி கணக்கு செய்து அனுஷ்டிக்கலாம் என மிதாக்‌ஷரையில் விக்ஞானேஸ்வரர் சொல்லி இருக்கிறார். இது இந்த காலத்துக்கு மிகவும் உபகாரமானது. இவ்வளவு இளக்கிக் கொடுத்த இந்த ப்ராயச்சித்தத்தை எப்படி அனுஷ்டிப்பது?

பிச்சை எடுத்து 3 நாட்கள் பகலில் மட்டும் உண்ண வேண்டும்.
அந்தபடியே இரவில் மட்டும் 3 நாட்கள் உண்ண வேண்டும்.
யாசிக்காமலே இருந்து கிடைத்ததை மட்டுமே 3 நாட்கள் உண்ண வேண்டும்.
3 நாட்கள் முழுக்க பட்டினியாக இருக்க வேண்டும்.

இப்படி இருப்பது உடல் ரீதியாக முடியாது சிறுவர்கள், வியாதியுள்ளவர், மிக வயதானவர் போல இருந்தால் இதே க்ரமத்தில் தொடர்ந்து மும்மூன்று நாட்களாக இல்லாமல் ஒவ்வொரு நாளாக 3 முறை செய்யலாம்.

இங்கு "பகல் மட்டும்தானே உண்ண வேண்டும்? சரி!" என்று இஷ்டத்துக்கு உண்ண முடியாது.
ஒரு கோழி முட்டை அளவு அல்லது வாய்க்குள் போகும் அளவு என்பது ஒரு கபளம். பகலில் மட்டும் சாப்பிடும் போதும் மொத்தம் 26 கபளங்கள் சாப்பிடலாம். இரவில் மட்டும் சாப்பிடும்போது 22 மட்டும். யாசிக்காமல் கிடைத்ததை உண்ணும்போது 22. இப்படி ஆபஸ்தம்பர் சொன்னார். ஆனால் சதுர்விம்சதி மதத்தில் இதையே முறையே 12, 15, 16 என்று சொல்லப்பட்டது. (இது பற்றி பின்னால் எழுத உத்தேசம்)

இந்த க்ருச்சிரத்தில் கால் அளவு, பாத க்ருச்சிரம் எனப்படும். பகலில் மட்டும் புசிப்பது என்பது ஒரு கால் பாகம்; இரவில் மட்டும் என்பது கால் பாகம்; கிடைத்ததை மட்டும் என்பது கால் பாகம். முழு பட்டினி என்பது கால் பாகம்.
ப்ராக்டிகலாக யோசித்த மஹரிஷிகளின் சாத்திரம் பகலில் மட்டும் புசிப்பது என்பது சூத்திரனுக்கு; இரவில் மட்டும் என்பது வைச்யனுக்கு; கிடைத்தது என்பது க்‌ஷத்ரியனுக்கு முழு பட்டினி அந்தணனுக்கு என விதித்தது.

இந்த கால் க்ருச்சிரம் போல அரை க்ருச்சிரமும் முக்கால் க்ருச்சிரமும் கூட உண்டு. கணக்கு எப்படி? கிடைத்தது மட்டும், பட்டினி இரண்டையும் மும்மூன்று நாட்கள் அனுஷ்டிக்க அது அரை க்ருச்சிரம். இரவு மட்டும் என்பதை மட்டும் தவிர்கிறது முக்கால் க்ருச்சிரம்.

Tuesday, July 31, 2012

பாபங்கள் - ப்ராயச்சித்தங்கள் -6



 பாபங்களை பார்த்தோம். பட்டியல் இன்னும் பெரியது. முழுமையாக எழுத சலிப்பு. அப்படியேத்தானே படிக்கவும் இருக்கும்? :-)

இப்போது ப்ராயச்சித்தங்களை பார்க்கலாம்.

ப்ராயச்சித்தத்துக்கு முக்கியமாக தேவையானது பச்சாதாபம். பச்சாத் தாபம். பின்னால் உண்டாகும் தவிப்பு. இப்படி செய்து விட்டோமே, தவறாயிற்றே என்ற நினைப்பு வர வேண்டும். மனம் நொந்து இனி இப்படி செய்வதில்லை என்ற உறுதியும் வர வேண்டும். இது இருந்தால்தான் முதலில் ப்ராயச்சித்தத்துக்கு அருகதையே வரும். அப்படி வந்தபின் ஊரில் பெரியோர் சபை கூடி ப்ராயச்சித்தத்தை முடிவு செய்ய வேண்டும். யாரும் இஷ்டத்துக்கு இதை செய்ய முடியாது. யாரெல்லாம் இந்த குழுவில் இருக்கலாம், எவ்வளவு பேர் இருக்கலாம், எங்கே கூட வேண்டும், என்ன விவாதிக்க வேண்டும் என்றெல்லாம் விதிகள் உண்டு. பல விஷயங்களுக்கு சாத்திரங்களில் இன்ன ப்ராயச்சித்தம் என்றும் விதித்து இருக்கிறது. அதில் இல்லாத குற்றம் என்றாலே சுயேச்சையாக முடிவு எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

ப்ராயச்சித்தங்கள் விதிக்கப்பட்டபின் அவற்றை சிரத்தையுடன் அனுசரிக்க வேண்டும்.
மஹாபாதகங்களுக்கு ப்ராயச்சித்தம் இல்லை என்று பார்த்தோம். இது நகர வாசம் குறித்தது என்றூம் வியவகாரத்துக்கு ப்ராயச்சித்தம் உண்டு என்றும் சில மஹரிஷிகளின் அபிப்ராயம்.  கலியுகத்துக்கு இவற்றை இளக்கியும் கொடுத்து இருக்கிறது. இருந்தாலும் சிலவற்றுக்கு ப்ராயச்சித்தம் செய்தாலும் ஒதுக்கியே வைக்கச்சொல்லுகிறார்கள்.

பாலஹத்தி (சிறுவர் சிறுமியரை கொல்வது) க்ருதக்னன், சரணாகதனை கொன்றவன் பெண்களை கொன்றவன் இப்படி. மேலும் ஸன்யாசியோ நைஷ்டிகனோ ஸ்திரீகளுடன் கலந்தால் ப்ராயச்சித்தம் செய்தாலும் ஒதுக்கியே வைக்க வேண்டும். இப்படி இன்னும் பல.
ப்ராயச்சித்தங்களில் பல விதங்கள் உண்டு. ப்ராஜாபத்யம் முதலான க்ருச்சிரங்கள் என்பது ஒன்று; சாந்த்ராயணம், உபவாசம் (கடவுளையே நினைத்துக்கொண்டு பட்டினியாக இருத்தல்), பஞ்சகவ்யம் அருந்துதல், கூச்மாண்ட ஹோமம், வேத பாராயணம், ப்ராணாயாமம், காயத்ரீ ஜபம் போன்ற பலவும் ப்ராயச்சித்தங்கள் ஆகும். பாபங்களில் குரு, லகு என்று பாகுபாடும் செய்து வைத்திருக்கிறது. ப்ராயச்சித்தங்களை விதிக்க தேசம், காலம், வயது, சக்தி ஆகியவற்றை உத்தேசித்தும் செய்யச்சொல்லி இருக்கிறது. இவை – உதாரணமாக உடல் பலஹீனமானவர், வறுமை- பலமான காரணங்களாக இருப்பின் தண்டனையை இளக்கி அடுத்த மட்ட தண்டனையாக கொடுக்க வேண்டும். இதை சபையே முடிவு செய்யணும்.