Pages

Friday, March 31, 2017

கிறுக்கல்கள் - 189
மாஸ்டரின் சீடர் ஒருவர் ஆவேசமான அரசியல் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். பின்னர் மாஸ்டரை சந்தித்த போது சொற்பொழிவு எப்படி இருந்தது என்று கேட்டார். மாஸ்டர் சொன்னார்: “ நீ பேசியதில் உண்மை இருக்குமானால் அவ்வளவு கத்த வேண்டிய அவசியமென்ன?”

பின்னால் மற்ற சீடர்களிடம் சொன்னார்: உண்மைக்கு முதல் எதிரி அதை பாதுகாப்பதாக வரிந்து கட்டிக்கொண்டு கிளம்புவர்கள்தான். அது மற்ற எதிரிகளின் ஒட்டு மொத்த தாக்குதல்களைவிட வலுவானது

Thursday, March 30, 2017

கிறுக்கல்கள் - 188
மாஸ்டர் ஒரு முறை ‘மதங்களால் ஆபத்து’ என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினார். அதில் எப்படி பலர் தம் சில்லரைத்தனத்தையும் சுயநலத்தையும் மறைக்க மதத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று விவரித்தார்.

இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. நூற்றுக்கணக்கான மதத்தலைவர்கள் இதை கண்டித்து கட்டுரைகள் எழுதி அது புத்தகமாக வெளிவந்தது.

அதை மாஸ்டரிடம் காட்டிய போது அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்: “ நான் பேசியதில் உண்மையில் தவறு இருந்தால் ஒரே ஒரு கட்டுரை போதுமே!”

Wednesday, March 29, 2017

கிறுக்கல்கள் - 187
தேச பக்தி, தேசியம் போன்றவற்றை மாஸ்டர் ஒப்புக்கொள்வது அரிது. இதற்கு ஒரு கதை சொன்னார்: ஆங்கிலேயர் ஒருவர் அமெரிக்க பிரஜை ஆகிவிட்ட தன் உறவினர் ஒருவரை சாடிக்கொண்டு இருந்தார். “அமெரிக்க பிரஜை ஆகிவிட்டதால் உனக்கு இப்போது என்ன கிடைத்துவிட்டது?”
உறவினர் சொன்னார் “ஓ! அமெரிக்கப்புரட்சியில் எனக்கு வெற்றி கிடைத்துவிட்டது!”

Tuesday, March 28, 2017

கிறுக்கல்கள் -186
சமூக ஆர்வலர்கள் சிலர் ஒரு செயல்திட்டத்தை துவக்க ஆசீர்வாதம் பெற மாஸ்டரிடம் வந்தார்கள்.
மாஸ்டர் சொன்னார் உங்களுக்கு தேவையானது செயல் இல்லை; வெளிச்சம்!

பின்னால் விளக்கினார். “தீயவற்றை விலக்க செயல்கள் மூலம் போரிடுவது இருளை விலக்க கைகளால் முயற்சிப்பது போல. தேவையானது வெளிச்சம்; செயலில்லை!”

Monday, March 27, 2017

கிறுக்கல்கள் -185
எங்களுக்கு இன்றைக்கு ஹாப்பி கிறிஸ்துமஸ் என்று வாழ்த்து சொல்வீர்களா”? என்று ஒரு கிறிஸ்துவர் கேட்டார்.
மாஸ்டர் நாட்காட்டியை பார்த்தார். இன்னைக்கு வியாழக்கிழமையா? ம்ம்ம்… உங்களுக்கு ஹாப்பி வியாழக்கிழமை என்று வாழ்த்து சொல்லலாம் என்று தோணுகிறது!

மடாலயத்தில் இருந்த கிறிஸ்துவர்களுக்கு இது எரிச்சலை மூட்டியது.


அதை உணர்ந்த மாஸ்டர் சொன்னார்: முக்காலே மூணு வீசம் பேர் கிறிஸ்துமஸுக்கு சந்தோஷமாக இருப்பார்கள்; அதனால் அவர்களுடைய சந்தோஷம் ஒரு நாள்தான் நீடிக்கும். ஆனால் எப்பவும் இன்றைக்கு சந்தோஷமாக இருப்போமே என்று நினைக்கலாமே! அப்படி இருந்துவிட்டால் எல்லா நாளும் கிறிஸ்துமஸ்தானே?

Saturday, March 25, 2017

கிறுக்கல்கள் -184
மாஸ்டரின் நிதானமான போக்கை கண்டு விருந்தினர்கள் எப்போதும் ஆச்சரியப்படுவது உண்டு!


”அவசரப்பட என்னிடம் நேரமே இல்லை!” என்பார் அவர்!

Friday, March 24, 2017

கிறுக்கல்கள் -183
பிரசங்கி வித்தியாசமான மனிதர். சிரிக்கவே மாட்டார். துறவு வாழ்க்கையை கடைபிடிப்பதில் இம்மியும் தவற மாட்டார். தன்னை வருத்திக்கொள்வதில் நம்பிக்கை இருந்தது. அடிக்கடி உண்ணா நோம்பு இருப்பார். கடும் குளிர் காலத்தில் மிகக்குறைந்த உடைகளை மட்டுமே அணிவார்.

ஒரு நாள் மாஸ்டரை அணுகி தன் வலியை சொன்னார். என் மதத்தில் சொல்லியபடி எத்தனையோ விஷயங்களை கடைபிடித்துவிட்டேன். பலதையும் துறந்து வாழ்கிறேன். ஆனாலும் ஏதோ ஒன்று என்னிடம் இல்லாமல் இருக்கிறது. அதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை! உங்களால் முடிகிறதா?


வறண்டு இறுகிப்போன அவரை மாஸ்டர் நேரடியா பார்த்துக்கொண்டு சொன்னார். “ஆமாம். ஆன்மாவைக்காணவில்லை!”

Thursday, March 23, 2017

கிறுக்கல்கள் -182
நாம் கற்றுக்கொண்டு இருப்பது ஞான உலகத்தைப்பொருத்தமட்டில் நவீன உலகில் குண்டாந்தடியை வைத்திருப்பது போல என்பார் மாஸ்டர். உதாரணத்துக்கு கதை சொன்னார்.

மாஸ்டரின் பெண் சீடர் ஒருவர் வீட்டு வேலைக்கு ஒரு லாட்வியன் பெண்மணியை அமர்த்தினார். அப்புறம்தான் தெரிந்தது அந்த பெண்மணிக்கு வீட்டு வேலை எதுவுமே தெரியவில்லை என்று. வாகுவம் க்ளீனர் பயன்படுத்தத்தெரியாது; மிக்ஸியை இயக்கத்தெரியாது. வாஷிங் மெஷினை பார்த்தால் பயந்து ஓடிவிடுவார்!

சீடர் விரக்தியின் உச்சத்தில் ‘உனக்கு என்னத்தான் தெரியும்?” என்று கேட்டார்.

வேலைக்கார பெண்மணி பெருமிதத்துடன் சொன்னார்! எனக்கு ரெய்ண்டீரை பால்கறக்கத்தெரியுமே!” 

Wednesday, March 22, 2017

கிறுக்கல்கள் -181
உலகில் நல்லதோ கெட்டதோ இல்லை; நம் நினைப்பே அப்படி ஒன்றை உருவாக்குகிறது என்பதற்கு இன்னொரு கதை சொல்லுவார் மாஸ்டர்.

மாஸ்டரின் தந்தை பெரிய அரசியல்வாதி. தன் கட்சிக்காரர் எதிர் கட்சிக்கு போய்விட்டதை கேள்விப்பட்டு ‘துரோகி’ என்று திட்டிக்கொண்டு இருந்ததை சின்ன வயதில் மாஸ்டர் கேட்டார். ‘அப்பா அதெப்படி? கொஞ்ச நாள் முந்திதானே எதிர்கட்சிலேந்து உங்க கட்சிக்கு வந்த ஒருவரை புகழ்ந்துகொண்டு இருந்தீங்க?’


அப்பா சொன்னார்: "குழந்தே! இப்பவே முக்கியமான இதை எல்லாம் தெரிஞ்சுக்கோ. நம்ம கட்சிலேந்து எதிர் கட்சிக்கு போயிட்டா அது துரோகம். எதிர்கட்சிலேந்து நம்ம கட்சிக்கு வந்தா அது மனம் திருந்தி வரது!"

Monday, March 20, 2017

அந்தணர் ஆசாரம் - 13
ஜபம் செய்யும் இடம் பற்றி சொல்லப்படுகிறது. சுத்தமான இடத்தில் செய்ய வேண்டும். வீட்டில் செய்வது ஒரு பங்கு பலன் தருமென்றால்; நதி தீரத்தில் 2 பங்கு, பசுமாட்டுக்கொட்டிலில் 10 பங்கு, அக்னிசாலையில் 100 பங்கு பலன் கிடைக்கும். ஸித்த க்ஷேத்ரம், புண்ய தீர்த்தம், தேவதா ஸந்நிதி ஆகியவற்றில் நூறு கோடிகள் கூடிய ஆயிரம் பங்கு பலன் கிடைக்கும் எனப்படுகிறது.
தனக்கு உகந்த சுகமான ஆஸனத்தை பந்தனம் செய்து கொண்டு, இந்திரியங்களை அடக்கி கண்களை பாதி மூடி, ரிஷி சந்தஸ் தேவதைகளை நினைத்துக்கொண்டு மௌனமாக ப்ராணாயாமம் செய்ய வேண்டும். மூன்று ப்ராணாயாமங்களில் 7 வ்யாஹ்ருதிகள், சிரஸுடன் கூடிய காயத்ரியை பத்து முறை ஜபம் செய்ய வேண்டும். அல்லது மூச்சை அடக்க இயலாதெனில் பத்து முறை ஜபம் செய்ய வேண்டும்.
ப்ரம்ஹா நான்கு வேதங்களை ஒரு பக்கமும் காயத்ரியை ஒரு பக்கமுமாக தராசில் நிறுத்தார். இரண்டு தட்டும் சமமாக இருந்தது என்று சொல்லப்படுகிறது. அதாவது காயத்ரி நான்கு வேதங்களுக்கும் சமமானது.
காலையில் நின்று கொண்டு சூர்யன் உதயமாகும் வரை காயத்ரியை ஜபிக்க வேண்டும். மாலையில் உட்கார்ந்து கொண்டு நக்ஷத்திரங்கள் தோன்றும் வரை ஜபம் செய்ய வேண்டும். பல வேலைகள் உள்ள க்ருஹஸ்தனும், அத்யயனம் செய்ய கடமை உள்ள ப்ரம்ஹசாரியும் 108 முறை ஜபம் செய்ய வேண்டும். நேரம் இருக்கிற சன்யாஸியும் வானப்ரஸ்தனும் 1008 முறை ஜபிக்க வேண்டும்.
மனதால் ஜபம் செய்வதே உத்தமம். உதடுகள் நாக்கு சற்றே அசைய பிறர் கேளாவண்ணம் ஜபிப்பது உபாம்சு எனப்படும். இப்படி ஜபிப்பது மத்திமம். பிறருக்கு கேட்கும் படி ஜபிப்பது அதமம்.
கைகளில் விரல் ரேகைகளால் எண்ணி ஜபிப்பதே உத்தமம். வேதத்தை விரல்களில் ஸ்வரம் காட்டி பாராயணம் செய்கிறோம். வேத மாதாவான காயத்ரியையும் விரல்களில் எண்ணி ஜபிப்பதே சிறந்தது. மற்ற மந்திரங்களுக்கு இப்படி நியமமில்லை.
ஜபம் செய்து முடித்தபின் ‘உத்தமே சிகரே’ என்னும் மந்திரத்தால் காயத்ரியை உத்வாசனம் செய்ய வேண்டும்.
ஏகாக்ர சித்தத்துடன் அவரவர் வேத மந்திரங்களால் ஸூர்யனை உபஸ்தானம் செய்ய வேண்டும். உபஸ்தானம் என்பது நின்று கொண்டு ஸ்தோத்திரம் செய்வதாகும். பின் சந்த்யா, சாவித்ரீ, காயத்ரீ, ஸரஸ்வதி ஆகிய தேவதைகளை நமஸ்கரிக்க வேண்டும்.
பின் நான்கு திக்குகளையும், மேல் கீழ், அந்தரிக்ஷம், பூமி என மொத்தம் 8 திக்குகளையும் நம் மந்திரங்களை சொல்லி நமஸ்கரிக்க வேண்டும். யமன், விஷ்ணு, விரூபாக்ஷன், ஸவிதா ஆகிய தேவதைகளை அவரவர் திசை நோக்கி உபஸ்தானம் செய்ய வேண்டும். கடைசியாக பகவானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.

சந்த்யாவந்தனத்தை அவரவர் குலாசாரம் ப்ரகாரம் நன்கு தெரிந்து கொண்டு கடைபிடிக்க வேண்டும்.