Pages

Thursday, December 25, 2014

The 6 Phase Meditation - ஆன்மீகப்பார்வை!ஆன்மீகத்தில மிகவும் நாட்டம் கொண்ட எனக்கு இந்த The 6 Phase Meditation சப்ஜெக்ட் மிகவும் சுவாரசியமாக இருந்தது. எல்லா உயிர்களுடனும் கனெக்ட் செய்வது எல்லாவற்றிலும் இருக்கும் ஆன்மாவை கண்டறிவதே! அவற்றுடன் நேசம் கொள்வதும் தர்க்க ரீதியாக அடுத்த படியே. பழகப்பழக இது நம்மை மிகவும் முன்னேற்றும் என்று தோன்றுகிறது!

இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளாமல் மேலும் மேலும் எதையாவது எதிர்பார்ப்பதே துன்பத்துக்கு காரணம் என்பதிலும் ஆச்சரியமில்லை. அதனால் மகிழ்ச்சி எங்கே இருக்கிறது என்று கண்டறிவதும் சரியே.

பாரமான சுமையை அனாவசியமாக தூக்கிக்கொண்டு இருக்காமல் கர்மாவை கழட்டி வைக்கும் வித்தையைப் பற்றி ஏற்கெனெவே சொல்லி இருக்கிறேன். வாசனா க்ஷயத்தை உண்டாக்கும் அது மிக முக்கியமானது.

தன் இருப்பை உணர்ந்து (சத்), உணர்வு பூர்வமான மனசை நேர்மறை விஷயங்களில் திருப்பி (சித்) சந்தோஷத்தில் (ஆனந்தம்) நிலை நிற்கும் இது சத் சித் ஆனந்த வடிவான ப்ரம்மத்தை நினைவு படுத்துகிறது. உண்மையில் நாம் எதிர்பார்ப்பது பரம லௌகீகமான ஆனந்தம் என்றாலும் இங்கே எதோ விஷயம் இருக்கிறது. பரப்ரம்மத்துக்கு அடுத்த படியான ப்ரம்ம, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் சங்கல்ப மாத்திரத்திலேயே நடப்புகளை மாற்றி சாதிக்கிறார்கள். அது போல பலவீனமான நரர்களாகிய நாம் பலமான, மீண்டும் மீண்டும் நிகழ்த்தும் சிந்தனைகளால் சில காலத்தில் சாதிப்பது இயன்றதே! மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம் போல இருந்தாலும் இது முடிகிறதே என்று சந்தோஷம் ஏற்படுகிறது! உலகையெல்லாம் மாற்ற நம்மால் முடியாவிட்டாலும் ஏதோ நம்மைப்பொருத்த வரை கொஞ்சமாவது மாற்ற முடிவது பெரிய விஷயம்!

அவசியம் பயிற்சி செய்து பாருங்கள்!


Wednesday, December 24, 2014

வாழ்த்துகளை வேண்டுதல்!
இது இந்த தொடரில கடைசி பதிவு! அப்பாடா!
கடைசியானாலும் இது வரை பார்த்த எல்லா பதிவிலேயும் பார்த்ததைவிட இது முக்கியமான படி!
வாழ்த்துகளை வேண்டுதல்!
நாம் கற்பனை செய்தவை எல்லாம் மெய்ப்பட நாம் உழைக்கணும். அவை நடக்க நமக்கு ஆதரவு தேவை. நமக்கு என்ன நடக்கிறது என்பதுக்கு நாம் மட்டுமே காரணி இல்லை. நாம் கொடுத்த உழைப்புக்கு ‘மெய் வருத்த கூலி’ கிடைச்சாலும் எல்லாம் நாம் விரும்பிய படியே நடக்கிறதில்லை என்பது நிதர்சனம்! ஆகவே நமக்கு ஆதரவு தேவையா இருக்கு. அது வெளியிலிருந்து எதிர்பார்த்தோமானால் அது எப்பவுமே கிடைக்கும்ன்னு சொல்ல முடியாது. ம்ம்ம்… என்ன செய்யலாம்? ஒரு வேளை அது உள்ளேந்தே வருமானால்? அது வெளி நபர்களை நம்பி இல்லாம இருந்தால்? நமக்கு நடப்பதை வெளி நபர்கள் முடிவு செய்வார்கள் என்ற ஒரு நிலை இல்லாம இருந்தால்?
இதை சாதிப்பதுதான் இந்த படி!
நம்மை விட சக்தி வாய்ந்த ஏதோ ஒண்ணு இருக்குன்னு ஏறத்தாழ எல்லாரும் ஒத்துப்பாங்க! ஏதோ ஒண்ணு இந்த உலகத்தை, பிரபஞ்சத்தை படைச்சு இருக்கணும். ஏதோ ஒண்ணு நாம் பார்க்கிற பௌதிக விதிகளையும் நிர்ணயம் செய்து இருக்கணும்.   ஆத்திகர்கள் இதைகடவுள் என்பார்கள். நாத்திகர்கள் கடவுளை மறுத்தாலும் ஏதோ ஒரு சக்தி வெளியே இருக்கறதை நாத்திகர்களில் சிலர் ஒப்புக்கொள்வார்கள். அல்லது நம்முள் இருக்கும் சக்தி (inner strength) என்பார்கள். இந்த சக்தியை செயலுக்கு கொண்டு வரலாம்.
வழக்கமான த்யானம் முடித்து…
ஒரு தங்க நிற ஒளிப்பிழம்பை தலைக்கு மேல் கற்பனை செய்து கொள்ளுங்கள்! அதை உங்கள் மனோ நிலைக்கு ஏற்ப இறை சக்தியாகவோ உள்ளிருக்கும் சக்தியாகவோ கற்பனை செய்து கொள்ளுங்கள். அது மெதுவாக நம் தலையில் இறங்கி பரவுகிறது. உச்சந்தலையில் இருந்து முகம், கழுத்து, தோள்கள், கைகள்… விரல்கள் வரை, மார்பு, முதுகு, இடுப்பு, தொடைகள், கால்கள்…. நம் உடல்முழுதும் அதனால் நனைந்து போகிறது. அது நம்மை முழுக்க ஆக்ரமிக்கிறது. நமக்கு தேவையான எல்லா பண்புகளும், சக்தியும் ஆதரவும் இதனால் நமக்கு கிடைப்பதாக உருவகிக்கவும். மூச்சை இழுத்து விடுங்கள். இந்த உயர் சக்தியை நம்முள் இருத்திக்கொள்வோம்! நாம் நம் வாழ்வை, இந்த நாளை…. எதிர்காலத்தை நம் ஆளுகையில் வைத்திருப்பதாக நினைத்துக்கொள்வோம்.
இந்த நிலையில் நாம் விரும்பும் வரை இருக்கலாம். பின்னர் மெதுவாக 1,2,3  என 5 வரை எண்ணி வெளியே வருவோம்! இது பத்தி இந்த தொடரின் முதல் பதிவில பார்த்து இருகோம் இல்லையா?
நம் எதிர் காலம் குறித்த நேர் முறையான பலமான எண்ணங்களாலும் உயர் சக்தியை வேண்டுவதாலும் நம் எதிர் காலத்தை வளமானதாக திருத்திக்கொள்ளலாம்.
வாழ்த்துகள்!


Tuesday, December 23, 2014

இந்த நாள் நல்ல நாள்!
அடுத்த படி?
எதிர்காலம் எப்படி இருக்கணும்ன்னு யோசிச்சாச்சு இல்லையா? இப்ப கொஞ்சம் ’நிகழ் எதிர்கால’த்துக்கு வருவோம்! அதாவது இன்னைக்கு! பொதுவா சந்தோஷமா இருக்க ஒத்தருக்கு தான் தன் வாழ்க்கையில் ஒரு கண்ட்ரோல்ல இருக்கறா மாதிரி நினைக்கிறது அவசியம். நாம் கண்ட்ரோல்ல இருக்கிறது நிச்சயமா உண்மையில்லைன்னு ஆன்மீக அடிப்படையில் நான் நினைச்சாலும் இந்த தொடர் எதை ஒட்டி எழுதப்படுதோ அதுக்கு நேர் மாறா எழுத முடியாது என்கிறதால இப்படி சொல்லலாம். “பொதுவா சந்தோஷமா இருக்க ஒத்தருக்கு தான் தன் வாழ்க்கையில் ஒரு கண்ட்ரோல்ல இருக்கறா மாதிரி ஒரு ப்ரமை இருப்பது அவசியம்.” 
ரைட்! அது எதுவா இருந்தாலும்…. அப்படி ஒரு நினைப்பு அவசியம்!

இதை வெச்சு சில விஷயங்கள் இஞ்சினீயர்கள் செஞ்சு இருக்காங்கன்னு தெரியுமா?
இந்த மாதிரி உங்களுக்கு நடந்து இருக்கா? நீங்க மிந்தூக்கில - லிப்ட்ல - போறிங்க. அது ஒரு தளத்துல நிக்குது. ஆனா யாரும் உள்ளே வரலை; வெளியெ போகலை. நமக்கு ஒரு மாதிரி ஆயிடும். இது ஏன் இப்படி நடக்குதுங்கறது வேற விஷயம். யாரேனும் மிந்தூக்கியை அழைக்க பட்டனை அழுத்திட்டு காத்திருக்காம போயிருக்கலாம்… விடுங்க. நாம் இந்த நிலையில என்ன செய்வோம்? க்ளோஸ் டோர் ந்னு போட்டு இருக்கிற பட்டனை அழுத்துவோம். அது கொஞ்ச நேரத்துல மூடிக்கும். ஆனா இந்த பட்டன் ஒரு டம்மி! இதை அமுக்கி கதவை மூட முடியாது! இப்படி இல்லைன்னா நாம என்ன செய்வோம்? நமக்கு அவசரம். ஒவ்வொரு தளத்துல்கேயும் நின்னு போனா நாம எப்ப போய் சேருகிறது? நடுவில நிக்காம நாம் நம்ம தளத்துக்கு போகணும்ன்னு மிந்தூக்கி தளத்துல நின்னு திறக்க ஆரம்பிச்ச உடனே இந்த பட்டனை அழுத்தி கதவை மூடி மேலே போக முடியுமான்னு பார்ப்போம். நாம யாரு! அக்காங்!
பின்ன எதுக்கு இந்த பட்டன்? அது இல்லைன்னா நாம் பயந்துடுவோம். மிந்தூக்கி தானியங்கியா சில நொடிகளில கதவை மூடிக்கொண்டு மேலே பயணிக்கும்ன்னாலும் கதவை மூட நம்மால முடியும்ன்னு மிந்தூக்கில இருக்கிறவர் நினைக்கிறது முக்கியம். அதாவது நிம்மதியா இருக்க தான் கண்ட்ரோல்ல இருக்கிறதா நினைக்கறது முக்கியம்.

அதனால், கண்ட்ரோல்ல்ல இருக்க, இன்னைக்கு நம் நாள் எப்படி இருக்கப்போகிறதுன்னு ஒரு கற்பனை செய்யலாம். நீங்க இரவு இந்த பயிற்சியை செய்வதானால் நாளைக்கு நம் நாள்ன்னு நினைச்சுக்கோங்க. காலை செய்வதானால் இருந்தா இன்னைக்கு ந்னு நினைச்சுக்கோங்க!  

காலை சரியான நேரத்துக்கு எழுந்திருக்கிறோம். மனப்பயிற்சிகளை எல்லாம் முடிக்கிறோம். காலை கடன்களை எல்லாம் அருமையா சீக்கிரம் முடிக்கிறோம். காலை செய்தித்தாள்ள நல்லா செய்தியாவே கண்ணுல படுது! (கொஞ்சம் டூ மச் இல்லே? போகட்டும்) அடடா! அருமையான காலை டிபன், காபி/ டீ…. அஹா! இதை முன்னேயே போன பதிவுகளில பாத்துட்டோம் இல்லையா? இருந்தாலும் இங்கே முழுமைக்காக எழுதலாம். நினைவு இருக்கிறவங்க இந்த பாராவை விட்டுடலாம். ஆபீஸுக்கு அதிக ட்ராபிக் இல்லாத சாலையில் போகிறோம். சிக்னல் எல்லாம் நமக்கு சாதகமாவே இருக்கு; ஆபீஸ்ல வேலையை ஜம்ன்னு ஊதி தள்ளறோம். மதிய சாப்பாடு காண்டீன்லஅடடா இன்னைக்கு சமையல்காரர் அருமையாவே சமைச்சு இருக்கார். நேரத்துக்கு சுடச்சுட கிடைக்குது! முடிஞ்சு வந்து தூங்காம நம் அடுத்த வேலையை கவனிக்கிறோம்; சக ஊழியர்களோட பயன் தரும் உரையாடல்கள் நடக்குது. எல்லா வேலையையும் சீக்கிரம் முடிச்சுட்டு டாண் ந்னு அஞ்சு மணிக்கு வீட்டுக்கு கிளம்பறோம். திருப்பியும் பிரச்சினை இல்லாத பயணம்; வீட்டுக்கு வந்து குழந்தைகளை கொஞ்சி விட்டு விளையாடி விட்டு அருமையான இரவு உணவை சாப்பிட்டு விட்டு நிம்மதியா தூங்கப்போறோம்.

ஒரு சின்ன விஷயம். நம்ம நாள் தோறும் செய்கிற செயல்கள் நம்மோட மூணு வருஷத்தில எப்படி இருப்போம்ன்னு கற்பனை செய்ததோட இசைவுடன்  இருக்கணும் இல்லே? ரைட்! அதை மறந்திருப்பீங்களோன்னு நினைச்சேன்!

இப்படி ஒரு அருமையான நாள் கழியுது. அடுத்த நாள் மீண்டும் இதுவே. இப்படி ஒரு வாரம் கழியும். நாலு வாரங்கள் சேர்ந்து ஒரு வருஷம்! பன்னிரண்டு மாதங்கள் சேர்ந்து ஒரு வருடம். இப்படியே போக வாழ்கை முழுதும் அருமையாவே இருக்கும்!

உங்கள் நாளை உங்க சௌகரியப்படி ஏழெட்டா பிரிச்சு அது எப்படி இருக்கும்ன்னு கற்பனை செய்யறதே பயிற்சி! 

அடுத்த பதிவோட முடிஞ்சிடும்!