Pages

Showing posts with label குட்டிக்கதைகள். Show all posts
Showing posts with label குட்டிக்கதைகள். Show all posts

Wednesday, February 13, 2019

பறவையின் கீதம் - 112





ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார்?
சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்"
ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். நீ இதை எந்த மனிதனிடமும் கேட்கவில்லை. என் தந்தையே இதை உனக்குச்சொன்னார்!”
வாழ்க்கையிலிருந்து ஒரு உரையாடல்:
ஜீசஸ்: நீ சொல். நான் யார்?
கிறிஸ்துவன்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்"
ஜீசஸ்: "சரிதான். ஆனால் நீ இதை ஒரு மனிதன் வாயிலாக கேட்டது துரதிருஷ்டம். என் தந்தை இதை உனக்குச்சொல்லவில்லை!”
கிறிஸ்துவன்: "உண்மைதான். நான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன். உங்கள் தந்தை இதை என்னிடம் சொல்லுவதற்கு முன் யாரோ இந்த விடைகளை எல்லாம் எனக்கு சொல்லிவிட்டார்கள். சைமனிடம் உங்கள் தந்தை இதை சொல்லும் வரை நீங்கள் சைமனிடம் இந்த கேள்வியை கேட்கவில்லை. உங்கள் சாமர்த்தியத்தை கண்டு வியக்கிறேன்!”

Tuesday, February 12, 2019

பறவையின் கீதம் - 111





ஒரு கச்சேரியில் கேட்டது:
ஆஹா! என்ன ஒரு பாடகர். அவரோட பாட்டு அரங்கத்தை நிரப்பிவிட்டது.”
ஆமாம். அது நிரப்பினதால நிறைய பேர் வெளியே போய் அதுக்கு இடம் கொடுக்க வேண்டி இருந்தது"
ஆன்மீக கலந்துரையாடலில் கேட்டது:
சாத்திரங்கள் சொல்கிறபடி நான் எப்படி கடவுளை நேசிப்பது? என் முழு இதயத்தையும் அவருக்கு கொடுப்பது?”
அதற்கு முதலில் நீ படைக்கப்பட்ட விஷயங்களை உன் இதயத்தில் இருந்து நீக்க வேண்டும்.”
தவறான வழி காட்டுதல்! நீ நேசிக்கும் படைக்கப்பட்டவற்றை நீக்க வேண்டிய அவசியமில்லை. பாடல் அரங்கத்தை நிறைத்ததைவிட கடவுளிடமான அன்பு அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாது.
அன்பு ரொட்டித்துண்டு மாதிரி இல்லை. உனக்கு கொஞ்சம் கொடுத்துவிட்டதால் மற்றவர்களுக்கு கொடுக்க அது ஒன்றும் குறைந்து போகாது. நான் முழுவதுமாக கடவுளை பெற்றுக்கொள்கிறேன். அடுத்தவரும் முழுமையாக. அடுத்தவரும்.
நீ உன் அன்னையை வெகுவாக நேசிக்கலாம். அதே சமயம் உன் மனைவியை; உன் குழந்தைகளை. ஒவ்வொருவருமே அதனால் பயன்பெறுகிறார்கள். அடுத்து அடுத்து கொடுக்கப்படும்போது அன்பின் தன்மை இன்னும் அதிகமாகிறது.
உன் நண்பன் உனக்கு மட்டும் தன் இதயத்தை தருவானாகில் அவனுக்கு புத்திமதி சொல்;மற்றவர்களுக்கும் கொடுக்கச்சொல். இல்லையானால் அது மிகவும் பலகீனமான இதயமாக இருக்கும்!

Monday, February 11, 2019

பறவையின் கீதம் - 110





மரத்தின் மேலிருந்த குரங்கு அந்த ஸுஃபியின் தலையை குறி வைத்து தேங்காயை எறிந்தது.

அவர் அதை எடுத்தார். அதில் ஓட்டை போட்டு இளநீரை குடித்தார். பிறகு அதை உடைத்தார். உள்ளே இருந்த தேங்காய் வழுக்கையை தின்றார். நாரை கயிறாக திரித்துக்கொண்டார். ஓட்டை கல்லில் தேய்த்து கிண்ணங்கள் ஆக்கிக்கொண்டார். கிளம்பி போய்விட்டார்.

என்னை விமரிசனம் செய்ததற்கு நன்றி.

Thursday, February 7, 2019

பறவையின் கீதம் - 109





யூத மிஸ்டிக் பால் ஷெம் இன் பிரார்த்தனை வினோதமானது.  

அவர் சொல்லுவார் "நினைவு வைத்துக்கொள் இறைவா, நீ எனாக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு நானும் உனக்குத்தேவை. நீ இல்லாவிட்டால் நான் யாரை பிரார்த்திப்பேன்? நான் இல்லாவிட்டால் யார் உன்னை பிரார்த்திப்பார்?”

இப்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. நான் பாவம் செய்யவில்லையானால் கடவுள் பாவ மன்னிப்பு கொடுக்க வாய்ப்பிருக்காதே?

Wednesday, February 6, 2019

பறவையின் கீதம் - 108





ஒரு முஸ்லிம் ராஜா ஒரு அடிமைப்பெண்ணிடம் மனதை முழுதுமாக பறி கொடுத்துவிட்டான். அவளை அடிமைகளின் கொட்டிலில் இருந்து தன் அரண்மனைக்கு இடம் மாற்றிவிட்டான். அவலை திருமணம் செய்து கொண்டு தன் முக்கிய ராணியாக்கிக்கொள்ள திட்டமிட்டு இருந்தான்.

அரண்மனைக்கு வந்து சேர்ந்த அன்றே அவள் நோய்வாய்ப்பட்டாள். நாளாக ஆக நிலமை மோசமானது. அரண்மனை வைத்தியர்கள் எந்த மருந்து கொடுத்தும் நிலை சீரடையவில்லை. ஏறத்தாழ மரணப்படுக்கைக்கே போய்விட்டாள்.

செய்வதறியாத ராஜா அவளை குணப்படுத்துவோருக்கு பாதி ராஜ்யத்தை கொடுப்பதாக அறிவித்தான். ராஜ வைத்தியர்களே கைவிட்ட நபரை குணப்படுத்த யார் முன் வருவர்?
கடைசியாக ஒரு ஹக்கிம் வந்தார். அந்த பெண்ணை தனியாக பார்த்து பேச வேண்டுமென்றார். அனுமதித்தார்கள். என்ன சொல்லுவாரோ என்று ராஜா பதைபதைப்புடன் காத்திருந்தான். ஒரு மணி கழித்து ஹக்கிம் ராஜாவின் முன் வந்தார்.

ராஜா. இவளை குணப்படுத்த நிச்சயமான வழியை எனக்குத்தெரியும். அது வேலை செய்யவில்லை என்றால் என் தலையை தாராளமாக வெட்டிவிடுங்கள். ஆனால் அந்த தீர்வு பெரும் துன்பத்தை தரும். துன்பம் அவளுக்கல்ல. உங்களுக்கு!”

"பரவாயில்லை. நீங்கள் என்ன சொன்னாலும் அது நிறைவேற்றப்படும்.”
வார்த்தை மாற மாட்டீர்களே?'
மாட்டேன்!”

நல்லது ராஜா. அவள் உங்களுடைய அடிமை ஒருவனை காதலிக்கிறாள். அவனுக்கு அவளை திருமணம் செய்து வைத்துவிட்டால் அவள் குணமாகிவிடுவாள்.”

பாவம் ராஜா! அவளை மிகவும் காதலித்தான். அவளை விட்டுவிலகவும் மனதில்லை. அவளை சாகவிடவும் விருப்பமில்லை!

Tuesday, February 5, 2019

பறவையின் கீதம் - 107





நசருதீன் அப்போதுதான் தன் சொற்பொழிவை முடித்திருந்தார். கூட்டத்தில் ஒருவன் எழுந்து "ஐயா, நிறைய தத்துவம் பேசறீங்க! எங்களுக்கு ஏன் ப்ராக்டிகலா ஏதாவது காட்டக்கூடாது?” என்று கேட்டான்.

நசருதீன் திகைத்துப்போனார். “ப்ராக்டிகலான்னா என்ன மாதிரி காட்டச்சொல்லறிங்க?”

ஆஹா! இவரை மாட்டிவிட்டுட்டோம், மக்கள் நம்மையே பாக்கறாங்க பாரு என்ற பெருமிதத்தில் அவன் சொன்னான்: "உதாரணமா சொர்கத்து தோட்டத்திலேந்து ஒரு ஆப்பிளை காட்டுங்களேன்!”

நசருதீன் உடனே பக்கத்தில் இருந்த ஒரு கூடையில் இருந்து ஒரு ஆப்பிளை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

ஆனா இந்த ஆப்பிள் ஒரு பக்கம் அழுகி போயிருக்கே? நிச்சயமா சொர்க லோகத்து ஆப்பிள்ன்னா அப்பழுக்கு இல்லம தானே இருக்கும்?”

ஆமா. சொர்கத்து ஆப்பிள் அப்படித்தான் அப்பழுக்கு இல்லாம இருக்கும். ஆனா உன் லெவலுக்கு இதுவே அதிகம்!”

ஊனக்கண்ணால் அப்பழுக்கு இல்லாத ஆப்பிளை பார்க்க முடியுமா?
அல்லது தன்னலம் மிக்க மனதிருக்கும்போது மற்றவரிடம் நல்லதை பார்க்க முடியுமா?

Monday, February 4, 2019

பறவையின் கீதம் - 106





மத போதனை செய்வோருக்கு ஒரு கதை.

வேலியில் ஒரு ஓட்டையை கண்டுபிடித்த ஆடு அதன் வழியாக வெளியே போய் விட்டது. மேய்ந்துக்கொண்டே வெகு தூரம் போய்விட்டது. திரும்பி வர வழியை அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன் பின்னே ஒரு ஓநாய் தொடருவதை ஆடு உணர்ந்தது. ஓடு ஓடென்று ஓடியது. ஓநாய் விடாமல் துரத்தியது. ஒரு வழியாக ஆட்டிடையன் ஆட்டை கண்டு பிடித்து அரவணைத்துக்கொண்டான்.

யார் சொல்லியும் கேட்கவில்லை; ஆட்டிடையன் வேலியின் ஓட்டையை அடைக்க மறுத்துவிட்டான்.

Friday, February 1, 2019

பறவையின் கீதம் - 105






அவன் எல்லாரையும்விட வித்தியாசமானவனாக இருந்தான். அவனுடன் பழகுவதே மிகக்கடினம். எல்லாவற்றையும் கேள்வி கேட்பான். இவன் புரட்சியாளனா இறைதுதனா, பைத்தியமா ஹீரோவா? “யார் சொல்ல முடியும்?” என்றோம்.”அத்துடன் யாருக்கு அதைப்பற்றி கவலை?”
ஆகவே நாங்கள் அவனுடன் பழகினோம். எப்படி பொதுமக்களின் மற்றவர்களின் கருத்துக்கு உணர்ச்சிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று சொன்னோம். அவனை அதன்படி நடந்து கொள்ல வைத்தோம். இப்போது அவன் கூட வாழ்வதற்கு ஏற்றவனாகிவிட்டான். நன்றாக ஒத்திசைந்து கொண்டு. கட்டுப்படுத்த முடிபவனாகவும் அமைஹியாகவும் ஆக்கிவிடோம்.
தன்னைத்தானே வென்றதற்கு நாங்கள் அவனுக்கு வாழ்த்து சொன்னோம். அவனும் தன்னைத்தானே வாழ்த்திக்கொண்டான். அவனுக்கு புரியவில்லை நாங்கள்தான் அவனை ஜெயித்தோம் என்று.
---
ஒரு ராட்சச மனிதன் மதுவகத்தில் நுழைந்தான். “யாரடா இங்கே மர்ஃபி?”
ஒரு சின்ன மனிதன் எழுந்தான். “நான்தான்". வந்தவன் இவனை அடித்து துவைத்துப்போட்டுவிட்டு கோபத்துடன் போய்விட்டான். சில எலும்புகள் உடைந்தன. கண்கள் கருரத்தம் தோய்ந்து வீங்கிவிட்டன. மூக்கு உடைபட்டது.
வந்தவன் போன பிற்கு இவனோ சிரித்துக்கொண்டு இருந்தான். எங்களூக்கு புரியவே இல்லை. வலியுடன் சிரித்துக்கொண்டே சொன்னான்.” நான் அவனை ஏமாற்றி விட்டேன் நான் மர்பி இல்லை. ஹாஹாஹ்ஹா!”

Wednesday, January 30, 2019

பறவையின் கீதம் - 104





பாயாஃஜித் ஒரு சுஃபி. தன்னைப்பற்றி இப்படி சொன்னார். “இள வயதில் நான் புரட்சியாளனாக இருந்தேன். கடவுளிடம் நான் வேண்டிக்கொண்டது இப்படி இருந்தது: “கடவுளே! உலகை மாற்ற எனக்கு சக்தி கொடு.”

நடு வயதை நெருங்கும்போது ஒரே ஒரு ஜீவனைக்கூட என்னால் மாற்ற முடியவில்லை என்பதை உணர்ந்தேன். ஆகவே என் பிரார்த்தனையை மாற்றிவிட்டேன். “கடவுளே என் தொடர்பில் வருவோரை மாற்ற எனக்கு சக்தியை கொடு. என் குடும்பம், நண்பர்கள் போதும் நான் திருப்தி அடைந்துவிடுவேன்.”

இப்போது நான் வயதானவனாகிவிட்டேன். என் நாட்கள் முடியப்போகின்றன என்பது தெளிவாகிவிட்டது. ஆகவே இப்போது என் ஒரே பிரார்த்தனை "கடவுளே என்னை மாற்றிக்கொள்ள அருள் செய்!” இதை நான் ஆரம்ப காலத்திலிருந்து பிரார்த்தனை செய்து இருந்தால் என் வாழ்நாட்களை மாற்றி இருக்க மாட்டேன்.

Monday, January 28, 2019

பறவையின் கீதம் - 103





ஒரு முக்கியமான ஆட்டத்துக்கு கத்தோலிக கால்பந்து குழு போய்க்கொண்டு இருந்தது. ட்ரெய்னில் ஏறிய ஒரு பத்திரிகை நிருபர் பயிற்சியாளரை அணுகி கேட்டார் "டீம் ஜெயிக்க பிரார்த்தனை செய்ய கூடவே பாதிரியை அழைச்சுப்போறீங்களாமே? அவரை அறிமுகம் செஞ்சு வெக்க முடியுமா?”
பயிற்சியாளர் சொன்னர் "நிச்சயமா. ஆனா எந்த பாதிரி? தடுத்து ஆடறவரா இல்ல ஆக்ரோஷமா தாக்கி ஆடறவரா?”

Friday, January 25, 2019

பறவையின் கீதம் - 102





சுற்றுலா பயணி தன் வழிகாட்டியிடம் "இந்த ஊர் நன்றாக இருக்கிறது. எத்தனை சர்ச்கள்! இங்கிருக்கும் மக்கள் கடவுளை மிகவும் நேசிக்கிறார்கள் போலிருக்கு!” என்றார்.
வழி காட்டி சொன்னார் : “இருக்கலாம். ஆனால் நிச்சயமாக ஒத்தரை ஒத்தர் வெறுக்கிறார்கள்!”
ஒரு சிறுமியிடம் 'பேகன்கள்' யார் என்று கேட்டார்.
அவள் மதம் குறித்து ஒத்தருக்கு ஒத்தர் சண்டை போடாதவர்கள்!” என்றாள்.

Thursday, January 24, 2019

பறவையின் கீதம் - 101





திருப்பியும் அந்த மத கண்காட்சிக்குப்போனேன். இப்போது அங்கே பலாக்ரி மதத்து பெரிய பூசாரி பிரசங்கம் செய்து கொண்டு இருந்தார். இறைதூதர் பலாக்ரி மட்டுமே இறை தூதுவர் என்று அவர் 5 ஆம் நூற்றாண்டில் மெசாம்பியா நாட்டில் அவதரித்தார் என்று சொன்னார்.

அன்றிரவு கடவுளிடம் இன்னொரு பேச்சு வார்த்தை நடத்தினேன். “கடவுளே நீ மிகவும் பாரபட்சம் காட்டுகிறாய் அல்லவா? ஏன் 5 ஆம் நூற்றாண்டு மட்டுமே ஞானமடைந்த நூற்றாண்டாக இருக்க வேண்டும்? ஏன் மெசாம்பியா மட்டுமே புனித இடமாக இருக்க வேண்டும். என் காலகட்டத்துக்கும் இடத்துக்கும் என்ன குறை?

கடவுள் சொன்னார்: ஒருநாள் பண்டிகை என்று சொல்லுவது எல்லா நாட்களும் புனிதமானவை என்று உணர்த்தவே. ஓரிடம் புனிதத்தலம் என்பது எல்லா இடங்களும் புனிதத்தன்மை வாய்ந்தவை என்றூ உணர்த்தவே. இறை தூதரை தேவ குமாரன் என்று சொல்லுவது எல்லாருள்ளும் இறைத்தன்மை இருப்பதை உணர்த்தவே.

Wednesday, January 23, 2019

பறவையின் கீதம் - 100





ஜீசஸ் ஃபுட்பால் மேட்ச் பார்த்ததே இல்லை என்றார். ஆகவே ஒரு நாள் அவரை ஒரு மேட்சுக்கு அழைத்துப்போனோம். அது கத்தோலிக்க குருசேடர்களுக்கும் ப்ராடஸ்டண்ட் பஞ்சர்களுக்கும் இடையேயான ஆக்ரோஷமான போட்டி.
குருசேடர்கள் முதலில் கோல் போட்டார்கள். ஜீசஸ் ஆர்பரித்து தொப்பியை மேலே எறிந்து பிடித்தார். சில நிமிடங்களில் ப்ராடஸ்டண்ட்கள் கோல் போட்டனர். ஜீசஸ் மீண்டும் ஆர்பரித்து தொப்பியை மேலே எறிந்து பிடித்தார்.
பின்னால் உட்கார்ந்திருந்தவருக்கு இது புரியவில்லை. ஜீசஸ் தோளைத்தட்டி "நீங்கள் எந்தப்பக்கம்? யாருக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
ஜீசஸ் "நான் யாரையும் ஆதரிக்கவில்லை. போட்டியை ரசிக்கிறேன்!” என்று சொன்னார்.
கேள்வி கேட்டவர் தன் பக்கத்தில் இருந்தவர் பக்கம் திரும்பி "ஹும்! நாஸ்திகர் போலிருக்கிறது!” என்றார்.

மேட்ச் முடிந்ததும் நாங்கள் ஜீசஸை கேட்டோம். “எந்த பக்கமும் சாயாமல் இருக்கிறீர்களா என்ன?”
அவர் சொன்னார் "நான் மக்கள் பக்கம் இருக்கிறேன்; மதங்களின் பக்கம் இல்லை. மானுடம் முதலில்; வேலை செய்யாமல் விரதம் இருப்பதன் பக்கமில்லை.”

Monday, January 21, 2019

பறவையின் கீதம் - 99





மதங்களின் உலக கண்காட்சிக்கு நானும் என் நண்பனும் போனோம். அது வியாபார கண்காட்சி இல்லை. ஆனால் போட்டி பலமாக இருந்தது. பிரச்சாரம் சத்தமாக இருந்தது.

யூதர்களின் ஸ்டாலில் பிரசுரம் தந்தனர். அதில் கடவுள் எல்லோருக்கும் கருணை காட்டுபவர் என்றும் யூதர்கள் அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்றும் வேறு யாருமே கடவுளுக்கு அவ்வளவு பிரியமானவர்கள் இல்லை என்றும் சொன்னது

இஸ்லாமியர்கள் ஸ்டாலில் கடவுள் மிகவும் இரக்கம் காட்டுபவன் என்றும் முகமது மட்டுமே அவரது தூதுவன் என்றும் அவரது போதனைகளை கேட்டு நடந்தால் மட்டுமே ரட்சிக்கப்படுவோம் என்றும் தெரிந்து கொண்டோம்.

கிறிஸ்துவரின் ஸ்டாலில் கிடைத்த செய்தி கடவுள் அன்பு மயமானவர், சர்ச்சை விட்டால் வெளியே ரட்சிப்பு இல்லை என்பது. சர்ச்சில் சேருங்கள் அல்லது நிரந்தரமாக நரகத்தில் தள்ளப்படுவீர்கள் என்றனர்.

வெளியே வரும்போது என் நண்பனை கடவுளைப்பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்டேன். “அவர் மத வெறி பிடித்தவர், வெறியர், கொடூரமானவர்" என்றான்.

வீட்டுக்கு வந்து இறைவனிடம் கேட்டேன். “இதை எல்லாம் ஏன் பொறுத்துக் கொள்ளுகிறாய்? காலங்காலமாக இவர்கள் உனக்கு கெட்டப்பெயர் சம்பாதித்து தருகிறார்கள் என்று உனக்கு தெரியாதா என்ன?”

கடவுள் சொன்னார் "நான் அந்த கண்காட்சியை ஏற்படுத்தவில்லை. உண்மையில் அங்கே போக நான் வெட்கப்படுவேன்!"

Friday, January 18, 2019

பறவையின் கீதம் - 98





விஷ்ணு தன் பக்தன் ஒருவனிடம் ஒரு நாள் சொன்னார் "இதோ பார், உன் முடிவே இல்லாத வேண்டுதல் எல்லாம் கேட்டு எனக்கு சலித்துவிட்டது. உனக்கு 3 வரம் கொடுக்கிறேன். வாங்கிக்கொள். பிறகு ஒரு வரமும் தர மாட்டேன்.”

பக்தனுக்கு படு சந்தோஷமாகிவிட்டது. அப்போதுதான் தன் மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு வந்திருந்தான். 'என் மனைவி சாகட்டும். நான் வேறு நல்ல பெண்னை திருமணம் செய்தி கொள்கிறேன்.' என்றான்.

ஆகட்டும் என்று சொல்லி விஷ்ணு மறைந்துவிட்டார்.

வீட்டுக்கு போனால் மனைவி இறந்து போயிருந்தாள். அக்கம் பக்கம் சுற்றத்தார் எல்லாரும் அவளுடைய நல்ல குணங்களை சொல்லி அழுதார்கள். இவனுக்கோ 'அட ஆமாம்! அவள் நல்லவள்தானே, இவளை விட நல்ல பெண் கிடைப்பாளா, அவசரப்பட்டுவிட்டோமே என்று தோன்றிவிட்டது. அவன் விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தான் - 'இவள் உயிர் பிழைக்கட்டும்.' அவளும் தூக்கத்தில் இருந்து எழுபவள் போல எழுந்துவிட்டாள்.

இப்போது இன்னும் ஒரே ஒரு வரம்தான் பாக்கி இருந்தது. இதை வீணடிக்காமல் எதையாவது சரியாக கேட்டு வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தான். முன் போல தப்பாக கேட்டுவிட்டால் அதை சரி செய்ய இன்னோரு வரம் கிடைக்காதே? பலரையும் கலந்து ஆலோசித்ததில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக சொன்னார்கள். குழப்பமே மிஞ்சியது. சாவே வேண்டாம் என்று கேட்கலாமா? அட உடல்நலமில்லையானால் சாவே வராமல் இருந்து என்ன பிரயோஜனம்? அப்போ நல்ல ஆரோக்கியம்? அட, காசே இல்லாமல் நல்ல ஆரோக்கியம் இருந்து என்ன புண்ணியம்? அப்போ நிறைய பணம்? அட நண்பர்களே இல்லையானால் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

இப்படியே சில பல வருஷங்கள் சென்றன. குழப்பம் நீடித்துக்கொண்டே இருந்தது. கடைசியில் விஷ்ணுவையே கேட்டான் " நான் என்ன வரம் கேட்கட்டும்?”
பக்தனின் குழப்பத்தை கண்டு மனமிரங்கி அவர் சொன்னார் “என்ன கிடைத்தாலும் திருப்தியுடன் இருக்க வேண்டும் என்று கேள்!”

Thursday, January 17, 2019

பறவையின் கீதம் - 97





அந்த சன்னியாசி கிராமத்தில் எல்லையை அடைந்து அங்கிருந்த ஆல மரத்தின் கீழே இரவை கழிக்க தயாரானார். அபோது ஒரு கிராமவாசி அரக்க பரக்க ஓடிவந்தார். “அந்த கல்லு அந்த கல்லு, அத எங்கிட்ட கொடுங்க!!”
"என்ன கல்லுப்பா?” என்றார் சன்னியாசி.
நேத்து ராத்திரி சிவபெருமான் என் கனவில வந்து இன்னைக்கு சாயங்காலம் கிராம எல்லையில இருக்கற ஆல மரத்துகிட்ட போனா அங்க ஒரு சன்னியாசி எங்கிட்ட ஒரு கல்லை கொடுப்பார். அது என்ன ஏழு தலைமுறைக்கும் பணக்காரன் ஆக்கிடும்ன்னு சொன்னார்.”
தன் பையில் துழாவிய சன்னியாசி ஒரு பெரிய கல்லை எடுத்தார். “அவர் இதத்தான் சொல்லி இருப்பார். இது நேத்து காட்டில கிடைச்சது. உனக்கு வேணும்ன்னா வெச்சுக்கோ" கொடுத்துவிட்டார்.
ஒரு மனிதனின் தலை அளவு பெரியதாக இருந்த அந்த வைரத்தை பார்த்து கிராமவாசி திகைத்துப்போனார்.
அன்றிரவு அவரால் தூங்க முடியவில்லை.
அடுத்த நாள் காலை நேராக சன்னியாசியிடம் போய் சொன்னார், “இந்த கல்லை அநாயாசமாக தூக்கிக்கொடுக்க வைக்கும் உங்களது பெரும் செல்வத்தை கொடுங்களேன்!”

Friday, January 11, 2019

பறவையின் கீதம் - 96





ஜென் மாஸ்டர் ரியோகன் மலையடிவாரத்தில் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். ஒரு இரவில் ஒரு திருடன் திருடுவதற்கு அவரது குடிசைக்குள் புகுந்தான். அங்கே ஒன்றுமே இல்லை

அப்போது ரியோகன் திரும்பிவிட்டார். திருடனை பார்த்து "ஐயோ பாவம் இங்கே ஒன்றுமே இல்லையே? நீ என்னை பார்க்கவர இவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறாயே? இந்தா இந்த போர்வையையும் என் உடையையும் எடுத்துப்போ" என்று கொடுத்துவிட்டார்.
திகைத்துப்போன திருடன் கொடுக்கப்பட்டதுடன் வெளியேறினான்.

நிர்வாணமாக தன் குடிசையின் வாசலில் அமர்ந்த ரியோகன் நிலவை பார்த்தார். “அவன் பாவம்! இதை அவனுக்கு கொடுக்க முடிந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!” என்றார்.

Thursday, January 10, 2019

பறவையின் கீதம் - 95





பாகவத புராணத்திலிருந்து ஒரு கதை.

ஒரு காகம் தன் அலகில் ஒரு மாமிச துண்டை கொத்திக்கொண்டு பறந்தது. இருபது காகங்கள் அதை துரத்தி கொத்த ஆரம்பித்தன.
கடைசியில் தாங்க முடியாமல் காகம் மாமிச துண்டை விட்டுவிட்டது. காகங்கள் கீழே விழும் அதை துரத்த ஆரம்பித்தன; காகத்தை விட்டுவிட்டன.
காகம் சொன்னது " அந்த மாமிச துண்டை விட்டுவிட்டேன். இந்த நிம்மதியான வானத்தை பெற்றேன்.”

ஒரு ஜென் துறவி சொன்னார். "என் வீடு எரிந்து போனது. இரவில் நிலவின் தடையற்ற காட்சி கிடைத்தது!”


Wednesday, January 9, 2019

பறவையின் கீதம் - 94





ஹோஃபெட்ஸ் சாய்ம் பிரபலமான போலிஷ் ராபி. அமெரிக்கர் ஒருவர் அவரை பார்க்கப்போனார். ராபியின் வீடு புத்தகங்கள் நிரம்பிய ஒற்றை அறையுடன் எளிமையாக இருந்தது. அங்கிருந்த மரக்கலங்கள் ஒற்றை மேசையும் ஒற்றை பெஞ்சும்.
ராபி, உங்க மரக்கலங்கள் எங்கே?”
ஹும்! உங்களது எங்கே?”
என்னுதா? நா இந்த இடம் வழியா போய்கிட்டே இருக்கேன். இங்க ஒரு விருந்தாளிதான்"
நானும்"

Tuesday, January 8, 2019

பறவையின் கீதம் - 93





விலங்குகள் எல்லாம் சந்தித்தன. மனிதன் அவர்களிடம் இருந்து எடுத்துப்போவதை குறித்து புகார் செய்தன.
மனிதன் என்னிடம் இருந்து பாலை எடுத்துப்போகிறான் என்றது பசு. நான் இடும் முட்டையை எடுத்துப்போகிறான் என்றது கோழி. பன்றி என் மாமிசத்தை எடுத்துப்போகிறான் என்றது. என்னை என் எண்ணைக்காக வேட்டையாடுகிறான் என்றது திமிங்கிலம்.
கடைசியாக நத்தை பேசியது. "என்னிடம் நிறைய இருக்கும் ஒன்றை அவனால் எடுத்துப்போக முடியாது! ஆனால் அதைத்தான் அவன் மிகவும் விரும்புகிறான்.”
"என்ன அது?" என்று மற்றவை கேட்டன.
"நேரம்."
--
நீ உனக்கு கொடுத்துக்கொள்ளும் நேரம் அனைத்தும் உன்னிடமே இருக்கிறது. அதை உனக்கு கொடுத்துக்கொள்ளாதே என்று யார் சொன்னது?