Pages

Monday, June 30, 2008

உண்ணல் (தொடர்ச்சி)வாய் கொள்கிற அளவு எடுத்துக்கணும். அதை அப்படியே வாயில் இடணும். வாய்ல போட்டது திருப்பி இலைக்கு வரக்கூடாது. அதிகமாக எடுத்து வாயில போட்டு மீந்ததும், கடித்து மீந்ததும் இலைக்கு வரக்கூடாது.
சத்தம் போட்டு உறிஞ்சி கடித்து சாப்பிடக்கூடாது. இது போல சிலதை எடிகெட்ஸ் னு இப்ப கடைபிடிக்கிறாங்க.
தண்ணீரை தூக்கியே குடிக்கணும். குடித்து மீந்ததும், எச்சில் பட்டதும் திருப்பி குடிக்க உகந்தது இல்லை.

பலரும் பந்தியில சாப்பிடும் போது நடுல யாரும் எழுந்து போகக்கூடாது. அப்படி எழுந்தால் பந்தி முழுதும் எச்சிலாகும். ஒரு வேளை அவசியம் எழுந்துக்க வேண்டினால் பந்தியை பிரித்துவிட்டு எழுந்துக்கணும்.
சாப்பிடும் போது ஒத்தரை ஒத்தர் தொடக்கூடாது. இடது கையால் தானே பறிமாறிக்கொள்ளக்கூடாது. அப்படி செய்தா அந்த பாத்திரமும் எச்சிலாகும்.

சாதாரணமா இடது கையால எதுவும் குடிக்கக்கூடாது. சாப்பிடும் போது விதி விலக்கு. வலது கையால இலையை தொட்டுக்கொண்டு இடது கையால தண்ணீர் குடிக்கலாம்.

உப்பு, ஊறுகாய், காய்கறி, நெய், எண்ணை, பாயஸம் (நெறய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய மு.ப போட்டது, போடாதது எல்லாமே-) அன்னம் இதெல்லாம் கரண்டி இல்லாம பறிமாறக்கூடாது.

எண்ணையில் பக்குவம் செய்தவற்றை கையால போடலாம். பழம், பட்சணங்களை சிறுவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் போட்டு விட்டே, தான் போட்டுக்கொள்ளலாம்.

பாயஸம், நெய், தேன், தயிர், பழம் எல்லாம் மிச்சமில்லாமல் சாப்பிடலாம். மற்றதில் கொஞ்சம் கொஞ்சம் மிச்சம் வைக்கணும்.

Friday, June 27, 2008

உணவு உண்ணல்


சரி சாப்பிட உக்காரலாமா?

உணவு உண்ணல்

அட, இது எப்படி கர்மால சேத்தி?

எப்படி கர்மால சேத்தின்னு யோசனை செய்யறீங்களா?
உண்பது பிராண அக்னி ஹோத்திரம்ன்னு சொல்கிறாங்க.

கை கால்கள் வாய் இவற்றை சுத்தம் செய்துகிட்டுதான் சாப்பிட உக்காரணும்.சாதாரணமாக இரண்டு வேளை சாப்பாடு சாஸ்திர சம்மதம்.
சந்தோஷமா சாப்பிடணும். கோபத்தோடயோ சண்டை போட்டுக்கிட்டோ சாப்பிட உக்காரக்கூடாது.

மற்றவர்களுக்கு உணவிட்ட பின்னே ஆசமனம் செய்து / நீர் அருந்தி விட்டு ஏகாந்தமாக அமரணும்; குறிப்பா அதிகமா சாப்பிடுகிறவர்கள். கால்கள் பூமியில் படுகிற மாதிரி உக்கரணும். மேல் துணி இருக்கணும்.
உட்காருகிற ஆசனம் மண்ணாலோ, பலாசத்தாலோ, இரும்பாலோ செய்ததா இருக்ககூடாது. பிளவு பட்டு இருக்கக்கூடாது.
தட்டு போடுகிற இடத்தை சுத்தம் செய்யணும்.

தட்டு தங்கம் (ஆஹா! அப்படி கொடுத்து வெச்சவங்க யாரும் உண்டா?!) வெள்ளி, வெண்கலம் (கிருஹஸ்தர்கள் மட்டும்) ஆகியவற்றில் இருக்கலாம். வாழை இலை மிக உசிதமானது. புரச இலை தாமரை இலை இவற்றை கிருஹஸ்தர் தவிர மத்தவங்க உபயோகிக்கலாம். (இந்த தையல் இலை என்கிறது புரச இலைகளால தைத்ததுதான்.)
இரும்பு (stainless steel), மண் பாத்திரம் (ceramic plate), உடைந்த பாத்திரம் இதெல்லாம் தவிர்க்கணும்.

அன்னம் பரிமாரிய பின் நீரால அதை பிரதக்ஷிணம் செய்து சற்று தெளிக்கணும். பரிசேஷணம் குல ஆசாரம். அதற்கு தனித்தனியாகவே நீரை எடுக்கணும். ஒரு உள்ளங்கை நீர் எடுத்து 3 சுத்து சுத்தி ப்ரோக்ஷணம் செய்வது கூடாது.
மற்றவர் நீர் ஊற்ற உள்ளங்கையில் கொஞ்சம் நீர் வாங்கிக்கொண்டு பருக வேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக நெய் கலந்த அன்னத்தை பல் படாம 5 பிராணன்களுக்கு ஆஹுதியாக விழுங்க வேண்டும்.
திரும்பியும் கொஞ்சம் நீர் வாங்கிக்கொண்டு பருக வேண்டும்.

அப்பாடா இப்ப சாப்பிடலாமா?


கொஞ்சம் இருங்க, கொஞ்சம் அன்னத்தை எடுத்து தர்மராஜனுக்கு, சித்ரகுப்தனுக்கு, பிரேதங்களுக்கு என்று பலி வைக்க வேண்டும்.
அன்னத்தை வணங்கிய பின்னே சாப்பிட ஆரம்பிக்கலாம். சாப்பிடுகிறபோது அன்னத்தை இறைக்ககூடாது; திட்டக்கூடாது. “அன்னம் ந நிந்த்யாத்" என்பது உபநிஷத் வாக்கியம்.

மௌனமாகவே சாப்பிடணும். பேசிக்கொண்டே சாப்பிடுகிறவன் வாழ் நாளை ம்ருத்யு கொண்டு போகிறானாம். ஆனால் கிருஹஸ்தன் அவன் கூட சாப்பிடறவங்க இருந்தா, அவங்களை உபசரிப்பதற்காக பேசலாமாம். "அடியே, பக்கத்து இலைக்கு இன்னும் கொஞ்சம் பாயஸம்" என்பது போல சொல்லாம்! போடுகிற பதார்த்தங்களை வேண்டாம் என்றோ, போதும் என்றோ சொல்ல பேசலாம்.


Thursday, June 26, 2008

அதிதி பூஜை

வைச்வதேவத்தின் முடிவில் வருகிறவன் நல்ல அதிதியாம். அவனை குலம், கோத்திரம், ஆசாரம்,வேதம், சாஸ்திரம் முதலியது விசாரிக்காமல் அதிதி பூஜை பண்ணு என்கிறது சாஸ்திரம். அவனை வியாசராகவே பார்க்கிறாங்க பல ரிஷிகள். இவருக்கு அதிதி பூஜை செய்வது யூபம் (யக்ஞங்கள்ல நடுகிற ஒரு கம்பம்) இல்லாத யக்ஞமே என்கிறாங்க. அதிதி பூஜையாவது எதிர் கொண்டு அழைக்கிறது, களைப்பு தீர தண்ணீர் தருகிறது, கால் அலம்பி விடுகிறது, கையில் ஜலம் கொடுக்கிறது, நடந்து வந்தவன் காலுக்கு தைலம் கொடுக்கிறது (வலிக்கா? தெரியலை) ஆசனம் கொடுக்கிறது, உணவிடுகிறது, களைப்பாற படுக்கை இப்படி விவரிக்கிறாங்க. சாங்கமாக அத்தியயனம் செய்த வேத பிராமணன், ஆச்சார்யன், ருத்விக் (யக்ஞம் செய்விப்பவர்) ராஜா, மாமனார், மாதுலன் (மாமா) ஆகியோருக்கு மது பர்க்கம் கொடுக்கணுமாம் (கடந்த ஒரு வருஷதுக்குள்ள வராமல் இருந்தால்.) மது பர்க்கம் என்பது தேனுடன் பாலோ தயிரோ சேர்த்தது. எதிர் கொண்டு அழைக்கிறதால சூர்யனும், நல்ல வார்த்தைகளால ஸரஸ்வதியும், நல்வரவு சொல்கிறதால் அக்னியும், ஆசனம் கொடுப்பதால இந்திரனும், கால்களை அலம்புவதால பித்ருக்களும், உணவால பிரஜாபதியும், படுக்கை தருவதால ப்ரம்மா விஷ்ணு மஹேஸ்வரர்களும் ப்ரீதி அடைகிறங்களாம். இதையே உன் வசதிக்கு தகுந்தபடி பண்ணு; பத்னி மக்களுக்கு குறைவானாலும் பரவாயில்லை; அதிதிகளுக்கும், வீட்டு வேலைகாரர்களுக்கும் கொடுக்காம இருக்காதே என்கி றாங்க. உணவிட முடியலையா தண்ணீர் கொடு; படுக்கை இல்லையா, படுக்க இடம் கொடு போதும்; இப்படி வசதி இல்லாதவங்களுக்கும் சொல்லி இருக்கு. யார் அதிதி பூஜை செய்கிறார்களோ அவர்கள் அடையும் லோகங்களை வேதம் படித்தவன், யாகங்கள் செய்பவன், தபஸ் செய்பவன் கூட அடைவதில்லை ன்னு சாதாதபர் சொல்கிறார். மாலை வைச்வதேவம் போது வராவிட்டாலும் அப்புறமும் வந்தால் அவன் அதிதியே. இவன் சூர்யோடன் எனப்படுவான். இவனை நிச்சயமா மறுக்கக்கூடாது. பாவம் அவன் ராத்திரி வேளையில் எங்கே போவான்? அப்படி செய்தால் பகல் அதிதியை மறுப்பவன் அடைகிற பாவத்தை விட 8 மடங்கு பாபம் சேரும். அதே கிராமத்தில் வசிப்பவனாகவோ ஒரே நபர் இரண்டாவது நாள் வந்தாலோ அதிதி ஆக மாட்டார். ஒரே கிராமத்தில் இருந்து கொண்டு அதிதி போல வேஷம் போடுபவனை நிந்திக்கிறது சாஸ்திரம். அதே போல குலம், கோத்திரம் எல்லாம் சொல்லி அதனால சாப்பாடு போடு என்று கேட்பவன் வாந்தாசீ - வாந்தி எடுத்ததை புசிப்பவன்- ஆகிறான் என்கிறது. அடுத்த ஜன்மத்தில் அன்னமிட்டவன் வீட்டில் பசுவாக பிறப்பான். யார் அதிதி பூஜை செய்யாமல் மறுக்கிறார்களோ அவர்கள் புண்ணியம் அத்தனையும் ஆசையுடன் வந்த அதிதி கொண்டு போகிறான். வந்தவன் பாபங்கள் அனைத்தும் மறுத்தவனுக்கு சேருகிறது. அவன் வீட்டில் பித்ருக்கள் பதினைந்து வருஷங்கள் வர மாட்டார்கள். அவன் என்ன யாகங்கள் செய்தாலும் நூறு குடங்கள் நெய்யால் ஹோமங்கள் செய்தாலும் பலன் கிடைக்காது. இப்படியாக மனுஷ யக்ஞம் பற்றி சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த காலத்தில் இது சிரம சாத்தியமாக இருந்தாலும் அந்த காலத்தில் எந்த மாதிரி வேல்யூஸ் நம் முன்னோர்கள் வைத்து இருந்தார்கள் என்பது சிந்தனை செய்ய வேண்டியது.

Wednesday, June 25, 2008

அதிதிஅடுத்து மனுஷ்யயக்ஞம். அதாவது மனிதர்களுக்கு உணவளிக்கிறது. யாரும் வராங்களான்னு பால் கறக்கிற அவகாசம் வாசல்ல பாக்கணுமாம். அதிதி யாரும் கிடைத்தால் அத்ருஷ்டம். இல்லையானா இன்னைக்கு பாக்கியம் இல்லையேன்னு வருந்திவிட்டு சாப்பிட போகலாம்.

அந்த காலத்தில மக்கள் என்ன மாதிரி மனசோட இருந்திருக்காங்கன்னு தெரிய வரப்ப ஆச்சரியமா இருக்கு.

அதிதி என்பது யாருன்னா "அலோ! உங்க வீட்ல இன்னிக்கு சாப்பிட வரேன். உருளை கிழங்கு பொடிமாஸ் பண்ணி வைங்க" ன்னு சொல்லிட்டு வரவர் இல்ல. நெடும் தூரம் நடந்து களைத்தவன், அப்படின்னு ஆரம்பிச்சு ஒரு பட்டியலே இருக்குங்க. சுருக்கமா சொன்னா முன்ன பின்ன தெரியாத தகுதியான நபருக்கு உணவிடணும். சாப்பாட்டை பத்தி பிரச்சினையே இல்லைங்கிறது போது பல சமூக பிரச்சினைகள் வராதே.

இன்ன ஜாதியார்தான் அதிதி என்றும் இல்லை. வீட்டு ஆசார அனுஷ்டானங்களை ஒட்டி இலையை வேறு இடத்துல போட்டாலும் போடலாம், போடாம இருக்கக்கூடாது.
அந்தணர்களாக இருந்தா அதிதி பூஜையும் செய்வது உண்டு.

யதிகள் (சன்னியாசிகள்), பிரம்மசாரிகள், பிரவாசிகள் (யாத்திரையில் இருப்பவர்), தரித்திரமாக இருக்கிறார்களோ அவர்கள், இவர்கள் எல்லாம் பிக்ஷை பெற தகுதி உள்ளவர்கள். (அக்னியை பயன்படுத்தக்கூடாத) சன்னியாசிகளுக்கும், பிரம்மசாரிகளுக்கும் அன்னமாகவும், கிருஹஸ்தர்களுக்கு அரிசியாகவும் பிக்ஷை இடவேண்டும்.

அதிதிகள், வீட்டு பெரியவர்கள், சிறுவர்கள், சுவாசினி எனப்படும் திருமணமான பேரிளம் பெண்கள்.கர்ப்பிணிகள்.உடல்நிலை சரியில்லாதவர்கள், வீட்டு வேலைகாரர்கள் இவர்களுக்கு எல்லாம் உணவு போட்டு விட்டுதான் வீட்டு யஜமானன் சாப்பிடணும்.

Tuesday, June 24, 2008

விஷ் லிஸ்ட்

இப்படி ஒரு மொக்கை போடணும்னு ரொம்ப நாளா நினைச்சுகிட்டு இருந்தேன். இன்னிக்கி நேரம் இன்மையால் பதிவு எழுத முடியலை. அதனால இந்த மொக்கை.

அதாவது ஆன்மீகம் என்கிறது ரொம்பவே பெரிய சப்ஜெக்ட் . இதுல அடிப்படையான விஷயங்கள் மட்டுமே பாத்துகிட்டு போறோம். பல விஷயங்களை எவ்வளவு தூரம் சொல்கிறது என்பதுல அடிக்கடி தயக்கம் வருது.

அதனால என்ன யோசனை செஞ்சேன்னா இதை பத்தி கவலை படாம எழுதறது. யாருக்கானா ஒரு விஷயம் பத்தி அதிகம் தெரிஞ்சா நல்லா இருக்கும்ன்னு நினைச்சா இந்த பதிவுல ஒரு பின்னூட்டம் போடலாம். அத அப்புறமா பட்டியல்ல சேத்துடுவேன். அந்த விஷயம் பத்தி எப்ப நேரம் இருக்கோ அல்லது அவசியம்ன்னு தோணுகிறதோ அப்ப அதைப்பத்தி பதிவு போடுவேன்.

இதுக்கு லிங்க் அப்புறமா பொதுவாகவே போட்டுடலாம்.

பட்டியல்ல முதல்ல அம்பி முன்னாலேயே கேட்ட ...

. நாதோபாசனை

௨.
அதிதிகளுக்கு எப்படி உணவு பறிமாற வேணும்?

அப்புறம் மௌலி ஏதோ கேட்ட நினைவு. நீங்களே சொல்லறீங்களா, இல்லை தேடிப்பாக்கணுமா, மௌலி?

Monday, June 23, 2008

5யக்ஞங்கள்அப்புறம் மதியம் வீட்டுக்கு வந்து குளிக்க வேண்டும். அந்தணர்களுக்கு மதியம் சூர்ய உபாசனை உண்டு. (மாத்யான்ஹிகம்).

காலை பிரம்ம யக்ஞம் செய்யவில்லையானால் இப்போது செய்யணும்.

பிறகு தேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் செய்யனும். அதாவது தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் முன்னோர்களுக்கும் நீரால் அஞ்சலி கொடுத்தல். நீரை பூமியில்தான் வார்க்கணும். அப்படி ஒரு வேளை சந்தர்ப்பம் இல்லையானால் ஒரு பாத்திரத்தில் கொடுத்துவிட்டு பின்னால் பூமியில் கொட்டிவிடலாம்.

இதுவரை பூஜை செய்ய விட்டுபோனால் இப்போது செய்யலாம்.

அடுத்து பஞ்ச மஹா யக்ஞம் என்கிற கர்மாக்களை செய்யணும்.

பித்ருக்களுக்கு, தேவர்களுக்கு, மனிதர்களுக்கு, புழுக்களுக்கு என்று பலவற்றுக்கும் அன்னமிடுதல். அந்தணர்களுக்கு வைச்வதேவம் என்கிற கர்மாவும் உண்டு. (இதை செய்தாலே பஞ்ச மஹா யக்ஞம் ஆகிவிடும் என்று ஒரு கருத்தும், இல்லை அது வேறு என்று ஒரு கருத்தும் இருக்கிறது.)

அக்னியில் ஒரு சமித்தாவது ஹோமம் செய்வது தேவ யக்ஞம்; பித்ருக்களுக்கு உணவளிப்பது பித்ரு யக்ஞம்; பூதங்களுக்கு பலி தருதல் பூத யக்ஞம். மனிதர்களுக்கு உண்விடல் மனுஷ யக்ஞம் என்று சுருக்கமாக சொல்லலாம்.

வைச்வதேவம்: அடுப்பு, உலக்கை/உரல், குழவி/அம்மிக்கல், நீர் பாத்திரம், முறம் மாதிரி சில இடங்கள்ல ஜீவ ஹிம்சை ஏற்படும். (இந்த காலத்துல காஸ்/ எலக்ட்ரிகல் ஸ்டவ், கிரைண்டர், மிக்ஸி, வாட்டர் ப்யூரிபையர் ன்னு சொல்லனுமோ?) இதெல்லாம் பயன்படுத்தாம இருக்கவும் முடியாது. இதுக்கெல்லாம் பிராயச்சித்தமா இந்த கர்மா. சில தேவதைகளை உத்தேசிச்சு அன்னம் இடுவாங்க.

அடுத்து பூத யக்ஞம். பலி இடுதல். நம்ம வீட்டை சுத்தி சில பூதங்கள் இருக்கும். பயப்பட வேண்டாம். அவை அனேகமா நல்லவைதான். மனித உடம்பு அல்லாத உடம்பில இருக்கிறதால பூதம்ன்னு சொல்றோம்.

இந்த கர்மா அவரவர் குல ஆசாரப்படியோ அல்லது அவரவர் சாகையில் எப்படி சொல்லி இருக்கோ அப்படி செய்யணும். என்னா அதுல நிறையவே வகைகள் இருக்கு. நீர் தேவதைகள், ஔஷதி தேவதைகள், வீடு, வீட்டு தேவதைகள், வாஸ்து தேவதைகள், இந்திரன், இந்திர புருஷர்கள், யமன், யம புருஷர்கள், வருணன், வருண புருஷர்கள், ஸோமன், ஸோம புருஷர்கள், ப்ரம்மா, ப்ரம்ம புருஷர்கள், விச்வே தேவதைகள், எல்லா பூத கணங்களும், திவா (நான் இல்லைங்க!) அதாவது பகலில் சஞ்சரிக்கிறவர்கள், நக்தம் - இரவு சஞ்சரிக்கிறவர்கள், வடக்கே ராக்ஷஸர்கள் தெற்கே பித்ருக்கள்- அவ்ளோதாங்க ஆராதிக்கிற பூதங்கள். இப்படி சௌனகர் சொல்லி இருக்கார் . சும்மா ஒரு சாம்பிளுக்கு எழுதினேன்!
:-))

காக்கைகளுக்கும் நாய்களுக்கும் உணவிடறதும் இதுலே சேத்துக்கலாம்.

அடுத்து மனுஷ்யயக்ஞம்.

Friday, June 20, 2008

வேலைபிறகு ஜீவனத்துக்கு பொருள் சேக்க போகணும்.

அப்பாடா இதுக்கெல்லாம் நேரமே கொடுக்க மாட்டீங்களோன்னு நினைச்சேன்!.....

அப்படி இல்லைங்க சாஸ்திரங்களும் கல்பங்களும் ரொம்பவே ப்ராக்டிகலானவை. நமக்கு ஏற்படக்கூடிய பல கஷ்டங்கள அப்பவே தெரிஞ்சு வழி முறைகள் வகுத்து கொடுத்து இருக்காங்க.

தர்மத்துக்கு விரோதம் இல்லாம பொருள் சம்பாதிக்கணும்.
வாங்கிற காசுக்கு வேலை கட்டாயம் செய்யணும்.
குல ஆசாரப்படி வேலைன்னு முன்னே சொல்லி இருக்காங்க.
பொதுவா கல்வி ஊட்டுதல் பிராமணர்களுக்கு. வியாபாரம் வைசியர்களுக்கு. தோள் வலிமையை ஒட்டிய வேலைகள் க்ஷத்திரியர்களுக்கு. உடல் உழைப்பு வேலை சூத்திரர்களுக்கு. கணக்கில இல்லாத பல வேலைகள் இப்ப வந்துட்டதாலே அங்கே எல்லாம் பூந்து பாக்க வேண்டாம்.

சேர்க்கிற பொருளை நிர்வாகம் செய்யறது தனியா பாக்கலாம். 1/6 ராஜாவுக்கு; அதாவது tax. இப்ப இருக்கிறா இருப்பில யாருக்கும் அரசாங்கங்கள் மேல நம்பிக்கை இல்லை. அதனால எப்படி குறைச்சலா வரி கொடுக்கலாம்ன்னு பாக்கிறோம். 1/6 தர்ம காரியங்களுக்கு. மீதி நமக்கு. இப்படி சேர்க்கிற பொருளை செலவு செய்கிறவனுடைய பொருள் பாபம் இல்லாதது என்கிறாங்க. இவங்ககிட்டே இருந்து யாரும் தைரியமா தானம் வாங்கிக்கலாம்.

இப்படி இல்லாவிட்டா அந்த பொருள் ஏதோ ஒரு வழில தண்டமாதான் போகும். அல்லது கர்ம வினை மூட்டைல சேந்துகிட்டே போகும்.

பொருள் சம்பாதித்துவிட்டு வந்து மதிய உணவுக்கு முன்னால சில கர்மாக்கள்.


Thursday, June 19, 2008

பூஜை தொடர்ச்சி


இதுல இருக்கிற லாஜிக்கை சொல்லுங்களேன்.....

ஆண்கள் பூஜை செய்ய பெண்கள் உதவணும். பூஜை செய்கிற இடத்தை மெழுகி கோலம் போட்டு, பூக்கள் போன்ற தேவையான பொருட்களை கொண்டு வந்து வைத்து நிவேதனம் செய்ய ஏதேனும் தயார் பண்ணி - இப்படி பல வேலைகளை ஒழுங்கா செய்து இருந்தாதான் நிம்மதியா பூஜையை ரங்கமணி செய்யலாம். இல்லாவிட்டால் எங்கே வில்வம் காணோம், நிவேதனம் கொண்டு வர இவ்வளவு நேரமா ன்னு ஆரம்பிச்சு பல பிரச்சினைகள் துவங்கி பூஜை செய்கிற குறிக்கோளே போயிடும். கடேசில கோபம்தான் மிஞ்சும்.
அதனால பூஜைக்கு உதவற தங்கமணிகளுக்கு 50% புண்ணியம்.

மனைவி செய்கிற புண்ணிய காரியத்திலே இந்த மாதிரி பங்கு ஏதும் இல்லாம போகிற வாய்ப்பே அதிகம். அதனால அவங்க புண்ணியம் முழுக்க அவங்களுக்கே.

மனைவி தப்பு பண்ணா சரியா சொல்லிக்கொடுத்து செய்ய வைக்காத தப்பு ரங்கமணிது. அதானால 50% பாபம் ரங்கமணிக்கு.

ரங்கமணி செய்கிற தப்புக்கு தங்கமணி பாவம், என்ன பண்ணுவா? முழு பொறுப்பு ரங்குக்கு. அதனால பாபம் முழுக்க அவனுக்கே!
என்ன தங்கமணிகளே சரிதானே?

பூஜைகள்ல ஆயிரத்து எட்டு விதங்கள் இருக்கிறதால அதுக்குள்ள இப்ப போகலை. அடுத்ததா...

வேத அத்யயனம் செய்தவர்கள் இதற்கு பிறகு வேத பாடங்களை சொல்லணும். அவரவருக்கு கிடைக்கும் அவகாசப்படி ஒரு பாரா முதல் ஒரு அத்தியாயம் வரை சொல்கிறதால ரிஷி கடன் தீரும்.
வேத அத்தியயனம் செய்யாதவர் இறையுணர்வோட பதிகங்கள், பாசுரங்கள், ஸ்லோகங்கள் என்று தெரிஞ்சத சொல்லலாம்.
இதெல்லாமும் எவ்வளவு நேரம்ன்னு வரையரை இல்லை. முடிந்த வரை அதிகமா சொல்ல முயற்சி செய்யனும்.

பிறகு ஜீவனத்துக்கு பொருள் சேக்க போகணும்।

அப்பாடா இதுக்கெல்லாம் நேரமே கொடுக்க மாட்டீங்களோன்னு நினைச்சேன்!

Wednesday, June 18, 2008

பூஜை ஏன் இப்படி?

பூஜையை நம்ப பெரியவங்க வகுத்து வெச்சு இருக்கிறதுலேயும் ஒரு முறை இருக்கு.

ஒரு பெரியவர் - நமக்கு தெரிஞ்சவர் நம்ம வீட்டுக்கு வரார்।
அப்ப என்ன செய்வோம்?
வாங்க வாங்கன்னு கூப்பிடுவோம்।
பழைய வீடுகள்ல உள்ளே அழைச்சு போய் உட்கார வைப்பாங்க।கை கால் கழுவ, குடிக்க தண்ணீர் கொடுப்பாங்க।
நடந்த களைப்பு போக தண்ணீர் குடிச்ச பின்னே குளிக்க ஏற்பாடு। உடம்புக்கு தகுந்தாப்பலே கிணத்து தண்ணி இல்லைனா உடம்பு வலிக்கு இதமா வென்னீர்। அப்புறம் உடம்பு துடைச்சு உடுத்திக்க துணி। பிறகு அவர் மனசுக்கு பிடிச்ச மாதிரி கொஞ்சம் பேசறோம்। அப்புறமா சாப்பாடு। முடிஞ்சு வெத்திலை பாக்கு।சாப்பிட்டதற்கு தக்ஷிணை;। பெரியவராச்சா! நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் வாங்கிக்கிறோம்। அவர் கிளம்ப வண்டி தயார் செய்து கொடுக்கிறோம்।

இதே போல பூஜையை யோசிச்சு பாருங்க.

இறைவனை தியானம் செய்து அழைத்து ஆவாஹனம்ஆசனம் கொடுத்தல்; பாதங்கள்ல நீர் வார்க்கிறது। கைகள்ல நீர் வார்த்தல்। அப்புறம் ஆசமனம்- அதாவது தண்ணீர் கொடுத்தல்। நீராட்டல்; ஆசமனம்; உபவீதம் என்கிற பூணூல் அணிவித்தல்; உடை அணிவித்தல்। நகைகள் பூட்டுதல்। பூக்களால அர்ச்சனை; தூபம் என்கிற வத்தி யால் புகை காட்டுதல்; நெய் விளக்கு காட்டுதல்; செய்து இருக்கிற உணவை நிவேதனம் செய்தல்; வெற்றிலை பாக்கு சமர்ப்பணம்;
சூடம் காட்டுதல்; மந்திரங்களாலும் துதித்தல்; ஸ்வர்ண புஷ்பம் என்று தங்க புஷ்பத்தை சமர்ப்பித்தல்; சுத்தி வந்து நமஸ்காரம்; கண்ணாடி காட்டி, யானை/ ரதம் ஏதாவது ஒண்ணுல ஏத்திவிட்டு பிறகு செய்த பூஜை பலன் எல்லாத்தையும் இறைவனுக்கே சமர்ப்பிக்கிறோம்। இப்படி செய்கிறதை ஷோடோபசார பூஜை என்கிறாங்க.

ஏன் இப்படி எல்லாம் செய்கிறோம்?

இது நமக்காக। பின்னே, எல்லாம் இருக்கிற - எல்லாமாயும் இருக்கிற இறைவனுக்கு நாம் தரக்கூடியது என்ன இருக்கு? அவனுக்கு என்ன வேண்டும்? அவன்கிட்டேதான் எல்லாம் இருக்கே?
அவனுக்கு என்ன வேணும்ன்னு நமக்கு தெரியாது।
அவன் எப்படி இருக்கிறான்னு கூட தெரியாது। நமக்கு புரியணுமேன்னு அவனையும் நம்ம மாதிரி ஒரு உருவம் கொடுத்து வெச்சு இருக்கோம்। நமக்கு என்ன எல்லாம் வேணுமோ அதெல்லாம் அவனுக்கும் வேணும்ன்னு நினைச்சு கொடுக்கிறோம்।
இதெல்லாம் நம்மோட லிமிடேஷன்। அவனோடது இல்லை.

Tuesday, June 17, 2008

தேவ பூஜைஅடுத்து தேவ பூஜை। இறைவனுக்கு நிவேதனம் செய்யாத உணவை சாப்பிடக்கூடாது ன்னு பெரியவங்க சொல்றாங்க. பூஜை நமக்கு கிடைக்கிற நேரத்தை பொறுத்து சின்னதாவோ விஸ்தாரமாவோ வச்சுக்கலாம். இது கல்பங்கள் ன்னு சொல்கிற வழிமுறை புத்தகங்கள்ல சொன்னபடி இருக்குமானா நல்லது। இல்லை நம் வசதி போல அமைச்சுக்கலாம். பக்தி பத்தி பார்க்கிறப்ப வைதேய பக்தி, கிரம பக்தின்னு பாத்தமில்லை? அது போல.

நேரமே இல்லைங்கிறவங்க கூட சாமி படத்துகிட்ட ஒரு விளக்கு ஏத்தி வெச்சு, ரெண்டு வத்தி ஏத்தி புகை காட்டி, மூணு பூ வெச்சு, நாலு உலர்ந்த திராட்சை, கற்கண்டு நிவேதனம் பண்ணி கீழே விழுந்து வணங்கிட்டு போய்கிட்டே இருக்கலாம். இதுக்கெல்லாம் அஞ்சு நிமிஷம் மேல ஆகுமா? மனசு வரணும். :-))


சீரியஸா பூஜை செய்ய நினக்கிறவங்க எவ்வளவு நேரம் கிடைக்குமோ அப்படி பூஜையை அமைச்சுக்கலாம். பஞ்சாதயனப்பூஜையே 2 மணி செய்யலாம்; 15 நிமிஷத்துலேயும் செய்யலாம். எல்லாம் அவரவர் மனசை பொறுத்தது.

எதானாலும் நல்லா யோசிச்சுட்டே இறங்குங்க. பூஜை இறைவனோட சேர்க்கிறத்துக்கு பதிலா கோபம் வரும் சுமையா மாறிடக்கூடாது. அவசரமா அவசரமா பூஜை செய்கிறதுல அர்த்தமே இல்லை.

இங்க பெண்கள்கிட்ட தாங்க்ஸ் வாங்கிகிட்டு ரங்கமணிகள் வயத்தில கொஞ்சம் புளியை கரைக்க போறேன்.

வீட்டு பூஜைய யார் செய்யணும்?
ஆண்கள்தான்.

ஆண்கள் செய்கிற எல்லா கர்மாக்களோட பலனும் மொத்த குடும்பத்துக்கே போய் சேரும். செய்கிறவருக்கு 50% பலன்தான். கர்மாவுக்கு உதவுகிறதாலேயே மீதி மனைவிக்கு போய் சேரும். இந்த விதி ஆண்கள் செய்கிற புண்ணிய காரியங்கள் அத்தனைக்கும் பொருந்தும். அப்ப பாவ காரியங்கள் பண்ணா அதே மாதிரிதானே? அப்படின்னு கேட்டா அப்படி இல்லே. ஆண்கள் செய்கிற பாவ காரியங்கள் பலன் முழுக்க அவருக்கேதான். இது அக்கிரமமா தோணுதா? கொஞ்சம் இருங்க.

சரி பெண்கள் செய்யற பாவ புண்ணியங்கள் பலன் யாருக்கு? புண்ணியங்கள் பலன் அத்தனையும் அவங்களுக்கேதான். போனா போகுது. பாவமும் அப்படித்தானே? இல்லியே! 50% பாபம் அவங்களோட கணவனுக்குதான். எங்க போறீங்க? கொடி தூக்கவா? இதுல இருக்கிற லாஜிக்கை சொல்லுங்களேன்.

Monday, June 16, 2008

அக்னி உபாசனை.அடுத்து அக்னி உபாசனை. சூரியன் மறைமுகமா உதவறான். அக்னியோட உதவி நேரடியானது.

பல விதமா இருக்கிற அக்னி உபாசனைல எல்லா கிருஹஸ்தர்களும் செய்ய வேண்டியது ஔபாசனம்.

திருமணத்துக்கு பின் ஒரு கர்மா மூலம் அக்னியை எற்படுத்திக்கொண்டு, அந்த அக்னியை அணையாமல் பாதுகாத்து வைத்துக்கொண்டு தினமும் காலையும் மாலையும் கொஞ்சம் களஞ்சு உலர்த்தின அரிசியால் ரெண்டு ஹோமம். காலை சூரியனையும் மாலை அக்னியையும் உத்தேசிச்சு. அதிகபட்சம் 15 நிமிஷம் ஆகும். என்ன, வீட்டு சொந்தக்காரர் ஒத்துக்கணும். வீட்ட காலி பண்ணா வெள்ளை அடிச்சு தரேன்னு சொல்லிப்பாக்கலாம்.

புகை வருமே, அது உடம்புக்கு கெடுதல்ன்னு நினைக்க வேண்டாம். சாஸ்திரங்கள் எது நல்லது செய்யும் எது கெட்டது செய்யும்னு தெளிவாகலே சொல்லி இருக்கு. சொல்லப்பட்ட பொருட்களை கொண்டு செய்கிற ஹோமங்களால உண்டாகிற புகை நல்லதே செய்யும்.

அந்தணர்களுக்கு வேத மந்திரங்களோட ஹோமம் என்றால் இதே மற்றவங்களுக்கும் உண்டு. வேதம் கற்றுக்கொள்ளாததால நமஹ என்றே ஹோமம்.
சாதாரணமாக பெண்களுக்கு ஹோமங்கள் செய்ய அதிகாரம் இல்லைன்னு சொல்கிறாங்க இல்லியா?

ஆனால் ஔபாஸனம் செய்ய அதிகாரம் இருக்கு. கணவன் வீட்டிலேயே இல்லைனாலும் இவங்களே 7 வேளை வரை மந்திரமில்லாமல் செய்யலாம்.
அக்னிக்கு முதல் உரிமை பெண்களுக்குதான். ஐயா வீட்டிலேயே 3 நாள் இல்லைனாலும் அக்னி இருப்பார். ஆனால் இல்லத்தரசி ஊரை விட்டோ, ஆற்றை தாண்டியோ போய் விட்டால் அக்னி இருக்க மாட்டேன்னு கிளம்பிடுவார். அப்புறம் திருப்பி உத்பத்தி செய்யணும்.

பெண்களை நசுக்கறாங்க ன்னு ஒரு புகார் இருக்கு இல்லையா? அதை விட ஏமாத்து வேலை இருக்க முடியாது. ரங்கமணிகளுக்கு பத்னி இல்லாமல் ஒரு சிலது தவிர வேறு எந்த கர்மாவும் செய்ய அதிகாரம் இல்லை.

ஒரு சிறுவன். குருகுலத்துல சேர்ந்தான். குரு இவனை தன்னோட அக்னிகளை பாதுகாக்க சொல்லி வேலை கொடுத்தார். இவனும் அதை விடாம குரு பக்தியோட செய்து வந்தான். மத்தவங்களுக்கு பாடம் எடுத்தாரே ஒழிய இவனுக்கு பாடமே எடுக்கலை. சிறுவனும் அதைப்பத்தி யோசனை எல்லாம் செய்யாம அக்னிகளை பாதுகாக்கிறதுலேயே இருந்துட்டான். சில பல வருஷங்கள் ஆச்சு. கூட சேர்ந்த மத்த பசங்க வேத பாடம் முடிச்சு போயாச்சு. இவன் இன்னும் அதே காரியம் செய்யறான்.

ஒரு நாள் குரு வெளியே போயிருந்த போது சிறுவன் வழக்கம் போல அக்னிகளை பாதுகாத்து வெச்சுட்டு அக்னிசாலையை விட்டு வெளியே போனான். அப்ப அக்னிகள் மூணும் ஒண்ணுக்கொண்ணு பேசிக்கிட்டாங்க. "இந்த பையன் பாவம், இன்னும் இங்கேயே இருக்கான். இவளவு நாளா நம்மை பாதுகாத்து பணிவிடை செஞ்சான். நாம என்ன செய்யலாம்?” அவங்களுக்குள்ளே பேசி ஒரு முடிவுக்கு வந்தாங்க. பையனை கூப்பிட்டாங்க. அவனும் பவ்யமா வந்தான். சும்மா அப்படியே பையனுக்கு வேதம் போதிச்சு பிரம்ம வித்யை வர அனுகிரஹம் செஞ்சிட்டாங்க. பூரணமான வேத அறிவு பையனுக்கு அப்படியே வந்து சேர்ந்தது.

வெளியே போன குரு திரும்பி வந்தார். பையனோட முகத்தில பிரம்ஹ தேஜஸை பாத்த உடனேயே அவருக்கு ஏதோ புரிஞ்சது. பையனை "என்னப்பா ஆச்சு நான் இல்லாதப்ப" ன்னு கேட்டார். அவன் அடக்கமா, “ தெரியலை குருவே, அக்னிகள் தமக்குள்ளே ஏதோ பேசிக்கிட்டாங்க" ன்னு பதில் சொன்னான்.

அக்னி உபாசனையால பிரம்ஹ வித்யை கிடைச்சிட்டதுன்னு குருவும் உணர்ந்துகிட்டு அவனை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினார்.

Friday, June 13, 2008

சூரிய உபாசனைகுளித்த பின்னே சூரிய உபாசனை। இந்த உலகத்துக்கே சக்தி தரது சூரியன்தான்। அதன் ஒளிலதான் தாவரங்கள் உணவு தயாரிக்குது। இதை சாப்பிட்டு உயிர் வாழ்கிற ஜீவன்கள் அவற்றை உணவா கொள்கிற ஜீவன்கள் இப்படின்னு பாக்கப்போனா எல்லாருமே உயிர் வாழ்கிறது சூரியனாலதான். அந்தணர்கள் ஒரு சந்தியாவந்தனம் என்கிற கடனாகவே செய்தாலும் எல்லாருமே தண்ணீரை சூரியனை நோக்கி வீசி எறிந்து வணங்கி வழிபடலாம்.

பெண்களுக்காக சூரிய உபாசனை திடீர்னு சமீபத்தில கிடச்சது। பொதுவா இருக்கிற அதை இதோ பிடிங்க.

ஒரு முறை ஹிருதயம் வரை செல்லும்படி உள்ளங்கையில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து குடித்து விட்டு..

கிழக்கு நோக்கி நிற்கவும்.

பின் வரும் ஸ்லோகங்களை சொல்லி இதமர்க்யம் என்று வரும்பொழுது அர்க்கியம் கொடுப்பது. அதாவது தண்ணீரை இரண்டு கைகளாலும் தாங்கி ஸ்லோகம் சொல்லி முடித்தபின்:
1) நதி முதலிய நீர்நிலை எதிரே இருந்தால் அதில் எறிய வேண்டும்.
2) அல்லது அதற்கு வசதிப்படாவிட்டால், ஒரு சுத்தமான இடத்திலோ பாத்திரத்திலோ விரல்கள் நுனி வழியாக கீழே விட வேண்டும்.

க3ணாதி4ப ஸுராத்4யக்ஷ சிந்தாமணி க3ணேச்'வர
ஸித்3தி4தா3யக விக்4னேச' க்3ரு'ஹாணார்க்4யம் நமோஸ்துதே.

க3ணபதயே நம: இத3மர்க்4யம்.
க3ணபதயே நம: இத3மர்க்4யம்.
க3ணபதயே நம: இத3மர்க்4யம்.

ரஜ்ஜு-வேத்ர-கசா'பாணே காச்'யபே க3ருடா3க்3ரஜ
அர்க்க-ஸூதாருண-ஸ்வாமின் க்3ரு'ஹாணார்க்4யம் நமோஸ்துதே.

அருணாய நம: இத3மர்க்4யம்.
அருணாய நம: இத3மர்க்4யம்.
அருணாய நம: இத3மர்க்4யம்.

ஏஹி ஸூர்ய ஸஹஸ்ராம்சோ' தேஜோராசே' ஜகத்பதே
அனுகம்பய மாம் ப4க்த்யா க்3ரு'ஹாணார்க்4யம் நமோஸ்துதே.

ஸூர்யாய நம: இத3மர்க்4யம்.
ஸூர்யாய நம: இத3மர்க்4யம்.
ஸூர்யாய நம: இத3மர்க்4யம்.

இதன் பிறகு பின் வரும் மந்திரங்களால் பஞ்சாங்க நமஸ்காரம், அதாவது ஸாஷ்டாங்க நமஸ்காரம் போல் உடல் முழுதையும் நிலத்திலிடாமல் மண்டியிட்டு நமஸ்காரம் செய்வது. (பெண்கள் ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாகாது, அது உசிதமாயிராது.)

1) மித்ராய நம: , 2) ரவயே நம:, 3) ஸூர்யாய நம:
4) பா4னவே நம:, 5) க2கா3ய நம:, 6) பூஷ்ணே நம:
7) ஹிரண்யக3ர்பா4ய நம:, 8) மரீசயே நம:, 9) ஆதி3த்யாய நம:
10) ஸவித்ரே நம:, 11) அர்க்காய நம:, 12) பா4ஸ்கராய நம:

பின் பிரார்த்தனை:

காம-க்ரோதா4தி3பி4ர்-மூடா4 பாதகம் நு கரோம்யஹம்
ஸர்வ-பாப-க்ஷயம்' க்ரு'த்வா ரக்ஷ மாம் த்3யுமணே ப்ரபோ4
ஆயுர்-ஆரோக்3யம் ஐச்'வர்யம்' ஜ்ஞானம் வித்தம் ப்ரயச்ச2 மே
ஸ்வர்க3ம் அப்யபவர்க3ஞ்ச ஜக3தீச்'வர பா4ஸ்கர

பின் ஒரு முறை உள்ளங்கையில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து குடிக்க வேண்டும்.

சாராம்சம்: ஹே ஸூர்யனே, என் பாபங்களை விலக்கி ஆயுள், ஆரோக்கியம், நோய் நிவர்த்தி, ஐஸ்வர்யம், அறிவு, மோக்ஷம் இவற்றை அருளுவாயாக.

முக்கிய குறிப்பு: இதை வீட்டுக்கு விலக்காக இருக்கும் 4 நாட்கள் செய்யலாகாது.


கர்மாக்கள் வகைகர்மாக்கள் சிலது தினசரி செய்ய வேண்டியவை. இத நித்திய கர்மாங்கிறாங்க. சிலது அப்பப்ப செய்ய வேண்டியவை. இவை நைமித்திய கர்மாக்கள்। பிறந்த நாள் மண நாள்- ஆமாங்க! மாரியேஜ் அனிவர்சரி வைதிக விசேஷமானது- அப்படி பலதும்। சிலது சில விஷயங்களுக்கு ஆசை பட்டுகிட்டு அதுக்குன்னு செய்கிறது। உதாரணமா நோய் தீரணும் கல்யாணமாகணும் குழந்தை பிறக்கணும் இப்படின்னு சிலது. இதெல்லாம் காம்ய கர்மா.

சொல்லப்போற பல விஷயங்கள் பழக்கம் போயிட்டாலும் ஓரளவு எல்லாத்தையும் சொல்லத்தான் போறேன். செய்யறோமோ இல்லையோ முதல்ல தெரிஞ்சுப்போமே. அப்புறமா தேவையா இல்லையா முடியுமா முடியாதான்னு பாத்துக்கலாம்.
நம்ம பெரியவங்களும் நம்மோட ஒவ்வொரு செயலையுமே இறையுணர்வோட இணைச்சு இருக்காங்க।காலை ஏர்லி மார்ணிங் எய்ட் ஓ க்ளாக் எழுந்துக்கிறதுலிருந்து ஒவ்வொண்ணுமே.

வழக்கம் போல இத படிக்கிறப்ப இதெல்லாம் நம்மால முடியாதுப்பா ன்னு தோணும். நானும் வழக்கமான பதிலை சொல்றேன். முடியாதுன்னு நினைக்காம எவ்வளவு முடியும் னு பாப்போம்.

காலை சூரியன் உதயமாகும் முன்னே வானம் சிவப்பா இருக்கில்லையா. அதுக்கு அருணோதய காலம்னு பேர். அந்த நேரத்துலேயே குளிக்கிறது சிறப்பானது. ஆமாம் குளிக்கிறது கூட ஒரு கர்மாதான். புனிதமான நதிகளிலே தீர்த்தங்களில சில விசேஷமான காலங்களில குளிக்க சங்கல்பமே உண்டு.
புறத்தூய்மை நீரான் அமையும்ன்னு சொல்லி இருக்காங்களே.


Thursday, June 12, 2008

३ கடன்கள்மேலே சொன்ன அத்தனையும் பண்பு பதிவுகள் ஏற்பட வாழ்நாள்ல ஒத்தர் செய்ய வேண்டிய கர்மாக்கள். இதெல்லாம் செய்தா என்ன கிடைக்கும்? அந்த அந்த கர்மாக்களுக்கு பலனா சொல்லி இருக்கிறது கிடைக்கும் என்றலும் நாம் முக்கியமா பார்க்க வேண்டியது ஆத்ம குணங்கள் அதாவது பண்புகள் வரும் என்கிறதுதான். அதனாலதான் அதுக்கெல்லாம் சம்ஸ்காரம்ன்னு பேர் வெச்சு இருக்காங்க.

நம்ம எல்லாருமே மூணு கடன்களோட பிறக்கிறோம். தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன். தேவ கடன் எப்படி வந்தது? தேவர்கள் இயற்கை சக்திகள் மேல இருக்கிற ஆளுமையாலே நமக்கு மழை பெய்ய வைச்சு நாம உயிர் வாழ உதவுகிறதால. இதை தேவர்களை ஆராதிப்பதால தீர்க்கணும்.

ரிஷிகள் நமக்கு வேத மந்திரங்களை கண்டு கொடுத்து உதவினதால அவங்களுக்கு கடன் பட்டு இருக்கோம். இத வேதங்களை அழிஞ்சு போகாம காப்பாத்தறதால தீர்க்கலாம். வேதம் கத்துக்க அதிகாரம் /கடமை இருக்கிறவங்க அதை செய்கிறதாலேயும் மற்றவங்களுக்கு சொல்லி கொடுக்கிறதாலேயும் தீர்க்கணும். மற்றவர்கள் இந்த முயற்சிகளுக்கு உடல் உழைப்பு பொருள் உதவி செய்யணும்.

மூன்றாவதா பலரும் சரியா செய்யாம அவஸ்தை பட்டுகிட்டு இருக்கிற நீத்தார் சடங்குகள்.
இந்த மூணையும் செய்கிற விதங்கள்ல வேறுபாடு இருந்தாலும் எல்லாருமே செய்ய வேண்டியவைதான்.


Wednesday, June 11, 2008

மாற்றங்கள்ஆக மொத்தம் 40......

இப்ப நமக்கே தெரியும் இதெல்லாம் என்ன நிலைலே இருக்குன்னு। முதலாவது சும்மா குஷிக்காக ஜாம் ஜாம்னு நடக்குது. கடைசி வேற வழியில்லாம ஏதோ நடக்குது. விவாஹம் எப்படியோ நடக்குது. பலர் ஜாத கர்மா முதல் எல்லாத்தையும் கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்ன செய்கிறங்க. :-(

வாழ்க்கையில ஏராளமான விஷயங்கள் கெட்டுப்போய்கிட்டே இருக்கிறது மாதிரி பலதும் காணாமப்போச்சு। சாஸ்திரோக்த (சாஸ்திர உக்த = சாஸ்திரங்கள் சொன்ன) படி எவ்வளவு நடக்கிறது என்று பாக்கவே பயமாயிருக்கு.

க்ஷத்திரியர்கள் சண்டைகள் போட்டு அதிலேயே காலம் கழிந்து ஆசாரங்களை விட்டாங்க. வைச்யர்கள் திரைக்கடலோடியும் திரவியம் தேடு ன்னு ஓடிஒடியே ஆசாரங்களை விட்டாங்க. சூத்திரர்கள் விதிக்கப்பட்ட பல ஆசாரங்களை tradition என்பதாலேயே பின்பற்றி வந்தவங்க. அவங்களும் மாறிகிட்டே இருக்காங்க.

அந்தணர்களை பத்தி பெரிய யோசனையா இருக்கு। வேதங்களும் சாஸ்திரங்களும் சொல்கிற படி பாத்தா எவ்வளவு பேர் க்வாலிஃபை ஆவாங்க என்பது தெரியலை। என்னையும் சேத்துதான் சொல்கிறேன்। ப்ராமணத்துவம் பிறப்பில் மட்டும் இல்லையேப்பா। நடத்தையும்தானே. சொத்து சேத்து வைச்சுக்காதே ன்னு ஆரம்பிச்சு சொல்ல ஆரம்பிச்சா "சரி, நான் ப்ராமணன் இல்லன்னு ஒத்துக்கிறேன். நீங்க உங்க வேலைய பாருங்க. நான் என் வேலையை பாக்கிறேன்!” என்று சொல்லிடுவாங்கன்னு நினைக்கிறேன்.

மாறுதல்தான் வாழ்கையின் இயல்பு என்றாலும் இந்த மாதிரி அடிப்படையானவை மாறி இருக்கக்கூடாது.
அதனால நான் பெரியவனா நீ பெரியவனா என்கிற சர்ச்சை இல்லாம நம்மால எவ்வளவு முடியும்னு பாத்துக்கிட்டு போகலாம்.


Tuesday, June 10, 2008

கர்ம வழி -சம்ஸ்காரங்கள்பக்தி பற்றிய பதிவுகளை இப்ப நிறுத்திக்கறோம். தற்காலிகமாதான். இன்னும் நிறைய விஷயங்கள் பார்க்கலை. அது எல்லாம் அடுத்த சுற்றில பிழைத்திருந்தால் பார்க்கலாம்.

அடுத்த வழியான கர்ம வழியை இப்ப பார்க்கலாம்.
இதில் கொஞ்சம் சரியான புரிதல் வேண்டி இருக்கு.

பக்தியோ எல்லாருக்கும் பொதுவானது. அரசனுக்கு ஒரு பக்தி ஆண்டிக்கு ஒரு பக்தி இல்லை. ஏன்னா பக்திக்கு முக்கியமா வேண்டிய மனசை பகவான் எல்லாருக்குமே கொடுத்து இருக்கான்.

கர்மா அப்படி இல்லை. செயல்கள் முக்கியமானதாலே அதற்கு தேவையான அறிவு, சக்தி, பணம் எல்லாம் பொருத்து, யார் யாருக்கு என்ன என்ன செய்கைகள் ன்னு வரையறுத்து வச்சிட்டாங்க. பெரிய பெரிய வேலைகளா போனபோது இன்னின்னாருக்கு இன்னின்ன வேலைன்னும் வரையறுக்க வேண்டி இருந்தது. இது ஊர் கூடி தேர் இழுக்கிறதுதான். தேர் ஓடி நிலைக்கு வரதுதான் முக்கியம். யார் இழுக்கிறாங்க என்பது இல்லை. அவரவர் உடல், புத்தி, பண பலத்துக்கு ஏற்ப அவரவர் பங்கு நிர்ணயம் செய்தாங்க. இதுவே வர்ணாஸ்ரம தர்மமாக இருக்கு. அந்த அந்த இடங்கள்ல தேவையானதை சுட்டிக்காட்டறேன்.
பாரம்பரியமா கர்மா என்பதை அந்த அந்த வர்ணத்துக்கு உரிய தர்மங்கள் பின்னணிலேயே எடுத்துக்கணும்.

ஹிந்துக்களுக்கு நாற்பது சம்ஸ்காரங்கள்னே விதிச்சாங்க.
(அதென்னப்பா சம்ஸ்காரம்? பண்புப்பதிவு.)
இந்த சம்ஸ்காரத்தோட நிலைமை இப்ப எப்படியிருக்குன்னு பாக்கலாமா?
முதல்ல ஒரு பட்டியல் போடலாம்

கர்பாதானம் - சந்ததி பெற உடல் உறவு.
பும்ஸவனம்
சீமந்தோன்நயனம் என்கிற பிறக்கப்போகிற குழந்தைக்கான கர்மா
ஜாதகர்மா என்கிற குழந்தைக்கான கர்மா
நாமகரணம் - பெயர் வைக்கிறது
அன்ன ப்ராசனம் - முதல் முதல் அன்னம் ஊட்டுகிறது
சௌளம் என்கிற குடுமி வைக்கிற கர்மா
உபநயனம் என்கிற வேத அத்தியயனம் செய்ய தகுதி பெறும் கர்மா

ப்ராஜாபத்ய விரதம்
ஸௌம்ய விரதம்
ஆக்னேய விரதம்
வைச்வதேவ விரதம்
அவை எல்லாம் அந்த அந்த வேத காண்டங்களை அத்தியயனம் செய்ய தகுதி வளத்துக்கிற கர்மாக்கள்.

ஸமாவர்தனம் பிரம்சர்ய ஆசிரமத்தை விடுகிற கர்மா
விவாஹம் அதாங்க "கல்யாணம்"
தேவ யக்ஞம்
பித்ரு யக்ஞம்
மனுஷ்ய யக்ஞம்
பூத யக்ஞம்
ப்ரம்ஹ யக்ஞம்.
{இதெல்லாம் என்னன்னு அப்புறம் பாக்கலாம்।}
உணவு சமைத்து செய்கிற பாக யக்ஞங்கள் ஏழு
ஹவிஸ் என்கிற அவி கொடுத்து செய்கிற யாகங்கள் மொத்தமாக ஏழு
சோம ரஸத்தை கொடுத்து செய்கிற ஸோம யாகங்கள் ஏழு.
இறந்த பின் பண்ணுகிற அந்த்யேஷ்டி என்கிற இறுதிக்கடன்
ஆக மொத்தம் 40।

யப்பாடா! பட்டியல் போடவே இந்த பதிவு சரியா போச்சு!


Monday, June 9, 2008

கர்மகாண்டம்அனைவருக்கும் வணக்கம்.
திரும்பி வந்தாச்சு!
இப்பதான் புதுவை நண்பர் பேசிட்டு போனை வைத்தார்.
அது எப்படி மழை பெய்யும்ன்னு சொன்னேன்னு அவருக்கு ஆச்சரியம்!

ஆறாம் தேதி வேத பாடசாலை துவக்கம் நல்ல படியா போச்சு. ஆறு குழந்தைகள் சேர்ந்து இருக்கிறாங்க. இப்பதான் அழுகை எல்லாம் நின்னு சரியாகி இருக்கு. எல்லாமே அம்மவை விட்டு விட்டு இருக்கோமேன்னுதான்!
கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம் மேதா தக்ஷிணா மூர்த்தி ஹோமம் எல்லாம் பண்ணோம்.

நேத்து கோடி காயத்திரி ஜபம் செய்த நிறைவா ஆயிரம் ஆவர்த்தி காயத்திரி ஹோமம். ப்ரோக்கிராம் என்னன்னா சங்கிராந்தி ஆரம்பித்து தனி சங்கல்பத்தோட காயத்திரி ஜபம் செய்யணும். தனியா குறிச்சு வைக்கணும். ஆளுக்கு இலட்சம் இலக்கு. ஜப காலம் 4 மாசம். முடிந்த பிறகு ஹோமம்.
பூர்வாங்கம் எல்லாம் முடித்து ஹோமம் ஆரம்பிக்க மணி காலை 9.
ஹோமம் முடிக்கிறப்ப பண்ணிரண்டரை.
பிறகு வைத்து இருந்த காயத்திரி படத்திற்கு பூஜை.
வந்து இருந்த எல்லாருக்கும் சாப்பாடு.
எல்லாம் ஏறக்கட்டி வீட்டுக்கு வர மணி 4.

முன்னிரவில் மேகங்கள் கூடி மழை பெய்ய ஆரம்பித்தது. பலத்த மழை சுமார் அரை மணி.

இந்த ஹோமம் நடக்கிறப்ப பாக்க வந்த நண்பர் கேட்டததைதான் மேலே சொன்னேன். இப்பதான் அவர் திருப்பி போன் பண்ணி கடலூர்ல பெஞ்ச மழை 4 செ.மீ ன்னு வானிலை இலாக்காவை கேட்டு தெரிஞ்சுகிட்டேன்னார்!

நாம் செய்ய வேண்டிய கர்மாக்களை செய்ய நமக்கு பலன் கிடைக்கும். வேற என்ன?
இப்படியாக கர்ம காண்டத்தை இன்னிக்கு துவக்கறோம்.


Tuesday, June 3, 2008

மன்னிப்பு

இந்த வாரம் வேலை அதிகம். நான் வேத பாடம் எடுத்து வரும் இடத்தில் வேத பாடசாலை ஆரம்பிக்கிறது. நாளை குரு வருகிறார். 5 ஆம் தேதி மாணவர்கள் வருவார்கள். 6 ஆம் தேதி ஹோமங்களுடன் பாடங்கள் ஆரம்பம். 8 ஆம் தேதி பத்தாவது வருட காயத்திரி ஜப யக்ஞத்தின் நிறைவாக காயத்திரி ஹோமம்। போகிற போக்கை பாத்தா அடுத்த வாரம்தான் பதிவு போடலாம். அது வரை பொறுக்க வேண்டுகிறேன்.
வணக்கம்!

பக்தி கதைஒரு அழகான பக்தி கதையோட இந்த பக்தி பகுதியை இப்போதைக்கு முடிக்கிறோம்.

கண்ணன் ஆறு வயசு பையன். அவன் அப்பா உயிரோட இல்லை. அம்மா ஏதோ அப்பப்ப கிடைச்ச வேலை செஞ்சு குடும்பத்தை சமாளிக்கிறாங்க. பையனை படிக்க அனுப்பணுமே. பக்கத்து பள்ளினா அடுத்த ஊர்தான் போகனும். அதுக்கு காட்டுப்பாதைலதான் போயாகனும். வேற வழி இல்லை. சரி, கஷ்டமோ நஷ்டமோ சேத்துதானே ஆகனும். பையனை பள்ளில சேத்தாச்சு. ஆனா அவனை தினமும் கொண்டு விட்டு அழைச்சு வர முடியுமா? அதுக்கே நேரம் போச்சுனா வேலை எங்க செய்யறது? சாப்பாட்டுக்கு என்ன செய்யறது? நீ நல்ல பையன்தானே? நீயே தனியா போயிட்டு வான்னு அம்மா சொன்னாள். "நீ சொன்னா சரிம்மா" ன்னு குழந்தையும் கிளம்பி போனான். சின்னப் பையன்தானே. காட்டு வழி போனதும் பயமா போச்சு. அழுதான். என்ன பிரயோசனம்? உதவ யாரும் அங்க இல்லை. அழுதுகிட்டே ஓடி போய் சேந்துட்டான். இவன் அழதுகிட்டே வந்ததை பாத்த குரு என்னன்னு விசாரிச்சு சமாதானப் படுத்தினார். அன்னைய பாடம் நடந்தது. சாயந்திரம் "குழந்தை, நாளை துணை இல்லாம வராதே" ன்னு சொல்லி ஒத்தர் துணையோட வீட்டுக்கு அனுப்பினார்.

அடுத்த நாள் குழந்தையை அம்மா பள்ளிக்கு போகச்சொல்ல அவனோ குரு சொன்னதை ஞாபகப்படுத்தினான். "அம்மா அந்த காட்டு வழில போக எனக்கு பயமா இருந்தாலும் நீ சொல்கிறதால போயிடுவேன். ஆனா குரு உத்தரவு போட்டுட்டாரே மீறலாமா?” ன்னு கேட்டான். அம்மாவுக்கு என்ன செய்யறதுன்னு புரியலை. இந்த குழந்தை பாவம் கஷ்டப்பட கூட தயாரா இருக்கான். இவன் படிக்காம இருக்கலாமா? ஆனா யாரை துணையா கூட அனுப்பறது? யாருமே நமக்கு இல்லையே. நமக்குன்னு இருக்கிறவன் பகவான் ஒத்தன்தான். அவனைதான் அனுப்பணும். யோசனை பண்ணிட்டு குழந்தையை பாத்து சொன்னாள். "நான் அம்மா சொல்றேன். நீ பள்ளிக்கூடம் போ. காட்டு வழில பயமா இருந்தா உன் அண்ணாவை கூப்பிடு. அவன் துணை வருவான்.” பையனுக்கு ஒரே சந்தோஷம். "அட! எனக்கு ஒரு அண்ணா இருக்கான்னு தெரியவே தெரியாதே. அவன் பேரு என்ன?”
"அவன் பேர் கோபாலன்.”

சந்தோஷமா கிளம்பினான் பையன். காட்டுப்பாதைல கொஞ்ச தூரம் தைரியமா போனாலும் அப்புறம் பயம் வந்தாச்சு. "அண்ணா! அண்ணா!" ன்னு கூவினான். என்னடான்னு கேட்க யாரும் யாரும் அங்க இல்லை. இவனுக்கோ ரொம்ப பயமா போச்சு "அம்மா சொன்னாளே, நீ இருக்கே நிச்சயமா வருவாய்ன்னு. வரமாட்டியா? என் மேல என்ன கோபம்?" ன்னு புலம்ப ஆரம்பிச்சான். கொஞ்ச நேரத்துலேயே புல்லாங்குழல் சத்தம் கேட்டது. ஒரு இளைஞன் கன்னுக்குட்டி ஒன்னு பின்னால வர வந்து சேந்தான். "மன்னிச்சுக்கப்பா! நான் காட்டுல அந்த பக்கம் இருந்துட்டேன். என்ன வேணும்?" ன்னு கேட்டான். "நான் தினமும் பள்ளிக்கூடம் இந்த வழியா போகணும். நீதான் துணைக்கு வரணும்" னு பையன் சொன்னான். "ஓ! அதுக்கென்ன நிச்சயம் வரேன்" னு இளைஞன் ஒத்துக்கிட்டான்.

அன்னிலிருந்து குழந்தைக்கு ஒரே குஷிதான். தினசரி இரண்டு பேரும் ஆடறதும் பாடறதும் கன்னுக்குட்டயோட கூத்தடிக்கிறதும்.... கோபாலன் குழந்தைக்கு நிறைய விஷயங்கள் கத்துக்கொடுத்தான்.

இப்படியே நாள் ஓட குரு பூர்ணிமா வந்தது. அன்றைக்கு மாணவர்கள் தங்களால முடிந்த தக்ஷிணையை குருவிடம் சமர்ப்பணம் செய்வாங்க.. மத்தவங்க எல்லாம் எங்க அப்பா அத கொடுப்பார் இத கொடுப்பார்னு கதை அளக்க இவனுக்கோ ஒரே வருத்தம். அம்மாகிட்ட கேட்டதுக்கு "ஒண்ணுமே இல்லையேப்பா கொடுக்க" ன்னு சொல்லிட்டாங்க. கவலையோட பள்ளிக்கூடம் போற குழந்தையை கோபாலன் "ஏன்டா வருத்தமா இருக்க?" ன்னு கேட்டான். விஷயம் தெரிஞ்சதும் "கொஞ்சம் இரு" ன்னு சொல்லி கொஞ்ச நேரத்துலேயே திரும்பி வந்தான். ஒரு சின்ன மண் சட்டில ரொம்ப கொஞ்சமா வெண்ணை இருந்தது. இத குருகிட்ட கொடு. அவர் வாங்கிப்பார்னு சொல்லி அனுப்பினான். குழந்தையும் சந்தோஷமா எடுத்துகிட்டு போனான்.

பள்ளிக்கூடத்தில பசங்க வித விதமா பொருட்கள் கொண்டு வந்து குவிச்சாங்க. இவன் வெண்ணை சட்டியை கொடுத்தப்ப சிரிச்சாங்க. குரு அவர்களை அதட்டி சும்மாயிருக்க சொல்லி "குழந்தே! உன் நிலமை எனக்கு தெரியுமே! உனக்கு ஏது இது?"ன்னு கேட்டார் பையன் "என் அண்ணா கொடுக்கச்சொல்லி கொடுத்தான்" னு சொன்னான். "யாரடா இவனுக்கு அண்ணா? யாரும் கிடையாதே!” ன்னு நினச்சுக்கொண்டே குரு சட்டியை வாங்கி தன் மனைவிகிட்ட கொடுத்தார். அவர் மனைவியும் அதை வாங்கி அங்க வந்த தன் குழந்தைக்கு வெண்ணையை கொடுத்தாள். மத்த குழந்தைகள் கைநீட்ட அவளும் கொடுத்துக்கொண்டே இருந்தாள். எல்லா குழந்தைகளுக்கும் தந்த பிறகு எப்படி இன்னும் வெண்ணை இருக்குன்னு சிந்தனை வந்தது. இருந்தது இரண்டு குழந்தைகளுக்கு கூட காணாதே! அவள் ஆச்சரியப்பட்டுகொண்டு இருக்கும்போது பசங்களோ ரொம்ப நல்லா இருக்குன்னு கை நீட்டிக்கிட்டே இருக்காங்க. குரு மனைவிக்கு கொடுத்து மாளலை. வெண்ணையோ குறையலை. இத கேள்விபட்டு வந்த ஜனங்களுக்கும் கொடுத்து இன்னும் யாருமே இல்லைங்கிறப்பதான் அது காலி ஆச்சு. எல்லாருக்கும் இப்ப இது எப்படி நடந்ததுன்னு புரியலை.

பையனை அழச்சுகிட்டு அவன் அம்மாகிட்ட போனாங்க. அவளோ தனக்கு ஒண்ணுமே தெரியாதுங்கிறாங்க. யாரடா அந்த அண்ணன்னு பையனை கேட்டா அம்மா நீதானே காட்டுல மாடு மேச்சிகிட்டு ஒரு அண்ணன் இருக்கிறதா சொன்ன என்கிறான். எல்லாரும் காட்டு வழிக்கு போய் "எங்கே உன் அண்ணனை காட்டு?" ன்னாங்க. பையன் கூப்பிட கூப்பிட யாருமே வரலை. பையன் அழ ஆரம்பிச்சுட்டான். "நான் பொய் சொன்னதா எல்லாரும் சொல்லறாங்களே அதை சரி பண்ண நீ வந்துதான் ஆகனும்" ன்னு அழுதான். அப்ப புல்லாங்குழல் சத்தம் கேட்க குழந்தையும் குதிக்கிறான் "வா! வா! நீ நிச்சயம் வருவாய்ன்னு தெரியும். இதோ இவங்ககிட்டே நீ யாருன்னு சொல்லு" ங்கிறான். ஜனங்களுக்கோ புல்லாங்குழல் ஓசை கேட்டது தவிர ஒன்னும் தெரியலை. "இவன்தான் என் அண்ணன்" ன்னு பையன் கூத்தாட எல்லாருக்கும் அது யார்ன்னு சீக்கிரமே புரிஞ்சு போச்சு.