Pages

Saturday, October 31, 2015

கிறுக்கல்கள்! -52


 தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த ஒருவனைப்பற்றி மடாலயத்தில் பேச்சு எழுந்தது.
யாருமே அவன் செயலை ஆதரிக்கவில்லை ஆனால் சிலர் அவனுக்கு அசாத்திய தைரியம் இருந்திருக்க வேண்டும் என்றனர்.

"தைரியமா?” என்றார் மாஸ்டர்.

"ம்ம்ம் அவன் நம்பியதை செய்ய அவனுக்கு தைரியம் இருந்ததல்லவா?” என்றனர்.

“அது வெறித்தனம். நம்பிக்கை சார்ந்த தைரியம் என்பது இன்னும் ஆழமானது. அது சுய சோதனை செய்து தன் நம்பிக்கை உண்மைக்கு புறம்பாக இருந்தால் தன் பற்றுக்கோள்களை நீக்குது.”
Friday, October 30, 2015

கிறுக்கல்கள்! -51

 
சொற்களின் மகிமை பற்றி மாஸ்டர் சொல்லிக்க்கொண்டு இருந்த போது பின்னாலிருந்து ஒருவர் கூவினார்.

நீங்க சொல்லறது முட்டாள்தனமா இருக்கு. நான் கடவுள் கடவுள் ன்னு சொல்லிண்டே இருந்தா புனிதமா ஆகிடுவேனா? இல்லை நான் பாபம் பாபம் பாபம் ன்னு சொல்லிகிட்டே இருந்தா கெட்டவனா ஆகிடுவேனா?”

மாஸ்டர் சொன்னார் "நாயின் மகனே! உக்காரு!”

கூவினவருக்கு பெரும் அதிர்ச்சி! சற்று நேரம் அவரால் பேசவே முடியவில்லை. பின் மாஸ்டர் மீது சர மாரியாக வசை பொழிந்தார்.
மாஸ்டர் இடை மறித்து "மன்னிக்கணும். நீங்க பெரியவர். நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்டுக்கறேன்!” என்றார்.
உடனே அந்த ஆசாமி தணிந்துவிட்டார்.

மாஸ்டர் சிரித்துக்கொண்டே சொன்னார். இதோ உங்க சந்தேகத்துக்கான விடை. ஒரு சின்ன வாக்கியம் உங்களை பெரும் கோபத்தில் தள்ள முடிந்தது. ஓரிரு சின்ன வாக்கியங்கள் உங்களை சமாதானப்படுத்த முடிந்தது!

Thursday, October 29, 2015

கிறுக்கல்கள்! -50

 

எதைப்பற்றியாவது மாஸ்டர் அதிகம் பேசி இருப்பார் என்றால் அது வார்த்தைகளைப்பற்றி மட்டுமே!

வார்த்தைகளைப்பற்றி ஜாக்கிரதையாக இருங்கள்! கொஞ்சம் அசந்து போனால் அவை தம்முடைய வாழ்க்கையை வாழும்: மினுமினுப்பு காட்டும்; மனோ வசியம் செய்யும்; பயமுறுத்தும். அவை உண்மையில் எதை பிரதிபலிக்கிறதோ அந்த பொருளிலிருந்து உங்களை வேற்றுப்பாதையில் அழைத்துப்போய் விடும்; அவை தாமே உண்மை என்று நம்ப வைத்துவிடும்”

"நீங்கள் பார்க்கும் உலகம் குழந்தைகள் பார்க்கும் ராஜ்யமான உலகம் அல்ல. வார்த்தைகளால் சுக்கு நூறாக்கப்பட்ட உடைசல்கள். ஒவ்வொரு அலையையும் கடலில் இருந்து வேறாக காட்டப்பட்டதைப்போல.

வார்த்தைகளையும் எண்ணங்களையும் அமைதியாக்கி விட்டால் அப்போது ப்ரபஞ்சம் உயிர்த்தெழும். சத்தியமாக; பூரணமான ஒன்றாக.

அப்போது வார்த்தைகளின் உண்மை ஸ்வரூபம் புலப்படும். அவை இசை அல்ல; இசைக்குறியீடுகள். உணவு அல்ல; உணவுப்பட்டியல். பயணத்தின் முடிவல்ல; வழிகாட்டி மரங்கள்!”

Monday, October 26, 2015

கிறுக்கல்கள்! - 49


மாஸ்டரின் பள்ளிகூடத்தில் அவர் கூட படித்த ஒருவர் எப்போதும் மாஸ்டரை துன்புறுத்திக்கொண்டே இருந்தார். இப்போது வெகு காலத்துக்குப்பின் வயதான பிறகு மாஸ்டரின் துறவிக்கூடத்தில் சேர வந்தார். தான் முன்னே பள்ளிப்பருவத்தில் அவரை துன்புறுத்தியதை நினைவில் கொண்டு எப்படி நடத்தப்படுவோமோ என்று தயக்கம் இருந்தது,. மாஸ்டரோ அவரை அன்புடன் வரவேற்றார்.

சில நாட்கள் சென்றன. மாஸ்டரோ தான் துன்புறுத்தப்பட்டதைப்பற்றி ஒரு முறை கூட பேச்சை எடுக்கவில்லை. மிக்க தயக்கத்துடன் ‘நண்பர்’ அது குறித்து பேச்சை துவக்கினார். பள்ளிப்பருவத்தில் நான் உங்களை துன்புறுத்தியது எல்லாம் நினைவில் இல்லையா?”

! அதை எல்லாம் மறந்துவிட்டது மிக நன்றாக நினைவு இருக்கிறது!”

இருவரும் சிரிப்பில் ஆழ்ந்தனர்!

Monday, October 19, 2015

கிறுக்கல்கள்! - 48


பாசம் பார்வையை மாற்றுகிறது என்பார் மாஸ்டர்.
அவரது சீடர்களுக்கு இது குறித்து அருமையான உதாரணம் மாஸ்டர் ஒரு பெண்மணியுடன் உரையாடிய போது கிடைத்தது.

உங்கள் பெண் எப்படி இருக்கிறார்?”

ஆஹா! என் செல்லக்குழந்தை … அவளுடைய கணவன் அவளை அப்படி பார்த்துக்கொள்கிறான். கார் வாங்கி கொடுத்திருக்கிறான். நிறைய நகைகள், உடைகள்… வீடு நிறைய எல்லாவற்றுக்கும் வேலையாட்கள். அவளுக்கு படுக்கையிலேயே காலை உணவை கொண்டு வந்து கொடுக்கிறான். மதியம் வரை அவள் எழுந்திருப்பதில்லை. என்ன ஒரு ஆதர்ச கணவன்!”

ஓஹோ! அப்படியா? ஆமாம் உங்கள் மகன் எப்படி இருக்கிறார்?”

ஹும்! அவனுக்கு என்று வாய்த்து இருக்கிறதே ஒரு மனைவி! என் மகன் அவளுக்கு கார் வாங்கி கொடுத்திருக்கிறான். நிறைய நகைகள், உடைகள்… வீடு நிறைய எல்லாவற்றுக்கும் வேலையாட்கள். ஆனால் மதியம் வரை அவள் எழுந்திருப்பதில்லை. அவனுக்கு காலை உணவைக்கூட கொண்டு வந்து கொடுப்பதில்லை. என்ன ஒரு மோசமான மனைவி!”

Friday, October 16, 2015

கிறுக்கல்கள்! - 47


கவர்னராக வேலை பாத்தவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு மாஸ்டரிடம் வந்தார்

எனக்கு கற்றுக்கொடுங்கள்!”

எதை?”

ஞானத்தை ”

ஆஹா! எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கீறது. ஆனால் அதில் ஒரே ஒரு சிக்கல்...”

என்ன அது”

ஞானத்தை யாராலும் கற்றுக்கொடுக்க முடியாதே!”

அப்ப இங்கே கத்துக்க எனக்கு ஒண்ணுமில்லை!”

ஞானத்தை கத்துக்கலாம். ஆனா கத்துக்கொடுக்க முடியாது!”

Thursday, October 15, 2015

கிறுக்கல்கள்! - 46மாஸ்டர் ஆசிரியர்களுடன் பேசும் போது நீண்ட நேரம் உற்சாகமாக பேசுவார். ஏனெனில் அவரே ஒரு ஆசிரியராக பணியாற்றியவர்தான். அவர் அந்த சமயங்களில் சொல்லுவார்: கல்வி என்பது படிப்பு இல்லை; வாழ்கையை புரிந்து கொள்வது என்பதை ஆசிரியர்கள் அடிக்கடி மறந்து விடுகிறார்கள்!

வழக்கம்போல் ஒரு கதை சொன்னார். ஒரு நாள் வேலையாக போய்க்கொண்டு இருந்தபோது ஒரு சிறுவன் மீன் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்தார்.
ஹாய்! மீன் பிடிக்க இது ரொம்ப நல்ல நாள்!”
ஆமாம்!”
கொஞ்ச நேரம் கழித்து கேட்டார்: “ ஏன் நீ பள்ளிக்கு போகலை?”
ஏன்னா, நீங்க சொன்ன மாதிரி மீன் பிடிக்க இது ரொம்ப நல்ல நாள்!


அப்புறம் அவரோட பெண்ணுக்கு வந்த ரிபோர்ட் கார்ட்: மீனா நல்லாத்தான் படிக்கறா. ஆனா வாழ்கையை சந்தோஷமா வாழ்வதில நேரத்தை வீணாக்காட்டா இன்னும் நிறைய மார்க் வாங்குவா!

Wednesday, October 14, 2015

கிறுக்கல்கள்! - 45


இங்கிதமாக நடந்து கொள்வதைப்பற்றியோ நல்ல பழக்க வழக்கங்களை கொண்டு இருப்பது குறித்தோ மாஸ்டர் மிகவும் குறிப்பாக இருப்பதில்லை. ஆனால் அவர் மற்றவர்களுடன் நடந்து கொள்வதைப்பார்த்தால் அதில் ஒரு மரியாதையும் அழகும் இருக்கும்.

ஒரு இளம் சீடன் மாஸ்டரை இரவு அவரது வீட்டுக்கு காரில் அழைத்துச்சென்றார். வழியில் ஏற்பட்ட பிரச்சினைக்காக போக்குவரத்து காவலரை மோசமாக திட்டினார். பின் மாஸ்டரிடம் சொன்னார், “நான் எப்படி உணர்கிறேன் என்பதை ஒளித்து வைப்பதில்லை; வெளிப்படையாக சொல்லிவிடுவேன். போலியாக பணிவுடன் நடப்பது வெறும் சூடான காத்துதான்!”


மாஸ்டர் சொன்னார்: ”உண்மைதான். அந்த சூடான காத்துதான் இந்த வண்டியின் டயரில் இருக்கிறது; அது கரடு முரடான சாலையில் பயணத்தை எவ்வளவு சுலபமாக்குகிறது பார்!”

Friday, October 9, 2015

கிறுக்கல்கள்! - 44


வெளிநாட்டுப் பயணி கேட்டார்: நான் என் நாட்டுக்குத் திரும்பிவிட்டால் தகுந்த மாஸ்டர் எங்கே கிடைப்பார்?

மாஸ்டர் சொன்னார்: நல்ல மாஸ்டர் இல்லாமல் நீ எப்போதுமே இல்லை!

சீடர் குழம்பினார்.

எல்லாவற்றுக்கும் உன் எதிர்வினையை கவனி! ஒரு பறவை, இலை, கண்ணீர்த்துளி, ஒரு புன்னகை. இப்படி கவனிக்க ஆரம்பித்தால் அவையே உனக்கு மாஸ்டராக மாறும்.

Thursday, October 8, 2015

கிறுக்கல்கள்! -43


பரம சத்தியம் நம் கண் முன்னாலேயே இருக்கிறது; ஆனால் நமக்குத்தான் பார்க்கத்தெரியவில்லை என்பார் மாஸ்டர்.

ஒரு முறை ஒரு மலை மீது ஏறும்போது கூட ஒரு சீடனை அழைத்துச்சென்றார்.

பாதி தூரம் போன பின் சுற்றும் முற்றும் இருந்த புதர்களை பார்த்துவிட்டு சீடன் கேட்டான்: நீங்கள் காட்டுவதாச்சொன்ன அழகான காட்சி எங்கே?

அப்பனே! நீ அதன் மேல்தான் நின்று கொண்டு இருக்கிறாய். மலை உச்சிக்கு போன பிறகு அது உனக்குத்தெரிய வரும்!

Wednesday, October 7, 2015

கிறுக்கல்கள்! - 42


ஒரு சித்திரக்காரருடன் மாஸ்டர் பேசிக்கொண்டு இருந்தார்.


ஒவ்வொரு ஓவியனும் வெற்றி அடைய பல மணி நேரம் கடுமையாக உழைக்க வேண்டும்.
அப்படி செய்கையில் சிலருக்கு அகங்காரம் அகன்று விடுகிறது. அந்த நேரத்தில் ஒரு தலை சிறந்த - மாஸ்டர்பீஸ் - ஓவியம் பிறக்கிறது!

பின்னால் ஒரு சீடன் கேட்டான்: மாஸ்டர் என்பவர் யார்?

யாருக்கு அகங்காரத்தை விட்டுவிட வாய்த்ததோ அவரே மாஸ்டர். அவருடைய வாழ்க்கை ஒரு மாஸ்டர்பீஸ்!

Tuesday, October 6, 2015

கிறுக்கல்கள்! - 41


மாஸ்டர் தெருவில் நடந்து போய்க்கொண்டு இருந்தார். ஒரு வீட்டிலிருந்து ஒரு மனிதன் வெகு வேகமாக வெளியே ஓடி வந்தான். இருவரும் மோதிக்கொண்டனர். கீழே விழுந்து சுதாரித்து மெதுவாக எழுந்தனர். அந்த மனிதன் காச் மூச் என்று கத்தி மாஸ்டரை கன்னா பின்னா என்று திட்ட ஆரம்பித்தான்.

மாஸ்டர் அமைதியாக தலை சாய்த்து வணங்கினார். பின் சொன்னார்:”நண்பா நாம் மோதிக்கொண்டதில்  இருவரில் யார் தவறு செய்தோம் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அதை நிர்ணயிக்க உங்களுடன் வாக்குவாதம் செய்யப்போவதில்லை. ஒரு வேளை நான் தவறு செய்திருந்தால் மன்னித்து விடு. ஒரு வேளை தவறு உனதானால் பரவாயில்லை; மன்னித்துவிட்டேன்!”

புன்னகையுடன் நடக்கலானார்!

Saturday, October 3, 2015

கிறுக்கல்கள்! - 40


மாஸ்டர் ஒரு புதி போட்டார்: ஒரு ஞானி, ஒரு தேர்ந்த கலைஞன் –ஓவியனோ, இசை அமைப்பவனோ= இவர்களுக்குள் என்ன சம்பந்தம்?

எல்லோரும் யோசித்துவிட்டு தோல்வியை ஒப்புக்கொண்டார்கள்.

மாஸ்டர் பதில் சொன்னார்: வெறும் நாக்கில் இருந்தது அருமையான சொற்பொழிவு வருவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்தவர்கள்!

Friday, October 2, 2015

கிறுக்கல்கள்! - 39உங்க ஆன்மீகம் அப்டேட் ஆகணும் என்றார் ஒரு சீடர்.


மாஸ்டர் விழுந்து விழுந்து சிரித்தார். பிறகு ஒரு கதை சொன்னார்.

மருத்துவ கல்லூரி மாணவன் ஒருவன் கடைக்குபோய் அனாடமி புத்தகம் வேண்டும் என்றான். கொடுத்த புத்தகத்தை பார்த்து இது வந்து பத்து வருடம் ஆகிவிட்டது! என்றான். கடைக்காரர் அமைதியாக சொன்னார்: தம்பி, மனுஷ உடம்பில பத்து வருஷத்துல புதுசா ஒரு எலும்பைகூட சேர்க்கலை!"

அது போல மனித இயல்புக்கு பத்தாயிரம் வருஷமா ஒன்னும் சேர்க்கலை!

Thursday, October 1, 2015

கிறுக்கல்கள்! - 38


இங்க வந்து நாலு மாசமாச்சு. இன்னும் நீங்க எனக்கு ஒரு வழிமுறையோ பயிற்சியோ
கத்துக்கொடுக்கலை!

வழிமுறையா? எதுக்கு?

உள்ளே விடுதலை பெற!

மாஸ்டர் இடிஇடி என்று சிரித்தார். “வழிமுறை என்கிற பொறியை தாண்டி உள்ளே விடுதலை பெறனும்ன்னா அதுக்கு ரொம்பவே சாமர்த்தியம் வேணும்!”