Pages

Showing posts with label நெரூர். Show all posts
Showing posts with label நெரூர். Show all posts

Wednesday, December 23, 2009

விசார சங்க்ரஹம் 6




11.சதா சலனத்தையே வடிவாகவுடைய மனத்திற்குச் சொரூபாவநுபவங் கூடுமா?

மனத்திற்குச் சத்துவகுணமே ஸ்வபாவமாகலானும் அது ஆகாசத்தைப் போன்று ஸ்வச்சமாயும் நிர்மலமாயுமிருத்த லானும் மனமென்பது உண்மையில் ஞான சொரூபமே. அத்தகைய ஸ்வபாவ நிலையில் அதற்கு மனமென்னும் பெயருமில்லை. ஒன்றை இன்னொன்றாக அறியும் விபரீத ஞானமே மனமெனப்படுகிறது. ஞான மாத்திரமாக விருந்த சுத்த சத்துவ மனதானது தன் ஞான சொரூபத்தை மறந்த அவித்தையால் தானே தமோ குணவசத்தாய் உலக ரூபமாகப் பரிணமித்து ரஜோ குண வசத்தாய் தேகாதிகள் நானென்றும் உலகம் சத்தியமென்றும் பாவித்து இதன் மூல முண்டாகும் ராக த்வேஷாதிகளால் புண்ணிய பாப கர்மங்களை சம்பாதித்து அவ்வாசனையால் ஜனனமரணங்களை யடையும். அநேக ஜன்மங்களிற் செய்து வந்த நிஷ்காம்ய கர்மங்களால் மலம் (பாபம்) நீங்கின மனமானது சற்குரு மூலமாய் சிரவண மனனங்களியற்றி நெடுங்காலம் ப்ரஹ்ம த்யானமாகிற அதாவது அஹம் ப்ரஹ்மமென்னும் ஆத்மாகார மனோவிருத்தியின் சஹஜ ஸ்திதியைப் பெறுவதற்கான நிதித்தியாசனம் செய்யவே மனதின் தமோகுண ரூபமான உலகாகார பரிணாமமடைதலும் ரஜோ குண ரூபமான அவற்றிலுள்ள சலனமும் நீங்கும். நீங்கவே மனம் சூக்ஷ்மமும் நிச்சலமுமாகும். ஸ்தூலமான (பெரிய) கட்டப்பாரையால் மெல்லிய பட்டு வஸ்திரத்தை இழையிடக் கூடாதது போலவும் காற்றினால் அதிக சலனமாகவுள்ள தீபத்தால் அதி சூக்ஷ்மமான வஸ்துக்களின் லக்ஷணங்களை நிர்ணயிக்கக்கூடாதது போலவும் ஸ்தூலமாகவும் சலனமாகவுமுள்ள ரஜோதமோ குண வசத்தான அசுத்த மனத்தால் மாத்திரம் அதி சூக்ஷ்மமும் நிச்சலமுமான வஸ்துவை அனுபவித்தல் கூடாதே யொழிய முற்கூறியபடி தியானத்தால் சூக்ஷ்மமும் நிச்சலமுமான சுத்த மனத்தில் சொரூபானந்தம் ஆவிர்பவிக்கும். (தோன்றும்). மனமின்றி அனுபவம் கூடாதாகையால் அதி சூக்ஷ்மமான விருத்தியோடுங்கூடிய தெளிந்த மனத்தால் அம்மயமாகவே யிருந்து சொரூபானந்தம் அநுபவித்தல் கூடும்.
அப்போது தான் பிரஹ்ம சொரூபமாயிருப்பது நன்றாய் அனுபவமாகும்.


மனத்திற்குச் சத்துவகுணமே ஸ்வபாவம். அது ஆகாசத்தைப் போல ஸ்வச்சமாயும் நிர்மலமாயும் இருக்கு. மனமென்பது உண்மையில ஞான சொரூபமே. அத்தகைய ஸ்வபாவ நிலையில் அதற்கு மனம் ன்னு பெயருமில்லை. ஒண்ணை இன்னொண்ணா அறிகிற விபரீத ஞானமே மனம் எனப்படுவது. ஞான மாத்திரமாக இருந்த சுத்த சத்துவ மனசு, தன் ஞான சொரூபத்தை அவித்தையால மறந்துடும். தானே தமோ குணவசத்தால உலக ரூபமாகப் பரிணமிக்கும். ரஜோ குண வசத்தால தேகாதிகள் நானென்றும், உலகம் சத்தியமென்றும் பாவிக்கும். இதன் மூலம் உண்டாகும் ராக த்வேஷம் முதலானவைகளால் புண்ணிய, பாப கர்மங்களை சம்பாதிக்கும். அந்த வாசனையால் ஜனன மரணங்களை அடையும். அது சரி, இதிலேந்து எப்படி விடுபடும்?
அநேக ஜன்மங்களில செய்து வந்த நிஷ்காம்ய கர்மங்களால மனசோட அழுக்கு நீங்கும். சற்குரு மூலமாய் சிரவண, மனனங்கள் இயற்றும். நெடுங்காலம் ப்ரஹ்ம த்யானமாகிற அதாவது "நான் ப்ரஹ்மம்" என்னும் ஆத்மாகார மனோவிருத்தியின் இயல்பான ஸ்திதியைப் பெறுவதற்கான நிதித்தியாசனத்தை செய்யும். மனதின் தமோகுண சொரூபம் உலகங்களாக பரிணாமம் அடைவது. அதன் ரஜோ குண ரூபம் அவற்றிலுள்ள சலனம். இவை நிதித்தியாசனம் செய்யவே நீங்கும். மனம் சூக்ஷ்மமாகும்; நிச்சலமுமாகும்.
எல்லாத்துக்கும் பொருத்தம்ன்னு ஒண்ணு இருக்கு இல்லையா? காலிலே குத்தின முள்ளை எடுக்க கட்டப்பாரையால் குத்த மாட்டோம். பெரிய கட்டப்பாரையால் மெல்லிய பட்டு வஸ்திரத்தை இழையிட மாட்டோம். அது போல காற்றினால அதிக சலனமாக இருக்கிற தீபத்தால அதி நுட்பமான பொருட்கள் எப்படி இருக்குன்னு ஆராய மாட்டோம். அதே போல பருமனாகவும் சலனமாகவும் இருக்கிற ரஜோ, தமோ குண வசத்தில விழுந்துவிட்ட அசுத்த மனத்தால் மாத்திரம் அதி சூக்ஷ்மமும் நிச்சலமுமா இருக்கிற வஸ்துவை அனுபவிக்க முடியாது. முன்னே சொன்னபடி தியானத்தால் சூக்ஷ்மமும் நிச்சலமுமான சுத்த மனத்தில் சொரூபானந்தம் தோன்றும். மனமின்றி அனுபவம் எப்படி கூடும்? அதனால அதி சூக்ஷ்மமான விருத்தியோட கூடிய தெளிந்த மனத்தால் அம்மயமாகவே யிருந்து சொரூபானந்தம் அநுபவித்தல் கூடும்.
அப்போது பிரஹ்ம சொரூபமா தான் இருக்கிறது நல்லா அனுபவமாகும்.

Friday, April 17, 2009

நெரூர்- அப்டேட்



கடந்த இரு நாட்கள் நெரூர் சென்று இருந்ததால் பதிவு இன்று போட முடியவில்லை.
அதற்குப்பதில் இதோ ஒரு போனஸ்!
 





நெரூர் கிராம மக்கள் சார்பில் அரசுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பப்பட்டது. சதாசிவர் உறையும் இடத்தில் முளைத்த வில்வ மரத்தின் வரலாற்றை குறிப்பிட்டு; பால், சந்தனம், தயிர் போன்றவை கொண்டு அபிஷேகம் செய்யப்படுவதாலும் அதனால் மண் மூடப்பட்டு தண்ணீர் காற்று உள்ளே போக வழியில்லாமல் போனதாயும், மேலும் சுற்றி போடப்பட்ட தளமும் காற்று, நீர் உள்ளே போவதை தடுப்பதாயும் இவற்றுக்கு ஆவன செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பித்து இருந்தனர்.

பிறகு ஒரு பத்திரிகையாளர் வந்து பார்த்துபோய் அவர் எம்பியிடம் பேச மக்கள் சார்பாக ஒருவர் எம்பி யையும் சந்தித்து சில விளக்கங்கள் சொல்லப்பட்டன.

அதைத் தொடர்ந்து காவிரி நீர் தவிர வேறு எதையும் அபிஷேகம் செய்யக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இப்போது பிரச்சினையான தளமும் அகற்றப்பட்டுவிட்டது. மண்டபத்தையும் அகற்றிவிட்டார்கள். (தவிர்த்து இருக்கலாம் போல் இருக்கிறது.) கோவில் திருப்பணி நடக்கிறது.

இத்தனைக்கும் நடுவில் துளிர் விட்ட வில்வம் வளர்ந்து வருகிறது!

கேட்டுக்கொண்ட படி வில்வ மரத்தை சுற்றி வெறும் புல் தரை அமைத்தால் நல்லது.
சதாசிவர் என்ன செய்வாரோ பார்க்கலாம்!

Posted by Picasa

Monday, December 1, 2008

நெரூர் - 8



ம்ம்ம்ம்... மக்களுக்கு ஒரு திடீர் அதிர்ச்சி கொடுக்கணும்னு இந்த நெரூர் அப்டேட். புதுசா ஒண்ணும் எழுதலை. சில செய்திகள். சில படங்கள்.
நேரா ஆல்பத்தையும் பாக்கலாம்.
http://picasaweb.google.co.in/agnihot3/Nerur#

From nerur

காவேரில நான் போனப்ப இன்னும் தண்ணி நிறையவே ஓடிகிட்டு இருந்தது. அதுக்கு போற வழில ஒரு சுற்றுலாத்துறை வளாகம் இருக்கு. இதைப்பத்தி முன்னே எழுதலைன்னு நினைக்கிறேன். கொஞ்சம் இட வசதி. குழந்தைகள் விளையாட இடம். வேற ஒண்ணும் பெரிசா இல்லை. இங்கே குழந்தைகள் விளையாடிட்டு காவிரிலே குளிச்சுட்டு வரத்துக்குள்ளே நீங்க அதிஷ்டானத்தில தியானத்தை முடிச்சுக்கலாம். பசங்களுக்கு அது கஷ்டமா இருக்கும் இல்லையா? இருந்தாலும் கொஞ்ச நேரம் தியானம் செய்ய பழக்கலாம்.

From nerur

மனசு சாதாரணமா நிலை நிக்காது. ஏதாவது எண்ணம் ஓடிகிட்டே இருக்கணும். இந்த சித்தத்தை நிறுத்துவது இங்கே செய்ய முடியுது. எண்ணங்கள் ஏதும் இல்லாம ஒலிகளை கேட்டு அதுக்கு முக்கியத்துவம் தராம உடனே மறந்து.... வித்தியாசமான அனுபவம்!

From nerur

புதுசா கட்டின கோவில் கோபுரத்திலே தன்வந்திரி! அவர் எங்க இங்கே வந்தார்ன்னு புரியலை!

From nerur
பச்சை பசேல் சூழ்நிலை!

From nerur
கோவில் வளாகத்திலே ஒரு பைரவர். இந்த பைரவர் கொஞ்ச நாளாக அதிஷ்டானத்து வாசலில் குடியிருக்கிறார். யாரும் குடித்துவிட்டு வந்தாலோ, கைலி கட்டிக்கொண்டு வந்தாலோ விரட்டிவிடுவாராம்! மற்றபடி யாரும் தொந்திரவு தர மாட்டார். வளாகத்தில் இருந்தாலும் அங்கே அசுத்தப்படுத்த மாட்டார். கோவிலுக்குள் போக மாட்டார். தயிர் சாதம் மட்டும் சாப்பிடுவார்!

From nerur

இதுதான் பிரம்மேந்திரர் யந்திரம் எழுதி பிரதிஷ்டை செய்த தான் தோன்றி மலை கோவில். பெருமாள் செம உசரம்! வளந்துகிட்டே போறார்ன்னு ஆணி அடிச்சு வெச்சு இருக்காங்களாம். போன நாள் சனிக்கிழமை. கூட்டம் தாளலை!


Wednesday, October 22, 2008

நெரூர் -7




சரி, இப்போது ஆரம்பித்த பையர் கதையை கொஞ்சம் வைண்ட் அப் செய்ய வேண்டியதுதான் பாக்கி.
எங்கே விட்டோம்? நெரூர் பாடசாலை திட்டம் கைவிடப்பட்டதாக ஆகிவிட்டது. இதற்கு முன்பே எங்கள் வழிகாட்டி பெரியவரை பார்த்து பேசிய போது " ஏண்டா, உனக்கு பகவானே பெரிய வேலையை வைத்து கொண்டு இருக்கிறான். இங்கே போகிறேன் என்கிறாயே" என்றார். பிறகு சில விதிகளை சொல்லி இருந்தார். ஒருவரிடமிருந்து மட்டுமே தனம் வருவதை அவர் விரும்பவில்லை போல இருந்தது. இப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டது பகவான் செயலே என்று நினைத்துக்கொண்டோம்.

நெரூர் பற்றி கேள்விப்பட்ட இன்னொரு விஷயம் மகா பெரியவாள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அங்கு விஜயம் செய்தார். அதற்கு ஏற்பாடு செய்தது - ஒரு வக்கீலைப்பத்தி சொன்னேன் அல்லவா? அவருடைய தகப்பனார்தான். அவர்கள் சிருங்கேரி மடத்தை ஆஸ்ரயித்தவர்களாக இருந்தாலும் மகாபெரியவர் மேல் ஒரு அபிமானம், மரியாதை இருந்ததால் தங்கள் ஊருக்கு அர வேன்டும் என வேண்டி அப்படியே ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் வருந்தும்படி என்ன நடந்தது என்றால் மற்ற ஊர் ஜனங்கள் சிருங்கேரி மடத்து அபிமானிகளாக இருந்து, இந்த வரவேற்பில் கலந்து கொள்ள தயங்கி வீட்டுக்குள் போய் கதவை அடைத்துக் கொண்டார்களாம். கேள்விப்பட்ட பெரியவர் நேரடியாக அதிஷ்டானத்துக்கே போய் அங்கேயே 4 நாட்கள் முகாம் செய்து விட்டார். மகா கருணை படைத்தவர் என்று பலரும் போற்றும் அந்த மகான் தவறாக எதையும் நினைப்பரா? இருந்தாலும் ஒரு உத்தம சன்னியாசிக்கு இப்படி அவமரியாதை செய்வது தானே அதன் பலனை கொடுக்கும், இல்லையா? அன்றிலிருந்து ஆரம்பித்தது ஊர் ஜனங்களுக்கு கெட்ட காலம். கொஞ்சம் கொஞ்சமாக க்ஷீணமாகி இப்போது மரம் பட்டு போனதும் முற்றிவிட்டது. அதுதான் அக்கிரஹாரம் இப்படி போனதுக்கு காரணம் என்று தெரிந்துகொண்டோம்.

பிறகு வாளாடி என்ற கிராமத்திலிருந்து அழைப்பு வந்தது. இதற்குள் பெரியவா பார்க்க விரும்புவதாகவும் ஒரு முறை வந்து போகும்படியும் உத்திரவாயிற்று. பையர் வாளாடி போய்விட்டு பெரியவா உத்தரவை தெரிந்து கொண்டு பின்னால் சொல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு வந்துவிட்டார்.

காஞ்சி சென்று பெரியவாளை தரிசித்தோம். நடந்த விஷயங்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார். பின் "நீ பழூர் போயேன். அங்கே உன் அக்னிஹோத்திரம், அனுஷ்டானங்கள் எல்லாத்துக்கும் தோதாக இருக்கும். 4 வீடுகள் இருக்கு. எதை வேணுமானாலும் எடுத்துக்கோ. பசுமாடு கண்ணு வெச்சுகிறதானாலும் சௌகரியமாகவே இருக்கும். பணமும் பிரச்சினை இல்லை" என்று சொல்லிவிட்டார். சரி என்று சொல்லிவிட்டு பையர் ஒரு விண்ணப்பம் போட்டார். "மடத்திலேயே நெரூரில் பாடசாலை அமைக்கிற திட்டம் இருக்கிறதாக கேள்விபட்டேன். அப்படி ஒரு வேளை அமைந்தால் அங்கே எனக்கு மற்றிக்கொடுக்க வேண்டும். " பெரியவாளும் சிரித்துக்கொண்டு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்.

அந்த வார கடைசியிலேயே பழூர் (இது திருச்சியில் இருந்து கரூர் மார்க்கத்தில் சுமார் 12 கி.மீ) போய் பார்த்துவிட்டோம். அங்கே ஒரு வீட்டை தேர்ந்தெடுத்துவிட்டு அடுத்து ஆடி மாதம் ஆரம்பிக்க இருந்ததால் பால் காய்ச்சி சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டோம். எல்லாம் பழைய வீடுகள் ஆனதால் நிறைய பழுது பார்க்க வேண்டி இருந்தது. தேவையான மாறுதல்களை கேட்டு தெரிந்து கொண்டனர். நாங்களும் சில வருஷங்கள் இங்கே இருக்க பெரிசா ஒண்ணும் வேண்டாம் என்று அத்தியாவசிய மாறுதல்கள் மட்டும் சொல்லிவிட்டு வந்துவிட்டோம்.

ஆனால் ஏனோ இந்த மாற்றங்கள் சமாசாரம் இழுத்துக்கொண்டே போயின. பல திட்டங்கள் போடப்பட்டு கைவிடப்பட்டன. திடீரென்று காஞ்சி மடத்திலிருந்து வந்து போகும்படி உத்தரவாயிற்று. பையர் அங்கே போனால் " நெரூரில் இன்னொரு வீடு மடத்துக்கு கையகம் ஆகிவிட்டது. நீ அங்கேயே போய் இரு. ஒவ்வொன்றாய் நடந்து பாடசாலை வந்துவிடும்" என்று சொல்லிவிட்டார்.

பழூருக்கு வேறு ஆசார்யனை அனுப்பிவிட்டார்கள். ஆவணி சிருங்கேரி மடத்துக்கு சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்து இருக்கிறார்கள். அக்னி ஹோத்திர சாலயை கட்டி ஒரு மோட்டாரும் போட்டு கொடுத்து இருக்கிறார்கள். விஜய தசமிக்கு பால் காய்ச்சி சாப்பிட்டுவிடு என்று உத்திரவானதால் பையர், அவர் மனைவி, நான் 3 பேரும் போய் அப்படியே செய்தோம். 4 நாட்கள் தங்கி பங்களுரில் இருந்து பழூர் போய் அங்கே கிடப்பில் கிடந்த பெட்டி படுக்கை எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி ஒருவாறு ஒழுங்கு செய்துவிட்ட பின் நான் மட்டும் திரும்பி வந்தேன்.

4 நாள் காவேரி குளியல் சுகமாக இருந்தது! நல்ல வேகமாகவே நீரோட்டம். கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டி இருந்தது. துணிகளை கொண்டுபோய் கொஞ்ச நேரம் தண்ணியில் அமுக்கி பிடித்தால் சுத்தமாக ஆகிவிட்டன!
வெய்யிலோ வெய்யில். கொஞ்ச நேரம் மொட்டை மாடிக்கு போனால் கீழே வந்தால் குளிக்கலாம் போல இருந்தது. கிளம்பும் முன் நாள் மழை ஆரம்பித்துவிட்டது.

நெரூரில் கிடப்பில் கிடந்த ஒரு ப்லாட் பதிவும், போன வாரம் ஆகிவிட்டது. இனி கட்டிட வேலை ஆரம்பிக்க தடை ஏதும் இல்லை.

வில்வ மர சமாசரத்தை என் குருவை பார்த்தபோது பேசிக்கொண்டு இருந்தேன். அவர் சிரித்துக்கொண்டே உனக்கும் இதற்கும் என்ன உறவு என்று தெரியாது. இப்படி கேள்விப்பட்டு பார்த்தாகிவிட்டதல்லவா? இதை சும்மா விடக்கூடாது. என்ன செய்து அதை சரி செய்ய வேண்டுமோ அப்படி செய் என்று சொல்லிவிட்டார்.

சரி என்று புகளூர் நண்பருக்கு போன் செய்தேன். அவரும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அங்கிருந்த சில நண்பர்களுடன் பேசி இருந்தார். நெருரில் ஒரு மீட்டிங் கூப்பிட்டு "பிரச்சினை கல்தளம் அமைத்ததும் பால் அபிஷேகம் செய்ததும்தான். இதை சரி செய்ய வேண்டும்" என்று பேச எல்லாரும் " அப்படியா, தெரியவே தெரியாதே" என்று சொல்லி ஒப்புக்கொண்டனர். கல்தளம் அமைத்த நபரை கரூரில் பார்த்து பேச அவரும் மனம் வருந்தி உடனே சரி செய்துவிடுங்க என்று அனுமதி கொடுத்துவிட்டார். அரசு தரப்பிலும் ஆட்களை பார்த்து பேசி ஒண்ணும் பிரச்சினை வராமல் ஏற்பாடு ஆகிவிட்டது.

எல்லாமே நல்லா நடக்குமா? இப்போது ஏதோ ஒரு தடை. நண்பரும் பிஸி ஆகிவிட்டார். சமாசாரம் ஆறின கஞ்சி ஆகிவிட்டது. திருப்பி கிளப்ப வேண்டும்.

இந்த முறை போய் பார்த்த போது வில்வ மரம் துளிர் விட்டு இருக்கிறது! அடி மரத்தில் நான்கைந்து இடங்களிலேயே! சுப சகுனம் என்று நினைத்துக்கொண்டேன்.

Tuesday, October 21, 2008

நெரூர் -6



சுற்றியது போதும் என சங்கல்பித்தாரோ என்னவோ நெரூர் வந்து சேர்ந்தார். மனதால் மைசூர் புதுக்கோட்டை தஞ்சை அரசர்களை நினைக்க அவர்களும் வந்து சேர்ந்தனர். "குகை அமையுங்கள். அதில் அமர்ந்த பின் சாமக்கிரியைகளால் மூடிவிடுங்கள்" என உணர்த்தினார். அழும் அரசர்களிடம் "மனதுதானே நினைக்கிறது? உடலை பார்த்து என்ன செய்யப்போகிறீர்கள்?” என்றார். "காவேரியில் கூடத்தான் புதைந்து கிடந்தேன். எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். கவலை வேண்டாம்" என்று உணர்த்த தேற்றிக்கொண்டனர்.

குகை தயாராக அதில் அமர்ந்து யோகத்தில் ஆழ, முறைப்படி குகையை மூடினார்கள். ப்ரம்மம் சொன்னபடியே 9 ஆம் நாள் அங்கு வில்வ மரம் தோன்றியது. பன்னிரண்டாம் நாள் காசியிலிருந்து சிவலிங்கம் வந்து சேர்ந்தது. அதை பன்னிரண்டு அடி கிழக்கே ப்ரதிஷ்டை செய்து கோவில் கட்டினர்.

மானாமதுரையில் ஒரு சாஸ்திரிகளும் கராச்சியில் ஒரு முஸ்லிம் பக்தரும் முன்னரே உடலை உகுக்கும் காலத்தில் தமக்கு தெரியப்படுத்த வேண்டும் என பலமாக வேண்டிக்கொண்டு இருந்தனர். சாஸ்திரிகள் அப்படி நடக்காவிட்டால் ப்ராணத்தியாகம் செய்வதாகவே சத்தியம் செய்து இருந்தார். இதே சமயம் அந்த இரண்டு இடங்களிலும் கூட கற்பிக்கப்பட்ட உடல்கள் தோன்றி உகுக்கப்பட்டு குகையும் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மானாமதுரையில் அவ்விடத்தில் வில்வ மரமும் தோன்றியதாக சொல்லப்படுகிறது.

சதாசிவர் சமாதி கொண்டு இப்போது சுமார் 220 ஆண்டுகள் ஆயின். சுமார் 120 வருடங்கள் முன் சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் சிருங்கேரி மடாதிபதியாக இருந்தார். அவருக்கு தத்வ விசாரம் செய்து சித்தி ஏற்படுவதில் தடை இருந்தது. என்ன செய்வதென்று ஆலோசித்து நெரூர் சென்று ப்ரம்மேந்திராளை ஆராதித்தால் சித்தி ஏற்படும் என்று தெளிந்தார். நெரூர் நோக்கி பல்லக்கில் பயணித்து ரங்கநாதம் பேட்டை என்ற இடத்தை அடைந்தனர். அதற்கு மேலே பல்லக்கு போக முடியவில்லை. போகிகள் (பல்லக்கு தூக்குவோர்) யாரோ முன்னாலிருந்து தள்ளுவது போல் இருப்பதாக சொன்னார்கள். ஸ்வாமிகள் கீழே இறங்கி விழுந்து வணங்கி, ஒரு கை தூரம் முன் சென்று மீண்டும் விழுந்து வணங்குவதுமாக ஒன்றரை கல் நடந்து நெரூரில் ப்ரம்மேந்திரர் சந்நிதிக்கு வந்து சேர்ந்தார். தன் சந்தேகங்கள் தீராமல் எழுந்திருப்பதில்லை என்ற உறுதியுடன் காலை காவிரி சென்று கடன்களை முடிக்க மட்டும் வெளி வந்து, மற்றபடி சந்தியிலேயே அமர்ந்து, அன்ன ஆகாரமின்றி தீவிர தவம் மேற்கொண்டார்.

மதிலுக்கு வெளியே 300 பேர்கள் என்ன நடக்கப்போகிறது என்றறிய கூடிவிட்டனர். மூன்றாம் நாள் இரவு இரண்டு பேர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. காலை வெளி வரும் போது சதாசிவரை துதித்து நாற்பத்தைந்து பாடல்கள் எழுதிக்கொண்டு வந்தார் ஸ்வாமிகள். ப்ரம்மேந்திரர் ப்ரத்தயக்ஷம் ஆகி சந்தேகம் தீர்த்தது உறுதியாயிற்று. அதிலிருந்து யார் சிருங்கேரி மடத்து பட்டத்துக்கு வந்தாலும் நெரூர் வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து மூட்டையாக கொண்டு வந்த தனத்தை எண்ணிப்பாராமல் செலுத்திவிட்டு போவது வழக்கம்.

ப்ரம்மேந்திராள் இயற்றிய சாஸ்திரங்களும் கீர்த்தனங்களும் பல. கீர்த்தனங்களில் சர்வம் ப்ரம்ம மயம் என்று பாடுவார். ப்ரம்மேந்திரரின் சரித்திரத்தை கேட்டாலும் கீர்த்த்னங்களை கேட்டு அதன் பொருள்படி நடந்தாலும் கட்டாயம் மெய்ப்பொருளை அடைந்துவிடலாம் என்று நம்புகின்றனர். ப்ரம்ஹ சூத்ர வ்ருத்தி, ஆத்ம வித்ய விலாஸம், அத்வைத ரஸ மஞ்சரி, ப்ரம்ஹ தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா போன்ற கிரந்தங்களும் பஜே ரகுவீரம், பஜரே கோபாலம், மானஸ சஞ்சரரே, பிபரே ராம ரஸம் ஆகிய கீர்த்தனங்களும் குறிப்பாக அவர் படைப்புகளில் சொல்லப்படுகின்றன.

இந்த பதிவுகளில் கண்ட பல விஷயங்கள் நெரூர் கைலாஸ ஆஸ்ரமம் தவத்திரு சதாசிவானந்த ஸ்வாமிகளின் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டன.
மேலும்
http://living.oneindia.in/yoga-spirituality/faith-mysticism/sadasiva-brahmendra-partii
http://www.geocities.com/profvk/gohitvip/sadasiva.html


Monday, October 20, 2008

நெரூர் -5



சதாசிவரின் சித்தம் வெளிமுகமாகிய ஒரு சந்தர்பத்தில் தன்னுடன் இளமையில் பயின்ற போதேந்திராளையும் அய்யாவாளையும் நினைத்தாராம். அவரை காண எண்ணி கோவிந்தபுரம் அடைந்து அதற்குள் சித்தம் அகமுகமாகிவிட அங்கிருந்த நாணல் புதர்கள் விழுந்து அப்படியே கிடந்தாராம். அய்யாவாள் வாரம் ஒரு முறை கோவிந்தபுரம் வருவார். அப்படி வரும்போது புதரில் கிடந்த சதாசிவரை பார்த்து அடையாளம் தெரியாமல் யாரோ ஒரு மகான் இப்படி இருக்கீறார். இவர் ஆசி கிடைத்தால் பாக்கியம் பெறுவோம் என்று நினைத்து சுற்றி வந்து வணங்கினார்; ஸ்தோத்திரம் செய்தார். அப்படியும் சதாசிவர் அக முகமாகவே இருந்துவிட்டார்.
அய்யாவாள் தன் குருநாதராகிய போதேந்திராளிடம் இதை சொல்ல அவரும் உடனே அப்படிப்பட்ட மகானுபாவரை உடனே தரிசிப்போம் என்று புறப்பட்டார். சுற்றி இருந்த புதர்களையும் செடிகளையும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்து தீபம் ஏற்றி சாம்பிராணி புகையும் போட்டால் பகிர்முகப்படுவாரோ என்று அதையும் செய்தனர்.

சதாசிவர் அசையக்கூடவில்லை. போதேந்திராள் தன் யோக வலிமையால் ராம நாமத்தை அந்த உடலுக்குள் புகுத்தினாராம். ராம நாமம் கேட்டு விழித்துக்கொள்ளட்டும், பின்னால் மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து, "பிபரே ராம ரஸம்" என பாடலானார். இதனால் சற்றே பகிர்முகமானார் சதாசிவர். அடுத்து " கேலதி மம ஹ்ருதயே" என பாட, சதாசிவர் சப்த பேதத்தை திருத்தினார். இது சதாசிவமே என நிச்சயித்து பலவாறு புகழ்ந்து போற்றினார்கள். அதற்குள் பிரம்மம் அகமுகமாகிவிட்டது. (முன் நினைத்த வேலை முடிந்ததல்லவா? இருவரையும் கண்டாகிவிட்டது.) என்ன செய்தும் அவரை பகிர்முகப்படுத்தி மடத்துக்குள் கொண்டு செல்ல முடியவில்லை எனக்கண்டு அப்படியே விட்டு விட்டனர். சதாசிவரும் பிறகு எங்கோ போய்விட்டார்.

சதாசிவர் நிகழ்த்திய அற்புதங்கள் பலவாக சொல்லப்படுகின்றன. அவரா நிகழ்த்தினார்? ப்ரம்மத்துக்கு சங்கல்பமேது? அந்த உடல் முன்னிலையில் பல அற்புதங்கள் நடந்தன. தாக்க வந்த மூடர்கள் செயலிழந்து போயினர். பலரை தன் பார்வையாலேயே பிணி தீர்த்தார். " தாத்தா, திருவிழா காண வேண்டும் " என்று கேட்ட குழந்தைகளை கண நேரத்தில் மதுரை அழைத்து சென்று காண்பித்து திருப்பியும் கூட்டி வந்தார்.


யோனுத் பன்ன விகாரோ பாஹௌ மிலேச்சேன சின்ன பதிதேபி
அவிதித மமதாயாஸ்மை பிரணதிம் குர்ம ஸதாசிவேந்திராய

சதாசிவர் ஒரு முறை அகமுகமாக இருந்தபடியே நடந்து கொண்டு இருந்தார். எங்கே போகிறோம் என்ற உணர்வில்லாமல் ஒரு முஸ்லிம் அரசனின் அரண்மனைக்குள் நுழைந்தார். "யாராடா இவன்! அம்மணமாக இங்கே வருவது" என சினந்த மன்னன் பதில் வராததால் கோபம் கொண்டு கத்தியால் கைகளை வெட்டிவிட்டான். ஒரு கை கீழே விழ இன்னும் ஒன்று கொஞ்சம் ஒட்டிக்கொணடு இருந்தது. சதாசிவர் பாட்டுக்கு நடந்து போய்க்கொண்டு இருந்தார். மன்னனுக்கு ஆச்சரியம் மேலிட்டது. "இவர் யாரோ பெரிய மகான், தவறு செய்து விட்டோம்!' என்று உணர்ந்து கீழே கிடந்த கையை எடுத்துக்கொண்டு ஓடினான். சதாசிவரின் கால்களை கட்டிக்கொண்டு அழுதான். பகிர் முகப்பட்ட ப்ரம்மம் என்ன என்று கேட்டது. "பெரிய தவறு செய்தேன். மன்னிக்க வேண்டும்" என்றான் அரசன். "தவறு செய்தவனும் இல்லை; மன்னிக்கிறவனும் இல்லை போ!” என்றது ப்ரம்மம். "இல்லை! மன்னித்தால்தான் ஆயிற்று; இல்லாவிட்டால் வாளுக்கு இரையாவேன்" என்று கூற, "அப்படியா? என்ன தப்பு செய்தாய்?” என்றார். "உங்கள் கைகளை வெட்டிவிட்டேனே!” என்றழுதான் அரசன். "அப்படியா!” என்று கூறி வெட்டிய கையை வாங்கி பொருத்தியதும் அது சரியானது. "சரியாகிவிட்டது போ" என்று சொல்லி தன் வழியே நடந்தது ப்ரம்மம்.

இதைத்தான் சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ப்ரம்மேந்திரர் அனுக்கிரகம் கிடைத்த பின் மேற்கண்ட படி பாடினார். "கைகளை மிலேச்சன் வெட்டிவிட்ட பின்னும் விகாரம் உண்டாகாததால் என்னுடையது என்ற எண்ணமே இல்லை. அப்படிப்பட்ட ஸதாசிவேந்திராய சற்குருவை நமஸ்கரிக்கிறேன்.”

Saturday, October 18, 2008

நெரூர் -4



கொடு முடிக்கு பக்கத்தில் அகத்தியம் பாறை என்ற ஒரிடத்தில் காவேரிக்கு நடுவே மையத்தில் ஒரு பெரும்பாறை உண்டு. பல சமயம் இந்த பாறை மீது அமர்ந்து சதாசிவர் தவம் செய்வார். தவம் செய்பவரை பெரியவர்கள் தொந்திரவு செய்யமாட்டார்கள். ஆனால் சிறுவர்கள் செய்யக்கூடுமாகையால் இப்படி ஆற்றின் நடுவே அமர்வார். ஒரு நாள் ஆற்றுவெள்ளம் அதிகமாகி இந்த பாறையையும் சதாசிவரையும் புரட்டிப்போட்டுவிட்டது. நீர் வற்றிய பின் சதாசிவரை தேடி தேடி அலுத்தனர் மக்கள்.

பல மாதங்கள் ஓடி முடிந்து வற்றி இருந்த ஆற்றில் கட்டிட வேலைக்காக மணல் எடுக்க வந்தனர் சிலர். ஓரிடத்தில் நல்ல மணல் கிடைக்கிறது என்று தோண்டவே ஆழமாக போன பின் மண்வெட்டியால் வெட்ட ரத்தம் வந்தது. பயந்து போனவர்கள் கிராம அதிகாரியை அழைத்துவர
அவர் இது சதாசிவ பிரம்மமாக்தான் இருக்க வேன்டும் என ஊகித்து சுற்றிலும் மணலை எடுக்கச்செய்யவே சதாசிவர் உணர்வு பெற்று எழுந்து நடந்து போய்விட்டாராம்.

புதுக்கோட்டை அரசரது காடுகளை அடுத்த வயல்களில் சதாசிவர் போய் கொண்டு இருந்த போது வைக்கோல் போர் போட்டுக்கொண்டு இருந்தார்கள். இது வழி இது வழி அல்ல என் ஆராயும் நிலையில் இல்லாத சதாசிவர் பாட்டுக்கு நேரே போக வைக்கோல் போர் இடையே மாட்டிக்கொண்டார். வேலையாட்கள் தெரியாமல் மேலும் மேலும் வைக்கோல் போட 10,000 போர்கள் போட்டுவிட்டனர். பிறகு பல மாதங்கள் கழித்து அது செலவழிந்து கீழே பார்க்க சதாசிவர் படுத்த நிலையிலேயே இருந்தார்.

இதை கண்டு அதிசயித்து மகாராஜாவிடம் போய் சொன்னார்கள். மகாராஜா விஜய ரகுநாத தொண்டைமான் சாதுக்களிடம் மரியாதையும் நம்பிக்கையும் உள்ளவர். ராஜ்ய பரிபாலனத்தில் நிகழும் கேடுகளை சாதுக்களால் தீர்க்க முடியும் என நம்பியவர். ஒரு பல்லக்கை கொண்டுவரச்சொல்லி குதிரை மீது ஏறி விரைந்து சென்று ப்ரம்மத்தை தரிசித்தார். சுற்றி வந்து வீழ்ந்து வணங்கி அரண்மனை வருமாறு வேண்டியும் ப்ரம்மம் ஏதும் சலனமில்லாமல் இருந்தார். மேலும் வற்புறுத்த திருவரங்குளம் காட்டுள் சென்றுவிட்டார். முயற்சியில் தளராத ராஜா இவரது அருகாமையில் ஒரு குடிசை அமைத்து சதாசிவருக்கு சேவை செய்து வரலானார். இடையிடையே அரண்மணை சென்று ராஜாங்க வேலைகளை கவனித்துவிட்டு மீண்டும் சேவைக்கு வந்துவிடுவார். இப்படி 8 வருடங்கள் ஓடின. ஒரு நால் தனக்கு மந்திர தீக்ஷை தர வேண்டும் என மிகவும் வேண்ட சதாசிவர் மணலில் எழுதிக்காண்பித்தார். ராஜாவும் அதை பாடம் செய்து கொண்டு அந்த மணலை அரண்மணைக்கு கொண்டுவந்து தங்கப்பேழையில் வைத்து பூஜை செய்யலானான். இந்த மணல் இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது.

சாஸ்திர சந்தேகங்களை ராஜா கேட்க, பதில் வராததை கண்டு இனி தொந்திரவு செய்யக்கூடாது என நிச்சயித்து எங்கு சென்றாலும் கடைசியில் சரீரத்தை உகுக்கும் காலத்தில் தங்களை தரிசிக்கும் பாக்கியத்தை தரும்படி கேட்டுக்கொண்டான். சதாசிவரும் இசைவை தெரிவித்து தகுந்த சாஸ்திர குருவையும் அடையாளம் காட்டி தன் போக்கில் போகலானார்.

கரூரில் வசித்த சாஸ்திரிகள் சிலரும் கனபாடிகள் சிலரும் சதாசிவரை அணுகி திருப்பதி ஸ்தல யாத்திரை செய்வது மிக சிரமமாக இருக்கிறது. இந்த தான் தோன்றி மலையில் உள்ள அப்பரை தரிசித்தால் வெங்கடாசலபதியை தரிசித்த புண்ணியமுண்டாக வேண்டும் என வேண்டினர். சதாசிவரும் சந்தோஷமாக அங்கே சென்று பூஜை செய்து ஜன ஆகர்ஷண யந்திரம் ஒன்று எழுதி அங்கே பிரதிஷ்டை செய்தார்.

தஞ்சைக்கு அருகே புன்னை காடுகள் இருந்தன. தஞ்சை ராஜா ராமேஸ்வரம் ஸ்தல யாத்திரை செய்து திரும்பும் போது அந்த புன்னை காடுகள் அருகில் தங்கி இருந்த போது அவருடைய குழந்தைக்கு உஷ்ணம் அதிகமாகி கண்ணிலிருந்து ரத்தமே வந்தது. இது சரியாக வேண்டுமென சமயபுரம் மாரியம்மனுக்கு ராஜா பிரார்த்தனை செய்ய அன்றிரவு " நான் இங்கேயே இருக்க ஏன் சமயபுரத்துக்கு வருவதாக பிரார்த்திக்கிறாய்?” என்று அன்னை கேட்டாள். அட, இது தெரியாமல் போயிற்றே, என் ராஜ்ஜியத்திலேயே இருக்கிறாளா என்று நாலாபுறமும் ஆட்களை அனுப்பி தேடினான். தேடியவர்கள் இங்கே ஒரு புற்றுக்கு சிறுவர்கள் வேப்பிலை வைத்து மாரியம்மன் என்று விளையாட்டாக வழிபடுவது தவிர கோவில் எதுவும் இல்லை என சொன்னார்கள்.

மகாராஜா அந்த புன்னை காடுகளை சுற்றி வந்தார். அங்கே ஏதோ விசேஷம் இருப்பதாக தோன்றவே உள்ளே நுழைந்து தேடினார்கள். ஒரு இடத்தில் சதாசிவர் அமர்ந்து இருப்பதை பார்த்து மகிழ்ந்து வனங்கி எழுந்து " இங்கே மாரியம்மன் கோவில் இருப்பதாக கனவு கண்டேன். ஆனால் என்ன தேடியும் ஒரு புற்றை தவிர ஒன்றும் தென்படவில்லை. என்ன செய்வது என்று சொல்ல வேண்டும்" என்று வேண்ட, சதாசிவர் "அந்த புற்றேதான் மாரியம்மன்" என்று எழுதிக்காட்டினார். "இப்படி இருந்தால் ஜனங்கள் எப்படி பக்தியோடு வழிபட முடியும்? நீங்கள்தான் ஏதாவது செய்ய வேண்டும்" என்க சதாசிவரும் கோரோசனை, கஸ்தூரி, சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, அகில் சந்தனம், குங்குமப்பூ, பச்சைகற்பூரம் ஆகியவற்றை வாங்கி வரச்செய்து அந்த புற்று மண்ணிலேயே பிசைந்து மாரியம்மனை செய்தார். ஜன ஆகர்ஷண யந்திரம் ஒன்றையும் எழுதி அம்மன் முன் வைத்து "இதற்கு பூஜை செய், குழந்தையின் கண் சரியாகும்" என்று தெரிவிக்க, அவ்வாறே செய்து பிரச்சினை தீர்ந்தது. தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்யவே இன்றளவும் பூஜை நடக்கிறது. 5 வருடங்களுக்கு ஒரு முறை சாம்பிராணி தைல அபிஷேகம் மட்டும் செய்கிறார்கள். அம்மன் பக்தர்கள் பலர் கனவில் தோன்றி தனக்கு புடவை சாற்றுமாறு சொல்வாள். அவர்களும் அப்படியே செய்து அவர்களது வேண்டுதல் கைவர பெறுவர். அபிஷேகம் நடக்கும் காலத்தில் அவற்றை நீக்குவார்கள். வெகு நேரம் பிடிக்குமாம்.

Friday, October 17, 2008

நெரூர் - 3



சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் (அட!) சோமநாத யோகியார் - பார்வதி தம்பதியர். சோமநாத யோகி சிறு வயதில் இருந்து பிரம்மசர்யத்தை கடைபிடித்து குண்டலினி யோகம் பயின்று சித்திகள் வரப்பெற்றவர். இவரது தாய் தந்தையர் புத்திரனுக்கு வயதாகிக்கொண்டே போகிறதே என்று கவலைப்பட்டு திருமணம் செய்து வைக்க முயல யோகியார் லேசில் சம்மதிக்கவில்லை. அப்பா உனக்கு திருமணம் செய்து வைத்தால் எங்கள் கடமைகளேல்லாம் நிறைவேற்றியவர்கள் ஆவோம். அதன் பின் பஞ்ச மகா யக்ஞங்கள் செய்து, வானபிரஸ்தம் அனுஷ்டித்து கடைதேறும் வழியை பார்க்க வேண்டும் என்று பலவாறு சொல்ல பின் யோகியாரும் இணங்கினார்.

திருமணத்திற்கு பிறகும் யோகியார் பிரம்மசரியத்தை கடைபிடித்துவர 15 வருடங்கள் சென்றன. சந்ததி குறித்து ஒரு சிந்தனையும் இல்லாது இருக்கிறார் என்று தெரிந்து கொண்ட பார்வதி அம்மை " சுவாமி திருமணம் நடந்து 15 வருடங்கள் ஆகின்றன. ஒரு சத்புத்திரனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்களே என்று கேட்க "உன் வாயால் சத் புத்திரன் என்று வந்துவிட்டதா? சரி. அப்படி நடக்க வேண்டுமானால் கோடிக்கணக்கில் நாம ஜபம் செய்ய வேண்டும். உடம்பின் ஒவ்வொரு அணுவும் ராம நாமம் சொல்ல வேண்டும். அப்படி ஆனால்தான் உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கும். அப்படி பட்ட நேரத்தில் கர்ப்பம் தரித்தால் அதில் ஒரு மகரிஷி வந்து புகுவார். அது நாட்டுக்கு நல்லது" என்று சொல்ல அம்மையும் இசைந்து மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்து வரலானார்.

ஸ்தல யாத்திரை செய்து ராமேஸ்வரம் சென்றபோது கனவில் உனக்கு சத் புத்திரன் உண்டவான் என்று ராமநாதர் சொல்ல விழித்ததும் யோகியார் தானும் அதே கனவை கண்டதாக சொல்லி வீடு திரும்பினர். இறைவன் ஆணைப்படியே 10 ஆம் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சிவராமகிருஷ்ணன் என பெயரிட்டனர். குழந்தை 3 வயதை எட்டும் முன்னேயே யோகியார் இமயத்துக்கு தவம் செய்ய போய்விட்டார்.

சிறு வயதிலேயே வேதம் படிக்க அனுப்பிவிட்டார்கள். அதி புத்திசாலியாகையால் மிக விரைவில் 4 வேதங்களும் கற்றுக்கொண்டுவிட்டார். அத்துடன் சாஸ்திரங்களும் கற்றார்.
இவரது திறமையை பார்த்த உள்ளூர் சாஸ்திர விற்பனர்கள் மேற்கொண்டு சாஸ்திரம் வாசிக்க திருவீசைநல்லூர் வேங்கடேச அய்யாவாளிடம் அனுப்பச்சொல்லி வேண்டினர். ஆனால் அன்னை அவருக்கு தக்க ஒரு மணப்பெண்ணை தேடி திருமணம் செய்து வைத்தார். பெண்ணுக்கு 5 வயதே ஆனபடியால் உரிய வயது வந்த பின் கொண்டு வந்து விடுவதாக ஏற்பாடு ஆகியது. எப்படியோ இப்போது திருவீசைநல்லூர் போக அனுமதி கிடைத்துவிட்டது.

பாடம் சொன்ன அய்யாவாளுக்கு வியப்பு மேலிட்டது. சாதாரணமாக ஒருவர் பாடம் கற்று அதை அசை போட்டு புரிந்து கொள்வர். அனுபவம் பெறும் முறைகளையும் கற்க வேண்டும். ஆனால் சிவராம க்ருஷ்ணனுக்கோ பாடம் கேட்கும் போதே அனுபூதி கிடைக்கிறது! அனுபவத்தின் முதிர்ந்த நிலை அடைகிறான். இவனை இப்படியே விடக்கூடாது என்று ஸ்ரீமடாதிபதி பரமசிவேந்திரரிடம் (இவர் அதிஷ்டானம் திருவெண்காடு அருகில் உள்ளது) இவனை கொண்டு விட்டார். சில மாதங்களிலேயே அத்யாத்ம சாஸ்திரங்களை கற்று தேர்ந்தான் சிவராமன். ஏக சந்த க்ராஹி என்பார்கள்- ஒரு முறை கேட்டாலே நினைவில் இருத்திக்கொள்ள முடியும். அப்படி ஒரு சக்தி - இல்லை, - புரிவதும் நிகழ்வதால் அதுக்கும் மேலே- இருந்தது சிவராமனுக்கு. குருவே சிலாகித்த சிஷ்யனாக விளங்கினார்.

இந்த நிலையில் மைசூரில் அரசவையில் சரியான வித்வான் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார்கள். சிவராமன் புகழை கேள்விப்பட்டு பரமசிவேந்திரரிடம் விழுந்து வணங்கி மைசூர் ஆஸ்தான வித்வானாக அனுப்பும் படி கேட்க அவரும் நாட்டு நலன் கருதி இசைந்தார். மைசூர் ராஜாவின் சந்தோஷத்துக்கு அளவில்லை! வருகிற எல்லா வித்வான்களும் இவராலேயே பரீட்சிக்கப்பட வேண்டும்; இவர் சொல்கிற சன்மானம்தான் தர வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. சிவராமனுக்கோ அத்தனை கலைகளும் அத்துப்படி. ஒரு ராகம்பாடினால் அது சுத்தமாக இல்லையென்றால் கண்டுபிடித்துவிடுவார். சாஸ்திரம் பற்றி கேட்கவே வேண்டாம். இவரிடம் பரிசு வாங்க வித்வான்கள் சிரமப்பட்டு போயினர்.

தஞ்சையிலிருந்து ஒரு விதவான் கோபாலகிருஷ்ண சாச்திரி என்பவர் சிவராமனை வென்று ஆஸ்தான வித்வான் ஆக வேண்டும் என்ற கனவுடன் கிளம்பிப்போய் இவரை கண்டவுடன் விழுந்து வணங்கி "குருவே தங்களுக்கு சேவை செய்ய வந்து இருக்கிறேன்" என்றாராம்! சேவையில் சில காலம் போன பின் கோபாலக்ருஷ்ணன் பரம குருவை சந்திக்க வேண்டி கேட்க சிவராமனும் பரமசிவேந்திராளை சந்திக்கும் விதி முறை, வழி, இடமெல்லாம் சொல்லி அனுப்பி வைத்தார். அப்படியே பரம குருவை சந்தித்த கோபாலர் " சிவராமக்ருஷ்ணர் தங்கள் சிஷ்யர்களிலே மிக உயர்ந்தவர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவர் வரும் வித்வான்களை வாதத்தில் வென்று வெற்றி அடைவதிலேயே குறியாக இருக்கிறார். யாருக்கும் விரும்பிய பரிசு கிடைப்பதில்லை. இதனால் ராஜ்யத்துக்கு அவப்பெயர். மேலும் இவர் இதிலேயே கவனமாக இருப்பதால் தவம் செய்ய நேரம், இடம் இல்லை. இவர் வெளியேறி தவம் செய்தால் இவர் ராஜா முன் கைகட்டி நில்லாமல் இவரிடம் மகாராஜாக்கள் கைகட்டி காத்து நிற்பர்" என்ற ரீதியில் சொல்லவே, இதன் உண்மையை உணர்ந்து பரமசிவர் " நான் தரிசிக்க விரும்பியதாக கூறு" என்று சொல்லி அனுப்பிவிட்டார். இதை கேள்விப்பட்ட சிவராமன் மிக வருந்தினார். ஒரு குரு சிஷ்யனை தரிசிப்பதாவது! அப்படி சொன்னால் என்ன ஒரு வருத்தம் இருக்க வேண்டும் என்று உணர்ந்து வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

வந்து வணங்கிய சிவராமனை கண்ட பரமசிவேந்திரர் " ஊரார் வாயை அடக்கக் கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே" என்று கூற அந்த கணத்திலிருந்து இனி பேசுவதில்லை என்று உறுதி கொண்டுவிட்டார். குருநாதரும் சன்னியாசம் கொடுத்து "இனி பிரியமான இடம் சென்று தவம் செய்" என்று சொல்லிவிட்டதாக கூறுகிறார்கள். (இதில் அபிப்பிராய பேதம் இருக்கலாம்) தவம் செய்ய ஏகாந்த இடத்தை தேடி நெரூர் வந்து சேர்ந்தார் சதாசிவர். யோகம் பயின்று அனைத்து யோக சித்திகளும் கைவரப்பெற்று மேலும் தவம் செய்து ப்ரம்ம மாகவே ஆகிவிட்டார்.

நெரூர்-2



நெரூர் அக்கிரஹாரம்- இன்றைய நிலைமை:

சிறிய, கொஞ்சம் பெரிய கிராமங்களை தாண்டி நெரூர் போய் சேர்ந்தோம். நேரடியாக பிரம்மேந்திராள் அதிஷ்டானத்துக்கு போனோம். நல்ல கடுமையான வெயில். புகளூர் போன நண்பர் அப்போதே வெயிலைப்பத்தி புகார் சொல்லிக்கொண்டு இருந்தார். அப்போது அதிகமாக சொல்கிறாரோ என்று நினைத்தேன். இல்லை என்று தெரிந்தது.

சமீபத்தில் கட்டிய கட்டிடங்கள். நுழைவாயில் அருகில் பூந்தோட்டம். சற்று உள்ளே சென்று கோவிலின் வாசல். சற்றே முன் குருக்கள் வெளியே போய்விட்டார் என்றார்கள். நல்ல வேளையாக நடை சாத்தவில்லை. ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவர் அங்கே தொண்டு செய்து வருகிறார். அவர் எங்களை அழைத்துப்போய் சுற்றிக்காட்டினார். நேரடியாக உள்ளே நுழைய இருப்பது காசி விஸ்வநாதர் சன்னதி. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. பிரம்மேந்திராள் சித்தி ஆகும் முன் இந்த இடத்தில் ஒரு குகை அமையுங்கள். என்று சொல்லி அங்கு அமர்ந்துவிட்டார். "அங்கே ஒரு வில்வ மரம் ஒன்பதாம் நாள் முளைக்கும்: சித்தி ஆன 12 ஆம் நாள் காசியில் இருந்து ஒரு பிரம்மசாரி ஒரு சிவலிங்கத்துடன் வருவான். அந்த சிவலிங்கத்தை இந்த உடல் அமரும் இடத்திலிருந்து 12 அடி தூரத்தில் கிழக்கே பிரதிஷ்டை செய்யுங்கள்" என்று தெரிவித்ததாக சொல்கிறார்கள். அதே போல நடந்தது. புதுக்கோட்டை மகாராஜா சுற்று சுவர் எழுப்பினாராம்.

வலது பக்கம் அம்பாள் சன்னதி. 90 டிகிரி கோணத்தில். இவர்களை வணங்கி சுற்றிக்கொண்டு பின் பக்கம் போனால் அங்கே பிரம்மேந்திராள் சித்தி ஆன இடத்தை பார்க்கலாம்.

நாங்கள் முதல் முறை பார்த்தபோது துயரமே மேலிட்டது.

இந்த இடத்தை நிர்வகிப்பதில் கொஞ்சம் பிரச்சினை இருக்கிறது. சாதாரணமாக இப்படி சிவலிங்க பிரதிஷ்டை செய்தால் அதற்குத்தான் அபிஷேக ஆராதனைகள். ஆனால் இங்கோ சமாதியான இடத்தில் சிவலிங்கத்தை வைக்கவில்லை. ஆகவே அது ஒரு கோவிலாக மாறி அரசின் கைக்கு போய்விட்டது. காசு இல்லாத இடத்தில் அரசு என்ன அக்கறை காட்டப்போகிறது?

குழம்பிய பக்தர்கள் வில்வ மரத்துக்கே பூஜை செய்ய ஆரம்பித்தனர் போலும். பக்கத்தில் சதாசிவானந்த சுவாமிகள் என்று ஒரு துறவி கைலாஸ ஆஸ்ரமம் என்று அமைத்து இந்த கோவிலையும் சுற்றி சுவர் எழுப்பி கணபதி, முருகன், பைரவர் என்று பிரதிஷ்டை செய்து கொஞ்சம் பெருக்கினார். பிறகு பக்தர்கள் உற்சாகத்தில் வில்வ மரத்தை சுற்றி தியானம் செய்ய வசதியாக மண்டபம் அமைத்து மரத்தை சுற்றி ஒரு அதீத உற்சாகத்தில் கல் தளமும் அமைக்கவும்; நாளாக ஆக வில்வ மரத்துக்கு 50 லிட்டர் 100 லிட்டர் ஆவின் பால் என்று அபிஷேகம் செய்யவும் மரம் பட்டுப்போய்விட்டது. எந்த ஒரு மரத்துக்கும் சுற்றி தாராளமாக மண் இருக்க வேண்டாமா? மண் பாலால் மேலே மூடி சீல் ஆகிவிட்டால், தண்ணீர் உள்ளே போக வேண்டாமா? வேர்களுக்கு காற்றும் அவசியமாச்சே? இயற்கையாக எதையும் இருக்கவிட மனிதன் ஏன் சம்மதிப்பதில்லை என்பது எனக்கு புரியாத புதிர்.

போதாக்குறைக்கு ஒரு கீத்துக்கொட்டாய் வேறு மரத்தின் அருகில் போட்டு வைத்து அங்கே விளக்கையும் ஏற்றி வைத்துவிட்டதால் ஒரு நாள் இரவு கொட்டகை தீப்பிடித்து அதுவும் எரிந்து கொட்டகையும் எரிந்து காவலுக்கு இருந்த ஒரு சிறுவன் முயன்ற வரை அதை அணைக்கப்பார்த்து... நாங்கள் போனபோது பட்டுப்போய் கருகிய மரமே காட்சி அளித்தது. ரொம்ப முன்னேறி பாலன்ஸ் ஆகிவிட்டவன் என்று நினைத்துக்கொண்டு இருந்த எனக்கு அப்படி ஒன்றும் இல்லை என்று நன்றாக புரிந்து போய்விட்டது. அவ்வளவு அப்செட் ஆகிவிட்டேன். ஏதும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி வக்கீலை பார்க்கபோய்விட்டோம்.

நெரூர் அக்கிரஹாரம் கொஞ்சம் வித்தியாசமான அமைப்பு உள்ளது. இரண்டு சாரி வீடுகள். நடுவில் வாய்க்கால் ஒன்று ஓடுகிறது. ஓரிரண்டு கிளைத்தெருக்களும் உண்டு. வீடு-வீதி- வாய்க்கால் -வீதி- வீடுகள் இப்படி இருக்கிறது. ஒரு பக்கம் கொஞ்சம் பேர் இன்னும் வசிக்கிறார்கள். எதிர் சாரியில் ஒரு போஸ்ட் ஆபீஸ். சமீபத்தில் வந்த ஒரு ஜ்யோதி நிலையம் -வள்ளலார் பக்தர் ஒருவர் ஒரு விசாலமான ஹால்; பின்னால் ஒரு ஓடு வேய்ந்த பிரமிட்; பக்கதில் அவர் வசிக்க வீடு இப்படி கட்டி இருக்கிறார்.தினசரி காலை கஞ்சி ஊற்றுகிறார்கள். ஒவ்வொரு பௌர்ணமியும் அன்னதானம். வருடா வருடம் 2-3 ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் (தைப்பூசம்?). அங்கே இருக்கக்கூடிய சுமார் 20 வீடுகளில் 7-8 தவிர எல்லாம் பராமரிப்பு இல்லாமல் இடிந்து போய்விட்டன. பிரம்மேந்திராளுக்கு பூஜை செய்யும் கன்னடத்து பட்டர், மடத்து பூஜை செய்யும் ஒருவர் தவிர யாரும் அங்கே குறிப்பிட்டு சொல்கிறபடியாக இல்லை.

நாங்கள் பார்க்கப்போன வக்கீல் அங்கே இருக்கும் ஸ்ரீமடத்து ஔஷதாலயத்துக்கு நிர்வாகியாக இருக்கிறார். சியவனப்பிராஷ் போல சில மருந்துகள் தயாரிக்கிறார்கள்.
பாடசாலைபற்றி பேச ஆரம்பித்தோம். “இங்கே பிராம்மணர்கள் வீடு 5-6 தான் இருக்கிறது. மற்றவர்கள் வீடுகளும் கொஞ்சம்தான். அதனால் இங்கே எந்தவிதமான ஆதரவும் எதிர்பார்க்கமுடியாது. என்னால் முடிந்ததை செய்கிறேன். ஆனால் அதிகமாக ஒன்றும் எதிர்பாராதீர்கள்" என்று தெளிவாகவே சொல்லிவிட்டார். ஸ்ரீ மடத்தில் பாடசாலைக்கு என்று 3 வீடுகளை வாங்கி வைத்து இருப்பதாயும் இன்னும் ஒன்று பாக்கி, அதையும் வாங்கிவிட்டால் அனேகமாக பாடசாலை துவக்கும் வேலை ஆரம்பித்துவிடும்; ஆனால் எப்போது என்று எல்லாம் ஒண்ணும் நிர்ணயம் இல்லை என்றார்.

வில்வ மரம் பற்றி விசாரித்தோம். சுமார் 5 வருஷங்களாக அது பட்டுபோய்க்கொண்டு இருப்பதாயும் அப்போதிலிருந்து அந்த அக்ரஹாரத்தவர்களுக்கு துர்பிக்ஷம்தான் என்றும் சொன்னார். சமீபகாலம் வரை துளிர் கொஞ்சம் இருந்தது. இப்போது தான் முழுக்க எரிந்துபோய்விட்டது என்று அவர் சொன்னபின் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கனத்த மனசுடன் கிளம்பினோம்.

அடுத்த பதிவில் கொஞ்சம் பிரம்மேந்த்ராள் சரித்திரம்.

Wednesday, October 15, 2008

நெரூர் 1



மௌலி நெரூர் பத்தி எழுதச்சொல்லி கேட்டார். நானே எப்போதாவது அதைப்பத்தி எழுத உத்தேசித்து இருந்தேன். ஆனா இப்ப அதைப்பத்தி எழுதினா என் பையர் பத்தியும் எழுதாம இருக்க முடியாது. அதனால வேண்டாம்ன்னு பாத்தேன்.

ஊருக்கு போய் இங்கே வந்து பாத்தா என் ரூமே மாறிப்போச்சு. சாதாரணமா என் ரூம் கொஞ்சம் disorder ல இருக்கிறா மாதிரிதான் இருக்கும். ஆனா எனக்கு எது எங்கே இருக்குன்னு சரியா தெரியும். என் ரூமை ஒழிக்கிறேன்னு யாராவது வந்தா அவ்வளோதான். ரொம்பவே கஷ்டப்பட்டு போயிடுவேன். இதுக்காகவே யாரையும் உள்ளே விடறதில்லை. இந்த முறை ஊர்லே 4 நாள் இல்லைன்னு என் தங்கமணி பசங்களை விட்டு ஒழிக்கச்சொல்லிட்டாங்க.
எல்லாத்தையும் மெதுவா கண்டு பிடிச்சுண்டு இருக்கேன். என் usb தம்ப் ட்ரைவ் இன்னும் காணோம். மடி கணினில இருக்கிறத இப்ப கணினிக்கு கொண்டுவர முடியலை. நெட்டுக்கு அனுப்பிதான் வாங்கணும் போல இருக்கு.

மேசையில் வைச்சு இருந்த பகவத் கீதையை காணோம். கர்ம வழியை அதை பாத்துதான் பூர்த்தி பண்ண நினைச்சு இருந்தேன்.

அதனால சரி நெரூர் பத்தியே எழுதிடலாம்ன்னு இந்த பதிவு.

பையர் பத்தாவது வரை ஸ்டார் ட்ரெக், கம்ப்யூட்டர் விளையாட்டுன்னு சாதாரணமா மத்த பசங்களை போல்தான் இருந்தார். நான் அக்னி ஆதானம் செய்து கொண்ட போது திடீர்ன்னு எல்லாம் மாறிப்போச்சு. தெய்வத்தின் குரலை நான் படிச்சு மாறினாபோல அவரும் அதை படிச்சுட்டு "ஸ்கூல் போதும். நான் வேதம் படிக்கணும்"ன்னு ஆரம்பிச்சுட்டார். "இல்லைப்பா உடனடியா இப்படி முடிவு பண்ணாதே. சாதாரணமா அப்படி படிக்கிற வயசு போயிடுத்து. ஸ்கூல் முதல்ல முடி பாக்கலாம்" ன்னு சொன்னதை ஒத்துக்கலை. ஒரு வழியா எங்க வழிகாட்டி அவனை கன்வின்ஸ் பண்ணார். "இத பார் ஸ்கூல்ல படிப்பு வரலை, வேத பாடசாலைக்கு போறான்ன்னு இருக்கப்படாது. உன் திறமையை நிரூபிச்சுட்டு அப்புறம் போ" ன்னு சொல்ல பிறகு +2 எழுதி மாநில 4 வது ரேங்க் வந்தது. ப்ரெஞ்சு மொழியானதாலே அரசு பட்டியல்லே இருக்கலை. தமிழ் பிடிக்கும் நல்லா வரும்னாலும் இன்னொரு மொழி தெரியணும் என்கிறதுக்காக அதை படிச்சான்.

அதுக்கு அப்புறமா எங்கே வேதம் படிக்கிறது? இந்த வயசிலே யார் சேத்துப்பான்னு ஆராய்ச்சி செஞ்சதிலே பங்களூர் பக்கத்திலே ஒரு உறைவிட பள்ளி அதன் 25 ஆம் வருஷத்தை கொண்டாட ஒரு பாடசாலை துவக்கி, 10, +2 மாணவர்களை சேத்துக்கொண்டு கொஞ்சம் விசாலமான சிலபஸோட வேத பாடம் சொல்லிதராங்கன்னு கேள்விப்பட்டு அங்கே போய் சேர்த்தோம். வருஷத்துக்கு 5 மாணவர்கள்; 10 உபநிஷத், வியாகரணம், மீமாம்ஸை போல சாஸ்திரங்கள் கொஞ்சம் பரிச்சயம் படுத்தி, சம்ஸ்க்ருதமே பேசணும்; தினசரி கொஞ்சம் உடல் உழைப்பு - இப்படி சில ஆதர்ச சமாசாரங்களோட ஒரு பள்ளிக்கூடம். மாணவர்கள் மேலே படிக்க வசதி பண்ணி இருந்தாங்க. வாரம் ஒரு நாள் +2 வோ அல்லது கரஸ். பிஏ வோ படிக்க யாராவது பாடம் எடுப்பாங்க. இப்படி ஓபன் திட்டம் இருந்ததாலே பையர் 6 வருஷ பாடங்களை 4 வருஷத்திலே முடிச்சுட்டார். அடுத்து மேலே படிக்கணும்னு மீமாம்சையை தேர்ந்து எடுத்தார். மணி திராவிட் என்று மீமாம்சை வித்வான். இப்ப அந்த சப்ஜெக்ட்லே அவர்தான் அதாரிடி. காசியிலே இருக்கார்ன்னு கேள்வி பட்டு சரி காசிக்கு போக வேண்டியதுதான் ன்னு நினைச்சு இருந்தப்ப பகவான் செயலா அவர் அந்த குளிர் ஒத்துக்கலைன்னு சென்னைக்கு வந்து சம்ஸ்க்ருத கல்லூரிலே சேந்துட்டார். அவர் கிட்டே போய் கேட்டு சேந்துண்டாச்சு. அதனால சென்னை வாசம். கல்லூரி பக்கத்திலேயே ஒரு ரூம் பாத்து கொடுத்துட்டோம். மீமாம்ஸை 2 வருஷம் வாசிச்ச பிறகு அடிப்படை எல்லாம் கத்துக்கொடுத்துட்டேன். இனி நீயே படிக்க வேண்டியதுதான்னு சொல்லிட்டார். முன்னாலேந்தே வியாகரணத்துல ஒரு பிடிப்பு இருந்ததாலும் அதை பங்களுர்லே எடுத்த ஆசிரியருக்கும் இவருக்கும் பரஸ்பரம் பிடித்து போனதாலும் பெங்களூர் வாசம் ஒரு வருஷத்துக்கும் மேலே. இதுக்குள்ள திருமணமும் ஆகிவிட்டதால் வியாகரணத்தை முடிக்கும் தறுவாயில் அடுத்து எங்காவது செட்டில் ஆகிவிட்டு மேலே பாக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டார். கோவை கனபாடிகள் ஒருவர் எங்கிட்டே சொல்லாம நீ எதுவும் பண்ணாதேன்னு சொல்லி இருந்தார். அவர்கிட்ட என்ன சமாசாரம்ன்னு கேட்டப்ப "ஒரு தனவந்தர் நெரூர் ப்ரம்மேந்திராள் பக்தர். அங்கே ஒரு வேத பாடசாலை வரணுன்னு அவர் ஆசை. அதுக்கு வாத்தியாரா போறியா?” ன்னு கேட்டார். இவரும் ஒப்புகிட்டார். பகவத் சங்கல்பம் வேற மாதிரி இருந்து அந்த திட்டம் சரிப்பட்டு வரலை. தனவந்தரோட ஆடிட்டர் கனபாடிகளோட திட்டத்துக்கு ஒத்துக்கலை.

அதுக்குள்ள மனசிலே நெரூர் பிடிப்பு வந்து போச்சு. நான் சும்மாவானா அங்கே போய் உக்காந்துக்கிறேன். தானா பாடசாலை வரட்டும்ன்னு கூட சொல்லிட்டார்.
போய் பாக்கலாமென்னு நெரூர் போனோம்.
அனுமார் வால் மாதிரி கதை வளந்துடுத்து. இன்னும்2 பதிவு போடணும் போல இருக்கு!