Pages

Showing posts with label விஜய தசமி. Show all posts
Showing posts with label விஜய தசமி. Show all posts

Monday, October 10, 2016

விஜய தசமி.




ஸரஸ்வதி / ஆயுத பூஜை வாழ்த்துகள்!
நாளை விஜய தசமி.
முன் காலத்தில் அரசர்கள் ஒரு பழக்கம் வைத்து இருந்தார்கள். விஜயதசமி அன்று பக்கத்து நாட்டுக்குள் கொஞ்ச தூரமாவது ஆக்கிரமித்துவிட்டு திரும்புவார்களாம். சாதாரணமாக முடியாததை சாதிக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற பழக்கம் விட்டுப்போகக்கூடாது என்று கோட்பாடு!

நம்மில் பலரும் கூட ஆன்மீகம் எல்லாம் பெரிய விஷயம். நமக்கெல்லாம் சரிப்படாது என்று நினைக்கிறோம். அப்படி இல்லை. ஆன்மா இருக்கும் அனைவருக்கும் ஆன்மீகம் அவசியம்தானே! இன்றைக்கு அதை கொஞ்சமாவது புரிந்துக்கொள்ள ஒரு முயற்சியை செய்யலாம்!

ஆன்மீகம் இல்லைன்னாலும் வேறு எதையாவது முயற்சி செய்யலாம். இது வரை இது நமக்கு சரிப்படாது என்று நினைத்த ஒன்றை முயற்சி செய்யலாம்!

முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்!

Monday, October 14, 2013

விஜய தசமி



எல்லாருக்கும் விஜய தசமி நல்வாழ்த்துகள்!

கடந்த ஒன்பது நாளும் சக்தி உபாசனையில் மனம் போயிருக்கும்!
அதோட லாஜிக்கல் முடிவு என்ன? வெற்றிதானே? இந்த பத்தாவது நாள் வெற்றியை குறிக்கிற நாள்தான். ஒரு விஜய தசமியில்தான் தேவியும் மகிஷாசுரனை வெற்றி கொண்டாள். கல்கத்தா போன்ற இடங்களில் இந்த கருத்தே முக்கியமாக இருக்கிறது.

இந்த நாளை ராமன் ராவணனை வெற்றி கொண்ட நாள் என்கிறார்கள். தத்வார்த்தமாக தசரா என்பது தச ஹரா= பத்து விஷயங்களை அடக்குவது என்று சொல்லி அந்த பத்து விஷயங்களாக  காமம், க்ரோதம், மோகம், லோபம் (பேராசை), மதம் (அளவு மீறிய பெருமை),மாத்சர்யம் (பொறாமை), ஸ்வார்த்தம் (சுயநலம்), அந்நியாயம், அமனவ்தா (கொடுமை இழைத்தல்), அஹங்காரம் ஆகியவற்றை குறிப்பிடுகிறார்கள். 

ஒரு விஜயதசமியில்தான் பாண்டவர்களும் தம் ஆயுதங்களை மீட்டுக்கொண்டு அஞ்ஞாதவாசத்தில் இருந்து வெளி வந்தனர்.

ஸ்காந்த புராணத்தில் ஒரு சுவையான கதை இருக்கிறது.
இப்போதைய ஔரங்காபாத் அருகே ப்ரதிஷ்டபுரம் என்று ஒரு நகரம் முன் காலத்தில் இருந்தது. அங்கே இருந்த தேவதத்தன் என்பவர் மகன் கௌத்ஸன் ரிஷி வரதாந்து என்பவரை அணுகி வித்யை கற்றான். பதிநான்கு வித்யைகளை கற்று திரும்பும்போது "குருதக்ஷிணையாக என்ன தர வேண்டும்?" என்று கேட்டான். குரு "அப்பா வித்யை கற்று கொடுத்ததுக்கு எல்லாம் மாற்று பெறுவது சரியில்லை. அதனால் ஒன்றும் வேண்டாம்” என்றார். விடாமல் கேட்டுக்கொண்டு இருந்த மாணவன் மீது கோபம் கொண்டு, “சரி. பதிநான்கு  வித்யைகளுக்கு 14 கோடி பொன் கொடு” என்றார்! சொன்ன பிறகு பச்சாதாபம் ஏற்பட்டாலும் என்ன செய்ய முடியும்? கௌத்ஸன் ”சீக்கிரத்தில் ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறி விடை பெற்றான்.
அந்த தேசத்தை ஆண்டுக்கொண்டு இருந்தவர் ராமருடைய முன்னோர்களில் ஒருவரான ரகு. ரகு குல திலகா என்று ராமனை அழைக்கிறோம் இல்லையா. அந்த ரகு. ரகு வள்ளல் என்று பெயர் பெற்று இருந்தாலும் அப்போதுதான் விஶ்வஜித் யாகத்தை முடித்து இருந்தார். கஜானாவில் இருந்த பொருள் எல்லாம் இதற்கே செலவாகிவிட்ட்து. மூன்று நாட்களில் தருவதாகச்சொல்லி ரகு கௌத்ஸனை அனுப்பினார். பின் இந்திரனை சந்தித்து பொருள் கேட்கப்புறப்பட்டார். வேண்டுகோளை ஏற்ற இந்திரன் குபேரனை அழைத்து பொன் மாரி பெய்யச்சொன்னார். அவன் ஷனு, அபதி மரங்களில் பொற்காசுகளை பெய்ய வைத்தானாம். (பணம் மரத்திலா காய்க்கிறது என்ற சொலவடை இதுக்கு அப்புறம் வந்து இருக்கலாம்:)



காசுகளை எடுத்துக்கொள்ளும்படி ரகு கைத்ஸனுக்கு சொன்னார். கௌத்ஸன் அவற்றை சேர்த்துக்கொண்டு தன் குருவிடம் கொடுத்தான். ஆச்சரியமடைந்த குரு அவற்றை எண்ணிப்பார்க்க 14 கோடிக்கும் அதிகமாகவே நிறைய இருந்ததாம். அவர் 14 கோடியை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி உன்னுடையது என்றார். கௌத்ஸன் பணம் பெரிதல்ல, மானமே பெரிது, குரு தக்‌ஷிணை கொடுக்க முடிந்ததே சந்தோஷம் என்றான். "அது சரிப்பா, ஆனா நான் கேட்டதுக்கு மேலே கொடுத்து இருக்கிறாயே, அது வேண்டாம்" என்றார். கௌத்ஸன் ராஜாவிடம் அதிகப்படி பொன்னை எடுத்துக்கொள்ளச்சொன்னான். அவரோ ”தானம் கொடுத்ததை திருப்பிப்பெறுவதில்லை; சாஸ்த்ர விரோதம்” என்றார். கடைசியில் மீதி பொன்னை அயோத்யாவாசிகளுக்கு தானம் செய்தானாம் கௌத்ஸன்! இது நடந்தது ஒரு விஜயதசமி அன்று!
ஆகவே இன்றும் வட, மேற்கு பாரதத்தில் ஆஸ்வின சுக்ல தசமி (விஜயதசமி அன்று ) அபதி மர இலைகளை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்கிறார்கள். அதை தங்கமாக கருதுகிறார்கள்.
இந்த கதை ஒரு பக்கம் இருக்கட்டும்.
முன் காலத்தில் அரசர்கள் ஒரு பழக்கம் வைத்து இருந்தார்கள். விஜயதசமி அன்று பக்கத்து நாட்டுக்குள் கொஞ்ச தூரமாவது ஆக்கிரமித்துவிட்டு திரும்புவார்களாம். சாதாரணமாக முடியாததை சாதிக்க வேண்டும் என்ற பழக்கம் விட்டுப்போகக்கூடாது என்று கோட்பாடு!
நம்மில் பலரும் கூட ஆன்மீகம் எல்லாம் பெரிய விஷயம். நமக்கெல்லாம் சரிப்படாது என்று நினைக்கிறோம். அப்படி இல்லை. ஆன்மா இருக்கும் அனைவருக்கும் ஆன்மீகம் அவசியம்தானே! இன்றைக்கு அதை கொஞ்சமாவது புரிந்துக்கொள்ள ஒரு முயற்சியை செய்யலாம்!