Pages

Showing posts with label அத்ருஷ்டம். Show all posts
Showing posts with label அத்ருஷ்டம். Show all posts

Wednesday, January 16, 2013

அத்ருஷ்டம் - வாசனைகள் நீக்கம்



இந்த வாசனைகள் நம்மை ஆட்டி வைக்குதுன்னு தெரிஞ்சதும், அப்படின்னா அதை நாசம் செய்யலாமேன்னு  இயல்பா  தோணும். ம்ம்ம்ம் அது சரிதான் . ஆனா அது ரொம்பவே அட்வான்ஸ்ட் லெவல்.

நாம செய்யக்கூடியது கெட்ட வாசனைகளை கையாளுவதே. நல்ல வாசனைகளையும் ஒரு ஸ்டேஜில் விடத்தான் வேண்டும்னாலும் அது கடைசியில் வருவது. இப்போதைக்கு கெட்ட வாசனை. கெட்டதுன்னு எப்படி தெரியும்ன்னா… தெரியும், அவ்வளோதான். திருடனுக்குக்கூட  தான்  திருடுகிறோம் அது தப்புன்னு  நிச்சயமா உள்ளுக்குள்ள  தெரியவே தெரியும். வெளியே சும்மா வாதத்துக்காக  தான் செய்யறது சரிதான் ன்னு விவாதம் செய்யலாம்.

சரி, இப்படி வெச்சுக்கலாம். தப்பு ன்னு நமக்கு தெரிகிற சமாசாரத்தை விலக்க முயற்சி செய்யணும். அது நிறையவே இருக்கிறதால நாம் அது நிஜமா தப்பா ன்னு விவாதிக்க வேண்டாம். ஒவ்வொண்ணா நீக்கிக்கொண்டு வரும் போதே எல்லாம் சரியாயிடும்.
உதாரணமாக குடி. மதுவைத்தான் சொல்லறேன். இந்த பழக்கம் நமக்கு இருக்கா?  இது தப்புன்னு தோணுதா? அதை நீக்க முயற்சி செய்யலாம். இது தப்பில்லைன்னு தோணினா? சும்மா விடுங்க. அடுத்து நாம செய்யறதுல எது தப்புன்னு தேடலாம். ஏதாவது ஒண்ணு ரெண்டு நீக்க முடியுதான்னு முதல்ல பார்க்கலாம். இருந்தாலும், சரி சும்மா உதாரணத்துக்கு மது குடிக்கிறது தப்பு, அதை நீக்கணும். ரைட்!

மது குடிக்கிறது என்கிறது ஒரு வாசனையோட வெளிப்பாடு. முன்னே இதே ஜன்மத்திலேயோ கடந்த  ஜன்மங்களிலேயோ குடிச்சு குடிச்சு பழக்கம்.  குடிக்கிறது என்கிற விருத்தி, அடிக்கடி நடக்க அது சம்ஸ்காரமா – பண்புப்பதிவா ஆயிடுத்து. அதனாலது பலம் பெற்று வாசனை யாகிடுத்து.  அப்ப அதை விட முடியலை. இதே பழக்கம் இப்ப இந்த ஜன்மத்திலேயும் தொடருது. ஆனா இப்ப நமக்கு  இது தப்பு, விட்டுவிடணும் ன்னு தோணியாச்சு. அதை செயல்படுத்தணும். அதாவது வாசனையால தூண்டப்பட்டு எப்போல்லாம் குடிக்கணும்ன்னு தோணுதோ அப்பல்லாம் அதுக்கு எதிரா வேலை செய்யணும். அதாவது நம் வாசனைக்கு எதிரா செயல்படணும்.

அவ்வளோதான்!

என்னது அவ்ளோதான்னா என்ன அர்த்தம்? அது எவ்வளோ கஷ்டம் தெரியுமா? சும்மா இப்படி சொல்லிட்டு போனா என்ன அர்த்தம் என்றெல்லாம் சொல்லத்தோணுதா?
கஷ்டம்தான் யார் இல்லைன்னு சொன்னாங்க? வாசனைகளை  நீக்குவது அவ்வளவு சுலபமில்லை. இருந்தாலும் அது சாதிக்க முடியாத விஷயம் இல்லை. சிரம சாத்தியம் ன்னு சொல்வாங்க. கஷ்டப்பட்டு செய்யக்கூடியது.

எப்படி குடிக்காம இருக்கிறது என்கிறது ஒரு ஸ்பெஷல் பெரிய சப்ஜெக்ட். இங்கே உதாரணம்தான் காட்ட முடியும். செயல்முறைக்கு கொண்டு வருவது ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒவ்வொரு வாசனைக்கும் தனித்தனி வழியாக இருக்கும். அத்தனையும் இங்கே சொல்ல முடியாதில்லையா? 

பொதுவா சொல்ல, விட வேண்டிய வாசனையை விட்டுவிடுவேன் ன்னு ஒரு சங்கல்பம் மனசில வரணும். தினசரி எழுந்திருக்கும் போது இன்ன வாசனைக்கு இன்னைக்கு இடம் தர மாட்டேன் ன்னு  உறுதியா நமக்கு நாமே சொல்லிக்கணும். ஒரு நாளுக்கு தேவையானால் 3-4 முறை கூட சொல்லிக்கலாம். ஆனால் ஆரம்பத்திலே சின்னதா இன்னைக்குன்னு மட்டும் போகஸ் இருக்கலாம். இனி குடிக்கவே மாட்டேன்னு சொல்கிறது பெரிய இலக்கா தோணும், அதை மனசு ஏத்துக்காதுன்னு சொல்கிறாங்க. நாம் ஒவ்வொரு சின்ன சின்ன படியா போகலாம். சாதிக்க வாய்ப்புகள் அதிகமா இருக்கும்.

ஒத்தர் திருப்பதி மலையை நடந்து ஏறுவதா முடிவு பண்ணார். அவரோட நண்பரையும் சேர்த்துக்கொண்டார். நண்பருக்கு ஒரு ஆசை, வேண்டுதல் இருந்ததே தவிர பயம். தான் இதய நோயாளி, முடியாதுன்னு ஒரு நினைப்பு. ரெண்டு  பேரும் மலையடிவாரத்துக்கு போய் சேர்ந்தார்கள். நண்பர் மலைத்து போய் விட்டார். முடியவே முடியாது நான் வரலை நீ போய் வா ன்னு சொல்லிட்டார். இவர் விடலை. சரி சரி நானே முழுக்க மலை ஏறிக்கொள்ளறேன். நீ எவ்வளோ தூரம் கூட வர முடியுமோ வா ன்னார். நண்பரால ஒண்ணும் சொல்ல முடியலை. காலை வாரிட்டயேன்னு திட்டாம இருந்தா சரி ன்னு கிளம்பிட்டார். நூறு படி ஏறினதும் அவ்ளோதான்னார். அதெல்லாம் சரி, இன்னும் எவ்வளோ படி ஏற முடியும்ன்னு இவர் கேட்டார். இன்னும் அம்பது படி

சரி வா போகலாம். அம்பது படி ஆனதும் அவ்வளோதான்னார். சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம். எடுத்தார்கள். இன்னும் கொஞ்ச தூரம் கூட வாயேன். எவ்வளவு படி ஏற முடியும். சரி இன்னொரு நூறு படிகள். சரி வா. இப்படி கொஞ்சம் விட்டு விட்டு ஏறினதும் ஒரு நம்பிக்கை வந்துடுத்து. மீதி அத்தனை படிகளும் ஏறி மேலே போய் சேர்ந்தார்கள்.
இப்படியாக ஒரு சின்ன இலக்கை அப்போதைக்கு அப்போது வைத்துக்கொள்வது, நாம் முடியாது என்று நினைக்கும் வேலையை எளிதாக ஆக்குகிறது!

முன்னே ஒரு வழியில் பழகி பழகி ஒரு வாசனை வந்தது என்றால், இப்போது எதிர் வழியில் பழக பழக அது நடுவுக்கு வந்து பின் காணமல் போகும். இதுக்கு எவ்வளவு நாள் ஆகும் என்றால் அதுக்கு பதில் சொல்வது சுலபமில்லை. முன்னே எத்தனை ஜன்மங்களில்  இந்த வாசனை தொடர்ந்து வந்திருக்கோ யாருக்கு தெரியும்? அதை பொருத்தும் செய்கிற எதிர் வினையின் தீவிரத்தையும் பொருத்தும்  இது கை கூடும். இந்த வாசனைகளை அழிக்கிறது பெரிய சப்ஜெக்ட் என்றாலும் அதில் ஒரு சின்ன படியை பார்த்தோம்!

Friday, January 11, 2013

அத்ருஷ்டம் - 3



அதெப்படி மாற்றுவது?
புத்தி பூர்வகமாக சரியான வழியில் செயல்பட வேண்டும். வாசனை நம்மை பழக்கமான வழிக்கு கொண்டு செல்லவே முயலும். நாம் வலுக்கட்டாயமாக மாற்று வழியில் அதை செலுத்த வேண்டும். முன்னே பழகி பழகி ஒரு வழியில் சென்றது இப்போது மெல்ல மெல்ல வேற்று வழியில் பழக ஆரம்பிக்கும்.
--
இது முடியவே முடியும். கொஞ்சம் சிரம சாத்தியமா இருக்கலாம்.  இருந்தாலும் சாத்தியம்தான். முயற்சி செய்யணும்.
எது வரை முயற்சி செய்யணும்?
ஒரு மரத்துக்குள்ள ஆணி அடிச்சு இருக்கு. அதை பிடுங்கணும். சமீபத்தில குறைவான ஆழத்துக்கு அடிச்சு ஆணியானால் சுலபமாக பிடிங்கிடலாம். நல்லா ஆழமா வெகு நாட்களுக்கு முன்னே அடிச்சு ஆணியா இருந்தா அதை பிடிங்கறது சுலபமா இராது.
இழுத்துப்பார்க்கிறோம். வெளியே வரலை. விட்டுவிட்டுப் போயிடுவோமா? இன்னும் பலமா பல முறை இழுக்கத்தான் பார்ப்போம்.
அதே போல நம்மோட குறைகள் பலதும் நமக்கு தெரிஞ்சுதான் இருக்கு. அதை மாற்றப்பார்க்கிறோம். முடியலை. முடியலைன்னு விட்டுவிடக்கூடாது. மாற்றம் நல்லதுன்னா இன்னும் இன்னும் முயற்சியை அதிகமாக்கி, மாற்றத்தான் வேணும்.
இத்தோட மாற்றுப்பக்கத்தையும் பார்க்கலாம். மத்தவங்க நமக்குத் தகுந்தாப்போல மாறணும்ன்னு நாம் பல சமயம் விரும்பறோம். அவங்க அப்படி மாறலையேன்னு வருத்தப்படறோம். கோபப்படறோம். நாம மாற பாத்தாதான் அதில் இருக்கிற கஷ்டங்கள் தெரியும்! அதனால  மத்தவங்க மேல வருத்தப்படறதுல பிரயோஜனமே கிடையாது. “பாவம் மாற முடியலியே! பகவானே கொஞ்சம் அனுக்ரஹம் பண்ணு” ன்னு கேட்டுக்கலாம்.
வ்ருத்தி, சம்ஸ்காரம், வாசனை பத்தி பாத்தோம். இவை நமக்கு ஏன் இப்படி நடக்குதுன்னு புரியாத சில விஷயங்களை தெளிவாக்குது.
கர்மா ன்னு பொதுவா சொல்லப்படர சமாசாரமும் இப்படித்தான். எதிர்வினைகள் ஒரே ஜன்மத்திலேயே ஏற்படாமல் போகலாம். அவை அடுத்த ஜன்மத்தில நிச்சயம் தொடரும். இந்த ஜன்மத்துல  செய்த வினைகள் மட்டுமே நம்ம பார்வைக்கு தெரியறதால் குழப்பம் ஏற்படுது. இந்த தொடரும் எதிர்வினைகளும் அத்ருஷ்டம். “எனக்கு ஏன் இப்படி” ன்னு புலம்புகிற சமாசாரத்துக்கு இங்கேதான் விடை இருக்கு!
இப்படி அத்ருஷ்டம் அத்ருஷ்டம் ன்னு சொல்லிக்கொண்டே போனால் எவ்வளவுதான் அத்ருஷ்டம் இருக்கு? ன்னு கேட்டா…..
புருஷ சூக்தத்தில இதுக்கு விடை இருக்கு. கால் பாகம் பிரபஞ்சம்தான் நாம் புலன்களால உணரக்கூடியதாம். மீதி அழியாதது, திவ்யமானது என்கிறது வேதம்.
சரி சரி, இந்த வாசனை, எதிர் வினை எல்லாம் எப்படி ஜன்மத்திலேந்து இன்னொரு ஜன்மத்துக்கு  தாவுதுன்னு கேட்டா…
அதுக்கு நம்மோட சரீரங்களைப் பத்தி தெரியணும்.
நாம் பார்க்கக்கூடிய இந்த உடம்பு – கண் காது மூக்கு முதலானது ஸ்தூல சரீரம். இதில ப்ராண சக்தி – உயிர் என்கிறோமே அது- இருக்கும் வரை இதுவும் இருக்கும். இந்த மண்ணில் கிடைக்கிற தான்யங்கள் முதலான உணவை உண்டு இது வளரும். ப்ராண சக்தி போன பின் எரிக்கப்பட்டோ, புதைக்கப்பட்டோ, அந்த மண்ணிலேயே சேர்ந்து விடும்.
நாம் காண முடியாத …. ஹிஹிஹி இதுவும் அத்ருஷ்டம்தான்…. அளவுக்கு நுட்பமானது –சூக்‌ஷமமானது – சூக்‌ஷ்ம சரீரம். ப்ராணன் முதலான ஐந்து வாயுக்கள், கர்மம் செய்ய உடலுக்கு  உதவும் ஐந்து சக்திகள்- இவற்றுக்கு கர்மேந்திரியங்கள் என்று பெயர்- உலகில் உள்ளதை அனுபவிக்க  உதவும் நுகர்தல் முதலான ஐந்து செய்கைகளுக்கு உதவுவன- இவை ஞானேந்திரியங்கள் எனப்படும்- இவை அடங்கியது சூக்‌ஷ்ம சரீரம்.
அடுத்தது காரண சரீரம். இதோட முக்கிய அங்கம் அஹங்காரம்.
நான் ன்னு ஒண்ணு இருக்கு இல்லையா? மற்றதெல்லாம் இருக்கிறதோ இல்லையோ, நமக்கு இந்த நான் இருக்கிறதுல மட்டும் சந்தேகம் இருக்கிறதில்லை. இப்ப ஒரு மீட்டிங் நடக்குது. நாமும் உட்கார்ந்து இருக்கோம். மின் தடை ஏற்படுது. கன இருட்டு. ஒண்ணுமே தெரியலை. அப்ப நாம் இருக்கோமா ன்னு ஒரு சந்தேகம் யாருக்கும் ஏற்படுதா? அட, ஒரு விபத்துல மாட்டிக்கிறோம்; குளிர் காலம். உடம்பே மரத்து போயிடுது. உணர்வு வரப்ப நாம் இருக்கோமா ன்னு சந்தேகம் வருமா?
இந்த நான் என்கிறதுதான்  அஹங்காரம்.
காரண சரீரத்தோட இன்னொரு அங்கம்தான் கன்மம். கன்மம்? கர்மம். சரியா ஊகிச்சுட்டீங்க. இப்ப கொஞ்சம் நேரம் முன்னே படிச்ச எதிர்வினை, வாசனை எல்லாம்தான் கன்மம்.இந்த காரண சரீரம் ஒரு பெட்டி மாதிரி. ரெபாசிடரி ன்னு ஆங்கிலத்துல சொல்லறோமே அது. வ்ருத்திகள் அடிக்கடி நடந்து சம்ஸ்காரமா பலப்பட்டு வாசனையாக  வளர்ந்தபின்னே அதை இந்த பெட்டியிலே போட்டு வெச்சுக்கும். இந்த வாசனை அந்த ஜன்மத்திலேயே வெளிப்பட்டு கொண்டும் இருக்கும். அடுத்த ஜன்மத்திலே வெளிவரவும் வரும். சில சமயம் நடப்பு ஜன்மத்திலே வெளி வரலைன்னாக்கூட அடுத்த ஜன்மங்களிலே வெளி வரும்! இப்படி வெளி வரும் வாசனைகளுக்கு அஹங்காரம்தான் ரொம்ப ப்ரெண்டு! நான் கோபக்காரன் தெரியுமா, ஜாக்கிரதை. நான் எவ்வளோ அறிவாளி தெரியுமா? நான் எவ்வளோ நல்லா பாடுவேன் தெரியுமா? இப்படிப்பட்ட ஸ்டேட்மெண்ட் எல்லாம் கேட்டகறப்பவே இது நல்லா தெரியும்!
ஆச்சரியமான விஷயம் என்னன்னா இந்த காரண சரீரம் தனக்கு  தகுந்தாப்போன்ற சரீரத்தை அடுத்த ஜன்மாவுக்கு தேர்ந்தெடுத்துக் கொள்கிறது! அதை வெறும் சங்கல்பத்தாலேயே செய்து கொள்கிறது! அடிதடி சண்டையில இறங்கற சம்ஸ்காரம் இருந்தா அதுக்கு தகுந்தாப்போல…. சாதுவா இருந்தா அதுக்குத் தகுந்தாப்போல…
இதுக்குத்தான் நம் நடத்தையை வெகு ஜாக்கிரதையாக இந்த ஜன்மாவிலேயே கண்காணிச்சு சரி செய்யணும் என்கிறது. இப்போ இது நமக்கு புரிகிறது, தெரிகிறது.. இப்பவே இதை செய்வோம்!
முன்னே விதி என்கிறதை ஒரு தொடர்ச்சிதான் என்றும் இப்ப எப்படி நடந்துக்கணும்ன்னு பார்த்ததை ஒட்டியே இதுவும் அமைகிறது என்பது ஆச்சரியமில்லை.
 ---
குறிப்பு: இணையம் படுத்தின படுத்தலில் கிடக்கட்டும்ன்னு இரண்டு போஸ்ட் சமாசாரம் ஒண்ணா போட்டாச்சு! மன்னிக்கவும்.

Thursday, January 10, 2013

அத்ருஷ்டம் -2



சுப்பாண்டி அருமையான கேள்வியை கேட்டு இருக்கார். இப்படி சின்ன வயசிலே இப்படி அருமையான கேள்வி எல்லாம் கேட்கிறதை நினைச்சு சந்தோஷமா இருக்கு! சுப்பாண்டியின் சிந்தனைகள் வளர பகவானை வேண்டிக்கிறேன். அடுத்த கேள்வி……
:-))
சும்மா ஜோக்குக்கு!

பார்க்கிற பார்வை பொருத்து பதில் இருக்கு. அத்வைத நோக்கில ப்ரம்ஹம் ஒண்ணுதான் இருக்கு வேறு எதுவுமில்லை. அதனால் ஜீவனும் இல்லை பிறப்பும் இல்லை.

அடுத்த நிலையில...
ஜீவனும் பரமாத்மாவும் இருக்கு. ஜீவர்கள் படிப்படியாக முன்னேறி இறை நிலை அடையணும். ப்ரம்மம் ஸத்யம். அது அனாதி. அதாவது அதுக்கு துவக்கமும் இல்லை  முடிவும் இல்லை. அதே போல மாயைக்கும் துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை. இந்த மாயைதான் அகங்காரம்ன்னு ஒண்ணை உருவாக்கி ஜீவனுக்கு ஒரு தனி இருப்பை கொடுக்குது. இந்த மாயை உருவாக்கிய ஜீவர்களும் அனாதி. ப்ரலய காலத்தில் கூட இந்த ஜீவர்கள் “மெழுகு உருண்டையில் இருக்கிற தங்க துகள்கள் போல” இருந்து பின்னால் மீண்டும் வெளிப்படுவர். மாயையால் தூண்டப்பட்டு செய்யக்கூடாத்தை செய்து கர்ம வினை சம்பாதித்திக்கொண்டு பிறப்பு இறப்பில் மாட்டிக்கொள்கிறார்கள். படிப்படியாக அனுபவத்தில் முன்னேறி, நல்ல வாசனைகள் அமையும் பட்சத்தில் ஆன்ம நாட்டம் ஏற்பட்டு அந்த பாதையில் போக ஆரம்பித்து,  ஏதோ ஒரு பிறப்பில் மாயையை நீக்கிக்கொண்டாலும் நீக்கிக்கொள்வார்கள். இப்படி செய்வது மிகச்சில ஜீவர்களே! அதனால ஜீவர்களுக்கும் உலக இயக்கத்துக்கும் குறைவிருப்பதில்லை.

நாம் பார்க்கிற சாதாரண உலக நிலையில் இருந்து பதிலை பார்க்கலாம்.
ஶ்ரீமத் பாகவதத்திலே ஒரு பகுதி. புத்தகத்தை சரியான ரெபரென்ஸ் கொடுக்க தேடினா அகப்படலை!
ஆரம்பத்தில் ப்ரம்மா சிருஷ்டிச்சவங்க எல்லாம் சம்சாரத்தில் ஈடு படாமல் ஞான நாட்டத்துடனே இருந்து ஞானிகளாகி போனார்கள். அடடா, நம்ம தொழில் பாதிக்கப்படுதேன்னு ப்ரம்ஹா கவலைப்பட்டார்.  அடுத்து வந்த ப்ரஜைகள்  மாயையில் விழுந்தாங்க.. அதனால அவங்க கர்மங்களில் ஈடுபட்டு  பிறப்பு இறப்பில் சுழல ஆரம்பித்தார்கள்.

Wednesday, January 9, 2013

அத்ருஷ்டம்





திடீரென்று ஒருவருக்கு லாட்டரியில் கோடி ரூபாய் பரிசு விழுகிறது. நாம் அவரை அத்ருஷ்டக்காரர் என்கிறோம். ஒருவருக்கு வீட்டில நாள் முழுசும் கரண்ட் இருக்கு. அவர ரொம்ப  ரொம்ப அத்ருஷ்டக்காரர்ன்னு சொல்லறோம்.

இந்த அத்ருஷ்டம்ன்னா என்ன?

த்ருஷ்டம் ன்னா பார்க்க முடிவது. அத்ருஷ்டம் பார்க்க முடியாதது.

பலமான காத்து அடிக்கறது; மரக்கிளை முறிஞ்சு  கீழே விழுகிறது. இது பார்க்க முடிகிறது. இது த்ருஷ்டம். காத்து அடிச்சது; அதனால் மரகிளை முறிஞ்சதுன்னு சொல்லிடலாம்.
மேலே ஒரு பந்தை விட்டு எறிகிறோம். அது மேலே ஓரளவு போய் அப்புறம் கீழே விழுகிறது. ஏன் கீழே விழுந்தது? எந்த சக்தி அதை கீழே விழப்பண்ணியது? புவி ஈர்ப்பு விசைன்னு சொல்வாங்க. இதை பார்க்க முடியுமா? முடியலை. சில சோதனைகள் எல்லாம் செய்து அப்படி ஒரு விசை இருக்குன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்லுவாங்க. நாமும் ஒத்துக்கிறோம்.

ஆக பார்க்க முடியாத ஒண்ணு இல்லைன்னு இல்லை. அது இருக்கலாம். அதை நேரடியாக பார்க்க முடியாது போகலாம். நிரூபணம் செய்யவும் அறிவியலால முடியாமல் போகலாம்.
இப்ப, இந்த கால கட்டத்தில அறிவியலால நிரூபிக்க முடியாததை ஒப்புக்கொள்ள முடியாதுன்னு சொல்ல முடியாது. கொஞ்சம் யோசிச்சாலே தெரிஞ்சுடும். தினசரி புதுசு புதுசா ஏதோ அறிவியல் கண்டு பிடிப்புகள் வந்து கொண்டே இருக்கு. நேத்து இல்லைன்னது இன்னைக்கு, ஆமாம் இருக்கு ன்னு சொல்கிறாங்க. ஒரு விஷயம் இருக்குன்னு சொல்லறது சுலபம்; இல்லைன்னு சொல்லறது கஷ்டம்.

ரொம்ப சாதாரணமா பலரும் கேட்கிற கேள்வி, ஏன் இப்படி எனக்கு  நடக்குது? நான் நல்ல பையனாத்தானே இருக்கேன், இருந்தேன்? இப்படி கஷ்டம் ஏன் வரணும்?
அல்லது ஒரு சின்ன குழந்தை ஏதோ வியாதியால கஷ்டப்படுது. ஏன் இந்த குழந்தை கஷ்டப்படணும்? அது என்ன தப்பு செஞ்சது? பிறந்து கொஞ்ச நாள் கூட ஆகலையே? அதுக்குள்ள எப்படி தப்பு செய்ய முடியும் ஏன்  இப்படி கஷ்டம் அனுபவிக்கணும்?
அல்லது, இப்பல்லாம் மீடியாக்கள் தேடி தேடி இருக்கிற இல்லாத பால்வன்முறைகளை எல்லாம் எழுதறாங்க இல்லையா? இதெல்லாம் ஏன் நடக்குது?

இதையெல்லாம் மேற்கோள் காட்டியே சில நாத்திகவாதிகள் ஒரு வாதத்தை வைக்கறாங்க! “கடவுள் கருணை வடிவானவர்ன்னா ஏன் ஜனங்க இவ்வளோ கஷ்டப்படுறாங்க?”
உப்பு சாப்பிட்டவன் தாகம் எடுத்து தண்ணி குடிப்பான் என்கிறது போல , நான் செய்கிற எல்லா செயல்களுக்கும் பலனை அனுபவிச்சுத்தானே ஆகணும்? 

ஆனா நாம் இந்த ஜன்மத்துல செய்கிற விஷயங்களை மட்டுமே தெரியுது என்கிறதால கணக்குல எடுத்துக்கிறோம். ஆன்மீகம் என்ன சொல்லுதுன்னா  ஒரு ஜீவனுக்கு ஜன்மங்கள் பலது உண்டு. இறப்பு பிறப்பு என்பது சட்டையை மாத்தற மாதிரிதான்.  ஆகவே செயல்களுக்கு ஒரு தொடர்வு – கன்ட்யூனுடி – இருக்கு. அதே போல எதிர்வினை – செயல்களின் பலன்களுக்கும் ஒரு தொடர்வு இருக்கு.

ஒரு வேலையை திரும்பத்திரும்ப செய்கிறோம். இதுக்கு டெக்னிகலா வ்ருத்தி என்கிறாங்க. ஒரு விஷயத்தை தொடர்ந்து எண்ணுகிற போது அதை சித்த விருத்தி ன்னு சொல்கிறோம் இல்லையா அது போல. அடிக்கடி செய்யும் செயல்கள் கொஞ்சம் கொஞ்சமா மெருகேற்றப்படும். பாடப்பாட பாட்டு என்கிறோமே. பாடப்பாட இன்னும் சுளுவாக பாட முடிகிறது. இது போல அடிக்கடி செய்ய அது உள்ளே பதிந்துவிடுகிறது. இப்படி பதிந்ததை பண்புப்பதிவு என்கிறார்கள். சம்ஸ்காரம் என்றும் சொல்வர்.

 இது அடுத்த ஜன்மத்திலும் பிரதி பலிக்கும். இப்படிப்பட்டவர்கள் இசை கற்கப்போக வெகு சுலபமாக கற்றுக்கொண்டு விடுவர். பார்ன் ஆர்டிஸ்ட், ஜீனியஸ் என்றெல்லாம் சொல்கிறோம் இல்லையா? அதே!
எதை திருப்பித்திருப்பி செய்கிறோமோ அது நல்லதோ கெட்டதோ எப்படி இருந்தாலும் தொடர்கிறது. பிறவி குணம் என்று கூட சொல்வார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட மாறு பட்டு இருக்கிறார்கள். சிலருக்கு சின்ன வயசிலிருதே திருட்டு குணம் வருகிறது. எப்படி இது வந்தது என்று குடும்பத்தினர் ஆச்சரியப்படுவர். இப்படி இருக்கிறதை வாசனை என்கிறார்கள். முன்னே சொன்ன விருத்திதான் பலப்பட்டு வாசனை ஆகிறது.
இந்த வாசனைதான் நம்மை சில விஷயங்களை சில வழிகளில் செய்ய வைக்கிறது. இது நல்லதாவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். நல்லதென்றால் அப்படி வைத்துக்கொள்ளலாம், இல்லையா? கெட்டதென்றால் முயற்சி செய்து மாற்றிக்கொள்ளலாம்.
அதெப்படி மாற்றுவது? 

புத்தி பூர்வகமாக சரியான வழியில் செயல்பட வேன்டும். வாசனை நம்மை பழக்கமான வழிக்கு கொண்டு செல்லவே முயலும். நாம் வலுக்கட்டாயமாக மாற்று வழியில் அதை செலுத்த வேண்டும். முன்னே பழகி பழகி ஒரு வழியில் சென்றது இப்போது மெல்ல மெல்ல வேற்று வழியில் பழக ஆரம்பிக்கும்.....