Pages

Saturday, September 30, 2017

ஸரஸ்வதி பூஜை





நேற்றும் இன்றும் ஸரஸ்வதி பூஜை பலரும் வீட்டில செஞ்சிருப்பீங்க.
ஸரஸ்வதி பூஜைன்னா எனக்கு நினைவுக்கு வரது நண்பர் ஶ்ரீரங்கம் மோஹன ரங்கன். (அவர் பெயரை எப்படி எழுதனும் என்கிறதுல அவர் குறிப்பா இருக்கார். அவரை மோஹன் ன்னோ ரங்கன்னோ கூப்பிட்டுவிடக்கூடாது! சரியாத்தான் எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன்... இல்லை மோகன ன்னு எழுதறாரா? நினைவுக்கு வரலை. பார்க்கலாம். தேவையானா அப்புறம் திருத்தலாம்!)
ஏன் வருஷா வருஷம் இந்த காலகட்டத்தில அவர் நினைவுக்கு வரார்ன்னா, ஸரஸ்வதி பூஜைன்னா அன்னைக்குன்னு விசேஷமா நிறைய படிக்க வேண்டாமா? அதுதானே சரியான ஸரஸ்வதி பூஜையா இருக்கும்ன்னு கட்சி கட்டுவார்! அதுலேயும் ஒரு லாஜிக் இருக்கில்லை? :-)
கோளாறான சிந்தனைகள் அடிக்கடி வரும்னாலும் எல்லாத்தையும் வெளியே பகிர்ந்து கொள்ளறது இல்லை. உங்க எல்லார் மேலேயும் இருக்கிற கருணையே காரணம். இருந்தாலும் இன்றைய கோளாறான சிந்தனை பகிரப்படுகிறது!(நினைச்சதை விட பெரிசாபோயிடுத்து.சாரி!)
==
ஆன்மீகத்தில கொஞ்சம் ம்ம்ம்ம்ம்? கொஞ்சமென்ன நிறையவே முதிர்ந்த நிலைன்னா எல்லாவற்றிலும் இறைவனை பார்க்கிறது. எல்லாம் ப்ரஹ்மம்ன்னு உணருகிற நிலைக்கு போயிட்டா வேற ஒண்ணுமே வேணாம்! அதுக்கும் கொஞ்சமே கொஞ்சம் கீழ் லெவல் எல்லாத்துலேயும் ஒரே இறைவன் இருக்கிறான்னு உணருகிறது.
இந்த உணருவதுக்கும் தியரியா ஒப்புக்கறதுக்கு பெரிய இடைவெளி இருக்கு. என்னதான் தீவிரமா யோசனை செய்து ஆமாம், எல்லாத்துலேயும் இறைவன் இருக்கிறான்னு புத்தி பூர்வமா ஒத்துக்கொண்டாலும் அதை நடைமுறைப்படுத்துவதிலே நிறைய சிக்கல் இருக்கு.
காரணம் வாசனை. ஒரு விஷயத்துக்கு நம் எதிர்வினை எங்கிருந்து வரும்? நிதானமா யோசிச்சு செயலாற்றினா புத்தியிலேந்து வரும். ஆனா அது நமக்கு வழக்கம் இல்லே! எதிர்வினை நம்மோட வாசனைகளிலேந்துதான் சட்டுன்னு வரும். (மேலே தெரிஞ்சு கொள்ள எமோஷனல் இன்டலிஜென்ஸ் பத்தி படிக்கவும். http://innamuthu.blogspot.in/2016/10/blog-post.html இல் துவங்கிபடியுங்கள். கொஞ்சம் பெரிய தொடர்.)
வாசனைன்னா? இதைப்பத்தி முன்னேயே எழுதி இருக்கேன். அது பத்தி தெரிஞ்சவங்க அடுத்த பாராவுக்கு போயிடலாம். மத்தவங்களுக்காக: புதிதாக ஒரு காரியம் செய்கிறோம். புரியாத விஷயம் என்பதால் ஆரம்பத்தில் ஜாக்கிரதையாக கவனமாக செய்வோம். அதை திருப்பித்திருப்பிச்செய்ய அதில் ஒரு ’ப்லூயன்ஸி’ ஏற்படுகிறது. பல முறை செய்ததை ’அசால்டாக’ முழு கவனம் கொடுக்காமலே கூட செய்து விடுவோம். அதாவது செய்கையில் ஒரு பழக்கம் உண்டாகிவிட்டது! இன்னதுக்கு இப்படி செய்யணும் என்று ஒரு பழக்கம். ஒரு ரிப்லெக்ஸ்ன்னு கூட சொல்லலாம். இதை பண்புப்பதிவு - சம்ஸ்க்ருதத்தில் சம்ஸ்காரம்- என்போம். இதுவே நாளாக ஆக உள்ளே ஊறிப்போய்விடுகிறது. இப்படி பலப்பட்ட சம்ஸ்காரம்தான் வாசனை. இது அந்த ஜன்மத்தில் மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த ஜன்மங்களிலும் வருகிறது. புரிவதற்காக ஒரு மோசமான உதாரணத்தை பார்க்கலாம். ஒருவன் ஏதோ அவசியம் ஏற்பட்டு திருடுகிறான். முதல் முறை பயந்து கொண்டே திருடுவான். அடுத்த முறை அவ்வளவு பயமில்லாமல்; சில முறை ஆனதும் பயமே இல்லாமல்; இன்னும் சில காலம் சென்றபின் ஆட்டோமேடிக் ஆக! இதுதான் சிலர் சில விஷயங்களை ஏன் சட்டென்று பிடித்துக்கொண்டு சிறப்பாக செய்கிறார்கள் என்பதற்கான விளக்கம். சிலருக்கு பாட்டு பாடுவது சட்டென்று வருகிறது. சிலருக்கு நடனம். சிலருக்கு திருடுவது! :-))
ரைட் மேலே போகலாமா?
இந்த வாசனை பலமானது. இதன் படி ஒரு விஷயத்தை செய்யாமல் இருக்க முடியாது. ஒன்றுமில்லாத விஷயத்துக்கு கோபப்பட்டே பழகியவர் அப்படி கோபப்பட்டுக் கொண்டேதான் இருப்பார். அப்படி இல்லாமல் அவர் இருப்பது ஏறத்தாழ இயலாத காரியம்.
இந்த வாசனைதான் திடீர்ன்னு ஒரு புது கான்செப்டை ஒத்துக்க, நடைமுறைப்படுத்த பெரிய தடையா இருக்கு. முயற்சி செய்தால் போக்கிக்கலாம். ஆனால் அதுக்கு நிறைய மனோ தைரியமும் நிறைய இடைவிடாத முயற்சியும் தேவை.
ரைட்! அப்ப சட்டுன்னு எல்லாவற்றிலும் ஒரே இறைவன் இருக்கறதா நடைமுறையில் செயலாற்றுவது கஷ்டம். என்ன செய்யலாம்?
கொஞ்சம் லெவல் கீழே இறங்கி வரலாம். எல்லாத்துலேயும் இறைத்தன்மை இருக்குன்னு ஒத்துக்க முடியுமா?
முடியும். ஏன்னா அது வாசனை சார்ந்தது! காலங்காலமா பல விஷயங்களில இறைவனை பார்க்கறா மாதிரி நம்மோட வாழ்க்கை அமைஞ்சிருக்கு. நதிகள் ஸ்வாமி; மரங்கள் ஸ்வாமி; மலைகள் ஸ்வாமி. கல்லுல ஸ்வாமி; மரத்தில ஸ்வாமி. தண்ணில ஸ்வாமி. மூஞ்சூறு? பிள்ளையார் வாகனம். காகம் - பித்ருக்கள் அந்த ரூபத்தில வராங்க. கிளி அம்பாள் கையில்னா இருக்கு? நாய் கூட பைரவரை நினைவு படுத்தும். வேப்ப மரம், அரச மரம் - கேட்கவே வேண்டாம்.
இப்படி ஏறத்தாழ எல்லா ஜீவராசிகளும் மலை நதி போன்ற 'உயிரில்லாதவையும்' ஏதோ ஒரு தேவதையுடன் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கு. (இந்த கொசு ஒண்ணுதான் விதி விலக்கு போலிருக்கு. தெரிஞ்ச வரை ஒரு தேவதை சம்பந்தமும் இல்லே! :)
இதை இன்னொரு விதமா பார்க்க எல்லாவற்றிலும் ஒரு தேவதை இருக்கு. மரம் செடி கொடிகள், மிருகங்கள்... அதைப்போற்றுகிற பக்குவமும் நம்மகிட்ட இருக்கு. இதை வலுப்படுத்திக்கணும்.
சமீபத்திய நாத்திக இயக்கத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில் எளிய மக்கள்கிட்ட இருந்து இது பெருமளவுக்கு மறைந்து போச்சு. அதனாலத்தானே கோவில் குளங்களை ஆக்கிரமிக்கிறோம்? நதிகளை அசுத்தமாக்குகிறோம்? மணலை கொள்ளை அடித்து நதியே காணாமல் போக்குகிறோம்? மலைகளை உடைக்கிறோம்? மரங்களை வெட்டுகிறோம்?
இத்தனையும் செய்து விட்டு மழை இல்லை என்று திட்டிக்கொண்டு இருக்கிறோம். எப்படியோ மழை பெய்து தண்ணீர் பெருக்கெடுத்தால் தண்ணீர் வெள்ளத்தை காணவில்லை. சோப்பு நுரைதான் பெருக்கெடுக்கிறது!
கிடக்கட்டும். மனுஷனை எப்பய்யா ஒண்ணா பார்ப்பீங்கன்னு சிலர் கேட்கிறது கேட்குது. அதுல சிக்கல் இருக்கு!
செடி மரம் மாதிரி இருக்கிறதுகளோட நல்ல உறவு வெச்சுக்கலாம். பிரச்சினையே இல்லை. பசு, நாய் மாதிரி மிருகங்களோட கூட நல்ல உறவு வெச்சுக்கலாம். நல்ல சுத்த மனசோட அணுகிணா அவை நல்லாவே உறவு கொண்டாடும்.. பிரச்சினை இராது.
ஆனா இந்த மனுஷன்....... காம்ப்லெக்ஸ் ஆசாமி. இவனோட எதிர்வினைதான், ஈகோ என்கிற அஹங்காரம்தான் பிரச்சினையா இருக்கும்! மிருகங்கள் பிரதிபலிக்கிற எதிர்பார்ப்பு இல்லாத அன்பு இவனிடம் காண்பது மிக அரிது! அதான் பிரச்சினை. இதையும் தாண்டி அன்பு செலுத்துகிற மஹான்கள் இருக்கவே இருக்காங்க.
இருக்கட்டும். மோஹனரங்கனுக்கு திரும்ப வருவோம்.
ஸரஸ்வதி பூஜையில் கல்பத்தில் இப்படி இருக்கிறது: ....ஶோபித மண்டபே பத்ர பீடே ஸர்வாணி புஸ்தகாணி ஸம்ஸ்தாப்ய....
மண்டபத்தில் சுத்த மங்கலமான பீடத்தில் எல்லா புத்தகங்களையும் வைத்து....
இதில் துர்கா லக்‌ஷ்மீ ஸரஸ்வதி ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும். முதல் நாள் பூஜை முடித்து அடுத்த நாள் புனர்பூஜை முடிக்கும் வரை அதில் தேவதா ஆவாஹனம் இருக்கிறது, ஆகவே அதை கலைத்து புத்தகம் எடுக்க முடியாது, படிக்க முடியாது. எல்லா புத்தகங்களையும் என்று சொல்லிவிட்டதால்.... என்னய்யா இது? எப்படி ஒத்தர்கிட்ட இருக்கிற எல்லா புத்தகங்களையும் வைக்க முடியும்? உதாரணமா மோஹன ரங்கனே வீடு கொள்ளாமல் இருக்கிற புத்தகங்களை மற்ற்வர்களுக்கு கூப்பிட்டு கூப்பிட்டு கொடுத்தார். சர்வ சாதாரணமாக பலர் வீட்டிலும் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன.
ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். இந்த கல்பங்களை எழுதியபோது அப்படி நிலமை இல்லை. பலதும் ஓலைச்சுவடிகள். அச்சுப்பிரதிகள் ஸொல்பமே.
இந்த காலத்திலும் கடையில் நாம் வாங்கும் பலவித சஞ்சிகைகளை விட்டுவிடலாம். நாவல்களை விட்டுவிடலாம். பள்ளிப்பாட புத்தகங்கள், வேத புத்தகங்கள், ஆன்மீகம் சார் மற்ற புத்தகங்களைத்தான் எல்லாரும் பூஜையில் வைக்கின்றனர். பூஜையில் வைக்காத புத்தகங்களை இன்றைக்கு படிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. இன்றைக்கு ஒண்ணுமே படிக்கக்கூடாது என்ற பழக்கம் பள்ளி மாணவர்கள் உருவாக்கியது என்ற பலத்த சந்தேகம் இருக்கு! அதே நாளைக்கு புனர் பூஜை முடித்து கட்டாயம் படிக்கணும்ன்னு சொல்லிப்பாருங்க!.... :-))))

Friday, September 29, 2017

அஷ்டோத்திரங்கள்




துர்கா லஷ்மி ஸரஸ்வதீ அஷ்டோத்திரங்கள். https://drive.google.com/file/d/0B0hsZOLFx-HfVUo0LTFDVzNKdWs/view?usp=drivesdk

கிறுக்கல்கள் -154





நான் செய்திருக்கிற இந்த பெரிய பாவத்துக்கு என்ன பரிகாரம் என்று கேட்டார் ஒருவர்.
அஞ்ஞானமே அதை செய்தது என்று அறிவாயாக என்றார் மாஸ்டர்!

பின்னால் சொன்னார்: இப்படியாகத்தான் நீ மற்றவர்களையும் உன்னையும் மன்னிக்க கற்பாய்.
அதன் பின் பழிக்குப்பழி என்றோ பிராயச்சித்தம் என்றோ தேட மாட்டாய்!

Thursday, September 28, 2017

கிறுக்கல்கள் -153





வித்தியாசமான வேறு ஒரு கோணத்தில் இருந்து பார்க்கும்போது கெட்டது நல்லதே; பாபம் என்பது அருளுக்கு ஒரு வாயில் என்றார் மாஸ்டர்!

சீடர்கள் திகைத்துவிட்டார்கள்.

மாஸ்டர் சொன்னார்: கார்தேஜ் பழைய ரோம சாம்ராஜ்யத்துக்கு ஒரு முள்ளாக இருந்தது. கடைசியில் ரோம் அதை முற்றிலுமாக அழித்துவிட்டது. அதன் பின்னரே அது அமைதியாக இருக்க முடிந்தது… கூடவே அது மெதுவாக ஊளை சதையும் அழுகலுமாக நாறத்தொடங்கிவிட்டது!

உலகத்தில் கெட்டது என்று ஒன்றே இல்லாமல் போகுமானால் மனித உள்ளம் அழுகக்கூடும் என்றார் மாஸ்டர்!

Wednesday, September 27, 2017

கிறுக்கல்கள் -152





மாஸ்டரின் சீடர்கள் சிலர் ஒரு பிரபல மதத்தலைவரைப்பற்றி ஆஹா ஓஹோ என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். மாஸ்டரோ மௌனம் காத்தார்.

இது பற்றி அவரிடம் பின்னால் கேட்டார்கள்.

மாஸ்டர் சொன்னார்: பிறர் மீது தன் சக்தியை காட்டுபவர்கள் உண்மையான மத குரு இல்லை.
பின்னே? மதத்தலைவரின் வேலைதான் என்ன?
சட்டம் போட அல்ல; ஊக்கமூட்ட. வற்புறுத்த அல்ல; விழிப்புணர்வு ஊட்ட!

Wednesday, September 13, 2017

கிறுக்கல்கள் -151




ஒரு விஞ்ஞானி நவீன அறிவியலின் சாதனைகளைப் பற்றிய டாக்குமெண்டரி ஒன்றை மாஸ்டருக்கு காட்டினார். “இதோ பாருங்கள். இப்போது நாங்கள் பாலைவனத்தில் நீரூற்றி சோலையாக்க முடியும். நயாகரா நீர் வீழ்ச்சியை கட்டுப்படுத்தி சக்தியை சேமிக்க முடியும். தொலை தூரத்தில் இருக்கும் நக்ஷத்திரத்தின் தன்மையை இங்கிருந்து கணிக்க முடியும். அணுவின் கூறுகளை ஆராய முடியும். சீக்கிரத்தில் நாங்கள் இயற்கையை வென்று விடுவோம்.” 

மாஸ்டருக்கு பிரமிப்பு ஏற்பட்டாலும் சிந்தனை வயப்பட்டார்.

பின்னால் சொன்னார்: “இயற்கையை ஏன் வெல்லனும்? அது நம் நண்பன்.இருக்கும் ஆற்றலை எல்லாம் வெல்ல முடியாத ஒன்றை வெல்வதில் காட்டினால் என்ன? பயம்! பயத்தை எப்போது வெல்லப்போகிறோம்?”

Tuesday, September 12, 2017

கிறுக்கல்கள் -150





மாஸ்டரை சந்தித்த கவர்னர் சொன்னார்: நான் பயமே அறியாதவன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா ஒண்ணே ஒண்ணுதான் பயமுறுத்துது. சாவு! சாவுன்னா என்ன?
எனக்கு எப்படி தெரியும்? என்றார் மாஸ்டர்.
ஆனா நீங்க ஞானியாச்சே?
ஆமா! ஆனா செத்துப்போன ஞானி இல்ல.

Monday, September 11, 2017

கிறுக்கல்கள் -149





உங்கள் மாஸ்டர் எதைத்தான் கற்றுக்கொடுக்கிறார்?
எதுவுமில்லை!
பின்னே எதைத்தான் தருகிறார்?
அவருடைய மௌனம். அதில் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு இலை தழையிலும் கூட ஊடுருவும் வான் வழி வந்த கணக்கற்ற சூரிய கிரணங்களின் சக்தி அவருள்ளும் பிரகாசிக்கிறது. அதையும் பெற்றுக்கொள்ளலாம்.

Wednesday, September 6, 2017

கிறுக்கல்கள் -148





கடவுள் என்று தேடினாயானால் ஒரு கருத்தை தேடுகிறாய். சத்தியத்தை பார்க்க மாட்டாய் என்றார் மாஸ்டர். ஒரு கதை சொன்னார்.

மடாலயத்தில் ஒரு சன்யாசிக்கு ஒரு அறையை கொடுத்து இருந்தார்கள். அவர் அதைப்பற்றி புகார் கூறினார். "நான் நக்ஷத்திரங்களை பார்த்து த்யானம் செய்ய நினைத்தேன். ஆனால் என் அறை ஜன்னலுக்கு அப்பால் ஒரு மரம் இருந்து கொண்டு காட்சியை தடுக்கிறது."

விஷயம் என்னவென்றால் அதற்கு முன் அந்த அறையில் இருந்த சந்நியாசி அந்த மரத்தை பார்த்து த்யானம் செய்து ஞானம் அடைந்தார்!

Tuesday, September 5, 2017

கிருஷ்ண யஜுர் வேத உபாகர்மா 2017





வரும் புதன் கிழமை கிருஷ்ண யஜுர் வேத உபாகர்மா. காயத்ரி ஜபம் ஏற்கெனெவே முடிந்து விட்டது. உபாகர்மாவுக்கான மந்திரங்கள் இங்கே  
 

வேதம் - 10





வேதத்தில் இந்த உலகில் தேவையாக இருக்கிற புத்திர ப்ராப்தி, நல்ல வது ப்ராப்தி, தீர்காயுசு, ராஜ்ய ப்ராப்தி, சத்ரு ஜெயம் இது போல எத்தனையோ நமக்குத்தேவையாக இருக்கின்ற இம்மை பொருட்களையும் வழங்கக்கூடிய பகுதிகள் உள்ளன. ஆனால் அவற்றை கொடுக்க காரணம் இதற்கு இவன் அநியதனமான உபாயங்களிலே சென்று விடக்கூடாதே; பொருளை பெற வேண்டும் என்பதற்காக துன்மார்க்கங்களிலே, வேறு அபர மார்க்கங்களிலேயே பிரவேசித்து தன் ஆத்ம சக்தியை வீணடிக்க கூடாதே என்பதற்காக தைபுண்ய விஷயாஹா வேதாஹா என முக்குணங்களில் அகப்பட்டு இருக்கிற மக்களை நீ வேறெங்கும் செய்ய வேண்டாம் செய்ய வேண்டுமானால் இங்கேயே செய்து கொண்டு இரு என்று மென்மேலும் அவர்களை சத்வ குணத்தில் உயர்த்துவதே வேதத்தின் நோக்கம்,

தேவதாத்மகமான பிரபஞ்சத்தை காண்பித்து, அதை தெரியாததாலே…. நமக்கு நீர் வேண்டி இருக்கிறது. அதை நாம் உற்பத்தி செய்கிறோம். நிலை மாற்றம் செய்கிறோம். தேக்கி வைக்கிறோம் தூய்மை படுத்துகிறோம். நீர் வளம் பெருக்குவதை பார்க்கிறோம். நாம் நீருக்கு போராடப்போகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள், ஏன் இது வந்தது? நீரை பெருக்குவதோ அல்லது பஞ்ச பூதங்களை நிலம் காற்று விண் இதை எல்லாம் மேலோட்டமாக அவற்றை ஜடப்பொருள்கள், உயிரில்லை என்று நம்மை விட தாழ்ந்ததாக நினைக்கும் விஞ்ஞானம் செயல்படுவதால் அவற்றை வளர்க்கவும் சேமிப்பதிலேயும் முழுமையாக வெற்றி அடைய முடியவில்லை. குறை கண்டு கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் வீழ்ந்து கொண்டே இருப்பார்கள்.
ஆனால் இவை நம்மைக்காட்டிலும் உயர்ந்தவை; நாமும் இவற்றுடன் ஒரு பகுதியாக இருப்போம்; நம்மில் இவை பகுதியாக உள்ளன; இருவரும் சேர்ந்து எம்பெருமானின் சரீரமாக இருக்கிறோம் என்னும் மேன்மையான மெய் நிலை அறிவினால் நாம் இவற்றால் வரக்கூடிய இடர்களையும் களையலாம்; இவற்றை பெருக்கிக்கொள்ளலாம்
 
அவர்களால் இதுபோன்றுள்ள நமக்குத் தேவையான போருட்களை பெருக்கி தேக்கி வைத்து அனைவருக்கும் வழங்க முடியாததால்தான் , அவற்றை பெருக்க முடியாது நீங்க உங்க பெருக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அரசுகள் அறிவித்துள்ளன. ஆண்மையான அரசு, இன்னும் பெருக்கித்தருவோம்; எத்தனை கோடி மக்கள் வந்தாலும் வளங்களை பெருக்கிக்கொடுப்பது சேமித்து கொடுப்பது அனைவருக்கு வாரி வாரி வழங்கக்கூடிய பசுக்களாக இருப்பதே நம் மறை சமுதாயம். நீ குறைத்துக்கொள், சாப்பிடாதே என்றெல்லாம் ஆணைகள் வெளியிடுவது இந்த அரசாங்கங்கள்.

Monday, September 4, 2017

வேதம் - 9





அலௌகீகம், லௌகீகம் என்பது என்ன? சுருக்கமாக பார்க்கலாம்
 
லௌகீக திருஷ்டி என்ன? உலகத்தை பஞ்ச பூதங்களால் ஆனதாக பார்ப்பது. அதில் பூதாத்மா என்கிற ஆத்ம சைதன்யம் இருக்கிறது. உயிரில்லாத ஜடப்பொருட்கள் உள்ளன. இவற்றில் ஆற்றல் உள்ளது. காலம் இருக்கிறது, இடம் இருக்கிறது. இந்த ஆறின் கூட்டுப்பொருளாக…. காலம், இடம், உயிரினம், மனம் அல்லது எண்ண ஆற்றல், பருப்பொருள், பொருள் ஆற்றல் இந்த ஆறையும் காண்பதே லௌகீக திருஷ்டி
 
இதை தாண்டியது அலௌகீக திருஷ்டி இதை எல்லாம் தேவதாத்மகமாக காண்பது. அபி⁴மானிவ்யபதே³ஶஸ்து விஶேஷானுக³திப்⁴யாம் (பி.சூ 2.1.6) வாயு என்றால் வாயுவை ஏன் கும்பிடுகிறாய்?
சிலர் சொல்கிறார்கள் .. அறியாமையால், அச்சத்தால், தான் கண்டறிய முடியாமல், தன்னால் திசை காண முடியாத பொருட்களை கண்டு அஞ்சி மனிதன் வணங்கினதாக சொல்கிறார்கள். அது வேறு நாகரீகமாக இருக்கலாம். அவற்றின் உட்பொருளாக உள்ள தெய்வங்களையும் தெய்வங்களுக்கும் உட்பொருளாக உள்ள பிரம்மத்தையும் கண்டறிந்து அந்த காட்சியால் பூரித்துப்போய் போற்றி கொண்டாடியவர்கள் நம் முன்னோர்கள். நாகரீகத்தின் துவக்கத்தை சொல்வோர் இதைத்தான் சொல்கிறார்கள். கடவுள் வழிபாடு அச்சத்தில் பிறந்தது. அறியாமையில் இருந்து பிறந்தது. தான் புரிந்து கொள்ள முடியாத விவரிக்க முடியாததை பார்க்கும் போது அதற்கு பணிந்து போவது மனிதனுடைய பலஹீனம். அதன் வெளிப்பாடு இந்த வழிபாடு. பலஹீனத்தில் இருந்து கடவுளும் அவரிடம் இருந்து மதம், பக்தி வந்ததாக சொல்கிறார்கள் சில அறிவாளிகள். ஆனால் இல்லாத ஒரு பொருளை இருப்பதாக சொல்லி அஞ்சி அழிந்தவர் பலர். அவர்களிலே நாம் இல்லை. இருப்பதை இல்லாததாக நினைத்து மருண்டு அதை இழந்தவர்களிலே இது இருக்கிறது என்று தாமும் உணர்ந்து மற்றவர்களுக்கும் காட்டுபவர்களாக , நெறி வல்லுனர்களாகவே நாம் இருக்கிறோம்.  

ஆகவே தேவதாத்மகமான ஒரு பிரபஞ்சத்தை நாம் பார்த்து, நெருப்பு என்றால் நெருப்பு இயக்குகின்ற ஒரு சைதன்யம் இருக்கிறது, ஒரு அறிவாற்றல். அதன் சேதனத்தில் அக்னி என்னும் ஒரு தெய்வம் இருக்கிறது. இது எல்லாம் நமக்கு எப்படி காட்டப்படுகிறது? நானோ ஸ்பெக்டராலாஜிலே? நுண் நோக்கியிலே? ஜீவ அணு மரபியலிலே? உலகியலே? கோளியலில்? அண்ட புவியியலிலே? ஆழ் கடலியலிலே? எந்த இயலிலும் தெரியாது, இறையியலிலே மறையியலிலே, உணர்வியலிலே மட்டும் தெரியும். அதை காட்டிகொடுத்ததாலே இதற்கு அலௌகிகஹா என்று பெயர்.

அதையும் மீறி மூன்றாவதாக இத்தனை தெய்வங்களிலும் வைத்து எல்லோருக்கும் இன்னருள் சுரந்து இந்த தெய்வங்களுக்கெல்லாம் உள்ளுறை பொருளாய் இருந்து இயக்குகின்றவன் யார்? இதைத்தான் தெய்வ மீமாம்சையில் சொல்கிறார்கள். 'ச விஷ்ணுஹு ஆஹஹி; தம் ப்ரம்மேத்யா சக்ஷதே தம் ப்ரம்மேத்யா சக்ஷதே' என்று இதைத்தான் இரண்டு விதமான சூத்திரங்களாக சொல்லி இருக்கிறது அவர்தான் பிரம்மம் எனப்படுகிறார். எல்லா தெய்வங்களுக்கும் ஒரு பிரம்மமே உள்ளுறை பொருளாக இருக்கிறது என்று. இந்த உலகை 'சர்வம் கல்விதம் ப்ரம்ஹ தஜ்ஜலான் இதி ஶாந்த உபாசீத'. எல்லாமே அவனில் இருந்து உண்டாகி அவனாலே நிலைநாட்டப்பட்டு அவனையே அடைவதாலே இது எல்லாம் அவனே; அவனே எல்லா பொருளாகவும் இருப்பவன் என அறிந்து தானும் அமைதியுற்று நிரந்ஜனாக 'பரம ஶாந்த உபைதி, ஶாந்த உபாசீத', 'ஞாத்வா மாம் ஶாந்தி ம்ருச்சதி'(.கீ 5.29 ) என பல இடங்களிலே பார்க்கிறோம். மேலான நிலையை அடைகிறான்; ஒன்று படுகிறான்; நிலை விளக்கம் பெறுகிறான். தன்னிலை விளக்கம் பெறுகிறான். இப்படி வேதங்களிலே பிரம்மாத்மகமாக - அதற்கும் மீறி சென்று எல்லா பொருட்களையும் பிரம்மாத்மகமாக பார்க்கக்கூடிய திருஷ்டி, இந்த இரண்டு த்ருஷ்டிதான் வேதத்தின் தனிப்பெரும் பெருமை.

Friday, September 1, 2017

வேதம் - 8





இப்படி காரியங்களை செய்தாலும் சொன்னாலும் கூட தடைகள் இருக்கின்றன. சிலதை சொல்லுகிறோம். ஆனால் ஒருவனுக்கு காதே கேட்கவில்லை. இன்னொருவன் அலட்சியமாக இருக்கிறான்; நினைவில் கொள்ளவில்லை. மற்றவன் அவித்தேயன்; சொன்னதை எப்போதும் செய்யாதவன். இன்னொருவன் அஞ்ஞானி; சொன்னதை புரிந்து கொள்ள முடியாதவன். இது போன்று உள்ளவர்களுக்கு சொல்வது பொருந்தாது. இந்த சாதாரண உரைகளிலேயே இப்படி. அது போல வேதத்திலேயும் அதை சொல்லுபவர்கள் இடத்திலே அதை கற்றபவர்கள் மத்தியில் - அதாவது எப்படி இருக்க வேண்டும்? தத்–விஜ்ஞானார்தம் ஸ குரும் ஏவாபிகச்சேத். ஸமித்பாணி: ஶ்ரோத்ரியம் ப்ரஹ்ம–நிஷ்டம். (முண்டக உபநிஷத் 1.2.12) குருவின் இலக்கணத்தையும் சிஷ்யன் எப்படி சமித் பாணியாக …. சமித் பாணியாக என்றால் கையில் சமித்துடன் என்று உட் பொருள் இல்லை; சமித் எப்படி ஆஜ்யத்தையும் அதன் மூலம் அக்னியையும் க்ரஹிகிறதோ அது போல ஆச்சார்யன் க்ருபைக்கு பரிபூர்ண சத்பாத்திரமாக இருக்கிற யோக்யதையைத்தான் அது இங்கே சுட்டிக்காட்டுகிறது. அது போல குரு சீடன் இலக்கணம் தகுந்த சத் பாத்திரங்களால் நிவேதிக்கப்பட்டு தகுந்த சத்பாத்திரங்களில் அருந்தவம் ஏற்ற கலம் என்பர். அதை (வேதத்தை) அறிந்த ஏற்ற கலமாக உள்ள ஆசான்கள் வழங்கி அருந்தவமாக இருக்கும் மாணாக்கர்கள் பெற்றால்தான் வேதம் பரிமளிக்கும் என்று வேதத்தின் இலக்கணத்தை பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள். என்பர்- அது போல இருந்து கற்றால் தான் வேதம் பலனளிக்கும்
 
இன்னொன்று: வேதத்தில் இந்த மந்திரங்கள் இருக்கும் போது இத்தனை வேதங்கள் இவ்வளவு சம்பிரதாயங்களும இருந்தும் அந்நிய படையெடுப்பு வந்தது. கோவில்கள் தரை மட்டமாகின. தீக்கிரையாகின. கலாசார அழிவுகள்ல் எல்லாம் என் வந்தன? இதை எப்படி எதிர் கொள்ளப்போகிறோம்? இவற்றுக்கு விடையை பின்னால் பார்க்கலாம்.

வேதத்தில் இருக்கின்ற இத்தனை ஆற்றல்களும் நிரூபாதிகமா சபாதிகமா? யார் சொன்னாலும் சொன்ன மாத்திரத்தில் பலிக்குமா?

 தீ என்று தெரியாமல் கையை வைத்தாலும் அது சுடும். அமிர்தம் என்று தெரியாமல் பருகினாலும் அது அதன் வேலையை செய்யும். ஆகவே அறிந்தோ அறியாமலோ எப்படி சொன்னாலும் நன்மை பயக்க வேண்டும். "இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11- " என்பது போல. அது இங்கே வேதத்தின் கடுமையான விதிகளுக்கு பொருந்தாது.

எப்படி வீணையின் நாதம் கை தேர்ந்த ஒருவனின் கை விரல்களின் ஆலத்தியாலே தான் விரும்பிய வண்ணம் எல்லாம் எண்ணம் உவந்திருக்கின்ற இடங்களுக்கு எல்லாம் இணையாக தானாக அது செல்வது போலே; அவன் விரும்பி இருக்கின்றனவற்றை எல்லாம் தானும் கற்று மற்றவர்களுக்கும் தரக்கூடியவன் வேத சப்தங்களிலே அர்த்தங்களிலே பாவங்களில் தத்துவங்களில் நிறைந்த சாதகத்தை செய்து இருக்கிற தபஸ், ஸ்வாத்யாயம் பிரம்மச்சரிய நித்ய நிஷ்ட நியமனாக இருக்கும் ஒருவனே அதை இயக்க முடியும் அதனால் அது ஒரு உபாதியினால் இருப்பது. யார் சொன்னாலும் எப்படி சொன்னாலும் வருவது என்பது பகவன் நாமாக்களுக்கும் மிக உயர்ந்த நிலையில் இருக்கிற பக்தி பிரபத்தியிலும்தான் பொருந்தும். வேத சப்தங்களில் அதை இயக்கக்கூடிய யோக்கியதை இருப்பவர்கள் இயக்கினால்தான் அது பொருந்தும்.