Pages

Friday, July 29, 2011

யார் நீ?ஒரு மூதாட்டி சாகக்கிடந்தாள். செல்வந்த குடும்பம். கணவர் ஊர் தலைவர். திடீரென்று இறந்து போனது போல் உணர்ந்தாள். அவளை எம தூதர்கள் கொண்டுப்போய் எமன் முன்னிலையில் நிறுத்தினர்.
எமன் கேட்டான்: யார் நீ?
நான் …..
உன் பெயரை கேட்கவில்லை. யார் நீ?
நான் ...ஊர் தலைவரின் மனைவி.
நீ யாருடைய மனைவி என்று கேட்கவில்லை. யார் நீ?
நான்கு குழந்தைகளுக்குத் தாய்.
அதை கேட்கவில்லை. யார் நீ?
நான் சிவனுடைய பக்தை.
நீ யாருடைய பக்தை என்று கேட்கவில்லை. யார் நீ?
இதே ரீதியில் உரையாடல் பத்து நிமிடங்கள் தொடர்ந்தது.

அப்போது சித்திர குப்தன் வந்து இவளுடைய நேரம் இன்னும் வரவில்லை. தவறாக அழைத்து வந்துவிட்டார்கள் என்று தெரிவித்தான்.
எமனும் அவளை திருப்பி பூலோகத்துக்கு அனுப்பிவிட்டார். அவளும் பிழைத்துவிட்டாள்.

திரும்பிய போது பல விஷயங்கள் மறந்து போனாலும் யார் நீ என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாததை மறக்கவில்லை.
அதையே திருப்பி திருப்பி யோசித்துக்கொண்டு இருந்தாள்.
திடீரென்று ஒரு நாள் ஞானம் பெற்றாள்!


Friday, July 22, 2011

ஏன் எல்லாரையும் நல்லவங்களா வைத்திருக்ககூடாது?எல்லாருக்குள்ளேயும் கடவுள் இருக்கார்ன்னா ஏன் எல்லாரையும் நல்லவங்களா வைத்திருக்ககூடாது?
இப்படி சமீபத்தில ஒத்தர் கேட்டார்.
ம்ம்ம்ம்ம் எல்லாருமே நல்லவங்களா இருந்தா ரொம்பவே போர் அடிக்கும்ன்னு ஒரு வாதம்.
பகவான் ப்ரஜாபதிக்கு கொடுத்த வேலை ப்ரஜைகளை உண்டு பண்ணுவது.
ஆரம்பத்துல படைச்ச ப்ரஜைகள் எல்லாம் ஞானமடைஞ்சு (சனகாதியர்கள்) பிரஜைகளை உற்பத்தி செய்யறதுல ருசி இல்லாம போயிட்டாங்களாம். அடுத்து படைச்சவங்களும் இதே கதைதான். அடுத்து படைக்கும் முன் பக்வான்கிட்டே முறையிட்டார். என் வேலையை சரியா செய்ய முடியலைன்னு. பாத்துக்கிறேன் போன்னார் பகவான்.
மாயையில அகப்பட்ட அடுத்த ஜெனெரேஷன் சுக துக்கங்கள் தரும் வேலைகளில ஈடுபட்டு ஞானம் இல்லாம உழல ஆரம்பிச்சாங்களாம். அப்ப ஆரம்பிச்சது பாப புண்ணியங்கள்.
(ஸ்ரீமத் பாகவத்துல படிச்ச நினைவு. லூஸா எழுதியிருக்கேன். சரியா இல்லைன்னா பெரியவங்க சொல்லுங்க. இப்போதைக்கு உசா துணை புத்தகம் கிடைக்கலை)
இந்த பாப புண்ணியங்கள் இல்லாத கர்மாக்கள் - செயல்கள் - இல்லை. பெரும்பாலும் இரண்டும் சேர்ந்தே இருக்கும். விகிதம் மட்டுமே வேறுபடும். புரியலையா?
ஒரு செயல் செய்கிறோம். அதால பலருக்கும் நல்லது ஏற்படுது. சிலருக்கு கெட்டது ஏற்படும். ஒரு இடத்தை வாங்கி அங்கே ஆக்கிரமிச்சு இருக்கிற சில குடும்பங்களை விரட்டி அங்கே பொதுவா ஒரு பள்ளி கட்டறோம். இதில பலருக்கு நல்லது ஏற்படுது. ஆக்கிரமிச்சு இருந்த சில குடும்பங்கள் கஷ்டப்படும்.
இதில பாபமா புண்ணியமா, எது ஏற்படும்? இரண்டுமே இல்லையா?
இதே போலத்தான் பல செயல்களும்.
சிலது எல்லாருக்குமே நல்லது செய்யும். சிலது எல்லாருக்குமே கெட்டது செய்யும்.

இந்த பாப புண்ணியங்களுக்கான பலனை அனுபவிச்சே ஆகணும். தப்பிக்கவே முடியாது. முழுக்க பகவான் கிட்ட சரணடைஞ்ச சிலரே அவங்களோட செயல்களின் வினையிலிருந்து தப்பிக்க முடியும். 'நான்' என்ற எண்ணத்தை அறவே விட்டவங்களை மட்டுமே வினை பற்ற முடியாது.

அதனால் எப்பவும் ஏதோ பாபமோ புண்ணியமோ இந்த ஜீவன்களுக்கு இருந்துகிட்டே இருக்கும். பாபத்துக்கு புண்ணியம் கணக்கை சரி செய்யாது. பாபம் செஞ்சதுக்கு பலனை அனுபவிக்கணும். புண்ணியம் செஞ்சதுக்கும் பலனை அனுபவிக்கணும். இப்படி பலனை அனுபவிக்கறதுக்காக பிறப்பு இறப்பு இருந்துகிட்டே இருக்கும். அனுபவிக்க வேண்டிய கர்மாவை பொருத்தே பிறப்பு அமையும். ஜீவனுக்கு முக்குணங்களின் சேர்க்கையும் அமையும். இதனாலேயே சிலர் செயல் வீரர்களாயும் சிலர் சோம்பேரிகளாயும் சிலர் கோபத்தோடேயும் சிலர் தூங்கி வழிபவர்களாயும் இருக்கிறோம். வெகு சிலரே சுத்த சத்வமாக சாந்த ஸ்வரூபியாக இருக்காங்க.

இந்த குணத்தை மாத்திக்கலாம்ன்னா அது கொஞ்சம் கஷ்மே! கொஞ்சம் என்ன நிறையவே கஷ்டம். இருந்தாலும் பெரும் முயற்சி எடுத்து பெருமளவு மாத்திக்கலாம். அதுக்கு உணவு ஒரு முக்கிய காரணியா அமையும். காரம் உப்பு முதலியன ரஜோ குணத்தை வளர்க்கும். ஊசிப்போனது, ரொம்ப காரம், ரொம்ப புளிப்பு இதெல்லாம் தமோ குணத்தை வளர்க்கும். அசட்டு திதிப்பு சத்வ குணத்தை வளர்க்கும்.

உள்ளே  பகவான் இருக்கறப்ப எப்படி நல்லவங்களா இல்லைன்னு கேட்டா உள்ளே இருக்கற பகவானை நாம் செயல்பட விடறதில்லை. அப்படித்தான் அவனுடைய விளையாட்டு இருக்கு. நமக்கு சுய இசைன்னு ஒன்னை கொடுத்து இஷ்டத்துக்கு வேலை செய்யவும் அதுக்கு பலனை அனுபவிக்கவும் விட்டு இருக்கான்.ஒரு நிகழ்ச்சியிலே பலரோட கர்மாவையும் பின்னி பிணைத்து பலனை கொடுக்கிரதுதான் அவனோட அமேசிங் திறமை!

எப்படி இருந்தாலும் செயலில்லாமல் நம்மால இருக்க முடியாது என்கிறதால கர்மா சேர்ந்துகிட்டேதான் இருக்கும். பிறப்பிறப்பு இருந்துகிட்டேதான் இருக்கும். இதிலிருந்து விடுபடுவதே மோக்ஷம். இதை அடைய அகங்காரத்தின் வெளிப்பாடான 'நான்', 'எனது' என்ற எண்ணங்களை விட்டு உள்ளே இருக்கிற பகவானையே செயல்பட விடணும். இது சுலபமில்லை. இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டும்.

Thursday, July 21, 2011

நம்பிக்கை!முல்லா நாசருதின் வீட்டில் தீப்பிடித்துக்கொண்டது.
தப்பிக்க மாடிக்கு ஓடினார். அங்கும் தீ வந்துவிட்டது.கூரை மீது ஏறினார். கீழே அவரது நண்பர்கள் எல்லாரும் ஒரு ஜமுக்காளத்தை இழுத்து பிடித்துக்கொண்டு " நாசருதீன் குதி, சீக்கிரம்" என்றார்கள்.
"போடா பசங்களா, உங்களை தெரியாதா? குதிச்ச பிறகு ஜமுக்காளத்த இழுத்துடுவீங்க. நான் முட்டாளாயிடுவேன்."
"ஓ முல்லா! இது சீரியஸ்! சத்தியம் பண்ணறோம்; இழுக்க மாட்டோம்! குதி!"
"உஹும்! மாட்டேன். ஜமுக்காளத்த கீழ வெச்சுட்டு நகந்து போங்க! அது மேலே குதிக்கிறேன்!"

Wednesday, July 20, 2011

நம்பிக்கை - ௨முன் பதிவு போலவே இன்னொன்று:

விமானம் கும்மிருட்டில் புயலில் மாட்டிக்கொண்டது.
"கடவுளே காப்பாத்து!" என்று அலறினான்.
"வெளியே குதித்துவிடு!" என்று குரல் கேட்டது.
குதித்தான்.
"கடவுளே காப்பாத்து!" என்று அலறினான்.
"பாராசூட்டை திற!" என்று குரல் கேட்டது.
திறக்க கயிறை பிடித்து இழுத்தான்.
பாராசூட் திறக்கவில்லை.
"கடவுளே காப்பாத்து!" என்று அலறினான்.
பாராசூட் எதிலோ மாட்டிக்கொண்டு நின்றது. இருட்டில் தரை தெரியவில்லை. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. குளிர் வாட்டியது.
"கடவுளே காப்பாத்து!" என்று அலறினான்.
"பாராசூட்டை அறுத்து விடு!" என்று குரல் கேட்டது.
அவன் அறுக்கவில்லை. இரவு முழுதும் அப்படியே ஊசலாடிக்கொண்டு இருந்தான்.
காலையில் மக்கள் அவனது உயிரற்ற, விறைத்த உடலை கண்டு பிடித்தனர்- பூமிக்கு மூன்று அடி உயரத்தில்.

நம்பிக்கை ...ஒரு நாத்திகன் மலையில் இருந்து கீழே விழுந்தான். வழியில் நீட்டிக்கொண்டு இருந்த ஒரு சிறு மரக்கிளையை பிடித்துக்கொண்டு தொங்கினான். கீழே அதல பாதாளம்!
கிளையும் பாரம் தாங்காமல் மெதுவாக முறியத்தொடங்கியது!
"கடவுளே !" என்று கத்தினான்.
நிசப்தம்! ஒருபதிலும் இல்லை.
"கடவுளே நீ இருக்கேன்னா என்னை காப்பாத்து. இனிமே உன்னை பரிபூரணமா நம்புவேன். மத்தவங்களையும் நம்பச்சொல்லுவேன்!"
மேலும் நிசப்தம். நம்பிக்கை இழக்கும் நேரம் திடீரென்று ஒரு அசரீரி கேட்டது! "இப்படித்தான் எல்லாரும் சொல்லாறாங்க. ஆனா நம்பிக்கை வைக்கிறதில்லை!"
"ஓ, கடவுளே! நான் மத்தவங்க மாதிரி இல்லை. இதோ பார் இப்பவே உன் குரலை கேட்டதாலே உன் மேலே நம்பிக்கை வந்துடுத்து. இப்ப வேண்டியதெல்லாம் நீ என்னை காப்பாத்தறதுதான். அப்புறம் காலா காலத்துக்கும் உன் புகழை பரப்புவேன்!"
"ஹும்! சரி! நான் உன்னை காப்பாத்தறேன். அந்த கிளையை விட்டுடு."
" கிளையை விடவா? என்னை முட்டாள்ன்னு நினைச்சயா நீ?"

Tuesday, July 19, 2011

ஞான ஸ்நானம்சிலர் ஞான ஸ்நானத்துக்கு வந்திருந்தார்கள். ஒரு பிஷப் அவர்கள் தகுதியை சோதித்துக்கொண்டு இருந்தார். பல விஷயங்களை கேட்டு விட்டு இப்படி கேட்டார். "உங்களை காதலிக் என்று மற்றவர் எப்படி தெரிந்து கொள்வார்கள்?"
பதிலே இல்லை. திருப்பியும் கேட்டார். பலத்த மௌனம். காற்றில் ஒரு சிலுவையை வரைந்தபடி (க்ளு கொடுக்கிறாராம்!) மீண்டும் கேட்டார்.
ஒருத்தர் புரிந்தா மாதிரி பதில் சொன்னார்.
"லவ்!"
பிஷப் திடுக்கிட்டார். தப்பு என்று சொல்ல நாக்கு நுனி வரை வந்து விட்டது. நல்ல காலம் கடைசி கணத்தில் நிறுத்திக்கொண்டார்!

Monday, July 18, 2011

போலி ஆன்மீகம் - பொலம்பல் போஸ்ட்!நேத்து ஆடி முதல் தேதி.
வருஷா வருஷம் ஏண்டா இந்த ஆடி மாசம், மார்கழி மாசம் வரதுன்னு இருக்கும்.
இப்படிச்சொன்னா பல நண்பர்களும் முறைச்சு பார்ப்பாங்க. இந்த ரெண்டு மாசமுமே விசேஷமா தெய்வ ஆராதனைக்கு சொல்லப்பட்டு இருக்கு; நீ என்னடான்னா இப்படி சொல்லறியே; உன்னைப்போய் ஆன்மீகவாதின்னு வேற சிலர் நினைச்சு கொண்டு இருக்காங்க ன்னு மனசில திட்டறீங்க.
நல்லா திட்டுங்க. பரவாயில்லை! என் காதில் ஒண்ணும் விழாது!
ஏன் விழாது? வீட்டுக்கு பகக்த்தில இருக்கிற பிசினஸ் சென்டர்லேந்து அவ்வளோ சத்தம்! நான் நினைக்கிறதே என் காதில விழாது அப்புறமாதானே நீங்க எங்கேந்தோ திட்டறது காதில விழணும்!
தப்பு என் பேரில்தான். இந்த ஏரியாவில இடம் வாங்கி நாங்க வீடு கட்டுமுன்னேயே இந்த பி.செ இங்கே இருந்தது. அப்ப இதோட சீரியஸ்னெஸ் தெரியலை.
குடியேறிய பிறகுதான் வருஷத்தில எவ்வளோ ஞாயிற்றுக்கிழமை இருக்கு; எத்தனை விசேஷ நாள் இருக்குன்னு எனக்கே தெரிய வந்தது!
ஞாயித்துக்கிழமை ஸ்பெஷல் குறி சொல்லறது. இந்த பி.செ சொந்தக்காரரோட மனவிதான் குறி சொலல்றவங்க. மாலை நாலரை மணிக்கு ஆரம்பிச்சு உடுக்கை அடிக்க ஆரம்பிச்சா ஏதேதோ நடக்கும். ஒரு ஹிஸ்டீரியாவில அந்த அம்மா மெதுவா ஒரு சுத்து சுத்தி வந்து ஆட்டம் போட ஆரம்பிக்கும். நேரம் போகப்போக ஆட்டம் வேகமாவும் கண்ட்ரோல் இல்லாமலும் ஆகும். அப்புறம் உடுக்கை ஸ்பீட் குறைஞ்சு கேள்விகள் ஆரம்பிக்கும். முதல்ல ஒரு கேள்விக்கு மூணரை ரூபாயா இருந்தது; அப்புறமா ஏறிபோச்சு. விலைவாசியும் ஏறிபோச்சு இல்லே?
நெசமாதான் இந்த அம்மா குறி சொல்லுதான்னு பாக்க உள்ளூர் இளைஞர்கள் ஒரு தரம் போய் என் வலது கையில என்ன இருக்கு இடது கையில் என்ன இருக்குன்னு கேட்டாங்க. வலது கைல திருநீறு இடது கையில குங்குமம் ன்னு அந்த அம்மா ட்ரமாடிக்கா சொல்லவும் வெத்து கைகளை திறந்து காட்டி ஓஓஓன்னு சத்தம் போட்டுட்டு பசங்க ஓடிட்டாங்க. அப்பலேந்து உள்ளூர்வாசிகளுக்கு இங்க என்ன நடக்குதுன்னு தெரியும். வந்து போறதெல்லாம் வெளியூர்வாசிகள்தான்.
இந்த மாதிரி பிசினெஸ் நடத்தறது ரொம்ப சுலபம். எல்லாருக்கும் ஏதோ கஷ்டம் இருக்கு. ஏதாவது குறூக்கு வழ்ழி கிடைக்காதா நம் கஷ்டம் தீராதான்னு பாத்துகிட்டு இருப்பாங்க. கேள்விக்கு சார்ஜும் அதிகமில்லை என்கிறதால பிரச்சினை சரியாகலைன்னா யாரும் பெரிசா கவலைப்பட போறதில்லை. சரியாச்சுன்னா திருப்பி வந்து இன்னும் பணம் கொடுத்து பூசை கீசை செய்து போவாங்க.
இந்த பிசினெஸ் ஐடியாவை யாரும் பயன்படுத்தினா எனக்கு ராயல்டி கொடுக்கணும்ன்னு இப்பவே எச்சரிக்கறேன்!

பி.செ சொந்தக்காரர் ஏதோ ஆட்டோ ரிப்பேர் ஷாப் வெச்சிருந்தாராம். இவாங்களுக்கு ஒரு பொண்னு உண்டு. சொந்தப்பொண்ணு இல்லை தத்து எடுத்தது ன்னு இவங்க சொல்லிகிட்டு இருந்தாங்க. பின்ன குறி சொல்லறவங்களுக்கு ஒரு பில்டப் வேணாமா?

முதல்ல ஒரு சின்ன இடமா இருந்தது. இது இருந்த நிலத்தை ப்லாட் போட்டு வித்தாங்க. இந்த பி.செ இருந்த இடம் கடேசி ப்லாட். எனக்கு சொந்தம்ன்னு பி.செ சொந்தக்காரர் காட்டினது மூணு ப்லாட். நிலத்தை ப்லாட் போட்டு விக்கறப்ப புரோக்கர் இதை ஒண்ணும் செய்யாம விட்டுட்டு (அவன்கிட்டே போய் ஏன் சார் முறைச்சுண்டு!) கடைசிலே அடுத்த ப்லாட்டை உள்ளூர் மினிஸ்டருக்கு வித்துட்டு போயிட்டார். அவர் அப்பவே கேஸ் ஒண்ணுல மாட்டிகிட்டு இருந்ததுல கண்டுக்காம விட்டுட்டார். மூணாவது ப்லாட்டை ஹைவே எஞ்சினீர் ஒத்தர் வாங்கி உள்ளூர் தாதா முன்னிலையில வேலி கட்டிட்டு போயிட்டார். ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் மூணு வருஷம் முன்னே அங்கே வீடு கட்டினாங்க!ப்லாட் வீடு எல்லாம் வரதைப்பாத்து தன் சொத்தை உறுதி பண்ணிக்க பி.செ சொ.காரர் கும்பாபிஷேகம்ன்னு சொல்லி பாண்டிச்சேரி மினிஸ்டர் உள்ளூர் எஸ்.பி ன்னு கூப்டு அவங்க முன்னிலைன்னு நோட்டீஸ் அடிச்சார். உள்ளூர் எஸ்பிக்கு சிலர் காதை கடிச்சதிலே அவரும் விசாரிச்சுட்டு போகாம விட்டார். மினிஸ்டர்களும் வரலை.
முன்னேயே எனக்கும் இந்த பி.செ.சொ காரருக்கும் பிரச்சினை வந்தது.

ஞாயிற்றுகிழமை விசேஷத்தை சொன்னேன், மற்ற விசேஷ நாள் சமாசாரம் சொல்லலையே! அமாவாஸைக்கு விசேஷமா நடு ராத்திரில உடுக்கை அடிச்சு குறி சொல்லறதுண்டு. மற்ற விசேஷ நாட்களில விசேஷமான ப்ரொசீஜர்!
விடி காலை ஜபம் செஞ்சு கொண்டு இருக்கீறப்ப திடீர்ன்னு பயங்கர சத்தம் கேட்கும்! ஒண்ணுமில்லை பி.செ ல மை/லவுட் ஸ்பீக்கர் கான்ட்ராக்ட் எடுத்தவர் வந்து பவர் ஆன் செய்வார். காலை 5 மணிக்கு ஸ்விட்ச் ஆன் செய்தா திருப்பி ராத்திரி 10 மணிக்குத்தான் அவர் வருவார். அது வரைக்கும் திருப்பி திருப்பி பலதும் அலறிகிட்டே இருக்கும். லவுட் ஸ்பீக்கர் சரியா எங்க வீட்டு மாடியைத்தான் பாத்து இருக்கும். திருவிளையாடல் வசனம் மனப்பாடமே ஆயிடுத்து. கரகர குரலில் கந்த சஷ்டி கவசம், எல்.ஆர்.ஈஸ்வரி பாடின கணக்கில அடங்காத பாடல்கள் எல்லாம் திருப்பி திருப்பி அரங்கேற்றம். இதெல்லாம் காதை துளைச்சாலும் போனாப்போகுதுன்னு விட்டுடலாம்ன்னு பாத்தா திடீர்ன்னு நிலா காயுதுன்னு மாறிடும்!

ஸ்பீக்கர் நேரடியா எங்க வீட்டை பார்க்கறதாலே சத்தம் தாங்க முடியாது. ஆரம்பத்தில போய் போய் வேண்டிக்கொண்டதில அப்ப குறைவா வெச்சாலும் கொஞ்ச நேரம் கழிச்சு பி.செ.சொ காரர் வந்து யாரடா குறைச்சதுன்னு அதட்டிட்டு மேக்சிமம் ஆக்கிடுவார். இதுல என்ன சூக்ஷ்மம்ன்னா இந்த பி.செ, பி.செ வுடைய போட்டிக்காரங்க இருக்கற இடம், எங்க வீடு மூணும் ஒரே நேர்கோட்டில் இருக்கிறதுதான். அவங்க ஸ்பீக்கர் சத்தத்தைவிட இவங்க சத்தம்தான் அங்கேயும் அதிகமா கேக்கணுமாம்!

ஆடி மாசம் வந்தா ஒண்ணாந்தேதியே வேலை ஆரம்பிச்சுடும். ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி 'திருவிழா' நடக்கும். இதில என்ன வித்தியாசம்ன்னா ஒரு நாள் கஞ்சி ஊத்துவாங்க. இன்னொரு நாள் ராத்திரி கதை நடக்கும்.
முதல் தரம் கதை நடந்தப்ப அசந்து போயிட்டேன்.
கதை சொல்லறவர் சிரத்தையா மைக்கிலே பாடி கதை சொல்லிகிட்டு இருந்தார். மணி 10, 11 ஆச்சு இன்னும் கதை முடியறபாடில்லை. நேரே போய் பாத்தா கதை சொல்லறவர் அவரோட அசிஸ்டென்ட் தவிர யாரும் அங்கே முழிச்சுகிட்டு இல்லை. நாலஞ்சு பேர் அங்கேயே நிம்மதியா தூங்கிகிட்டு இருந்தாங்க. நான் "ஐயா நீங்க கதை சொல்லுங்க, வேண்டாங்கலை. கேக்க யாருமில்லையே! அதனால் மைக்கை ஆப் பண்ணிட்டு கதை சொல்லுங்க" ன்னேன்! அவரும் மைக்கை ஆப் பண்ணிட்டார். சத்தம் இருந்த வரை நிம்மதி தூங்கின பி.செ.சொ காரார் எழுந்து ஆச்சா போச்சான்னு சத்தம் போட நானும் திருப்பி கத்த ஏக ரகளை! அப்புறம் சத்தம் கம்மியா வெச்சு கதை காலை வரை நடந்தது.

பொறுக்க முடியாம ஒரு நாள் போலீஸ் எஸ்.பி கிட்டே சொல்லிட்டோம். கம்ப்லைண்ட் மேலே உடனடியா ஆக்ஷன்! ஒரு ஆட்டோல வந்து கட்டி இருந்த கோன் ஸ்பீக்கர்கள், ஸ்டீரியோ செட் எல்லாத்தையும் சப்ஜாடா அள்ளிகிட்டு போயிட்டாங்க. கன காரியமா எல்லார் முன்னிலையிலும் எங்க வீட்டுக்கு சிரிச்சுகிட்டே வந்து சல்யூட் அடிச்சு வேலையை முடிச்சுட்டோம் சார் ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க!
அவ்வளோதான்! போலீஸ் போனதும் கூட்டமா வந்து ஒரே சத்தம் போட்டாங்க. நானும் சளைக்காம திருப்பி திட்டினேன். எவ்வளவு தரம் உங்ககிட்டேயே சொன்னேன். நீங்கதான கொஞ்சம் கூட இறங்கி வரலை என்கிறதே என் கட்சி.
அதுக்கு அப்புறம் நேரடியா எங்க வீட்டை பாத்து கோன் ஸ்பீக்கர் கட்டறதை விட்டாங்க. தொல்லையும் பெருமளவு குறைஞ்சது!
அப்புறமா ஊர் முழுதுமே கட்டுப்பாடு வந்து பாக்ஸ் ஸ்பீக்கர் மட்டுமே பயன்படுத்தினாங்க. பிரச்ச்சினை அனேகமா முடிஞ்சது.
சில வருஷங்களிலே பி.செ சொ காரரும் ஊருக்கு போய் சேர்ந்தார். கொஞ்ச நாளிலே அவர் மனைவியும்.

இப்பல்லாம் அப்பப்ப ஸ்பீக்கர் தொல்லை இருக்கு. முன் அளவில இல்லை. ஒண்ணு ரெண்டு நாள்தான் பிரச்சினையும்!
பின்னே ஆரம்பத்துல ஒரே சத்தம்ன்னு பெரிசா கம்ப்லைண்ட் பண்ணியேன்னா, ஹிஹிஹிஹி சும்மா ஒரு பில்டப்தான்!

Friday, July 15, 2011

மகாத்மா காந்திமகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த போது பைபிளால் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக மலைப்பிரசங்கம் அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. இந்தியாவின் ஜாதி பிரச்சினைகளுக்கு கிறிஸ்துவம் தீர்வாக இருக்கும் என்று நினைத்தார். கிறிஸ்துவர் ஆகிவிடலாமா என்று தீவிரமாக யோசித்து ஒரு நாள் சர்ச்சுக்கு மாஸ் நேரத்துக்குப்போனார். அதில் பங்கேற்று விட்டு தான் கிறிஸ்துவனாக மாற நடவடிக்கை எடுக்குமாறு கேட்க உத்தேசம்.
சர்ச் வாசலிலேயே நிறுத்தப்பட்டார். மாஸ் இல் பங்கேற்க விரும்பினால் கருப்பர்களுக்கான சர்ச்சுக்கு போகலாம் என்று மென்மையாக அறிவுறுத்தப்பட்டார். அப்போது திரும்பியவர் பின்னர் சர்ச் ஐ திரும்பிக்கூட பார்க்கவில்லை.


Thursday, July 14, 2011

மனசு...என்னங்க, சுந்தரி அவளோட மாமியார் வீட்டுக்கு போனாளாம்.”
பறிமாறிக்கொண்டே பேச்சு ஆரம்பிக்கும்.
ம்ம்ம்ம்
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு கேட்டுடலாம்ன்னு முடிவு பண்ணிட்டாளாம். மனசில இருந்த ஆதங்கத்தை எல்லாம் கடிதாசிலே எழுதி பையன் மூலமா கொடுத்துட்டாளாம்.
ம்ம்ம்ம்
அதை படிச்சுட்டு மாமியாரும் மாமனாரும் வந்து "ரொம்பவே வருத்தமா இருக்குமா. வேணா நாங்க உன் அப்பா அம்மாகிட்டே மன்னிப்பு கேட்கிறோம்" ன்னு சொன்னாங்களாம்.
ம்ம்ம்ம்
எல்லாம் வேஷம். இவங்களாவது வருத்தப்படறாவது?
ம்ம்ம்ம்…....
எல்லாம் உள்ளுக்குள்ள நிறைய வன்மம். பொறாமை.
----
இத்தனைக்கும் சுந்தரி இவங்களுக்கு உறவில்லை. ரொம்ப ஒண்ணும் தெரிஞ்சவங்களும் இல்லை. ஊரார் கதை. சுந்தரியோட மாமியாரையும் மாமனாரையும் திருமணத்தின் போது பார்த்தது. அவங்களை முன்னே பின்னே தெரியாது.
பின்ன ஏன் ரொம்ப தெரிஞ்ச மாதிரி விமர்சனம் செய்யணும்?
அதான் சிலர் இயல்பு.

எண்ணங்கள் வலிமையானவை. இதை அடிப்படையா வெச்சு பல வைத்தியங்களே உண்டு. சிலர் இறைவனை வேண்டிக்கொண்டு கொடுக்கும் திருநீரே மருந்தாகிவிடும் என்றும் நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடன் அதை உட் கொண்டால் சரியாகி விடுகிறது. அதே திரு நீற்றை நம்பிக்கையில்லாமல் உட்கொண்டு ஒண்ணும் வேலை செய்யலைன்னு சொல்கிறவங்க உண்டு. நமக்கு வேண்டப்பட்ட டாக்டர் ஒண்ணும் கவலைப்பட வேண்டாம் அதே மருந்தை தொடருங்கன்னு சொன்னா நிம்மதி ஆகிவிடுகிறோம். இந்த அட்வைஸுக்காக நானூறு கிலோமீட்டர் பயணம் செய்யத் தயாராக இருக்கிறோம். மற்ற படி அதே அட்வைஸ் எந்த எக்ஸ்பெர்ட் கிட்டேந்து வந்தாலும் ஏற்கிறதில்லை.
எல்லாம் மனசுதான் காரணம்.
இந்த மனசை சுத்தமா வெச்சுக்கொண்டால் என்ன?
பலரும் அப்படி வைத்துக்கொள்வதில்லை. அதற்கு முயற்சி செய்வது கூட இல்லை.
ஆன்மீகத்தில எந்த வழியானாலும் சுத்தி சுத்தி கடைசில மனசுலதான் வந்து நிக்கும்.

நம்மோட பிரச்சினைகளே ஏராளமாக இருக்க மற்றவர் பிரச்சினைகளில புகுந்து புறப்படுவது எந்த விதத்தில உதவப்போகுது? ஏன் எதிர் மறையான எண்ணங்களை வளர்க்கணும்? அவற்றை வெளியே விடணும்? இவற்றையே வளர்த்தால் அப்படியே நடந்தும் விடலாம்.

பலருக்கும் இள வயதில் உலகையே புரட்டிப்போட்டுவிட வேண்டுமென்று ஆசை பிறக்கிறது. நடக்கிற அநியாயங்கள் அக்கிரமங்கள் இவர்களை வெகுவாக பாதிக்கின்றன. போர் போர் ன்னு கிளம்பத் தோணுது. அப்புறம் அவரவர் பிரச்சினைகள் பெரியதாக ஆனதும் இதெல்லாம் காணாம போயிடுது.
இரண்டுமே தப்பா தோணுது.
எத்தனையோ ஜாம்பவான்கள் உலகை புரட்டிப்போட முயற்சி பண்ணியும் ப்ரக்ருதி அதன் போக்கிலேயே போய் கொண்டு இருக்கிறது.
அதுக்குன்னு ஒண்ணுமே செய்ய வேண்டாம், அநியாய அக்கிரமங்களை பார்த்துக்கொண்டு சும்மா இருன்னு சொல்ல வரலை. பலதும் நடக்கிறது. அதில நம்ம பங்கு என்ன? உருப்படியா ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கணும். சம்பந்தமில்லாத விஷயங்களில அல்லது நம்மால ஒண்ணும் செய்ய முடியாத விஷயங்களில மூக்கை நுழைக்க வேண்டாமே!
போகட்டும், எப்படியும் நமக்கு நிச்சயமா தெரியாத விஷயங்களில மனசை செலுத்தி, அலைக்கழிச்சு, நாமும் கஷ்டப்பட்டு, மத்தவங்களையும் கஷ்டப்படுத்தறதில அர்த்தமே இல்லை! (குறைஞ்சது சாப்பாட்டு நேரத்திலேயாவது இதெல்லாம் கிளப்பாம இருப்போம்.:-)


Wednesday, July 13, 2011

இஷ்டிஇன்னிக்கு இஷ்டி.
இஷ்டி? எங்கேயோ கேள்விபட்ட மாதிரி இருக்கா?
ஆமாம். அனேகமா ராமாயணம் தெரிஞ்ச எல்லாரும் தசரதர் புத்ர காம இஷ்டி செஞ்சுதான் பிள்ளைகளை பெற்றார்ன்னு தெரிஞ்சு இருப்போம்.
அக்னி ஹோத்ரம் செய்யறவங்க இந்த இஷ்டியை மாசம் ரெண்டு தரம் செய்வோம். தசரதரும் செஞ்சு இருக்கார். அப்ப க்ஷத்திரியர்களுக்கும் இதில் அதிகாரம் உண்டுன்னு தெரியுது இல்லையா?
வழக்கமா இஷ்டி செய்வது அமாவாசைக்கு அடுத்து வர ப்ரதமை அன்னிக்கு ஒண்ணு. பௌர்ணமி அடுத்து வர ப்ரதமை அன்னிக்கு ஒண்ணு.
முதலாவது தர்சேஷ்டி. ரெண்டாவது பௌர்ணமாசேஷ்டி. இந்த இஷ்டிகள்தான் பலரும் செய்கிற ஹோமங்களுக்கு முன்னோடி.
இஷ்டி மிகவும் விரிவா இருக்கும். அதை சுருக்கி ஹோமத்துக்கான செயல் முறையை வகுத்து வெச்சு இருக்காங்க.
அமாவாசைக்கு செய்யும் இஷ்டிதான் மற்ற எல்லா இஷ்டிகளுக்கும் முன்னோடி. தசரதர் செய்த புத்ரகாமேஷ்டி உட்பட.

ஒரு ஹோமம்ன்னா ஒரு தேவதையை திருப்தி செய்ய பண்ணுவது. இங்கே தேவதை யார்ன்னா அக்னி, மஹேந்திரன்.
எதை ஹோமம் செய்யறோம்?
அக்னிக்கு புரோடாசம்; மஹேந்திரனுக்கு தயிர், பால்.
புரோடாசம்? அரிசி குத்தி, மாவாக்கி, வறுத்து கொஞ்சம் நெய், தண்ணீர் விட்டு கிளரி அதை உருண்டையா ஆமை போல பிடிச்சா அது புரோடாசம். அதை தயார் செய்யறப்ப பொரி மாவு மாதிரி நல்ல வாசனையா வரும்!
மஹேந்திரன் யாரு? இந்திரனேதான். அவனோட இன்னொரு ரூபம்.

ரொம்ப சுலபமா இப்படி ஹோமம்ன்னு சொன்னாலும் இதை செய்து முடிக்க 3-4 மணி நேரம் ஆகும். தயிர் ன்னா மாட்டையும் கன்னுக்குட்டியையும் மேய்வதற்கு புங்கிளையால ஓட்டி ன்னு ஆரம்பிச்சு விலாவரியா போகும். ஒவ்வொரு செயலுக்கும் மந்திரமுண்டு. மாட்டையும் கன்னுக்குட்டியையும் கட்டிப்போட்டு பால கறந்து மீதி பாலை கன்னுக்குட்டி குடிக்க விட்டு, பாலை காய்ச்சி உறை குத்தி... ப்லா ப்லா ப்லா.... அப்புறம் தர்ப்பை அறுக்க வாய்க்காலுக்கு போய் மந்திரம் சொல்லி அறுத்து வந்து... நெல் மூட்டையோட வண்டியை ஓட்டி வந்து இறக்கி, நெல்லை குத்தி..... புரியுது இல்லை?
இது எல்லாம் நீங்க செய்யறிங்களான்னா...

இப்ப இதெல்லாம் பாவனையாதான் நடக்குது. தர்ப்பை விளையற வாய்க்காலையும் காணலை; புரசங்கிளை ஒடிக்க மரங்களும் இல்லை; கன்னுக்குட்டி, மாடு விரட்ட புல்காடும் இல்லை. எல்லாம் கான்க்ரீட் காடாயாச்சு! என்னிக்காவது ஒரு நாள் முழுசா செய்ய எனக்கும் என் பையனுக்கும் ஆசை. பார்க்கலாம். நாராயணன் விட்ட வழி!

அமாவாசை இஷ்டிக்கு முன் தினமே (-அமாவாசை அன்னிக்கு) இஷ்டி ஆரம்பிச்சுடும். பால் காய்ச்சி தயிர் ரெடி பண்ணனுமே! அந்த மாலை வேளை அரிசி கஞ்சியால அக்னி ஹோத்திர ஹோமம். அக்னி ஹோத்திரம் முடிச்சு இஷ்டி ஆரம்பிச்சு தயிர் உறை குத்தி மூடி வெச்சுட்டு அன்னைய வேலை ஓவர். அடுத்த நாள் காலை அக்னி ஹோத்திரம் முடித்து இஷ்டியை தொடர்ந்து நடத்துவோம். காலை பால் கறந்து காய்ச்சி; நெய் காய்ச்சி, புரோடாசம் எல்லாம் தயார் செய்து ஹோமங்கள் நடக்கும்.

இந்த இஷ்டி செய்ய நாலு பேர் வேணும். ஒத்தர் போஸ்ட் பேர் ஹோதா. ஹிஹிஹி... கேள்வி பட்டு இருக்கோம் இல்லை? ஹோதாவோட வேலை தேவதைகளை மந்திரம் சொல்லி கூப்பிட்டறது. அத்வர்யு என்கிறவர்தான் ஹோமங்களை செய்து கொண்டு போகிறவர். ஆக்னீதரர் ன்னு ஒத்தர்; ஈட்டிக்காரன் மாதிரி ஒரு ஈட்டியை பிடிச்சுகிட்டு நிப்பார். இந்த ஈட்டி வழியாதான் தேவதைகள் கீழிறங்கி கொடுக்கிற ஹவிஸை வாங்கிக்கொண்டு போவாங்க.

சாதரணமா ஹோமங்களை செய்கிறவங்க செய்கிற ஐயர்கிட்டே பவர் ஆப் அடார்னி கொடுத்துட்டு வரவங்களை பாத்து வரவேத்து அரட்டை அடிச்சு கொண்டு இருப்பார் இல்லையா? அதெல்லாம் இங்கே நடக்காது. முழு ஹோமத்துக்கும் அக்னி பக்கத்தில இவரும் உக்காரணும். மந்திரங்கள் பலது உண்டு. சரியான இடத்தில அதெல்லாம் சொல்லணும். வேதம் படிக்காம இதெல்லாம் செய்ய முடியாது. அவருக்குன்னு வேலைகளும் உண்டு.

இவருக்கு எஜமானன் ன்னு பெயர். இவருடைய பத்னிக்கும் வேலை உண்டு. நெல் குத்தி அரிசி ஆக்குகிறது; அதை மாவு ஆக்குகிறது எல்லாம் இவங்க வேலை. (ப்லூரல் இல்லைங்க, ஒரு மரியாதைக்கு இவங்கன்னு சொன்னேன்!)
ஹோமம் செய்கிற பொருட்கள் எல்லாம் சுத்தமா இருக்கணும் இல்லையா? அது எப்படி சுத்தமாகும்ன்னா யக்ஞ பத்னி கண்ணால நெய்யை பார்க்கிறதால சுத்தமாகும். இப்ப சொல்லுங்க பெண்களுக்கு வைதிக மதங்கள் முக்கியத்துவம் கொடுக்காம ஒடுக்குதுன்னு.
சாதாரணமா பெண்கள் வேத மந்திரங்கள் சொல்வதில்லை, ஹோமங்கள் செய்வதில்லை என்றாலும் இங்கே அவங்க வேத மந்திரங்கள் சொல்லணும். ஹோமங்கள் செய்யவும் செய்யணும்.

பதிவு நீண்டு போச்சு; இன்னொரு சமயம் தொடரலாம்.


Tuesday, July 12, 2011

உரத்த சிந்தனை - 3கொஞ்ச நாளாக மெத்தையில் நடப்பது போல இருக்கிறது. பாதங்களில் உணர்ச்சி கொஞ்சம் குறைந்து இருக்கிறது. அது சர்க்கரை வ்யாதி இருக்கிறவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைதான். சர்க்கரை கட்டுப்பாடில் இருந்தாலும் டயாபெடிஸ் உடம்பு முழுதும் பாதிக்கும் நோயானதால் மற்ற பிரச்சினைகள் மெதுவாக வளர்ந்து கொண்டுதான் இருக்கும். சர்க்கரை கட்டுப்பாடு இதை மெதுவாக்கும். கட்டுப்பாடில்லாமல் இருப்பின் இவை சீக்கிரமே வளரும்.
மெத்தையில் நடபப்து போன்ற உணர்வு நரம்புகள் பாதிப்படைவதால் வருகிறது. இதற்க்கு ந்யூரோபயான் போன்ற பி காம்ப்லெக்ஸ் வைட்டமின் ஊசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். இந்த பி காம்ப்லெக்ஸ் நம் பெருங்குடலில் பாக்டீரியாக்களால் தயாரிக்கப்படுகின்றன. ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு கல்லீரலில் சேமிக்கப்படுகிறது. இது வேறு எந்த உணவு வகையிலும் காணப்படாது. இயற்கையாக நமக்கு வேண்டியது கிடைத்து விடுகிறது என்றாலும் நெடு நாட்கள் நோய் வாய்ப்பட்டவர்கள், நெடு நாள் சர்க்கரை வ்யாதி உடையவர்களுக்கு அதிக அளவில் தேவை இருக்கிறது. பி காம்ப்லெக்ஸ் மாத்திரைகள் ஊசி மருந்துகள் கல்லீரல்களில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. ஸ்ரிக்ட் வெஜிடெரியன் யாருக்கும் சொல்லிவிடாதீர்கள்! மருந்துக்கு தோஷம் இல்லையானாலும் சிலரால் இதை ஜீரணிக்க முடியாது.

இன்று இந்த பி காம்ப்லெக்ஸ் ஊசி போட்டுக்கொள்ள சர்ஜன் நண்பர்கள் உதவியை நாடினேன். ஒருவர் சர்ஜனானாலும் மிக மென்மையான மனம் உடையவர். அவர் எனக்கு ஊசி குத்த மறுத்துவிட்டார்! மற்றவருக்கு 20 வருடங்கள் முன் வரிசையாக 45 ஊசிகள் நான் குத்தி இருக்கிறேன். பழிக்குப்பழி என்று இல்லாவிட்டாலும் அவர் ஊசி குத்த முன் வந்தார். காலை உணவு இடை வேளை போது குத்திக்கொண்டு விடலாம் என்று உத்தேசித்து எல்லாம் தயார் செய்தாகிவிட்டது!
இந்த ஊசியை 'நரம்பிலும்' ஏற்றலாம், சதையிலும் ஏற்றலாம். சதையில் ஏற்றிக்கொள்ள ஒரு பெஞ்சில் படுப்பது வசதியாக இருக்கும். சர்ஜன் மென்மை மனம் 'நரம்பில்' ஏற்றிக்கொள்ளப்போகிறேன் என்று முடிவு செய்து விட்டார். அதனால் நான் அவர் பெஞ்சில் உக்கார்ந்து இருபப்தை பார்த்து "ஐயா, அங்கே போய் அமர்ந்து கொள்ளுங்கள்; இதை காலி செய்யுங்கள்" என்று கேட்டும் அமர்ந்திருந்த பெஞ்சை காலி செய்ய மறுத்துவிட்டார். ‘அங்கே போய் உட்கார்ந்து கொண்டு போட்டுக்கொள்’ என்று ஒரு நாற்காலியை காட்டினார். போகிறது என்ன இப்போ என்று நினைத்துக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்து ஊசி கொண்டு போட்டுக்கொண்டேன்!
இப்போது அவருக்கு மன வருத்தம் வந்துவிட்டது. "நரம்பில் போட்டுக் கொள்ளப் போகிறாய் என்றல்லவா நாற்காலியை காட்டினேன்" என்று வருந்தினார்.

சில சமயம் ஏன் என்று கேட்காமல் கீழ்படிய வேண்டும். அதுதான் நம்பிக்கை. இவர் சொல்வதில் விஷயம் இருக்கும் என்று நம்புவது அது. நம்பாமல் இருந்துவிட்டு அப்புறம் வருந்துவதில் அர்த்தம் இல்லை.

ஆன்மீகப் பெரியோர்கள் சொல்வதை நாம் நம்புவதும் இதுவே. ஆனால் இந்த கால இளைஞர்கள் எளிதில் நம்பிக்கை வைப்பதில்லை. ஏன் எதுக்கு என்று கேட்டுக்கொண்டு காலம் கடத்தி கடைசியில் சிலர் ஏன் இப்படி காலம் வீணாக கடத்தினோம் என்று வருந்துகிறார்கள். குழந்தைகளுக்கு ஆன்மீகத்தை புகட்டுவதிலும் இப்படி சிலர் நடந்து கொள்கிறார்கள். "பெரியவன் ஆனதும் தானே முடிவு செய்து கொள்ளட்டும். நானாக திணிக்க மாட்டேன்" என்று 'மாடர்ன் சிந்தனை'யில் நடந்து கொள்கிறார்கள்.

நம்புவோம். நம்பி நடந்து கொள்வோம். பின்னால் ஒரு வேளை நம்பிக்கை பொய்த்தால் பெரியவனாகி கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் விட்டு விடட்டும். பெரிய இழப்பு ஏதும் இல்லை. (நம்பிக்கையில் காலமும் பொருளும் வீணாயிற்று என்று சிலர் வாதாடினால் அதில் கொஞ்சம் லாஜிக் இருக்கிறது. I acknowledge!) நம்பிக்கை உறுதியானால் 'he would have had a flying start'! சிறு வயதில் பழகாமல் காலம் கடந்து நம்பிக்கை வந்தால் இவ்வளவு நாள் வீண் ஆயிற்றே என்று நாம் வருந்த நேரிடலாம். அதை ஈடு செய்வது கடினம்!


Monday, July 11, 2011

உரத்த சிந்தனை - 2தலை சுத்தல் இப்பதான் கொஞ்சம் பரவாயில்லை. நேற்று இரவு பங்களூரில் இருந்து பஸ் பயணம் அவ்வளவு சரியாக அமையவில்லை.
இந்த பங்களூர் பயணம் நாராயணன் எனக்கு அவ்வப்போது கொடுக்கிற பாடங்களில ஒண்ணா அமைஞ்சது!
ட்ரஸ்ட் க்கு கணிசமான வைப்பு நிதி சேர்த்து வைக்க வேண்டும் என்று தோன்றியதால் அது சம்பந்தமாக பங்களூர் போக முடிவாயிற்று. டிரஸ்டிகளில் ஒருவருடைய நண்பர் ரா. அங்கே இருக்கிறார். அவருடன் கொஞ்சம் சுற்றலாம் என்று முடிவாச்சு. தொலை பேசி மூலம் மூன்று வாரம் முன் பேசியபோது ஜூலை 2, 3 ஊரில் இல்லை, 9-10 பரவாயில்லை என்றார். மற்ற பங்களூர் நண்பர்கள் சிலரும் அப்படியே சொன்னதால் 9-10 என்றே முடிவாச்சு. பேருந்து பயணச்சீட்டும் வாங்கியாச்சு!
கூகுள் மேப் எல்லாம் பாத்து யார் யார் எங்கே இருக்காங்கன்னு ஒரு அலசலும் முடிச்சு ஒரு மாதிரி பயண திட்டத்தை வகுத்தாச்சு. ஏறக்குறைய பங்களுரை வலம் வரா மாதிரிதான் இருந்தது!.
போன புதன் நண்பர் ரா உடன் பேசும் போது “மன்னிக்கணும், ஞாயிறு ஒரு நிகழ்ச்சி இருக்கு. அதற்கான ஏற்பாடுகளை செய்யணும்; அது நினைவு இல்லாம ஒத்துக்கொண்டு விட்டேன்” என்றார்.
‘முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம், நம்ம வேலை சுத்துவது. மீதி எல்லாம் நாராயணன் வேலை’ என்று போயே தீருவது என்று முடிவு செய்தேன். ஒன்றும் இல்லாவிட்டாலும் நண்பர்களை பார்த்து பாட்டரிகளை ரீ சார்ஜ் செய்துக்கொள்ளலாம் என்று கிளம்பி விட்டேன். நடுவில் சக ட்ரஸ்டி பேசியதில் நண்பர் ரா நேரம் எப்படி ஒதுக்குவது என்று பார்க்கிறேன் என்றார்.
அது சரி, காலை எங்கே போவது? நண்பர்தான் பிசி என்று சொல்லிவிட்டாரே? என் மகனுடன் பேசியதில் ஒருவரை பற்றி முன்னால் அவன் பேசியதை நினைவு படுத்தினான். பக்கத்து ஊரில் மெடிக்கல் ரெப்ரசெண்டேடிவ் ஆக இருந்த ஒருவரை முன்னால் அங்கே போன போது சந்தித்து இருக்கிறான். பொறி துயில் ஆழ்துனர்களை இவர்கள் சில காரணங்களால அதிகம் சந்திப்பது இல்லை. ஆனாலும் என்னை அவர் நினைவு வைத்துக்கொண்டு இருந்தார். எனக்குத்தான் மறந்துவிட்டது! நான் பங்களூர் வந்தால் அவசியம் வர வேண்டும் என்று ஒரு ஸ்டாண்டிங் இன்விடேஷன் கொடுத்து வைத்து இருந்தார். சரி அவர் வீட்டுக்கு போகலாம் என்று நினைத்து போன செய்தால் அவர் சென்னையில் இருந்தார். ஒண்ணும் பிரச்சினை இல்லை, நீங்க வீட்டுக்கு போங்க. நான் இரவு வந்துவிடுவேன்; மனைவி கொஞ்சம் வெளியே கோவிலுக்கு போக வேண்டி இருக்கும். வேற ஒண்ணும் பிரச்சினை இல்லை. என்றார். முகவரி வாங்கிக்கொண்டு போய் சேர்ந்தேன். இனிமையான வரவேற்பு! காலை கடன்கள் அனுஷ்டானங்கள் முடித்து அலுப்பு தீர கொஞ்சம் படுத்து எழுந்தாச்சு! நண்பர் ரா வும் வேலைகளை ஒருவாறு ஏறக்கட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார். வெளியே கிளம்பினோம். ஒருவரை மட்டுமே பார்த்து பேச முடிந்தது. முன் ஏற்பாடு இல்லாததால் மற்றவர்கள் ஊரில் இல்லை, வீட்டில் இல்லை போன்ற செய்திகளே கிடைத்துக் கொண்டு இருந்தன. சரி நாராயணன் விட்ட வழி என்று வீட்டுக்கு வந்து விட்டோம். மதிய உணவுக்குப்பின் வெளியே கிளம்பி நண்பரை சந்தித்து உரையாடி அவர் குழந்தையுடன் ரகளை செய்ததில் பாட்டரி ரீசார்ஜ் ஆகிவிட்டது! இரவு பங்களூர் வட கிழக்கு கோடியில் இருந்த நண்பர் வீட்டுக்கு போய் சேர்த்தேன். அங்கு இன்னொரு சின்ன குழந்தை! ஆநந்தமாக பொழுது போயிற்று!
காலை இவர் வீட்டில் இருந்து கிளம்பும் போது கணிசமான ஒரு தொகைக்கு செக் கொடுத்தார்! முந்தைய நாள் தங்கிய வீட்டு நண்பரை பார்க்க முடியவில்லை என்று அங்கே மீண்டும் போக திட்டமிட்டு இருந்தேன். அவர் வெகு ஆர்வத்துடன் பல விஷயங்களை கேட்டுக்கொண்டார். கடைசியில் கிளம்பும் முன் அமெரிக்காவில் இருக்கும் அவரது மகள் ‘நல்ல காரியம் எதுக்காவது கொடுங்க’ என்று இவரிடம் கொடுத்து இருந்த கொஞ்சம் பெரிய தொகையை அப்படியே ட்ரஸ்ட் க்கு கொடுத்துவிட்டார்! அங்கே சந்திக்க வந்த நண்பர் இன்னொருவர் மூலமும் இன்னும் கொஞ்சம் வந்து சேர்ந்தது! கடைசியில் நிதிக்காக கிளம்பிய காரியம் நிறைவேறி விட்டது!
எப்படி நிதி திரட்டலாம் என்று நினைத்தேனோ அப்படி இல்லாமல் வேறு வழியில் வந்து சேர்ந்துவிட்டது!
இப்படித்தான் அடிக்கடி இந்த நாராயணன் படுத்துகிறான்!
இதானே கீதையில் கண்ணன் சொன்னது? கர்மாவுக்கு மட்டுமே உனக்கு அதிகாரம் இருக்கிறது! பலன் இப்படிதான் இருக்க வேண்டும் என்று எதிர் பாராதே!


Thursday, July 7, 2011

உரத்த சிந்தனைகள் -1உரத்த சிந்தனைகள்:
சும்மா லாஜிக்கலான வாதமாக இல்லாமல் மனசு ஓடுகிற ஓட்டத்தை அப்படியே எழுத யோசனை. அதனால் லாஜிக்காக இல்லாமல் ஆரம்பித்த விஷயத்தை விட்டு எங்கு வேணுமானாலும் இது போகும்.
-------------
இன்றைய சிந்தனை கொல்லாமை பற்றி.
அன்றாட வாழ்விலே எத்தனை கொலை செய்து கொண்டிருக்கிறோம்! ஆச்சரியமாக இருக்கு. சிலது கண்ணுக்கு புத்திக்கு தெரிந்தே நடக்கிறது. பலதும் புத்தி வரை வராமலே நடக்கிறது. அட! அப்படியான்னா ஆமாம். யோசித்து பார்த்தா ஆமாம்ன்னு ஒத்துக்கொள்ள வேண்டி இருந்தாலும், அட இப்படித்தான் பல காலமா செய்து கொண்டு இருக்கிறோம்; எல்லோருமே செய்கிறார்கள்; அதில என்ன இருக்கு ன்னு என்றெல்லாம் தோன்றலாம். அதை பிழை சொல்லவரவில்லை.

சர்வ சாதாரணமாக வீட்டில் கொசு வத்தி ஏற்றுகிறோம். கொஞ்சமாவது கொசுக்கள் இறந்து போகின்றன. விளம்பரம் என்னவோ எங்க …. ப்ரான்ட் கொசு வத்தி தேடித்தேடி அழித்துவிடும்ன்னு இருந்தாலும் பல கொசுக்கள் இதற்கு பெப்பே காட்டிவிட்டு உயிர் வாழ்கின்றன. நாளடைவில் கொசுக்கள் கொசு வத்தி புகையை சகிக்கப்பழகி விடும் போலும். கொசு வத்தி மேலேயே கொசு உக்காரும் என்று கூட சொல்கிறார்கள்.
ஒரு தமாஷ் பாத்தீங்களா? சிங்கம் புலியைக்கூட கூண்டில் அடைத்துவிடும் மனுஷன் கொசுவுக்காக தான் வலைக்குள்ள புகுந்துக்கறான். அப்ப கொசுதானே மோர் பவர்புல்?

ஆமாம். கொசு வலை கட்டிக்கொள்வதே நல்லது. கொல்லாமையும் கடை பிடிக்கலாம்; கொசு கடியில் இருந்தும் தப்பலாம். கண்ட கெமிக்கல் புகையை சுவாசித்து அவஸ்தை படவும் வேண்டாம். நான் சின்ன பையனாக இருந்த போது இதுவே பலரும் பயன்படுத்துவதாக இருந்தது.

இதில் பிரச்சினையே வலைக்கு உள்ளே புகுந்துவிடும் கொசுக்கள்தான். அதால வெளியே போகவும் முடியாது. ராத்திரி முழுக்க கடிச்சுகிட்டே இருக்கும். கடைசில நாம் நிம்மதியா தூங்காம புரண்டு படுக்கும்போது நசுங்கி செத்துப்போகும். இதுக்காக தினசரி ராத்திரி விளக்கை அணைத்த பிறகு டார்ச் அடிச்சு உள்ளே யாரும் வரவேற்காத விருந்தாளி இருக்காங்களான்னு சோதிக்க வேண்டி இருக்கு. அப்படி இருந்தாலும் கொல்ல மனசில்லாம பிடிச்சு பிடிச்சு வலைக்கு வெளியே விடறதா இருக்கு. அதுல இப்ப கொஞ்சம் எக்ஸ்பர்டைஸும் வந்தாச்சு.

இந்த கொசு விரட்டில பல வகை வந்தாச்சு. கம்பனிக்கு கம்பனி போட்டில புதுசு புதுசா ஏதாவது வருது. இன்னும் பவர்புல் இன்னும் அதிக நேரம் வேலை செய்யுதுன்னு வளர்ந்துகிட்டே இருக்கு. மின் கொசு விரட்டியிலே மின் சக்தியை இரட்டிப்பாக்கி ஒரு கம்பனி போட்டா இன்னொரு கம்பனி ஸ்லைடர் கண்ட்ரோல் போடறாங்க. ஆனா எது செஞ்சாலும் வர கொசு வந்துகிட்டுத்தான் இருக்கு.

பெண் கொசுக்கள்தான் கடிக்குது. அதுவும் கர்ப்பிணி பெண் கொசுக்கள். அதுங்க முட்டை போட ப்ரோட்டீன் வேண்டி இருக்கு. அதுக்காக நம்ம ரத்தத்தை உறிஞ்சுதுங்க. ஆண் கொசுக்கள் ஏதும் அறியாத அப்பிராணிங்க! இப்படி இருந்தாலும் கொசுக்களுக்கு சாதகமா பெண்கள் கொடி பிடிப்பாங்கன்னு பாத்தா அவங்க பேட் பிடிக்கிறாங்க. அதுவும் சரிதான்; டு பேட் பார் சம் ஒன் ன்னு ஆங்கில சொலவடை ஒண்னு இருக்கில்ல?
பக்கத்து வீட்டம்மா வெகு சிரத்தையா தினசரி ஒரு டென்னிஸ் பேட் எடுத்துகிட்டு வீசிகிட்டே இருக்காங்க. அவங்க வீச வீச பட் கட் ன்னு சத்தம் வேற. முதல்ல ஒண்ணும் புரியலை. அப்புறம் பாத்தா அது கொசு பேட்டாம்! பாட்டரி போட்டு மின்சாரத்த ஒரு கம்பி வலைக்குள்ள ஏத்தி …. நம்மை கடிக்கிற கொசுவை ஒரு ரெப்லெக்ஸ் ல பட்டுனு அடிக்கிறது புரியுது! கொசுவை தேடித் தேடி அழிச்சா அதை என்னன்னு சொல்லறது? வாழ அதுங்களுக்கு இல்லாத ரைட்ஸ் நமக்கு என்ன இருக்கு? அதுங்க என்னத்தான் பண்ணும்? ஆட்டை கடிக்க முடியுமா இல்லை மாட்டை கடிக்க முடியுமா? மனுஷனை கடிச்சுதான் உயிர் வாழனும்ன்னு விதிச்சிருக்கே?

இருந்தாலும் இது டூ மச் ன்னு சொன்னீங்கனா சரிதான். அது உங்க நிலைப்பாடு. சாதாரணமா க்ருஹஸ்தனுக்கு இவ்வளவு தூரம் கொல்லாமை விதிக்கலே. சன்னியாசிங்களுக்குத்தான் அஹிம்சை பரம தர்மம். (ப்லாக். பஸ் எழுதி ஹிம்சை பண்ணும் சன்னியாசிங்க பத்தி என்கிட்டே கேக்காதீங்க. அந்த ஆட்டத்துக்கு நான் வரலை!)
இருந்தாலும் ஆன்மீகத்தில முன்னேறனும்ன்னு நினைக்கிற எல்லாருமே யோசிக்க வேண்டிய விஷயம் இது. கொல்லாமை அவங்களுக்கும் தர்மம்.
--
பிகு. இதான் கொசு வத்தி சுத்தறதுன்னு சொல்லறாங்களோ? :-))

Tuesday, July 5, 2011

ப்ராணாயாமம்.


ப்ராணாயாமம்.
1. சந்தியாவந்தனத்தில் பல இடங்களில் ப்ராணாயாமம் வருதே அதப்பத்தி சொல்லுங்க.
ஆமாம். பல இடங்களிலும் இது வரும்.
குறிப்பா ஒரு சங்கல்பம் செய்யும் முன் வரும்.

2. ஏன் அப்படி?
சங்கல்பம் என்கிறது ஒரு உறுதி மொழி. அது சாதாரணமா சொல்கிற விஷயமில்லை. ஆகவே அதுக்கு தனியா ஒரு சக்தி வேணும், மனக்குவிப்பு வேணும். அதை கொடுக்கிறதே
ப்ராணாயாமம்.

3. சரி அதை எப்படி செய்யணும்?
பலவிதமான ப்ராணாயாமம் இருக்கு. சாதாரணமா மூச்சை இழுத்து, நிறுத்தி, விடுகிறதே ப்ராணாயாமம்.
மூக்கில் வலது இடதுன்னு இரண்டு துவாரங்கள் இருக்கு இல்லையா? வலது பக்கமா காற்றை இழுக்கணும். பின் மூச்சை நிறுத்தணும். இடது பக்கமா விடணும்.

4. சரி மந்திரத்தோட செய்யணுமா இல்லை மந்திரமில்லாமலா?
சந்தியாவந்தனத்தில மந்திரத்தோடதான் செய்யணும்.

5. இல்லாமலும் செய்யலாமா?
செய்யலாம். அதுக்கு நாம் எதிர்பார்க்கிற பலன் இராது. அதற்கு வேறு மாதிரி பலன் இருக்கும். அதனால சந்தியாவந்தனத்தில அப்படி செய்யக்கூடாது. இப்படி செய்யும் போது உடம்பில சக்தி பெருகும். இது அடுத்து செய்யவிருக்கிற கர்மாவுக்கு பலம் சேர்க்கும்.

6. சந்தியாவந்தனத்திலேயே இது ரெண்டு விதமா செய்கிறாப்போல இருக்கே.
ஆமாம். காயத்ரி ஜபத்துக்கு முன்னே செய்வது ரிஷி, சந்தஸ், தேவதை சொல்லி செய்வது. மத்தது அப்படி இல்லை.
மற்ற எல்லாத்தையும் விட ஜபத்துக்கு மனக்குவிப்பும் உடலுக்கு சக்தியும் மிக அவசியம். அதனால் இப்படி.

7. செய்முறையில இந்த ரெண்டுக்கும் வித்தியாசம் உண்டா?
உண்டு.
ஒரு ப்ராணாயாம மந்திரம் சொல்லும்போது மூச்சை இழுத்து, நிறுத்தி, விடலாம்.

அல்லது ஆரம்பம் முதல் காயத்ரியை முடிக்கும் வரை மூச்சை இழுப்பது.
அடுத்து ஓமாபோ முதல் அடுத்த ப்ராணாயாம மந்திரம் முடிய மூச்சை பிடிப்பது.
மூன்றாவதாக மூன்றாம் முறை சொல்லும் ப்ராணாயாம மந்திரத்தின் போது மூச்சை விடுவது.
இப்படி செய்வது நல்லது. மந்திரங்களை ஒரே வேகத்தில் சொல்லுவது இருந்தால் இப்படி செய்வதில் சரியான விகிதாசாரம் அமைந்துவிடும்.

8. அதென்ன விகிதாசாரம்?
ப்ராணாயாமத்தை லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது உடம்பில் இருக்கிற நாடிகள் சம்பந்தப்பட்டது. சரியான விகிதாசாரத்தில இல்லாம செய்கிற ப்ராணாயாமம் விரும்பாத விளைவுகளை கொடுத்துவிடலாம். மேலும் விவரங்கள் எக்ஸ்பர்டைஸ் சம்பந்தப்பட்டது என்கிறதால இங்கேயே நிறுத்திக்கலாம். ப்ராணாயாமத்தை தனியாக பயில விரும்புபவர்கள் தகுந்து ஒரு குருவை நாடி பயிலவும்.

Monday, July 4, 2011

தவளைகள் சத்தம்...


மஹா பெரியவர் அவருடைய இளமைக்காலங்களில் தமிழ்நாடு முழுதும சுற்றுப்பயணம் செய்தார்.அந்த காலத்தில்  பொழுது சாய்ந்தால் கிராமம் உறங்கி விடும். ஸ்வாமிகள் மேனா எனப்படும் பல்லக்கு மாதிரியான ஒரு கூண்டில் பயணம் செய்வார். அதிலேயே படுத்து உறங்கலாம். கிராம மக்களை தொந்திரவு செய்ய விரும்பாமல் அவ்வவ்போது இரவு முகாம் என்று ஒரு வழியில் உள்ள கிராமத்தில் ஏதோ ஒரு திண்ணையில்/ மரத்தடியில் மேனாவை இறக்கி விட்டு கூட வருவோர் ஒவ்வொரு திண்ணையை தேடி போய் விடுவார்கள்.

இது போல் ஒரு மழைக்காலத்தில் ஒரு கிராமத்தில் தங்கினர். மழை பெய்து ஓய்ந்து இருந்ததால் தவளைகள் உற்சாகத்துடன் இரவு முழுதும் ஓசை எழுப்பி கொண்டிருந்தன. பரிவாரத்தில் யாருக்கும் தூக்கம் வரவில்லை!

காலை எழுந்த பிறகு ஸ்வாமிகளை மற்றவர் கேட்டார்கள்: இரவு தூங்கிணீர்களா?
ஆஹா! இரவு முழுதும் சிவா த்யானத்திலேயே கழிந்தது!
இரவு முழுதும் தவளைகள் சத்தம் போட்டுக்கொண்டே இருந்தனவே?
ஆமாம்! அவை ஹர ஹர, ஹர ஹர என்றே சொல்லிக்கொண்டிருந்தன. அதனால் சிவ த்யானமே இரவு முழுதும்!

Friday, July 1, 2011

காயத்ரி -637. ஏன் முதல்ல உரக்க சொல்லச்சொல்லறீங்க?
முன்னே சொன்ன ஸ்வர உச்சரிப்பு சரியாவது ஒரு பக்கம். இன்னொன்று பழக்கப்படாத மனசு மிகச்சுலபமாக வேறு எங்காவது 'புல் மேய' போய்விடும். உரக்கச்சொல்லும்போது அந்த சப்தமும் காதில் விழுவதால் கவனம் வைப்பது சுலபம்.

38. காயத்ரியோட அர்த்தம் என்ன?
குரு மூலமாக கேட்டுக்கொள்ள வேண்டியது. இருந்தாலும் எளிமையாக வாக்கிய அர்த்தம் என்னன்னு பார்க்கலாம்.
எந்த தேவதையை குறித்து காயத்ரி சொல்லப்படுகிறது என்பதைப்பொறுத்து இது மாறும். சாதாரணமாக இதை சூரியனாக கருதுவதால் பொருள்: எந்த சூரியனின் தேஜஸானது (உபாசகர்களாகிய) எங்களுடைய புத்திகளை எல்லா நல்ல கர்மங்களை அனுஷ்டிப்பதில் திறமையும் பற்றும், கெட்ட கர்மங்களில் பற்றில்லாதவராயும் ஆகும்படி செய்கிறதோ; ப்ரகாசமாக இருப்பவரும் (அல்லது தேவ லோகத்தில் இருப்பவரும்) எல்லா உலகங்களின் அபிவிருத்திக்கும் சாதனமான மழையை உண்டு பண்ணுகிறவருமான சூரியனுடைய புருஷார்த்தத்தில் விருப்பமுடையவர்களால் தியானம் செய்யத்தகுந்த அந்த தேஜஸை தியானிக்கிறோம்.

39.காயத்ரி ஒரு தனி மனிதனுக்காக இல்லைன்னு சொல்கிறாங்களே? அது எப்படி?
ஆமாம். இதில் ந: ன்னு வருகிறதில்லையா? அது பன்மை. எங்கள் புத்தியை தூண்டுவாயாக.
என் புத்தியை தூண்டுவாயாகன்னு சொல்லி இருக்கலாமே? ஆனால் அப்படி சொல்லவில்லையே! ஒருவரே பலருக்காக செய்யும் ப்ரார்த்தனை போல இது இருக்கு.
அதனால்தான் ஒரு ஊரில் ஸஹஸ்ர காயத்ரி செய்பவர் ஒருவர் இருந்தாலும் ஊருக்கே நன்மை என்கிறோம்.

40. அதென்ன என்னென்னெமோ இருக்க புத்தியை தூண்டுவாயாகன்னு கேட்கிறோம்?
உண்மைதான். தேவர்கள் நம்மை ஆடு மாடு மேய்ப்பது போல குச்சி வைத்து கொண்டு மேய்க்க தேவையில்லை. நமக்கு வேண்டியதை நாமே அடையலாம். அதுக்கு புத்தி சரியாக இருந்தால் போதும். அதனால்தான் புத்தியை தூண்டச்சொல்லி கேட்கிறோம்.


பாபம் புண்ணியம்


நாம் நமக்கு எவ்வளவு கெடுதல் செய்து கொள்கிறோம் என்று தெரிந்தால் பலரும் பாபம் செய்ய மாட்டார்கள். ஆனால் பாபம் புண்ணியம் என்று அறியாத மயக்கமே பலருக்கும் இருக்கிறது.

ஒரு குடிகாரன் தெருவில் நடந்து போய்க்கொண்டு இருந்தான். அவனை பார்த்த நண்பன் கேட்டான்: "ஏன் உன் இரண்டு காதுகளும் தீப்புண்ணாக இருக்கு?”
" நேத்து சூடான இஸ்த்ரி பெட்டி பக்கத்தில டெலிபோன் இருந்தது. ஒரு போன் கால் வந்ததுதா ரிசீவருக்கு பதில் இஸ்திரியை எடுத்து காதில வெச்சுகிட்டேன்!”
" அடடா! அது சரி ரெண்டாவது காது?”
" முட்டாப்பய திருப்பியும் போன் பண்ணான்!”