Pages

Friday, November 30, 2018

பறவையின் கீதம் - 75

சீடன்: என் கையில் ஒன்றுமே இல்லாமல் உங்களை பார்க்க வந்திருக்கிறேன்.
குரு: அதை உடனே கீழே போடு!
சீடன்: எதை கீழே போடுவது? என் கைகளில்தான் ஒன்றுமே இல்லையே?
குரு: அப்படியானால் அதை சுமந்து கொண்டே திரி!

Thursday, November 29, 2018

பறவையின் கீதம் - 74

சீடன் குருவைத்தேஎடிபோய் சொன்னான்: “நான் உங்களுக்கு என் சேவையை அர்ப்பணிக்க வந்திருக்கிறேன்"
குரு அமைதியாக சொன்னார்: “அந்த 'நான்' ஐ விட்டுவிடு. சேவை தானாக நடக்கும்!”

உன்னிடம் உள்ளதை எல்லாம் ஏழைகளுக்கு கொடுத்துவிடலாம். உன் உடலும் விழலாம். அப்போதும் அன்பு சுரக்காது.
உன் பொருட்களை நீயே வைத்துக்கொள். அகங்காரத்தை மட்டும் விட்டுவிடு. அன்பு உடனே சுரக்கும்.

Wednesday, November 28, 2018

பறவையின் கீதம் - 73

நெய்ஷாபூரிலிருந்து ஒரு கதை.
காதலன் காதலியின் வீட்டுக்குப்போனான். கதவைத்தட்டினான்.
உள்ளிருந்து காதலி "யார் கதவை தட்டுறது?” என்று கேட்டாள்.
நான்தான்"
இங்கே ரெண்டு பேருக்கு இடமில்ல. போங்க"
காதலனுக்கு ஒன்றும் புரியவில்லை. சில வருடங்கள் அது பற்றி யோசித்தான். பின் ஒரு நாள் சென்று கதவைத்தட்டினான்.
உள்ளிருந்து காதலி "யார் கதவை தட்டுறது?” என்று கேட்டாள்.
நீதான்"
கதவு உடனடியாக திறந்தது.

Tuesday, November 27, 2018

பறவையின் கீதம் - 72

ஒரு உப்பு பொம்மை ஆயிரம் மைல்கள் நடந்து கடலின் ஓரத்துக்கு போயிற்று. அதற்கு கடலைப்பார்த்து ஒரே ஆச்சரியம். அது வரை அது போல அலையும் எதையுமே பார்த்ததில்லையே!
உள்ளே வந்து பார்!” என்றது கடல்.
பொம்மையும் உள்ளே இறங்கியது.
உள்ளே போகப்போக அது கரைய ஆரம்பித்தது. அதன் கடைசி துணுக்கு கரையும் முன் அது கடலைப்பார்த்து சொன்னது "நான் யார்ன்னு இப்ப புரிஞ்சு போச்சு! ஆமா நீங்க யார்?”

Monday, November 26, 2018

பறவையின் கீதம் - 71

ஷாம்ஸ் எ தப்ரிஃஜி ஸுஃபி ஞானி. தன்னைப்பற்றி இந்த கதையை சொன்னார்.

நான் சிறு வயதிலிருந்தே எங்கும் பொருந்தாதவனாக கருதப்பட்டேன். யாருமே என்னை புரிந்து கொள்ளவில்லை. என் தந்தையே ஒரு முறை என்னிடம் இப்படி சொன்னார்
உன்னை பைத்தியக்காரர் விடுதியில் சேர்க்குமளவுக்கு நீ பைத்தியக்காரனாகவும் இல்லை. மடாலயத்தில் சேர்க்கும் அளவுக்கு வைராக்கியமும் இல்லை. உன்னை என்ன செய்வது?”

நான் சொன்னேன்: “ஒரு முறை வாத்தின் முட்டையை யாரோ கோழிக்கூண்டில் வைத்து விட்டார்கள். அது பொரிந்து வாத்துக்குஞ்சும் வெளி வந்தது. கோழியுடன் நடந்து போயிற்று. நீரின் அருகே வந்ததும் இயல்பாக அதில் இறங்கி நீந்த ஆரம்பித்துவிட்டது. பாவம் கோழி! இது நீரில் முழுகிவிடப்போகிறதே என்று கவலையில் கரையில் நின்று கொண்டு சத்தமிட்டுக்கொண்டு இருந்தது. என் அருமைத்தந்தையே நான் கடலின் உள் சென்றுவிட்டேன். இதுவே என் வீடு என்று உணர்கிறேன். நீங்கள் கரையிலேயே இருக்க நினைத்தால் நானா பொறுப்பு? ”

யார் தன் இயல்பை அறிகிறார்களோ அவர்கள் முன்னே போகிறார்கள். தன் இயல்பை அறியாதவர்கள் தன்னை வேறாக எண்ணி அழிந்து போகிறார்கள். (முன் கதையையும் படிக்கவும்)

Thursday, November 22, 2018

பறவையின் கீதம் - 70

ஒருவன் கழுகின் முட்டையை கண்டெடுத்தான். அதை தன் கோழியின் முட்டைகளுடன் வைத்துவிட்டான். கோழி அடை காத்தது. முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளி வந்தன. கழுகுக்குஞ்சும் வெளி வந்தது. அதுவும் கோழிக்குஞ்சுகளைப் போலவே நடந்து கொண்டது. க்ளக் க்ளக் என்று சத்தமிட்டது. நிலத்தை கிளறி புழு பூச்சிகளை கொத்தி தின்றது. இறக்கைகளை அசைத்து சில அடிகள் பறந்தது.

சில வாரங்கள் சென்றன. ஒரு நாள் வானத்தில் தங்க நிற இறகுகளை அசைத்தபடி வெகு உயரத்தில் மிதந்து கொண்டு இருந்த கழுகை கண்டது. “யார் அது?” என்று கேட்டது.

"பறவைகளின் அரசன்!” என்று பதில் வந்தது. “அவர் வானத்தில் வெகு உயரத்தில் பறந்து அரசாளுவார். நாமெல்லாம் வெறும் கோழிகள்"

"ஓஹோ

அந்த கழுகு கோழியாகவே வாழ்ந்து இறந்தது. ஏனெனில் அது தான் கோழி என்றே நினைத்தது!

Wednesday, November 21, 2018

பறவையின் கீதம் - 69

ஒரு மீனவன் இருந்தான். திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்து ஒரு வழியாக ஆண் குழந்தை பிறந்தது. சில வருடங்களுக்குப்பின் அது நோய்வாய்ப்பட்டது

எத்தனையோ செலவழித்தும் பயனில்லாமல் அது இறந்து போனது. மனைவி குலுங்கி குலுங்கி அழுதாள். மீனவனோ நிச்சலனமாக இருந்தான். மனைவி அவனை கொஞ்சம் கூட துக்கப்படவில்லையே என்று கடிந்து கொண்டாள்.

மீனவன் சொன்னான்: “ நேத்திக்கு ராத்திரி நான் ஒரு ராஜாவா இருந்ததாகவும் எட்டு மகன்கள் இருந்ததாவும் கனவு கண்டேன். அப்பறம் திடீர்ன்னு முழிப்பு வந்துடுத்து. இப்ப அந்த எட்டு பேருக்கு வருத்தப்படறதா இல்லை இந்த குழந்தைக்கு வருத்தப்படறதான்னு தெரியாம முழிக்கிறேன்!”

Tuesday, November 20, 2018

பறவையின் கீதம் - 68


இதை முன்னேயே படித்திருப்பீர்கள்.

ஒரு கிராமத்து இளம்பெண் கர்ப்பமாகி பிரசவித்து விட்டாள். நிறைய அடி உதை வாங்கிய பின் கர்ப்பத்துக்கு காரணம் கிராமத்துக்கு சற்றே வெளியே இருந்த ஜென் மாஸ்டர் என்று சொன்னாள்.

கிராமவாசிகள் எல்லாரும் திரண்டு அங்கு போயினர். தியானத்தை கலைத்து "நீ ஒரு போலி" என்று திட்டி நீ உண்டாக்கிய குழைந்தையை நீயே வைத்துக்கொள் என்று அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டனர். ஜென் மாஸ்டர் 'நல்லது நல்லது' என்று சொன்னபடி குழந்தையை தூக்கிக்கொண்டார். பக்கத்து வீட்டுப்பெண்மணியுடன் குழந்தையை பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்தார்.

அவரது பெயர் கெட்டுப்போயிற்று. மாணவர்கள் ஒவ்வொருவராக விலகிவிட்டுப்போயினர்.
இப்படியாக ஒரு வருடம் கழிந்த பின் குழந்தையின் தாயால் அதை தாங்க முடியவில்லை. குழந்தையின் தந்தை பக்கத்து வீட்டுக்கார பையன்தான் என்று உண்மையை பெற்றோரிடம் தெரிவித்தாள்.

கிராமவாசிகள் எல்லோரும் போய் ஜென் மாஸ்டரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். குழந்தையை திருப்பி வாங்கிக்கொள்வதாக சொன்னார்கள்.
மாஸ்டர் 'நல்லது நல்லது' என்று சொன்னபடி குழந்தையை கொடுத்துவிட்டார்.
ஞானி!

Monday, November 19, 2018

பறவையின் கீதம் - 67

காலை மணி ஒன்பதாகியும் நசருதீன் எழுந்திருக்கவில்லை. சூரியன் உதயமாகி வெகு நேரம் ஆகிவிட்டது. பறவைகள் மரங்களில் பாடிக்கொண்டு இருந்தன. காலை உணவு ஆறிப்போய்க்கொண்டு இருந்தது. அதனால் அவரது மனைவி நசருதீனை எழுப்ப முடிவு செய்தார்.
நசருதீன் கோபத்துடன் எழுந்தார். “எதுக்கு என்ன எழுப்பினே?”
சூரியன் உதயமாகி ரொம்ப நேரம் ஆச்சு. பறவைகள் மரங்களில் பாடிக்கொண்டு இருக்கு. காலை உணவு ஆறிப்போச்சு. அதான் எழுப்பினேன்.”
சாப்பாடு கெடக்கட்டும். நா ஒரு லக்‌ஷம் தங்க காசுக்கு ஒரு காண்ட்ராக்ட் கையெழுத்து போட இருந்தேன். கெடுத்துட்டே!”
கண்களை மூடி திருப்பி கனவு காண முயன்றார்.
காண்ட்ராக்டில் நசருதீன் எதிராளியை ஏமாற்றிக்கொண்டு இருந்தார். அவன் பெரும் கொடூரமானவன்.
திரும்பி கனவு காணும்போது ஏமாற்றுவதை நிறுத்தினால் நசருதீன் புனிதராகி விடுவார்.
கொடுங்கோலன் மக்களை கொடுமை செய்வதை தடுத்தால் அவர் விடுதலை வீரராகிவிடுவார்.
இதன் நடுவில் அவர் தான் கனவு கண்டுகொண்டிருப்பதை உணர்ந்து விழித்துக்கொண்டு இருந்தால் அவர் ஞானியாகிவிடுவார்.
இன்னும் தூங்கி கனவு கண்டு கொண்டிருந்தால் நீ என்ன புனிதர் அல்லது விடுதலைவீரன்?

Friday, November 16, 2018

பறவையின் கீதம் - 66

அது ஏதோ ஒரு புதிய மதம். ஹால் வயதான கிழவிகளால் நிறைந்து இருந்தது. இடுப்பில் ஒரு துணியும் டர்பனும் மட்டும் அணிந்து இருந்த ஒருவர் பேச மேடை ஏறினார். மிகவும் உணர்ச்சியுடன் மனம் உடலை வயப்படுத்தும் என்று பேசினார். முடித்தபின் எனக்கு எதிரில் இருந்த தன்னிடத்துக்கு திரும்பினார். அவருக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்து இருந்த கிழவி கேட்டார்: "நீங்க நிஜமாத்தான் மனசு உடலை வெல்லும்ன்னு சொன்னீங்களா?”

"ஆமாம்.”

"அப்ப அந்த சீட்டை எனக்கு கொடுத்துட்டு இங்கே உக்காந்துக்கறீங்களா? இங்க குளுந்த காத்து அடிக்குது!”

Thursday, November 15, 2018

பறவையின் கீதம் - 65

ஒரு பூகம்பம் உண்டாகிவிடும்; அதன்பின் நதி ஏரி குள தண்ணிரெல்லாம் கெட்டுவிடும்; அதை குடிக்கும் மக்கள் பைத்தியமாகி விடுவார்கள் என்று ஒரு கடவுள் மக்களிடம் சொன்னார். யாரும் அதை பொருட்படுத்தவில்லை.
இறைதூதர் மட்டும் நம்பினார். ஒரு மலைக்குகையில் தன் வாழ்நாளுக்கும் தேவையான நீரை சேமித்தார்.
பூகம்பம் வந்தது. நீர்நிலைகள் வற்றி பின் புதிய நீரால் நிறைந்தன. அந்த நீரை குடித்து எல்லாரும் பைத்தியமானார்கள்.
சில மாதங்கள் கழித்து இறைத்தூதர் இறங்கி வந்தார். மக்கள் எல்லோரும் பைத்தியமாக இருந்தார்கள். இவர் மட்டும் வித்தியாசமாக இருந்ததால் இவரை பைத்தியம் என்று கருதி தாக்கினார்கள்.
மலைக்கு திரும்பி ஓடி வந்த இறைத்தூதர் தண்ணீரை சேமித்தோமே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டார். சில மாதங்கள் சென்றன. தனிமையை தாங்க முடியவில்லை. மீண்டும் கீழே இறங்கி வந்தார். மக்கள் இவர் வித்தியாசமாக இருக்கிறார் என்று வெறுத்து ஒதுக்கினார்கள். தாள முடியவில்லை. புதிய தண்ணீரை குடித்தார். தானும் பைத்தியமானார். அவர்களுடன் ஐக்கியமானார்.
உண்மையை தேடப்போனால் அந்த வழி தனி வழிதான். தனியாகத்தான் நடக்க வேண்டும்.

Wednesday, November 14, 2018

பறவையின் கீதம் - 64

என் கண்களை நம்பவே முடியவில்லை. கடையின் பெயர் 'உண்மைக்கடை' என்று இருந்தது.

கடையில் விற்பனை பெண்மணி இதமாக கேட்டார் "உங்களுக்கு எந்த மாதிரி உண்மை வேணும்? பாதி உண்மையா, முழு உண்மையா?”

"எனக்கு முழு உண்மைத்தான் வேணும். நீர்த்துப்போனதோ ஏமாற்றுவதோ முட்டுக்கொடுப்பதோ தர்க்கரீதியானதோ இல்லை. கலப்படமற்ற வெறும் உண்மை.”
அந்த பெண்மணி என்னை இன்னொரு நபருக்கு கைக்காட்டினாள்.

அங்கிருந்த நபர் விலைச்சீட்டை சுட்டிக்காட்டினார்: “விலை ரொம்ப அதிகம் சார்"
"அது என்ன? என்ன விலையானாலும் முழு உண்மையை அடைந்தே தீருவேன்.”
உங்கள் பாதுகாப்புதான் விலை சார்"

கனத்த இதயத்துடன் திரும்பிவிட்டேன். எனக்கு கேள்வி கேட்காத நம்பிகைக்களின் பாதுகாப்பு அவசியமாக இருக்கிறது.

(இந்திய சிந்தனைகளில் ஊறிய ஆசிரியரை சர்ச் அவ்வளவாக நல்லவிதமாக நடத்தவில்லை என்று கேள்வி.)

Tuesday, November 13, 2018

பறவையின் கீதம் - 63

காங்கிரஸ் ஹாலில் குருஷேவ் ஸ்டாலினை வறுத்தெடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் ஒருவர் "காம்ரேட் குருஷேவ், ஸ்டாலின் களங்கமற்ற மக்களை கொன்று குவித்துக்கொண்டு இருந்தபோது நீங்கள் எங்கே போனீர்கள்?” என்று கேட்டாராம்.

குருஷேவ் சற்று தாமதித்தார். பின் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு சொன்னார்: “கேள்வி கேட்ட ஆசாமி கொஞ்சம் எழுந்து நிற்க முடியுமா?”

யாரும் அசையக்கூட இல்லை. அரங்கில் இறுக்கம் அதிகரித்தது.

பின் குருஷேவ் சொன்னார்: “ சரி சரி, நீங்க யாரா இருந்தாலும் இப்ப விடை கிடைச்சாச்சில்லை? நீங்க இப்ப இருக்கற நிலையிலத்தான் நானும் இருந்தேன்!”

Monday, November 12, 2018

பறவையின் கீதம் - 62

டயோஜீன்ஸ் ஒரு தத்துவ ஞானி. அவர் ரொட்டியும் பயறும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார். அரிஸ்டிபஸ் மன்னரை போற்றி நல்ல நிலையில் வாழ்ந்து வந்தார். அரிஸ்டிபஸ் டயோஜீன்ஸை பார்த்தார். “மன்னரை போற்றிக் கொண்டு இருந்தால் பயறை உண்டு வாழ தேவையிருக்காது" என்றார்

டயோஜீன்ஸ் சொன்னார் "பயறை உண்டு வாழ தெரிந்திருந்தால் மன்னரை போற்றி வாழ தேவையில்லை."

Monday, November 5, 2018

தன்தெராஸ்

Dhanteras தன்தெராஸ் ன்னு கேள்விபட்டிருக்கலாம். தன த்ரயோதசிதான் அப்படி மருவி இருக்காம். இந்த தன் தனியாவுக்கு சம்பந்தம் போலிருக்கு. கொத்துமல்லி விரையையும் வெல்லமும் கலந்து மராத்தியர்கள் நிவேதனம் செய்யறாங்களாம்.
யாரோ நகைக்கடைக்காரர் இத பயன்படுத்திகிட்டார் போலிருக்கு. தன் - செல்வம்ன்னு சொல்லி தங்க வெள்ளி விக்கிற நாளா ப்ரொமோட் பண்ணி இருக்காங்க! சிலர் அப்படி இல்ல லக்‌ஷ்மி பாற்கடல்லேந்து வந்த நாள்ன்னு சொல்றாங்க. லக்‌ஷ்மி பூஜை செய்யறதும் பழக்கத்துல இருக்கு.
இதையே தன்வந்தரி த்ரையோதசின்னும் சொல்றாங்க. இது தீபாவளிக்கு முதல் நாள். (தீபாவளி நரக சதுர்தசி இல்லையா?) தமிழ்நாட்டில பல குடும்பங்களில தீபாவளி மருந்துன்னு செய்வாங்க. அதை நிவேதனமும் செய்வாங்க. அதுவும் இதுக்கு சம்பந்தப்பட்டதோ? 2016 லேந்து இந்த நாளை தேசிய ஆயுர்வேத தினமா அரசு அறிவிச்சு இருக்காம். இன்னைக்கு தன்வந்தரி பூஜை செஞ்சதா நண்பர் ஒரு போஸ்ட் போட்டு இருக்கார்.
தீபாவளிக்கு அவசியமா பட்டாஸ் குறிப்பா மத்தாப்பு கொளுத்துங்க. ஏன்னு இங்கே  இங்கே போஸ்ட் போட்டு இருக்கேன்.
தீபாவளி நல்வாழ்த்துகள்!

Friday, November 2, 2018

பறவையின் கீதம் - 61
வேலைக்கு நேர்முகத்தேர்வு நடந்தது.
முதல் ஆசாமி.
நீ கேட்ட வேலைக்கு நாங்க வைக்கிற எளிமையான டெஸ்ட் இது, சரியா?
சரி!
ரெண்டும் ரெண்டும் எவ்வளோ?
நாலு!
சரி, நீங்க போலாம். அடுத்து..
டெஸ்டுக்கு ரெடியா?
ஆமா சார்.
ரெண்டும் ரெண்டும் எவ்வளோ?
முதலாளி என்ன சொல்லறாரோ அவ்வளவு!
இரண்டாவது ஆசாமிக்கு வேலை கிடைத்துவிட்டது

எது முதலில்? வழிவழியாக வரும் நம்பிக்கையா அல்லது உண்மையா?

Thursday, November 1, 2018

பறவையின் கீதம் - 60

கடவுள் உலகில் அவதாரம் எடுக்க முடிவு செய்தார். ஒரு தேவதையை சர்வே செய்து வர அனுப்பினார்.

தேவதை திரும்பி வந்து சொன்னது: முக்கால்வாசி பேர் பட்டினி இருக்காங்க. முக்கால்வாசி பேர் வேலை இல்லாமலும் இருக்காங்க.

கடவுள் முடிவு செய்தார்: சரி, அப்படியானால் பட்டினி இருப்போருக்கு உணவாகவும் வேலை இல்லாதவர்களுக்கு வேலையாகவும் அவதாரம் எடுக்கிறேன்.