Pages

Friday, May 29, 2009

சீவன் உற்பத்திகண்ணாடியிலே நம்ம முகத்தை பாக்கிறோம். அது நம்மை மாதிரியே இருக்கு. ஆனா அது நாம் இல்லை.
அது போல சித்தான ஆத்மாவின் நிழல் வேற ஒரு சித் போல தோன்றும். அதுவே புத்தி. இதில ஆத்மாவின் சித் களங்கமில்லாதது. புத்தி களங்கமானது. இருந்தாலும் சித்தோட சம்பந்தம் இருக்கிறதால கொஞ்சமாவாது அறிவு இருக்கணுமே? அது உலக விஷயங்களிலே அறிவு உள்ளது. இதுக்கு ஞானம்ன்னு பெயர்.(பூரணமான பிரம்ம ஞானம் இல்லை. உலக விஷயங்களிலே ஞானம்)

[போன பதிவையேதான் வேற மாதிரி எழுதி இருக்கேன்.]

11.
சீவன் உற்பத்தி:
உன்முகம் போற்கண் ணாடிக் குள்ளொரு முகங்கண் டாற்போற்
சின்மய வடிவின் சாயை சித்துப்போல் புத்தி தோன்றும்
நின்மல விருத்தி யந்த நிழல் வழி யாயு லாவும்
தன்மநன் மகனே யித்தைத் தானன்றோ ஞானமென்பார்.

உன்முகம் போல் கண்ணாடிக்குள் ஒரு முகம் கண்டால் போல சின்மய வடிவின் (ஆத்மாவின்) சாயை (நிழல்) சித்து (வேறொரு சேதனம்) போல் புத்தி தோன்றும். (புத்தியாக பிரதி பலிக்கும்). நின்மல (களங்கமில்லா) விருத்தி அந்த நிழல் வழியாய் உலாவும். தன்ம (ஆனந்த அனுபவம் பெற்று உள்ள) நன் மகனே இதைத் தான் அன்றோ ஞானமென்பார்.
[புத்தியில் பிரதிபலிக்கும் ஆத்ம சாயை சிதாபாசன் ஆகும். இதனுடன் சேர்ந்து வெளி விஷயங்களில் செல்லும் விருத்தியே ஞானமாகும்.]


சாமானியனுக்கு ”நேதி” வழியில் சொன்னால் புரியுமா ?
////"அட இவன்தான்!" ன்னு சினேகிதிகள் தெரிஞ்சுகிட்டாங்க! //

ஆமாம். கண் (ஞானம்) இருக்கிற சிநேகிதிகள் தெரிஞ்சுகிட்டாங்க!!.

அதாவது சீடனும் குருவின் நிலையை எட்டியிருந்தாத்தான் புரியுமோ என்னவோ. ஆனால் சாமானியன் (ஞானக்)குருடனை போலத்தானே. அவனுக்கு ”நேதி” வழியில் சொன்னால் புரியுமா என்பது சந்தேகமே :(//

இப்படி கபீரன்பன் ஒரு கமென்ட் போட்டு இருக்கார். இதைப்பத்தி கொஞ்சம் விரிவா எழுத நினைச்சதாலே தனி பதிவாக போடறேன்.

உண்மைதான். சாமானியர்களுக்கு இப்படி புரியாதுதான்.
ஆனா சொல்கிறது சாமானியனுக்கு கிடையாது.

அதனாலதான் நாலு வழிகள் இருக்கு. எல்லாராலும் எங்கேயும் எப்பவும் செய்யக்கூடியது பக்திதான். சாமானியர் நிலையிலே இருக்கிற வரை அதுதான் நல்லது; எளிமையானது.
ஆனா என்ன, சாதாரணமா மக்கள் ஆயுசு முழுக்க பக்தின்னு கோவில் கோவிலா போய் பூஜை பூஜையா பண்ணி திருப்தியே வராம ஓடிகிட்டேதான் இருக்காங்க. கோடியிலே ஒத்தர்தான் (?) மூட பக்தி மட்டத்தைவிட்டு வெளியே வந்து எல்லாத்திலும் இறைவனை பாக்க ஆரம்பிச்சுன்னு அட்வான்ஸ் ஆகிறாங்க.

யாரானாலும் கொஞ்சம் முயற்சி எடுக்க ஆரம்பிச்சா மற்ற பாதைகளிலும் பயணிக்க முடியும். எந்த பாதையில் போனாலும் அந்த பாதையில் நிறைய முன்னேற்றம் இருக்கும் அதே சமயம் இன்னொரு பாதையிலும் கொஞ்சமாவது முன்னேற்றம் இருக்கத்தான் இருக்கும். பக்தியும் கர்மாவும் ஞானத்திலே கொண்டு விடலாம். எதுவும் இப்படித்தான்னு ரொம்ப வலுவான சுத்துச்சுவர் போட்டது இல்லை.

ஒண்ணு குருவை கண்டு பிடிச்சு அவர் காட்டுற பாதையிலே போகணும். அப்படி சரியான குரு கிடக்காவிட்டா எந்த பக்கம் உந்துதல் இருக்கோ அந்த பாதையிலே போய் பாக்கணும். சரியான நேரத்திலே குரு வந்து சரியான வழியை காட்டிடுவார்.

ஞான வழியை எடுத்துக்குங்க.
இது சுலபமான வழி இல்லை. ஆனாலும் இறங்கியாச்சு, தீவிரமா பயிற்சி ஆரம்பிச்சாச்சுன்னா சீக்கிரமே பலன் தரும். ஆனா சோதனைகளும் சிரமமும் அதிகம். அதனாலதான் ஞான நூல்கள் இந்த பாதையிலே இறங்கறவங்களை "தீரா" ந்னு சொல்லும். தன் குறிக்கோளிலே சற்றும் தயங்காது நிலையா சாதனை செய்கிறவங்கதான் இதிலே முன்னேறுவாங்க.

சமம் தமம் ந்னு ஆரம்பிச்சு ஆறு படிகள் சொன்னோம் இல்லையா? இதிலே நடந்து வந்து முன்னேறுகிறவங்க சாமானியர்களா இருக்க மாட்டாங்க. அந்த அளவு பயிற்சி செய்த பிறகு குரு உபதேசம் செய்யும் லெவலுக்கு வரும் போது நேதி நேதி சொன்னால் அதை ஆழ்ந்து சிந்திச்சு திடீர்ன்னு பட்டுன்னு ஞானம் ஸ்புரிக்கும். சந்தேகமே இல்லை என்கிறாங்க பெரியவங்க.

Thursday, May 28, 2009

மனோ உற்பத்தி
முதல் சந்தேகத்துக்கு பதில் சொல்லியாச்சு. இப்ப ரெண்டாவது சந்தேகமான பிரம்மம் மனசுக்கு எட்டுமா எட்டாதான்னு சொல்கிறார்.

புலன்களாலதானே இந்த உலகத்தை அறியறோம். இந்த புலன்களுக்கு அந்தக்கரணமே ராஜா. மனசாகவும் புத்தியாகவும் வெளிப்படுகிற அந்தக்கரணம் உள்ளே தனியாவும், புலன்கள் மூலமா வெளியேவும் செயல்படும். புத்தி எப்பவும் தெளிவானது. கண்ணாடி மாதிரி. அதிலே சத்தாக இருக்கிற கூடஸ்தனோட நிழல் பிரதிபலிக்கும். (கூடஸ்தன்? நினைவிருக்கா? கடல்- கடல் நீர் திவலை மாதிரி பிரம்மம்- கூடஸ்தன்). இப்படி பிரதிபலிக்கிறதாலே அது இயல்பு மாறிடுது இல்லையா? அதனால அதுக்கு ஆபாசன்னு பேர். அந்தக்கரணம் மனசாக இதன் வழியா சஞ்சரிக்கும். அதாவது விஷயங்களோட சம்பந்திக்கும். இந்த சுத்த சத்துவ மனோ விருத்திதான் ஞானம் என்கிறது. இதை ஆழ்ந்து யோசிச்சு புரிஞ்சுக்கணும். (அதுக்காகவே  இது சின்ன பதிவு!)

10.
உகற்ப சிருட்டியாய் மனோ உற்பத்தி
முந்திய சங்கை தீர மொழிந்ததை யறிந்து கொள்வாய்
பிந்திய சங்கை தீரப் பேசுமுத் தரநீ கேளாய்
இந்தியங் களுக்கிராச னிதயமா மதினெண் ணங்கள்
புந்தியு மனமு மென்றே புறத்தகத் துலாவி யாடும்

முந்திய சங்கை (பிரமம் வாக்குக்கு எப்படி எட்டும் என்ற சந்தேகம்) தீர மொழிந்ததை அறிந்து கொள்வாய். பிந்திய சங்கை (சுயஞ்சோதியாகிய பிரமம் மனத்துக்கு எட்டும், எட்டாது எவ்விதம்) தீரப் பேசும் உத்தரம் (பதில்) நீ கேளாய்.

இந்தியங்களுக்கு (சர்வேந்திரியங்களுக்கும்) இராசன் இதயமாம். அதன் எண்ணங்கள் புந்தியும் மனமும் என்றே புறத்தகத்து உலாவி ஆடும் (ஆத்ம ஸ்மரணமே மனமும் புத்தியும் ஆகத்தோன்றும்)


Wednesday, May 27, 2009

ப்ரம்மம் வாக்குக்கு எட்டும்...
இப்படி வாக்குக்கு எட்டாதுன்னு சொன்ன வேதமே வாக்குக்கு எட்டும்ன்னு எப்படி சொல்லித்துன்னா...
சொல்லாம சொல்லித்து.

அதாவது
ரொம்ப நாள் கழிச்சு ஒரு பெண்ணோட சினேகிதிகள் அவளை பாக்க வந்தாங்க. அதுக்குள்ள அவளுக்கு கல்யாணம் ஆயிடுத்து. "எங்கேடி உன் புருஷன்?" ன்னு கேக்கிறங்க. "வெளீயே போயிருக்கார்"
"அட, பாக்க முடியாதா?"
"இல்லடி இப்ப ஒரு சாமி ஊர்வலம் வரும், அதிலே வருவார் பாக்கலாம்."

அதோ வந்தாச்சே! எல்லாரும் மாடிக்கு போய் வராந்தாவிலே நின்னு பாக்கிறாங்க. சாமி வருது. அதுக்கு முன்னே பலர் வித விதமா ஆடிகிட்டு பாடிக்கிட்டு வராங்க. இவ புருஷன் இவனாதான் இருக்கும்ன்னு ஊகம் பண்ணி "இவனா? இவனா?" -  அப்பப்ப கேக்கிறாங்க. "இல்லை, இல்லை" ன்னு சொல்லிகிட்டே வரா. அப்ப ஒரு வழியா நிஜமாவே அவளோட புருஷன் ஜம்ன்னு சிலம்பம் சுத்திகிட்டு வந்துட்டான்.

"இவனாடி?"

பதில் காணோம். இது வரைக்கும் இல்லை இல்லைன்னு வார்த்தையா சொன்னவ இப்ப வார்த்தை இல்லாம வெக்கத்தோட சும்மா இருக்கிறதை பாத்து "அட இவன்தான்!" ன்னு சினேகிதிகள் தெரிஞ்சுகிட்டாங்க!

அது போல, "இது இல்லை, இது இல்லை" ன்னு லிஸ்ட் போட்ட வேதம், "இது இல்லாம எது இருக்கோ அதுவே பிரம்மம்" ன்னு சொல்லாம சொல்லித்து என்கிறார் குரு.

அது உன் உடம்பு இல்லை. ஏன்னா அது அநித்தியமானது.
இல்லை, சடமில்லை, துக்கம் உள்ளது இல்லை. இது நான் இல்லை இது நான் இல்லை" ன்னு சொல்லிகிட்டே போய் "கடைசிலே எது மிச்சமா இருக்குமோ அதுவே பிரம்மம்." இப்படி கூறாம கூறும் வேதம். இந்த வழியா பிரம்மம் வாக்குக்கு எட்டும்.

8.
வாக்கியந் தனக்கெட்டாது வத்துவென் றுரைத்த வேதம்
வாக்கிய விருத்தி யாலவ் வத்துவைக் காட்டிற்றன்றோ
வாக்கியங்களிலே மான மாவதே தென்றாயாகில்
வாக்கியமிரண்டும் மெய்யே மறைகள் பொய்யாது கேளாய்.

வாக்கியந்தனக்கு எட்டாது வத்து (பிரமம்) என்று உரைத்த வேதம் (மகா) வாக்கிய (த்தின் லக்ஷணா) விருத்தியால் அவ் வத்துவை காட்டிற்று அன்றோ? வாக்கியங்களிலே மானமாவது (பிரமாணவாவது) ஏது என்றாய் ஆகில் வாக்கியம் இரண்டும் மெய்யே; மறைகள் பொய்யாது கேளாய்.

9.
பிரமம் ஸ்ருதிக்கு அகோசரமும் கோசரமுமாம்

தன்பதியல்லாப் பேர்க டமையல்ல னல்ல னென்றாள்
அன்பனைக் கேட்ட நேர மவள்வெட்கி மௌனமானாள்
என்பது போல நீக்கி யிதன்றிதன் றெனச்சே டித்த
பின்பரப் பிரமந் தன்னைப் பேசாமற் காட்டும் வேதம்.

தன் பதி அல்லாப் பேர்கள்தமை அல்லன் அல்லன் என்றாள், அன்பனை (கணவனை) கேட்ட நேரம் அவள் வெட்கி மௌனமானாள் என்பது போல நீக்கி இதன்று இதன்று எனச் சேடித்த (இல்லையென்ற) பின், பரப் பிரமந் தன்னைப் பேசாமல் காட்டும் வேதம்.

Tuesday, May 26, 2009

மேலும் பிரமாணங்கள்5. அருத்தா பத்தி பிரமாணம் என்கிறது லாஜிக். பகல்லே சாப்பிடாம ஒத்தர் இருக்கார். நான் இன்ன விஷயத்துக்காக உண்ணா விரதம் இருக்கேன் என்கிறார். ஆனா நாலு நாளாகியும் ஆசாமி குத்துக்கல்லாட்டம் இருக்கார். கொஞ்சம் கூட களைப்பா இல்லை. உடம்பு இளைக்கலை. அவர் பகல்ல சாப்பிடலையே தவிர ராத்திரி ரகசியமா ஒரு பிடிபிடிக்கிறார்ன்னு ஊகிக்கிறோம். அதான் அருத்தா பத்தி.

PG: [எது இல்லாம ஒரு விஷயம் சம்பவிக்காதோ அவ்வளோ முக்கியமான, இன்றியமையாத வஸ்து உபபாத்தியம். இங்க ராச்சாப்பாடு உபபாத்தியம். இந்த உபபாத்தியத்தால எது விளையுமோ அது சமபாத்தியம். சும்மா ஒரு பிஜி பாய்ண்ட்! ஹிஹிஹி! இன்னும்... எதோட அபாவத்தால -அதான் எது இல்லாததால- எது நடக்கமுடியாம போகுமோ அது உபபாதகம். ராத்திரி சாப்பாடோட அபாவத்தால – அதாவ்வது இல்லாம போவதால- பகல்ல சாப்பிடாதவனுக்கு உடம்போட பருமன் இல்லாம குறைஞ்சு போகும். அதனால இரவு சாப்பாடு பருமனோட உபபாதகம்.] எதுக்கு இவ்வளொ சொன்னேன்னா உபபாத்தியத்தோட சம்பந்தத்தால உபபாதகத்தை காட்டுறதுதான் அருத்தாப்பத்தி ப்ரமாணம்.

6. அநுபலப்தி ப்ரமாணம்: இத அபாவ பிரமானம்ன்னும் சொல்வாங்க. அதாவது இல்லாமையே பிரமாணம். குழப்புதா? இங்கே புத்தகம் இல்லைன்னு சொல்கிறோம். அப்படியான்னு பாக்கிறோம். ஆமா இல்லை. உண்மைதானே? இதான் அபாவ பிரமாணம்.

7. ஐதீக பிரமாணம்: காலாகாலமா ஒரு விஷயம் எல்லாரும் சொல்லிகிட்டு இருக்காங்க. அதனால அது உண்மைன்னு தெரிஞ்சுக்கிறது. பல கோவிகளிலே இந்த மாதிரி விஷயம் கேள்விப்படலாம். இங்கேதான் வஸிஷ்டர் யாகம் பண்ணார். அப்படி ஐதீகம்ன்னு சொல்லுவாங்க. அப்படி நடந்ததையும் நிரூபிக்க முடியாது - எவ்வளோ காலம் ஆச்சு? எப்படி எந்த ஆதாரமும் இருக்கும்? இல்லைன்னு சொல்லவும் முடியாது. அப்ப காலாகாலமா சொல்லிகிட்டு இருக்கிறது தப்பா?

8. ஆகமப்பிரமாணம்: சாஸ்திரங்களிலே சொல்லி இருக்கிறதை நம்புவது

சில சமயம் இந்த எட்டை ஆறுன்னும் சொல்லுவாங்க. உபமான பிரமாணம்ன்னு தனியா இல்லை. அது பிரத்யக்ஷ பிரமாணத்தோட சேத்தி; ஆகமப்பிரமாணம் சப்த பிரமாணத்திலே சேத்தி. அதனால ஆறுதான் ன்னு சொல்க்கிறவங்க உண்டு. வேற எங்காவது இப்படி வித்தியாசமா படிச்சா குழம்ப வேணான்னு சொன்னேன்.

சரி, சரி மேட்டருக்கு வரலாம்.
பிரம்மத்தை எந்த பிரமாணத்திலே சேக்கிறது?

அதுக்கு பேரோ உருவமோ இல்லை. அதனால பாக்கமுடியாது. பஞ்ச பூதங்களோட சேர்க்கை மட்டுமே இல்லை. அதனால பிரத்யக்ஷ பிரமாணம் இல்லை.

புகை அக்னி இருக்கிறதை போல எதாலும் பிரம்மம் இருக்கிறதை ஊகம் செய்ய சொல்ல முடியாது. அதனால அநுமானம் இல்லை.

பிரம்மம்தான் இருக்கு; வேற எதுவுமே அன்னியமா இல்லை. அத்னால் எதை உதாரணம் காட்டி இது போல இருக்கும்ன்னு சொல்லலாம்? அதனால உபமான பிரமாணம் இல்லை.

பிரம்மம் ஆகமத்துக்கு எட்டாது. அப்பர் சொன்னாப்போல இவ்வண்ணன், இவ்வுருவன், இந்நிறத்தன், இத்தன்மையன், இவ்விடத்தன் ன்னு ஒன்னுமே சொல்ல முடியாதே!

அப்ப பிரம்மம் வாக்குக்கு எட்டாது.

இப்படி வாக்குக்கு எட்டாதுன்னு சொன்ன வேதமே வாக்குக்கு எட்டும்ன்னு எப்படி சொல்லித்துன்னா...


Monday, May 25, 2009

ப்ரமாணங்கள் எட்டு விதம்.ப்ரமாணங்கள் எட்டு விதம்.
ப்ரத்யட்சம்.
அநுமானம்
உபமானம்
சத்தம்
அருத்தாபத்தி
அநுபலப்தி
ஐதீகம்
ஆகமம்

1. பிரத்யட்சம்: நேரா ஒரு பொருளை பாக்கிறது. நாம ரூபவஸ்துக்களை இப்படிபாக்கலாம். அதாவது எதுக்கெல்லாம் ஒரு பேரும் ஒரு வடிவமும் இருக்கோ அதெல்லாம் இதில வரும்.

2. அநுமானம்: நேரடியா பாக்கிர ஒரு வஸ்துவை வெச்சுகிட்டு இன்னொரு விஷயத்தை இருக்கிறதாக அறிகிறது. இப்படீஈ வழியிலே போய் கொண்டு இருக்கிறோம். ஒரு இடத்திலே புகை வருகிறதை பாக்கிறோம். ஓ என்னமோ எரியுதுன்னு நினைக்கிறோம். தீயை நாம பாக்கலை; ஆனா புகை இருக்கிற இடத்திலே தீ இருக்கத்தான் இருக்கும்ன்னு நமக்கு அனுபவம். அதனால இப்படி அநுமானிக்கிறோம்.

3. உபமானம்: அறியாத ஒருபொருளை ஏற்கெனெவே தெரிஞ்ச ஒரு பொருளால தெரிஞ்சிக்கிறது.
ஒத்தர் மானை பாத்ததே இல்லை. அது எப்படி இருக்கும் ன்னு கேக்கறார். என்ன பதில் சொல்லறது? காட்டில பாக்கலாம். மரை பசு மாதிரி இருக்கும் ன்னு சொன்னா ஓஹோ அது போலவா ன்னு கொஞ்சம் புரிஞ்சுப்பார். இது உபமான பிரமாணம். பசு உபமானம். அதால அறியப்பட்டது உபமேயம்.


4. சப்த பிரமாணம். ஆப்த வாக்கியம்னும் சொல்வாங்க. நம்மால எல்லாத்தையுமே நேரில பாத்தோ அனுபவிச்சோ தெரிஞ்சுக்க முடியாது. இப்படிதான் தெரிஞ்சுக்கணும் ன்னா நமக்கு மிகக்குறைவான விஷயங்களே தெரிய வரும். அதனால என்ன செய்யறோம்? நம்பத்தகுந்தவங்க சொன்னா அதுவே நமக்கு பிரமாணம். ரொம்ப நாள் கழிச்சு ஒரு நண்பரை பாத்து பேசிகிட்டு இருக்கோம். "டேய் உனக்கு தெரியுமா ஸோ அன்ட் ஸோ செத்து போயிட்டாண்டா" என்கிறார். "அப்படியா! நம்பவே முடியலையே!" ன்னு பேச்சுக்கு சொன்னாலும் நாம அதை நம்பறோம். அவர் பொய் சொல்ல மாட்டார்ன்னு நம்பிக்கை.


Saturday, May 23, 2009

பதில்குரு பதில் சொல்கிறார்.
அப்பனே பரப்பிரம்ம சொரூபமானது பெயர், வடிவம், கறுப்பு, சிவப்புன்னு நிறம், நெட்டை குட்டை பருமன் சன்னம் ன்னு எந்த இலட்சணமும் உள்ளது இல்லை. பஞ்சபூதங்களிலே ஒண்ணோ ரெண்டோ இல்லை. அதனால கரணங்களாலயாவாது இந்திரியங்களாலேயாவது அறிகிற வஸ்து இல்லை. இதனால அது பிரத்யட்சம், அநுமானம், உபமானம் முதலான பிரமாணங்களால அகப்படாது. அதனாலதான் ப்ரம்மம் வாக்குக்கு எட்டாதுன்னு சொன்னேன்.

7. பிரமம் வாக்குக்கு அகோசரமாயும் கோசரமாயும் இருக்குமோ?
மற்றைமுப் பிரணமா னத்தால் வத்துநி ண்ணயம்கூ டாதே
உற்றதோர் விடயம் பூத முபயமன் றாத லாலே
குற்றமாம் குணவிசேடங் கூடாம லிருக்கை யாலே
இற்றது வாக்குக்கெட்டா தென்பது மறிவாய் நீயே

மற்றை முப் (=மூன்று- பிரத்யட்சம், அநுமானம், உபமானம்) பிரணமானத்தால் வத்து (வஸ்து- பிரம்ஹ) நிண்ணயம் கூடாதே (ஆகாது). உற்றதோர் விடயம் (இந்திரியங்களுக்கு சம்பந்தப்பட்டது அல்ல) பூதம் (சீவன்) உபயமன்று (த்வைதம் அல்ல) ஆதலாலே, குற்றமாம் குணவிசேடம் கூடாமல் (பொருந்தாமல்) இருக்கையாலே இற்றது (இப்பிரகாரமாக அந்த பிரமம்) வாக்குக்கு எட்டாது என்பதும் அறிவாய் நீயே.

----------------
முன்னே வெள்ள வடி நீர் வாய்க்கால். இப்ப பாதாள சாக்கடை... சகட்டு மேனிக்கு டெலிபோன் கம்பியை வெட்டி போடறாங்க.....ம்ம்ம்... நல்லது செய்கிறதெல்லாம் இந்த கலியிலே சிரம சாத்தியம்தான். தாமதத்திற்கு மன்னிக்க.

பிரமம் வாக்கு, மனசுக்கு எட்டுமா எட்டாதா?6.
ஆகமப் பிரமாணத்தா லறியென்றும் வாக்குக்கெட்டா
தேகமாம் பிரமமென்று மிதயத்தா லுணர்வாயென்றும்
சோகமா மனத்திற்கெட்டா சுயஞ்சோதி யென்றுஞ்சொன்னீர்
மோகமா மிரண்டு சங்கை முளைத்தன பறித்திடீரே

ஆகம (ஸ்ருதி) பிரமாணத்தால் அறி என்றும், வாக்குக்கெட்டாது, ஏகமாம் (ஒன்றே) பிரமம் என்றும், இதயத்தால் உணர்வாய் என்றும், சோகமா(ன) மனத்திற்கு எட்டா சுயஞ்சோதி என்றும் சொன்னீர். மோகமாம் (மயக்கமாம்) இரண்டு சங்கை (சந்தேகங்கள்) முளைத்தன பறித்திடீரே (நிவர்த்தி செய்வீராக)

வேதத்து மேல நம்பிக்கை வெச்சு ஒண்ணேயான பிரம்மத்தை இதயத்தாலே உணரணும் ன்னு சொன்னீங்க. அது வாக்குக்கு எட்டாது மனசுக்கு பிடிபடாதுன்னும் சொன்னீங்க. இதுல எனக்கு ரெண்டு சந்தேகம். அதுக்கு விடை சொல்லுங்க. வேதம் வாக்குதானே? அதால தெரிஞ்சுக்கன்னு சொல்லி பின்னாலேயே வாக்குக்கு எட்டாதுன்னா என்ன அர்த்தம்?
முன்னே மஹா வாக்கியங்களைப்பத்தி சொன்ன போது "சுருதி பிரமாணத்தால உன்னோட நிஜ சொரூபம் என்னன்னு தெரிஞ்சுக்க"ன்னார். பின்னாலேயே "பிரம்மமானது துக்க மயமான மனதுக்கு எட்டாத சுயம் பிரகாசம்" னார்.
அப்ப பிரமம் மனசுக்கு எட்டுமா எட்டாதா? ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு முரணா இருக்கே!Thursday, May 21, 2009

சந்தேகம்?
கொஞ்ச நாள் போனதும் நிழல் மாதிரி தன்னை தொடர்ந்து வர சீடனைப்பாத்து குரு கேக்கிறார். என்னப்பா உன் சாதனை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு? சாட்சி மாத்திரமா இருக்கப் பழகிட்டியா? சந்தேகம் ஒண்ணும் இல்லியே? தெளிவா இருக்கியா? உன்னோட அனுபவம் என்ன சொல்லுங்கிறார். குருவுக்கு சீடனோட நிலை தெரியாமலா இருக்கும்? இருந்தாலும் சீடன் குரங்கு நியாயப்படி நடந்துக்கிறதால ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்கிறார்.

3.
ஆசிரியர் சீடரை அனுபவம் வினாவுதல்.
சந்ததம் புருடன் றன்னைச் சாயைபோல் விடாமலன்பாம்
மைந்தனை நோக்கிச்சாட்சி மாத்திரமாய் நின்றாயோ
சிந்தையிலைய மெல்லாந் தீர்ந்தவோ தெளிவுனுள்ளே
அந்தரங் கலந்ததுண்டோ வநுபவமுரை செய்வாயே

சந்ததம் (எப்போதும்) புருடன் தன்னைச் சாயை (நிழல்) போல் விடாமல், (நடந்து வந்த) அன்பாம் மைந்தனை (சீடனை) நோக்கி சாட்சி மாத்திரமாய் நின்றாயோ? சிந்தையில் ஐயம் எல்லாம் தீர்ந்தவோ? தெளிவுனுள்ளே அந்தரம் (விபரீத பாவனை) கலந்ததுண்டோ (உதித்துள்ளதோ)? அநுபவம் உரை செய்வாயே (சொல்லுவாயே).

4
மூன்று கேள்விகளுக்கும் சீடன் விடையாக விண்ணப்பம் செய்தல்.
எனவுரைத் தருளுமாசா னிருபதம் வணங்கியெந்தாய்
சனனவன் காட்டின்மோகத் தமத்தெழு பேதப்பேய்கள்
உனதரு ளுதயவெற்பி லுபதேச வருக்கன்றோன்றி
மனவிழி தெரியஞான வான்கதிர் பரந்தாலுண்டோ.

என உரைத்து அருளும் ஆசான் இருபதம் வணங்கி எந்தாய் (என் தந்தையே) சனன (பிறவி என்னும்) அவன் (கடத்தற்கரிய) காட்டின் மோகத் தமத்து (தமத்தில்= அஞ்ஞானத்தில்) எழு(ம்) பேத (விபரீத) பேய்கள், உனது அருள் உதய வெற்பில் (உதய கிரியில்) உபதேச அருக்கன் (சூரியன்) தோன்றி மனவிழி தெரிய ஞானவான் (ஞானமாகிய) கதிர் பரந்தால் உண்டோ (இருக்குமோ?).

சீடன் கால்ல விழுந்து வணங்கி சொல்கிறான்: "ஐயா பிறவி என்கிற காட்டில இருந்தாலும் உங்களோட உபதேசம் என்கிற சூரியனோட வெளிச்சம் இருந்தா கவலை இல்லியே. உங்க உபதேசத்தாலே அஞ்ஞானமான இருட்டும் சந்தேகம் என்கிற நிழலும் போயிட்டுது. இருந்தாலும் பேயை ஓட்டின மந்திரவாதி திரும்ப பிரச்சினை வராம இருக்க யந்திரம் எழுதி கட்டுகிறாப்போல சத்துவத்திலேயே மனசு நிக்கிறாப்போல என் அனுபவம் நிலையா நிக்க சில சந்தேகங்களை நிவர்த்தி செய்தா நல்லது!”

5.
சகசானுபவம் வரத்தையாய் உள்ளது குறித்து வினாவுதல்
மந்திர மூர்த்திதன்னான் மாற்றிய பேய்போனாலும்
எந்திர மெழுதிக்கட்டி யினிவராவகை செய்வார்போல்
முந்தியுன் னுபதேசத்தான் மோகம்போனாலு மையா
புந்திநின் றுறைக்கவின்னம் புகலும்விண்ணப்ப முண்டே

மந்திர மூர்த்தி தன்னான் (மூர்த்தியினால்) மாற்றிய (நீக்கிய) பேய் போனாலும் எந்திரம் எழுதிக்கட்டி இனி [அந்த பேய்கள்] வராவகை (வராதபடி) செய்வார்போல் முந்தி உன் உபதேசத்தால் மோகம் போனாலும், ஐயா புந்தி (சத்துவ மனம்) நின்று உறைக்க (ஆத்ம ஸ்வரூபத்தில் நின்று நிலைக்க) இன்னம் (மேலும்) புகலும் விண்ணப்பம் உண்டே.


Tuesday, May 19, 2009

சந்தேகந் தெளிதல்அடுத்து வருவது கைவல்லிய நவநீதத்தில் சந்தேகந் தெளிதல் படலம்.

இது வரைக்கும் ஞானத்தை குறிச்ச தியரி என்னன்னு பாத்தோம். இனிமே இதிலே வரக்கூடிய சந்தேகங்கள் என்னென்ன அதுக்கு சமாதானம் என்னன்னு பாக்கலாம். சில விஷயங்களை கேட்கிறோம். அது நமக்கு புரிஞ்சு போச்சுன்னு நினைக்கிறோம். கொஞ்ச காலம் கழிந்த பிறகு அந்த விஷயத்திலே நமக்கு பல சந்தேகங்கள் வரும். எவ்வளவுக்கு எவ்வளவு நமக்கு தெளிவா தோணித்தோ அவ்வளவுக்கு அவ்வளவு இப்ப சந்தேகமா தோணும்! இப்படி ஆகக்கூடாதுன்னுதான் அந்த காலத்திலே பெரியவங்க ஒரு விஷயம் சொன்ன கையோட, கேட்டவங்க சந்தேகம் எழுப்பலைனா தானே அதை எல்லாம் எழுப்பி பதிலையும் சொல்லிடுவாங்க.

ஒரு கம்பத்தை நடணும். குழி பறிச்சு அதுல கம்பத்தை நடறோம். அப்படியே விட்டா அது நிலையா நிக்காது. அதை நட்ட இடத்து பக்கத்தில கொஞ்சம் சின்ன கல், மண் எல்லாம் போட்டு குத்தி கிட்டிச்சு விடனும். அப்பதான் கம்பம் பலமா நிக்கும். அது போல "பிரம்மத்தில நிலை பெற்ற மனசை உறுதியா ஆக்க சில விஷயம் சொல்லறேன் கேளு" ன்னு ஆரம்பிக்கிறார் தாண்டவராய ஸ்வாமிகள்.

1.
நரர்குழி பறித்துமெள்ள நாட்டிய நெடிய கம்பம்
உரமுறக் குத்திக்குத்தி யுறைப்பிக்கு முபாயம் போலே
பரமசிற் சொரூபதன்னிற் பற்றிய மனோவிருத்தி
திரநிலை பெறச்சந்தேகந் தெளிதலை மொழிகின்றேனே

நரர் = மானுடர் குழி பறித்து மெள்ள நாட்டிய = நிறுத்திய நெடிய கம்பம் உரமுற = வலிமையடைய; குத்திக்குத்தி உறைப்பிக்கும் உபாயம் போலே பரம (மேலான) சிற் (சின்மாத்திர ஆத்ம) சொரூபம் தன்னில் பற்றிய = பொருந்திய மனோவிருத்தி (அபேதமாய் பொருந்திய அகண்டாகார விருத்தி) ஸ்திரநிலை பெறச் சந்தேகந் தெளிதலை மொழிகின்றேனே.

நாம முன்னே பாத்து விட்ட கதை இன்னும் தொடருது. தனக்கு பிரபஞ்சம் உண்டானது முதல் விதேக முக்தியை அடைகிற வரை எல்லாம் விளக்கி சொன்ன குரு செய்யச்சொன்னதை குரங்குப்பிடியா பிடிச்சுக்கிட்டான். விடாமல் செய்கிறான் சீடன்.

குரங்குப்பிடின்னு சொல்கிறதுல ஒரு அர்த்தம் இருக்கு.

மர்கடநியாயம் மார்ஜாலி நியாயம் ன்னு ரெண்டு வித தத்துவம்.

மர்கடநியாயம்: குரங்கின் குட்டிதான் குரங்கை பிடித்துக் கொள்ளணும். குரங்கு பாட்டுக்கு அதோட வேலையை பாக்கும். கிளைக்கு கிளை தாவினாலும் கொண்டாலும் குட்டிதான் ஜாக்கிரதையா இருக்கணும். பிடியை விட்டு குட்டி கீழே விழுந்தா குரங்கு அதைப்பத்தி கவலையே படாது. அதுபோல் இறைவனை பக்தன்தான் பிடித்துக்கொள்ளவேண்டும்.

மார்ஜாலி நியாயத்திலே பூனைக்குட்டி சும்மாதானிருக்கும். என்ன ஆபத்து வந்தாலும் மியாவ் மியாவ் ன்னு கத்தி அம்மாவை கூப்பிடுமே தவிர ஒரு செயலிலேயும் இறங்காது. பூனைதான் வந்து அதை கவ்வி தூக்கிப்போகும். அது போல் பக்தன் பரி பூரண சரணாகதி செய்தால் இறைவன் தேவையானதை செய்வான்.

இந்த தத்துவ வித்தியாசம்தான் ஶ்ரீ வைஷ்ணவர்களிலே தென்கலை சம்பிரதாயத்துக்கும் வடகலை சம்பிரதாயத்துக்கும் உள்ள வித்தியாசம். இது புரியாமல் பலர் நாமம் இப்படி அப்படி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்!

இங்க சீடன் அவனோட முயற்சியிலே குரு சொன்னதை செய்கிறான்னு புரிஞ்சுக்கணும்.

2.
நற்கருத் துடையோனாகி ஞானவானாகி நின்றோன்
மர்கட நியாயம்போலே மகாபூத விகாரந்தொட்டு
நிற்குண விதேகமுத்தி நிலைபரி யந்தஞ் சொன்ன
சற்குரு வினைவிடாமற் சந்தத மநுசரித்தான்.

நற்கருத்து (சத்துவ விருத்தி) உடையோனாகி (அபரோட்ச) ஞானவானாகி நின்றோன் (நின்ற சீடன்) மர்கட (குரங்கு) நியாயம் போலே மகாபூத விகாரம் (ஸ்தூல சரீரம்) தொட்டு (முதலாக) நிற்குண விதேகமுத்தி நிலை பரியந்தம் (சத்துவ குணமும் இறந்த கைவல்ய நிலை வரை) சொன்ன சற்குருவினை விடாமல் சந்ததம் (எப்போதும்) அநுசரித்தான். (சேவை செய்து வந்தான்)


Monday, May 18, 2009

ஆத்ம சொரூபமே நீ!
அடுத்து இந்த பிரபஞ்சம் முழுவதும் அநித்தியம். அதனால மாயைதான் அசத்தியம்தான். ஞான ரூபமான பிரம்மம் மட்டுமே உண்மை. இதை என்னிக்கும் மறக்காம இரு என்கிறார் தாண்டவராய ஸ்வாமிகள்.

நல்ல வெயில் ஆரம்பிச்சாச்சு. தார் ரோடில போனா ரோடிலே தண்ணீர் இருக்கா மாதிரி தோணுது. விவரம் தெரிஞ்சவங்க அது தண்ணி இல்லே கானல் நீர் ன்னு சொல்லுவாங்க. அது கானல் நீர் ன்னு தெரிஞ்சாக்கூட அந்த தோற்றம் இல்லாம போகாது.


பீச்சுக்கு போறோம். தூரத்தில ஏதோ பளபளக்குது. வெள்ளியில செய்தது ஏதோ கிடக்குன்னு நினைக்கிறோம். கிட்டப்போனா அது கிளிஞ்சல் ன்னு தெரியுது. அடுத்த நாள் நம்ம நண்பரோட பீச்சுக்குப் போறோம். நாம ஏமாந்த மாதிரியே அவரும் வெள்ளின்னு ஏமாறுகிறார். ஆனா நாம சிரிச்சுகிட்டே சொல்கிறோம் "நல்லா பாரு, அது கிளிஞ்சல்" ன்னு. நேத்து வெள்ளியா தெரிஞ்சது இப்ப அப்படி தெரியலை. ஏன்னா இப்ப விஷயம் தெரியும்.


மெஸ்மெரிசம், ஹிப்நாடிஸம் என்கிற வித்தை நமக்கு புதுசு இல்லை. முன் காலத்திலேயே கண்கட்டு வித்தைக்காரன் ஒரு நகரத்தையே உருவாக்கி காட்டுவான். அங்கே கந்தர்வர்கள் பறப்பாங்க; அப்சரஸ்கள் டான்ஸ் ஆடுவாங்க.... மந்திரவாதி ச்சூ! ன்னதும் எல்லாம் காணாம போயிடும்.

இதெல்லாம் இல்லாம மேலே வானத்தை பாத்தா நீல வண்ணமா குடை கவுத்தாப்போல தெரியறதும் கயிற்றிலே பாம்புன்னு பிரமை தோன்றுகிறதும் பருத்த கட்டையிலே மனிதன் போல தோன்றுகிறதும் பாத்து இருக்கோம்.


மலடியின் சேய், முயலின் கொம்பு ன்னு சொல்கிறது உண்டு. யோசனை பண்ணி பாத்தா அது ரெண்டும் இருக்கவே முடியாது.

இதெல்லாம் பலவிதமான மாயைகள்.


மலடியின் சேய், முயலின் கொம்பு போல அசத்து - பிரம்மத்தை தவிர வேற ஒண்ணு இருக்கிறது. (அசத்து = இருப்பு இல்லாதது)

பின்னே எனக்கு பிரபஞ்சம்ன்னு ஒண்ணு தோணுதேன்னா அது கிளிஞ்சில் வெள்ளி, கயிற்றிலே பாம்புன்னு பிரமை தோன்றுகிறதும்; பருத்த கட்டையிலே மனிதன் போல தோன்றுகிறதும்; மந்திரவாதி தோற்றுவிக்கிற கந்தர்வ நகரம் என்றது போல பொய்யான தோற்றமாம். இது தப்பு, இல்லைன்னு தெளிவு வந்துட்டா அதெல்லாம் அப்புறமா தோணுகிறதில்லை.

என்னதான் தியரி படிச்சு சரிதான் ன்னு ஒத்துண்டாலும் இன்னும் பிரபஞ்சம் தோணுதேன்னால் அது கானல் நீர் போல; கானலில் நீரில்லை, ஆகாயத்தில் நீல நிறம் இல்லை. இப்படி தெளிந்தபின்னும் அவை தோன்றினாலும் அவை அநுபவத்துக்கு வருவதில்லை. தியரி தெரிஞ்சு இது தப்புன்னாலும் அது தோன்றி கொண்டேதான் இருக்கும். பிரபஞ்சம் பொய்ன்னு உணர்ந்த பின்னும் சொப்பனப் பிரபஞ்சம் போல அநுபவத்துக்கு வரும்.

108.
சத் அசத்தின் தன்மை கூறி முன் சொல்லியபடி அநுபவித்து இருப்பாய் என்றது:

கானனீர் கிளிஞ்சில் வெள்ளி கந்தர்ப்ப நகர்க னாவூர்
வானமை கயிற்றிற் பாம்பு மலடி சேய் முயலின் கோடு
பீனமாந்தறி புமானிற் பிரபஞ்ச மெல்லாம் பொய்யே
ஞானமெய் மகனே யுன்னை நம்மாணை மறந்திடாதே

கானல் நீர், கிளிஞ்சில் வெள்ளி, கந்தர்ப்ப நகர், கனாவூர், வான மை (ஆகாயத்தில் நீல வண்ணம்) கயிற்றில் பாம்பு, மலடி[யின்] சேய், முயலின் கோடு (கொம்பு), பீனமாம் (பருத்த) தறி[யில்] (கட்டையில்)- புமான் (மனிதன்) [போல] இப் பிரபஞ்சம் எல்லாம் பொய்யே. ஞானம் மெய் மகனே, நம்மாணை (நம் மேல் ஆணை) உன்னை (நீ பிரமம் என்பதை) மறந்திடாதே.

--
மலடியின் சேய், முயலின் கோடு என்றது சீவேஸ்வர ஜகத் அத்யந்தம் அசத்து; பிரமமே உள்ளது என்றதாம். “பிரமமே உள்ளது, பிரபஞ்சம் அத்யந்தம் அசத்தானால்” மலடியின் சேய், முயலின் கோடு போல தோன்றாமலே இருக்க வேண்டும். அப்படி இல்லாது தோன்றுவதால் எப்படி கூடும்? பிரபஞ்சம் அசத்து என்பதற்கு மட்டுமே மலடியின் சேய், முயலின் கோடு என்றதாகவும், பிரபஞ்ச தோற்றம் கிளிஞ்சில் வெள்ளி, கயிற்றில் பாம்பு, பீனமாம் தறிபுமான், கந்தர்வ நகரம் என்றது போல பொய்யான தோற்றம் என்றார். கிளிஞ்சலை தவிர வெள்ளியும், கயிற்றைத்தவிர பாம்பும், கட்டையைத்தவிர மனிதனும், சூன்யத்தைத் தவிர கந்தர்வ நகரமும் இல்லை என தெளிந்தபின் வெள்ளி, பாம்பு ஆகியன தோன்றா. அப்படி இல்லாமல் மண்ணையன்றி குடத்தின் பொருள் இன்னதென்று ஆய்ந்து அறிய முயன்றால் அது பெயர்த்தும் தோன்றும். அது போல பிரபஞ்சம் காரணமான பிரமத்தை தவிர இல்லை என உணரினும் அது தோன்றுகிறபடியால், இது எப்படிக்கூடும்? பிரபஞ்சம் பொருள் அன்று என்பதற்கு மாத்திரம் கிளிஞ்சில் வெள்ளி ஆகிய திட்டாந்தங்கள் சொல்லப்பட்டது. பிரபஞ்சம் பொய், பொருளற்றது என உணரினும் அது மறுபடி கானல் நீர் போல தோன்றும். கானலில் நீரில்லை, ஆகாயத்தில் கரு நிறம் இல்லை. இப்படி தெளிந்தபின்னும் அவை தோன்றினாலும் அவை அநுபவத்துக்கு வருவதில்லை. பிரபஞ்சம் அப்படி இல்லாது சப்த ஸ்பரிசம் முதலானவற்றால் அநுபவிக்கப்படுகிறது. பிரபஞ்சம் அசத்து என உணரினும் பெயர்த்தும் தோன்றும். இதற்கே கானல் நீர் ஆகிய திட்டாந்தங்கள் சொல்லப் பட்டது. பிரபஞ்சம் பொய் என உணர்ந்த பின்னும் சொப்பனப் பிரபஞ்சம் போல அநுபவத்துக்கு வரும் எனக் கொள்க.

தாத்பர்யம்:
த்ருஷ்யமாய் அசத்தான சகத்துக் காலத்ரயத்திலும் த்ருக்காய், சத்தா மாத்திரமான ஆத்மா த்ரி காலத்திலும் உள்ளது. அவ்வாத்ம சொரூபமே தான் என்ற அநுபவம் விட்டு நீங்காதிருப்பாய் என்றதாம்.

தத்துவ விளக்கப்படலம் நிறைவுற்றது.
சிவோஹம்


Friday, May 15, 2009

நாம் எப்பவுமே அகண்ட பிரம்ம சொரூபிகள்தான்
ஒரு கிணறு தோண்டுகிறோம்.

அதிலே ஒரு வெளி இருக்குன்னு நினைக்கறோம். பள்ளத்திலே ஸ்பேஸ்! இது இப்பதான் வந்ததுன்னு நினைக்கிறது மாயை. முன்னமேயே அங்கே ஆகாசம் இருந்தது. அதிலே அப்ப மண் இருந்தது. இப்ப காத்து இருக்கு. ஆகாசம் எப்பவுமேதான் இருக்கு.

அது போல பிரம்ம நிலை சிரவண, மனன, நிதித்யாசம் செய்து அப்ப வருகிறதுன்னு இல்லை. அப்பதான் நாம் பிரம்மம்; நாம் மட்டுமே இருக்கோம் என்கிற நினைப்புதான் வருது. அது எப்பவும் இருக்கிற நிலையை அறிகிறதேதானே ஒழிய புதுசா அப்படி ஆகலை.

கடலோரத்திலே ஒரு பெரிய பள்ளம் இருக்கு. அதிலே கடல் நீர் இருக்கு. கடல் கொஞ்சம் உள் வாங்குக்கிறதால அது கரைன்னு ஒண்ணாலே பிரிக்கப்பட்டு தனியா தோணுது. கடல் தன்னோட இயல்பு நிலையை அடைகிறபோது அதுவே கடலோட சேர்ந்து விடுகிறது. அந்த பள்ளத்திலே முன்னே இருந்ததும் கடல்தான். இப்ப இருக்கிறதும் கடல்தான். தனி என்கிற பாவனைதான் போச்சு!

அது போல நாம் எப்பவுமே அகண்ட பிரம்ம சொரூபிகள்தான். நான் என்கிற நினைப்பு அதை கெடுத்தது. "நான்" போகிற போது அதுவும் போய்விடுகிறது.

107.
சீடன் முன் (88 ஆம் செய்யுளில்) கூறிய அநுபவம் புதிதன்று எனல்.-

சொல்லிய மகனேயெங்குஞ் சூழ்வெளியிருக்க மண்ணைக்
கெல்லிய பின்புதோன்றுங் கிணற்றினா காசம்போலே
ஒல்லையாம் பிரமநூலா லுற்றதுபோலே தோன்றும்
எல்லையி னாமெப்போது மேகமென் றிருந்து வாழ்வாய்

[அநுபவம்] சொல்லிய மகனே, எங்கும் சூழ் வெளி (space, ஆகாசம்) இருக்க மண்ணைக் கெல்லிய பின்பு தோன்றும் கிணற்றின் ஆகாசம் போலே, (ஆகாசம் எப்போதும் எங்கும் உள்ளது என அறியாதவனுக்கு கிணற்றில் புதிதாக ஆகாசம் உள்ளதாக தோன்றுவது போல்) ஒல்லையாம் (அனாதியான) பிரமம் நூலால் (வேதங்களால்) உற்றது போலே தோன்றும் (புதிதாக அப்போது பிரத்யேக ஆத்மா நாம் மட்டுமே, நாம் என்றும் வியாபகமாக இருக்கிறோம் என்றும் அந்நிலை அப்போது அடையப்பட்டது போலவும் தோன்றும். அது பிராந்தியேயாம்.) எல்லையில்லா நாம் எப்போதும் ஏகம் என்றிருந்து வாழ்வாய்.

Thursday, May 14, 2009

ஜட பரதர்
பானை உதாரணம் போல எல்லா ஆன்மாக்களும் பரமான்மாவில் கலக்காது.

ஜீவன் முத்தனுடைய ஆன்மா பிரியும்போது அதனிடம் கர்மா பற்று இல்லை. அது பரமான்மாவையே பற்றி இருக்கு. மத்தவங்க ஆத்மாக்களுக்கு கர்ம பற்று இருக்கு. அதனால அதிலே கலந்து அந்த நிலையை அடையும். சாதாரணமா நடக்கிற ஒருவன் ஒரு காலை முன்னாலே வைத்து அப்புரமா அடுத்த காலை எடுத்து வைக்கிறது போல உயிர் பிரியும் தருணத்திலே அடுத்து போற இடம் முடிவாயிடும். அதனால ஜீவன் முத்தர் ஆன்மா போல அது பற்றில்லாம தேகத்தை விட்டு வெளியே வருகிறதில்லை. பரமாத்மாவிலே கலக்கிறதும் இல்லை.

ஜட பரதர் அவரோட முன் ஜன்மம் ஒண்ணிலே ராஜாவா இருந்தார். பிறகு சன்னியாசம் மேற்கொண்டு மோக்ஷம் வேண்டி தபஸ் பண்ணார். சந்தியையிலே ஆற்றுக்கு போய் சூர்ய உபாசனை செய்கிற நேரம் ஒரு நிறை கர்ப்பமான மான் அங்கே வந்தது; அது தண்ணி குடிக்கப்போச்சு.

தண்ணியிலே வாயை வைச்ச அதே சமயம் ஒரு சிங்கம் கர்ஜிக்கிற சத்தம் கேட்டது. மான் மிரண்டு போய் ஆற்றிலே குதிச்சு இறங்கி நீஞ்சி அக்கரைக்கு போகப்பாத்தது. அதே சமயம் மான்குட்டி கர்பத்திலேந்து நழுவி பிரசவம் ஆயிடுத்து. மான் களைப்பினாலேயும் நீஞ்ச முடியாமையாலும் செத்துப்போச்சு.

இதை பாத்துகிட்டு இருந்த பரதருக்கு இரக்கம் மேலிட்டது. அடப்பாவமே! இந்த மான்குட்டிக்கு இப்படி ஒரு கதியான்னு பரிதாபப்பட்டு அதை எடுத்துப்போய் வளக்க ஆரம்பிச்சார். அது மேலே உசிரையே வெச்சுட்டார். அதுக்கு உணவு தரதும் அதை மத்த மிருகங்கள்கிட்டேந்து காப்பாத்தனுமேன்னு கவலை படுகிறதும்... இப்படியே இருக்கும் போது உயிரும் பிரிஞ்சது.

மானைப்பத்தி நினைச்சுகிட்டே இருக்கிறப்ப உயிர் பிரிஞ்சதால அது மேல பற்று வைச்சு இருந்ததால அடுத்து ஜன்மமும் வாய்ச்சது; மானா பிறந்தார். போன ஜன்மத்திலே அவர் செஞ்ச தபஸால அந்த பிறப்பு சமாசாரங்கள் நினைவு இருந்தது. இப்படி ஒரு தபஸ்வியா இருந்து மோக்ஷம் பெறுகிற வாய்ப்பை வீணாக்கிட்டோமேன்னு வருத்தப்பட்டது. இந்த ஜன்மத்திலே அதே தப்பை செய்யக்கூடாதுன்னு கவனமா இருந்து இறை நினைவோடேயே இருந்து அடுத்த ஜ்ன்மத்திலே ஒரு அந்தணருக்கு மகனா பிறந்தது. அவரே ஜட பரதர்.

என்ன சொல்ல வந்தேன்னா உயிர் பிரிகிறபோது எந்த நினைவோட இருக்கோமோ அதே பிறவியை அடைவோம். அதுக்குத்தான் பகவான் நாமாவை எப்பவும் சொல்லிகிட்டே இருக்கணும்; பகவத் சிந்தனையே சதாசர்வ காலமும் இருக்கணும் என்கிறது. அப்பதான் இறக்கும்போதும் அதே நினைப்பு இருக்கும்; பகவானையும் அடைஞ்சுடுவோம். இதுக்குத்தான் இறக்கும் தறுவாய்லே இருக்கிறவங்க பக்கத்திலே இருந்து கொண்டு பகவான் நாமாக்களை உரக்க சொல்லணும்ன்னும் சொல்லி இருக்காங்க.

ஜீவன் முத்தர் எப்பவும் பரமான்மாவையே நினைத்து அதிலேயே ஒன்றி இருக்கிறதாலே அவர் அதோட ஐக்கியம் ஆகிடுவார். சிவன் விஷ்ணு அம்பாள் ன்னு ஒரு கற்பனையிலே இருக்கிறவங்க அந்த அந்த ஈசனோட லோகத்தை அடைவாங்க. அது மோக்ஷம் இல்லை. முன்னாலே பரமாத்ம அனுபவம் இருந்தாதான் இறக்கிற நேரம் அதிலே இருக்க முடியும். இது சாதாரணமா யாருக்கும் வாய்க்கிறதில்லை.

ஞானிக்கு தன்னோட தேகம் எங்கே விழணும் எப்ப விழணும்ன்னு ஒண்ணும் லட்சியமே இல்லை. பரிசுத்தமான இடம் வேணும்ன்னு இல்லை, சிவராத்திரி, ஏகாதசி, உத்தரயணம் ன்னு ஒண்ணும் வேணாம். பிராரப்தம் தீர்ந்து எங்கே எப்ப விழுந்தாலும் விடுதலையாவான்; பரமாத்மாவோட ஒன்றுவான்.

--
நெரூருக்கு கிளம்பிக்கொண்டு இருக்கேன். வர 4 நாளாகும். போஸ்ட் ஷெடூல் பண்ணியாச்சு. திங்கள் வந்துதான் மேற்கொண்டு.

Wednesday, May 13, 2009

விதேக முத்தன்மண் பானை ஒண்ணு இருந்தது. அது இருந்த வரைக்கும் அதால பிரிக்கப்பட்டு கட ஆகாசம் ன்னு ஒண்ணு இருந்தது. மாமியாரோ மருமகளோ யாரோ ஒத்தர் அதை போட்டு உடச்சுட்டாங்க. அப்ப அது காணாம போச்சு. "காணாம" ன்னா வெளியே இருக்கிற மகா ஆகாசத்தோட ஒண்ணா போச்சு.

சீவன் முக்தருக்கு ஒட்டிகிட்டு இருந்தது உடம்புதான்.
இந்த உபாதி போன உடனே ஆதி/ அந்தம்/ நடு ன்னும் உள்ளே வெளியேன்னும் ஒண்ணுமில்லாத கைவல்லிய நிலைக்கு போய் அங்கேயே எப்பவும் இருப்பார்.

106.
விதேக முத்தன் இயல்பு:

கடமெனு முபாதிபோனாற் ககனமொன் றானார்போல
வுடலெனு முபாதி போன வுத்தரஞ் சீவன்முத்தர்
அடிமுடி நடுவுமின்றி யகம்புற மின்றிநின்ற
படிதிகழ் விதேகமுத்திப் பதமடைந் திருப்பரென்றும்

கடம் (குடம்) எனும் உபாதி போனால் ககனம் (ஆகாயம்) ஒன்று ஆனார் போல உடலெனும் உபாதி போன உத்தரம் (பிறகு) சீவன் முத்தர், அடி முடி நடுவும் இன்றி அகம் புறம் இன்றி நின்றபடி திகழ் (இருந்தபடி விளங்குகின்ற) விதேக முத்திப் பதம் அடைந்து என்றும் இருப்பர்.
--
எங்கும் பரவிய ஆகாயம் குட ஆகாயம். மகா ஆகாயம் என குடத்தால் மட்டுமே பிரிக்கப்படுகிறது. குடம் உடைந்து போன அந்த வினாடியே எப்படி அந்த இரண்டு ஆகாயங்களும் ஒன்றாகி விடுமோ அப்படி உடல் நீங்கிய அந்த வினாடியே சீவன் முத்தரும் பரி பூரணமான பிரமமும் ஒன்றாவர்கள்.

"மறு பிறப்புன்னு ஒண்ணும் கிடையாது; ஆன்மா பற்றி இருந்த உடம்பு போச்சுன்னா வந்த இடமான பரமாத்மாவோட கலந்துடும்" ன்னு ஒரு வாதம் உண்டு. இதை சாத்திரங்கள் தப்புன்னு நிரூபிச்சு இருக்கு.

இதை உண்மைன்னு ஒத்துண்டா கடவுள் இல்லை ன்னு சொல்லனும். அல்லது கடவுள் செய்கிறது அநியாயம் ன்னு சொல்லணும். ஏன்னா எல்லாரும் ஒரே மாதிரி இல்லை. சிலர் புத்திசாலியாவும் சிலர் என்னை மாதிரி டம்மியாவும் பிறந்து இருக்காங்க. சிலர் பணக்கார குடும்பத்திலேயும் சிலர் ஏழ்மையிலேயும் பிறந்து இருக்காங்க. இப்படி எக்க சக்கமா சொல்லிட்டே போகலாம் இல்லியா?

இப்ப பிறந்து இருக்கோம். அதனால முன்னே ஒரு ஜன்மம் இருந்து இருக்கணும். அதுக்கு முன்னே ஒண்ணு இருந்து இருக்கணும். இப்படியே அநாதியா.... போன பிரலயத்தையும் தாண்டி பின்னாலே போகும். ஒரு ஜன்மத்தில செய்கிற கர்மா அடுத்த நாலு ஜன்மத்துக்கு வித்தா இருக்காம். அதாவது ஒரு ஜன்மத்தில செய்கிற பாப கர்மாவுக்கு அடுத்த நாலு ஜன்மாவுக்கு அனுபவிச்சு தீக்கணும். அதனால யாருக்கு பிராரப்த கர்மா இந்த ஜன்மத்தில அனுபவிச்சு தீர்க்கிறாப் போல இல்லையோ அவங்களுக்கு ஞானம் வராது. மூணு ஜன்மங்கள்லே ஏறக்குறைய எல்லாம் அனுபவிச்சு தீர்த்து புதுசா ஒண்ணும் ஒட்டிக்காம இருந்தாதான் ஞானம் உண்டாகும்.


Tuesday, May 12, 2009

மூணு உடம்பும் போகணுமே!
சீவன் முத்தருக்கு மூணு உடம்பும் போகணுமே. அப்பதானே பிரம்மத்தோட ஐக்கியமாகலாம்.
ஸ்தூல உடம்பு காலப்போக்கிலே விழுந்துடும். அதாவது பிராரப்த கர்மா முடிஞ்சதுமே மேலே கர்மா செய்ய, அனுபவிக்க வேலை இல்லாததால உடம்பு சவமாயிடும்.
சாதாரணமா இந்த நேரத்தில சூக்கும சரீரம் அவித்தையான காரண சரீரத்தோட ஒட்டிக்கும். இந்த காரண சரீரம்தான் அடுத்த பிறவிக்கு காரணம். இதுதான் ஆன்மாவோட கர்ம மூட்டை ஒட்டிகிட்டு போக கோந்து போல உதவும்.
ஆனா எப்ப ஞானம் வருதோ அப்பவே ஞானத்தீயால அவித்தை எரிஞ்சு சாம்பலாகுமாம். ஆணவம், கன்மம், மாயை என்கிற இந்த காரண சரீரம்தான் இந்த அவித்தை.

அதாவது ஞானத்தாலே காரண சரீரம் அழியும்.

கொல்லன் உலையிலே பாத்தா பழுக்க பழுக்க இரும்பை காய்ச்சுவார். தேவையான உருவம் கிடைக்கிறாப்போல இரும்பு துண்டை சம்மட்டியால அடிப்பார். அப்பறம் மேலே தண்ணிய கொட்டுவார். நல்லா பழுக்க காய்ச்சியதாலே தண்ணி மேலே விழுகிற அந்த வினாடியே ஆவியா போய் காணாம போகும்.

அது போல அவ்வளவு சீக்கிரமா சூக்கும சரீரமும் காணாம போகும்.
எப்படின்னா பசை மாதிரி ஒட்டிகிட்டு அடுத்த இடத்துக்கு கொண்டு போன காரண சரீரம் இல்லை என்கிறதால அதை கட்டுப்படுத்த ஒண்ணும் இல்லாம அதோட இயல்பான நிலையை அடையும். இயல்புன்னா? எங்கிருந்து வந்ததோ அங்கேயே போக வேண்டியதுதான். எல்லா காரியங்களும் அததோட காரணத்தில ஒடுங்குகிறாப்போல சூக்கும தேக சத்துவங்கள் சத்துவ ரஜோ குண தன் மாத்திரைகளாக மாறும்.

முன்னே ஆகாசாத் வாயு... ன்னு இறங்கி வந்தாப்பல இப்ப ஒவ்வொண்ணும் வந்த வழியே ஆகாசத்தில ஒடுங்கி, ஆகாசம் விட்சேப சக்தியில ஒடுங்கி, விட்சேபம் மூல ப்ரக்ருதில ஒடுங்கி, இதுவும் பர ப்ரம்ம சொரூபத்தில லயம் ஆகிடும்.
தலை சுத்துதா! ஒண்ணுமில்லை. சீவன் வந்த அதே வழில திரும்பி போயிடும். அவ்வளோதான்.

அந்த நிலையிலே சாக்கிரத்/ ஸ்வப்ன/ சுசுப்தி இல்லை. அதனால துரியம் ன்னு பேர். இந்த துரிய பரம்பொருள் எல்லா இடத்திலேயும் நீக்கமற நிறைஞ்சு இருக்கிறதால அதுக்கு விபு ன்னு பேர்.


105.
சீவன் முத்தருக்கு சரீர த்ரயம் நீங்கும் விதம்:

அரியமெஞ் ஞானத்தீயா லவித்தையா முடனீறாகும்
பெரியதூ லமுங்காலத்தாற் பிணமாகி விழுமந்நேரம்
உரியசூக்கும சரீரமுலையிரும் புண்டநீர் போல்
துரியமாய் விபுவாய்நின்ற சொரூபத்தி லிறந்துபோமே.

அரிய மெஞ்ஞானத் தீயால் அவித்தையாம் உடல் (காரண சரீரம்) நீறாகும் (சாம்பலாகும்). பெரிய தூலமும் (பருத்த ஸ்தூல சரீரம்) காலத்தால் (காலப்போக்கில் பிரார்த்த கர்மா முடிந்ததும்) பிணமாகி விழும். அந்நேரம் உரிய (தன்னை அறிய சாதனமான) சூக்கும சரீரம் உலை இரும்பு உண்ட நீர் போல் (கொல்லன் உலையில் பழுக்க காய்ச்சிய இரும்பு மீது ஊற்றிய நீர் ஆவியாதல் போல) துரியமாய் விபுவாய் நின்ற சொரூபத்தில் இறந்து போமே.
--
த்வைத, விசிஷ்டாத்வைதம் போல அல்லாது அத்வைத அப்ரதிபந்த அபரோட்ச ஞானம் ஆகையால் அரிய மெய்ஞானம். ஜடமான ஸ்தூல சரீரமும் அறியாமையே சொரூபமான காரண சரீரமும் தன்னை அறிய ஹேது இல்லை. சூக்கும சரீரமே ஹேதுவாம்.(-உரிய சூக்கும சரீரம்) சூக்கும சரீரம் பிரளயத்தில் பிரதம சரீரத்துடன் உண்மையாகிய பிரமத்தில் அத்தியாச ஐக்கியம் ஆதலின் மறுபடி ஜன்மிக்கும். ஆனால் அகண்ட அறிவு சொரூபத்தில் “காய்ச்சின இரும்பு கிரகிக்கின்ற நீர் போல” இறந்த பின் ஜன்மிக்காது.

தாத்பர்யம்: சீவன் முத்தருக்கு தத்துவ ஞானம் வந்தவுடன் காரண சரீரம் நீங்கும். பிராரத்த கர்மம் புசித்து தீர்த்தவுடன் ஸ்தூல சரீரம் நீங்கும். அப்போது சூட்சும சரீரம் பரிபூரண சொரூபத்தில் லயித்து நீங்கும்.

Monday, May 11, 2009

சீவன் முத்தர் மகிமைகாயத்தில் வேறாகத் தன்னைக் கண்டோன்
காயமீ றினுமறியான் கன்னற் கட்டி
தீயிற்கா யினுமறிந்த போது மின்பந்
தீராத வாறுபோற் றெளிந்த ஞானி
மாயத்தின் மோகத்தாற் பேத மாகான்
மணந்தபர புருடன்மேல் மனஞ்சேர் மங்கை
நேயத்தான் மனைதொழில்கள் செய்யு மாபோ
னிகழ்தொழிற்செய் யினும்பரத்தி னிலமை நீங்கான்
-வாசிட்டம்

¨நினைப்பெலாம் விட்டு நிர்த்தொந்தனாய் ஞான சீலனாய் இருக்கிறவனுக்குத் தனக்குத்தானே வந்த போகத்தில் சுக துக்கங்களில்லை.¨
¨பிரம்ம ஞானியை புண்ணிய பாவ பலன்கள் தொடர மாட்டா; நிர்மல ஆகாசத்தைப் புகை தொடராதது போல¨
என்கிறது அஷ்டா வக்கிர கீதை.

ஏன்னா அவன் அஞ்ஞானிகளை மாதிரி சீவ பாவத்திலே பலனை கருதி எதையும் செய்கிறதில்லை. செயல்கள் எல்லாமே பிராரப்த பலனை பொறுத்தவை. அந்த பலன் வறுத்த விதை மாதிரி பொசிப்புக்கு மட்டுமே தகுதி உள்ளது. பாப புண்ணியங்களை உண்டாக்க தகுதி இல்லாதது என்கிறார் வள்ளலார்.

வறுத்தவிதை யுண்பதன்றி மாநிலத்தை கீன்று
செறுத்துவிதைப் பாரோ தெளி
-வள்ளலார்- பாசவியல்

குரு சொல்கிறார்: அன்புள்ள மகனே, ஜீவன் முத்தரை சேவிச்சவங்க பிரம்மா, விஷ்ணு, சிவன் மூணு பேரையும் மகிழ்ச்சி அடைய வைச்சு அரிய தவமெல்லாம் பண்ணி ஜன்ம சாபல்யம் பெற்றவங்களா ஆவாங்க ன்னு வேதங்கள் சொல்லுது.

தபஸ் பண்ணி திரிமூர்த்திகளிலே ஒத்தரை பாத்து வரம் வாங்கினா சிலசித்திகளும் புண்ணியங்களும் மட்டுமே கிடைக்கும், ஆனா மூணு பேரையும் ஒண்ணாவே பாத்துடலாமே! ப்ரம்மத்தோட சத்வ நிழல்தானே இந்த மூணு விதமா காணப்படுது! ஜீவன் முத்தரோ பரப்பிரம்ம சொரூபமே! இந்த ஞானியோட தரிசனத்தால வரங்களும் கிடைக்கும்; குரு கிடைத்து அவர் மூலமா முத்தியும் கிடைக்குமே!
அறிவால பல விஷயங்களை சாதிக்கலாம். ஆனா பிரம்மஞானத்தை அடைய முடியாது. அதனாலே எல்லாத்தையும்விட அதுவே கஷ்டமானது. அதனால ஞானிகளோட மகிமை அளவிட முடியாதது.
யாரான ஒரு பெரிய விஷயம் செய்துட்டதா சொன்னா, ஆமா, இதென்னடா பெரிய பிரம்ம வித்தை ன்னு சொல்வோம்.
கீதையிலே கண்ணனும் பிரம்ம ஞான சாதனமே மிகவும் வருத்தம் தருவதுன்னு சொல்கிறான். அதை அடைந்தவங்கள் நிசமாவே பெரியவங்கதானே!

திரிவித வுலகத் தரிதொரு ஞானி
தேர்விடத் தென்றுமோ ரொன்றை
யுரைசெயிற் பிரம வித்தையொத் தரிதோ
வென்றுமிவ் வுலகுரைப் பதனா
லரிசொல்கீ தையினும் பிரமசாதகரி
னார்க்குள வருத்தமென் பதனாற்
பெரியதோர் வருத்த மெனமறை துணிந்த
பிரமநா னெனவிருத் தலினான்
--
பிரிச்சு பாக்க
திரிவித உலகத்து அரிதொரு ஞானி
தேர்விடத்து என்றும் ஓர் ஒன்றை
உரை செயிற் பிரம வித்தை ஒத்தது அரிதோ
என்றும் இவ் உலகு உரைப்பதனால்
அரி சொல் கீதையினும் பிரம சாதகரினார்க்கு
உள வருத்தம் என்பதனால்
பெரியதோர் வருத்தம் என மறை துணிந்த
பிரம நான் எனவிருத்தலினால்.

-வைராக்கிய தீபம்.

104.
அதற்கு வேத பிரமாணம்:

சீவன்முத்தரைச் சேவித்தோர் சிவனயனெடு மாலான
மூவரு மகிழ நோன்பு முழுவதுஞ் செய்துசன்ம
பாவன மானாரென்று பழமறை முழங்கு மிப்பான்
மேவருஞ் சீவன்முத்தர் விதேகமுத்தியுநீ கேளாய்

சீவன்முத்தரைச் சேவித்தோர் சிவன், அயன் (பிரமன்), நெடு மாலான (விஷ்ணு) மூவரும் மகிழ நோன்பு முழுவதும் (தவங்கள் அனைத்தும்) செய்து சன்ம பாவனமானார் (பரி சுத்தமானார்) என்று பழ மறை முழங்கும். இப்பான் (இனி) மேவருஞ் (மேவ அரும்=பொருந்துதற்கு அரிய) சீவன்முத்தர் [அடையும்] விதேகமுத்தியும் (உடல் நீங்கிய முத்தி) நீ கேளாய்.

Friday, May 8, 2009

ஜீவன் முத்தரை பாவ புண்ணியங்கள் தொடராத அதிசய வழி....
சரி, ஜீவன் முத்தரா இருக்காரு. அடுத்த பிறவி இல்லே. ஆனா இந்த பிறவி கர்மாவ தீர்க்க உலகத்திலே வாழணும். பற்றில்லாம கர்மம் செய்யறாரு. அதனால இந்த நிலை வந்த பிறகு கர்மம் பிடிச்சுக்காது சரிதான். ஆனா பிறக்கறப்பவே ஞானியா பிறக்கலையே! பிறந்ததுலேந்து இந்த பிறவில செஞ்சது? அதோட கர்ம பலன் என்ன ஆகும்? அதெப்படி அது ஒட்டாம போகும்? அது எங்கேயாவது போய் சேரணுமே?

எப்படின்னா ...
பிராரத்த கர்மா சில "நல்ல" விஷயங்களையும் செய்யத்தூண்டும். அதே சமயம் சில "கெட்ட" விஷயங்களையும் செய்யத்தூண்டும்.

அட! இவனெல்லாம் சாமியாரு வேஷம் போட்டுகிட்டு வந்துட்டான். இவனை எனக்கு தெரியாதா? (இப்படி பண்ணான், அப்படி பண்ணான்...) சுத்த பிராடு சார்!.... இந்த ரீதியிலே சிலர் அவரை திட்டிகிட்டு இருப்பாங்க. அவங்க புதுசா கர்மாவால வரக்கூடிய பாவத்தை எல்லாம் சேர்த்து வாங்கிக்கிறங்களாம்!

விஷயம் தெரிஞ்ச சிலர் ஜீவன் முத்தரை பூஜை பண்ணி, போற்றி புண்ணியத்தை எல்லாம் வாங்கிப்பாங்களாம். ஞானி லெவெல்லே அதுவும் பிரச்சினைதானே? பொன் விலங்கு!

அப்ப இருந்த ஒரே கர்மாவான பிராரத்த கர்மாவும் ஜீவன் முத்தரை விட்டு போயிடும்.

103.
சீவன் முத்தர் செய்யும் இருவினை எப்படி நீங்கும்?

பொறுமையாற் பிராரத்தத்தைப் புசிக்குநாட் செய்யுங் கர்மம்
மறுமையிற் றொடர்ந் திடாமன் மாண்டுப்போம் வழியேதென்றால்
சிறியவ ரிகழ்ந்து ஞானி செய்தபா வத்தைக் கொள்வார்
அறிவுளோ ரறிந்து பூசித் தறமெலாங் கைக்கொள்வாரே

மறுமையில்[லாத சீவன் முத்தர்] பொறுமையால் பிராரத்தத்தை புசிக்கும் நாள் [சீவன் முத்தராய் உள்ள போது] செய்யும் கர்மம் [அவர்களை] தொடர்ந்திடாமல் மாண்டுப்போகும் வழி ஏதென்றால், [அவர்களை] சிறியவர் (மூடர்கள்) இகழ்ந்து ஞானி செய்த பாவத்தைக் கொள்வார். அறிவுளோர் (விவேகிகள்) அறிந்து (அவர்கள் தன்மை அறிந்து) பூசித்து அறமெலாம் (புண்ணியங்களை) கைக்கொள்வாரே (ஏற்றுக்கொள்வார்).
தாத்பர்யம்: சீவன் முத்தர் செய்யும் வினைகளின் புண்ணிய பாப பலன்களை விவேகியும் அவிவேகியும் ஏற்பர்.
--
பொறுமையால்- “சுக விஷயம்” வரின் உடனே முன்வந்தும் “துக்க விஷயம்” வரின் பின் தங்கியும் இல்லாது இரண்டையும் சமமாக ஏற்பதால்.. சாரத்தைவிட்டு சக்கையை பார்ப்பது போல மூடர்கள் பிராரத்தத்தால் வரும் அகுணத்தை பார்த்து இகழ்ந்து பாவத்தை கைப்பற்றுவர். ஜலத்தை விட்டு பாலை கொள்ளும் அன்னம் போல் முமுட்சுக்கள் அகுணத்தை விட்டு சொற்பமாக இருந்தாலும் குணத்தைப் பார்த்து சிவ சொரூபமாய் எண்ணி அர்சனையாதி செய்து புண்ணியத்தை கைக்கொள்வர்.Thursday, May 7, 2009

ஜீவன்முத்தரும் பிராரத்தமும்ஒரு பஞ்சுப்பொதி இருக்கு. அதை எரிக்கணும்னா ஒரு சின்ன தீக்குச்சி தீயே போதும். ஊழித்தீ ன்னா? கேக்கவே வேணாம். பல ஜன்மங்களா சேர்ந்து நம்ம துரத்திக்கிட்டே வர சஞ்சித கர்மங்கள் இருக்கு இல்லையா? அவை எல்லாம் தத் பத தரிசனம் என்கிற அஹம் ப்ரம்மாஸ்மி என்கிற பாவனை திடமா வந்ததுமே எரிந்து போகும். ஞானத்தீயால அத போல அழிக்கப்படுதாம். த்வம் பத தரிசனம் என்கிற தான் யார்ன்னு நிச்சயமா அறிஞ்ச உடனே அன்னியமா ஒண்ணும் இல்லாததால யார் யாருக்கு என்ன செய்ய முடியும்ன்னு ஒரு நிலை வந்து விடுகிறதாலே பற்றில்லாத கர்மத்தால ஆகாமியம் வராமல் போகும். மீதி இருக்கிறது பிராரத்தம்தான். அது வில்லுலேந்து கிளம்பின அம்புபோல. இலக்கை அடைஞ்சே தீரும். அதனால அது அனுபவிக்க அனுபவிக்கத்தான் தீரும். அது தீரும் போது அஸி பத நிலை வந்துடும். அடியோட தான் என்கிறது போய் சகஜ சமாதி அடைந்துடுவார். அதுக்கு அப்புறம் வெளியே வர வேலையே இல்லை. அவர் வரனாகி, வரீயானாகி, அப்புறம் வரிட்டனாயிடுவார்.

சஞ்சிதமுன் கட்டுவினை சற்குருநோக் காற்சரியும்
பஞ்சுமலை பட்ட நெருப்பாய்.
கொடுப்பானு மீசனதை கொள்வானுமீசனெனின்
மடுக்கா வெதிர் வினைகள் வந்து.
உள்ளப் பொசிப்பெல்லா முண்டொழிப்ப தன்றியிதைத்
தள்ளப் படாதெவர்க்குந் தான்

வள்ளலார் _ பாசவியல்

102.
கன்மத்திரயம் நீங்குதல்:
பஞ்சினை யூழித்தீப்போற் பலசன்ம விவித வித்தாஞ்
சஞ்சித மெல்லாஞானத் தழல்சுட்டு வெண்ணீறாக்கும்
கிஞ்சிதா காமியந்தான் கிட்டாமல் விட்டுப்போகும்
விஞ்சின பிராரத்தத்தின் வினையநு பவித்துத்தீரும்.

பஞ்சினை ஊழித்தீப்போல் பல சன்ம விவித (பல விதமான) வித்தாம் சஞ்சிதம் எல்லாம் ஞானத் தழல்சுட்டு வெண்ணீறாக்கும். கிஞ்சித் (கொஞ்சம்) ஆகாமியம்தான் கிட்டாமல் விட்டுப்போகும் (சம்பவியாமல் நீங்கும்). விஞ்சின (மீதி) பிராரத்தத்தின் வினை அநுபவித்துத்தீரும்.
தாத்பர்யம்: சஞ்சித கர்மம் பரஞானத்தாலும், ஆகாமியம் ஜீவத்துவம் நஷ்டமடைவதாலும், பிராரத்தம் அனுபவித்தும் தீரும்.
---
நினைவுறுத்தல்: சஞ்சித கர்மம்: பிறவி எடுக்கும் போது நாம் கொண்டு வந்த மூட்டை. ஆகாமியம்: இந்த ஜன்மத்தில் நாம் உண்டாக்கிக் கொள்வது. பிராரத்தம்: பலன் தர துவங்கிவிட்ட கர்மா.
--
அநுபவித்துத்தீருதல்: புலி என நினைத்து விட்ட அம்பு பசு என அறிந்தாலும் எப்படி நிற்காதோ அது போல பலன் தர தொடங்கிவிட்ட கர்மா ஞானம் வரினும் நிறுத்த இயலாமல் இச்சை, அனிச்சை, பர இச்சைகளாக புசித்து தீரும்.Wednesday, May 6, 2009

ஜீவன் முத்தரும் கர்மங்களிலே உழலுவானேன்?இப்ப சீடன் கேக்கிறான் ஸ்வாமி ஞானமடைஞ்ச ஜீவன் முத்தரும் கர்மங்களிலே உழலுகிற அஞ்ஞானிகள் மாதிரி பிரபஞ்ச விவகாரங்களை பண்ணா எப்படி? இச்சை, கர்மங்கள் ஒழிஞ்சு எப்படி இவங்களுக்கு முக்தி கிடைக்கும்?

குரு சொல்கிறார்: அப்பனே ஆகாசம் இருக்கு. அது எல்லா இடத்திலேயும் இருக்கு. ஆனா எதையும் அது பற்றி இல்லை. மத்த நாலு பூதங்களையும் பாத்தா ஒண்ணோட ஒண்ணு சம்பந்தம் வந்தா உறவு கொண்டாடி விடும். ஆகாசம் எல்லாத்துக்கும் இடம் கொடுத்தாலும் எதையுமே பற்றாம இருக்கும்.

அது போல அஞ்ஞானிகள் நாம் தேகி; கர்மம் செய்யறோம்ன்னு நினைவோட செய்வதால அவங்களுக்கு அந்த செயலாலே பற்றுதல் உண்டாகும். பலனை அவங்க அனுபவிக்கனும். ஆனா ஞானியோ தனக்கு தேகம் இருக்கறதாவே நினைக்கிறதில்லை. தான் செய்கிறோம் என்கிற நினைப்பு அவனுக்கு இல்லை.  பிராரத்தத்தினாலே தானா வருகிறதை செய்து கொண்டு போறாங்க. வெளியே இருக்கிறவங்களுக்கு இவங்க காரியம் செய்கிறதா தோணிணாலும் இவங்களோ சாட்சியா மட்டுமே இருக்காங்க. (தானே செய்கிற விஷயங்களையே அவங்க ஒரு சினிமாவை பாக்கிறது போல பாப்பாங்க.) ஆதனால கர்ம பலன் அவங்களை பிடிக்கிறது இல்லை.

பிரம்ம வித்து சாட்சியா மட்டும் தாமரை இலை நீர் போல இருந்து உலகிலே இருந்தாலும், அன்னியர் துக்கத்தைப்பாத்து தான் துக்கிக்கிறாராம்.

ஏன் அன்னியர் துக்கம்? அதான் இவருக்குன்னு இருக்கிற உடம்பை நாம பாத்தாலும் இவர் பாக்கிறதில்லையே? அப்ப இவரோட உடம்புக்கு நேருகிற துன்பங்கள் இவரை பாதிக்கிறதில்லை. பின்னே எப்படி பிராரத்த கரமா அனுபவிச்சு கழிகிறது? இப்படி மறைமுகமாவும் இன்னுமொரு பின்னால் சொல்லப்போகிற ஆச்சரியமான விஷயத்தாலும்!

மத்தவங்களுக்கு ஏற்படுகிற துன்பத்தை தனக்கு ஏற்பட்டதாவே இவர் பாத்து கஷ்டப்படுவார்! இந்த மாதிரியான ஜீவ காருண்ய செயல்களாலே கர்மா அனுபவிக்கப்பட்டு நீங்கும்! இதுக்கான வாய்ப்பை இவர் தேடிப்போக வேணாம். பிராரத்த கர்மாவே அவற்றை கொண்டுவந்து சேர்க்கும்!

ஆனா எப்பவுமே ஜீவ முக்த தன்மை கெட்டுப்போகாது. பற்று இல்லையானாலும் திரிபுடி (செய்கிறவன், செய்கை, செய்யப்படுவது) உண்டு. மனசும் இருக்கும். ஆனா அது சத்துவமாகவே இருக்கும்.

101.
பிரமவித்துக்களும் அஞ்ஞானிகளைபோலே விவகாரம் செய்தால் சம்சார பந்தம் எப்படி நீங்கும்?
பிரமஞானிகளுங் கன்மப் பேதையர் போலே வாழ்ந்தால்
திரமுறுமஞ்ஞா னம்போய்ச் செனியாத வழியேதென்றால்
பரவுமா காச மொன்றிற் பற்றாது மற்றை நாலும்
விரவின தோடுங் கூடும் விதமிரு வோரு மாவார்

பிரமஞானிகளும் (பிரமவித்துக்களும்) கன்மப் பேதையர் (கர்மிகளான அஞ்ஞானிகள்) போலே வாழ்ந்தால், ஸ்திரமுறும் (நிலையான) அஞ்ஞானம் போய் செனியாத (மீண்டும் பிறக்காத) வழியேது என்றால், பரவும் ஆகாசம் (மற்ற 4 பூதங்களில்) ஒன்றில் பற்றாது, மற்றை நாலும் (4 பூதங்களும்) விரவினதோடும் கூடும் (கலந்து நிற்கும்) விதம் இருவோரும் ஆவார் (ஞானி அஞ்ஞானிகள் இருவரும் ஆவார்)
தாத்பர்யம்: கர்மம் ஒன்றானாலும் கருத்து வேறானதால் பிரமவித்து அஞ்ஞானம் நீங்கி மோட்சம் அடைவர்.Tuesday, May 5, 2009

எப்படி முத்தர்ன்னு கண்டு பிடிக்கிறது?இப்படி பிரமவித்து ஏன் துக்கம் அனுபவிக்கணும் ன்னு ஒரு கேள்வி இருக்கு.
இந்த நாலு பேரோட கர்மாக்களும்தான் வேறு வேறா இவர்கள் இருக்க காரணம்.

சமாதி என்கிறது உலகநாட்டமே இல்லாம இரண்டற ஐக்கிய நிலையிலே இருக்கிறதாகும்.
வரன் பசி முதலியது வரும் போது ஆகாரம் சம்பாதிச்சு சாப்பிட பகிர் முகமாவான்.
வரியன் அன்னியர் தூண்டினால் மட்டுமே பகிர் முகமாகி உணவை ஏத்துப்பான்.
வாரிட்டன் தானாவும் வராமாட்டான். மத்தவங்க தூண்டியும் வரமாட்டான். எப்பவுமே தேகம் கட்டை போல கிடக்க தான் சதா அதீத நிலையிலேயே இருப்பான். அவன் நிலைதான் முடிவான முடிவுன்னு சிலர் சொல்கிறது. மத்தவங்க பார்வைக்குத்தான் அவன் உடம்போட இருக்கானே தவிர தன் வரை தேகம் இருக்கிற நினைப்பே இல்லாத பேரின்பத்திலே இருப்பான்.

முந்திய ரெண்டு பேரும் பிரம்ம நிலையிலே இருக்காங்கன்னா இந்த உலகத்தை எப்படி பார்ப்பாங்க? அவங்களுக்கும் தன்னோட உடம்புன்னு ஒரு உணர்ச்சி இருக்காது. அதை சாக்ஷியா மட்டும் பார்ப்பாங்க. நாம் ஒரு சினிமாவை பார்க்கிறபோது எப்படி பார்க்கிறோமோ அப்படி. இன்னும் சரியா சொல்லணும்னா ஒரு நாடகத்திலே நடிக்கிற மாதிரி. அதிலே தனக்கும் ஒரு பாத்திரம் -ரோல்- இருக்கு இல்லையா?

இவங்க இப்படி பகிர்முகமா வரதால அப்போதைக்கு அனுபவிக்கும் சுகம் குறையுதே தவிர மத்தபடி அவங்களோட ஞான நிலையை அது பாதிக்காது.

இப்படி வித்தியாசம் இருக்கிறது அவங்களோட பிராரத்த கர்மாவிலே இருக்கிற வித்தியாசம்ன்னு சொன்னோம். முக்தி நிலைக்கு போகணும்ன்னா ஒத்தரோட கர்ம கணக்கு பாலன்ஸ் ஆகணும். அதாவது அனுபவிக்க வேண்டிய புண்ணியமோ பாபமோ இல்லைன்னு ஆகணும். பத்து புண்ணியம் பண்ணி இருக்கேன். பத்து பாபம் பண்ணி இருக்கேன். தானிக்கி தீனி சரி போயிந்தி ன்னு சொல்ல முடியாது. பாபமோ புண்ணியமோ விளைவை அனுபவிச்சே தீரணும். சில பிராயச்சித்தங்கள் அவற்றோட கடுமையை குறைக்கலாமே தவிர வராம தடுக்காது. இல்லை கொஞ்சம் தள்ளிப் போட முடியுமோ என்னவோ?

ஞானம் வந்தா சஞ்சித கர்மா காணாம போயிடும். பற்றில்லாத போனதாலே இப்ப செய்கிறதிலே கர்ம பலன் ஒட்டாது. ஆகாமி கர்மா கிடையாது. ஆனா ஏற்கெனெவே பலன் தர ஆரம்பிச்சுவிட்ட கர்மாவான பிராரத்த கர்மாவை அனுபவிச்சு தீரணும்ன்னு முன்னேயே பாத்தோம். உலக விவகாரத்திலே இல்லாம இதை அனுபவிச்சு தீர்க்க முடியாதே? அதனால அவங்க அப்பப்ப தேவையான அளவு பகிர்முகமா இருக்காங்க. ஆகாரம் எடுத்துக்க வேண்டிய அளவு கூட பிராரத்தம் இல்லாதவனே வரிட்டனா இருக்கிறவன். அப்ப மத்தவங்களைப்பத்தி யூகிச்சுக்கலாம். ஆனா நாலு பேருமே ஞானிகள்தான். அதுல சந்தேகமே இல்லை.

முக்தி என்கிறது மோட்சம். அதை அடைஞ்சவங்க முத்தர். இவர்கள் ரெண்டு விதம்: ஜீவன் முத்தர், விதேக முத்தர்ன்னு பாத்தோம். விதேக முத்தருக்கு தேகம் போயிடுத்து. மறு பிறவி இல்லாம பரமாத்மாவோட ஐக்கியம் ஆயிட்டார்.
ஜீவன் முத்தர் உடம்போட இருக்கிறபோதே பிரம்ம நிலையை அனுபவிக்கக்கூடியவர் ன்னு பாத்தோம். இதிலே 4 வகையும் பாத்தோம்.
அதனால முத்தி என்கிறது ஏதோ இறந்து போனாதான் வரும்ன்னு இல்லை என்பது தெளிவு.

இவங்க சில காரணங்களுக்காக தன்னை வெளியே அதிகமா காட்டிக்கிறதில்லைன்னும் பாத்தோம். அப்ப எப்படி ஒத்தர் ஜீவன் முத்தர்ன்னு கண்டு பிடிக்கிறது?

அவங்களுக்கு பத்து குறிகள் உண்டுன்னு சிவப்பிரகாச ஸ்வாமிகள் சொல்லி இருக்காங்க.

குறிகளோர் பத்துளவா ஞானமயர்ச் சுவைதாங்
குரோதமின்மை வைராக மைம்பொறிக ளடக்க
லறமுதவு சமைதமையே சனப்பிரியத்துவமே
யலோபமொடு கொடையபய நிருமதமென் றறிக
நெறிமருவு சீடரொடு பத்தருதா சீனர்
நிலையில்பா விகளென்னு நால்வகையோ ரிடத்து
முறையினனுக் கிரகம்வந் துறுமருள்கொள் சீவன்
முத்தனா லென்பரவை முறையினெடுத் துரைப்பாம்.

பிரிச்சுப்பாக்க:
குறிகளோர் பத்துளவாம் ஞானமயர்ச் சுவைதாம்
குரோதமின்மை வைராகம் ஐம்பொறிகள் அடக்கல்
அறம் உதவு சமை தமையே சனப்பிரியத்துவமே
லோபமொடு கொடை அபயம் நிருமதம் என்றறிக
நெறி மருவு சீடரொடு பத்தர் உதாசீனர்
நிலையில் பாவிகளென்னும் நால் வகையோர் இடத்து
முறையின் அனுக்கிரகம் வந்துறு மருள் கொள் சீவன்
முத்தனால் என்பர் அவை முறையின் எடுத்துரைப்பாம்.
(வேதாந்த சூடாமணி)

1.குரோதமின்மை 2. உலோபமின்மை 3. அகங்காரமின்மை 4. பஞ்ச இந்திரியங்களையும் அடக்குதல் 5. சமை (சமம்) 6. தமை (தமம்) 7. ஜனப்பிரியத்துவம். 8. கொடை 9. அபயம். 10. வைராக்கியம்.
இதை எல்லாம் சாதனா சதுஷ்டயத்திலே (நினைவிருக்கா? :) பாத்தாச்சு இல்லையா?
அபேதமா பாக்கிறதாலே சீடனானாலும் சரி, பகதர்கள் ஆனாலும் சரி, "இவரோட சமாசாரம் ஒண்ணும் எனக்கு வேணாம்பா" என்கிற உதாசீனரானாலும் சரி, இல்லை அவரை திட்டி பிரச்சினை செய்கிற பாவிகளானாலும் சரி - எல்லாருக்குமே அனுக்கிரகம் செய்கிறாராம்!Monday, May 4, 2009

சீனாவிலே ஒரு புத்த துறவி...// ஆசையாத்தான் இருக்கு இப்படி சீவன் முக்தர் ஆக.
அதுக்கெல்லாம் ஒரு அம்சம் வேணாமா?
இப்படி இருந்தாப் பைத்தியக்காரப் பட்டம்
வந்துரும், இந்தக் கலிகாலத்தில்.//

இப்படி ஒரு பின்னூட்டம் போட்டாங்களா? அவங்களுக்கு ஒரு கதை சொல்லறேன்னு சொல்லி இருந்தேன்.

இதோ:

சீனாவிலே ஒரு புத்த துறவி. கிராமத்திலே நல்ல பேர் வாங்கி இருந்தார். அவருக்கு ஒரு நாள் ஒரு பிரச்சினை வந்தது. அந்த ஊரை சேர்ந்த ஒத்தர் திடுதிப்புன்னு வந்து "சாமி! நாங்க அவசரமா வேற ஊருக்கு போக வேண்டி இருக்கு. இந்த பொண்ணை கூப்பிட்டுகிட்டு போக முடியாத சூழ்நிலை. இப்பதான்+2 பரீட்சை நடக்குது. உங்க பொறுப்பிலே விட்டுட்டு போறேன். கொஞ்சம் பாத்துக்குங்கன்னார். துறவி "அடடா! நானோ பிரம்மசரியம் இருக்கறவன். எப்படி ஒரு கன்னிப்பெண்ணை பாத்துகிறது? நான் சரியா இருந்தாலும் ஊர் என்ன சொல்லும்?” ன்னார்.

வந்தவர் "சாமி, ஊரைப்பத்தி எனக்கு கவலை இல்லை. உங்களை நான் நம்பறேன். அது போதும் ன்னார்; பொண்ணை விட்டுட்டு போயிட்டார். முத நாள் இரவு துறவி வெளியெ கடும் குளிரிலே படுக்க வேண்டியதாச்சு. உடம்பெல்லாம் விறைச்சு போச்சு. அடுத்த நாள் "என்னடா இது! எவ்வளவு நாள் இப்படி காலம் தள்ள முடியும்? உடம்பை வெச்சுதானே சித்திரம் எழுதணும். இன்னும் இந்த உடம்புன்னு நினைப்பெல்லாம் இருக்கே! இதை காப்பாத்திக்கணுமே! என்ன பண்ணறது"ன்னு யோசிச்சார்.

தன் ஆசிரியர்கிட்டே போய் "என்ன செய்ய?" ன்னு கேட்டார். அவர் சிரிச்சுகிட்டே அரை நாள் பயணத்துலே இருந்த ஒரு ஊர் பேர் சொல்லி அங்கே இந்த பேர்ல ஒத்தர் இருக்கார். அவரை போய் பாருன்னார். துறவியும் "அம்மா பத்திரமா இரு. அடுத்த ஊர் போயிட்டு சாயந்திரம் வந்துடறேன்" னார். கிளம்பி அந்த ஊருக்கு போனார். பேரை சொல்லி விசாரிச்சார். பேரை கேட்டதுமே ஊர்காரங்க முகத்தை சுளிச்சாங்க. "அவனா? இப்படீஈ போ" ன்னு வழிகாட்டினாங்க. துறவிக்கு ஆச்சரியம்! "என்னடா இது! அவருக்கு இங்கே ஒண்ணும் மதிப்பு இல்லையா? அப்படிப்பட்ட ஒத்தர்கிட்டேயா நம்ம வாத்தியார் அனுப்பி இருக்கார்?"ன்னு நினைச்சுண்டார். விசாரிச்சு கொண்டே அவர் வீட்டுகிட்டே போயாச்சு.

கடசியா ஒத்தரை விசாரிச்சப்ப அவரும் முகத்தை சுளிச்சுகிட்டே "அதோ பாரு! அவன்தான்"னு சொன்னார். காட்டின நபரை பாத்தா அந்த நபரும் ஒரு பிள்ளையும் வீட்டுக்கு வெளியே உக்காந்து டம்ளர் டம்ளரா ஏதோ குடிக்கிறாங்க! பக்கத்திலே மது குடுவை வேற. "இதென்னடா இது?" ன்னார் துறவி. வழி காட்டியவர் "ஆமா. அப்பனுக்கும் பிள்ளைக்கும் இதே வேலை. காலைல எழுந்தா ராத்திரி வரை குடிச்சுகிட்டே இருக்காங்க" ன்னுட்டுபோயிட்டார்.

துறவி என்னடா செய்கிறது ன்னு யோசிச்சார். அப்புறம் வாத்தியார் சொல்லி இருக்காரே; போய் கேட்டுடலாம் ன்னு கிட்டே போனார். கிட்டே போனா சாராய வாசனை கொஞ்சம் கூட இல்லை. வெறும் தண்ணியைத்தான் குடிக்கிறாங்க ன்னு தெரிஞ்சது! ஏன் இப்படி ஏமாத்தறீங்க ன்னார். 'குடியர்' பதில்சொன்னார்: அப்பதான் பொண்ணை பாத்துக்க ன்னு யாரும் என் கிட்ட வர மாட்டாங்க!Friday, May 1, 2009

மற்ற மூவரின் இயல்பு


சரி சரி நாலு வகைன்னு சொன்னீங்க! ஒண்ணு ஆச்சு - சீவன் முக்தர். மீதி மூணு?
மூணிலே ரெண்டு பேர் சமாதியிலே இருப்பாங்க.
அதானே பாத்தேன். இப்படி இருந்தாதான் ஏதோ விசேஷம்ன்னு தோணுது. அப்புறம்?
ஒத்தர் இந்த உடம்பை காப்பாத்திக்க அப்பப்ப சமாதி நிலையிலேந்து வெளியே வந்து ஏதாவது உணவு சம்பாதித்து சாப்பிடுவார். உலக வியாபாரம் ஏதேனும் இருக்கலாம். திருப்பி சமாதிக்கு போயிடுவார். இவர் பிரம்மவரன்.

இன்னொருத்தர் தானா சமாதி நிலையிலேந்து வெளியே வர மாட்டார். யாரான ஏதாவது செய்து இவரை வெளியே கொண்டு வருவாங்க. டமர டமரடம் ன்னு எதேனும் வெச்சு சத்தம் எழுப்புவாங்க. மணி அடிப்பாங்க. சத்தம் போட்டு நாமசங்கீர்த்தனம் பண்ணுவாங்க. வெளியே வந்த பிறகு ஏதேனும் சாப்பிடுவார். உலக வியாபாரம் ஏதேனும் இருந்தா இருக்கும். அல்லது உடனே திருப்பி சமாதிக்கு போயிடுவாங்க. இவர் பிரம்ம வரியான்.
இப்படிப்பட்ட ஒத்தரை கவனிச்சுக்கிட்டவர் சமாதியிலே இருக்கிறவரை தடியால அடிச்சு வெளீலே கொண்டு வருகிறதும் உண்டு! அநியாயமா தோணுது இல்லே? ஹும், அவருக்கு வேற வழி இருக்கல்லே!

இப்படி எந்த வழியாலும் வெளியே வராம எப்பவுமே சமாதியிலே இருக்கிறவங்க பிரம்ம வரிட்டன்.

99.
மற்ற மூவரின் இயல்பு?

பின்னைமூ வரி லிரண்டு பேர்களுஞ் சமாதி யோகம்
தன்னையுற்றிருப்பார் தேக சஞ்சார நிமித்தந் தானாய்
உன்னுவோன் வரன்வேற்றோரா லுணர்பவன் வரியானாகும்
அன்னியர் தம்மாற்றன்னா லறியாதோன் வரிட்டனாமே

பின்னை மூவரில் இரண்டு பேர்களும் சமாதி யோகம் தன்னை உற்றிருப்பார். தேக சஞ்சார (பயண) நிமித்தம் தானாய் உன்னுவோன் (சமாதியிலிருந்து வெளி வந்து உணவு ஆகியவற்றை நினைப்பவன்) வரன்; [சீடன் முதலான] வேற்றோரால் உணர்பவன் (சமாதி கலைந்து உணவு ஆகியவற்றை நினைப்பவன்) வரியானாகும். அன்னியர் தம்மால் (மற்றவர்களாலும்) தன்னால் (தானாகவும்) அறியாதோன் (உணவு கொள்ளல் முதலியனவற்றை கொள்ள அறியாதவன்) வரிட்டனாமே.

ஹும். அப்ப இந்த நாலு பேரும் வித்தியாசமானவங்க. அவங்க அனுபவிக்கிறதுலேயும் வித்தியாசம் இருக்கும் இல்லையா?
இல்லை. இவங்க அனுபவிக்கிற பிரம்ம ஆனந்தம் ஒண்ணே! வித்தியாசமே இல்லை.

அட பின்னே ஏன் சமாதி நிலையிலே இருக்கணும். அல்லது உலக விவகாரங்களிலே இருக்கணும்? பாடு பட்டு சமாதி பழகறதிலே என்ன பிரயோசனம்?
பிரம்ம வித்து உலக வியவகாரியங்களிலே இருக்கிறதால அதுக்கான பலன்களா நாம் பாக்கிறது போல துக்கம், சந்தோஷம் அனுபவிப்பார். முள்ளு குத்தி ரத்தம் வரும். அடி படும். ஏதோ நோய் வந்து உடம்பு கத்தியாலே வெட்டப்படும்! மத்தவங்க சுகமா இருப்பாங்க!

ஸ்ரீ ரமணர் க்கு சார்க்கோமா வந்து அதுக்காக அறுவை சிகித்சை செய்தாங்க. அனெஸ்தீஷியா எல்லாம் ஒண்ணும் வேணாம்னுட்டார். ஆபரேஷன் நடந்தது. ரமணரோ வேடிக்கை பாத்து கொண்டு இருந்தார்.
எல்லாம் முடிஞ்ச பிறகு ஒத்தர் ஸ்ரீரமணரை கேட்டார்:
ஆமாம், உங்களுக்கு வலியே தெரியலையா?
தெரியாம என்ன? நல்லாவே தெரிஞ்சது!
பின்னே?
அந்த வலியோட சாதாரணமா இருக்கிற வேதனை இல்லை.


ஆயிரமாயிரம் சீவன்கள்! அதிலே மனிதப்பிறவி வாய்க்கிறது துர்லபம்! அப்படியே வாய்ச்சாலும் ஆன்மீகம் பத்தி நாட்டம் வரது துர்லபம். வந்தாலும் அவருக்கு ஏத்த சரியான வழியை கண்டுபிடிச்சு அதிலே போகிறது துர்லபம். போனாலும் இடையிலே வருகிற தடைகளை எல்லாம் தாண்டி மேலே போகிறது கஷ்டம். குருநாதர் அமையணும். பிறகு பிரம்ம அனுபவம் கிடைக்கணும். அப்படி கிடைச்சாலும் சந்தேகம் முதலான இடையூறுகள் வேற வராம இருக்கணும். (குரு வந்தாச்சுன்னா அப்புறம் மீதி தாண்டிடக்கூடியதுதான்:)
இதனால் இவர்கள் மிகவும் அரிதானவர்களாவே இருப்பாங்க.

100.
வித்தியாசம் உள்ள இந்த நால்வருக்கும் மோட்சமும் வித்தியாசமானதா?

அரிதாகு மிவர்க ளிவ்வா றநேகரா னாலுமுத்தி
சரியாகும் பாடு பட்ட சமாதிக்குப் பலனே தென்றால்
பெரிதான திருஷ்ட துக்கம் பிரமவித் தநுப விப்பன்
வரியானும்வரனு மற்றை வரிட்டனுஞ் சுகமாய்வாழ்வார்.

அரிதாகும் இவர்கள் இவ்வாறு அநேகரானாலும் முத்தி சரியாகும். (முத்தியில் வேறுபாடில்லை). [பின்னே] பாடு பட்ட சமாதிக்குப் பலன் ஏதென்றால், [விவகாரத்தில் பிரவிருத்தி உள்ளதால்] பெரிதான திருஷ்ட (பிரத்யக்ஷமான) துக்கம் பிரமவித்து அநுபவிப்பன். [விவகாரம் இல்லை ஆதலாலும் பிரவிருத்தியும் இல்லாததாலும்] வரியானும் வரனும் மற்றை வரிட்டனும் சுகமாய் வாழ்வார்.
--
ஜகத்தில் உயிர்களுக்கு மற்ற விருப்பம் நீங்கி மோட்ச விருப்பம் வருதல் அரிது; வரினும் கர்ம சாத்திரம் முதலியனவற்றை விட்டு வேதாந்த சாத்திர விருப்பம் வருதல் அரிது; வரினும் அதில் சொன்னதை அநுசந்தானம் செய்தல் அரிது; செய்யினும் சுகாநுபவம் கிடைத்தல் மிக அரிது (ஆகவே அரிதாகும் இவர்கள்...) இவர்கள் நானா ரூபமாய் இருப்பினும் எல்லா நதிகளும் சமுத்திரத்தில் ஐக்கியமாவது போல மோட்சத்தில் ஒரே தன்மை உடையவராவர். நித்திரையோடு வழி செல்வோனுக்கு வழியில் உள்ள கல் முள் இவற்றால் நினைவுண்டாகி அச்சுகத்துக்கு கேடு உண்டாவது போல் பிராரத்தினால் வரும் தொழில்களால் பிரவிருத்தி உண்டாகி தன் ஆனந்தத்துக்கு விக்கினமுண்டாகி பிரமவித்து துன்பம் அனுபவிப்பான்.