Pages

Wednesday, February 23, 2022

#ஶ்ராத்தம் - 41 ஶ்ராத்தத்தின் புகழ்ச்சி

சிராத்தத்தை சுமந்து புகழ்கிறார். சிராத்தத்தை விட நன்மையை செய்யும் காரியம் வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் எந்தவித முயற்சி செய்தாவது சிராத்தத்தை செய்ய வேண்டும்.
தேவலர்: சிராத்தத்தை செய்பவன் நோய் நொடி இல்லாமல் நெடுநாள் வாழ்வான். புத்திரன் பேரன் ஆகியவர்களை உடையவன் ஆவான். செல்வத்தை விரும்பினால் செல்வம் உடையவனாகவும் ஆவான். பரலோகத்தில் அதிக மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பலவித சிறந்த உலகங்களையும் அதிகமான யஷஸ்ஸையும் அடைவான்.
எமன் என்பவர் சொல்லுவது: யார் பித்ருக்களையும் தேவர்களையும் அக்னி உள்ள பிராமணர்களையும் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லாப் பிராணிகளுக்கும் உள்ளே இருக்கிற விஷ்ணுவையே பூஜிக்கிறார்கள்.
சிராத்தத்தை செய்யாவிடில் தோஷம் இருக்கிறது. அந்த இடத்தில் புத்திரர்கள் பிறப்பதில்லை; மனிதர்கள் நோயற்று இருப்பதில்லை; நெடுநாள் வாழ்வதும் இல்லை; நன்மையும் அடைவதில்லை.
மார்க்கண்டேயர் சொல்லுவது: அநியாயமான வழியில் சம்பாதித்த திரவியங்களால் சிராத்தத்தை செய்கின்றனரோ அந்த சிராத்தத்தால் சண்டாளர்களும் புல்கசர்களும் திருப்தி அடைகின்றனர். பித்ருக்கள் திருப்தி அடைவதில்லை.
யாக்ஞ்வல்கியர்: வஸுக்கள் ருத்ரர்கள் ஆதித்யர்கள் என்பவர் சிராத்த தேவதைகளான பித்ருக்கள் ஆவார், அவர்கள் சிராத்தத்தினால் திருப்தி செய்யப்பட்டால் அவர்கள் மனிதர்களின் பித்ருக்களை திருப்தி செய்கின்றனர். இப்படி திருப்தியடைந்த பித்ருக்கள் ஆயுசு தனம் வித்யை சுவர்கம் மோக்ஷம் சுகங்கள் ராஜ்யம் ஆகியவற்றை கொடுக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு சக்தி உள்ளது.
எப்படி வழிதவறி போன கன்று பல பசு மாடுகள் இருக்கும்போது தன் தாயான பசுவையே அடைகிறதோ அதுபோல சிராத்தத்தில் கொடுத்த அன்னத்தை மந்திரமானது பித்ருக்களை அடைவிக்கிறது என்று வியாசர் சொல்லுகிறார்.
மத்ஸ்யர் சொல்லுவது: நாமம் கோத்திரம் ஆகியவை ஹவ்ய கவ்யங்களை பித்ருக்களுக்கு கொண்டு சேர்ப்பவை. நமது பித்ருக்கள் வேறு ஜென்மம் எடுத்து இருக்கலாம். அந்தந்த ஜன்மாவுக்கு தகுந்தாற்போல ஆகாரத்தை அடைத்து அந்தப் பிராணிகளை திருப்தி செய்கின்றன. நல்ல கர்மங்களைச் செய்து தெய்வத்தன்மை அடைந்து இருந்தால் அவனுக்கு அது அமிர்தமாக ஆகும். பசுவாகப் பிறந்திருந்தால் அது புல்லாக ஆகும். பாம்பாக பிறந்திருந்தால் காற்றாகி போய் சேரும். யக்‌ஷனாக பிறந்திருந்தால் அது பானமாக ஆகிறது. கழுகு பிறந்திருந்தால், அசுரர்களாக பிறந்திருந்தால் அது மாம்சமாக ஆகிறது. பித்ரு இன்னும் பிரேதம் ஆகவே இருந்தால் அது இரத்தம் கலந்த ஜலம் ஆகிறது. மனிதனாக பிறந்து இருந்தாலும் அது பலவித சுகத்தை உண்டாக்கும் அன்ன பானம் முதலியதாய் ஆகிறது.
இப்படிப்பட்ட சிராத்தத்தை செய்ய வேண்டியவர்கள் தவறாது செய்ய வேண்டும் என்று வேண்டுகிறோம்.
இன்னும் சமையல் சமாசாரங்களும் மற்ற ஸுத்திரக்காரர் விஷயமும் பாக்கி இருக்கிறது.
தந்தையின் ஆப்த்திகம் இந்த வாரம் வருவதால் அடுத்த வாரம் தொடரலாம்.


Tuesday, February 22, 2022

ஶ்ராத்தம் - 40 முடிவு, பரேஹணி தர்ப்பணம்

வைஶ்வதேவம் செய்யும் புண்ணியவான் சிராத்தம் முடிந்து செய்யலாம். ஆனால் அதற்காக தனியாக பாகம் செய்து செய்ய வேண்டும்.
சிராத்தம் செய்து முடித்து சேஷத்தை கர்த்தா சாப்பிடாவிட்டால் விஶ்வேதேவர்கள் ஹவிஸை ஏற்பதில்லை. கவ்யங்களை பித்ருக்களும் எடுத்துக்கொள்வதில்லை. ஆகவே அவசியம் பித்ரு சேஷத்தை சாப்பிட வேண்டும். ஏகாதசி விரதம் இதனால் கெட்டுப் போகாது. கர்த்தா நீங்கலாக மற்றவர்களுக்கு கெட்டுப் போகும் என்று தோன்றினால் குறைந்தது முகர்ந்து பார்க்க வேண்டும். பழம் காய்கறிகள் வியஞ்ஜனங்கள் பால் தயிர் நெய் தேன் இவற்றுக்கு பித்ரு சேஷம் என்ற தோஷம் இல்லை. மிகுந்து போனதை யாரும் சாப்பிடலாம்.
ஒருவேளை பசி இல்லை என்றால் கூட எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிட வேண்டும்.
அடுத்து இந்த சிராத்த தினத்தில் சிரார்த்தம் செய்தவன் சிராத்தம் உண்டவன் ஆகியோருக்கான நியமங்களை பார்க்கலாம். இவர்கள் அன்று இரவு முழுவதும் பிரம்மச்சர்யத்துடன் இருக்க வேண்டும். மீண்டும் புசிப்பது, வழி நடப்பது, வாகனத்தில் ஏறுவது, தேகப்பயிற்சி செய்வது, ஸ்த்ரீ சங்கமம் இவற்றையெல்லாம் செய்யக்கூடாது. வேதம் சொல்லுவது, பகலில் தூங்குவது, வேறு யாரிடமும் தானம் வாங்குவது, பாரம் சுமப்பது ஆகியவற்றையும் செய்யக்கூடாது .
ஶ்ராத்தம் உண்டவன் பத்து காயத்ரியால் அபிமந்த்ரணம் செய்த நீரை குடிக்க வேண்டும். ஹோமம் செய்வது பிறர் மூலமாக. அப்படி யாரும் கிடைக்கவில்லை என்றால் தானே செய்யலாம். சந்தியா உபாசனை ஜெபங்கள் ஆகியவற்றை செய்ய தடையில்லை.
கடைசியாக பரேஹணி தர்ப்பணம்.
இந்த தர்ப்பணம் நடக்காமல் சிராத்தம் பூர்த்தி ஆவது இல்லை என்பதால் கர்த்தா இடையில் பிராமணர்கள் அல்லாதவருடன் பேசக்கூடாது. முடிந்தவரை மௌனமாகவே இருந்து விட வேண்டும். அடுத்த நாள் விடிகாலையில் சூரியன் உதயமாகும் முன்னர் இதை செய்ய வேண்டும். ஹிந்துக்கள் கணக்குப்படி சூரியன் உதயமானால்தான் அடுத்த நாள் என்பது ஆரம்பிக்கிறது. தேவையானால் மலஜலம் கழித்து, கை கால் முகம் அலம்பி துடைத்துக்கொண்டு ஆசமனம் செய்து பரேஹனி தர்ப்பணத்தை ஆரம்பிக்க வேண்டும். (வேறு புத்தகத்தில் ஸ்னானம் சொல்லி இருக்கிறது) இது அமாவாசையில் தர்ப்பணம் போலவேதான். கூர்ச்சம் உண்டு. பித்ரு ஆவாஹனம் உண்டு. ஆனால் யாருடைய ஸ்ரார்த்தமோ அந்த வர்க்கத்தை மட்டுமே ஆவாஹனம் செய்ய வேண்டும். அப்பாவுக்கு சிரார்த்தம் ஆனால் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ என்று மட்டும் ஆவாஹனம். அதேபோல அம்மாவுக்கான ஸ்ராத்தம் ஆனால் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹி என்று மட்டும் ஆவாஹனம். அமாவாசை தர்ப்பணம் போலவே செய்து முடிக்க வேண்டும். தர்ப்பங்களை பிரித்து எறிந்து ஆசமனம் செய்தபிறகு பல் துலக்குவது போன்ற தினசரி வேலைகளை ஆரம்பிக்கலாம்.
இத்துடன் ஶ்ராத்தப்பிரயோகம் முடிகிறது.

Saturday, February 19, 2022

#ஶ்ராத்தம் - 39 முடித்து வைப்பது.
 

இந்த ஸ்ராத்தத்திற்காக ஸ்நானம் செய்தோம் இல்லையா? அப்போது ஈர வஸ்திரத்தை பிழியாமல் வைத்திருந்தோம். அதை மந்திரம் சொல்லி இப்போதுதான் பிழிய வேண்டும். பிறகு பூணூலை வலம் செய்து கொண்டு ஆசமனம் செய்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு பிரம்ம யக்ஞம் செய்ய வேண்டும். ஸ்ராத்தத்துக்கான அங்கமாக தர்ப்பணம் இருக்கிறது. அது பரேஹணி தர்ப்பணம் என்று சொல்லப்படும். அதை நியாயமாக அடுத்த நாள் விடிகாலை செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லையானால் சிரார்த்தம் பூர்த்தி ஆவது இல்லை. ஆனால் பழக்கத்தில் உடனேயே செய்து விட சொல்கிறார்கள். (இல்லையானால் விடி காலை ஒரு முறை செய்து வைக்க வாத்தியார் வர வேண்டும் என்பதாலோ என்னவோ!) அப்படி செய்வதாக இருந்தால் அதை செய்துவிட்டு பிரம்ம யக்ஞம் செய்ய வேண்டும். பிறகு வீட்டு பூஜை ஆகியவற்றை சுருக்கமாக செய்து உறவினருடன் புசிக்க போகலாம். வந்தவர்களும் வாத்தியார் நமது பங்காளியாக இல்லாத பட்சத்தில் அவர்கள் நம் வீட்டிலேயே சாப்பிடுவதாக இருந்தால் அவர்களுக்கு தனியாகத்தான் சமையல் செய்ய வேண்டும். ஶ்ராதத்துக்காக சமைத்ததை அவர்கள் சாப்பிடுவதற்கு இல்லை,
இந்த பிண்டங்களை திரட்டி பிறகு என்ன செய்வது என்று கேள்வி இருக்கிறது. அவற்றை எருதுகளுக்கு ஆடுகளுக்கு கொடுத்துவிடலாம். பிராமணனும் பசுவும் கூட அதை சாப்பிடலாம். தீர்த்த சிராத்தமாக இருந்தால் அதை நீரில் நின்று கொண்டு தெற்கு நோக்கி ஆகாயத்தில் எறிய வேண்டும். இதெல்லாம் இப்போது முடியவில்லை என்பதால் பூமியில் புதைத்து விடுகிறார்கள்.
இடவசதி இருக்குமானால் பிராமணர்கள் சாப்பிட்ட இடத்தை பகல் முழுவதும் சுத்தி செய்ய கூடாது. முடிந்ததும் செய்யலாம். இடவசதி இல்லாத பட்சத்தில்- அப்படி தான் அதிகமாக இருக்கும்- பிராமணர்கள் இருக்கும் போது சுத்தி செய்யக்கூடாது. அவர்களை வழி அனுப்பிவிட்டு செய்யலாம். ஸ்வஸ்தி வாசனத்துக்கு முன் இலைகளை அசைக்க வேண்டும் என்பதை ஏற்கனவே பார்த்துவிட்டோம்.
இந்த நிலையில் இலைகளை எடுத்து சுத்தம் செய்யும்போது அவற்றைக்கொண்டு போய் நாய் முதலியன பூமியை தோண்டி அணுகாத அளவிற்கு பூமியைத் தோண்டி புதைக்க வேண்டும். மண்ணால் மூட வேண்டும். இவற்றில் இருக்கும் மிகுந்த உணவை சேர்த்தே புதைக்க வேண்டும். வீணாக போகிறது என்று நினைத்து யாருக்கும் கொடுத்து விடக்கூடாது. பிண்டங்களை கொடுக்கலாம் என்று சொன்ன பசு எருது ஆடுகள் ஆகியவற்றுக்கு கூட இதை கொடுக்கக்கூடாது.


 

ஶ்ராத்தம் - 38 -பிண்ட ப்ரதானம் -2
 

இந்த பிண்டங்களை வைத்திருந்த பாத்திரத்தில் சிறிது அன்னம் உதிரியாக இருக்கும். அவற்றை கர்த்தா ஒரு கவளத்துக்கு  குறையாமல் சாப்பிடலாம். பொதுவாக முகர்ந்து பார்த்து விட்டு விடுங்கள் என்று வாத்தியார் சொல்கிறார். சாப்பிடுவதானால் பவித்ரத்தை கழட்டி காதில் வைத்துக் கொண்டு சாப்பிட்டு விட்டு கை அலம்பி ஆசமனம் செய்ய வேண்டும். பிள்ளை இல்லாதவர்கள், அதற்கு விருப்பம் உள்ளவர்களுக்கு பிதாமஹருக்கு வைத்த பிண்டத்தை பத்னிக்கு கொடுக்க வேண்டும். அப்போது அவர் பூணூலை மாலையாக அணிந்து இருக்க வேண்டும். இதற்கு மந்திரம் ‘அபாந்த் வௌஷதீனாம்…’ என இருக்கிறதுபொருள்: ‘ஜலம் ஓஷதிகளிவற்றின் ரஸமான இந்த பிண்டத்தை பத்னி சாப்பிடும்படி செய்கிறேன். பிரம்மா கர்ப்பத்தை உண்டாக்கட்டும்’. அவளும் கிழக்கு முகமாக உட்கார்ந்து சத்புத்திரன் உண்டாவான் என்று நினைத்து ‘ஆதத்த’ என்ற மந்திரம் சொல்லி அதை உட்கொள்ள வேண்டும். (நித்தியனான இறைவன் தாமரை மாலை அணிந்த குமாரனை உண்டு பண்ணியது போல பித்ருக்கள் குழந்தையை உண்டு பண்ணட்டும்). இக்காலத்தில் பிள்ளை பேறு இல்லாமல் பலரும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த பிரயோகம் தெரியாமல் இருக்கிறது. பிறகு கர்த்தா பூணூலை இடம் செய்து கொண்டு பிண்ட பித்ரு தேவதைகளை வணங்கி பிரணவத்தை சொல்லி (மற்ற) எல்லா பிண்டங்களையும் தொட வேண்டும். பிறகு எல்லா பிண்ட பித்ரு தேவதைகளையும் அவர்களது இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு இந்த பிண்டங்களை இரண்டிரண்டாக இரண்டு கைகளாலும் மறித்து முதலில் நடு பிண்டங்களையும் பின் தெற்கிலும் கடைசியாக வடக்கிலும் எடுத்து வேறு பாத்திரத்தில் வைக்க வேண்டும். இந்த பிண்டத்திற்கு அடியிலிருந்த இந்த தர்ப்பங்களை எடுத்து எள்ளும் ஜலமும் எடுத்து ‘ஏஷாம் ந மாதா’  என்ற மந்திரம் சொல்லி - ஆமாம் அமாவாசை தர்ப்பணத்தில் வரும் அதேதான் - பித்ரு தீர்த்தமாக கீழே விட்டு தர்ப்பைகளை போட்டு விட வேண்டும். பிறகு பூணூலை நேர் செய்து கொண்டு ஆசமனம் செய்து, ஔபாசன அக்னியிலிருந்து பஸ்மா எடுத்து இட்டுக் கொள்ளலாம். துளசி தீர்த்தம் அக்ஷதை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ‘காயேன வாசா’ சொல்லி எல்லாவற்றையும் பிரம்மார்ப்பணம் செய்துவிட வேண்டும். பிறகு யாரும் உண்ணும் காலத்தில் ஜபம் செய்து இருந்தால் அவர்களுக்கும் நடத்தி வைத்த வாத்தியாருக்கும் தக்க சம்பாவனை தாம்பூலத்துடன் கொடுத்து வணங்க வேண்டும்.


Tuesday, February 15, 2022

ஶ்ராத்தம் - 37 -பிண்ட ப்ரதானம்
 

 அடுத்ததாக பிண்ட பிரதானம்இதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும்பிறகு திரும்பி இடது கால் முட்டி விட்டு தெற்கு நுனியாக இரண்டு வரிசை கிழக்கு மேற்காக தர்ப்பங்களை  பரப்ப வேண்டும்முன்னே ஹோமம் முடிந்து மிகுந்தது சிறிது பிராமணர்களுக்கு போட்டுவிட்டு மீதி வைத்திருக்கும் அன்னத்தில் ஆறு பிண்டங்களை பிடிக்க வேண்டும்.

மார்ஜயந்தாம் மம பிதரஹ, மார்ஜயந்தாம் மம பிதாமஹஹ, மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹஹ என்று சொல்லி கிழக்கு தர்ப்பங்களில் வடக்கில் ஆரம்பித்து எள்ளும் நீரும் இறைக்க வேண்டும். பின் மேற்கே  அதே போல 3 இடங்களில் மார்ஜயந்தாம் மம மாதரஹ, மார்ஜயந்தாம் மம பிதாமஹ்யஹ, மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹ்யஹ என்று சொல்லி தர்ப்பங்களில்  எள்ளும் நீரும் இறைக்க வேண்டும்.(இதற்கெல்லாம் ப்ராசீனாவீதி, பித்ரு தீர்த்தம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை அல்லவா? ) 

ஒவ்வொரு பிண்டமாய் எடுத்து ‘ஏதத்தேதத’  என்று சொல்லி ஓவ்வொரு பித்ரு பெயரையும் சொல்லி கையை மறித்து வடக்கிலிருந்து தெற்காக தந்தை வர்க்கத்துக்கு முதலிலும் பிறகு தாய் வர்க்கத்திற்கு இரண்டாவதாகவும்  பிண்டங்களை வைக்க வேண்டும்ஒவ்வொரு பிண்டத்தையும் வைத்தபின் அதற்கு மேற்கே சிறிது உதிரி அன்னத்தை வைக்க வேண்டும் இதை வைக்கும் போது ‘யே சத்வாமனு’ என்று சொல்ல  வேண்டும்.  (அதாவது ‘யே ச த்வாம் அனு உங்களை சார்ந்தவர்களுக்கு என்று பொருள்). பிறகு மந்திரங்கள் கூறி உபஸ்தானம் செய்ய வேண்டும். ‘பித்ருக்களே, உங்களை அனுசரித்து இங்கே வந்த மற்ற பித்ருக்களும் எங்களை நாடிவந்து ஹவிஸை வேண்டுகின்றவர்களும் அதேபோல மாத்ரு வர்க்கத்தை சேர்ந்தவர்களும் இந்த அன்ன பிண்டத்தை பெற வேண்டும். இரண்டு வர்க்கத்தினரும் திருப்தி அடைய வேண்டும்’ என்று கூறுவதுடன் பல முறை ‘திருப்தி அடையுங்கள்’ என்று வேண்டுகிறோம்.

இப்படியாக சிராத்தம் செய்வது செய்யப்பட்டவருக்கு மட்டும் இல்லாமல் அவரை சார்ந்த பலருக்கும் பயனாகிறது என்று இந்த மந்திரம் காட்டுகிறது. அர்க்கியத்துக்கு சேர்த்த தீர்த்தங்களை ஒரே பாத்திரத்தில் ஊற்றி உள்ளங்கையால் மூடி எல்லா பிண்டங்களையும் மூன்று முறை அப்பிரதட்சணமாக பரிஷேசனம் செய்ய வேண்டும். ஹோமத்தில் உபயோகித்த சின்ன பெரிய இலைகள் நெய் பாத்திரம் மற்ற பாத்திரங்கள் ஆகிய அனைத்தையும் தெற்கு பக்கம் கவிழ்த்து வைத்து ‘திருப்யத திருப்யத திருப்யத’ என்று ஒன்பது முறை கூறி இலைகள் முதலானவற்றை இரண்டிரண்டாக பாத்திரங்களை நிமிர்த்தி வடக்கு பக்கம் வைக்க வேண்டும். பிறகு பிண்ட பித்ரு தேவதைகளுக்கு ஸ்ராத்தத்திற்காக செய்த வடை அதிரசம் இவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். தாம்பூலம் சமர்ப்பிக்க வேண்டும்.


Sunday, February 13, 2022

ஶ்ராத்தம் - 36 - போக்தாக்கள் விஷயம் பூர்த்தி
 

ஸ்வாதுஷகும் ஸதஹ’  என்ற மந்திரத்துக்கு பொருள்  நீளமானது. ஆகவே இங்கே அத்தனையும் சொல்லவில்லை.

 பிறகு கிழக்கே பார்த்து உப வீதியாக நின்று கொண்டு ‘அஷ்டாவஷ்டா’ என்ற மந்திரம் சொல்ல வேண்டும். இது கருட  சயனம் என்னும் யாகத்தில் வரும் மந்திரம். ஆறு ருதுக்களும் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் இன்பத்தை தருகின்றன என்ற பொருளுடைய இதை சொல்லி பொதுவாக விஸ்வே தேவர்களையும் தேவர்களையும் சந்தோஷப் படுத்தும் என்று பிரார்த்தனை.

 வேதம் தெரிந்த அந்தணர்கள் போக்தாக்களாக இருந்தால் ‘அக்னியாயுஷ்மான் * ப்ரதிஷ்டித்யை’ என்ற மந்திரம் சொல்லி மங்கல அக்ஷதை தர கர்த்தா அதை தன் தலையை போட்டுக்கொண்டு நமஸ்காரம் செய்ய வேண்டும். பிறகு தெரிந்தால் கர்த்தா பிரார்த்தனை செய்வார். வழக்கமாக கர்தாவுக்காக வாத்தியார் ‘ஸ்வஸ்தி மந்த்ராஹா’ என்ற மந்திரம் சொல்லி வாழ்த்தும் படி பிராமணர்களிடம் கேட்க அவர்களும் ‘எஜமானன் குடும்பத்துடன் வேதம் சொன்ன தீர்க்க ஆயுசுடன் இருக்கட்டும்’ என்பதுபோல ஆசீர்வாதங்கள் செய்வார்கள். பிறகு ‘நான் (அல்லது எஜமானன்) செய்த இந்த சிராத்தத்தால் என் (அவரது) பித்ருக்கள் குறைவில்லாத திருப்தியுடன் இருக்கட்டும்; கயா ஸ்ராத்த பலன் ஏற்படட்டும்’ என்று வேண்ட அவர்களும் அப்படியே ஆகட்டும் என்று சொல்வார்கள்.

 கடைசியாக பூணூலை இடம் செய்துகொண்டு பித்ரு பிராமணரை ‘உத்திஷ்டத’ என்று சொல்லி தர்ப்பத்தைக் கொடுத்து எழுப்பிவிட்டு அதேபோல் விச்வே தேவருக்கும் விஷ்ணுவுக்கும் உபவீதியாக தர்ப்பத்தைக் கொடுத்து எழுப்பி விட வேண்டும்.

 பிறகு கர்த்தா கிழக்கு அல்லது வடக்கு நுனியாக தன் மேல் வஸ்திரத்தை கீழே போட போக்தாக்கள் அதை மிதித்துக்கொண்டு கடந்து செல்வார்கள். பின் ‘வாஜே வாஜே’ என்ற மந்திரம் சொல்லி பிரதட்சிணம் செய்து ‘ஹவிஶ் ஶோபனம்’  என்று சொல்ல அவர்கள் ‘ஶோபனம் ஹவிஹி’ என்பார்கள் . பிறகு அவர்களிடம் ‘வெறும் காய்கறிகள் கீரைகளை தந்து உயர்ந்த ஆகாரத்தை தராமல் கஷ்டப்படுத்தி விட்டேன். அதை மனதில் நினைத்துக் கொள்ளாமல் மறந்து மன்னிக்க வேண்டும்’  என்று அவர்களை உபசாரமாக சொல்லி சில அடிகள் வாசல் வரை சென்று அவர்களை வழியனுப்ப வேண்டும்.


Friday, February 11, 2022

ஶ்ராத்தம் - 35 - திருப்தி கேட்டல்
 

விஸ்வேதேவரிடம் கையில் சிறிது நீர் விட்டு ‘இயம் வஸ் த்ருப்திஹி’ என்று சொல்லி, ‘ரோசதே?’ என்று கேட்க வேண்டும். ‘ஸுத்ருʼப்தி꞉’ என்பார். ‘ப்ரீயந்தாம்’ என்று கேட்க ‘ப்ரீயந்தாம் விஶ்வே தே³வா꞉’ என்பார்.

அதே போல பித்ருக்களிடம் நீர் விட்டு ‘இயம் வஸ் த்ருப்திஹி’ என்று சொல்லி,  ‘ஸ்வதி³தம்?’ என்று கேட்க வேண்டும். ‘ஸுத்ருʼப்தி꞉’ என்பர். ‘ப்ரீயந்தாம்’ என்று கேட்க ‘ப்ரீயந்தாம் பிதர꞉’ என்பர். ‘த்ருப்தாஸ்த’ என்று கேட்க ‘த்ருப்தாஸ்மஹ’ என்பர்.

மஹா விஷ்ணுவிடம் விஸ்வேதேவர் போலவே. ப்ரீயதாம் மஹாவிஷ்ணு  என்று பதில் கொடுக்க வேண்டும்.  ‘த்ருப்தோஸி’ என்று கேட்க ‘த்ருப்தோஸ்மி’ என்பார்.

பின் போக்தாக்கள் அனைவருக்கும் தாம்பூலம் தக்ஷிணை தர வேண்டும். பின்னர் சுருக்கமாக அர்ச்சித்து  குடும்பத்துடன் இவர்களை ப்ரதக்‌ஷிண நமஸ்காரம் செய்ய வேண்டும். பிறகு அஸ்மின் திவஸே (இன்று) என்று சொல்லி  கோத்திரம் ஶர்மா எல்லாம் சொல்லி பார்வண விதானப்படி  என்னால் செய்யப்பட்ட  ‘என் தந்தையின்/ தாயின்வருடாந்திர சிராத்தத்தை, இன்ன விதமாக என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விதத்தில் என்னால் முடிந்த அளவு செய்திருக்கிறேன். இதற்கு ‘கயாவில் சிராத்தம் செய்த பலன் கிடைக்கட்டும். பித்ருக்களுக்கு குறைவில்லாத திருப்தி உண்டாகும் படியும் இருக்கட்டும்’ என்று தாங்கள் அனுக்கிரகம் செய்ய வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ள வேண்டும். அவர்களும் அப்படியே இருக்கட்டும் என்று  சொல்லுவார்கள். பிறகு  மிகுந்த அன்னத்தை என்ன செய்வது -அன்னஶேஷைகிம்ʼ க்ரியதாம் என்று கேட்க  உங்களுக்கு இஷ்டமான நபர்களுடன் சேர்ந்து நீங்கள் உண்ணுங்கள் - இஷ்டைஸஹோபபு⁴ஜ்யதாம்  என்று அவர்கள் சொல்வார்கள். (இப்படிச் சொன்னாலும் பங்காளிகள்தான் உண்ண வேண்டும்). இதற்குப் பின் கர்த்தா போய் பிராமணர்கள் சாப்பிட்ட இலைகளை சற்று அசைக்க வேண்டும். இதன் பின்னரே இல்லத்தரசி இலைகளை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யலாம்.

 அடுத்து பிரார்த்தனை வருகிறது. ‘தாதாரோ’ என்ற மந்திரம்இதன் பொருள்: ‘நிறைய தானம் அளிப்பவர் விருத்தி ஆகட்டும். வேதமும் சந்ததியும் வளரட்டும். சிரத்தை எங்களை விட்டு அகல கூடாது. தானம் செய்வதற்கு எங்களுக்கு நிறைய பொருள் உண்டாகட்டும். நிறைய அன்னம் கிடைக்கட்டும். அதிதிகளும் நிறைய  வரவேண்டும். எங்களிடம் யாசிப்பவர்கள் நிறைய வரட்டும். நாங்கள் ஒருவரிடமும் யாசிக்கக்கூடாது.’  இப்படி கேட்க ‘எங்களுக்கு உண்டாகட்டும்’ என்று சொன்னதை அனைத்தையும் ‘உங்களுக்கு உண்டாகட்டும்’ இன்று பிரதி வசனமாக கூறுவார்கள்.

 பிறகு கர்த்தா பூணூலை இடமாக மற்றிக்கொண்டு ‘ஓம் ஸ்வதா’  என்று சொல்ல பித்ரு பிராமணர் ‘அஸ்து ஸ்வதா’  என்று சொல்லுவார். பிறகு தெற்கு முகமாக நின்று கொண்டு மந்திரம் கூற வேண்டும். ஆரம்பத்தில் மந்திரம் கூறி பித்ருக்களை அழைத்தோம் இல்லையா? அதே போல இப்போது மந்திரம் கூறி அவர்களை அனுப்பி வைக்கிறோம்.


Wednesday, February 9, 2022

ஶ்ராத்தம் - 34 - உண்ட பின் -விகிரான்னம், வாயஸ பிண்டம்
கிழக்கு பார்த்து உண்ட விஸ்வேதேவர் எதிரில் மண்டியிட்டு தெற்கே ஆரம்பித்து வடக்கே முடியும்படி நீரால் ஒரு கோடு போல போட வேண்டும். இதற்கு கிண்டி இருந்தால் சௌகரியம். ‘அஸோமபா’ என்னும் மந்திரம் சொல்லி அன்னத்தை இந்த நீர் மீது தெற்கிலிருந்து வடக்காக உதிர்க்க வேண்டும். இதன்மீது முன்போலவே நீர் விட வேண்டும். பிறகு பூணூலை இடம் மாற்றிக்கொண்டு பித்ரு இலை எதிரில் மண்டியிட்டு கிழக்கே ஆரம்பித்து மேற்கே முடியும்படி பித்ரு தீர்த்தத்தால் நீர் விட்டு அதன் மீது பித்ரு தீர்த்தம் விடுவது போல அன்னத்தை வைத்து ‘அஸம்ஸ்கிருத’ என்ற மந்திரம் சொல்ல வேண்டும். இதன் மீது கிழக்கிலிருந்து மேற்காக எள்ளும் ஜலமும் பித்ரு தீர்த்தத்தால் விட வேண்டும். பிறகு உபவீதியாக விஷ்ணு இலை எதிரில் மண்டியிட்டு விஸ்வ தேவர் போலவே இதை செய்ய வேண்டும். மந்திரம்: ‘அஸம்ஶயோ பவேத்’.

பிறகு பவித்ரத்தை காதில் வைத்துக்கொண்டு கை அலம்பி இரண்டு முறை ஆசமனம் செய்ய செய்து பவித்ரம் அணிந்து பூணூலை இடம் மாற்றிக்கொண்டு தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நடுவே பூமியில் எள்ளை தெளித்து அதன் மீது தெற்கு நுனியாக சில தர்பங்களை பரப்ப வேண்டும். இடதுகாலை முட்டியிட்டு பிண்டத்தை எடுத்து மந்திரம் சொல்லி வைக்க வேண்டும். (யே அக்னி தக்தா..) இதன் மீது எள்ளும் நீரும் விட வேண்டும். இது முடிந்த பிறகு போக்தாக்களுக்கு உணவை முடித்துவைக்க ‘அமிர்தாபிதானமசி’ என்று என்று அவரவருக்கு தகுந்தபடி அருகே சென்று கையில் தீர்த்தம் போட வேண்டும். பிறகு பூணூலை இடம் மாற்றிக்கொண்டு இந்த பிண்டத்தை எடுத்துப் போய் காக்கைக்கு வைக்க வேண்டும். பின்னர் கை அலம்பிக்கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும்.

அஸோமபா மந்திர அர்த்தம்: யக்ஞத்தில் பாகம் இல்லாத சோமயாகம் செய்யாத தேவர்களுக்கு விஸ்வே தேவர்கள் சம்பந்தம் உள்ள உதிரி அன்னத்தை கொடுக்கிறேன்.

அஸம்ஸ்கிருத: சம்ஸ்காரம் இல்லாமல் பிறந்தவர்களுக்கும் தியாகம் செய்த குலப்பெண்களுக்கும் பித்ரு சம்பந்தமான உதிரி அன்னத்தை கொடுக்கிறேன்.

அஸம்ஶயோ: மகாவிஷ்ணு அறிவற்ற மோக்ஷ சாதனமானவர் என்பதில் சந்தேகமில்லை. பித்ருக்களுக்கு விஷ்ணு சம்பந்தமான விகிரான்னம் உயர்ந்ததாகும்.

யே அக்னி தக்தா: எனது குலத்தில் பிறந்து அக்னியால் எரிக்கப்பட்டவர்களும் எரிக்கப்படாதவர்களுமான பித்ருக்கள் பூமியில் வைக்கப்பட்ட இந்தப் பிண்டத்தால் மகிழ்ச்சி அடைந்து சிறந்த கதியை அடையட்டும். விதிப்படி அக்னியில் எரிந்தவர் விதிப்படி அக்னி இன்றி தெரிந்தவர், நமது குலத்தில் பிறந்து இறந்தவர் இவர்களுக்கு இந்த பிண்டம்.

பிராமணர்கள் கை கால் அலம்பி கொண்டு வந்து ஆசமனம் செய்து அமர்ந்த பிறகு இன்னொரு முறை திருப்தியா என்று கேட்க வேண்டும்.


Monday, February 7, 2022

#ஶ்ராத்தம் - 33 - உண்ணும் முன்னும் பின்னும்
 

பின் போக்தாக்களுக்கு அவரவருக்கான பாணியில் பூணூலை மாற்றிக்கொண்டு ‘அம்ருதோபஸ்தரணமஸி’ என்று சொல்ல வேண்டும். பின் ப்ராசீனாவீதியாக சர்வத்ர அம்ருதம் பவது ‘அம்ருதோபஸ்தரணமஸி’ என்று சொல்ல வேண்டும்.

சாதாரணமாக நாம் பரிசேஷணம் செய்து பின் பஞ்ச ப்ராணன்களுக்கும் ‘ப்ராணாய ஸ்வாஹா’ என்று துவங்கி ப்ராணாக்னிஹோத்ரம் செய்கிறோம் இல்லையா? இங்கே அப்படி போக்தாக்கள் செய்வதில்லை. இதற்கு கர்த்தா மந்திரம் சொல்ல வேண்டும். (ஶ்ரத்தாயாம் ப்ராணே). அதே போல மந்திரம் முடிந்ததும் பூமியில் நீர் விட்டு, அதை தானே மார்பில் தொட்டு, கை அலம்ப வேண்டும். பின் ‘ஸ்வாமிகளே! என் சக்திக்கு ஏற்ப விஷ்ணு சம்பந்தமானதும் ராக்‌ஷசர்களை அகற்றுவதும் மற்றபடி பவித்ரமானதுமான மந்திரங்களையும் இதிஹாஸ புராணங்களையும் ப்ராம்ஹணர்கள் மூலம் நீங்கள் கேட்கும் படி செய்கிறேன். காலம் கடந்துவிட்டது. இரவு பசி எடுக்காதவாறு உங்களுக்கு பிரியமானதை மௌனமாக உண்ணுங்கள்’ என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இது வேத மந்திரமில்லை.

இதன் பின் உண்டு முடிக்கும் வரை அபிஶ்ரவணம் என்னும் வேத மந்திரங்களின் தொகுப்பை பாராயணம் செய்ய வேண்டும். அனேகமாக நடப்பதில்லை. சிரத்தை உள்ளவர் குறைந்த பக்‌ஷம் புருஷ சூக்தம், ஸஹஸ்ரசீர்ஷம் என்னும் அனுவாகம் ஆகியவற்றைச் சொல்லலாம். உண்டு முடிக்கும் தருவாயில் ‘அஹமஸ்மி’ என்னும் அன்ன சூக்தத்தை முடிந்தால் சொல்லலாம். இவை நீளமானவை. ஆதலால் பொருள் சொல்லவில்லை.

உண்டு முடித்ததும் விக்ரான்னத்தை ப்ராம்ஹணர் அருகில் வைக்க வேண்டும். அதாவது பரிமாறி மிகுதியான அன்னத்தில் ஒரு பிண்டம் பிடித்தும் உதிரி அன்னமாக கொஞ்சமும் ஒரு தட்டில் கொண்டுவந்து பூமியில் ஜலம் விட்டு அதன் மீது அதை வைக்க வேண்டும். வைத்துவிட்டு திருப்தி கேட்க வேண்டும். அதற்கு முன் பத்னி ‘சந்தேகத்திற்கு அன்னம் வேண்டுமா?’ என்று ஒரு முறை அன்னத்துடன் வந்து கேட்டு விடுவார். அவரிடம் ‘அன்னம் பானீயம்’ (அன்னமும் பானமும் போதுமா?) என்று கேட்க அவர் ‘ஸர்வம் ஸம்பூர்ணம்’ என்பார். ‘மதுவாதா’ என்னும் மந்திரம் சிலர் சொல்வர். பிறகு விஸ்வேதேவரை பார்த்து ‘மது மது சம்பன்னம்’ என்று கேட்க அவர் ‘ஸுசம்பன்னம்’ என்பார். ‘த்ருப்தாஸ்த்த’ என்று கேட்க ‘திருப்தாஸ்மஹ’ என்று சொல்வார்.

பிறகு பூணூலை இடம் செய்து கொண்டு பித்ரு பிராமணரை பார்த்து முன்போல அன்னம் பானீயம் கேட்டு ‘அக்‌ஷன்ன’ என்னும் மந்திரம் சொன்ன பின் ‘மது மது சம்பன்னம்’ என்று கேட்க அவர் ஸுசம்பன்னம் என்பார். த்ருப்தாஸ்த என்று கேட்க அவர் ‘த்ருப்தாஸ்மஹ’ என்பார்.

அடுத்து மகாவிஷ்ணுவிடம் உப வீதியாக இந்த மூன்றும் கேட்கப்படும். மதுவாதா என்னும் மந்திரம் சொல்லப்படும். முதலிரண்டு அதே கேள்விகள்- பதில்கள். மூன்றாவது கொஞ்சம் மாறும். விஷ்ணு ஒருவர்தான் என்பதால் இலக்கணப்படி த்ருப்தோஸ்தி - த்ருப்தோஸ்மி என்று மாறும்.