Pages

Friday, December 14, 2018

பறவையின் கீதம் - 82

இறைவனுடன் நான் நல்ல உறவு வைத்திருந்தேன். அவருடன் பேசுவேன். உதவி கேட்பேன். நன்றி சொல்லுவேன்.
ஆனால் எப்போதும் ஒரு சங்கடமான உணர்வு இருக்கும். அவர் தன்னை பார்க்கச்சொல்லுவதாக தோன்றும்... ஆனால் பார்க்க மாட்டேன். நான் பேசுவேன்; ஆனால் அவர் என்னை பார்ப்பதாக தோன்றினால் மறு பக்கம் முகத்தை திருப்பிக்கொள்ளுவேன்.
நான் இன்னும் வருந்தாத ஏதோ ஒரு பாபத்துக்காக என்னை அவர் குற்றம் சாட்டும் பார்வை பார்ப்பதாக தோன்றூம். அல்லது என்னிடம் அவருக்கு ஏதோ வேண்டும்... ஒரு கோரிக்கை.
ஒரு நாள் தைரியத்தை வர வழைத்துக்கொண்டு தலையை தூக்கி பார்த்துவிட்டேன். அங்கே குற்றச்சாட்டு இல்லை; கோரிக்கை இல்லை. அந்த கண்கள் நான் உன்னை நேசிக்கிறேன் என்று மட்டும் சொல்லின.
பீட்டர் போல நானும் வெளியே போய் அழுதேன்.

Thursday, December 13, 2018

பறவையின் கீதம் - 81
இதையும் முன்னேயே படித்திருப்பீர்கள்.
அங்கிள் டாம் -க்கு இதயம் கொஞ்சம் பலகீனம். அவருக்கு யாரோ தூரத்து உறவினர் ஒரு கோடி டாலர் எழுதி வெச்சுட்டு செத்துட்டாங்கன்னு குடும்பத்துக்கு செய்தி வந்தது. எல்லாருக்கும் ஒரே கவலை. இந்த செய்தியால டாமுக்கு ஸ்ட்ரோக் வந்துட்டா என்ன செய்யறது? சர்ச் பாதிரியை கூப்பிட்டு வந்து இந்த செய்தியை அவருக்கு மெதுவா அதிர்ச்சி இல்லாதபடிக்கு சொல்லச்சொன்னாங்க.
பாதிரியும் வந்ந்ந்து அது இதுன்னு எதோ பேசிட்டு மெதுவா "ஒரு வேளை உங்களுக்கு யாரும் ஒரு கோடி டாலர் எழுதி வெச்சுட்டு செத்துப்போயிட்டா அந்த ஒரு கோடி டாலரை என்ன செய்வீங்க?” என்று கேட்டார்.
"பாதிய சர்ச்சுக்கு கொடுத்துடுவேன் ஃபாதர்!” ன்னார் டாம்.
பாதிரியை ஸ்ட்ரோக்குக்காக ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணாங்க!

தொழிலதிபர் தன் தொழிலை முன்னேற்ற பாடுபட்டு ஸ்ட்ரோக் வந்தபோது அவருடைய சுயநலத்தையும் பேராசையையும் சுட்டிக்காட்ட முடிந்தது.  பாதிரி அதே போல 'கடவுளின் ராஜ்ஜியத்தை முன்னேற்றுவதில்' ஸ்ட்ரோக் வந்தபோது கொஞ்சம் நாசூக்கான தொழிலதிபர் கதையேதான் இது என்பதை காண முடியவில்லை. யாரை முன்னேற்றப்பார்க்கிறாய்? உன்னையா இல்லை கடவுளின் ராஜ்ஜியத்தையா? அதை யாரும் முன்னேற்ற வேண்டிய தேவை இல்லை. உன் பரபரப்பு உன்னை காட்டிக்கொடுக்கிறது இல்லையா?

Tuesday, December 11, 2018

பறவையின் கீதம் - 80

அபு ஹசன் புஜன்ஜா அரபி ஞானி சொல்கிறார்: பாவம் செய்யும் செயல் கூட அவ்வளவு கெட்டது இல்லை; அதைப்பற்றிய ஆசையும் நினைப்புமே இன்னும் மோசம். உடலாவது ஒரு கணத்துக்கு இன்பம் துய்க்கிறது. மனசு அதையே முடிவில்லாமல் போட்டு உருட்டிக்கொண்டு இருக்கிறது

நான் மற்றவர்களின் பாவங்களைப்பற்றி அசை போடுகையில் பாவம் செய்பவருக்கு அச்செயல் கொடுத்த கிளு கிளுப்பை விட அச்செயலைப்பற்றிய நினைப்பு எனக்கு அதிக கிளுகிளுப்பை கொடுக்கிறது என்று நினைக்கிறேன்.

Monday, December 10, 2018

பறவையின் கீதம் - 79

இரண்டு புத்த சாதுக்கள் மடாலயத்துக்கு திரும்பும் வழியில் நதிக்கரையில் ஒரு அழகிய பெண்மணியை கண்டார்கள். அவளும் நதியை கடந்து செல்ல விரும்பினாள். ஆனால் நதியில் ஆழம் அதிகமாக இருந்ததால் அவளுக்கு பயமாக இருந்தது. ஒரு சாது அவளை தன் தோளில் சுமந்து அக்கரை சேர்த்தார். அவளும் நன்றி சொல்லிவிட்டு தன் வழியே போய்விட்டாள்.

அந்த இன்னொரு சாதுவுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. "பெண்ணை நீ எப்படி தொடலாம்? அதுவும் தூக்கி கொண்டுபோய் விடலாம்? நமக்கு விதித்த கட்டுப்பாடுகளுக்கு இது விரோதமில்லையா? நீ சாது என்பதை மறந்துவிட்டாயா? மக்கள் என்ன நினைப்பார்கள்?" என்று ஆரம்பித்து இரண்டு மணி நேரம் தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார்.

இவர் மௌனமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார். ஒரு வழியாக திட்டு முடிந்ததும் மென்மையாக சொன்னார் "நண்பா! நான் அவளை நதிக்கரையிலேயே விட்டுவிட்டேன். நீ ஏன் இன்னும் சுமந்து கொண்டு இருக்கிறாய்!”

Thursday, December 6, 2018

பறவையின் கீதம் - 78

சாதி ஆஃப் ஷிராஃஜ் தன்னைப்பற்றி இப்படி ஒரு கதையை சொல்லுகிறார்.

நான் தெய்வ பக்தி நிறைந்த குழந்தையாக இருந்தேன், ப்ரார்த்தனைகளிலும், பக்தி செலுத்துவதிலும் நேரத்தை கழித்தேன். ஒரு முறை என் அப்பாவுடன் மடியில் புனித கொரானுடன் ப்ரார்த்தனைகளுக்காக கண் விழித்திருந்தேன். ப்ரார்த்தனை நடந்து கொண்டு இருந்தது. அறையில் இருந்த மற்றவர்கள் ஒவ்வொருவராக தூங்கிவிட்டார்கள். நான் அப்பாவிடம் சொன்னேன்: "பாருங்கள், எல்லார் தலையும் தொங்கிவிட்டது

ப்ரார்த்தனையை படிக்க யாருமே விழித்திருக்கவில்லை. இறந்தவர் போல கிடக்கிறார்கள்.”

என் அப்பா மென்மையாக சொன்னார். “என் அன்பு மகனே, மற்றவர்களை பழித்துக்கொண்டு இருப்பதை விட நீயும் தூங்கி இருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன்.”