Pages

Tuesday, August 31, 2010

ஸம்யமம்
  विषयवती वा प्रवृत्तिरुत्पन्ना स्थतिनिबन्धिनी ।।35।।
 விஷயவதீ வா ப்ரவ்ரு«த்திருத்பந்நா ஸ்த²திநிப³ந்தி⁴நீ || 35|| 


யோக சாஸ்திரங்களில் சொல்லிய விஷயங்களில் பிரவ்ருத்தியை உண்டான மனது தெளிந்த நிலைக்கு சாதனமாகிறது.

தாரணை, த்யானம், ஸமாதி மூன்றுக்குமே ஸம்யமம் எனப்பொதுப் பெயர். இவற்றை எவ்விடத்தில் வைத்து பயிற்சி செய்தால் என்ன பிரவ்ருத்தி (ஈடுபாடு) ஏற்படுகிறது என்பது இருக்கிறது. மூக்கின் நுனியில் சித்தத்தை வைத்து சம்யமம் செய்ய திவ்ய வாசனை அனுபவம் ஏற்படும்;  நாக்கின் நுனியில் வைக்க ருசி அனுபவம்; உள் மோவாய்க் கட்டையில் ரூபம். நாக்கின் நடுவில் தொடுதல்; நாக்கின் மூலத்தில் சப்தம். இப்படி ஒவ்வொரு இடத்தில் பிரவ்ருத்தி ஏற்பட்டு அங்கே சித்தம் நிலைபெறுகிறது.
சாஸ்திரங்கள் சொல்லும் வழியில் செல்ல சந்தேகங்கள் நீங்கும். சந்தேகமும் பயமும் நீங்க சாஸ்திரங்கள் உபதேசித்த விவேகம் –க்யாதி முதலியவற்றின் பலனில் நம்பிக்கை ஏற்படும். இந்த நம்பிக்கை அந்த வழியில் திடமான பிரவ்ருத்தியை உண்டாக்கும்.

வேறு உபாயங்களும் உண்டு.

Monday, August 30, 2010

தெளிவு...प्रच्छर्दनविधारणाभ्यां वा प्राणस्य ।।34।।
 ப்ரச்ச²ர்த³நவிதா⁴ரணாப்⁴யாம்° வா ப்ராணஸ்ய || 34|| 

பிராண வாயுவை, யோக சாஸ்திரத்தில் சொல்லியபடி (உள்ளே இருக்கும் காற்றை) வெளிவிடுதல், அல்லது உள்ளிழுத்து அடக்கி வைத்தல் (கும்பகம்) இவற்றாலாவது தெளிவு ஏற்படும்.
இங்கே ரேசகம் என்று சொல்லியிருந்தாலும் பூரகம், கும்பகம், ரேசகம் மூன்றும் அடங்கிய பிராணாயாமம் என்றே பொருள் கொள்ள வேண்டும் என பாஷ்யங்கள் சொல்கின்றன.
மனத்தெளிவுக்கு வேறு உபாயங்களும் உள்ளன.

Tuesday, August 24, 2010

மற்றவருடன் உறவு.....मैत्रीकरुणामुदितोपेक्षाणां सुखदुःखपुण्यापुण्यविषयाणां भावनातश्चित्तप्रसादनम् ।।33।।

மைத்ரீ கருணா முதி³தோபேக்ஷாணாம்° ஸுக² து³​:க² புண்யாபுண்ய விஷயாணாம்° பா⁴வநாதஶ் சித்த ப்ரஸாத³நம் || 33||

சுக துக்கமுள்ளவர்கள், புண்ய அபுண்யம் செய்பவர்கள் விஷயத்தில் முறையே சிநேகம், கருணை, தயை, உதாசீனம் ஆகியன கொள்ள சித்தத்தில் தெளிவு உண்டாகிறது.

சித்தத்தை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் அசூயை முதலான குணங்கள் அங்கே குடி ஏறி விடும். பின் அவ்விடத்தில் ஸமாதி உண்டாகாது.
அதற்கு என்ன வழி? பிறருக்கு துக்கத்தை தரக்கூடாது. முடிந்த வரை மற்றவர் துக்கத்தை போக்க வேண்டுமென சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். அப்படிச் செய்ய மற்றவருக்கு உபகாரம் செய்கிறோமோ இல்லையோ அபகாரம் செய்யாது இருப்போம்.

மற்றவருக்கு - சுகமாக இருப்பவரிடம் நட்பு வேண்டும். துக்கமுள்ளவரிடம் கருணை வேண்டும். புண்ய சீலர்களிடம் ப்ரீதி இருக்க வேண்டும். புண்யம் செய்யாதவரிடம் உதாசீனம் இருக்க வேண்டும். (அப்போதுதான் வெறுப்பு இல்லாதிருக்கும். எனக்கு மிகவும் பயனானது இது.)
இப்படி செய்ய ரஜோ தமோ குணங்கள் போய் சத்வம் பெருகும்.

Friday, August 20, 2010

பக்தி, வைராக்கியம் இல்லையெனில்???
तत्प्रतिषेधार्थमेकतत्त्वाभायासः ।।32।।
தத் ப்ரதிஷேதா⁴ர்த²மேகதத்த்வாபா⁴யாஸ​: || 32||

அந்த விக்கினங்களை தவிர்க்க ஏதாவது தத்துவம் ஒன்றில் மனதை நிறுத்தி த்யானம் செய்வதே.
சூத்திரம் 29 இல் ஈஸ்வர ப்ரணிதானம் விக்கினங்களை போக்கும் எனச்சொல்லப்பட்டது. அந்த திட பக்தி, வைராக்கியம் இல்லையெனில் என்ன செய்வது? ஏதேனும் ஒரு மூர்த்தியில் மனதை நிறுத்தி தாரணை, த்யானம் செய்து வர வேண்டும். வேறு வஸ்துவிடம் லயித்த மனது வியாதி முதலான துக்கங்களை உணராது.


Thursday, August 19, 2010

சித்தத்தின் சலன தன்மையுடன் உண்டாகின்றவை.दुःखदौर्मनस्याङ्गमेजयत्वश्वासप्रश्वासा विक्षेपसहभुवः ।।31।।

து³​:க² தௌ³ர் மநஸ்யாங்க³மே ஜயத் வஶ்வாஸப்ரஶ்வாஸா விக்ஷேப ஸஹபு⁴வ​: || 31||

துக்கம், (ஆத்யாத்மிக, ஆதி பௌதிக ஆதி ஸத்விக துன்பங்கள்.)
தௌர் மநஸ்ய =ஆவலுக்கு தடையேற்பட்ட காலத்தில் மனதில் உண்டாகும் கலக்கமும்.
அங்க³மே ஜயத்வ = சரீரத்தின் அவயங்களின் ஆட்டமும்
ஶ்வாஸ = இஷ்டமில்லாவிட்டாலும் வெளிக்காற்று உள் செல்லுதலும்
ப்ரஶ்வாஸா = இஷ்டமில்லாவிட்டாலும் உள் காற்று வெளி செல்லுதலும்
ஆகிய இந்த நான்கும் சித்தத்தின் சலன தன்மையுடன் உண்டாகின்றவை.
இந்த விக்கினங்களை தவிர்க்க நல்ல உபாயம் பிரணவம் முதலான மஹா மந்திர ஜபங்களும், இவற்றின் பொருளான பரமாத்மாவை மனதில் இருத்துவதும்தான்.

Wednesday, August 18, 2010

யோகாப்யாசத்துக்கு விக்கினங்கள்:व्याधिस्त्यानसंशयप्रमादाऽऽलस्याऽविरतिभ्रान्तिदर्शानाऽलब्धभूमिकत्वानवस्थितत्वानि चित्तविक्षेपास्तेऽन्तरायाः ।।30।।

வ்யாதி⁴ ஸ்த்யாந ஸம்°ஶய ப்ரமாதா³''லஸ்யா' விரதி ப்⁴ராந்தி த³ர்ஶாநா' லப்³த⁴ பூ⁴மிகத்வாநவஸ்தி² தத்வாநி சித்த விக்ஷேபாஸ்தே'ந்தராயா​: || 30||

யோகாப்யாசத்துக்கு விக்கினங்கள்:
வியாதி = வாதம், பித்தம், சிலேஷ்மம் என்ற தாதுக்களின் அன்னரசமான ரத்தத்தின் இந்திரியங்களுடைய இயற்கைக்கு மாறான நிலையும்,
ஸ்த்யான = கர்மம் செய்வதற்கு சித்தத்தின் நிலையும்
சம்சயம் = சந்தேகங்கள்
பிரமாத = யோகங்களை அனுஷ்டிக்காமல் இருப்பது
ஆலச்ய = சோம்பல், எதிலும் பிரவ்ருதி இல்லாமல் இருத்தல்.
அவிரதி = விஷயத்தில் ஆசை
பிராந்தி தர்சன = சாஸ்திரம் கூறியதை தவறாக புரிந்துகொள்ளுதல்.
அலப்த பூமிகத்வ = ஸமாதியின் கீழ் படியை அடையாமல் இருப்பதும்
அனவஸ்தி தத்வானி = கிட்டிய ஸமாதி நிலையில் சித்தம் நிலை பெறாமை.
சித்த விக்ஷேபா = மனத்தை அலைக்கழிக்கிற தோஷங்கள்
இவற்றில் எவை உண்டோ அவை யோகத்துக்கு விக்கினங்களாம் .

Tuesday, August 17, 2010

ப்ரணிதானத்தால்...
ततः प्रत्यक्चेतनाधिगमोऽप्यन्तरायाभावाश्च ।।29।।

தத​: ப்ரத்யக் சேதநாதி⁴ க³மோ'ப்யந்தராயா பா⁴வாஶ்ச || 29||

ஈஸ்வர ப்ரணிதானத்தால் தேகம் முதலானவற்றை விட வேறாக அறியப்படுகின்றவனும் சேதனனுமான ஜீவனுடைய உண்மையான அறிவும் உண்டாகிறது; வியாதி முதலான யோகாப்யாச தடைகளின் நிவிருத்தியும் உண்டாகிறது.

எந்த வஸ்துவை த்யானிக்கிறோமோ அதன் உண்மையான ஞானம் அல்லவா உண்டாக வேண்டும்? பரமாத்மாவை த்யானிக்க ஜீவனுக்கு தன் சொரூப ஞானம் எப்படி உண்டாயிற்று? ஜீவனும் ஈஸ்வரனும் ஒன்று இல்லையானாலும் யோக சித்தாந்தப்படி அவற்றின் சொரூபம் ஒன்றே. (அத்வைத சித்தாந்தத்தில் கூடஸ்தனும் பிரம்மமும் வேறில்லை என்பது போல)

Monday, August 16, 2010

ப்ரணிதானம்
तज्जपस्तदर्थभावनम् ।।28।।

தஜ்ஜபஸ்தத³ர்த² பா⁴வநம் || 28||

அந்த பிரணவத்தை ஜபிப்பது, அதன் பொருளான பரமாத்மாவை அடிக்கடி மனதில் இருத்தி த்யானிப்பது ப்ரணிதானம் எனப்படும்.

ஜபம் என்பதன் பொருள் மந்திரத்தின் அக்ஷரங்களை மனதில் வாங்கி மனோ விருத்தியை ஆவிருத்தி செய்வதே. அப்போது பிரணவத்தின் பொருளான பரம்பொருளையும் அடிக்கடி மனத்தால் த்யானித்து வர வேண்டும். இது ப்ரணிதானம். உபாம்சு ஜபம் எனவும் சொல்வர். இதற்கு முன் படி வாசிக ஜபம்.

Friday, August 13, 2010

ஈசன்....
स एषः पूर्वेषामपि गुरुः कालेनानवच्छेदात् ।।26।।

ஸ ஏஷ​: பூர்வேஷாமபி கு³ரு​: காலேநாநவச்சே²தா³த் || 26||

அந்த ஈஸ்வரன் ஆதியில் உண்டான பிரம்மா முதலானவர்களுக்கும் குருவாக இருக்கிறார். காலத்தால் ஆயுளின் அளவு கூறப்படாமல் இருக்கிறார்.

तस्य वाचकः प्रणवः ।।27।।

தஸ்ய வாசக​: ப்ரணவ​: || 27||

பிரணவமானது அவருக்கு வாசகமாகும். (பெயராகும்.)
பிரணவம் என்பது பகவானின் மங்களகரமான சுபத்தை செய்யும் குணத்தை குறிக்கும். எப்படி ஒரு குழந்தை தன்னை "அம்மா" என்று அழைப்பதால் அன்னை மகிழ்வாளோ அது போல பகவான் தன்னை குறிக்கும் பிரவணத்தை கூறி தன்னை உபாசிப்பவன் மீது சந்தோஷம் கொண்டு அவனுக்கு கைவல்யம் முதலான நன்மைகளை செய்கிறார்.


Thursday, August 12, 2010

ஈசன் -ஜீவன்तत्र निरतशयं सर्वज्ञ्यबीजम् ।।25।।

தத்ர நிரதஶயம் ° ஸர்வஜ்ஞ்ய பீ³ஜம் || 25||

எல்லாவற்றையும் அறிந்திருப்பதற்கு (ஞானத்திற்கு) காரணமான அறிவின் உயர்வு-தாழ்வு தன்மை ஈஸ்வரனிடத்தில் முடிவற்றதாகிறது. (நிரதிசயம்).
உலகத்திலே மக்கள் ஒருவரை விட ஒருவர் அறிவு அதிகமுள்ளவர் குறைவுள்ளவர் என்று உள்ளது. ஆனால் ஈஸ்வரனுடைய அறிவு எதனுடனும் ஒப்பிடமுடியாதது.
ஈஸ்வரன் சர்வக்ஞன், தயை உள்ளவன். அப்படியானால் ஜீவர்களை ஏற்றத்தாழ்வுடன் படைப்பானேன் என்று கேள்வி எழும். ஒரு குயவன் பானை செய்ய முக்கியம். மண்ணும் முக்கியம். குயவன் என்னத்தான் கெட்டிக்காரனாக இருந்தாலும் மண் நன்றாக இல்லையானால் பானை நன்றாக இராது. மண்ணை பிசையும் நீர் உப்பு நீராக இருந்தால் பானை சரியாக வராது. அது போல ஈஸ்வரன் சிருஷ்டிக்கு காரணம் ஆனாலும் அந்த அந்த ஜீவனின் முன் பிறவியில் சம்பாதித்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே பிறவியை தருவார். (இப்படி ஈஸ்வரன் சிருஷ்டிக்கு நிமித்த காரணம் மட்டுமே என்பர்.) பின்னே தயை எங்கே வந்தது என்றால் சாஸ்திரங்களை கொடுத்து இருக்கிறார். அதன் மூலம் வைராக்கியமும் தன்னிடம் பக்தியும் ஏற்பட்டு உபாசிக்கிறவர்களுக்கு பிரகிருதியின் பந்தத்தை நீக்கி கைவல்யம் அளிப்பார்.


Monday, August 9, 2010

ஈஶ்வரன்ईश्वरप्रणिधानाद्वा ।।23।।

ஈஶ்வர ப்ரணிதா⁴நாத்³வா || 23||

ஈஸ்வரனுடைய பக்தி விசேஷத்திலிருந்தோ [மிக விரைவில் ஸமாதி லாபம் உண்டாகிறது.]
முன்னே பார்த்தது எல்லாம் ஜீவனின் முயற்சியில் செய்தவை. இப்போது ஈஸ்வர பக்தியால் மிக விரைவில் ஸமாதி உண்டாகும் என சொல்லப்படுகிறது. இந்த வழியில் க்லேசங்கள் ஏதும் இரா. ஆகவே இது சுலபமாக சாத்தியமாகும்.

क्लेशकर्मविपाकाशयैरपरामृष्टः पुरुषविशेष ईश्वरः ।।24।।

க்லேஶ கர்ம விபாகாஶயைரபராம்ரு«ஷ்ட​: புருஷ விஶேஷ ஈஶ்வர​: || 24||

ஈஸ்வரனின் சொரூபம்: அவித்யை, அஸ்மிதை, ராகம், துவேஷம், அபிநிவேஷம் ஆகிய ஐந்தாலும்; தர்மம், அதர்மம் இவற்றாலும்; தர்ம பலன்களான ஜன்மம், ஆயுள், போகம் இவற்றாலும்; சித்தாரூடமான சம்ஸ்காரங்களாலும்; முக்காலத்திலும் சம்பந்தம் பெறாதவனும், ஜீவனை விட வேறானவனும் ஆனவன் ஈஸ்வரன். ஜீவன் என்ன முயற்சி செய்தாலும் ஈஸ்வரனாக முடியாது.

முக்காலத்திலும்ன்னு சொல்லி இருக்கு இல்லையா? அதனால ஒரு வேளை ஜீவன் ரொம்ப முன்னேறி ஈஸ்வரனுக்கு நிகரான சக்திகளை பெற்றாலும் ஈஸ்வரனாக முடியாது. பிரகிருதி சம்பந்தம் இல்லாம கைவல்ய நிலையிலே இருந்தாக்கூட ஒரு காலத்திலே க்லேசங்களோட இருந்ததால ஈசனாக முடியாது. பிரகிருதி லயமடைந்தாலும் வியவகாரிகங்களிலே (நடைமுறையிலே) பந்தம் இருக்கும்; தேவர்களும் மனிதர்களும் போல் போகம் அனுபவிக்கிறது தெரியும்; தாக்ஷ்ணிக பந்தம் இருக்கும். யோக சித்தாந்தப்படி கைவல்ய நிலை அடைந்தவர் முன்னரே இந்த பந்தங்களை அனுபவிச்சுட்டு அப்புறமே கைவல்ய நிலை அடைந்தவர். ஈஸ்வரனுக்கோ முக்காலங்களிலும் பந்தங்களில்லை.
ஜீவனுக்கு புருஷன் என்று பெயர். க்லேசங்கள் அந்தக்கரணத்தை சார்ந்தவை. இந்த அந்தக்கரணமே ஜீவனோட முக்கிய லக்ஷணம். ஆகவே ஜீவனுக்கு அந்தக்கரணத்தோட க்லேசங்களால உண்டாகும் சுக துக்கங்களுடைய சம்பந்தம் உண்டு. ஈஸ்வரனோ தன் சங்கல்பத்தாலேயே எதையும் சாதிக்க வல்லவன்.

Friday, August 6, 2010

வேகம்!तीव्रसंवेगानामासन्नः ।। 21||
தீவ்ர ஸம்°வேகா³நா மாஸந்ந​: ||21||

உபாயத்தை அனுஷ்டிப்பதில் தீவிர வேகமுள்ளவருக்கு ஸமாதி கிடைப்பது தாமதமற்றதாகிறது.

मृदुमध्याधिमात्रत्वात्ततोऽपि विशेषः ।।22।।
ம்ரு«து³ மத்⁴யாதி⁴ மாத்ரத்வாத்ததோ'பி விஶேஷ​: || 22||

உபாய அனுஷ்டானத்தில் தீவிர வேகத்திலும் உள்ள வேகமானது ம்ருது தீவ்ரம், மத்திய தீவ்ரம், அதி மாத்ர தீவ்ரம் என வகைப்படும். இதனால் ஸமாதியிலும் அதன் பலன் கிடைப்பதிலும் வேறுபாடு உண்டாகும்.
அடுத்து திடுதிப்பென்று ஒரு திருப்பம் வருகிறது!

Thursday, August 5, 2010

உபாய பிரத்யயம்श्रद्धावीर्यस्मृतिसमाधिप्रज्ञापूर्वक इतरेषाम् ।।20।।

ஶ்ரத்³தா⁴ வீர்ய ஸ்ம்ரு«தி ஸமாதி⁴ ப்ரஜ்ஞா பூர்வக இதரேஷாம் || 20||

உபாய பிரத்யயம்: விதேஹ லயர், பிரகிருதி லயர் ஆகியோரை விட வேறானவர்களுக்கு ஶ்ரத்தையும் அதனால் தாரணையும், அதனால் த்யானமும், அதனால் த்யானிக்கப்பட்டதின் சாக்ஷாத்காரத்தால் ஸமாதியும் இது வலுப்பட்டு ஸம்ப்ரக்ஞாத ஸமாதியும் நிகழ உபாயம் உண்டாகிறது. இந்த உபாயங்கள் வேண்டும் என்று குருவை அண்டுதலும், அவரால் உபதேசிக்கப்பட்டது இதற்கு அனுசரனையாக உள்ள யுக்திகள் – இவற்றை விஷயமாக கொண்ட சித்தத்தின் தெளிவே ஶ்ரத்தை ஆகும். அம்மா குழந்தையை பாதுகாக்கிறது போல ஶ்ரத்தை அப்பியாசம் செய்கிறவங்களை எல்லா இடையூறுகளிலிருந்தும் காப்பாற்றும்.
இந்த ஶ்ரத்தை பயிற்சி செய்வோருக்கு தாரணையில் ஈடுபாட்டை உண்டாக்கும். இதுவே வீர்யம். அதால் த்யானிக்கிற தத்துவத்தில் நிலைப்பாடு உண்டாகும். இது ஸ்ம்ருதி. இது முறையே ஸமாதி, ஸம்ப்ரக்ஞாத ஸமாதி, அஸம்ப்ரக்ஞாத ஸமாதி என கொண்டுவிடும்.Wednesday, August 4, 2010

பவ பிரத்யயம்


भवप्रत्ययो विदेहप्रकृतिलयानाम् ।।19।।
ப⁴வ ப்ரத்யயோ விதே³ஹ ப்ரக்ரு«தி லயாநாம் || 19||

பவ பிரத்யயம்:
அவித்தையை காரணமாக உடைய ஸமாதியானது தேகமற்றவர்களுக்கு, பிரக்ருதியில் லயமடைந்தவர்களுக்கு உண்டாகிறது.
ரத்தம், மாம்சம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை ஆகியன உள்ளவர் தேகம் உடையவர். இது நாமெல்லாம். இந்திரியங்கள், பஞ்ச பூத தன் மாத்திரைகள், (ஆகாசம் முதலான பஞ்சபூதங்கள் ஸ்தூலமாக உண்டாகும் முன் இருக்கிற ஸூக்ஷ்ம நிலை) அஹங்காரம், மகத்துவம் இவற்றை உடையது ஸூக்ஷ்ம சரீரம். இந்திரன் முதலான தேவர்கள் இப்படி இருக்காங்க. இந்த இந்திரியங்கள், அஹங்காரம் எல்லாம் இருக்கிறதாலேதான் இவங்களுக்கும் நம்ம மாதிரி கோப தாபங்கள், ஆசைகள் எல்லாம் இருக்கு. இவர்களோட புண்ணியம் அனுபவிச்சு தீர்ந்ததும் திருப்பி சம்சாரத்திலே கிடக்க வேண்டியதுதான். (தேவர்களும் கடவுளும் வேற வேறன்னு தெரியும்தானே?)

சரி, பிரக்ருதியில் லயம் அப்படின்னா என்னது?
இந்த உலகங்கள் எல்லாம் எதுலேந்து வந்ததோ அந்த மூலப்பொருள் ப்ரக்ருதி. ஆகாசம், வாயு, அக்னி, நீர், மண் எல்லாமே இதுலிருந்து வந்தவையே. இவற்றோட பலவித சேர்க்கையால உலகத்தில பார்க்கிற விஷயங்கள் எல்லாம் உருவாச்சு. இந்த மூலப்பொருளோட லயம் ஆகமுடியும். ப்ரக்ருதி என்பதே மாயை ஆனதால் இதுவும் அவித்தையாக சொல்கிறாங்க.

உபாசனா காலத்திலே இந்திரியங்களை, பஞ்சபூத தன் மாத்திரைகளை, அஹங்காரத்தை, புத்தி தத்துவத்தை ஆன்மாவாக உபாசிக்கிறதுண்டு. பிரக்ருதியையும் உபாசிக்கிறதுண்டு. ஆன்மாவுக்கு ரூபம்ன்னு ஒண்ணு தெரியாதில்லையா! அப்போது அந்த அந்த தத்துவத்தில் பல மன்வந்தர காலம் லயமாக இருப்பர். இந்திரிய உபாசனை செய்தவர்களுக்கு அந்த இந்திரியத்துக்கு அபிமானி தேவதையின் சொரூப ப்ராப்தி கிட்டும். (விவரங்கள் பின்னாலே விபூதி பாதத்திலே வரும்.)

நம் உண்மை சொரூபத்தை தெரியாம மறைக்கிறது ஆவரண சக்தி. இதில் பல மட்டம் இருக்கு. பிரக்ருதியை உபாசிக்கிறவங்க இந்த மறைப்பில் பல மட்டங்களை கடந்து பிரகிருதியின் மறைப்பு வரை போய் பிரக்ருதியாவே ஆகிடுவாங்க. மனசையும் அனுபவத்தையும் இவங்களால் உற்பத்தி செய்து கொள்ள முடியும். ஆனாலும் மாயை விடலை இல்லையா? ஒரு நூறாயிரம் வருஷங்கள் ஆனா பிறகு தேவர்களாகி திருப்பி உழல வேண்டியதுதான்.
இரண்டிலேயும் மறு பிறப்பு இருக்கு. அதனால முமுக்ஷுக்கள் இந்த வகை ஸமாதியை விரும்புவதில்லை.


Tuesday, August 3, 2010

அஸம்ப்ரக்ஞாத ஸமாதி.विरामप्रत्ययाभ्यासपूर्वः संस्कारशेषोऽन्यः ।।18।।

விராம ப்ரத்யயாப்⁴யாஸ பூர்வ​: ஸம்°ஸ்கார ஶேஷோ'ந்ய​: || 18||

விருத்தி இல்லாமைக்கு காரணமான பர வைராக்கியத்தோட பயிற்சியை உபாயமாக உடையதும், சம்ஸ்காரத்தை மட்டும் மீதமாக உடையதுமான யோகமே மற்றது (அஸம்ப்ரக்ஞாத ஸமாதி.)

ஸம்ப்ரக்ஞாத ஸமாதியிலே ஒரு விஷயத்தில் பாவனை வைக்கப்பட்டது இல்லையா? அதிலே சித்த விருத்தி கொஞ்சம் இருந்தது. ஆனால் அலைய விடாம ஒரே விஷயத்தில வைக்கப்பட்டது என்பதே அதில சிறப்பு. ஆனா யோகம்ன்னா சித்த விருத்தியை நிறுத்தறது ன்னு இல்லை பார்த்தோம்? ஆக நாம் இதையும் தாண்டனும். அப்ப எதோட பயிற்சி செய்யணும்? முன்னே பர வைராக்கியம்ன்னு பார்த்தோமில்லையா? எல்லாவற்றிலிருந்தும் பற்றற்று இருப்பது- அதே உபாயம்.
இது அஸம்ப்ரக்ஞாத ஸமாதி. இப்ப யோகியோட நிலை என்ன? ஸ்தூல -பருப் - பொருட்களோட சம்பந்தமில்லை; ஸூக்ஷ்ம பொருட்களோட சம்பந்தமில்லை. இந்திரியங்களோட சம்பந்தமில்லை. ஏன் இப்படி சம்பந்தமில்லை? ஏன்னா ஒரு சித்த விருத்தி இல்லாம இவற்றோட சம்பந்தம் இருக்க முடியாது. என் கண், என் காதுன்னு ஒரு எண்ணம் இருந்தாதானே அவற்றோட சம்பந்தம் இருக்க முடியும்? அந்த எண்ணங்களே இல்லாம போயிடும்.
பின்னே என்னதான் மிஞ்சி இருக்குன்னு பார்த்தா, சித்தத்தோட சம்ஸ்காரம் – இவ்வளோ நாள் பயிற்சி செய்ததால இருக்கிற பண்பு- மட்டுமே ஒட்டிக்கொண்டு இருக்குமாம்.

அட! பர வைராக்கியத்திலே எல்லாம் விட்டுப்போயிடும்ன்னு சொன்னாபோல இருக்கேன்னா, ஆமாம், முந்தைய சம்ஸ்காரம் எல்லாம் விட்டுடும்; ஆனா இப்ப பழகுகிற பர வைராக்கியம் ஒரு சம்ஸ்காரத்தை உண்டு பண்ணுமே? அது மிஞ்சும். இது கொஞ்சம் விசேஷமானதால் இது வேற ஒரு சித்தத்தை –எண்ண ஓட்டத்தை- தோற்றுவிக்காது. இதுக்கு அடுத்தபடியான மோக்ஷத்தில இந்த சித்தம் கூட இல்லாம போயிடும். அந்த சித்தத்தோட ஒட்டிக்கொண்டு இருக்கிற சம்ஸ்காரமும் போயிடும்.