Pages

Showing posts with label கோளாறான எண்ணங்கள். Show all posts
Showing posts with label கோளாறான எண்ணங்கள். Show all posts

Saturday, July 21, 2018

இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள்....




இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள் கோவிலுக்குள்ள இருக்க மாட்டார்கள்ன்னு சொல்லுங்க.”
நேத்தைக்கு தமிழ்நாட்டில் ஆன்மீக அன்பர்களை மிகவும் புண்படுத்திய வாசகம் ஒரு டிவி காட்சியில் ஒளிபரப்பி இருக்காங்க.
ஊடகங்களை நம்பாதீங்க, அஜெண்டாவோடத்தான் நிகழ்ச்சிகள் நடத்தறாங்கன்னு பல நாட்களா சொல்லிகிட்டு இருக்கேன். ஒரு விஷயத்தைப்பத்தி விவாதிக்கணும்ன்னா அது பத்தி கொஞ்சமாவது அறிவு இருக்கணும். அறிவே இல்லாத முட்டாள்களும் மடையர்களும் விவாதம் செய்யறேன்னு ஆரம்பிச்சா? இவங்க எல்லாம் ஊடகத்துறையில இருக்கறது நம்ம சாபக்கேடு! இதையெல்லாமும் மக்கள் பாக்கறாங்களே.
நான் நிகழ்ச்சியை பாக்கலை. இது ட்விட்டர்ல வெடிச்சபிறகு யாரோ போட்ட விடியோ க்ளிப்தான் பார்த்தேன்.
இவங்கதரம் இதானே? அதுல என்ன ஆச்சரியம். சரஸ்வதி நாக்கில் இருக்கான்னா.... ன்னு பேசற கும்பல்தானே? கிடக்கட்டும்.
நான் எழுதற இந்த பதிவு அந்த 'அறிவாளிகளுக்கு' இல்லை. யாருக்கானா நிஜமா யோசிக்கறவங்களுக்கு "அதானே? இதுக்கு என்ன பதில்?” ன்னு தோணி இருந்தா அவங்களுக்கானது.
அடிக்கடி நான் சொல்கிற இன்னொரு விஷயம் - ஆன்மீகத்தில பல மட்டங்கள் உண்டு அதை கலந்து குழம்பாதீங்க என்கிறது.
இது 'எல்லாம் ப்ரம்ம மயம்' லெவல் நிச்சயமா இல்லை. அடுத்து வர 'ஒரு கடவுள், அவரே எல்லாமும்' லெவலும் இல்லை. மும்மூர்த்திகள், தேவர்கள், தேவதைகள்ன்னு கடவுளை பலதா பார்க்கிற லெவல். அல்லது அதுக்கும் வித்தியாசமா எங்க ஊர்ல கோவில்ல இருக்கிற சிவன் சிதம்பரத்துல இருக்கிற சிவன்ன்னு பார்க்கிற லெவல்ன்னு கூட சொல்லலாம். வித்தியாசம் இருக்கான்னா, ஆமாம், இந்த லெவல்ல நிச்சயம் இருக்கு. ஒவ்வொரு ஸ்தலத்துக்கு ஒரு விசேஷம்தானே சொல்லறாங்க? திருமணம் ஆகணும்ன்னா இங்கே போ, கடன் தொல்லை போக அங்கே போன்னுதானே சொல்லறாங்க? இங்கே இருக்கறதும் சிவன்தானே அங்க இருக்கறதும் சிவன்தானேன்னு சொல்ல முடியாது. சிவன் ஒத்தரே; ஆனாலும் ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு மாதிரி பலன்களையும் தருவார்.

இந்த தேவதைகளுக்கு பல விசேஷ சக்திகள் உண்டு. அதனாலத்தான் மனிதர்களை விட வித்தியாசமா இருக்காங்க. இவங்களை மனிதன் போல உருவகப்படுத்தி பலதும் சொல்லறது எல்லாம் நம்மால சுலபமா 'ரிலேட்' பண்ண முடியணும் என்கிறதுக்குத்தான். கோபம் அன்பு முதலான பல உணர்ச்சிகளும் இருக்கறதா சொல்லறதும் இதுக்குத்தான். சாமிக்கு கோபம் வந்துடும் என்கறதும் இதுக்கேதான். அதனாலத்தான் 'கருணையே வடிவானவன்னா ஏன் கோபம் வரும், ஏன் தண்டனை கொடுப்பார்' என்கிறது எல்லாம் விதண்டாவாதமே. இவர்களுக்கு திருமணம் நடக்கறதாவும் குழந்தைகள் இருக்கறதாகவும் சொல்வது எல்லாமும் இதுக்காகவே. ஒரு சுலபமான புரிதலுக்கு.

உண்மையில கை கால்கள் தலைன்னு எல்லாம் கிடையாது. த்யான ஸ்லோகங்களில சொல்கிற வடிவங்களும் தத்வார்த்தமாகவேதான் இருக்கும். 'பரோக்‌ஷப்ப்ரியா ஹி தேவா: ' என்கிறது வேதம். மறைந்திருப்பதிலேயே பிரியம் உள்ளவர்கள். இவர்களது உண்மை ஸ்வரூபத்தை நம்மால பார்க்க முடியாது. அதற்கான சக்தி நமக்கு கிடையாது. அதை அறியக்கூடிய புலன் நமக்கு இல்லை. அவர்களை அறிய நமக்கு இந்த 5 புலன்கள் போதாது. ஒரு வேளை நம்மோட ஆன்மீக முன்னேற்றத்தால் பார்க்க முடிஞ்சாலும் அது ஒரு ஒளி மயமாகத்தான் தென்படும். அதற்கு மேல் முடியாது.

ஆகவே தேவர்களை மனிதத்தன்மை உள்ளவர்களாக நினைத்து வாதம் செய்வதில சாரமில்லை. பெண் தெய்வங்களுக்கு மாதவிடாய் இராது என்கிறதால வெளியே போக வேண்டிய அவசியமும் இல்லை. இதுக்கும் விதி விலக்காக சில ஸ்தலங்களிலேயும் விசேஷமாக இருக்கலாம். நதியில் புது வெள்ளம் வரும்போது மாதவிடாய் அந்த தேவதைக்கு ஏற்படுத்துவதாகவும் சொல்கிறார்கள். இதெல்லாம் விதி விலக்கு; மாத விலக்கு இல்லை.

Wednesday, November 15, 2017

இறப்பு - 3





நேரம் வந்துவிட்டால் யாரும் தடுக்க முடியாது. என்னதான் மிகச்சிறந்த அந்தணரை வைத்து மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்தாலும் முடியாது.
அட! அப்படியா?ன்னா..
அது அப ம்ருத்யுஞ்ஜயம்தான் தரும். சில சமயம் காலம் வருமுன்னரே இறப்புக்கான சூழ்நிலை உருவாகிவிட்டால் அப்போது செய்ய பலன் தரும்.
ஆக்ஸிடெண்ட்ல மாட்டிக்கறார். படுத்த படுக்கையா இருக்கார். இந்த சமயத்துல செய்ய அது இறப்புக்கான நேரம் இல்லைன்னா பலன் தரும்.
வெள்ளம் சுனாமி, பூகம்பம்ன்னு சில பேரிடர்கள் சில சமயம் ஏற்படும் இல்லையா? அப்ப கூட்டம் கூட்டமா இறப்பு நிகழும். எல்லாருக்குமா அந்த நேரத்தில் இறப்பு விதிச்சு இருக்கும்? இல்லை. இந்த மாதிரி சமயங்களிலதான் இந்த மாதிரி ஹோமம் செய்து இருந்தா மிராகிள்கள் நடக்கும்! அஞ்சே நிமிஷம் சார். ப்ளேனை தவற விட்டுட்டேன்! அது விபத்துக்குள்ளாகி எல்லாரும் இறந்து போனார்கள்.
தப்பிச்சு ஓடிண்டு இருதேன். நான் ஓடறப்ப ஒரு பெரிய மரம் விழுந்தது. ஜஸ்ட் ஒரு அடி பின்னால விழுந்தது!
வண்டில வேகமா பாலத்தை தாண்டினேன் சார். வண்டி பாலத்தை விட்டு வெளியே வரவும் அது இடிஞ்சு விழவும் சரியா இருந்தது.
இவர்களுக்கு எல்லாம் நேரம் வரலை. அது வரும்போது போய்விடுவார்கள். கடைசியா சொன்ன உதாரணம் சுனாமி சமயத்தில எங்க ஊர்லேயே நடந்தது! தப்பிச்ச அவர் ரெண்டு வருஷம் கழிச்சு லிம்ஃபோமா வந்து இறந்து போனார்.
இறந்து போனா என்ன ஆகிறது?
அடுத்த பிறவி எடுக்கிறது.
ஏன்?
இந்த ஜன்மத்தில செய்த செயல்களால் கர்மாக்கள் சேர்ந்து இருக்கும். அதை அனுபவிச்சு ஆகணுமே! அதுக்காக. இது 'கெட்ட' கர்மாவா இருக்கணும்ன்னு கூட இல்லை! 'நல்ல' கரமாக்களா கூட இருக்கலாம். சில கர்மாக்களை கெட்டதா நல்லதான்னு நிச்சயிக்க முடியாது. கலந்த ரிசல்டே கிடைக்கும்.
பின்ன இதுக்கு முடிவே கிடையாதான்னா... கர்மாவை - நல்லதோ கெட்டதோ- பகவத் அர்ப்பணமாக செய்தால் அதன் பலன் நமக்கு ஒட்டாது. அது பகவானுக்கே போய் சேரும். சின்ன வயதில் இருந்தே இப்படி செய்யக்கூடியவர் யார் இருக்கா?
எது பிறவி எடுக்கிறது? அது எதை கூடவே கொண்டு போகிறது?
ஜீவன்தான் பிறவி எடுக்கிறது. நாம் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் சேர்த்த சொத்து எதையும் கூட கொண்டு போக முடியாது! கொண்டு போவது எல்லாம் ஆணவம், கன்மம், மாயைன்னு சைவ சித்தாந்தத்தில சொல்கிற மூணுதான். ஆணவம் நான் என்கிற நீங்காத நினைப்பு. யாராலும் இந்த நான் இல்லாம இருக்க முடிகிறதோ? மாயையும் ஏறத்தாழ இதே போல. கொஞ்சமே கொஞ்சம் நேரம் இருக்கிற விஷயங்களை ஏதோ நிரந்தரம் போல எண்ணி ஏமாறுவது. இருக்கிற உண்மையை தெரியாத மாதிரி மறைக்கிறது. உலகம்ன்னு ஒண்ணை உருவாக்கி நாம் அதில அழுந்தி இன்ப துன்பங்களை அனுபவிக்க வழி செய்வது. கன்மம்தான் கர்மான்னு இப்ப சொன்னது.
உபநிஷத்துல விஸ்தாரமா இது எப்படி நடக்கிறதுன்னு சொல்லி இருக்கு.
இப்ப அதுக்குள்ள போகலை.

Tuesday, November 14, 2017

இறப்பு - 2






உலகில் எது ஆச்சரியம்? ன்னு யக்ஷன் கேட்ட கேள்விக்கு தர்மர் "பிரதி தினம் பல பிராணிகள் யம லோகத்துக்கு சென்று கொண்டே இருக்கின்றன. ஆனால் அதை பார்த்துக்கொண்டே இருக்கும் மற்றவர்கள் தாம் மட்டும் அழிவற்றவர்களாகவே இருக்க விரும்புகின்றனர். இதை விட வேறு ஆச்சரியம் என்ன இருக்கிறது?” அப்படின்னு சொல்லுகிறார்.

யோசிச்சுப்பாத்தா இது எவ்வளோ இயற்கையானது! பிறக்கும் போதே இறப்பும் நிச்சயமா இருக்கு. எப்ப என்கிறதுதான் ஆளுக்கு ஆள் வித்தியாசமா இருக்கு. பிறந்தவர் இறக்காமலே இருந்தா என்ன ஆகும்?

ஒரு ராஜா இருந்தான். இறப்பற்ற வாழ்கையை தரும் தண்ணீர் இருக்கிற சுனையைப்பத்தி அவனுக்கு கொஞ்சம் தகவல் கிடைத்தது. அதைத்தேடி கிளம்பினான். சில வருஷங்கள் சுற்றி அலைந்து ஒரு வழியா அதை கண்டு பிடிச்சான். ஆஹான்னு சந்தோஷப்பட்ட நேரத்தில அங்க ஒரு காகம் வந்தது. அதோட இறக்கை ஒண்ணு காணவே காணோம். மத்ததும் நிறைய இறகுகள் பிஞ்சு இருந்தது. அதால பறக்கவே முடியலை. மெதுவா தத்தித்தத்தி நொண்டிக்கொண்டே வந்து சேர்ந்தது. பார்க்கவே பரிதாபமா இருந்தது. ஹீன ஸ்வத்தில "ராஜா, நீ இறப்பிலா வாழ்வு தரும் சுனையை தேடி வந்தயா?” ன்னு கேட்டது. ராஜா ஆமாம்ன்னான். சரி. நானும் அப்படித்தான் அலைஞ்சு திரிஞ்சு இதை கண்டு பிடிச்சேன், தண்ணி குடிச்சேன். இந்த தண்ணியை குடிக்கறதுக்கு முன்னால என் நிலையை கொஞ்சம் பாத்துட்டு முடிவு பண்ணுன்னு சொல்லித்து. ராஜா கொஞ்சம் யோசிச்சுட்டு சரியாத்தான் சொல்லறேன்னு நன்றி சொல்லிட்டு தண்ணியை குடிக்காமலே திரும்பிட்டான்! 
 
ஆண்டவா என்னை கொண்டு போக மாட்டயா? ன்னு அழுது புலம்பறவங்களை நாமும் பார்த்து இருப்போம். ஊஹும்! லேசில போகாது. இந்த பிறவில அனுபவிக்க வேண்டிய கர்மாவை அனுபவிச்சுட்டுத்தான் போகும்.

அதே போல போக வேண்டிய நேரம் வந்தாச்சுன்னா அதை எதுவுமே தடுத்து நிறுத்த முடியாது. கோவிந்த தீக்‌ஷிதர் கோவில் ஒண்ணை கட்டினார். ஸ்தபதி அருமையான வேலை செஞ்சு இருந்தார். கும்பாபிஷேகத்துக்கு முந்திய நாள் மேற்பார்வை இட்டுக்கொண்டு இருந்தபோது அதிர்ச்சியானார். அவரிடம் முன்னே வேலை செய்த ஒரு நபரை பார்த்தார். அவர் இறந்துபோய் சில வருடங்கள் ஆகிவிட்டு இருந்தன. இவன் எப்படி இங்கே இப்போ? யோசித்துக்கொண்டு இருந்தப்ப அவன் கிட்டே வந்து வணங்கி "ஐயா வணக்கம். நான் சாதாரணமா மனிதர் கண்னுக்கு தெரிய மாட்டேன். ஆனா உங்க தபோ சக்தியால நீங்க என்னை பார்க்க முடியறது" என்றான். கூடவே "இப்ப எனக்கு யமதர்மராஜனுக்கு வேலை செய்யச்சொல்லி இருக்காங்க" என்றான். "எமனா? உனக்கு இங்க என்ன வேலை?"ன்னு கேட்டார். "ஐயா இந்த கோவிலை கட்டின ஸ்தபதிக்கு ஆயுசு முடியுது. நாளை கும்பாபிஷேகத்துக்கு குறிச்ச நேரத்துக்கு கொஞ்சம் முந்தி அவரை கொண்டுபோயிடுவேன்; ஏணியில ஏறும்போது கீழே விழுந்து போயிடுவார்" என்றான்.

அடுத்த நாள் காலை தீக்‌ஷிதருக்கு இருப்பு கொள்ளவில்லை. இவ்வளோ நல்ல வேலை செய்து கொடுத்த ஸ்தபதி இறந்து போவதாவது! அத்தோட கும்பாபிஷேகத்துக்கும் அது தடையா இருக்குமே! ஸ்தபதியை வீட்டுக்கு அழைத்துப்போனார். ஒரு அறையில் வைத்துப்பூட்டினார். சாவியை வெளியே ஆணியில் மாட்டிவிட்டு காவலுக்கு ஒரு ஆளையும் போட்டுவிட்டு வந்துவிட்டார். கும்பாபிஷேகத்துக்கான நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. கடைசி நேர வேலை ஒன்றை செய்ய ஸ்தபதியை தேடினார்கள். எங்கெங்கோ அலைந்து கண்டிபிடித்தும் விட்டார்கள். காவலுக்கு இருந்தவர் அவசரமாக இயற்கை உபாதையை கவனிக்க போயிருந்தார். ஆணியில் மாட்டி இருந்த சாவியால் கதவைத்திறந்து அவரை வெளியே விட்டார்கள். அவசரமான வேலையை தெரிந்துகொண்ட ஸ்தபதி அவசர அவசரமாக போனார். அதே அவசரத்தில் ஏணி ஏறினவர் தடுக்கி விழுந்தார்; போய் சேர்ந்தார்!

நேரம் வந்துவிட்டால் யாரும் தடுக்க முடியாது. என்னதான் மிகச்சிறந்த அந்தணரை வைத்து மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்தாலும் முடியாது.
அட! அப்படியா?ன்னா..




Monday, November 13, 2017

இறப்பு - 1





இறப்பைப்பற்றிய கோளாறான சிந்தனைகள். பயப்படாதீங்க! பிட்ஸ் அண்ட் பீஸஸா இருக்கும். கண்டுக்காதீங்க!

மனுஷன் என்கிறவன் பல விஷயங்களில தைரியசாலியா இருக்கலாம். ஆனா அனேகமா பயப்படுகிற ஒரு விஷயம் என்னன்னா இறப்பு!

வெகு சிலரே இந்த பயம் இல்லாம இருக்காங்க. அப்படி இருக்கறவங்க என்ன ரிஸ்க் வேணா எடுத்து என்ன வேணா செய்வாங்க. ஸ்டண்ட் செய்யறதாகட்டும், இப்ப காணாமப்போயிண்டு இருக்கற சர்கஸ்ல அரிதா சிலது செய்யறதாகட்டும், சாகசங்கள் செய்யறதாகட்டும் இல்லை தீவிரவாத செயல்கள் செய்யறவனாக இருக்கட்டும்... :(
யோசிச்சு பாத்தா இந்த பயம் எதுக்குன்னு கொஞ்சம் தமாஷாவே இருக்கு! ஏதோ வலி இருக்கும் கஷ்டப்படணும்ன்னு ஒரு விஷயம் இருந்தா அதுக்கு பயந்தாக்கூட கொஞ்சம் காரணம் இருக்கும். இறந்து போன பிறகு அதை 'அனுபவிக்க' அவர்தான் இருக்க மாட்டாரே? அப்புறம் என்ன பயம்? இறக்காதப்ப அவர்தான் இருக்காரே, என்ன பயம்? எப்படிப்பாத்தாலும் பயப்படறதுக்கு லாஜிக் தெரியலை!

பிலாசபிக்கலா யோசிக்க கத்துக்கொண்டவங்களுக்கு யம பயம் இராது. தினசரி யமனை உபாசிக்கறவங்களுக்கும் இராது. சந்தியாவந்தன கர்மாவில ஜபம் முடித்து திக் உபாசனைகளில இதுவும் ஒண்ணா இருக்கு. யம பயம் இராதுன்னு சாக மாட்டாங்கன்னு இல்லை; இந்த இறப்பைக் குறித்த பயத்தைத்தான் யம பயம் என்கிறாங்க.

ரைட்! இந்த இறப்பு என்கிறது என்ன? எது செத்து போகிறது? உடம்பா? அதுதான் அங்கயே அப்படியே இருக்கே? உடம்பிலேந்து காணாமல் போவது வேறு ஏதோ 'நான்' ன்னு நாம் சொல்லிக்கக்கூடிய ஒண்ணு. சாதாரணமா இதை உயிர்ன்னு சொல்லறாங்க.

என் சட்டை, என் கை என் கால்ன்னு சொல்லும்போது அதெல்லாம் வேற நாம் வேறன்னு தெளிவா தெரியறா மாதிரி என் உடம்புன்னு சொல்கிற இந்த உடம்பு நான் இல்லை. எங்காவது கடுமையான பயணம் போய்விட்டு வந்தா என் உடம்பு வலிக்கிறதுன்னு சொல்கிறோமே ஒழிய நான் வலிக்கிறேன்னு எங்கயானா சொல்லறோமா? அப்ப உடம்பு நாம் இல்லை. ஆனா 'நாம்' செயல்பட அது வேண்டி இருக்கு.

உடம்பு சரியா செயல்பட ஆயிரத்தெட்டு கண்டிஷன்ஸ்! பிசியாலஜி படிச்சா எப்படி இவ்வளோ ப்ராசஸ் ஒழுங்கா நடக்கறதுன்னு தோணும்! தப்பா நடக்க நிறையவே வாய்ப்பு இருந்தும் பெரும்பாலும் சரியாத்தானே நடந்துண்டு இருக்கு? அதனாலத்தானே நாம 'உயிர் வாழ்ந்துகிட்டு' இருக்கோம்? இருக்கற ஆயிரத்தெட்டு ப்ராசஸ்ல ஏதாவது அப்பப்ப சரியா நடக்கலைன்னா உடம்பு சரியில்லைன்னு சொல்லறோம். பெரும்பாலும் அது தன்னைத்தானே சரி செஞ்சுக்கும். கொடுக்கற மருந்துகள் அதுக்கு கொஞ்சம் உதவியா ஹேதுவா இருக்கும். அவ்ளோதான். உடம்பு இந்த மருந்தை ஒத்துக்கலைன்னா அதுக்கு பலன் இருக்காது. அதனாலத்தான் எல்லா மருந்தும் எல்லா நேரமும் எல்லாருக்கும் வேலை செய்யறதில்லை!

நொச்சூர் வெங்கட்ராமன் உரையில சொன்னார்: நாம எப்போ பிறந்தோம்? அது நமக்கு நினைவில இருக்கறதில்லை. எப்ப குழந்தைப்பருவம் போய் வாலிபம் வந்தது? எந்த புள்ளியில? தெரியாது. எப்ப வாலிபம் போய் வார்த்திகம் (கிழட்டுத்தன்மை) வந்தது, தெரியாது. எப்படி இதெல்லாம் எப்ப வரதுன்னே தெரியாம நாம் மாறிண்டே இருக்கோமோ அப்படித்தான் அதுக்கு அடுத்த ஸ்டேஜ் - இறப்பும்.

Saturday, September 30, 2017

ஸரஸ்வதி பூஜை





நேற்றும் இன்றும் ஸரஸ்வதி பூஜை பலரும் வீட்டில செஞ்சிருப்பீங்க.
ஸரஸ்வதி பூஜைன்னா எனக்கு நினைவுக்கு வரது நண்பர் ஶ்ரீரங்கம் மோஹன ரங்கன். (அவர் பெயரை எப்படி எழுதனும் என்கிறதுல அவர் குறிப்பா இருக்கார். அவரை மோஹன் ன்னோ ரங்கன்னோ கூப்பிட்டுவிடக்கூடாது! சரியாத்தான் எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன்... இல்லை மோகன ன்னு எழுதறாரா? நினைவுக்கு வரலை. பார்க்கலாம். தேவையானா அப்புறம் திருத்தலாம்!)
ஏன் வருஷா வருஷம் இந்த காலகட்டத்தில அவர் நினைவுக்கு வரார்ன்னா, ஸரஸ்வதி பூஜைன்னா அன்னைக்குன்னு விசேஷமா நிறைய படிக்க வேண்டாமா? அதுதானே சரியான ஸரஸ்வதி பூஜையா இருக்கும்ன்னு கட்சி கட்டுவார்! அதுலேயும் ஒரு லாஜிக் இருக்கில்லை? :-)
கோளாறான சிந்தனைகள் அடிக்கடி வரும்னாலும் எல்லாத்தையும் வெளியே பகிர்ந்து கொள்ளறது இல்லை. உங்க எல்லார் மேலேயும் இருக்கிற கருணையே காரணம். இருந்தாலும் இன்றைய கோளாறான சிந்தனை பகிரப்படுகிறது!(நினைச்சதை விட பெரிசாபோயிடுத்து.சாரி!)
==
ஆன்மீகத்தில கொஞ்சம் ம்ம்ம்ம்ம்? கொஞ்சமென்ன நிறையவே முதிர்ந்த நிலைன்னா எல்லாவற்றிலும் இறைவனை பார்க்கிறது. எல்லாம் ப்ரஹ்மம்ன்னு உணருகிற நிலைக்கு போயிட்டா வேற ஒண்ணுமே வேணாம்! அதுக்கும் கொஞ்சமே கொஞ்சம் கீழ் லெவல் எல்லாத்துலேயும் ஒரே இறைவன் இருக்கிறான்னு உணருகிறது.
இந்த உணருவதுக்கும் தியரியா ஒப்புக்கறதுக்கு பெரிய இடைவெளி இருக்கு. என்னதான் தீவிரமா யோசனை செய்து ஆமாம், எல்லாத்துலேயும் இறைவன் இருக்கிறான்னு புத்தி பூர்வமா ஒத்துக்கொண்டாலும் அதை நடைமுறைப்படுத்துவதிலே நிறைய சிக்கல் இருக்கு.
காரணம் வாசனை. ஒரு விஷயத்துக்கு நம் எதிர்வினை எங்கிருந்து வரும்? நிதானமா யோசிச்சு செயலாற்றினா புத்தியிலேந்து வரும். ஆனா அது நமக்கு வழக்கம் இல்லே! எதிர்வினை நம்மோட வாசனைகளிலேந்துதான் சட்டுன்னு வரும். (மேலே தெரிஞ்சு கொள்ள எமோஷனல் இன்டலிஜென்ஸ் பத்தி படிக்கவும். http://innamuthu.blogspot.in/2016/10/blog-post.html இல் துவங்கிபடியுங்கள். கொஞ்சம் பெரிய தொடர்.)
வாசனைன்னா? இதைப்பத்தி முன்னேயே எழுதி இருக்கேன். அது பத்தி தெரிஞ்சவங்க அடுத்த பாராவுக்கு போயிடலாம். மத்தவங்களுக்காக: புதிதாக ஒரு காரியம் செய்கிறோம். புரியாத விஷயம் என்பதால் ஆரம்பத்தில் ஜாக்கிரதையாக கவனமாக செய்வோம். அதை திருப்பித்திருப்பிச்செய்ய அதில் ஒரு ’ப்லூயன்ஸி’ ஏற்படுகிறது. பல முறை செய்ததை ’அசால்டாக’ முழு கவனம் கொடுக்காமலே கூட செய்து விடுவோம். அதாவது செய்கையில் ஒரு பழக்கம் உண்டாகிவிட்டது! இன்னதுக்கு இப்படி செய்யணும் என்று ஒரு பழக்கம். ஒரு ரிப்லெக்ஸ்ன்னு கூட சொல்லலாம். இதை பண்புப்பதிவு - சம்ஸ்க்ருதத்தில் சம்ஸ்காரம்- என்போம். இதுவே நாளாக ஆக உள்ளே ஊறிப்போய்விடுகிறது. இப்படி பலப்பட்ட சம்ஸ்காரம்தான் வாசனை. இது அந்த ஜன்மத்தில் மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த ஜன்மங்களிலும் வருகிறது. புரிவதற்காக ஒரு மோசமான உதாரணத்தை பார்க்கலாம். ஒருவன் ஏதோ அவசியம் ஏற்பட்டு திருடுகிறான். முதல் முறை பயந்து கொண்டே திருடுவான். அடுத்த முறை அவ்வளவு பயமில்லாமல்; சில முறை ஆனதும் பயமே இல்லாமல்; இன்னும் சில காலம் சென்றபின் ஆட்டோமேடிக் ஆக! இதுதான் சிலர் சில விஷயங்களை ஏன் சட்டென்று பிடித்துக்கொண்டு சிறப்பாக செய்கிறார்கள் என்பதற்கான விளக்கம். சிலருக்கு பாட்டு பாடுவது சட்டென்று வருகிறது. சிலருக்கு நடனம். சிலருக்கு திருடுவது! :-))
ரைட் மேலே போகலாமா?
இந்த வாசனை பலமானது. இதன் படி ஒரு விஷயத்தை செய்யாமல் இருக்க முடியாது. ஒன்றுமில்லாத விஷயத்துக்கு கோபப்பட்டே பழகியவர் அப்படி கோபப்பட்டுக் கொண்டேதான் இருப்பார். அப்படி இல்லாமல் அவர் இருப்பது ஏறத்தாழ இயலாத காரியம்.
இந்த வாசனைதான் திடீர்ன்னு ஒரு புது கான்செப்டை ஒத்துக்க, நடைமுறைப்படுத்த பெரிய தடையா இருக்கு. முயற்சி செய்தால் போக்கிக்கலாம். ஆனால் அதுக்கு நிறைய மனோ தைரியமும் நிறைய இடைவிடாத முயற்சியும் தேவை.
ரைட்! அப்ப சட்டுன்னு எல்லாவற்றிலும் ஒரே இறைவன் இருக்கறதா நடைமுறையில் செயலாற்றுவது கஷ்டம். என்ன செய்யலாம்?
கொஞ்சம் லெவல் கீழே இறங்கி வரலாம். எல்லாத்துலேயும் இறைத்தன்மை இருக்குன்னு ஒத்துக்க முடியுமா?
முடியும். ஏன்னா அது வாசனை சார்ந்தது! காலங்காலமா பல விஷயங்களில இறைவனை பார்க்கறா மாதிரி நம்மோட வாழ்க்கை அமைஞ்சிருக்கு. நதிகள் ஸ்வாமி; மரங்கள் ஸ்வாமி; மலைகள் ஸ்வாமி. கல்லுல ஸ்வாமி; மரத்தில ஸ்வாமி. தண்ணில ஸ்வாமி. மூஞ்சூறு? பிள்ளையார் வாகனம். காகம் - பித்ருக்கள் அந்த ரூபத்தில வராங்க. கிளி அம்பாள் கையில்னா இருக்கு? நாய் கூட பைரவரை நினைவு படுத்தும். வேப்ப மரம், அரச மரம் - கேட்கவே வேண்டாம்.
இப்படி ஏறத்தாழ எல்லா ஜீவராசிகளும் மலை நதி போன்ற 'உயிரில்லாதவையும்' ஏதோ ஒரு தேவதையுடன் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கு. (இந்த கொசு ஒண்ணுதான் விதி விலக்கு போலிருக்கு. தெரிஞ்ச வரை ஒரு தேவதை சம்பந்தமும் இல்லே! :)
இதை இன்னொரு விதமா பார்க்க எல்லாவற்றிலும் ஒரு தேவதை இருக்கு. மரம் செடி கொடிகள், மிருகங்கள்... அதைப்போற்றுகிற பக்குவமும் நம்மகிட்ட இருக்கு. இதை வலுப்படுத்திக்கணும்.
சமீபத்திய நாத்திக இயக்கத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில் எளிய மக்கள்கிட்ட இருந்து இது பெருமளவுக்கு மறைந்து போச்சு. அதனாலத்தானே கோவில் குளங்களை ஆக்கிரமிக்கிறோம்? நதிகளை அசுத்தமாக்குகிறோம்? மணலை கொள்ளை அடித்து நதியே காணாமல் போக்குகிறோம்? மலைகளை உடைக்கிறோம்? மரங்களை வெட்டுகிறோம்?
இத்தனையும் செய்து விட்டு மழை இல்லை என்று திட்டிக்கொண்டு இருக்கிறோம். எப்படியோ மழை பெய்து தண்ணீர் பெருக்கெடுத்தால் தண்ணீர் வெள்ளத்தை காணவில்லை. சோப்பு நுரைதான் பெருக்கெடுக்கிறது!
கிடக்கட்டும். மனுஷனை எப்பய்யா ஒண்ணா பார்ப்பீங்கன்னு சிலர் கேட்கிறது கேட்குது. அதுல சிக்கல் இருக்கு!
செடி மரம் மாதிரி இருக்கிறதுகளோட நல்ல உறவு வெச்சுக்கலாம். பிரச்சினையே இல்லை. பசு, நாய் மாதிரி மிருகங்களோட கூட நல்ல உறவு வெச்சுக்கலாம். நல்ல சுத்த மனசோட அணுகிணா அவை நல்லாவே உறவு கொண்டாடும்.. பிரச்சினை இராது.
ஆனா இந்த மனுஷன்....... காம்ப்லெக்ஸ் ஆசாமி. இவனோட எதிர்வினைதான், ஈகோ என்கிற அஹங்காரம்தான் பிரச்சினையா இருக்கும்! மிருகங்கள் பிரதிபலிக்கிற எதிர்பார்ப்பு இல்லாத அன்பு இவனிடம் காண்பது மிக அரிது! அதான் பிரச்சினை. இதையும் தாண்டி அன்பு செலுத்துகிற மஹான்கள் இருக்கவே இருக்காங்க.
இருக்கட்டும். மோஹனரங்கனுக்கு திரும்ப வருவோம்.
ஸரஸ்வதி பூஜையில் கல்பத்தில் இப்படி இருக்கிறது: ....ஶோபித மண்டபே பத்ர பீடே ஸர்வாணி புஸ்தகாணி ஸம்ஸ்தாப்ய....
மண்டபத்தில் சுத்த மங்கலமான பீடத்தில் எல்லா புத்தகங்களையும் வைத்து....
இதில் துர்கா லக்‌ஷ்மீ ஸரஸ்வதி ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும். முதல் நாள் பூஜை முடித்து அடுத்த நாள் புனர்பூஜை முடிக்கும் வரை அதில் தேவதா ஆவாஹனம் இருக்கிறது, ஆகவே அதை கலைத்து புத்தகம் எடுக்க முடியாது, படிக்க முடியாது. எல்லா புத்தகங்களையும் என்று சொல்லிவிட்டதால்.... என்னய்யா இது? எப்படி ஒத்தர்கிட்ட இருக்கிற எல்லா புத்தகங்களையும் வைக்க முடியும்? உதாரணமா மோஹன ரங்கனே வீடு கொள்ளாமல் இருக்கிற புத்தகங்களை மற்ற்வர்களுக்கு கூப்பிட்டு கூப்பிட்டு கொடுத்தார். சர்வ சாதாரணமாக பலர் வீட்டிலும் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன.
ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். இந்த கல்பங்களை எழுதியபோது அப்படி நிலமை இல்லை. பலதும் ஓலைச்சுவடிகள். அச்சுப்பிரதிகள் ஸொல்பமே.
இந்த காலத்திலும் கடையில் நாம் வாங்கும் பலவித சஞ்சிகைகளை விட்டுவிடலாம். நாவல்களை விட்டுவிடலாம். பள்ளிப்பாட புத்தகங்கள், வேத புத்தகங்கள், ஆன்மீகம் சார் மற்ற புத்தகங்களைத்தான் எல்லாரும் பூஜையில் வைக்கின்றனர். பூஜையில் வைக்காத புத்தகங்களை இன்றைக்கு படிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. இன்றைக்கு ஒண்ணுமே படிக்கக்கூடாது என்ற பழக்கம் பள்ளி மாணவர்கள் உருவாக்கியது என்ற பலத்த சந்தேகம் இருக்கு! அதே நாளைக்கு புனர் பூஜை முடித்து கட்டாயம் படிக்கணும்ன்னு சொல்லிப்பாருங்க!.... :-))))

Tuesday, August 2, 2016

பிரார்த்தனை - 1





அனாயாஸேன மரணம்ʼ வினாதை³ன்யேன ஜீவனம்ʼ
தே³ஹி மே க்ருபயா ஶம்போ⁴ த்வயி ப⁴க்திம்ʼஅசஞ்சலாம்

இது பூஜா பத்ததி புத்தகத்தில் இருக்கிற ப்ரார்த்தனை. நமக்கா சரியான ப்ரார்த்தனை செய்யத்தெரியாது.
என் மாமாவிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவன் யோகி ராம்சுரத் குமார் பக்தர். அவரிடம் உனக்கு என்ன வேணுமோ கேளு என்றாராம். இவர் ஒண்ணுமே கேட்கலை.
ஏன் மாமா என்றேன்.
டேய் ஒத்தர் நிறைய தங்க காசு கொடுக்க தயாரா இருக்கறப்ப கொஞ்சமே கொஞ்சம் பித்தளை காசு கொடுன்னு கேட்கறாப்பல ஆயிடும். இவங்களுக்கே நமக்கு என்ன வேணும்ன்னு தெரியும்; நாம எதுக்கு கேட்க்கணும்?” என்றார்.
சில பல வருஷங்களாக எனக்கு பிரார்த்தனை செய்யவே வராது. என்னத்தான் பூஜை செய்ய உக்காரும்போது இதை பிரார்த்தனை செஞ்சுக்கணும் அதை செஞ்சுக்கணும்ன்னு நினைச்சுகொண்டு உக்காந்தாலும் அந்த நேரத்துல ஒண்ணும் வராது.
கடந்த அஞ்சு வருஷத்துல எவ்வளோ தரம் தனியா பிரார்த்தனை செஞ்சேன்னு நினைச்சுப்பாத்தா ரெண்டு மூணு தரம் இருக்கலாம்; அதுவும் எந்த சொந்த சமாசாரத்துக்கும் இல்லை!
மேலும் ரமணர் பக்கம் வந்த பிறகு இது சுத்தமா இல்லாம போயிடுத்து! எப்பவும் என்ன நடக்கணுமோ அதான் நடக்கறது; இதுல நாம கேட்க என்ன இருக்கு? ந்னு தோணிப்போச்சு. பரம சௌக்கியம்!
இந்த சமயத்துல ரொடீனா சொல்கிற இந்த ஸ்லோகம்தான் அப்ளை ஆகிறது.

அனாயாஸேன மரணம்ʼ வினாதை³ன்யேன ஜீவனம்ʼ
தே³ஹி மே க்ருபயா ஶம்போ⁴ த்வயி ப⁴க்திம்ʼ அசஞ்சலாம்

என்ன கேட்கிறோம்? அனாயாஸேன மரணம். பிறக்கிறவங்க எப்படியும் இறந்துதானே ஆகணும்? ரைட்டு! போகலாம். ப்படி போகீற போது இழுத்து பிடிச்சுகிட்டு நாமும் கஷ்டப்பட்டு மத்தவங்களையும் கஷ்டப்படுத்திக்கொண்டு ஏன் போகணும்? இடக்கை நொந்ததென்றார் இறந்தொழிந்தாரே ந்னு பட்னு போகலாமே?
சில பேருடைய இறப்பு பத்தி கேள்விப்பட்டு இருக்கேன். ஒத்தர் சந்தியாவந்தனம் செய்ய உக்காந்தார். ஆசமனம் செய்தார். அச்சுதாய நமஹ, அனந்தாய நமஹ ... கோவிந்தாய வுக்கு அவர் இல்லை! சாய்ஞ்சுட்டார்!
இன்னொருத்தர் கோவிலுக்குப்போனார். ஸ்வாமி தரிசனம் எல்லாம் ஆச்சு. வெளியே வரும்போது கீழே விழுந்து நமஸ்காரம் செய்வோமில்லையா? செய்தார். எழுந்திருக்கவில்லை. கூட வந்தவங்க எவ்வளோ நேரம் நமஸ்காரம் செய்வீங்கன்னு எழுப்பப்பாத்தா பிராணனை விட்டுவிட்டார்ன்னு தெரிஞ்சது!
போறதுன்னா இப்படிப்போக வேணாம்?
அதுக்குத்தான் பிரார்த்தனை. அனாயாஸேன மரணம், 

Friday, July 1, 2016

கோளாறான எண்ணங்கள் - லேட்டஸ்ட்!


பாசத்தை விட்டுடு. நடக்கிறதை சினிமா போல பாரு. இந்த உலக நடப்புகள் மித்யா. திரையில் தெரியற சினிமா போல. உண்மைன்னு தோணினாலும் அது உண்மையான உண்மை இல்லை!
ஒரு சாட்சியா நடக்கறதை வேடிக்கை பாரு!

ஆன்மீக பயணத்துல இப்படி அப்பப்ப காதுல விழுந்திருக்கு. லோகத்தில நடக்கிற ஆயிரத்தெட்டு சமாசாரங்களைப்பத்தி கவலைப்படறதுன்னா இந்த ஜன்மம் போறாது. எல்லாம் கர்ம வினைப்படி நடக்கிறதுன்னு புரியற போது, முயற்சி செஞ்சு பாத்ததுல பெரும்பாலான நிகழ்வுகளை “ரைட் நடக்க வேண்டியது நடக்கிறது. இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லே” ந்னு கடந்து போக முடியறது. இது கஷ்டமா தோணினாலும் சாதிக்கக்கூடியதுதான்னு ஒரு நம்பிக்கை பிறந்திருக்கு. சமூக வலைத்தளங்களில பலரும் பல விஷயங்களுக்கும் பொங்கறதைப்பாத்தா ஒரு பக்கம் சிரிப்புதான் வரது. சம்பந்தமில்லாத பலதுக்கும் பொங்கி, சண்டைப்போட்டு நட்புக்களை முறிச்சுக்கக்கூட தயாரா இருக்காங்க! இதையும் கர்ம வினைன்னு தாண்டலாம். ஆனா இது இப்ப புதுசா செய்யற கர்மா; கொஞ்சம் முயற்சி செஞ்சா விலக்கிக்கூடியது. போகட்டும்.

இப்ப என் பிரச்சினையே நடக்கிறதை சினிமா மாதிரி பார்க்க முடியலை; பார்க்கிறது நாடகம் மாதிரி இருக்கே!

என்ன வித்தியாசம் என்கிறீங்களா? சினிமாவில விலகி இருக்கறது சுலபம். எப்ப வேணும்ன்னாலும் இது சினிமா; எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைன்னு நினைவு படுத்திக்கொண்டு அதோட தாக்கத்திலேந்து மீளறது சுலபம். எந்த கதாநாயகன் யார்கிட்ட அடி வாங்கினா எனக்கென்ன? :-) சினிமாவில நாம் வெறும் பார்வையாளர்தான்!

நாடகம் அப்படி இல்லை. அதுல நாமும் ஒரு பாத்திரம். என்னத்தான் கடவுள் என்கிற டைரக்டர் இயக்கறா மாதிரி இயங்கறோம்ன்னாலும் அது நமக்கு புரியறதில்லையே. விலகி இருக்கறது கஷ்டமா இருக்கு. சும்மா இருக்கவும் முடியலை. நாடகத்தில நாமும் ஏதோ செய்ய வேண்டி இருக்கு; வசனம் பேச வேண்டி இருக்கு. இதுக்கான ஸ்க்ரிப்டையும் நம்மகிட்ட கொடுக்கலை! இதுல நாமா செய்யக்கூடியது, பேசக்கூடியது ஏதேனும் இருக்கா என்கிறது அப்பப்ப வந்து போகிற கேள்வி. சந்தர்பத்துக்கு தகுந்தாப்போல (?) எதையாவது உளறிட்டு இருக்கோம்! அது சரியா தப்பான்னு ஒண்ணும் புரியறதில்லே. இதையும் நாமா செய்யலே, நாம் சொல்லறதையும் செய்கிறதையும் அவனே நிர்ணயிச்சு இருக்கான், அவனின்றி அணுவும் அசையாதுன்னு சிலர் சொல்லறது புத்திக்கு தெரிஞ்சாலும் அனுபவத்துக்கு வர மாட்டேன் என்கிறது! ஐயோ இப்படி சொல்லிட்டோமே, செஞ்சுட்டோமேன்னு பச்சாதாபப்படுகிறோம்! இந்த தாக்கத்திலேந்து மீளறது சுலபமா இல்லே! நம்மைவிட விட்றா சூனா பானா ந்னு போறவங்க பரவாயில்லேன்னு தோணறது!

ரமணர் தெளிவா சொல்லிட்டார்! ‘அவரவரது பிராப்த பிரகாரம், அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான். என்றும் நடவாதது என்ன முயற்சிக்கினும் நடவாது. நடப்பதை என்ன தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மவுனமாய் இருத்தல் நன்று’

ம்ம்ம் என்ன செய்யலாம்? மௌனமா ஒரு போஸ்ட் எழுதி போட்டுடலாம். அதையாவது தேத்திப்போம். மத்தபடிக்கு இதுல – இந்த பொலம்பல்ல- என்ன ப்ரயோஜனம்ன்னு புரியலை!