Pages

Thursday, December 30, 2021

ஶ்ராத்தம் – 14 பாத ப்ரக்‌ஷாளனம் முடிந்து மீண்டும் வரணம்




 

அடுத்து பவித்ரத்தை போட்டுக்கொண்டு, பூணூலை இடம் மாற்றிக்கொண்டு முன்போல நெய் சந்தனம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பித்ருவிடம் வருகிறோம்ஷன்னோதேவி என்ற மந்திரத்தால் பாத்யம் கொடுக்கிறோம். பித்ரு காரியங்களில் அக்‌ஷதைக்கு பதில் எள் என்று சொல்லி இருக்கிறோம். ஆனால் எள் இங்கே பயன்படுவதில்லை. அது மிகவும் உயர்ந்த பொருள். அது காலில் படக் கூடாது என்பதால் அக்ஷதை உபயோகமாகிறது. முன்போலவே கோத்திரம் முதலியவற்றை சொல்லி பெற்று பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ என்று சொல்லி கால்களில் ஜலம் விட்டு கால்களை அலம்பிவிட்டு உபசரிக்க வேண்டும். ‘ஸமஸ்த ஸம்பது’ என்ற மந்திரம். பொதுவாக அந்த ஜலத்தை ப்ரோக்ஷணம் செய்து கொள்வது இல்லை. பிறகு பவித்ரத்தை மீண்டும் தரித்துக்கொண்டு விஷ்ணுவாக வரணம் செய்த பிராமணருக்கு விஸ்வேதேவர் போலவே தத் விஷ்ணோ என்ற மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். மந்த்ரார்த்தம்: வேதாந்தத்தின் கரை கண்ட வித்வான்கள் ஆகாசத்தில் பரவிய கண் எப்படி தடையின்றி பார்க்கிறதோ அப்படி விஷ்ணுவின் பரமபதத்தை காண்கின்றனர்

இப்படி நெய்யும் சாணமும் தடவிச் செய்வதால் பித்ருக்கள் கல்பம் முடியும் வரை அம்ருதத்தால் அபிஷேகம் செய்யப்படுவர் என்று ஸ்ம்ருதி சொல்கிறது

 இந்த உபசாரங்கள் முடிந்தால் இந்த இடத்திற்கு ஈசான திசையில் கர்த்தா இரு முறை ஆசமனம் செய்ய வேண்டும். இதற்குப்பின் கிழக்கே விஸ்வேதேவர் விஷ்ணு ஆகியோர் ஆசமனம் செய்ய வேண்டும். வடக்கில் பித்ருவாக வரணம் செய்த பிராமணர் ஆசமனம் செய்ய வேண்டும். இப்போதெல்லாம் இதை கவனித்து செய்பவர்கள் மிகவும் அரிதாகிவிட்டனர்.

வீட்டுக்குள் வந்து மீண்டும் வரணம் செய்யப்படுகிறது. பயப்பட வேண்டாம் இதுவே கடைசி வரணம்! பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹர்களின் பெயரை சொல்வதால்தானே இவர்களுக்கும் தாம் யாராக ஆகிறோம் என்று மனதிலாகும்?. கையில் தீர்த்தம் விட்டு முன்போல் கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி … சிராத்தத்தில் விஸ்வேதேவர்களுக்கு ஆசனம் என்று சொல்லி கையில் தீர்த்தம் விட்டு, தர்ப்பை கொடுத்து; பிறகு பித்ருக்களுக்கும் அதே போல (பூணூல் இடமாக) செய்ய வேண்டும். விஷ்ணு இருந்தால் அவருக்கும் விஸ்வேதேவர் போல செய்கிறோம். அக்ஷதை எடுத்துக்கொண்டு விஸ்வேதேவர் பிராமணரை பார்த்து உங்களிடத்தில் விஸ்வேதேவர்களை ஆவாஹனம் செய்யப்போகிறேன் என்று கர்த்தா சொல்கிறார். அவர்கள் ஆவாஹனம் செய் என்று பதில் சொல்லுகிறார்கள். அப்போது சொல்லும் மந்திரத்தின் பொருள் “ஓ விஸ்வேதேவர்களே! நான் அழைப்பதை காது கொடுத்து கேளுங்கள். உங்களில் சிலர் அந்தரிக்ஷத்திலும், சிலர்  பூமிக்கு அருகிலும், சிலர் தேவலோகத்திலும் இருக்கிறீர்கள். சிலர் அக்னியை நாக்காக கொண்டவர்கள். மற்றவர்களும் பூஜிக்கத் தகுந்தவர்கள். நீங்கள் எல்லோரும் இங்கு வந்து இருந்து கர்த்தாவுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள். மகா பாக்கியம் உள்ளவர்களும் பலசாலியுமான நீங்கள் வாருங்கள். இந்த பார்வண சிராத்தத்திற்கு அதிகாரிகளாக விதிக்கப்பட்டவர்கள் நீங்கள். இங்கே ஊக்கத்துடன் இருங்கள். இப்படியாக விஸ்வேதேவர்களை ஆவாகனம் செய்கிறேன் என்று கர்த்தா சொல்ல, நான் வரிக்கப்பட்டு விஸ்வேதேவர் ஆனேன் என்று பிராமணர் பதில் சொல்லவேண்டும்.


Tuesday, December 28, 2021

ஶ்ராத்தம் – 13 கால்களை அலம்பிவிடுதல்




 

இப்போது இந்த பிராமணர்களை நாம் பூஜிக்கிறோம். வரணம் செய்தபின் பூஜிக்கிறோம். இங்கே சாதாரணமாக பூஜை என்பது நமக்கு தெரியும். உள்ள படிகள் - தூப தீபம் என்று அத்தனையுமே செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஆனால் இங்கே அவ்வளவும் செய்வது இல்லை. வழக்கமாக வரவேற்று ஆசனம் கொடுத்து உட்கார வைத்து, கையில் ஜலம் விட்டு, கால்களை அலம்பி விடுவது என்பது சாதாரண பூஜை முறை. அதே தான் இங்கேயும் செய்கிறோம். தேவலோகத்திலிருந்தும் பித்ரு லோகத்தில் இருந்தும் வருவதால் இவர்கள் கால்களுக்கு பூஜை செய்யும் அந்த இடத்தில் ஆசனம் தர்பம் சந்தனம் அக்ஷதை ஆகியவற்றை நாம் போடுகிறோம்

 முன்போலவே கோத்திரம் சர்மாக்களை கூறி, அவர்களுக்காக செய்யும் இந்த சிராத்தத்தில் விஸ்வேதேவர் விஷ்ணு பித்ருக்கள் ஆகியவர்களுக்கு பாத்யம் கொடுக்கும் இடத்தில் அர்ச்சனை செய்யவேண்டும். ஆசனம், தர்ப்பம், சந்தனம், மீதி தூப தீப ஆராதனைகளுக்காக அக்ஷதை (பித்ருக்களுக்கு எள்) ஆகியவற்றை நாம் போடுகிறோம். பின் விஸ்வேதேவரை அவரது மண்டலத்தின் எதிரே கிழக்கு முகமாக அமர வைத்து அக்‌ஷதையுடன் நுனிக்காலில் போடப்படும் தீர்த்தத்துக்கு மந்திரம் சொல்கிறோம். அதன் அர்த்தம் ‘ஓ ஜல தேவதையே! எங்களுக்கு பிரியமான பானமாகவும் சுக ஹேதுவாகவும் ஆகவேண்டும். மேலும் சுகம் உண்டாகவும் துக்கம் அகலவும் எங்களுக்கு நான்கு புறமும் நீ பிரவாகமாக இருக்க வேண்டும்’. இப்படி சொல்லி அக்ஷதை உடன் ஜலத்தை சேர்த்து விஸ்வேதேவர் வலது நுனிகாலில் விடவேண்டும்.

 பிறகு பவித்ரத்தை கழற்றி நம் வலது காதில் வைத்துக் கொள்ள வேண்டும். மேற்கொண்டு செய்வதை ஒருபோதும் பவித்ரம் அணிந்து செய்யலாகாது. அப்படி செய்தால் வ்ருத்ராசுரன் வஜ்ராயுதத்தால் அடிக்கப்பட்டது போல பித்ருக்களும் தேவர்களும் அடிக்கப்படுகிறார்களாம். அதே போல பவித்ரத்தை கழற்றி பூமியில் வைத்துவிடக்கூடாது. அப்படி நடந்து விட்டால் அதை விட்டுவிட்டு புதிய பவித்ரம் அணிய வேண்டும். இரண்டு பாதங்களின் அடியிலும் மந்திரம் சொல்லி நெய் தடவ வேண்டும். கால்களின் உள் புறத்தில் பசுஞ் சாணம் தடவி கை அலம்பி வலது பாதம் கணுக்கால்கள் முதல் விரல்கள் இடை வரை அலம்ப வேண்டும். இதற்கு மனைவி ஜலம் விட வேண்டும்

 நெய் தடவ மந்திரத்திற்கு  ‘நீ சுக்கிரன் என்னும் தாதுவாகவும் ஜ்யோதிஸாகவும் தேஸசாகவும் இருக்கிறாய்’ என்று பொருள் வரும். இதனால் இது உபசாரமும் ஆகிறது. பிராமணர் ரூபத்திற்கு ஏற்ப தேஜஸ்வியாகவும் ஆகிறார். சாணம் தடவுகையில் ‘கந்தத்வாராம்’ என்ற மந்திர. இதனால் தேஜஸ் குறையாமலும் புனிதமாகவும்  இருக்கும்படியும் பார்த்துக்கொள்கிறோம். ‘நல்வாசனைக்கு துவாரமும், எவராலும் அசைக்க முடியாததும், எப்போதும் நிறைந்துள்ளதும், ஸர்வ ஸம்ருத்தி உள்ளதும், எல்லாப் பிராணிகளுக்கும் ஈஸ்வரி ஆகவும் இருக்கிற ஸ்ரீதேவியை அழைக்கிறேன்’ என்ற பொருள் வரும்.  

பிராம்ஹணரை பார்த்து சொல்லும் மந்திரம் ‘எல்லா செல்வங்களையும் பெற காரணம் ஆனதும், வரும் ஆபத்துகளை அகற்ற வால் நட்சத்திரம் ஆனதும், கரையில்லா பிறவிக்கடலுக்கு அணையாகவும் உள்ள பிராமணரின் பாததூளி புனிதம் ஆக்கட்டும் . மன நோய், உடல் நோய்களை அகற்றுவதும் மனிதரின் மரணத்தையும் வறுமையையும் அழிப்பதும், செல்வம் புஷ்டி கீர்த்தி ஆகியவற்றைத் தருவதுமான பிராமணரின் பாத கமலத்தை நான் நமஸ்கரிக்கிறேன். பிராமண சமூகத்தின் தரிசனத்தால் பாபராசிகள் தேய்கின்றன. நமஸ்கரித்தால் மங்கலம் உண்டாகிறது. அர்ச்சனை செய்வதால் அழியாத பதவி கிடைக்கும்’. இதுவே விஸ்வேதேவருக்கு செய்யும் உபசாரங்களில் மந்திரங்களின் பொருள்இப்படி அலம்பி விட்ட ஜலத்தால் தன்னையும் பத்னியையும் ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும்.



Sunday, December 26, 2021

ஶ்ராத்தம் – 12 சங்கல்பம், உபசாரம்




  

அடுத்து சிராத்த சங்கல்பம். நாள் கிழமை போன்றவற்றை சொல்லி செய்வது. சுத்தமாக இருக்கிறானோ அசுத்தமாக இருக்கிறானோ நாராயணனை நினைக்கும்போது அவன் அருளால் நாம் சுத்தமாக ஆகிறோம் என்று சொல்லி திதி வார நட்சத்திர யோக கரணம் சொல்லி சங்கல்பம் செய்கிறோம்.


முன்போலவே விஸ்வேதேவருக்கு கையில் நீர் அளித்து ஆசனம் அளித்து கையில் மீண்டும் நீர் அளித்து  அந்த வரணத்தையும் ஸ்தானத்தையும் அடையவேண்டும் என்று வேண்ட அவரும் அடைகிறேன் என்று சொல்வார். இங்கே விஸ்வா என்ற தக்‌ஷ ப்ரஜாபதியின் புத்ரியின் குழந்தைகள் இந்த விஸ்வேதேவர்கள் என்பதை நினைவு கூற வேண்டும். அதற்கான மந்திரம் சொல்லப்படுகிறது. பிறகு பூணூலை இடமாக்கி பித்ரு பிராமணர் கையில் தீர்த்தம் கொடுத்து கோத்திரம் சர்மா போன்றவற்றை சொல்லி பித்ரு சொரூபம் அடைந்த என் தந்தை அல்லது தாய் அவர்களுக்கு பார்வண விதிப்படி செய்யும் சிராத்தத்தில்… என்று சொல்லி மீண்டும் இன்ன கோத்திரம்  வசு ருத்ர ஆதித்ய வடிவினர் ஆன பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹர்களுக்கு இது ஆசனம் என்று சொல்லி நுனி உள்ள நீண்ட முழு தர்பைகளை இரண்டாக மடித்து முறுக்கி அவர் காலடியில் போட வேண்டும். மீண்டும் கையில் நீர் அளிக்க வேண்டும். இதையெல்லாம் முன்னேயே பார்த்துவிட்டோம் இருந்தாலும் மனதில் பதிவதற்காக திருப்பியும் சொல்லுகிறோம். மீண்டும் கோத்திரம் முதலியவற்றை சொல்லி தாங்கள் அந்த வரணத்தை ஏற்று அந்த ரூபத்தை பெற வேண்டும் என்று வேண்டுகிறோம். அவர் அப்படியே ஆகட்டும் என்று சொல்கிறார். விஷ்ணுவுக்கும் அவ்வாறு வரவேற்பு உபசாரம் செய்ய வேண்டும்.

 இந்த உபசாரம் என்பது பூஜை செய்பவர்களுக்கு தெரியும். அதில் ஒரு கிரமம் இருக்கிறது. பகவானை தியானித்து ஆசனம் கொடுத்து கையில் தீர்த்தம் கொடுத்து கால் அலம்பி விடுவோம். அதே போல தான் இங்கேயும் செய்யப்போகிறோம்.

இதற்காக அவர்களது கால்களை அலம்பி விட நாம் வீட்டுக்கு வெளியே செல்கிறோம். வீட்டுக்கு முன்னும் பின்னும் இடமில்லாமல் போய் விட்ட இந்த காலத்தில் வீட்டிலேயேதான் செய்யப்படுகிறது

வீட்டின் முன்னிலையில் வாசற்படி சமீபத்தில் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட பூமியில், பசுவின் மூத்திரத்தால் மண்டலங்களை செய்யச் சொல்லியிருக்கிறது. விஸ்வேதேவர்களுக்கு நான்கு மூலை உள்ளதாக அதாவது சதுரமாக மண்டலம் செய்ய வேண்டும். பித்ருகளுக்கு அதற்குத் தெற்கில் வட்டமாக 12 அங்குலம் அளவில் மண்டலம் செய்ய வேண்டும். வீட்டினுள்ளே இந்த கால் அலம்புவது முதலியவற்றை செய்யக்கூடாது. அதேபோல வடக்கிலும் தெற்கிலும் கூட செய்யக்கூடாது.

ப்ரேதன் என்கிற சப்தம் இருக்கும் வரைதான் குழியாக வெட்டிய குண்டத்தில் கால்களை அலம்ப வேண்டும். அது முடிந்தால் அப்புறம் மண்டலம் என்கிற கோலம்தான். குண்டத்தில் செய்தால் அது குல க்ஷயம் ஆகும்.

வீட்டுக்குள் செய்ய வேண்டி இருந்தால் கிழக்கு நோக்கி பிராமணர் உட்காரும்படி இடம் விட்டு ஒரு ஆசனத்தை போட்டு எதிரில் இரண்டு கோலங்கள் போட வேண்டும். கோலங்கள் போட்டு அதன் மேல் ஒரு பித்தளை தாம்பாளத்தில் வைத்து அதில் வேலையை செய்து முடிக்க வேண்டும். இந்த இரண்டு தாம்பாளங்களாக வைத்துக்கொண்டால் இவர்களுக்கு காலை அலம்பும் தண்ணீர் ஒன்று சேர வாய்ப்பு இராது. தனித்தனியாகவே கொண்டு வெளியே கொட்ட வேண்டும். வெளியே செய்வதாக இருந்தால் இருவரின் கால் அலம்பிய தீர்த்தமும் ஒன்றாக சேராதபடி நடுவில் மண்ணால் ஒரு அணை போல கட்டிவிடலாம். எப்படியும் இரண்டு ஜலமும் ஒன்றாக சேராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். வெறும் தரையில் நடுவில் ஒரு ஈரத் துண்டை போட்டு செய்வது என்பது அவ்வளவு உசிதமான விஷயமாக இருக்காது.


 

ஶ்ராத்தம் - 11




 

இப்படி வேண்டிக் கொள்ளுவதற்காக கர்த்தா இரண்டு கைகளிலும் நுனியுள்ள தர்பங்களை பிடித்துக்கொண்டு போக்தாவின் வலது உள்ளங்கை, முழங்கைகளை தர்ப்பத்தின் நுனியால் தொடவேண்டும். சாதாரணமாக இவர்களுக்கு பழக்கப்பட்டு இருப்பது என்னவென்றால் இரண்டு கைகளையும் மறித்து நீட்டுவார்கள். அப்படி செய்ய தேவை இல்லை. நாம் செய்ய வேண்டியது வலது உள்ளங்கையில் வலது கையில் தர்ப்பையின் நுனியையும் இடது கையில் தர்ப்பையின் அடிப்பாகத்தையும் பிடித்துக்கொண்டு பிராமணரின் வலது உள்ளங்கையில் தர்பையின்  அடிபாகம் படும்படியாக வைத்துக் கொண்டு, வலது கையால் தர்பையை வளைத்து  நுனியை அவரது முழங்கையை தொடும்படி செய்ய வேண்டும். இதுவே சரியான முறை என்று சொல்கிறார்கள்

உண்மையில் இப்போதுதான் அவர்களுக்கு மனது சுத்தமாக இருக்க எள்ளுருண்டை, வாய் சுத்தமாக தாம்பூலம், உடல் சுத்திக்காக எண்ணை மற்றும் எண்ணை தேய்த்து கொள்ள மற்றவற்றையும் கொடுக்க வேண்டும்இக்காலத்தில் அதை முன்னேயே செய்து விடுகிறார்கள். அதே போல எண்ணை தவிர மற்றவையும் இல்லை. எள்ளுருண்டை செய்து உணவுடன் போட்டுவிடுகிறார்கள்! செய்கிறதுதான் நிச்சயம் நடக்கிறதே. சரியான காலத்திலேயே ஒன்றாவது கொடுத்துவிடலாம்.

சிராத்தத்தின் அங்கமாக தானும் வேட்டி உத்தரீயத்துடன் குளிக்க வேண்டும். அவற்றை அப்போது பிழியக்கூடாது. சிராத்தம் முடிந்தபின் மந்திரம் சொல்லி பிழிய வேண்டும்அநேகமாக நடப்பதில்லை.

இவர்கள் குளிக்க போய் இருக்கும் போது விட்டுப்போயிருந்தால் ஔபாஸனத்தை துவங்கிக்கொள்ளலாம். செய்யாமல் விட்டுப்போனதற்கு பிராயச்சித்தமும் அத்தனை காலம் செய்திருக்க வேண்டிய ஔபாசனங்களுக்கும் ஸ்தாலீபாகங்களுக்கும் பயன்படுத்தி இருக்கக்கூடிய அரிசியையும் தக்‌ஷிணையும் வாத்தியாருக்கு கொடுக்கிறோம்அது கொஞ்சம் விரிவானது, சூத்திரங்களுக்கு இடையில் மாறக்கூடும் என்பதால் அதனுள் இப்போது பிரவேசிக்கவில்லை. வேறு தகுந்த நபரிடம் இருந்து தெரிந்து கொள்க.

குளித்து வந்த ப்ராம்ஹணர்களிடம் சிராத்தம் செய்ய யோக்யதை இருக்க வேண்டும் என வேண்டி அனுக்ஞை வாங்கிக்கொண்டு, அவர்களையும் அக்னியையும் தீர்த்த பாத்திரத்துடன் வலம் வந்து மேலே கர்மா செய்ய வேண்டும். ப்ராம்ஹணர்களுக்கு வணக்கம் சொல்லி அக்‌ஷதை/ எள் போட வேண்டும். நமஸ்காரம் செய்து முன்போல தேவதாப்யோ என்று துவங்கி சொல்லி பின் பூணூலை இடம் மாற்றிக்கொண்டு பிராமணர்களை நோக்கி இந்த நாளில் என்ன கோத்திரம் இன்ன சர்மா உள்ள என் தந்தை ( இந்த இடத்தில் மற்றவர்களுக்கு சிராத்தம் ஆனால் அந்தந்த பெயரை சொல்ல வேண்டும்பார்வண விதிப்படி சிரார்த்தம் செய்ய முயற்சிக்கிறேன். அதனால் என்னால் சம்பாதிக்க பட்ட பக்குவம் ஆனதும் ஆகப்போவதுமான பொருட்களும் தேசம். காலம். பாத்திரம் முதலியவையும் சிரார்த்தத்துக்கு ஏற்றவை ஆகட்டும் என்று தாங்கள் அருள்புரிய வேண்டும் என்று வேண்டுகிறோம். அவர்கள் அப்படியே சிரார்த்தத்துக்கு அருகதை ஆகட்டும் என்று சொல்வார்கள். உபவீதியாக வடக்கு முகமாக நின்று சிராத்த காலத்தில் சிராத்த பூமியை கயையாக நினைத்து ஜனார்தன தேவனையும் நினைத்து; பின்னே தெற்கே திரும்பி பிராசீனாவீதியாக வசு முதலிய பித்ருக்களை தியானம் செய்து சிராத்தத்தை ஆரம்பிக்கிறேன் (ப்ரவர்த்தயே) என்று சொல்ல பிராமணர்கள் ப்ரவர்த்தய - ஆரம்பி என்று சொல்வார்கள்.