Pages

Thursday, April 30, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 17


பகவான் குறும்புகளும் செய்திருக்கிறார்.

முருகனார் திருமணம் செய்து கொண்டாலும் அவரது மனைவியை பிரிந்து ஆசிரமத்துக்கு வந்து துறவியாகவே இருந்துவிட்டார். ஒரு நாள் ஆசிரமத்துக்கு மீனாட்சி வந்து இருந்த போது பகவான் மீனாக்‌ஷி! இன்னும் கொஞ்ச நேரத்துலே முருகனார் பலாக்கொத்திலேந்து இங்கே வருவார். அவர் வந்து உக்காந்த உடனே... நீ இந்த பதிகத்தை பாடணும். கடைசி அடியிலே ரமண மாயவனே ந்னு இருக்கு இல்லையா? அதை முருக மாயவனே ந்னு மாத்தி பாடணும்என்று சொல்லிக்கொடுத்தார்.
அது ஸ்ரீரமண சந்நிதி முறை என்று பிற்காலத்தில் பெயர் பெற்ற நூலின் வடிவம். நாயக நாயகி பாவத்தில் அமைந்து இருக்கும். நாயகன் முன் தன்னோடு கூடி அன்பு காட்டி பின் தன்னைப்பிரிந்து விட்டதையும் நாயகனோ இதை எல்லாம் கண்டும் காணாதவன் போல இருப்பதையும் கண்டு நாயகி மனம் வெதும்புவதையும் சொல்லி இருக்கும்.

கள்ளம் கபடறியா மீனாக்‌ஷியும் சரி பகவானே!” என்றாள்.
சற்று நேரத்தில் முருகனார் வந்து அமர்ந்தார். பகவான் மீனாக்‌ஷியைப் பார்த்து ஜாடை காட்டினார். அவளும் பாட ஆரம்பித்தாள்:

காதலால் என்னைக் கலந்த நீ பின்னர்க்
கணக்கிலாப் பற்பல காலம்
ஏதிலார் போல இப்புறம் திரும்பாது
இருந்தனை அவற்றை யான் இப்போது
ஓதினால் எல்லாம் உருகனாஎன்ன
உரை செய்வாய் உன்நிலை என்போல்
மாதரார் தம்மான் மாதித்திடப் படுமோ
மறையுறை முருக மாயவனே!

பகவானோ முருகனாரை பார்த்து குறும்பாக சிரிப்பதும் மீனாக்‌ஷியை பார்த்து ஆமோதிப்பதாயும் இருந்தார்.

மையலால் என்னை மணந்த நீ பின்னர்
மதிப்பில்லாப் பற்பல காலம்
உய்யலாம் படியான் உவந்து நீ வாராது
ஒழிந்தனை அவற்றை யான் உன்னி
மெய்யதா உரைத்தால் பொய்யதாங் கனவா
விளம்புதி உன்நிலை என் போல்
தையலார் தம்மால் தலைப்படத் தகுமோ
சதுரனே முருக மாயவனே!

என்று இரண்டாம் பாடலை பாடும்போது முருகனாருக்கு பகவானது நாடகம் புரிந்துவிட்டது. ஏதோ சூழ்ச்சி நடக்கிறது என்று ஹாலை விட்டு வெளியேற இரண்டடி எடுத்து வைத்தார். அதற்குள் மூன்றாம் பாடலும் பாடி முடிக்கப்பட்டது.
ஓய்! எங்கே எழுந்து ஓடறீர்? ‘முருக மாயவனேந்னு பாடினதும் ஓடறீரோ? அப்ப ரமண மாயவனேந்னு யாரும் பாடினா நானும் எழுந்து ஓட வேண்டியதுதானா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
முருகனார் பதில் சொல்லாமல் வெளியே ஓடிவிட்டார்!


Wednesday, April 29, 2015

உள்ளது நாற்பது - 20


அறிவறி யாமையு மற்றதறி வாமே
யறியும துண்மையறி வாகா தறிதற்
கறிவித்தற் கன்னியமின் றாயவிர்வ தாற்றா
னறிவாகும் பாழன் றறி

அறிவு அறியாமையும் அற்றது அறிவாமே
அறியும் அது உண்மை அறிவு ஆகாது அறிதற்கு
அறிவித்தற்கு அன்னியம் இன்றாய் அவிர்வதால் தான்
அறிவாகும் பாழ்அன்று அறி

உலக அறிவும் அஞ்ஞானமும் இல்லாததே அறிவாகும். அது எதையும் அறிகிறது எனில் அது அறிவாகாது. மெய்ப்பொருள் தன்னை நீங்கி பிறிதொன்று இல்லை என்பதால் அறிவதற்கோ அறிந்தேன் என்று சொல்வதற்கோ ஒன்றுமே இல்லை.இந்நிலையில் அது இருந்து ஒளிர்வதால் அது பேரறிவாகும்; பாழ் அல்ல என அறிவாயாக.

निद्रा न विद्या ग्रहणं न विद्या गृह्णाति किञ्चिन्न यथार्थबोधे ।
निद्रापदार्थग्रहणेतरा स्यात् चिदेव विद्या विलसन्त्यशून्या ॥ १४ ॥

நித்³ரா ந வித்³யா க்³ரஹணம்ʼ ந வித்³யா க்³ருʼஹ்ணாதி கிஞ்சின்ன யதா²ர்த²போ³தே |
நித்³ராபதா³ர்த²க்³ரஹணேதரா ஸ்யாத் சிதே³வ வித்³யா விலஸந்த்யஶூன்யா || 14 ||


Tuesday, April 28, 2015

ரமணர்- அடியார்கள் - சாது நடனானந்தர் -1


நடேசமுதலியார் பள்ளி ஆசிரியர். சுமார் இருபது வயதிருக்கும்போது பகவானை ஸ்கந்தாஸ்ரமத்தில் சந்தித்தார். அப்போதெல்லாம் பகவான் பெரும்பாலும் மௌனமாகவே இருப்பார். பேசினால் அது பெரும் அதிசயம். இக்காலகட்டதில் பகவானை சந்தித்த நடேசமுதலியார் கண்டவுடன் உணர்ச்சிவசப்பட்டு விட்டார். “இறைவன் யார்? நான் இறைவனை உங்க அருளாலே உணர முடியுமா? என்னோட இந்த தீவிர ஆசையை நிறைவேத்தித்தரணும். உங்க அருள் வேணும் என பிரார்த்தித்தார்.
பகவான் நிதானமாக பேச ஆரம்பித்தார். “முன்னாலே நிக்கிற இந்த உடம்பு என் அருளை கேக்கறதா இல்லை அதுக்குள்ளே இருக்கற உணர்வா? உணர்வுதான் வேண்டிக்கறதுன்னா அது தன்னை இந்த உடம்புன்னு நினைச்சு கொண்டு வேண்டிக்கறதா? முதல்ல அது தன் உண்மையைத் தெரிஞ்சுக்கட்டும். அப்போ அதுக்கு இறைவன்னா என்ன அருள்ன்னா என்னன்னு என்பதெல்லாம் நல்லாவே தெரிய வரும். இந்த உண்மையை இங்கேயே இப்பவே உணரலாம்

இந்த உடம்பு அருளுக்கு ஏங்கலை. நான் ந்னு ஒளிர்ற உணர்வுதான் ஏங்கறது. உனக்கு நீ இருக்கே என்கிற உணர்வு இப்ப இருக்கு. ஆனா தூங்கும்போது மனசு புத்தி இந்திரியங்கள் ப்ராணன் உடம்பு இது எதோடயும் அது சம்பந்தமில்லாம இருக்கு. விழிப்பு வந்த உடனே அது உனக்கு தெரியாமலே இது எல்லாத்தோடையும் சம்பந்தப்படுத்திக்கிறது. இது உனக்கு அனுபவம்தானே? இனிமே செய்ய வேண்டியது எல்லாம் உன்னை இந்த உடம்பு முதலாவற்றோட சம்பந்தப்படுத்திக்கக்கூடாது. விழிப்புலேயும் கனவுலேயும் தூக்கத்திலேயும் இருக்கறா மாதிரி இருக்க கத்துக்கணும். உன்னோட இயல்பே எதோடயும் சம்பந்தம் இல்லாதது என்கிறதால தூக்கத்தை முழு அறிவோட இருக்கிற தூக்கமா மாத்தணும். இது உன்னோட இயல்பில ஸ்திரமா நிக்கறதால வரும். அதுக்கு நீண்ட கால பயிற்சி தேவைப்படும் என்கிதை மறந்துடாதே. அந்த அனுபவம் கிடைச்சாச்சுன்னா அது இறைவன் வேற நீ வேற இல்லைன்னு புரியவைக்கும்.”

சாதனையின் இலக்காக ஒரு மலை காட்டப்பட்டது; அதை நடேசமுதலியார் துவக்கினார். அவ்வப்போது சாதனையின் அம்சங்களை பகவானிடம் கேட்டுத்தெரிந்து கொண்டார். இதை தனக்காக ஒரு நூல் வடிவிலேயே குறித்து வைத்துக்கொண்டார். பிற்காலத்தில் அது பகவானால் உறுதி படுத்தப்பட்டு உபதேச மஞ்சரிஎன்று பெயரிடப்பட்டது.
எவ்வாற்றேனும் ஒரு விருத்திக்குக்கூட இடந்தராதிருத்தலே சாதனைக்கு சிறப்பாம்
மனம் முயற்சி இன்றியே விருத்தியற்ற நிலையை ஸஹஜமாக அடையும் வரையில் அதாவது அகங்கார மமகாரங்கள் முழுதும் நசிக்கும் வரை சாதனை வேண்டும்இது போன்ற தீவிர சாதகர்களான முமுக்‌ஷுக்களுக்கேயான உபதேசங்களை பெற்றார்.
வேலையையும் குடும்பத்தையும் துறந்தார். தீவிர சாதனை கைவந்தது. சாது நடனானந்தர் ஆனார்.
குகை நமச்சிவாயர்கோவிலில் தங்கிக்கொள்வார். திருவண்ணாமலை நகரில் பிக்‌ஷை எடுப்பார். அவரது ஒரே நட்பு முருகனார். அக்காலத்தில் அதி தீவிர சாதகர்கள் இவர்கள் இருவரே என அறியப்பட்டனர். இருவரும் முசுடுகள். முருகனாரை தேங்காய் என்றும் இவரை பலாப்பழம் என்றும் சொல்வர். முட்களாக இருக்கும்; நெருங்க முடியாது.
பிக்‌ஷை நீங்கலான மீதி நேரமெல்லாம் பகவானுடன் வாசம். தீவிர சாதனை. பகவான் மீதுள்ள அன்பால அவ்வப்போது பாடல்கள் இயற்றுவார். அது யாருக்கும் தெரியாது!

ஒரு முறை பகவான் சன்னிதியில் நாயனாவும் இன்னும் சில பண்டிதர்களும் சம்ஸ்க்ருதத்திலேயே சாஸ்திர விசாரம் செய்து கொண்டு இருந்தார்கள். சாது நடனானந்தாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. இதை எண்ணி அவர் வருந்தினார். அவருக்கு ஆத்ம சாதனை மீது இருந்த மலைப்பும் தன் இயலாமையும் சேர்ந்து தான் ஆத்ம ஞானத்துக்கு அருகதை இல்லை என்று சோர்வடையச்செய்தது. கண்ணீர் பெருகும் கண்களை மூடிக்கொண்டார்.
நேரம் சென்றது. விழித்த போது பகவான் மட்டுமே இருந்தார். மற்றவர்கள் விடை பெற்று சென்றுவிட்டனர்.
பகவான் கருணையோட நடனானந்தரை பார்த்தார். “ ஏன் விசனப்படனும்? நீ உண்மையிலேயே ஆத்ம ஞானத்துக்கு தகுதியோட இல்லைனா இதுகிட்டேயே வந்து இருக்க முடியாது. எது உன்னை இங்கே கூட்டி வந்ததோ அதுவே ஆத்ம ஞானத்தை அடைய வைக்கும். இன்னைக்கு இல்லைன்னா நாளை. அதோட வேலையை அது நிச்சயம் பார்க்கும். கவலைப்படாதே என்றார்.


Monday, April 27, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 16


சுப்பலக்‌ஷ்மி அம்மாள் டவுனுக்கு போய் வரும்போதெல்லாம் சிறிது உலர் திராட்சையுடன் திரும்புவார். பகவானுக்கு சமர்ப்பித்து நமஸ்கரிப்பார். ஒரு முறை இப்படி சமர்ப்பித்த போது பகவன் கடுமையானார்.
எதுக்கு இந்த பக்தி வேஷம் எல்லாம்? யார்கிட்ட கத்துண்டே? நீ பாட்டுக்கு இயல்பா இருக்க வேண்டியதுதானே? சுத்தமான ஹ்ருதயமும் சிரத்தையும்தான் வேணும். இப்படி நடிச்சு உனக்கு என்ன கிடைக்கப்போறது? இப்படி நடிச்சு கள்ளக்கும்பிடு போடறவாளை எனக்கு சுத்தமா பிடிக்காது. ”
என்ன நமஸ்காரம் வேண்டி இருக்கு? நான் உள்ளே வந்தா வெளியே போனா ரொம்ப பவ்யமா எழுந்து நிக்கறது! மத்தவா யாரும் அவா பாட்டுக்கு உக்காந்து இருந்தா அவாளையும் எழுப்பறது. நான் என்ன புலியா சிங்கமா பயந்து எழுதிருக்க?”
முருகனாரை பார்த்து மேலும் சொன்னார்: “இவா எல்லாம் என் சிஷ்யாளாம்! சொல்லிண்டு திரியறா! செய்யறது எல்லாம் சேஷ்டை! ஒரு கதை இருக்கு. வைஷ்ணவ சம்பிரதாயத்திலே ஒரு குரு இருந்தார். அவரோட சிஷ்யா எல்லாம் சேந்துண்டு அவரைப் பட்டினப் ப்ரவேசம் பண்ணினா. வழி எல்லாம் ஆசார்ய கோஷம். எல்லாம் முடிஞ்ச பிறகு ஒரு குழி வெட்டி வெச்சிருந்தா. அதுகிட்ட பல்லக்கிலேயே கூட்டி வந்து இறக்கினா. அப்புறம் அவரைப் பாத்து எம்பெருமானாரே! தாங்களே குழிக்குள்ள எழுதருறேளா இல்லை நாங்க எழுந்தருளப் பண்ணட்டுமா?’ ந்னு கேட்டாளாம்.”
முதல்ல இங்கே வரப்போ எல்லாரும் நல்லாத்தான் இருக்கா. ரொம்ப சிரத்தையோடத்தான் வரா. அப்பறம் எல்லா சேஷ்டையும் வந்துடறது. அவா போடற கும்பிடுக்கெல்லாம் ஸ்வாமி ஆடணும். அவா பண்ணற சேஷ்டை எல்லாத்தையும் அவர் பொறுத்துக்கணும்; இவாளை தலையில வெச்சிண்டு திரியணும். அதான் எல்லாருக்கும் தேவைப் படறது.”
இப்படி பொரிந்து தள்ளிய பிறகு முருகனார் உட்பட யாரும் பகவானுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதில்லை.

பலராம ரெட்டி ஒருநாள் மாலை பகவானிடம் அரவிந்தரின் உபதேசத்தின் ஈர்ப்பே காயசித்தி அடையலாம் என்கிறதுதான்என்றார். அதற்கு அப்போது பகவான் பதில் ஏதும் சொல்லவில்லை. அடுத்த நாள் காலை பலராமரெட்டி நமஸ்கரித்து அமர்ந்தபோது அவரை நோக்கிச் சொன்னார்: “கும்பகோணத்துல சி.வி.வி. ராவ் ந்னு ஒரு யோகி. காய கற்பம் பண்ணிக்கொண்டதா சொன்னார். அதோட இல்லாம டாக்டர் அன்னிபெசண்டுக்கும் காயகற்ப ரகசியத்தை சொல்லித்தறதா பகிரங்கமாவே அறிவிச்சார். ஆனா அன்னிபெசண்ட் போய் பாக்கிறதுக்குள்ளே காலமாயிட்டார்! ” என்றார்.


Saturday, April 25, 2015

உள்ளது நாற்பது - 19


அறிவுறுந் தன்னை யறியா தயலை
யறிவ தறியாமை யன்றி யறிவோ
வறிவயற் காதாரத் தன்னை யறிய
வறிவறி யாமை யறும்.

அறிவுஉறும் தன்னை அறியாது அயலை
அறிவது அறியாமை அன்றி அறிவோ
அறிவு அயற்கு ஆதாரத் தன்னைஅறிய
அறிவு அறியாமை அறும்.

உலகை அறியும் ஜீவன் தன் உண்மையான ஸ்வரூபத்தை அறியாது வேறாக இருக்கும் உலகத்தை தான் என அறிவது அறியாமைத் தவிர வேறு என்ன? உண்மை ஞானமாக ஆகுமா? இந்த உலகை அறியும் உணர்வுக்கும் உலகுக்கும் ஆதாரமாக இருப்பது எது என்று அறிய அஞ்ஞாமும் தான் எனும் உணர்வும் அறுந்து போகும்.

बोद्धारमात्मानमजानतो यो बोधः स किं स्यात्परमार्थबोधः ।
बोधस्य बोध्यस्य च संश्रयं स्वं विजानतस्तद्द्वितयं विनश्येत् ॥ १३ ॥

போ³த்³தாரமாத்மானமஜானதோ யோ போ³: ஸ கிம்ʼ ஸ்யாத்பரமார்த²போ³: |
போ³ஸ்ய போ³த்யஸ்ய ச ஸம்ʼஶ்ரயம்ʼ ஸ்வம்ʼ விஜானதஸ்தத்³த்³விதயம்ʼ வினஶ்யேத் || 13 ||
 

Friday, April 24, 2015

அடியார்கள் - யாழ்ப்பாணி, ரங்கையர்


ஸ்கந்தாஸ்ரம நாட்களில் ஒருவர் ஆஸ்ரமத்தை சுத்தம் செய்யும் பணியில் இருப்பார். அவர் பெயரே யாருக்கும் தெரியாது. யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததால் அவரை யாழ்ப்பாணி என்றே அழைத்தனர்.
ஒரு நாள் பகவான் தன்னை தரிசிக்க வந்த ஒரு ஸ்வாமியிடம் எதேச்சையாக ஒரு நோட்டிலே சில பாடல்களை எழுதி வைத்திருந்தேன். அதை உத்தர காசியில் இருந்து வந்த ஒரு சுவாமி பார்க்க வாங்கினார். திருப்பித்தராமலே போயிட்டார். கொண்டு போய் பல மாசங்கள் ஆச்சு. அது இருந்தா தேவலை போலிருக்குஎன்றார்.
திடீரென்று யாழ்பாணியை சில நாட்கள் காணவில்லை. ஏன் எங்கே போனார் என்று யாருக்கு, தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் திரும்பினார். பகவான் முன் அந்த நோட்டுப்புத்தகத்தை வைத்து வணங்கினார்! பகவான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றார்.
பகவான் பேசியதை அங்கே சுத்தம் செய்து கொண்டு இருந்த யாழ்பாணி கேட்டுக்கொண்டு இருந்தார். உடனே கிளம்பி ஒரு நிமிடமும் ஓய்வில்லாமல் உத்தர காசிக்கு பயணித்து அந்த சுவாமியை தேடிப்பிடித்து சந்தித்து நோட்டுப்புத்தகத்தை கேட்டுப்பெற்றுக்கொண்டு உடனே திரும்பியிருக்கிறார்!

விளாச்சேரி ரங்கையர் ஒரு முறை பகவானை தரிசிக்க வந்தார். அப்போது வந்த கிராமத்து ஆசாமிகள் இருவர் பகவானிடம் வந்து விபூதி கொடுங்க சாமிஎன்றனர். பகவான் விபூதி இருக்கும் இடத்தைக் காட்டி அங்கே இருக்கு எடுத்துக்கோஎன்றார். அவர்கள் உங்க கையாலே கொடுங்க சாமி என்றனர். பகவான் உங்க கைக்கும் என் கைக்கும் வித்தியாசம் இல்லைஎன்றார்.
வந்தவர்கள் ஏமாற்றத்துடன் விபூதியை எடுத்துக்கொள்ளாமலே திரும்பினர்.
ரங்கையர் அவர்களை பின்தொடர்ந்து சென்று என்ன விஷயம் என்று கேட்டார். ஒருவர் சாமி, எனக்கு குஷ்ட ரோகம் இருந்தது. சும்மா மலைக்கு வந்தேன் அப்ப சாமி கூப்டு விபூதி கொடுத்து உடம்பெல்லாம் பூசிக்க சொல்லுச்சு! நானும் பூசிக்கிட்டேனா? அடுத்த நாளே குஷ்டம் இருந்த இடம் தெரியலே! இவருக்கும் குஷ்டம். அதான் கூட்டி வந்தேன். ஆனா சாமி விபூதி தரலே!” என்றார்.

ரங்கையருக்கு க்‌ஷீண தசை ஏற்பட்டது. கடன் நிறைய கூடியது. வேலை தேடி சென்னை போகும் வழியில் பகவானை தரிசிக்க வந்தார். பகவான் ரங்கா, நீ ஆம்பிளை. எங்கே வேணுமானாலும் போகலாம். எப்படி வேணுமானாலும் இருக்கலாம். ஆனா பெண்கள் குழந்தைகள் அப்படி இல்லை. ஊர்ல அவர்களுக்கு தேவையான ஏற்பாடு பண்ணிட்டுத்தானே வந்தே?” என்று கேட்டார்.
ஆமாம், பணம் கொடுத்துட்டுத்தான் வந்தேன் என்றார் ரங்கையர்.
அந்த பதிலில் பகவானுக்கு திருப்தி ஏற்படவில்லை. “என்னமோ சொல்றே, சரி என்றார். சில நாட்களில் ரங்கையரின் அண்ணா வந்தார். அவரிடம் குடும்ப சூழ்நிலையை பகவான் விசாரித்து அறிந்தார்.
சென்னை சென்ற ரங்கையர் வேலை எதுவும் கிடைக்காமல் திருவண்ணாமலை திரும்பினார். “ரங்கா, நீ பணம் கொடுத்துட்டு வந்ததா சொன்னே, ஆனால் ஊர்ல எல்லாரும் ரொம்ப சிரமப்படறாளாமே?” என்று கேட்டார் பகவான். ரங்கையரால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அன்று அவரால் தூங்க முடியவில்லை. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு இருந்தார்.
என்ன ரங்கா தூக்கம் வரலியோ?” என்று குரல் கேட்டது. கண் திறந்தால் பகவான் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தார்.
காசு பணம்ன்னு கவலைப்படறியா? அதெல்லாம் ஒரு கனவு மாதிரி. கனவில உன்னை அடிக்கறா, நீயும் கஷ்டப்படறே, எப்படி தப்பிக்கலாம்ன்னு கவலைப்படறே! தூக்கம் கலைஞ்சால் நீயே இதை நினைச்சு சிரிப்பே!
சரி, ஒரு பத்தாயிரம் இருந்தா போறுமா?” என்றபடி மௌனமானார் பகவான்.
ரங்கையர் கவலை நீங்கியது.
விரைவிலேயே அவருக்கு ஒரு மோட்டார் கம்பனியில் உத்தியோகம் கிடைத்தது. நிறைய பஸ்களை விற்றதில் அவருக்கு கமிஷன் தொகை கணக்கிடப்பட்டு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது!
 

Thursday, April 23, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 15அனந்தநாராயணராவ் ஆசிரம டாக்டராக இருந்தார். பகவானுக்கு ஒருமுறை இடுப்பு முதல் முழங்கால் வரை வலி கடுமையாக இருந்தது.
அனந்தநாராயணராவ் தைலம் கொண்டு வந்தார். தேய்த்து விடுவதற்காக பகவானை நேராக படுக்கச்சொன்னார். பகவான் வழக்கமாக சாய்ந்த நிலையிலேதான் இருப்பார்.
பகவான் சிரித்துக்கொண்டே டாக்டர், நான் திருவண்ணாமலை வந்ததுலேந்து நேரா நீட்டி படுத்ததே இல்லை. நீங்க கண்ணை மூடி எட்டு மணி நேரம் தூங்கறதுல என்ன கிடைக்குமோ அதைவிட அதிகமா சாய்ஞ்சபடி கொஞ்ச நேரம் கண்ணை மூடித்திறந்தா எனக்கு கிடைச்சுடும்.” என்றார்.

அனந்தநாராயணராவ் ஒருமுறை தைலம் கொண்டுபோய்கொடுக்க பழையஹாலுக்குச் சென்றார். பகவான் சாய்ந்தபடி குறட்டை விட்டுக்கொண்டு இருந்தார். தைலத்தை வைத்துவிட்டுப் போவதா அல்லது காத்திருக்கலாமா என்று குழம்பியபடி நின்றார். பகவான் கண்களைத்திறந்து "ஏன் தைலத்தை கையிலேயே வெச்சுண்டு நிக்கறேள்? இங்கே வைக்கறதுதானே?” என்றார். “நீங்க தூங்கிண்டு இருந்தேளே! “ என்றார் டாக்டர். “நான் தூங்கினதா எதை வெச்சு சொன்னேள்?” என்று கேட்டார் பகவான். டாக்டர் பதில் சொல்லாமல் அமர்ந்தார்.

பகவான் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டு குறட்டை விட ஆரம்பித்தார்.
ஆசிரமத்துக்கு புதிதாக வந்தவர் ஒருவர் நமஸ்கரிக்க பகவான் கண்களை திறந்து அவரைப்பார்த்தார் பகவான். பின் கண்களை மூடிக்கொண்டார். ஆசிரமவாசி ஒரு வர் வந்து நமஸ்கரிக்க பகவான் கண்களைத் திறக்கவில்லை. குறட்டை தொடர்ந்தது.
பின்னாலேயே புதிதாக ஒருவர் வந்து நமஸ்கரிக்க கண்கள் திறந்தன.
டாக்டரைப்பார்த்து சிரித்தார் பகவான்!
  
1948 ஆம் ஆண்டு ஒருநாள் பகவான் ஹாலில் அமர்ந்து இருந்தார். பக்தர் கூட்டம் நிரம்பி இருந்தது. மதிய உணவுக்கான மணி ஒலிக்க அனைவரும் எழுந்து சாப்பாட்டுகூடத்துக்கு சென்றார்கள். பகவானுக்காக காத்திருந்தார்கள். பகவானின் கால்கள் பாதிப்பு அடைந்து இருந்தன. கால்களை நீவிவிட்டுக்கொண்டு சற்று நேரம் கழித்து கிளம்பினார். டைனிங் ஹாலுக்குள் நுழையும் போது வாசலில் கிராமத்து ஆசாமி ஒருவர் ஒரு கலயத்துடன் நின்று கொண்டிருந்தார்.
பகவான் நின்றார். ஆச்சரியத்துடன் சின்னப்பையா!’ என்றார். “நம்ம சின்னப்பையந்தானே?”
ஆமாம் சாமி நானேதான்! ”
எப்படி இருக்கே? நல்லா இருக்கியா>? என்ன பாக்க வந்தியா? பெரிய ஆளாயிட்டயே? பானையில என்ன கூழா?”
ஆமாஞ்சாமி! கொஞ்சம் கூழ் கொண்டு வந்தேன்
கொண்டு வா! சாப்பிடறேன்!” என்று சொல்லி கைத்தடியை வைத்துவிட்டு கூழ் ஊற்ற வாகாக வாயருகில் கை வைத்து நின்றார். சின்னப்பையன் கூழ் வார்த்தார். பகவான் உறிஞ்சி உறிஞ்சி அமிர்தம் போல அதை குடித்தார்.
சின்னப்பையன் ஆனந்தமடைந்தார்,
பகவான் நிதானமாக குடித்தார்.
டைனிங் ஹாலில் பலர் பசியுடன் உட்கார்ந்து இருந்தனர். அவர்களில் சிலர் எரிச்சலடைந்தார்கள். பகவான் வராமல் யாரும் சாப்பிடுவது இல்லை. நேரமோ ஆகிக்கொண்டு இருந்தது! தரிசிக்க வந்த ஒருவர் தாமதத்தின் காரணத்தை அறிய வெளியே வந்தார். பகவானைப் பார்த்து எல்லாரும் காத்துக்கொண்டு இருக்கா என்றார்.
பகவான் இங்கே உங்களுக்காக மட்டும்தான் நான் இருக்கறதா நினைக்கறேளா? ஏன்? உங்களுக்கு மட்டுமே நான் சொந்தமா? மலையிலே இருந்தப்ப நீங்க எல்லாம் எங்கே போனேள்? இந்த சின்னபையன் மாதிரி சிலர்தான் அவாளோட கூழை கொடுத்து பாத்துண்டா. அப்போ எல்லாரும் எங்கே போனேள்?” என்று கடிந்து கொண்டு தன் நண்பரையும் உணவுக்கு அழைத்துக்கொண்டு உள்ளே போனார்.

   

Wednesday, April 22, 2015

உள்ளது நாற்பது - 18


அறியாமை விட்டறிவின் றாமறிவு விட்டவ்
வறியாமை யின்றாகு மந்த வறிவு
மறியா மையுமார்க்கென் றம்முதலாந் தன்னை
யறியு மறிவே யறிவு.


அறியாமை விட்டு அறிவுஇன்றாம் அறிவுவிட்டுஅவ்
அறியாமை இன்றுஆகும் அந்த அறிவும்
அறியாமையும் ஆர்க்குஎன்று அம்முதலாம் தன்னை
அறியும் அறிவே அறிவு.

தன்னைத்தான் சரியாக அறியாதது அஞ்ஞானம் என்னும் அறியாமை. இது இல்லாமல் நான் என்ற உணர்வு இருப்பதில்லை. இந்த நான் உணர்வு இல்லாமல் அஞ்ஞானமும் இருப்பதில்லை. இவ்விரண்டும் யாருக்கு உண்டாகின்றன என்று விசாரித்து அறிந்து அறியாமையும் அறிவும் எங்கே உதிக்கின்றன எங்கே ஒடுங்குகின்றன என்று பார்த்து அந்த மூல வஸ்துவின் ஸ்வரூபத்தை உணர்ந்து அறிதலே உண்மை அறிவாகும்.

विद्या कथं भाति न चेदविद्या विद्यां विना किं प्रविभात्यविद्या ।
द्वयं च कस्येति विचार्य मूल- स्वरूपनिष्ठा परमार्थविद्या ॥ १२ ॥

வித்³யா கத²ம்ʼ பாதி ந சேத³வித்³யா வித்³யாம்ʼ வினா கிம்ʼ ப்ரவிபாத்யவித்³யா |
த்³வயம்ʼ ச கஸ்யேதி விசார்ய மூல- ஸ்வரூபனிஷ்டா² பரமார்த²வித்³யா || 12 ||
 

Tuesday, April 21, 2015

ரமணர்- அடியார்கள் - போக்கிரி மணி


பகவானுடைய பள்ளியில் அவருக்கு சீனியர் மணி. முரட்டு ஆசாமி. பலசாலி. எந்த கோவிலுக்கும் போக மாட்டார். யாரையும் வணங்க மாட்டார். எல்லாரும் அவரை போக்கிரி மணிஎன்றே அழைத்தனர்.
இவர் பகவான் திருவண்ணாமலைக்கு வந்த சில வருடங்களில் தன் தாயாருக்கு துணையாக திருப்பதிக்கு சென்றார். திரும்பும் வழியில் பகவானை பார்த்துவிட்டுப்போக தாயார் ஆவல் தெரிவித்தார். மணி மறுத்தார். ‘நான் அந்த போலி சாமியாரை எல்லாம் பாக்க வர மாட்டேன். அவா அம்மா, அண்ணா, சித்தப்பா மாதிரி இல்லை நான். காதை பிடித்து திருகி இழுத்துக்கொண்டு வந்துவிடுவேன்என்றார். “என்னமோ செய்!” என்றார் தாயார்.
இருவரும் விரூபாக்‌ஷ குகைக்குப்போனார்கள். தாயாருக்கு என்ன நடக்குமோ என்று உள்ளூர பயம்! நமஸ்கரித்து விட்டு அமர்ந்தார். மணி பகவானை எடை போடுவது போல பார்த்தார். பகவானும் மணியை பார்த்தார். இருவரும் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். மணியின் கண்களில் அவரையும் மீறி கண்ணீர் வழியலாயிற்று. அது வரை எங்கும் யாரும் நமஸ்காரம் செய்யாத மணி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். பகவானுக்கு அடிமை போல ஆகிவிட்டார்!

விளாச்சேரியில் வீட்டில் இருந்த அனைவரும் சிருங்கேரி ஸ்வாமிகளிடம் மந்திர உபதேசம் பெற்றுக்கொண்டனர். மணி மட்டும் பெற்றுக்கொள்ளவில்லை. பகவான் இருக்கும்போது வேறு யாரிடமும் உபதேசம் பெறத்தேவையில்லை என்றூ சொல்லி உடனே கிளம்பி திருவண்ணாமலை வந்தார்.
பகவானிடம் மந்திரோபதேசம் செய்யுமாறு வேண்டினார். பகவான் வழக்கம் போல நீ யாருன்னு பாருஎன்றார்! போக்கிரி மணி ஆயிற்றே! விடுவதாக இல்லை,. பகவான் வழக்கமாக வெளியே கிளம்பும் நேரம் வழியை மறித்துக்கொண்டு “உபதேசம் செய்தால்தான் வழி விடுவேன்!” என்றார்!
பகவான் அவரை லேசாக தொட்டு வழிவிடச்சொல்வது போல சைகை செய்தார். “பேசாம சிவசிவான்னு இருக்காம ஏன் இப்படி பண்ணறே?” என்றபடி வெளியே வந்தார்.
மணி பகவான் கால்களில் சிவ சிவஎன்றபடியே விழுந்து உருண்டார். “எனக்கு உபதேசம் கிடைச்சுடுத்து; கிடைச்சுடுத்து! “ என்று கூவினார். அப்போதிலிருந்து சிவ நாமம் அவருடைய உள்ளில் கலந்தது.

சில வருடங்கள் சென்றன. மணி தன் இறுதி நாட்கள் நெருங்கிவிட்டதை உணர்ந்தார். உடனடியாக திருவண்ணாமலை வந்தார். சில நாட்கள் ஆசிரமத்தில் தங்கினார். தினமும் பகவான் இருக்கும் ஹாலை அங்கப்ரதக்‌ஷிணம் செய்வார். பகவான் தடுத்தும் கேட்கவில்லை. “நீங்க எனக்கு செஞ்சதுக்கு இதுக்கு மேலே செய்ய ஒண்ணும் தெரியலை பகவானே!” என்று அழுதார்.
ஊர் திரும்பியவர் தன் இறுதி நெருங்குவதை மனைவியிடம் சொன்னார். “பயப்படாதே! நான் பகவான்கிட்டேதான் போறேன். உன்னை தனியா விட்டுப்போறதா வருத்தப்படாதே. நான் போய் நாப்பது நாள்ளே உன்னையும் கூட்டிண்டு போறேன். இது பகவான் உத்திரவுஎன்றார்.
அதே போல் சில நாட்களில் சிவத்தில் கலந்தார். நாப்பதாவது நாள் அவரது மனைவியும் கலந்தார்!

   

Monday, April 20, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 14ஜி.வி.சுப்பராமையா பழைய ஹாலில் த்யானம் செய்து கொண்டிருந்தார். அவருடைய குழந்தை வந்து அப்பா எப்போது த்யானம் கலைந்து எழுந்திருப்பார் என்று காத்திருந்தது. பகவான இதை கவனித்துவிட்டு குழந்தையிடம் தன் தந்தையை எழுப்பச்சொன்னார்.
எழுந்த சுப்பராமையாவை பகவான் கடுமையாக கண்டித்தார். “குழந்தை சாப்பிட்டதா என்று கூட பார்க்காம என்ன த்யானம் வேண்டி இருக்கு? குழந்தையை விடவா த்யானம் பெரிசு?”

சுப்பராமையாவின் குழந்தை லலிதா துருதுரு என்று இருப்பாள். ஒரு முறை பழைய ஹாலில் ஏதோ செய்து கொண்டே இருந்தாள். பங்காவை பிடித்து இழுப்பது, புத்தகங்களை எடுப்பது வைப்பது என்று காரியம் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது.
அவ்வப்போது பகவான் என்ன பண்ணறே என்பார். அவள் நான் ஒண்ணும் பண்ணலே!” என்பாள். இதே போல மூன்று முறை நடந்தது.
அப்போது பகவான் சொன்னார்: “இந்தக் குழந்தை எதையாவது செய்து கொண்டே இருக்கா. ஆனால் கேட்டா தான் ஒண்ணுமே செய்யலை என்கிறா. இதான் பரமார்த்தம்! நாம் என்ன செஞ்சாலும் ஒண்ணும் செய்யலை; சும்மாத்தான் இருக்கோம். சின்னக்குழந்தை இதை சொல்லறது. ஆனா இங்கே வரவாளுக்கு இது புரிய மாட்டேங்கிறது! ஏதேதோ செய்யறதா சொல்லறா!”

சுப்பராமையாவின் குடும்பத்தினர் ஊருக்கு கிளம்பினர். குழந்தைகள் சொல்லிக்கொண்டு போக வந்தனர். அப்போது வழக்கமாக பகவான் மலைக்குப் போகும் நேரம். குழந்தைகள் நமஸ்கரித்து நாங்க எங்க வீட்டுக்கு போறோம்என்றனர்.
பகவான் சந்தோஷமாக சரி, நீங்க உங்க வீட்டுக்கு போங்க. நானும் என் வீட்டுக்குப்போறேன்என்றபடி மலைக்கு கிளம்பினார்.

சுப்பராமையா பகவானிடம் குரு அருள் என்கிறது ப்ரத்யேகமா என்ன? என்று கேட்டார்.
இப்போ..... யாருக்கு ஆத்ம ஞானம் வேணும்ன்னு விசாரிச்சாலும், இல்லை யார் ஆத்ம ஞானம் அடையப்போறான்னு விசாரிச்சாலும் நான் இந்த உடம்பு என்கிற தனித்தன்மையும் போயிடும்; கூடவே நான் இன்னும் ஆத்ம ஞானம் அடையலேங்கிற அஞ்ஞானமும் போயிடும்! இதான் குருவோட ப்ரத்யேக அருள்! குரு செய்யறது நான் ஞானமடையலே என்கற மயக்கத்தை போக்கறதுதான். ஆத்ம ஞானம் தரது குருவாலேயும் முடியாது; கடவுளாலேயும் முடியாது!
குருகிட்டே ஆத்ம ஞானம் கொடுங்கோன்னு கேட்கிறது என்னை எனக்கு கொடுங்கோன்னு கேக்கிற மாதிரிதான். குருவையும் தனி ஆளா பாக்கிறேள். அவர் உங்களைவிட வேற இல்லைஎன்றார்.


Saturday, April 18, 2015

உள்ளது நாற்பது - 17தன்மையுண்டேன் முன்னிலைப டர்க்கைக டாமுளவாந்

தன்மையி னுண்மையைத் தானாய்ந்து தன்மையறின்
முன்னிலைப டர்க்கை முடிவுற்றொன்றா யொளிருந்
தன்மையே தன்னிலைமை தான்.

தன்மைஉண்டேல் முன்னிலை படர்க்கைகள்தாம் உளவாம்
தன்மையின் உண்மையைத்தான் ஆய்ந்து தன்மை அறின்
முன்னிலை படர்க்கை முடிவுற்று ஒன்றாய்ஒளிரும்
தன்மையே தன் நிலைமை தான்.

அகங்காரத்தால் நான் என்று தன்மை தோன்றுவதால் நீ என முன்னிலையும் அவன் என படர்க்கையும் தோன்றுகின்றன. அந்த ’நான்’ யார் என்று விசாரித்து அதன் உண்மைத்தன்மையை அறிய ’நான்’ என்னும் தன்மை போய்விடுகிறது. தன்மை போனால் முன்னிலையும் படர்க்கையும் காணாமல் போவது இயல்பே. அதன் பின் எஞ்சி ஒளிர்வது ஒன்றாக இருக்கும் ஒரே பொருளே. இதுவே யதார்த்த நிலையாகும்.


तद्युष्मदोरस्मदि सम्प्रतिष्ठा तस्मिन् विनष्टेऽस्मदि मूलबोधात् ।
तद्युष्मदस्मन्मतिवर्जितैका स्थितिर्ज्वलन्ती सहजात्मनः स्यात् ॥ १६ ॥

தத்³யுஷ்மதோ³ரஸ்மதி³ ஸம்ப்ரதிஷ்டா² தஸ்மின் வினஷ்டே()ஸ்மதி³ மூலபோ³தாத் |
தத்³யுஷ்மத³ஸ்மன்மதிவர்ஜிதைகா ஸ்தி²திர்ஜ்வலந்தீ ஸஹஜாத்மன: ஸ்யாத் || 16 ||
 

Friday, April 17, 2015

ரமணர் அடியார்கள் - சிவானந்தஸ்வாமி


சிவானந்தஸ்வாமி கிராமவாசி. வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தவர். பகவானை தரிசித்த மாத்திரத்திலேயே ஈர்க்கப்பட்டார். ஏதேனும் வேலை செய்து கொண்டு இங்கேயே இருந்துவிடலாமா என்று யோசித்தார். ஆனால் தம் சேவையை இங்கே ஏற்றுக்கொள்வார்களா என்று தயக்கம்.
அப்போது ஆச்சரியமாக அவரிடம் சின்னஸ்வாமி நேராக வந்து மாலை கட்டத்தெரியுமா?” என்று கேட்டார்/
இவரும் சந்தோஷமாக கட்டுவேன் சாமி!” என்றார்.
முதல் நாள் கட்டிய மாலையை பகவானிடம் காண்பித்தார்.
பகவான்அருமையா இருக்கு! நானும் கட்டுவேன். ஆனா இவ்வளோ அழகா வராது. கந்தாஸ்ரமத்துலே இருக்கும்போது மாலை கட்டி பெரிய கோவிலுக்கு அனுப்புவோம். இந்த கலையை மத்தவாளுக்கும் சொல்லிக்கொடு!” என்றார்.
இது தொடர்ந்தது. பின்னால் இவர் ஓல்ட் ஹாலிலேயே பகவானுக்கு நேரடி சேவகராக நியமிக்கப்பட்டார்.

நூல் திரட்டு புத்தகம் வெளியான போது அது ஒரு பெரிய விசேஷமாக நிகழ்வாக இருந்தது. எல்லாரும் சந்தோஷத்துடன் அதை வாங்கினார்கள். சின்னஸ்வாமி மிகவும் கண்டிப்பானவர். ஆசிரமவாசிகள் உட்பட யாருக்கும் இலவச பிரதி கிடையாது என்று சொல்லிவிட்டார்.
அது வெளியான சில நாட்களாக பகவான் தன்னிடம் இருந்த ஒரு நோட்டுப்புத்தகத்தில் எதையோ எழுதிக்கொண்டு இருந்தார். மணி மணியான அச்சிட்டாற் போன்ற கையெழுத்து! எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எழுதிக்கொண்டே இருந்தார். அதை யாருக்கும் காட்டவும் இல்லை!
சில நாட்கள் சென்றன. ஒரு நாள் பகவான் சிவானந்தஸ்வாமியை கூப்பிட்டுசிவானந்தம், நூல் திரட்டு வாங்க காசுக்கு நீ எங்கே போவே? இதை நானே எழுதியிருக்கேன். நீ இதை வெச்சுக்கோ!” என்று அவர் கையில் கொடுத்தார்!
மற்ற சேவகர்களிடம் காசு இருந்ததால் அவர்கள் வாங்கி இருந்தார்கள். சிவானந்தஸ்வாமியால் வாங்க முடியவில்லை!
கிராமத்துக்காரர் என்பதால் யாரும் அவரை தீவிரமான ஆன்மீக சாதகராக பார்ப்பதில்லை. ஆனால் பகவான் அவரது சாதனையை மதித்தது அவரை உணர்ச்சி வசப்பட வைத்தது. நெக்குருகி வணங்கி நோட்டை பெற்றுக்கொண்டுபகவானே! எனக்கு விசேஷமா மந்திரம் ஏதாவது உபதேசம் பண்ணுங்கோ! நான் எப்பவும் அதை ஜபம் பண்ணறேன்!” என்றார்.
பகவான் சிரித்துக்கொண்டே நீயே உனக்கு எப்பவும் உண்மையா இரு! அது போதும்என்றார்.
ஒரு நாள் சிவானந்தஸ்வாமிக்கு பகவான் அருணாசலனேதான் என்ற உணர்வு பலமாக ஏற்பட்டது. பகவானை பார்க்கும்போதெல்லாம் அது மேலோங்கியது.
இதை பகவானிடம் சொல்வதா இல்லையா, இது உண்மையா அல்லது பகவான் மீது தமக்கு இருக்கும் பிரியத்தால் இப்படி தோன்றுகிறதா என்று குழம்பி தவிப்பில் இருந்தார்.
அப்போது பகவான் சிவானந்தம், உன்கிட்டே கொடுத்த நோட்டுப்புத்தகத்தை கொடுஎன்று கேட்டு வாங்கிக்கொண்டார். அதை இரண்டு மணி நேரம் கையில் வைத்து இருந்தார். யாரேனும் வந்தால் மூடி வைத்துக்கொண்டார்!
இரண்டு மணிநேரமான பின் சிவானந்தம், எதுக்கு சந்தேகம்? தீர்த்துட்டா போச்சு! நீயே பாரு! “ என்று சொல்லி நோட்டுப்புத்தகத்தை கொடுத்தார். அதில் முதல் பக்கத்தில் பகவான் அருணாசலத்தை தன் கையால் வரைந்து இருந்தார்.
 

Thursday, April 16, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 13

 

டாக்டர். எம்.ஆர். க்ருஷ்ணமூர்த்திஐயர் தண்ட்ராம்பட்டில் பணி புரிந்து வந்தார். விடுமுறை நாட்களில் ஆசிரமத்துக்கு வந்து அங்கிருப்பவர்களுக்கு வைத்தியம் பார்ப்பார்.
டாக்டரின் மனைவிக்கு டைபாய்ட் ஜுரம் கண்டது. அந்த காலத்தில் தண்ட்ராம்பட்டு தனியாக ஒதுக்குப்புறத்தில் இருந்தது.
திடீரென்று பகவான் தன் பக்தரான நம்பியாரிடம் டாக்டரின் மனைவிக்கு உடம்பு சரியில்லை. உடனே உங்க காரை அனுப்பி கூட்டி வந்து டவுனில் வைத்தியம் பார்க்கச்சொல்லுங்கோஎன்றார்.
அதே போல சிகித்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் ஜுரம் அதிகமாகி நாடி விழுந்துவிட்டது. டாக்டர் தன் மனைவியை நன்கு சோதித்துவிட்டு அவர் இறந்துவிட்டதாகச் சொன்னார். அதை நம்பாமல் அவருடைய தகப்பனார் இன்னொரு டாக்டரை கூப்பிட்டு பார்க்கச் சொன்னார். அவரும் நன்கு சோதித்துவிட்டு இறந்துவிட்டதாகவே சொன்னார். இந்த தகவல் பகவானுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்த பகவான் நிமிர்ந்து அமர்ந்தார். ஏதும் பேசாமல் மௌனமானார்.
சிறிது நேரத்தில் டாக்டர் மனைவிக்கு மூச்சு வந்து பிழைத்துவிட்டார்!

பகவானுக்கு ஒரு முறை தொடர் விக்கல் வந்து கொண்டு இருந்தது. ஆசிரம டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வைத்தியம் பார்த்தார். நாட்கள் ஆயிற்றே தவிர விக்கல் கொஞ்சமும் குறையவில்லை. என்ன செய்வதென புரியாமல் மானசீகமாக பகவானிடமே வேண்டிக்கொண்டார். இந்த நோய்க்கு என்ன மருந்து? பகவானே சொல்லி அருளணும்!
வீடு திரும்பியும் அழுது கொண்டு இருந்தார். ஏன் என்று யாருக்கும் புரியவும் இல்லை; கேட்க துணிவும் இல்லை.
அழுதே தூங்கிப்போனார். அதி காலை ஒரு கனவு கண்டார். அதில் பகவான் எதிரில் இவர் அழுது கொண்டு இருந்தார். பகவான் அவரிடன் ஏன் அழறேள்?” என்று கேட்க இவர்  உங்களுக்கே தெரியுமே!என்றார்.
 “அட, இதுக்கா அழுகை? உங்க வீட்டு தோட்டத்திலே சீந்தல் கொடின்னு ஒண்ணு இருக்கு. அதோட இலையை பறிச்சு நெய்ல வதக்கி கொஞ்சம் வெல்லம் சுக்கு சேத்து உருண்டை பண்ணி கொண்டு வாங்கோ! கவலைப்பட வேண்டாம்என்றார்.
திடுக்கிட்டு எழுதவர் மனைவியை ஹரிக்கேன் விளக்கு கொண்டுவரச்சொல்லி தோட்டத்துக்கு போனார். தோட்டத்தில் கொடியா? அங்கே முழுக்க சிமெண்ட் தரைதானே? போய்ப் பார்த்தார். அங்கே சிமெண்ட் தரை ஒரு மூலையில் உடைந்து இருந்தது. சில செடிகள் தாமாக வளர்ந்து இருந்தன. ஒரே ஒரு கொடியும் இருந்தது. அதன் இலைகளை பறித்து பகவான் சொன்னபடி தயாரித்து எடுத்துக்கொண்டு அதிகாலையிலேயே ஆசிரமம் சென்றார். பகவான் சோஃபாவில் அமர்ந்து இருந்தார். டாக்டரை பார்த்ததும் அவரது முகம் மலர்ந்தது! “வாங்கோ என்ன கொண்டு வந்திருக்கேள்? கொடுங்கோ” என்று கை நீட்டினார்.
ஒரு உருண்டையை சாப்பிட்டார். டாக்டர் தான் கண்ட கனவை விவரித்தார். பகவான் எதுவுமே அறியாதவர் போல கேட்டுக்கொண்டார்.
நோய் நீங்கியது!

 

Wednesday, April 15, 2015

உள்ளது நாற்பது - 16


          ஞானமாந் தானேமெய் நாநாவா ஞானமஞ்
ஞானமாம் பொய்யாமஞ் ஞானமுமே – ஞானமாந்
தன்னையன்றி யின்றணிக டாம்பலவும் பொய்மெய்யாம்
பொன்னையன்றி யுண்டோ புகல்.

ஞானமாம்தானே மெய் நாநாவாம் ஞானம்அஞ்
ஞானமாம் பொய்யாம் அஞ்ஞானமுமே – ஞானமாம்
தன்னைஅன்றிஇன்று அணிகள்தாம் பலவும்பொய் மெய்யாம்
பொன்னை அன்றி உண்டோ புகல்.

தங்கத்தால் பல அணி ஆபரணங்கள் செய்திருந்தால் அவை பலவாக அழைக்கப்படுகின்றனஇருப்பினும் அவை அனைத்தும் தங்கமேவேறல்லஅதே போல ஞானம் ஒன்று மட்டுமே மெய்ப்பொருளாக இருக்கிறதுநாலா விதமாக ஞானம் எனத் தோன்றினாலும் அவை அனைத்தும் அஞ்ஞானத்தில் விளைந்தனவேஆகையால் பலவாய்த் தோன்றும் அவையும் அஞ்ஞானமேஅவை அனைத்தும் ஒரே ஞானப்பொருளே.
பல மதத்தினர் மெய்ப்பொருள் என ஒன்று உள்ளது என்பதை ஒப்புக்கொள்கின்றனர்இருந்தாலும் அதற்கு அவரவர் தம் வழியில் ஒரு பெயரையோ உருவத்தையோ கொடுத்துக்கொள்கின்றனர்இந்த பெயரையும் உருவத்தையும் நீக்கிப்பார்க்கையில் எல்லாமே ஒரே மெய்ப்பொருள்தான்.


सत्यश्चिदात्मा विविधाकृतिश्चित् सिध्येत्पृथक्सत्यचितो न भिन्ना ।
भूषाविकाराः किमु सन्ति सत्यं विना सुवर्णं पृथगत्र लोके ॥ १५ ॥

ஸத்யஶ்சிதா³த்மா விவிதா⁴க்ருʼதிஶ்சித் ஸித்⁴யேத்ப்ருʼ²க்ஸத்யசிதோ ந பி⁴ன்னா |
பூ⁴ஷாவிகாராகிமு ஸந்தி ஸத்யம்ʼ வினா ஸுவர்ணம்ʼ ப்ருʼ²³த்ர லோகே || 15 ||