Pages

Showing posts with label வித்தியாசமான நிகழ்வுகள். Show all posts
Showing posts with label வித்தியாசமான நிகழ்வுகள். Show all posts

Monday, March 21, 2016

வித்தியாசமான நிகழ்வுகள் - 41


திருவண்ணாமலையில் ஒரு காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. அதற்கு மஹாத்மா காந்தி வந்திருந்தார். அப்போது காங்கிரஸ் அரசியல் கட்சியாக முன் வைக்கப்பட்டது. காந்திஜி ரமணரை சந்திப்பாரா என்று பரவலாக விவாதிக்கப்பட்டது. எல்லாருக்கும் பொதுவான ரமணர் ஒரு அரசியல் கட்சி தலைவரை சந்திப்பதோ ஆதரவு தெரிவிப்பதோ நடக்காது என்றனர் சிலர். யார் வேண்டுமானால் பகவானை பார்க்க முடிகிறது, காந்திஜி ஏன் பார்க்க முடியாது என்று சிலர்.
அந்த காலகட்டத்தில் பகவானின் சகோதரரின் மகன் திருவண்ணாமலையில் இருந்தார். தீவிர காங்கிரஸ் தொண்டராகவும் இருந்தார். இவர் பகவானையும் காந்திஜியையும் சந்திக்க வைக்க முயற்சி எடுத்தார். பகவான் ஏதும் சொல்லவில்லை. வேண்டாம் என்று சொல்லைவில்லையே என்று இவருக்கு திருப்தி. காந்திஜியுடன் பேசியதில் அவர் பகவானை சந்திக்க ஒப்புக்கொண்டு விட்டார். மாலை ஐந்து மணி போல் சந்திக்கச்செல்வதாக ஏற்பாடு செய்தார்கள்.
இவர் வெகு உற்சாகமாக ஆசிரமத்தில் தோரணங்கள் கட்டவும் கொடிகளை கட்டவும் முனைந்தார். மாலை நான்கு மணிக்கு பகவான் வழக்கம் போல மலையில் உலாவச்செல்ல வெளியே வந்தார். இவருக்கு குலை நடுங்கிவிட்டது. ஏனெனில் இப்படி வரவேற்பு கொடுப்பதற்கெல்லாம் பகவானின் இசைவை பெறவில்லை! பகவானோ அமைதியாக இதை எல்லாம் பார்த்துவிட்டு, இந்த கொடி இங்கே வேண்டாம், அங்கே கட்டினால் இன்னும் பார்வையாக இருக்கும் என்ற ரீதியில் சில திருத்தங்களை சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு மலைக்குப் போய்விட்டார்!
காந்திஜி வரும் சமயத்தில் பகவான் ஆசிரமத்தில் இல்லை என்றால் என்ன செய்வது? யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. கையை பிசைந்து கொண்டு இருந்தார்கள். நேரம் போய்க்கொண்டு இருந்தது. பொழுது சாயப்போகிறது; என்னேரமும் காந்திஜி வந்துவிடுவாரே பகவானை இன்னும் காணோமே என்று கவலை அதிகரித்தது!
காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து தகவல் வந்தது. மற்ற காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து ஏதோ செய்தி வந்து காந்திஜி மாலை ட்ரெய்னில் அவசரமாக சென்னை திரும்பிவிட்டதாக!

Tuesday, March 15, 2016

தேஹம் நாஹம்


 பகவான் ரமணரின் அடியார்களில் ஒருவர் குர்ரம் சுப்பராமையா. வருடா வருடம் ரமணாஸ்ரமத்துக்கு வந்துவிடுவார். இரு சிறு குழந்தைகளும் அவருடன் வருவர். வந்திருக்கும் அடியார்களில் சிலர் எதையேனும் எழுதி கொண்டு வந்து பகவானிடம் காட்டுவது உண்டு. அதில் பிழைகள் இருந்தால் திருத்திக்கொடுக்க வேண்டுவர்கள். அவரும் அதை பார்த்து திருத்தி கொடுப்பார். இதை பார்த்த சுப்பராமையாவின் சின்னக்குழந்தை தன் பள்ளி நோட்டுப்புத்தகத்தை கொண்டு பகவானிடம் கொடுத்தது. கூடியிருந்தவர்களுக்கு ஒரே சிரிப்பு. ஆனா பகவான் மற்றவர்கள் கொடுத்ததை வாங்கியது போலவே இதையும் வாங்கி குழந்தை எழுதியதை திருத்தி நோட்டுக்கு அட்டை போட்டு கொடுத்தார்.
இந்தக்குழந்தையை கூப்பிட்டு அருகில் வைத்துக்கொண்டு குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பார்.
இது துண்டு. இது பகவானோட துண்டு.
சரி.
துண்டு பகவான் ஆகுமோ?
ஆகாது.
இது என்ன?
கை.
இது பகவானோட கை. இந்த கை பகவானாகுமோ?
ஆகாது.
குழந்தையின் சட்டையை காட்டி இது என்ன என்பார். அது சட்டை என்று சொல்லும்.
இது யாரோட சட்டை?
இது என் சட்டை.
இது உன் சட்டை; ஆனா சட்டை நீயாகுமோ?
இல்லை.
இது என்ன?
இது என் கை.
இது உன் கை; ஆனா இந்தக்கை நீயாகுமோ?
இல்லை.
இது உன் உடம்பு; ஆனா இந்த உடம்பு நீயாகுமோ?
இல்லை.
இதே போல திருப்பித்திருப்பி சொல்லிக்கொடுப்பார்.
அப்புறம் சொல்லிக்கொடுத்தது:
தேஹம் நாஹம் சொல்லு. குழந்தை திருப்பிச்சொல்லியது.
கோஹம் ஸோஹம் சொல்லு. குழந்தை திருப்பிச்சொல்லியது.
( தேஹம் நாஹம் கோஹம் ஸோஹம் + உடம்பு நான் அல்ல. நான் யார்? அதுவே நான்.)
இதையே திருப்பித்திருப்பி சொல்லிக்கொடுத்தார்.
மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதெல்லாம் எவ்வளோ பெரிய விஷயம். குழந்தைக்கு என்ன புரியும்?
சுப்பராமையா ஊருக்கு செல்லும் நாள் வந்தது. பகவானிடம் சொல்லிக்கொண்டு போக வந்தார்கள். பகவான் மலைக்குப்போக கிளம்பிக்கொண்டு இருந்தார். குழந்தையை பார்த்து "எங்கே நான் சொல்லிக்கொடுத்ததை சொல்லு பார்க்கலாம்?”என்றார்.
தேஹம் நாஹம் கோஹம் ஸோஹம் . குழந்தை திருப்பிச்சொல்லியது.
ரொம்ப சரி. இதையே தினமும் சொல்லிக்கொண்டே இரு! தன் கையில் இருந்த தடியால் அதன் தலையில் தட்டி சொன்னார் “ நான் என் வீட்டுக்குப்போறேன். நீயும் உன் வீட்டுக்குப்போ!”
ஓரிரு மாதங்களில் குழந்தை இறந்துவிட்டது. அதன் சமாதியில் கல்வெட்டு ஒன்று வைத்தார்கள். தேஹம் நாஹம் கோஹம் ஸோஹம்.

Monday, July 20, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் -40




பகவானை தரிசிக்க ராமநாதபுரம் ராஜா வந்திருந்தார். அவர் வந்த போது பகவான் பாகசாலையில் கீரை ஆய்ந்து கொண்டுஇருந்தார். ராஜா வந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகும் தன் வேலையைதொடர்ந்து அதே போல செய்து கொண்டு இருந்தார். முடிக்க அவசரமே காட்டவில்லை. ராஜா காத்திருந்தார். வேலையை முடித்த பிறகு பகவான் வந்து சோஃபாவில் அமர்ந்தார்.
ராஜா நமஸ்காரம் செய்துவிட்டு பகவானுடம் சுமார் ஒரு மணி நேரம் இருந்தார். சில சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றார். விடை பெற்றார்.
தண்டபாணி ஸ்வாமியும் இன்னும் சிலரும் அவரை வழி அனுப்ப கோவில் வரை சென்றனர். தண்டபாணிஸ்வாமிதான் அப்போது ஆசிரம நிர்வாகத்தை கவனித்து வந்தார்.செல்லும் வழியில் தண்டபாணிஸ்வாமி ராஜாவிடம் “நீங்களே பார்த்தேள்! பகவான் தங்க ஒரு நல்ல கட்டிடம் இல்லை. அதுக்கெல்லாம் பணம் இல்லை. சமயத்தில் எங்களுக்கே சாப்பாடுகூட இல்லாமல் போய்விடும்” என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார். அதாவது நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக நன்கொடை ஏதும் தந்தால் உதவியாக இருக்கும் என்று சொன்னார்.
இந்த விஷயம் பகவான் காதுக்கு போயிற்று. அவர் கடுமையானார்.
“நீங்க அந்த ராஜாவோட நம்பிக்கையை கெடுத்துட்டேள். அவாகிட்டே அரண்மனை இருக்கு; காசு இருக்கு; அது கொடுக்கிற சந்தோஷம் கூட இருக்கு. ஆனா விரக்திதான் மிஞ்சறது. காசு பணம் கொடுக்கிறது உண்மையான சந்தோஷம் இல்லைன்னுதான் கௌபீனம் கட்டிண்டு இருக்கற எங்கிட்ட வரா. நான் துக்கத்துல இருக்கேன். சுகப்பட ஏதாவது வழி உண்டான்னு கேட்டுண்டு வரா.
அவா அமைதியை தேடி இங்கே வந்தவா. நீங்க அவா கிட்டே குறைபாட்டு பாடி அவா நம்பிக்கயை கெடுத்துட்டேள். இப்ப என்ன நினைப்பா? இவனும் நிம்மதியா இல்லே. ஏன்னா பொருள் கேக்கறான்.
அவா அரண்மனைக்குப்போய் யோசிப்பா. துறவு இதுக்கெல்லாம் பதில் இல்லை. காசு பணம் இருந்தாத்தான் நிம்மதி. அது கொடுக்கறதே சந்தோஷம்னு. நீங்க ஒரு மனுஷனோட நம்பிக்கையை கெடுத்துட்டேள்.
தயவு செஞ்சு இனிமே யார்கிட்டேயும் ஸ்வாமிக்கு அது இல்லே இது இல்லேன்னு யாசிக்காதீங்கோ. பணம் காசு கேக்கவே கேக்காதீங்கோ!” என்றார் பகவான்.
 

Thursday, July 16, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 39


ரங்கநாயகி அம்மாள் பகவானின் பக்தை. தெலுங்கு பேசும் குடும்பம். நன்கு படித்தவள்; ஆங்கிலத்தில் நன்கு உரையாடுவாள். ஏனோ பகவானை பார்க்கும்போதெல்லாம் அவளுக்கு ஓடிப்போய் அவரை கட்டிக்கொள்ளத்தோன்றும்! அடக்க முடியாது செயல்படுத்தவும் ஆரம்பித்தாள்! சேவகர்கள் தடுத்தனர். இது தொடர் கதை ஆகிவிட்டது. அதனால் அவளை ஆசிரமத்திலேயே அனுமதிக்க மறுத்தனர்.
அவள் நேராக சென்னைக்குச் சென்று ஒரு வக்கீலை அணுகினார். ஆசிரமத்தின் மீது வழக்கு போட்டு மீண்டும் பகவானை தரிசிக்க அனுமதி பெற்றுக்கொடுக்கும்படி கேட்டார். வக்கீல் அவளிடம் ஏன் அனுமதி மறுக்கிறார்கள்? என்று கேட்டார்.
“நான் பைத்தியக்காரியாம்!”
“நீங்கள் உண்மையில் அப்படியா?”
“பார்த்தால் அப்படியா தெரிகிறேன்?”
”ரமண மகரிஷி என்பவர் யார்?”
அடுத்து அரை மணி நேரம் அவரைப்பற்றி உயர்வாக அவள் விவரித்தாள்.
வக்கீலுக்கு அவரது உயர்வு புரிந்தது. இவளின் பக்தியும் புரிந்தது. ஆனாலும் “பகவானைப்பார்த்து அவருடன் பேசிய பிறகே கேஸை எடுத்துக்கொள்ளலாமா இல்லையா என்று முடிவு செய்வேன்” என்று கூறினார். அவளும் உடனே போகலாம் என்றாள். இருவரும் ரயிலில் கிளம்பினர். அதி காலை திருவண்ணாமலையை அடைந்தனர். ரயில் நிலைய அதிகாரி இவரை விசாரித்து விட்டு மிகுந்த மன வருத்தம் அடைந்தார். வேண்டாத வேலை என்றார்.
குதிரை வண்டியில் ஆசிரமம் செல்லும்போதும் வண்டிக்காரன் பகவானைபற்றி உயர்வாக பேசிக்கொண்டே வந்தான். ஆசிரமம் வந்து சேர்ந்தார். வரவேற்று ஒரு அறையை ஒதுக்கினர். குளித்து முடித்து பகவானை பார்க்கச்சென்றார். நமஸ்கரித்தார். பகவான் தன் சேவகரிடம் இவரைக்காட்டி மெதுவாக ஏதோ கூறினார். அவர் வந்து வக்கீலை அழைத்துச் சென்று இட்லியும் காப்பியும் உணவருந்தக் கொடுத்தார். உணவருந்திவிட்டு மீண்டும் ஹாலுக்கு போனார். பகவான் உட்காரும்படி சைகை செய்தார். சிறிது நேரம் சென்றபின் பக்கத்தில் இருந்த ஒருவர் வக்கீலிடம் “நீங்க வக்கீல்ன்னு நினைக்கிறேன், ரங்கநாயகி அம்மாளுக்காக கேஸ் போட வந்தீங்களா? அவங்க பைத்தியம்ன்னு உங்களுக்கு தெரியுமா?” என்றார். இவர் “நான் வக்கீல். என் பெயர் சீனிவாசராவ்” என்றார். அவர் “நான் டாக்டர்” என்றார். “அப்படியானா அவங்க பைத்தியம்ன்னு ஒரு சர்டிபிகேட் கொடுக்க முடியுமா” என்றார் வக்கீல். பதில் இல்லை. பின் வக்கீல் பகவானிடம் தான் வந்த விஷ்யத்தை விளக்கினார். பகவான் அமைதியாக முழுக்க கேட்டுக்கொண்டார். பின் ‘இங்கே உக்காருவாளே, அவளா? என்று தன் முன் முதல் வரிசையில் ஒரு இடத்தை காட்டினார். பின் “எங்கே அவள்” என்று கேட்டார்.
“ஆசிரம வாசலில் இருக்கிறார்.”
“இப்போ அங்கே இருப்பாளா?”
வக்கீல் ஆம் என்று சொல்லி தானே சென்று அவளை கூட்டிவந்தார். ரங்கநாயகி அம்மாள் வக்கீலின் பின்னே நடந்து வந்தார். ஹாலுக்குள் நுழைந்த உடனே “ரமணா, ரமணா” என்று கத்தியபடி பகவானை நோக்கி ஓடலானாள்.
வக்கீல் அப்படி செய்யலாகாது என்று கடிந்து அவரை உட்கார வைத்தார்.
பகல் உணவு முடிந்தது.
பகவான் வக்கீலிடம் நிறைய புகைப்படங்களை காட்டினார். பசு லக்‌ஷ்மி பற்றி பேசினார்.
மாலை ரயிலுக்கு ஊர் திரும்ப உத்திரவு கேட்டார் வக்கீல். பகவான் இரவு உணவு முடித்து போகலாம் என்றார்.
இரவு உணவுக்கு போய் பந்தியில் கோடியில் அமர்ந்தார். சாப்பிடத்துவங்கும் முன் ஒரு சேவகர் வந்து இவரை அழைத்துப்போனார். பகவான் அருகில் ஒரு இலை போட்டு இருந்தார்கள். அங்கே உட்காரச்சொன்னார்கள்.
சாப்பிடும் போது “நான் பேசலாமா?” என்று வக்கீல் கேட்டார்.
“தாராளமா” என்றார் பகவான். “பேசறதே உங்களுக்கு பிடிக்காது ந்னும் சாப்பிடும்போது உங்களோடு பேசக்கூடாதுன்னும் சொல்லித்தான் கூட்டி வந்தார்கள்” என்றார் வக்கீல்.
“பரவாயில்லை, என்ன கேட்கணுமோ கேளுங்கோ!” என்றார் பகவான்.
“ஆசிரமத்திலே இருக்கிறவங்க ரங்கநாயகி அம்மாள் பைத்தியம் என்கிறாங்க. ஆனா அவங்களோ உங்க எதிரே நார்மலாத்தான் இருக்காங்க. உண்மை என்ன?”
பகவான் சொன்னார்” “ சிலர் கால் பைத்தியமா இங்கே வர்றா! அரை பைத்தியமா திரும்பிப்போறா! சிலர் அரைப்பைத்தியமா வந்து முழு பைத்தியமா திரும்பிப்போறா! வெகு சிலர் முழு பைத்தியமாவே வந்து பைத்தியம் தெளிஞ்சு மீண்டுடறா! எல்லாமே ஆச்சரியம்தான்! இது எப்படின்னு சொல்ல முடியாது!”
 

Monday, July 13, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 38


ஸ்ரீ மாத்ரு பூதேஸ்வர கோவிலில் மேருவுக்கு தாமிர கவசம் செய்து வெள்ளி முலாம் பூசிக் கொடுத்து நன்கொடை செய்ய ஒரு சென்னை அன்பர் வந்திருந்தார். ஆபீஸில் விண்ணப்பித்தார்.
நிர்வாகத்தினர் முழுதும் வெள்ளியில் செய்து தருவதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். அவர் ஏனோ தயங்கினார். தாமிர கவசத்தை தருவதிலேயேமுனைப்பு காட்டினார். நிர்வாகம் முழுதும் வெள்ளி என்பதில் உறுதியாக இருந்தது. சின்னஸ்வாமி தன் ஆபீஸில் இருந்து ஒருவரையும் அன்பரையும் பகவானிடம் அனுப்பி அவரது கருத்தை கேட்டு வருமாறு சொன்னார்.
இருவரும் போனார்கள். பகவான் இருவர் சொன்னதையும் கேட்டுவிட்டு “என்னை ஏன் கேக்கறேள். ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ ஒண்ணை தீர்மானம் செய்யுங்கோ!” என்றார்.
இந்த பதிலில் சின்னஸ்வாமிக்கு திருப்தி இல்லை. ஆபீஸில் இருந்து சென்றவரை கடிந்து கொண்டு “பகவானுக்கு எது இஷ்டம்ன்னு போய் சரியா கேட்டுண்டு வாங்கோ” என்றார்.
அதே வேகத்தில் ஆபீஸ் அன்பர் சென்று பகவான் முன் நின்றார். “பகவானோட இஷ்டத்தை கேட்டு தெரிஞ்சுண்டு வரச்சொன்னார்“ என்றார்.
பகவான் நிதானமாக “எனக்கு எது இஷ்டமா? நான் யார்ன்னு தெரிஞ்சுண்டு எது நடக்குமோ அது நடக்கும், எது நடக்காதோ அது நடக்காதுன்னு சும்மா இருக்கறதே என் இஷ்டம்ன்னு போய்ச் சொல்லுங்கோ!” என்றார்.

ஒருமுறை ஏழைக்கிழவி ஒருத்தர் கந்தலாடையில் தயங்கியபடியே ஆசிரமத்துக்குள் நுழைந்தார். சுமார் 75 வயது இருக்கலாம். கையில் ஒரு சிறிய பாத்திரம். பழைய ஹாலில் பகதர் கூட்டம். பகவான் இருக்கும் இடம் தெரியவில்லை. கையை கண்களுக்கு மேலே வைத்துக்கொண்டு கண்களை இடுக்கிக்கொண்டு தேடினார். பகவானை பார்த்துவிட்டார். ஆனந்தம் பொங்கி வழிந்தது! “வரணும் வரணும்ன்னு நினைப்பேன் சாமி! இன்னைக்குத்தான் முடிஞ்சது” என்றபடி வீழ்ந்து கும்பிட்டார். எழுந்த பின் ’எவ்வளவு காலமாச்சு’ என்றபடி மீண்டும் வீழ்ந்து கும்பிட்டார்.
“இருபத்தாறு வருஷம் கழிச்சு இப்போதான் வந்திருக்கே!” என்று பகவான் சொன்ன போது அவருடைய கண்களில் பாட்டியை விட ஆனந்தம் பொங்கியதாக தோன்றியது!
“எனக்கு என்ன கொண்டு வந்தே? கொடு சாப்பிடறேன்!” என்றார்.
கூடியிருந்தோருக்கு பெரிய ஆச்சரியம்!
“தேன் கொண்டு வந்தேன் சாமி! இந்தா” என்று பாத்திரத்தை நீட்டினார்.
அபோது பகவான் அசகாயமான குரலில் “யாரேனும் சாப்பாடு கொடுத்தா நல்லாயிருக்கும்” என்றார்.
சின்னஸ்வாமி கிழவியை சாப்பிட கூட்டிப்போனார்.
அவர் போனதும் தன் வாழ்நாளில் யாரிடமும் எதுவும் கேட்காத பகவான் மிகவும் தயங்கியபடி “ யாராவது அவளுக்கு புடவை வாங்கித்தரேளா?” என்று கேட்டார். சொல்லி முடிக்கும் முன் நான் நீ என்று பலரும் போட்டி போட்டுக்கொண்டு ஓடினார்கள். பகவான் மெதுவாக “விலை உசந்தது எல்லாம் வேண்டாம். சாதா புடவையே போறும்” என்றார். இரண்டு புடவைகள் வந்தன.
சாப்பிட்டு முடித்த பாட்டி விடை பெற வந்தார்.
“பாட்டி யாரோ பிரியப்பட்டு புடவை வாங்கி கொடுத்து இருக்கா! வாங்கிக்கோ!” என்றார் பகவான். சேவகர் தந்த புடவையை வாங்க அவர் மறுத்தார்.
இப்போது பகவான் “பாட்டி! நானே தரேன்! தயவு செஞ்சு வாங்கிக்கோ!” என்ற போது குரல் தாசானுதாசன் போல் இனித்தது.
பாட்டி புடவையை சந்தோஷமாக வாங்கிக்கொண்டு விடை பெற்றார்!
 

Thursday, July 9, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 37


ஒரு முறை ராமசாமிப்பிள்ளை தென்னை மரங்களில் இருந்து தேங்காய்களை இரும்புத் துரட்டி போட்டு பறித்துக்கொண்டு இருந்தார். மலைக்கு கிளம்பிய பகவான் அதை பார்த்துவிட்டு “ இரும்பு துரட்டிக்கு பதிலா மூங்கில் குச்சியை கட்டி போடக்கூடாதா? இரும்புத்துரட்டி மரத்தை காயப்படுத்தறது பாரு! அது பாவமய்யா! நீர் கேக்காமலே இளநீர் தரது. அதைப்போய் இப்படியா பண்ணறது?” என்று சொன்னார்.
ஆனால் ராமசாமிப்பிள்ளை ‘பகவானுக்கு ஆன்மீகம் மட்டும்தான் நல்லாத்தெரியும். இந்த மாதிரி விஷயங்கள் அவ்வளவா தெரியாது. மூங்கில் துரட்டி போட்டா மூங்கில் சீக்கிரம் உடஞ்சிடும். நிறைய காய்கள் பறிக்க வேண்டியிருக்கு. அதுக்கு இரும்புத்துரட்டிதான் சரி’ என்று நினைத்துக்கொண்டு தன் வேலையை அப்படியே தொடர்ந்தார்.
பகவான் மலைக்கு போய் திரும்பிய போது ராமசாமிப்பிள்ளை வேலை செய்து கொண்டு இருந்தார். பகவான் கிட்டே வந்த போது ஒரு தேங்காய் நேராக ராமசாமிப்பிள்ளையின் முகத்தில் விழுந்து மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.
பகவான் “சொன்னப்ப கேக்கலை. இப்ப புரியறதா? நாம் செய்யற பாபம் நமக்கே திரும்பி வரும்ன்னு தெரியறதா?” என்றார்.

பகவானை தரிசிக்க பக்தர் ஒருவர் வந்து இருந்தார். ஆசிரமத்தில் தங்கினார். அதிகாலையிலேயே பகவானிடம் வந்து “ராத்திரி எல்லாம் நாய் குரச்சிண்டே இருந்தது! ஒரே சத்தம். த்யானம் பண்ணவே முடியலை” என்று புகார் கூறினார்.
பகவான் “எந்த நாயும் குரைக்கலே ஓய்!உங்க மனசுதான் குரைச்சது!” என்றார்.

ஒரு நாள் வெளிநாட்டவர் ஒருவர் ஆசிரமத்துக்கு வந்தார். அவருக்கு கீழே உட்கார்ந்து பழக்கமில்லை. அதனால் உட்கார சற்றே உயரமான மடக்கு கான்வாஸ் நாற்காலியை கொண்டு வந்திருந்தார். அதை பகவானுக்கு எதிரே சற்று தள்ளி பிரிக்க முயற்சி செய்துகொண்டு இருந்தார். இதைப் பார்த்த சேவகர் ஒருவர் அவரிடம் சென்று பகவானுக்கும் உயரமாக அமர்வது மரியாதை இல்லை என்று பணிவுடன் தெரிவித்தார்.
அவர் அந்த ஆசனத்தை மடக்கிக்கொண்டு வெளியே போய்விட்டார்.
சோஃபாவில் அமர்ந்து இருந்த பகவான் இதை கவனித்தார். அந்த சேவகர் திரும்பி வந்ததும் “ரொம்ப பெரிய காரியம் பண்ணிட்டு வந்தேளாக்கும்! கீழே உட்கார சிரமப்பட்டு உசரமா ஒரு ஆசனம் கொண்டு வந்தா அதை தடுத்து அனுப்பிட்டேள். இங்கே இன்னொருத்தர் அதைவிட உசரமான ஆசனத்துலே ஒத்தர் உக்காந்து இருக்காரே! அவரை என்ன பண்ணுவீங்க?” என்று மேலே காட்டினார். அங்கே பகவானுக்கு நேர் மேலே ஒரு பெரிய மந்தி உட்கார்ந்து இருந்தது! அது வரை யாரும் அதை பார்க்கவில்லை!
”கீழே என்ன மேலே என்ன, இதுலே என்ன இருக்கு? எல்லாம் நினைப்புதான்!” என்றார் பகவான்!
 

Monday, July 6, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 36


ஆறு வயது பெண் குழந்தை தங்கள் வீட்டுத்தோட்டத்தில் விளைந்த இரண்டு கொய்யாப்பழங்களை கொண்டு வந்து சமர்ப்பித்தாள். பகவான் மகிழ்ந்தார். “இதை வீட்டுக்கு எடுத்துப்போம்மா. கொண்டு போய் வெட்டி ஒவ்வொரு துண்டையும் 'இது பகவானுக்கு இது பகவானுக்கு' ன்னு சொல்லி எல்லாருக்கும் கொடுத்து 'இது பகவானுக்கு'ந்னு சொல்லி நீயும் சாப்பிடு! எல்லாருக்குள்ளேயும் பகவான் இருக்கார். எல்லாரும் சாப்பிட்டா இந்த பகவானும் சாப்பிட்ட மாதிரி இல்லையா?” என்று சொல்லி அனுப்பினார்.

சின்ன ஸ்வாமி பகவானை தக்‌ஷிணாமூர்த்தி போல ஒரு காலை ஊன்றி ஒன்றை மடக்கி அமர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டுமென நினைத்தார். பகவானிடம் இதற்கு சம்மதமும் பெற்றார்கள். டாக்டர் க்ருஷ்ணஸ்வாமி வரும்போதெல்லாம் பகவானை படமெடுப்பார். அவரிடம் இந்த வேண்டுகோளை கூறினார். அவரும் அதற்கு இசைந்தார். அருணாசலம் பின் புலத்தில் இருக்கும்படி ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு பாறையையும் நகர்த்தி வைத்தனர்.
பகவான் பாறையில் உட்காரும்போது இவர்களை பார்த்து ஒரு கேள்வி கேட்டார். தக்‌ஷிணாமூர்த்தி எந்த காலை தரையில வெச்சுண்டு எதை மடக்கி வெச்சிருப்பார்?
யாருக்கும் பதில் சொல்லத்தெரியவில்லை! முழித்தனர்.
பகவான் “பரவாயில்லே! ரெண்டு மாதிரியும் போட்டோ எடுத்துக்கோங்கோ” என்றார்.

கே.ஆர். க்ருஷ்ணமூர்த்தி மின்சார வாரிய தலைமைப்பொறியாளர். பகவானைப்பற்றி செய்தித்தாளில் படித்து இருந்தார். அப்போது யாரோ அவரிடம் “ரமணரால யாருக்கும் பிரயோசனம் கிடையாது. அவர் எப்பவும் சும்மா உக்காந்து இருப்பார்” என்றார். ஆனாலும் நாளடைவில் கிடைத்த செய்திகள் மூலம் ஈர்க்கப்பட்டு அவர் பகவானை வந்து தரிசித்தார். இவருக்கு நீண்ட நாளாக இடது கையில் நடுவிரலில் வலி இருந்து வந்தது. பகவான் எதிரில் உட்கார்ந்துஇருந்த போது பகவான் தன் இடது கை நடுவிரலை வலது கையால் பிடித்து விட்டுக்கொண்டு இருந்ததை கவனித்தார். அப்போது அதிசயமாக தன் வலி நீங்கி விட்டதை உணர்ந்தார். அன்று முதல் நிரந்தரமாக அந்த வலி இல்லவே இல்லை!
 

Thursday, July 2, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 35


பக்தர் ஒருவர் தன் நண்பரை அழைத்து வந்தார். வந்தவர் “பகவானை நமஸ்கரிக்க மாட்டேன்; என்னை கட்டாயப்படுத்தாவிட்டால் வருகிறேன் “ என்று கூறியிருந்தார்.
பக்தரும் அதற்கு ஒப்புக்கொண்டு இருந்தார்.
நண்பர் ஹாலுக்குள் வரவே இல்லை. வெளியேவே அமர்ந்து இருந்தார். கொஞ்சம் அங்கே இங்கே என்று சுற்றித்திரிந்தார். மாலையில் வழக்கம் போல கிணற்றுக்கு பக்கத்தில் சேர் போடப்பட்டது. பகவான் வந்து அமர்ந்தார். பக்தர்கள் அவரைச் சுற்றி அமர்ந்தனர்.
அப்போது அங்கே அந்த நண்பர் வந்தார். பகவானைப் பார்த்தவுடன் தடாலென்று வீழ்ந்து வணங்கினார்.
பகவான் பலமாக சிரித்தார்! இருவரைத்தவிர மற்றவர்களுக்கு அதன் காரணம் தெரியவில்லை!

டெய்லர்ஸ் அமெரிக்க தம்பதியினர். டெய்லர் ஓய்வு பெற்ற பேராசிரியர். ஆசிரமத்துக்கு வந்து பகவானை தரிசித்தனர். பகவானிடம் மிகவும் நெருங்கியவர்களாக உணர்ந்தார்கள்.
ஒரு நாள் அவரது மனைவி பகவானிடம் உரிமையுடன் “பகவானே! எனக்கு ஆத்ம ஞானம் கொடுங்க” என்று கேட்டார்.
“காலத்துலே எல்லாம் வரும். பொறுமையா இருங்க!”
“இல்லை, இப்பவே வேணும்.”
“நீங்க தயார் ஆகும்போது அது தானே வரும்.”
“பகவானே நீங்க நினைச்சா இப்பவே தரலாம்!”
பகவான் ஒன்றும் பேசாமல் உற்று நோக்கினார்.
இரண்டே நிமிடங்களில் அவர் அழுது கதறியபடி ஹாலை விட்டு வெளியே ஓடினார்!
என்ன ஆயிற்று என்று யாரிடமும் சொல்லவில்லை!
 

Monday, June 29, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 34


ஜூப்லி ஹாலில் ஒருமுறை எல்லாரும் அமர்ந்து ரேடியோ கேட்டுக்கொண்டு இருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்தது. அதில் பங்கேற்றவர்கள் என்று ஒரு பட்டியல் வாசிக்கப்பட்டது.
அப்போது பகவான் சொன்னார் “ரேடியோ பாடறது! பேசறது! யார் யார் பேசினான்னு பேரெல்லாம் சொல்லறது. ஆனா ரேடியோக்குள்ள யாருமில்லே! அதேப்போலத்தான் இதுவும். (தன் மார்பை தொட்டுக்காட்டி) இது பேசறது. ஆனா ரேடியோ மாதிரிதான். உள்ளே யாரும் ஆசாமி இல்லே! சாமிதான் இருக்கறது. என் இருப்பு என்னன்னா ஆகாசம் மாதிரி நிர்மலமா சுத்தமா இருக்கறது!”

ஒருமுறை பகவான் தக்‌ஷிணாமூர்த்தியைப் பற்றி சொல்லலானார். சனகாதி முனிவர்கள் நால்வர் முதல்லே தக்‌ஷிணாமூர்த்தியைப் பார்த்தப்போ ஒரு ஆலமரத்துக்குக் கீழே ஒரு இளைஞனா உக்காந்திருந்தார். அவரை பார்த்தவுடன் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அவரை அணுகினா. மூணு ப்ரதக்‌ஷிணம் பண்ணினா. பிறகு நமஸ்காரம் பண்ணி பாதத்துக்கு பக்கத்துல உட்கார்ந்து அவாளோட சந்தேகங்களை கேட்க ஆரம்பிச்சா. உள்ள பொருள்ன்னா என்ன? அதை எப்படி அடையறதுங்கறதுதான் அவா எல்லாருக்கும் கேள்வி.
தக்‌ஷிணாமூர்த்தியும் மிகுந்த கருணையாலே வாத்சல்யத்தோட அவாளோட பக்குவத்தைத் தெரிஞ்சு அவா கேட்ட சந்தேகங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டே போனார். சொல்லச்சொல்ல சந்தேகங்கள் அதிகம் ஆகிக்கொண்டே போச்சே தவிர அடங்கினபாடா இல்லே!
தக்‌ஷிணாமூர்த்தி சரின்னு கருணையையும் வாத்சல்யத்தையும் மறைச்சுக்கொண்டு பேசாம மௌனமா இருந்துட்டார். சிஷ்யாளும் கொஞ்ச நேரத்துல மௌனத்துல கரைஞ்சுட்டா” என்ற போது அங்கிருந்த முருகனார் “தக்‌ஷிணாமூர்த்தி பேசினதா எந்தப் புராணத்துலேயும் சொல்லவே இல்லையே” என்று கேட்டார்.
பகவான் உறுதியான குரலில் “இப்படித்தான் உண்மையிலேயே நடந்தது” என்றார். முருகனார் புரிந்து கொண்டார்.

ஒருமுறை காலை பழைய ஹாலில் பகவான் உட்கார்ந்து இருந்தார். எல்லாரும் மௌனமாக அமர்ந்து இருந்தார்கள். அப்போது டக் டக் என்று கைத்தடி சத்தம் கேட்டது. உயரமான கண் தெரியாத முஸ்லிம் ஒருவர் உள்ளே நுழைய முயற்சி செய்துகொண்டு இருந்தார். பக்தர் ஒருவர் உதவிக்குப் போனார். உள்ளே அழைத்து வந்தார். வந்தவர் பகவான் எங்கே இருக்கிறார் என்று கேட்டார். அவரை பகவான் முன் கொண்டு சென்று அமர்த்தி “இப்ப பகவான் முன்னே உட்கார்ந்து இருக்கீங்க “ என்றார்கள். அவர் பகவானை நமஸ்கரித்து விட்டு தான் பெஷாவரில் இருந்து வருவதாகவும் அங்கே ஒரு பிரசித்தியான மதரஸாவில் தான் மௌல்வி என்றும் சொன்னார். பகவானைப்பற்றி யாரோ படிக்கக்கேட்டு உடனே பகவானை தரிசிக்க ஆவல் மிகுந்தது. பகவானே தனக்கு ஆன்மீகத் தந்தை என்று தோன்றியது. உடல் குறையையும் பொருட்படுத்தாமல் உடனே கிளம்பினார். அடுத்த ரயிலை பிடித்தார். பல ரயில்கள் மாறி திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். இந்த கதையை அவர் சொன்னதும் உதவியவர் அவரிடம் “பகவானிடம் எதுவும் கேட்க வேண்டுமா?” என்று கேட்டார்.
அவர் “ஒண்ணுமில்லை. பகவானை பார்க்க ஆசையாக இருந்தது. பார்த்தாச்சு. இப்ப அவர் சொல்கிறாப்போல செய்யப்போறேன். அவ்வளவுதான்!” என்றார்.
பகவான் கண்களில் கண்ணீர் கசிந்தது!

Thursday, June 25, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 33

 

பகவானின் தேகம் நோய்வாய்ப்பட்டது. டாக்டர்கள் சத்தான ஆகாரத்தை பரிந்துரைத்தார்கள். வழக்கம் போல பகவான் காதில் போட்டுகொள்ளவில்லை. யாரோ பகவான் தினமும் சப்பாத்தி, பால், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டால் தேவை என்றார்கள். பகவான் “அவ்வளவு வசதியான போஜனம் எல்லாம் நமக்கு முடியாது. நமக்கு சாது போஜனம்தான்” என்றார். "உடம்பு சரியில்லாவிட்டால் அப்படி சாப்பிடலாம். மகாத்மா காந்தியும் விசேஷ உணவுதான், அரவிந்தரும் அப்படித்தான், ஆரோக்கியத்துக்காக எடுத்துக்கலாம் பகவானே! எங்களுக்காக ஒரு ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக்குங்களேன்” என்றார் ஒரு அன்பர்.
“ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் என்ன விலை?”
“என்ன நாலு அணா இருக்கும்!”
“இல்லே நாலணா இருக்காது. நமக்கு 200 டம்ளர் ஜூஸ் வேணும். உங்களை எல்லாம் பாக்க வெச்சுட்டு நாம சாப்பிடறதா? சரி, அப்படியே ஆனாலும் 200 டம்ளர் ஜூஸுக்கு தினசரி 50 ரூபா நமக்கெல்லாம் கட்டாது!”
மீண்டும் அடுத்த நாள் இந்த விஷயம் ஆரம்பித்தது. நெய் தடவிய சப்பாத்தியும் பால் ஒரு டம்ளரிலும், ஆரஞ்சு ஜூஸ் ஒரு டம்ப்ளரிலும் கொண்டு வரப்பட்டு பகவான் அருகில் வைக்கப்பட்டது. பகவான் அதை திரும்பிக்கூட பார்க்கவில்லை. கொண்டு வந்து வைத்தவாளே சாப்பிடட்டும் என்றார்.
அப்போது அங்கிருந்த பக்தை “பகவான் எங்களுக்காக அந்த சோஃபாவிலே உட்கார்ந்து கொண்ட மாதிரி, எங்களுக்காக இதை சாப்பிடணும்!” என்றார்.
அவ்வளவே. பகவான் பதில் பேசாமல் உடனே தரையில் அமர்ந்து கொண்டார்.
யாரும் இதை எதிர்பார்க்கவில்லை! அந்த பக்தை அழ ஆரம்பித்துவிட்டார். “பகவானே ஏதோ தெரியாம பேசிட்டேன்!” என்று அரற்றினார்.
யாருக்கு எப்படி பகவானை திருப்பியும் சோஃபாவில் உட்கார வைப்பது என்று தெரியவில்லை. அப்போது வந்த ஒரு நெடு நாள் பக்தர் பகவானை அலாக்காக தூக்கி சோஃபாவில் உட்கார வைத்துவிட்டார். பகவான் எந்த எதிரிப்பும் தெரிவிக்கவில்லை! திரும்பவும் தரையில் உட்கார எத்தனிக்கவும் இல்லை. அத்துடன் அந்த பிரச்சினை தீர்ந்தது. விசேஷ உணவு பிரச்சினையும் தீர்க்கப்பட்டது!

க்ருஷ்ண ப்ரேம் தீவிர வைஷ்ணவர். வெளி நாட்டவர். ஒரு முறை பகவானிடம் “பகவானே, சர்வம் வாசுதேவ மயம் ஜகத் ந்னு நினைக்கறதுதானே உயர்ந்த ஸ்திதி?” என்று கேட்டார்.
பகவான் ஆமோதிப்பது போல தலையை ஆட்டினார். “ஆமாமாங். அது மேலான ஸ்திதிதான். வைஷ்ணவ சம்பிப்ரதாயத்தோட அடிப்படையே அதுதான். ஆனாலும் பாக்கறதெல்லாம் வாசுதேவமயம்ன்னு நினைக்கறது யார்? நாம்தானே?
நாம் பாக்கற உலகமா சொல்லறது, நாங்கல்லாம் வாசுதேவன்னு? நாம் பூமி, மரம், செடி கொடியை எல்லாம் வாசுதேவமயமா பார்க்க பிரியப்படறப்போ நம்மையே ஏன் அப்படி பார்க்கக்கூடாது?
எல்லாத்தையும் வாசுதேவ மயமா பார்க்கிறவா யார்ன்னு பார்த்தா நீயேதான் அந்த வாசுதேவன்னு தெரிஞ்சுப்பே. அப்புறம் விசேஷமா சர்வம் வாசுதேவமயம் ஜகத்ன்னு பார்க்க அவசியம் இருக்காது. பாக்கிறவன் வாசுதேவன்னா பார்க்கிறதெல்லாம் வாசுதேவமயம்தான். இதைத்தான் த்ருஷ்டீம் ஞானமயீம் க்ருத்வா... ந்னு ஆச்சாரியார் எளிமையா சொல்றார்.”
இப்படிச்சொல்லி பின் மெதுவான குரலில் “யானும் நீ, அதனன்றி எம்பிரானும் நீ, இராமனே” என்றார். அப்போது கண்களில் கண்ணீர் ததும்பியது. சமாளித்துக்கொண்டு மலையை பார்க்கலானார்.
   

Monday, June 22, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 32



பகவானிடம் கேள்வி கேட்டால் எப்போது பதில் வரும் என்றே தெரியாது! சில சமயம் உடனடியாக; சில சமயம் பதிலே வராமலும் போகும். இதில் யாரும் அவர் போக்கை நிர்ணயிக்க இயலாது!
நீண்ட தூரத்தில் இருந்து வந்த ஒரு பக்தர் பகவானிடம் “ பகவானே மனம் அடங்கறதுக்கான உபாயம் எல்லாம் பண்ணிட்டேன். ஆனா ஒரு முன்னேற்றமும் தெரியலே. என் மனம் அடங்குமா பகவானே?” என்று கேட்டார்.
பகவான் மௌனமாகவே இருந்தார்.
சற்று நேரம் கழிந்து மீண்டும் “சாஸ்திரங்கள் மனவடக்கம் இல்லாம ஆன்மீகத்துல முன்னேற்றம் ஏற்படாதுன்னு சொல்லறதே? நான் சிரத்தையாத்தான் பண்ணறேன்” என்றார்.
அப்போதும் மௌனமே.
இன்னும் சற்று கழித்து “ஆத்மீகத்துல முன்னேற்றமே இல்லை என்கிறது ரொம்ப வருத்தமா இருக்கு; நீங்கதான் ஆசீர்வாதமா ஏதேனும் சொல்லணும்” என்றார்.
இதற்கும் பகவான் அசையவே இல்லை.
ஒன்றரை மணி நேரம் கடந்தது. பகவான் வழக்கமாக வெளியே செல்லும் நேரம்.
பக்தரை கடந்து போகும் போது அவரைத் திரும்பிப் பார்த்து “போகப்போகத் தெரியும்” என்றார்!

ஒரு முறை பகவான் பக்தர்கள் புடை சூழ அமர்ந்திருந்தார். அப்போது ஒரு பக்தர் விடை பெறும் போது “பகவானே! நாங்க எல்லாரும் ஆத்மானுபவத்துக்குத்தான் இங்கே வரோம். உங்க அருளாலே எல்லாருக்கு அது ஏற்படட்டும்.” என்று வேண்டி விடை பெற்றார்.
அவர் சென்ற பின் பகவான் “எல்லாரும் ஆத்மானுபவத்துக்குத்தான் இங்கே வரா. ஆனா அது எப்படி இருக்கும்ன்னு லவலேசம் தெரிஞ்சாலும் நம்மள சுத்தி ஈ காக்கா இருக்காது” என்றார்.
அன்று இரவு அவரது சேவகர் “ பகவானே? ஆத்மானுபவம் அவ்வளோ பயங்கரமா இருக்குமா? அது எப்படி இருக்கும்ன்னு எங்களுக்கு காட்டினா ஈ காக்கா சுத்தி இருக்காதுன்னு சொன்னீங்களே?” என்று கேட்டார்.
“ ஆத்மானுபவம் இன்னதுன்னு தெரியாமத்தான் சுத்தி சுத்தி வரா. அது எல்லோருக்கும் எப்பவும் இருக்கிற சாமான்யமான இருப்புன்னு தெரிஞ்சா ஈ காக்கா சுத்தி இருக்காதுன்னு சொன்னேன்!” என்றார் பகவான்!

ஆசிரம நிர்வாகத்தில் இருந்த சிலர் ஒரு மாதப்பத்திரிகையை ஆசிரமத்தில் இருந்து வெளியிட விரும்பினார்கள். திட்டம் தயார் ஆனது. ஒப்புதலுக்காக பகவானை அணுகினர்.
“அந்தப்பத்திரிகையிலே என்ன இருக்கும்?” என்று கேட்டார் பகவான்.
“நம்ம ஆசிரமத்து செய்திகள். இந்த மாசம் யார் யார் பகவானைப் பார்க்க வந்தா; அவா என்ன கேட்டா, பகவான் என்ன பதில் சொன்னார், இதெல்லாம் இருக்கும். உலகத்துல எல்லாரும் படிப்பா பகவானே!”
“ஓ! அப்ப நான் பேசவே இல்லைன்னா அதில என்ன போடுவா? உங்க பத்திரிகையில் வரணும் என்கிறதுக்காக நான் பேசிண்டே இருக்கணுமா? ஏற்கெனெவே பிடிச்சு ஜெயில்ல போட்டுட்டேள். பேஷ் பேஷ், புது தண்டனையா கண்டு பிடிச்சுண்டே இருக்கேளா?”
முயற்சி கைவிடப்பட்டது.
 

Thursday, June 18, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 31



ஒரு முறை ஒரு பக்தர் பகவானிடம் “பகவானே! ஆத்மாவை உணரணும்ன்னு சொல்றாங்களே, அது எங்கே இருக்கு? அதை எப்படி உணரறது?” என்று கள்ளமில்லாமல் கேட்டார். பகவானுக்கு ஒரே ஆனந்தம்!
“இப்போ என்கிட்டே ரமணாஸ்ரமம் எங்கே இருக்கு? அதுக்கு எப்படி போறதுன்னு நீ கேட்டா என்ன பதில் சொல்லறது?
நீயும் நீ பாக்கற எல்லாமும் ஆன்மாதான். அதை எப்பவும் உணர்ந்துகொண்டேதான் இருக்கே! ஆனா அது தெரியாம ஆத்மா எங்கே இருக்குன்னு தேடறதும் அதை உணர முயற்சி செய்யறதும் பண்டரிபுரம் பஜனை மாதிரிதான்.
பஜனை ஆரம்பிக்கும் போது எல்லாரும் கால்ல சதங்கை கட்டிண்டு ஒரு பித்தளை விளக்கை ஏத்தி வீட்டு நடுவில வெச்சுட்டு அதை சுத்தி சுத்தி வந்து பஜனை ஆரம்பிப்பா. பண்டரிபுரம் ரொம்ப தூரத்துல இருக்கு; யாத்திரை பண்ணுவோம் வாங்கன்னு பாடுவா. ஆனா விளக்கை சுத்தி சுத்திதான் வருவா. ஒரு அடி கூட முன்னே போகாட்டாலும் யாத்திரை போறோம்ன்னுதான் பாடுவா. இப்படியே விடிய விடிய பஜனை நடக்கும். பொழுது விடியும் போது இதோ பண்டரிபுரம் தெரியறது; இன்னும் கொஞ்சம் தூரம்தான்ன்னு பாடுவா. பொழுது விடிஞ்சதும் பண்டரிபுரம் வந்துட்டோம். இதோ பண்டரிபுரம்; இதோ பாண்டுரங்கன்னு பாடி விளக்குக்கு நமஸ்காரம் பண்ணி முடிச்சுடுவா.
ஆத்மா விஷயத்துலேயும் இப்படியேதான்! ஆத்மாவை எப்பவுமே தரிசிச்சுண்டே ஆத்மா எங்கே, இன்னும் அடையலைன்னு பஜனை பாடறோம்! அஞ்ஞான இருள் நீங்கி ஞானம் புலரும்போது, அது இங்கேயே இருக்கறதுதான்; அது நானேதான் ந்னு முடிச்சுடுவோம்!”
இப்படி சொல்லி முடிக்கும்போது பகவானின் முகத்தில் அளவில்லா ஆனந்தம் பொங்கிக்கொண்டு இருந்தது!

ஒரு நாள் சிரத்தையுடைய சாதனை செய்து வந்த ஒரு பக்தர் பகவானை பக்தியுடன் நமஸ்கரித்து கேட்டார்: “பகவானே எந்த நேரமும் மனசை ஆத்மாவிலேயே வெச்சிருக்கறதுதான் ஆத்ம விசாரம்ன்னு பகவான் சொல்லறது இல்லையா? இது என்னைப்போல லௌகீக வாழ்கையில இருக்கறவாளுக்கு எப்படி சாத்தியமாகும்? ஒரு பக்கம் ஆபீஸ் பொறுப்பு இன்னொரு பக்கம் குடும்ப பொறுப்பு, இதிலேயே நாளின் பெரும் பாகம் போயிடறதே? ஆத்ம விசாரம் பண்ணவே நேரம் கொஞ்சம்தான் கிடைக்கும்; இதில இடைவிடாம ஆத்மாவில மனசை வெச்சுண்டு இருக்கறது சிரம சாத்தியம் என்று கூட இல்லை; முடியவே முடியாது! அப்ப எங்களுக்கெல்லாம் வழியே இல்லையா?” இதை கேட்கும் போது அவர் குரலில் ஆதங்கம் தொனித்தது!
பகவான் மிக்க கருணையுடன் மெதுவான குரலில் பேச ஆரம்பித்தார் “நீங்க வீட்டை விட்டு ஆசிரமம் வரதுக்கு கிளம்பினீங்க. வழியில உங்களோட நண்பரை சந்திக்கறீங்க. அவரோட க்‌ஷேம லாபங்களை விசாரிக்கறிங்க. அப்புறம் ஆசிரமத்துக்குத்தானே வறீங்க? அவரோட போகலையே? அப்படித்தான் இதுவும்.
காத்தால எழுந்தவுடனே மனசு அமைதியா இருக்கும். அப்போ அதுக்கு அது யார்ன்னு நினைவு படுத்தணும். தூக்கம் முடிந்து அது அப்பதான் வெளியே வந்தது என்கிறதால அதுக்கு தூக்கத்தோட சுகத்தை மறுபடி மிக சுலபமா நினைவுப்படுத்த முடியும். அதாவது மனசை தியானத்துல விசாரபரமா ஈடுபடுத்தணும். இப்படி காத்தாலே எழுந்த உடனே விசாரம் செய்யறது நீங்க ஆசிரமத்துக்கு கிளம்பற மாதிரி. பிறகு நமக்கான வேலை எல்லாத்தையும் கவனிக்கணும். காத்தாலே செய்த தியானத்தோட தொடர்பு தைல தாரையா இருக்கும். அது நமக்குத்தெரியுமோ தெரியாதோ அது விஷயமில்லை. வேலை தானா நடக்கும். இதான் வழியில நண்பனை பார்த்து விசாரிக்கறது.
மறுபடி இரவு தூங்கும் முன்னே கொஞ்ச நேரம் விசாரபரமா தியானத்துல இருக்கணும். இதுதான் சினேகிதன்கிட்டே சொல்லிக்கொண்டு ஆசிரமம் வந்து சேரறது.
இப்படித்தான் நாளெல்லாம் தியானத்துல இருக்கணும்.
காத்தாலே தூங்கி எழுந்தததிலே இருந்து இரவு தூங்கறது வரைதான் வாழ்க்கை. இப்படி இருந்தா வாழ்க்கையே தியானமாயிடும்.
இதோட பரிபாகத்திலே மனம் தியானத்துல இருந்தாலும், எதையாவது நினைச்சுக்கொண்டு விவகாரத்துல இருந்தாலும் ஆத்மாவிலேயேதான் நாம இருக்கோம் என்கிற தெளிவு வரும்.
மனதை சதாகாலமும் ஆத்மாவிலே வைத்து இருப்பதற்குப் பேர்தான் ஆத்ம விசாரம்ன்னு நான் சொல்வதோட அர்த்தம் இதுதான். இந்த தெளிவுதான் ஆத்ம விசாரம்!”
 

Monday, June 15, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 30



ராஜா ஐயருக்கு சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். நேரம் காலம் இல்லாமல் அவ்வப்போது சமையலறையில் நுழைந்து எதையாவது - சமைத்ததோ சமைக்காததோ- வாங்கி சாப்பிடுவார்.
இதை பார்த்த பக்தர் ஒருவர் இது பற்றி பகவானிடம் குறை கூறினார்.
“ஏன் நீயும் போய் சாப்பிட வேண்டியதுதானே??”
என்னாலே முடியாது. நான் மத்த நேரம் கிச்சனுக்குப் போக முடியாது.
அப்ப உன் பிரச்சினை அவர் எப்பவும் எதையாவது சாப்பிடறார் என்கிறது இல்லே; உன்னாலே முடியாதாதை அவர் செய்யறார் இல்லியோ..... அதான் பிரச்சினை!


ஒரு முறை வடநாட்டில் இருந்து வந்த ஒரு பக்தரிடம் குதிரைவண்டிக்காரன் இரு மடங்கு தொகையைக்கேட்டான்.
ஆசிரம சேவகர் க்ருஷ்ணஸ்வாமி தலையிட்டு வழக்கமான தொகையை வாங்கிக்கொள்ளும்படி சொன்னார். அவன் பிடிவாதமாக மறுத்தான். கடைசியில் ஒரு தொகைக்கு பேரம் படிந்து பக்தர் கிளம்பினார். திரும்பிய க்ருஷ்ணஸ்வாமி பகவானிடம் நடந்ததை விவரித்து “பகவானே! எவ்வளவோ சொல்லிப்பாத்தேன், கேக்கவே மாட்டேன்னுட்டான்!” என்று அங்கலாய்த்தார்!
பகவான் புன்னகையுடன் கேட்டார்: “நீ மட்டும் நான் சொன்னதை கேக்கறியா?”

பகவானை தரிசிக்க வட இந்திய வக்கீல் ஒருவர் வந்தார். இவர் ஒரு க்ருஷ்ண பக்தர். முன்னரே இரண்டு வாரங்கள் தங்க ஏற்பாடுகள் செய்து இருந்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கினார். ஏனோ அவருக்கு ஆசிரம சூழ்நிலை பிடிக்கவில்லை. பகவானின் மௌனம் விளங்கவில்லை. அவரது அறைக்கு பக்கத்தில் தங்கி இருந்தவர் டங்கன் கிரின்லீஸ். இருவரும் இரவு உணவுக்குப்பின் நிலவொளியில் அமர்ந்து உரையாடுவர்.
வக்கீல் “என்னோட இந்த பயணம் சுத்தமா பிரயோஜனமே இல்லாம போச்சு. இங்கே ஒரு ஆரத்தி, ஒரு பஜனை, ஒண்ணுமே இல்லை. மகரிஷியும் மத்தவங்களும் சும்மா உக்காந்து இருக்காங்க; வீணா பொழுதை போக்கறாங்க.” என்றார்.
டங்கன் கிரின்லீஸ் ‘பகவான் அத்வைத ஸ்வரூபம். இதுதான் எல்லா வேததோட முடிவும். வேதங்கள் விவரிக்க முடியாம திரும்பற இடத்திலேதான் பகவானோட மௌனம் ஆரம்பிக்குது. இதை உணர்ந்து தெரிஞ்சுக்கணும். நிறைய காலமாகும். அவசரப்பட்டு முடிவு பண்ணாதீங்க! இன்னும் நாள் இருக்கே. பொறுமையா இருங்க.’ என்றார்.
வக்கீலோ “என்ன மௌனமோ எனக்குப்புரியலே! அதுலே எனக்கு பக்தி வரலை. இங்கே வரதுக்குப்பதில் ப்ருந்தாவனம் போயிருக்கலாம். அங்கே க்ருஷ்ணன் இருக்கான். அவனிடம் உருகி அவன் தரிசனத்துக்கு காத்துகிட்டு இருப்பேன். இந்த பயணத்தால் ப்ரயோஜனம் இல்லே. பக்தியோட ரசம் அனுபவிச்சாத்தான் தெரியும். உங்ககிட்ட பக்தி இல்லே” என்றார்.
ஒருவர் மற்றவருடைய நிலை புரியாமல் இருக்க விவாதிக்க ஒன்றுமில்லாமல் போனது!
மீதி நாட்களும் இப்படியே கழிந்தன. வக்கீல் உணவுக்கு மட்டும் ஆசிரமத்துக்குப்போனார். பகவானை சந்திப்பதை தவிர்த்தார். கிளம்பும் நாள் வந்தது. உற்சாகமானார். தன் நண்பரிடம் “நான் உங்க மகரிஷிகிட்டேந்து தப்பிச்சுட்டேன்! நேரா பிருந்தாவனம்தான் போறேன். அங்கே ஆடிப்பாடி க்ருஷ்ணனுக்காக ஏங்கி பொழுதை கழிப்பேன்” என்றார்.
பகவானை புரிந்து கொள்ளாமல் போகிறாரே என்று கிரின்லீஸ் க்கு வருத்தம் இருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. “போய் வாங்க!” என்றார்.
பகவானிடம் சொல்லிக்கொள்ளக்கூட இல்லை. கிளம்பிவிட்டார்.
ஆனால் அவர் புகைவண்டி நிலையத்துக்கு செல்ல ஏற்பாடு செய்து இருந்த குதிரை வண்டி வரவில்லை! வேறு ஏற்பாடு செய்து போய் சேர்ந்தால வண்டி வந்து, கிளம்பிவிட்டு இருந்தது. அடுத்த வண்டி மறுநாள்தான். வேறு வழியில்லாமல் வருத்தத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பினார் வக்கீல்.
டங்கன் கிரின்லீஸ் க்கு மகிழ்ச்சி. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் வக்கீலை சமாதனப்படுத்தினார். இன்னும் ஒரு நாள்தானே? விடுங்க என்றார்.
பின் “ என்ன இருந்தாலும் நீங்க சொல்லிக்காம ஊருக்கு கிளம்பினது சரியாப்படலை. அவரைப்பத்தி உங்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லாம இருக்கலாம். அவரைப்பத்தி என்ன வேணா சொல்லுங்க. போகட்டும். அவர் அவரோட இயல்புல இருக்கார். அது உங்களுக்கு பிடிக்கலை என்கிறதால ஒண்ணும் பண்ண முடியாது. என்ன இருந்தாலும் நாம அவரோட விருந்தினரா தங்கி இருக்கோம். போகும் போது சொல்லிக்கொண்டு போவதே மரியாதை” என்றார். இது சரிதான் என்று வக்கீலுக்குப்பட்டது.
அடுத்த நாள் மாலை கிளம்பும் நேரம் வந்தது. மரியாதை நிமித்தமாக ஆரஞ்சுகள் வாங்கி ஒரு பையில் எடுத்துக்கொண்டு விடை பெற ஓல்ட் ஹாலின் வாசலில் நின்றார். பகவான் வழக்கம்போல மலைக்குப் போக வெளியேவந்தார். வக்கீலின் அருகில் வந்தவுடன் ஒரு நிமிடம் அவரைப்பார்த்துக்கொண்டு நின்றார்.
வக்கீலின் கால் அடியில் பூமி நழுவியது! பழப்பை கீழே விழுந்தது. பழங்கள் உருண்டன. அடியற்ற மரம் போல் பகவானின் காலடியில் கீழே விழுந்தார. ‘க்ருஷ்ணா க்ருஷ்ணா’ என்று அரற்றினார். கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது.
பகவான் “சரி போ!” என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்துவிட்டார்.
பகவானைப்பார்த்து வக்கீல் “க்ருஷ்ணா, உன்னை தெரிஞ்சுக்காம போய்டேனே! உன்னையே திட்டினேனே?!” என்று கதறினார்.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஒருவர் வந்து குதிரை வண்டி வந்தாயிற்று என்று சொன்னார். வக்கீல் இருந்த நிலையில் அவரை கைத்தாங்கலாக அழைத்துச்செல்லா வேண்டி இருந்தது. போகும் வழியில் டங்கனை பார்த்தார். “என் கிருஷ்ணனை பாத்துட்டேன்! இதுவே போதும். மீரா ஏன் இவ்வளோ பிரியமா இருக்கான்னு இப்பதான் புரியுது! வாழ்கையோட பலன் கிடைச்சாச்சு! நான் வீட்டுக்குப்போறேன்!” என்று அழுதார். அவரைக்கட்டிக்கொண்ட டங்கன் முதன் முறையாக பக்தியில் அழுதார்!
 

Thursday, June 11, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் -29



1945 இல் பகவானின் வலது கால் பெருவிரலில் மூட்டு விலகிவிட்டது. ஆசிரம டாக்டர் ஒரு மாதத்துக்கு எங்கும் நடக்கக்கூடாது என்று தடை போட்டுவிட்டார். சாப்பாட்டு ஹாலுக்கும் கழிவறைக்கும் மட்டுமே போக அனுமதி அளித்தார்.ஒரு மாதம் முடியும் முன் ஒரு நாள் வெங்கட்ராமையரும் ராமசந்திரஐயரும் பகவான் சாப்பாட்டு ஹாலில் இருந்து வெளியே வரும்போது நமஸ்கரித்தனர்.
"என்ன ஓய் என்ன விசேஷம்?”
"ரெண்டு பேரும் கந்தாஸ்ரமம் போகப்போறோம். அதான் உத்திரவுக்கு வந்தோம்.”
"சரி போயிட்டு வாங்கோ.”
பகவான் தன் உதவியாளர் ரங்கசாமியிடம் ‘நாமும் போகலாமா?’ என்று கேட்டார்.
ரங்கசாமி அதிர்ச்சிக்குள்ளானார். இன்னும் கால் சரியாகலையே? ஒரு மாசம் நடக்கக்கூடாதே? வெயில் வேற சுட்டெறிக்கிறது.
“நாம் எப்படி போக முடியும்? உங்களாலே முடியாதே பகவானே?” என்றார் ரங்கசாமி.
மூவரையும் பார்த்து குழந்தைப் போல பகவான் “ஏம்பா! கூட்டிண்டு போக மாட்டேளா என்ன?” என்றார்.
ராமசந்திரஐயர் “பகவானே உங்ககூட போறது எங்க பாக்கியம்தான். ஆனா நீங்க நடக்க முடியாதே? எப்படி வர முடியும்?” என்றார்.
ரங்கசாமியைப் பார்த்து “இவா கூட்டிண்டு போக மாட்டா” என்றார் பகவான் வருத்தத்துடன்.
பின் ராமசந்திரஐயரும் வெங்கட்ராமையரும் கிளம்பினர். சிறிது தூரம் சென்றபின் திரும்பிப்பார்த்தால் பகவானும் ராமசந்திரஐயரும் மலைப்பக்கமாக நடந்து வந்து கொண்டு இருந்தனர். ரங்கசாமி “பயப்படாதீங்கோ! நாங்க ஒண்ணும் உங்களோட வரலை” என்றார்.
பகவான் தினமும் கொஞ்ச தூரம் மலையில் நடப்பதுண்டு. அதை நிறுத்தி இருந்தார். அதை மீண்டும் ஆரம்பிக்கிறார் போலும் என்று நினைத்தார்கள்.
கொஞ்ச தூரம் நால்வரும் ஒன்றாக நடந்தார்கள். பிறகு இவர்கள் இருவரும் ஸ்கந்தாஸ்ரமத்துக்கு நடக்க ஆரம்பித்தார்கள். அப்போது ரங்கசாமி ஓடி வந்தார்.
”நானும் உங்க கூட வரேன். கொஞ்சம் தூரம் போய் சித்த நில்லுங்க!” என்றார்.
சரியென்று இருவரும் பாதி மலையேறி ஓர் இடத்தில் ரங்கசாமிக்காக காத்து நின்றனர். அரை மணி ஆகியும் வரவில்லை. அப்போது ஒருவர் அந்தப்பக்கமாக வந்தார். அவரிடம் ‘வழியில் யாரும் வராங்களா?’ என்று விசாரித்தனர். அவர் “ஆமாம்; பகவான் வருகிறார்!” என்றார். “வெயிலோ உக்கிரம்; பகவான் காலூனவும் முடியாது. எப்படி வரார்? நான் போய் பார்க்கிறேன்” என்று ராமசந்திரஐயர் கிளம்பிப்போனார். போய்ப்பார்த்தால் பகவான் பகவான் சிரமப்பட்டு வந்து கொண்டு இருந்தார், உடல் முழுதும் வேர்வை. மிகவும் களைப்புடன் இருந்தார். மெதுவாக தவழ்ந்து வருவது போலவே இருந்தது. கூரான பாறைகளில் ஊன்றி கைகளும் கால்களும் சிராய்த்து இருந்தன. உண்மையிலேயே அவரால் மலையேற முடியவில்லை. திரும்பிப்போகலாம் என்றால் அதற்கு பகவான் ஒப்புக்கொள்ளவில்லை.
வேறு வழியில்லாமல் ரங்கசாமியும் ராமசந்திரஐயரும் பகவானை இருபுறமும் தாங்கலாக தூக்கிக்கொண்டு மிகுந்த சிரமத்துடன் கந்தாஸ்ரமத்துக்கு வந்து சேர்ந்தனர்.
அப்போது கந்தாஸ்ரமத்தில் மராமத்துப்பணி நடந்துக்கொண்டு இருந்தது. அதை செய்து கொண்டு இருந்த சிற்பி பகவானைப் பார்த்ததும் ஓடி வந்து “பகவானே! என்ன புண்ணியம் செஞ்சேனோ! எனக்காகவே இவ்வளவு தூரம் ஏறி வந்தீங்களே” என்று காலில் விழுந்தான்.
பகவானும் புன்னகையுடன் “ஆமாம். உனக்காகவே வந்தேன்! உன் வேண்டுதல்தான் என்னை இங்கே இழுத்து வந்தது” என்றார்.
ராமசந்திரஐயர் ஒன்றும் புரியாமல் “பகவானே, என்ன வேண்டுதல்?” என்று கேட்டார்.
“உனக்குத் தெரியாதோல்லியோ? நாலு நாள் முன்னே அம்மா கோவிலுக்கு முன்னே ஒரு ஹால் கட்ட முஹூர்த்தம் பண்ணின்னா. தூணை வெச்சு ஸ்தபதியும் சின்னசாமியும் தொட்டு ஆசீர்வாதம் பண்ணச்சொன்னா. டாக்டர்கிட்டே பெர்மிஷன் வாங்கிண்டு மெதுவா போய் அங்கே உட்காரச் சொல்லி.... பெரிய கூட்டம். முஹூர்த்தம் முடிஞ்சு கிளம்பறப்போ இவன் அந்த கூட்டத்திலே இருந்து ‘பெரிய ஸ்தபதி வேலை பாத்தா பகவான் வந்து ஆசீர்வாதம் பண்ணாறார். நாமும்தான் நிறைய பக்தி சிரத்தையோடத்தானே கந்தாஸ்ரமத்தில வேலை செய்யறோம்? பகவான் வந்து பாத்து ஆசிர்வாதம் பண்ணா நல்லா இருக்குமே. ஆனா இதெல்லாம் நடக்குமா’ ந்னு வேண்டிக்கொண்டு நின்னான்.
அதுதான் இப்ப என்னை இங்கே இழுத்துண்டு வந்தது” என்றார் பகவான்.


Monday, June 8, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் -28


தேவராஜ முதலியார் ஒரு முறை பகவானிடம் கேட்டார்: “பகவானே! ஆன்ம முன்னேற்றம் கொஞ்சம் கொஞ்சமா வருமா.... இல்லை சட்டுன்னு வந்துடுமா?”
பகவான் சொன்னார்: “நீர் ஒரு இருட்டான குகைக்குள்ளே ஒரு டார்ச் லைட் எடுத்துண்டு போறீர்.... குகையில இருக்கிற இருட்டு கொஞ்சம் கொஞ்சமா மறையுமா.... இல்லை உடனடியா மறையுமா?

பகவான் ஒருமுறை “நான் பயப்படறது ரெண்டு பேருக்குத்தான். ஒண்ணு முதலியார் பாட்டி. ரெண்டாவது ராமநாதன்” என்றார்.
இது அருகில் இருந்த சேவகருக்கு விளங்கவில்லை. உரிமையோடு பகவானிடம் “பகவானே, இவங்க ரெண்டு பேரைப்பாத்தா மட்டும் ஏன் பயம்?” என்று கேட்டார்.
இவா ரெண்டு பேரையும் பாத்தாலே எனக்கு ஏதோ பண்ணும். பக்கத்திலே வந்தா இன்னும் ஜாஸ்தியாகும். கஷ்டப்பட்டு அடக்கிப்பேன். இவா ரெண்டு பேரும் என்னை எதைக்கேட்டாலும் தந்துடுவேன் போல இருக்கும். ஆனா வந்ததுலேந்து இது வரைக்கு இவா ரெண்டு பேரும் என்னை ஒண்ணுமே கேட்டதில்லே. முக்தியே அவாளுக்கு தூசு!” குரல் கம்மியது; கண்களில் நீர் பெருகியது. மலையை திரும்பிப்பார்த்தார். அந்த பேச்சே அவருக்கு பயம் ஊட்டுவது போல இருந்தது!

ஒருமுறை மதிய உணவின் போது பாடசாலை மாணவன் ஒருவன் பரிமாறினான். மோர் வார்க்கும்போது பகவான் திடீரென்று ‘இன்னும் கொஞ்சம் விடு’ என்றார். ஆச்சரியம்! எதையுமே இரண்டாம் முறையாக பகவான் கேட்டதே இல்லை. இன்று கேட்டார்.
வாளியில் மோர் இல்லை. இது பகவானுக்கும் தெரிந்தே இருந்தது. மாணவன் சமையலறைக்குப் போய் அங்கிருந்த வாளியை கொண்டு வந்து மோர் வார்த்தான். பகவான் அதை கையில் வாங்கி குடித்தார். பின் “சேஷாத்ரி, நீ முன்னே வார்த்த மோருக்கும் இபோ கொண்டு வந்ததுக்கு நிறைய வித்தியாசம் இருக்கே? இது ரொம்ப ஜலமா இருக்கே? ஏன்னு கேட்டுவா!” என்றார்.
அவனும் விசாரித்து வந்து “பகவானே! அது வேலையாளுங்களுக்கு வெச்சிருந்ததாம்” என்றான்.
பகவான் அங்கிருந்தவர்களை அழைத்து வேதனையுடன் “இதென்ன பழக்கம்? அவமானமாயிருக்கு. எல்லாருக்கும் ஒரே மாதிரி பரிமாறுங்கோ” என்றார்.
அடுத்த நாள் முதல் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.