Pages

Wednesday, January 25, 2012

காமம்- 5


கிடைச்சதை கொண்டு திருப்தியா இருக்கிறது ஒரு நல்ல விஷயம்.

சீட்டாட்டத்தில போடுகிற சீட்டை வெச்சுக்கொண்டுதானே விளையாடுகிறோம். எனக்கு ஏஸ் ஸ்பேட் வரலை, ஜாக்கி டயமண்ட் வரலைன்னு முனகறதில்லை.

கிடைச்ச சாப்பாட்டை உண்டு கொண்டு ஒரு பிச்சைக்காரன் இருந்தான். சாப்பாடு சாதாரண சாப்பாடா இருந்தாலும் மனசு நிறைவா இருந்ததால நல்ல புஷ்டியா இருந்தான். ராஜா ரோந்து போகும்போது இவன் ஜாலியா மரத்தடியில படுத்து தூங்கறதை பார்த்து அதிசயப்பட்டான்.

மந்திரி! இவன் பிச்சைக்காரனா இருந்து கொண்டு எப்படி இப்படி புஷ்டியா இருக்கான் ன்னு கேட்டான். பிச்சை எடுத்தாலும் இவன் மனசு நிறைஞ்சு இருக்கு ராஜா, அதான் என்றார் மந்திரி. ராஜாவுக்கு சமாதானமாகலை. இவனை ஒல்லியாக்கி காட்டறேன்னார் மந்திரி. செய் பார்க்கலாம் ன்னார் ராஜா.
அடுத்த நாள் ஆளனுப்பி அந்த பிச்சைக்காரனை வர வைச்சார். அப்பா உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இங்க நாலு நாள் தங்கிட்டு போன்னார். பிச்சைக்காரனும் ஒத்துண்டான். மந்திரி வீடு. கேக்கணுமா? ராஜோபசாரம். அன்னிலிருந்து வகைவகையா சாப்பாடு. ஜம்ன்னு சாப்பிட்டு தூங்கி.... ஜாலியா ஒரு வாரம் போச்சு. அப்புறம் சந்தோஷம்பா போய் வான்னு வெளியே அனுப்பிட்டார்.
பிச்சைக்காரனும் வழக்கமா தங்கற இடத்துக்கு போயிட்டான். அப்புறம் வழக்கம் போல பிச்சை எடுத்தான். ஆனா சாப்பிடற நேரம் "ச்சே! வடை பாயசத்தோட சாப்பிட்டோம், இப்ப இல்லையே"ன்னு தோணித்து. கன்னாட் ப்ளேஸ்ல நருலாவில ஐஸ்க்ரீம் சாப்பிடப்பிறகு எப்படி மத்த எந்த ஐஸ்க்ரீமும் சுவைக்காதோ அப்படி பிச்சை எடுத்த சாப்பாடு எவ்வளோ கிடைச்சும் சுவைக்கலை. விருந்தை நினைச்சு நினைச்சு ஏங்கி ஏங்கியே அவன் இளைச்சு போயிட்டான்!
எல்லாம் மனசு போடுற ஆட்டம்!
முடிவா (அப்பாடா!) ஆசை இல்லாம இருக்கிறது ரொம்ப கஷ்டம். அப்படி எல்லாரும் இருக்கணும்ன்னும் எதிர்பார்க்கலை. இருந்தாலும் ஆசையை மடை திருப்பி கடவுள் பக்கம் செலுத்தலாம். அல்லது அடிப்படை தேவைகளுக்கு மேலே ஆசை படாமல் இருக்கலாம். அல்லது படுகிற ஆசையை பொது நலன் பக்கம் திருப்பலாம். நமக்குன்னு இல்லாம நம்ம தெருவுக்கு, நம்ம ஊருக்கு, நம்ம நாட்டுக்குன்னு ஆசை படலாம். பகீரதனும்தான் ஆசை பட்டான். அதனால எவ்வளோ நன்மை விளைஞ்சது! பொது நலன்ல நம்ம நலனும் கலந்தே இருக்கும் இல்லையா? ஆசாமியை கீழே கொண்டு போக அதீத ஆசை மாதிரி எதுவும் சக்தியுடையதா இல்லை! யோசிப்போம்!

Tuesday, January 24, 2012

காமம் - 4மனதின் சக்தியை பார்த்தீங்களா?

பெண்ணுக்கு அடுத்த படியா காமம் பிறப்பது பொருளிடத்திலே. காஞ்சன காமினி என்று ரெண்டையுமே ராம க்ருஷ்ணர் சேத்து சொல்லுவார்.

பணம், காசு.... பணம் இருந்தா எதை வேணுமானாலும் வாங்கலாம் ன்னு ஒரு நினைப்பு இருக்கு. அது முழுக்க உண்மை இல்லையானாலும் பணத்தால நிறைய விஷயங்களை செய்ய முடியும் என்கிறது நிதர்சனம். இந்த காலத்தில கெட்டுப்போயிருக்கிற அரசியல் பணத்தால பல விஷயங்களை சாதிக்க முடியும் ன்னு சுட்டிக்காட்டுது.

இந்த பணமும் சேர்க்க சேர்க்க அடங்காத ஒரு ஆசைதான். எவ்வளோ கிடைத்தா போதும்? ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறவன் ரெண்டாயிரம் சம்பாதிக்க ஆசை படுகிறான். லட்சம் சம்பாதிக்கிறவன் ரெண்டு லட்சம் சம்பாதிக்க ஆசை படுகிறான். அந்த ரெண்டு லட்சம் கிடைச்சதும் நாலு லட்சம் சம்பாதிக்க நினைப்பான். இதுக்கு அளவே இல்லை.

யக்ஷவித்தம் ன்னு ஒரு கான்செப்ட்.

ஒரு ஊரிலே ஒரு ராஜா. அவனுக்கு ஒரு நாவிதன். நாவிதனுக்கு ராஜாவோட சம்பந்தம் இருந்ததால நிறைய பேர் அவன்கிட்ட முடி வெட்டிக்க, ஷேவிங் செய்து கொள்ள வருவாங்க. இவனும் பிகு பண்ணிப்பான். நேரம் இல்லை அப்புறம் வாம்ப்பான். அவங்க பண்ணிவிடுப்பான்னு தாஜா பண்ணுவாங்க. நிறைய காசு கொடுப்பாங்க. எனக்கௌ இவ்வளோ வேணாம். நான் ராஜாகிட்டே வேலை செய்யறேனாக்கும் என்பான். அவங்க வற்புறுத்தி கொடுப்பாங்க. நாவிதனும் சந்தோஷமா இருந்தான்.

ஒரு நாள் காட்டு வழியே போகும் போது அவனெதிரே ஒரு யக்ஷன் வந்தான். உனக்கு நிறைய காசு வேணுமா? நான் புதையல் இருக்கற இடத்தை காட்டறேன்னு சொன்னான். நாவிதனுக்கு அதிசயமா போச்சு! யார் வேண்டாம்ன்னு சொல்வாங்க? காட்டு காட்டு ன்னான். இதோ இந்த மரத்தடியில தோண்டு. ஏழு ஜாடி நிறைய தங்கம் கிடைக்கும்ன்னு சொல்லிட்டு யக்ஷன் போய்ட்டான். நாவிதனும் தோண்டிப்பார்க்க அங்கே யக்ஷன் சொன்னபடியே ஏழு ஜாடிகள் கிடைச்சது.

சந்தோஷமா வீட்டுக்கு எடுத்துப்போய் எல்லாத்தையும் திறந்து பார்த்தான். ஒரு ஜாடி தவிர எல்லாத்திலேயும் தங்க காசுகள் நிரம்பி இருந்தது. ஒண்ணுத்துல மட்டும் முக்கால் ஜாடிதான் காசுகள் இருந்தது. நாவிதனுக்கு ஒரே வருத்தம். ஏன் இப்படி இதில மட்டும் குறைஞ்சு இருக்கு? அதை நிரப்பனும்ன்னு ஒரு வெறி வந்தது. வீட்டில் இருந்த பணத்தை எல்லாம் கொண்டுப்போய் தங்க காசு வாங்கி வந்து அதில போட்டான். நிரம்பலை. பெண்டாட்டி நகை எல்லாம் பிடுங்கி காசா மாத்தி நிரப்பப்பார்த்தான். அளவு கொஞ்சம் அதிகமாச்சே தவிர நிரம்பலை. அது ஏதோ மாய ஜாடி போல இருந்தது. எவ்வளோ காசு போட்டாலும் நிரம்பலை. நாவிதனுக்கு அன்னிலிருந்து அதுவே ஒரு குறிக்கோளா போச்சு. பைத்தியம் பிடித்தவன் போல இதை எப்படி எல்லாம் சம்பாதிச்சு நிரப்பலாம் என்கிறதே சிந்தனையா போச்சு. முன்னே வருகிற வாடிக்கையாளர்களை அலட்சியம் செய்தவன் இப்ப வலுவில போய் உனக்கு நான் முடி வெட்டி விடுகிறேனே என்று வேலையை தேடிப் பிடிக்க ஆரம்பித்துவிட்டான். எவ்வளோ காசு போட்டும் அது நிரம்பறதா இல்லை. ஆனா நிரம்பவே நிரம்பாதுன்னு ஒரு தோற்றத்தையும் அது தரலை. அதனால் நாவிதன் என்னைக்கோ ஒரு நாள் இது நிரம்பும் என்றே நம்பினான்.

இது வரை சந்தோஷமா இருந்த ஆசாமி கவலையால பீடிக்கப்பட்டு உடம்பு கெட்டுப்போனான். ராஜாகிட்டே சம்பள உயர்வு கேட்டான். ஆச்சரியப்பட்டாலும் சரின்னு ராஜாவும் கொடுத்தார். அன்னிலேந்து அவனை கவனிக்க ஆரம்பிச்சார். எப்பவுமே வருத்தத்தோட இருக்கிறதை கவனிச்சார். ஒரு நாள் திடுதிப்புனு "ஏம்ப்பா? காட்டிலே யக்ஷனை பாத்தியா? அவன் உனக்கு புதையல் தரேன்னு சொன்னானா" ன்னு கேட்டார். நாவிதனுக்கு தூக்கி வாரி போட்டுது! ஆமாம் ராஜா, உங்களுக்கு எப்படி தெரியும் ன்னு கேட்டான். அதான் திடீர்ன்னு காசுக்குப்பறக்கறயே! முன்னே நீ இப்படி இல்லை. அதனால் ஊகிச்சேன் ன்னான் ராஜா.

அவனை உங்களுக்கு தெரியுமா ராஜா?

தெரியும்ப்பா. எனக்கும் அவன் புதையலை காட்டறேன்னான். நான்தான் வேண்டாம்னுட்டேன்.

ஏன் ராஜா?

அதைப்பத்தி எனக்குத்தெரியும். அது ஒரு மாய ஜாடி. அதில நீ எவ்வளவுதான் காசு போட்டாலும் நிரம்பவே நிரம்பாது ன்னான் ராஜா.

இப்ப நாவிதனோட அதிர்ஷ்டம் வேலை செஞ்சது. ராஜா சொன்னது சரின்னு மனசுக்கு பட்டது.

நான் என்ன செய்யட்டும்?

அந்த ஜாடிகளை திருப்பி எடுத்துப்போ. காட்டில் யக்ஷனை பாத்தா நீயே வெச்சுக்கோ ன்னு கொடுத்துட்டு வந்துடு.

அதே போல காட்டுக்குப்போய் யக்ஷனை பார்த்து ஜாடிகளை திருப்பி கொடுத்துவிட்டு சந்தோஷமா இருந்தான் நாவிதன்.

யக்ஷர்களுக்கு ராஜா குபேரன். ஜனங்களுக்கு காசு ஆசை இருக்கற வரை குபேரனும் நல்லா இருப்பானாம். அதனால மக்களை காசு காசுன்னு டெம்ப்ட் பண்ணுவான் என்கிறாங்க பெரியவங்க.

ரொம்ப ஆசைப்படாம அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு நிம்மதியா வாழலாம். ஆனா அப்படி ஒத்தரை பார்க்கிறது அரிதே. உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் ன்னு ஔவை பாட்டி சொன்னாலும் நாம அதுக்கு மேலேயே சாப்பிடுகிறோம். பலரும் பசிக்கு சாப்பிடுகிறாப்போல தோணலை. இவ்வளோ ன்னு சாப்பிட்டு பழக்கமாயிடுத்து. அதனால் முன் போல வேலை செய்கிறோமோ இல்லையோ அதே அளவு சாப்பிடுகிறோம். பசி இருக்கோ இல்லையோ அதே நேரத்துக்கு தினசரி சாப்பிடுகிறோம். முன்னே இருந்த இளம்வயசா இப்ப இல்லை; அப்போதையா ஆட்டம் பாட்டம் இப்ப இல்லை, இருந்தாலும் அதே அளவு சாப்பிடுகிறோம்.  இது ஒரு பழக்கமா போயிடுத்து.

கிடைச்சதை கொண்டு திருப்தியா இருக்கிறது ஒரு நல்ல விஷயம்.
-தொடரும்..

காமம் - 3


காமம்ன்னு சொல்லிட்டு என்னடா ஆசை பத்தி பேசிகிட்டு இருக்கானேன்னு தோணித்துண்ணா...
காமத்துக்கு அகராதியில் அர்த்தம் பார்க்கலாம். .. காமம் (p. 225) [ kāmam ] , s. lust, desire, ஆசை; 2. lasciviousness, libidinousness, காமநோய்; 3. love, desire, அன்பு; 4. semen virile, வீரியம்; 5. sexual pleasure, புணர்ச்சி இன்பம்.

லஸ்ட் என்பதே முக்கிய அர்த்தம். எப்படி ஒரு கடையிலே பல பொருட்களை வித்தாலும் வெத்தலை பாக்கு கடை என்கிறோம்? அங்கே பலதும் இருந்தாலும் வெத்திலை பாக்கே முக்கியம். ஆசை பலது இருந்தாலும் பாலுணர்ச்சி சம்பந்தப்பட்டது பலமானது, வேகமானது, கட்டுப்படுத்த கடினமானது என்கிறார்கள். அதனால் இந்த காமம் என்கிற சொல் வழக்கில் பாலுணர்வு ஆசையை குறிப்பதாகிவிட்டது. இருந்தாலும் நான் மூல அர்த்தத்தையே இங்கே வைத்துக்கொண்டு எழுதுகிறேன்.

ஜாக்கிரதையா இருக்க வேண்டிய உட்பகை லிஸ்டை பாருங்க. காமம் (lust), குரோதம் (anger) உலோபம் (miserliness), மோகம் (sensuality), மதம் (pride), மாற்சரியம் (envy, malice).

காமம் லிஸ்ட்ல முதல்ல இருக்கு.
காமத்தை எப்படி கட்டுப்படுத்துகிறது? முதல்ல கட்டுப்படுத்த முடியுமா?
முடியும்.
மனசை தறி கெட்டு ஓடாம நிறுத்தினா எல்லாமே சாத்தியம்.
அதை எப்படி செய்யறது?
புத்தியால.
சலனப்படுகிறது மனசு, திடமாக நிற்பது புத்தி. புத்தி பூர்வமா விஷயங்களை ஆராய்வது மனசை திடமாக்க அதாவது புத்தி ஆக்க உதவும்.
மனுஷ ஜன்ம பிறவி கிடைக்கிறதே கஷ்டம். ஆனாலும் எப்படியோ நமக்கு அது கிடைச்சு இருக்கு. இந்த மனித பிறவியிலதான் நாம் ஆன்மீக முன்னேற்றத்தை சாதிக்க முடியும். இதை வேற எந்த பிறவியிலேயும் செய்ய முடியாது. மாடு தபஸ் செய்ய முடியாது; ஆடு தபஸ் செய்ய முடியாது; புலி செய்ய முடியாது. மனிதன் மட்டுமே செய்ய முடியும். தபஸ் ன்னா ஏதோ காட்டிலே போய் உட்கார்ந்துகிறது இல்லை. ஒரு ஆன்மீக சாதனையை திடமாக தொடர்ந்து செய்வதே தபஸ். அடுத்த பிறவி எப்படி அமையுமோ நமக்குத்தெரியாது. அதனால புத்தியில உறைக்கற இப்பவே நாம் முடிஞ்ச அளவு ஆன்மீக முன்னேற்றத்தை அடையணும். அதுக்கு சிறந்த உபாயம் ஆசைகளை மட்டுப்படுத்தி நேரத்தை, உழைப்பை ஆன்மீக பாதையிலே செலுத்துவதுதான்.
மனசு முடிவு பண்ணியாச்சுன்னா என்ன வேணும்னாலும் சாதிக்கலாம்.
ஒரு அந்தணன் இருந்தான். மனவி பிறந்தகம் போயிருந்தாள். பின் மாலை நேரம். இவனுக்கு மனவியை சந்திக்க ஆசை ஏற்பட்டது. கிளம்பிவிட்டான். நல்ல வலுவான மழை பெய்து கொண்டிருந்தது. அப்படியும் இவன் மனசு மாறலை. மழையிலேயே பயணம் செய்தான். வழியில் யமுனை ஆறு குறுக்கிட்டது. அதில் தயங்காமல் குதித்து நீந்த ஆரம்பித்தான். வலுவான நீரோட்டத்தில் இவனது உடுப்புகள் கூட அடித்துக்கொண்டு போய்விட்டன. அங்கே மிதந்து வந்த ஒரு கட்டையை பிடித்துக்கொண்டு நீந்தினான். கரை சேர்ந்த பிறகு பார்த்தா அது கட்டை இல்லை, ஒரு ப்ரேதம். ப்ரேதத்தின் உடுப்பை அபகரித்து அணிந்து கொண்டான். மழையில் எப்படியோ மனைவி வீட்டை அடைந்துவிட்டான். இப்படிப்பட்ட கோலத்தில் கதவை தட்ட யோசித்து மாடியில் இருக்கும் மனைவியின் அறைக்கு நேரே போக உத்தேசித்தான். எப்படி போவது? அங்கே கொடி போல ஏதோ தொங்கிக்கொண்டு இருந்தது. அதை பிடித்துக்கொண்டு சர சரவென்று ஏறினான். அரவம் கேட்டு வந்து பார்த்த மனைவி திகைத்துப்போனாள்.
எப்படி ஸ்வாமி நீங்க இங்கே...
உன்னை பார்க்க அடங்காத ஆவல் ஏற்பட்டது; அதனால் வந்தேன்.
இந்த மழையிலா?
ஆமாம்.
இது என்ன துணி? ப்ரேதத்தின் துணி போல இருக்கிறதே!
ஆமாம். என் ஆடை ஆற்று வெள்ளத்தில் போய்விட்டது.
எப்படி மாடிக்கு வந்தீர்கள்? கொடியை பிடித்து மேலே ஏறினேன்.
எட்டிப்பார்த்தால் அது கொடி இல்லை; இறந்துவிட்ட பாம்பு என்று தெரிந்தது.
ஸ்வாமி நீங்கள் என் மீது வைத்த அளவு ஆசையை இறைவன் மீது வைத்து இருந்தால் கடை தேறிவிடலாமே என்றாள் மனைவி!
சுருக்க் என்று தைத்தது மனதில். அன்றிலிருந்து அவர் நடத்தை திரும்பியது. சாதுவாகிவிட்டார்.
மனதின் சக்தியை பார்த்தீர்களா?
பெண்ணுக்கு அடுத்த படியா காமம் பிறப்பது பொருளிடத்திலே. ...

Monday, January 23, 2012

காமம் -2


சமீபத்தில ஒத்தர் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அது குறிப்பாக இளம் பெண்களை இலக்காக கொண்டது. இப்போதெல்லாம் குடும்பங்களில் ஒரு குழந்தை அரை குழந்தைன்னு மட்டுமே பெற்றுக்கொள்கிறாங்க. இதுவே பேஷன் ஆகிவிட்டது. “இத ஒழுங்கா வளர்த்தா போதாதா? இதுக்கு மேலே என்னால குழந்தை உண்டாகி கஷ்டப்பட முடியாது...” இத்தியாதி ஆர்க்யூமென்ட்ஸ்... அதுக்குள்ளே இப்ப நான் நுழைய விரும்பலை. ஆனா பிரச்சினை இந்த ஒரே குழந்தைன்னு செல்லம் கொடுக்கிறதுதான். எது கேட்டாலும் வாங்கித்தரப்படும். நல்லா படி நல்லா படி... வேற ஒண்ணுமே இலக்கு இல்லை. குழந்தை எப்படி நடந்துக்கிறது, யாரோட பழகுகிறது ஒரு விஷயமும் கவனிக்கிறதில்லை. இதுவும் பள்ளியில மத்தவங்க வாங்கி போட்டுகிட்டு வரது எல்லாம் பாத்து ஆசைப்படும். கேட்கும். அவசியமான்னு ஒரு ஆலோசனை கூட இல்லாம வாங்கித்தரப்படும். "என் குழந்தை கண் கலங்கக்கூடாது.” ஒரு கல்யாணம் கார்திக்கும் அழைத்து போகிறதில்லை! இதனாலேயே உறவுகளும் தெரியாது. இந்த குழந்தைக்கு கஷ்டம்னாலே என்னன்னு தெரியாது. ஒரு சாவு நடந்ததா குடும்பத்தில? ஸ்கூல் பாடம் கெட்டுப்போகக்கூடது. மாத்து ஏற்பாடு செய்துவிட்டு இவங்க மட்டுமே போய் வருவாங்க. ஒரு கஷ்ட நஷ்டமும் தெரியாத இந்த பெண் வயசான பிறகு வயசுக்கோளாறில யாரையான அழைச்சுகிட்டு வந்து நிக்கும். இவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்! கேட்டதெல்லாம் கிடைச்ச பழக்கத்திலே இதை மறு பரிசீலனைக்கூட செய்யத்தோணாது! தயாராக இருக்காது. கிடக்கட்டும்.. இந்த நிகழ்ச்சியிலே போட்டுக்காட்டப்பட ஸ்லைட்ஷோ ஒண்ணு கவனத்தை கவர்ந்தது. உன்னக்கு ஒண்ணுமே கிடைக்கலைன்னு நினைக்கிறயா? உனக்கு என்ன எல்லாம் பகவான் கொடுத்து இருக்கான்னே உனக்கு தெரியாது. உனக்கு போட்டுக்கு ஒரு ட்ரெஸ் இருக்கா? இவங்களை பாரு எப்படி இருக்காங்கன்னு... உனக்கு போட்டுக்க ஒரு ஜோடி செருப்பு இருக்கா, இவங்களைபாரு.. ஒரு ஆசாமி ப்ளாஸ்டிக் பாட்டிலை ரெண்டா அறுத்து அதை காலில மாட்டிக்கிற மாதிரி வெட்டி போட்டுகிட்டு இருப்பார். உனக்கு ரெண்டு வேளை சாப்பாடு கிடைக்குதுன்னா உலகத்திலேயே இவ்வளோ சின்ன பர்சென்ட் நபர்களில நீ ஒருத்தன்... இதே ரீதியிலே அது போகும்.

முடியறத்துக்குள்ளே கண்களில கண்ணீர் வரலைன்னா அது அதிசயம்தான்! உலகத்தில இவ்வளோ பேர் கஷ்டப்படுகிறபோது நீ அதுக்குன்னு ஒண்ணு செய்யாட்டாலும் எனக்கு ஒண்ணுமே கொடுக்கலைன்னு புலம்பறதாவது இல்லாமல் இருக்கலாமே! ஒருத்தருக்கு எவ்வளோ இருந்தால்தான் போதும்?ஆசை எப்பதான் அடங்கும்?  இதுக்கு விடை கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம்.

ஒரு பக்தன் இருந்தான். தீவிர பக்தி செய்து பகவானை சந்தோஷப்படுத்தினான். அவரும் காட்சி கொடுத்து என்ன வேணும்ன்னு கேட்டார். "மோக்ஷம் வேணும்" ன்னு கேட்டு இருக்கலாம்; இல்லை நிறைவோட "உன் ஆசீர்வாதம் இருந்தா போதும்" ன்னு சொல்லி இருக்கலாம்; "எனக்கு என்ன வேணும்ன்னு எனக்கு எப்படி தெரியும்? நீயே பாத்து கொடு" ன்னு சாமர்த்தியமா சொல்லி இருக்கலாம். அசத்து இதெல்லாம் பண்ணாம "எனக்கு ரொம்ப நாளா கல்யாணமே ஆகலை. பண்ணி வை" ன்னு சொன்னான். ஆகட்டும்ன்னு பகவான் மறைஞ்சு போனார். கல்யாணம் ஆச்சு. குழந்தை பிறக்கலை. குழந்தை பிறக்கலையே அருள் பண்ணு ன்னு கெஞ்சினான். குழந்தை பிறந்தது; வளர்ந்தது. பேச்சே வரலை. திருப்பி பகவான்கிட்டே கெஞ்சினான். பேசித்து ஆனால் வாயிலிருந்து நல்ல வார்த்தைகளா வரலை. திருப்பி கெஞ்சல். பையனுக்கு படிப்பு வரலை; கெஞ்சல் சரியாச்சு. வயசாச்சு. வேலை கிடைக்கலைன்னு திருப்பி வேண்டுதல்; வேலையும் கிடைச்சது. இப்படியே திருப்பி திருப்பி பையனுக்கு கல்யாணம், குழந்தைன்னு வேண்டிகிட்டே இருந்தான்.

ஆசைகளுக்கு அளவில்லை, எல்லை இல்லை, முடிவும் இல்லை ... ஆசையை எல்லாராலும் கட்டுப்படுத்த முடியாதுதான். ஆனால் அதில கொஞ்சம் நியாயம் இருக்கணும். பொது நலம் இருக்கணும். பக்தி யோகத்தில இந்த ஆசையை பகவான் பக்கம் திருப்புடா என்கிறார்கள். நமக்கு இது வேணும் அது வேணும்ன்னு நினைக்காம என் பெருமானுக்கு இது அது வேணும்ன்னு ஆசை படலாம். அது சரி! அவனுக்கு என்ன வேணும். எல்லாமே அவனுது அல்லது அவனே எல்லாமுமாயும் இருக்கிறான். அவனுக்கு இது வேணும் அது வேணும் ன்னு ஆசை படுகிறது ஒரு வகையில மூடத்தனம்தான். இருந்தாலும் நமக்கு வேணும்ன்னு நினைக்கறதைவிட இது பரவாயில்லை. இது மெதுவாக சித்த சுத்திக்கு -எண்ணத் தூய்மைக்கு - கொண்டு போகும். அது நல்லது.

Friday, January 20, 2012

காமம் -1


காமம்

முன்னே கோபத்தைப்பத்தி பார்த்தோம். இப்போ இந்த கோபத்துக்கு காரணமான காமத்தை பார்க்கலாம்.

அதெப்படி கோபத்துக்கு காமம் காரணம் ன்னா,

ஒரு பொருள் வேண்டும் ன்னு ஆசை படுகிறோம். அது கிடைக்கவில்லை. இது காமம்.

சிலது இப்படி இப்படி இருக்கணும்ன்னு நினைக்கிறோம். அதுவும் ஒரு ஆசை - காமம். அது அப்படி நடக்காம போனால் நமக்கு 'ப்ரஸ்ட்ரேஷன்' - நிராசை - உண்டாகிறது. அதற்கு காரணமா இருந்த நபர் மேலே கோபம் வருகிறது. ஆரம்பநிலையிலேயே காமம் இல்லைன்னா நடக்காத விஷயத்தால மன பாதிப்பும் வராது; கோபமும் வராது.

காமம் ஏன் வருகிறது?

இதுக்கு நம்மோட வாசனைகளே காரணம். முன்னே - அது இந்த பிறவியோ முன்னால கிடைச்ச பிறவியோ- நம்மில ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். இது நம்மோட ஆழ் மனதில இருக்கும். இவை இப்ப நம்மோட இச்சைகளை தூண்டுகின்றன. அனுபவிக்காத ஒரு விஷயம் நமக்கு வேணும்ன்னு தோணாதில்லையா? முன்னே பயணம் செய்த போது பசித்தது. இன்ன இடத்திலே சாப்பிட்டோம். அங்கே கேசரி ரொம்ப நல்லா இருந்தது. இது நினைவிலே இருக்கும். மறு முறை அந்த பக்கம் போகும்போது பசிக்கிறதோ இல்லையோ முன்னே சாப்பிட்ட இடத்துக்கு திருப்பியும் போய் கேசரி வாங்கி சாப்பிடத்தோணும். பசிக்கு சாப்பிடணும்ன்னு தோணுவது இயற்கை உந்துதல். அது உயிர் வாழ வேண்டி இருக்கு. உயிரை தக்க வைச்சுக்கொள்ளணும் என்கிற ஆசை என்றாலும் அதை காமம்ன்னு சொல்ல முடியாது. பசிக்கும்போது வாங்கி சாப்பிடுவதை காமம்ன்னு சொல்ல முடியாட்டாலும் பசி இல்லாதப்ப இப்படி வாங்கி சாப்பிடறது காமம் இல்லாம வேறென்ன?

பசிக்கு சாப்பிடுவது என்பது நிச்சய தேவையாக போயிடுத்து. அதுக்கு மேலே அந்த தேவையை வளர விடக்கூடாது. இதைத்தான் ஆங்கிலத்துல சீலிங் ஆன் டிசயர் (ceiling on desire) என்கிறாங்க. இருக்க ஒரு இடம், உடுக்க ஒரு துணி, சாப்பாடு இவை மட்டுமே அடிப்படை தேவைகள். இவையே எப்படி இருக்கலாம்ன்னும் இருக்கு. மழைக்கு பாதுகாப்பான வீடா இருந்தா போதும். மாடி வீடு, கான்க்ரீட் வீடா இருக்கணும்ன்னு இல்லை. கிழியாததா ஒரு கீழ் துணி, ஒரு மேல் துணி இருந்தா போதும். மாற்று உடையா - இருக்கறதை துவைத்து காய வைத்து போட - இன்னொரு செட் இருக்கலாம்.

உடம்பை கெடுக்காத ஒரு அல்லது இரண்டு வேளை சாப்பாடே போதும். ஒரு வேளை சாப்பிடுகிறவன் யோகி; இரு வேளை சாப்பிடுகிறவன் போகி; மூணு வேளை சாப்பிடுகிறவன் ரோகி ன்னு சொல்கிறாங்க!

ஆனால் சாதாரணமா நாம் இதுக்கு மேஏஏஎலேயே எல்லாம் வெச்சு இருக்கோம். குடிசை வீடு இருந்தா ஓட்டு வீடு வேணும்ன்னு ஆசை; ஓட்டு வீட்டிலே இருந்தா கான்க்ரீட் கூரை வீடு வேணும்ன்னு ஆசை; அது இருந்தா மாடி வீடா இருக்கலாமேன்னு தோணும். இப்படி இல்லாததுக்கு ஆசை படுகிறவங்களே அதிகம். இருக்கிறதை வைத்துக்கொண்டு திருப்தி அடைகிறவங்க வெகு சில பாக்கியசாலிகளே. ஒவ்வொருத்தர் வாட்ரோபையும் பாருங்க. எத்தனை ட்ரெஸ் இருக்கு? வீட்டு சாப்பாடு போர் அடிக்கிறது. ஓட்டலுக்கு போய் வித விதமா சாப்பிடலாம்ன்னு நினைக்கிறவங்க எத்தனை பேர்?

ஒரு வருஷம் முன் ஒத்தர் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அது குறிப்பாக இளம் பெண்களை இலக்காக கொண்டது....

தொடரும்....

பஞ்சதஶீ, -1 -19ஸத்த்வாம்°ஶை​: பஞ்சபி⁴ஸ்தேஷாம்° க்ரமாத்³தீ⁴ந்த்³ரியபஞ்சகம் | ஶ்ரோத்ரத்வக³க்ஷிரஸநக்⁴ராணாக்²யாமுபஜாயதே || 19|| 

சத்வ ப்ரதானமான ப்ரக்ருதியில் இருந்து ஐந்து சூக்ஷ்மமான இந்திரியங்கள் தோன்றின. அவை கேட்டல், தொடுதல், காணல், சுவைத்தல், நுகர்தல் ஆகியன ஆகும்.

Monday, January 9, 2012

பஞ்சதஶீ, 1- 18


தம​: ப்ரதா⁴நப்ரக்ரு«தேஸ்தத்³போ⁴கா³யேஶ்வராஜ்ஞயா | 
வியத்பவநதேஜோ'ம்பு³ பு⁴வோபூ⁴தாநி ஜஜ்ஞிரே || 18|| 

இந்த ப்ராக்ஞன் அனுபவிப்பதற்காக ஈஸ்வரனின் கட்டளையால் தமஸ் ப்ரதானமான ப்ரக்ருதியில் இருந்து ஆகாயம், வாயு, அக்னி, நீர், மண் ஆகிய பஞ்ச பூத கூறுகள் தோன்றின.

Wednesday, January 4, 2012

பஞ்சதஶீ, 1-17


அவித்³யாவஶக³ஸ்த்வந்யஸ்தத்³வைசித்ர்யாத³நேகதா⁴ |
ஸா காரணஶரீரம்° ஸ்யாத்ப்ராஜ்ஞஸ்தத்ராபி⁴மாநவாந் || 17|| 

மற்றது (அசுத்த ரஜோ தமோ குணங்களுடைய பிரஹ்ம நிழல்) அவித்யைக்கு ஆளாகும்; ஜீவன் எனப்படும். இந்த குணங்கள் எந்த விகிதத்தில் கலந்துள்ளது என்பதை முன்னிட்டு இது பலவாக விசித்ரமாக தோன்றும். இந்த அவித்யையே காரண சரீரமாகும். இந்த காரண சரீரத்துடன் அடையாளப் படுத்திக் கொள்ளும் ஜீவன் ப்ராக்ஞன் எனப்படுவான்.