Pages

Showing posts with label சக்யம்:. Show all posts
Showing posts with label சக்யம்:. Show all posts

Sunday, March 10, 2013

சக்யம் - 3

 
சரி சரி என்ன செய்வது, வயசான பிறகே திருமணம் நடந்து இருக்கிறது என்றால், ஒரு பெரிய பிரச்சினையும் இல்லை. கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும், காமத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இந்த மனிதனுடன்தான் என் மீதி வாழ்கையை கழிக்கப்போகிறேன்; அதனால் கொஞ்சமாவது விட்டுக்கொடுத்து இவனை நண்பன் ஆக்கிக்கொள்ளப்போகிறேன் என்று பெண்ணும்; இவள் என்னை நம்பி வீடு மாறி இங்கே வந்துவிட்டாள், இவளுடன்தான் மீதி வாழ்கையை வாழப்போகிறேன்; அதனால் கொஞ்சமாவது விட்டுக்கொடுத்து இவளை சகியாக ஆக்கிக்கொள்வேன் என்று ஆணும் நினைக்க ஆரம்பித்துவிட்டால் வாழ்கை சுகமாகவே கழிய வாய்ப்பு இருக்கிறது.

மாறாக நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்ற ரீதியில் வாழ ஆரம்பித்தால் குடும்பம் சீராக ஓடாது. இந்த சூழ்நிலையில் குழந்தையும் பிறந்துவிட்டால் ... பாவம் அந்த குழந்தை!
குழந்தைகள் கண்டு, கேட்பதை விட பல விஷயங்களை சூக்ஷ்மமாகவே உணர்கிறார்கள். அதனால் நமக்கும் நம் மனைவி/ கணவன் நடுவில் இருக்கும் டென்ஷன் அவர்களுக்கு தெரியாது என்று ஏமாற வேண்டாம்.
கணவன் மனைவி ஆரம்பத்தில் சண்டை போட்டாலும் ஒவ்வொன்றையும் அன்றுடன் மறந்துவிட பழக வேண்டும். நண்பர்கள் போடாத சண்டையா! போகப்போக அட்ஜெஸ்ட்மெண்ட் எல்லாம் ஆகி சௌஜன்யம் வந்துவிடும்.

அப்புறம் ஏன் இதெல்லாம் 'ஆன்மீக' பதிவுகளில் வருகிறது என்று தோன்றலாம். ஆன்மீக ரீதியாக கணவனும் மனைவியும் ஒரு யூனிட் ஆகத்தான் பார்க்கப்படுவார்கள். தனித்தனியாக இல்லை. இவர்களது பந்தம் காலம் காலமாக தொடரும் ஒன்று. இருவரில் ஒருவராவது ஆன்மீகம் பக்கம் திரும்பினால் அது மற்றவரையும் பாதிக்கும். ஒருவரது முன்னேற்றம் மற்றவரையும் முன்னேற்றும்.

சக்யத்தில் கடைசியாக..... சக்யம் மனிதர்களுடன் இருப்பதை விட பகவானுடன் இருப்பது இன்னும் சிறந்தது. மனித சக்யமாவது பல சிக்கல்களுடன் துவங்கி தட்டுத்தடுமாறி முன்னேறலாம். ஆனால் பகவானுடனான சக்யம் சீக்கிரமே பலப்படும் வாய்ப்புகள் அதிகம். பகவானுடனான சக்யம் பக்தியில் ஒரு வகை.
நல்ல உதாரணம் அர்ஜுனன் க்ருஷணனுடன் கொண்டு இருந்த பக்திதான். க்ருஷ்ணனை அவன் நண்பன் போலத்தான் பார்த்தான்.... தன் தங்கை சுபத்ராவை அர்ஜுனன கல்யாணம் பண்ணிக்க ப்ளான் போட்டு கொடுத்ததே க்ருஷ்ணன்தான். இதே போலத்தான் சுந்தரர் சிவ பெருமானிடம் கொண்டு இருந்த பக்தி. கோபிச்சு கொண்டு இருந்த மனைவிகிட்ட தூதாகவே போய் "பிரச்சினையை தீர்த்து வை" ன்னு மிரட்டினார்! என்னவெல்லாம் வேலை வாங்கினார்! இதை எல்லாம் முன்னேயே எழுதி இருக்கிறேன். இங்கே படிக்கலாம்.

எனக்கு என்னவோ பகவானை ஒரு பயத்தோட, மரியாதையோட எல்லாம் பக்தி செய்யறதை விட இப்படி ஃப்ரெண்டா கருதறதுலே அர்த்தம் இருக்கறதா தோணுது! யாரை ஃப்ரெண்டா கருதலைன்னாலும் 'ஆனை உம்மாச்சி' யை ஃப்ரெண்டா கருதறதிலே பிரச்சினையே வராது! அப்படி ஒரு சௌஜன்யமான ரூபம் அவருக்கு!
அந்த ஃப்ரெண்ட் நம்மை எல்லாரையும் காப்பாத்தட்டும்ன்னு வேண்டிகிட்டு சக்யத்தை முடிவுக்கு கொண்டு வரேன்!

Tuesday, March 5, 2013

சக்யம் -விளக்கம் தேவை.


கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது! மனித மனதுதான் எவ்வளவு விசித்திரமானது? ஒரு பதிவில் தான் நினைப்பதை படிக்கிறதே தவிர என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்று படிப்பதில்லை.
நான் குறிப்பாக "இதற்காக பால்ய விவாஹத்தை நான் ரெகமண்ட் செய்கிறேன் என்றில்லை" என்று எழுதினேன்.
 சின்ன வயதில் சக்யம் சுலபமாக ஏற்படும்; வயதான பிறகு ஈகோ தலை தூக்கி பிரச்சினைகள் ஏற்படுவதாக எழுதினேன்.
 எழுதாத விஷயங்கள் எழுதப்பட்டதாக நினைப்பது... என்ன சொல்ல?

  "சின்ன வயசுல கல்யாணம் ஆனவங்க எல்லாம் மனம் ஒத்துதான் வாழ்ந்தார்கள்"
"பால்யத்தில் மணம் புரிந்தவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்கள் "

இப்படி எல்லாம் எங்காவது எழுதி இருகிறேனா என்று தயை செய்து சொல்லவும்.
(அப்பாடா! இன்னைய பதிவு எழுதியாச்சு!)

 

Monday, March 4, 2013

சக்யம் - 2

திருமணத்திலேயே எவ்வளவு கருத்து பொதிந்த ரிசுவல்ஸ்! தாலி கட்டுவதால் திருமணம் முடிவதில்லை. கை பிடிப்பதால் இல்லை. சட்டப்படியே இந்து திருமணம் ஆகிவிட்டது என்று சொல்வது சப்தபதி என்னும் ரிசுவல் முடிந்த பிறகுதான். இந்த சப்தபதியின் போது சொல்லும் மந்திரங்களின் பொருளே சக்யம் பற்றியதுதான். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் இன்ன இன்னது வேண்டும் என்று வேண்டுதல் இருக்கிறது. பின் இப்படி ஏழடி ஒன்றாய் நடந்த நாம் நண்பர்கள் ஆகிவிட்டோம்! .... என்று இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக்கொள்வதாய் உறுதி சொல்லப்படுகிறது. எல்லாம் எனக்கு பிடித்த படி நடக்கும் வரை ஒத்துழைப்பேன். எனக்குப்பிடிக்கைவில்லை, கஷ்டகாலம் என்று எனக்கு தோன்றிவிட்டால் டிவோர்ஸ் வாங்கிக்கொண்டு ஓடிவிடுவேன் என்பது என்ன நாகரீகம்?

இந்த காரணங்களாலேயே கணவன் மனைவி இடையே "இன்கம்பாடிபிலிடி" என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. மாமியார் - நாட்டுபெண் சண்டை, எடுத்தெறிந்து பேசுவது என்று ஒன்றும் அதிக அளவில் இல்லாமல் இருந்தது. குழந்தையிலிருந்து அந்த மாமியார்தானே பெண்ணை வளர்க்கிறார்! கண்டிப்புடன் வளர்ப்பதால் அப்போதைக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் பின்னால் அது நன்மையே பயத்தது.


இப்போது நேர் மாறாக எல்லாமே இருக்கிறது. கலிகாலத்தில் கலிகாலத்தில் ஆட்டுக்கல் நிற்க குழவி சுற்றுவதாக  போன மாதிரி, வயதான காலத்திலேயே திருமணம் பற்றி யோசிக்கிறார்கள். பல பெற்றோர்களுக்கு 'எவ்வளவு செலவு செய்து படிக்க வைத்தோம்! கொஞ்சம் சம்பாதித்து கொடுத்தால் என்ன' என்று கூட தோன்றுகிறது. பெரிய படிப்பு படித்து, வேலைக்குப்போய் நாலு காசும் கையில் பார்த்துவிட்ட பெண்ணுக்கு ஈகோ நிறையவே தலை தூக்கி 'இவன் வேண்டாம் அவன் வேண்டாம்' என்று தட்டிக்கழிப்பதிலேயே காலம் கடந்து கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு, "பாவம் நீ, எனக்காக இவ்வளவு சிரமப்படுகிறாய்; ஐம் சாரி" ன்னு பீலிங்க்ஸ் வேற விடுகிறார்கள். முதிர் கன்னி ஆகும் காலத்தில் பஸ் மீண்டும் வருகிறது. என் குடும்ப/ நண்பர்கள் வட்டாரத்திலேயே எனக்குத்தெரிந்து மூன்று நான்கு பெண்கள் அவர்களது பெற்றோர்களை இன்னைய தேதிக்கு அழவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்!


இதற்காக பால்ய விவாஹத்தை நான் ரெகமண்ட் செய்கிறேன் என்றில்லை. அரசு அனுமதிக்கும் வயது வந்தவுடனே திருமணத்தை முடிப்பதில் அர்த்தம் இருக்கிறது. சில கம்யூனிடிகள் பால்ய விவாஹம் செய்வது எங்கள் உரிமை என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறது.


விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வதற்கு மேற்கோள் காட்டக்கூடிய கதை சத்யவான் சாவித்ரி கதை. கதை பலருக்கும் தெரிந்ததுதான்; அதனால் அதை இங்கே சொல்லப்போவதில்லை. சத்யவானின் உயிரை பரித்துக்கொண்டு செல்லும் யமனை சாவித்ரி பின் தொடர்கிறாள். “ஏன் என் பின்னாடி வருகிறாய்?” என்று யமன் கேட்கிறான். இப்படி திரும்பிப்பார்த்து பேச ஆரம்பித்ததுதான் அவன் செய்த பிழை! இதையும் அதையும் பேசிக்கொண்டு கொஞ்ச தூரம் ஒன்றாக நடந்துவிட்டார்கள். பின் யமன் சொல்கிறான், “நீ என்ன சொன்னாலும் பிரயோசனமே இல்லை. இந்த உயிரை திருப்பித்தருவது என்பது நடக்க முடியாத காரியம்.”
“சரிதான். ஆனால் நாம் ஏழடி ஒன்றாக நடந்துவிட்டோமே! இப்போது நாம் நண்பர்கள் ஆகிவிட்டோம். ஒரு ஆபத்தில் உதவாத நண்பன் என்ன நண்பன்?”
"எடுத்த உயிரை திருப்பிக் கொடுக்க வாய்ப்பில்லை. அதனால், ஏதாவது வரம் கேள் தருகிறேன்" என்றான். சாவித்ரி  ‘என் வம்சம் தழைக்க வேண்டும்’ என்று வரம் கேட்டாள். எமன் சற்றும் யோசிக்காமல் "கேட்டதை தந்தோம். உன் வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும்" என்று வரம் தந்து விட்டான். "கருணைக்கு மிக்க நன்றி. வாக்கு பலிக்க வேண்டும். என் வம்சம் தழைக்க என் கணவனை என்னுடன் அனுப்ப வேண்டும்" என்று வேண்டினாள் சாவித்ரி!

இந்த ஏழடி ஒன்றாக நடந்தால் நண்பன் என்ற கான்சப்ட்தான் திருமணத்திலும் சொல்லப்பட்டது. திருமணத்தின் நோக்கம் பிரஜைகளை உருவாக்குவதாக இருந்தாலும் அதை தர்ம வழியில் உண்மையான நட்புடைய தம்பதிகளின் மூலம் சாதிப்பதையே விரும்புகிறது!
குறிப்பு:
சப்தபதி பற்றி சற்று விரிவான பதிவுகள் இங்கே, இங்கே. இவையே போதுமென்று நினைக்கிறேன்.

Friday, March 1, 2013

சக்யம்

 
சக்யம்:
நாம் யார் சொன்னால் கேட்போம்? நம் பெற்றோர்? நம் ஆசிரியர்? நம் மனைவி/ கணவன்?
யோசித்து பார்த்தால் சாதாரணமாக நம் நண்பன் சொல்வதைத்தான் கேட்போம். உறவு என்பதில் நம் சாய்ஸ் ஒன்றும் இல்லை. என் அப்பாவின் தம்பிக்கு மகன் பிறந்தால் அவன் என் சித்தப்பா பிள்ளை ஆகிவிடுகிறான். இதில் என் சாய்ஸ் ஏதுமில்லை. ஆனால் நண்பன் என்பது அப்படி இல்லை. நான் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது விட்டுவிடலாம். சண்டை போடலாம்... உண்மையில் சண்டை போட்டுக்கொண்டு வளரும் நட்பு இன்னும் பலமாக இருக்கிறது. நீடித்து நிலைக்கிறது. சண்டை போட்டதால் நம் ஜன்ம வைரி ஆகிவிடுவதில்லை. பிறகு சமாதானம் செய்து கொள்கிறோம். அல்லது இன்னொரு பரஸ்பர நண்பன் சமாதானம் செய்து வைப்பான். யார் பக்கம் உண்மையில் தவறு என்பது எல்லாம் ஒரு காரணியாக இல்லாது போகும். சாரிடா என்று இருவரும் சொல்லிக்கொண்டு ஒன்று சேர்ந்து விடுவார்கள். இதில்தான் நீக்குப்போக்கு ஆரம்பிக்கிறது. இது தொடருமானால் வாழ்கையில் இவர்கள் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகம்.

இன்று சர்வ சகஜமாக பார்க்கக்கிடைப்பது டைவோர்ஸ்.

குழந்தை திருமணம் கூடாது என்று சட்டம் இயற்றிய அரசு, திருமண வயதை கூட்டிக்கொண்டே போகிறது. வயது கூட கூட பெண்ணோ ஆணோ மனசு இறுகி விடுகிறது. நீக்குப்போக்குகள் மறைய ஆரம்பித்துவிடுகிண்றன. எதிர்பார்ப்புகள் பலதும் இருக்கிறன. இப்படித்தான் இருக்க வேண்டுமென்று மனைவியும் கணவனும் சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமலே வாழ்கையை தள்ளிக்கொண்டு போகிறார்கள். தினசரி சண்டை சச்சரவிலேயே போகின்றன நாட்கள். குழந்தை பிறந்தாலும் இவர்கள் உறவில் ஒரு மாற்றமும் வருவதாகக்காணோம்! மாறாக குழந்தை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஈகோ மோதலுக்கு இன்னொரு சமாசாரம் கிடைக்கிறது போலிருக்கிறது!

இப்போதெல்லாம் திருமணம் வயதான காலத்தில் நடக்கிறது. ஹார்மோன்கள் பீக்கில் இருக்கும் போது நடக்கிறது. உடல் அழகுதான் மனசில் முன் நிற்கிறது. அந்த அழகு காணாமல் போகும்போது மனசு ஏமாறுகிறது! பூங்கொடி என்று பெயருக்கு தகுந்தாற்போல் இருந்த பெண் ஓரிரு வருடங்களில் அந்த பூங்கொடி இருக்கும் ஜாடி போல ஆனபின் .... சிக்ஸ் பேக்ஸ் ஆசாமிக்கு அலுவலக வேலை குடும்ப டென்ஷனில் தொப்பை விழுந்த பின்.... காமத்தில் ஆரம்பிக்கும் உறவு அது விலகும் காலகட்டத்தில் விட்டுச்செல்வது ஏமாற்றமும் வெறுமையுமே!

முன் காலத்தில் இப்படி இல்லை. அதாவது சார்தா சட்டம் வருமுன். குழந்தையிலேயே இவன் இவளுக்கு; இவள் இவனுக்கு என்று நிர்ணயித்து திருமணம் நடத்தி விடுவார்கள். காமம் உட்புகாத காலத்திலேயே ஏற்படும் இந்த உறவு நட்பாகத்தான் மலரும். பலரும் கற்பனை செய்வது போல திருமணம் ஆகிவிட்டதால் இவர்களது தாம்பத்ய உறவு உடனே ஆரம்பிப்பதில்லை. வீட்டு பெரியவர்கள் அதில் கண்டிப்புடன் இருப்பார்கள்.

ஹார்மோன்கள் தம் வேலையில் ஆரம்பிக்கும் காலத்தில் ஆசை வரும். உடல் வளர்ச்சியும் ஏற்படும் காலத்தில்தான் தாம்பத்யம் அனுமதிக்கப்படும். அந்த ஆசை போன பின் மீண்டும் நட்பு தொடரும். வாழ்கை சுகமாகவே செல்லும். எண்பது வயது பாட்டிக்கு காப்பி கொண்டு கொடுத்தால் அந்த கிழத்துக்கு கொடுத்தியா என்று கேட்பார். ஏன்டா இந்த கிழவி லொக்லொக் ன்னு இரும்பிகிட்டு கிடக்கே சுக்கு கஷாயம் போட்டு கொடுக்கச் சொல்லறதுதானே ன்னு கிழவர் கேட்பார். இப்போது கணவன் மனைவி இடையில் உறவு மற்றவருக்கு ஜுரம் அடிக்கிறதா என்று கூடத்தெரியாத அளவுக்கு இருக்கிறது.

திருமணத்திலேயே எவ்வளவு கருத்து பொதிந்த ரிசுவல்ஸ்! தாலி கட்டுவதால் திருமணம் முடிவதில்லை. கை பிடிப்பதால் இல்லை. சட்டப்படியே இந்து திருமணம் ஆகிவிட்டது என்று சொல்வது சப்தபதி என்னும் ரிசுவல் முடிந்த பிறகுதான். இந்த சப்தபதியின் போது சொல்லும் மந்திரங்களின் பொருளே சக்யம் பற்றியதுதான்..... (தொடரும்...)