Pages

Showing posts with label ஜபம். Show all posts
Showing posts with label ஜபம். Show all posts

Wednesday, June 28, 2017

ஜபம்





நண்பர் நெ.த ஜபம் பத்தி கேட்டிருந்தார்.
காயத்ரீ ஜபம் செய்யும்போது மனது ஒன்றுவதில்லை. இதற்கு உள்ள கிரமம் (அதாவது இன்ன DEITY படம் வச்சு, விளக்கேத்தி.... மாதிரி) என்ன.
என்ன செய்யலாம்? ம்ம்ம்ம்?
காயத்ரி தேவியையே கேட்கலாம். அம்மா, மனசு உன் ஜபத்தில பதிய வையேன்னு!
நமக்கு அவ்ளோ பக்தி போறாதேன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான். அப்ப சில நம்ம யத்னத்தில (??!!) செய்யக்கூடியதை செஞ்சு பார்க்கலாம்.
கர்மா க்ரமம் எப்படி போட்டு இருக்கு? ஜபத்துக்கு முன்னே விதிச்சு இருக்கறது ப்ராணாயாமம். இது மத்த சில பயன்களோட மனசு ஒன்றவும் செய்ய வைக்கும். அதுக்கு சரியான விகிதத்தில செய்யணும். இதோட விவரங்களை இங்கே பாருங்க
செஞ்சாச்சு, அப்புறம்?
புதுசா கத்துக்கற எதையும் செய்ய நாம் மனசை குவிச்சே செய்வோம். உதாரணமா பூஜை செய்ய ஆரம்பிக்கிறோம். என்ன ஸ்லோகங்கள் / மந்திரங்கள் சொல்லணும்? எல்லாமே புதுசா இருக்கும். பாத்து பாத்து சொல்லிவிடுவோம். தப்பில்லாம சொல்லணுமேன்னு ஒரு சின்ன கன்சர்ன் இருந்தா முழு ஈடுபாடு இருக்கும். இதுவே பழகின பிறகு இன்னைக்கு காப்பி சுத்த மோசம். டிபன் என்ன செய்வா அதுவாவது சரியா இருக்குமான்னு இந்த ரீதியில் எதையாவது நினைச்சுண்டே பூஜை செஞ்சுண்டு இருப்போம்!
நான் பஞ்சாயதன பூஜை செய்ய ஆரம்பிச்சப்ப என் அத்தை மகன் ரா.கணபதிகிட்ட ரொம்ப நேரம் ஆகறது அண்ணான்னு புகார் பண்ணேன். அவர் சிரிச்சுண்டே "பரவால்லை. பாத்து செய்யறப்ப கான்சண்ட்ரேஷன் இருக்கும்"ன்னார்!
புதுசா ஒரு மொழியை கத்துக்கறப்ப முதல்ல பார்த்து, உரக்கப்படிப்போம். கொஞ்சம் பழகின பிறகு உதடு அசைய படிப்போம். அப்புறம் மௌனமாவே படிக்கலாம். அதே போல…
ஆரம்ப காலங்களில உரத்து சொல்லும் ஸ்லோகத்தை நாளாவட்டத்தில முணமுணத்துண்டே சொல்லுவோம். இதுக்கு உபாம்சு ன்னு பேர். உரக்க சொல்லறதைவிட இது நல்லதாம். பத்து மடங்கு பலன். இன்னும் நாளாச்சுன்னா அந்த முணமுணப்பு கூட இராது. மனசில சொல்லிண்டு போவோம். இதுதான் மானசீகம். இது இன்னும் சிலாக்கியம்ன்னு சொன்னாக்கூட இங்கதான் பிரச்சினை ஆரம்பிக்கறது! மந்திரத்தை கோட்டை விட்டுட்டு வேற எங்கேயோ புல் மேய மனசுக்குதிரை போயிடும்! சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மாதிரி திருப்பி அதை இழுத்துண்டு வரணும். வேற எங்கேயோ போயிடுத்துன்னா இழுத்துண்டு வரலாம். அது தெரியாமலேன்னா ஓடிப்போறது?
ரைட் இப்ப புரிஞ்சாச்சு. இரண்டு ட்ரிக்ஸ்!
ஒண்ணு புதுசா செய்யறதை கவனத்தோட செய்வோம். ஸோ ஒவ்வொரு முறை ஜபத்துக்கு உக்காரும்போதும் புதுசா எதையாவது புகுத்தலாமே? எப்படின்னா….
ஸ்வரத்தை சரியா சொல்லறோமான்னு கவனிக்கலாம். உச்சரிப்பு சரியா இருக்கான்னு கவனிக்கலாம். இதுக்கு நிறையவே ஸ்கோப் இருக்கு.
சரியாக ஸ்பீட்ல சொல்றோமான்னு கவனிக்கலாம்.
மந்திரம் சொல்லறப்ப ஒரு கோட்டோவியத்தை கற்பனை செய்து வரைந்து கொண்டே சொல்லலாம். இதை பத்தி இங்கே சொல்லி இருக்கேன்.
ரைட் அடுத்து, தெரியாம மனசு குதிரை ஓடிப்போறது இல்லையா? இதுக்கு ஏதாவது செய்யலாம்? லாம்! குதிரைய பாத்துண்டே இருந்தா அது ஓடாது. உண்மையில் அசையாமலே நின்னுடும். a watched mind is a quiet mindன்னு தயானந்த ஸ்வாமிகள் எங்களுக்கு பாடம் எடுத்தார். இதுக்கும் பயிற்சி தேவைதான்.

ராம க்ருஷ்ணர் சொல்றார் நீ சொல்லற மந்திரம் உன் காதிலேயே கேட்கணும்ன்னு.சொல்கிற மந்திரத்தை மூணாவது மனுஷன் மாதிரி வேடிக்கை பார்க்க கத்துக்கணும். எடுத்த எடுப்பில இது முடியவே முடியாதுன்னு தோணினாலும் நிச்சயமா முடியும்.
இப்படி பார்க்கிறது உரக்க சொல்கிற மாந்திரதுக்கு சுலபம். ஒலி காதுல கேட்கிறது இல்லை? அதனால. உபாம்சுவா சொன்னா உதடுகளோட அசைவில கவனம் வைக்கலாம். மானசீகதுக்கு மேலே சொன்ன ஸ்வரத்தை கவனிக்கறது போன்ற உத்திகள் வேணும். மந்திரம் சொல்கிற விதம் செட்டில் ஆயாச்சுன்னா அதுக்குள்ள வேடிக்கை பார்க்கவும் தெரிஞ்சுடும்.
என்ன செஞ்சாலும் ஆரம்ப காலங்கள் கஷ்டம்தான். அப்போ ச்சேன்னு விட்டுடாம விடாப்பிடியா செய்யணும். குதிரை ஓடிப்போயிடறதேன்னு கவலைப்படாம திருப்பி திருப்பி இழுத்துண்டு வரணும்.

Sunday, December 1, 2013

கடவுளுடன் லிங்க்- ஜபம் -2

எபக்டிவ்வா ஜபம் செய்ய முதல்ல சரியா உட்காரணும். தரையில் உட்கார பலருக்கு பழக்கம் போய்விட்டது இல்லையா? எல்லாம் சேர், சோஃபா என்றாகிவிட்டது. இதனால் புது பிரச்சினகளும் வர ஆரம்பித்துவிட்டன. போகட்டும்.

வெறும் தரையில் உட்காருவது கூடாது. நம் ஆன்மீக ஆற்றலை இது இழுத்துக்கொண்டு விடும் என்கிறார்கள். உட்காரும் இடம் சுத்தமாக இருப்பதை கவனிக்க வேண்டும். கீழே சிறு கம்பளம், பாய்,  மரப்பலகை (மணை), பாய், கர்சீப், துண்டு கூடப்போதும்.  சில்க் கர்சீப் வெகு சின்னதாக மடியும். எடுத்துச்செல்ல சௌகரியம்.
தர்ப்பை ஆசனம் வெகு உன்னதமானது. தர்பையால பாய் முடைஞ்சு விற்கிறாங்க. அதை பயன்படுத்தலாம். ஒரு 6 மாசம் வரும். காசி போன்ற இடங்களிலே சுலபமா கிடைக்கும்.

நம் உடலை தசைகள் எல்லாம் பாலன்ஸ் செய்கின்றன. அப்படியே உட்காருகிறோம். உட்காரும்போது அவை தளராமல் அப்படியே இறுக்கத்தில் இருந்துவிடுகின்றன. இதுதான் கொஞ்ச நேரத்துக்கு மேல் உட்காரமுடியாமல் இப்படியும் அப்படியுமாக அசைய வேண்டிய கட்டாயத்துக்கான காரணம்.

எப்படி இதை  சரி செய்வது?
வழக்கம் போல உட்கார்ந்துவிடுங்கள். அப்புறம்  இடுப்பில் இருந்து முன் பக்கமாக வளையுங்கள். குனிஞ்சு தலையால தரையை தொட முயற்சி செய்யறாப்போல. இப்போது இடுப்பு அருகில் உள்ள தசைகள் எல்லாம் நெகிழ்ந்து கொடுக்கும். அப்படியே நிமிர்ந்தா முடிஞ்சது! அவ்வளோதான்! எத்தனை சுலபம் பாத்தீங்களா?
இதே எஃபக்ட் கைகளை பக்கத்தில் ஊன்றிக்கொண்டு உடலை அவற்றின் பலத்தில் தூக்கி கீழே இறக்கினாலும் கிடைக்கும். வயதானவர்களுக்கு கொஞ்சம் கடினம்.

அடுத்து கவனிக்க வேண்டியது முதுகு எலும்பு நிமிர்ந்து நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்வதுதான். இது பலருக்கும் கஷ்டமாக தோன்றும். ஆனால் முன்னே சொன்ன படி உட்கார்ந்த பிறகு இது சுலபமே என்று தெரியவரும். சரியாக உட்காராத போது தசைகள் இறுக்கத்தில் இருப்பதால் முதுகு வளைந்தால்தான் பாலன்ஸ் கிடைக்கும். அதனால் முதுகை வளைத்தே உட்காருகிறோம். அப்போது அதுதான் சௌகரியமாக இருக்கும். ஆனால் தசைகள் இந்த நிலையை தொடர்ந்து பராமரிக்க வேண்டி இருப்பதால் கொஞ்ச நேரத்தில் வலிக்க ஆரம்பித்து விடும். முதுகு எலும்பை நேராக வைத்துக்கொள்ள பழகிவிட்டால் இது தசைகளுக்கு அதிக வேலை கொடுக்காது. பளு எலும்புகள் வழியா கீழே இறங்கிடும். அதனால் வலிக்காது.

ஆரம்பத்தில் பழக்கமில்லாமல் இருப்பதால் கவனத்துடன் செய்ய வேண்டி இருக்கும். நாளடைவில் பழகிவிடும். இயல்பாகவே சரியாக உட்காருவோம்.
இப்படி செய்தும் நிமிர்ந்து உட்காரமுடியாமல் இருந்தால் வஜ்ராசன் பழக்கிக்கொள்ள வேண்டும். அதில் இயல்பாகவே நிமிர்ந்துதான் உட்கார முடியும். பாதங்கள் மடங்குவது பழகிவிட்டால் இதுவும் நன்றாகவே உட்கார உதவும்.

குருவின் கட்டளை வேறாக இல்லாத பட்சத்தில் ஜபம் செய்ய சுகாசனமோ (வழக்கமாக உட்காருவது) சித்தாசனமோ (இது ரமணரோட பரிந்துரை), பத்மாசனமோ சிறந்தது. பத்மாசனம் உடனடியாக முடியாது போனால் அர்த்த பத்மாசனத்தில் சில நாள் பழகலாம். அது ஒரு பக்கம் மட்டுமே பத்மாசனம் போல காலை வைத்துக்கொண்டு உட்காருவது.
இதெல்லாம் ஆரம்பத்துல கஷ்டமானாலும் போகப்போக பழகிவிடும் சமாசாரம்.