Pages

Showing posts with label மஹாளய சிராத்தம். Show all posts
Showing posts with label மஹாளய சிராத்தம். Show all posts

Friday, September 25, 2015

மஹாளய சிராத்தம் - 2


சாதாரணமாக செய்யப்படும் சிராத்தங்களுக்கும் இதற்கும் நிறைய வேறு பாடுகள் உண்டு. சாதாரண சிராத்தத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஹவிர் பாகம் கொடுக்கப்படும். ஆனால் மஹாளய சிராத்தத்தில் கர்தா சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் கொடுக்கலாம்.

பிதா மாதா இறந்த திதிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அதாவது அப்பாவின்/ அம்மாவின் சிராத்தம் அஷ்டமியில் வரும் என்றால் அஷ்டமி அன்றுதான் சிராத்தம் கொடுக்க வேண்டும் என்று இல்லை.

மஹாளய பக்‌ஷத்தில் ஒரு நாள் மட்டும் சிராத்தம் கொடுப்பதாக இருந்தால் சதுர்தசி நீங்கலாக பஞ்சமி முதல் அமாவாசை வரை என்று வேண்டுமானாலும் செய்யலாம். திதி வார நக்‌ஷத்ர தோஷம் ஏதும் இல்லாத நாளாக பார்க்க வேண்டும். அமாவாசை, வ்யதீபாதம், அபபரணீ, த்வாதசி. அஷ்டமீ, வருஷ சிராத்த திதி இவற்றில் செய்ய இப்படி தோஷம் பார்க்க வேண்டியது இல்லை. கர்தா சந்ததி இல்லாத விதுரனாகவோ; சந்ததி இல்லாத விதவையாகவோ, ப்ரஹ்மசாரியாகவோ இருந்தால் அமாவாசை அன்று செய்யவும்.

கௌண காலத்தில் செய்வதாக இருந்தால் நந்தை, வெள்ளிக்கிழமை, ப்ரதமை, சதுர்தசீ ஆகியவற்றை விலக்கவும். (நந்தை? அது முஹூர்த்தம் சம்பந்தப்பட்டது.)
மேலே ’திதி வார நக்‌ஷத்ர தோஷம் ஏதும் இல்லாத நாளாக பார்க்க வேண்டும்’ என்று சொன்னோமல்லவா? அவை என்ன?

ப்ரதமை, ஷஷ்டி,ஏகாதசி; வெள்ளிக்கிழமை; கர்தா, பத்னீ, ஜேஷ்டபுத்ரன் ஆகியோருடைய நக்‌ஷத்திரம்; வ்யதீபாதம் சம்பந்தப்படாத ரோஹிணீ; ரேவதி; த்ரயோதசி சம்பந்தமில்லாத மகம் ஆகியவை தோஷமுள்ளவை.

சந்ததி இல்லாதவர்கள் – பத்னி, புத்திரன் இல்லாத விதுரன், விதவை ; ப்ரம்மச்சாரி - அமாவாசை அன்று செய்ய வேண்டும். சந்ததி உள்ளவர்கள் அமாவாசை அன்று செய்யலாகாது. பிதா இல்லாத புத்திரர்கள் எல்லோருமே செய்ய வேண்டும். குடும்பம் பிரிந்து இருந்தால் தனித்தனியாகவே செய்ய வேண்டும்.

ச்ராத்தம் / தர்ப்பணம் செய்ய உசித காலம் மாத்யாஹ்ணிக காலத்துக்கு பின் அபராஹ்ண காலத்துக்குள். அதாவது 12-30 க்கு மேல் 3-30 க்குள். இந்த சரியான நேரத்தில் செய்பவர்கள் அரிதாகவே இருக்கின்றனர்.

பக்‌ஷ தர்ப்பணம் செய்வோர் அமாவாசை அன்று அமாவாசை தர்ப்பணம் செய்த பிறகே மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும்.

மஹாளயத்தில் இன்னொரு விசேஷம் சாதாரணமாக செய்யும் சிராத்தம் போல் இல்லாமல் மற்றவர்களுக்கும் இதில் பங்கு கொடுக்கலாம் என்பதே. அவர்கள் காருணிக பித்ருக்கள் எனப்படுவர். அவர்களது பட்டியல் பின்னால் வருகிறது, இவர்களில் யாருடைய கோத்திரமும் பெயரும் தெரியுமோ அவர்களுக்கு அவர்கள் இறந்து போயிருந்தால் வஸு ரூபமாக வரித்து சிராத்தம் / தர்ப்பணம் கொடுக்கலாம்; தனித்தனியாக செய்ய வேண்டும். 

ஸபத்னீ மாதா (தந்தையின், தன் அம்மாவல்லாத இன்னொரு மனைவி), பெரியப்பா, சித்தப்பா, அண்ணா தம்பிகள், பிள்ளைகள்; அப்பாவுடன் கூடப்பிறந்த தமக்கை, தங்கைகள்; மாப்பிள்ளைகள்; அக்கா, தங்கை, பெண், மனைவி, மாமனார், நாட்டுப்பெண், மைத்துனன், குரு, ஆசார்யன். காப்பாற்றின யஜமானன்; நண்பர்கள் – இப்படி பலருக்கும் தர்ப்பணம் செய்யலாம். பெயர் கோத்திரம் தெரியாதவர்களுக்கும் பொதுவாக காருண்ய பித்ரு என்று சொல்லி செய்யலாம்.

இப்படி காருண்ய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்கையில் தனியாக கூர்ச்சம் வைத்து ஆவாஹணம் செய்ய வேண்டும்.

வருஷ சிராத்தத்தின் சிராத்தாங்க (பரேஹணி) தர்ப்பணம் அடுத்த நாள் காலையில் விடிவதற்குள் செய்யப்பட வேண்டும், ஆனால் மஹாளய சிராத்தத்தின் பரேஹணி தர்ப்பணம் அன்றே செய்யப்பட வேண்டும், இந்த காலத்தில் வருஷ சிராத்தத்திலேயே மிக அரிதாகவே அடுத்த நாள் செய்கிறார்கள். இதற்கு சமாதானம் இந்த விதியில் இருந்தது எடுத்து இருக்கிறார்கள் போலிருக்கிறது!

இன்னும் பல விஷயங்கள் இருந்தாலும் அவை மேலும் ‘டெக்னிகல்’ ஆகையால் இத்துடன் நிறைவு செய்யப்படுகிறது.

Thursday, September 24, 2015

மஹாளய சிராத்தம்-1


எல்லா பித்ருக்களும் யமதர்ம ராஜனால் பூலோகத்துக்கு ஒவ்வொரு வருடமும் பாத்ரபத க்ருஷ்ண பக்‌ஷத்தில் (ஆவணி மாத பௌர்ணமியை அடுத்த பிரதமை முதல்) பூமிக்கு  அனுப்பப்படுகின்றனர். ஆச்வயுஜ சுக்லபக்‌ஷ (புரட்டாசி அமாவாசையை அடுத்த) ப்ரதமை வரையான 16 நாட்கள் அவர்கள் புத்திரன் பெயரன் ஆகியோரால் கொடுக்கப்படும் அன்னம் நீர் ஆகியவற்றை ஏற்று ஆனந்திக்கின்றனர். இவை முக்கிய நாட்கள். கௌண காலமாக (தவறும் பக்‌ஷத்தில் அடுத்து செய்யும் காலமாக) விருச்சிக ராசியை சூரியன் அடையும் காலம் சொல்லப்படுகிறது (கார்திகை மாத பிறப்பு) இதுவே மஹாளய சிராத்த அனுஷ்டான காலம்.

இந்த காலத்தில் செய்யும் பித்ரு பூஜையானது யாகத்துக்கு சமமானது. இந்த கன்யா மாத்ததில் செய்யும் ஒரு நாள் சிராத்தத்தாலேயே பித்ருக்கள் ஒரு வருஷம் த்ருப்தி அடைகிறார்கள். ஆகவே 16 நாளும் செய்யக்கூடிய கர்மாவுக்கு பலன் அபரிமிதமாகும்.
இந்த 16 நாட்கள் முழுவதும் தினசரி பார்வண விதியாக (அதாவது ஹோமத்துடன்) சிராத்தம் செய்வது சிலாக்கியமாகும். அவ்வளவு நாட்கள் செய்ய சக்தியில்லை எனில் பஞ்சமி முதலோ அஷ்டமி முதலோ அதுவும் முடியாவிட்டால் தசமி முதலோ அமாவாசை வரை செய்யலாம். இதற்கும் சக்தி இல்லை எனில் விலக்கப்பட்ட நாள் இல்லாத ஒரு நாளிலாவது செய்ய வேண்டும்.

சிராத்தமாக செய்ய சக்தி இல்லாதவரே தர்ப்பணமாக செய்யலாம். அமாவாசை முடிய என்றும் பிரதமை முடிய என்று இரண்டு விதமாக முனிவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவரவர் க்ருஹ்ய ஸூத்திரத்தை பார்த்து செய்ய வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட 16 நாட்களில் தின க்‌ஷயம் ஏற்பட்டால் 15 நாட்கள் மட்டுமே முக்கிய காலமாகும். ஸங்கல்ப சமயத்தில் உள்ள பக்‌ஷம் திதி இவற்றையே ஸங்கல்பத்துக்கு உபயோகிக்க வேண்டும். வழக்கமாக பஞ்சாங்கத்தில் சிராத்த திதி என்று பார்த்து செய்வது போலில்லை.

தெய்வாதீனமாக மேற்கூறிய முக்கிய காலத்தில் செய்ய முடியவில்லை எனில் கார்த்திகை பிறப்பு வரை கௌண காலம் இருப்பதால் கூடிய வரை சீக்கிரமாக செய்ய வேண்டும். அப்படியும் செய்யாவிட்டால் பித்ருக்கள் பெரு மூச்சு விட்டுக்கொண்டு வருத்தத்துடன் இவ்வுலகைவிட்டு கிளம்புகின்றனர். அப்படி அவர்கள் வருத்தப்பட்டாலே ஒருவன் பித்ரு சாபத்துக்கு உள்ளாகிறான். ’என் அப்பாவுக்கு என் மேல் மிகவும் பிரியம்; அவர் எனக்கு சாபம் கொடுக்க மாட்டார்’ என்று நினைக்க வேண்டாம். அவர்கள் தனியாக சாபம் என்று கொடுக்காவிட்டாலும் அவர்களுக்கு ஏற்படும் வருத்தமே போதும்; சாபம் ஏற்படும்.
இந்த சாபத்தால் ஐஸ்வர்யம், ஆயுசு, புத்திரன், பெயரன் ஆகியோருக்கும் குறைவு ஆகியன ஏற்படும்.

இதிஹாஸங்களில் இதை புகழ்ந்து சொல்லி இருக்கிறது. மாஹாளய பக்‌ஷத்தில் ஒவ்வொரு நாளும் செய்யும் சிராத்தம் கயா சிராத்தத்துக்கு சமம்; மஹா பரணியில் செய்யும் சிராத்தம் 5 மடங்கு பலன் தரும்; வ்யதீபாத புண்ய காலத்தில் செய்வது 10 மடங்கு பலன்; மத்யாஷ்டமிக்கு 20 மடங்கு; த்வாதசியில் 100 மடங்கு; அமாவாசை சிராத்தத்துக்கு ஆயிரம் மடங்கு பலன் என்று சொல்லி இருக்கிறது.

ஒவ்வொரு திதியிலும் கொடுக்கப்படும் சிராத்தத்துக்கு தனி பலன்கள் சொல்லப்பட்டுள்ளன.
ப்ரதமை – தன லாபம்
த்விதீயை – சந்ததி
த்ருதீயை – இஷ்டமான வரன்
சதுர்த்தி – சத்ருக்களை அகற்றும்
பஞ்சமி – ஐஸ்வர்யத்தை அடைவான்
ஷஷ்டி- புகழத்தகுந்தவன் ஆவான்.
ஸப்தமி – கூட்டத்துக்கு தலைவனாவான்
அஷ்டமி – சிறந்த புத்தியை அடைவான்
நவமி – அழகுள்ள கன்னிகையை அடைவான்
தசமி – எல்லா இஷ்டங்களையும் அடைவான்
ஏகாதசி – எல்லா வேதங்களையும் அடைவான்
த்வாதசி – ஸ்வர்ண லாபம்
த்ரயோதசி – ப்ரஜை, மேதா சக்தி, தேஹ புஷ்டி, பசுக்கள், ஸ்வதந்திர தன்மை, சிறந்த வ்ருத்தி (தொழில்) தீர்க்கமான ஆயுஸ், ஐஸ்வர்யம் – இப்படி சொல்லப்பட்ட பலன்கள் அனைத்தும் நிச்சயமாக கிடைக்கும்.

சதுர்தசி சிராத்தம் சிறு வயதில் ஆயுதத்தால் அடி பட்டு இறந்த பித்ருக்களுக்கு சிறந்ததாகும்.

அமாவாசை – இஷ்டங்கள் எல்லாவற்றையும் அடைவான்.

சாதாரணமாக செய்யப்படும் சிராத்தங்களுக்கும் இதற்கும் நிறைய வேறு பாடுகள் உண்டு....

(தொடரும்)