Pages

Friday, December 28, 2018

பறவையின் கீதம் - 91





நான் காது கேளாதவனாக இருந்தேன்.

சிலர் மேடையில் ஏறி உடலை இப்படியும் அப்படியும் நெளிப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். இவர்கள் ஏன் இப்படி அவஸ்தைப்படுகிறார்கள் என்று. அவர்கள் அதை நடனம் என்று சொன்னார்கள்.

ஒரு நாள் திடீரென்று எனக்கு காது கேட்க ஆரம்பித்துவிட்டது. இசையை கேட்டேன். நடனம் அவஸ்தை இல்லை என்று புரிந்தது.

ஏன் ஞானிகளும் காதலர்களும் ஒரு மாதிரி கிறுக்குத்தனமாக நடந்து கொள்ளுகிறார்கள் என்று எனக்கு புரிவதில்லை. இதயத்தில் இசை கேட்கும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்.

Thursday, December 27, 2018

பறவையின் கீதம் - 90





ஒரு பாதிரி குழந்தைகளுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்தார்.

ஒரு வேளை நல்லவர்கள் எல்லாரும் வெள்ளையாகவும் கெட்டவர்கள் எல்லாரும் கருப்பாகவும் இருந்தால், உன் நிறம் என்ன?

மேரி ஜேன் பதில் சொன்னாள்: நான் வரிக்குதிரை போல இருப்பேன்!

உண்மை! அது போலவேதான் அந்த பாதிரியும் இருப்பார்; மஹாத்மாக்களும், போப்களும், புனிதர்களும்.!

ஒரு ஆசாமி நல்ல சர்ச் ஒன்றை தேடிக்கொண்டு இருந்தார். ஒரு முறை அந்த தேடலில் உள்ளே நுழைந்த ஒரு சர்ச்சில் பாதிரி பிரார்த்தனை புத்தகத்தில் இருந்து படித்துக்கொண்டு இருந்தார்: “நாங்க எதை செய்ய வேண்டுமோ அது எல்லாவற்றையும் செய்யாமல் இருக்கிறோம்; எதை எல்லாம் செய்யக்கூடாதோ அதை எல்லாம் செய்து இருக்கிறோம்...”
அப்பாடா நான் தேடின எனக்கு ஒத்து வரும் சர்ச் கிடைத்துவிட்டது என்று பெரு மூச்சு விட்டபடி அமர்ந்தார்.

Wednesday, December 26, 2018

பறவையின் கீதம் - 89





ஒரு 'குரு' தன் சிஷ்யர்கள் அவரவருக்கு கொடுக்கப்பட்ட மத ஸ்தானத்தை வெளிப்படுத்தும் வகையில் உடை அணியச்சொன்னார்....

நான் உலாவப்போனேன். ஒரு குளத்தில் மிக அழகிய தாமரை ஒன்றை கண்டேன். மிக்க சந்தோஷத்தில் "ஹே தாமரை மலரே எவ்வளவு அழகாக இருக்கிறாய். உன்னை படைத்த கடவுள் எத்தனை அழகாக இருப்பான்!” என்றேன். அந்த மலர் நாணி குனிந்தது. தன் அழகைப்பற்றி அது நினைவு கொள்ளாமல் இருப்பதே அதை இன்னும் அழகாக்கியது.
இன்னும் சற்று தூரம் போன பிறகு இன்னொரு குளத்தில் இன்னொரு தாமரையை பார்த்தேன். 'என்னைப்பார், என்னைப்பார் எவ்வளவு அழகாக இருக்கிறேன், என்னைப்பார்த்து என் கர்த்தரை போற்று' என்று பீற்றிக்கொள்வது போல இதழ்களை விரித்துக்கொண்டு இருந்தது. அதை வெறுத்து மேலே நடந்தேன்.

நான் ஒழுக்கங்களை போதிக்க ஆரம்பித்தால் மதாசாரங்களைக் கடுமையாக அனுஷ்டிக்கும் ஃபாரிசீ ஆகிவிடுகிறேன்!

Tuesday, December 25, 2018

பறவையின் கீதம் - 88





கணவன் சொன்னார்: “ஏன் இன்னும் நான் பண்ண தப்பு பத்தியே பேசறே? அதெல்லாம் மன்னிச்சு மறந்துட்டேன்னு நினைச்சேனே?”
ஆமா அப்படித்தான். ஆனா அதெல்லாம் மன்னிச்சு மறந்துட்டேன் என்கிறத நீ மறக்கவே மறக்காதே!”
----
கடவுளிடம் பாவ மன்னிப்பு கேட்கும் பக்தன்: "கடவுளே என் பாவங்கள எல்லாம் நினைவில வெச்சுக்காதே!”
கடவுள்: "என்ன பாவங்கள்? ஏற்கெனெவே மறந்துட்டேனே? கொஞ்சம் நினைவு படுத்தறியா?”
பேரன்பு தப்புகளை பதிவு செய்து வைப்பதில்லை.

Monday, December 24, 2018

பறவையின் கீதம் - 87





ஒரு மிகவும் மத உணர்வு மிக்க வயதான பெண்மணி இருந்தார். மதங்கள் எதுவும் பிடிக்காமல் தன் சொந்த மதத்தை நிறுவினார்

அவருடைய எண்ணங்களை புரிந்து கொள்ள உண்மையாகவே விரும்பிய ஒரு நிருபர் பேட்டி எடுக்க போனார். "மக்கள் சொல்றாங்க, நீங்களும் உங்க வீட்டு வேலைக்காரியும் தவிர வேற யாரும் சொர்க்கத்துக்கு போக மாட்டாங்கன்னு நீங்க சொல்லறீங்களாமே?” 

பெண்மணி ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் சொன்னார். “உம்ம்ம்ம்ம்... மேரி பத்தி அவ்ளோ உறுதியா சொல்ல முடியல!”

Friday, December 21, 2018

பறவையின் கீதம் - 86





கடவுள் சொர்க்கத்துக்குள்ள போனார். எல்லாருமே அங்க இருக்கறத பாத்தார். அடடா! நாம் ரொம்ப தாராளமா இருக்கோம் போல இருக்கே? இது நீதியான்னு யோசிச்சு ஒரு தேவதையை கூப்டு 'ரைட், பத்து கட்டளைகளையும் ஒவ்வொண்ணா வாசி' ன்னார்.
தேவதை முதல் கட்டளைய படிச்சது.
'ரைட்! இத கடைபிடிக்காதவங்க எல்லாம் நரகத்துக்கு போங்க' னார். நிறைய பேர் போயிட்டாங்க.
இப்படியே அடுத்தடுத்து கட்டளைகளை படிக்க நிறைய பேர் போய்கிட்டே இருந்தாங்க. தேவதை ஏழாவது கட்டளையை படிக்கும் முன்னே பாத்தா ஒரே ஒருத்தர்தான் சொர்கத்துல இருந்தார். அவர் காட்டுக்குள்ள போய் தனியா வசிச்ச ஆசாமி. பெருமிதத்தோட நரகவாசிகளை ஏளனமா பாத்தார்.
கடவுளுக்கு திக்குன்னு போச்சு. என்னடாது! இது நல்லாயில்லையேன்னு யோசிச்சார்.
"சரி போறது! எல்லாரும் திரும்பி வாங்க" ன்னு சொல்ல எல்லாரும் சொர்கத்துக்கே வந்துட்டாங்க.
அந்த தனியா இருந்த ஆசாமி கத்தினார் : "இது போங்காட்டம்! இத ஏன் முன்னேயே சொல்லல?”

Thursday, December 20, 2018

ஞானாம்ருதம் - 3





பகவான்கிட்டேந்து எதாவது கிடைக்கணும்ன்னு ஆசை படறாளே தவிர பகவான் கிடைக்கணும்ன்னு யாரும் ஆசை படறதில்லை.

அதுக்கு மேலே ராம க்ருஷ்ணர் இன்னொன்னு கூட பண்ணினார், அதுதான் ரொம்ப ஆஸ்சர்யம். அந்த குழந்தைய உள்ள கூட்டிண்டு போய் நமஸ்காரம் பண்ணி தலைல புஷ்பம் வெச்சு தீபாராதனை ஆரத்தி காட்டி 'நீ சாக்‌ஷாத் நாராயணன்'னு சொன்னார். இது ஏதோ கதையில சொல்லறப்ப ஈஸ்வர அவதாரம்ன்னு சொல்லிடலாம். அது அப்படி இல்ல. இப்ப இது எனக்கு நல்லா புரியறது. ஏன் அப்படி பண்ணார்ன்னு. என்னன்னா இந்த லோகத்தில பணத்துக்கு வேண்டி ஜனங்கள் எங்கே வேணா போக ஸித்தமா இருக்கா. பணத்துக்காக அமேரிக்காவுக்கு போகறது புரிஞ்சுக்க முடியும். படிக்கறதுக்காக அமேரிக்காவுக்கு போகறது புரிஞ்சுக்க முடியும். வேற ஏதாவது தனக்கு ஆவஸ்யமானதுக்கு எங்கே வேணும்னாலும் போறதும் புரிஞ்சுக்க முடியும். அப்படி இருக்கறப்ப ஈஸ்வரனுக்காக? என்ன சொல்லுவானா வரமுடியாது. பெங்களூர்ல ட்ராஃபிக் ரொம்ப அதிகம். கீத கேக்கணும்ன்னுதான் இருக்கு. ஆனா எங்களால வர முடியறதில்லை. ரொம்ப கஷ்டம் பேங்க்ளூர்ல... இப்படி ஏதோ சொல்லுவோம் நாம. ஆனா இதுவே ஒரு அவசரம்.. உடம்புக்கு முடியல, ஆஸ்பத்திரி போகணும்ன்னா ட்ராபிக் ப்ளாக்ன்னு வீட்டிலேயா இருப்போம்? எப்படியாவது போயிடுவோம் இல்லையா? ஏன்னா அதுக்கு ஒரு தேவை இருக்கு. ஈஸ்வரனுக்குன்னு ஒரு ஜீவன் ஜிக்ஞாசு ... ஒரு பெரிய மஹான் சொல்லுவார் ஜீவன் முக்தனைவிட ஜிக்ஞாசு பெரியவன். ஏன்னா ஜிக்ஞாசுல ஈஸ்வரன் மானிபெஸ்ட் ஆகறதை நாம பாக்கலாம். அந்த ஆர்வம்... தமிழ்ல அழகான வார்த்தை ஒண்ணு ரமண பகவான் போடுவார்... விழைவு. அந்த ஈஸ்வரனை அடையணும் என்கிற விழைவு. இங்கேயே நிறைய பேர் இருக்கா. வெளியூர்லேந்து வந்தவா கூட இருக்கா. எப்படி வந்தா? அது உள்ளேந்து ஒரு போர்ஸ்... மனசு அத பண்ணாது. ஆத்ம ஞானத்துக்காக இங்கே போ. சத்சங்கத்துல கதை கேளுன்னு மனசு சொல்லாது. மனசு டிவி பாக்கத்தான் சொல்லும். பேப்பர் படிக்கத்தான் சொல்லும். லோக வர்த்தமானங்கள பேசத்தான் சொல்லும். லோக விஷயங்கள்ல ஈடுபடத்தான் சொல்லும். மனச விட டீப்பர் ப்ளேன்ல இருக்கற ஒரு ஃபோர்ஸ்தான் நம்மள உந்திண்டு போய் சத்சங்கத்துக்கு போக வைக்கும். ஞானிகளை போய் பாக்கச்சொல்லும். அந்த ஆர்வத்தை உண்டு பண்ணும். தபஸ் பண்ணு, தியானம் பண்ணு, சத் க்ரந்தங்களை படிக்கச்சொல்லும். இப்படி அந்த ஃபோர்ஸ் விழைவு ஜிக்ஞாசுல பாக்கறது ஞானிகளுக்கு பகவானோட தரிசனம்.

Wednesday, December 19, 2018

பறவையின் கீதம் - 85





ஜோனைய்ட் ஒரு சாது. ஒரு நாள் மெக்காவில் கிழிந்த துணிகளுடன் ஒரு நாவிதனின் பணியிடத்துக்கு முகம் மழித்துக்கொள்ள சென்றார். நாவிதன் அப்போது ஒரு செல்வந்தருக்கு பணி செய்து கொண்டிருந்தார். ஜோனைய்ட் நுழைந்ததும் செல்வந்தரிடம் சொல்லிவிட்டு இவரை கவனித்து முகம் மழித்தார். அதற்கு பணம் வாங்கிக்கொள்ளாதது மட்டுமல்ல, கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பினார்.
ஜோனைட் மிகவும் சந்தோஷப்பட்டார். தனக்கு கிடைக்கும் அன்றைய பிச்சையை இவருக்கு கொடுத்து விடுவதாக சங்கல்பம் செய்து கொண்டார்.
விதி வசத்தால் அன்றைக்கு ஒரு மிகப்பெரிய செல்வந்தர் ஜோனைடுக்கு தங்க காசுகள் கொண்ட பை ஒன்றை தானம் அளித்தார். ஜோனைட் மிக்க மகிழ்ச்சியுடன் ஓடிப்போய் நாவிதரிடன் அந்த பையை கொடுத்தார்.
அந்த பை ஏன் கொடுக்கப்படுகிறது என்று நாவிதருக்கு புரிந்தவுடன் பெரும் கோபம் வந்தது. “அன்புடன் செய்த செயலுக்கு விலை கொடுக்கிறாயா?” என்று கத்தினார்.
கற்பனை:
பக்தன் இறைவனை கடிந்து கொண்டான்: என் அன்புக்கு பரிசளிக்கும் நீ எந்த மாதிரி கடவுள் ?
கடவுள் புன்னகைத்துக்கொண்டு சொன்னார்: நானே அன்புதான். நான் எப்படி பரிசு கொடுக்க முடியும்?
எதையும் எதிர்பார்த்தால் பரிசு லஞ்சம் ஆகிவிடுகிறது!
அந்தோனி தெ மெல்லொ, குட்டிக்கதைகள், பறவையின் கீதம்

Tuesday, December 18, 2018

பறவையின் கீதம் - 84





ஏசு ஆரம்ப காலங்களில் நீதிக்கதைகள் சொல்வதுண்டு. 'இறைவனின் சாம்ராஜ்யம் அவர் அண்ணன் தம்பி இருவரை கூப்பிட்டு எல்லாவற்றையும் செலவழித்து மனிதர்களுக்கு உதவி செய்யுமாறு பணித்தத்தைப்போல இருக்கிறது' என்றார்.

மூத்தவன் அதை கேட்டதும் அதை முழுக்க பின்பற்ற தீர்மானித்தான். ஆனால் தன் குடும்பம் காதலி எல்லாரையும் வலுக்கட்டாயத்துடன் பிரிய வேண்டி இருந்தது. தூர தேசத்துக்குப்போய் ஏழைகளுக்கு உதவி செய்வதிலேயே காலம் கழித்தான். அதற்கு அவன் சிறைவாசம் கூட அனுபவிக்க வேண்டி இருந்தது. பின் அவனை தூக்கிலும் இட்டு கொன்றார்கள்.

கடவுள் சொன்னார். “என் விசுவாசம் மிக்க பிரிய சேவகனே! நீ எனக்கு ஆயிரம் பங்கு சேவையை கொடுத்தாய். நான் உனக்கு ஆயிரம் கோடி பங்கு பேரின்பத்தை அளிக்கிறேன். சொர்கத்துக்கு செல்வாயாக!”

சிறியவன் கடவுள் பேச்சை கேட்கவில்லை. தனக்கு பிடித்த பெண்ணை மணந்து கொண்டு வியாபாரம் செய்து செல்வம் பெருக்கி நன்கு வாழ்ந்தான். மனைவியிடமும் குழந்தைகள் இடமும் அன்பாக இருந்தான். அவ்வப்போது ஏழைகளுக்கும் கொஞ்சம் கொடுத்தான்.
அவன் இறந்த பின் கடவுள் சொன்னார். “என் விசுவாசம் மிக்க பிரிய சேவகனே! நீ எனக்கு இருபது பங்கு சேவையை கொடுத்தாய். நான் உனக்கு ஆயிரம் கோடி பங்கு பேரின்பத்தை அளிக்கிறேன். சொர்கத்துக்கு செல்வாயாக!” 

மூத்தவனுக்கு தன் தம்பிக்கும் தனக்கு கிடைத்ததே கிடைத்தது என்று தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. சந்தோஷப்பட்டான். கடவுளிடம் சொன்னான் : “ இறைவா! இது எனக்கு நீ என்னை அழைத்து பணியை சொன்ன போது தெரிந்து இருந்தாலும் உன் மீதுள்ள அன்பினால் நான் செய்ததையே நிச்சயம் செய்திருப்பேன!” என்றான்.


Monday, December 17, 2018

பறவையின் கீதம் - 83





புனித நூலில் படித்தது:
இறைவன் இதை சொன்னார்: ஒரு குடியானவனிடம் தங்க முட்டை இடும் வாத்து இருந்தது. அவனது மனைவிக்கு பேராசை, ஒரு நாளுக்கு ஒரு முட்டை என்பது அவளுக்கு போதவில்லை. எல்லா முட்டைகளையும் எடுத்துக்கொள்ளலாம் என்று வாத்தை கொன்றாள்.
நாத்திகர் ஒருவர் இதை கேட்டுவிட்டு சொன்னார்: உங்கள் சாத்திரங்கள் முட்டாள்தனமானது என்று தெரிகிறது. வாத்தாவது தங்க முட்டை இடுவதாவது!

மத நம்பிக்கை கொண்ட ஒரு அறிஞர் படித்துவிட்டு சொன்னார்: கடவுள் தங்க முட்டையிடும் வாத்து இருப்பதை சொல்லி இருக்கிறார். அது எவ்வளவு கிறுக்குத்தனமாக இருந்தாலும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எப்படி ஒரு தங்க முட்டை முட்டையாகவும் இருந்து கொண்டு தங்கமாகவும் இருக்க முடியும் என்றூ நீங்கள் கேட்கலாம். இதை வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறாக சொல்லுகிறார்கள். ஆனால் இங்கே தேவையானது மனிதனுக்கு புரியாத புதிரான இந்த விஷயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை.

இந்த கதையால் ஈர்க்கப்பட்ட ஒரு பாதிரி ஊர் ஊராக போய் ஒரு காலத்தில் வாத்துக்கள் தங்க முட்டை இட்டன என்பதை ஒப்புக்கொள்ளுங்கள் என்று பிரசாரம் கூட செய்தார்.

தங்க முட்டைகளில் நம்பிக்கை வைக்கச்சொல்லுவதைவிட பேராசையின் கேடுகளை ஜனங்களுக்கு சொல்லுவது நல்லது!

Friday, December 14, 2018

பறவையின் கீதம் - 82





இறைவனுடன் நான் நல்ல உறவு வைத்திருந்தேன். அவருடன் பேசுவேன். உதவி கேட்பேன். நன்றி சொல்லுவேன்.
ஆனால் எப்போதும் ஒரு சங்கடமான உணர்வு இருக்கும். அவர் தன்னை பார்க்கச்சொல்லுவதாக தோன்றும்... ஆனால் பார்க்க மாட்டேன். நான் பேசுவேன்; ஆனால் அவர் என்னை பார்ப்பதாக தோன்றினால் மறு பக்கம் முகத்தை திருப்பிக்கொள்ளுவேன்.
நான் இன்னும் வருந்தாத ஏதோ ஒரு பாபத்துக்காக என்னை அவர் குற்றம் சாட்டும் பார்வை பார்ப்பதாக தோன்றூம். அல்லது என்னிடம் அவருக்கு ஏதோ வேண்டும்... ஒரு கோரிக்கை.
ஒரு நாள் தைரியத்தை வர வழைத்துக்கொண்டு தலையை தூக்கி பார்த்துவிட்டேன். அங்கே குற்றச்சாட்டு இல்லை; கோரிக்கை இல்லை. அந்த கண்கள் நான் உன்னை நேசிக்கிறேன் என்று மட்டும் சொல்லின.
பீட்டர் போல நானும் வெளியே போய் அழுதேன்.

Thursday, December 13, 2018

பறவையின் கீதம் - 81




இதையும் முன்னேயே படித்திருப்பீர்கள்.
அங்கிள் டாம் -க்கு இதயம் கொஞ்சம் பலகீனம். அவருக்கு யாரோ தூரத்து உறவினர் ஒரு கோடி டாலர் எழுதி வெச்சுட்டு செத்துட்டாங்கன்னு குடும்பத்துக்கு செய்தி வந்தது. எல்லாருக்கும் ஒரே கவலை. இந்த செய்தியால டாமுக்கு ஸ்ட்ரோக் வந்துட்டா என்ன செய்யறது? சர்ச் பாதிரியை கூப்பிட்டு வந்து இந்த செய்தியை அவருக்கு மெதுவா அதிர்ச்சி இல்லாதபடிக்கு சொல்லச்சொன்னாங்க.
பாதிரியும் வந்ந்ந்து அது இதுன்னு எதோ பேசிட்டு மெதுவா "ஒரு வேளை உங்களுக்கு யாரும் ஒரு கோடி டாலர் எழுதி வெச்சுட்டு செத்துப்போயிட்டா அந்த ஒரு கோடி டாலரை என்ன செய்வீங்க?” என்று கேட்டார்.
"பாதிய சர்ச்சுக்கு கொடுத்துடுவேன் ஃபாதர்!” ன்னார் டாம்.
பாதிரியை ஸ்ட்ரோக்குக்காக ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணாங்க!

தொழிலதிபர் தன் தொழிலை முன்னேற்ற பாடுபட்டு ஸ்ட்ரோக் வந்தபோது அவருடைய சுயநலத்தையும் பேராசையையும் சுட்டிக்காட்ட முடிந்தது.  பாதிரி அதே போல 'கடவுளின் ராஜ்ஜியத்தை முன்னேற்றுவதில்' ஸ்ட்ரோக் வந்தபோது கொஞ்சம் நாசூக்கான தொழிலதிபர் கதையேதான் இது என்பதை காண முடியவில்லை. யாரை முன்னேற்றப்பார்க்கிறாய்? உன்னையா இல்லை கடவுளின் ராஜ்ஜியத்தையா? அதை யாரும் முன்னேற்ற வேண்டிய தேவை இல்லை. உன் பரபரப்பு உன்னை காட்டிக்கொடுக்கிறது இல்லையா?

Tuesday, December 11, 2018

பறவையின் கீதம் - 80





அபு ஹசன் புஜன்ஜா அரபி ஞானி சொல்கிறார்: பாவம் செய்யும் செயல் கூட அவ்வளவு கெட்டது இல்லை; அதைப்பற்றிய ஆசையும் நினைப்புமே இன்னும் மோசம். உடலாவது ஒரு கணத்துக்கு இன்பம் துய்க்கிறது. மனசு அதையே முடிவில்லாமல் போட்டு உருட்டிக்கொண்டு இருக்கிறது

நான் மற்றவர்களின் பாவங்களைப்பற்றி அசை போடுகையில் பாவம் செய்பவருக்கு அச்செயல் கொடுத்த கிளு கிளுப்பை விட அச்செயலைப்பற்றிய நினைப்பு எனக்கு அதிக கிளுகிளுப்பை கொடுக்கிறது என்று நினைக்கிறேன்.

Monday, December 10, 2018

பறவையின் கீதம் - 79





இரண்டு புத்த சாதுக்கள் மடாலயத்துக்கு திரும்பும் வழியில் நதிக்கரையில் ஒரு அழகிய பெண்மணியை கண்டார்கள். அவளும் நதியை கடந்து செல்ல விரும்பினாள். ஆனால் நதியில் ஆழம் அதிகமாக இருந்ததால் அவளுக்கு பயமாக இருந்தது. ஒரு சாது அவளை தன் தோளில் சுமந்து அக்கரை சேர்த்தார். அவளும் நன்றி சொல்லிவிட்டு தன் வழியே போய்விட்டாள்.

அந்த இன்னொரு சாதுவுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. "பெண்ணை நீ எப்படி தொடலாம்? அதுவும் தூக்கி கொண்டுபோய் விடலாம்? நமக்கு விதித்த கட்டுப்பாடுகளுக்கு இது விரோதமில்லையா? நீ சாது என்பதை மறந்துவிட்டாயா? மக்கள் என்ன நினைப்பார்கள்?" என்று ஆரம்பித்து இரண்டு மணி நேரம் தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார்.

இவர் மௌனமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார். ஒரு வழியாக திட்டு முடிந்ததும் மென்மையாக சொன்னார் "நண்பா! நான் அவளை நதிக்கரையிலேயே விட்டுவிட்டேன். நீ ஏன் இன்னும் சுமந்து கொண்டு இருக்கிறாய்!”

Thursday, December 6, 2018

பறவையின் கீதம் - 77





ஒரு பழைய கிறிஸ்துவ கதை:
தேவ குமாரன் சிலுவையில் அறையப்பட்டு இறந்தபின் நேரே நரகத்துக்குப்போனார். அங்கே துன்பப்பட்டுக்கொண்டு இருந்த பாவிகள் எல்லாரும் பாவம் நீங்கி விடுதலையானார்கள்.
நரகத்துக்கு பாவிகள் யாரும் கிடைக்க மாட்டார்கள் போலிருக்கிறது என்று சாத்தான் அழுதான்.
இறைவன் சொன்னார்: கவலைப்படாதே. தான் மிகவும் ஒழுக்கமுடையவன் என்று நினைத்துக்கொண்டு பாவிகளை கண்டனம் செய்வோரை அனுப்பி வைக்கிறேண். சீக்கிரத்தில் நரகம் நிறைந்துவிடும்.

பறவையின் கீதம் - 78





சாதி ஆஃப் ஷிராஃஜ் தன்னைப்பற்றி இப்படி ஒரு கதையை சொல்லுகிறார்.

நான் தெய்வ பக்தி நிறைந்த குழந்தையாக இருந்தேன், ப்ரார்த்தனைகளிலும், பக்தி செலுத்துவதிலும் நேரத்தை கழித்தேன். ஒரு முறை என் அப்பாவுடன் மடியில் புனித கொரானுடன் ப்ரார்த்தனைகளுக்காக கண் விழித்திருந்தேன். ப்ரார்த்தனை நடந்து கொண்டு இருந்தது. அறையில் இருந்த மற்றவர்கள் ஒவ்வொருவராக தூங்கிவிட்டார்கள். நான் அப்பாவிடம் சொன்னேன்: "பாருங்கள், எல்லார் தலையும் தொங்கிவிட்டது

ப்ரார்த்தனையை படிக்க யாருமே விழித்திருக்கவில்லை. இறந்தவர் போல கிடக்கிறார்கள்.”

என் அப்பா மென்மையாக சொன்னார். “என் அன்பு மகனே, மற்றவர்களை பழித்துக்கொண்டு இருப்பதை விட நீயும் தூங்கி இருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன்.”

Wednesday, December 5, 2018

ஞானாம்ருதம் - 2





இப்படி செய்ய முடியுமான்னு நினைக்கலாம். வள்ளலார் பாடி இருக்கார். மரணமில்லா பெருவாழ்வு வாழலாமே! நான் அடைஞ்சிருக்கேன்பா, உன்னாலேயே முடியும். நீயும் செய்யேன்னு கெஞ்சரா மாதிரிதான் பாட்டு இருக்கும்.
விவேகானந்தர் இளைஞனா இருந்தப்ப இப்படியேதான் கேட்டுண்டு அலைஞ்சார். கடவுளை பாத்திருக்கீங்களா? முதல்ல ஒத்தர் காட்டிக்கொடுத்தது நபீந்த்ரநாத் தாகூரோட அப்பா மஹரிஷி தேவேந்திரநாத் தாகூர். கங்கையில் ஒரு ஹவுஸ் போட்ல உக்காந்து த்யானம் பண்ணிண்டு இருக்கார். நரேந்திரன் 15 வயசு பையன். கங்கையில் குதிச்சு நீந்தி அங்கே போய், அவரை தட்டி எழுப்பி தண்ணி சொட்ட சொட்ட நின்னுண்டு கேக்கறான்: கடவுளை பாத்திருக்கீங்களா? தேஜஸோட ஒரு பையன் இப்படி ஈரத்தோட நின்னுண்டு கேட்கறதை பாத்து அவருக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு. உசந்த நிலையை அடைஞ்ச யோகியானாலும் அவருக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியலை. அவர் சொன்னார் " உன்ன பாத்தா யோகி மாதிரி இருக்கு. உன் கண்களில யோக லக்‌ஷணம் இருக்கு. உன்னால் அடைய முடியும். நீ இங்க உக்காரு.” நரேனுக்கு கோவம் வந்துடுத்து. நான் கேட்டது நீங்க பகவானை பாத்திருக்கீங்களான்னு. இவர் பாட்டுக்கு வேற என்னவோ சொல்லிண்டு போறாரே?
இது ஒரு டெக்னிக். யார் கேள்விக்காவது பதில் சொல்ல தெரியலைன்னா அவாளை கொஞ்சம் ஸ்துதிச்சுட்டா போறும். அவா எங்கேயோ மேல போயிடுவா! என்ன கேக்க வந்தோம்ன்னு மறந்தே போயிடுவா.
நரேனுக்கு திருப்தி ஆகலை. திருப்பியும் தண்ணில குதிச்சு நீஞ்சி கரைக்கு போயிட்டான்.
அப்புறம்தான் யாரோ அவனோட காலேஜ் ப்ரொபசர், ராமகிருஷ்ணரை அறிமுகப்படுத்தறார். முதல்ல கல்கத்தால ஒரு பஜனைல வெச்சு பார்க்கறார். இனிமையா பஜன் கூட பாடினார். அப்புற தக்‌ஷிணேஸ்வர் போய் ராமகிருஷ்ணரை பாத்து இதே கேள்வியத்தான் கேட்டார். “நீங்க பகவானை பாத்திருக்கீங்களா?”
அவர் இவனுக்கு புரியறா மாதிரி சொன்னார்: "பாத்திருக்கேன்பா. இதோ உன்னை இப்ப பார்க்கறதைவிட கிட்ட பாத்திருக்கேன்! ”
'சந்தம் சமீபே ரமணம் ரதிப்ப்ரதம்' ன்னு பாகவதம் சொல்லறது. ரொம்ப கிட்டே. அதவிட கிட்ட வர முடியாது. எனக்குள்ளேயே என்னோட சொரூபமாவே இருக்கற பொருளா, ஆனந்தத்துக்கு இருப்பிடமா சாந்தியோட தாமமா பகவானை நான் பாத்திருக்கேன். நான் பாத்திருக்கேன்னு மட்டுமில்லை. உனக்கு வேணுமானால் காட்டிக்கொடுக்க முடியும். அப்புறம் தனக்குத் தானே பேசிண்டாராம் ' அப்படி யாருக்கு வேணும்? யாருக்குமே ஈஸ்வரன் வேண்டாம்!”
ஐஸ்வர்யத்துக்குத்தான் ஆசைப்படறாளே தவிர ஈஸ்வரனுக்கு யாரும் ஆசைப்படறதில்லையே?

Tuesday, December 4, 2018

பறவையின் கீதம் - 76





ஒரு கிறிஸ்துவர் ஃஜென் மாஸ்டரிடம் போனார். “மலைப்பிரசங்கத்தை உங்களுக்கு படிச்சு காட்ட அனுமதியுங்க"
ஆஹா சந்தோஷமா கேக்கறேனே!”
கிறிஸ்துவர் கொஞ்சம் படித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தார். மாஸ்டர் புன்னகைத்து "அதை சொன்னவர் ஒரு ஞானியாகத்தான் இருக்கணும்" என்றார்.
கிறிஸ்துவர் மனமகிழ்ந்து போனார். இன்னும் கொஞ்சம் படித்தார். மாஸ்டர் இடைமறித்து "இது உலகை ரக்‌ஷிக்க வந்தவர் வாயிலிருந்து வந்த வார்த்தைகள்" என்றார்.
கிறிஸ்துவருக்கு இன்னும் குஷியாகி விட்டது. மேலும் படித்தார். மாஸ்டர் சொன்னார் "இந்த பிரசங்கம் இறைத்தன்மை நிறைந்தவரிடம் இருந்து வந்திருக்க வேண்டும்"
கிறிஸ்துவர் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்து விடை பெற்றார். அட அவரை மதம் மாற்ற அல்லவா வந்தோம்? பரவாயில்லை. இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்.
திரும்பும் வழியில் ஏசு சாலையின் ஓரத்தில் நின்று கொண்டு இருந்தார்.
தேவகுமாரா, நீங்கள் கடவுள் தன்மை வாய்ந்தவர் என்று அந்த ஆளை சொல்ல வைத்துவிட்டேன்" என்றார் பரபரப்புடன்.
ஏசு புன்னகைத்தார். "சரி, அது உன் கிறிஸ்துவ அஹங்காரத்தை தூண்டி விட்டதைத் தவிர வேறு ஏதும் நல்லது செய்ததா என்ன?” என்று கேட்டார்.

Monday, December 3, 2018

ஞானாம்ருதம் - 1





யது மஹா ராஜா அவதூதரை பாத்து ஆச்சரியப்படறான். எனக்கு வேளா வேளைக்கு நல்ல அறுசுவை சாப்பாடு கிடைக்கறது. வேலை செய்ய எத்தனையோ ஆட்கள் இருக்கா. கைதட்டின்னா வந்து ஏன்னு கேட்க பத்து பேர் இருக்கா. எங்கானா போகணும்ன்னா ரதம் கொண்டு வந்து நிறுத்தறா. இருந்தாலும் சந்தோஷம் இல்லே.
இவருக்கோ ஒண்ணுமே இல்ல. இடுப்புல ஒரு கோவணத்தத்தவிர துணிகூட இல்ல. அடுத்த வேளை சாப்பாடு கிடைக்குமா, எங்க கிடைக்கும்ன்னு கூட தெரியாது. ஆனா இவ்வளோ ஆனந்தமா இருக்காரே?

அவதூதர்கிட்ட போய் கேட்கறான். "ப்ரூஹி ஆத்மனி ஆனந்த காரணம்" அதெப்படி இவ்வளவு ஆனந்தமா இருக்கீங்க?
லோகத்தில இப்படி ஆர்கிட்டேயும் போய் கேட்போமானா? அப்படி கேட்டா த்ரிஷ்டி பட்டுடும்ன்னு சொல்லுவோம்.
சௌக்கியமா இருக்கறதுதானே இயல்பா இருக்கணும். அதானே ஆரோக்கியம்?
யாரானா உடம்பு சௌக்கியமா இருக்கறவங்ககிட்டப்போய் அதெப்படி இவ்வளோ சௌக்கியமா இருக்கீங்க? உங்களுக்கு என்ன பிபி வராதா? கான்சர் மாதிரி வியாதி எல்லாம் வராதா? ன்னு கேட்போமானா? அப்படி கேட்ட அடிதான் கிடைக்கும்!
ஏன்னா ஆரோக்கியமா இருக்கறதுதான் இயல்பு.
அதே போல ஆனந்தமா இருக்கறதுதான் இயல்பு.
ஆனா லோகத்தில அது அன்நேசுரலாத்தான் இருக்கு. ஆனந்தமா ஒத்தர் இருக்கறது காணமாட்டேங்கிறது. துக்கிக்கறது நேச்சுரலா இருக்கு. ஆனந்தமாவே இருந்த கிருஷ்ணன்தான் கீதையில 'அநித்யம் அசுகம் லோகம்' ன்னு சொல்லறார்.
இது அநித்யம்ன்னா லோகத்துக்கு வந்திருக்கற நான் என்னதான் செய்யணும்?
'இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்!'
ஆனந்தமா இருக்கணும்ன்னா என்னை பக்தி பண்ணு; பஜனை பண்ணு.
பகவானை பாத்துண்டு இருந்தா ஆனந்தமா இருக்கலாம். லோகத்தையே பாத்துண்டு இருந்தா என்னைக்காவது அது கடிக்கும்!... லோகத்தில எதையாவது ஒண்ண பிடிச்சுண்டு நான் ஆனந்தமா இருக்கேன்னு சொன்னா என்னைக்காவது ஒரு நாள் அது உன்னை விட்டு போயிடும். அப்ப துக்கமே வரும்.

Friday, November 30, 2018

பறவையின் கீதம் - 75





சீடன்: என் கையில் ஒன்றுமே இல்லாமல் உங்களை பார்க்க வந்திருக்கிறேன்.
குரு: அதை உடனே கீழே போடு!
சீடன்: எதை கீழே போடுவது? என் கைகளில்தான் ஒன்றுமே இல்லையே?
குரு: அப்படியானால் அதை சுமந்து கொண்டே திரி!

Thursday, November 29, 2018

பறவையின் கீதம் - 74





சீடன் குருவைத்தேஎடிபோய் சொன்னான்: “நான் உங்களுக்கு என் சேவையை அர்ப்பணிக்க வந்திருக்கிறேன்"
குரு அமைதியாக சொன்னார்: “அந்த 'நான்' ஐ விட்டுவிடு. சேவை தானாக நடக்கும்!”

உன்னிடம் உள்ளதை எல்லாம் ஏழைகளுக்கு கொடுத்துவிடலாம். உன் உடலும் விழலாம். அப்போதும் அன்பு சுரக்காது.
உன் பொருட்களை நீயே வைத்துக்கொள். அகங்காரத்தை மட்டும் விட்டுவிடு. அன்பு உடனே சுரக்கும்.

Wednesday, November 28, 2018

பறவையின் கீதம் - 73





நெய்ஷாபூரிலிருந்து ஒரு கதை.
காதலன் காதலியின் வீட்டுக்குப்போனான். கதவைத்தட்டினான்.
உள்ளிருந்து காதலி "யார் கதவை தட்டுறது?” என்று கேட்டாள்.
நான்தான்"
இங்கே ரெண்டு பேருக்கு இடமில்ல. போங்க"
காதலனுக்கு ஒன்றும் புரியவில்லை. சில வருடங்கள் அது பற்றி யோசித்தான். பின் ஒரு நாள் சென்று கதவைத்தட்டினான்.
உள்ளிருந்து காதலி "யார் கதவை தட்டுறது?” என்று கேட்டாள்.
நீதான்"
கதவு உடனடியாக திறந்தது.

Tuesday, November 27, 2018

பறவையின் கீதம் - 72





ஒரு உப்பு பொம்மை ஆயிரம் மைல்கள் நடந்து கடலின் ஓரத்துக்கு போயிற்று. அதற்கு கடலைப்பார்த்து ஒரே ஆச்சரியம். அது வரை அது போல அலையும் எதையுமே பார்த்ததில்லையே!
உள்ளே வந்து பார்!” என்றது கடல்.
பொம்மையும் உள்ளே இறங்கியது.
உள்ளே போகப்போக அது கரைய ஆரம்பித்தது. அதன் கடைசி துணுக்கு கரையும் முன் அது கடலைப்பார்த்து சொன்னது "நான் யார்ன்னு இப்ப புரிஞ்சு போச்சு! ஆமா நீங்க யார்?”

Monday, November 26, 2018

பறவையின் கீதம் - 71





ஷாம்ஸ் எ தப்ரிஃஜி ஸுஃபி ஞானி. தன்னைப்பற்றி இந்த கதையை சொன்னார்.

நான் சிறு வயதிலிருந்தே எங்கும் பொருந்தாதவனாக கருதப்பட்டேன். யாருமே என்னை புரிந்து கொள்ளவில்லை. என் தந்தையே ஒரு முறை என்னிடம் இப்படி சொன்னார்
உன்னை பைத்தியக்காரர் விடுதியில் சேர்க்குமளவுக்கு நீ பைத்தியக்காரனாகவும் இல்லை. மடாலயத்தில் சேர்க்கும் அளவுக்கு வைராக்கியமும் இல்லை. உன்னை என்ன செய்வது?”

நான் சொன்னேன்: “ஒரு முறை வாத்தின் முட்டையை யாரோ கோழிக்கூண்டில் வைத்து விட்டார்கள். அது பொரிந்து வாத்துக்குஞ்சும் வெளி வந்தது. கோழியுடன் நடந்து போயிற்று. நீரின் அருகே வந்ததும் இயல்பாக அதில் இறங்கி நீந்த ஆரம்பித்துவிட்டது. பாவம் கோழி! இது நீரில் முழுகிவிடப்போகிறதே என்று கவலையில் கரையில் நின்று கொண்டு சத்தமிட்டுக்கொண்டு இருந்தது. என் அருமைத்தந்தையே நான் கடலின் உள் சென்றுவிட்டேன். இதுவே என் வீடு என்று உணர்கிறேன். நீங்கள் கரையிலேயே இருக்க நினைத்தால் நானா பொறுப்பு? ”

யார் தன் இயல்பை அறிகிறார்களோ அவர்கள் முன்னே போகிறார்கள். தன் இயல்பை அறியாதவர்கள் தன்னை வேறாக எண்ணி அழிந்து போகிறார்கள். (முன் கதையையும் படிக்கவும்)

Thursday, November 22, 2018

பறவையின் கீதம் - 70





ஒருவன் கழுகின் முட்டையை கண்டெடுத்தான். அதை தன் கோழியின் முட்டைகளுடன் வைத்துவிட்டான். கோழி அடை காத்தது. முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளி வந்தன. கழுகுக்குஞ்சும் வெளி வந்தது. அதுவும் கோழிக்குஞ்சுகளைப் போலவே நடந்து கொண்டது. க்ளக் க்ளக் என்று சத்தமிட்டது. நிலத்தை கிளறி புழு பூச்சிகளை கொத்தி தின்றது. இறக்கைகளை அசைத்து சில அடிகள் பறந்தது.

சில வாரங்கள் சென்றன. ஒரு நாள் வானத்தில் தங்க நிற இறகுகளை அசைத்தபடி வெகு உயரத்தில் மிதந்து கொண்டு இருந்த கழுகை கண்டது. “யார் அது?” என்று கேட்டது.

"பறவைகளின் அரசன்!” என்று பதில் வந்தது. “அவர் வானத்தில் வெகு உயரத்தில் பறந்து அரசாளுவார். நாமெல்லாம் வெறும் கோழிகள்"

"ஓஹோ

அந்த கழுகு கோழியாகவே வாழ்ந்து இறந்தது. ஏனெனில் அது தான் கோழி என்றே நினைத்தது!