Pages

Showing posts with label சந்தியா வந்தனம். Show all posts
Showing posts with label சந்தியா வந்தனம். Show all posts

Monday, March 20, 2017

அந்தணர் ஆசாரம் - 13




ஜபம் செய்யும் இடம் பற்றி சொல்லப்படுகிறது. சுத்தமான இடத்தில் செய்ய வேண்டும். வீட்டில் செய்வது ஒரு பங்கு பலன் தருமென்றால்; நதி தீரத்தில் 2 பங்கு, பசுமாட்டுக்கொட்டிலில் 10 பங்கு, அக்னிசாலையில் 100 பங்கு பலன் கிடைக்கும். ஸித்த க்ஷேத்ரம், புண்ய தீர்த்தம், தேவதா ஸந்நிதி ஆகியவற்றில் நூறு கோடிகள் கூடிய ஆயிரம் பங்கு பலன் கிடைக்கும் எனப்படுகிறது.
தனக்கு உகந்த சுகமான ஆஸனத்தை பந்தனம் செய்து கொண்டு, இந்திரியங்களை அடக்கி கண்களை பாதி மூடி, ரிஷி சந்தஸ் தேவதைகளை நினைத்துக்கொண்டு மௌனமாக ப்ராணாயாமம் செய்ய வேண்டும். மூன்று ப்ராணாயாமங்களில் 7 வ்யாஹ்ருதிகள், சிரஸுடன் கூடிய காயத்ரியை பத்து முறை ஜபம் செய்ய வேண்டும். அல்லது மூச்சை அடக்க இயலாதெனில் பத்து முறை ஜபம் செய்ய வேண்டும்.
ப்ரம்ஹா நான்கு வேதங்களை ஒரு பக்கமும் காயத்ரியை ஒரு பக்கமுமாக தராசில் நிறுத்தார். இரண்டு தட்டும் சமமாக இருந்தது என்று சொல்லப்படுகிறது. அதாவது காயத்ரி நான்கு வேதங்களுக்கும் சமமானது.
காலையில் நின்று கொண்டு சூர்யன் உதயமாகும் வரை காயத்ரியை ஜபிக்க வேண்டும். மாலையில் உட்கார்ந்து கொண்டு நக்ஷத்திரங்கள் தோன்றும் வரை ஜபம் செய்ய வேண்டும். பல வேலைகள் உள்ள க்ருஹஸ்தனும், அத்யயனம் செய்ய கடமை உள்ள ப்ரம்ஹசாரியும் 108 முறை ஜபம் செய்ய வேண்டும். நேரம் இருக்கிற சன்யாஸியும் வானப்ரஸ்தனும் 1008 முறை ஜபிக்க வேண்டும்.
மனதால் ஜபம் செய்வதே உத்தமம். உதடுகள் நாக்கு சற்றே அசைய பிறர் கேளாவண்ணம் ஜபிப்பது உபாம்சு எனப்படும். இப்படி ஜபிப்பது மத்திமம். பிறருக்கு கேட்கும் படி ஜபிப்பது அதமம்.
கைகளில் விரல் ரேகைகளால் எண்ணி ஜபிப்பதே உத்தமம். வேதத்தை விரல்களில் ஸ்வரம் காட்டி பாராயணம் செய்கிறோம். வேத மாதாவான காயத்ரியையும் விரல்களில் எண்ணி ஜபிப்பதே சிறந்தது. மற்ற மந்திரங்களுக்கு இப்படி நியமமில்லை.
ஜபம் செய்து முடித்தபின் ‘உத்தமே சிகரே’ என்னும் மந்திரத்தால் காயத்ரியை உத்வாசனம் செய்ய வேண்டும்.
ஏகாக்ர சித்தத்துடன் அவரவர் வேத மந்திரங்களால் ஸூர்யனை உபஸ்தானம் செய்ய வேண்டும். உபஸ்தானம் என்பது நின்று கொண்டு ஸ்தோத்திரம் செய்வதாகும். பின் சந்த்யா, சாவித்ரீ, காயத்ரீ, ஸரஸ்வதி ஆகிய தேவதைகளை நமஸ்கரிக்க வேண்டும்.
பின் நான்கு திக்குகளையும், மேல் கீழ், அந்தரிக்ஷம், பூமி என மொத்தம் 8 திக்குகளையும் நம் மந்திரங்களை சொல்லி நமஸ்கரிக்க வேண்டும். யமன், விஷ்ணு, விரூபாக்ஷன், ஸவிதா ஆகிய தேவதைகளை அவரவர் திசை நோக்கி உபஸ்தானம் செய்ய வேண்டும். கடைசியாக பகவானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.

சந்த்யாவந்தனத்தை அவரவர் குலாசாரம் ப்ரகாரம் நன்கு தெரிந்து கொண்டு கடைபிடிக்க வேண்டும்.

Thursday, February 23, 2017

அந்தணர் ஆசாரம் - 12




ஸந்த்யாவந்தனம்
நக்ஷத்திரங்களின் ஒளி மறைவதில் இருந்து ஸூர்யோதயம் ஏற்படும் வரை உள்ள காலம் ப்ராதஸ் ஸந்த்யா எனப்படும். ராத்ரியின் கடைசி யாமத்தில் கடைசி 2 நாழிகைகள் ஸந்த்யையின் ஆரம்ப காலம் என்றும் சொல்லப்படுகிறது. வானத்தில் ஸூர்யனின் மேல் நோக்கிய கிரணங்கள் தெரிந்தால் அது ஸந்த்யையின் முடிவாகும். ஸந்த்யா என்பது காலத்தின் பெயரானாலும் அந்த நேரத்தில் உபாசிக்கப்படும் தேவதையும் அவ்வாறே அழைக்கப்படுகிறது.
காலை ஸூர்யன் உதித்த பிறகும் மாலை அஸ்தமித்தப்பிறகும் சந்த்யா உபாஸனம் செய்யலாகாது. (அது முக்ய காலமில்லை எனக்கருத்து) “ப்ரம்மா, விஷ்ணு, சங்கரன் ஆகியோரே இந்த முக்கிய காலத்தில் சந்த்யையை உபாசிக்கிறார்கள். ப்ராஹ்மணன் எவ்வாறு உபாசிக்காமல் இருப்பான்?” என்கிறார் யோக யாக்ஞவல்கியர்.
ப்ரஹ்ம ஞானிகள் மூன்று வேளை ஸந்த்யானுஷ்டானம் செய்யச்சொல்லுகிறார்கள். இரு ஸந்த்யா வேளைகளும் மாத்யான்ஹிகமும் என்கிறார் அத்ரி. வ்யாஸரோ ஸந்த்யா வேளையில் அனுஷ்டானத்தை செய்யாமல் வேறு எந்த தர்ம காரியத்தையும் செய்யும் ப்ராஹ்மணன் ஆயிரக்கணக்கான நரகங்களில் துக்கத்தை அனுபவிப்பான் என்கிறார். விவேகம் இல்லாமல் சந்த்யையை விடுத்து வேறு காரியத்தில் ஈடு படுபவனை ப்ராஹ்மணர்கள் செய்யும் சகல வைதிக காரியங்களில் இருந்தும் விலக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.
ஸந்த்யையை த்ருடமாக நியமத்துடன் உபாஸிப்பவன் சகல பாபங்களில் இருந்தும் விடுபட்டு ப்ரம்ம லோகத்தை அடைவான் என்று எமன் சொல்லுகிறார். சரீரத்தாலும் மனதாலும் வாக்காலும் பகலில் செய்யும் பாபம் ப்ராணாயாமத்துடன் செய்யும் ஸாயம் ஸந்த்யா அனுஷ்டானத்தால் விலகுகிறது. அதே போல இரவு செய்யும் பாபங்கள் காலை செய்யும் சந்த்யா அனுஷ்டானத்தால் விலகுகிறது.
ஸந்த்யா அனுஷ்டான கர்மாவில் அர்க்யம், த்யானம், ஜபம், உபஸ்தானம் ஆகிய நான்கு காரியங்களும் ப்ரதானமானவை, மற்றவை அங்கங்கள் எனப்படுகிறது.
முக்கிய காலத்துக்கு பின் வரும் அரை யாம நேரம் (84 நிமிடங்கள் அல்லது சுமார் ஒன்றரை மணி நேரம்) சந்த்யைக்கு கௌணகாலமாகும். மோசமான சூழ்நிலை, ஜலம் கிடைப்பதில் பிரச்சினை, உடம்பு அசௌகரியம், ஆபத்து ஆகிய காலங்களுக்கு இது பொருந்தும். சோம்பேறித்தனத்தால் முக்ய காலத்தை தவறவிட்டு இந்த நேரத்தில் செய்யலாகாது. வ்யாதி இல்லாமல் நன்றாக இருக்கும் ப்ராஹ்மணன் முக்ய காலத்தில் செய்யாமல் இருந்தால் அவன் பரம பாபியாகிறான். ஸூர்யனை ஹிம்சித்தவனாவான்.
தாரையாக விழும் ஜலத்தில் (இக்காலத்தில் தண்ணீர் குழாய் போல) செய்யக்கூடாது. இரு கைகளாலும் ஜலத்தை எடுத்து காயத்ரியால் அபிமந்திரித்து பசு மாட்டுக்கொம்பு அளவு உயரே எடுத்து அர்க்யம் விட வேண்டும். பொதுவாக ஜலத்திலேயே அர்க்யம் விட வேண்டும். அப்படி இடமில்லையானால் (இந்த காலத்தில் துர்லபமாகிவிட்டது), சுத்தமான தரையில் முன் கூட்டியே ப்ரோக்ஷித்து அங்கே விட வேண்டும். காலையிலும் மாத்யான்ஹிக வேளையிலும் நின்று கொண்டும் மாலையில் உட்கார்ந்து கொண்டும் அர்க்யம் கொடுக்க வேண்டும்.

ஸந்த்யா என்பது ஸூக்ஷ்மமான நேரம். ஆகவே எப்போதும் ப்ராயச்சித்த அர்க்யம் கொடுக்க வேண்டும். பின் ஆசமனம் செய்து ஆத்ம ப்ரதக்ஷிணம் செய்து பின் சற்று ஆத்ம த்யானம் செய்ய வேண்டும். பின் நவக்ரஹங்களுக்கும் கேசவாதி 12 தேவதைகளுக்கும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

Tuesday, July 5, 2011

ப்ராணாயாமம்.


ப்ராணாயாமம்.
1. சந்தியாவந்தனத்தில் பல இடங்களில் ப்ராணாயாமம் வருதே அதப்பத்தி சொல்லுங்க.
ஆமாம். பல இடங்களிலும் இது வரும்.
குறிப்பா ஒரு சங்கல்பம் செய்யும் முன் வரும்.

2. ஏன் அப்படி?
சங்கல்பம் என்கிறது ஒரு உறுதி மொழி. அது சாதாரணமா சொல்கிற விஷயமில்லை. ஆகவே அதுக்கு தனியா ஒரு சக்தி வேணும், மனக்குவிப்பு வேணும். அதை கொடுக்கிறதே
ப்ராணாயாமம்.

3. சரி அதை எப்படி செய்யணும்?
பலவிதமான ப்ராணாயாமம் இருக்கு. சாதாரணமா மூச்சை இழுத்து, நிறுத்தி, விடுகிறதே ப்ராணாயாமம்.
மூக்கில் வலது இடதுன்னு இரண்டு துவாரங்கள் இருக்கு இல்லையா? வலது பக்கமா காற்றை இழுக்கணும். பின் மூச்சை நிறுத்தணும். இடது பக்கமா விடணும்.

4. சரி மந்திரத்தோட செய்யணுமா இல்லை மந்திரமில்லாமலா?
சந்தியாவந்தனத்தில மந்திரத்தோடதான் செய்யணும்.

5. இல்லாமலும் செய்யலாமா?
செய்யலாம். அதுக்கு நாம் எதிர்பார்க்கிற பலன் இராது. அதற்கு வேறு மாதிரி பலன் இருக்கும். அதனால சந்தியாவந்தனத்தில அப்படி செய்யக்கூடாது. இப்படி செய்யும் போது உடம்பில சக்தி பெருகும். இது அடுத்து செய்யவிருக்கிற கர்மாவுக்கு பலம் சேர்க்கும்.

6. சந்தியாவந்தனத்திலேயே இது ரெண்டு விதமா செய்கிறாப்போல இருக்கே.
ஆமாம். காயத்ரி ஜபத்துக்கு முன்னே செய்வது ரிஷி, சந்தஸ், தேவதை சொல்லி செய்வது. மத்தது அப்படி இல்லை.
மற்ற எல்லாத்தையும் விட ஜபத்துக்கு மனக்குவிப்பும் உடலுக்கு சக்தியும் மிக அவசியம். அதனால் இப்படி.

7. செய்முறையில இந்த ரெண்டுக்கும் வித்தியாசம் உண்டா?
உண்டு.
ஒரு ப்ராணாயாம மந்திரம் சொல்லும்போது மூச்சை இழுத்து, நிறுத்தி, விடலாம்.

அல்லது ஆரம்பம் முதல் காயத்ரியை முடிக்கும் வரை மூச்சை இழுப்பது.
அடுத்து ஓமாபோ முதல் அடுத்த ப்ராணாயாம மந்திரம் முடிய மூச்சை பிடிப்பது.
மூன்றாவதாக மூன்றாம் முறை சொல்லும் ப்ராணாயாம மந்திரத்தின் போது மூச்சை விடுவது.
இப்படி செய்வது நல்லது. மந்திரங்களை ஒரே வேகத்தில் சொல்லுவது இருந்தால் இப்படி செய்வதில் சரியான விகிதாசாரம் அமைந்துவிடும்.

8. அதென்ன விகிதாசாரம்?
ப்ராணாயாமத்தை லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது உடம்பில் இருக்கிற நாடிகள் சம்பந்தப்பட்டது. சரியான விகிதாசாரத்தில இல்லாம செய்கிற ப்ராணாயாமம் விரும்பாத விளைவுகளை கொடுத்துவிடலாம். மேலும் விவரங்கள் எக்ஸ்பர்டைஸ் சம்பந்தப்பட்டது என்கிறதால இங்கேயே நிறுத்திக்கலாம். ப்ராணாயாமத்தை தனியாக பயில விரும்புபவர்கள் தகுந்து ஒரு குருவை நாடி பயிலவும்.

Friday, July 1, 2011

காயத்ரி -6



37. ஏன் முதல்ல உரக்க சொல்லச்சொல்லறீங்க?
முன்னே சொன்ன ஸ்வர உச்சரிப்பு சரியாவது ஒரு பக்கம். இன்னொன்று பழக்கப்படாத மனசு மிகச்சுலபமாக வேறு எங்காவது 'புல் மேய' போய்விடும். உரக்கச்சொல்லும்போது அந்த சப்தமும் காதில் விழுவதால் கவனம் வைப்பது சுலபம்.

38. காயத்ரியோட அர்த்தம் என்ன?
குரு மூலமாக கேட்டுக்கொள்ள வேண்டியது. இருந்தாலும் எளிமையாக வாக்கிய அர்த்தம் என்னன்னு பார்க்கலாம்.
எந்த தேவதையை குறித்து காயத்ரி சொல்லப்படுகிறது என்பதைப்பொறுத்து இது மாறும். சாதாரணமாக இதை சூரியனாக கருதுவதால் பொருள்: எந்த சூரியனின் தேஜஸானது (உபாசகர்களாகிய) எங்களுடைய புத்திகளை எல்லா நல்ல கர்மங்களை அனுஷ்டிப்பதில் திறமையும் பற்றும், கெட்ட கர்மங்களில் பற்றில்லாதவராயும் ஆகும்படி செய்கிறதோ; ப்ரகாசமாக இருப்பவரும் (அல்லது தேவ லோகத்தில் இருப்பவரும்) எல்லா உலகங்களின் அபிவிருத்திக்கும் சாதனமான மழையை உண்டு பண்ணுகிறவருமான சூரியனுடைய புருஷார்த்தத்தில் விருப்பமுடையவர்களால் தியானம் செய்யத்தகுந்த அந்த தேஜஸை தியானிக்கிறோம்.

39.காயத்ரி ஒரு தனி மனிதனுக்காக இல்லைன்னு சொல்கிறாங்களே? அது எப்படி?
ஆமாம். இதில் ந: ன்னு வருகிறதில்லையா? அது பன்மை. எங்கள் புத்தியை தூண்டுவாயாக.
என் புத்தியை தூண்டுவாயாகன்னு சொல்லி இருக்கலாமே? ஆனால் அப்படி சொல்லவில்லையே! ஒருவரே பலருக்காக செய்யும் ப்ரார்த்தனை போல இது இருக்கு.
அதனால்தான் ஒரு ஊரில் ஸஹஸ்ர காயத்ரி செய்பவர் ஒருவர் இருந்தாலும் ஊருக்கே நன்மை என்கிறோம்.

40. அதென்ன என்னென்னெமோ இருக்க புத்தியை தூண்டுவாயாகன்னு கேட்கிறோம்?
உண்மைதான். தேவர்கள் நம்மை ஆடு மாடு மேய்ப்பது போல குச்சி வைத்து கொண்டு மேய்க்க தேவையில்லை. நமக்கு வேண்டியதை நாமே அடையலாம். அதுக்கு புத்தி சரியாக இருந்தால் போதும். அதனால்தான் புத்தியை தூண்டச்சொல்லி கேட்கிறோம்.


Wednesday, June 22, 2011

காயத்ரி -5





29. இந்த மந்திரத்தோட பெருமை பத்தி சொல்லுங்களேன்.
நாம சந்தியாவந்தனத்தோட செய்கிற காயத்ரி த்ரிபதா காயத்ரி எனப்படும்.

30. அட அப்படின்னா வேற என்ன காயத்ரி இருக்கு?
அஜபா காயத்ரீ, துரீய காயத்ரீன்னு உண்டு. நாம் மூச்சை இழுக்கிறது ஹம் என்று, விடுகிறது ஸஹ என்று, இப்படி பழக்கமாகிவிட்டால் அது ஹம்ஸ அல்லது அஜபா காயத்ரி. துரீய காயத்ரி சன்னியாசிகள் செய்வது.
த்ரிபதா காயத்ரிதான் நாம் சாதாரணமா காயத்ரி ன்னு சொல்கிற போது குறிக்கிறது. இது எவ்வளவு பெருமை வாய்ந்தது என்றால் மந்திரங்களில் காயத்ரியாக இருக்கிறேன்ன்னு பகவான் சொல்லும் அளவு!
இது மிக பெருமை வாய்ந்தது என்கிறதால எல்லா தேவதைகளுக்குமே ஒரு காயத்ரி உருவாக்கப்பட்டது. ஆனா வேதத்தில குறிப்பிட்டு இருக்கிற காயத்ரி சிலருக்குத்தான்.
ஸவிதா தவிர
நரஸிம்மர்
சுப்ரமணியர்
அக்னி
சூரியன்
ப்ரம்ஹா
சிவன்
விஷ்ணு
லக்ஷ்மி

31. மத்ததெல்லாம்?
மத்ததெல்லாம் நாமே நம் இஷ்ட தேவதை மேலே இருக்கிற அபிமானத்திலே செஞ்சது.
இந்த காயத்ரி மூன்று வேதங்களிலேயும் இருக்கு. வேதத்திலேயே ஆவாஹன மந்திரம் இருக்கிறது இதுக்கு மட்டுமே. (ஆயாது வரதா...) மேலே அங்க ந்யாஸம், கரந்யாஸம், செய்பவர்களும் இருக்காங்க. த்யான ஸ்லோகம் எல்லோருக்கும் பொதுவே.

வேத கதை: தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் அடிக்கடி நடந்து கொண்டே இருக்கும். ஒரு முறை அப்படி போர் நடக்கும்போது காயத்ரி இருவருடைய பொருட்களையும் எடுத்து பத்திரப்படுத்தி காப்பாற்றியது. போர் முடிந்த பின் அசுரர்கள் தம் பொருட்களைப்பெற காயத்ரியை மரியாதை இல்லாமல் விரட்டிமிரட்டினர். ஆனாலும் அவர்களால் பொருட்களை பெற முடியவில்லை. தேவர்கள் அன்புடன் காயத்ரியை 'ஆயாது' என்ற மந்திரத்தால் துதித்தனர். “ஓ, காயத்ரியே! நீ வேதங்களுக்கெல்லாம் தாய்! வரத்தை கொடுப்பவள், அழிவில்லாதவள். ப்ரும்ஹ ஸ்வரூபிணி. நீ எங்களிடம் வா. எங்களிடம் இரு. நீ ஓஜஸ், ஸஹன சக்தி, பலம், தேஜஸ்! தேவர்களுக்கு வீடு எல்லாம் நீயே! ஆயுஸ் நீயே!” மகிழ்ந்த காயத்ரி அவர்களது சொத்தை கொடுத்து அருள் புரிந்தாள்.

32. காயத்ரின்னு ஏன் பெயர்?
காயந்தம் த்ராயதே இதி காயத்ரி. அதாவது யார் அதை சரியாக ஸ்வரத்துடன் உச்சரிக்கிறார்களோ அவர்களை காப்பாற்றுவது காயத்ரி.
வேதத்தில பல சந்தஸ் கள் (meter) உண்டு. உஷ்ணீக், அந்ஷ்டுப், ப்ருஹதீ, பங்க்தீ, த்ருஷ்டுப், ஜகதீ என்று பல. அவற்றில் ஒன்று காயத்ரி.
இதற்கு மூன்று பாதம், ஒவ்வொன்றிலும் எட்டு எழுத்துக்கள்.
முதலில் நான்கு எழுத்துக்கள்தான் இருந்தனவாம். அப்புறம் எட்டு ஆகிவிட்டது. இதற்கு வேதத்தில் ஒரு கதை உண்டு.

33. ஆஹா! கதை எனக்கு ரொம்ப பிடிக்கும். சொல்லுங்க.

(க்ருஷ்ண யஜுர் வேதம்- காண்டம் 6- ப்ரச்னம் 1- அநுவாகம் 6)
கத்ரூ, ஸுபர்ணி என்று இருவர் சகோதரிகள். அழகில் சிறந்தவர் யார் என்று இவர்களிடையே ஒரு போட்டி வந்துவிட்டது. அதில் கத்ரூ ஜெயித்தாள். போட்டியின் விதிப்படி ஸுபர்ணி கத்ருவின் அடிமையானாள். உனக்காக யாராவது மூன்றாம் உலகத்துக்குப்போய் ஸோம லதையை கொண்டு வந்தால் நீ அடிமைத்தனத்தில் இருந்து விடுபடலாம் என்று சொன்னாள் கத்ரூ. ஸுபர்ணா " ஓ குழந்தைகளே, இளமையில் பெற்றோர் உங்களை ரக்ஷிப்பது வயதான காலத்தில் தம்மை ரக்ஷிப்பீர்கள் என்பதனாலேயே. நீங்க ஸோமலதையை கொண்டு வந்து என்னை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பீர்களாக" என்றாள்.
உடனே 14 அக்ஷரங்கள் கொண்ட ஜகதீ சந்தஸ் ஸோமலதையை கொண்டுவரச்சென்று தோற்றது. தன் அக்ஷரங்களில் இரண்டையும் இழந்து திரும்பியது. 13 அக்ஷ்ர வடிவான த்ருஷ்டுப் உம் அதே போல சென்று, தோற்று, அக்ஷரங்களில் இரண்டையும் இழந்து திரும்பியது. அடுத்து 4 அக்ஷ்ரங்கள் கொண்ட காயத்ரி கிளம்பிசென்று தன் சாமர்த்தியத்தால் ஸோம லதையையும் பெற்று தன் சகோதரிகளிழந்த 4 அக்ஷரங்களையும் மீட்டுக்கொண்டு திரும்பியது. அன்று முதல் அது 8 அக்ஷ்ரங்கள் கொண்டதாயிற்று. ஆகவே வயதிலும் உருவிலும் சிறியதாக இருந்தாலும் காயத்ரியே சிறந்தது உயர்ந்தது என்று ப்ரம்ஹவாதிகள் கூறினர்.
ஒரு பாதத்தில் 8 அக்ஷரங்கள் வீதம் மூன்று பாதங்களில் 24 அக்ஷரங்கள் கொண்டது காயத்ரி.

34. சரி ஜப கிரமத்தை சொல்லுங்க.
முதலில் ஆசமனம். இது எல்லா கர்மாவுக்கும் பொது. அப்புறம் ப்ரணாயாமம். இது பத்தி தனியா பார்க்கலாம். அடுத்து சங்கல்பம். வேளைக்கு தகுந்தாப்போலே மாறும். இத்தனை ஜபம் செய்கிறேன் ன்னும் சங்கல்பிக்கலாம். அடுத்து பத்து ப்ராணாயாமம். இது ஜபத்திலே மனசு நல்லா நிலைக்க. அடுத்து முன்னே சொன்ன ஆயாது என்ற மந்திரத்தால ஆவாஹனம். அங்க கர ந்யாஸம் செய்வதும் உண்டு. முக்தா வித்ரும என்று ஆரம்பிக்கும் த்யானம்.

35. இந்த த்யானம் என்ன சமாசாரம்?
ஒரு பொருளையே சுத்தி மனசு லயமாகிறது த்யானம் என்பாங்க. டெக்னிகலா தாரணை என்கிறது இது. த்யானம் இதுக்கும் ஒரு படி மேலே போய் 'தடை இல்லாம' பொருளைப்பத்தியே சிந்திக்கறது.
காயத்ரி ஜபம் செய்ய நாம் காயத்ரியுடைய வடிவத்தை எப்படி இருக்கும்ன்னு மனசுல கற்பனை செய்யறோம்.

"முக்தா வித்ரும ஹேமநீல தவளவ சாயைர் முகை: த்ரியக்ஷணைர்
யுக்தா மிந்து கலா நிபத்த மகுடாம் தத்வார்த்த வர்ணாத்மிகாம்
காயத்ரீம் வரதாபயாம் அங்குச கசா: சுப்ரம் கபாலம் குணம்
சங்கம் சக்ரம் அதார விந்தயுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே'

முத்து, பவழம், தங்கம், நீலம், வெண்மை ஆகிய ஐந்து வண்ண திருமுகங்களையுடையவள் காயத்ரி! ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களுடையவள். சந்திரக் கலையை நவரத்தின க்ரீடத்தில் அணிந்தவள். தத்துவார்த்தமுள்ள (24) எழுத்துக்களின் வடிவானவள். வரதம், அபயம், அங்குசம், சாட்டை, வெண்மையான கபாலம், கதாயுதம், சங்கு, சக்கரம், இரு செந்தாமரை ஆகியவற்றைக் கரங்களில் ஏந்தியவள். இத்தகைய காயத்ரி தேவதையை த்யானம் செய்கிறேன்.

36. மந்திரத்தை உரக்க சொல்லணுமா எப்படி?
காயத்ரியை மனதில் மட்டுமே சொல்வது சிறந்தது.
இருந்தாலும் எப்படி ஒரு விஷயம் - மொழி - முதலில் கற்றுக்கொள்ளும் போது எழுத்துக்கூட்டி மெதுவாக சொல்கிறோமோ அப்படி சரியாக உச்சரிப்பு ஸ்வரம் வரும் வரை சொல்லலாம். பிறகு உதடுகள் மட்டும் அசையும்படி சொல்லலாம். இதற்கு உபாம்சு என்று பெயர். பிறகு மனதிலேயே சொல்லி பழகலாம்.

35. ஏன் முதல்ல உரக்க சொல்லச்சொல்லறீங்க?

Thursday, June 16, 2011

காயத்ரி-4





24. வேற ட்ரிக் ஒண்ணும் இல்லையா?
பலதும் இருக்கு. நாமே சிலதையும் உருவாக்கிக்கலாம். உதாரணத்துக்கு ஒண்ணு.
ப்ரணவத்தை மனசாலே வரையணும். ஸம்ஸ்க்ருத ரூபம் ன்னு வெச்சுப்போம். முழு ரூபத்தை மனக்கண்ணால பாத்து கொண்டு ப்ரணவத்தை சொல்லுவோம். அடுத்து மேலே ஆரம்பித்து முதல் வளைவு மனசால வரைஞ்சு கொண்டே வ்யாஹ்ருதிகளை சொல்லுவோம். இரண்டாவது வளைவை தொடர்ந்து வரைந்து கொண்டு ஸாவித்ரியின் முதல் அடி. இரண்டாம் அடி சொல்லிக்கொண்டே வால் மாதிரியான பகுதியை வரைவோம். மூன்றாம் அடிக்கு மேலே போடுகிற சந்திரனும் பிந்துவும். வரைந்து முடிந்ததை பார்த்து அடுத்த மந்திரத்தின் முதல் அடியான ப்ரணவம். இப்படியே சொல்லிக்கொண்டு வரைந்து கொண்டு போக மனசு நிலைப்பட வாய்ப்பு இருக்கு.
இது போல மந்திர ஜபத்தை செயலோடு இணைக்க மனம் நிலைப்படலாம். மூச்சு எடுத்துவிடுவது என்பது எப்படியும் நடக்கும் ஒன்று. இந்த மூச்சுடன் மந்திரத்தை இணைத்தும் ஜபம் செய்வதுண்டு. ஆனால் இதுக்கு பயிற்சியும் சீராக மூச்சு விடும் பழக்கமும் தேவை.

25. ஜபத்தின் போது ஏன் இப்படி மற்ற விஷயம் எல்லாம் நினைவுக்கு வருது?
அப்படி அலை பாயறதுதான் மனசோட இயல்பு. அப்படி இருக்கும்போதுதான் அதுக்கு மனசு ன்னு பெயர்.

26. பின்னே ஜபத்துல சரியா நின்னுட்டா?
அப்ப அதுக்கு சித்தம் ன்னு பெயர். " சித்தத்தை சிவன் பால் இருத்தி" ன்னு பாட்டு கேட்டு இருப்பீங்களே?

27. அப்ப மன ஓட்டத்தை நிறுத்தனும்?
ஆமாம். நாம் எவ்வளவுக்கெவ்வளவு மன ஓட்டத்தை நிறுத்தி வைக்கறோமோ அவ்வளவுக்கவ்வளவு பகவானோட செயல் திட்டம் நிறைவேறும். அப்ப எல்லாமே சரியா நடக்கும். இல்லைன்னா நம்மோட அஞ்ஞானத்துல முடிவுகள் எடுப்போம்.

28. மந்திரத்துல கவனிக்க ஏதும் விஷயம் இருக்கா?
நிறைய இருக்கு. சரியா உச்சரிப்பு தெரிஞ்ச ஒத்தர்கிட்டே போய் நாம சரியா சொல்கிறோமா ன்னு சீரியஸா சோதனை பாத்துக்கறதே நல்லது.
இருந்தாலும் பெரும்பாலானவர்கள் செய்கிற தப்புக்களை பார்க்கலாம்.
முதல் இரண்டு வ்யாஹ்ருதிகளும் நாலாவது ப வில் ஆரம்பிக்குது. நல்லா அழுத்தி பூர் புவ ன்னு சொல்லணும். வரேண்யம் என்கிறதுல ரே மேலே தூக்கி நீட்டி ரேஏஏ ன்னு சொல்லணும். பர்கோ என்பதும் நாலாவது ப. தீமஹி என்பதில தீ 4 ஆவது. தியோ வில தி யும் அப்படியே. ந:ப்ரசோதயாத். இதில் : ஐ ஆங்கில எஃப் ஆக உச்சரிக்கணும். நிறைய பேர் ப்ரஜோதயாத் என்கிறாங்க. இதையும் கவனிக்கணும்.
ஸ்வரங்களை சொல்லிக்கொடுக்கும்போது சரியா கவனித்து பழகணும்.

29. இந்த மந்திரத்தோட பெருமை பத்தி சொல்லுங்களேன்.
நாம சந்தியாவந்தனத்தோட செய்கிற காயத்ரி த்ரிபதா காயத்ரி எனப்படும்.

Tuesday, June 14, 2011

காயத்ரி-3



14.
இல்லை. அது தப்பு. எண்ணுகிற கைகளுக்கு மேலே துணியால மூடிகிட்டு செய்யணும். பூணூலை பிடிச்சுக்க கூடாது......


15. ஏன் மூடிக்கிட்டு?
விரல்கள் ஒன்றை ஒன்று தொடும்போது அது முத்திரையா ஆகும். சில முத்திரைகளை வெளியே காட்டக்கூடாது என்கிறதால அப்படி கட்டுப்பாடு.

16. சரி, வலது கையாலதானே எண்ணறோம். அந்த கையை எங்கே வெச்சுக்கணும்?
வலதால எண்ணினாலும் இரண்டும் பக்கத்து பக்கத்துல ஒண்ணாதான் வெச்சுக்கணும். உள்ளங்கைகள் நம்மை பார்க்க இருக்கணும். காலை ஜபத்திலே முகத்துக்கு எதிரேயும், மத்தியானம் இதயத்துக்கு எதிரேயும், மாலை தொப்புளுக்கு எதிரேயும் கைகளை வெச்சுக்கணும்.

17. ஏன் அப்படி?
கைகளை முகத்துக்கு எதிரே வைத்து ஜபம் செய்யும் போது புருவ மத்திக்கு சக்தி பாயரதை நாமே கூட உணரலாம். அந்த அந்த இடத்து சக்கரத்துக்கு சக்தி ஊட்டுகிறதாக இது இருக்கலாம். எப்படி இருந்தாலும் இப்படி செய்யத்தான் பெரியவங்க சொல்லி இருக்காங்க.

18. எண்ணிக்கை பத்தி சொல்லிட்டீங்க. மேலே ஜபம் பத்தி சொல்லுங்க.
காயத்ரி மொத்தம் ஐந்து வரிகள். ஒவ்வொண்ணா நிறுத்தி சொல்லணும்.

19. இருங்க, இருங்க, மூணு வரிகள்தானே?
நீங்க நினைக்கிற 3 வரிகள் ஸாவித்ரி எனப்படும். மந்திரத்தில முதல்ல ப்ரணவம். அடுத்து மூன்று வ்யாஹ்ருதிகள் (பூர், புவ, ஸுவ) அடுத்து மூன்று வரிகள் ஸாவித்ரி.

20. சரி, அப்புறம்...
மந்திரத்தில் மனசு லயிக்கறது முக்கியம். அவசர அவசரமா 108 செய்யறத்துக்கு நிதானமா நிறுத்தி குறைச்சலா செய்யறதே பரவாயில்லை.

21. அப்புறம்...
அப்புறம் என்ன, ஒண்ணுமில்லை. ஜபம் செய்து உபஸ்தானம் செய்ய வேண்டியது.

22. பிரச்சினையே ஜபத்தில மனசு லயிக்கிறதுதானே? அதுக்கு ஒண்ணுமே சொல்லலையே?
ஏன்? முன்னேயே இரண்டு விஷயங்கள் சொல்லி இருக்கேன். முதல்ல சரியா உக்காருவது. இரண்டாவது ப்ராணாயாமம்.
மனசு லயிக்கிறது என்பது ப்ரச்சினைதான். சாதாரணமா வேற ஒரு எண்ணமும் இல்லாம ஜபம் செய்யணும்ன்னுதான் உக்காருவோம். இப்படி நினைக்கிறதும் ஒரு படிதான். கடவுளே! வேற எண்ணங்கள் இல்லாம ஜபத்திலே ஈடுபட வைன்னு வேண்டிக்கவும் செய்யலாம். ஆரம்பத்திலே கொஞ்ச நேரம் வேற சிந்தனை இல்லாம செய்வோம். அப்புறம் மனசு அதோட இயல்பான ஓட்டத்திலே போயிடும். வேற எண்ணங்கள் கிளைக்கும்.

23. ஆமாமாம். அதுக்கு என்ன செய்யறது?
ஒண்ணும் செய்ய வேண்டாம். திருப்பி ஜபத்தை தொடர வேண்டியதுதான். விட்டுப்போச்சே என்கிற எண்ணம் இன்னும் டென்ஷனை உண்டாக்க விடக்கூடாது.

24. வேற ட்ரிக் ஒண்ணும் இல்லையா?....

Friday, June 10, 2011

காயத்ரி-2



8. ஜபமாலை சமாசாரம் என்ன?
ஜபமாலையும் பயன்படுத்தலாம். அதற்கு அதிக பலன் உண்டு. ருத்திராக்ஷம், ஸ்படிகம், துளசி, மணி, போன்றவற்றை மாலையாக உபயோகிக்கலாம். இவை 108, 54, 27 என்ற எண்ணிக்கையில் கட்டப்படும்.

9. பின்னே ஏன் ஜபமாலையை எல்லோரும் பயன்படுத்தச்சொல்லலை?
ஏதாவது கூடுதல் சக்தி உண்டு என்றால் அதற்கான சட்ட திட்டமும் அதிகமாக இருக்கும். ஜபமாலை பயன்படுத்தினால் அதிக பலன் என்றால் அதற்கு கூடுதலாக கட்டுப்பாடுகள் உண்டு. ஜபத்தின் போது மாலை அசங்கக்கூடாது. மாலையில் கோர்த்த மணிகளுக்கு தலைபாகம் கீழ் பாகம் என்று உண்டு. தலை தலைபாகத்தை தொட்டுக்கொண்டும் கீழ் பாகம் கீழ் பாகத்தை தொட்டுக்கொண்டும் மாலை கோர்க்க வேண்டும். இதிலும் மேரு உண்டு. அது தனியாக கோர்த்திருக்கும். அந்த இடம் வந்த பிறகு தாண்டக்கூடாது. ஆள் காட்டிவிரல் படாமல் மாலையை தன்னை நோக்கியே உருட்ட வேண்டும். மாலை தொப்புளுக்கு கீழ் இறங்கக்கூடாது.

10. சரி சரி, நான் விரல்லியே எண்ணிக்கறேன்.
ஆமாம், அதுவே எளிது, நல்லது, ரிஷிகள் பரிந்துரைத்ததும் அதுவே.

11. அக்ஷர மாலைன்னு சொன்னீங்களே அது என்ன?
ஸக்ஸ்க்ருதத்தில் உள்ள எழுத்துக்கள் அ முதல் ஹ வரை 54. ஒவ்வொரு மந்திரத்துக்கும் அம் முதல் ஹம் வரை ஒவ்வொரு எழுத்தும் சொல்லி 54 ஆ கணக்கு வெச்சுக்கலாம். அதையே திருப்பி ஹம் முதல் அம் வரை இன்னொரு 54 செய்ய மொத்தம் 108. இதுக்கு நல்ல நினைவாற்றல் வேணும்.

12. நின்னு கொண்டு செய்யணுமா? சிலர் அப்படி சொல்லறாங்களே?
ஆமாம். காலையும் மதியமும் நின்று கொண்டும் மாலையில் உட்கார்ந்து கொண்டும் செய்யணும். உட்காரும்போது எந்த வித ஆசனம் போட்டு உட்காரணும்ன்னு முன்னேயே சொல்லியிருக்கோம். எப்படியும் முதுகுத்தண்டு வளையாம இருக்கணும்.

13. நல்லதுதான், அப்பதான் தூக்கம் வராம இருக்கும். சரி உட்கார்ந்து கொண்டு செய்யறது?
மாலையிலும் ஸஹஸ்ர காயத்ரி மாதிரி அதிக ஜபம் செய்யவும் உட்கார்ந்து செய்யலாம். நாம் வழக்கமா உட்காருகிறது போலவே உட்கார்ந்து செய்யலாம்.

14. பூணூலை பிடிச்சு கொண்டுதானே செய்யணும்?
இல்லை. அது தப்பு. எண்ணுகிற கைகளுக்கு மேலே துணியால மூடிகிட்டு செய்யணும். பூணூலை பிடிச்சுக்க கூடாது.
பின்ன பலர் செய்யறாங்களே?
மேல் துணி போட்டுக்கற பழக்கம் இல்லாததாலேயும், மூன்றாவது பூணூல் த்ருதீய வஸ்தரம்ன்னு சொல்கிறதாலேயும் துணியை போட்டு மூடாமல் பூணூலால மூடிக்கற மாதிரி இது வந்து இருக்கலாம்.

Tuesday, June 7, 2011

காயத்ரி - 1




1. காயத்ரி ஜபம் பத்தி சொல்லுங்க!
எளிமையா எல்லோரும் செய்கிற விதத்தை பார்க்கலாம்.

2. அப்படின்னா இன்னும் விரிவான வழி இருக்கா?
ஆமாம். மந்திர சித்திக்காக செய்யறது விரிவான வழி. அதில இன்னும் கூடுதல் படிகள் உண்டு.
எளிமையான வழியில... முதல்ல எப்படி உட்காருகிறதுன்னு பார்த்தோம். முதுகு நிமிர்ந்து இருக்கும் வரை ஜபத்தில மனக்குவிப்பு (கான்சன்ட்ரேஷன்) இருக்கும்.
மேலும் மனக்குவிப்பு வர ப்ராணாயாமம் செய்யணும். அதையும் தனியா பாத்தோம்.

3. இருங்க, முதல்ல எவ்வளோ காயத்ரி செய்யணும்ன்னு சொல்லுங்க.
அந்த காலத்தில செய்தது ஒவ்வொரு வேளையும் ஆயிரம் என்றே பல ரிஷிகளும் சொல்லியிருக்கிறார்கள். சிலர் எட்டு சேர்த்து ஆயிரத்தெட்டு என்றதால் அந்த பழக்கமும் இருக்கு. அவ்வளவு செய்ய இந்த அவசர காலத்திலே நேரம் இல்லை என்பதால 108 ஆவது நிச்சயம் செய்யணும்.

4. எண்ணிகிட்டுதான் செய்யணுமா? அது மனக்குவிப்பை தடுக்குதே?
எண்ணாமல் செய்தால் பலனில்லை என்றே பலரும் சொல்லி இருக்கிறார்கள். ஆகவே எண்ணியே செய்ய வேண்டும்.

5. சரி எப்படி எண்ணுவது?
அக்ஷர மாலை, ஜப மாலைன்னு பலதும் இருந்தாலும் விரல்களில் எண்ணி செய்வதே நல்லது, சுலபமானது.

6. அந்த வழி என்ன?
இரண்டு கைகளையும் பக்கத்து பக்கத்துல சேர்த்து வைத்தே ஜபம் செய்தாலும் வலது கையிலேதான் எண்ணனும். முதல் ஜபம் செய்யும் போது வலது கை கட்டைவிரலோட நுனியை மோதிர விரலோட நடு ரேகையில் வைக்கணும். இரண்டாம் ஜபத்துக்கு கட்டை விரலோட நுனியை அடுத்து கீழே இருக்கிற ரேகைக்கு நகர்த்தணும். அடுத்து சுண்டு விரலின் கீழ் ரேகை; அங்கிருந்து சுண்டு விரலின் நடு ரேகை, மேல் ரேகை; அப்படியே மேலே உள்ள ரேகைகளிலேயே போய் மோதிர விரல், நடுவிரல், சுட்டு விரல் மேல் ரேகைகளை தொட்டு சுட்டு விரலில் கீழாக இறங்கணும். நடு ரேகை கீழ் ரேகை முடித்தா பத்து ஜபம் ஆகும். அங்கேயே 11 ஆவது ஜபம். வந்த வழியே திரும்பினால் மோதிர விரலோட நடு ரேகை வரும்போது 20. அங்கேயே மீண்டும் ஆரம்பித்து எண்ண வேண்டும். இப்படியே ஐந்து சுற்று வந்தால் 100 பூர்த்தி ஆகும்.


7. இதில நடுவிரலோட நடு, கீழ் ரேகைகள் எண்ணப்படலையே!
ஆமாம். இதை மேரு என்பாங்க. இதை தாண்டக்கூடாது என்பதால அந்த இடத்தில கட்டை விரல் வைத்து எண்ணுவதில்லை.

Thursday, June 2, 2011

சந்த்யாவந்தனம் -10



70. ம்ம்ம்... சரி காயத்ரி பத்தி தனியா சொல்லப்போறீங்களா? சரி. அதென்ன ஜபம் முடிஞ்சு உபஸ்தானம்?
ஆமாம்! காயத்ரி பத்தி தனியா விரிவா பார்க்கலாம். தேவதையை கூப்பிட்டு ஆவாஹனம் செய்தோமில்லையா? அதனால அவங்களை உத்தமே சிகரே என்ற மந்திரத்தால வழியனுப்பவும் செய்யணும்.

71. அப்புறம்?
காலையில 'மித்ரஸ்ய', மத்தியானம் 'ஆஸத்யேன', மாலை 'இமம்மே வருண' ஆகிய மந்திரங்களல மித்ரன், சூரியன், வருணன் ஆகிய தேவதைகளை உபாசிக்கிறோம். அப்புறம் திக்குகளுக்கு நமஸ்காரம். தெற்கு திசை நாயகனான யமன், மேற்கே விச்வரூபன், வடக்கே நர்மதை கிழக்கே சூரியன் ஆகியோருக்கு வந்தனம்.

72. யமனா? பயமாயிருக்கே?
என்ன பயம்? அவரை துதித்தா சாவைப் பத்தி பயப்பட மாட்டோம். எல்லோருக்கும்தான் சாவு ஒரு நாள் சர்வ நிச்சியமாக வரப்போகிறது. ஏன் பயப்படணும்? இப்படி தெரிந்தும் சாவுக்கு பயப்படாதவங்க அரிதே!

73. சரி நர்மதை எங்கே வந்தது?
நர்மதை நதிதேவதைக்கு விஷத்தை முறிக்கிற சக்தி உண்டு. அதனால பாம்பு முதலான விஷ ஜந்துக்களில் இருந்து காப்பாத்தும்படி வடக்கே இருக்கிற நர்மதையை வேண்டிக்கிறோம்.

74. ம்க்கும். காசியிலே இருக்கிறவங்களுக்கு அது மேற்கேதானே இருக்கு? அவங்களும் வடக்கே பாத்து வேண்டிப்பாங்களா? (மாட்டிக்கிட்டாரு!!!)
தமிழ்நாட்டில் பல ஜாதி அந்தணர்கள் நர்மதை கரையிலேந்து சங்கரர் கூப்பிட்டு வந்ததாலே இங்கே வந்தாங்க. அவங்தான் இப்படி வேண்டிப்பாங்க. மற்ற இடங்களிலே இது பழக்கம் இல்லை. (பொழச்சுட்டேன்!)

75.ம்ம்ம் இதெல்லாம் முடிஞ்ச பிறகு?
சூரியனுக்கு வந்தனம் செய்து அபிவாதனம் செய்யணும். பிறகு எல்லா கர்மாக்களையும் செய்து முடிச்ச பிறகு செய்கிற 'காயேனவாசா' ...

76.அது என்ன?
'உடம்பாலும் வார்த்தைகளாலும் மனசாலும் புலன்களாலும் இயற்கையா நமக்கு வாய்ச்சு இருக்கிற ஸ்வபாவத்தாலும் எதெல்லாம் செய்கிறேனோ அவை எல்லாம், நாராயணா உனக்கு அர்ப்பணம்' ன்னு சிறிது ஜலம் எடுத்து விடுவது பழக்கம்.
கடைசியா சிறிது ஜலத்தால் ஜபம் செய்த இடத்தை ப்ரோக்ஷணம் செய்து அதை 'அத்யானோ' என்ற மந்திரத்தால் நெற்றிக்கு இட வேண்டும். மந்திரார்த்தம் "இந்த கர்மாவால் மகிழ்ச்சியடைந்த சூரியனே, எங்களுக்கு மகன், பேரன் முதலிய பாக்கியத்தை தாரும். கெட்ட கனவுகளால் ஏற்படும் கெடுதலை அகற்றும். எல்லா பாபங்களையும் நீக்கி க்ஷேமத்தை தாரும்".


Tuesday, May 31, 2011

சந்த்யாவந்தனம் -9



64. தரையில் ரொம்ப நேரம் நிமிர்ந்து உட்கார முடியலை. என்ன செய்வது?
இந்த பிரச்சினை நிறைய பேருக்கு இருக்கு. உட்காரும் பழக்கமும் இல்லை. ஒரு வழி இருக்கு.
கீழே உட்கார்ந்து கொண்டு முன் பக்கம் அப்படியே வளையணும்... நெத்தி தரையை தொடுகிறது போல... அதுக்குன்னு வீணா முதுகை கஷ்டப்படுத்தக்கூடாது. :-) அப்புறம் நிமிர்ந்தா சரியா இருக்கும்.

65. அட ஏன் அப்படி?
கீழே நாம உட்காரும்போது தொடை, ப்ருஷ்டம் ஆகியவற்றில் தசைகள் வேலை செய்து கொண்டு இருக்கும். நாம சரியா உட்காராத போது இவை அந்த டென்ஷனிலேயே இருக்கும். அதனால் சீக்கிரம் வலி ஏற்பட்டு சரியாக நிமிர்ந்து உட்கார முடியாமல் உடம்பை வளைக்கிறோம்.
முன்னால் நன்றாக சாயும்போது இந்த தசைகள் ரிலீஸ் ஆகி தளர்வாகிடும். அப்போ வலிக்காது.

66. சரி, உட்கார்ந்தாச்சு. ப்ராணாயாமம் செய்தாச்சு. அப்புறம்?

ஆயாது என்கிற மந்த்ரத்தாலே காயத்ரி ஆவாஹனம் செய்யணும்.

67. அதென்னது ஆவாஹனம்?
பகவான் எல்லா இடத்திலேயும் இருந்தாலும் ஒரு குறிப்பிட்டதேவதையா த்யானம் செய்யும் முன் அந்த தேவதையை எதிலாவது நிலை நிறுத்தி மேற்கொண்டு ஆராதிக்கணும். சரஸ்வதி பூஜையில புத்தகங்கள், விநாயகர்ன்னா மஞ்சள்ள பிடிச்ச பிள்ளையார் இப்படி...

68. காயத்ரியை எதில செய்யணும்?
நமக்குள்ளேயே ஆவாஹனம்.

69.அதென்ன உச்சந்தலை, மூக்கு, மார்பை தொடச்சொல்லறாங்க?
ஒவ்வொரு வேத மந்திரமும் இறைவனோட மூச்சுக்காற்று. ப்ரபஞ்சத்தில் பரவிக்கிடக்கிற இவற்றை சில ரிஷிகள் க்ரஹித்து நமக்கு கொடுத்தாங்க. அப்ப அந்த மந்திரத்துக்கு அவரே ரிஷியா சொல்லப்படுகிறார். ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு சந்தஸ்ல இருக்கும். இது உச்சரிப்பு சம்பந்தமானதால வாயை தொடணும். வாய் எச்சில் என்பதால மூக்கை தொடறோம். மந்த்ரம் சம்பந்தமான தேவதையை இதயத்தில் இருத்துகிறோம். அதனால மார்பு.

Thursday, May 26, 2011

சந்த்யாவந்தனம் -8



60. ப்ராணாயாமம் பத்தி சொல்லுங்க.
அதை தனியா விரிவாகவே பார்க்கலாம். இப்போதைக்கு மனசை ஒரு முகப்படுத்த அது உதவுதுன்னு தெரிஞ்சா போதும்.

61. சரி போகட்டும். எங்கே இருந்து கொண்டு ஜபம் செய்யணும்?
சந்த்யா கர்மா ஆரம்பிச்ச இடத்துக்கு 40 அடி தூரத்துக்குள் ஒரு இடத்தில செய்யணும். வீடுன்னா வசதியான இடம், பூஜை அறை, அக்னி உபாசனை செய்துகொண்டு இருந்தா அந்த இடம். இவை நல்லது.

62. வேற?
நதி தீரத்தில செய்தால் 2 மடங்கு பலன் கிடைக்கும். பசுக்கள் கட்டின இடமானா 10 மடங்கு. அக்னி சாலை 100 மடங்கு; புண்ய க்ஷேத்திரமானால் 1000 மடங்கு; நல்ல புராதனமான பூஜைகள் வெகு காலம் நடந்த சகோவிலானால் கோடி மடங்கு.
இடத்தை சுத்தி செய்து கொண்டு நீரால் ப்ரோக்ஷணம் செய்து ஆசனத்தில் உட்கார வேண்டும்.

63. ஆசனம்ன்னா நாம் எது மேலே உட்காருகிறோமோ அதுவா இல்லை உட்காருகிற விதமா? எந்த ஆசனம் நல்லது?
இரண்டுக்குமே ஆசனம்ன்னுதான் பெயர்.
ஆசனம் இல்லாமல் பூமியில் உட்காரக்கூடாது. அப்படி செய்தால் ஜப பலன் நம்மில் தங்காமல் பூமிக்கு போய்விடும். மரப்பலகை (இரும்பு ஆணி இல்லாதது) தர்பங்களால செய்த பாய், கம்பளி,பட்டு ஆகியவை நல்லன. மடியான எந்த துணியும் கூட உபயோகிக்கலாம்.
உட்காருகிற விதத்தை பொருத்து பழக்கமான ஆசனமே சிறந்தது. பத்மாசனம் போன்றவை பழக்கமாக இருந்தால் அவை நல்லன. இல்லாவிட்டால் நாம் சாதாரணமாக தரையில் உட்காரும் ஸ்வஸ்திகாசனமே நல்லது.

64. தரையில் ரொம்ப நேரம் நிமிர்ந்து உட்கார முடியலை. என்ன செய்வது?
இந்த பிரச்ச்சினை நிறைய பேருக்கு இருக்கு. உட்காரும் பழக்கமும் இல்லை. ஒரு வழி இருக்கு.
கீழே உட்கார்ந்து கொண்டு முன் பக்கம் அப்படியே வளையணும்... நெத்தி தரையை தொடுகிறது போல... அதுக்குன்னு வீணா முதுகை கஷ்டப்படுத்தக்கூடாது. :-) அப்புறம் நிமிர்ந்தா சரியா இருக்கும்.

65. அட ஏன் அப்படி?
கீழே நாம உட்காரும்போது தொடை, ப்ருஷ்டம் ஆகியவற்றில் தசைகள் வேலை செய்து கொண்டு இருக்கும். நாம சரியா உடகாராது போது இவை அந்த டென்ஷனிலேயே இருக்கும். அதனால் சீக்கிரம் வலி ஏற்பட்டு சரியாக நிமிர்ந்து உட்கார முடியாமல் உடம்பை வளைக்கிறோம்.
முன்னால் நன்றாக சாயும்போது இந்த தசைகள் ரிலீஸ் ஆகி தளர்வாகிடும். அப்போ வலிக்காது. மேலே இங்கே பாருங்க.

Monday, May 23, 2011

சந்த்யாவந்தனம் -7



53. ஒஹோ! அது சரி, ப்ரணவம் தெரியும், அது ஓங்காரம். வ்யாஹ்ருதி என்கிறதென்ன?
பூர், புவ, ஸுவ: என்கிறதுதான் முதல் மூன்று வ்யாஹ்ருதிகள்.

54. அடுத்த செயல் என்ன?
ப்ராணாயாமம் செய்து மார்பில் கைகளை வைத்துகொண்டு 'அஸாவாதித்யோ ப்ரஹ்ம' என்ற த்யானமே அடுத்த படி. சும்மா கடனுக்கு செய்யாமல் சற்றே கவனத்துடன் சில நொடிகளாவது இதை செய்வது மோக்ஷ சாதனமாகும்.

55. அதெப்படி மோக்ஷ சாதனம்?
தினசரி கொஞ்ச நேரம் செய்ய இது நம்மை ப்ரஹ்ம நிஷ்டையில் அமர்த்தும். இந்த ஜன்மத்திலேயே நம் குருவை கண்டு பிடித்து உபதேசம் பெறுவோம். ஞானமும் நிஷ்டையும் முக்தியும் கைகூடும். மனித பிறவி எடுப்பதே இதற்காகத்தான். இதை பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் உணவிருந்தும் உண்ணாமல் பட்டினி கிடப்பவன் போலாவோம்.

56. ம்ம்ம்ம்ம்.. அப்புறம்?
நவ க்ரஹங்களுக்கும் கேசவன் முதலான 12 நாமங்களை சொல்லியும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

57. தர்ப்பணமா? அது அப்பா அம்மா இல்லாதவங்கதானே செய்வாங்க?
அப்படி இல்லை. தர்ப்பணம் என்றால் திருப்தி செய்வது என்றே பொருள். இப்படி சொல்ல பிடிக்கவில்லையானால் அர்க்யம் என்றும் சொல்லலாம்.

58. எதுக்கு இவங்களை திருப்தி செய்யணும்? பரமாத்மாவை உபாசிக்கிற போது இவங்க எதுக்கு?
என்னதான் அரசு உத்திரவு இருந்தாலும் அரசாங்கத்தில் வேலை செய்கிறவர்களை திருப்தி செய்தால் வேலை சீக்கிரம் நடப்பது போல நடைமுறையில் தினசரி செயல்களுக்கு உதவறவங்களை திருப்தி செய்கிறோம். ஏன் விஷ்ணு என்றால் அவரே மோக்ஷத்தை தருகிறவராம்.

59. சரி அடுத்து?
காயத்ரி ஜபம் செய்கிறேன் என்று சங்கல்பம் செய்து ஜபம் செய்ய வேண்டும். ஜபத்தில் மனசு ஊன்ற ப்ராணாயாமம் செய்ய வேண்டும்.

60. ப்ராணாயாமம் பத்தி சொல்லுங்க.
அதை தனியா விரிவாகவே பார்க்கலாம். இப்போதைக்கு மனசை ஒரு முகப்படுத்த அது உதவுதுன்னு தெரிஞ்சா போதும்.

Friday, May 20, 2011

சந்த்யாவந்தனம் -6




43. கட்டை விரலை மற்ற விரல்களுடன் சேர்க்கூடாது என்று கேள்விப்பட்டேன்.
சரிதான். அது ராக்ஷஸர்களுக்கு உகந்தது ஆகும். அதனால் கட்டை விரல்களை நீக்கியே அர்க்கியம் தர வேண்டும். இடது கட்டைவிரல் சுட்டு விரல்களுக்கு இடையில் ஜல பாத்திரத்தை பிடித்துக்கொண்டு செய்வது சுலபமாக இருக்கும்.

44. எவ்வளவு அர்க்கியம்?
காலை மாலை மும்மூன்றும் மதியம் இரண்டும். கூடவே சரியான காலத்தில் அர்க்கியம் தரவில்லை என்பதற்கு ப்ராயச்சித்தமாக ஒன்று.

45. நான் ஐந்து மணிக்கே அர்க்கியம் கொடுக்கிறேன். ப்ராயச்சித்தம் தேவையில்லைதானே?
சந்த்யா நேரமே அர்க்கியம் கொடுக்க சரியான நேரம். இது மிகவும் சூக்ஷ்மமானது. அதனால் எப்படியும் ப்ராயச்சித்த அர்க்கியம் தர வேண்டும்.

46. எதற்காக இந்த அர்க்கியம்?
இது குறித்து ஒரு கதை இருக்கிறது. சில ராக்ஷஸர்கள் ப்ரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தனர். கடுந்தவம் செய்தால் வரம் கொடுத்தே ஆக வேண்டும். ப்ரம்மா என்ன வரம் வேண்டும் என்று கேட்க ராக்ஷஸர்கள் தினமும் சூரியனுடன் சண்டையிடும் பெருமை வேண்டும் என்று வேண்டினர். வரமும் கொடுக்கப்பட்டது. ஆகவே அவர்கள் தினசரி சண்டையிடுகிறார்கள். அந்த சமயத்தில் ஸாதுக்கள் காயத்ரி கூறி அர்க்கியம் அளிக்க இந்த ராக்ஷஸர்கள் மந்தே ஹாருணம் என்ற தீவில் தூக்கி எறியப்படுகிறார்கள். இதனால் சூரியன் மகிழ்ந்து எல்லா நன்மைகளையும் செய்கிறார்.

47 சரி, சரி, ராக்ஷஸர்கள் வரம் வாங்கித்தானே சண்டை போடறாங்க? அதை நாம் போய் தடுத்தா அது பாவமில்லையா?
பாபம்தான். இப்படி தூக்கி எறிந்த பாபம் அடுத்து தன்னைத்தானே ப்ரதக்ஷிணம் செய்வதால் அழிகிறது.

48. கதையானா இருக்கு?
கதையானாலும் இல்லையானாலும் அதில் பெரிய தத்துவம் இருக்கு.

49. என்ன தத்துவம்?
சூரியன் என்பது நம் அறிவு. இந்த அறிவை ராக்ஷஸ ரஜோ, தமோ குண வெளிப்பாடுகளான காமம், கோபம் முதலான அசுர சக்திகள் பீடிக்கின்றன. காயத்ரி இவற்றை தற்காலிகமாக அழிக்கிறது. அவை மீண்டும் பீடிக்கின்றன.

50. சரி, 'இதனால் சூரியன் மகிழ்ந்து எல்லா நன்மைகளையும் செய்கிறார்' என்கிறதுக்கு என்ன ஆதாரம்?
க்ருஷ்ண யஜுர் வேதத்தில் இது மிகத்தெளிவாக ஆருணம் இரண்டாம் ப்ரச்னத்தில் சொல்லப்பட்டு இருக்கு. 'ஸகலம் பத்ரமச்னுதே'

51. சரி அப்புறம்?
ப்ரணவமும் வ்யாஹ்ருதிகளையும் சொல்லி ஜலத்தால் பரிசேஷணம் போல தன்னைத்தானே சுற்றிக்கொண்டு கீழே ஜலத்தை விட வேண்டும்.

52. கோவில்ல சுத்தரவங்க சுத்திக்கிறாங்களே அந்த மாதிரியா?
அந்த மாதிரிதான். ஆனா அங்கே அப்படி செய்யறது தப்பு. அது பூர்வ ஜன்ம புண்ணியத்தை காலி செய்துவிடும். இங்கே அப்படி விதிச்சு இருக்கிறதாலே செய்யணும்.

Tuesday, May 17, 2011

சந்த்யாவந்தனம் -5






34. ப்ராணாயாமம் பத்தி சொல்லலையே!
பின்னால் விவரமாக பார்க்கலாம். இப்போதைக்கு இடது மூக்கு துவாரத்தால் இழுத்து நிறுத்தி பின் வலது பக்கத்தால் விட வேண்டும் என்று தெரிந்தால் போதும். ஒவ்வொரு கர்மாவுக்கும் முன்னால் அதை செய்ய ஒரு சக்தியை சேர்த்துக்கொள்ளவே இதை செய்கிறோம்.

35. ம்ம்ம் அப்புறம் தலையில தண்ணி தெளிச்சுக்கணும்.
ஆமாம். உத்தரணியில நீர் எடுத்து மந்திரம் சொல்லி ... இதுக்கு மார்ஜனம் ன்னு பேர். ஒன்பது வாக்கியங்கள் இந்த ஆபோஹிஷ்டா என்கிற மந்திரத்துல. எட்டாவது மந்திரத்தால் கால்களில தெளிக்கணும். மற்றது தலையில. மந்திரம் சொல்லி இப்படி செய்தால் அந்த தண்ணீர் திவலைகள் நம் உடலையும் மனசையும் சுத்தம் செய்யும்.

36. இந்த மந்திரத்துக்கு என்ன பொருள்? ஏன் செய்யணும்?
இது ஜல தேவதையை உத்தேசித்து சொல்லப்படுகிறது. ஜலம்தான் உலகத்துக்கு சுகத்தை தர வேண்டி முதலில் படைக்கப்பட்டது. நமக்கு குளிக்கவும், குடிக்கவும் பயனாகிறது. பயிர்களை வளரச்செய்து நமக்கு உணவு அளிக்கிறது. குழந்தைகள் என்ன தப்பு செய்தாலும் அன்னை மன்னித்து தனக்குக் கூட இல்லாமல் சத்தான உணவை அவர்களுக்கு கொடுப்பார்கள் இல்லையா? அது போல ஜல தேவதையும் நமக்கு அன்னம் முதலியவற்றை கொடுத்து காப்பாற்றட்டும். ஸ்தூலமான உடம்புக்கு அன்னம் தருவது போல சூக்குமமான உடலுக்கும் ஞானமாகிய உணவை கொடுக்கட்டும். உங்களது அருளால் நான் பேரின்பத்தை அடைய வேண்டும். இந்த மண்ணுலக வாழ்கைக்கு ஜலம் அவசியம். அதே போல மறு உலக வாழ்க்கைக்கும் ரஸத்தை கொடுக்கட்டும்.

37. சரி அப்புறம் உள்ளங்கையில் நீர் எடுத்து மந்திரம் சொல்லி குடிக்கணும். கரெக்டா?
சரிதான். ஸூர்யச்ச, ஆப: புனந்து, அக்னிச்ச ஆகியவை இந்த மந்திரங்கள். ஸுர்யன், ஜலம், அக்னி, கோபமும் கோபத்துக்கான தேவதைகளும் - இவற்றை வேண்டி நம் பாபங்களை தொலைக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம் உடல் உறுப்புகளால் தெரிந்தும் தெரியாமலும் பல பாப செயல்களை செய்கிறோம். இவை நம் மனசை கெடுத்து பகவானை த்யானம் செய்ய முடியாமலோ அல்லது முக்திக்கான செயல்களில ஈடுபட முடியாமலோ செய்கின்றன. ஆகவே இவற்றை நீக்கிக்கொள்கிறோம்.

மத்தியானத்தில் ஆப: புனந்து என்ற மந்திரத்தால் உண்ணக்கூடாததை உண்டது, சேரக்கூடாதவருடன் சேர்ந்தது, அசத்துக்களிடம் பணம் வாங்கியது ஆகிய பாபங்களை நீக்கிக்கொள்கிறோம்.

38. சரி அப்புறம்?
திருப்பியும் மார்ஜனம். இப்போது கூட சில மந்திரங்கள் உண்டு. 'ததிக்ராவ' என்ற தேவதையை மந்திரம் சொல்லி துதிக்கிறோம். இது நம் வாயை நாற்றம் இல்லாமல் வாசனையுடன் கூடியதாக்கும். ஆந்திரர் 'ஹிரண்ய வர்ணா' என்ற 4 மந்திரங்களை கூடுதலாக சொல்வர். அப்புறம் காயத்ரியால் அர்க்கியம் விடுவது.

39. அர்க்கியம் விட சரியான செய்முறை என்ன? உட்கார்ந்து கொண்டா நின்று கொண்டா?
காலையும் மாத்தியானிகத்திலும் நின்று கொண்டும் மாலையில் உட்கார்ந்து கொண்டும் அர்க்கியம் விட வேண்டும். நின்று கொண்டு செய்யும் போது கிழக்கே பார்த்துக்கொண்டு குதிகால்களை கொஞ்சம் உயர்த்தி மாட்டுக்கொம்பு உயரத்தில் கைகளால் நீரை விட்டு எறிய வேண்டும்.

40. என்ன! விட்டு எறியணுமா?
ஆமாம். வேதத்தில் 'ஆப ஊர்த்வம் விக்ஷிபந்தி' என்றே சொல்லி இருக்கிறது.

41. எந்த இடத்தில் இந்த ஜலத்தை விட்டு எறிவது?
நீர் நிலையில் செய்வதானால் நீரிலேயே விட்டு எறியலாம். இல்லை நிலத்தில் செய்வதானால் கூடுமான வரை சுத்தமான இடமாக பார்த்து செய்யலாம். தோட்டமோ இல்லை ஃப்லாட்டில் இருப்போர் மொட்டை மாடியிலோ செய்ய சரியாக இருக்கும்.

42. இது இரண்டுமே சரியாக அமையா விட்டால்?
வீட்டிலேயே ஒரு பாத்திரத்தில் விட்டுக்கொண்டு பின்னால் ஏதேனும் செடி மரம் போன்றவற்றில் சேர்த்துவிடலாம். இப்படியே பழக்கமாகிவிட்டதால்தான் நின்றுக்கொண்டு வீசி எறியும் பழக்கம் விட்டுப்போனது.


Monday, May 16, 2011

சந்த்யாவந்தனம் -4



25. எந்த பக்கம் பார்த்து செய்ய வேண்டும்?
சூரியன் உள்ள திசையை பார்த்து செய்ய வேண்டும். காலையில் கிழக்கு பார்த்து. மாலையில் வடக்கில் துவக்க வேண்டும்; ஜபம், அர்க்கியம் ஆகியன மேற்கு பார்த்து செய்யவேண்டும். மத்தியானம் செய்யும் நேரத்தில் சூரியன் எங்கே இருக்கிறான் என பார்த்து செய்ய வேண்டும்.

26. எப்படி ஆரம்பிப்பது?
கை கால்கள் சுத்தி செய்து கொண்டு  அவரவர் குல ஆசாரப்படி நெற்றிக்கு இட்டுக்கொண்டு சுத்தமான நீரை பஞ்ச பாத்திர உத்தரணியில் எடுத்துக்கொண்டு சரியான திசையை நோக்கி அமர்ந்து ஆரம்பிக்க வேண்டும்.

27. கால்களை சம்மணமிட்டுக்கொண்டுதானே உட்கார வேண்டும்?
இல்லை. பல கர்மாக்களும் இரண்டு முழங்கால்களுக்கு இடையில் செய்ய வேண்டும். ஆசமனம், தர்ப்பணம் போன்றவை. ஆகவே குக்குடாசனம் - இரண்டு கால்களையும் தரையில் ஊன்றிக்கொண்டு உட்கார வேண்டும். கால்களை அகட்டி வைத்துக்கொண்டு இரண்டு கைகளையும் முட்டிகளுக்கு நடுவில் கொண்டு வந்து ஆசமனம் முதலியவற்றை செய்ய வேண்டும். (தற்கால உதாரணத்துக்கு கிரிக்கெட்டில் விக்கட் கீப்பர் மாதிரி - ஆனால் பாதம் முழுதும் தரையில் படிய உட்கார வேண்டும்.)

28. ஆசமனம் என்பது கையில் தண்ணீர் நிறைய எடுத்து குடிப்பதுதானே?
இல்லை. வலது கையை குவித்துக் கொண்டு, அதில் மத்தியில் உள்ள இரண்டு ரேகைகளும் முழுகும்படி (உளுந்து மூழ்குமளவிற்கு என்றும் சொல்வதுண்டு) நீர் எடுத்துக்கொண்டு, பிறகு சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் இவற்றை நீட்டி கையை குவித்துக்கொண்டு உறிஞ்சுகின்றபோது ஒலி எழாமல், மணிக்கட்டை வாய் அருகில் படாமல் வைத்து கையை விரல்கள் மேலே போகும்படி உயர்த்தினால் நீர் வாய்க்குள் போய்விடும். இதுவே ஆசமனம் எனப்படும். இப்படி 3 முறை மந்திரம் கூறி நீர் பருக வேண்டும். பிறகு உதடுகளை வலதுகை பெருவிரலின் அடியால் இரண்டு தடவை துடைத்து, பின் இது எச்சில் என்பதால் கையால் நீரை தொட்டுக்கொள்ள வேண்டும்.

29. எந்த தண்ணீரானாலும் பரவாயில்லையா, ஆசமனம் செய்யலாமா?
அப்படி இல்லை. முடிந்த வரை சுத்தமான நீரே வேண்டும். வென்னீர், நுரை உள்ள நீர், உப்பு கலந்த நீர் ஆகியன கூடாது. குளித்தபின் கிணற்றில் எடுப்பதோ ஆற்றில் ஓடும் தண்ணீரில் எடுப்பதோ உசிதம். கடல் தண்ணீரில் எப்போதும் ஆசமனம் செய்யக்கூடாது. (ஆனால் தனுஷ்கோடியில் செய்யலாம் என்று அனுமதி இருப்பதாக அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.)

30. ஆற்றிலோ கிணறு, குளத்திலோ செய்வதானால்?
ஆற்றில் முழங்கால் மறையும் அளவு நீரில் நிற்க வேண்டும். இடது கையால் நீரை தொட்டுக்கொண்டு வலது கையால் நீர் எடுத்து ஆசமனம் செய்ய வேண்டும். உட்கார்ந்து, குக்குடாசனம் என்ற விதிகள் இங்கே பொருந்தாது. குளம் கிணறு எனில் வலது காலை பூமியில் வைத்துக்கொண்டு இடது காலை நீரில் விட்டுக்கொண்டு ஆசமனம்.

31. தண்ணீரை குடித்துவிட்டு ஏதேதோ விரல்களால முகத்தில எங்கெங்கோ தொடறாங்க. சுட்டு போட்டாலும் இது எனக்கு வராது.
:-)) எல்லாம் பழக்கம்தான். ஆரம்பத்தில மெதுவாகவே செய்யலாம். எழுதி வைத்துகொண்டு பார்த்தே செய்யலாம். நாளாகாக சுலபமாக பழகிவிடும்.
லிஸ்ட் இதோ:
ஜோடி ஜோடியாக மந்திரம் இருக்கு. முதலில் வலது பக்கம்; அப்புறம் இடது பக்கம்.
கேசவா, நாராயணா = கட்டைவிரலால் கன்னம்
மாதவா, கோவிந்தா =மோதிர விரலால் கண்கள்
விஷ்ணூ, மதுசூதனா = ஆள் காட்டி விரலால் மூக்கின் இரண்டு பக்கங்கள்
த்ரிவிக்ரமா, வாமனா = சுண்டு விரலால் காதுகள்
ஸ்ரீதரா, ஹ்ருஷீகேசா = நடுவிரலால் தோள்கள்
பத்மநாபா, தாமோதரா = எல்லா விரல்களாலும் மார்பிலும் உச்சந்தலையிலும்.

32. இன்னும் நிறைய செய்து பார்த்திருக்கேனே. வித்தியாசமாவும் பார்த்திருக்கேனே!
ஆமாம். ஆந்திரர்களுக்கு எப்போதுமே மந்திரங்களும், செய்கைகளும் அதிகம். அவர்கள் 24 நாமாக்கள் சொல்லி செய்கிறார்கள். சில குடும்பங்களில் வழக்கத்தில் சில மாறுதல்கள் இருக்கலாம். அவரவர் குல ஆசாரப்படியே செய்ய வேண்டும். அது என்ன என்று தெரியாத போது மேற்கூறியவாறு செய்யலாம்.

33. சரி அப்புறம்?
வினாயகரை வேண்டி குட்டிக்கொண்டு, ப்ராணாயாமம் செய்து, பின் சங்கல்பம். வலது தொடை மீது இடது கையை மேல் நோக்கி வைத்து அதை வலது கையால் மூடிக்கொண்டு சங்கல்பம்.
மந்திரங்கள் எதையும் இங்கே சொல்லவில்லை. அவற்றை குரு முகமாக நேரில் தெளிவாக கேட்டு செய்க.

Monday, May 9, 2011

சந்த்யாவந்தனம் -3



17.ஜுரம் அடிக்கிறது, முடியவில்லை எனக்கோ சந்த்யா தவறக்கூடாது என்று ஆசை! என்ன செய்வது?
உங்களுக்கு பதில் யாரேனும் செய்து, சிறிது நீரை உங்கள் கையில் விட்டால நீங்கள் செய்தது போல் ஆகும்.

18. பஸ்ஸில் போய் கொண்டு இருக்கிறேன். சந்த்யா வேளை வந்துவிட்டது என்ன செய்வது?
வாய்ப்பு கிடைக்கும்போது அர்க்யம் சரியான நேரத்துக்கு விட்டுவிட்டு பின்னால் ஜபம் செய்து கொள்ளலாம். அவரவர் மனசுக்கு ஏற்ப இரண்டு வழிகள்.
ஆசமனம் முதல் அனைத்தும் மனசாலேயே செய்யலாம். சுலபமாக தோன்றினாலும் வெகு கடினம். பயணம் முடிந்த பிறகு செய்யலாம். காலம் தாண்டியதற்கு ப்ராயசித்த அர்க்கியம் இருக்கிறதல்லவா?

19. சந்த்யா என்கிறதுக்கு அர்த்தம் என்ன?
சந்தி நேரத்தில் செய்கிற கர்மா; நன்றாக த்யானம் செய்ய வேண்டிய கர்மா; ஜீவனையும் பரப்பிரம்மத்தையும் சேர்த்து வைக்கிற கர்மா - இப்படி பலவிதமாக பொருள் கொள்ளலாம்.
சந்தியா நேரத்தில் சந்த்யா என்ற தேவதையை வணங்கும் கர்மா என்று பொதுவாக அர்த்தம் செய்து கொள்ளலாம்.

20. எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. சொல்லும் மந்திரங்களுக்கு பலன் உண்டா?
உண்டு. பொருள் தெரிந்து மந்திரம் சொல்லுவதே சிறந்தது என்றாலும் பொருள் தெரியாவிட்டாலும் பலன் உண்டு.

21. அது எப்படி?
பரிட்சை இருக்கிறது. சிக்கலான சப்ஜெக்ட். கேள்வி கேட்கிறார்கள். நமக்கு அவ்வளவு சரியா விளங்காவிட்டாலும் 'கடம்' அடித்து வைத்த விடையை சரியாக எழுதிவிட்டால் மதிப்பெண் போட்டுவிடுவார்கள். அது போல. பொருள் தெரியாவிட்டாலும் மந்திரம் ஜபம் செய்து வந்து கொண்டு, பின் அதன் பொருளை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

22. ம்ம்ம்ம்... நம்பிக்கை வரவில்லையே?
அடுப்பில் ஒரு வாணலி வைத்து இருக்கிறது. அது இதுவரை யாரோ தீயில் வைத்து இருந்ததால் சூடாக இருக்கிறது; தெரியாமல் அதை எடுக்கபோகிறோம். அது நம் கையை சுட்டுவிடுகிறது. எனக்கு இது சூடாக இருக்கிறது என்று தெரியாது. எப்படி என் கையை சுடலாம் என்று கேட்க முடியுமா? சுடும் என்று தெரியாமல் நெருப்பில் கையை வைத்தாலும் அது சுடும். அது போல சில கர்மாக்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்கை ஒன்றே ஆதாரமாக கொண்டு பலனைத்தரும்.

23. நான் இன்ன வேத கிளையை சார்ந்தவன். எனக்கு என்ன காயத்ரி?
காயத்ரியில் வேத பிரிவை ஒட்டிய வேறுபாடு இல்லை. எல்லோருக்கும் ஒரே காயத்ரிதான்.

24. அப்போது சந்தியாவந்தனமும் ஒன்றுதானா?
இல்லை. அது வேறுபடும். ஒரே வேதத்திலேயே இடம் (ஆந்திரம், தமிழ்நாடு) இனம் (வைஷ்ணவர், ஸ்மார்த்தர்), சூத்திரம் (ஆபஸ்தம்பர், போதாயனர்) பொருத்து வழக்கத்தில் வேறுபாடுகள் உள்ளன.

Saturday, May 7, 2011

சந்தியாவந்தனம் 2



9. சந்தியா வந்தனம் செய்தா பலன் இல்லைன்னு ரொம்ப விஷயம் தெரிஞ்ச ஒத்தர் சொன்னாராமே?
ம்ம்ம்ம் ..... தினசரி செய்ய வேண்டிய சில காரியங்களை ஆஹ்னிகம் ன்னு சொல்கிறாங்க. அந்த லிஸ்ட்லே சந்த்யாவும் இருக்கு. இதெல்லாம் செய்தா நாம இருக்கிறபடி இருப்போம். (அதாவது இயற்கையா நோய் நொடி இல்லாம.) செய்யாம இருந்தா கெடுதல் ஏற்படும். குளிக்காம இருந்தா நோய் வரும். அதுக்காக குளிக்கிறதுல ப்ரயோசனம் இல்லை என்கலாமா? அது போலத்தான் இவை எல்லாம். கெடுதல் வராம இருக்கிறதே ஒரு நல்ல பலன் இல்லையா? மேலும் சாஸ்திரம் ஸ்ம்ருதி, வேதம் சொன்னதை யோசித்து பார்க்கவும்.

10. இந்த சந்த்யாவந்தனம் பக்தியா. கர்மாவா?
இது பக்தி, கர்மா, யோகம், ஞானம் எல்லாமே சேர்ந்தது.
ஸவிதா என்கிற தேவதையை உபாசிக்கிறோம். இது பக்தி மார்க்கம்.
பெரும்பாலான படிகள் செயல் ஆகும். கர்ம மார்க்கம்.
ஜபத்துக்கு முன் செய்யும் ப்ராணாயாமம் யோகமாகும்.
இந்த சூரியன் போல நானும் ப்ரஹ்மம் என்ற த்யானம் ஞான மார்க்கமாகும்.

11. நீங்க இதை யோகம்ன்னு சொல்கிறது ஆச்சரியமாக இருக்கு!
ஏன்? அஷ்டாங்க யோக மார்க்கத்தில் படிகளை யோசித்து பாருங்க.
யமம், நியமம்: உள் சுத்தி, வெளி சுத்தி
ஆசனம்
ப்ராணாயாமம்
ப்ரத்யாஹாரம்
தாரணை
த்யானம்
ஸமாதி
உள் சுத்தி எப்போதும் இருக்க வேண்டியது. இந்த சந்த்யா காலத்திலேயாவது கெட்ட விஷயங்களை நினைக்கமல் இருக்க வேண்டும் என்று நினைத்து உறுதி கொள்கிறோம்.
வெளி சுத்திக்காக குளிக்கிறோம். ஸ்நானம் இல்லாமல் கர்மா பயனில்லாது போகும்.
நின்று கொண்டோ சுகமாக உட்கார்ந்து கொண்டோ ஜபம் செய்கிறோம்.
ப்ராணாயாமம் செய்து மனதை நிலை நிறுத்துகிறோம்.
ஜபம் தவிர வேறு விஷயத்தில் மனம் போகக்கூடாது என்று சங்கல்பம் செய்து கொள்கிறோம். அவ்வாறே இந்திரியங்களை அடக்கி அலையும் மனதை இழுத்து கட்டிப்போடுகிறோம். (ப்ரத்யாஹாரம்)
மனதின் அசைவுகளை காயத்ரியை சுற்றியே சுழல விடுகிறோம். காயத்ரியை த்யானிக்கிறோம்.
என்றோ ஒரு நாள் ஸமாதி கைகூடினாலும் கூடலாம்!

12. ம்ம்ம்ம்.. என்னை மாதிரி ஆசாமிங்க செய்யணும்; ஆனா ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவங்க இதை செய்ய வேண்டாம் இல்லையா?
அப்படி இல்லை. எல்லோரும் செய்வர். புராணங்கள் இதிஹாஸங்களை ஆராய்ந்து பார்த்தால் பல முனிவர்கள், தேவர்கள் செய்தனர் என்கிறார்கள். ப்ரும்மா, விஷ்ணு, சிவன் செய்கிறார்கள்; அவதாரங்களான க்ருஷ்ணன், ராமன் செய்கிறார்கள்; ரிஷிகளான வஸிஷ்டர், காச்யபர், அத்ரி, ஆங்கீரசர், ப்ருகு, கௌதமர், பாரத்வாஜர் செய்கிறார்கள். தர்ம சாஸ்திரம் எழுதிய மனு, யாக்ஞவல்கியர், பராசரர் போன்றோர்; சூத்திரக்காரர்களாகிய ஆபஸ்தம்பர், போதாயனர், ஆஸ்வாலாயனர் எல்லோரும் செய்தனர்.
ராமாயணத்தில் பல இடங்களில் வால்மீகி சந்த்யையை புகழ்கிறார். மஹா பாரதத்தில் இது சொல்லப்படுகிறது. இரவும் போர் என்று தீர்மானித்த போது மாலையில் போரை நிறுத்திவிட்டு போர் களத்திலேயே ஆயுதபாணியாக சந்த்யையை செய்ததாக எழுதி இருக்கிறது. காளிதாசன் பல இடங்களில் இதை சொல்லுகிறான். பரம சிவன் செய்த சந்த்யா குறித்து குமார சம்பவம் பேசுகிறது.

13. சரி, சரி, தீட்டு எதுவும் இல்லை என்றால் சந்த்யா செய்ய வேண்டும் இல்லையா?
அப்படி இல்லை.
ஆ!
அதாவது தீட்டு இருந்தால் கூட விடாமல் செய்ய வேன்டிய கர்மா இது. ப்ரேத சம்ஸ்காரம் செய்ய வேண்டிய சமயத்தில் சந்த்யா காலம் வந்தால், சம்ஸ்காரத்தை நிறுத்தி, சந்த்யாவந்தனம் முடித்தே பித்ரு கார்யத்தை செய்ய வேண்டும் .

14. சந்த்யா வந்தனம் செய்ய வேண்டிய நேரம் எது?
காலை சூர்ய உதயத்துக்கு முன்னும், நடுப்பகலில் தலைக்கு மேல் சூரியன் இருக்கும்போதும், மாலை சூர்ய அஸ்தமனத்துக்கு முன்னும் செய்ய வேண்டும்.

15. அப்போ வெளியே கிளம்பணும்ன்னா சாயந்திரம் நாலு மணிக்கு செய்யலாமா?
இல்லை, குறித்த வேளைக்கு ஒரு மணி நேரம் முன் செய்யலாம். அதற்கு முன் செய்வது இல்லை.

16.ஏதோ பிரச்சினை; ஒரு வேளை செய்ய முடியாமல் போய் விட்டது. என்ன செய்வது?
விட்டுபோனதை அடுத்த சந்த்யா நேரத்துக்கு முன் செய்தே, அடுத்த வேளை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்.

Thursday, May 5, 2011

சந்தியா வந்தனம்




சந்தியா வந்தனம்:

1. யார் சந்த்யா வந்தனம் செய்ய வேண்டும்?
ப்ரம்ஹோபதேசம் ஆன அதாவது பூணூல் போட்டுக்கொண்ட- அனைவரும் செய்ய வேண்டும்.
2. அப்போ ப்ராஹ்மணர்கள்தானே செய்ய வேண்டும்?
ம்ம்ம். அப்படி இல்லை. அந்தணர், க்ஷத்திரியர், வைச்யர் ஆகிய மூன்று வர்ணத்தவருக்குமே பூணூல் போட்டுக்கொள்ள அதிகாரம் உண்டு. ஆனால் தற்காலத்தில் அந்தணர் மட்டுமே போட்டுக்கொள்கிறார்கள்.
3. ஏன் சந்த்யா வந்தனம் செய்ய வேண்டும்?
பல் தேய்த்தால் பெரிதாக நன்மை ஒன்றும் தெரியாவிட்டாலும் பல் தேய்க்கவில்லையானால் வாய், பல், ஈறு, கெட்டு துர்நாற்றம் வருகிறது; நோய் வருகிறது. அது போல் சந்த்யாவந்தனம் செய்யாவிட்டால் தீமை ஏற்படுகிறது; நோய் நொடி ஏற்படுகிறது. அதை தடுக்க சந்த்யாவந்தனம் செய்ய வேண்டும்.
4. வேறு காரணம் உண்டா?
சந்த்யாவந்தனம் செய்யும் வரை ப்ராம்ஹணத்துவம் நிலைக்கும்; விட்டு விட்டால் நிலைக்காது. சந்த்யா உபாசனை இல்லாமல் மற்ற தெய்வ காரியங்கள் பித்ரு காரியங்கள் என்ன செய்தாலும் பலன் கிடைக்காது.
5. அதென்னது? நீங்களா சொல்லறீங்களா?
சாஸ்திரமே சொல்லுகிறது:
விப்ரோ வ்ருக்ஷ: தஸ்ய மூலம் ஹி சந்த்யா |
மூலே சின்னே நைவ புஷ்பம் பலம் வா ||
விப்ரன் எனப்படும் ப்ராஹ்மணன் மரம் போன்றவன். அவனது வேர் சந்த்யை. வேரை வெட்டிவிட்டால் பூவோ, பழமோ கிடைக்காது. சந்தையை விட்ட ப்ராஹ்மணன் செய்யும் காரியங்களுக்கு பலன் இராது.
6. சரி சரி, இன்னும் ஏதாவது?
மனு ஸ்ம்ருதியில்:
ரிஷயோ தீர்க்க ஸந்த்யத்வாத் தீர்க்கமாயு ரவாப்னுயு |
ப்ரஞாம் யச: ச கீர்த்திஞ்ச ப்ரஹ்ம வர்சஸ மேவச ||
நீண்ட காலம் சந்த்யாவந்தனம் செய்த மஹரிஷிகள் நீண்ட ஆயுளை அடைந்தனர். அறிவு, நற்பெயர், புகழ், ப்ரஹ்ம வர்சஸ் இவற்றையும் பெற்றனர்.
7. வேதம் என்ன சொல்லுகிறது?
வேதம் சந்த்யை பற்றி 'ஸகலம் பத்ரமச்னுதே' என்கிறது. அதாவது எல்லாவித நன்மையையும் பெறுகிறான்.
8. மோக்ஷத்தையே கொடுக்கும்ன்னு யாரோ சொல்லிகிட்டு இருந்தாங்க. அது கொஞ்சம் 'டூ மச்' தானே?
டூ மச் இல்லை. சந்த்யாவந்தனத்தில் வரும் 'அஸாவாதியோ ப்ரஹ்மா; ப்ரஹ்மைவ ஸத்யம்; ப்ரஹ்மைவாஹமஸ்மி' என்ற த்யானம் மோக்ஷ சாதனமாகும். (இந்த சூரியன் ப்ரஹ்மம்; ப்ரஹ்மமே சத்தியம்; நான் ப்ரஹ்மமாகவே இருக்கிறேன்)