Pages

Monday, August 31, 2015

கிறுக்கல்கள்! - 13


சுய பச்சாதாபத்திலும் வெறுப்பிலும் உழல்பவர்களை மாஸ்டர் மன்னிக்கவே மாட்டார். தனக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பது ஒன்றுமேயில்லைநீ அதை மறக்கவே மாட்டேன் என்று அடம் பிடித்தாலொழிய!
---

ஜோக்காக ஒரு கதையை மாஸ்டர் சொன்னார்.
ஒரு மாது போலீஸுக்கு போய் தன்னை ஒருவன் கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்தாள்.
அவனை அடையாளம் சொல்லுங்க!
ம்ம்ம்ம் முதல்ல அவன் ஒரு சரியான முட்டாள்!
முட்டாள்?
ஆமா, அவனுக்கு பாலுறவு பத்தி ஒண்ணுமே தெரியலை. நான் அவனுக்கு உதவ வேண்டி இருந்தது.

சீடர்கள் பலமாக சிரித்தனர். ஆனால் மாஸ்டர் அடுத்து சொன்னதை கேட்ட பின் அது அவ்வளவு ஜோக்காக தோன்றவில்லை.

அதனால் அடுத்த முறை யாரும் உன்னை புண்படுத்திவிட்டார்கள் என்று  புகார் சொல்லுமுன் அவருக்கு நீ எப்படி உதவி செய்தாய் என்று கண்டுபிடி!
எல்லோரும் இதற்கு பலத்த ஆட்சேபம் செய்தார்கள்.
நீ உன் மனதை புண்பட விடமாட்டேன் என்று உறுதியாக இருந்தால் யார் உன் மனதை புண்படுத்த முடியும்?


Saturday, August 29, 2015

கிறுக்கல்கள்! - 12அத்ருஷ்டத்தை நம்பறீங்களா ஸ்வாமி?

நிச்சயமா! பின்னே நமக்கு பிடிக்காதவங்க அடையற வெற்றியை எப்படி ஜீரணிக்கறது?

Friday, August 28, 2015

யஜுர் உபாகர்மா - 2015


நாளை ஆவணி அவிட்டம் என்னும்  யஜுர் உபாகர்மா வருகிறது. யாருக்குப்பயன் ஆகுமோ அவர்கள் அதற்கான மந்திரங்களை இங்கே பெறலாம்.

https://drive.google.com/file/d/0B0hsZOLFx-HfUEFLTzg4WDF4U2M/view?usp=sharing

Thursday, August 27, 2015

கிறுக்கல்கள்! - 11மாஸ்டர் ஒரு விருந்துக்கு போன போது அங்கே ஒரு நடிகை ஜோசியம் பற்றி பேசிக்கொண்டு இருப்பது காதில் விழுந்தது. அவரருகே சென்று மாஸ்டர் கேட்டார்: ஜோசியத்தை நம்பறீங்களா என்ன?

பதில் வந்தது: நான் எல்லாத்தையுமே கொஞ்சம் கொஞ்சம் நம்புவேன்!

கிறுக்கல்கள்! - 10


ஞானோதயம் பெற என்ன செய்ய வேண்டும் என்று ஒரு சீடன் கேட்டான்.

குரு சொன்னார்: தண்ணீரில் விழுந்தும் அலைகளை உண்டாக்காதது எதுவோ; மரங்களினூடே பரவியும் சத்தம் எழுப்பாதது எதுவோ வயலில் நுழைந்தும் ஒரு இலையையும் அசைக்காதது எதுவோ, அதை கண்டுக்கொள்.

பல வாரங்கள் இது பற்றி யோசித்தும் ஒன்றும் புரியாத சீடன் கேட்டான், குருவே, அந்த பொருள் என்னது?
பொருளா? அது ஒரு பொருளே இல்லையே!

அப்ப அது எதுவுமில்லையா?
ம்ம்ம் அப்படியும் சொல்லலாம்.

அப்படியானால் அதை எப்படி தேடுவது?
தேடுவதா? நான் அதை தேடவா சொன்னேன்? அதை கண்டு கொள்ளலாம்; ஆனால் தேடினால் கிடைக்காது!

Wednesday, August 26, 2015

கிறுக்கல்கள்! - 9


குரு பிரசங்கம் செய்து கொண்டு இருந்தார். அவரது சிஷ்யை ஒருவரின் தந்தை பயங்கர கோபத்துடன் கூடத்துக்குள் நுழைந்தார். யாரையும் பொருட்படுத்தாமல் மகளைப்பார்த்து இரைந்தார். “ கல்லூரியை விட்டுவிட்டு இங்கே இவர் காலடியில் கிடக்கிறாயே! இவர் என்ன சொல்லிக்கொடுத்தார் உனக்கு?”

மகள் அமைதியாக எழுந்தார். தந்தையை வெளியே அழைத்துப்போனார்.

இங்கே இருப்பதில் நான் எந்த கல்லூரியிலும் சொல்லிக்கொடுக்காததை கற்றுக்கொண்டேன். உங்களை பார்த்து பயப்படாமல் இருக்கவும்; உங்கள் மரியாதைக்கேடான நடத்தையால் வெட்கப்படாமல் இருக்கவும்!”

Monday, August 24, 2015

கிறுக்கல்கள்! - 8


குரு பிரசங்கத்தில் சொன்னார்:
ஒரு இசையமைப்பாளரின் புலமை ஸ்வரக்கோப்பில இருக்கு. ஆனால் என்னத்தான் அதை ஆராய்ஞ்சாலும் அவரோட புலமை அதில இன்னதுதான்னு தெரியாது. ஒரு கவிஞரோட புலமை சொற்களில இருக்கு. ஆனால் என்னத்தான் அதை ஆராய்ஞ்சாலும் அவருக்கு ஊக்கம் எங்கிருந்து வந்ததுன்னு தெரியாது. அதைப்போலத்தான் கடவுளும் தன் படைப்புகளில வெளிப்படுகிறார். ஆனால் அவற்றை எவ்வளவு நுணுக்கமாக ஆராய்ஞ்சாலும் அதில் கடவுளை பார்க்க முடியாது. உங்க உடம்பை எவ்வளவு ஆராய்ஞ்சாலும் உங்களோட ஆத்மாவை பார்க்க முடியாதது போலவே!

பிரசங்கத்தை கேட்டுக்கொண்டு இருந்தவர்களில ஒத்தர் கேட்டார்: பின்னே எப்படி கடவுளை கண்டு பிடிக்கறது?
படைப்பை பார்ப்பதால, ஆராய்வதால இல்லை!
ம்ம்ம்? அப்ப எப்படி பார்க்கணும்?
சூரியன் சாய்கிற அழகை பார்க்கப்போறீங்க. என்னத்தை பார்ப்பீங்க? அதே மலை, மரம், செடி கொடிகள், நதி, சூரியன்.... பார்த்துகிட்டே இருக்கும் போதுதான் தோணுது அழகு பார்க்கிற விதத்தில இருக்கு; வெறும் சூரியன், மலை, செடி, கொடிகளில இல்லைன்னு! அது போலத்தான் கடவுளை ஒரு பொருளா தேடினா கிடைக்கமாட்டார். அதுக்கு கள்ளம் கபடில்லாத குழந்தை முன் கூட்டியே நிர்ணயிச்ச நம்பிக்கை, கோட்பாடுன்னு குழம்பாம பார்க்கிறது போல ஒரு பார்வை வேணும்!

Friday, August 21, 2015

கிறுக்கல்கள்! - 7


மாஸ்டர் சொன்னார்: ஞானோதயம் என்பது எந்த ஒரு கணத்திலும் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து இருப்பதுஅது சுலபமே இல்லை!


பின் தன் நண்பர் பற்றி சொன்னார். நண்பர் எண்பது வயது தாண்டியும் பல பார்டிகளுக்கும் விழாக்களுக்கும் போவார். ஒரு நாளுக்கு ஒரு டஜன் பார்ட்டிகளுக்கும் அதிகமாகக்கூட போவதுண்டு.
ஒரு நாள் ஒரு பார்டியில் ஒருவர் நண்பரைக்கேட்டார், இது எத்தனையாவது பார்டி?
குறிப்புப்புத்தகத்தில் வைத்த கண்ணை எடுக்காமல் பதில் வந்தது: ஆறு!
என்ன செய்யறீங்க? அடுத்து எங்கே போகணும்ன்னு பாத்துகிட்டு இருக்கீங்களா?
இல்ல. இப்ப எங்க இருக்கேன்னு பாத்துகிட்டு இருக்கேன்!

Thursday, August 20, 2015

கிறுக்கல்கள்! - 6


மாஸ்டர் வீட்டில் விருந்து நடைபெற்றது. முடிந்த பிறகு விருந்தினர் ஒருவர் சமையல் பாத்திரங்களை எல்லாம் தான் கழுவி வைப்பதாகச் சொன்னார்.

மாஸ்டர் கேட்டார்: அது உனக்கு தெரியுமா?

நான் நினைவு தெரிஞ்சது முதல் இதை செய்து கொண்டு இருக்கேன்.
ம்ம்ம்…. பாத்திரத்தை எல்லாம் சுத்தம் செய்து விடுவாய், தெரியும்; ஆனால் கழுவி வைக்க முடியுமா?

பின்னால் ஒரு நேரம் அவருடைய சீடர்கள் இது பற்றி கேட்ட போதுவிளக்கம்கொடுத்தார். பாத்திரங்களை கழுவி வைக்க இரண்டு வழிகள் இருக்கு. ஒண்ணு அதை எல்லாம் சுத்தம் செய்யறத்துக்காக கழுவுவது. இன்னொன்னு கழுவுவதற்காக கழுவுவது.

அப்போதும் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.


மேலும் சொன்னார்: முதல் செயல் இறந்து போன ஒன்று. ஏன் என்றால் உடம்பு கழுவுகிறது; மனதோ சுத்தம் செய்வதில் இருக்கிறது. இரண்டாவது உயிர்ப்புள்ளது. மனதும் உடம்பும் ஒரே செயலில் ஈடுபட்டு இருக்கிறது.

Wednesday, August 19, 2015

கிறுக்கல்கள்! - 5


அடுத்த நாள் குரு இன்னொரு கதையை சொன்னார்.

ஒரு திருடன் ஒரு கடையில் திருடப்போனான். பணப்பெட்டியின் கதவில் ஒரு நோட்டீஸ் தொங்கியது. “தயை செய்து கதவை உடைக்காதீர்கள். அது திறந்துதான் இருக்கிறது. கைப்பிடியை திருகவும்.”

கைப்பிடியை திருகியவுடன் அவன் மீது ஒரு மணல் மூட்டை விழுந்தது. விளக்குகள் அனைத்தும் எரிந்தன. அலாரம் அடிக்கத் தொடங்கியது. அக்கம் பக்கம் எல்லாரையும் எழுப்பிவிட்டுவிட்டது.

அடுத்த நாள் குரு அவனை சிறைச்சாலையில் பார்த்த போது மனக்கசப்புடன் இருந்தான். “இனிமே நா எப்படி ஒரு மனுஷனை நம்பறது?  யாரையும் நம்ப மாட்டேன். சுத்த அயோக்கிய பசங்க!”

Tuesday, August 18, 2015

கிறுக்கல்கள்! - 4


குரு சொன்னார்: நம் குறைகளை கண்டறிய நல்ல ஒரு வழி மற்றவர்களுக்கு நாம் எப்படி எரிச்சலூட்டுகிறோம் என்று பார்ப்பது.

வழக்கம் போல ஒரு கிறுக்கலான கதை சொன்னார்: ஒரு முறை என் மனைவி சமையலறையில் ஒரு சாக்லேட்  டப்பா வைத்திருந்தார். ஒரு மணி நேரம் சென்ற பின் அதை எடுத்த போது எடை குறைவாக இருந்தது. திறந்து பார்த்தால் சாக்லேட்டில் ஒரு வரிசையே காணோம்! அவை ஒரு பேப்பர் பேகில் ஒழுங்காக அடுக்கப்பட்டு புதிதாக வேலைக்கு சேர்ந்து இருந்த சமையல்காரரின் பை மீது இருந்தன! இதை பெரிசு படுத்த வேண்டாம் என்று என் மனைவி அவற்றை எடுத்து மீண்டும் டப்பாவில் வைத்து ஆசையை தூண்டாமல் இருக்க கப்போர்டில் கண்ணுக்கு தெரியாமல் வைத்து விட்டார்.
சமையல் காரி அன்றிரவே வேலையை விட்டு விலகுவதாக நோட்டீஸ் கொடுத்துவிட்டார்.
ஏன் என்று கேட்டேன்.
அவள் சொன்ன பதில்: என்னிடமிருந்து திருப்பித் திருடுபவர்களுக்கு நான் வேலை செய்ய மாட்டேன்!

Monday, August 17, 2015

கிறுக்கல்கள்! - 3


அந்த குரு விமர்சனம் செய்யத்தேவை இருக்கும் போது செய்யாமல் இருக்க மாட்டார்.

ஆனால் ஆச்சரியம் என்ன என்றால் யாரும் அவருடைய கடிந்துரைகளால் புண் பட மாட்டார்கள்! இதைப்பற்றி அவரை கேட்ட போது சொன்னார்: “மனிதர்கள் மலர் போல. மெதுவாய் விழும் பனித்துளிக்கு திறந்திருக்கும்; கடுமையாக பெய்யும் மழைக்கு  மூடி இருக்கும்!”

Friday, August 14, 2015

கிறுக்கல்கள்! -2


புத்த மடாலயத்துக்கு புதுசா வந்த சிஷ்யரைப்பாத்து வயசான சிஷ்யர் சொன்னார்: தோ பாரு! உனக்கு சரியான  மனநிலை இல்லைன்னா குரு சொல்லறது ஒண்ணுமே புரியாது!

சரி, சரியான மனநிலை என்கிறது என்ன?

ஒரு புது மொழியை கத்துக்கிறா மாதிரி! அவரோட பேச்சை கேட்கிறப்ப எதோ பரிச்சயமானது மாதிரி இருக்கும். ஏமாறக்கூடாது. அர்த்தம் வேறயா இருக்கும்!

Thursday, August 13, 2015

கிறுக்கல்கள்! -1


அந்தோனி தெ மெல்லொ நினைவிருக்கா? யெஸ்! குட்டிக்கதைகள். புது சீரிஸ் ஆரம்பிக்கிறது.

குருவை பார்த்துவிட்டு திரும்பிய ஒத்தர் சொன்னார்: இவரு பேசறதெல்லாம் கிறுக்குத்தனமா இருக்கு!
சிஷ்யர் ஒத்தர் சொன்னார். ஆமாம்! வார்த்தைகளில விவரிக்க முடியாத ஒண்ணைப்பத்தி சொல்லப்பாத்தா நீங்க சொல்ல்றது கூட கிறுக்குத்தனமா இருக்கும்!