Pages

Thursday, September 30, 2010

ராகம்:सुखानुशयी रागः ।।7।।

ஸுகா²நுஶயீ ராக³: || 7|| 

சுகத்தையும் அதை அடையும் சாதனத்தையும் அனுசரித்து உண்டாகிற சித்த விருத்தி ராகம் ஆகும். இது நல்லதாக- உதாரணமாக மோக்ஷத்தை அடைய வேண்டும் - என்றும் இருக்கலாம். அல்லது மலினமான விஷயங்களிலும் இருக்கலாம். ஒரு முறையோ சில முறையோ பல முறையோ அனுபவித்த சுகத்தின் நினவு வந்து, அது போன்ற சுகமும், அது ஏற்படும் சாதனமும் மீண்டும் வேண்டும் என தோன்றும். இது ஒருவனை அடிமை ஆக்கிவிடுகிறது. பின் இதை அடைய மனிதன் என்ன வேண்டுமானாலும் செய்ய தூண்டப்படுவான்.
பிறர்க்கு ஏற்படும் சுகத்தை தன் சுகமாக யார் கருதுகிறானோ அவனுக்கு ராகம் ஏற்படுவதில்லை; ஒழிந்துவிடுகிறது. இது விலகினால் சித்தமும் மழை பெய்து நின்றதும் தெளியும் நீர் போல தெளிவாகிவிடும்.

Wednesday, September 29, 2010

அஸ்மிதா:

दृग्दर्शनशक्त्योरेकात्मतेवास्मिता ।।6।।

த்³ரு«க்³ த³ர்ஶந ஶக்த்யோரேகாத்மதேவாஸ்மிதா || 6|| 
த்³ரு«க்³ த³ர்ஶந ஶக்த்யோ: ஏகாத்மதேவ அஸ்மிதா
பொருட்களை பார்க்கின்ற புருஷன், அதற்கு உதவுகின்ற தர்சன சக்தியான ஸத்வ குண மயமான புத்தி இவை ஒன்றான உருவமுள்ள தன்மையானதாக தோன்றுவது அஸ்மிதை என்ற க்லேசமாகும்.
ஆத்மாவின் சாயல் சுத்த சத்வ புத்தியில் பிரதிபலிக்கும், இந்த பிம்பமே பார்க்கிறவர். பார்க்கப்படுவன ப்ரக்ருதியில் இருந்து உண்டானவை. இவை அனாத்மா. புருஷனையும் பார்க்கும் சத்வ புத்தியில் உள்ள பிம்பத்தையும் ஒன்றாக நினைப்பது அஸ்மிதையாகும்.
இவை இரண்டும் வேறுபட்டவை என்ற ஞானமே விவேக க்யாதி.


Tuesday, September 28, 2010

அவித்தையின் சொரூபம்:
अनित्याशुचिदुःखानात्मसु नित्यशुचिसुखात्मख्यातिरविद्या ।।5।।

அநித்யாஶுசி து³:கா²நாத்மஸு நித்ய ஶுசி ஸுகா²த்மக்²யாதிரவித்³யா || 5|| 

அநித்தியமாகவும் அசுத்தமாகவும் துக்கமாகவும் அனாத்மாவாகவும் உள்ளவற்றில் நித்தியம், சுத்தம், சுகம், ஆத்மா ஆகியவற்றை காண்பதே அவித்யா.

இந்த உலகம் அநித்தியம். என்றோ ஒரு நாள் அழியும். தேவர்களாயினும் ஒரு நாள் புண்யங்களை அனுபவித்து தீர்த்தபின் மீண்டும் மனித ஜன்மம் எடுக்க வேண்டும். இப்படி எண்ணாமல் உலகம் என்றும் இருக்கும், நித்தியம் என்றும்; அல்லது யாகங்கள் செய்து தேவனானால் நித்தியமாக சுகமாக இருக்கலாம் என்று எண்ணியும் வருவது அவித்தை. நம் உடம்பையும் புலன்களையும்தான் ஆத்மா என்று எண்ணுகிறோம். இதுவும் அவித்தை காரணமாகவே.
இதே போல யாருக்கோ ஏற்படும் சுக துக்கங்களை நமதாக எண்னுகிறோம். கிரிக்கெட் மாட்ச் பார்க்கும்போது ஒரு அணி ஜெயித்தால் சந்தோஷப்படுகிறோம். வேறு அணி ஜெயித்தால் துக்கப்படுகிறோம். சினிமாவில் கதாநாயகி படும் கஷ்டங்களை நமதாக நினைத்து அழுகிறோம். வில்லனைப்பார்த்து கோபப்படுகிறோம். ஏன் வாழ்க்கையிலேயே நம் குடும்பத்தினர் சுக துக்கங்களை நமதாக எண்ணுகிறோம். இதுவும் அவித்தையே.

Monday, September 27, 2010

அவித்யாअनित्याशुचिदुःखानात्मसु नित्यशुचिसुखात्मख्यातिरविद्या ।।5।।

அநித்யாஶுசி து³​:கா²நாத்மஸு நித்ய ஶுசி ஸுகா²த்மக்²யாதிரவித்³யா || 5||

அநித்தியமாகவும் அசுத்தமாகவும் துக்கமாகவும் அனாத்மாவாகவும் உள்ளவற்றில் நித்தியம், சுத்தம், சுகம், ஆத்மா ஆகியவற்றை காண்பதே அவித்யா.

இந்த உலகம் அநித்தியம். என்றோ ஒரு நாள் அழியும். தேவர்களாயினும் ஒரு நாள் புண்யங்களை அனுபவித்து தீர்த்தபின் மீண்டும் மனித ஜன்மம் எடுக்க வேண்டும். இப்படி எண்ணாமல் உலகம் என்றும் இருக்கும், நித்தியம் என்றும்; அல்லது யாகங்கள் செய்து தேவனானால் நித்தியமாக சுகமாக இருக்கலாம் என்று எண்ணியும் வருவது அவித்தை. நம் உடம்பையும் புலன்களையும்தான் ஆத்மா என்று எண்ணுகிறோம். இதுவும் அவித்தை காரணமாகவே.

க்ரியா யோகத்தின் பலன்:
समाधिभावनार्थः क्लेशतनूकरणार्थश्च ।।2।।

ஸமாதி⁴ பா⁴வநார்த²: க்லேஶ தநூகரணார்த²ஶ்ச || 2||

கர்ம யோகமானது அவித்தை முதலான கிலேசங்களின் குறைத்தலை பலனாக உடையது. இது ஸமாதியின் உற்பத்தியையும் பலனாக கொண்டது.
கர்மம் செய்ய செய்ய க்லேசங்கள் (மனச்சலனங்கள்) குறையும். ஸமாதியில் ஈடுபட ஒரு ஈர்ப்பு உண்டாகிறது.

--
மன்னிக்க, முன்னமேயே வந்திருக்க வேண்டும். பப்ளிஷ் கொடுத்தது ட்ராப்ட் ஆக இருந்துவிட்டது.

Friday, September 24, 2010

க்லேசங்களின் குணம்:முந்தையது சின்னதாக போனதால் இந்த பதிவு கொஞ்சம் பெரியது. :-))

अविद्या क्षेत्रमुत्तरेषां प्रसुप्ततनुविच्छिन्नोदाराणाम् ।।4।।

அவித்³யா க்ஷேத்ரமுத்தரேஷாம்° ப்ரஸுப்ததநுவிச்சி²ந்நோதா³ராணாம் || 4|| 

ப்ரஸுப்தம், தனு, விச்சின்னம், உதாரம் என ஒவ்வொன்றிலும் 4 பிரிவுகளை உடைய அவித்யைக்கு அதன் மேல் உள்ள மற்ற அஸ்மிதா, ராகம், த்வேஷம், அபிநிவேஷம் ஆகியவற்றுக்கு அவித்யை உற்பத்தி ஸ்தானம் ஆகிறது.
அவித்யை முதல் க்லேசம். இதுவே பின் வரும் க்லேசங்களுக்கு மூலமாக இருக்கிறது. இதில் 4 பரிமாணங்கள் –அவஸ்தைகள்- உண்டு.


சில விஷயங்கள் கண் காது முதலிய புலன்களுக்கு பிடிபடாது. அப்படி ஒரு உருவத்துடன் உள்ளது   ப்ரஸுப்தாவஸ்தை.
அடுத்து சிலது புலன்களுக்கு பிடிபடும். ஆனாலும் ஒரு காரியத்தை செய்ய வேண்டிய காரணம் - முகாந்திரம் ஏதும் இல்லாததால் சும்மா இருக்கும். இந்து தனு அவஸ்தை.
ஆனால் அப்படி செய்ய விடாமல் ஏதோ பலமான தடை இருக்கிறதால் செயலில் இல்லை. இப்படிப்பட்டது விச்சேத அவஸ்தை.
புலன்களுக்கு பிடிபடும்; தான் தன் காரியத்தை நடத்த மத்த எதன் உதவியும் தேவையில்லை. அது தன் காரியத்தை தடை ஏதுமின்றி நடத்தும். இது உதார அவஸ்தை.
இந்த நான்கு பரிணாமங்களும் -அவஸ்தைகளும் - அவித்தை முதலான எல்லா க்லேசங்களுக்குமே உண்டு.
அவித்தை இல்லாமல் மற்ற க்லேசங்கள் உருவாக மாட்டா. அதனால்தான் அவித்தை க்ஷேத்திரம் அல்லது பிரசவ பூமி எனப்படும்.
ப்ரஸுப்தாவஸ்தையும் தனுவும் புலன்களுக்கு பிடிபடாதாகையால் ஸூக்ஷ்மமானவை. விச்சேதாவஸ்தாவும் உதாராவஸ்தாவும் வெளிப்படையாக ஸ்தூலமாக தெரியும்.

ப்ரக்ருதி லயம் அடைந்தவருக்கு எல்லா க்லேசங்களுமே ப்ரஸூப்தங்களாவே இருக்கும். அதாவது மறைந்து இருக்கும்; வெளிப்படாது.
யோகம் பயில்வோருக்கு க்லேசங்களை விரோதமாக பாவிப்பதால் இவை தனுவாக இருக்கும். அதாவது வெளிப்பட காரணம் வாய்பு இல்லாமல் சும்மாயிருக்கும்.
சாதாரணமாக க்லேசங்கள் விருத்தியாகி வலுப்பட்டு ப்ரஸுப்தா தனுவாகி, அது விச்சின்னமாகி பின் உதாரமும் ஆகும். அதாவது முழுமையாக வெளிப்படும். ஸ்தூலமாகி விட்ட அவஸ்தையை சுத்த சத்வகுணத்தில் பகவானின் த்யானத்தால் போக்கிக்கொள்ளலாம். வளர்ந்துவிட்ட இவற்றை சித்த நிரோதத்தால் போக்க முடியாது. ஸூக்ஷ்மமான அவஸ்தைகளை சித்த நிரோதத்தால் போக்கலாம்.
உதாரணமாக ராகத்தையும் (ஆசையையும்) அதன் விளைவான க்ரோதத்தையும் செயலுக்கு வந்த பின் பகவானை வேண்டியே போக்கிக்கொள்ள வேண்டும். இவை ஸூக்ஷ்மமாக இருந்து முளை விடும் காலத்துக்கு முன்பே சித்தத்தை கட்டுப்படுத்தி பயிற்சியால் போக்கடிக்கலாம்.

Thursday, September 23, 2010

க்லேசங்கள் யாவை?अविद्यास्मितारागद्वेषाभिनिवेशाः पञ्च क्लेशाः ।।3।।

அவித்³யாஸ்மிதாராக³த்³வேஷாபி⁴நிவேஶா: பஞ்ச க்லேஶா: || 3|| 

க்லேசங்கள் (மனச்சலனங்கள்) என்று சொன்னவை யாவை எனில் அவித்யை, அஸ்மிதை, ராகம், த்வேஷம், அபிநிவேஷம் ஆகிய ஐந்தாம்.

Tuesday, September 21, 2010

2. ஸாத⁴நா பாதம்तीयः साधनापादः
த்³விதீய: ஸாத⁴நாபாத³:

முதல் பாதத்தில் யோகத்துக்கு வைராக்கியமும் பயிற்சியும் தேவை என வலியுறுத்தப்பட்டது. இவை இரண்டும் உண்டாக சித்த சுத்தி அவசியம். இது கர்ம அனுஷ்டானத்தால் கிடைக்கிறது.

तपःस्वाध्यायेश्वरप्रणिधानानि क्रियायोगः ।।1।।
கர்ம விபாகம்:
தப: ஸ்வாத்⁴யாயேஶ்வர ப்ரணிதா⁴நாநி க்ரியா யோக³: || 1||
தப: ஸ்வாத்⁴யாய ஈஶ்வர ப்ரணிதா⁴நாநி க்ரியா யோக³:
 
தபஸும் ஸ்வாத்யாயமும் பலனை எதிர்பாராது செய்யப்பட்ட கர்மங்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பதும் கர்ம யோகமாகும்.

தபஸ் என்பது சிலவற்றை கைக்கொண்டு கடைப்பிடிப்பது. அவை; ப்ரம்ஹசர்யம் என்ற இந்திரிய நிக்கிரஹம்; குரு சேவை; உண்மையே பேசுதல்; வாயால் பேசாதிருத்தல்; எந்த வகையிலுமே தொடர்பு கொள்ளாதிருத்தல் (காஷ்ட மௌனம்); (தொடர்பிலிருந்து முழுதும் விலகுவதான) ஆசார மௌனம்; ப்ரம்ஹச்சாரி, க்ருஹஸ்தன், வானப்ப்ரஸ்தன் போன்ற தனக்குரிய ஆஸ்ரம தர்மங்களை கடைப்பிடித்தல்; குளிர்-சூடு மகிழ்ச்சி-துக்கம் போன்ற இரட்டைகளை பொறுத்தல்; மிதமான ஆகாரம் ஆகியவை. இங்கே தபஸ் என்பது உடலை ஒன்றும் கொடுக்காமல் காயப்போடுவது அல்ல. அப்படி இருப்போர் யோகம் பழகுவது கடினம்.
ஸ்வாத்யாயம் என்பது சாதாரணமாக வேதத்தை கற்றலைக் குறிக்குமானாலும் இங்கே ப்ரணவம் முதலான மந்திர ஜபங்களும் மோக்ஷத்துக்கானதை குரு மூலம் கற்றலையும் குறிக்கும்.
ஈஶ்வர ப்ரணிதானம் என்பது செய்யும் அனைத்து காரியங்களையும் பகவானுக்கு அர்ப்பணித்துவிட்டு புண்ணியத்துக்கான கர்மாவைக்கூட நாடி செய்யாதிருத்தல்.

Monday, September 20, 2010

அஸம்ப்ரக்ஞாத ஸமாதிतस्यापि निरोधे सर्वनिरोधान्निर्बीजः समाधिः ।।51।।

அஸம்ப்ரக்ஞாத ஸமாதி:

தஸ்யாபி நிரோதே⁴ ஸர்வநிரோதா⁴ந்நிர்பீ³ஜ: ஸமாதி⁴: || 51|| 

ஸம்ப்ரக்ஞாத ஸமாதியில் சம்ஸ்காரத்தினுடையதும் அதன் பிரக்ஞையின் உடையுதுமான நிரோதம் (தடை) உண்டான போது, எல்லாம் தடை செய்யப்பட்டதால் தன்னிலை மாறுவதற்கு ஏதுமில்லாத அஸம்ப்ரக்ஞாத ஸமாதி உண்டாகிறது.

யோக சாஸ்திரம் கேட்டலும், பொருளை மனனம் செய்வதும், புருஷனை மட்டும் த்யானம் செய்யும் பழக்கமான தர்மமேக ஸமாதியை உண்டாக்கும். பின் பர வைராக்கியம் என்ற பிரக்ஞையின் தெளிவு ஏற்பட்டு தர்மமேக ஸமாதியில் ருசி உண்டாகும். புருஷனை மட்டும் த்யானிக்க அதன் சாக்ஷாத்காரம் ஏற்படுகிறது; நிர் பீஜ யோகம் சித்திக்கிறது. [அதாவது சித்தம் முளை விடுவதில்லை.] இதுவே பழக, வேலையில்லாமல் சித்தம் அதன் காரணமான பிரக்ருதியில் ஒடுங்கிவிடும். செய்ய வேண்டிய காரியம் ஏதும் இருந்தால்தானே சித்தம் அதன் காரணத்தை விட்டு கிளம்பிப்போகும்? இப்படிப்பட்ட நிலை அடைந்த பின் செய்ய ஏதுமில்லை. யோகி புருஷனின் ஸ்வரூப மாத்திரத்தில் நிலை பெற்று முக்தனாகிறான்.

ஸமாதி பாதம் முடிந்தது.

Saturday, September 18, 2010

வ்யுத்தான சம்ஸ்காரத்துக்கு தடை..तज्जः संस्कारोऽन्यसंस्कारप्रतिबन्धी ।।50।।

தஜ்ஜ: ஸம்°ஸ்காரோ'ந்ய ஸம்°ஸ்கார ப்ரதிப³ந்தீ⁴ || 50||

தஜ்ஜ: ஸம்°ஸ்காரோ அந்ய ஸம்°ஸ்கார ப்ரதிப³ந்தீ⁴

மேற்கூறிய ருதம்பரா பிரக்ஞையால் உண்டான நிரோத சம்ஸ்காரமானது வேறு வ்யுத்தான சம்ஸ்காரத்துக்கு தடை செய்வதாக ஆகிறது.

வெளியில் உள்ள சப்தம் முதலான விஷயங்களையே சித்தம் பற்றி செல்கிறது. இது பல ஜன்ம பழக்கம் ஆகும். இது வ்யுத்தான சம்ஸ்காரம் எனப்படும். தத்துவ பழக்கம் பெற வைராக்கியம் முதலான சாதனங்கள் உள்ளன. இந்த தத்வ பழக்கம் இதை தடை செய்யும். ருதம்பரா பிரக்ஞா ஏற்படில் இது முழுதும் தடை செய்யப்பட்டதாகும். அவித்தை முதலிய க்லேசங்கள் குறைந்து சித்தம் விவேக க்யாதியை அடைந்து செய்ய வேண்டிய காரியம் ஏதுமில்லாததாய் காரணத்தில் லயம் அடைந்து விடும். இந்த நிலையில் யோகியின் சித்தம் தன் காரியம் என்று எதையும் செய்ய சக்தி இல்லாமல் ஆகிவிடுகிறது. இப்படி.....


Friday, September 17, 2010

ருதம்பரா அல்லது சத்தியமான பிரக்ஞை..श्रुतानुमानप्रज्ञाभ्यामन्यविषया विशेषार्थत्वात् ।।49।।

ஶ்ருதாநுமாந ப்ரஜ்ஞாப்⁴யா மந்யவிஷயா விஶேஷார்த²த்வாத் || 49||
ஶ்ருத அநுமாந ப்ரஜ்ஞாப்⁴யாம் அந்ய விஷயா விஶேஷார் த²த்வாத் 

சப்தத்தாலும் அனுமானத்தாலும் உண்டாகிற பிரக்ஞையை விட இது வேறானது. அது சாமான்யமானது. இந்த ருதம்பரா பிரக்ஞை அவற்றுக்கு எட்டாததை விஷயமாக உடையது.
ஞானம் பிரமாணங்களால் உண்டாகும். இவற்றில் சப்தமும், அனுமானமும் சாமான்ய ஞானத்தையே தரும். மலையில் புகை என்றால் அது மலையில் புகை இருக்கிறது என்ற சாமான்ய ஞானத்தையும், அங்கே ஏதோ எரிகிறது, அதனால் புகை வருகிறது என்ற சாமான்ய ஞானமும் கிடைக்கும். ஏன் புகை? எப்படிப்பட்ட நெருப்பு? எப்படி வந்தது போன்ற விசேஷ ஞானம் கிடைக்காது.

பிரத்யக்ஷம் என்பது இன்னொரு பிரமாணம். இது இரு வகை. சாமான்ய ப்ரத்யக்ஷம், யோக பயிற்சியால் உண்டாகும் ப்ரத்யக்ஷம்.

சாமான்ய ப்ரத்யக்ஷம் புலன்களால் ஏற்படுகிறது. இதன் வீச்சு குறைவானது. புலன்களில் குற்றம் இருந்தால் அது ஞானத்தை பொய்யாக்கி விடுகிறது. ஒரு புலன் அறிவதை மற்றொன்று அறிவதில்லை. அதனால் அப்படியே உண்மை ஞானம் கிடைத்தாலும் விசேஷமான ஞானம் ஒன்றும் முழுமையாக கிடைப்பதில்லை.

யோக ப்ரத்யக்ஷ ஞானம் அப்படி இல்லை. அது இந்திரியங்களை சார்ந்து இல்லை. ப்ரக்ருதி வரை உள்ள ஸூக்ஷ்ம வஸ்துக்களை க்ரஹிக்கும். புதையல் போன்ற மறைந்துள்ளவற்றையும் கிரஹிக்கும். வேறு தேசம், லோகம் இவற்றிலுள்ளதையும் கிரஹிக்கும். அகவே இந்த யோகஜ ப்ரத்யக்ஷ ஞானத்தை ருதம்பரா அல்லது சத்தியமான பிரக்ஞை என உபதேசிக்கிறார்.

இயற்கையில் சுத்த சத்வ புத்தி எல்லாவற்றையும் பிரகாசப்படுத்தக்கூடியது. ஆனால் தமோ குணத்தால் மறைக்கப்பட்டு இருப்பதால் அது இந்திரியங்கள் அறிவதை மட்டுமே பிரகாசப்படுத்துகிறது. யோகப்பயிற்சியால் தமோ குணம் விலக இந்திரியங்கள் துணை இல்லாமலே அனைத்தையும் யோகி அறிகிறான்.
இப்படி மேலான நிலைக்கு செல்லாமல் தாழ்ந்த நிலையிலேயே இருப்பவர்களை கண்டு ருதம்பரா பிரக்ஞன் சோகப்படுகிறான்.

Thursday, September 16, 2010

ருதம்பரா ..ऋतंभरा तत्र प्रज्ञा ।।48।।

ரு«தம்ப⁴ரா தத்ர ப்ரஜ்ஞா || 48||

சித்தத்தெளிவு ஏற்பட்ட போது உண்டாகும் அறிவு ருதம்பரா எனப்படும்.

இந்த நிர்விசார ஸமாதியில் சத்தியமான வஸ்துவின் தோற்றமே கிடைப்பதால் ருதம்பரா என்ற பெயர் இந்த பிரக்ஞைக்குப் பொருத்தம். இத்தகைய நிலை தர்மமேக ஸமாதிக்கு இட்டுச்செல்லும்.

Wednesday, September 15, 2010

நிர்விசார ஸமாதி...निर्विचारवैशारद्येऽध्यात्मप्रसादः ।।47।।

நிர்விசார வைஶாரத்³யே'த்⁴யாத்ம ப்ரஸாத³​: || 47||

நிர்விசார ஸமாதிக்கு ஆதிக்யம் உண்டாகும் போது கிலேச வாசனைகள் இல்லாத சித்தத்தில் தெளிவு ஏற்படுகிறது.
நிர்விசார ஸமாதியை பழக ரஜோ, தமோ குணங்கள் நீங்கி சத்வம் மேலிடும். அதனால் அவித்தை முதலான கிலேசங்களின் வாசனை நீங்கும், இப்படிப்பட்ட சித்தத்தில் அறிவு உண்டாகும். இந்த ஞானம் உண்டானவன் ஆன்மாவை எல்லாவற்றிலும் சிறந்ததாக கண்டு கொள்கிறான். அப்படி ஞானம் வராதவர்களைப் பார்த்து இவன் துக்கப்படுகிறான்.
இப்படிப்பட்ட நிர்விசார ஸமாதி சித்திக்கவே ஒவ்வொரு சாதகனும் முயற்சி செய்ய வேண்டும்.

Tuesday, September 14, 2010

ஸம்ப்ரக்ஞாத ஸமாதிகள்....ता एव सबीजः समाधिः ।।46।।

தா ஏவ ஸபீ³ஜ​: ஸமாதி⁴​: || 46||

முன் சொன்ன அனைத்தும் பந்தத்திற்கு சாதனமான க்ராஹ்யத்தை (பற்றை) உடைய ஸமாதி ஆகும்.
அதாவது அது ஸமாதி ஆனாலும் ஒரு விஷயத்தை பற்றி நிற்கிறது.
ஸவிதர்க்கமும் நிர்விதர்க்கமும் பருப்பொருளை பற்றி நிற்கிறது. ஸவிசாரமும் நிர்விசாரமும் ஸூக்ஷ்ம பொருளை பற்றி இருக்கின்றன. இவை நான்காலும் மோக்ஷம் கிடைக்காது. இவை நான்கும் ஸம்ப்ரக்ஞாத ஸமாதிகள் எனப்படும்.

41 – 45 சூத்திரங்களில் ஸமாதி வகைகள் விளக்கப்பட்டன. க்ரஹீத்ரு, க்ரஹணம். க்ராஹ்யம் – அதாவது பற்றுவோன், பற்று, பற்றப்பட்டது இவற்றை கொண்டு பிரிக்கப்பட்டது.

க்ராஹ்யத்தில் பற்றப்பட்டது ஸ்தூலமா இல்லை ஸூக்ஷ்மமா என்பதை வைத்து பிரிக்கப்பட்டது. ஸ்தூலத்தில் ஸவிதர்க்கம், நிர்விதர்க்கம் என இரண்டு வகை ஆயிற்று. ஸூக்ஷ்ம ஸமாதியில் ஸவிசாரம், நிர்விசாரம் என இரண்டு வகை ஆயிற்று. பற்றுதல், பற்றுவோன் என்பனவற்றை விஷயமாக கொண்டு சவிகல்பம், நிர்விகல்பம் என இரண்டு வகை ஆயிற்று.
மேலும் க்ரஹணத்தை மட்டும் கொண்ட ஸமாதியில் ஆனந்தத்துடன் – ஸானந்தம்; ஆநந்தம் மட்டும் (கேவல ஆநந்தம்) என இரண்டு வகை ஆயிற்று.

மூன்றாவதாக க்ரஹீத்ரு ஸமாதியில் அஸ்மிதை உடன் கூடியது, ஸாஸ்மிதை. அஸ்மிதை மட்டுமே கேவல அஸ்மிதை என இரண்டு வகை ஆயிற்று. சப்தம் ஆனது அர்த்தம், ஞானம் இவற்றுடன் கூடிய போது ஸவிகல்பம் என்றும், சப்தம் அர்த்தத்தை விட்டு ஞானத்துடன் மட்டும் கூடிய போது நிர்விகல்பம் என்றும் ஆயிற்று.

From samadi

Saturday, September 11, 2010

ஸூக்ஷ்மமானவை ...सूक्ष्मविषयत्वं चालिङ्गपर्यवसानम् ।।45।।

ஸூக்ஷ்ம விஷயத்வம்° சாலிங்க³பர்யவஸாநம் || 45||

மேற்கூறிய ஸமாதிக்கு ஸூக்ஷ்மமான விஷயத்தை உடைய தன்மையும் பிரதானத்தை முடிவாக உடையது.

ஸூக்ஷ்மமானவை யாவை?
பரமாணுக்கள் ஐந்து வகைப்படும். பஞ்ச தன் மாத்திரைகளில் ஒவ்வொரு தன் மாத்திரையும் அதனதன் பரமாணுவுக்கு முக்கிய காரணம் ஆகும். மற்றதன் பரமாணுவுக்கு அங்கமாகும். (வேதாந்தத்தில் பஞ்சீகரணம் பற்றி அறிந்தவருக்கு இது புரிய சுலபமாக இருக்கும். ஆனால் வேறானது.)

பரமாணுக்கள் ஐந்து.

௧.பார்த்திவம். ௨.ஆப்யம். ௩.தைஜசம் ௪.வாயவ்யம். ௫.நாபசம்
முக்கிய காரணங்கள்: ௧.பார்த்திவம். – கந்தம் (வாசனை). அங்கம்: ரசம் ரூபம் ஸ்பர்சம் சப்தம்
௨.ஆப்யம். - ரசம்.- அங்கம்: ரூபம் ஸ்பர்சம் சப்தம்
௩.தைஜசம் – ரூபம் அங்கம்: ஸ்பர்சம் சப்தம்
௪.வாயவ்யம்.- ஸ்பர்சம் அங்கம்: சப்தம்
௫.நாபசம் – சப்தம்.

இந்த பரமாணுக்கள் காரியங்கள். அதாவது (result) ரிசல்ட். இவற்றுக்கு காரணம் (cause) தன் மாத்திரைகள். பரமாணுக்கள் மிக சிறியன ஆயினும் ஸ்தூலமானவை.

தன் மாத்திரைகள் ஸூக்ஷ்ம மானவை. இவை எங்கிருந்து வந்தன? அஹம் தத்துவத்திலிருந்து வந்தன. அது தன் மாத்திரைகளை விட ஸூக்ஷ்மமானது. அஹம் மஹத் தத்துவத்தில் இருந்து வந்தது. மஹத் தத்துவம் பிரக்ருதியில் இருந்து உண்டானது. இந்த ப்ரக்ருதி பரம ஸூக்ஷ்மமானது.

பரமாணு முதல் ப்ரக்ருதி முடிய அனைத்தும் ஒன்றை விட ஒன்று ஸூக்ஷ்ம மானது. ஆகவே இங்கு உபதேசிக்கப்பட்ட ஸமாதி, ப்ரக்ருதி வரை உள்ள ஸூக்ஷ்ம வஸ்துக்களை விஷயமாக கொண்டது.

Friday, September 10, 2010

ஸ்தூல சமாசாரம்...एतयैव सविचारा निर्विचारा च सूक्ष्मविषया व्याख्याता ।।44।।

ஏதயைவ ஸவிசாரா நிர்விசாரா ச ஸூக்ஷ்ம விஷயா வ்யாக்²யாதா || 44||

முன் கூறப்பட்ட ஸ்தூல விஷயமுடைய ஸவிதர்க்க, நிர்விதர்க்க ஸமாதியை கொண்டே பரமாணு முதலிய ஸூக்ஷ்ம வஸ்துக்களை விஷயமாக உடைய ஸவிசாரம், நிர்விசாரம் என்று சொல்லப்படும் சமாபத்தி (ஸமாதி) தெளிவாக உபதேசிக்கப் பட்டதாகிறது.

ஸ்தூல சமாசாரம் எளிதாக புரிகிறது. ஒரு குடம் என்றால் அது ஸ்தூலமாக இருப்பதால் எளிதாக புரிகிறது. ஸூக்ஷ்ம வஸ்துக்கள் அப்படி புரிவதில்லை.
பெயர்களும் ரூபங்களும் (உருவங்களும்) நிரம்பியுள்ள இவ்வுலகத்தில் கீழ் மட்ட ஸவிசார, நிர்விசார ஸமாதிகளை புரிந்து கொள்வதே கடினம்.
ஸூக்ஷ்ம ஸமாதி ஸவிசாரம், நிர்விசாரம் என இரு வகைப்படும். இதை வகைப்படுத்த விஷயமாவது (parameter) பரமாணு மட்டுமில்லை; பஞ்ச தன் மாத்திரை முதல் ப்ரக்ருதி வரை உள்ள தத்துவங்களும் கூட. இவை ஸூக்ஷ்ம மானதால் ஸூக்ஷ்ம ஸமாதி என பெயர் வந்தது.

Thursday, September 9, 2010

サムスンサムスン

இது என்ன?
இது சர்வ சாதாரணமா இந்தியாவில புழங்கற சொல்!
ஆனால் இதை பார்க்கும்போது அது தெரியலை இல்லையா?
இதே போலத்தான் கோ என்ற வார்த்தையும். சாதாரணமா தமிழ் படிச்சு இருந்தாக்கூட யாரும் இதுக்கு பசுமாடு என்று பொருள்ன்னு சொல்லைன்னா ....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... ஆங்கிலம் எழுதி இருக்கிறதா நினைச்சு போ ன்னு அர்த்தம் பண்னிடுவாங்க. அப்ப இந்த சித்திரம் - ஆமாம், அதுக்குன்னு ஒரு பொருள் தெரியறவரை அது ஒரு சித்திரமாத்தான் இருக்கும்- என்னத்தை குறிக்குதுன்னு யாரும் சொல்லும் வரை நமக்கு அது ஒரு அறிவையும் உண்டு பண்ணாது. அதை தெரிஞ்சு கொண்டபின் அதை எப்போ பார்த்தாலும் சட்டுன்னு நமக்கு அது என்னனும் அது தொடர்பான விஷயங்களும் உடனே நினைவு வரும்.
ஆக ஒரு சித்திரத்தை வார்த்தையாக ஆக்குகிறது நம் அறிவுதான். அந்த வார்த்தையுடன் சில விஷயங்களை சம்பந்தப்படுத்தி புரிஞ்சு கொள்வதும் நம் அறிவுதான். பழகின பிறகு எல்லாத்தையுமே ஒண்ணாதான் புரிஞ்சுப்போம். பழகாத வரை எல்லாம் வேறு வேறாத்தான் தோணும். இதைத்தன் போன பதிவிலே சொன்னோம்.
அது சரி முதல் வரிலே எழுதி இருக்கிறது என்ன? ஹிஹிஹி! கண்டு பிடிங்க!

நிர்விதர்க்க ஸமாதிस्मृतिपरिशुद्धौ स्वरूपशून्येवार्थमात्रनिर्भासा निर्वितर्का ।।43।।

ஸ்ம்ரு«தி பரிஶுத்³தௌ⁴ ஸ்வரூப ஶூந்யே வார்த² மாத்ர நிர்பா⁴ஸா நிர்விதர்கா || 43||

சங்கேதம் (குறிப்பு) என்ற சக்தி-ஞானம் விலகியபோது ஸமாதி பிரக்ஞையானது தனக்குரிய க்ராஹகத்வம் என்ற பிரக்ஞா ரூபத்தால் இல்லாதது போல ஆகி, அபேதமற்ற பசு முதலிய க்ராஹ்யத்தோடு (அர்த்தத்தோடு) மட்டும் பிரகாசிக்கின்ற ஸமாதியானது நிர்விதர்க்க ஸமாதி எனப்படுகிறது.
எளிமையாக சொல்ல: நினைப்பில் சுத்தி ஏற்பட்டு சுய ரூபத்தில் உள்ளபோது வேறுபாடில்லாமல் பொருள் மட்டுமே உணரப்படும்போது அது நிர்விதர்க்கம் ஆகும்.
ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் இறைவன் ஒருவித குறிப்பை உலகை படைக்கும்போதே ஏற்படுத்தி உள்ளார். சப்தம், பொருள், அறிவு மூன்றும் வேறானாலும் அவற்றை ஒன்றாக அறிவதற்கு சங்கேதம் என்ற சக்தி காரணமாகும். இது இல்லாதபோது பொருள் மட்டுமே தோற்றத்தை அடைந்து நிற்கும். இந்த ஸமாதி நிர்விதர்க்க ஸமாதி. (இந்த சங்கேதம் இருக்கும்போது அது ஸவிதர்க்க சமாதி; நேற்று பார்த்தோம் இல்லையா?)

மேற்கண்ட இரண்டும் ஸ்தூல விஷயமான ஸமாதியை விளக்குகின்றன.

Wednesday, September 8, 2010

ஸவிதர்க்க ஸமாதி.तत्र शब्दार्थज्ञानविकल्पैः संकीर्णा सवितर्का समापत्तिः ।।42।।

தத்ர ஶப்³தா³ர்த²ஜ்ஞாந விகல்பை​: ஸம்°கீர்ணா ஸவிதர்கா ஸமாபத்தி​: || 42||

முன் சொல்லிய ஸமாதிகளுள் சப்தம், அர்த்தம், அர்த்தத்தைப்பற்றிய ஞானம் இவற்றின் பேதம் தெரியாமல் இருக்கும் நிலைக்கு ஒப்பான சாக்ஷாத்காரம் ஸவிதர்க்கம் எனப்படும்.

கோ என்ற சம்ஸ்க்ருத சப்தம் ஒரு சொல். அதற்கு பசு என்பது பொருள். கோ என்று கேட்கும் போது அது நம் புத்தியில் ஒரு ஞானத்தை உண்டாக்குகிறது. ஒரு சொல்லின் சப்தம், பொருள், அறிவு மூன்றும் வேறானாலும் அவற்றை ஒன்றாக சம்பந்தப்படுத்தி அறிவது விகல்ப ஞானம். இதற்கு ஒப்பானதே ஸவிதர்க்க ஸமாதி. இதில் சப்தம், பொருள், ஞானம் மூன்றும் ஒன்றாக கலந்ததாகவே கொள்ளப்படும்.

Tuesday, September 7, 2010

சாக்ஷாத்காரத்தின் ரூபங்கள்क्षीणवृत्तेभिजातस्येव मणेग्रहीतृग्रहणग्राह्येषु तत्स्थतदञ्जनता समापत्तिः ।।41।।

க்ஷீண வ்ரு«த்தேபி⁴ ஜாதஸ்யேவ மணே க்³ரஹீத்ரு« க்³ரஹண க்³ராஹ்யேஷு தத் ஸ்த²த த³ஞ்ஜநதா ஸமாபத்தி​: || 41||

க்ஷீணமடைந்த (நலிவுற்ற) ராஜஸ, தாமஸ வ்ருத்திகளை உடைய சித்தத்திற்கு இயற்கையில் சுத்தமான மணி போன்ற கிரகிப்பவன் – ஆத்மா- விடத்திலும், கிரகிக்கும் சாதனமான இந்திரியங்களிடத்திலும், கிரகிக்கப்படும் விஷயங்களிடத்திலும் சாக்ஷாத்காரம் உண்டாகிறது.

இதை ஸமாபத்தி என்றும் சொல்வர்.

பச்சை புல்வெளியில் லயித்த சித்தத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் இருந்தபோது ஒரு மாடு அதன் மீது ஓடியதால் அவர் அலறினார். அவர் முதுகில் குளம்புகளின் சுவடுகள் உண்டானதாக கதை. இது புல்வெளியுடன் ஏற்பட்ட ஏகாக்ரத்தையால் உண்டானது. இது கிரகிக்கப்பட்ட விஷயத்தில் உண்டானதால் கிராஹ்ய ஸமாதி.
இது போல இந்திரியங்கள் (10) மனஸ், புத்தி, அகங்காரம் என 13 வித அஹம் தத்துவங்களுடன் ஏகாக்ரம் (ஒன்றுதல்) ஏற்படலாம். விஷயத்தை கிரகிக்கும் சாதனத்தில் ஸமாதி என்பதால் இதை கிரஹண ஸமாதி என்பர்.
இதையும் தாண்டியது ஆன்மா. இதில் ஏற்படும் ஸமாதி கிரஹீத்ரு ஸமாதி ஆகும்.
சாக்ஷாத்காரம் இப்படிப்பட்ட ரூபங்கள் உள்ளது.


Monday, September 6, 2010

சித்தம் நிலைபெற்றதற்கு சோதனை...34- 38 சூத்திரங்கள் உடலை ஒட்டிய விஷயங்கள் சம்பந்தமான உபாயங்களை கூறின. (ஆந்தரம்). இது உடலுக்கு வெளியில் உள்ள விஷயத்தை உபாயமாக கூறுகிறது. (பாஹ்யம்).

परमाणुपरममहत्त्वान्तोऽस्य वशीकारः ।।40।।

பரமாணு பரம மஹத்த்வாந்தோ'ஸ்ய வஶீகார​: || 40||

ஸூக்ஷ்ம விஷயத்தில் பிரவேசித்த இந்த சித்தத்திற்கு பரமாணு முதல் பரம மஹத்தானதை முடிவாக கொண்ட எல்லா விஷயங்களிலும் தடங்கல் இல்லாமை ஏற்படுகிறது.
இதுவே சித்தம் நிலைபெற்றதற்கு சோதனை.

Friday, September 3, 2010

சித்தம் நிலைக்க...-2यथाभिमतधयानाद्वा ।।39।।
 யதா²பி⁴ மதத⁴யாநாத்³வா || 39|| 

தனக்கு பிடித்த ரூபத்தை த்யானம் செய்வதால் சித்தம் நிலைபெறும்.
34- 38 சூத்திரங்கள் உடலை ஒட்டிய விஷயங்கள் சம்பந்தமான உபாயங்களை கூறின. (ஆந்தரம்) இது உடலுக்கு வெளியில் உள்ள விஷயத்தை உபாயமாக கூறுகிறது. (பாஹ்யம்).

Thursday, September 2, 2010

சித்தம் நிலைக்க...
स्वप्ननिद्राज्ञानालम्बनं वा ।।38।।
 ஸ்வப்ந நித்³ராஜ்ஞாநாலம்ப³நம்° வா || 38|| 

ஸ்வப்னத்திலும் சுசுப்தியிலும் அறியப்பட்ட வஸ்துவை த்யானம் செய்கிற சித்தம் நிலைத்து நிற்கிறது.
பகவானை ஆராதனை செய்வதாக கனவு காண்கிறோம். அப்படியே விழித்து அந்த காட்சியை மனதில் இருத்தினால் சித்தம் நிலைபெறும். அது போல் சுசுப்தியில் ஏற்படும் சுகானுபவத்தை மனதில் இருத்தினாலும் சித்தம் நிலைபெறும்.

Wednesday, September 1, 2010

விலகிய துக்கம்विशोका वा ज्योतिष्मति ।।36।।
 விஶோகா வா ஜ்யோதிஷ்மதி || 36||

துக்கம் ரஜோ குணத்தின் பரிணாமம். அந்த துக்கம் விலகிய அதிக சாத்விக பிரகாசம் உள்ளதாக இருக்கிற பிரவ்ருத்தி மனதை நிலை பெறச்செய்கிறது.

  वीतरागविषयं वा चित्तम् ।।37।।
 வீதராக³விஷயம்° வா சித்தம் || 37||

விலகிய ஆசையை உடையவர்களின் சித்தத்தை விஷயமாக உடைய சித்தம் நிலை பெறுகிறது.
அதாவது யாருடைய சித்தம் ஆசையை விட்டுவிட்டதோ, அவர்களை இடைவிடாமல் த்யானிக்கிற சித்தம் நிலைபெறும். வியாசர், சுகர் முதலானோர் அப்படிப்பட்ட சித்தத்தை உடையவர்கள்.