Pages

Wednesday, February 29, 2012

அண்ணா -5

 
கடும் விரதங்கள் இருந்துவந்த சிவிஆர் ஒரு நாள் குடலில் துளை விழுந்து சிகிச்சை பலனில்லாமல் மறைந்தார். வருஷக்கணக்கில் வெறும் காபி மட்டும் அருந்தி வந்த அவரது அன்னையும் மறைந்தார். (மிகக் கொஞ்சமாக சாப்பிடுவார். அவரது வயிற்றில் பல புண்கள் வந்து ஆறி வயிறே சுருங்கிப்போயிற்று)
தந்தை சம்பாதித்து வைத்த வீட்டை விற்று, சகோதரியின் பங்கு போக மீதி வேத பாடசாலைக்கும் இன்னும் சில விஷயங்களுக்கும் சமர்பித்துவிட்டார். (இதைப்போலவேதான் ஆர் எழுதிய வைத்த உயிலுக்கு வேலை இல்லாமல் போனது. இருந்ததை எல்லாம் டிஸ்போஸ் பண்ணிவிட்டதால் உயிலை ஒரு வருஷம் முன் கிழித்துப்போட்டுவிட்டாராம்!) இதன் பின் பல முறை இடம் பெயர வேண்டி இருந்தது. எங்கும் நிலை கொள்ளவில்லை. கடைசியில் லக்ஷ்மி காலனியில் அவரது சகோதரியின் கணவர் கட்டிய அபார்ட்மென்ட் குடியிருப்பிலேயே ஒரு அபார்ட்மென்ட் இல் செட்டில் ஆனார்.
விசிறி சாமியார் என்கிற யோகி ராம் சுரத் குமார் அவர்களின் தொடர்பும் ஏற்பட்டது. அவரைப்பற்றிய புத்தகங்களும் வெளிவந்தன. இப்போது வீடு வீடாக மாறிக்கொண்டு அவஸ்தைப்பட்டுக்கொண்டு இருந்த அண்ணாவுக்கு அவர் ஒரு உதவியாளரை அனுப்பினார். அந்த ப்ரம்மசாரியை கூப்பிட்டு பணித்த போது அவர் நான் இங்கேதான் சேவை செய்ய வந்திருக்கிறேன் என்றார். அதற்கு ராம்சுரத் குமார் "செர்விங் ரா.கணபதி ஈஸ் செர்விங் தெ யூனிவெர்ஸ்" என்று சொல்லி அனுப்பினார்!
சங்கீத ஞானம் மிக்கவர். முன்பெல்லாம் அவ்வப்போது ஏதேனும் ஒரு பாட்டை ஹம் செய்து கொண்டு இருப்பதை கேட்டு இருக்கிறோம். சில க்ருதிகளும் உருவாக்கி இருக்கிறார் என்று சமீபத்தில் தெரிய வந்தது! பக்த மீரா குறித்த தொடரில் பல பாடல்களை தமிழாக்கம் செய்திருக்கிறார்.
பகவான் ரமணரைப்பற்றியும் பல சுவையான விஷயங்கள் எழுதி இருக்கிறார். கல்கி, அமுதசுரபி போன்ற இதழ்களின் தீபாவளி மலர்களில் இவரது கட்டுரை கட்டாயம் இருக்கும் என்ற காலகட்டம் பல வருஷங்கள் இருந்தது.
கடைசியாக வெளி வந்தது மஹா பெரியவாள் ஓப்பனாக எல்லாருக்கும் செய்த மந்திர உபதேச கட்டுரைதான் என்று நினைக்கிறேன்.
என் கதையையும் இங்கே சொல்ல வேண்டி இருக்கிறது!

Monday, February 27, 2012

அண்ணா- 4


இவரது அப்பா சி.விஆர் ஆசார சீலர். ரெவின்யூவில் இருந்து ரிடையர் ஆகிய பின் சிகை வைத்துக்கொண்டு தினசரி சந்த்யாவந்தனம், பூஜை, நிறைய காயத்ரி ஜபம் என்று இருந்தவர். திடீரென்று ஒரு நாள் ஒரு சிற்பி வந்து 18 கை துர்கை சிலையை கொடுத்து போனார். ஏதோ உந்துதலில் அதை செய்ததாகவும், அதை செய்த பின் துர்கை கனவில் வந்து இன்ன ஊரில் இன்ன இடத்தில் இதை சேர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் அது இந்த இடம்தான் என்று கண்டு கொண்டு சேர்ப்பிக்க வந்ததாகவும் சொல்லி சிலையை கொடுத்து போனார்.

எனக்குத்தெரிந்து சிவிஆர் அம்பத்தூரில் இருந்தார். தோட்டம் போட்டு பூச்செடிகள் வளர்த்து தினசரி பூக்களை கொய்து மணிக்கணக்கில் பூஜை செய்வார். (ஏனோ என் மீது ஒரு அபிமானம். மெடிக்கல் காலேஜ் சீட் எனக்கு கிடைக்க இவர் காயத்ரி ஜபம் செய்தாராம். கிடைத்து விட்டது. இது பல வருஷங்கள் சென்று என் பெரியப்பா சொல்லித்தான் தெரியும்.) இவருக்குப்பின்னால் பூஜை செய்ய அவரது சகோதரனிடம் கொடுத்துவிட்டார். அண்ணா நைஷ்டிக பிரம்மசாரியாக இருந்ததால் அவரிடம் கொடுக்கவில்லை.

திடீரென்று புட்டபர்த்தி பாபாவிடம் அண்ணாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. காஞ்சீபுரம் அடிக்கடி போய் கொண்டு இருந்தவர் பாபாவை தேடி போக ஆரம்பித்தார். இது அவரது நண்பர்கள் பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் அவர் அசரவில்லை. பலரும் அத்ருப்தியை வெளிப்படுத்தியதால் பெரியவாளிடமே நேரடியாக இது தப்பா என்று கேட்டுவிட்டார். பெரியவாள் தவறில்லை என்று சர்டிபிகேட் கொடுக்க இவருடன் அபிப்ராய பேதம் கொண்டவர்கள் மௌனமாயினர்! இதை தொடர்ந்து ஸ்வாமி போன்ற படைப்புகள் வரலாயின. தொடர்ந்து உறவினர் பலரும் கூட பாபா பக்தர்கள் ஆயினர். (என்னைத்தவிர்த்து!) அண்ணாவின் வீட்டிலும் விபூதி கொட்டுவது, மாலை சுற்றுவது என்று வினோதங்கள் நிகழலாயின!
 

Friday, February 24, 2012

அண்ணா -3சதாசிவம் -எம்.எஸ் தம்பதியினரின் ஆதரவு கிடைத்தது.
எம்.எஸ் சம்ஸ்க்ருத பாடல்களையோ அல்லது ஸ்லோகங்களையோ பாடும் முன் இவரிடம் பாடிக்காட்டி உச்சரிப்பை சீர் செய்து கொள்ளுவார். இவருக்குமே சங்கீத ஞானம் நிறையவே உண்டு.
கல்கியில் வேலை பார்த்தார். பல தொடர்கள் பலத்த வரவேற்பை பெற்றன. காற்றினிலே வரும் கீதம் போன்ற தொடர்கள் நான் பள்ளிசிறுவனாக இருந்த போது வந்துக்கொண்டு இருந்தது நினைவிருக்கிறது. எல்லோரும் வியாழக்கிழமைக்காக காத்திருந்து விரும்பிப்படிப்போம். என்னமா எழுதறாண்டா இந்த கணபதி! ஒண்ணுமே புரியலை என்பார் என் எளிய உறவினர் ஒருவர்!

அருள் வாக்கு என்ற பெயரில் மஹா பெரியவா வின் சொற்கள் கல்கியில் இடம் பெற்றன. பின்னால் இவையும் இன்னும் பல விஷயங்களும் புத்தக வடிவாயின. தெய்வத்தின் குரல் என்ற பெயரில் இந்த தொடர் வெளியீடுகள் பலத்தை வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தின.

தெய்வத்தின் குரல் ஒரு ஆச்சரியமான கம்பைலேஷன். பிள்ளையாரைப்பற்றி எழுதுகிறார் என்றால் ஒரு கட்டுரையில் ஒரு கால கட்டத்தில் பெரியவாள் சொன்ன விஷயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. முதல் சில வரிகள் 1948, அடுத்த சில வரிகள் 1954 இல் உபன்யாசத்தில் சொன்னது, அடுத்து சில வரிகள் 1935 இல் எங்கோ சொன்னது என்று இருக்கும். ஆனால் எல்லாமே ஒன்றாக கோர்ந்து சரியாக விஷயத்தை சொல்லி வரும்.  

இதைப்பற்றி அவரிடம் கேட்ட போது அவர் சொன்னது: “ அதை நான் எழுதலைடா. உட்கார்ந்து எழுத ஆரம்பித்தால் அப்படியே தாரையாக வரும். எழுதிகொண்டே போவேன். சட் என்று நின்று போனால் அவ்வளவுதான். ஒண்ணுமே ஓடாது. இதை அதை படித்துக்கொண்டு இருப்பேன். ரெபரன்ஸ் பார்த்துக்கொண்டிருப்பேன். யார்கிட்டேயாவது போன் பண்ணி விசாரிச்சிண்டு இருப்பேன். என்ன பண்ணினாலும் திருப்பி அதுவா வரும் போதுதான் வரும். எழுதியதுதான் இந்த கை. உண்மையில் எழுதியது பெரியவாதான்.”

அண்ணா -2


மஹா பெரியவாளுடன் இவரது தொடர்பும் அப்படித்தான். அந்த கதையை இவர் எழுதி இருப்பதை படிக்க வேண்டும்! சன்னியாசியாம், மடமாம், எல்லாம் சும்மா என்ற ரீதியில் எண்ண ஓட்டத்துடன் பெற்றோர் வற்புறுத்தலுக்காக இவரும் போனார். எல்லோரும் வரிசையில் நின்று தர்சனம் செய்து நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு இருந்தனர். வரிசை பாட்டுக்கு நகர்ந்து கொண்டிருக்க பெரியவாளின் பார்வையோ கணபதி மேலேயே இருந்தது! இவர்கள் முறை வந்த போது இவரது தந்தை கொண்டு போயிருந்த பொருளை வினயத்துடன் சமர்ப்பித்தார். தம்பதிகள் வணங்கி ஆசீர்வாதம் பெற்றனர். குங்கும பிரசாதமும் பெற்றனர். ஆனால் பெரியவா பார்வையோ இவரைவிட்டு அகலவில்லை. பெற்றோர் செய்தது போலவே இவரும் நமஸ்காரம் செய்துவிட்டு வந்துவிட்டார். கூடியிருந்த எல்லாரும் யார் நீங்க? இந்த பையன் யார்! ஏன் பெரியவா இபப்டி இவனையே பார்த்துக்கொண்டிருந்தார் என்று ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டி இருந்தனர்.
இவருக்கு அப்போது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இரண்டு நாட்களில் ஏன் என்று புரியாமலே அவர் நினைவாகவே இருக்க ஆரம்பித்தார். அவரில்லாமல் தான் இல்லை என்ற நிலையே வந்துவிட்டது. பின் காலத்தில் பெரியவாளுடன் பல மணி நேரம் விஸ்தாரமாகவும் அந்தரங்கமாகவும் பேசும் பாக்கியமும் ஏற்பட்டது

சகஜமாக பேச்சு வார்தை நடந்ததுக்கு ஒரு சாம்பிள்:
பெரியவா: எல்லாரும் என்னை பெரியவா பெரியவா ன்னு சொல்லறா. ஏன்? ஒரு வேளை பெரிய வாய் என்கறது பெரியவா ஆயிடுத்து போல இருக்கு. 
ஸ்ரீ க: நிஜம்தான் போல இருக்கு
பெரியவா: உனக்கு பெரியவாயா இருக்கும் போலிருக்கே! எப்படி?
ஸ்ரீ க: நீங்க.... மஹா வாக்கியங்களை உபதேசம் செய்யற வாய் அதனாலே பெரிய வாய்தானே?
பெரியவா: உனக்கு பெரிய வாய்தான்டா!
சற்று நேரம் கழித்து: பின்ன ஏன் பெரிய வாள் ன்னும் பலர் சொல்லறா!
ஸ்ரீ க: நீங்க பெரிய வாளும்தான்! எங்களோட காமம் க்ரோதம் ன்னு எல்லாத்தையும் அறுத்து எறியறதால....

மஹா பெரியவாள் ஆதி சங்கரரின் வாழ்கை சரிதத்தை எழுதும்படி பணித்தார். “எனக்கு ஒண்னும் தெரியாதே! எப்படி எழுதுவேன்?” என்றார்.
"அம்பாளை நினைச்சு கொண்டு எழுத ஆரம்பி; அம்பாள் பேனாவில் மசி ஊற்றுவா. அது தானா எழுதும்!” என்றார் மஹா பெரியவா. இப்படித்தான் 'ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர' எழுதலாயிற்று.

Wednesday, February 22, 2012

அண்ணாஅண்ணா
காஞ்சி மஹா ஸ்வாமிகளின் பல உபதேசங்களை எழுத்து வடிவில் கொண்டு வந்து மகத்தான சேவையை செய்த ஸ்ரீராகணபதி இரு தினங்களுக்கு முன் உடலைவிட்டுவிட்டார்பல வருஷங்களாகவே பெரும்பாலும் படுக்கையில் கழிக்க வேண்டிய நிலையில் இருந்த அவர் சமீபகாலமாக உணவு உட்கொள்வதை குறைத்துக்கொண்டே வந்தார்சுமார் இரு வாரங்களாக உணவு எதுவுமே எடுத்துக்கொள்ளவில்லைஎந்த மருத்துவ சிகிச்சையையும் பலமாக மறுத்தார்குறிப்பாக ஐவி வழியாக க்ளூக்கோஸ்சலைன் ஏற்ற வேண்டாம் என்று சைகையில் சொன்னார்.
 சிவராத்திரி மாலை டாய்லெட் போய் வந்து எல்லா ஜன்னல் கதவுகளையும் திறந்து வைக்கச்சொன்னார்வழக்கம் போல படுத்தவாறே ஜபங்கள் ஓடிக்கொண்டு இருந்தனஅவரது தமக்கைஇது வரை அவருக்கு சேவை செய்து வந்த தொண்டர்கள் ஆகியோர் அறையில் குழுமி இருந்தனர்சுமார் மாலை 7-25 க்கு கண்களை திறந்து அறை சுவற்றில் இருந்த படங்களை தலையை திருப்பி வரிசையாக பார்த்துக்கொண்டு வந்தார்பகவான் ரமணரின் படத்தில் ஆரம்பித்து ஷீரடி சத்ய பாபாராம் சுரத் குமார்புட்டபர்த்தி சாய் பாபா போன்றோர் படங்கள்வகை வகையாக அம்பாள் படங்கள் எல்லாவற்றிலும் அவரது பார்வை சற்று சற்று நிலைத்ததுபின் அதே வரிசையில் பின் திரும்பி எல்லாப் படங்களையும் பார்த்தார்பகவான் ரமணரின் படத்தில் பார்வை நிலைத்ததுபின் கண்களை மூடிக்கொண்டார்அமைதியாக உயிர் பிரிந்ததுபிள்ளையார் சதுர்த்தி அன்று பிறந்தவர் சிவராத்ரி அன்று தன் உலக பயணத்தை முடித்துக்கொண்டார்.
அண்ணா என்று அன்புடன் பலராலும் அழைக்கப்பட்ட ராகணபதி என்ற தொண்டனை மஹா பெரியவாள் அழைத்துக் கொண்டார்.
ராம க்ருஷ்ண மடத்தை சேர்ந்த 'அண்ணாவிற்கு பின் அண்ணா என்றால் பலரும் இவரையே குறிப்பதாக பொருள் கொள்வர்நடுவில் ஒரு முறை இவரை அத்தான் என்ற உறவு முறையில் விளித்து கடிதம் எழுதிய போது 'தொண்டுக்கிழம் முதல் குஞ்சு குளுவான் வரை எல்லாருக்கும் நான் அண்ணாதான்அப்படியே எழுதுஎன்று பதில் வந்தது!
இவரது தந்தையாருக்கு சொந்த ஊர் சிதம்பரம்பெயர் சி.விராமசந்திரன்இவரது தாய் கடலூர்ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி. (எனக்கு சொந்த அத்தைபலரும் இவரை மஹா ஒல்லியான எலும்பும் தோலுமான உருவத்தையே பார்த்திருக்கிறார்கள்ஆனால் சின்ன வயதில் "குண்டு குஸ்க்என்று இருந்த குழந்தை!
இன்டர் படித்துக்கொண்டு இருந்த போது காசநோய் தாக்கியதுஅப்போது குலைந்து போன உடல்நலம் திரும்பி வரவே இல்லை.
பிஏ லிட்ரேசர் முடித்தார்இதற்குள் வட பழனி ஆண்டவன் இவரை ஆட்கொண்டு விட்டான்கோவிலுக்கு போவதில் ஒரு ஈர்ப்பும் இல்லாத இவரை பெற்றோர் வற்புறுத்தி வட பழனி கோவிலுக்கு அழைத்துப்போக தரிசன மாத்திரத்தில் உள்ளம் துள்ள அப்படியே ஆட்கொள்ளப்பட்டார்.
மெய்ல் பத்திரிகையில் ரிப்போர்டராக பணியாற்றி இருக்கிறார்மாநகராட்சி தலைமைக்கு தேர்தல் நடந்து கொண்டிருந்ததுநிருபர்கள் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள குழுமி இருக்கிறார்கள்சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் ரிசல்ட் வந்ததால் மறு எண்ணிக்கை கேட்கப்பட்டு அதை ஏற்று மறு எண்ணிக்கையும் துவங்கியதுஇவருக்கு ஏற்கெனெவே மூச்சிரைப்பு (ஆஸ்த்மா என்று குறிப்பிட்டு இருக்கிறார்.) கொஞ்சம் தாக்குப்பிடித்து ரிசல்ட் வந்ததும் ரிபோர்ட் பண்ணிவிட்டு வீட்டுக்குப்போக உத்தேசித்து இருந்தவர் மறு எண்ணிக்கை என்றதும் ஆயாசப்பட்டுப்போனார்எப்படி வேண்டுமானாலும் போகட்டும்இனிமேல் தாங்காது என்று வடபழனி முருகா பார்த்துக்கொள் என்று வேண்டியபடி வீட்டுக்குத்திரும்பினார்பால் சாதம் கொஞ்சம் சூடாக சாப்பிட்டு படுத்து உறங்கி விட்டார்காலை எழுந்த பின்னரே இரவு செய்த காரியத்தின் முழு தாக்கம் உணர முடிந்ததுஎல்லாரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் தேர்தல் ரிசல்டை கொடுக்காமல் போய்விட்டோமேநேராக ப்ரஸுக்கு போனார்.
"தேர்தல் ரிசல்ட்..”
அது நேத்தே வந்தாச்சே சார்ப்ரிண்ட்ல ஏத்தியாச்சு!”
ஓஹோஎதோ நியூஸ் ஏஜென்சி ரிபோர்ட்டாக இருக்கும்.
"ஏஜென்சி ரிபோர்ட்டா?”
ப்ரூபை பார்த்து விட்டுஇல்லையே சார்நம்ம ஸ்டாஃப் ரிபோர்ட்தான் என்றார் ப்ரஸ் ஆசாமி. "அடநியூஸை யார் பைல் செய்ததுநியூஸ் ரிப்போர்ட்டை பார்த்தால் தெரிந்துவிடும்எப்படியும் நாம் நம் வேலையை செய்யாததற்கு பாட்டு வாங்க வேண்டும்என்று நினைத்தவாரே அலுவலகத்துக்குள் நுழைந்தார்.
கண்ணில் பட்ட நபர் "ஏன் சார்அவ்வளவு லேட்டா வேலை செய்திருக்கீங்கஆஃப் எடுத்துக்கறதுதானே?” என்று கேட்டவாரே போனார்.
லேட்டா வேலைச் செய்தேனாஒன்றும் புரியவில்லை.
அடுத்து பார்த்தவர் இரவுப் பணி ஆசிரியர். "ஏன் சார்நேத்து உங்களுக்கு அந்த நேரத்தில் டாக்ஸி கிடைத்ததாப்ரஸுக்கு செய்தியை அனுப்பிவிட்டு ஆபீஸ் கார் கூப்பிட்டு உங்களை கொண்டு விடச் சொல்லலாம்ன்னு பாத்தா அதுக்குள்ள போய்விட்டிங்களே?” என்றார்பின்னாலேயே "களைப்பா இருக்குமே ஆஃப் எடுத்துக்கொள்ளுங்களேன்என்றார். "ஆமாம்அப்படி சொல்லிவிட்டு போகத்தான் வந்தேன்!” என்று ஏதோ சொல்லிவிட்டுவட பழனி ஆண்டவனே காப்பாத்தினாய்ந்யூஸ் ரிப்போர்டில் யார் பெயர் இருக்கும் என்று இனி பார்க்க வேண்டியதில்லை என்று நினைத்துக்கொண்டே கிளம்பினார்.

Saturday, February 11, 2012

பஞ்சதஶீ, -1 -21

 
ரஜோம்°'ஶை​: பஞ்சபி⁴ஸ்தேஷாம்° க்ரமாத்கர்மேந்த்³ரியாணி து | வாக்பாணிபாத³பாயூபஸ்தா²பி⁴தா⁴நாநி ஜஜ்ஞிரே || 21||

இந்த ஐந்து சூக்ஷ்ம இந்திரியங்களின் ரஜஸ் பாகங்களின் சேர்கையால் கர்ம இந்திரியங்கள் தோன்றின. வாய், கைகள், கால்கள், பாயுரு, உபஸ்தம் ஆகியன.
 

Friday, February 10, 2012

உரத்த சிந்தனை - வைராக்யம் 3


என் நண்பரின் அப்பா பத்தி சொல்லப்போறேன்.

இரண்டு வாரங்கள் முன் என் மருத்துவ நண்பர் ஒருவரின் அப்பா இறந்து போனார். வயசு 86. என் மனைவி டாக்டரை பார்த்து அவசியம் விசாரிக்கணும்ன்னு வற்புறுத்தியதால நானும் போனேன். டாக்டர் எங்களை பார்த்து ஆச்சரியப்பட்டார். என்ன விஷயம் ன்னு கேட்டார். அப்புறம் அவரே புரிஞ்சு கொண்டு "என்ன? பார்த்து விசாரிக்க வந்தீங்களா"ன்னு சொல்லி அடுத்த ரூமுக்கு அழைத்துப்போனார்.
அடுத்த பத்து நிமிடங்கள் தன் தந்தையைப்பத்தி கதையா சொன்னார். அவர் பல வருஷங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தார்ன்னு தெரியுமே தவிர நண்பர் சொன்ன விவரங்கள் புதுசு.
நண்பரின் அப்பா பூர்வீகம்  எங்கள் நகரத்துப்பக்கம் ஒரு கிராமம். நகரத்துக்கு வந்து தொழில் ஆரம்பித்தார். கைலி ஏற்றுமதிதான் வியாபாரம்.  முக்கியமாக சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வார். தொழிலின் நெளிவு சுளிவுகள் நன்றாக தெரிந்து திறமையாக வியாபாரம் செய்தார். பிள்ளைக்குட்டிகள் அந்த காலத்துக்கு ஏற்றாற்போல நிறைய. எல்லா பெண்களையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார். நண்பர் தவிர மற்ற பிள்ளைகள் படித்து பின் தந்தையின் வியாபாரத்திலேயே இறங்கிவிட்டனர். நண்பர் மருத்துவ படிப்பு முடித்து மேலே எம்டி யும் முடித்து வரும்போது ப்ராக்டீஸ் ஆரம்பிக்க ஆஸ்பத்திரி தயாராக இருந்தது. நண்பரும் சீக்கிரமே செட்டில் ஆகிவிட்டார்.

முதுமையுடன் டயபெடிஸ் முதலிய நண்பர்களும் வந்து சேர்ந்துகொண்டார்கள்.
இவர் வியாபாரத்தை மகன்களிடமே விட்டுவிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டார். அவரது மனைவியும் நோய்வாய்ப்பட்டு பரலோகம் போனார்.
இவரது நண்பர் ஒருவர் மிகவும் 'சீரியஸா'க ஆஸ்பத்திரியில் இருப்பதாக கேள்விப்பட்டு போய் பார்த்தார். மூக்கில் குழாய் சொருகி திரவ உணவு உள்ளே போய் கொண்டு இருந்தது. மூச்சு விட வென்டிலேடர் மெஷின். பிழைக்க என்ன சான்ஸ் என்று டாக்டரை கேட்டார். டாக்டரோ உதட்டை பிதுக்கினார். நண்பரின் பிள்ளைகளை கூப்பிட்டு இவர் சொன்னார், "உங்க அப்பாவை எனக்கு 60 வருஷமா பழக்கம். இப்படி ஒரு அவஸ்தையை அவர் விரும்ப மாட்டார். பேசாம அவரை வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டு போற வழியை பாருங்க.”
இவர் உடல் மெதுவாக சீர் கெட்டது. இனி படுக்கைதான் என்பது போன்ற சூழ்நிலை வந்தது.
தன் பினான்சியல் சமாசாரம் எல்லாவற்றையும் நேர் செய்து வைத்தார்.
மருத்துவ பிள்ளையை கூப்பிட்டு "ஆஸ்பத்திரியில் எனக்கு ஒரு பெட் போடு" என்றார்.
ஏம்பா வீட்டிலேயே இருக்கலாமே?”
" வேண்டாண்டா. அப்படி செய்தா நீ எப்பவாவது வெளியே போகணும் என்கிற போது போகவும் முடியாம, இருக்கவும் முடியாம கஷ்டப்படுவாய். என்ன இப்ப? நீயும் முக்காவாசி நேரம் இங்கேதான் இருக்கே. பாத்துக்க முடியும். இங்கே நர்ஸ்கள் இருக்காங்க. உனக்கும் நிறைய டாக்டர் நண்பர்கள் இருக்காங்க. அவங்களும் பாத்துப்பாங்க. நீ பாட்டுக்கு கான்ப்ரன்ஸ் போகிறதெல்லாம் போய்க்கொண்டு இரு.”

ஆஸ்பத்திரி போன பின் கண்டிஷன்கள் போட்டார்.
இதோ பார், நீ என்ன மருந்து கொடுப்பியோ வைத்தியம் செய்வாயோ செய். வேறே எங்கேயும் கூப்பிட்டுகிட்டு போகக்கூடாது. நரம்பு வழியா சாப்பாடு போகக்கூடாது. மருந்து போட்டா பரவாயில்லை. வெண்டிலேட்டர் போடக்கூடாது. நான் நிம்மதியா போகணும். எது நடந்தாலும் இங்கேயே நடக்கட்டும்.

நடுவில் ஒரு முறை தடுமாறி கீழே விழுந்தார். தலையில் அடிபட்டது. டாக்டர் நண்பர் வேறு இடத்துக்கு அழைத்துப்போய் ஸ்கான் செய்ய விரும்பினார். இவர் மறுத்துவிட்டார்.  "ஸ்கான் செய்து என்ன கண்டுபிடிக்கப்போகிறாய்? சரி இன்ன பிரச்சினைன்னு தெரிஞ்சு அப்புறம் என்ன செய்யப்போகிறாய்? என்ன நடக்கும். போவதானால் போகிறேன். எப்படியும் போகப்போகிற உயிர் எப்போ போனால் என்ன?”
தலைக்காயம் மெதுவாக ஆறிப்போனது.

பார்க்க வருகிற உறவினர்களை தயார் செய்தார்.
பிறக்கும்போதே சாவது நிச்சயம். முடிந்த வரை குடும்பத்துக்கும் ஜனங்களுக்கும் நல்லது செய்துவிட்டு போகணும். நிறைவான வாழ்கை வாழ்ந்துவிட்டேன். நான் இறந்துபோனால் அழாதீர்கள். அதில் அர்த்தம் இல்லை.
அதே போல அவர் படுக்கையில் விழுந்து ஆறு வருடங்கள் பின் இறந்து போனபோது யாரும் அழவில்லை.
 

Thursday, February 9, 2012

உரத்த சிந்தனை - வைராக்யம் 2    ராஜா அரசியல் சிக்கல்களில மாட்டிக்கொண்டு இந்தப்பக்கம் கவனம் செலுத்த நேரமே இல்லாமல் போனான்.

    இந்தக் கூத்து ஜனங்கள் மத்தில விமர்சனம் இல்லாம இருக்குமா? ராஜா ஒரு சாமியாரை அழைச்சுக்கொண்டு வந்து அரண்மனையில வெச்சு இருக்கான். அவரோ வேளா வேளைக்கு நல்லா விருந்து சாப்பிட்டு ஆட்டம் பாட்டம்ன்னு பொழுதைக் கழிக்கிறார் ன்னு பேச்சு அடிபட்டது. இது மெதுவா ராஜா காதுக்கும் எட்டினது. ராஜா ஷாக் ஆயிட்டான். விசாரிச்சா அது உண்மைதான்னு தெரிஞ்சது. நேரா போய்ப் பார்த்து உறுதி செய்துகிட்டான்.

    தானேதான் இவரை இங்கே கொண்டு வந்து வெச்சது. என்ன செய்யறது?

    ஒரு வாரம் பத்து நாள் போச்சு. அதே ரொடீன்தான் தொடர்ந்தது.
    ராஜா முகம் உம்முன்னு இருக்கிறதைப் பார்த்துத் துறவியும் என்ன விஷயம்ன்னு ஊகிச்சுக் கொண்டார்.
    ஒரு நாள் மாலை ராஜாகிட்ட நாம் தேர்ல ஏறி ஊரைச் சுத்திப் பார்க்கலாமான்னு கேட்டார். போகலாமே ன்னு ராஜா சொன்னார்.
    ஊருக்கு  வெளியே தேரை விடச்சொன்னார் துறவி. காட்டுக்குப் போகிற பாதை வந்தது. துறவி தேரை நிறுத்தச்சொல்லிக் கீழே இறங்கினார். ராஜாவைப் பார்த்துச் சொன்னார். "இதோ பார்! நான் அரண்மனைக்குத் திரும்பலை; காட்டுக்குத் திரும்பிப்போறேன். உனக்கு வேதாந்தத்துல அவ்வளவு ஆர்வம் இருந்தா என்னோட வா. இல்லையானா திரும்பி போ!”

    ராஜா சொன்னான் "சாமி, என்னை நம்பி இவ்வளவு ஜனங்க இருக்காங்களே! அவங்களை விட்டுவிட்டு எப்படி வருவேன்?”
    துறவி சொன்னார். "இந்த ஜனங்களை எல்லாம் நீ காப்பாத்தறதாத்தானே நினைக்கிறாய்? உனக்கு வேதாந்த விசாரணை செய்ய நேரம் வரலை. திரும்பிப்போய் ராஜ்யத்தைக் கவனி.”
    திரும்பிக்கூடப் பார்க்காமக் காட்டை நோக்கிக் கிளம்பிட்டார் துறவி.

    இப்படி ராஜ போகத்தை பட்டுன்னு உதற முடிஞ்சது ஏன்னா வைராக்யத்தால்.

    பக்குவம் வந்தவங்களால இப்படித் தாமரை இலைத் தண்ணீர் போலப் பட்டும் படாமலும் இருக்க முடியும். இதுவே உண்மையான பற்றின்மை.
    இது வேணும் அது வேணும்ன்னு அலையாம, தேடிப்போகாம, தானாக என்ன கிடைக்குதோ அதை வைத்துக்கொண்டு இயல்பாக வாழ்க்கை நடத்துவதே இந்தப் பற்றின்மையின் அடையாளம்.

    எது கிடைக்குதோ அதை உள்ளபடி பார்க்கணும். இது நமக்கு எந்த விதத்தில பிரயோஜனம் ன்னு யோசிக்கணும். பிரயோஜனம் இல்லைன்னா அதை அப்படியே விட்டுடணும். சும்மா பார்க்கிறதெல்லாம் கைவசப்படணும், கைவசப்படறதெல்லாம் அனுபவிக்கணும்ன்னு ஒண்ணுமில்லை.
    இப்படி இருக்கிறவங்க  தான் என்ன செய்யணுமோ அதை ஒழுங்கா செய்து கொண்டு போவாங்க. தனக்கு என்ன கிடைக்கிறதுன்னு ஒரு கவலையும் பட மாட்டாங்க.
    நீங்க சும்மா ராஜா ராணி கதையெல்லாம் சொன்னா அது ஒண்ணும் ஒத்துக்கிற மாதிரி இல்லைன்னு சொன்னா....
    என் நண்பரின் அப்பா பத்தி சொல்லப்போறேன்.


Tuesday, February 7, 2012

உரத்த சிந்தனை -வைராக்யம்உரத்த சிந்தனை:
காமம் பத்திப் பார்த்தோம். இந்த காமத்தைக் கட்டுப்படுத்த முயற்சி எடுத்து சாதிக்கணும்ன்னு பார்த்தோம். அதுக்குத் துணையா நிற்பது வைராக்கியம். 
வைராக்கியம் என்கிற வார்த்தை அர்த்தம் மாறிப்போய் புழங்குகிற வார்த்தைகளில ஒண்ணு. பலரும் இதை திடச்சித்தம்-  டிடர்மினேஷன் என்கிற ஆங்கில வார்த்தை- பொருளில பயன்படுத்தறாங்க.  உண்மையில் பொருள் அப்படி இல்லை. வைராக்யம் என்கிற சம்ஸ்க்ருத சொல்லுக்கு அர்த்தம் பற்றின்மை.
பின்ன ஏன் இப்படி அர்த்தம் மாறிப்போச்சுன்னா..
பற்றில்லாம இருக்க திடச்சித்தம் நிறையவே வேணும். எனக்கு இனிமே இனிப்பே வேணாம் ன்னு முடிவு செய்தா யாராவது அருமையான இனிப்பைக் கொண்டு வந்து இந்தான்னு கொடுப்பாங்க. மனைவி மக்கள் கிட்டே பற்று இருக்கக்கூடாதுன்னு நினைச்சா பேத்தியோ பேரனோ - ஒரு குழந்தை வந்து கட்டிக்கொண்டு சிரிக்கும். மனசு நெகிழ்ந்து போயிடும்!
என்ன இது பற்றில்லாம இருக்க முடியுமா?
முடியும்.
அதுக்கு ஒரு மனப் பக்குவம் வரணும்.
காமம் போச்சுன்னா இந்தப் பக்குவம் வர வாய்ப்பு அதிகமாகவே இருக்கு.
காமம் ன்னு கூட சொல்ல வேண்டாம். ராகம் போனாலும் கூடப் போதும்.
சங்கீத ரசிகர்கள் அடிக்க வராதீங்க!
சாதாரண ஆசைக்கு அடுத்த படி ராகம். இது எனக்கு வேணவே வேணும். அது இல்லாம இருக்க முடியாது என்கிறது. 
இந்த ராகத்துக்கு ஆப்போஸிட் விராகம்.
விராகத்தோட இருக்கிற தன்மைதான் வைராக்யம். 
அப்ப வைராக்கியம் வந்த ஆசாமி நாட்டை விட்டுக் காட்டுக்குப் போயிடணுமா? அவனால இந்த உலகத்துக்கு என்ன ப்ரயோஜனம்? அவன் இருந்தா என்ன இல்லாட்டா என்ன?

அப்படி இல்லை. வைராக்யம் வந்த ஆசாமி இதே உலகில் இருக்கலாம். வாழலாம். மத்தவங்களுக்கு ப்ரயோஜனமாகவே.

ஒரு காட்டில துறவி ஒத்தர் ஒரு சின்னக் குடிசையைப் போட்டுக்கொண்டு துறவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தார். தலை நகரத்துலேந்து வெகு தூரம் வேட்டையாட வந்த ராஜா இவரைப் பார்த்தான். அவரை அணுகி வணங்கி உபதேசம் செய்யக்கேட்டான். ராஜாவாச்சே! சரின்னு துறவியும் பல விஷயங்கள் பத்தி பேசினார்.
ராஜாவுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு.
அடிக்கடி வந்து உபதேசம் கேட்டான். ராஜ்யம் நடத்துகிற விஷயம் மட்டும் இல்லாம அத்வைதமும் விசாரணை விஷயமாச்சு. இப்படியே போய்கிட்டு இருக்கிறப்ப மந்திரிகள் முதலானவர்கள் ஆக்ஷேபணை தெரிவிச்சாங்க. நீங்க பாட்டுக்கு நாள் கணக்கா காட்டுக்குப் போயிட்டா எப்படி நிர்வாகம் நடக்கிறது ன்னு கேட்டாங்க. அதுவும் சரிதான். ஆனா அத்வைத விசாரணையோ காலம் பிடிக்கற சமாசாரம். என்ன செய்யலாம்?
ராஜா யோசிச்சு துறவிகிட்டே போய் உங்ககிட்ட  பாடம் கேட்ட ஆசையா இருந்தாலும் நடைமுறைச் சிக்கல் இருக்கு. நீங்க பேசாம என் கூட அரண்மனைக்கு வந்துடுங்களேன் ன்னு கேட்டான். துறவி "அப்பா நீ ஒண்ணு ராஜ்யத்தைப்பத்திக் கவலைப்படணும். இல்லை அத்வைத விசாரணையை முழு நேரமா எடுத்துக்கணும். ரெண்டும் இல்லாம அவஸ்தைப் படாதே. என்னை மாதிரி துறவிங்களுக்கு அரண்மனை வாழ்க்கை எல்லாம் சரிப்படாது" ன்னு சொன்னார். ராஜாவோ அதைக் கேட்கலை. திருப்பித் திருப்பி வற்புறுத்தினான்.
சரின்னு துறவியும் ராஜாவோட அரண்மனைக்கு வந்துட்டார்.
ராஜா வேலைக்காரர்களைக் கூப்பிட்டு இவரை நல்லா கவனிச்சுக்குங்கன்னு உத்திரவு போட்டு விட்டு அரசியலைக் கவனிக்கப் போயிட்டான்.- தொடரும்

Thursday, February 2, 2012

பஞ்சதஶீ 1 - 20


தைரந்த​:கரணம்° ஸர்வைர்வ்ரு«த்திபே⁴தே³ந தத்³த்³விதா⁴ |
மநோவிமர்ஶரூபம்° ஸ்யாத்³பு³த்³தி⁴​: ஸ்யாந்நிஶ்சயாத்மிகா || 20||

இந்த ஐந்து சூக்ஷ்ம இந்திரியங்களின் சத்வ பாகங்களின் சேர்கையால் அந்தக்கரணம் தோன்றியது. செயலால் இது இரண்டானது. மனம் என்பதாக அதன் சந்தேகிக்கும் ரூபம். நிச்சயமாக இருப்பது அதன் புத்தி என்ற வடிவம்.