Pages

Showing posts with label கைவல்யபாதம்.. Show all posts
Showing posts with label கைவல்யபாதம்.. Show all posts

Thursday, July 13, 2017

ஒரு விளக்கம்.





சமீபத்தில் ஞானம் அடைவது குறித்து சில பதிவுகள் போட்டிருந்தேன். அவற்றை மொழிபெயர்க்கும் போதே கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது. அவை கொஞ்சம் குழப்பம் விளைவித்து இருக்கலாம். ஆகவே இது குறித்து இன்னும் கொஞ்சம் யோசித்ததில்….

 
புரிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால் இது வேறு லெவல். ஆன்மீகத்தில் நிறைய முன்னேறி கடைசியில் ஞானம் பெறும் கட்டத்தைப்பற்றியது. அது தானாகத்தான் நிகழ வேண்டுமே ஒழிய அதை சாதகன் செய்ய முடியாது. ஞானம் பெற ஆசைகள் அடியோடு ஒழிய வேண்டுமில்லையா? ஞானம் பெற வேண்டும் என்று ஒரு ஆசை - நியாயமானதாக இருந்தாலும் அது ஆசைதானே?- இருக்கும் வரை அது எப்படி நிகழ முடியும்? அது நிகழ்ந்த பிறகு ஞானி எல்லாவற்றையும் ப்ரம்ம ரூபமாகவே காண்பதால் ஆசை என்று ஒன்று இராது.
இந்த நிலை வரும் வரை ஆன்மீக முன்னேற்றத்துக்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை என்பது அர்த்தமில்லை. அப்படி ஒரு பொருளை எழுதியது உணர்த்தி இருந்தால் அது தவறு; மன்னிக்க.

நான் என்று ஒரு நினைப்பு இருக்கும் வரை கொஞ்சமாவது ஃப்ரீ வில் இருக்கிறது. அது வரை 'நாம்' செயல்களை செய்கிறோம். அதற்கான பலனும் கிடைக்கும். நான் செய்கிறேன் என்னும் நினைப்பு போய்விட்டால் அது மிகப்பெரிய ஆன்மீக முன்னேற்றம். அது பூர்ண சரணாகதியில்தான் வரும். அந்த நிலை வந்து விட்டால் எல்லாம் சுகமே! 'நாம்' என்ன செய்ய வேண்டுமோ அது செய்ய வைக்கப்படுவோம். என்ன செய்யக்கூடாதோ அதை செய்ய மாட்டோம். அதெப்படி என்றால் அதை இறைவன் பார்த்துக்கொள்கிறான்

இந்த 'நான்' போவது மிக மிக கஷ்டம். சரி அது வரை என்ன செய்ய வேண்டும் என்றால் தர்ம சாஸ்த்திரத்தில் சொல்லி இருப்பது போல செய்ய இயன்ற வரை செய்ய முயற்சிக்க வேண்டும். இங்கே ஞானம் பெற ஒண்ணும் உன்னால் செய்ய முடியாது என்பது அப்ளை ஆகாது. ஏன் என்றால் இது ஆரம்ப அல்லது இடை நிலை. இதை எல்லாம் செய்து செய்து நல்லது கெட்டது எல்லாம் நடந்து, கர்மா நிறைய கழிந்து, சித்த சுத்தி ஏற்படும் வரை நம் கையில் செய்வதற்கு எதோ இருக்கிறது. அதன் பின் வரும் ஞானம் எப்போ எப்படி எங்கே வரும் என்பதெல்லாம் நம் கையில் இல்லை. இதுவே சொல்ல வந்தது.

Friday, April 22, 2011

யோக சாஸ்திரம் நிறைவு...




  पुरुषार्थशून्यानां गुणानां प्रतिप्रसवः कैवल्यं स्वरूपप्रतिष्ठा वा चितिशक्तिरिति ।।34।।
புருஷார்த²ஶூந்யாநாம்° கு³ணாநாம்° ப்ரதிப்ரஸவ​: கைவல்யம்° ஸ்வரூபப்ரதிஷ்டா² வா சிதிஶக்திரிதி || 34||

புருஷார்த²ஶூந்யாநாம்° = இனி செய்ய வேண்டிய புருஷார்த்தங்கள் இல்லாத; கு³ணாநாம்° = (புத்தி முதலிய பரிணாமங்களை அடைந்த சத்வம் முதலான) குணங்களின்; ப்ரதி ப்ரஸவ​: = தத்தம் காரணத்தில் ஏற்படும் லயத்தால் ப்ரக்ருதியில் ஒடுங்கி விடுதலானது; கைவல்யம்° =கைவல்யம் எனப்படும்; ஸ்வரூப = சொந்த ரூபத்தில்; ப்ரதிஷ்டா² = நிலை பெறல்; வா = அல்லது; சிதிஶக்தி = சத் சக்திக்கு; இதி = இவ்வாறு (யோக சாஸ்திரம் நிறைவுற்றது)

ஸத்வம் முதலான குணங்கள் புத்தி முதலிய பரிமாணங்களை அடைகின்றன. போகம், விவேக க்யாதி என்ற இரண்டு குணங்களையும் ஒரு புருஷனுக்கு சம்பாதித்து கொடுத்துவிட்டால் அவற்றின் காரியம் அத்துடன் முடிந்துவிடும். அவை சம்பாதித்து கொடுக்க வேண்டிய புருஷார்த்தம் ஏதும் இல்லை. வேலை இல்லாததால் அவை தாம் வந்த வழியே தம் தம் காரணத்தில் லயமடைகின்றன. மனதில் உள்ள ஸமாதி நிரோதம், வ்யுத்தானம் ஆகியன மனதிலும், மனம் அஹம் தத்துவத்திலும், அஹம் தத்துவம் மஹத் தத்துவத்திலும், மஹத் ப்ரதானத்திலும் லயமாகும். ஒரு தனி நபரின் விஷயத்தில் இதுதான் மோக்ஷமாகும்.

இன்னொரு வழியில் சொல்ல சுத்த சைதன்யமான புருஷனுக்கு அந்தக்கரணம் முதலிய உபாதிகள் விலகி, தன் உண்மையான சொரூபத்தில் நிலை பெறுதல் மோக்ஷம் ஆகும். இந்த யோக சாத்திரத்தில் சொல்லியுள்ள சாதன அனுஷ்டானத்தால் ஒவ்வொருவரும் புருஷ விவேக ஞானத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்பது தெளிவு.

इति पातञ्जलि योगसूत्रं सम्पूर्णम् ।।
இதி பாதஞ்ஜலி யோக³ஸூத்ரம்° ஸம்பூர்ணம் ||
ॐ शान्तिः शान्तिः शान्तिः ।
ஓம்° ஶாந்தி​: ஶாந்தி​: ஶாந்தி​: |
சுபம்!

Thursday, April 21, 2011

பரிணாமத்தில் இருக்கும் கிரமம்:




 क्षणप्रतियोगी परिणामापरान्तनिर्ग्राह्यः क्रमः ।।33।।

க்ஷணப்ரதியோகீ³ பரிணாமாபராந்தநிர்க்³ராஹ்ய​: க்ரம​: || 33||

க்ஷணப்ரதியோகீ³ = க்ஷண ஸமூஹத்தை நிமித்தமாக உடையதாகிறது; பரிணாம = மாறுதலின்; அபராந்த = முடிவினால்; நிர்க்³ராஹ்ய​: = கிரகிக்க முடியாமல், ஊஹிக்கப்படுவதாக: க்ரம​: = க்ரமம் என்பது;

ஒரு மாறுதலின் ரூபம் மாறுதல் முடிந்த பிறகே தெரிய வரும். இடைநிலையில் அது முழுவதுமாக தெரிய வராது. குறித்த நேரத்தில் குறிப்பிட்டதாக இருக்கிறது என்றே சொல்லமுடியும். அதற்கு மேல் சொல்ல முடியாது. அதனால் அது ஊகித்து அறியப்படுவதாகிவிடும். ஆகவே க்ரமம் என்பது நேரத்தை சார்ந்ததாகிறது.

யோக சித்தாந்தப்படி புருஷன் நீங்கலான எல்லாம் க்ஷணத்துக்கு க்ஷணம் மாறிக்கொண்டே இருக்கின்றன. சில வஸ்துக்களின் மாறுதல் கிரமம் நேரடியாக தெரிகிறது. சில அனுமானத்தால் அறியக்கூடும்.

மண்ணை பிசைந்து குயவன் மண் உருண்டை ஆக்குகிறான். பின் அதை குடமாக ஆக்குகிறான். குடம் உடைந்தால் ஓட்டஞ்சில்லு ஆகிறது. பின் அது பொடிந்து மண் பொடி ஆகிறது. இப்படி மாறுதல் பிரத்யக்ஷமாக தெரிகிறது. இதே போல் ஒரு துணியை வாங்கி பெட்டியில் வைத்து பல காலம் கழித்து பார்த்தால் அது வலு குறைந்து காணப்படுகிறது.
அநித்திய வஸ்துக்கள் அல்லாமல் நித்ய வஸ்துக்களுக்கும் பரிணாமம் இதே போல உண்டா என்று கேட்டால், எது நித்தியம் என்று ஒரு கேள்வி எழுகிறது. நித்தியம் இரு வகையாகும். ஒன்று கூடஸ்த நித்தியம். இரண்டாவது பரிணாமி நித்தியம். புருஷ தத்துவத்தில் பரிணாமம் இல்லை. அதனால் அது எப்போதுமே நித்தியம். ஸத்வம் முதலிய குணங்கள் பரிணாமி நித்தியம் ஆகும்.

புத்தி அநித்தியமானது; மாறுதல் அடையக்கூடியது. ராகம் முதலான இந்த மாறுதல்களுக்கு ஒரு முடிவு உள்ளது- விவேக க்யாதி ஏற்பட்டால் இவை முடிந்துவிடும். உற்பத்தி கிரமத்துக்கும் மாறான கிரமத்தில் லயம் ஏற்பட்டுவிடும். (எங்கிருந்து வந்ததோ அங்கேயே வந்த வழியிலேயே பின் நோக்கிப்போய் சேரும்) ஆனால் இப்படி எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. கல்ப கோடி காலம் ஆனால் ஒருவர் முக்தி அடைகிறார்கள். உலக ஜீவர்கள் அனேகம் இருப்பதால் எல்லா ஜீவர்களும் முக்தி அடைந்து உலகில் யாருமே இல்லாமல் போய் விடுவார்கள் என்ற நிலை வராது.

Wednesday, April 20, 2011

முக்குணங்களின் சுபாவம்:



ततः कृतार्थानां परिणामक्रमसमाप्तिर्गुणानाम् ।।32।।

தத​: க்ரு«தார்தா²நாம்° பரிணாமக்ரமஸமாப்திர்கு³ணாநாம் || 32||

தத​: =பர வைராக்கியம் ஏற்பட்ட பின்; க்ரு«தார்தா²நாம்° =செய்ய வேண்டியவற்றை செய்து முடித்த: கு³ணாநாம் = ஸத்வம் முதலான குணங்களுக்கு; பரிணாம க்ரம ஸமாப்தி: = மாறுதலின் வரிசையின் முடிவு (உண்டாகின்றது)

முக்குணங்களுக்கு வேலை இல்லையெனில் அவை பரிணாமம் ஏதும் அடையாமல் இருந்துவிடும். விவேக க்யாதி ஏற்பட்ட பின் சரீரத்தையோ இந்திரியங்களையோ அவை உண்டு பண்ணுவதில்லை. இதனால் விவேகம் அடைந்த புருஷனை பொறுத்த வரை அவற்றின் மாறுதலுக்கு முடிவு ஏற்படுகிறது.

Tuesday, April 19, 2011

தர்மமேகஸமாதி அடைந்தவனின் சித்தம்:




तदा सर्वावरणमलापेतस्य ज्ञानस्याऽऽन्त्याज्ज्ञेयमल्पम् ।।31।।

ததா³ ஸர்வாவரணமலாபேதஸ்ய ஜ்ஞாநஸ்யா''ந்த்யாஜ்ஜ்ஞேயமல்பம் || 31||

ததா³ = அதனால் (தர்மமேகஸமாதியால்) ஸர்வ =எல்லா; ஆவரண = மறைப்பு; மலா = அழுக்கு; பேதஸ்ய = விலகுதல்; ஜ்ஞாநஸ்ய = ஞானத்தின்; ஆநத்யாத் = ஆநந்தத்தின்; ஜ்ஞேயம் = அறியத்தக்கன; அல்பம் = மிகக்குறைவாக (ஆகிறது)

தர்மமேக ஸமாதியில் இல்லாதபோது சித்தத்தின் நிலை என்ன?
சித்தம் முதலில் தமோ குணத்தால் மூடப்பட்டு இருந்தது. அதனால் ரஜோ குணம் மட்டுமே அதை ஏதோ சில விஷயங்களில் அதை தூண்ட முடிந்தது. சிறிது தமோ குணம் விலக பின் ஏதோ சில வஸ்துக்களை மட்டும் க்ரஹிக்கும் சக்தி பெற்றது.

தர்மமேகஸமாதியை அடைந்த சித்தத்தின் ரஜோ தமோ அழுக்குகள் முழுதும் அழிக்கப்படுகின்றன. சித்த தத்துவத்தை மறைத்த அவித்யை முழுதும் விலகுகிறது. ஆதலால் சித்தம் நிர்மலமாகிறது. சாதாரணாமாக அறியத்தக்க பிரபஞ்சம் மிகச்சிறிதாக ஆகிறது. எப்படி ஒரு குடம் கடலின் நீர் அனைத்தையும் அடக்க போதுமானதில்லையோ, ஒரு பூச்சி வானத்தை மறைக்க போதுமானதில்லையோ அது போல் சித்தத்தின் அறியும் திறனுக்கு தீனி போட இந்த அறியத்தக்க பிரபஞ்சம் போதுமானதில்லை. இந்த நிலை பர வைராக்கியம் என்றும் சொல்லப்படும்.

Monday, April 18, 2011

தர்மமேக ஸமாதியின் பலன்:



ततः क्लेशकर्मनिवृत्तिः ।।30।।
தத​: க்லேஶகர்மநிவ்ரு«த்தி​: || 30||

தத​: = அதனால் (தர்மமேகஸமாதியால்) க்லேஶ = அவித்யா முதலான 5 க்லேசங்களின்; கர்ம = புண்ணியம் பாபம் ஆகிய கர்மங்களின்; நிவ்ரு«த்தி​: = முடிவும் (முழுமையாக ஏற்படுகிறது)

தர்மமேகஸமாதியால் க்லேசங்களும் கர்மங்களும் மீண்டும் உண்டாக மாட்டா; யோகி ஜீவன் முக்தனாகிறான் என்பது கருத்து.


Friday, April 15, 2011

தர்மமேக ஸமாதி:




प्रसंख्यानेऽप्यकुसीदस्य सर्वथा विवेकख्यातेर्धर्मेघः समाधिः ।।29।।

ப்ரஸம்°க்²யாநே'ப்யகுஸீத³ஸ்ய ஸர்வதா² விவேகக்²யாதேர்த⁴ர்மேக⁴​: ஸமாதி⁴​: || 29||

ப்ரஸம்°க்²யாநே அபி = ப்ரக்ருதி- புருஷ- விவேக- ஞானத்தின் பலனான எல்லாவற்றையும் ஒன்றாக காண்பது (விவேக ப்ரசங்க்யானம்), எல்லாவற்றையும் அறிவது (ஸர்வ க்ஞாத்ருத்வம் ) முதலானவற்றில் கூட; அகுஸீத³ஸ்ய = ஆசை வைக்காதவனுக்கு; ஸர்வதா² = எப்போதும், நிரந்தரமாய்; விவேக க்²யாதே: =விவேக ஸாக்ஷாத்காரம் ஏற்படுவதால்; த⁴ர்மேக⁴​: ஸமாதி⁴​: = தர்மமேகஸமாதி ஏற்படுகிறது.

விவேக க்யாதியால் எல்லாப்பலன்களையும் தன் அதிகாரத்தில் வைத்து இருக்க முடிகிறது; எல்லாவற்றையும் அறிய முடிகிறது. ஆனாலும் இதில் நாட்டம் போனால் முன்னேற்றம் இராது. அதனால் இதிலும் பரிணாமம் முதலிய தோஷத்தை காண்பவனுக்கு இதில் ஆசை வராது. அப்படிப்பட்டவனுக்கு எப்போதும் விவேக ஸாக்ஷாத்காரமே இருக்கிறது. வேறு ஒரு ப்ரத்யயமும் (தடையும்) ஏற்படுவதில்லை. அதுவே தர்மமேகஸமாதி ஆகும். அசுக்லா க்ருஷ்ண யோகஜ தர்மத்தை (பாதம் 4 சூத்திரம் 7) இது வர்ஷிப்பதால் இந்த பெயர் வந்தது.


Thursday, April 14, 2011

வ்யுத்தான ஸம்ஸ்காரங்களை அழித்தல்:




  हानमेषां क्लेशवदुक्तम् ।।28।।

ஹாநமேஷாம்° க்லேஶவது³க்தம் || 28||

ஹாநம் =முற்றிலும் விடுபடுதல்; ஏஷாம்° = இவற்றுக்கு (வ்யுத்தான ஸம்ஸ்காரங்களுக்கு); க்லேஶவத்³= க்லேசங்களை போன்றதாக: உக்தம் = சொல்லப்பட்டுள்ளது.

வ்யுத்தான ஸம்ஸ்காரங்களுக்கு முற்றிலும் அழிவு க்லேசங்களை போன்றதாக சொல்லப்பட்டுள்ளது. க்லேசங்கள் எப்படி அழியும்? பாதம் 2 முதல் சூத்திரம் முதல் சொன்னவற்றில் இருந்து: முதலில் க்ரியா அனுஷ்டானத்தால் அதை தேயச்செய்து, பின் விவேக க்யாதி உண்டாகி, முதிர்ச்சி அடைய ஸம்ஸ்காரங்கள் பொசுக்கப்பட்டு, பின் முற்றிலும் அழியும் என்று அறிந்தோம். அதேதான் இங்கும். விவேக க்யாதி முதிர முதிர அது வ்யுத்தான ஸம்ஸ்காரங்களை விதைகளை வறுப்பது போல் வறுக்கும்.


Thursday, April 7, 2011

சித்தம் காண்பித்து கொடுப்பது...




द्रष्टृदृश्योपरक्तं चित्तं सर्वार्थम् ।।23।।
த்³ரஷ்ட்ரு«த்³ரு«ஶ்யோபரக்தம்° சித்தம்° ஸர்வார்த²ம் || 23|| 

த்³ரஷ்ட்ரு = பார்க்கிறவன்; «த்³ரு«ஶ்யோபரக்தம்° = பார்க்கப்படும் வெளி வஸ்துக்கள் உடன் கூடியிருப்பதால்; சித்தம்° = சித்தமானது; ஸர்வார்த²ம் = எல்லா வஸ்துக்களையும் சாதிப்பதில் பிரமாணமாக ஆகிறது.

ஒரு பக்கம் காண்பவனான புருஷனுடனும் மறு பக்கம் பார்க்கப்படும் பொருட்களுடனும் சித்தம் சம்பத்தப்பட்டு இருக்கிறது. ஆகவே இது எல்லாவற்றையும் சாதிப்பதில் பிரமாணமாக ஆகிறது.

ஜலத்தில் பிரதிபலித்த சந்திரன் வானத்தில் உள்ள சந்திரன் இல்லை என்பது போல சித்தத்தில் ப்ரதிபலிக்கிற புருஷன் நிஜ புருஷன் இல்லை. ஆனால் சித்தத்தில் பிரதிபலிப்பதையே புருஷனாக விவேகம் இல்லாதவர் எண்ணுகின்றனர். உண்மையில் பார்க்கிறவன் என்பது சித்தத்தில் உள்ள புருஷனின் ப்ரதிபிம்பமே. அதனால் சித்தம் எல்லாப்பொருட்களையும் காண்பித்து கொடுப்பதாகிறது.

Tuesday, March 22, 2011

புருஷனுக்கும் சித்தத்திற்கும் பேதம் ...



सदा ज्ञाताश्चित्तवृत्तयस्तत्प्रभयोः पुरुषस्यापरिणामित्वात् ।।18।।
ஸதா³ ஜ்ஞாதாஶ்சித்தவ்ரு«த்தயஸ்தத்ப்ரப⁴யோ​: புருஷஸ்யாபரிணாமித்வாத் || 18||

ஸதா³ ஜ்ஞாதா: எப்பொழுதும் அறியப்பட்டவை (ஆகின்றன) ; சித்த வ்ரு«த்தய: = சித்தத்தின் விருத்திகள்; தத் ப்ரப⁴யோ​: புருஷஸ்ய =புருஷனின்; அபரிணாமித்வாத் = பரிணாமமற்றிருத்தல் என்பதால்;

சித்தத்துக்கு வெளி வஸ்து ஒன்றுடன் இந்திரியங்கள் மூலம் ஒரு ஸம்பந்தம் ஏற்பட்டதும் அது அந்தந்த விஷய வடிவாக ஒரு மாறுதலை (பரிணாமத்தை) அடைகிறது. இப்படி மாறுதல் இல்லையானால் அந்த வஸ்து அறியப்பட மாட்டாது. ஆகவேதான் சித்த விஷயமான சப்தம் முதலிய சில அறியப்படாமல் இருக்கிறது. வேலையில் மிக மும்முரமாக இருந்த ஒருவரிடம் இப்போது இடி இடித்ததே தெரியாதா என்றால், அப்படியே எனக்கு சப்தம் ஒன்றும் கேட்கவில்லையே என்கிறார்.
ஆனால் புருஷன் விஷயத்தில் இப்படி இல்லை. புருஷனுக்கோ பரிணாமம் - மாறுதல் என்ற ஒன்றே இல்லை. அவனுக்கு எல்லாமும் எப்போதும் அறியப்பட்டதுதான். அறியப்படாதது என்று ஒன்றுமே அவனுக்கு இல்லை.
இப்படியாக புருஷனுக்கும் சித்தத்திற்கும் பேதம் நன்கு இருக்கிறது.