Pages

Showing posts with label ஜீவனின் சரித்திரம். Show all posts
Showing posts with label ஜீவனின் சரித்திரம். Show all posts

Thursday, March 10, 2016

ஜீவனின் சரித்திரம் - 14


பரம புருஷார்த்தமான ஆத்மாவை அறியாததால்தான் அனர்த்த பரம்பரையே உருவாகி இருக்கிறது. ஆத்மாவை அறிய குருவாக வாஸுதேவனை (ம்க்கும்!) குருவாக ஏற்று பரமபக்தி செய்யாமல் அஞ்ஞானம் அழியாது. அந்த திட பக்தி ஞானத்தையும் வைராக்கியத்தையும் தரும். பகவானின் குணங்களையே த்யானித்து, கேட்டு, சொல்லி, படித்து, நிர்மலமான மனதுடைய சாதுக்கள் இருக்குமிடத்திலேயே ரமிப்பவனாக இருப்பின் பசி தாகம், சோகம், மோஹம் முதலிய பிணிகள் அவனைத்தீண்ட மாட்டா.

’நான்’ ’என்’ என்னும் அஹங்கார மமகாரங்களை உடையவனாகத்தான் நாம் பலரும் இருக்கிறோம். நம் பரமார்த்த சொரூபத்தை மறந்து இந்த உடலே நான் என்று நினைக்கிறோம். புத்தியும் மனமும் இயக்கும் வழியில் நாம் சற்றும் சிந்தியாமல் நடந்து கொள்கிறோம். அந்த செயல்களால் ஏற்படும் சுக துக்கங்களை அனுபவிக்கிறோம். ஆனால் நம் உண்மை சொரூபமான அந்த ஆத்மாவை அறியாதவராக இருக்கிறோம். அப்படி இருந்தால் புரஞ்ஜனன் பட்ட துயரங்கள் அனைத்தும் பட வேண்டியதுதான்.

எப்படி இருக்க வேண்டும் என்பதை மலயத்வஜன் கதை சொல்லுகிறது. பெரிய வீரனாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு புத்திரர்களிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு ஞானத்தை தேடிச்செல்கிறார். புனித நீர்நிலைகளில் தன் பாபங்களை கழுவி ஏகாந்தத்தில் அமர்ந்து தவத்தில் ஈடுபட்டு ஞானத்தை அடைந்து பரப்ரம்ஹத்தில் கலக்கிறார். அவரது பத்னியும் தன் கணவனுக்கு பணிவிடை செய்வது என்ற ஒரே தர்மத்தை கடைபிடித்து அதன் மூலமே பரமாத்மாவின் நினைவு வந்து உபதேசம் பெற்று பூரணமாகிறாள்.

-நிறைந்தது-

Wednesday, March 9, 2016

ஜீவனின் சரித்திரம் - 13



வருடமே கந்தர்வராஜா. பகல்கள் கந்தர்வர்கள். இரவுகள் கந்தர்வ பெண்கள். இவர்கள் சுற்றிச் சுற்றி வந்து ஆயுளை அபகரிக்கின்றனர்.
கால கன்னிகை மூப்பு. அவளை யாரும் விரும்புவதில்லை. (யயாதியின் மகன் புரு மட்டுமே விரும்பி ஏற்றான்.) உலகை அழிக்க யவனன் இவளை தங்கையாக கொள்கிறான். உடல் வியாதிகளும் மனோ வியாதிகளும் இவனது சேனை வீரர்கள். ப்ரஜ்வாரம் என்பது ப்ராணிகளை அழிக்கும் கொடிய நோய். நூறு வருடங்கள் வாழ்ந்தாலும் இப்படிப்பட்ட துன்பங்களில் அஞ்ஞானத்துடன் ஜீவன் உழலுகிறான். உண்மையில் குணமில்லாதவனானாலும் உடல், ப்ராணன், புலன்கள், மனது இவற்றின் நன்மை தீமைகளை தனதாக எண்ணி சிற்றின்பங்களையே ‘நான்’ ‘எனது’ என்று நினைத்துக்கொண்டே அனுபவிக்கிறான்.
பரமாத்மாவின் நினைவு இல்லாததால் மாயையில் கட்டுண்டு கஷ்டப்படுகிறான். (அந்த நினைவு இருக்க வேண்டும் என்று உதாரணமாக மலையத்வஜன் கதை பின்னால் சொல்லப்பட்டது) முக்குணங்களை ஒட்டி நல்ல/ கெட்ட செயல்களை செய்து அதன் கர்ம பலனாக மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறான். அவை ஆணாகவோ பெண்ணாகவோ விலங்காகவோ தேவராகவோ கர்ம பலனை ஒட்டி அமைகின்றன. பசியால் வாடும் நாய் ஒன்று வீட்டில் இருந்து வீடாக சென்று தன் கர்ம பலனை ஒட்டி உணவோ கல்லடியோ பெற்றுக்கொண்டு திரிவது போல இவனும் செய்கிறான். எப்போதும் ஏதோ ஒரு துக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும். அதை நீக்க முயன்றால் வேறு ஒரு துக்கம் வந்து சேரும். தலையில் இருக்கும் பாரத்தை தோளுக்கு மாற்றுவது போலத்தான் இருக்கும். ஞானமில்லாமல் ஒரு கர்மா இன்னொரு கர்மாவை முழுமையாக சமன் செய்ய இயலாது. கனவினுள் கனவு காணும்போது உள் கனவு முடிந்தாலும் எப்படி முழிப்பு ஏற்படாதோ அப்படி ஒன்றுக்கு பதிலாக இன்னொரு கர்மா செய்தாலும் உதவாது.
உண்மையில் இந்த உடல், புலன், விஷயங்கள் இல்லை என்றாலும் சம்சாரம் விடுவதில்லை! கனவு பொய்யானாலும் அதால் ஏற்படும் அனுபவம் (சுக துக்கங்கள்) மெய் அல்லவா?

Tuesday, March 8, 2016

ஜீவனின் சரித்திரம் - 12



இடது கண் வலதை விட சற்று பிரகாசம் குறைந்தது எனப்படுகிறது. ஆகவே அது மின்மினிப்பூச்சி. இந்த இரண்டு கண்களாலும் பிரகாசப்படுத்தப்படுபவை மட்டுமே பார்க்கப்படும். நாசிகளால் வாசனை தெரிகிறது. முக்யம் என்ற பெரிய வாயில் வாய். அதன் வழியே வெளியே செல்லும் கடைச்சரக்கு சொற்கள். உள்ளே வருவன உணவு.
காதுகளால் கர்ம சாஸ்திரங்களையும் மோக்‌ஷ சாஸ்திரங்களையும் கேட்டு அறிகிறான். ஆசுரி வழியாக சிற்றின்பத்தை அனுபவிக்கிறான். நிர்ருதி மலத்துவாரம் ஆகும்.
குருடர்களான பொற்கொல்லன் நீதிபதி ஆகியோரில் நீதிபதி கால்கள். செல்ல வேண்டிய வழியில் நடத்துவதால் நீதிபதி. பொற்கொல்லன் கைகள். பொருட்களை வடிவமைப்பதால். இரண்டும் துவாரங்கள் இல்லை என்பதை குறிக்க குருடர்கள் எனப்பட்டனர்.
அந்தப்புரம் என்பது ஹ்ருதயம். மனமே அங்குள்ள விஷயங்கள். அங்கே அவன் மயக்கத்தையும் திருப்தியையும் கிளர்ச்சியையும் அடைகிறான். இவையே சத்வ, ரஜோ, தமோ குணங்களின் பரிணாமங்கள்,
அவள் செய்வதை அனைத்தையும் இவன் செய்தான் எனில் கர்மத்தால் கட்டுண்டு புத்தி செய்வதை ஆத்மா தான் செய்வதாக நினைக்கிறான் எனப்பொருள்.
அவன் வேட்டைக்கு கிளம்பினான் இல்லையா? அந்த உடலே ரதம். புலன்கள் குதிரைகள். காலத்தின் வேகமே ரதத்தின் வேகம். அஹங்காரம், மமகாரம் என இரண்டு தண்டங்கள். புண்ணியமும் பாபமும் சக்கரங்கள். மாயை அதன் அச்சு. முக்குணங்களே கொடிகள். ஐந்து ப்ராணன்கள் பூட்டுகள்.மனதே கடிவாளம். புத்தி தேரோட்டுபவன், ஹ்ருதயம் ஆசனம், சோகமும் மோஹமும் குதிரைகளை கட்டுமிடம், ஐந்து புலன் விஷயங்கள் ஆயுதங்கள், தோல் முதல் சுக்ரசோணிதம் வரை ஏழு தாதுக்கள் கவசங்களாக சொல்லப்பட்டன. ஐந்து கர்மேந்திரியங்களும் நகரும் திறனாகும். அவன் வேட்டையில் ஈடுபட்டது விஷய கேளிக்கைகள்.
(ஏற்கெனெவே நகரமே உடல் என்றெல்லாம் சொல்லியாயிற்றே; இப்ப இது என்ன திருப்பி? என்றால்.. இது இன்னொரு பரிமாணம். புத்தி/ மனம் நல்ல வாசனைகளை சார்ந்து இருக்கலாம். அப்போது அது நல்ல மனசு என்றோ நல்ல புத்தி என்றோ சொல்லப்படுகிறது. கெட்ட வாசனைகளை சார்ந்து நிற்கும் போது கெட்ட மனது என்றோ கெட்ட புத்தி என்றோ சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட வாசனைகளால் தூண்டப்பட்டு ‘கெட்ட’ காரியங்களை செய்கிறோம். பின்னர் இதில் களித்து களைத்து திரும்பும் போது, ’நல்ல’ புத்தி நம்மை கடிந்து கொள்கிறது. ’இல்லை இல்லை இனிமே இப்படி செய்யவே மாட்டேன்’ என்றெல்லாம் நமக்கு நாமே உற்தி மொழி கொடுத்து சமாதானம் சொல்லிக்கொள்கிறோம். திருப்பி வாசனைகள் அதற்கே இழுத்துக்கொண்டு போகும் என்பது வேறு விஷயம்! இதையே இந்த இடத்தில் சொல்லி இருக்கிறதாக எடுத்துக்கொள்ளலாம்.)

Monday, March 7, 2016

ஜீவனின் சரித்திரம் - 11


ப்ராசீன பர்ஹிஸ் கூறுவான்: ஹே நாரதரே! நீங்கள் சொல்லும் கதை அஞ்ஞானத்தால் பீடிக்கப்பட்ட எனக்கு சற்றும் புரிவில்லை. சற்று விளக்கமாக சொல்லி அருள வேண்டும்!

முன்னே சொல்லி வந்த கதை ஸ்ரீமத் பாகவதத்தில் நான்காம் ஸ்கந்தத்தில் 25 ஆம் அத்தியாயம் துவங்கி 29 முடிய சொல்லப்படுவது. இதை புரஞ்ஜனோபாக்யானம் என்பர். மைத்ரேயர் விதுரரிடம் சொல்லுவதாக கதை அமைகிறது. ப்ராசீன பர்ஹிஸ் என்றொரு அரசன் இருந்தான். அவன் எப்போதும் கொடுமையான யாகங்களை செய்து வந்தான். அவனை நல்வழிப்படுத்துவதற்காக நாரதர் அவனிடம் “நீ எதை குறித்து இவற்றை செய்கிறாய்? உண்மையான ஶ்ரேயஸ் இதில் இல்லை.” என்கிறார். அரசன் தனக்கு உபதேசிக்க வேண்டவே ‘இந்த’ கதையை சொல்லுகிறார். அரசன் நம்மைப்போல! புரியவில்லை. தெளிவாக விளக்குங்கள் என்கிறான். நாரதரும் விளக்குகிறார்.
--
கதையில் வரும் ‘ஜீவனே’ புரஞ்ஜனன், (தனக்கொரு புரத்தை ஜனிக்கச்செய்வதால்) அவனது நண்பன் பரமாத்மா. இருவரும் உண்மையில் ஒன்றானாலும் ஜீவனுக்கு மாயையால் உண்டான அகங்காரம் என்கிற கட்டு இருக்கிறது. மாயை என்னும் ப்ரக்ருதியின் குணங்களாண சத்வம், ரஜஸ், தமஸ்- இல் ஜீவன் ஈடுபடும்போது ஒன்பது துவாரங்களும் இரண்டு கைகள் இரண்டு கால்கள் உள்ள உடலை பிறப்பிக்கிறான். அதையே மிகவும் சௌக்கியம் என்று நினைக்கிறான்.
புத்தி என்பதே ‘மதி’ என்ற பெண். (இங்கே புத்தி எனக்குறிப்பிடப்படுவது அந்தக்கரணம் எனப்படும் அடிப்படையான ‘நான்’ என்னும் எண்ணமே) அவளிடம்தான் ‘நான்’ எனது’ முதலிய அபிமானங்கள் உண்டாகின்றன, புத்தியின் பத்து நண்பர்கள் பத்து இந்திரியங்கள். அவற்றின் சலனங்களே பத்து தோழிகள். கோட்டைக்காவலனாகிய ஐந்து தலை நாகம் ப்ராணன், அபானன், வ்யானன், உதானன், சமானன் என்னும் ஐந்து ப்ராணங்கள். பின்னால் பதினோராவதாக சொல்லப்பட்ட சேனாதிபதி மனசு.

பாஞ்சால தேசம் எனப்பட்டது ஐந்து ஞான இந்திரியங்களும் ஆளுவது. கண்கள், மூக்கு துவாரங்கள், வாய், காதுகள், கீழ் துவாரங்கள் ஒன்பது வாயில்கள். இவற்றுள் முதல் ஐந்து முன்னால் - கிழக்கில் உள்ளதாக சொல்லப்பட்டது. வடக்கும் தெற்கும் உள்ளவை காதுகள். கீழுள்ளவை பின் துவாரங்களாக சொல்லப்பட்டன. 

Friday, March 4, 2016

ஜீவனின் சரித்திரம் - 10


ஜீவாவும் தர்மத்தை அறிந்தவளாக தன் கணவனையே தெய்வமாகக்கொண்டு பிற சுகங்களை துறந்து, கணவனுடனேயே பயணித்து, நிஷ்டையில் இருந்த கணவனுக்கு பொருத்தமான சேவைகளை செய்து வந்தாள். ஒரு நாள் அவரது கால்களில் சூட்டை உணர முடியாமல் போகவே தன் பதி உலகை விட்டுவிட்டதை அறிந்தாள்.
” ஹே ராஜ ரிஷியே! எழுந்திரும்; என்னை இந்த நீர்சூழ் உலகில் கொடுங்கோல் அரசர்களிடமிருந்தும் திருடர்களிடமிருந்தும் காப்பாற்றும்!” என்று பலவாறு அழுது புலம்பிய பின் ஒரு சிதை எழுப்பி அதில் தன் கணவனின் உடலை இட்டு தானும் தீக்குளிக்கத்தயாரானாள்.
அப்போது ஒரு அந்தணன் அவளருகில் தோன்றினான். “ நீ யார்? யாருடைய மனைவி? இங்கு கிடக்கும் இவனுக்காக வருத்தப்படுகிறாயே, யாரிவன்? நீயும் நானும் பலகாலம் ஒன்றாக உலவியிருக்கிறோமே! நினைவுக்கு வருகிறதா? இத்தனைக்காலமும் நான் உன்னுடந்தான் இருந்தேன். நீதான் என்னை ஏரெடுத்தும் பார்க்கவில்லை. இப்போதாவது என் நினைவு வருகிறதா? நீயும் நானும் சுதந்திரமாக மானஸஸரஸ்ஸில் உலவும் ஹம்ஸ பட்சிகள் போல் உலவினோமே. ஆனால் நீயோ கீழ்மைப்பட்ட விஷயங்களில் ஈடு பட்டாய். பூலோகத்துக்குச்சென்றாய். உடல் என்னும் நகரை அடைந்தாய். ஒலி, தொடுகை, உருவம், சுவை, நாற்றம் ஆகிய ஐந்து சோலைகளை கொண்ட நகரம் அது! ஒன்பது உடல் துவாரங்கள் அதன் வாயில்கள். நிலம் நீர் நெருப்பு என மூன்று ப்ராகாரங்கள்/கேட்டல், உணர்தல், பார்த்தல், சுவைத்தல், நுகர்தல், மனது என ஆறு குலங்கள். செயலிந்திரியங்களான வாய், கை, கால், இரு கீழ்துவாரங்கள் ஐந்து கடைவீதிகளாக விளங்கின. ஆகாயம், காற்று, அக்னி, மண், நீர் எனும் ஐம்பூதங்களும் உலோகங்கள். இவ்வைந்துக்கும் அதிபதியான ஜீவன் நீ. ஆனாலும் அங்கு சென்றதும் நீ உன்னை அறியவில்லை. எப்போது நீ முன் அறிந்ததையும் கேட்டதையும் மறந்து உன் புத்தி என்ற பெண் சொல்வதை கேட்க ஆரம்பித்தாயோ அப்போதே உன் அழிவு துவங்கிவிட்டது. நீ விதர்ப நாட்டரசன் மகளுமில்லை. இந்த வீரன் உன் பதியும் இல்லை, நீ ஒன்பது வாயில் கொண்ட நகரின் அரசனும் இல்லை.
நான் சிருட்டித்த மாயை இது. இதனால் நீ ஒரு பெண் என்றோ ஆணென்றோ எண்ணுகின்றாய். இது இரண்டும் இல்லாத உன் உண்மை சொரூபத்தை எண்ணிப்பார். நாமிருவரும் அன்னப்பறவைகள் போன்ற விவேகிகள். நம் பெருமையை நினைவுக்கு கொண்டு வா. நீயும் நானும் வேறல்ல, நீயே நான்; நானே நீ. இதை அறிந்து கொள். அறிவாளிகள் நம்மில் வேறுபாடு காண்பதில்லை. எப்படி கண்ணாடியிலோ, பிறர் கண்ணிலோ நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் போது இரண்டாகத் தோன்றுகிறதோ அப்படியே நம்மிருவருள்ளும் உள்ள வேறுபாடு.”
பரமாவால் தட்டி எழுப்பப்பட்ட ஜீவன், பரமாவை பிரிந்ததால் காணாமற்போன தன் ஞானத்தை மீண்டும் பெற்றான்! 

Thursday, March 3, 2016

ஜீவனின் சரித்திரம் - 9


சென்ற இடத்தில் ஜீவா பலவித துன்பங்கள் அனுபவித்தான். அவன் சொந்த லாபத்துக்காக யாகங்களில் பலியிட்ட மிருகங்கள் இப்போது அவனை முட்டி கிழித்தன. கத்திகளால் வெட்டின. அளவில்லா இருளில் எண்ணிலா வருடங்கள் கழிந்தன, ஒரு நாள் யாரோ வந்தார்கள். “உன் தண்டனைக் காலம் ஏறத்தாழ முடிந்துவிட்டது, பெண்ணையே நினைத்துக்கொண்டிருந்தாய். அதனால் நீயே ஒரு பெண்ணாக பிறப்பாய்….”

அடுத்து ஜீவா விழித்த போது விதர்ப ராஜ்யத்தில் ராஜாவின் மகளாக பிறந்து இருந்தாள். மலயத்வஜன் என்ற பாண்டி நாட்டு அரசன் தன் வாட் திறமையால் மற்ற அரச குமாரர்களை வீழ்த்தி இவளை இல்லத்தரசியாக அடைந்தான். ஜீவா இவனிடம் கரிய கண்கள் கொண்ட ஒரு மகளையும் ஏழு குமாரர்களையும் பெற்றாள். இவர்கள் வம்சமே பின்னால் தமிழ்நாட்டை ஆண்டது. இந்த பெண்ணை அகஸ்திய முனிவர் மணந்தார். இவர்களது மகன் திட வைராக்கியம் படைத்த த்ருடச்யுதர் என்பவர். இவது புத்திரர் உத்தம முனிவர் என்னும் இத்மவாஹர்.

தகுந்த வயதை எட்டியபோது தன் மகன்களுக்கு நாட்டை பிரித்துக்கொடுத்தான் மலையத்வஜன். பின் ஸ்ரீ க்ருஷ்ணனை ஆராதிக்க திருவேங்கட மலையை அடைந்தான். ஜீவாவும் தன் சௌக்கியங்களை எல்லாம் விட்டு நிலவொளி சந்திரனைத்தொடர்வது போல அவனை பின் தொடந்தாள். சந்த்ரவஸா, தாம்ர பர்ணீ, வடோதகா முதலிய நதிகளின் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தன்ன புனிதப்படுத்திக்கொண்டான். காட்டில் கிடைத்த கிழங்கும் கொட்டை, வேர், பழம், பூ, இலை, புல், நீர் என இவற்றை மட்டும் உணவாகக்கொண்டு தன்னை வருத்திக்கொண்டு தவத்தில் ஈடுபட்டான். ப்ரம்ஹம் ஒன்றே உண்மை என்ற உயர்ந்த எண்ணத்தை மனதில் கொண்டு குளிர் - சூடு, காற்று மழை, பசி தாகம், இனியது -கொடியது. இன்பம் துன்பம் என்னும் இரட்டைகளை வென்றான். தவத்தாலும் ஞானத்தாலும் தன் கர்மங்களை வென்றான். யமம் நியமம் முதலியவைகளை அனுட்டித்து இந்த்ரியங்களையும் ப்ராணனையும் அடக்கி ப்ரம்ஹ நிஷ்டனாக நூறு ஆண்டு காலம் ஓரிடமாக கிடந்தான். தன் உடலினின்று வேறு பட்டு தன் உடலையும் அது குறித்த அறிவையும், அந்த அறிவை ப்ரகாசப்படுத்துகிற ஆன்மாவையும் கண்டு கொண்டான். ப்ரம்ஹத்தில் தன்னையும், தன்னில் ப்ரம்ஹத்தையும் அறிந்து பின் அந்த அறிவையும் துறந்து இவ்வுலகில் இருந்து விடுபட்டான்.

Wednesday, March 2, 2016

ஜீவனின் சரித்திரம் - 8


அனைத்து போகங்களையும் தரும் அந்த நகரியின் காவலன் பஞ்சநகன் இப்போது தளர்ந்து இருந்தான். காலகன்யையின் யவன வீரர்கள் பல திக்குகளில் இருந்து உட்புகுந்தனர். ஒரு வாயில் விடாமல் பிளந்து உட்புகுந்து கண்டதை எல்லாம் நாசம் செய்தனர்.
இப்போதுதான் ஜீவா விழித்துக்கொண்டான். தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தைப்பற்றியும் கவலை கொண்டான். தொடர்ந்து கந்தர்வர்களாலும் யவனர்களாலும் தாக்கப்படும் நகரைக்கண்டான். அவன் மனைவி மதி அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவனது மகன்களோ பேரன் பெயர்த்திகளோ யாரும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஆதரவற்றவனானான். வேண்டா வெறுப்புடன் நகரை விட்டு நீங்க எண்ணினான்.
அபோது ப்ரஜ்வாரம் நகரை அணுகி அதை எரிக்கத்தொடங்கினான். ஜீவாவின் எல்லா சொந்தங்களும் - மனைவி, புத்திரர், பேரன் பெயர்த்திகள், - நகரவாசிகளும் சொல்லொண்ணாத்துன்பம் அனுபவித்தனர். எஞ்சியிருந்த ஒரு சில வீடுகள், களஞ்சியம் இவற்றை தனதாக்கிக்கொண்டு ஆயுட்காலம் முடியும் தருவாயிலும் கூட தன் மனைவியைத்தான் நினைத்தான்.
” நான் இறந்து பரலோகம் போனால் இவள் என்ன செய்வாள்? இவள் எனக்கு உணவிடாமல் தான் உண்ண மாட்டாளே! எனக்கு மேல் அவளுக்கு யாருமில்லையே! நான் கோபித்தால் வருந்துவாள்; திட்டினால் பயந்து பேசாமலிருப்பாள்; தவறு செய்தால் திருத்துவாள்; வெளியூர் சென்றால் விரகத்தால் துன்புறுவாள். அவளது புத்திரர்கள் பெரும் வீரர்கள்தான். இருந்தாலும் நானில்லாமல் அவள் உயிருடன் இருக்க மாட்டாளே! என் பெண்கள் மகன்கள் என்ன ஆவர்?” இப்படி சிந்தித்துக்கொண்டு இருக்கையிலேயே யவனர்கள் அவனை பிடித்துவிட்டனர்.
ஒரு ஆட்டை கட்டி எடுத்துச்செல்வது போல அவனை கட்டி இழுத்துச்சென்றனர். அவனது குடும்ப சேவக பரிவரங்களும் அவனைத்தொடர்ந்து பிடி பட்டு பின் போயினர்.
–
டேய் ஜீவா, இப்போது கூட உன் நண்பனான பரமாவை நீ நினைக்கவில்லையே! உன்னை என்ன செய்ய முடியும்! அப்போதே சொன்னான், உன் கூடவே இருப்பேன், ஆனால் நீ என்னை நினைக்க வேண்டுமே என்று. நீதான் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
ஹும்!

Tuesday, March 1, 2016

ஜீவனின் சரித்திரம் - 7


காலத்தின் மகள் ஒருவள் தனக்கு ஏற்ற கணவன் ஒருவனை தேடி மூவுலகிலும் அலைந்தாள். அவளுக்கு யாரும் திருப்தியாக தோன்றவில்லை. இந்த துர்பாக்கியத்தால் அவள் துர்பகா என்றழைக்கப்பட்டாள். யயாதியின் மகன் புரு ஒருவனே அவளை விரும்பி ஏற்றுக்கொண்டான். அவளோ அந்த திருப்தியுடன் அவனுக்கு ராஜ்யம் என்னும் பரிசை அளித்துவிட்டு மீண்டும் தன் தேடலை துவக்கினாள். ஒரு முறை பூலோகம் நோக்கி சென்று கொண்டிருந்த நாரதரைக் கண்டாள். அவருடைய ப்ரம்ஹ தேஜசை பார்த்து மோகித்து தன்னை ஏற்கும்படி வேண்டினாள். அவரோ தான் நித்திய பிரம்மச்சாரியானதால் இயலாதென்று சொல்லி நிராகரித்துவிட்டார்.
துர்பகா கோபமுற்றாள். ”இப்படி அலைந்து கொண்டிருப்பவளை ஏற்க முடியாதென்றா சொல்லுகிறீர்? நீரும் என்னைப்போல் ஓரிடமின்றி திரிவீர்!” என்று சபித்தாள். நாரதர், “கோபிக்காதே! நீ சென்று அடைய வேண்டியவன் யாரென்று நான் அறிவேன். யவனர்களில் சிறந்தவன் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் பீஷணன். நீ அவனிடம் சென்று உன் பிரச்சினையை சொல்வாயாக” என்றார்.
துர்பகாவும் அவனைச்சென்றடைந்தாள். “அவனைப்பார்த்து “ உம்மை என் கணவனாக வரிக்கிறேன். தர்மப்படியும் நியதிப்படியும் கொடுக்கவோ பெறவோ கூடிய ஒன்றை செய்யாமல் இருத்தாலாகாது. அப்படிச்செய்பவன் பின்னால் அதற்காக வருந்துவது நிச்சயம். ஆகவே என்னை ஏற்பீராக!” என்றாள். பீஷணன் அவளைப்பார்த்து புன்சிரிப்புடன் தெய்வ ரகசியத்தால் உனக்குரிய பதியை நான் அறிந்துள்ளேன். உன்னை அமங்கலமானவளாக உலகோர் நினைக்கின்றனர். அதனால உருவத்தை காட்டாமல் உன்னை வெறுக்கும் உலகையே பதியாக அடைவாயாக!” என்றான். “அப்படிச்செய்தால் உலகே உன்னை ஒழித்துவிடுமோ என்று அஞ்சாதே! என் சைன்யத்தை அழைத்துப்போனால் சுலபமாக உலகை ஒழித்துவிடலாம். எனக்கு ப்ரஜ்வாரன் என்றொரு தம்பி உண்டு. நீ இப்போது என் சகோதரி. உங்கள் அனைவரையும் கொண்டு உலகம் அறியாத வகையில் சஞ்சரித்து ஒழிப்பேன்!” என்றான்.

பின் அனைவரும் சேர்ந்து உலகில் சஞ்சாரம் செய்து பலரையும் அழித்தொழித்தார்கள். நாளடைவில் ஜீவாவின் நகரத்தையும் வந்தடைந்தனர். 

Monday, February 29, 2016

ஜீவனின் சரித்திரம் - 6


காலம் கழியக் கழிய ஜீவாவின் இளமை அவனறியாமல் விட்டுவிட்டு சென்றுவிட்டது. எப்போதும் மயக்கத்தில் இருந்தான். ம்ம்ம்….. இவர்கள் யார்? இவர்கள் என் பிள்ளைகள். பிள்ளைகள் ஆயிரத்து நூற்றுவர்…. என் பெண்கள் நூற்றிப்பத்து பேர்…. ஓ, அனைவருக்கும் விவாஹம் நடத்தியாயிற்றே! ஒவ்வொருவருக்கும் நூறு நூறு மக்கள் உண்டே! இதோ என் செல்லப்பேரன்…. பெயர்த்தி… எத்தனை பேர்கள் இருந்தாலும் இவர்களே என் செல்வமணிகள்…. இவர்கள் நலம் பேணும் பொருட்டு யாகங்கள் செய்வேன். ஹும்! எவ்வளவு கொடூரமான யாகங்களாக இருந்தாலும்தான் என்ன? அனைத்தையும் செய்து தேவர்கள், பித்ருக்கள், பூதகணங்களை திருப்தி செய்வேன். அதன் பின் யாரும் என்னை ஒன்றும் செய்ய முடியாது!
உலகத்தைப்பற்றி ஒரு சிந்தனையும் இல்லாமல் தன் குடும்பத்தை பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு இருந்த ஜீவா முதுமை வந்து சேர்ந்ததை அறியவில்லை.
–
சண்டவேகன் கந்தர்வ அரசன். அவனிடம் 360 கந்தர்வர்கள் கொண்ட சேனை ஒன்று இருந்தது. பகலவன் என்ற கந்தர்வர்களும் நிஷா என்னும் பெயர் கொண்ட கந்தர்வ ஸ்த்ரீக்களும் இருந்தனர். இவர்கள் கையசைக்க ஆசை ஆசையாய் நிர்மாணித்த பொருட்கள் அழிந்துபோகும். இவர்கள் ஜீவாவின் கோட்டையை முற்றுகையிட்டனர். எப்போதும் விழித்திருக்கும் கோட்டைக்காவலன் பஞ்சநாகன் இவர்களை தடுக்க முயன்றான். தன் எழுநூற்று இருபது ’நாடி’ என்னும் வீரர்களுடன் கோட்டையை காக்க முயன்றான். நூறு வருடங்கள் தாக்குப்பிடித்தனர், ஆயினும் கந்தர்வர்களின் பலம் மிகப்பெரிதாக இருந்தது,
ஜீவா இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. ஜனங்கள் மீது வரி விதித்து தான் நன்றாக உண்பதிலும் தன் மனைவியால் பரவசப்படுத்தப்பட்டும் மயக்கத்தில் இருந்தான், காவலன் குறித்து சிந்தையே இல்லாதிருந்தான். தன் நாட்டிற்கோ, நகரத்துக்கோ உறவினர்களுக்கோ வந்த ஆபத்தைப்பற்றி நினைக்கவே இல்லை.

Friday, February 26, 2016

ஜீவனின் சரித்திரம் - 5


என்னவள் எங்கே?”
”அரசே, நாங்கள் அனைவரும் நலமே. ராணியின் சிந்தையில் என்ன இருக்கிறது என்று அறிய மாட்டோம். விரிப்புகூட இல்லாமல் கட்டாந்தரையில் விழுந்து கிடக்கும் உங்கள் மனைவியை அங்கு பாரும்!” எனக்காட்டினர்.
அப்போதுதான் ஜீவா பூமியில் விழுந்து கிடக்கும் தன் ராணி மதியை பார்த்தான். காமத்தால் தூண்டப்பட்டு ஐயோ இவள் ஏன் இப்படி இருக்கிறாள் என துக்கித்தான், இதயம் பரிதவிக்க மெல்லிய சொற்களால் அவளை சமாதானப்படுத்த முயன்றான். அவளது பாதத்தை தொட்டு அவளை எடுத்தள்ளி தன் மடியில் வைத்துக்கொண்டான். “என் அருமை மதி, யார் உனக்கு என்ன அபராதம் செய்தார்கள் சொல்! இப்போதே தண்டிக்கிறேன். எந்த சேவகனானாலும் சரி. அவன் எந்த குலத்தவனானாலும் சரி. நமக்கு வேண்டியவன் என்று நினைத்து எந்த சேவகனை ஒரு எஜமானன் தண்டிப்பதில்லையோ அந்த சேவகன் புண்ணியம் செய்தவனல்ல.
உன் முகம் இப்படி பாழும் நெற்றியுடன் இருக்கிறதே! சிரிப்பை காணவில்லையே! எப்போதும் விளங்கும் சோபை இல்லாமல் போயிற்றே! உடல் தாபத்தால் நடுங்குகிறதே! எனக்கு இது மிகவும் வேதனையாக இருக்கிறது. உன்னை விட்டுவிட்டு வேட்டையாடப்போனது என் பிழைதான். ஏதோ அந்த நேரத்தில் புத்தி கெட்டு உடனே கிளம்ப வேண்டும் என்று தோன்றியதால் கிளம்பிவிட்டேன். என்ன மன்னித்துவிடு. இனி இப்படி செய்ய மாட்டேன். என்றைக்கும் உனக்கு மனம் மகிழும்படிதானே எதையும் செய்கிறேன். இன்றொரு நாள் ஏதோ மாறிவிட்டது. மன்னித்துவிடு. இவ்வளவு வேண்டுகிறேனே? கொஞ்சம் கருணை காட்டேன்!”
அரை மணி கழிந்து மெதுவாக மதி எழுந்து அவனைப்பார்த்து சிரித்தாள். பின் குளித்து புதிய உடைகள் அணிந்து வர இருவரும் பழைய படி உண்டு களித்து சிற்றின்பத்திலேயே ஈடுபட்டனர். பகல் இரவு தெரியவில்லை. இது தனது இது பிறருடையது என ஒன்றும் தெரியவில்லை.

Thursday, February 25, 2016

ஜீவனின் சரித்திரம் - 4


அன்று காலை ஜீவா சீக்கிரமே எழுந்துவிட்டான். முழிப்புத் தட்டி விட்டது. மனைவியுடன் கேளிக்கைக்குப்பின் எப்போது தூங்கினான்? தெரியவில்லை. அவள் இன்னும் தூங்குகிறாள். கொஞ்சம் வெளியே போய் வரலாம். அரண்மனையை விட்டு வெளியே வர அவன் நினைத்த மாத்திரத்தில் ஒரு தேர் வந்து நின்றது. இரண்டு சக்கரங்கள் ஒரு அச்சும் கொண்டு லேசான கட்டுமானம்; வேகமாக செல்லக்கூடியது. சாரதி ஐந்து குதிரைகளை ஐந்து கடிவாளங்களால் ஆண்டான். ஒரு ஆசனம் மட்டுமே இருந்தது. இரு மாற்றுக்குதிரைகளை கட்ட வசதி இருந்தது. சிவப்பு, மஞ்சள், வெள்ளை என மூன்று கொடிகள் மேலே பறந்தன. ஐந்து வித ஆயுதங்கள் இருந்தன. ஏழு கவசங்கள் ஏற்றப்பட்டு இருந்தன. வினோதமான அது நாற்புறமும், தேவையானால் மேற்புறமும் கூட நகரும் போல் தோன்றியது. ஜீவா தங்க கவசம் பூண்டிருந்தான். குறைவுறா அம்பறாதூணியை சரி செய்து கொண்டான். பத்து சேவகர்களும் பதினோராவதாக சேனாதிபதியும் உடன் வர ஐந்து மலைச்சரிவுகள் கொண்ட காட்டை நோக்கி தேர் நகர்ந்தது.

வேட்டை வெகு உக்கிரமாக நடந்தது. அசுரர்கள் போல கருணையில்லாமல் வேட்டையாடினான். கூரிய அம்புகளால் கண்டதனைத்தையும் கொன்றான்.
வனத்தில் மிருகங்கள் பல்கிப்பெருகிவிட்டாலும், குடி மக்கள் மிருகங்களால் தொந்திரவு அதிகமாகிவிட்டது என்று புகார் செய்தாலும், உணவுக்கு எனில் தேவையான அளவு மட்டும் வேட்டைகளில் அரசர்கள் ஈடுபடுவது தர்மமே என்றாலும் அதே தர்மம் எந்த மிருகங்களை கொல்லலாம் எதைக்கொல்லக்கூடாது என்று விதிக்கிறது. அதை அவன் பொருட்படுத்தவில்லை. ’அதோ சாதுவாக விளையாடுகிற முயல். எவ்வளவு அழகாக பார்த்து சிரிக்கிறது. கொல்லு! அடடா! இந்த காட்டுப்பன்றிகள் எவ்வளவு ஆக்ரோஷமாக பாய்ந்து வருகிறது! கொல்லு! சோம்பலே உருவான எருமைகள்… கொல்லு!’ என்று எல்லாம் அவன் அம்புகளுக்கு இரை ஆகின. கொன்று கொன்று நாள் முடிவில் உடல் சோர்வு அடைந்தான். பசியும் தாகமும் பீடிக்க ஜீவா அரண்மனை திரும்பினான். சோர்வு நீங்க வென்னீரில் குளித்து உணவுண்ட பின் தன் ராணியின் நினைவு வந்தது. வேட்டை கிளப்பி விட்டிருந்த உத்ஸாஹமும் திருப்தியும் அடுத்து அவனை காமத்தை வேட்க வைத்தன. ராணியை தேடி காணமல் நொந்து அவளது சேடிகளை கேட்டான். “இனியவர்களே, நீங்களும் உங்கள் எஜமானியும் உடல் நலமாகத்தானே இருக்கிறீர்கள்? யாருக்கும் ஏதேனும் சுகவீனமா? என் பத்னி எங்கே? தாயோ பதிவிரதையான மனைவியோ இல்லாத வீட்டில் யார் சுகமாக இருக்க இயலும்? ஒடிந்த ரதத்தில் உக்காருவது போலிருக்கிறது. என் துக்கத்தை எப்போதும் நீக்கி உத்ஸாஹத்தை அளிக்கும் என்னவள் எங்கே?”

Wednesday, February 24, 2016

ஜீவனின் சரித்திரம் - 3


கோட்டையை சுற்றிப்பார்த்த ஜீவா அதன் முன் புற வாயில்கள் ஒளி பொருந்தியவையாக இருக்கக்கண்டான். கத்போதம் என்ற ஒன்றன் வழியாக ஒளி விட்டுவிட்டு மின்மினிப்பூச்சி போல் முனுமுனுத்தது, ஆவிர்முகம் என்ற மற்றதன் வழியாக ஒளி வெளியே பாய்ந்தது, இவற்றின் ஒளியாலேயே மக்கள் தம் வேலைகளை செய்கிறார்கள் எனக்கண்டான்.
நளினி. நாளினி என்ற இரண்டு வாயில்கள் வழியாக இனிய காற்று நகருள் புகுந்து வெளியேறியது. ஹா! இந்த வாயில் இன்னும் பெரியதாக இருக்கிறது. இதன் வழியேதான் கடைச்சரக்குகளும் பல வகை தானியங்களும் பால், பழரசங்கள் ஆகியவையும் கோட்டைக்குள் வருகின்றன, போகின்றன. ம்ம்ம் தெற்குப்பக்கம் இருப்பது என்ன? அதன் பெயர் பித்ருஹூ என்று எழுதி இருக்கிறது. இதன் வழியே போனால்? அது தெற்கு பாஞ்சால தேசத்துக்கு போவதாக தோன்றுகிறது. அப்போது வடக்கே உள்ளது வடக்கு பாஞ்சால தேசத்துக்கு வழியா? ஆமாம். அப்படித்தான். பின்பக்கம் இருந்த கோட்டை வாயில் வழியே பார்க்கலாம். ம்ம்ம் சில கிராமங்கள் தெரிகின்றன. ஓடைகளும் வாய்க்கால்களும் தெரிகின்றன. அதன் பக்கத்தில் நிர்ருதி என்று பெயரிட்ட வாயில்… க்க்க்… இது வழியே போகுமிடம் மஹா அசுத்தமாக இருக்கும் போலிருக்கிறதே!
இந்த நகரத்து நீதிபதிக்கு கண்பார்வை இல்லை. ஆனாலும் அவர் பாட்டுக்கு போய்க்கொண்டு இருக்கிறார். போக வேண்டிய வழியை காட்டுகிறார். இங்குள்ள பொற்கொல்லனும் கண்பார்வை இழந்தவனே! இருந்தாலும் எப்படி அழகான நகைகளை உருவாக்குகிறான்!

நல்ல காலம்! நாம் ஆட்சி செய்ய மற்றவர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் கண்பார்வை உடையவர்களே!

அந்தப்புரத்துக்கு போகையில் ஜீவா மதிமயக்கமுற்றான், மிகுந்த கிளர்ச்சியும் திருப்தியும் ஏற்பட்டன. நாளடைவில் தன் மனையாள் சொல்வதை மட்டுமே கேட்பவன் ஆகிவிட்டான். அவள் சுகித்தால் தானும் சுகித்து அவள் துக்கித்தால் தானும் துக்கித்து அவளுடம் மதுபானம் செய்து, புசித்து, பாடி, ஆடி, ஓடி, அமர்ந்து, படுத்து, கேட்டு, பார்த்து, நுகர்ந்து, தொட்டு என்று எல்லா வகையில் அவள் செய்வதையே தானும் செய்தான். அவளுக்கு அடிமையாகி தன் பெருமை அனைத்தும் இழந்து விருப்பமில்லாவிட்டாலும் அவளையே அண்டி பேடித்தனத்துடன் விளையாட்டு மான் போலத்திரிந்தான்.

Tuesday, February 23, 2016

ஜீவனின் சரித்திரம் - 2


அவள் பின்னே சற்று விலகி நின்றனர் சேவகர் பதின்மர். செயலுக்கு துடிப்பவர் ஐவர். உள்ளதை உள் வாங்கும் உணர்வோடு நிற்பவர் ஐவர். ஒவ்வொருவரும் ஒரு விதம். பார்க்கையில் ஒவ்வொருவரின் பின்னும் நூற்றுக்கணக்கான வேலையாட்களும் சேடிகளும் இருந்ததாக தோன்றியது. முன்னாலோ ஐந்து பெரிய நாகங்கள் இடையறாது உலவின. ஒவ்வொன்றும் ஒரு விதமாக இருந்தாலும் அவற்றின் உலாவல் ஒரு பெரிய ஐந்து தலை நாகமோ என்று மயக்கத்தை கொடுத்தது.

நாணம் கலந்த புன்சிரிப்புடன் கூடிய அவளது பார்வையில் வீழ்ந்த ஜீவா மென்று விழுங்கி பேசலானான். “ கமலக்கண்ணி நீ யார்? நற்குணங்கள் படைத்தவள் போலிருக்கிறாய். நீ யாரைச்சேர்ந்தவள்? எங்கிருந்து வந்தாய்? இந்த நகரில் உனக்கு என்ன வேலை? உன்னுடைய இந்த சேவகர்கள் யார்? இந்த சேடிகள் யார்?
இந்த ஐந்து தலை நாகம் எப்படிப்பட்டது? அது ஏன் உன் முன் உலவுகிறது?
நீ ரமா தேவியா? பூமி தேவியா? சரஸ்வதியா? உமையா? இருக்காது, உன் கால்கள் பூமி மேல் படுகின்றன. முனிவர்போல இந்த வனத்தில் சஞ்சரிக்கிறாயே? உன் கணவனைத்தேடுகிறாயா?”
கேட்கத்தயங்கின கேள்வி திடுதிப்பென்று வெளியே வந்து விட்டது, “என்னை திருமணம் செய்துகொள்ளுகிறாயா?”

கம்பீரத்தை இழந்து யாசிக்கின்ற அந்த வீரனை பார்த்து அந்த பெண் தானும் காமமுற்று பேசலானாள். என் பெயர் மதி. நான் இங்கே இருக்கிறேன். அது மட்டுமே எனக்குத்தெரியும். எனக்கு தாய் தந்தை உண்டா, யாரவர்கள் என்பதெல்லாம் தெரியவே தெரியாது. இந்த ஆடவர்கள் பெண்கள் எல்லாரும் என் தோழர்கள். இந்த நகரத்தை யார் நிர்மாணித்தார்கள்? தெரியாது. இந்த நாகம் இந்த நகரின் பாதுகாவலன் போலிருக்கிறது, நான் உறங்கும்போது கூட இது இந்த நகரத்தை காத்து வருகிறது.
என்ன செய்வது என்று புரியாது இருக்கும் வேளையில் தெய்வமே அனுப்பியது போல தாங்கள் வந்து இருக்கிறீர்கள், உலக சுகங்களை விரும்புகிறீர்கள். நீர் நல்ல ரசிகனாக தெரிகிறீர். அறிஞரும் கூட. உமக்கல்லாது யாருக்கு நாங்கள் சுகத்தை கொடுப்போம்? நீரே இந்த நகரை ஆளும். நூறு வருடங்களுக்கு உங்களுக்கு நாங்கள் சுகங்களை அளிப்போம்.

நாம் மணந்து கொண்டு புத்திர புத்திரிகளை பெறுவோம். சுற்றம் இல்லாதவர்களுக்கு என்னத்தான் கிடைக்கும்? அறம், பொருள், இன்பம், மக்கட்பேறு, அம்ருதத்தை போன்ற சுக்லம், புகழ், சோகமும் மாசும் இல்லாத அனுபவங்களை வேறு யார் பெறக்கூடும்? முன்னோர்களுக்கோ தேவர்களுக்கோ முனிவர், மற்ற மனிதர்கள், விலங்குகள் எல்லாவற்றுக்கும் நன்மை செய்து தனக்கும் நன்மை செய்துக்கொள்ளக்கூடியவன் இல்லறத்தை அனுசரிப்பவன்தான். உங்கள் தோள்களைப்பார்த்தால் நாகம் படமெடுத்தது போலிருக்கிறது. இந்த வலிய தோள்களின் வலிமைக்கு யார் மயங்க மாட்டார்கள்?”
இப்படி பரஸ்பரம் மனமொப்பியே தாங்கள் மணந்து கொண்டதாகி பாணர்கள் பாட நகருள் புகுந்தனர்.