Pages

Tuesday, November 30, 2010

ஆசன ஜயம் ஏற்பட்டதற்கு அறிகுறி:ततो द्वन्द्वानभिघातः ।।48।।
ததோ த்³வந்த்³வாநபி⁴கா⁴த​: || 48||

தத: = அதனால் (ஆசன ஜயத்தால்); த்³வந்த்³வ = (குளிர் சூடு போன்ற) இரட்டைகளால்; அநபி⁴கா⁴த​: = பீடை உண்டாவதில்லை.
சாதாரணமாக நம் வாழ்க்கையில் இந்த இரட்டைகளை நிறையவே பார்க்கலாம். துக்கம் சுகம்; சூடு குளிர் , இது போல. அதாவது ஒரு விஷயத்தின் இரு முனைகள். சில விஷயங்கள் - சூடு போல- ஒரு நீண்ட அளவில் எங்கே வேண்டுமானலும் இருக்கலாம் இல்லையா? நமக்கோ ஒரு குறிப்பிட்ட அளவே பிடிக்கும். காப்பியில் சர்க்கரை இவ்வளவுதான் இருக்கணும், அப்போதுதான் நமக்கு பிடிக்கும் என்று இருக்கலாம். அப்படி இல்லாமல், கூடுதலோ குறைவோ எவ்வளவு இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் இருப்பதையே இரட்டைகளால் பீடை என்றது. குளிர் காலமானாலும் வெயில் காலமானாலும் ஒரே மாதிரி பாவிக்கிறதும் இதேதான்.

இப்படி ஒரு சித்தி ஏற்பட்டபின் செய்யக்கூடியது ப்ராணாயாமம்.


Monday, November 29, 2010

ஆசனத்துக்கான ஸாதனம்:
  प्रयत्नशैथिल्यानन्त्यसमापत्तिभ्याम् ।।47।।
ப்ரயத்நஶைதி²ல்யாநந்த்யஸமாபத்திப்⁴யாம் || 47||

ப்ரயத்ந ஶைதி²ல்ய= சரீரத்தை ஒரு நிலைக்கு கொண்டுவர எடுத்துக்கொள்ளும் முயற்சியை குறைத்துக்கொள்வதும்; அநந்த்ய = ஆதிசேஷனிடத்தில்; ஸமாபத்திப்⁴யாம் = மனதைச் செலுத்துவதும்; (ஆசன ஜயத்துக்கான சாதனங்கள்.)

கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு இல்லே?! ஏதேனும் செய்ய முடியலைன்னு சொன்னா இன்னும் முயற்சி செய்ன்னு சொல்வதே சாதாரணமாக பார்ப்பது. இங்கே மாறாக சொல்கிறார். ஆசனம் சரியா வரல்லியா, ரொம்ப முயற்சி செய்யாதே! மஹா விஷ்ணுவோட ஆசனமா இருக்கிற ஆதி சேஷனை வேண்டிக்கொள் என்கிறார்.


Saturday, November 27, 2010

ஆஸநம்
  स्थिरसुखमासनम् ।।46।।

ஸ்தி²ரஸுக²மாஸநம் || 46||

ஸ்தி²ர = ஸ்திரமான, அசைவையுண்டாக்காத; ஸுக²ம் =சுகத்தை தருவதுமானது; ஆஸநம் =ஆசனமாகும்.
இவை பலவிதமாக சொல்லப்படுகின்றன. இவற்றில் (வாசஸ்பதி மிஸ்ரர் வ்யாக்கியானத்தை ஒட்டி) சிலதை பார்க்கலாம்:
1.பத்மாஸனம். 2.பத்ராஸனம்.3.ஸவஸ்திகம். 4.தண்டகாஸனம். 5. ஸோபாஸ்ரயம். 6. பர்யங்காஸனம்.7.க்ரௌஞ்ச நிஷதனம். 8.ஹஸ்தி நிஷதனம். 9.உஷ்ட்ர நிஷதனம். 10. ஸமஸம்ஸ்தானம். 11. ஸ்திர ஸுகம்.
பத்மாஸனம் என்பது இரண்டு பாதங்களையும் இரு துடைகள் மீது வைத்து உட்காருதல்.
இரண்டு குதி கால்களையும் வ்ருஷணத்தின் சமீபத்தில் சேர்த்து வைத்து அதன் மீது இரண்டு கைகளையும் வைத்துக்கொள்ளுதல் பத்ராஸனம்.
இடது காலை மடக்கி வலது துடை, முழங்கால் இவற்றின் இடையிலும் அதேபோல வலது காலை மடக்கி இடது துடை, முழங்கால் இவற்றின் இடையிலும் வைத்துக்கொள்ளுதல் ஸ்வஸ்திகம்.
பூமியில் உட்கார்ந்து கால்களை நீட்டி இரண்டு குதி கால்களையும் காலில் உள்ள விரல்களையும் ஒன்று சேர்த்து செய்வது தண்டாஸனம்.
பூமியில் உட்கார்ந்து இரண்டு முழங்கால்களையும் சேர்த்து இடுப்பை சுற்றி ஒரு வஸ்திரம் அல்லது பட்டு முதலியவற்றால் சுற்றிக்கட்டிக்கொள்வது ஸோபாச்ரயம். முழங்காலில் கையை வைத்துப் படுத்துக் கொள்ளுதல் பர்யங்காஸனம். க்ரௌஞ்சம் என்ற பட்சி பூமியில் உட்கார்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி தானுமிருப்பது க்ரௌஞ்ச நிஷ்தனம். யானை பூமியில் படுத்தால் போல் தான் இருப்பது ஹஸ்தி நிஷதனம். பூமியில் படுத்த ஒட்டகத்தைபோல இருப்பது உஷ்ட்ர நிஷதனம் பூமியில் உட்கார்ந்து இரண்டு முழங்கால்களையும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைத்துக்கொள்வது ஸம்ஸம்தானம். எப்படி இருந்தால் உடலுக்கு நிலையான சுகம் ஏற்படுமோ அப்படி இருப்பது ஸ்திரசுகம்.


Friday, November 26, 2010

ஈச்வர பிரணிதானம்:
  समाधिसिद्धिरीश्वरप्रणिधानात् ।।45।।

ஸமாதி⁴ஸித்³தி⁴ரீஶ்வரப்ரணிதா⁴நாத் || 45||

ஈஶ்வர ப்ரணிதா⁴நாத் = எல்லாவற்றையும் ஈச்வரனிடம் அர்ப்பணிப்பதால்; ஸமாதி⁴ ஸித்³தி⁴ =ஸமாதியானது சித்திக்கிறது.
இறைவனிடம் எல்லா கர்மங்களையும் அர்ப்பணித்து அவரிடம் பக்தி செலுத்தி விட்டால் அது ஈஶ்வர ப்ரணிதா⁴நம். இதனால் வேறு தேசத்தில் உள்ளதையும், வேறு எந்த காலத்தில் உள்ளதையும் தடையில்லாமல் அறிந்து கொள்கிற திறமை உண்டாகும்.

இது வரை யமம் நியமம் ஆகியவற்றால் உண்டாகும் பலன்களைப் பார்த்தோம். இனி ஆசனம் முதலிய யோகாங்களின் பலன்களைப் பார்க்கலாம்.

Thursday, November 25, 2010

ஸ்வாத்யாயம்:
  स्वाध्यायादिष्टदेवतासंप्रयोगः ।।44।।

ஸ்வாத்⁴யாயாதி³ஷ்டதே³வதாஸம்°ப்ரயோக³​: || 44||

ஸ்வாத்⁴யாயாத்³ = சுய அத்யாயத்தினால்; இஷ்ட தே³வதா =இஷ்டர்களின், தேவதைகளின்; ஸம்°ப்ரயோக³​:= தரிசனமும் கிடைக்கிறது.
ஸ்வாத்⁴யாயம் என்பது தன் வேத பாகத்தையோ, ப்ரணவம் அல்லது தனக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரங்களையோ அல்லது மோக்ஷ சாதனமான நூல்களையோ தினசரி பயின்று வருதல். இதை திடமாக செய்ய இஷ்டர்கள் எனப்படும் மகரிஷிகளுடைய தரிசனமும் தேவதைகளின் தரிசனமும் கிடைக்கிறது. அவர்கள் இவனுக்கான காரியங்களையும் செய்கின்றனர் என்று பாஷ்யங்கள் சொல்கின்றன.

Wednesday, November 24, 2010

தபஸில் நிலை நிற்பதால் உண்டாகும் பலன் :
  कायेन्द्रियसिद्धिरशुद्धिक्षयात्तपसः ।।43।।

காயேந்த்³ரியஸித்³தி⁴ரஶுத்³தி⁴க்ஷயாத்தபஸ​: || 43||

காய -உடலின்; இந்த்³ரிய = இந்திரியங்களின்; ஸித்³தி⁴ = சித்தியானது; அஶுத்³தி⁴ = அசுத்தியின்; க்ஷயாத் = தேய்தலால்; தபஸ​: தபஸால் (உண்டாகிறது)

தபஸால் தமோகுணத்தின் காரியமான ஆவரணம் முதலியன தேய்ந்ததும் சரீர சித்திகளான அணிமா முதலியவைகளும் இந்திரிய சித்திகளான தொலை தூரத்தில் ஒலிப்பதை கேட்டல் (தூர ச்ரவணம்) முதலானதும் உண்டாகின்றன.

Tuesday, November 23, 2010

ஸந்தோஷப் ப்ரதிஷ்டை:
संतोषादनुत्तमः सुखलाभः ।।42।।

ஸம்°தோஷாத³நுத்தம​: ஸுக²லாப⁴​: || 42||

ஸம்°தோஷாத்³= கிடைத்தது போதுமென்ற எண்ணத்தில் இருந்து; அநுத்தம​: =நிகரற்ற; ஸுக²லாப⁴​: = சுகம் கிடைக்கிறது.
தெய்வாதீனமாக கிடைத்ததில் திருப்தி அடைந்து அதைவிட உயர்ந்தவற்றில் ஏற்படக்கூடிய ஆசையை கொள்ளாதிருத்தல் சந்தோஷம் எனப்படும். அப்படிப்பட்ட சந்தோஷத்தில் நிலைபெற்றவனுக்கு ஈடு இணையில்லா சுக லாபம் உண்டாகிறது.
ஆசையை ஒழிப்பதால் உண்டாகும் சுகத்தின் பதினாறில் ஒரு பங்குக்கு கூட "உலகில் விஷய அனுபவத்தால் உண்டாகும் சுகமும், தேவ லோகத்தில் கிடைக்கும் சுக2மும் ஈடு ஆக மாட்டா"
யச்ச காமம் சுக2ம் லோகே யச்ச திவ்யம் மஹத்சுக2ம்| த்ருஷ்ணாக்ஷய ஸுக2ஸ்யைதே நார்ஹத: ஷோடஷீம் கலாம் ||
தன் யௌவனத்தை தானம் செய்த புரூவிடம் தந்தை யயாதி சொல்கிறார்:
யா துஸ்த்யஜா து3ர்மதிபி: யா ந ஜீர்யதி ஜீர்யத:| தாம் த்ருஷ்ணாம் ஸம்த்யஜத் ப்ராக்ஞா ஸுகே2நைவ அபி4பூர்யதே ||
கெட்ட புத்தி உள்ளவர்களுக்குத்தான் ஆசையை விட முடியாது. கிழவனானவனுக்கு இந்திரியங்கள் கிழத்தனத்தை அடைவது போல ஆசையும் கிழத்தனத்தை அடைய வேண்டும். புத்திமானான புருஷன் ஆசையை விலக்கினால் அவனுக்கு சுக நிறைவு ஏற்படும்.

Monday, November 22, 2010

மனதின் அழுக்கு நீங்குவது..सत्त्वशुद्धिसौमनस्यैकाग्रतेन्द्रियजयात्मदर्शनयोग्यत्वानि च ।।41।।

ஸத்த்வஶுத்³தி⁴ஸௌமநஸ்யைகாக்³ரதேந்த்³ரியஜயாத்மத³ர்ஶநயோக்³யத்வாநி ச || 41||

ஸத்த்வஶுத்³தி⁴ = மனதின் அழுக்கு நீங்குவதும்; ஸௌமநஸ்ய = (அதன் மூலம்) நல்ல மனமாக தெளிவு அடைவதும்; ஐகாக்³ர = குவிக்கப்பட்ட ; இந்த்³ரிய= இந்திரியங்களின்; ஜய = ஜெயிப்பதும்; ஆத்ம த³ர்ஶந = ஆன்மாவை தரிசிப்பதற்கு (ஆத்ம ஞானத்துக்கு) யோக்³யத்வாநி ச = யோக்யனாக உள்ள தன்மையும் கூட [பவந்தி= உண்டாகின்றன.]
நீர், சவுக்காரம், மண் இவற்றால் உடலில் உண்டாக்கிக்கொள்வது பாஹ்ய சௌசம். மனதில் உள்ள காமம் குரோதம் முதலியவற்றை போக்குவது ஆந்தர சௌசம். 40 இல் வெளி சுத்தம் சொல்லப்பட்டது. இங்கே உள் சுத்தம் சொல்லப்படுகிறது. ஆந்தர சௌச ப்ரதிஷ்டை அடைந்தவனுக்கு சித்தத்தின் காம க்ரோதாதிகள் நீங்குகின்றன. இதனால் சித்தம் தெளிந்து இந்திரியங்கள் தன் வசப்படும். அப்படி ஆகும்போது மனது ஆத்மக்ஞானத்தை அடைய யோக்கியதையை அடைகிறது.

Sunday, November 21, 2010

நியம சித்திகள்:
  शौचात्स्वाङ्गजुगुप्सा परैरसंसर्गः ।।40।।
ஶௌசாத்ஸ்வாங்க³ஜுகு³ப்ஸா பரைரஸம்°ஸர்க³​: || 40||

ஶௌசாத் = சுத்தத்தில் (நிலை பெற்றவனுக்கு) ; ஸ்வாங்க³= ஸ்வ அங்க= தன் உடலில்; ஜுகு³ப்ஸா = வெறுப்பும்; பரை = மற்றவர் சரீரத்துடன்; அஸம்°ஸர்க³​: = சேராமையும் (உண்டாகிறது)
[பிற கலாசாரங்கள் கைகுலுக்குவதையும், கட்டித்தழுவுவதையும் ஆதரித்தாலும் ஹிந்து கலாசாரத்தவர் சாதாரணமாக அப்படி செய்ததில்லை. அப்படித்தான் ஸ்ருதிகளும் சாஸ்திரங்களும் விதித்து உள்ளன. பிற சரீரங்களை தொடாமல் பழகி பின் தன் சரீரத்தின் மீதும் வெறுப்பு உற்று இனி சரீரம் வேண்டாம் என வைராக்கியம் கொண்டு முக்திக்கு முயற்சிக்க வேண்டுமென தாத்பர்யம்.]

Saturday, November 20, 2010

அபரிக்ரஹ சித்திகள்:

  अपरिग्रहस्थैर्ये जन्मकथान्तासंबोधः ।।39।।
அபரிக்³ரஹஸ்தை²ர்யே ஜந்மக தா²ந்தாஸம்°போ³த⁴​: || 39||

அபரிக்³ரஹஸ்தை²ர்யே = பரிக்ருஹம் செய்யாதவனுக்கு; ஜந்ம கதா²ந்தா = முன் பிறவிகளின்; ஸம்°போ³த⁴​: = தன்மையும் தெளிவும் உண்டாகிறது.
சாதாரணமாக யாரும் ஏதும் இலவசம் என்று கொடுத்தால் 'அப்பாடா' என்று வாங்கி வைத்துக் கொள்கிறோம். அது தவறு. ஒரு பொருளை ஒருவரிடம் வாங்கும் போது கண்ணுக்குத் தெரியாமல் (அத்ருஷ்டமாக) சிலதையும் வாங்கிக்கொள்கிறோம். இதனால் விஷயம் அறிந்த பெரியோர்கள் யாரிடமும் எதுவும் கேட்டோ, தானாக வந்தாலுமோ கூட அப்படியே பெற்றுகொள்ள மாட்டார்கள். இப்படி வாங்கிக்கொள்வது பரிகிரஹம் ஆகும். அபரிக்ரஹம் அப்படி வாங்காமல் இருப்பது.


Friday, November 19, 2010

ப்ரம்ஹசர்ய சித்திகள்:
  ब्रह्मचर्यप्रतिष्ठायां वीर्यलाभः ।।38।।
ப்³ரஹ்மசர்யப்ரதிஷ்டா²யாம்° வீர்யலாப⁴​: || 38||

ப்³ரஹ்மசர்ய ப்ரதிஷ்டா²யாம்° = பிரம்மசர்யத்தில் நிலை பெற்றவனுக்கு (ரகசிய இந்திரியத்தை அடக்கி வீர்யத்தை வீணாகாமல் செய்பவனுக்கு) வீர்ய = ஒப்புயர்வற்ற ஸாமர்த்தியம்; லாப⁴​: = கிடைக்கிறது.
(இந்த ப்ரம்மச்சரிய பிரதிஷ்டை இல்லாதவர் செய்யும் மந்திர உபதேசம் வீணாகிறது. இக்காலத்தில் மந்திரங்கள் பலிப்பதில்லை என உபதேசம் பெற்றவர் எண்ணுகின்றனர்)

Thursday, November 18, 2010

அஸ்தேய ஸித்தி:आस्तॆय प्रतिश्ठायाम् सर्वरत्नॊपस्थानम् |37||

அஸ்தேய ப்ரதிஷ்டா²யாம்° ஸர்வரத்னோபஸ்தா2னம் ||37||

அஸ்தேய = பிறர் சொத்தில் ஆசை கொள்ளாதிருத்தல்; ப்ரதிஷ்டா²யாம்°= நிலை நின்றவன்(க்கு); ஸர்வ ரத்னோபஸ்தா2னம் = பூமியிலுள்ள எல்லா ரத்தினங்களும் எதிர்படுகின்றன.

Wednesday, November 17, 2010

ஸத்ய ஸித்தி:
  सत्यप्रतिष्ठायां क्रियाफलाश्रयत्वम् ।।36।।
ஸத்யப்ரதிஷ்டா²யாம்° க்ரியாப²லாஶ்ரயத்வம் || 36||

ஸத்ய = ஸத்தியத்தில்; ப்ரதிஷ்டா²யாம்°= நிலை நின்றவன் (முன்னிலையில் அவன் வாக்குக்கு ); க்ரியா = கிரியை; ப²லா = பலனை; ஶ்ரயத்வம் = அடையும் தன்மையுடையதாகிறது.
81 வகை அஸத்தியங்களையும் விலக்கி சத்தியமானது நிலைநாட்டப்பட்டால் (ஸத்தியப்பிரதிஷ்டை இருப்பவன்) சொல்வது பலிக்கும். ஒரு கடைநிலை நபரைப்பார்த்து நீ நல்லவனாவாய் என்றால் அப்படியே நல்லவனாகி விடுவான். நீ சொர்க்கம் போவாய் என்றால் அப்படியே சொர்க்கத்துக்கு போய்விடுவான். இப்படி புதிதாக ஒரு கிரியை அல்லது பலனை தர வல்லவன் சத்ய பிரதிஷ்டை உள்ளவன்.

Tuesday, November 16, 2010

அஹிம்ஸா ஸித்தி
  अहिंसाप्रतिष्ठायां तत्सन्निधौ वैरत्यागः ।।35।।
அஹிம்°ஸாப்ரதிஷ்டா²யாம்° தத்ஸந்நிதௌ⁴ வைரத்யாக³​: || 35||

அஹிம்°ஸா =அஹிம்சையில்; ப்ரதிஷ்டா²யாம்° = நிலைத்து நின்றவுடன்; தத்ஸந்நிதௌ⁴ = அவன் சந்நதியில்; வைர த்யாக³​: = விரோதத்தை விட்டுவிடுவதானது உண்டாகிறது.
எவன் இந்த 81 வகை ஹிம்சைகளையும் விரோதியாக பாவித்து விலக்கி அஹிம்சையை கடைபிடிக்கிறானோ அவன் முன்னிலையில் இயற்கையாக விரோதம் காட்டும் உயிர்கள் கூட (பூனை- எலி; பசு - புலி; பாம்பு -கீரி) பரஸ்பரம் சினேகத்துடன் பழகும்.

Friday, November 12, 2010

இடையூறுகள் மேலும்...
वितर्का हिंसादयः कृतकारितानुमोदिता लोभक्रोधमोहपूर्वका मृदुमध्याधिमात्रा   दुःखाज्ञानन्तफला इति प्रतिपक्षभावनम् ।।34।।
விதர்கா ஹிம்°ஸாத³ய​: க்ரு«தகாரிதாநுமோதி³தா லோப⁴க்ரோத⁴மோஹபூர்வகா ம்ரு«து³மத்⁴யாதி⁴மாத்ரா து³​:கா²ஜ்ஞாநந்தப²லா இதி ப்ரதிபக்ஷபா⁴வநம் || 34||

விதர்கா = இடையூறுகள்; ஹிம்°ஸாத³ய​: = ஹிம்சை முதலானவை; க்ரு«த = தன்னால் செய்யப்பட்டவை; காரித = பிறரால் செய்யப்பட்டவை; அனு மோதி³தா = ஒருவனுக்கு நிகழ்ந்த ஹிம்சையை நல்ல வேளையாக நடந்தது என மகிழ்ச்சியுடன் எண்ணுவதுமாகும்; லோப⁴ க்ரோத⁴ மோஹ பூர்வகா= லோபம், க்ரோதம், மோஹம் இவற்றை காரணமாகக் கொண்டவை; ம்ரு«து³மத்⁴யாதி⁴மாத்ரா = மெதுவாகவும், நடு நிலையாகவும், அதிகமானதாவும்; து:க அஜ்ஞாநந்த பலா = (நரகம் முதலான) துக்கத்தையும், அக்ஞானத்தையும், முடிவில்லாத பிராந்தி, சந்தேகம் முதலியவற்றை பயனாக கொண்டவையாகவும் ஆகின்றன; இதி ப்ரதிபக்ஷபா⁴வநம் = இப்படியாக விதர்க்க விரோதியை எண்ண வேண்டும்.

விதர்க்கங்கள் மும்மூன்று விதங்கள். இவை ஒவ்வொன்றும் மும்மூன்று விதங்கள். ஆக இவை 81 வகைகள்.
ஒருவன் தானே ஹிம்சை செய்யலாம். தூண்டிவிட்டு பிறரால் செய்யலாம். இல்லை தெய்வாதீனமாக நடந்த ஹிம்சை ஒன்றை எண்ணி "நல்லா வேணும்" என்று சந்தோஷப்படுவதாக இருக்கலாம். (க்ருதம், காரிதம், அனுமோதிதம் என்ற ஹிம்சைகள். )

இப்படி செய்கிற ஹிம்சைகள் மனம், சொல், உடலால் இருக்கலாம்.

இப்படி தானே செய்கிற ஹிம்சைக்கு தூண்டுதல் ஆசையாக இருக்கலாம் (அதன் பெயர் லோபம்). தனக்கு தீங்கிழைத்தவன் மீதுள்ள கோபத்தால் செய்வது குரோதம். ஹிம்சை செய்வதால் தனக்கோ மற்றவர்களுக்கோ லாபம் ஏற்படும் என நினைத்து செய்தல் மோஹம். இப்படி லோபம், குரோதம், மோஹம் என்று மூன்று காரணங்கள் இருக்கலாம். இது போன்றவை வேகாரிதம் ஆகும். இப்படி இதே போல பிறர் மூலம் தூண்டிவிட்டு செய்வது, நடந்ததை எண்ணி மகிழ்வது இவற்றிலும் மும்மூன்றாக மொத்தம் 9 விதம்.

இவை தீவிரத்தை பொறுத்து மிதம், மத்தியமம், அதி மாத்ரம் என மூன்றாகும். இவை ஒவ்வொன்றும் மீண்டும் மெதுவில் மெது, மெதுவில் மத்தியமம் என்பது போல மும்மூன்று விதமாகும். ஆக மொத்தம் 81. இப்படியாக ஹிம்சைகள் வரும்போது அவற்றை விரோதியாக பாவித்து பிரதி பக்ஷ பாவனம் செய்ய வேண்டும்.

இப்படியான ஹிம்சையை செய்ய நரகம் முதலான துக்கமும், பசு போன்ற பிறவி எடுத்து அக்ஞானமும், அல்லது இதே பிறவியில் அறிவு மயக்கம், சம்சயம் முதலானவையும் உண்டாகும் என எண்ணுபவனுக்கு இந்த தடைகள் விலகி விடுகின்றன. இவ்விதமாகவே அஸத்யம், ஸ்தேயம், அப்பிருமச்சரியம், பரிக்கிரஹம், அசௌசம், அஸந்தோஷம், அதபஸ், அஸ்வாத்யாயம், ஈச்வர பிரணிதானம் செய்யாமை ஆகியனவும் தனித்தனியாக 81 வித தடைகளாக ஆகும். இப்படி நேரும் போதெல்லாம் அவற்றின் விளைவை -துக்கம் அக்ஞானம், முடிவற்ற துன்பம் ஆகியனவற்றை -எண்ணிப்பார்ப்பவன் இந்த தடைகளில் இருந்து தப்பிக்க ப்ரதிபக்ஷ பாவனம் செய்கிறான்.

இப்படி தடைகளை தாண்டி இடையூறு ஏதுமின்றி யோகாங்க அனுஷ்டான சாதனை செய்வோருக்கு ஸித்திகள் ஏற்படுகின்றன.

Thursday, November 11, 2010

இடையூறுகள்वितर्कबाधने प्रतिपक्षभावनम् ।।33।।
விதர்கபா³த⁴நே ப்ரதிபக்ஷபா⁴வநம் || 33||

விதர்கபா³த⁴நே = (ஹிம்சை முதலான யோகானுஷ்டான விரோதிகளால்) இடையூறுகள் நேரும் போது; ப்ரதி பக்ஷ பா⁴வநம் = அவற்றுக்கு எதிரான பாவனையே இருக்க வேண்டும்.

நல்ல செயல்கள் செய்வதெனில் அவற்றுக்கும் இடையூறுகள் நேரும் அல்லவா? சில சமயம் பொய் சொல்லியே தீர வேண்டும் என்பது போல அனைத்து செய்யக்கூடாதனவும்ம் செய்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் உண்டாலாம். அப்போது இடையூறுகளுக்கு எதிரான விஷயங்களையே மனதில் பாவிக்க வேண்டும். தீய செயல்களை செய்வதை நாம் அடியோடு விட்டுவிட்டோம். இனி அவற்றை செய்வது உண்ட உணவை வாந்தி எடுத்து அதை மீண்டும் உண்பது போல ஆகும் என எண்ண வேண்டும். இப்படிச்செய்ய அவற்றின் மீதுள்ள நாட்டம் விலகிவிடும்.
இந்த இடையூறுகளைக் குறித்து விரிவாக காணலாம்.

Wednesday, November 10, 2010

நியமங்கள்
  शौचसंतोषतपःस्वाध्यायेश्वरप्रणिधानानि नियमाः ।।32।।
ஶௌசஸம்°தோஷதப​:ஸ்வாத்⁴யாயேஶ்வரப்ரணிதா⁴நாநி நியமா​: || 32||

ஶௌசம், ஸந்தோஷ, தப​, ஸ்வாத்⁴யாய, ஈஶ்வர ப்ரணிதா⁴நாநி (ஆகியவை) நியமா​: = நியமங்களாகும்.

ஶௌசம் என்பது மண், நீர், பசுக்களின் சாணம் இவற்றால் வெளியே சுத்தம் செய்வதும், மதம், அசூயை முதலிய மன அசுத்தங்களை நீக்குவதும் ஆகும்.
ஸந்தோஷம் என்பது தெய்வாதீனமாக கிடைத்ததை தவிர அதிகமானவற்றில் ஆசை கொள்ளாதிருத்தல்.
தபம் என்பது குளிர்-வெப்பம், பசி - தாகம், போக்கு-வரவு போன்ற இரட்டைகளை பொறுத்துக்கொள்வது.
ஸ்வாத்யாயம் என்பது ப்ரணவ ஜபம் செய்தல்; அல்லது மோக்ஷ சாதகமாக சாஸ்திரங்களை அத்தியயனம் செய்தல். ஈஶ்வர ப்ரணிதாநாநி என்பது தான் செய்யும் எந்த செயலையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பது.
முன்பு யமத்தில் செய்யக்கூடாதன (don'ts) சொல்லப்பட்டது. நியமத்தில் செய்ய வேண்டியன (do s) சொல்லப்பட்டது. இவற்றை செய்யும் காலத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகளை விலக்குவது எப்படி?

Tuesday, November 9, 2010

முன் கூறிய அஹிம்சை முதலியவற்றில் யோகிகள் நடந்து கொள்ள வேண்டிய முறை.
  जातिदेशकालसमयानवछिन्नाः सार्वभौमा महाव्रतम् ।।31।।
ஜாதிதே³ஶகாலஸமயாநவசி²ந்நா​: ஸார்வபௌ⁴மா மஹாவ்ரதம் || 31||

ஜாதி, தே³ஶ, கால, ஸமய, அநவசி²ந்நா​: ஸார்வபௌ⁴மா மஹாவ்ரதம்.

ப்ராஹ்மணன் முதலிய ஜாதியாலும்; தீர்த்தம் முதலான இடத்தாலும்; சதுர்தசீ போன்ற காலத்தாலும்; ப்ராம்ஹணனுக்கு உணவிடுதல் போன்ற அநியத காலங்களாலும் எவ்விதத்திலும் தடை செய்யப்படாதவையாக எல்லா பூமிகளிலும் அல்லது அவஸ்தைகளிலும் தொடர்ந்து வருவதாக உள்ளது மஹா விரதமாகும்.

சிலர் சில விஷயங்களை கடை பிடிக்கிறார்கள். இன்னிக்கு வெள்ளிக்கிழமை- அசைவம் சாப்பிட மாட்டேன் என்பார்கள். அது போலவே காசிக்கு /கயாவுக்கு/ தனுஷ்கோடிக்கு வந்திருக்கிறேன், இன்னிக்கு அமாவாசை என்று பலவற்றை சொல்லி அசைவம் சாப்பிடுவதில்லை என்பர். இது ஒரு நோக்கத்தில் நல்லதுதான். ஆனால் இது யோகாங்கமான அஹிம்சை இல்லை. யோகாங்க அஹிம்சை இப்படி ஒரு ஜாதி, இடம், காலம் போன்ற எந்த விசேஷமும் இல்லாமல் தடையற்ற எல்லாருக்கும் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் காட்டப்படும் அஹிம்சையாகும். இதே போல மற்ற ஸத்யம், பிறர் சொத்தை அபகரிக்காமை (அஸ்தேயம்), ப்ரஹ்மசர்யம், அபரிக்ரஹம் ஆகியவற்றில் கொள்ள வேண்டும். இப்படி ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் எந்த காலமும் எந்த இடத்திலும் அனுஷ்டிக்கப்படுவது மஹா விரதமாகும்.

Monday, November 8, 2010

அபரிக்ரஹம்அபரிக்ரஹம் என்பது விஷயங்களில் ஆசை கொள்ளாதிருத்தல். சாஸ்திர சம்மதமான வழியிலும் எதிர்பாராதும் சில சமயம் நமக்கு சில பொருட்கள் கிடைக்கலாம். இதில் ப்ரதிக்ரஹம் என்பது சாஸ்திரம் அனுமதிப்பது. அதாவது செய்த ஒரு வேலைக்கு பதிலாக ஒரு பொருளை பெற்றுக்கொள்வது. இருந்தாலும் கொடுக்கும் நபரைபொறுத்து இதில் பாபம் சம்பவிக்கக்கூடும்.

ஒரு மஹான் பசியுடன் ஒரு ஊருக்குச் சென்றார். அங்கிருந்த ஒருவன் அவரை வரவேற்று உணவளித்தான். மகிழ்ச்சியுடன் உண்டு திண்னையில் சிரம பரிகாரம் செய்து கொண்டிருக்கும்போது அவருக்கு சித்தத்தில் கலக்கம் ஏற்பட்டது. நீர் வைக்கப்பட்ட வெள்ளிப்பாத்திரத்தை துணியில் மறைத்துக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் குறுக்கு வழியே தப்பிப்போனார். சற்று நேரம் சென்றபின் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து யோசனை செய்தார். “நம் செய்தது தவறில்லையா? ஏன் இப்படி மனசு கெட்டுப்போயிற்று? நம் தவம் எங்கே? ஆகையால் இதை திருப்பி கொடுத்துவிட்டு விசாரித்துக்கொண்டு வர வேண்டும்”. இப்படி சிந்தனை செய்து அந்த வீட்டுக்கு திரும்பினார். அந்த தம்பதிகளோ மஹான் வீட்டுக்கு வந்து உணவருந்தியதை நினைத்து ஆனந்தத்துடன் இருந்தார்களே தவிர பாத்திரம் தொலைந்ததை கூட அறியவில்லை. மஹான் பாத்திரத்தை கொடுத்துவிட்டு "உண்மையை சொல்லுங்கள் நீங்கள் எப்படி ஜீவனம் நடத்துகிறீர்கள்?” என்று கேட்டார். வெல வெலத்து போன வீட்டுக்காரர் தான் இரவில் திருடி ஜீவனம் செய்வதாக ஒத்துக்கொண்டார். மாஹானும் ப்ராணாயாமத்தால் தோஷத்தை போக்கிக்கொண்டு தன் நல்ல வழிக்கு போய்விட்டார்.
யோகியானவன் சாஸ்திரப்படி பெற்றாலும் உண்மையில் தோஷமுள்ளவனின் வஸ்து யோகியைக் கெடுத்துவிடும். கொடுப்பவன் தோஷமில்லாதவனா என்று கூடிய வரை ஆராய்ந்தே எதையும் வாங்கிக்கொள்ள வேண்டும்.

Friday, November 5, 2010

ப்ரம்மசர்யம்...முன் பார்த்த கதையில் ரொம்பவே கடுமையா இருக்கே என்று நினைத்தால் அடுத்த கதையை படியுங்கள். இதுவும் மஹாபாரதத்தில் ராஜ தர்ம பர்வத்தில் 24 ஆவது அத்தியாயத்தில் வருவது.

சங்கர் லிகிதர் என்று இரு சகோதரர்கள். பாஹுதை என்ற நதிக்கரையில் தனித்தனியே பூக்களும் கனி மரங்களும் உள்ள ஆசிரமங்கள் அமைத்து தீவிர ஆசார அனுஷ்டாங்களுடன் தவம் செய்து வந்தனர். ஒரு நாள் தம்பி லிகிதர் அண்ணனை பார்க்க சென்றபோது அவர் வெளியே போயிருந்தார். பசி மேலிட்ட தம்பி அண்ணனின் ஆசிரமத்தில் இருந்த பழ மரத்தில் இருந்து பழங்களை கொய்து சாப்பிட்டார். அப்போது திரும்பி வந்த அண்ணன் "நீ செய்தது தவறு. மரத்தின் சொந்தக்காரனுக்கு தெரியாமல் பழங்களை பறித்து உண்டது திருட்டுக்கு சமம். நீ அரசனிடன் சென்று தகுந்த தண்டனை பெற்று வா" என்றார். தம்பியும் பதிலுக்கு வாதம் செய்யாமல் நேரே அரசனிடம் சென்று நடந்ததைச் சொல்லி தண்டனை தரும்படி கேட்டார். அரசனும் "இது ஒன்றும் குற்றமில்லை. தண்டனை தேவையில்லை" என்று கூற லிகிதர் அதை ஒத்துக் கொள்ளவில்லை. தர்ம சங்கடத்தில் ஆழ்ந்த அரசன் சாத்திரப்படி தண்டனை விதித்து 'கைகளை வெட்டுங்கள்' என உத்தரவிட்டான். தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. வெட்டுப்பட்டு மணிக்கட்டுக்கு கீழ் ஒன்றுமில்லாத கைகளுடன் அண்ணனிடம் சென்று நடந்ததை தெரிவித்தார். அண்ணன் "நல்லது. நீ நதிக்கு சென்று நீராடி அர்க்யம் கொடுத்து தர்ப்பணம் செய்து வா" என்றார். கைகள் இல்லாமல் எப்படி அர்க்யம் கொடுப்பது என்று கூட கேட்காமல் நதிக்கு சென்று குளித்து நீரில் கைகளை விட்டு ஏந்த வெட்டுப்பட்ட கைகள் மீண்டும் வளர்ந்துவிட்டன. மகிழ்ச்சியுடன் மீதி கடன்களை முடித்து ஆச்ரமம் திரும்பினார் லிகிதர். முளைத்த கைகளை கண்டு சங்கரும் மிகவும் சந்தோஷப்பட்டு தம்பியை உணவளித்து போற்றினார்.
ஆகையால் பிறர் சொத்துக்கு ஆசைப்படலாகாது.

ரஹஸ்ய இந்திரியத்தை அடக்குவது ப்ரம்மசர்யம் ஆகும். யோகாங்கானுஷ்டானம் செய்பவ்வன் ஸ்த்ரீக்களை ஆவலுடன் பார்ப்பதும் அவர்களுடன் நெருங்கி பழகுவதும், ஆவலுடன் தொடுவதும் கூடாது. அது ப்ரம்மசர்ய அனுஷ்டானத்துக்கு இது பங்கம் ஏற்படுத்தும். ஆகவே அவசியம் விலக்க வேண்டும்.


Thursday, November 4, 2010

யமம்:अहिंसासत्यास्तेयब्रह्मचर्यापरिग्रहा यमाः ।।30।।

அஹிம்°ஸாஸத்யாஸ்தேயப்³ரஹ்மசர்யாபரிக்³ரஹா யமா​: || 30||


அஹிம்°ஸா = அஹிம்சை, ஸத்ய = ஸத்யம், அஸ்தேயம், ப்³ரஹ்மசர்யம், அபரிக்³ரஹா (ஆகியன) யமா: = யமம் எனப்படும்.

அஹிம்சை என்பது எப்போதும் மன மொழி மெய்களால் எந்த பிராணிக்கும் துரோகம் - தீங்கு செய்யாமல் இருத்தல். இதுவே யோக சாதனங்களுள் மிகச்சிறந்ததாகும்.

வாக்கும் மனசும் உண்மையிலேயே நிற்பது ஸத்யம். பிறருக்கு தீங்கு ஏற்படாமல் பேசுவது என்பது ஸத்யம். இது மிக நுட்பமானது.

ஒரு காலம் ஒரு மகரிஷி காட்டில் தவம் செய்து கொண்டு இருந்தார். ஸத்யதபஸ் என்று பெயர். எக்காலமும் உண்மை பேசுவது என்பது அவர் கொண்டிருந்த ஒரு விரதம். ஒரு நாள் இவர் தவம் கலைந்து எழும் வேளை சில திருடர்கள் அரச மாளிகையில் களவாடி காட்டு வழியே ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ரிஷி தவம் செய்து கொண்டிருந்த வழியே ஓடினர். கடும் கோபத்துடன் துரத்தி வந்த அரச சேவகர்கள் ரிஷியைப்பார்த்து "திருடர்கள் இவ்வழியே போனார்களா?" என்று கேட்க ரிஷியும் திருடர்கள் போன வழியை காட்டிக்கொடுத்தார். அந்த வழியே போன சேவகர்கள் திருடர்களை பிடித்து அடித்தனர். அதில் ஒரு திருடன் அடி தாங்காது இறந்தான். இந்த ஜீவன் இறக்க யார் காரணம் என விசாரித்த பெரியோர்கள் ரிஷியே காரணம் என தீர்ப்பளித்தனர். ரிஷி மௌனமாக இருந்திருந்தால் திருடர்களை பிடித்திருக்க மாட்டார்கள்; அடித்திருக்க மாட்டார்கள்; ஒரு ஜீவனும் இறந்து போயிருக்காது என்பது வாதம். ஹிம்சை தருமானால் உண்மையை சொல்லாதிருப்பதே ஸத்யம்.


ஸத்யம் ப்3ரூயாத் ப்ரியம் ப்3ரூயாத் ந ப்3ரூயாத் ஸத்யம் அப்ரியம்|

ப்ரியம் ச நாந்ருதம் ப்3ரூயாத் ஏஷ த4ர்மஸ் ஸநாதந: || -மஹா பாரதம்.


பிறருக்கு தீங்கிழைக்காத உண்மையே பேச வேண்டும். உண்மையானாலும் பிறருக்கு தீங்கிழைக்குமானால் மௌனத்தை அநுஷ்டிக்கவேண்டும். பிறருக்கு ப்ரியமாக இருக்கும் என்று பொய் சொல்வதும் தகாத செயல். இது மஹாபாரதத்தில் வரும் கதை. இப்படி செய்வதே வேத சாஸ்த்திரங்களில் சொல்லிய புராதனமான தர்மமாகும்.


சாஸ்திர சம்மதம் இல்லாமல் பிறர் சொத்தை கைப்பற்றுதலே ஸ்தேயம் என்ற திருட்டு. இதை விலக்குவதே அஸ்தேயம். ஒருவனுக்கு கொடுக்க மனமில்லாத போது பல காரணங்கள் காட்டி அவனைக் கட்டாயப்படுத்தி அவனது பொருளை பெற்றுக்கொள்வதும் திருட்டாகும்.


முன் பார்த்த கதையில் ரொம்பவே கடுமையா இருக்கே என்று நினைத்தால் அடுத்த கதையை படியுங்கள். இதுவும் மஹாபாரதத்தில் ராஜ தர்ம பர்வத்தில் 24 ஆவது அத்தியாயத்தில் வருவது.

யோகத்தின் அங்கங்கள்இங்கே யோகாங்கங்கள் என்று ஆரம்பித்தாரே அவை என்னென்ன?

  यमनियमासनप्राणायामप्रत्याहारधारणाध्यानसमाधयोऽष्टावङ्गानि ।।29।।

யம நியமாஸந ப்ராணாயாம ப்ரத்யாஹார தா⁴ரணா த்⁴யாந ஸமாத⁴யோ'ஷ்டாவங்கா³நி || 29||

யமம், நியமம், ஆஸநம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தா⁴ரணா, த்⁴யாநம், ஸமாதி⁴ ய: = இவை; அஷ்டா = எட்டு; அங்கா³நி = (யோக பயிற்சியின்) அங்கங்களாகும்.

 

Tuesday, November 2, 2010

ப்ரக்ஞைக்கான சாதனங்கள்:योगाङ्गनुष्ठानादशुद्धिक्षये ज्ञानदीप्तिराविवेकख्यातेः ।।28।।

யோகா³ங்க³நுஷ்டா²நாத³ஶுத்³தி⁴க்ஷயே ஜ்ஞாநதீ³ப்திராவிவேகக்²யாதே​: || 28||

யோகா³ங்க³= யோக அங்கமான (யமம் முதலான எட்டையும்); அநுஷ்டா²நாத்³ = பழகுவதால்; அ³ஶுத்³தி⁴ = (அவித்யா, அஸ்மிதா, ராகம், த்வேஷம், அபிநிவேஷம், புண்ணியம், பாபம் ஆகிய) அசுத்திகளின்; க்ஷயே = தேய்தல்; ஆவிவேக க்²யாதே​: = விவேக க்யாதி உண்டாகும் வரையுள்ள ; ஜ்ஞாந தீ³ப்தி = ஸம்ய ஞானத்தின் ஒளியானது (உண்டாகிறது.)
யமம், நியமம் முதலான சாதனங்களை எவ்வளவுக்கெவ்வளவு அநுஷ்டிக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவித்யை முதலான அசுத்திகள் தேய்கின்றன. இதனால் ஞானத்தின் பிரகாசமும் அவ்வளவு அதிகமாகிறது. விவேகக்யாதி உண்டாகும் வரை இது பெருகிக்கொண்டே போகிறது. (சத்வம் முதலான குணங்கள் புருஷன் இவற்றின் ஸ்வரூபத்தை இன்னதென்று அறிதலே விவேகக்யாதி)
கோடரி மரத்தை சிதைப்பது போல தர்ம அனுஷ்டானம் அஞ்ஞானத்தை சிதைக்கிறது.
வேறு காரணமின்றி தர்மமே சுகம் உண்டாக காரணமாம்.
---
அடுத்து வருவதை படிக்க வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும் என அவசியம் இல்லை.

PG: இப்படிப்பட்ட தர்ம வ்ருத்திக்கு காரணங்களை பட்டியலிடலாம்: உத்பத்தி; ஸ்திதி; அபிவ்யக்தி; விகாரம்; ப்ரத்யயம்; ஆப்தி; வியோகம்; அன்யத்வம்; த்ருதி.
உத்பத்தி காரணம்: விக்ஞானத்தில் இன்னது என்று பகுத்து அறிய முடியாத நிலையை போக்கி நிகழ் கால இருப்பை உண்டு பண்ணுவதால் மனதே விஞ்ஞானத்தின் உத்பத்திக்கு காரணம்.
ஸ்திதி காரணம்: உடம்பின் ஸ்திதிக்கு ஆகாரம் காரணமாகும். அதே போல மனதின் ஸ்திதிக்கு புருஷார்த்தம் காரணம். அஹம் தத்துவத்தில் இருந்து மனது வந்தது. எந்த புருஷார்த்தத்தையும் கருதாத வரை மனது நிலையாக இருக்கும். அர்த்த காமத்தை கருதும் போது அது நிலையில் இருந்து நழுவிவிடும். நிலையாக இருப்பது மனசுக்கு இன்றியமையாதது.
அபிவ்யக்தி காரணம்: தானாகவோ இந்திரியங்கள் மூலமோ கருப்பு வெளுப்பு போல ரூபங்களின் பேதத்தை கண்டு கொள்வது அபிவ்யக்தி ஆகும். அரிசி முதலாவை அன்னமாக விகாரமடைய அக்னி காரணமானது போல் சப்தம் முதலானவை மனதின் விகாரத்துக்கு காரணமாகும்.
விகார காரணம்: கண்டு என்ற முனிவருடைய தவத்தை கலைக்க ப்ரம்லோசா என்ற அப்சரஸ் அனுப்பப்பட்டாள். அவள் அவருக்கு சமீபத்தில் வல்லகீ என்ற தன் வீணையில் இசை எழுப்ப முனிவரின் மனது இந்திரியங்களின் வழியே சென்று விகாரமடைந்தது.
ப்ரத்யய காரணம்: புகையை காணும்போது அக்னி உள்ளதென தெரிகிறது. அக்னியின் ஞானத்துக்கு புகை பற்றிய அறிவு காரணமாகிறது. இதுவே ப்ரத்யய காரணம்.
ஆப்தி காரணம்: கிடைப்பது. ப்ர சேர்த்து ப்ராப்தி என்பர். யோகாங்கங்களை அனுஷ்டிப்பது விவேகக்யாதி கிடைப்பதற்கு (ப்ராப்திக்கு) காரணம். அதுவே அசுத்திக்களை போக்குவதால் அசுத்திகளின் வியோகத்துக்கும் கூட (அழிதல்) காரணம் ஆகும்.
அன்யத்வம்: வேறாக ஆக்குதல். ஒரு தங்க நகையை தட்டான் அழித்து வேறு நகையாக்கும்போது அது அன்யத்வம் ஆகும்.
த்ருதி காரணம்: இந்திரியங்கள் நிலைத்து நிற்க சரீரம் காரணமாகிறது.
இந்த 9 வித காரணங்களில் யோகானுஷ்டானம் அசுத்தி வியோகத்திற்கும் ஞான ப்ராப்திக்கும் காரணமாகிறது.
--
இங்கே யோகாங்கங்கள் என்று ஆரம்பித்தாரே அவை என்னென்ன?

Monday, November 1, 2010

விவேக க்யாதி:तस्य सप्तधा प्रान्तप्रान्तभूमिःप्रज्ञा ।।27।।

தஸ்ய ஸப்ததா⁴ ப்ராந்தபூ⁴மி​: ப்ரஜ்ஞா || 27||

தஸ்ய = விவேக க்யாதியை அடைந்த யோகிக்கு; ஸப்ததா⁴ = ஏழு விதமான; ப்ராந்தபூ⁴மி​: = இருப்புக்களை உடைய நிலைகள்; ப்ரஜ்ஞா= அறிவானது.
விவேக க்யாதியை அடைந்த யோகிக்கு அறிவானது ஏழு விதமான இருப்புக்களை உடைய நிலைகள் ஆக ஆகிறது.
சர்வ சாதாரணமாக பிரக்ஞையுடன் இருக்கிறோம் என்கிறோம். அதாவது அறிவு செயல்பட்டு கொண்டிருக்கிறது. வாசனையால் தடை செய்யப்படாத நிலைத்த விவேகக்யாதி உண்டானதும் ஆத்ம ஸ்வரூபத்தைத்தவிர வேறு தோற்றம் எதுமில்லாமல் அவித்யை விலகிவிட்ட யோகிக்கும் கூட இது செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் அதில் ஏழு விதம் இருக்கிறது.
இதில் காரியத்தை விடும் பிரக்ஞைகள் நான்கு. சித்தத்தை விடும் பிரக்ஞைகள் மூன்று.

காரியத்தை விடும் பிரக்ஞைகள்: அறிய வேண்டும் என்ற இச்சை (ஜிக்ஞாஸா), விலக்க வேண்டும் என்ற விருப்பம் (ஜிஹாஸா), புதிதாக ஒன்றை அடைய வேண்டும் என்ற விருப்பம் (ப்ரேப்ஸா), புதிதாக ஒன்றை செய்ய வேண்டும் என்ற எண்ணம் (சிகீர்ஷா) .
யோகிக்கு உண்டாகும் அறிவு அறிய வேண்டும் என்ற இச்சையை போக்கிவிடும். புதிதாக எதையும் அவன் அறிய வேண்டியது இல்லை.
விலக்க வேண்டும் என்ற விருப்பம் நீங்கும். எல்லாவற்றையும் விலக்கிவிட்ட பின் விலக்க ஒன்றுமில்லை என்பது புரிகிறது.
கைவல்ய நிலை அடைந்தபின் வேண்டியன எல்லாம் அடையப்பட்டுவிட்டதால் அடைய வேண்டுவதும் வேறு ஒன்றுமில்லை என்பது புரிகிறது.
விவேக க்யாதியை சம்பாதித்து கொண்டுவிட்டதால் செய்வன எல்லாம் செய்தாகிவிட்டது; செய்ய வேண்டுவதாக புதிதாக ஒன்றுமில்லை. இது நான்காவது பிரக்ஞை.

காரியங்களை விட்டா போதுமா? மனசால செய்கிறவற்றையும் விட வேண்டும் இல்லையா?

சித்தத்தை விடும் பிரக்ஞைகள்: "என் புத்தி ஸத்வமானது; அது செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டது" என சித்தத்தை விடுதல் முதலாவது.
மலை உச்சியிலிருந்து நழுவும் கற்பாறைகளுக்கு பிடிப்பு இல்லாமல் போவது போல புத்தி முதலிய குணங்களுக்கும் காரணத்தில் லயமாவதால் நாசமடைகின்றன. அவற்றால் பயன் ஏதும் இல்லை. ஆகையால் அவை மீண்டும் உத்பத்தி ஆக மாட்டா. இது இரண்டாம் ப்ரக்ஞை.
யோகி குணங்களை கடந்து சொரூபத்தில் மட்டில் இருக்கிறான். சித்துடன் ஒரே ரஸமாக ஆகிறான். இது சித்தத்தை விடும் மூன்றாம் ப்ரக்ஞை.
இந்த மூன்றாம் ப்ரக்ஞை உண்டாக சாதனங்கள் என்ன?.....