Pages

Tuesday, May 31, 2022

காஶி_யாத்திரை - 5இப்படியாக முதல் நாள் கர்மா நடந்து முடிந்தது.

அடுத்த நாள் காலை வழக்கம் போல எழுந்திருக்க முடிந்தது. ப்ராணக்ரியா முடித்து காலை அனுஷ்டானங்களை முடித்தேன். அடுத்த வீட்டில் இருந்து அருமையான காபி கிடைத்தது. மனைவியும் மருமகளும் சமையலுக்கு தேவையானவற்றை கோசாலைக்கு நகர்த்தி வாங்கிக்கொண்டு அங்கே போய்விட்டனர். இன்று பார்வண ஶ்ராத்தம் மட்டுமே முக்கிய கர்மா என்பதால் பிரச்சினை இல்லை. வழக்கம் போல் 9 மணிக்கு ஹவிஸ் வைக்கப்போனேன். அடுப்பு இருந்தது; ஆனால் எரிக்க விறகுதான் இல்லை. இந்தாங்க என்று அவர்கள் காட்டியது நிச்சயம் போதாது என்று தோன்றியது. வீட்டில் மாசிகம் போன்றவற்றுக்கு வைத்த அளவு நிச்சயம் போதாது, பிண்டங்களே அதிகம். (தீர்த்த ஶ்ராத்தம் குறித்த பதிவில் எழுதி இருக்கிறேன். ) ஸ்வதேயம் என்று வைக்க பித்ருக்கள் அதிகம். முன் காலத்தில் வீடுகளில் சாதம் வைக்கும் வெங்கலப்பானையைத்தான் எடுத்து வந்திருந்தோம்.

தர்ம பத்னி சமையலுக்கு மாமி யாரேனும் தேவை என்று சொல்லி வைத்து இருந்தாலும் யாரும் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். ராமேஸ்வரத்தில் பார்வண ஶ்ராத்தம் செய்ய விரும்புவோர் செலவை பார்க்காமல் உங்கள் இடத்தில் இருந்தே யாரையாவது அழைத்துப்போவதே நல்லது. கோசாலை உரிமையாளரின் மனைவி உதவுவார் என்று சொன்னார்கள். அப்படி ஒன்றும் உதவிகரமாக இல்லை. அவருக்கு ஏக வேலைகள். அவர் வந்து இங்கே நாங்கள் கரி போட்டு கும்முட்டி அடுப்புதான் பயன்படுத்துகிறோம் என்று சொல்லி வைத்துக்கொடுத்துவிட்டு போய்விட்டார். எனக்கு அது பழக்கமில்லை. விசிறி கேஎட்டால் ரீசார்ஜ் செய்யும் யூஎஸ்பி மின்விசிறி ஒன்றை கொடுத்தனுப்பினார்கள். விளைவு நல்லதாக இல்லை. நேரம் எடுத்துக்கொண்டாலும் ஒரு வழியாக அது ஆகிவிட்டது. அடுப்பு பிடித்துக்கொண்டால் போது; நீங்கள் பாட்டுக்கு நகரலாம், அது தானாக ஆகிவிடும் என்றார்கள். எங்கே நகர?

பெரிய ஸ்டீல் பெஞ்ச் ஒன்றை சமைக்க கொடுத்தார்கள். அது பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. மெனக்கெட்டு கடலூரில் இருந்து கொண்டு போன பலாப்பழத்தை (! ஹும்! ) வாத்தியாரின் உதவியாளர் பாதி அரிந்து சுளைகளை எடுத்து வைத்தார். காக்காய்கள் நேரம் பார்த்து லவட்டிக்கொண்டு போயின! “ப்ரீபெய்ட் சர்வீஸ் தானாக எடுத்துக்கொள்கின்றன. மீதி பாதியை அரிந்து சுளைகளை பத்திரப்படுத்துங்கள்” என்றேன்.

நானும் பையரும் எல்லாருக்குமாக வஸ்திரங்களை நனைத்து உலர்த்தினோம். அடித்த வெய்யிலில் காய்வது பிரச்சினையாக இல்லை.

இன்று முன்னாலிருந்து கூப்பிட்டு கூப்பிட்டு ப்ராம்ஹனர்களை சேர்த்துவிட்டார்கள்

விசாலமான இடமாதலால் சௌகரியமாக எல்லாவற்றையும் செய்ய முடிந்தது. நடுவில் வாத்தியார் ஏதோ தப்பாக சொல்லப்போக பிராமணராக உட்கார்ந்திருந்தவர் அதை சரியாக சொல்ல ஆரம்பித்து நாக்கை கடித்துக்கொண்டு பேசாமல் இருந்தார். ஆனால் நான் அதை பார்த்து விட்டதால் ஏதோ தப்பு நடந்தது என்று தெரிந்து கொண்டேன். சரி செய்து கொண்டேன்.

 காரணம் காரணம் வாத்தியார் தப்பு செய்வதற்கு காரணம் இருந்தது. அவர் மார்பில் ஒரு பெரிய கட்டி ஏறக்குறைய பழுக்கும் நிலையில் இருந்தது. அதுபற்றி அவர் என் தர்மபத்தினி இடம் சொல்லி இருந்திருக்கிறார். அவரும் மாத்திரை சொல்லி அதை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். நன்றாக பழுத்த நிலையில் இருந்ததால் வலி அதிகமாக தெரிந்திருக்க வேண்டும். இந்த கட்டிகளை ஆரம்ப நிலையில் கவனிக்காது போனால் பிரச்சினைதான். பழுத்துவிட்டால் வெட்டி வெளியே சீழ் வர வழி செய்தே ஆகவேண்டும்.

காக்காவுக்கு வாயச பிண்டம் வைப்பதற்கு இடம் கேட்டால் பக்கத்தில் இருந்த தோட்டத்தில் நட்ட நடுவில் இருந்த கருங்கல்  தூணை காட்டினார்கள். சுவற்றின் மேல் வைத்து விடலாம் என்று சொன்னதை ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு மணி வெய்யிலிலே ஒரு காக்காவும் கருங்கல் மீது உட்காராது என்று தெரியும். அது உட்கார நினைத்தால்கூட ஒத்தைக் காலில் தான் உட்கார வேண்டும்

 ஒருவழியாக பிராமணர்கள் சாப்பிட்டு முடித்ததும் உபசாரங்களை முடித்து அடுத்து தனுஷ்கோடியில் வசித்த மண்ணை பாகம் செய்தோம்.


Saturday, May 28, 2022

காஶி_யாத்திரை - 4
 

தனுஷ் கோடியிலிருந்து அக்னி தீர்த்தத்துக்கு போனோம். உச்சரிப்பு பிழையுடன் நகராட்சி மாஸ்க் போட்டுக்கொள்ள மக்களை வலியுறுத்திக்கொண்டு இருந்தது. கேட்பார்தான் இல்லை. போட்டுக்கொள்ளாவிட்டால் அபதாரம் வசூலிப்பார்களாம். யாரும் சட்டை செய்யவில்லை.

படத்தில்: தனுஷ்கோடியில் பூஜை செய்த அத்தி ஆஞ்சனேயர் கோவில் அக்னி தீர்த்தம் போகும் வழியில்...

வாத்தியார் அங்கே மற்றவரிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு போய்விட்டார். அவர் அங்கே சங்கல்பாதிகள் செய்து வைத்து விட்டு எங்களை தீர்த்தங்களில் ஸ்நாநம் செய்து வைக்க இன்னொருவரிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு போய்விட்டார். அக்னி தீர்த்தம் என்பது இப்போதைய கடல் எல்லைக்கு உள்ளேஏஏஏ இருந்ததாகவும் கடல் உள்ளே வந்துவிட்டதால் அதையே அக்னி தீர்த்தம் என்பதாகவும் சொல்கிறார்கள். புதிய வாத்தியார் எங்க்ளை அழைத்துப்போய் ஒவ்வொரு தீர்த்தமாக நீர் முகர்ந்து எங்களுக்கு அபிஷேகம் செய்தார். எல்லா ஸ்நானமும் முடிந்து வாத்தியாரின் வீட்டுக்குப்போனோம். மணி ஒண்ணரையோ என்னவோ. சில ப்ராம்ஹணர்கள் காத்திருந்தார்கள். மாத்யான்ஹிகம் முடித்து என்னப்பா என்றால் இன்னும் ரெண்டு பேர் வரணும் என்றார்கள்.

அன்றைக்கு ஷன்னவதி ஶ்ராத்த நாள். நான் அப்போது அவற்றை தர்ப்பணமாக செய்ய ஆரம்பித்து இருந்தேன். ஆகவே அதை செய்து விட்டு பார்த்தால் இன்னும் அந்த 2 பேரை காணவில்லை. ஒருவர் ஆரம்பத்தில் இருந்து எப்போ ஆரம்பிக்கப்போறோம் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். இதோ இதோ என்று போக்கு காட்டிக்கொண்டே இருந்தார் வாத்தியார்.

ஹிரண்ய ஶ்ராத்தம் என்பதால் முதலில் பிண்ட ப்ரதானம் முடித்தோம். அந்த ரெண்டு பேரை இன்னும் காணவில்லை. ஒருவர் தர்ப்பணம் பண்ணிக்கொண்டு இருக்கேன்; தோ வரேன் என்றார். அந்த நேரம் அந்த இன்னொருவர் வந்து சேர்ந்தார். ஆரம்பிக்கப் போறோமா என்று கேட்டால் 'இல்லை, அந்த இன்னோருத்தர் வரட்டும், எனக்காக கொஞ்சம் காத்திருங்க' என்றார் வாத்தியார்.

இவ்வளவு நேரம் காத்திருந்த அந்த ப்ராம்ஹணருக்கு கோபம் வந்துவிட்டது. வெளியே போய் தன் வண்டியை எடுத்துக்கொண்டு போயே விட்டார்! என்னப்பாது என்றாலும் ஒண்ணும் செய்ய முடியாது என்றார் வாத்தியார்

 இன்னும் காத்திருந்து காத்திருந்து .... என்னப்பா மணி ரெண்டரை ஆகிறது; இவ்வளவு லேட்டாக செய்யக்கூடாது என்றே இருக்கே? என்று நான் கேட்க ஒரு வழியாக இரண்டு கூர்ச்சங்கள் போட்டு ஆரம்பித்தார். இதை முதலிலேயே செய்திருக்கலாம்.

வஸ்த்ரங்கள் உட்பட்ட உபசாரங்கள் ஆரம்பித்து நடக்கும்போது அந்த ப்ராம்ஹணர் வந்து சேர்ந்தார். வாத்தியார் சொன்னபடி அவர் சார்பாக போட்ட கூர்ச்சத்தை எடுத்து அவரிடன் கொடுத்தேன். கோபித்துக்கொண்டு போய்விட்ட ப்ராம்ஹணர் ஸ்தானத்தில் வாத்தியாரே உட்கார்ந்துவிட்டார். பித்ரு வர்க்கம், மாதா வர்க்கம், சபத்னீக மாதாமஹ வர்க்கம், காருண்ய பித்ரு, ஶ்ராத்த சம்ரக்‌ஷக மஹா விஷ்ணு என ஒருவர் - இப்படியாக ப்ராம்ஹணர்கள். பார்வண ஶ்ராத்தத்தை பார்க்கில் குறைந்த உபசாரங்கள் என்றாலும் நிறைய பேர் இருப்பதால் கூடுதல் நேரம் ஆகிவிடுகிறது. அவர்கள் சாப்பிட்டு முடித்து உபசாரங்கள் செய்து வழியனுப்பி விட்டு நாங்கள் சாப்பிட உட்காரும்போது மணி 4.

சர்க்கரை வியாதி இருக்கிற மனுஷன் என்ன செய்வது? காலை ஒரு கஞ்சி, பின் ஒரு காபி தவிர ஒன்றுமில்லை. காலையில் மருந்து சாப்டாமல் தவிர்த்துவிட்டேன். சாப்பிட்ட பின் காலை மதியம் டோஸ் இரண்டைஉ ஒன்றாக போட்டுக்கொண்டு இரவு தவிர்த்துவிட்டேன். 4 மணிக்கு சாப்பிட்டு விட்டு இரவு என்னத்தை சாப்பிட? பால் மட்டும் குடித்தேன் என்று நினைக்கிறேன்.

செம வெயில். வேணி மாதவரை உலர்த்தி துணியில் முடிந்து வைத்துவிட்டேன். ஊருக்குப்போனதும் பித்தலை சம்புடம் வாங்கி அதில் வைத்துக்கொள்ள சொன்னார்கள்.

முந்தைய நாள் மாலை ஔபாசனம் செய்ய முடியாமல் விச்சின்னம் ஆகிவிட்டது. காலை முதலில் அதை புதுப்பித்துக்கொண்டேன். தொடர்ந்து வைத்துக்கொள்வது சிரமம் என்பதால் ஸமித்தில் ஆரோபணம் செய்து பயன்படுத்தினேன்.

ஜன்னலை சாத்தினால் புழுக்கம் திறந்தால் பூச்சிக்கடி என்று இருந்தாலும் அயற்ந்து தூங்கிப்போனேன்.

இப்படியாக முதல் நாள் கர்மா நடந்து முடிந்தது.


Thursday, May 26, 2022

காஶி_யாத்திரை - 3
  ஸ்நான சங்கல்பம் செய்து வபனத்துக்கு கிளம்பினேன். 
 

 

 

ராமேஸ்வரத்தில் எல்லாமே விலைவாசி அதிகம் போலிருக்கிறது. லக்‌ஷ்மண தீர்த்தத்தின் பக்கத்திலேயே முடி நீக்க இடம் இருக்கிறது. ஆனால் நாவிதரை காணவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பெரியவரை கூப்பிடு என்று ஆளுக்காள் ஏவி கொஞ்ச நேரத்தில் வந்து சேர்ந்துவிட்டார். எவ்வளவு வேண்டும் என்று கேட்டால் கூசாமல் 500 ரூபாய் என்று சொன்னார். எனக்கு சரியான அதிர்ச்சி. பிறகு வாத்தியார் பையனிடம் எவ்வளவு வாங்கி கொடுத்தார் என்று எனக்கு தெரியவில்லை. கேட்டுக் கொள்ளவும் இல்லை. அங்கேயே குளித்துவிட்டு சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்து எடுத்து ராமர் தீர்த்தத்துக்கு போனோம். அங்கேயும் சங்கல்ப ஸ்நானம். முடித்து எதிரே ராமர் கோவிலுக்குப்போய் தர்சனம் செய்தோம். பின் தனுஷ்கோடிக்கு கிளம்பினோம். போன முறை என் தாய் தந்தையருடன் போனபோது தனுஷ்கோடிக்கு ஜீப்பில் தான் போக வேண்டி இருந்தது. ஆனால் இந்த முறை அருமையான சாலை போட்டுவிட்டார்கள். இருந்தாலும் இந்த சாலை மிகவும் கஷ்டத்தில் பிழைத்து இருக்கிறது என்று தோன்றியது.

 

 அதை போட்ட போது பார்த்த வீடியோ வீடியோவில் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் வித்தியாசம் நன்றாக தெரிந்தது. சுருக்கமாக பக்கவாட்டில் இருக்கும் சாலையின் பக்கவாட்டில் இருக்கும் கருங்கற்கள் நழுவி என்று பல பிரச்சனைகள். இருந்தாலும் சாலை கெட்டுப்போகாமல் பராமரித்துக் கொண்டு இருக்கிறார் இருக்கிறார்கள். தனுஷ்கோடி டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிவிட்டது. ஆகவே ஸ்நானம் மண் கிரகிப்பது போன்றவை சுமார் ஒரு கிலோமீட்டருக்கு முன்னாலேயே செய்யப்படுகிறது.

 மற்ற இடங்களைப்போல் தனுஷ்கோடியில் நேரடியாக நீரில் இறங்கி ஸ்நானம் செய்ய கூடாது. அங்கே முதலில் மணலில் வில் வரைந்து ராமருக்கு பூஜை செய்து அதன் பின்னரே தண்ணீரில் இறங்க வேண்டும். தம்பதிகளாக இறங்கி 36 முக்கு போட்டோம்! கேசவாதி நாமங்கள் 12 ஐயும் மூன்று முறை சொன்னது நினைவிருக்கிறது என்கிறார் பையர்இதற்குப் பின்னால் அங்கிருந்து மண் சேகரித்து ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டு திரும்பினோம். இங்கேயும் நீங்கள் முன்னால் போங்கள் நான் 2 வீலரில் வருகிறேன் என்று சொன்ன வாத்தியார் வந்து சேர தாமதமானதால் அரை மணி வீணாயிற்று.

 தனுஷ்கோடி போகும் வழியில் பாதிக்கு மேல் மொபைல் சிக்னல் இல்லை. அப்படி வேண்டும் என்றுதான் விட்டு வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. டிரைவரிடம் கேட்டபோது தன்னுடைய செல்போனை சிரித்துக்கொண்டே காட்டினார். ஜியோ ஸ்ரீலங்கா என்று காட்டியது!

 

  

Wednesday, May 25, 2022

காஶி யாத்திரை -2
2.

 மகனும் மருமகளும் கும்பகோணத்தில் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். ஆஏசி கன்ஃபார்ம் ஆனதால் இருக்கைகள் ஒவ்வொரு இடத்தில் இருந்தன. 3 மூன்று சீட்டுகள் ஏறத்தாழ ஒரே இடத்தில். அதை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு தனியிடத்தில் நான் போய் படுத்துக்கொண்டேன். ராத்திரி ரயில் ஆட்டம் அதிகமாக இருந்தது. அதல் குலுங்கம் திசை என்னுடைய முதுகுக்கு கொஞ்சம் கூட சரியாக வரவில்லை. அதனால் சரியாக தூங்க முடியவில்லை.

ராமேஸ்வரம் போய் சேர்ந்த நேரம் இரவு இரண்டரை மணி. ஏன்தான் இப்படி அட்டவணையை தயாரிக்கிறார்களோ தெரியவில்லை. எல்லோரும் ராமேஸ்வரத்துக்கு போகிறார்கள். அதற்கு மேலே போக முடியாது. அப்படி 5:00 காலை போய் சேருமாறு அட்டவணை இருந்திருக்கலாம்.

மகனின் நண்பர் ஒரு சில ஆட்களை கூட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார். ஆட்டோ அமர்த்திக்கொண்டு தங்கும் இடத்திற்கு போய் சேர்ந்தோம். 100 மீட்டருக்கு ஒரு வேகத்தடை இருக்கிறது. போகும் இடம் புதிதாக உருவான ‘நகர்’. ஒரு ஆட்டோ தாராளமாக போக பாதையின் அகல அனுமதிக்கிறது.

தங்குவதற்கு கொடுத்த இடம் வேறு ஒருவருடைய வீட்டின் மாடி. உள்ளே போனால் அங்கே வேறு யாரோ அங்கு தங்கி இருந்திருக்கவேண்டும். பின் அதை பெருக்கக்கூட இல்லை. அதனால் போன இடத்தில் கொஞ்சம் கண் அசந்து விட்டேன். பெருக்கக் கூட தயாராக இல்லை அப்படியே படுத்துவிட்டேன்.

அசதியில் கொஞ்சம் கண்களை மூடிவிட்டேன். ஏதோ பூச்சிக்கடி நன்றாக தூங்கவிடவில்லை. ஜன்னலை திறக்காமல் அறை ரொம்ப சூடு. திறந்தாலோ பூச்சிகள் படையெடுப்பு. விடிந்தபின் ஜன்னலுக்கு வெளியே பார்த்தால் காட்டுச்செடிகள், புதர்கள்…

நாங்கள் தங்கின வீட்டுக்கு பக்கத்து இடம். அந்த கோசாலையில்தான் ஶ்ராத்தம் செய்தோம்.

 

 

முன்னேயே அந்த நாளில் என்ன செய்யப்போகிறோம் என்று கேட்டு வைத்திருந்தேன். அவர் சொன்னபடி நான் ஏழரை மணிக்கு ரெடியாகி விட்டேன். ஆனால் அவர் ஏற்பாடு செய்திருந்த வண்டி வரவில்லை. ஏன் என்று பார்த்தால் கொஞ்சம் பிரச்சனை. வாத்தியாருக்கு உறவினர் வீட்டில் உபநயனம் இருந்ததால் வேறு ஒருவரை இங்கே செய்து வைக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதனால் இவர் உபநயனத்தை விட்டுவிட்டு எங்களுக்காக இங்கேயே இருந்துவிட்டார். இந்த நிலையில் அன்று காலை அந்த நபர் கூப்பிட்டு வந்து விடுவதாக கூறி இருக்கிறார். இது தர்மசங்கடம். பேசாமல் ‘அண்ணா நீங்கள் சரியாக பதில் சொல்லாததால் நானே இங்கே இருப்பதாக முடிவு செய்து விட்டேன்’ என்று சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லாததால் அவர் வரவேண்டும் என்று காத்திருக்க வேண்டியதாயிற்று. இதனால் முக்கால் மணி நேரம் போல் வீணானது. முதலில் லட்சுமண தீர்த்தம் போனோம். அங்கே யாத்திரை சங்கல்பம் செய்து வபனம் செய்ய வேண்டும். அதாவது முடி நீக்குதல். பிராமணன் என்று சிகையை வைத்த பிறகு எந்த காரணம் கொண்டும் எடுக்கவே கூடாது. அப்படி எடுப்பது தற்கொலைக்கு சமம் என்று சொல்லப்படுகிறது. அஸ்வத்தாமன் தன் முடியில் இருந்த மணியுடன் அதை அறுத்து கொடுத்துவிட்டு போய்விட்டான் என்ற பாரத கதை நினைவுக்கு வரலாம். இது தெரியாமல் சில பேர் மொட்டை அடித்துக் கொண்டு விடுகிறார்கள். அது தவறு.

Tuesday, May 24, 2022

காஶி_யாத்திரை. -1
காசி யாத்திரை என்று சொன்னால் அது ஒரு நீண்ட பயணம். வீட்டில் சங்கல்பம் செய்து கிளம்பி முதலில் ராமேஸ்வரம் சென்று அங்கே தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து மணல் சேகரிக்க வேண்டும். அதில் வேணி மாதவன் பிந்து மாதவர் சேது மாதவர் என்று மூன்றாக பிரித்து பூஜை செய்து சேதுமாதவரை வாத்தியாரிடம் கொடுத்து விட்டு, மீண்டும் அவரை அவரை உலர்த்தி மூட்டையாக கட்டிக்கொண்டு எடுத்து அடுத்து த்ரிவேணிக்கு செல்ல வேண்டும். அங்கே திரிவேணியில் முண்டனம் செய்துகொண்டு சங்கல்ப ஸ்நாநம் செய்து வேணி மாதவரை அங்கே கங்கையில் சேர்க்க வேண்டும். அந்த இடத்திலிருந் கங்கை நீரை சேகரித்துக்கொண்டு அடுத்து காசிக்கு செல்லவேண்டும். அங்கே கர்மாக்களை முடித்து கயை செல்ல வேண்டும். பிண்டதானங்களை முடித்து மீண்டும் ராமேஸ்வரத்திற்கு செல்ல வேண்டும். நாம் த்ருவேணியில் சேகரித்த அந்த கங்கை நீரை அங்கே ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக கொடுக்க வேண்டும். சுருங்கச்சொல்ல இப்படியாக காசி யாத்திரை பூர்த்தி ஆகும்.
இரண்டு வருடங்களுக்கு முன் என் தாயார் தவறிவிட்டார். 2021 மார்ச் மாதம் என் தந்தையும் தவறிவிட்டார் இருவருடைய அந்திம காரியங்களை முடித்து தந்தையின் வருட பூர்த்தி சிராத்தத்தை முடித்து பின்னர் காசி யாத்திரை கிளம்பினோம். வடக்கே வெய்யில் அதிகமாகிவிடும் என்பதால் முடிந்தவரை சீக்கிரம் போக வேண்டும் என்று என்று நினைத்தோம் புது வருடம் துவங்கும் வரை கிளம்புவதற்கு முடியவில்லை. என் மகனே ராமேஸ்வரத்தில் காசியிலும் தெரிந்தவர்கள் இருப்பதால் ஏற்பாடுகளை கவனித்தான். அவனே பயணத்திற்கான பயணச்சீட்டு களையும் முன்பதிவு செய்தான்.
கிளம்பும் முன் வீட்டில் எங்கள் வாத்தியார் இஷ்டி முடித்து க்ருத (Grutha) ஶ்ராத்தம் செய்து வைத்தார்.
பிறகு நாங்கள் ராமேஸ்வரத்திற்கு கிளம்பினோம். கடலூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அரை மணி நேரம் முன்பாகவே போய் சேர்ந்து விட்டோம். பயணத்தின் டிக்கட்டுகள் முக்கால்வாசி ஆர் ஏ சி என்றே இருந்தன. இந்த டிக்கெட்டுகளும் அவ்வாறே. முந்தின நாள் இவை முன் பதிவாக மாற்றப்பட்டன. இந்த டீ கோச் எங்கே வருகிறது என்று சரியாக தெரியவில்லை. எங்கள் மருத்துவமனை உதவியாளர் அங்கே கடைகளில் விசாரித்ததில் அது எங்கே வேண்டுமானாலும் வரும் என்று தெளிவாக உதவிகரமாக சொன்னார்கள். பின்னர் அனேகமாக இந்த இடத்தில் என்று சொன்ன பிறகு அங்கே போய் நின்றோம். கூரை கிடையாது. ஆனால் ரயில்வே டிஜிட்டல் இன்டிகேட்டர் அந்த இடம் வேறு பெட்டி என்று சொன்னது. அது எந்த இடம் என்று காட்டுகிறதோ அங்கே போகலாம் என்று நான் சொன்னது நிராகரிக்கப்பட்டது. நான் சின்னப்பையனாக இருந்தபோது 5 பெட்டிகள் இருந்தால் அதிகம். இப்போது சர்வ சாதாரணமாக 20 பெட்டிகள் இருக்கின்றன. எங்கே வரும் என்று தெரியாவிட்டால் எங்கே போய் நிற்பது? நடுவில் நிற்க வேண்டும் போல் இருக்கிறது எந்த பக்கம் வந்தாலும் அந்த பக்கம் போய்க் கொள்ளலாம், ஆனால் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுவதாக இருக்கிறது. ரயில் கொஞ்சம் லேட்டாக வந்தது. நினைத்தது போல நாங்கள் நின்ற இடமில்லை. அது இன்னம் பின்னால் போய்விட்டது. உதவியாளர்கள் இருந்ததால் லக்கேஜை ஏற்ற முடிந்தது. இரண்டு நாட்களுக்கு அப்படி என்ன பெரிய லக்கேஜ் என்று கேட்கிறீர்களா? கேட்கக் கூடாது. என்னதான் சொன்னாலும் வீட்டுப் பெண்கள் அப்படித்தான் எக்கச்சக்கமாக எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்கள். பல விஷயங்களை இங்கிருந்து கொண்டு போக வேண்டியிருந்ததால் இது குறித்து ஒன்னும் சொல்ல முடியவில்லை.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் சிரத்தையுடன் சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பல விஷயங்கள் தங்கும் இடத்தில் கிடைக்காது என்று புரிந்து கொள்ள வேண்டும் நாம். கிடைப்பது நாம் பழகிய படி இருக்காது. வாத்தியார் என்ன சொல்கிறாரோ செய்கிறாரோ அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டு கிளம்புபவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் நாங்கள் பார்வணவிதான சிராத்தம் செய்யவேண்டும் என்று நினைத்ததால் அதற்குத் தேவையான விஷயங்களை இங்கிருந்தே கொண்டு போக வேண்டி இருந்தது. அப்படியும் அங்கே சில விஷயங்கள் சரியாக கிடைக்காமல் தடுமாற வேண்டி இருந்தது.
-தொடரும்


 

Monday, May 9, 2022

ஶ்ராத்தம் - 50 தீர்த்த ஶ்ராத்தம் - 2
கங்கையில் பித்ருக்கள் நித்யவாசம் செய்வதால் வர்க த்வய பித்ரூன் இதம் ஆசனம் என்று ஆரம்பிக்கவும். த்யாயாமி ஆவாஹயாமி என்று ஆவாஹனம் இல்லை.

வர்கத்வய பித்ருக்களுக்கு முடிந்த பின் நான்காவது செட் தர்ப்பைகளில் காருண்ய பித்ருக்கள் ஆவாஹனம். ஐந்தாவதில் க்ஷேத்ர பிண்டங்களுக்கு

அஸ்மத் குலே ம்ருதா யே ச கதிர் யேஷாம் ந வித்யதே ஆவாஹயிஷ்யே தான் ஸர்வான் இதமஸ்து திலோதகம்

என்று எள்ளும் நீரும் நெடுக்க இறைக்க வேண்டும்பொருள்: என் குடும்பத்தில் யார் மறைந்து விட்டார்களோ எந்த பித்ருக்களுக்கு கதி இல்லையோ அவர்களை இங்கு ஆவாஹனம் செய்து  இங்கே எள்ளும் நீரும் அளிக்கிறேன்.

ஆ ப்ரம்ஹணோ யே பித்ரு வம்ஸ ஜாதாமாதுஸ்ததா வம்ஸ பவா: நதீயா: வம்ஸ த்வயே அஸ்மின் மம தாஸ பூதா: ப்ருத்யா: ததைவ ஆஸ்ரித சேவகாஶ்ஶ மித்ராணி ஸக்ய: பஶவஶ்ஶ வ்ருக்‌ஷா: ஸ்ப்ருஷ்டாஶ்ஶ த்ருஷ்டாஶ்ஶ க்ருதோபகாரா: ஜன்மாந்தரே யே மம ஸங்கதாஶ்ஶ தேப்யஸ்ஸ்வதா பிண்டமஹம் ததாமி|


- ‘என் தந்தை வழி வந்தவரோ என் தாய் வழி வந்தவரோ  எனக்கு தாஸர்களாக இருப்பவரோ வேலைக்காரர்களோ நண்பர்களோ சக்யர்களோ பசுக்களோ விருக்ஷ வர்கமோ (மரங்களோதொட்டவர்களோ பார்த்தவர்களோ ஹிதம், உபகாரம் செய்தவர்களோ இன்னொரு ஜன்மாவில் எனக்கும் யாருக்கும் தொடர்பு இருந்ததோ அவர்களுக்கும்’ என்று இவ்வளவு பேருக்கு இங்கே பிண்டம் இருக்கிறது.

 
 

பித்ரு வம்ஸே ம்ருதாயேச மாத்ரு வம்ஸே ததைவச குரு ஸ்வஶுர பந்தூனாம் யே சான்யே பாந்தவா: ம்ருதா: யே மே குலே லுப்த பிண்டா: புத்ர தார விவர்ஜிதா: க்ரியாலோப ததாஸ்சைவ ஜாத்யந்தா: பங்கவஸ்ததா விரூபா: ஆமகர்பாஶ்ஶ க்ஞாதாக்ஞாதா: குலே மம தேஷாம் பிண்ட: மயா தத்தஅக்‌ஷய்யம் உபதிஷ்டது.

அடுத்து என் தந்தை வழி வந்தவரோ என் தாய் வழி வந்தவரோ குருவோ மாமனாரோ பந்துக்களோ என் குடும்பத்தில் எந்த பித்ருக்களுக்கு கர்மா இல்லாமல் இருக்கிறதோ புத்திரன் பத்னி இல்லாமல் இறந்தார்களோ யாருக்கு செய்ய வேண்டிய கர்மா செய்யப்படவில்லையோ பிறவியிலிருந்தே கண் தெரியாதவர்களோ கால் ஊனமானவர்களோ ரூபமே அடையாமல் தெரிந்தோ தெரியாமலோ இயற்கையாகவோ செயற்கையாகவோ நடந்த கர்ப ஸ்ராவம் என்னும் கலைந்த கர்ப்பத்தில் நழுவியர்களோ  அவர்களுக்கு தர்ம பிண்டம் தருகிறேன்; அழிவில்லாத த்ருப்தி உண்டாகட்டும்

 

அஸி பத்ர வனே கோரே கும்பீ பாகேச யே (ஸ்திதா:) கதா: தேஷாம் உத்தரண அர்த்தாய இமம் பிண்டம் ததாம்யஹம்

- அஸி பத்திரம் என்னும் நரகம் (இலைகள் கத்தி போல் இருக்கும்; அதன் வழியாக போகும் போது கோரமாக கிழிக்கும். சந்தியாவந்தனம் செய்யாதவர்கள் இதில் மாட்டிக்கொள்வர் என்கிறார்கள்)  

கும்பி பாகம் என்னும் நரகம் (அதிதிகளுக்கோ மற்றவருக்கோ அன்னமிடாமல் தான் மட்டும் சாப்பிடுபவர்கள் போகுமிடம்) தந்தை தாய் வேதாத்யயனம் செய்வோர்களை / குருவை நிந்திப்பவர்கள், 1000 மைல் விஸ்தீரண தாமிர தட்டு மேல் போக வேண்டும்; மேலே சூரியன் தஹிப்பார். பசு மாட்டின் மீதுள்ள ரோமங்களின் எண்ணிக்கை அளவு வருடங்களில் இதில் உழல வேண்டும்

இந்த கும்பி பாகத்தில் உழல்வோருக்கு காப்பாற்ற இந்த பிண்டம்.


யே கே ச ப்ரேத ரூபேன வர்த்தந்தே பிதரோ மம தே ஸர்வே த்ருப்தி மாயாந்து குச ப்ருஷ்டை: திலோதகை:. 

ப்ரேத ரூபமாக இருக்கும் பித்ருக்களுக்கு த்ருப்தி  என தர்ப்பத்தின் அடிபாகத்தை கீழே பிடித்துக் கொண்டு தர்ப்பணம்.

 ஆ ப்ரம்ஹ ஸ்தம்ப பர்யந்தம் யத்கிஞ்சித் சராசரம் மயா தத்தேன தோயேன த்ருப்திமேவ அபி கச்சது

ப்ரம்மம் முதல் புழு வரை எல்லாருக்கும் அசையும் அசையா எல்லாவற்றுக்கும் நான் கொடுக்கும் நீரால் த்ருப்தி உண்டாகட்டும்.. 

உத்ஸ்ஸன்ன குல கோடீனாம் யேஷாம் தாதா குலே மயி?? தர்ம பிண்ட: மயா தத்த: அக்‌ஷய்யம் உபதிஷ்டது

நான்காவது பிண்டம் தர்ம பிண்டம் – பிண்டம் கிடைக்காது தவிக்கும் மற்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் இடப்படுகிறது.