Pages

Friday, December 8, 2017

கிறுக்கல்கள் -170

தானே குழப்பத்தில் இருந்து கொண்டு இருந்தாலும் தன்னையே ஆன்மீக குரு என்று சொல்லிக்கொள்ளும் நபர்களை கண்டு மாஸ்டர் சிரிப்பார்.

இது எப்படி இருக்கிறது என்றால் ஒருவர் பாதசாரிகளுக்கான வழிகாட்டி என்று புத்தகத்தை எழுதி வெளியிட்ட நாளிலேயே சாலையில் விபத்தை உண்டாக்கி இறந்து போன ஒருவரைப்போல என்பார்!

Thursday, December 7, 2017

கிறுக்கல்கள் -169

ஒரு பிரசங்கி வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு சென்றார்.
சீடர்கள் மாஸ்டரை கேட்டார்கள் - இந்த சுற்றுப்பயணம் அவரது பார்வையை விசாலமாக்குமா?
மாஸ்டர் சொன்னார்: இல்லை அவரது குறுகிய மனப்பான்மையை இன்னும் அதிக இடங்களில் பரப்பும்!

Wednesday, December 6, 2017

கிறுக்கல்கள் -168

மாஸ்டர் சொன்னார்: பலரும் உழைப்பால் பிரச்சினைகளை தீர்த்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் செய்கையால் விளைவது அவரும் மற்றவரும் ஏதோ வேலை செய்து கொண்டு இருப்பது மட்டுமே. உண்மையில் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது விழிப்புணர்வால்தான். விழிப்புணர்வு இருக்குமிடத்தில் பிரச்சினைகளே ஏற்படுவதில்லை!

Tuesday, December 5, 2017

கிறுக்கல்கள் -167

சரியான பார்வை என்கிறது ஏன் அவ்வளவு கஷ்டம் என்று யாரோ கேட்டார்கள். மாஸ்டர் கதை சொன்னார்.

சாம் ஐரோப்பா பயணம் முடித்து திரும்பினார்.அவருடைய கம்பனி 'டிட்டி ஆண்களின் ஜட்டி' இல் பார்ட்னராக இருந்தவர் ஆர்வத்துடன் கேட்டார்: சாம், ரோமுக்கு போக முடிந்ததா?
! போனேனே?
அட! போப்பை தரிசனம் செய்தீர்களா?
தரிசனமா? அவரோட தனியே ஆடியன்ஸ் கிடைச்சதாக்கும்!
அடாடாடா! அவர் எப்படி இருக்கார்?
ம்ம்ம்ம்? அவர் 110 சென்டி மீட்டர்ன்னு நினைக்கறேன்!

Monday, December 4, 2017

கிறுக்கல்கள் -166

மதத்தைக்குறித்த மாஸ்டரின் இன்னொரு குறை அது மனிதர்களை பல பிரிவுகளாக பிரித்துவிட்டதுதான். ஒரு சின்ன கதையை அடிக்கடி நினைவுகொள்வார்.

ஒரு சிறுவன் தன் சிறு தோழியிடம் கேட்டான்: நீங்கள் ப்ரஸ்பிடேரியனா?

மூக்கை தூக்கியபடி பதில் வந்தது: ச்சேச்சே! இல்ல, நாங்கள்ளாம் அது போல வேற ஏதோ அருவருப்பான ஒண்ணு!

Thursday, November 16, 2017

இறப்பு - 4 - மறு பிறப்பு


நேத்தைய பதிவு சில விசாரங்களை கிளப்பிவிட்டது. மகிழ்ச்சி!
இந்த ஆன்மா ஜீவன் சமாசாரம் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கு.
அத்வைத பார்வையில இந்த ஆன்மா/ ஆத்மா ஒண்ணேதான். அது 'பரமாத்மா'வைத்தான் குறிக்கும்.
த்வைத பார்வையில் இது ஆத்மா இறைவன்னு போயிடுத்து.
பரமாத்மாவின் சின்னஞ்சிறிய துணுக்கு அகங்காரம் என்கிறதுக்கு ஆட்படுதுன்னு வெச்சுக்கலாம். இப்படி பல துணுக்குகள் இருக்கும். அகங்காரம் என்கிறது நான் என்கிற உணர்வு. இது எல்லோருக்கும் இருக்கு. நானில்லைன்னு யாருமே சொல்ல மாட்டாங்க. ஆனா இந்த நான் யாருன்னு கேள்வி கேட்கப்போனா பதில் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். பகவான் ரமணர் இந்த வழியைத்தான் காட்டறார். நீ யார்ன்னு விசாரம் பண்ணு நாளடைவில எல்லாம் தெரிய வரும்.
இந்த நான் என்கிறதுதான் நான் 'பரமாத்மாவின் சின்ன துணுக்கு'ன்னு உணருவதை தடுக்கிறது. இந்த அகங்காரத்துக்கு கட்டுப்பட்ட ஆத்மாவைத்தான் ஜீவன் அல்லது ஜீவாத்மான்னு சொல்கிறோம்.
க்ளாசிகல் உதாரணம் பார்க்கப்போனா..
ஒரு குடம் இருக்கு. அது திறந்த வெளியில இருக்கு. இந்த வெளி - ஸ்பேஸ்- ஐ ஆகாசம் என்கிறாங்க. குடத்துக்குள்ள இருக்கிற ஸ்பேஸ் வேற சுற்றி மீதம் இருக்கிற ஸ்பேஸ் வேறயா? ஒண்ணுதான். ஆனாலும் அப்படி ஒரு கற்பனை அந்த குடம் இருக்கும் வரை இருக்கும், இல்லையா? குடம் உடைந்து போனா? ஸ்பேஸ் ஸ்பேஸோட சேர்ந்துடுமா? :-) எனிவே இப்ப குட ஆகாசம்ன்னு சொல்ல எதுவுமில்லை. அது போல இந்த அகங்காரம் ஒண்ணு மட்டுமே ஆன்மாவை ஜீவாத்மா பரமாத்மான்னு பிரிக்கிறது. அகங்காரம் அழிய இரண்டும் ஒண்ணாயிடும்.
ஆனால் இந்த அகங்காரம் அழியறது மிக மிக அரிது. அப்படி ஒரு அழிவு வரும் வரைக்கும் அந்த ஜீவனானது இருப்பதுக்கு ஒரு உடல் தகுதி இல்லாம போனா இன்னொரு உடலை பிடித்துக்கொள்ளும். இப்படி பிடிச்சுக்கும் போது அகங்காரம் கன்மம் மாயை மூணு மட்டுமே அடுத்த உடலுக்கு போகிறது. நினைவுகள் இருக்கிற மனசு போகிறதில்லை. இது அந்நியாயமா இருக்குன்னு நினைச்சா... யோசிச்சு பாத்தா இது எவ்வளவு பெரிய வரம்! இந்த ஒரு வாழ்க்கையில் நினைவு தெரிஞ்சது முதலான எத்தனை மனக்குறைகளை சுமந்து கொண்டு வலம் வரோம்! சின்ன வயசில நாம செஞ்ச தப்ப வாத்தியார்கிட்ட கோள் மூட்டிவிட்ட பையனில் இருந்து ஆரம்பிச்சு அவன் எனக்கு இப்படி செஞ்சான், இவன் எனக்கு அப்படி செஞ்சான்னு எவ்வளோ குப்பை விஷயங்களை பாரமா மனசில சுமந்துகிட்டு நம் வாழ்க்கையை நாமே நாசமாக்கிகிட்டு இருக்கோம். இந்த அழகுக்கு போன ஜன்மத்து நினைவுகள் வேற சுமக்கணுமா?
மிக அரிதா சிலருக்கு சில காலம் போன பிறவியின் நினைவுகள் இருக்கலாம். அகங்காரம் என்பதும் மனசு என்பதும் ஒரே அந்தகரணத்தின் வெவ்வேறு ரூபங்கள். எப்போதாவது கொஞ்சமே கொஞ்சம் மனசு அகங்காரத்துக்கூட ஒட்டிண்டு போகும் போலிருக்கு! இது நல்லாவே டாக்குமெண்ட் பண்ணப்பட்ட விஷயம்தான்னாலும் சில விஷயங்கள் குழப்பறது. காலக்கணக்கு ஒத்து வரதில்லை. எட்டு வயசு பையன் ரெண்டு வருஷத்துக்கு முன் செத்துப்போன ஆசாமியோட மறுபிறவி போல தோணும். அதுதான் மாயை!

//உலகம்ன்னு ஒண்ணை உருவாக்கி நாம் அதில அழுந்தி இன்ப துன்பங்களை அனுபவிக்க வழி செய்வது.// எதுக்கு உருவாக்கி நம்மை அதிலே ஆழ்ந்து போக வைக்கணும்! அதைச் செய்யாமல் இருந்துட்டா?
இப்படி ஒருகேள்வி. அதை செய்யாமல் இருந்தா நீங்களும் நானும் இருக்க மாட்டோம்! ஆனா இருக்கோமே.
ஏன் இப்படின்னு கேள்வி கேட்கறதில் பயனில்லை; இதை நீக்கிக்கற வழிகளை சொல்லி இருக்காங்க. அதை எல்லாம் பயன் படுத்தி வெளியேறப்பாரு என்கிறதுதான் பெரியவர்கள் சொல்கிற பதில்.

என்ன நடக்கிறதுன்னா ஜீவன் ஒரு கீழ்நிலை பிறவியாத்தான் ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு பிறவியிலும் கொஞ்சம் பாடம் கத்துக்கொண்டு முன்னேறுகிறது.
புல்லாகிப் பூண்டாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங் களாய்
வல் அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்,
அப்படின்னு மாணிக்க வாசகர் பாடினார் இல்லையா? ப்ரயன் வீஸ் (brian weiss) எழுதின மெனி லைவ்ஸ் மெனி மாஸ்டர்ஸ் இதைப்பத்தி சொல்லுகிற சுவையான புத்தகம்!
நன்கு முன்னேறினாக்கூட முக்தி கிடைச்சுடும் என்கிறதுமில்லை. அந்த ஜீவன் மஹர் லோகத்தில் நிலை பெறலாம். பல காலம் அங்கே இருந்து கடைசியில் மஹா ப்ரலயம் ஏற்படும் போது எல்லா ஜீவன்களுடனும் ப்ரம்மத்தில் ஐக்கியமாயிடும். அடுத்த சிருஷ்டி உண்டாகும் போது மீண்டும் பிறக்கும்! இதைப்பத்தி எல்லாம் முன்னேயே எழுதி இருக்கேன். எங்கேன்னுதான் நினைவில்லை!

Wednesday, November 15, 2017

இறப்பு - 3

நேரம் வந்துவிட்டால் யாரும் தடுக்க முடியாது. என்னதான் மிகச்சிறந்த அந்தணரை வைத்து மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்தாலும் முடியாது.
அட! அப்படியா?ன்னா..
அது அப ம்ருத்யுஞ்ஜயம்தான் தரும். சில சமயம் காலம் வருமுன்னரே இறப்புக்கான சூழ்நிலை உருவாகிவிட்டால் அப்போது செய்ய பலன் தரும்.
ஆக்ஸிடெண்ட்ல மாட்டிக்கறார். படுத்த படுக்கையா இருக்கார். இந்த சமயத்துல செய்ய அது இறப்புக்கான நேரம் இல்லைன்னா பலன் தரும்.
வெள்ளம் சுனாமி, பூகம்பம்ன்னு சில பேரிடர்கள் சில சமயம் ஏற்படும் இல்லையா? அப்ப கூட்டம் கூட்டமா இறப்பு நிகழும். எல்லாருக்குமா அந்த நேரத்தில் இறப்பு விதிச்சு இருக்கும்? இல்லை. இந்த மாதிரி சமயங்களிலதான் இந்த மாதிரி ஹோமம் செய்து இருந்தா மிராகிள்கள் நடக்கும்! அஞ்சே நிமிஷம் சார். ப்ளேனை தவற விட்டுட்டேன்! அது விபத்துக்குள்ளாகி எல்லாரும் இறந்து போனார்கள்.
தப்பிச்சு ஓடிண்டு இருதேன். நான் ஓடறப்ப ஒரு பெரிய மரம் விழுந்தது. ஜஸ்ட் ஒரு அடி பின்னால விழுந்தது!
வண்டில வேகமா பாலத்தை தாண்டினேன் சார். வண்டி பாலத்தை விட்டு வெளியே வரவும் அது இடிஞ்சு விழவும் சரியா இருந்தது.
இவர்களுக்கு எல்லாம் நேரம் வரலை. அது வரும்போது போய்விடுவார்கள். கடைசியா சொன்ன உதாரணம் சுனாமி சமயத்தில எங்க ஊர்லேயே நடந்தது! தப்பிச்ச அவர் ரெண்டு வருஷம் கழிச்சு லிம்ஃபோமா வந்து இறந்து போனார்.
இறந்து போனா என்ன ஆகிறது?
அடுத்த பிறவி எடுக்கிறது.
ஏன்?
இந்த ஜன்மத்தில செய்த செயல்களால் கர்மாக்கள் சேர்ந்து இருக்கும். அதை அனுபவிச்சு ஆகணுமே! அதுக்காக. இது 'கெட்ட' கர்மாவா இருக்கணும்ன்னு கூட இல்லை! 'நல்ல' கரமாக்களா கூட இருக்கலாம். சில கர்மாக்களை கெட்டதா நல்லதான்னு நிச்சயிக்க முடியாது. கலந்த ரிசல்டே கிடைக்கும்.
பின்ன இதுக்கு முடிவே கிடையாதான்னா... கர்மாவை - நல்லதோ கெட்டதோ- பகவத் அர்ப்பணமாக செய்தால் அதன் பலன் நமக்கு ஒட்டாது. அது பகவானுக்கே போய் சேரும். சின்ன வயதில் இருந்தே இப்படி செய்யக்கூடியவர் யார் இருக்கா?
எது பிறவி எடுக்கிறது? அது எதை கூடவே கொண்டு போகிறது?
ஜீவன்தான் பிறவி எடுக்கிறது. நாம் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் சேர்த்த சொத்து எதையும் கூட கொண்டு போக முடியாது! கொண்டு போவது எல்லாம் ஆணவம், கன்மம், மாயைன்னு சைவ சித்தாந்தத்தில சொல்கிற மூணுதான். ஆணவம் நான் என்கிற நீங்காத நினைப்பு. யாராலும் இந்த நான் இல்லாம இருக்க முடிகிறதோ? மாயையும் ஏறத்தாழ இதே போல. கொஞ்சமே கொஞ்சம் நேரம் இருக்கிற விஷயங்களை ஏதோ நிரந்தரம் போல எண்ணி ஏமாறுவது. இருக்கிற உண்மையை தெரியாத மாதிரி மறைக்கிறது. உலகம்ன்னு ஒண்ணை உருவாக்கி நாம் அதில அழுந்தி இன்ப துன்பங்களை அனுபவிக்க வழி செய்வது. கன்மம்தான் கர்மான்னு இப்ப சொன்னது.
உபநிஷத்துல விஸ்தாரமா இது எப்படி நடக்கிறதுன்னு சொல்லி இருக்கு.
இப்ப அதுக்குள்ள போகலை.

Tuesday, November 14, 2017

இறப்பு - 2


உலகில் எது ஆச்சரியம்? ன்னு யக்ஷன் கேட்ட கேள்விக்கு தர்மர் "பிரதி தினம் பல பிராணிகள் யம லோகத்துக்கு சென்று கொண்டே இருக்கின்றன. ஆனால் அதை பார்த்துக்கொண்டே இருக்கும் மற்றவர்கள் தாம் மட்டும் அழிவற்றவர்களாகவே இருக்க விரும்புகின்றனர். இதை விட வேறு ஆச்சரியம் என்ன இருக்கிறது?” அப்படின்னு சொல்லுகிறார்.

யோசிச்சுப்பாத்தா இது எவ்வளோ இயற்கையானது! பிறக்கும் போதே இறப்பும் நிச்சயமா இருக்கு. எப்ப என்கிறதுதான் ஆளுக்கு ஆள் வித்தியாசமா இருக்கு. பிறந்தவர் இறக்காமலே இருந்தா என்ன ஆகும்?

ஒரு ராஜா இருந்தான். இறப்பற்ற வாழ்கையை தரும் தண்ணீர் இருக்கிற சுனையைப்பத்தி அவனுக்கு கொஞ்சம் தகவல் கிடைத்தது. அதைத்தேடி கிளம்பினான். சில வருஷங்கள் சுற்றி அலைந்து ஒரு வழியா அதை கண்டு பிடிச்சான். ஆஹான்னு சந்தோஷப்பட்ட நேரத்தில அங்க ஒரு காகம் வந்தது. அதோட இறக்கை ஒண்ணு காணவே காணோம். மத்ததும் நிறைய இறகுகள் பிஞ்சு இருந்தது. அதால பறக்கவே முடியலை. மெதுவா தத்தித்தத்தி நொண்டிக்கொண்டே வந்து சேர்ந்தது. பார்க்கவே பரிதாபமா இருந்தது. ஹீன ஸ்வத்தில "ராஜா, நீ இறப்பிலா வாழ்வு தரும் சுனையை தேடி வந்தயா?” ன்னு கேட்டது. ராஜா ஆமாம்ன்னான். சரி. நானும் அப்படித்தான் அலைஞ்சு திரிஞ்சு இதை கண்டு பிடிச்சேன், தண்ணி குடிச்சேன். இந்த தண்ணியை குடிக்கறதுக்கு முன்னால என் நிலையை கொஞ்சம் பாத்துட்டு முடிவு பண்ணுன்னு சொல்லித்து. ராஜா கொஞ்சம் யோசிச்சுட்டு சரியாத்தான் சொல்லறேன்னு நன்றி சொல்லிட்டு தண்ணியை குடிக்காமலே திரும்பிட்டான்! 
 
ஆண்டவா என்னை கொண்டு போக மாட்டயா? ன்னு அழுது புலம்பறவங்களை நாமும் பார்த்து இருப்போம். ஊஹும்! லேசில போகாது. இந்த பிறவில அனுபவிக்க வேண்டிய கர்மாவை அனுபவிச்சுட்டுத்தான் போகும்.

அதே போல போக வேண்டிய நேரம் வந்தாச்சுன்னா அதை எதுவுமே தடுத்து நிறுத்த முடியாது. கோவிந்த தீக்‌ஷிதர் கோவில் ஒண்ணை கட்டினார். ஸ்தபதி அருமையான வேலை செஞ்சு இருந்தார். கும்பாபிஷேகத்துக்கு முந்திய நாள் மேற்பார்வை இட்டுக்கொண்டு இருந்தபோது அதிர்ச்சியானார். அவரிடம் முன்னே வேலை செய்த ஒரு நபரை பார்த்தார். அவர் இறந்துபோய் சில வருடங்கள் ஆகிவிட்டு இருந்தன. இவன் எப்படி இங்கே இப்போ? யோசித்துக்கொண்டு இருந்தப்ப அவன் கிட்டே வந்து வணங்கி "ஐயா வணக்கம். நான் சாதாரணமா மனிதர் கண்னுக்கு தெரிய மாட்டேன். ஆனா உங்க தபோ சக்தியால நீங்க என்னை பார்க்க முடியறது" என்றான். கூடவே "இப்ப எனக்கு யமதர்மராஜனுக்கு வேலை செய்யச்சொல்லி இருக்காங்க" என்றான். "எமனா? உனக்கு இங்க என்ன வேலை?"ன்னு கேட்டார். "ஐயா இந்த கோவிலை கட்டின ஸ்தபதிக்கு ஆயுசு முடியுது. நாளை கும்பாபிஷேகத்துக்கு குறிச்ச நேரத்துக்கு கொஞ்சம் முந்தி அவரை கொண்டுபோயிடுவேன்; ஏணியில ஏறும்போது கீழே விழுந்து போயிடுவார்" என்றான்.

அடுத்த நாள் காலை தீக்‌ஷிதருக்கு இருப்பு கொள்ளவில்லை. இவ்வளோ நல்ல வேலை செய்து கொடுத்த ஸ்தபதி இறந்து போவதாவது! அத்தோட கும்பாபிஷேகத்துக்கும் அது தடையா இருக்குமே! ஸ்தபதியை வீட்டுக்கு அழைத்துப்போனார். ஒரு அறையில் வைத்துப்பூட்டினார். சாவியை வெளியே ஆணியில் மாட்டிவிட்டு காவலுக்கு ஒரு ஆளையும் போட்டுவிட்டு வந்துவிட்டார். கும்பாபிஷேகத்துக்கான நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. கடைசி நேர வேலை ஒன்றை செய்ய ஸ்தபதியை தேடினார்கள். எங்கெங்கோ அலைந்து கண்டிபிடித்தும் விட்டார்கள். காவலுக்கு இருந்தவர் அவசரமாக இயற்கை உபாதையை கவனிக்க போயிருந்தார். ஆணியில் மாட்டி இருந்த சாவியால் கதவைத்திறந்து அவரை வெளியே விட்டார்கள். அவசரமான வேலையை தெரிந்துகொண்ட ஸ்தபதி அவசர அவசரமாக போனார். அதே அவசரத்தில் ஏணி ஏறினவர் தடுக்கி விழுந்தார்; போய் சேர்ந்தார்!

நேரம் வந்துவிட்டால் யாரும் தடுக்க முடியாது. என்னதான் மிகச்சிறந்த அந்தணரை வைத்து மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்தாலும் முடியாது.
அட! அப்படியா?ன்னா..
Monday, November 13, 2017

இறப்பு - 1

இறப்பைப்பற்றிய கோளாறான சிந்தனைகள். பயப்படாதீங்க! பிட்ஸ் அண்ட் பீஸஸா இருக்கும். கண்டுக்காதீங்க!

மனுஷன் என்கிறவன் பல விஷயங்களில தைரியசாலியா இருக்கலாம். ஆனா அனேகமா பயப்படுகிற ஒரு விஷயம் என்னன்னா இறப்பு!

வெகு சிலரே இந்த பயம் இல்லாம இருக்காங்க. அப்படி இருக்கறவங்க என்ன ரிஸ்க் வேணா எடுத்து என்ன வேணா செய்வாங்க. ஸ்டண்ட் செய்யறதாகட்டும், இப்ப காணாமப்போயிண்டு இருக்கற சர்கஸ்ல அரிதா சிலது செய்யறதாகட்டும், சாகசங்கள் செய்யறதாகட்டும் இல்லை தீவிரவாத செயல்கள் செய்யறவனாக இருக்கட்டும்... :(
யோசிச்சு பாத்தா இந்த பயம் எதுக்குன்னு கொஞ்சம் தமாஷாவே இருக்கு! ஏதோ வலி இருக்கும் கஷ்டப்படணும்ன்னு ஒரு விஷயம் இருந்தா அதுக்கு பயந்தாக்கூட கொஞ்சம் காரணம் இருக்கும். இறந்து போன பிறகு அதை 'அனுபவிக்க' அவர்தான் இருக்க மாட்டாரே? அப்புறம் என்ன பயம்? இறக்காதப்ப அவர்தான் இருக்காரே, என்ன பயம்? எப்படிப்பாத்தாலும் பயப்படறதுக்கு லாஜிக் தெரியலை!

பிலாசபிக்கலா யோசிக்க கத்துக்கொண்டவங்களுக்கு யம பயம் இராது. தினசரி யமனை உபாசிக்கறவங்களுக்கும் இராது. சந்தியாவந்தன கர்மாவில ஜபம் முடித்து திக் உபாசனைகளில இதுவும் ஒண்ணா இருக்கு. யம பயம் இராதுன்னு சாக மாட்டாங்கன்னு இல்லை; இந்த இறப்பைக் குறித்த பயத்தைத்தான் யம பயம் என்கிறாங்க.

ரைட்! இந்த இறப்பு என்கிறது என்ன? எது செத்து போகிறது? உடம்பா? அதுதான் அங்கயே அப்படியே இருக்கே? உடம்பிலேந்து காணாமல் போவது வேறு ஏதோ 'நான்' ன்னு நாம் சொல்லிக்கக்கூடிய ஒண்ணு. சாதாரணமா இதை உயிர்ன்னு சொல்லறாங்க.

என் சட்டை, என் கை என் கால்ன்னு சொல்லும்போது அதெல்லாம் வேற நாம் வேறன்னு தெளிவா தெரியறா மாதிரி என் உடம்புன்னு சொல்கிற இந்த உடம்பு நான் இல்லை. எங்காவது கடுமையான பயணம் போய்விட்டு வந்தா என் உடம்பு வலிக்கிறதுன்னு சொல்கிறோமே ஒழிய நான் வலிக்கிறேன்னு எங்கயானா சொல்லறோமா? அப்ப உடம்பு நாம் இல்லை. ஆனா 'நாம்' செயல்பட அது வேண்டி இருக்கு.

உடம்பு சரியா செயல்பட ஆயிரத்தெட்டு கண்டிஷன்ஸ்! பிசியாலஜி படிச்சா எப்படி இவ்வளோ ப்ராசஸ் ஒழுங்கா நடக்கறதுன்னு தோணும்! தப்பா நடக்க நிறையவே வாய்ப்பு இருந்தும் பெரும்பாலும் சரியாத்தானே நடந்துண்டு இருக்கு? அதனாலத்தானே நாம 'உயிர் வாழ்ந்துகிட்டு' இருக்கோம்? இருக்கற ஆயிரத்தெட்டு ப்ராசஸ்ல ஏதாவது அப்பப்ப சரியா நடக்கலைன்னா உடம்பு சரியில்லைன்னு சொல்லறோம். பெரும்பாலும் அது தன்னைத்தானே சரி செஞ்சுக்கும். கொடுக்கற மருந்துகள் அதுக்கு கொஞ்சம் உதவியா ஹேதுவா இருக்கும். அவ்ளோதான். உடம்பு இந்த மருந்தை ஒத்துக்கலைன்னா அதுக்கு பலன் இருக்காது. அதனாலத்தான் எல்லா மருந்தும் எல்லா நேரமும் எல்லாருக்கும் வேலை செய்யறதில்லை!

நொச்சூர் வெங்கட்ராமன் உரையில சொன்னார்: நாம எப்போ பிறந்தோம்? அது நமக்கு நினைவில இருக்கறதில்லை. எப்ப குழந்தைப்பருவம் போய் வாலிபம் வந்தது? எந்த புள்ளியில? தெரியாது. எப்ப வாலிபம் போய் வார்த்திகம் (கிழட்டுத்தன்மை) வந்தது, தெரியாது. எப்படி இதெல்லாம் எப்ப வரதுன்னே தெரியாம நாம் மாறிண்டே இருக்கோமோ அப்படித்தான் அதுக்கு அடுத்த ஸ்டேஜ் - இறப்பும்.

Thursday, November 9, 2017

மீள்ஸ் 4 - "எதிர் பார்ப்பு இல்லாம இருங்க"
https://anmikam4dumbme.blogspot.in/2014/01/blog-post.html
போன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. குறிப்பா கணவன் மனைவி இடையிலே இருக்கும் எதிர்பார்ப்புகள் அவை பொய்த்து போகும் போது உண்டாகிற மன வருத்தம், அழுத்தம்..... கடேசில அதனால எதிர் பார்ப்பு இல்லாம இருங்கன்னு முடிச்சாங்க.
வழக்கம் போல நம்ம கோளாறான சிந்தனை ஆரம்பிச்சுடுத்து. இது சரியா? (ஸ்டேட்மேன்ட் ஐ சொன்னேன், சிந்தனையை இல்லே!)
எதிர்பார்ப்பு இல்லாம செயல்கள் நடக்கறது அபூர்வம். அப்படி செய்யறவர் யாரானா ஞானியா இருக்கணும்! அவருக்குத்தான் சங்கல்பம் எதுவும் இராது.
மனிதர்கள் ஆனா நமக்கு சாதாரணமா சங்கல்பம் இருக்கவே இருக்கும். சங்கல்பம்ன்னா எதோ பெரிய விஷயம் இல்லை. இப்படி இதை செய்யனும்ன்னு ஒரு நினைப்பு. இப்படி இதை எதுக்கு செய்யனும்? எதோ நடக்கணும் ன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதுக்குத்தான்.
இந்த இப்படித்தான் நடக்கணும் என்கிற எதிர்பார்ப்பைத்தான் பகவான் கிருஷ்ணன் வேண்டாண்டா ன்னு அர்ஜுனனுக்கு சொன்னான். எதிர்பார்ப்பே வேண்டாம் ன்னு சொல்லலை.
எதிர்பார்ப்பு இல்லாமல் அநேகமா எந்த செயலும் இல்லை. பசிக்கிறது; சாப்பிட்டால் பசி தீரும் ன்னு எதிர்பார்த்து சாப்பிடுகிறோம். தாகம் எடுக்கிறது; தண்ணீர் குடிச்சா அது தீரும் ன்னு எதிர்பார்த்து தண்ணீர் குடிக்கிறோம். இதுப்போலத்தான் பலதும். என்ன, எதிர்பார்ப்பு பெரிசா இருக்கலாம் அல்லது சின்னதா இருக்கலாம். அவளோதான் வித்தியாசம்.
எந்த காரியம் நம்மைத்தவிர மற்றவர்களை அதிகம் நம்பி இல்லையோ அது நடக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். அப்ப கூட எதிர்பார்த்தபடியே நடக்கும்ன்னு சொல்ல முடியாது.
ரிசல்ட் நம்ம எதிர்பார்ப்புக்கு குறைவாக இருக்கலாம்; அதிகமாக இருக்கலாம்; வேறு மாதிரி இருக்கலாம். இல்லை எதிர்பார்த்தது போலவே இருக்கலாம்.
இப்ப பக்கத்து ஊருக்கு போய் ஒத்தரை சந்திக்க ஆசை இருக்கு. நினைச்சது போல போய் சந்திக்கலாம். போகிற வழியில பஸ் லேட், ரோட் ரோக்கோ, ஆட்டோ கிடைக்கலை என்கிற ரீதியில பல பிரச்சினைகளை சந்திச்சு இந்த காரியம் முடியலாம். இல்லை வெகு சுலபமா பஸ் ஸ்டேன்ட் போகிற வழியில் நண்பர் ஒருத்தர் எங்க போறீங்கன்னு கேட்டு, அட நானும் அது பக்கத்தில்தான் போறேன் வாங்க ன்னு கார்ல கொண்டு விடலாம். அல்லது கிளம்பும்போது சந்திக்க போகிற நபர் வெளியூர் போயிருக்கிறதா தகவல் வந்து நாம் போகாம இருக்கலாம். இப்படி ஏராளமான பாசிபிலிடி இருக்கு. இதுல எது வேணுமானாலும் நடக்கலாம்.
இப்படி உத்தேசிச்சது எப்படி நடந்தாலும் "சரி, ரைட், அடுத்து" ன்னு ஏத்துக்கிற மனப்பான்மைதான் முக்கியம்.
ஆசையையும் எதிர்பார்ப்பையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. லட்டு திங்கணும் என்கிறது ஆசை. திங்க லட்டு கிடைக்குமா என்கிறது பாசிபிலிடி. தோசை டிபனா இருக்கணும் என்கிறது ஆசை. அது தோசையா உப்புமாவா என்கிறது அவரவர் கொடுப்பினை! ஆசை நிராசையா ஆகும் போது மனசை கையாளவும் கத்துக்கணும்!
இறங்குகிற காரியம் நிறைவேறும் வாய்ப்பு 90%, 20 % 50% என்றெல்லாம் ஒரு கணக்கு போடுவதுதான் எதிர்பார்ப்பு. அது பொய்க்கலாம் நிறைவேறலாம் சொல்ல முடியாது. அனுபவத்தில் இந்த கணிப்பு இன்னும் சரியாக வரும் வாய்ப்பு அதிகம்.
அதனால எதிர்பார்ப்பு இல்லாம இருக்கத் தேவை இல்லை. எதிர்பார்ப்பு சரியாக இருக்கணும்! தப்பான கணிப்புதான் துன்பத்தை கொடுக்கும்; பிரச்சினைகளை உண்டு பண்ணும்! சரியான கணிப்போ அல்லது ரிசல்ட்டை எதானாலும் ஏத்துக்கிற பக்குவமோ இருந்துட்டா வாழ்கை சொர்க்கம்!
எதிர்பார்ப்பே இல்லாதவருக்கு என் நமஸ்காரங்கள்! :-)))

Wednesday, November 8, 2017

மீள்ஸ் 3 - உரத்த சிந்தனை: பாபம் புண்ணியம்https://anmikam4dumbme.blogspot.in/2012/03/blog-post.html
பாபம் புண்ணியம்

இப்போதெல்லாம் எங்கே பார்த்தாலும் மக்கள் மத்தியில் அத்ருப்திதான் நிலவுகிறது. அதற்கு காரணங்களுக்கு குறைச்சலே இல்லை.  வீட்டில் ஆரம்பித்து உலகம் வரை ஒவ்வொரு விஷயத்திலும் அத்ருப்தி. எதை எடுத்தாலும் நடத்தை சரியில்லை. எது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை. வேலியே பயிரை மேய்கிறது. சட்டத்தை மீறுவது யார் என்று பார்த்தால் அதை காக்க வேண்டிய காவல் துறை, வக்கீல்கள், அரசாங்கமே முதலில் இருக்கிறது. கன்ஸ்யூமர் வழக்கு எத்தனை டாக்டர்கள் மீது வருகிறது? ஒரு வக்கீல் மீதாவது வருகிறதா? இத்தனைக்கும் ஸ்கூல் பசங்க மாதிரி இவங்க ஆன்னா ஊன்னா ஸ்ட்ரைக் பண்ணுகிறார்களே! ஒரு வழக்கு என்று வந்துவிட்டால் எவ்வளவு முறை தள்ளித்தள்ளிப்போகிறது? கோர்டுக்கு போவதே சமாசாரத்தை தள்ளிப்போடத்தான் என்றே ஜனங்கள் மத்தியில் மனசில் பதிந்துவிட்டது. அதனாலேயே யாரும் கோர்ட் வழக்கு என்பதில்  நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும் என்பதில் நம்பிக்கை யாருக்குமே இல்லை! ஜனங்கள் அவரவர் இஷ்டத்துக்கு நடந்துகொள்ள கேட்பானேன்!
இதை சும்மா ஒரு உதாரணத்துக்குத்தான் சொன்னேன்.
சில நாட்களாக இந்த மாதிரி பிரச்சனைக்களுக்கெல்லாம் என்ன காரணம் என்று தீவிரமாக யோசனை செய்தேன்.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் என்பது போல தோன்றினாலும் அந்த காரணத்துக்கு என்ன காரணம் என்றெல்லாம் யோசித்ததில் ஒரு விஷயம் தோன்றியது.
உலகத்தில் மக்களுக்கு பாபம், புண்ணியம் அல்லது சரி, தப்பு என்கிற கொள்கை போய்விட்டது.
சரி தப்பு என்கிறது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக சொன்னது. பாபம் புண்ணியம் என்பது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்காக சொன்னது. இன்னும் சிலர் கடவுள் உண்டு என்று நம்பிக்கொண்டு தப்பு செய்தால் பாபம், கடவுள் தண்டிப்பார்; புண்ணியம் செய்தால் பாராட்டி நமக்கு வேண்டியது கொடுப்பார், சொர்கம் கிடைக்கும் என்றெல்லாம் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
கடவுள் இருக்காரா, அப்படி இருந்தால் அவர் எப்படி இருக்கார், என்ன செய்கிறார் என்கிற சமாசாரத்துக்கு இப்போது போக தேவையில்லை. 1940 களில் பெரும்பாலும் ஜனங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தார்கள். ஆன்மீகம் கொஞ்சம் சரியான பாதையிலும் இருந்தது. ஜனங்கள் பாபம் செய்ய பயந்தார்கள். யாரேனும் பப்ளிக்கா தப்பு செய்கிறதை பார்த்தால் அருகில் இருக்கிறவர்கள் கண்டித்தார்கள். இது பாபம்டா. செய்யாதே என்றார்கள். பெரும்பாலானவர்கள் அந்த பக்கம் நின்றதால் தப்பு செய்கிறவர்களுக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது.
அப்புறம் பகுத்தறிவு இயக்கங்கள் தோன்றின. அவற்றின் நடவடிக்கையில் ஒரு விஷயத்தை மட்டும் பார்க்கலாம். கடவுள் என்று ஒருவர் இல்லை என்பது அவற்றின் சாராம்சமாக இருந்தது. திருப்பித்திருப்பி இதை வலியுறுத்தியதால் அத்துடன் சேர்ந்த இந்த பாபம் செய்தால் தண்டனை கோட்பாடும் காணாமல் போயிற்று. கடவுள் இருக்கிறாரோ இல்லையோ தப்பு செய்தால் ஒண்ணும் பிரச்சினை உடனடியாக இராது என்று
தோன்றிவிட்டது.
ஒரு சரியான மாற்று வழியை உறுதி செய்யாமல் வெறுமனே கடவுள் நம்பிக்கையை மட்டும் பெயர்த்து போட்டதில் ஜனங்களுக்கு ஒரு விஷயத்திலும் பயமில்லாமல் போய்விட்டது. எப்போதுமே இருந்து கொண்டிருக்கிற சுயநலம் தலை தூக்கி எனக்கே எல்லாம் வேணும் எந்த வழியில் கிடைத்தாலும் பரவாயில்லை என்று ஆகிவிட்டது. காலங்காலமாக இருக்கிற லஞ்சம் ஊழல் பயமில்லாமல் பகிரங்கமாக செய்கிற காரியம் ஆகிவிட்டது.
யாரோ சொன்னாங்களே, ஏற்பது இகழ்ச்சின்னு?
தொடரும்.

Tuesday, November 7, 2017

மீள்ஸ்2 - விதவைத் தாய்க்கு கிடைத்த அமுதசுரபி

https://anmikam4dumbme.blogspot.in/2016/09/blog-post_20.html

இந்த பதிவுகளில் இது வரை மற்ற இடத்தில் இருந்து கட் பேஸ்ட் செய்யவே இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் இன்று அப்படி செய்யத்தோணுகிறது. படித்த கதை அப்படி இருக்கிறது.
ஸ்ரீ மடத்து சன்யாசிகளுக்கு பல கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றை மிகவும் கடுமையாக கடைபிடித்தவர் மஹா பெரியவர் எனப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள். அந்த காலத்து வழக்கப்படி விதவை கோலம் பூணாத விதவைகளுக்கு அவர் தரிசனம் தர மாட்டார். இருந்தாலும் கைவிடவில்லையே! படிக்கும்போது கண்ணீர் வந்துவிட்டது. கதையை படியுங்கள். கொஞ்சம் நீண்ட பதிவு. வாட்ஸப்பில் வந்ததில் முதல் முறையாக உருப்படியாக வந்தது! (ஒத்தி ஒட்டியது. மூலத்தில் சில சொற்பிழைகள் உள்ளன. திருத்தவில்லை)
----
காஞ்சி மாமுனி மஹாபெரியவாளின் நிகழ்வுகள்

  மாமுனியின் கருணையா – கொடையா

(ஸ்ரீ மும்பை விஜயன் ஸ்வாமிகளின் சொற்பொழிவிலிருந்து...)

விதவைத் தாய்க்கு கிடைத்த அமுதசுரபி

                        அடியேன் கல்கத்தாவில் பயணிகள் கப்பலில் வரும் என் நண்பரைக் காணத் துறைமுகம் சென்றேன். கப்பல் இரண்டு மணி நேரம் தாமதம் எனத் தெரிந்தது. அவருக்காக காத்திருக்க முடிவு செய்து அந்த சாலையில் இருந்த ஒரு ஹோட்டலின் முன் இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். அது ஒரு சிறிய ஹோட்டல்.  வருவோர் போவோர் அதிகம் இருந்த நிலையில் அந்த ஹோட்டல் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. என் பார்வை கல்லாவில் இருந்தவரின் மீது செல்ல, அவர் அமர்ந்து இருந்த இருக்கைக்குப் பின்னால் ஒரு படம் பூக்களாலும், வண்ணக் காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு பார்வையை இழுக்கும் வகையில் இருந்தது.. அந்தப் படம் என்னை ஈர்க்க, நான் அருகே சென்று பார்க்க, அது மஹா பெரியவாளின் படம். கல்கத்தாவில் 90 சதவிகித இடங்களில் காளி மற்றும்  ராம கிருஷண பரமஹம்சர் விவேகானந்தர் படங்களைப் பார்த்த எனக்கு, என் குரு நாதரைக் கண்டவுடன்  உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

                  கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம். படத்தைக் காட்டி  யார் இவர் என வினவ அந்த நபர் உள்ளம் பூரித்து கண்கள் விரிய “என் தாக்குர்ஜி என் தாக்குர்ஜி” என பரவசப் பட்டார். இவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என அடியேன் கேட்க அந்த கேள்விக்கு காத்திருந்தவர் போல நொடியும் தாமதிக்காது மிகுந்த உணர்ச்சி வசப்பட்டவராய் பேசத் தொடங்கினார். அவர் உள்ளத்தில் பெருகிய பக்தி – மடை திறந்த வெள்ளம் என வார்த்தைகளாக பெருக்கெடுத்தது. பக்தியில் நனைந்து நனைந்து வந்து விழுந்த குரு நாதரைப் பற்றிய ஒவ்வொரு சொல்லும் தேனாக என் காதில் பாய்ந்தது. பக்தியில் பொங்கி பொங்கி கொப்பளித்த அவர் உள்ளம் சற்று சம நிலை அடைய, அடியேன் அவர் பேச்சின் இடை இடையே மஹாபெரியவாளைப் பற்றி ஒரிரு வரிகள் சொல்ல, தன் பேச்சை நிறுத்தியவர் கண்களில் வியப்புடன் தாக்குர்ஜி பற்றி தெரிந்தும் என்னிடம் தெரியாதது போல் கேட்டீர்களா என வாய் விட்டு சிரிக்க அந்த சிரிப்பில் கள்ளம் கபடம் இல்லா அவரின் குழந்தை உள்ளம் தெரிந்தது.

                           அருகே இருந்த பணியாளரிடம் கல்லாவைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, என் கைகளைப் பிடித்து அழைத்து ஒரு இருக்கையில் அமர்த்தினார். இருவரும் மஹாபெரியவாளைப் பற்றி பேசி பேசி  களிப்படைய,  நேரம் போனதே தெரியவில்லை. கப்பல் வந்துவிட்ட அறிவிப்பு வர அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன். என் கைகளை அழுத்திப் பிடித்தவர் உங்களைப் பிரிய ஏனோ மனம் வரவில்லை, இன்று மாலை என் இல்லம் வாருங்கள். தாக்குர்ஜி என் குடும்பத்துக்கு செய்த ஒரு உன்னதமான அதிசயத்தை சொல்லுகிறேன், வருவீர்களா என ஏக்கத்துடன் கேட்க - அவரிடம் , ஐயா அதை விட பெரும் பாக்கியம் என்ன இருக்க முடியும் கட்டாயம் வருகிறேன் என சொல்லி அவர் முகவரியைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றேன்.
                 அன்று மாலை அவர் இல்லம் சென்றேன். அழகான எளிமையான சிறிய இல்லம். மணம் கமழும் ஒரு சிறு அறையில் மஹா பெரியவாளின் படம். மஹா பெரியவாளின் முன்னிலையில் ஒரு சிறு பெட்டி இருக்க அதிலிருந்து ஒரு பாத்திரத்தை பய பக்தியுடன் வெளியே எடுத்து வைத்தார், அந்த புனிதப் பாத்திரம்  சொல்லாமல் சொன்ன நிகழ்வு இது.

           கல்கத்தாவைச் சேர்ந்த இளம் விதவை. கணவர் குடும்பத்தினர்  பரம்பரை பரம்பரையாக செக்கு வைத்து எண்ணெய் வியாபாரம் செய்து வந்தனர். கணவர் காலத்தில் வியாபாரம் முடங்க ஆரம்பிக்க, அவள் திருமணம் முடித்த  சில வருடங்களில் வியாபாரம் முழுதுமாக நொடித்து விட்டது. வியாபாரத் தோல்வி கணவர் உள்ளத்தையும் உடலையும் உருக்க, நோய்வாய்ப்பட்டு சில வருடங்களிலேயே அவர் இறந்தும் போனார். இளம் விதவை - ஐந்து குழந்தைகளுக்குத் தாய் - கணவர் இறந்த மறு நாளே புகுந்த வீட்டினர் அவளை அண்ட விடாது ஒதுக்கியும் ஒதுங்கியும் விட்டனர். பிறந்த வீட்டில் பாதுகாப்பு கிடைக்கும் எனக் கதவைத் தட்டியவளுக்கு, பிறந்த வீட்டார் ராசியில்லாதவள் அமங்கலி என இரட்டைத் தாழ்ப்பாள் போட்டனர்.

                       தன் உடலையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு - ஒன்றும் புரியாத பிஞ்சுகளாய் இருக்கும் ஐந்து குழந்தைகளை வளர்க்க வேண்டிய பாரம் - எல்லாவற்றுக்கும் மேலாக சமுதாயம் ராசியில்லாதவள் என சூட்டிய முள் கிரீடம் - எல்லாம் அவளை அழுத்தியது. கணவர் சேமித்து வைத்து விட்டுப் போன சிறு தொகையைக் கொண்டு பசி பட்டினி இல்லாது குடும்பத்தை நடத்தினாள். அதுவும் சில காலமே. வருடங்கள் செல்ல செல்ல இரு வேளை சோறு ஒரு வேளையானது. பின்னர் அதுவும் கஞ்சியாக மாறியது. கைப் பணம் கரைய கரைய அச்சமும் கவலையும் சூழ்ந்தது. குடும்ப வருமானத்திற்கு குப்பை பொறுக்குவது என முடிவு செய்தாள். நாள் முழுதும் அலைந்து பெரிய அலுவலகங்களாக சென்று காகிதங்களை பொறுக்கி, அவற்றை விற்று அதன் மூலம் வரும் வருமானம் கொண்டு குடும்பம் நடத்தினாள். துறைமுகப் பகுதியில் வாகனங்களிலிருந்து விழும் நெல் அரிசி கோதுமை போன்ற தானியங்களை  சாலையைப் பெருக்கி  எடுத்து வந்தாள். சிதறிய தானியங்களைக் கொண்டு தன் பிள்ளைகளின் வயிற்றுக்கு கஞ்சி ஊற்றினாள். ஆனால் எப்படி ஐந்து பிள்ளைகளையும் கரை சேர்ப்பேன் என்ற கவலை அவளைத் தினமும் வாட்டியது. குடும்பம் மிகவும் பரிதாப நிலையில் இருந்தது. கணவர் இறந்து இப்படியே ஐந்து வருடங்கள் போய்விட்டது.
               இந் நிலையில் நமது மஹாபெரியவா கல்கத்தாவில் முகாமிட்டிருந்தார். அவரைத் தரிசித்த மக்கள் அவரைப் பற்றி பலவாறு ப்ரமிப்புடனும் பக்தியுடனும் பேச பேச அந்த பேச்சுக்கள் இவள் காதையும் எட்டியது. அவளுக்கும் அவர்கள் சொல்லும் தாக்குர்ஜியை பார்க்க வேண்டும் என ஆவல் பிறந்தது.  அவரை தரிசித்து விட்டு வந்தால் என் வாழ்வில் ஒரு விடியல் இருக்கும் என எண்ணினாள். இரவெல்லாம் அதே நினைவுடன் உறங்கியவள், மறு நாள் ஸ்நானம்  செய்து விட்டு, கையில் ஒரு காலி எண்ணெய் தூக்கை எடுத்துக் கொண்டு மஹா பெரியவா முகாமிட்டிருந்த இடம் வந்தாள். தாக்குர்ஜியை சுலபமாக சந்தித்து ஆசி பெற்றுவிடலாம் என நினைத்து வந்தவள் அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு திகைத்து நின்றாள். வருவோர் போவோரின் ஏளனப் பார்வையும், அவர்கள் அவளைக் கண்டு விலகிச் செல்வதையும் கண்ட பொழுது தான் - அவளுக்கு அவளின் நிலைப் புரிந்தது.  தாக்குர்ஜியை காண வந்த கூட்டத்தினரின் மீது அவள் பார்வை சென்றது. அனைவரும் நல்ல ஆடை அணிந்தவர்கள் – படித்தவர்கள் – உயர் அதிகாரிகள் – என பலதரப்பட்ட மக்கள்.  தன்னை எண்ணினாள். எண்ணெய் ஆட்டுவதைக் குலத் தொழிலாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவளின் தலையில் ஒரு சொட்டு எண்ணெய் இல்லை. வறண்ட கூந்தல்; எத்தனை துவைத்தும் நீங்காது அழுக்குப் படிந்து போன  சேலை; தன் வாழ்க்கை தரத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டும் கிழிந்த ஒட்டுப் போட்ட ஆடை. எப்படி இந்தக் கூட்டதில் நம்மை இணைத்துக் கொள்வது; கூட்டத்தில் கலக்க முயற்சித்தால் நிச்சயம் விரட்டப் படுவோம் என புரிந்துக் கொண்டாள். அந்தக் கூட்டத்தைப் பார்க்க பார்க்க உள்ளத்தில் அச்சம் சூழ்ந்தது. ஆனால் தாகுர்ஜியிடம் ஆசி பெற வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் போகவில்லை.

             கூட்டத்திலிருந்து சற்று விலகி நின்றாள். கூட்டத்தினர் பார்வையாலையே அவளை விரட்ட தள்ளி  நின்றாள். அங்கிருந்தவர்கள் மேலும் அவளை விரட்ட - மேலும் மேலும் ஒதுங்கினாள் . இப்படியே கூட்டத்தை விட்டு 60 - 70 அடி தள்ளி விரட்டப்பட்டாள். கூட்டம் கலைந்தவுடன் அவரைத் தரிசிக்கலாம் எனக் காத்திருந்தாள். ஆனால் வருவதும் போவதுமாக இருந்த மக்கள் கூட்டம் குறையவில்லை. நேரம் நகர்ந்துக் கொண்டே போனது. மனதில் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் வந்து போயின. தன் வாழ்க்கை சம்பவங்களால் கண்களும் மனதும் பொங்கியது, தன் நிலையைப் புரிந்துக் கொண்டவள் தாகுர்ஜியை அருகில் சென்று ஆசி பெறும் எண்ணத்தைக் கைவிட்டாள். அவரை தூரத்திலிருந்தாவது தரிசித்து விட்டால் போதும் , தன் வாழ்க்கையில் மாற்றம் வரும் என பரிபூரணமாக நம்பினாள் .கூட்டத்தை விட்டு தள்ளி ஒடுங்கி நின்றவளின் பார்வை மட்டும் தாக்குர்ஜி இருந்த இடத்தை விட்டு விலகாது இருந்தது.
               சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்தவளுக்கு இன்னும் மஹா பெரியவாளின் தூர தரிசனம் கிடைக்கவில்லை. ஆனால் மஹா பெரியவா அவளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார் – உள் முகமாக. அருகே இருந்த தன் உதவியாளரை அழைத்தார். சில குறிப்புகள் சொல்லி அவளிடம் இருக்கும் பாத்திரத்தை வாங்கி வரும் படி சொன்னார். உதவியாளரிடம் பாத்திரத்தை தந்தவளின் கண்கள் தாக்குர்ஜியை காணத் துடித்தது. தாக்குர்ஜி என்னை உள்முகமாக பார்த்துவிட்டார். எனக்கு அவரின் தரிசின பாக்கியம் கிடைக்குமா என உள்ளம் ஏங்கியது. உதவியாளார் சென்ற பாதையிலேயே தன் கண் பார்வையை செலுத்தினாள். உதவியாளர் சென்ற பொழுது ஒரு இடைவெளி கிடைக்க அந்த  இடைவெளியில் தாக்குர்ஜியைப் பார்த்தாள். பரவசப்பட்டாள். கை தொழுது நின்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. தாகுர்ஜியின் முன் பாத்திரம் வைக்கப் பட அதில் மஹாபெரியவா தன் கமண்டத்திலிருந்து  நீரை ஊற்றுவதைக் கண்டாள். கூட்டம் மறைக்க இந்த தரிசினமே போதுமானது என திருப்தி அடைந்தாள். உதவியாளர் கொண்டு வந்து தந்த பாத்திரத்தைத் தன் சேலைத் தலைப்பில் மடிப் பிச்சையாக வாங்கிக் கொண்டாள். அதை பவித்திரமாக பாவித்து தன்னுடன் அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க நன்றி சொன்னாள். அவள் உடலும் உள்ளமும் ஆனந்தப் பரவசப் பட கால்கள் சிறிது தள்ளாட அருகே இருந்த சுவரில் சாய்ந்தாள்.

                 கண்கள் மூடிய பரவச நிலையில் இருந்தவளுக்கு மஹாபெரியவாளின் வார்த்தைகள் இடி முழக்கமாக கேட்டது. “பரவாயில்லை இத்தனை நேரம் காத்திருந்தாயே. உண்மையில் நீ மிகவும் பொறுமைசாலி” என சொல்ல, அந்தப் பெண், “ தாக்குர்ஜி நான் பொறுமைசாலியல்ல. எத்தனையோ மக்கள் தங்களிடம் ஆசி பெறவும் அனுக்ரஹம் பெறவும் காத்திருக்க, வந்த அனைவருக்கும் பல மணி நேரமாக இடை விடாது ஆசி தந்து கருணை மழை பொழிந்துக் கொண்டிருப்பதோடு எங்கோ நின்று கொண்டிருந்த இந்த விதவைக்கும் அல்லவா அனுக்ரஹம்  காட்டினீர். என் காத்திருப்பில் சுய நலம் இருக்கிறது. ஆனால்  தங்களை நாடி வந்த பக்தர்களின் நலம் கருதிய தங்களின் பொறுமையிலோ அன்பும் கருணையும் அல்லவா வழிந்துக் கொண்டிருக்கிறது. நான் பொறுமைசாலி அல்ல. தாங்கள் தான் பொறுமையின் பிறப்பிடமும் அதிபதியும்” என்றாள். “அம்மா உன் நிலை அறிவேன். இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” என ஆசி வழங்கினார். பரவச நிலையிலிருந்து வெளி வந்து சம நிலை அடைந்தாள். தாகுர்ஜியின் திசை  நோக்கி மீண்டும் நன்றியோடு வணங்கினாள். பாத்திரத்தை இறுக்கி பிடித்தபடி தன் வீடு  நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
                        மனதில் தாக்குர்ஜியின் தரிசனமும் அவரின் வார்த்தைகளுமே வியாபித்திருந்தது. ஐந்து கிலோமீட்டருக்கும் மேலான நடை பயணம் களைப்பைத் தரவில்லை. பரவச நிலைக்குப் பின் உலகமே அவளுக்கு புதிதாகத் தோன்றியது. மனதை அழுத்திக் கொண்டிருந்த பாராமும் - பிறர் சூட்டிய பட்டங்களும் - கவலையும் போன இடம் தெரியவில்லை. தாகுர்ஜியின் தரிசனம் கிடைத்துவிட்டது. அவரின் ஆசி வார்தைகளையும் கேட்டு விட்டேன் . இனி தாக்குர்ஜியின் ஆசியே என் குடும்பத்தை வழி நடத்தும் என திடம் கொண்டாள். ஒரு வழியாக தாக்குர்ஜியை தரிசித்த மகிழ்வுடன் வீடு வந்து சேர்ந்தாள். தான் கொண்டு சென்ற பாத்திரத்தில் தாக்குர்ஜி ப்ரசாதமாக கொடுத்த  நீர் , பாத்திரம் முழுதுமாக சுமார் ஒன்றரை லிட்டர் நிரம்பி இருக்க, அதை வேறு பாத்திரத்தில் நிரப்ப நினைத்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்றினாள். ஊற்றிய பொழுது நடந்த அதிசயத்தை அவள் கண்களால் நம்ப முடியவில்லை.

                   அவள் கொண்டு சென்ற பாத்திரத்திலிருந்தது ப்ரசாத நீர். ஆனால் அதை மற்றொரு பாத்திரத்தில் நிரப்பிய பொழுது அது எண்ணெய்யாக வழிந்தது. வழிந்துக் கொண்டே இருந்தது.  நடக்கும் ஆச்சர்யத்தை அவளால் நம்ப முடியவில்லை. தாக்குர்ஜி ப்ரசாதமாக தந்தது நீர் தானா என பார்த்தாள் . நீர் தான் இருந்தது. அது எப்படி வழியும் பொழுது எண்ணெய் ஆயிற்று? தாக்குர்ஜி தாகுர்ஜி என வாய் முணுமுணுத்தது. உள்ளம் ஆச்சர்யத்திலும் சந்தோஷத்திலும் திளைத்திருக்க , மஹா பெரியவாளின் ஆசி வார்த்தைகள் அவள் மனதில் மோதின. “இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” ஆசி வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது புரிய ஆரம்பித்தது. பட்டுப் போன குலத்தொழிலான எண்ணெய் வியாபாரத்தை தாக்குர்ஜி மீண்டும் துளிர்க்க வைத்துவிட்டார் எனப் புரிந்துக் கொண்டாள். இனி இந்த எண்ணெய்யை விற்று குடும்பத்தை நடத்துவது என முடிவு செய்தாள்.
                       ‘தாக்குர்ஜியை நான் அருகில் சென்று கூட வணங்கவில்லை. அவர் முன் என் நிலையை எடுத்தும் சொல்லவில்லை. எங்கோ ஒதுக்கப்பட்டு ஓரமாக நின்ற இந்த விதவையின் மீது தன் உள்ளக் கருத்தைப் பதித்து எத்தனை பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்தி ஆசியும் அளித்தார். இதுவரை ஒரு முறை கூட இந்த தாக்குர்ஜியைப் பற்றி நான் அறிந்ததும் இல்லை. நாளும் தொழுததும் இல்லை. ஆனால் எத்தனை பெரிய கருணையைப் பொழிந்திருக்கிறார்’ என எண்ணி எண்ணி அவள் உள்ளம் கசிந்தது. என் தாகுர்ஜிக்கு எப்படி நன்றி செலுத்துவேன் என கலங்கினாள்.  அவள் துக்கம் சந்தோஷம் ஆச்சர்யம் என அனைத்தும்  அழுகையிலேயே கலந்து கரைந்தது. மனதில் தாகுர்ஜியின் ஆசிகளும் அவருக்கான நன்றிகளுமே பதிந்து இருந்தது. தெளிவுக் கொண்டு எழுந்தவள் அந்த பாத்திரத்தை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டினாள். பாத்திரத்தோடு ரகசியத்தைக் காக்க தன் வாயையும் மனதையும் சேர்த்து அந்தப் பெட்டியில் பூட்டினாள்.

                              மறு நாள் ஸ்நானம் செய்து விட்டு பெட்டியிலிருந்த தாக்குர்ஜி ஆசிர்வதித்து தந்த பாத்திரத்தை தொட்டு வணங்கினாள்.  மனதில் தாகுர்ஜியை நினைத்தாள். வார்த்தைகள் உள்ளத்திலிருந்த வெடித்துக் கிளம்பின.

        நான் விழுந்துப் போன நேரத்தில் என் மக்கள்
                              எல்லோரும் நகைத்தனர்
         வியாதியஸ்தி (ராசியில்லாதவள்) என சொல்லி என்
                           ஜனமே என்னை வெறுத்தது
          என்னை சுகப்படுத்தி புது வாழ்வு தந்த தாக்குருவே!

என்று மனம் உருகிப் பிரார்த்தித்தாள்.  (இதுவே அவளின் குரு மந்திரம் ஆனது. ஒவ்வொரு நாளும் இதை சொல்லியப் பின்னே எண்ணெய் எடுத்தாள்)

மஹா பெரியவா ஆசிக் கொடுத்தப் பாத்திரத்தை சாய்த்தாள். ஒரு குடம் நிறைய நிரப்பினாள். பாத்திரத்தைப் பூட்டினாள். எண்ணெய்யை எடுத்துக் கொண்டு அக்கம் பக்கத்தினர் அறியா வண்ணம் மூன்று நான்கு மைல்களுக்கு அப்பால் சென்று வியாபாரம் செய்தாள். கையில் குரு நாதரின் கருணையால் கிடைத்தப் பணம் அவளுக்கு திடனைத் தந்தது. அந்த வருவாய் அவளின் குடும்ப ஜீவனத்திற்குப் போதுமானதாக இருந்தது. தாகுர்ஜிக்கு மறவாது நன்றி செலுத்தினாள்.

                     மறு நாள் பாத்திரத்திலிருந்து ஒரு குடம் நிறைய எண்ணெய்  எடுத்தாள். வியாபாரம் செய்தாள். ஒவ்வொரு நாளும் ஒரு குடம் என்பதை அளவாக வைத்துக் கொண்டாள். அவள் அதற்கு மேல் என்றுமே எடுக்கவில்லை. அந்தக் கட்டுப்பாட்டை அவள் தனக்குத் தானே  விதித்துக் கொண்டாள். இப்படியே காஞ்சி மாமுனியின் வாக்குப்படி அவள் தன் குடும்பத்தை நடத்தினாள்.

          வருடங்கள் கடந்தன. பரிதாப நிலையில் இருந்த குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது. மூத்த மகன் டீக் கடை வைத்து வியாபாரம் செய்தான்.  நான்கு பெண் குழந்தைகளுக்கும் உரிய வயதில் கடன் இல்லாது திருமணமும் முடித்தார் அந்தத் தாய். ஒரு சிறு வீடும் அவர்களுக்கு சொந்தமானது. தாகுர்ஜியின் ஆசியில் மகனின் வியாபாரம் சிறக்க அவன் சிறு ஹோட்டல் வைக்கும் அளவு உயர்ந்தான். மகனின் திருமணமும் நடந்தது. பாரத்தை எப்படி சுமப்பேன் என போராடித் தவித்த அந்த விதவைத் தாய் மாமுனியின் கருணையால் இப்பொழுது பெரும் நிம்மதி அடைந்தாள். 17 ஆண்டுக் காலம் அவரின் கருணையால் ஜீவிதம் நடந்தது. இனி தனக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும் என உள்ளம்  நிறைவுக் கொள்ள நினைவெல்லாம் தாக்குர்ஜியாகிப் போனார்.

                    ஒரு நாள் இரவு தாக்குர்ஜியின் கருணையை நினைத்து நினைத்து கண்ணீர் பெருக தொழுது நின்றாள். இரவு தாக்குருஜியின் தரிசினம் கிடைத்தது.
மஹரிஷியே மாமுனியே
சித்தனே சுத்தனே
சர்வனே சத்தியனே
நீர் செய்த உபகாரங்கள்
கணக்காலே எண்ண முடியுமா
என தொழ

தாக்குருஜியின் வார்த்தைகள் இடியாய் அவளுள் ஒலித்தன.
ஆதி அன்பு என்றும் குன்றிடாமல்
பேரின்பம் என்றும் பொங்கிட
நீடித்த ஆசிகள் இருக்கும்.

என்றார் மாமுனி கருணை நாதர்.

                                   17 ஆண்டுக் காலம் முடியும் தருவாயில் அவள் சிறு நோய்வாய்ப் பட தாக்குர்ஜி குறிப்பிட்டக் காலம் முடிந்து விட்டதை அறிந்தாள். தன் ஜீவிதம் முடியப் போவதையும் அறிந்தவள் தன் மகனிடம் பாத்திரத்தை ஒப்படைத்து அனைத்து ரகசியத்தையும் கூறினாள். இனி இதிலிருந்து எண்ணெய் வராது. அதன் பெலன் முடிந்தது. தாகுர்ஜியின் கருணையால் நாமும் நன்றாக இருக்கிறோம் என்றாள். ஒரிரு நாளில் தாக்குர்ஜியின் நினைவாலேயே அவள் உயிரும் பிரிந்தது.
                          “ என் தாய் இத்தனை ஆண்டுக் காலம் எங்கள் குடும்பத்துக்குக் கூடத் தெரியாது ரகசியத்தைக் காத்து வந்தது எனக்கு பிரமிப்பைத் தந்தது. என் தாய் சிறு வயது முதல்   எங்களுக்கு யார் மூலமோ  கிடைக்கப் பட்ட தாக்குர்ஜியின் படத்தைக் காட்டி காட்டி பக்தியை ஊட்டி வளர்த்திந்தார். எங்களுக்கு நினைவு தெரிந்தது முதல் தாக்குர்ஜியைத் தவிர வேறு தெய்வம் தெரியாது. என் தாய் மூலம் எப்பொழுது அந்த ரகசியத்தை அறிந்துக் கொண்டேனோ அன்று முதல் என் தாக்குர்ஜியின் மீது எனக்கு இருந்த பக்தி பன்மடங்காகியது. என் தாய் மூலம் ஆறு ஜீவன்களின் வாழ்வைக் காத்து உயர்த்திய  அவரின் கருணையை நினைத்து நினைத்து கண்ணீர் வந்தது. அவரை காஞ்சி சென்று சந்தித்த பின் தான் என் மனம் அமைதி அடைந்தது. என் தாய் அந்த பவித்ர பாத்திரத்தை என்னிடம் தந்து இதை பாதுகாத்து போற்று – என்றும்  நம் தாகுர்ஜிக்கு நன்றி சொல்ல மறக்காதே என்றார். என் தாக்குருஜியின் கருணையாலும் கொடையாலும் ஆசியாலும் ஒவ்வொரு நாளும் எனக்கு மூவாயிரம் ரூபாய்க்கு குறையாமல் வியாபாரம் நடந்துக் கொண்டிருக்கிறது” எனக் கண்கள் கலங்க பக்தியோடு கூறினார் அந்த ஹோட்டல் உரிமையாளர்.  

                                  இந்த நிகழ்வைக் கேட்ட அடியேன் என் குரு நாதர் மஹா பெரியவாளின் சூட்சும வார்த்தைகளைக் கண்டு வியந்தேன். பட்டுப் போன தொழில் துளிர்த்து தழைக்கும் அதாவது பெருகும் என்ற ஆசி வார்த்தைகள். தன் சிறு கமண்டத்திலிருந்து வார்த்த நீர் எப்படி ஒன்றரை லிட்டர் பாத்திரத்தை நிரப்பியது. அங்கேயே குரு நாதர் அமுதசுரபியின் தத்துவத்தைக் காட்டி விட்டாரே. குரு நாதர் இப்படி ஒரு அமுத சுரபியை அப் பெண்ணுக்கு வழங்கினார் என்றால் அந்தத் தாய் எப்படிப்பட்ட குணவதியாக இருந்திருக்க வேண்டும். குரு நாதர் அவரைப் பொறுமைசாலி என்ற பொழுது அவள் பெருமைக் கொள்ளவில்லை. தன்னைத் தாழ்த்தி குருவை வாழ்த்தி வணங்கினாள். அவரின் அடக்கமும் நன்றியுமே அவரின் தூய மனதைக் காட்டுகிறது. ராசியில்லாதவள் என தூற்றிய மக்களின் வார்த்தைகளை பொய்ப்பிக்கும் விதமாக மஹா பெரியவா ஆசி கொடுத்த அமுத சுரபி ஒவ்வொரு நாளும் அவள் ஊற்ற ஊற்ற பொங்கிப் பெருகும் படி அல்லவா ஆசிக் கொடுத்தார். அந்தத் தாயோ கிடைத்த அமுத சுரபியை அந்த வறுமை நிலையிலும் துஷ்பிரயோகம் செய்யாது இது போதும் என்று கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தாள் என்றாள், மஹா பெரியவா அவளின் குணத்தைப் புரிந்து அல்லவா இப்படிபட்ட அமுத சுரபியை வழங்கியுள்ளார்.  அவள் தன் குடும்பப் பொறுப்பை முடிக்கவும் மற்றும் அவள் ஜீவிதக் காலத்தையும் தன் தீர்க்க தரிசனத்தில் அறிந்து  17 ஆண்டுகள் அந்த அமுதசுரபிக்கு பெலன் தந்தார். மஹா பெரியவா கொடுக்கும் ஆசியில் தான் எத்தனை  நுணுக்கங்கள்! பரிதாப நிலையிலிருந்த அந்தத் தாயின் நிலையை உயர்த்தி பல ஜீவன்களை தழைக்கச் செய்த மஹா பெரியவாளின் கருணை மனதில் கசிய கண்களில் கண்ணீர் துளிர்க்க விடை பெற்றேன்

.
பக்தர் குறைக் கேட்டு அச்சத்தை  நீக்கி அருள காத்திருக்கின்றீரே, அக் கருணை எங்களைக் காத்தருளட்டும்!
  (ஸ்ரீ மும்பை விஜயம் ஸ்வாமிகள் அருளிய காஞ்சி 6-10-8 ம் பீடாதிபதியின் ஸ்தோத்ரமாலா விலிருந்து..)

மாமுனியே சரணம் சரணமையா!

Monday, November 6, 2017

மீள்ஸ் - கண்ணன் காட்டும் கர்ம வழி -- 13
https://anmikam4dumbme.blogspot.in/2008/11/13.html
ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஷ:।
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே॥ 3.27 ॥


எண்ணும் பகுதிக் குணங்களினால் எவ்வகையும்
பண்ணும் கருமத்தைப் பாவிப்பன் -நண்ணும்
அகங்காரத் தால்மனதில் ஆர்மயக்கங் கொண்டோன்
மகிழ்ந்திதுநான் செய்வன் என மற்று.

எண்ணும் பகுதிக் குணங்களினால் எவ்வகையும் பண்ணும் கருமத்தைப் பாவிப்பன் -நண்ணும் அகங்காரத்தால் மனதில் ஆர்மயக்கங் கொண்டோன் மகிழ்ந்து இது நான் செய்வன் என மற்று.

(எல்லாச் செயல்களும் எல்லா விதங்களிலும் ப்ரக்ருதியின் குணங்களால் செய்யப்படுகின்றன. ஆயினும் அஹங்காரத்தால் மழுங்கிய அறிவை உடைய அஞ்ஞானி நான் கர்த்தா என்று நினத்துக் கொள்கிறான்.)

நம்ம வாழ்க்கையிலே இயற்கையா பல விஷயங்கள் நடக்குது.. கண் தானா பாக்கும், காது தானா கேட்கும். அரிச்சா தானா சொறிஞ்சுக்கிறோம். இதுல எல்லாம் செய்யணும்ன்னு ஒரு சங்கல்பம் -நினைப்பு- தேவை இல்லை. நாமோ ஓடுகிற ஒரு ரயில் வண்டிலே சும்மா உட்கார்ந்தபடி இருக்கலாம். போல இந்திரியங்கள் தானா அவற்றோட வேலைகளை செய்யும். அதுகளுக்கு என்ன செய்யணும்ன்னு அநாதிகாலமா வர வாசனைகளாலே - உணர்வுகளாலே தெரியும்.

நாலு குழந்தைகள் இருக்கும் குடும்பத்திலே எல்லாமே ஹைபர் ஆக்டிவா போயிட்டா நாலும் நாலு வேலைகளை செய்யும். சண்டை போட்டுக்கும். அடிச்சுக்கும், கடுச்சுக்கும், குலாவிக்கும். இன்னொண்ணு அது பாட்டுக்கு அதோட காரியத்தை கவனிச்சு கொண்டு இருக்கும். இதுகளை கட்டுப்படுத்தப்பாத்தா நாளுக்கு 48 மணி நேரம் போதாது! இப்படி பல விதமா குழந்தைகள் நடந்து கொண்டாலும் அவற்றோட அம்மா வெறும் சாட்சி மாத்திரமா இதுகள் இப்படித்தான் இருக்கும்ன்னு பார்க்கிறாப்போலே இந்திரியங்கள் பாட்டுக்கு அதததோட வேலையை செய்யும் போது விலகி பாக்கணும்.

நாம் செய்கிற எல்லா செயல்களையும் நானே செய்கிறேன் ன்னு நினைக்கக்கூடாது. அப்ப யார் செய்கிறாங்க? செய்கிறது நாம்தான்; ஆனாலும் தூண்டுகிறது முக்குணங்கள்தான். சத்வம், ரஜஸ், தமஸ் என்கிற இவை நம்மோட பிறந்தவை. இவற்றை கொஞ்சம் கொஞ்சம் மாத்த முடியும் ஆனாலும் அனேகமா அவை அப்படியேதான் இருக்கும்.

செய்தி பத்திரிகையிலே ஒரு விஷயம் படிக்கிறோம். இன்னார் இந்த போட்டியிலே இப்படி சாதனை செய்தார் ன்னு படிக்கிறோம். அட அப்படியான்னுட்டு அடுத்த செய்திக்கு போயிடுவோம். இதுவே நாம் லீக் கிரிக்கெட்டிலே பிசாத்து 25 ரன் அடிச்சு பேப்பர்லே செய்தி வந்தா அதை கட்டிங் எடுத்து ஆல்பத்திலே ஒட்டி வைப்போம். ஏன்? முன்னே படிச்ச சாதனை ரொம்பவே பெரிசானாலும் அதை நாம் செய்யலே.

நாமும் "நானா இதை செய்யலை, இந்த முக்குணங்களால தூண்டப்பட்டு செய்கிறேன்" என்கிற நினைப்போட செய்யணும். அப்ப கர்மாவிலே பலனை எதிர்பாக்கிறதிலே கொஞ்சம் கொஞ்சமா பற்றுவிட்டு போகும். கர்மா முக்குணங்களாலே செய்யப்பட்டதுன்னு தோணறப்ப அதை ஆல்பத்திலே ஒட்டி வைக்க மாட்டோம்.

அப்ப இப்படி செய்யலாமா? யாரையான நாலு சாத்து சாத்திட்டு அட! நானா அடிச்சேன்? உள்ளே இருக்கிற பகவான்தான் முக்குணங்களாலே தூண்டினான். அடிச்சது மட்டும்தான் இந்த உடம்பு என்கலாமா?

செய்யலாம். ஆனா ஒரு நிபந்தனை இருக்கு! இதை கேட்டுட்டு "நீ சொல்கிறது சரிதான். செஞ்சது மட்டும்தானே இந்த உடம்பு. அதனால இந்த உடம்பை மட்டுமே திருப்பி அடிக்கிறேன்" னு அடிச்சா அதை எதிர்ப்பில்லாம வாங்கிக்க முடியும்னா அப்படி செய்யலாம்!

ஒரு சாது மேல்நாட்டிலே வேதாந்த பாடம் எடுத்தார். கேட்டுகிட்டு இருந்த ஒத்தர் இப்படி கேள்வி கேட்டார்.
" அப்ப நீங்க இந்த உடம்பில்லையே?”
" இல்லை. “
"அப்ப இந்த உடம்பை நான் அடி அடின்னு அடிச்சா நீங்க வேடிக்கை பாத்துக்கொண்டு சும்மா இருப்பீங்களா? “
"இருப்பேன். அது மட்டுமில்லே அதை பாத்துட்டு இங்கே இருக்கிற மத்த உடம்புங்க உன் உடம்பை அடி அடின்னு அடிச்சாலும் வேடிக்கை பாத்துகொண்டு சும்மா இருப்பேன்.”