Pages

Friday, July 31, 2009

தியானம் பொய் எனில் அதனாலுண்டாகும் ஞானம் பொய்யா? -285.
சடம தாகிய தியானமெய் யாகிய சர்வமுத் தியைநல்கும்
திடம தானதெப் படியெனி லவரவர் தியானமே பிறப்பாகும்
உடல மாசையாற் றியானிக்கிற் றியானித்த வுடல்களா குவர்மைந்தா
தொடர்ப வங்கெடச் சொரூபமே தியானிக்கிற் சொரூபமா குவர்மெய்யே

சடமது (பொய்) ஆகிய தியானம் மெய்யாகிய சர்வ முத்தியை நல்கும். திடம் (வலிமை) அது ஆனது எப்படியெனில் அவரவர் (மரண காலத்தில் உண்டாகும்) தியானமே பிறப்பாகும். உடலம் ஆசையால் தியானிக்கில் தியானித்த உடல்களாகுவர் மைந்தா, தொடர் பவங் கெட (பிரம) சொரூபமே தியானிக்கில் (பிரம) சொரூபமாகுவர் மெய்யே.
--
பொய்யாகிய தியானம் உண்மையான மோக்ஷத்தை தரக்கூடிய திடத்தை எப்படி உடைத்தாக இருக்கிறது என்று சந்தேகம் வந்தால்: மரண காலத்தில் அவரவர் எத்தகைய உருவத்தை தியானம் செய்கிறோமோ அந்த ஜன்மத்தையே அடைவர். ஒரு ஆசையுடன் ஒரு நாம ரூபத்தை உடையவற்றை தியானித்தால் அந்த நாம ரூபத்தை அடைவார்கள். நெடுங்காலமாக தொடர்ந்து வரும் இந்த பிறவி ஒழிய வேண்டும் என்று நாம ரூபம் அற்ற சுத்த நிர்குணப்பொருளை தியானிப்பவன் அந்த பரப்பிரம்ம சொரூபமே ஆவான். இது சத்தியம்.

முன்னே விசாரம் நிச்சயம் வேணுமான்னு கேட்ட கேள்வி இப்ப திருப்பி வருது. பிரம்மத்தை தியானிப்பவங்களுக்கு முக்தி கிடைக்கும்ன்னா எதுக்கு விசாரணை? முதல்லே கிடைக்கிற பிரம்ம தியான அனுபவம் (பரோக்ஷமானது) மறைவானது. அது திடப்பட்டு விசாரமாகிதான் நிலையான வெளிப்படையான (அபரோக்ஷ) ஞானம் ஆகும். இதுவே மோக்ஷம்.

இது வரை சொன்னதை எல்லாம் வெச்சு பாத்தா நம்ம முயற்சியில சாதனை ஆரம்பிச்சு தீவிரமா பயிற்சி செய்து- ஒரு நிலையில நம்ம கட்டுப்பாட்டில இல்லாத விசாரம் ஒண்ணு துவங்கி படிப்படியா எல்லாம் புரிஞ்சு பிறகு எல்லாம் தெரிஞ்சு போகுது.


Thursday, July 30, 2009

தியானம் பொய் எனில் அதனாலுண்டாகும் ஞானம் பொய்யா?84.
தியானம் பொய் எனில் அதனாலுண்டாகும் ஞானம் பொய்யா?

சருவ முத்தியைத் தருகின்ற தியானமுஞ் சத்திய மன்றென்றால்
சருவ முத்தியுஞ் சத்திய மன்றென்று சங்கியாதே நீகேள்
உருவங் கேட்டவன் றியானிக்கும் பொழுதிலவ் வுருவம்வாஸ் தவமன்றே
உருவ மாகுமப் பொழுது கண்ணாற் கண்ட வுருவம்வாஸ் தவமாமே

சருவ (ஸர்வ) முத்தியைத் தருகின்ற (பிரம) தியானமும் சத்தியம் அன்று என்றால், சருவ முத்தியும் சத்தியமன்று என்று சங்கியாதே. (சந்தேகம் கொள்ளாதே) நீ (சமாதானத்தை) கேள், உருவங் கேட்டவன் தியானிக்கும் பொழுதில் (பாவனையாகையால்) அவ்வுருவம் வாஸ்தவம் அன்றே. [பாவனா திடத்தால்] அந்த உருவமாகும் அப்பொழுது (உருவமே தானாகும் போது) கண்ணாற் கண்ட உருவம் வாஸ்தவமாமே.
--
குரு உபதேசத்தால் பிரம்ம உபாசனை செய்யும்போது, அச்சமயம் இவன் உபாசனை பாவனையே. அதனால் அது பொய்யாகும். பிறகு அந்த உபாசனை திடப்பட்டு அதுவே தானாகும் போது அப்பிரம்ம சொரூபம் உண்மையேயாகும். திருட்டாந்தமாக யானையை காணாத ஒருவனுக்கு அதைக் கண்ட ஒருவன் யானையைப்போல ஒரு உருவம் எழுதிக்காட்டுகிறான். அதைப்பார்த்த அந்த மனிதன் அதைப்போலவே பாவனை செய்கிறான். அப்படி செய்யும் பாவனையில் தோன்றுகிற யானை பொய்யே ஆகும். ஆனால் மறுநாள் அவன் வீதியில் வரும் யானையை கண்டு தான் செய்த பாவனைப்பழக்கத்தால் இதுவே யானை என்று உணர்ந்து சந்தோஷப்படுகிறான். அப்போது அவன் பிரத்யக்ஷமாக கண்ணால் கண்ட யானை சத்தியமானதேயாகும்.

முன்னமேயே பாத்து இருக்கோம் - கடைசி காலத்தில எதை நினைக்கிறாங்களோ அதுவாகவே பிறப்பாங்கன்னு. அதுக்காகத்தான் யாரும் இறந்து போற நிலையில இருந்தா அவரை சுத்தி இருக்கிறவங்க நாம ஜபம் செய்வாங்க. அப்பவாவது இறைவன் நினைப்பு வந்து அவரோட ஒன்றி போகட்டுமேன்னு. ஹும்! இருந்தாலும் அந்த கடைசி தறுவாயில அப்படி நினைப்பு வர கொடுப்பினை இருக்கணும்.
பிரம்ம தியானத்தில உயிரை விட்டா என்ன விளைவுன்னு சொல்ல வேணாம் இல்லையா?

யாதொன்று பாவிக்க நான்
அதுவாத லாலுன்னை நானென்று பாவிக்கின்
அத்துவித மார்க்க முறலாம்
எதுபா வித்திடினு மதுவாகி வந்தருள் செய்
யெந்தைநீ குறையு முண்டோ
இகபர மிரண்டினிலு முயிரினுக் குயிராகி
யெங்குநிறை கின்ற பொருளே
-தாயுமானவர்

இந்த வுடலம் விடும்பொழுது
யாவன் யாதொன் றினைநினைத்த
னந்த வளவே யந்தப்பா
வனையா லதனை யடையுமா
லென்ற னியல்பே யெப்பொழுது
மிதயத் திடைகொண் டென்பாலாஞ்
சிந்தை யொடும்வா ளமர்தொடங்கி
லதனா லெனையே சேருதியால்.
-கீதை
கொஞ்சம் பிரச்சினை இருக்கு இல்லே? பிரிச்சு பாக்கலாம்.

இந்த உடலம் விடும்பொழுது யாவன் யாது ஒன்றினை நினைத்தன், அந்த அளவே அந்தப் பாவனையால் அதனை அடையுமால் என்றன் இயல்பே, எப்பொழுதும் இதயத்திடை கொண்டு, என்பாலாம் சிந்தையொடும், வாள் அமர் தொடங்கில் (கத்திச்சண்டை இல்லைங்க; வாளாவிருந்தான்= சும்மா இருந்தான் மாதிரி; சும்மா இருக்கத்தொடங்கினால்) அதனால் எனயே சேருதியால்.


Wednesday, July 29, 2009

தியானம்...ஞான சாதனமா பலர் பயன் படுத்துவது தியானம்.
தியானம் என்கிறதென்ன?
எண்ணங்களை ஒரே விஷயத்தை சுற்றி சுழல விடுகிறது.

ஒரு தேவதை உபாசனை செய்யப்போறோம். அந்த தேவதைக்கு இவ்வளவு முகம், இவ்வளவு கைகள், இதிலே இன்ன இன்ன ஆயுதங்கள் .... இப்படி பல விஷயங்களை கற்பனை பண்ணி அதை சுத்தியே எண்ணங்களை ஓட விடுகிறது தியானம்.

"காதல்ல மாட்டிக்கிட்ட பசங்க வேற ஒண்ணுமே தோணாம காதலியையே நினைச்சுகிட்டு இருக்கிறாப்போல" ன்னு சொன்னா இன்னும் சுலபமா புரியுமோ என்னவோ. :-)

பிரம்மத்தை தியானிக்கறது முக்தியை கொடுக்கும்னு சொல்லலாமா? - தியானமே பொய். பொய்யால விளைகிறதும் பொய்யாத்தானே இருக்கும்? அப்ப தியானத்தால வருகிற மோக்ஷமும் பொய்யாத்தான் இருக்கணும்.

பொய்தான். மத்தவங்க இப்படி இருக்கும் அப்படி இருக்கும்ன்னு சொல்லி அதை தியானம் செய்கிறது பொய்தான். ஆனா இது ஒரு துவக்க நிலைதான். ஆனையை பார்க்கவே பார்க்காத ஆசாமிகிட்ட, ஆனை இப்படி இருக்கும் ன்னு விவரிக்க, பின் ஒரு நாள் வீதியிலே ஆனையை பாக்கிறப்ப "ஹா! இதான் ஆனை!" ன்னு தெரிஞ்சுக்கிறான் இல்லியா?! அது போல குரு உபதேசம் கேட்டு ஒரு கற்பனை பண்ணி அதையே தியானம் பண்ணி பின்னால அது அனுபவப்படும் போது "அட! இதான்"னு புரியும். முதல்ல தியானம் பண்ணது பொய்யானாலும் அனுபவப்பட்டது உண்மையே.

82.
உறுதியாக்கல்.
வகுத்த கர்மங்கள் செய்யவுந் தவிரவு மற்றொன்றாக் கவும்கூடும்
மிகுந்த ஞானமப் படியன்று தியானமும் விவேகஞா னமும்வேறே
செகத்தி லொன்றையொன் றாவிவன் பாவிக்குந் தியானம்கற் பிதயோகம்
முகத்த மாக்கண்ட ஞானமே வாஸ்தவ மோகமாய் மயங்காதே

(சாத்திரத்தில்) வகுத்த கர்மங்கள் (இச்சைபடி) செய்யவும் தவிரவும் (செய்யாதிருக்கவும்) மற்றொன்றாக்கவும் கூடும். மிகுந்த (மேலான) ஞானம் அப்படியன்று. [ஆகலின்] தியானமும் விவேக ஞானமும் வேறே. செகத்தில் ஒன்றை ஒன்றாய் இவன் பாவிக்கும் தியானம் கற்பித யோகம். முகத்தமாக்கண்ட (மறைவிலாது) ஞானமே வாஸ்தவம். மோகமாய் மயங்காதே.
--
திரிவித (மனம், சொல், உடல் ஆகிய மூன்று) கரணங்களால் ஒரு கர்மத்தை பிரியப்பட்டால் செய்யலாம்; பிரியப்படவில்லை என்றால் செய்யாது தவிர்க்கலாம்; மாற்றி செய்யவும் செய்யலாம். இது கருமம். அப்படி இல்லாது இருப்பது ஞானம். மனதால் செய்யும் பிரமத்தியானம் பொய். மன விசாரத்தால் பிரமத்தை அறியும் ஞானமே மெய். இரண்டுமே மனதின் காரியங்கள்தான்.


83.
கண்ட றிந்தது ஞானங்கேட் டதுதனைக் கருதுபா வனை யோகம்
கண்ட பேர்சொலக் கேட்டது மறந்து போங் கண்டது மறவாதே
கண்ட வஸ்துமெய் தியானவஸ் துக்கள்பொய் கறுவியஞ் ஞானத்தைக்
கண்ட வக்கணங் கொல்வது ஞானமே கருமமன் றறிவாயே

கண்டு அறிந்தது ஞானம். கேட்டதுதனைக் கருது(தல்) பாவனை யோகம். கண்ட பேர் சொலக் கேட்டது மறந்து போம். கண்டது மறவாதே. கண்ட வஸ்து மெய். தியான வஸ்துக்கள் பொய். கறுவி அஞ்ஞானத்தைக் கண்ட அக்கணம் கொல்வது ஞானமே, கருமம் அன்று அறிவாயே.
--
தியானத்திலே ஒருவர் ஏதாவது சொல்லக்கேட்டு அவ்விதமா கற்பனை செய்து கொள்ளறோம். இது மறக்கக்கூடியது. இது பொய். தானே நேரடியாக அனுபவித்தது மறக்காது. இதுவே மெய் ஆகும். அஞ்ஞானத்தை பார்க்கும் அந்த கணத்திலேயே அதை அழிப்பது ஞானமே, கர்மங்கள் இல்லை.Tuesday, July 28, 2009

புருஷ தந்திரம்- வஸ்து தந்திரம்.....81.
விருத்தி ஞானமந் தக்கர ணத்தொடு விருத்தியா கிலுமைந்தா
ஒருத்தி மக்களே தங்களிற் பகைக்கின்ற துலகெங்குங் கண்டோமே
கருத்த னாகிய புருடதந் திரங்களாங் கருமங்க ளவைபோல
வருத்த ஞானமோ புருடதந் திரமன்று வஸ்துதந்திரமாமே

(நான் பிரமம் என்ற) விருத்தி ஞானம் அந்தக் கரணத்துடைய விருத்தியாகிலும், மைந்தா, ஒருத்தி மக்களே தங்களிற் பகைக்கின்றது உலகெங்கும் கண்டோமே. கருமங்கள் கருத்தனாகிய புருட தந்திரங்களாம். (புருஷனின் கட்டுப்பாட்டில் உள்ளவை) அவை போல வருத்த (பிரயத்னத்தால் சமாதியில் உண்டான பூரண) ஞானமோ புருட தந்திரமன்று. (பிரமமாகிய) வஸ்து தந்திரமாமே.
--
நான் பிரமம் என்ற விருத்தி ஞானம் அந்தக் கரணத்துடைய கர்மம்தான். ஆனாலும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் ஒத்தருக்கு ஒத்தர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் இல்லயா? அது போல கர்மமும் விருத்தி ஞானமும் அந்தக்கரணத்தின் வேலைகள் ஆனாலும் ஞானம் கர்மத்துக்கு விரோதியே. கர்மம் சீவனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. விருத்தி ஞானம் பிரம்மத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

நாம் ஒரு வேலையை ஆரம்பிக்கிறோம். தினசரி சீக்கிரம் எழுந்து ஜபம் செய்ய நினைக்கிறோம். நாலு நாள் போன பிறகு இது நம்மால முடியாதுன்னு தோணுது. ஒண்ணு அதை விட்டுடுவோம்; அல்லது நாலு மணி வேணாம், அஞ்சு மணிக்கு வெச்சுக்கலாம் ன்னு திட்டம் போடுவோம்.

இப்படி சீவன் ஒரு விஷயத்தை செய்யவோ. செய்யாமல் இருக்கவோ. மாற்றி செய்யவோ சுதந்திரம் இருக்கிறது. ஆனால் ஞானம் அவன் கட்டுப்பாடில் இல்லை.

 சந்திரனை பாக்கக்கூடாது ன்னு  ஒரு விரதம் இருக்கிறான்னு சும்மாவான வெச்சுக்கலாம். அது இவன் கட்டுப்பாட்டில் இருந்தா இவன் பாக்காம இருப்பான். அது இவன் கட்டுப்பாட்டில் இல்லைன்னா இவன் வெளியே போகிற போது "தற்செயலாக" ஆகாயத்தை பார்த்து சந்திரனுக்கும் இவன் கண்களுக்கும் ஒரு சம்பந்தம் உண்டாகி விட்டால் சந்திரஞானம் வந்துவிடும்! அதை இவன் தடுக்க முடியாது.

இதை வஸ்து தந்திரம் என்கிறாங்க. வஸ்து ன்னா பரம் பொருள்தான். இது பரமாத்மாவோட கட்டுப்பாட்டில இருக்கு. ஜீவன் கட்டுப்பாட்டில இல்லை. சமாதி நிலையில அந்தக்கரணத்தோட சொரூப ஞானம் சம்பந்தப்படுவது ஜீவனோட கட்டுப்பாட்டில இல்லை. ஞானமும் கர்மா மாதிரி இருந்தாலும் இது வஸ்து தந்திரம். மத்த கர்மாக்கள் ஜீவன் கட்டுப்பாட்டில இருக்கு.Monday, July 27, 2009

அந்தக்கரணத்தால பண்ணாலும் அது கர்மாதானே?79.
காரணத்தால் கெடாத அஞ்ஞானம் காரியத்தால் எப்படி கெடும்?
துருத்தி மாயையைச் சுழுத்தியிற் சுடாததற் சொரூப ஞானந்தானே
விருத்தி ஞானமாய்ச் சுட்டதெப் படியெனில் வெய்யிலா லுலகெங்கும்
பரித்த சூரியன் சூரிய காந்தத்திற் பற்றியக் கினியாகி
எரித்த வாறுபோற் சமாதியில் விருத்தியா லெரிக்குமென் றறிவாயே

துருத்தி (போல பல விகாசங்களை உடைய) மாயையை சுழுத்தியில் சுடாத தற் சொரூப ஞானந்தானே, விருத்தி ஞானமாய் சுட்டது எப்படி? எனில் வெய்யிலால் உலகெங்கும் பரித்த (காத்த) சூரியன் சூரிய காந்தத்தில் பற்றி அக்கினியாகி எரித்த வாறு போல் சமாதியில் விருத்தியால் எரிக்கும் என்று அறிவாயே.

அஹா! அப்ப அந்தக்கரண விருத்தியோட சம்பந்தப்படணும். எந்த கரணத்தால எதை பண்ணாலும் அது கர்மமாதானே ஆகும்? அந்தக்கரணத்தால பண்ணாலும் அது கர்மாதானே? பின்ன ஏன் அதுக்கு புதுசா ஞானம் ன்னு ஒரு பெரிய பேர்?

80.
கருமத்துக்கும் ஞானத்துக்கும் பேதம் தெரிய வினா.
அருளு மையனே திரிவித கரணத்தா லாகிய தொழிலெல்லாம்
கரும மல்லவோ விருத்திஞா னமுமந்தக் கரணகா ரியமன்றோ
உரிய கர்மமஞ் ஞானத்தைக் கெடுக்குமென் றோதினா லாகாதோ
பெரிய ஞானமென் றதற்கொரு பெயரிட்ட பெருமையை யுரையீரே

அருளும் ஐயனே திரிவித கரணத்தால் ஆகிய தொழிலெல்லாம் கருமம் அல்லவோ? (நான் பிரமம் என்ற) விருத்தி ஞானமும் அந்தக் கரண காரியமன்றோ? உரிய கர்மம் அஞ்ஞானத்தைக் கெடுக்குமென்று ஓதினால் (கூறினால்) [சம்மதம்] ஆகாதோ? பெரிய ஞானமென்று அதற்கொரு பெயரிட்ட பெருமையை உரையீரே.
--
மனம், சொல், உடல் ஆகியவற்றால் செய்வது அனைத்தும் கர்மம்தானே? நான் பிரம்மம் என்று நினைப்பதுவும் உள்ளத்தின் ஒரு கர்மம் அல்லவா? அப்படியானால் கர்மம் அஞ்ஞானத்தை போக்கும் என்று சொல்லலாம் அல்லவா? அதற்கு மகத்தான விருத்தி ஞானம் என்று பெரிய பெயர் ஒன்று வைப்பானேன்?
Sunday, July 26, 2009

கள்ளும் ஊனும் நீ விரும்பினால்......கள்ளும் ஊனும் நீ விரும்பினால்....
இந்த செய்யுள் பலருக்கு பல சந்தேகங்களை தோற்றுவித்து உள்ளது என்று தெரிகிறது.
இதை கொஞ்சம் சரியான பார்வையில் பார்க்க வேண்டும்.
யக்ஞங்கள் என்றாலே அந்தணர்கள் மட்டுமே செய்வதாக ஒரு கற்பனை வந்துவிட்டது. அப்படி இல்லை. வேதத்துக்கு அதிகாரம் உடையவர்கள் அந்தணர் க்ஷத்திரியர் வைச்யர் மூன்று வர்ணத்தவரும்தான். பல புராணங்களிலே பார்த்து இருக்கிறோமே.... இந்த ராஜா ராஜ சூய யாகம் செய்தான் அந்த ராஜா அச்வமேதம் செய்தான் என்று ... யக்ஞங்களை நடத்தி வைத்தது அந்தணர்களாக இருந்தாலும் யஜமானன் மூன்று வர்ணத்தவர்களாகவே இருக்கலாம்.
சமீப காலங்களாக அந்தணர்கள் வழக்கமாக இருந்த புலால் மறுப்பை விட்டுவிடுவது பலராலும் விரோதமாக பார்க்கப்பட்டாலும் இது இடைக்காலத்தில் வந்த பழக்கமே என்று தெரிகிறது. ஆதி சங்கரர் வந்த பிறகுதான் அவர் யோசித்து ஏற்கெனெவே அந்தணர்களின் பிரம்ம தேஜஸ் குறைந்து வருகிறது. இந்த நிலையில் இவன் மாம்சம் சாப்பிட்டால் இருக்கிற கொஞ்ச நஞ்சமும் போய்விடும் என்று இப்படி மாற்றி விட்டதாக கேள்வி.
இப்போதும் அரிதாக செய்கிற பசு பந்தம் போன்றவற்றில் மிகச்சிறிதளவே யாகம் செய்கிறவர்கள் உட்கொள்ளுகிறார்கள். முகர்ந்து பார்த்து விட்டுவிடுபவர்களும் உண்டு. எந்த பொருளை ஹோமம் செய்கிறோமோ அதை ஹோமம் செய்யும் குழுவில் உள்ளோர் புசிக்க வேண்டும் என்ற விதிக்கு இணங்க இப்படி செய்யப்படுகிறது.

அடுத்து கவனிக்க வேண்டியது "இங்கே ஊனும் மதுவும் உட்கொள்ள யாகம் செய்யச்சொல்லி இருக்கிறது; அதனால் அதுதான் அதன் குறிக்கோள்" என்ற கற்பனை தவறு. யாகங்களின் நோக்கம் வெவ்வேறு. இங்கே சொல்ல வந்தது "அப்படி இச்சை இருந்தால் இது போன்ற சந்தர்பங்களில் தீர்த்துக்கொள்" என்பதே தவிர அதற்காக யாகம் செய் என்பதல்ல. (வேதம் அப்படி எங்கே சொல்லி இருக்கிறது என்று தெரியவில்லை. விசாரித்துக்கொண்டு இருக்கிறேன், பதில் கிடைக்கவில்லை.) பின்னாலேயே வரும் செய்யுள்களே அதை சுட்டிக்காட்டுகின்றன. இயல்பாக இருக்கும் இச்சைகளை "செய்" என்றா வேதம் சொல்லும்? மாற்றாக கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

பலி கொடுக்கும் ஆடுகள் எஃகு கொம்புகளுடன் வரவை எதிர் பார்த்து இருக்கும் என்பது பாகவதத்தில் புரஞ்சனோபாக்கியானத்தில் இருக்கிறது. அதன் தமிழ் வடிவத்தை பதிவில் கொடுத்து இருக்கிறேன். ஒரு உற்சாகத்தில் சோம யாகங்களாக செய்து கொண்டே போன அரசனை வழிக்கு கொண்டுவர நாரதர் அவனிடம் இப்படி சொல்லுகிறார். மற்றபடி இதற்கு வேதத்தில் ஒரு சான்றும் தென்படவில்லை என்கிறார்கள்.


Friday, July 24, 2009

ஞானம் ரெண்டு வகை....உலகிலே இருக்கிற அஞ்ஞானம் கருமத்துக்கு விரோதி இல்லை, அதோட உறவாகிவிடும் ன்னு சொன்னீங்க. அஞ்ஞானத்துக்கும் ஞானத்துக்கும் விரோதம் இருக்குன்னா சந்திரனில களங்கம் இருக்கிறாப் போல பரிசுத்த ஞானத்தோட அஞ்ஞானமும் ஒன்றாக பொருந்தி இருந்து எல்லா காரியங்களையும் செய்ய முடியுமா?

77.
உலக மானவஞ் ஞானமுங் கருமமு முறவென்ற வழி கூடும்
பலவு மானவஞ் ஞானமு ஞானமும் பகையென்ப துளதானால்
நிலவி லேமறுப் போலவஞ் ஞானமு நிமலஞானத்தோடே
குலவி நின்றிந்தச் சிருட்டிகள் செய்யவுங் கூடுமோ குருமூர்த்தி

உலகமான அஞ்ஞானமுங் கருமமும் உறவென்ற வழி கூடும் (ஒன்றுக்கு ஒன்று சாதகமாகும்). பலவுமான அஞ்ஞானமும் ஞானமும் பகை என்பது உளதானால் (உண்மையானால்) நிலவிலே மறுப்போல அஞ்ஞானமும் நிமல ஞானத்தோடே குலவி நின்று இந்த சக சிருட்டிகள் செய்யவும் கூடுமோ குருமூர்த்தி!

78.
குரு ஞானம் இரு விதம் என்கிறார்.

சொரூப ஞானமும் விருத்திஞா னமுமென்று சோதிஞானமு மிரண்டாம்
சொரூப ஞானமே விருத்தியின் ஞானமாய்த் தோன்றும்வே றிலைமைந்தா
சொரூப ஞானமஞ் ஞானசத்துருவன்று சுழுத்தியிற் கண்டாயே
சொரூப ஞானத்தின் மருவுமஞ் ஞானத்தைச் சுடும்விருத் தியின் ஞானம்.

சொரூப ஞானமும் விருத்தி ஞானமும் என்று சோதி ஞானமும் இரண்டாம்.
சொரூப ஞானமே விருத்தியின் ஞானமாய் தோன்றும், வேறு இல்லை மைந்தா. சொரூப ஞானம் அஞ்ஞான சத்துருவன்று [என] சுழுத்தியிற் (அஞ்ஞானத்தை அனுபவித்து) கண்டாயே. ஆனாலும் சொரூப ஞானத்தில் மருவும் (தோன்றும்) அஞ்ஞானத்தைச் சுடும் விருத்தியின் ஞானம். (ஆகவே அதுவே சத்துரு)
--
ஞானமானது சொரூப ஞானம் என்றும் விருத்தி ஞானம் ன்னு ரெண்டு வகைப்படும்.
ஆனாலும் சொரூப ஞானமே அப்புறமா விருத்தி ஞானமா மாறுது அன்றி அது வேற இல்லை. சொரூப ஞானம் அஞ்ஞானத்துக்கு விரோதி இல்லை ன்னு நித்திரையில் பாத்தோம் இல்லையா? சுழுத்தியில் சொரூப ஞானத்துடன் கலந்து அழியாம இருந்த அந்த அஞ்ஞானத்தை விருத்தி ஞானம் சுட்டு எரிச்சுடும்.

அதெப்படி ஸ்வாமி?
சுழுத்தியிலே சொரூப ஞானம் இருக்கு. (நாம் ன்னு ஒரு நினைப்பு- நான் நல்லா தூங்கினேன்) தூங்கி எழுந்தா முன்னே இருந்த அதே அஞ்ஞானத்தோடதான் இருக்கோம். இப்படி அஞ்ஞானத்தை நீக்க முடியாத சொரூப ஞானம் திடீர்ன்னு எப்படி விருத்தி ஞானமாகி அஞ்ஞானத்தை சுட்டு எரிக்கும்?

சொரூப ஞானம் என்பது சாதாரண /சாமான்ய ஞானம். விருத்தி ஞானம் என்பது விசேஷ ஞானம்.

சுழுத்தியில் உள்ள சொரூப ஞானம் என்பது ஆன்ம பிரகாசம் மட்டுமே. அந்தக்கரண விருத்தி (செயல்பாடு) சுழுத்தியில் இல்லை. சொரூப ஞானம் ஒரு கொள்ளிக்கட்டை போல. அது தன் வரை பிரகாசமாக இருக்கும். ஆனால் அறையை அதனால பிரகாசமாக்க முடியாது. ஆனால் அதை விசிறிவிட்டு சுடர் உண்டாகச்செய்தா, அப்போது அது இருளை நீக்கும். அதுபோல சொரூப ஞானம் அஞ்ஞானத்தை அழிக்கக் கூடியது இல்லை. அதுவே அந்தக்கரண விருத்தி கூட சேர்ந்து விருத்தி ஞானமாக ஆன பின்னால அச்சக்தியை பெறுது.

சூரிய கிரணங்கள் சிதறி இருப்பதால் எதையும் எரிக்க சக்தி இல்லாம இருக்கு. அதே கிரணங்கள் சூரிய காந்த கல்லிலே (lens) பிரவேசித்து வெளி வந்து ஓரிடமாக குவியும்போது அந்த வல்லமை வருது. அதுபோல சமாதியிலே அந்தக்கரண விருத்தியுடன் சொரூப ஞானம் சம்பந்தப்பட்டால் விருத்தி ஞானமாகி அஞ்ஞானத்தை சுட்டு எரிக்கிறது.


Thursday, July 23, 2009

வேதத்தின் உண்மை நோக்கம்....
76.
மதுவி றைச்சிகளுண்ணென்ற சுருதிபின் மணந்துபா ரெனல் பாராய்
மிதுன விச்சையும் புத்திரோற் பத்தியால் விரும்பென்ற விதிபாராய்
இதையும் விட்டொழி யதிநயிட் டிகவந்நிக் கிகழ்ச்சியற் றதும்பாராய்
அதைய றிந்துகன் மங்களா சைகளொழித் தானந்த மடைவாயே

மது இறைச்சிகள் (விதிப்படி) உண் என்ற சுருதி பின் மணந்து பார் எனல் பாராய்.
மிதுன இச்சையும் புத்திர உற்பத்தியால் விரும்பு என்ற விதிபாராய். இதையும் விட்டொழி, யதி (சன்யாசி) நயிட்டிகவன்னுக்கு (நைஷ்டிக பிரம்மச்சாரிக்கும்) இகழ்ச்சி அற்றதும் பாராய். அதையறிந்து கன்மங்கள், ஆசைகள் ஒழித்து ஆனந்தம் அடைவாயே.
--
"மதுவும் மாமிசமும் உண்ண நீ இச்சித்தால் யாகங்கள் செய்து உண்" என்ற வேதம் பின்னால் "அவற்றை புசிக்காமல் முகர்ந்து பார்ப்பது மாத்திரமாய் விட்டு விடுவாயின் நெடுங்காலம் சுவர்க்க போகங்களை அனுபவிப்பாய்" என்று கூறி உள்ளதைப் பாராய். மேலும் "ஸ்திரீ போகமும் புத்திர உற்பத்தி நிமித்தம் விரும்புவாயாக" என்று கூறி உள்ளதையும் பாராய். நேரிட்ட ஸ்திரீக்களை எல்லாம் சேர்ந்தால் இம்மையில் பழியும் மறுமையில் நரக வேதனையும் உண்டாகும் என்றும் கூறி உள்ளது. மேலும் மனைவியை சேர இந்த இந்த தினங்களில்தான் சேர வேண்டும் என்பது முதலான பல விதிகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. "யாக யக்ஞங்களை செய்" என்ற வேதம் "உன்னால் யாகத்தில் கொல்லப்பட்ட ஆடானது சுவர்க லோகத்தில் எஃகினால் ஆன கூரிய கொம்புகளுடன் கோபத்துடன் உன் வரவை எதிர் பார்த்து இருக்கும்; நீ அங்கு வந்ததும் உன்னை அக்கொம்புகளால் குத்தி வயிற்றை பிளந்து துன்பப்படுத்தும். ஆகையால் யாவற்றையும் விட்டொழி" என்றும் கூறுகிறது.

அம்மட்டும் இல்லாமல் மனைவி, மகன் யாவற்றையும் விட்டு ஒழித்த சந்நியாசி. துறவி ஆகியோருக்கு நிந்தை நீங்கி புகழ்ச்சி ஏற்பட்டு இருப்பதை பாராய்.

இவை யாவும் அறிந்து எல்லா கருமங்களையும் மனைவி, புத்திரர், செல்வம் ஆகியவற்றில் ஆசைகளை துறந்து பிரம்ம ஐக்கிய ஞானத்தால் உண்டாகும் ஆனந்தத்தை அடைவாயாக.

அயமகத்தினில் அரசநீ படுத்தவம் மறிகள்
செயிர்த ழைந்துகண் டீயுக வரவுபார்த் திருக்கும்
பயில்வி சும்புசெல் காலையில் வெருவரப் பாய்ந்து
வயிறு போழும்வல் விருப்பினொண் மருப்பினின் மாதோ
பகுத்திடு மறிகள் வேள்வி புரிந்தவன் பனிவி சும்பி
னகுத்திடுங் கால நோக்கி யழல்விழி யொழுகப் பாய்ந்து
வடித்தசா ரிருப்பிற் செய்த மருப்பினால் வயிறு போழ்ந்த
தெடுத்துநா முரைத்துங் கேட்டி விறைவனென் றுரைக்க லுற்றான்
பாகவதம்

சுபாவத்தை கட்டுப்படுத்த...


சில விஷயங்கள் ஏற்கெனவே சுபாவமா இருக்கில்லை? அதை செய் ன்னு சொல்ல வேதம் வரணுமா என்ன? யாரும் "ஓ! காகமே! நீ கறுப்பாகு. அக்னியே, நீ சுடு! வேம்பே, நீ கசப்பா இரு! காத்தே, நீ வீசு!” ன்னு சொல்லறாங்களா என்ன? அதெல்லாம் அதததோட சுபாவம் இல்லையா?

74.
போக மாருயிர் கண்டதை யுண்பதும் புணர்வது மியல்பேகாண்
ஆக மங்களுஞ் சுபாவத்தை விதிக்குமோ வத்தனை தெரியாதோ
காக மேகறுத் திடுநெருப் பேசுடு கசந்திடு வேம்பே
வேக வாயுவே யசையென வொருவரும் விதித்திடல் வேண்டாவே

போகம் (உண்கின்ற) ஆருயிர்(கள்) கண்டதை உண்பதும் புணர்வதும் இயல்பே காண். ஆகமங்களும் சுபாவத்தை விதிக்குமோ அத்தனை தெரியாதோ? காகமே கறுத்திடு நெருப்பே சுடு, கசந்திடு வேம்பே, வேக வாயுவே அசைந்திடு என ஒருவரும் விதித்திடல் வேண்டாவே.
--
போகங்களை புசிக்கும் சீவன்கள் அகப்பட்டதை உண்பதும் உடன்உறங்குவதும் இயல்பே ஆகும். ஸ்ருதி (வேதம்) சுபாவமாக உள்ளதை எங்காவது விதிக்குமோ? அதற்கு அவ்வளவு தெரியாதோ? “காகமே! நீ கருப்பாய் இரு. நெருப்பே நீ சுடு, வேம்பே நீ கசப்பாய் இரு " என்று எல்லாம் யாரும் விதிக்க வேண்டியது இல்லையே?

மேலும் பாருப்பா! வேதம் சாதாரணமா நாம செய்ய விரும்புகிற விஷயங்களை பண்ணுன்னு சொல்லலை. மாறா அதுக்கெல்லாம் கட்டுப்பாட்டை விதிக்குது. "மது, மாமிசம் உண்ண ஆசை வந்தாச்சு; அதை கட்டுப்படுத்த முடியலை ன்னா யக்ஞங்கள் செய்து அங்க சாப்பிடு. ஸ்திரீ போகத்தில் இச்சை இருந்தா கட்டின பெண்டாட்டி கூட மட்டும் வெச்சுக்க.” இப்படி கட்டுப்பாடுகளை விதிக்குது. அதை மேலும் கட்டுப்படுத்தவும் பாக்குது. "யக்ஞத்தில மதுவோ மாமிசமோ சாப்பிட்டாகணும் ன்னு இல்லை; முகர்ந்து பாத்துட்டு விட்டுடலாம். அப்போ அது கர்ம வழி நடந்ததாகவும் ஆகும். நெடுங்காலம் சுவர்க போகங்களும் கிடைக்கும்.” என்கிறது. மேலும் அது "உன்னால யாகத்தில் பலி போடப்பட்ட பசு, சுவர்கத்தில கூர்மையான எஃகு கொம்புகளோட, நம்ம பலி போட்டப்பயல் எப்படா வருவான்; முட்டி குத்தி கிழிக்கலாம்" ன்னு கோபத்தோட காத்திருக்கும் அப்படின்னும் சொல்லுது.

"கண்ட கண்ட ஸ்த்ரீக்களோட போகம் அனுபவிச்சா இந்த பிறவில பழி ஏற்படும் மறுமையில நரக வேதனையும் கிடைக்கும்" என்குது. மேலும் "கட்டின பெண்டாட்டியானாலும் இன்னின்ன நாட்களில போகம் செய்யாதே" ன்னு பெரிய பட்டியலே போடுது. அதை கடைப்பிடிச்சா பெரிய - ஹிஹிஹி சின்ன - குடும்ப திட்டமே தேவையில்லை. இயற்கையாவே கட்டுப்பாடு வந்துடும்.

75.
கள்ளு மூனுநீ விரும்பினான் மகங்கள் செய் காமத்தின் மனதானால் 
கொள்ளும் பெண்டொடு கலவி செய் யெனிலிவன் குறையெலாந் தொடானென்றே
தள்ளும் வேதத்தின் சம்மதஞ் சகலமுந் தவிர்வதே கருத்தாகும்
விள்ளுமிவ்விதி யென்னெனிர் பூருவ நியமமாம் விதியன்றே

"கள்ளும் ஊனும் நீ (உண்ண) விரும்பினால் மகங்கள் (யாகங்கள்) செய். காமத்தின் மனதானால் கொள்ளும் (கல்யாணம் செய்த) பெண்டொடு கலவி செய்” எனில் இவன் குறை எலாம் தொடான் என்றே வேதத்தின் சம்மதம் தள்ளும் (சம்மதித்தது போல கூறியது). சகலமும் தவிர்வதே கருத்தாகும். விள்ளும் (முன் சொல்லிய) இவ்விதி என்ன எனில் பூருவ நியமமாம். விதி (சித்தாந்தம்) அன்று.
--
மதுவும் மாமிசமும் உண்ண நீ இச்சித்தால் யாகங்கள் செய்து அங்கே உண். ஸ்திரீ போகத்தில் விருப்பம் கொண்டால் அக்னி சாட்சியாக மணம் செய்து கொண்ட பெண்ணுடன் கலவி செய்" என்று வேதம் விதித்தது. அப்படி சொன்னால் இவன் மனம் போன படி நேரிட்ட எல்லா போகங்களிலும் தலையிட மாட்டான் என்று கருதியே அப்படி கூறியது. யாவற்றையும் விட்டு ஒழிக்க வேண்டும் என்பதே அதன் கருத்து.


Tuesday, July 21, 2009

கர்மம் சித்த சுத்தி வழியே விசாரம் உதித்து ஞானம் பெறச்செய்யும்.அது போல விசாரத்தால் அஞ்ஞானமாகிய மறதியை நீக்கி அறிவினால் பரிசுத்த ஆன்மாவை தரிசிப்பதாகிய ஞானத்தை பெற வேண்டும். அது இன்றி நூறு யுகங்கள் பிரபலமாகிய பெரிய கர்மங்களை செய்தாலும் அந்த ஞானம் கிடைக்காது......

பத்தி நெறி நிலை நின்று நவகண்ட பூமிப் பரப்பைவல மாக வந்தும்
பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசிதாக மின்றி யெழுநா
மத்தியிடை நின்றுமுதிர் சருகுபுனல் வாயுவினை வன்பசி தளக்க டைத்தும்
மவுனத் திருந்துமுயர் மலைநுழை தனிற்புக்கு மன்னுதச நாடி முற்றுஞ்
சுத்தி செய் தும்மூல ப்ராணனோ டங்கியைச் சோமவட் டத்த டைத்தும்
சொல்லரிய வமுதுண்டு மற்பவுடல் கற்பங்க டோறுநிலை நிற்க வீறு
சித்திசெய் துஞ்ஞான மலதுகதி கூடுமோ சித்தாந்த முத்தி முதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயானந்த குருவே.
-தாயுமானவர்

ஆக கருமம் ஞான சாதனம் இல்லை. ஆனால் நிஷ்காம கர்மம் சித்த சுத்தி கொடுத்து அதன் வழியே விசாரம் உதித்து ஞானம் பெறச்செய்யும்.

சரி ஐயா. வேதத்திலே கர்ம காண்டத்தில சொல்லி இருக்கே ஐயா புண்ணிய கர்மம் பண்ணா தேவ ஜன்மம் கிடைக்கும் பாபம் பண்ணா மிருகம் முதல் தாவரம் வரையான ஜன்மம் கிடைக்கும். பலரும் செய்கிற படி இரண்டும் கலந்து பண்ணா மனுஷ ஜன்மம் கிடைக்கும்ன்னு. அவங்கவங்க ஜாதி ஆசாரத்திலே ஒழுக்கத்தில தவறாம நடக்கிறதே தவம் அதனால சுகமடைவான் னு சொல்லி இருக்கே. ஏன் இப்படி சொன்னாங்க?

72.
கர்ம காண்டத்தில் கூறி உள்ளதை சீடன் சந்தேகப்படுதல்:

நன்மை யாங்குரு வேசுகந் தருவது ஞானமே யெனும் வேதம்
தன்ம பாவமிச் சிரங்களாற் றேவர்க டருவிலங்குகண் மாந்தர்
சென்ம மாகுவ சாதியா சாரமே செய்தவஞ் சுகமென்று
கன்ம காண்டத்தில் விதித்ததென் விதித்துள காரணமுரையீரே

நன்மையாங் குருவே, சுகந் தருவது ஞானமே எனும் வேதம் தன்ம (புண்ணிய) பாவ மிச்சிரங்களால் தேவர்கள், தரு, விலங்குகள், மாந்தர் சென்மமாகுவர். சாதி ஆசாரமே செய்[கின்ற] தவம், சுகம் என்று கன்ம காண்டத்தில் விதித்தது என்? விதித்துள காரணம் உரையீரே.
--
உத்தம குருவே! ஞானம் ஒன்றே மோக்ஷத்தை அளிப்பது என்று கூறும் வேதம், புண்ணிய கருமத்தால் தேவ ஜன்மமும் பாப கருமத்தால் மிருகம் முதல் தாவரம் வரையில் உள்ள ஜன்மங்களும் இரண்டும் கலந்த கர்மத்தால் மனித பிறவியும் கிடைக்கும் என்றும்; அவனவன் தன் தன் ஜாதி ஆசார ஒழுக்கங்களில் தவறாது நடப்பதே தவம் என்றும், அதனால் சுகமடைவான் என்றும் சொல்லி இருக்கிறதே அதன் காரணத்தை சொல்ல வேண்டுகிறேன்.


ஒரு குழந்தைக்கு உடம்பு சரியில்லை. அவங்க அம்மா மருந்து கொடுக்கப்பாக்கிறாங்க. மருந்தோ ஒரே கசப்பு. என்ன செய்கிறது? குழந்தைக்கு பிடிச்ச பண்டம் ஒன்னில மருந்தை ஒளிச்சு கலந்து வைக்கிறாங்க. குழந்த தனக்கு பிடிச்ச பண்டம் ன்னு சாப்பிட ஆரம்பிக்கும். ருசி வேற மாதிரி இருக்குன்னு அதுக்கு புரிஞ்சு துப்பறத்துக்குள்ளே ஏதோ பேச்சு போக்கு காட்டி சாப்பிட வைச்சுடுவாங்க.
அது போல இல்லற தர்மங்களை வேதம் வரையறுத்தாலும் அதன் உண்மையான நோக்கம் வேற. சுவர்க்கம் போன்ற போகங்களில ஆசை வெச்சு இருக்கிறவங்க அந்த உண்மையான பொருளை உணர மாட்டாங்க.


73
தினமு மண்ணுகர் பிள்ளைநோய்க் கிரங்கியே தீம்பண்ட மெதிர்க்காட்டிக்
கனம ருந்துகளொளித்து வைத்தழைக்கின்ற கருணைநற் றாய்போலே
மனைய றங்கள் செய்மகங்கள் செய் நன்றென்று மலர்ந்தவா சகஞ் சொல்லும்
நினைவு வேறுகாண் சுவர்ககா மிகளந்த நிண்ணயந் தெரியாரே

தினமும் மண் நுகர்(தின்கின்ற) பிள்ளை நோய்க்கு இரங்கியே, தீம் (இனிப்பான) பண்டம் எதிர்க்காட்டி, கன மருந்துகள் ஒளித்து வைத்து அழைக்கின்ற கருணை நல் தாய் போலே மனை (இல்லத்துக்குரிய) அறங்கள் செய்; மகங்கள் (யாகங்கள்) செய்; நன்று. என்று மலர்ந்த வாசகஞ் சொல்லும் நினைவு வேறு காண். ஸ்வர்க காமிகள் அந்த நிண்ணயம் தெரியாரே.
--
மண் முதலியவற்றை உண்டு வியாதி உற்று இருக்கும் தன் குழந்தையின் நோயை நீக்க தாயானவள், நேரே அதற்கு மருந்தை கொடுத்தால் அது சாப்பிடாதாகையால் அப்படி தராமல் சுவையான தின்பண்டங்களைக் காட்டி அவற்றில் மருந்தை மறைத்து வைத்து குழந்தை அதை சாப்பிடும் படி செய்கிறாள். அந்த கருணை உள்ள தாயாரைப்போல இல்லற தருமங்களை செய். யக்ஞங்களை செய் என்று வேதம் கூறியதே அன்றி உண்மையில் அதன் கருத்து வேறாகும். சுவர்க்கம் முதலான போகங்களை அனுபவிக்க ஆசை உடையவர்கள் அந்த உண்மை கருத்தினை உணர மாட்டார்கள்.


Monday, July 20, 2009

ஞானத்தாலேயே அஞ்ஞானம் அழிய வேண்டும்68.
ஞானத்தாலேயே அஞ்ஞானம் அழிய வேண்டுமென நன்றாய் அறிய வினவுதல்:

துளங்கு தர்பண மழுக்கறக் கைக்கொண்டு துலக்கினாற் போமன்றி
விளங்குபுத்தியா லுலகிலார் துலக்கினார் விமலதே சிகமூர்த்தி
களங்கமாகுஞ் ஞானமு மப்படிக் கருமத்தாற் கழுவாமல்
உளங்கு றித்தஞா னத்தினா லெப்படி யொழியுமீ தருள்வீரே

துளங்கு (விளங்குகின்ற) தர்பணம் (கண்ணாடி) அழுக்கு அறக் (அழுக்கு போக) கைக்கொண்டு துலக்கினாற் (துடைத்தால்) போம் அன்றி விளங்கு[கின்ற] புத்தியால் உலகில் யார் துலக்கினார்? விமல தேசிக மூர்த்தி! களங்கமாகும் ஞானமும் அப்படிக் கருமத்தால் கழுவாமல் உளம் குறித்த ஞானத்தினால் எப்படி ஒழியும்? ஈது அருள்வீரே.
--
என்ன ஐயா இப்படி சொல்லறீங்க? கண்ணாடியில இருக்கிற அழுக்க கையால துடைச்சாத்தானே சுத்தமாகும்? அப்படி இல்லாம புத்தியால யார் சுத்தம் செய்தாங்க? அதப் போல களங்கமா இருக்கிற அஞ்ஞானம் நல்ல செயல்களால நீங்காம அறிவால உணருகிற ஞானத்தால எப்படி நீங்குமோ?

இப்படி சீடன் கேட்க குரு சொல்லறார்.

கண்ணாடில இருக்கிற அழுக்கு உண்மையானது, அப்பா! அதனால கையால தேச்சு சுத்தம் பண்ணணும். இதுவே ஒரு கருப்பு துணி பக்கத்தில இருக்கிற ஸ்படிக கல்லில கருப்பா பாக்கிறோம் ன்னா, அது நிஜமா அந்த கல்லிலே இல்லை, பக்கத்துல இருக்கிற துணியோட வண்ணம் தான் அப்படி தோணுதுன்னு அறியணும்னா மனசு மட்டுமே போதுமே?
இது போலதான் சச்சிதானந்தத்திலே தோன்றுகிற அசத்து, சட, துக்கமா தெரிகிற இந்த பிரபஞ்சம் உண்மையிலே கிளிஞ்சலிலே வெள்ளியை பாக்கிறது போல மாயைதான். சத்தியமில்லை. அஞ்ஞானத்தை கர்மங்கள் பகைச்சுக்காது. மாறா உறவாக்கிக்கும். பரிசுத்த ஞானம் மட்டுமே கருமத்தையும் அஞ்ஞானத்தையும் சுட்டு எரிக்கிற அக்னியாகும்.

69.
விடை:
தர்ப்ப ணத்தினிற் களிம்புவாஸ் தவமலஞ் சகசமாதலின் மைந்தா
கற்ப ளிங்கினிற் கருநிறஞ் சகசமாக் கருத்ததன் றாரோபம்
தர்பணத்தினி லழுக்கறவேண்டினாற் சாதனத் தொழில் வேண்டும்
கற்ப ளிங்கினிலா ரோபமே கறுப்பென்று கண்டிட மனம்போதும்.

தர்ப்பணத்தினில் (கண்ணாடியில்) களிம்பு (அழுக்கு) வாஸ்தவ மலம் (உண்மையான அழுக்கு) சகசம் ஆதலின் [அது செயலால் நீங்கும்]. மைந்தா கற் பளிங்கினில் கரு நிறம் சகசமாக (உண்மையாக) கருத்தது அன்று. [அது] ஆரோபம். தர்பணத்தினில் அழுக்கற வேண்டினால் சாதனத் தொழில் வேண்டும். கற் பளிங்கினில் ஆரோபமே கறுப்பு என்று கண்டிட மனம் போதும்.
--
கண்ணாடியில் உள்ள அழுக்கு உண்மையானது. ஆனால் ஸ்படிகக் கல்லில் கருமை நிறம் தோன்றுவது உண்மையல்ல, அது ஆரோபம். (கற்பிக்கப்பட்டது) ஆகையால் கண்ணாடியில் உள்ள அழுக்கை கையால் தொழில் (செயல்) தேவை. ஸ்படிகக் கல்லில் தோன்றும் கருமை நிறம் பொய் என்று அறிய மனம் மட்டுமே போதும்.

70.
அஞ்ஞானம் அத்தியாசமானாலும் கருமத்தால் நீங்காதோ?
இங்கு மப்படி சச்சிதாநந்தத்தி லிடர்சடம் பொய்மூன்றும்
தங்கு மாயையின் கற்பித மன்றியே சகவாஸ் தவமன்றே
பங்க மாகுமஞ் ஞானத்தைக் கருமங்கள் பகைசெய்யா துறவாக்கும்
துங்க ஞானமே கருமவஞ் ஞானத்தைச் சுடுகின்ற நெருப்பாமே

இங்கும் அப்படி சச்சிதாநந்தத்தில் இடர் சடம் பொய் மூன்றும் தங்கு மாயையின் கற்பிதம் அன்றியே சக வாஸ்தவம் அன்றே. பங்கமாகும் அஞ்ஞானத்தைக் கருமங்கள் பகை செய்யாது உறவாக்கும். துங்க ஞானமே கரும அஞ்ஞானத்தைச் சுடுகின்ற நெருப்பாமே.
--
அது போல இந்த தாஷ்டாந்தத்திலும் (உபமேயத்திலும்- எதற்காக உதாரணம் சொன்னோமோ அது) சச்சிதானந்த சொரூபத்தில் தோன்றி இருக்கும் அசத்து, சடம், துக்கமாகிய பிரபஞ்சம் முதலானவை யாவும் கிளிஞ்சலில் வெள்ளி தோன்றுவது போல
மாயையால் கற்பிதம் செய்யப்பட்டதாக (ஆரோபமாக) தோன்றியவை அன்றி உண்மை அன்று. அஞ்ஞானத்தை கருமங்கள் பகைத்து ஒழிக்கா; உறவாக்கிக்கொள்ளும். பரிசுத்தமான ஞானமே கருமத்தையும் அஞ்ஞானத்தையும் சுட்டு எரிக்கக்கூடிய நெருப்பாகும்.
{கிளிஞ்சலில் வெள்ளி: தூரத்தில் இருந்து பாக்கும் போது வெள்ளி போல பளிச்சிடுகிறது. கிட்டே போய் நன்றாக பார்த்தபின் அது வெள்ளி இல்லை கிளிஞ்சல் என்று தெரிகிறது.}


ஒரு பொருளை தவறுதலா வெச்சுட்டு தேடுறதுதான் நமக்கு பழக்கமாச்சே!
ஒத்தர் கணினியிலே நிறைய படங்கள் சேத்து வெச்சு இருந்தார். ப்ளாக்ல போட ஆசை ஆசையா சேத்தது. ஒரு நாள் குறிப்பிட்ட ஆனை படத்தை தேடினா காணோம். எங்கே சேமிச்சோம்னு நினைவுக்கு வரலை. செர்ச்சில் ஜேபெக் பிஎம்பி ன்னு தேடித்தேடி பாத்து கிடைக்கலை. என்னதான் அழுது புரண்டாலும் அது கிடைக்குமா? உக்காந்து நிதானமா எப்ப அதை கடைசியா பாத்தோம் என்ன செய்தோம்ன்னு யோசனை செய்தா அட ஆமாம் அன்னிக்கு நண்பருக்கு காட்ட ப்ளாஷ் ட்ரைவிலே காப்பி செய்தோமேன்னு நினைவு வந்து அந்த ப்ளாஷ் டரைவை எடுத்து பாத்தாத்தான் அதிலே கிடைக்கும்.
அது போலத்தான் விசாரத்தால அஞ்ஞானமாகிய மறதியை நீக்கணும்; அறிவால பரிசுத்தமான ஆத்மாவை தரிசிக்கணும். இப்படி இல்லாம நூறு யுகங்கள் பெரிய பெரிய யாகங்கள் பண்ணாலும் அந்த ஞானம் கிடைக்காது.

71.
மனைக்குள் வைத்தபண் டங்களை மறந்தவன் வருடநூறழுதாலும்
நினைத்து ணர்ந்தபின் கிட்டுமப் படியிந்த நின்மல வான்மாவும்
அனர்த்த மானதன் மறதியைக் கெடுத்துத் தன்னறிவினாற் காணாமல்
கனத்த கர்மங்க ணூறுகஞ் செய்யினுங் காணுமோ காணாதே

மனைக்குள் (வீட்டுக்குள்) வைத்த பண்டங்களை மறந்தவன் நூறு வருடம் அழுதாலும், நினைத்து உணர்ந்த பின் [மட்டுமே] கிட்டும். அப்படி இந்த நின்மல ஆன்மாவும் அனர்த்தமான தன் மறதியைக் கெடுத்துத் (போக்கி) தன் அறிவினால் காணாமல் கனத்த (பெரிய) கர்மங்கள் நூறுகள் செய்யினும் காணுமோ? காணாதே.
--
வீட்டில் ஒருவன் ஒரு பொருளை எங்கோ வைத்து விட்டு அந்த இடத்தை மறந்து போனான். அதற்காக அவன் நூறு வருஷ காலம் விழுந்து புரண்டாலும் அழுதாலும் அப்பொருள் கிடைக்குமோ? ஒரு போதும் இல்லை. நிதானமாக யோசனை செய்து கடைசியில் 'ஓ, கூடத்தில் உள்ள மேற்கு பக்க அறையின் சிறிய மாடத்தில் வைத்தோம்" என்று அந்த இடத்தை நினைவுக்கு கொண்டு வந்தால்தான் அது கிடைக்கும்.
அது போல விசாரத்தால் அஞ்ஞானமாகிய மறதியை நீக்கி அறிவினால் பரிசுத்த ஆன்மாவை தரிசிப்பதாகிய ஞானத்தை பெற வேண்டும். அது இன்றி நூறு யுகங்கள் பிரபலமாகிய பெரிய கர்மங்களை செய்தாலும் அந்த ஞானம் கிடைக்காது.


Friday, July 17, 2009

ஞானம் உதிக்க சற்கருமம் இருக்க விசாரம் ஏன்?ஏன் நிறைய நல்ல காரியங்கள் பண்ணா தானா ஞானம் வராதா என்ன?

வராது.
முன்னமேயே பார்த்து இருக்கோம். கர்மங்கள் கொண்டு விடறது சித்த சுத்தியிலதான். தெளிவா இருக்கிற இந்த சித்தத்தால விசாரம் செய்துதான் முக்தி அடையணும். தெளிவான சித்தம் நித்தியம் எது அநித்தியம் எது நாம் யார் என்றெல்லாம் விசாரித்து ஞானம் அடையும்.

64.
கன்மம் முக்கியம் எனும் கொள்கை நீங்கும் பொருட்டு ஞானம் உதிக்க சற்கருமம் இருக்க விசாரம் ஏன்?

போன சன்மங்க டமிலநுட் டித்தநற் புண்ணிய பரிபாகம்
ஞான மாக்குமே விசாரமே னென்றிடி னாமுரைத்திடக் கேளாய்
ஆன புண்ணிய மீசுரார்ப் பணஞ்செயி னசுசி போஞ் சுசியாகும்
மான தம்பினை விசாரித்து ஞானத்தை மருவுமென் றறிவாயே

போன சன்மங்கள்தமில் அநுட்டித்த (கடை பிடித்த) நற் புண்ணிய பரிபாகம் (பயன்) ஞானமாக்குமே? (ஞானத்தை தருமே) விசாரம் ஏன் என்றிடின், யாம் உரைத்திடக் கேளாய். ஆன (செய்யும்) புண்ணியம் ஈசுர அர்ப்பணம் செயின் அசுசி (அசுத்தம்) போம். சுசியாகும். (சுத்தமாகும்) மானதம் (மனது) பினை (பின்னை- பிறகு) விசாரித்து (ஆத்ம அனாத்ம விசாரம் செய்து) ஞானத்தை மருவும் (அடையும்) என்று அறிவாயே.
--
ஈஸ்வர அர்ப்பணமாக செய்யும் கருமங்கள் சித்த சுத்தி தரும். அதன் பின் மனம் நித்தியம் எது, அநித்தியம் எது என விசாரித்து ஞானம் அடையும். நிஷ்காம்ய கர்மம் சித்த சுத்தி தருமே ஒழிய நேரடியாக ஞானத்தை தராது.

என்னங்க இது? கர்மங்கள் எவ்வளவு பலமா இருக்கு? பக்தி, வைராக்கியம், சுவர்க்கம், அணிமா சித்தி, நிஷ்டை ,யோகம் ,தியானம் ன்னு எவ்வளவு தர முடியது கர்மங்களாலே. சிவலோகம், வைகுந்தம், பிரம்ம லோகம், தேவலோகம் ன்னு கூட தர முடியுது.
இப்படி இருக்க அஞ்ஞானத்தை தள்ளனும்னா விசாரணை வேணும் என்கிறீங்க. ஏன்?

65.
ஞானத்துக்கு விசாரமே முக்கியமாய் வேண்டுமென்பது உறுதிப்பட வினா

பத்தியும்வயி ராக்கிய மும்பர லோகமு மணிமாதி
சித்தி யுந்தவ நிட்டையும் யோகமுந் தியானமுஞ் சாரூப
முத்தி யுந்தரும் விசித்திர கருமங்கண் மோகமா த்திரந்தள்ளும்
புத்தி தந்திட லருமையோ விசாரமேன் புண்ணிய குரு மூர்த்தி.

பத்தியும், வயிராக்கியமும், பர லோகமும் (சுவர்கம்) அணிமாதி சித்தியும், தவ நிட்டையும், யோகமும், தியானமும், சாரூப முத்தியுந் [இவ்வளவு அரிய விஷயங்களை] தரும் விசித்திர கருமங்கள் மோக (அஞ்ஞானம்) மாத்திரம் தள்ளும் புத்தியை தந்திடல் அருமையோ? (நடவாததோ) விசாரமேன் (அதற்கு விசாரம் வேண்டும் என்பது ஏன்) புண்ணிய குரு மூர்த்தி.

ஒத்தர் வேஷம் போட்டு இருக்கார். அவரை கண்டுபிடிக்க அவரோட நடை, பாவனை, குரல், உசரமா குட்டையா, அங்க அடையாளங்கள் இப்படி எல்லாம் தெரிஞ்சு இருக்கணும். இதை தெரிஞ்சுகிட்டு உத்துப்பாத்து "ஓ! இவன் சர்தார்ஜி மாதிரி வேஷம் போட்டு இருந்தாலும் குரலை மாத்திக்கலை; வலது கால்ல கொஞ்சம் ஊனத்தால விந்தி நடக்கிறது அப்படியே இருக்கு.” இப்படி எல்லாம் ஆராய்ஞ்சு பாத்து, அவர் இன்னார்தான் ன்னு கண்டுபிடிக்கலாம். அதை விட்டுட்டு "வெகு தூரம் ஓடறேன், மரத்தோட உச்சாணி கொம்பிலே ஏறறேன், முத மாடியிலேந்து குதிக்கிறேன்; அப்படிப் பண்ணா அவர் யாருன்னு தெரியணும்" ன்னா, அப்படி நடக்குமா?

அதே போல பரப்பிரம்மம் பஞ்ச கோசங்களோட சீவனா வேஷம் போட்டு இருக்கு. அதை தெரிஞ்சுக்க அதைப்பத்திய ஞானம் வேணும். பிரம்மத்தோட விவரத்தை வேதம் முதலானவை சொல்கிறதை கேட்டு உள் வாங்கிக்கொண்டு விசாரித்து பாத்து புரிஞ்சுக்கணும்.

நாமார் நமக்கு பதியா ரெனவரு ஞானங்களே
மாமாயை கன்ம மலத்திரள் மாற்றிடும் ....
-வள்ளலார்
தன்னையறிவதறிவா மஃதன்றிப்
பின்னை யறிவது பேயறிவாமே....
தன்னை யறிந்து சிவனுடன் றானாக
மன்னு மலங்குண மாளும் பிறப்பும்....
தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை யறியா மற் றானே கெடுகின்றான்
-திருமந்திரம்


66.
வேட மாறிய பேர்களை யறியவே வேண்டினான் மகனேகேள்
கூட மாமவர் சுபாவங்கள் சீலங்கள் குறிகளாய்ந் தறியாமல்
ஓடி யுங்குதித் துந்தலை கீழ்நின்று முயர்ந்தகம் பத்தேறி
ஆடி யும்பல கருமங்கள் செய்யினு மவருண்மை தெரியாதே

வேடம் மாறிய பேர்களை அறியவே வேண்டினால், மகனே கேள். கூடமாமவர் (மறைந்திருக்கும் அவர்) சுபாவங்கள் சீலங்கள் (குணங்கள்) [அறி]குறிகள் ஆய்ந்து அறியாமல், ஓடியும் குதித்தும் தலை கீழ்நின்றும் உயர்ந்த கம்பத்து ஏறி ஆடியும் பல கருமங்கள் (செயல்கள்) செய்யினும் அவர் உண்மை தெரியாதே.
--
தன் உண்மை உருவை மாற்றி மாறு வேடம் கொண்ட ஒருவனைக் கண்டறிய வேண்டும் என்றால் மறைந்து இருக்கும் அவனது குணங்கள், ஒழுக்கங்கள், அடையாளங்கள் ஆகியவற்றை உற்று உணர்ந்து இவன் இன்னவன் என அறிய வேண்டும். அப்படி இல்லாது வெகு தூரம் ஓடுவதாலும், குதிப்பதாலும், தலை கீழ் நிற்பதாலும், உயர்ந்த கம்பத்தின் உச்சியில் ஏறி ஆடுவதாலும், இன்னும் இத்தகைய பல செய்வதாலும் வேடம் மாறி இருக்கும் அவன் உண்மையை கண்டறிய முடியாது.

67
திருஷ்டாந்தம்:
இன்ன வாறந்தப் பிரமத்தை யறிவிக்கு மிலக்கணத் தால்வேதம்
சொன்ன ஞானமும் விசாரத்தால் வருமன்றிச் சுருதிநூல் படித்தாலும்
அன்ன தானங்க டவங்கண் மந்திரங்களா சாரங்கள் யாகங்கள்
என்ன செய்யினுந் தன்னைத்தா னறிகின்ற திவைகளால் வாராதே

இன்னவாறு அந்தப் பிரமத்தை அறிவிக்கும் இலக்கணத்தால் வேதம் சொன்ன ஞானமும் விசாரத்தால் வரும். [இது] அன்றிச் சுருதி நூல் (வேதம்) படித்தாலும், அன்ன தானங்கள், தவங்கள், மந்திரங்கள், ஆசாரங்கள், யாகங்கள் என்ன செய்யினும் தன்னைத் தான் அறிகின்றது இவைகளால் வாராதே.
--
சச்சிதானந்த சொரூபமாகிய பரப்பிரம்மம் பஞ்ச கோசம் முதலானவற்றோடு கூடி சீவனாக மாறு வேடம் அணிந்து இருக்கிறது. அதை அறிய வேண்டினால் ஞானத்தை பெற வேண்டும். பிரமத்தை அதற்கு உரிய இலக்கணங்களால் அறிவிக்கும் வேதங்களால் சொல்லப்பட்ட அந்த ஞானம் விசாரத்தால் மட்டுமே வரும். பிற செயல்களால் வாராது.


Thursday, July 16, 2009

எதனால் ஞானம் உதிக்கும்?62.
அக் குற்றம் நீங்க உபாயம்:
ஒன்று கேண்மக னேபுமான் முயற்சியா லுறைத்துமா னுடர்க்கீசன்
நன்று செய்யவே காட்டிய நூல்வழி நடந்துநல் லவர்பின்னே சென்று
துட்டவா தனைவிட்டு விவேகியாய் செனித்தமா யையைத் தள்ளி
நின்று ஞானத்தை யடைந்தவர் பவங்கள்போம் நிச்சயமிதுதானே

ஒன்று கேண் மகனே! புமான் (மனிதன்) முயற்சியால் உறைத்து, மானுடர்க்கு ஈசன் நன்று செய்யவே காட்டிய நூல் வழி நடந்து நல்லவர் பின்னே சென்று, துட்ட வாதனை (வாசனை) விட்டு விவேகியாய், செனித்த மாயையைத் தள்ளி நின்று, ஞானத்தை அடைந்தவர் பவங்கள் போம். நிச்சயம் இதுதானே.
--
மனிதர்களுக்கு பிரம்மானந்த பேற்றை அளிக்கவே ஈஸ்வரன் வேதத்தை அருளியிருக்கிறார். யார் மோக்ஷம் அடைய வேண்டுமென்ற வைராக்கியத்தோடு முயன்று, வேதத்தில் கூறப்பட்ட வழியில் நடந்து, பிரம்ம நிஷ்டர்களாகிய பெரியோர்களின் சகவாசத்தில் இருந்து, காம குரோத முதலான மலின வாசனைகளை ஒழித்து சம, தம முதலான சாதனைகளை அடைந்து, நித்திய, அநித்திய விவேகம் உடையவர்களாய், அவிவேகத்தால் உண்டான மாயையாகிற பேத புத்தியை ஒழித்து ஓர் நிலையில் நின்று ஞானத்தை அடைகிறார்களோ அவர்கள் பிறப்பு இறப்பாகிய பவசாகரத்தைக் கடந்து முத்தியாகிய கரையை அடைவார்கள். இது நிச்சயம்.

"அது சரி! இப்படி பல படிகள் சொல்லறீங்களே! எதால ஞானம் உதிக்கும்?” என்கிறார் சீடன்.
"ஞானம் இடைவிடாத விசாரத்தாலதான் உதிக்கும்.”
"என்ன விசாரம்?"
விசாரம் என்கிறது என்ன ? "இந்த தேக இந்திரிய கரணங்களில் நான் என்று இருப்பது எது? இவற்றில் சித்தாக உள்ளது எது? இந்த சித்தும் ஜடமும் ஒன்றாகப் பொருந்தும் பந்தம் ஆவது எது? மோக்ஷம் என்பது என்ன?” இப்படி சதா ஆராய்ச்சி செய்தலே விசாரம்.

கெடாத சிற்கண்ணா னீதான் கிளர்மே லவர்க ளுடேதான்
விடாதிவ் வுலகே தியாமாரென் றுரைக்க மெல்ல விசாரிப்பாய்
தடாதுட் பொருடேர் வித்தைக்கு விசாரந் தானே தனிஞானம்
கடாவி யறியத் தக்கத்திற் காணும் பாலின் மதுரம்போல்
-வாசிட்டம்

63.
எதனால் ஞானம் உதிக்கும்?
இந்த ஞானத்தான் வருவதெப் படியெனி லிடைவிடா விசாரத்தால்
வந்த டைந்திடும் விசாரந்தா னேதெனின் மனாதியாஞ் சரீரத்தில்
இந்த நானெவன் சித்தெது சடமெது விரண்டுமொன் றாக்கூடும்
பந்தமேதுவீ டேதென வுசாவுதல் பகர்விசா ரமதாகும்

இந்த ஞானத்தான் வருவது எப்படி எனில், இடைவிடா விசாரத்தால் வந்தடைந்திடும். விசாரந்தான் ஏதெனில், மன ஆதியாம் (முதலான) சரீரத்தில் இந்த நான் எவன், சித்து எது, சடம் எது இரண்டும் ஒன்றாக்கூடும் பந்தம் ஏது, வீடு ஏது என உசாவுதல் பகர் (சொல்லப்பட்ட) விசாரம் அதாகும்.

ஏன் நிறைய நல்ல காரியங்கள் பண்ணா தானா ஞானம் வராதா என்ன?


Wednesday, July 15, 2009

பொதுவான கடவுள்னா ஏன் இப்படி பார பட்சம் காட்டறாரு?கடவுள் மறுப்பாளர்கள் முன் வைக்கிற இன்னொரு வாதம் - ஏன் ஏற்றத்தாழ்வு இருக்கு? எல்லாரும் ஒரே மாதிரி இருந்து இருக்கலாமே? ஏன் சிலர் பணக்காரங்க சிலர் அறிவாளி சிலர் பலசாலி மத்தவங்க அப்படி இல்லாம? சிலருக்கு எல்லாமே நல்லதா நடக்குது சிலருக்கு குட்டிக்கரணம் போட்டாலும் நடக்கலை. எல்லாருக்கும் பொதுவான கடவுள்னா ஏன் இப்படி பார பட்சம் காட்டறாரு?

முதலாவதா கடவுள் பாரபட்சம் காட்டலை. ஒரே அப்பா ஒழுங்கா படிச்சு நல்ல மார்க் வாங்கற பையனை தட்டிக்கொடுத்து பாராட்டுறார். சரியா படிக்காம ஊர் சுத்ததிட்டு குறைவா மார்க் வாங்கற பையனை திட்டறார் அடிக்கிறார். அது ஏன் அவருக்கு அதில சந்தோஷமா என்ன? கண்டிக்காட்டா பையன் இன்னும்தானே கெட்டுப்போவான்? அப்புறம் கஷ்டப்படுறது யாரு? அது போலதான் தர்மத்துப்படி நடந்துக்கிறவங்களுக்கு நல்லது செஞ்சு மத்தவங்களுக்கு தண்டனை தருவது இதுக்குத்தான். மக்களை நல்வழியிலே போக வைக்கத்தான். தண்டனை கொடுக்கிறதும் கருணையாலதான்.

இரண்டாவதா நெருப்பு எரியுது. யார் கிட்டே போய் உக்காந்துக்கிறாங்களோ அவங்களுக்கு குளிர் போகும். சுகமாயிருப்பாங்க. யார் கிட்டேயே வர மாட்டேன் என்கிறாங்களோ அவங்களுக்கு அதோட பயன் கிடைக்காது. இது நெருப்போட குத்தமா இல்லை பயன்படுத்தறவங்க குத்தமா? வெய்யில்லே காஞ்சுட்டு வந்த ஆசாமி குடத்தில இருக்கிற தண்ணியை குடிச்சாதான் தாகம் போகும். இல்லைனா தாகம் போகாது. அது தண்ணியோட குத்தமில்லை. அது போல ஆண்டவன்கிட்டே முறையிட்டா பலன் கிடைக்கும். இல்லாட்டா எப்படிக்கிடைக்கும்?

60.
ஈஸ்வர சிருட்டி பொதுவானால் அவரும் பொதுவாமே, அப்படியானால் பட்சபாதம் வருவானேன்? விடை:

நலமெய் யையனே யெல்லவர்க் குந்தெய்வ நாயகன் பொதுவானால்
சிலரை வாழ்வித்தல் சிலரொடு கோபித்தல் செய்வதே யேனென்றாயேல்
குலவு மக்களைத் தந்தை போற் சிட்டரைக் குளிர்ந்து துட்டரை காய்வன்
கலைக்கணல் வழி வரச்செய்யும் தண்டமுங் கருணையென் றறிவாயே

நலமெய் ஐயனே, எல்லவர்க்கும் (எல்லாருக்கும்) தெய்வ நாயகன் (ஈசன்) பொதுவானால் சிலரை [நன்கு] வாழ்வித்தல், சிலரொடு கோபித்தல் செய்வது (துன்பமடையச்செய்வது) ஏன் என்றாயேல், குலவு மக்களைத் தந்தை போல் சிட்டரைக் குளிர்ந்து (சாத்திரங்களில் செய்யச் சொல்லியவற்றை செய்து விலக்கச் சொல்லியவற்றை விலக்கி செய்யாது உள்ளோருக்கு இன்பத்தை அளிக்கிறான்) துட்டரை காய்வன். (விலக்கிய தீ நெறியில் செல்வோர்களை தண்டிப்பான்) கலைக் கணல் வழி (ஆன்மாக்கள் நல்ல வழியில்) வரச் செய்யும் தண்டமும் (தண்டனையும்) கருணை[யால் செய்வதே] என்று அறிவாயே.
--
தந்தை நன்னடத்தை உள்ள மகனை சீராட்டி, கெட்ட நடத்தை உள்ள மகனை தண்டிப்பது போல ஈசனும் செய்கிறான்.

61.
மற்றொரு விதமாக விடை:
மனை யிலங்கறு மைந்தனே கற்பக மரங்கனல் புனன் மூன்றும்
தனைய டைந்தவர் வறுமையுஞ் சீதமுந் தாகமுந் தவிர்த்தாளும்
அனைய வீசனு மடைந்தவர்க் கருள்செய்வ னகன்றவர்க் கருள்செய்யான்
இனைய குற்றங்க ளெவர் குற்றமாகு மென்றெண்ணிநீ யறிவாயே

மனையிலங்கு அரு மைந்தனே, கற்பக மரம், கனல் (தீ), புனல் (நீர்) மூன்றும் தனை (தம்மை) அடைந்தவர் வறுமையும், சீதமும் (குளிரும்) தாகமும் தவிர்த்து ஆளும். (காப்பாற்றும்) அனைய [அதுபோல்] ஈசனும் அடைந்தவர்க்கு (வழிபடுவோருக்கு) அருள் செய்வன். அகன்றவர்க்கு அருள் செய்யான். இனைய (இந்த) குற்றங்கள் எவர் குற்றமாகும் என்று எண்ணி நீ அறிவாயே.

"சரி, எனக்கு என்ன செய்யணும் ன்னு தெரியலையே!"ன்னா செய்ய வேண்டியது ஒண்ணுதான். ஈசன் கொடுத்து இருக்கிற சாஸ்திரங்கள், வேதம் முதலியதெல்லாம் என்ன செய்ய சொல்லி இருக்குன்னு பாத்து அது மாதிரி நடந்துக்கணும். இப்படி செய்து கொண்டு நல்லவங்க கூடவே பழகிகிட்டு கெட்ட வாசனைகளை விட்டுடணும். இது ஆன்ம முன்னேற்றத்துக்கு உதவும் - இது உதவாது என்கிற விவேகத்தோட சமம், தமம் முதலானதை பழகணும். இப்படியாக சாதனை செஞ்சு, மாயையை நீக்கி, ஞானத்தை அடைகிறவங்களோட பிறப்பு ஒழியும். இது சர்வ நிச்சயம் என்கிறார் தாண்டவராய சுவாமிகள்.

பொரு திடங்கொண்ட பொன்னி புரக்கும்
அருதிடங்கொண்ட மருத வாண
நின்னது குற்றம் உளதோ நின்னி நினைந்து
எண்ணருங் கோடி இடர் பகை களைந்து
கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா
இறப்பையும் பிறப்பையும் இகழ்ந்து சிறப்பொடு
தேவர் ஆவின் கன்றெனத் திரியாப்
பாவிகள் தமதே பாவம் யாதெனின்
முறியற் பெறுக்கள் முப்பழங் கலந்த
அறுசுவை அடிசில் அட்டினி திருப்பப்
புசியா தொருவன் பசியால் வருந்துதல்
அயினியின் குற்றமன்று வெயிலின் வைத்து
ஆற்றிய தெண்ணீர் நாற்றமிட்டு இருப்ப
மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை
தெண்ணீர் குற்றமன்று கண்ணகன்று
தேன்துளி சிதறிப் பூந்துணர் துறுமி
வாலுகங் கிடந்த சோலை கிடப்ப
வெள்ளிடை வெயிலில் புள்ளிவெயர் பொடிப்ப
வடிபெயர்த்திடுவான் ஒருவன்
நெடிது வருந்துதல் இழற்றீங்கு அன்றே.

குண்ட்ஸா புரியுது இல்லே? சாப்பாடு ரெடியா இருக்கிறப்ப பசியோட இருக்கிறவன் சாப்பிடலைனா அது என்ன பண்ணும்? தாகமா இருக்கிறவன் இருக்கிற வாசனையான தண்ணியை குடிக்கலைனா தண்ணி என்ன பண்ணும்? குளிர்ச்சியான சோலை இருக்க வெயில்லே நான் காயறேன்னா சோலை என்ன பண்ணும்?


Tuesday, July 14, 2009

சீவச்செயலை ஈஸ்வர செயலாகக் கூறுபவர்க்கு.....முண்டகோபனிஷத்திலே ஒரு அருமையான உதாரணம் வருது. ஒரு அரச மரத்திலே ரெண்டு பறவைகள். கீழ் கிளையில இருக்கிற ஒரு பறவை கிளைக்கு கிளை தாவி அங்க இருக்கிற பழங்களை எல்லாம் விரும்பி சாப்பிடும். மேல் கிளையில இருக்கிற மற்ற பறவை சாந்தமா சும்மா உக்காந்து இருக்கும். வேணும் வேணும் ன்னு ஆலாய் பறக்கிற பறவைதான் சீவன். அசங்காமல் இருக்கிறது ஈசன். சீவன் அஞ்ஞானத்தால சுக துக்கங்களை அனுபவிக்கிறான். சுத்த சத்வ மாயையான ஈசன் இப்படி சுக துக்கங்களால பாதிக்கப்படுகிறதில்லை.

யார் ஜீவனோட செயல்களை கண்டு பிடிச்சுக்கொண்டு அதை சரி செய்ய நினைக்கிறங்களோ அவங்க தன் அகங்காரம், கோபம், தாபங்களை ஒழிச்சு முக்தி அடைய வாய்ப்பு இருக்கு. யார் செய்கிறதை எல்லாம் செய்ஞ்சுகிட்டு எல்லாமே ஈசன் செயல்ன்னு சொல்லிகிட்டு பழியை அவர் மேலே போட்டுட்டு இருக்காங்களோ அவங்க தன்னை கொஞ்சம் கூட மாத்திக்கப்போறதில்லை. (இங்கே முழு சரணாகதி பத்தி பேசலை. விதண்டாவாதம் செய்கிறவங்களைப்பத்திதான் பேசறோம். முன்னே கூட இதே பதிவுகளிலே இதைப்பத்தி பேசி இருக்கோம்!)

59.
சீவச்செயலை ஈஸ்வர செயலாகக் கூறுபவர்க்கு சனன துன்பமும் சீவச்செயலாவே கூறுபவர்க்கு முத்தியின் பலமும் பயனாம்:

இந்தச் சீவனால் வருமரு பகையெலா மிவன்செய லென்னாமல்
அந்தத் தேவனால் வருமென்ற மூடர்க ளதோகெதி யடைவார்கள்
இந்தச் சீவனால் வருமறு பகையெலா மிவன் செயலல்லாமல்
அந்தத்தேவனா லன்றெனும் விவேகிகளமலவீ டடைவாரே

இந்தச் சீவனால் வரும் (நேரிடும்) அரு பகையெலாம் (இங்கு ஆசை, கோபம் முதலானவை) இவன் (சீவனின்) செயல் என்னாமல், அந்தத் தேவனால் வரும் என்ற மூடர்கள் அதோ கெதி அடைவார்கள். இந்தச் சீவனால் வரும் அறு பகையெலாம் (செயல்களெல்லாம்) இவன் செயல் அல்லாமல் அந்தத் தேவனால் அன்று எனும் விவேகிகள் அமல (குற்றமற்ற) வீடு (மோக்ஷம்) அடைவாரே.
---
காம குரோதம் முதலான தீய குணங்களை தன்னுடைய செயல்கள் அல்ல என நினைப்பவன் மேலும் மேலும் அவற்றை செய்து பெரும்பாவம் தேடிக்கொள்வான். அவை தன்னுடையன என்று அறிபவன் அவற்றால் ஏற்படும் தீய பலன்களுக்கு அஞ்சி அக்குணங்களை ஒழிக்க முயன்று ஞானத்தை பெற்று முத்தி அடைவான்.Monday, July 13, 2009

ஈஸ்வரனோட சிருஷ்டி வேறே; சீவனோட சிருஷ்டி வேறே...
ஈஸ்வரனோட சிருஷ்டி வேறே; சீவனோட சிருஷ்டி வேறே. உலகத்தில பொதுவா இருக்கிறது எல்லாமே ஈஸ்வரனோட சிருஷ்டி. நதிகள் அவன் சிருஷ்டி. மலைகள், கடல், பூமி, வானம், செடி கொடிகள்......
அதை எல்லாம் வைத்துக்கொண்டு மனிதன் செய்கிறது சீவ சிருஷ்டி.
நான், என்னுது, கோபம், தாபம், பொறாமை - இதெல்லாம் மனிதனோட சிருஷ்டி.

[ஒரு சன்னியாசி வித்தியாசமா இறைவன் பத்தி சொன்னார்.
சாமி இருக்கான்னு கேக்கிறியா? இருக்கார்.
அவர் யார் ன்னு கேக்கிறயா?
எதுவெல்லாம் உருவாக மனுஷன் பொறுப்பில்லையோ, அதை எல்லாம் உருவாக்கினவர்தான் சாமி!]

முக்கிய வித்தியாசம் என்னன்னா ஈசனோட சிருஷ்டிகள் மோக்ஷமடைய சாதனமா ஆகும். புண்ணிய தீர்த்தங்கள், மலைகள், விருட்சங்கள்.... இப்படி ஏராளமா இருக்கே.
இன்னுமொன்னு. ஈசனோட சிருஷ்டிகள் நாசம் ஆகிறதால யாருக்கும் பிறவி ஒழியாது. ஆனா மனித சிருஷ்டியான நான், என்னது என்கிறதெல்லாம் ஒழிஞ்சா பிறவி ஒழியும்.
பிரலய காலத்திலே ஈச சிருஷ்டிகள் எல்லாம் ஒழியும். அப்பவும் பிறவி ஒழியாது. மெழுகு உருண்டையில தங்க தூள் போல ஜீவாத்தமா எல்லாமே சரியான நேரத்துக்காக காத்து இருந்து திருப்பி பிறவி எடுக்கும்.
ஆனா தேசம், காலம், தேகம் எல்லாம் இருக்கிறப்பவே ஆசை, கோபம், அகங்காரம் ஒழிச்சவங்க உயிரோட ஜீவன் முக்தர்களா இந்த உலகத்திலேயே ஞானத்தோட இருக்காங்க.

ஈஸ்வர சிருஷ்டி பொது; சீவன் அதில வேறுபாட்டை உருவாக்கறான் என்பதுக்கு உதாரணம் பாக்கலாம். ஈசன் ஒரு பெண்ணை படைக்கிறான். பொதுவா எல்லா பெண்களும் ஒரே தேக அமைப்போடதான் இருக்காங்க. ஆனா மனித பார்வையிலே ஒத்தர் அழகு ஒத்தர் கோரம்... இதே பெண் ஒத்தருக்கு பெண்; ஒத்தருக்கு மனைவி; ஒத்தருக்கு அம்மா; சகோதரி, நாட்டுப்பெண், பாட்டி..... இப்படி வித்தியாசங்களை உருவாக்குகிறது மனிதனோட கற்பனைதான்.

ஈச சிருஷ்டியை சீரழிச்சு மனுஷன் இயற்கையை திட்டுகிறதையும் பாத்துகிட்டுதானே இருக்கோம்.

55.
திகழ்ந்த வீசனார் சிருட்டியுஞ் சீவனார் சிருட்டியும் வெவ்வேறே
சகந்த னிற்பொது வீசனார் சிருட்டிகள் சராசரப் பொருளெல்லாம்
அகந்தை யாமபி மானங்கள் கோபங்க ளாசைக ளிவையெல்லாம்
இகழ்ந்த சீவனார் சிருட்டிக ளாகுங்கா ணீசனார் செயலன்றே

திகழ்ந்த ஈசனார் சிருட்டியும் சீவனார் சிருட்டியும் வெவ்வேறே. ஈசனார் சிருட்டிகள்- சகந்தனில் பொது - சராசரப் பொருளெல்லாம். அகந்தையாம் (என் என்ற) அபிமானங்கள், கோபங்கள், ஆசைகள் இவையெல்லாம் இகழ்ந்த சீவனார் சிருட்டிகள் ஆகும் காண். ஈசனார் செயல் அன்றே.
--

56.
மூவராம்பரன் சிருட்டிக ளுயிர்களுக்கெல்லா முத்திசா தனமாகும்
சீவ னார்செயுஞ் சிருட்டிக டங்களைச் செனிப்பிக்கும் பிணியாகும்
தாவ ராதிக ணசித்திடி லொருவர்க்குஞ் சனனங்க ணசியாவாங்
கோப மாதிக ணசித்திடிற் பந்தமாங் கொடும் பிற விகள்போமே

மூவராம் பரன் சிருட்டிகள் உயிர்களுக்கெல்லாம் முத்தி சாதனமாகும். சீவனார் செயும் சிருட்டிகள் தங்களைச் செனிப்பிக்கும் பிணியாகும். தாவராதிகள் நசித்திடில் ஒருவர்க்கும் சனனங்கள் நசியாவாம். கோபமாதிகள் நசித்திடில் பந்தமாம் கொடும் பிறவிகள் போமே.
--
ஈசனது சிருட்டிகள் மோக்ஷத்துக்கு சாதனமாகும். சீவர்களின் சிருட்டிகள் பிறவி அளிக்கும் பந்தங்களாம். ஈசன் சிருட்டித்த தாவரம் முதலியவை அழிந்தால் ஒருவருக்கும் ஜனனம் ஒழியாது.

57.
ஈசர் காரியம் பிரளயத் தொழியவு மெவர்பவ மொழிந்தார்கள்
தேச காலதே காதிக ளிருக்கவுஞ் சீவகா ரியமோகம்
நாச மாக்கிய விவேகத்தி னுயிரொடு ஞானமுத் தர்களானார்
பாச மோகங்கள் பசுக்களின் செயலன்றிப் பசுபதி செயலன்றே

ஈசர் காரியம் பிரளயத்து ஒழியவும் எவர் பவம் (உலகம்) ஒழிந்தார்கள்? தேச கால தேகாதிகள் இருக்கவும் சீவகாரிய மோகம் நாசமாக்கிய விவேகத்தின் உயிரொடு ஞான முத்தர்களானார். பாச மோகங்கள் பசுக்களின் செயலன்றிப் பசுபதி செயலன்றே.
--
பிரளய காலத்தில் ஈசன் சிருட்டித்த அனைத்தும் அழிகின்றன. அப்படியும் யாருக்கும் ஜனன நாசம் ஏற்படுவதில்லை. கோபம் அகங்காரம் ஆசை ஆகிய ஜீவ சிருஷ்டிகள் ஒழிந்தால் ஜனன நாசம் ஏற்படும்.


Friday, July 10, 2009

நான் செய்வதற்கு நான் பொறுப்பில்லை!பிரகாசமான ரெண்டு கண்கள்! ஆனா பார்வை எங்கே போகிறதுன்னு விஷயம் இருக்கு இல்லையா? எங்கேயோ பராக்கு பாத்துண்டு போனா ஏதாவது படுகுழி வழில வந்தா விழத்தான் விழுவாங்க.
அதனால எல்லாத்திலேயும் மெய்ப்பொருளையே பாக்கிற உள் முக பார்வை இருக்கிறவங்களுக்கு நித்தியமான பிரம்மானந்த பதவி கிடைக்கும். சுவர்கத்தை விரும்பிக்கொண்டு இருக்கிறவங்க (ஆசைகள் நிறைய இருக்கிறவங்க ) என்ன படிச்சா என்ன, இந்த பிறவிக்கடலிலே விழுந்துகொண்டுதான் இருப்பாங்க. முக்தி அடைய மாட்டாங்க!


53.
விடை:
அழிவி லாததற் பதந்தனை மைந்தனே யகமுகத் தவர் சேர்வர்
வழிந டப்பவர் பராமுக மாயினான் மலர்ந்தகண் ணிருந்தாலும்
குழியில் வீழ்வர்கா ணப்படி வெளி முகங்கொண்டுகா மிகளானோர்
பழித ரும்பிற விக்கட லழுந்துவர் பரகதி யடையாரே

அழிவிலாத தத் பதந்தனை மைந்தனே, அக முகத்தவர் சேர்வர். வழி நடப்பவர் பராமுக மாயினான் மலர்ந்த (திறந்த) கண் இருந்தாலும் குழியில் வீழ்வர் காண். அப்படி வெளி முகம் கொண்டு காமிகளானோர் பழி தரும் பிறவிக் கடலழுந்துவர் பரகதியடையாரே.
--
வழியில் செல்பவர் கண்கள் திறந்து இருந்தாலும் பார்க்காது சென்றால் குழியில் விழுவார்கள் அல்லவா? அதுபோல வெளிமுகப்பார்வை கொண்ட சுவர்க காமிகள் கருவி நூல்கள் பல கற்றாலும் பிறவிக்கடலில் அழுந்துவார்களே அன்றி முத்தியடையார். எல்லாவற்றிலும் மெய்ப்பொருளை காணும் அகமுக பார்வை உடையவர் நித்திய பிரம்மாநந்த பதவி அடைவர்.

பல சமயங்களிலே சிலர் ஒரு வாதத்தை முன் வைக்கிறாங்க.
நீதான் எல்லாம் அவன் செயல்ன்னு சொல்கிறாயே! அப்ப நான் செய்கிறது எதுவுமே நான் செய்கிறது இல்லையே! நல்லதோ, கெட்டதோ எல்லாம் அவன் செய்விக்கிறது. நான் நினைச்சாலும் எதுவும் செய்ய எனக்கு சுதந்திரம் இல்லையே! அப்ப நான் என்ன செஞ்சாலும் என் மேலே குற்றம் சொல்லக்கூடாது.
மேலோட்டமா பாத்தா நல்ல ஆர்குமெண்ட் தான்.
அப்படி இல்லை.


54.
சீவச் செயலிவை சிவச்செயலிவை எனத் தெளியும் நிமித்தம் வினவுதலுக்கு விடை:

சிறந்த நன்மையுந் தீமையு மீசனார் செய்விக்குஞ் செயலன்றோ
பிறந்த சீவர்க ளென்செய்வா ரவர்கண் மேற்பிழைசொலும் வழியேதோ
துறந்த தேசிக மூர்த்தியே யென்றிடிற் சுருதிநூற் பொருண் மார்க்கம்
மறந்த மூடர்கள் வசனிக்கும் பிராந்திகாண் மைந்தனே யதுகேளாய்

சிறந்த நன்மையும் தீமையும் ஈசனார் செய்விக்கும் செயலன்றோ? பிறந்த சீவர்கள் என் செய்வார்? அவர் கண் மேற் பிழை சொலும் வழி ஏதோ? துறந்த தேசிக மூர்த்தியே என்றிடில், சுருதி நூற் (வேதநூல்)[இன்] பொருள், மார்க்கம் (வழி) மறந்த மூடர்கள் வசனிக்கும் (சொல்லும்) பிராந்தி (மயக்கம்) காண். மைந்தனே அது கேளாய்.


Thursday, July 9, 2009

காக்கைக்கு தக்க கணைஎப்பவும் நல்ல குரு சீடனோட தராதரத்தை அறிஞ்சு கொண்டே செய்ய வேண்டியதை சொல்லுவார்; உபதேசம் செய்வார். ஒத்தரால முடியாததை செய் ன்னு சொல்கிறதுல என்ன பிரயோசனம்?

சீடனறி வெவ்வளவோ வவ்வளவுஞ் சிந்தித்துக்
கூறுமுப தேசங்கள் கூறுவா-னீடுபுக
மூக்கமுடைச் சீராம னெண்ணுதற்கா யன்றெய்தான்
காக்கைக்கு தக்க கணை
(ஞான விளக்கம்- வள்ளலார்)
சீடன் அறிவு எவ்வளவோ அவ்வளவும் சிந்தித்துக் கூறும் உப தேசங்கள் கூறுவான் - ஈடு புகம் ஊக்கமுடைச் சீராமன் எண்ணுதற்கா அன்று எய்தான் காக்கைக்கு தக்க கணை.

(இந்த காக்கைக்கு தக்க கணை பத்தி பின்னூட்டம் வரும்ன்னு எதிர்பார்க்கிறேன்! :-)மந்த அதிகாரிகளுக்கே சரியை கிரியை எல்லாம் சொல்லி இருக்காங்க. அதாவது முக்காலே மூணு வீசமான நமக்குத்தான். அதனால ஞானத்தை உபதேசிக்கிற இடத்திலே இதை எல்லாம் தாழ்த்தியேதான் சொல்லி இருக்கும்.

தலையெலாந் தெய்வமென்னுந் தன்னை மற்றேனை
யிடையெல்லாம் வேறிருக்கு மென்னுங்-கடையெல்லா
மரத்தைபா டாணத்தை மண்ணையிருஞ் செம்பைக்
கருத்துருகத் தெய்வமெனுங் காண்

உத்தமங்க ளெல்லா முணர்வையே தாம்பேணும்
மத்திமங்க ளேபதுமை யைவாழ்த்துஞ்-சுத்த
அதமங்க ளெல்லாந்தன் னாகத்தைப் போற்று
நதியோடை கூபமென நாடு

தத்துவத்துக்கப்பாலே தன்னை தரிசித்து
நித்த பரி பூரணத்தினில்லாமல்-சுத்த
பனிமாயை யாற்செய் பதுமையினைத் தேடு
நனிமா னிடமிருக நாடு
(ஞான விளக்கம்- வள்ளலார்)

(தமிழ் அறிஞர்கள் யாரென்னும் இந்த் அபாடல்களுக்கு இன்னும் விளக்கம் தரலாம்!)
இதனால கிரியை, சரியை, விக்கிரஹ ஆராதனை எல்லாம் தேவை இல்லைன்னு இல்லை. அவரவருக்கு தகுந்தபடி...
மொட்டை மாடிக்கு போய்விட்டவனுக்கு மேலே போக படிகள் வேணாம். கீழ் மாடிகளிலே இருக்கிறவனுக்கு அது நிச்சயம் வேணும்தான்!
--
நிறைய அறிஞர்களை பாக்கலாம். பல நூல்களை எல்லாம் கரைச்சு குடிச்சு இருப்பாங்க. ஞான சம்பந்தமான நூல்களைக்கூடத்தான். அது குறிச்சு மணிக்கணக்கிலே விவாதம் செய்ய தயாரா இருப்பாங்க. சமயத்திலே சூடு பறக்கற விவாதங்கள் கூட நடக்கும். (பொன்னியின் செல்வன் ஆழ்வார்க்கடியான் ஞாபகத்துக்கு வரார்!) சரி அவ்வளொ தெரிஞ்சு இருக்கு இல்லே? அப்பக்கூட ஞான வழியிலே போகாம கர்ம படுகுழியிலே ஏன் விழறாங்க?

இந்த தியரிக்கும் நடைமுறைக்கும் ரொம்ப தூரம் என்கிற விஷயம் அடிக்கடி பாக்கலாம் வாழ்க்கையிலே! அன்பின் அவசியத்தைப்பத்தி மணிக்கணக்கிலே பேசிட்டு மத்தவங்க மேலே எரிஞ்சு விழுகிறவர்களை பாத்துதானே இருக்கோம்!

52.
அறிஞர்களும் ஆனந்தம் தரும் அத்வைத ஞானத்தை விட்டு கர்மம் செய்து துன்புறுதல் ஏன்?

என்ம னந்திருக்கோவிலாத் தினங்குடி யிருந்தருள் குருமூர்த்தி
சென்ம சஞ்சித வினைகள்வே ரறுத்திடும் தேவரீர் மெஞ்ஞானம்
தன்ம யந்தரு மகிமையை விபுதராஞ் சமர்த்தரு மறியாமல்
கன்ம மாங்குழி யினில்விழுந் தழிகின்ற காரணமுரையீரே

என் மனந்திருக்கோவிலாத் தினம் குடி இருந்து அருள் குருமூர்த்தி, சென்ம சஞ்சித வினைகள் வேரறுத்திடும் தேவரீர், மெஞ்ஞானம் [ஆனது] தன்மயம் (மோக்ஷம்) தரும் மகிமையை விபுதராம் சமர்த்தரும் (கற்று தெரிந்து கொண்ட பெரும் அறிஞர்களும்) அறியாமல் (அதை அடைந்து உய்யாமல்) கன்மமாம் (கர்மமாம்) [படு] குழியினில் விழுந்து அழிகின்ற காரணம் உரையீரே. (கூறுங்கள்)


Wednesday, July 8, 2009

ஆன்மீக அன்பு என்கிறது.....கவிநயா! ரொம்ப யோசிக்க வெச்சுட்டீங்க!
http://kavinaya.blogspot.com/2009/07/blog-post.html
உங்களை மாதிரியே உரத்த சிந்தனைதான் இதுவும்.

அன்பு என்கிறது unqualified love என்கிறது சரிதான். ஆனா இதோட முழு பரிணமமும் நாம புரிஞ்சுக்கிறோமா என்கிறது கேள்விக்குறியே.
இதிலே "திருப்பி எதுவும் எதிர்பாராமல்" என்கிறதிலேயே நாம் கவனம் செலுத்தறோமோ? அப்படி பாக்கிறதிலே இதன் முழு வீச்சு காணாமல் போயிடுது.
இதை முன் பின்னா பாக்கலாம். அப்ப சரியா புரியுதான்னு. அன்பிலேந்து ஆன்மீகம் போகாம, ஆன்மீகத்திலேந்து அன்புக்கு வரலாம்.
ஆன்மீக பார்வையிலே அன்பு என்ன?
நல்ல பக்தன் யார் மேலே அன்பு வெச்சு இருக்கான்? பகவான் மேலே என்கிறது சரிதான். ஆனா அவன் பகவானை எங்கே பார்க்கிறான்? எல்லாத்திலேயும் பார்க்கிறான். நாயிலும் நாயை தின்னும் புலையனிலும் கூட பார்க்கிறான். ஞானியிலும் பார்க்கிறான். இப்படி அவன் பார்வையிலே எல்லாமே பகவத் சொரூபமா இருக்கிறதாலே எல்லாத்துகிட்டேயும் அவனுக்கு அன்பு பொங்கி வருது! இப்படி இல்லாதவன் இன்னும் பக்தி என்கிற பாதையிலே முன்னேறனும். அவன் பாதையிலேதான் இருக்கான்.

மனித நேயம்ன்னு புதுசா வார்த்தை கண்டுபிடிச்சதா நினைக்கிறவங்க நாம அதையும் தாண்டிட்டோம் பிரபஞ்ச நேயத்துக்கு போயாச்சு ன்னு புரிஞ்சுக்கணும்.

ஞானி யார் மேலே அன்பு வைக்கிறான்? அவன் தன் மேலேயே அன்பு வைக்கிறான். அதே சமயம் ஞானிக்கு தானே எல்லாம்ன்னு புரிஞ்சு இருக்கு. அதனால அவன் எல்லாத்து மேலேயும் அன்பு வைக்கிறான்.

மேலே சொன்ன ரெண்டு அன்பிலேயும் அளவு மாறாது. எல்லாத்துகிட்டேயும் சமமாகவே இருக்கும். சில நேரத்திலே அதிகம் - சில நேரம் குறைவுன்னு கிடையாது.

நிகழ் காலத்திலே ஒத்தர்கிட்டே அன்பு பாராட்டறது கொஞ்சம் சுலபம்தான். ஆனால் எப்போ கடந்த காலமும் எதிர் காலமும் வருதோ அப்ப அன்பு பாராட்டறது கொஞ்சம் சிரமம்தான். இவன் எனக்கு 5 வருஷம் முன்னே என்ன தீங்கு பண்ணான் ன்னு நினைப்பு வந்தா எங்கே அன்பு வைக்கிறது? எதிர் காலத்திலே இவன் நம்மை கவனிச்சுக்குவானோ இல்லையோன்னு நினைச்சா எங்கே அன்பு வைக்கிறது?
தேர்ந்த பக்தன்கிட்டேயும் ஞானிகிட்டேயும் இதிலே பிரச்சினை இல்லை. அவங்க எப்பவுமே நிகழ்காலத்திலேதான் இருக்காங்க!

அப்ப எல்லாத்துக்கிட்டேயும் எப்பவும் அன்பு காட்டுவதே ஆன்மீகத்திலே அன்பு. எப்ப இது ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளே வருமோ அப்ப இது ஆன்மீக அன்பில்லை. உடனடியா இந்த ஸ்டேஜுக்கு போக முடியாதுதான். நம் அன்பு காட்டுகிற வட்டம் கொஞ்சம் கொஞ்சமா விரிஞ்சுகிட்டே போகணும். நாம் நம் குடும்பம், நம்ம ஊர், நம்ம தேசம், இப்படி விரிஞ்சு அப்புறம் மனித இனம் மட்டுமில்லாம, மத்த செடி கொடிகள் - இங்கே கூட போயிடலாம்- எல்லா ஜீவ ராசிகள் ன்னு விரியனும். வீட்டு செல்ல பிராணிகளான பூனை ஆனை மேலே அன்புன்னு மட்டும் இல்லே! மத்தபடி கொசு? பூரான்? தேள், பாம்பு? இதை எல்லாம் பிடிச்சு கொஞ்ச வேணாம்; கொல்லாம இருக்கோமா? கொசு மருந்து அடிச்சு அவற்றை கொல்லாம இருக்கோமா? எறும்பு மருந்து அடிச்சு அதை எல்லாம் அழிக்காம இருக்கோமா? சிலந்தி வலை கட்டினா திருப்பி வராம இருக்கணும்ன்னு வாக்குவம் க்ளீன் பண்ணாம இருக்கோமா? ஏன் அதுக்கெல்லாம் இந்த உலகத்திலே வாழ ரைட் இல்லையா? இப்படி எல்லாம் யோசனை பண்ணா நாம் அன்பு காட்டுவதிலே எவ்வளவு முன்னேறி இருக்கோம்ன்னு புரிஞ்சு போயிடும்!


(இது முன் பதிவின் தொடர்ச்சி)50.
அதற்கு விடை
சீவ பேதங்க ளளவிலை மைந்தனே செய்கையு மளவில்லை
ஆவ வாமவ ரவரதி காரங்க ளறிந்துபக் குவநோக்கிப்
பூவ லர்ந்துபின் பலங்கள் காட் டுவனபோற் பூருவஞ் சித்தாந்தம்
காவல் வேதங்க ளிரண்டையும் வசனிக்குங் காண்டமூ வகையாலே

(கர்ம பேதத்தால்) சீவ பேதங்கள் அளவிலை மைந்தனே, செய்கையும் அளவில்லை. [ஆகையால்] ஆவவாம் (அவைகளால் ஆவன ஆகும்) அவரவர் அதிகாரங்கள் அறிந்து பக்குவம் (பருவத்தை) நோக்கிப் பூ அலர்ந்து பின் பழங்கள் காட்டுவன போல் பூருவம் (பூர்வம்) சித்தாந்தம் காவல் (காக்கும்) வேதங்கள் இரண்டையும் வசனிக்கும் (சொல்லும்), காண்டம் மூவகையாலே (கர்ம உபாசனை ஞான காண்டங்களாலே)

அந்தக்கரணங்கள் பலவாகியதால் சீவ பேதங்களும் பலவாகும். அந்தக்கரணங்களின் சுபம் அசுபம் சுபாசுபம் என்ற இந்த பேதங்களின் படி சீவன்களின் செய்கைகளும் அளவிலாதன. இவற்றால் சீவர்களிடையே அதிகாரி பேதம் உண்டு. இதனால் ஒரு மரத்தில் எப்படி முதலில் மொக்கு தோன்றி பின் பூவாகி காயாகி பழமாகுமோ அப்படி வேதமும் அதிகாரிகளுக்கு தக்கப்படி கர்மகாண்டம், உபாசனை காண்டம், ஞானகாண்டம் என்ற 3 வித காண்டங்களாலே பூர்வ பட்சம் சித்தாந்தம் ஆகியவற்றை கூறும்.

51.
ஆன பாவிக ளடைவன நரகங்க ளவசிய மானாலும்
தான் மந்திர விரதவோ மங்களாற் றவிருமென் பதுபொய்யோ
ஈன மாம்பல சன்மசஞ் சிதவினை யெத்தனை யானாலும்
ஞான மாங்கனல் சுடுமென்ற மறைமொழி நம்பினால் வீடுண்டே

ஆன பாவிகள் அடைவன நரகங்கள் அவசியமானாலும், தான் [செய்யும்] மந்திர விரத ஹோமங்களால் தவிரும் என்பது பொய்யோ? ஈனமாம் பல சன்ம சஞ்சித வினை எத்தனை ஆனாலும் ஞானமாம் கனல் சுடும் என்ற மறைமொழி நம்பினால் வீடுண்டே.

பாப கர்மங்களை செய்வோர் அடையும் நரகங்கள் நிச்சயம் உளதாயினும் தானம், விரதம், யக்ஞம் முதலிய பிராயச்சித்தங்களால் பாபம் ஒழிந்து போகும் என சாத்திரங்கள் சொல்வது பொய்யல்ல. அதுபோலவே அனேக ஜன்மங்களை உண்டாக்கக்கூடிய சஞ்சித கர்மங்கள் எவ்வளவு அதிகமாயினும் ஞானமாகிய தீ அவற்றை சுட்டு எரிக்கும் என்ற வேத வாக்கியத்தை நம்பினால் மோக்ஷமடைவது சத்தியமே.

கர்மத்தை அனுபவித்தே தீர வேண்டும் என்றும் பிராயச்சித்தங்களால் நீக்கிக் கொள்ளலாம் என்றும் கர்ம காண்டம் சொல்வது மந்த அதிகாரிகளுக்கு. சஞ்சித கர்மத்தை ஞானாக்னி சுடும் என்று ஞான காண்டம் சொல்வது தீவிர அதிகாரிகளுக்கு. உபதேசங்கள் அதிகாரி பேதம் அறிந்து சொல்லப்பட வேண்டியன. வேதம் எல்லா அதிகாரிகளுக்கும் உபதேசம் சொல்வதால் ஞான காண்டத்தில் உள்ள சில கர்மகாண்டத்தில் சொல்லப்பட்டவைக்கு முரணாக தோன்றும். எது எங்கு யாருக்கு சொல்லப்பட்டது என அறிந்து உணர வேண்டும்.


Tuesday, July 7, 2009

ஞானத்தீயாலே பாபங்கள் அழியுமா?
சாத்திரங்கள் எப்பவும் உண்மையைதானே சொல்லும்? ஒத்தர் செஞ்ச கர்மாவெல்லாம் அனுபவிச்சே தீரணும்ன்னு சொல்லி இருக்கே! இல்லாட்டா ஒழியாதாமே! அப்புறமா மறுபடி பல ஜன்மங்களிலே செஞ்ச பாபம் எல்லாம் ஞானத்தீயால சுட்டு எரிக்கப்படும்ன்னு சொல்லி இருக்கு. இந்த ரெண்டிலே எது உண்மை?

49
கிரம சிருஷ்டியான சீவ ஈஸ்வர ஜகத்தைப் பற்றிய விவரங்கள் அறிஞனது பிராரத்துவம் என அறிந்து சீடன், அதற்கு வித்தாக உபகற்ப சிருட்டியால் அமைந்து கிடங்கும் சஞ்சிதத்தை அழிக்கும் பொருட்டு அது நசிக்குமென சுருதியில் கூறிய இரண்டு வகையில் எது உண்மை என வினாவுதல்:

கைத வங்களைச் சாத்திரஞ் சொல்லுமோ கருணையா லெனையாளும்
ஐய னேகுரு வேயெவரா கிலுமநுபவித் தாலன்றிச்
செய்த கர்மங்கள் விடாவென்ற வசனமுஞ் சென்மசஞ் சிதம்வேவத்
துய்ய ஞானத்தீ ச்சுடுமென்ற வசனமுந் துணிவதெப் படிநானே

கைதவங்களை(பொய்களை) சாத்திரஞ் சொல்லுமோ? கருணையால் எனை ஆளும் ஐயனே! குருவே! எவராகிலும் அநுபவித்தால் அன்றிச் செய்த கர்மங்கள் விடா என்ற வசனமும், சென்ம சஞ்சிதம் வேவ (வேக) துய்ய (மேலான) ஞானத்தீ சுடும் என்ற வசனமும் துணிவது (நிர்ணயிப்பது) எப்படி நானே?
~~
சாத்திரங்கள் பொய் சொல்லா அல்லவா? ஆனால் "எவராகிலும் அநுபவித்தால் அன்றிச் செய்த கர்மங்கள் விடா" என்று சொல்லிய பின், பிறப்பு முதல் வரும் சஞ்சித கர்மாவை மேலான ஞானத்தீ நீக்கும் என்பது எவ்வாறு?

அந்தக்கரணங்கள் பலதா இருக்கு. அதனால ஜீவன்களும் பலதா இருக்கு. இந்த அந்தக்கரணங்களோட செய்கைகளும் பலவிதமா இருக்கு. அதையெல்லாம் வகைப்படுத்தலாம். சிலது நல்ல காரியங்கள். அதிலே சந்தேகமே இருக்காது. அதே போல சிலது கெட்ட காரியங்கள். பல காரியங்களில நல்லதும் கெட்டது கலந்து இருக்கும். அது சிலருக்கு நல்லதாவும் சிலருக்கு கெட்டதாவும் இருக்கலாம். இல்லை ஒத்தருக்கே கலப்பட பலனை தரலாம்.இதைப்போல ஜீவன்களோட செய்கைகளும் அளவில்லாதவை.

எப்படி ஒரு மரத்திலே மொக்கு தோன்றி பூவாகி, பிஞ்சாகி, காயாகி, பழமாகுமோ அது போல வேதமும் அதிகாரிக்கு தகுந்த படி கர்ம காண்டம், உபாசனை காண்டம், ஞான காண்டம்ன்னு மூணு வித காண்டங்களாலே பூர்வ பட்சத்தையும் சித்தாந்தத்தையும் சொல்லும். பாபம் செய்யறவங்க அடைகிற நரகங்கள் நிச்சயமா இருக்குன்னு சொல்கிற சாத்திரங்களேதான் அதுக்கெல்லாம் போக்க/குறைக்க தானம், மந்திரம், விரதம், யக்ஞம் ன்னு பிராயச்சித்தங்கள் இருக்குன்னு சொல்லும். அது போலத்தான் முதல்லே பாபம் புண்ணியம் எல்லாம் அனுபவிச்சு தீரணும்ன்னு சொன்னாலும் அப்புறமா பிராரத்த கர்மா தவிர மத்தது எல்லாம் ஞானத்தீயாலே ஒழியும்ன்னு சொல்கிறது சத்தியம்.

ஏன் அப்படி சொல்கிறீங்கன்னா,
முதலிலே செஞ்ச கர்மத்தை அனுபவிச்சே தீரணும்ன்னு சொன்னது கர்ம காண்டத்திலே. இது சாதாரணமான நமக்கு சொன்னது. ஞான காண்டத்திலே ஞானத்தீயாலே பாபங்கள் அழியும்ன்னு சொன்னது தீவிர சாதகர்களுக்கு.
இப்படி உபதேசம் எப்பவும் அதிகாரி பேதத்தை அறிஞ்சு கொண்டு செய்ய வேண்டியது.

Monday, July 6, 2009

ஞானிகளுக்கு எதுக்கு சித்திகள்?47
சித்திகளால் பயனில்லை என தெரிந்தும் ஏன் சில ஞானிகள் அதை விரும்பி வருத்தமுற்றார்கள்?

யோக ஞானமே முத்தியைத் தருமெனி லொழிந்த சித்திகள் வேண்டி
மோக மாயுடல் வருந்தினார் சிலசில முத்தர்களேனென்றால்
போக மாய்வரும் பிராரத்த கர்மங்கள் புசித்தன்றோ நசித்தேகும்
ஆகை யாலந்தச் சித்திகள் பிராரத்தமாகுமென் றறிவாயே

யோக ஞானமே முத்தியைத் தரும் எனில் ஒழிந்த சித்திகள் வேண்டி மோகமாய் உடல் வருந்தினார் சிலசில முத்தர்கள். ஏனென்றால் போகமாய் வரும் பிராரத்த கர்மங்கள் புசித்து அன்றோ நசித்து ஏகும்? ஆகையால் அந்தச் சித்திகள் பிராரத்தமாகும் என்று அறிவாயே.

பரமான்ம ஐக்கியத்தை தர ஞானமே மோக்ஷத்தை தரும்ன்னா சில முத்தர்கள் ஏன் சித்திகள் அடைய வேண்டி அதுக்காக தவம் செய்து வருத்தினாங்கன்னா அவரவர் பிராரத்த கருமத்தை அனுபவித்தே தீர்க்க வேண்டும் இல்லையா? அதனால அவர்கள் பிராரத்த கர்மாவால தூண்டப்பட்டு சித்திகள் அடைஞ்சாங்க. ஞானிகளுக்கு அதுகளாலே என்ன பிரயோசனம் இருக்கும்? ஒண்ணுமில்லை. இருந்தாலும் சித்திகள் பெற்றவங்க போகிற போக்கிலே சிலருக்கு இந்த சித்திகளால சில நல்லது செஞ்சுட்டு போவாங்க.

[அட்டமா சித்திகளும் அனைத்துள்ள பேறுகளும்- கட்டமாங் கதிகள் தரும் பரகதி காணக்கொடா - தேவிகாலோத்தரம்.]

ஐயா குருவே நிறைய விஷயங்களை தெளிவாக்கினீங்க! நிறைய மயக்கங்கள் நீக்கிட்டீங்க. கண்ணாடியை எவ்வளோ துடைச்சாலும் தப்பில்லையே! இன்னும் கேள்வி கேட்டு தெளிவாக்கிண்டாலும் தப்பில்லையே! இதே மாதிரி இன்னும் நிறைய கேக்க விரும்பறேன்.

48.
இலக்க மாயிரஞ் சுருதியா லூகத்தா லென்மன மசையாமல்
பெலக்க வேண்டுமென் றருள்குரு வேயகப் பிராந்தி போய்த் தெளிவானேன்
துலக்க மான கண்ணாடியை யடிக்கடி துலக்கினாற் பழுதன்றே
அலக்கண் மாற்றிய தேவரீ ரெனக்குரை யமிர்தங்க டெவிட்டாவே

இலக்கம் ஆயிரம் சுருதியால், (சுருதி பிரமாணங்களாலும்) ஊகத்தால், (யுக்தி அனுபவத்தாலும்) என் மனம் அசையாமல் பெலக்க (திடமாக அழுந்த) வேண்டுமென்று அருளும் குருவே, அகப் பிராந்தி* (அந்தக்கரணத்தில் இருந்த மயக்கம்) போய்த் தெளிவானேன். துலக்கமான (தெளிவான) கண்ணாடியை அடிக்கடி துலக்கினால் (துடைத்தால்) பழுது அன்றே. (தவறில்லையே) அலக்கண் மாற்றிய (மனம் ஞான நிலையினின்று சலியாதபடி ஆக்கிய) தேவரீர் எனக்கு உரை[க்கும்] அமிர்தங்கள் தெவிட்டாவே.

"நிறைய மயக்கங்கள்" அப்படின்னு சொன்னாரில்லே சீடன்?
அதையெல்லாம் வகைப்படுத்தி இருக்காங்க.

*= அஞ்ஞான தசையில் உள்ளோருக்கு அகப் பிராந்தி ஐந்து.

1. இது நித்தியம் இது அநித்தியம் என ஆராயாது இவ்வுலகம் நித்தியம் என நினைத்தல்.
2. கருவிக்கரணங்களை பிரித்து தனக்கு அன்னியமாக காணாது சடமாகிய தேகமே தான் என நினைத்தல்.
3. நான் சீவன்; கர்மங்களை செய்கிறேன்; போகங்கள் அனுபவிக்கிறேன் என நினைத்தல்.
4 ஆன்மாவுக்கு அன்னியமாய் கடவுள் இருக்கிறார் என நினைத்தல்.
5. தான் சச்சிதாநந்த சொரூபம் என உணராது சிறிதே வல்லமை உடைய நான் எப்படி சிவமாவேன் என மயங்குதல்.

இவை ஐந்தும் தன்னை அறிந்ததும் நீங்கும்.

அப்புறமா சீடர் கர்ம அனுபவத்தைப்பத்தி கேக்கிறார்.
சாத்திரங்கள் எப்பவும் உண்மையைதானே சொல்லும்? ஒத்தர் செஞ்ச கர்மாவெல்லாம் அனுபவிச்சே தீரணும்ன்னு சொல்லி இருக்கே! இல்லாட்டா ஒழியாதாமே! அப்புறமா மறு படி பல ஜன்மங்களிலே செஞ்ச பாபம் எல்லாம் ஞானத்தீயால சுட்டு எரிக்கப்படும்ன்னு சொல்லி இருக்கு. இந்த ரெண்டிலே எது உண்மை?


Friday, July 3, 2009

ஞானிகளுக்கு அணிமா சித்திகள் இல்லைன்னா...?
அது சரி! ஆனா பல கதைகள் கேட்டு இருக்கோமே. இந்த முனிவர்/ அந்த சித்தர் இப்படிப் பண்ணார், அவர் அப்படிப் பண்ணார்ன்னு. விஸ்வாமித்திரர் திரிசங்குவுக்காக சொர்கத்தையே படைச்சு இருக்கார். இப்படி இருக்கிறப்ப ஞானிகளுக்கு அணிமா சித்திகள் இல்லைன்னா என்ன அர்த்தம்?

சரியான கேள்விதான்!
எதை கேக்கிறோமோ அதானே கிடைக்கும்? ஈசனை நோக்கி இந்த சித்திகள் எல்லாம் வேணும்ன்னு தபஸ் பண்ணா அப்படியே கிடைக்கும்! நீ சொன்ன முனிவர்கள் எல்லாம் ஈசனை நோக்கி சித்திகள் வேண்டி தபஸ் பண்ணதாலும் யோகம் பழகியதாலும் அந்த மாதிரி சித்திகள் எல்லாம் கைவரபெற்றாங்க!

43.

முத்திநல்கிய சற்குருவே பலமுனிகளுக் கணிமாதி
சித்திபூமியிற் கண்டிருக்கவு மந்தச்செல்வ மீசனதென்றீர்
புத்தியொத்திட வுரைத்தருளென் றிடில்புகழு மீசனைநோக்கிப்
பத்திசெய்திடுந் தவத்தினா லியோகத்தாற் பலித்ததென்றறிவாயே

"முத்தி நல்கிய சற்குருவே, பல முனிகளுக்கு (முனிவர்களுக்கு) அணிமாதி சித்தி பூமியில் கண்டிருக்கவும் (உலகில் கண்டு இருக்கிறோம். அப்படி இருக்க) அந்த செல்வம் ஈசனது என்றீர். புத்தி ஒத்திட உரைத்தருள்" என்றிடில் புகழும் ஈசனை நோக்கிப் பத்தி செய்திடுந் தவத்தினால், யோகத்தால் பலித்தது என்று அறிவாயே.

ஓஹோ! அந்த ஞானிகள் தபஸ் பண்ணதால அணிமாசித்திகளும் அடைஞ்சாங்க, முக்தியும் அடைஞ்சாங்கன்னா சித்து விளையாட்டுகள் செய்கிறவங்க ஞானிகளா காணலையே! இப்ப பாக்கிற ஞானிகள் கிட்டே அணிமா முதலான சித்திகள் இருக்கிறதா தெரியலியே?
44.
அணிமாதி சித்திகள் ஞானபலமா (ஞானத்தின் விளைவா) அல்லவா?

சிவசொரூபமாந் தேசிகமூர்த்தியே சித்திமுத்தி யிரண்டும்
தவமுளோ ரடைகுவரெனி லவர்கள்போற் சகலரு மடைவாரே
அவர்கள் பூவருஞ்சித்தியு ஞானமு மடைந்ததுங் கண்டோமே
இவர்கண் ஞானிகளென்றிடிற் சித்திகளிவர்க் கிலாவகையேதோ

சிவசொரூபமாம் தேசிக மூர்த்தியே, சித்தி முத்தி இரண்டும் தவமுளோர் அடைகுவர் எனில் அவர்கள் போல் {இக்காலத்திலும்) சகலரும் அடைவாரே. அவர்கள் பூ [பூமியில்] அரும் சித்தியும் ஞானமும் அடைந்ததும் கண்டோமே.
இவர்கண் ஞானிகள் என்றிடில் சித்திகள் இவர்க்கு இலா வகை ஏதோ?

தவத்தால் சித்தியும் முத்தியும் அடையலாம் என்பது உண்மையானால் இக்காலத்தில் ஞானிகளிடம் சித்திகள் காணப்படவில்லையே? ஏன்?

சீடனே! தவம் செய்கிறதுல ரெண்டு வகை இருக்கு. ஒண்ணு எதையும் இலக்கா வெச்சுக்காமே, இதுதான் வேணும்ன்னு சங்கல்பம் இல்லாம தவம் செய்கிற நிஷ்காம்ய தவம். இது மோக்ஷத்தை மட்டுமே தரும். ரெண்டாவது காம்ய தவம். இது வேணும்ன்னு சங்கல்பத்தோட செய்கிறது. இது எதை கேட்டாங்களோ அதையே தரும். வழக்கமா இது அஷ்ட மா சித்திகள்.

45.
காமியத்தவங் காமியமொன்றையுங் கருதிடாத்தவ மென்றும்
பூமியிற்றவ மிருவகைசித்தியும் போதமுந்தரு மைந்தா
ஆமிவற்றி லொன்றியற்றினா லொன்றையே யடைகுவ ரிதுதீர்வை
யாமுரைத்த வவ்விரண்டையு மியற்றினா ரன்றுள பெரியோரே

காமியத்தவம், காமியம் ஒன்றையும் கருதிடா தவம் என்றும் பூமியில் தவம் இருவகை. [அவை முறையே] [அஷ்டமா] சித்தியும் போதமும் (அறிவையும்) தரும் மைந்தா. ஆம் இவற்றில் ஒன்று இயற்றினால் ஒன்றையே அடைகுவர். இது தீர்வை. (நிச்சயம்) யாம் உரைத்த அவ்விரண்டையும் இயற்றினார் அன்று உள பெரியோரே.

ஜனகன், மாபலி, பகீரதன் முதலியோர் மோக்ஷ சாதனமான ஞானத்தை மட்டுமே விரும்பினர். அதுவே அடைந்தனர். சிலர் இனிமையான சித்திகளை மட்டுமே விரும்பினர். அதெல்லாம் சித்து விளையாட்டை தருமே அன்றி மோக்ஷம் அளிக்க மாட்டா. அக்கால முனிவர்கள் இரண்டையுமே பெற தவம் செய்ததும் உண்டு.
(இது பரவாயில்லை போல இருக்கே!)

46
அனகமைந்தனே முத்திஞானத்தையே யடைந்தன ரல்லாமல்
ஜெனகன் மாபலிபகீரதன் முதலினோர் சித்திகள் படித்தாரோ
இனியசித்தியே விரும்பினார் சிலர்சில ரிரண்டையு முயன்றாரம்
முனிவர் சித்திகள் வினோதமாத்திரந் தருமுத்தியைத் தாராவே

அனக (குற்றமில்லா) மைந்தனே முத்தி ஞானத்தையே அடைந்தனர் அல்லாமல் ஜெனகன் மாபலி பகீரதன் முதலினோர் சித்திகள் படித்தாரோ? இனிய சித்தியே விரும்பினார் சிலர். சிலர் இரண்டையும் முயன்றார். அம் முனிவரின் சித்திகள் வினோதம் மாத்திரம் தரும். முத்தியைத் தாராவே.

சாதாரண ஜனங்களாகிய நாம சித்திகள் வேணும்ன்னு தவம் பண்ண இறங்கினா அதை ஒத்துக்கலாம். அது நாம இந்த கால கட்டத்திலே வெச்சு இருக்கிற ஆசைகளோட பிரதி பலிப்பு. ஆனா தபஸ் இருந்தா முக்திகிடைககும்ன்னா அதை விட்டுட்டு சித்திகள் கிடைக்க தவம் செய்வாங்களா கற்று தேர்ந்த முனிவர்கள்? சரியா தோணலையே?

Thursday, July 2, 2009

ஜீவன் முக்தன் எப்படி ஈசனுக்கு ஒப்பு?சரி ஐயா, ஜீவன் முக்தன் எப்படி பிரம்மன், சிவன், விஷ்ணு ஆகிய ஈசனுக்கு ஒப்புன்னு சொல்லறீங்க? பிரம்மா படைக்கிறார். சிவன் அழிக்கிறார். விஷ்ணு காக்கிறார். ஞானி இந்த மாதிரி எதுவும் செய்யலையே. ஈசனுக்கு முக்காலத்திலும் நடந்த நடக்கப்போற விஷயங்கள் தெரியுது. மத்தவங்க மனசில இருக்கிற விஷயங்கள் தெரியுது. அப்படிப்பட்ட சக்தி எதுவும் இருக்கிறதா ஞானி காட்டிக்கலையே.

40.
இவனயன்மால் சிவனாகிய வீசரொடெப்படி யொப்பாவன்
சிவன் முதன் மூவருமகில சிருட்டிதிதி நாசங்கள் செய்வார்
அவர்பிறர் மதிகளுமுக் காலங்களுமறிவார் விபுவாவார்
தவமிகுகுருவே யிவனுக்கவையிலொர் சற்றுங்காணேனே

இவன் அயன் மால் சிவன் ஆகிய ஈசரோடு எப்படி ஒப்பாவன்? சிவன் முதன் மூவரும் அகில (உலகின்) சிருட்டி,(உருவாக்குதல்) ஸ்திதி (நிலை பெறுத்தல்), நாசங்கள் செய்வார். அவர் பிறர் மதிகளும் (மனதில் உள்ள விஷயங்களும்) முக் காலங்களும் அறிவார்; விபு (எல்லாவற்றிலும் சம்பந்தம் உடையவர்) ஆவார். தவ மிகு குருவே இவனுக்கு அவையில் (அந்த மகிமைகளில்) ஓர் சற்றும் [தோன்ற] காணேனே.

நம்ம வீட்டிலே ஒரு ட்யூப் லைட் போட்டு வெச்சு இருக்கோம். அஞ்சாறு பேர் புழங்கற இடத்திலே அது போதுமானதா இருக்கு. இதுவே ஒரு பரபரப்பான நாலு ரோடு கூடற இடம்னா அதோட வெளிச்சம் போதாது. அதுக்கு ஒரு ஹைமாஸ்ட் விளக்குத்தொகுப்பு வேணும். இதுகளோட வீச்சு வேறயா இருந்தாலும் வெளிச்சம் தருகிற குணத்தில ரெண்டும் ஒண்ணுதானே?

வீட்டில குடிக்கிற தண்ணி ஒரு குடம் தயார் செய்து வைக்கிறோம். அது நாலு பேர் மட்டும் இருக்கிற குடும்பத்துக்கு போதும். இதுவே வீட்டில் ஒரு விசேஷம், உறவினர் இருபது, முப்பது பேர் வராங்கன்னா கடையிலேந்து ஒரு இருபத்தஞ்சு லிட்டர் கான் குடிநீர் ரெண்டு மூணு - காலத்துக்கு தகுந்தாப்போல வாங்கி வைப்போம். ரெண்டுமே தாகத்தை தணிக்கிறதுலே ஒரே குணம்தானே?

அதப்போலவே பிரம்ம ஞானியும் ஈசனும் ஞானத்தால வேறுபாடு உள்ளவங்க இல்லை.மாயையில் மட்டுமே வேறுபாடு உள்ளவங்க.
தத்துவ விளக்கப்படலத்தில பாத்து இருக்கோம் இல்லையா? ஈசன் -சத்துவ மாயை; சீவன்- ரஜஸ மாயை.

ராஜாக்கள் அவங்க நாட்டிலே இருக்கிற கெட்டவங்களை தண்டிக்கிறாங்க. நல்லவங்களை ஆதரிப்பாங்க. (இந்த காலத்து அரசைப்பத்தி இப்படி சொல்ல முடியலைங்கிறதால ராஜா ன்னு சொல்ல வேண்டி இருக்கு.:-( ) சித்தர்கள் முதலானவங்க சாபம் கொடுக்கவும் செய்வாங்க; அதை நீக்கவும் செய்வாங்க. அவங்களுக்கு அணிமா முதலான சக்திகளும் உண்டு.
அவங்களைப்போல பல சக்திகளும் உடையவன் ஈசன்.
ஞானி மனுஷ ஜன்மம் எடுத்தவன். இவனுக்கு இந்த மாயா வல்லமையும் இல்லை. அஷ்டமா சித்திகளும் இல்லை. அதனால ஏதோ தாழ்ந்தவன் மாதிரி தோணுது. இருந்தாலும் பிரம்ம பாவனையால வித்தியாசமே இல்லை.

ஞானி தன் பிராரத்தம் முடிகிற வரை டிராமாவிலே தனக்கு கொடுத்து இருக்கிற பாத்திரத்தை தேர்ந்த நடிகனா நடிச்சுவிட்டு போயிடுவான். ஈசனோ மெகா சீரியல் டைரக்டர். பல நடிகர்களை வெச்சுகிட்டு டிராமா போட்டு ஆகணும். ஞானி ரோல் முடிஞ்சு வீட்டுக்கு போயிடலாம். ஆனா டைரக்டர் ஈசன் சீரியல் முடிகிற வரை வேலை பாக்கணும். மெகா சீரியல் முடிகிறது ஏது? பிரலயத்திலேதான் முடியும்.


41.(அறுசீர் விருத்தம்-வேறு)
அதற்கு விடை:
தடத்துநீர் நிலாத்திரியொளி யுபயமுந்தழுவு மூர்தனைக்காக்கும்
குடத்து நீர் விளக்கினி லொளிரிரண்டுமோர் குடும்பமாத்திரங் காக்கும்
அடுத்த மைந்தனே ஞானியுமீசனு மறிவினாற் பிரிவில்லை
கெடுத்த மாயையின் குணங்களான் மேலொன்றுங் கீழொன்றும் பிரிவாமே

தடத்து நீர் (ஏரி நீர்) நிலாத் திரி (தீவட்டி) ஒளி உபயமும் தழுவும் (ஏற்றுக் கொள்ளும்) ஊர் தனைக் காக்கும். குடத்து நீர், விளக்கினில் ஒளி இரண்டும் ஓர் குடும்ப மாத்திரம் காக்கும். அடுத்த மைந்தனே ஞானியும் ஈசனும் அறிவினால் பிரிவில்லை. (சீவர்கள் முத்தி பெறா வண்ணம்) கெடுத்த மாயையின் குணங்களால் மேல் ஒன்றும் கீழ் ஒன்றும் பிரிவாமே.
--
ஒரு சிறு தீபம் ஒரு வீட்டில் உள்ள 5-6 பேர்களுக்கு மட்டும் ஒளி தரும். தீவட்டி பலர் உள்ள சபைக்கு ஒளி தரும். இவை ஒளி தரும் குணத்தில் ஒன்றே. ஒரு குடத்து நீர் ஒரு வீட்டில் உள்ளவருக்கு தாகம் தணிக்கும். தடாகத்து நீர் ஊருக்கே தாகத்தை தணிக்கும். ஆனால் இரண்டுமே தாகம் தணிக்கும் குணத்தை உடையவை. அது போல ஞானத்தால் ஈசனும் ஞானியும் வித்தியாசம் உடையவரல்லர். சீவர்கள் முத்தி பெறா வண்ணம் சீவர்களை தடுத்த ஆவரணம் மட்டுமே வித்தியாசம். (ஈசன் -சத்துவ மாயை; சீவன்- ரஜஸ மாயை)

42.
நரரின் மன்னனைச் சித்தரைப் போலவே நாரணன் முதலான
சுரர்கண் மாயைவல்லவ ரணிமாதிக டொக்க மாதவ மிக்கோர்
தரணிமா நுடர்க் கவைகளில் லாமையாற் றாழ்வுள ரானாலும்,
பிரம பாவனை யாலிவரவரென்னும் பேதமொன்றிலை பாராய்

நரரில் மன்னனை போலவே (தீயனைவை ஒழித்து நல்லனவற்றை பேணும் மன்னன் போல) சித்தரைப் போலவே (சாப அனுக்கிரக வல்லமை உள்ள சித்தர் போல) நாரணன் முதலான சுரர் கண் (தேவர்கள் இடத்துள்ள) மாயை வல்லவர் (மாயா சக்தி உடையவர்கள்) அணிமாதிகள் ஒக்க,(அணிமா முதலான சக்தி உடையவர்கள்)[யாரென்றால்] மாதவம் மிக்கோர். (அதற்காக பெரும் தவம் செய்தோர்). தரணி (உலக) மாநுடர்க்கு [இந்த இடத்தில் ஞானிகளை சொல்கிறார்] அவைகள் இல்லாமையால் தாழ்வுளர் ஆனாலும், பிரம பாவனையால் இவர் அவர் என்னும் பேதம் ஒன்றிலை பாராய்.


அது சரி! ஆனா பல கதைகள் கேட்டு இருக்கோமே. இந்த முனிவர்/ அந்த சித்தர் இப்படிப் பண்ணார், அவர் அப்படிப்பண்ணார்ன்னு. விஸ்வாமித்திரர் திரிசங்குவுக்காக சொர்கத்தையே படைச்சு இருக்கார். இப்படி இருக்கிறப்ப ஞானிகளுக்கு அணிமா சித்திகள் இல்லைன்னா என்ன அர்த்தம்?