Pages

Tuesday, June 30, 2015

அடியார்கள் - பாவ்ராவ்


பாவ்ராவ் மஹாராஷ்ட்ராவை செர்ந்தவர். பூனாவில் இருந்த அவரது குடும்பமே சாதுக்களை அண்டிய குடும்பம். அவரது தாத்தா மஹாராஷ்ட்ராவில் மிகவும் கொண்டாடப்பட்ட சாதுவான ஸ்வாமி நரசிம்ம சரஸ்வதியின் அத்யந்த பக்தர். ஆக ஆன்மீகமும் பக்தியும் சிறு வயது முதலே இருந்தது.
1939 இல் அவரது உடல்நிலை மிகவும் சீர்கெட்டுப் போயிற்று. ஸ்கையாட்டிக்கா என்னும் நோயால் நரக வேதனையை அனுபவித்தார். தூங்கவே முடியவில்லை. அங்கிருந்த சிறந்த மருத்துவர்கள் யாராலும் ஏதும் செய்ய முடியவில்லை. மூன்று ஆண்டுகள் வேதனை அனுபவித்த பின் இறப்பே பெரிய ஆறுதலாக இருக்கும் என தோன்றியது. 1942 பிப்ரவரி மாதம் ஒரு நாள் தங்கள் குல குருவான நரசிம்ம ஸரஸ்வதியின் படத்தின் முன் அழுதபடி என் தாத்தாவுக்கு உங்களை தரிசிக்கிற பாக்கியம் இருந்தது, எனக்கு இல்லை. இருந்தா இப்படி எல்லாம் கஷ்டப்படுவேனா? ரொம்ப தளர்ந்து போயிட்டேன், எனக்கு இறப்பை கொடுங்கஎன்று வேண்டினார்.
அதிகாலை அவருக்கு ஒரு கனவு வந்தது. ஒரு மலையில் உள்ள குகையில் ஒரு மகான் இருப்பதாகவும் அவரது பேச்சைக்கேட்க சாரை சாரையாக மக்கள் மலைப்பாதை ஒன்றில் ஏறிக்கொண்டு இருப்பதாகவும் கண்டார். அதில் அவரும் இருந்தார். குகையில் கூட்டமாக எல்லாரும் அமர்ந்து இருந்தனர். ஆனால் ஒரு சலசலப்பும் இல்லை. எல்லாரும் மௌனமாக அமர்ந்து இருந்தனர். இதோ பிரசங்கம் ஆரம்பிக்கும் என்று பாவ்ராவ் காத்து இருந்தார். ஆனால் ஒரு பிரசங்கமும் ஆரம்பிக்கவில்லை.
பக்கத்தில் இருந்த ஒரு பெரியவரிடம் பிரசங்கம் எப்போ ஆரம்பிக்கும்?” என்று கேட்டார். அவர் இங்கே மௌனம் மட்டுமே பிரசங்கம். அதிலே எல்லாரோட சந்தேகமும் தானா போயிடும்என்றார். இவர் குரு எங்கே?” என்று கேட்டார். அவர் உங்க பக்கத்திலே உட்கார்ந்து இருக்கிறவர்தான்என்றார்.பக்கத்தில் திரும்பிப்பார்த்தால் ஒரு இளைஞன் வெள்ளை கௌபீனத்துடன் முகத்தில் புன்னகையுடன் அமர்ந்து இருந்தான்.
பாவ்ராவ் உடனே சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். “உங்க பெயர் என்ன?” என்று கேட்டார். அந்த இளைஞன் அழகாக சிரித்துக்கொண்டே தன் ஹ்ருதயத்தை தொட்டுக்காட்டி இதை ரமண மஹரிஷிஎன்னு சொல்றாங்க!” என்றான்.
கனவு கலைந்துவிட்டது.
அந்த கால கட்டத்தில் ரமணரின் புகழ் அவ்வளவு பரவி இருக்கவில்லை. மிகவும் படித்த சிலரைத்தவிர யாரும் இந்த பெயரை அறிந்திருக்கவில்லை. பாவ்ராவும் அறிந்திருக்கவில்லை. யார் இவர் என்ற ஏக்கத்துடன் சில நாட்கள் சென்றன. பத்தாம் நாள் தெரிந்த ஒருவரை சந்தித்தார், அவர் ராமேஸ்வரம் போய் வந்திருந்தார். அவர் தான் திருவண்ணாமலையும் சென்று வந்ததாகவும் அங்கே ரமண மஹரிஷியை பார்த்ததாகவும், ஒவ்வொருவரும் அவசியம் தம் வாழ்வில் சந்திக்க வேண்டியவர் அவர் என்றும் சொன்னார்.
பாவ்ராவும் உடனே திருவண்ணாமலைக்கு கிளம்பினார். காலை ஆறு மணிக்கு ஆசிரமத்துக்குப் போய் சேர்ந்தார்.அப்போது பகவான் இவர் எதிரில் இவரை நோக்கி வந்துக்கொண்டு இருந்தார். தரிசன மாத்திரத்திலேயே இவருக்கு ஆனந்தம் உண்டாயிற்று. கீழே வீழ்ந்து நமஸ்கரித்தார். பகவான் பூனாவில் இருந்து வந்துட்டியா? ரொம்பவே தளர்ந்து போயிட்டே!” என்றார். இவருக்கோ மிகவும் ஆச்சரியம்! மதியம் பழைய ஹாலில் பகவான் முன் சென்று அமர்ந்தார். பகவான் உடல்நிலை குறித்து விசாரித்தார். பின் அவரை கருணையுடன் பார்த்து இங்கே எந்த பயமும் இல்லாமல் இருக்கலாம். உங்க வியாதியும் குண்மாயிடும்!” என்று அருளினார். பின் பகவத் கீதை ஒண்றை கூறினார். “எவன் இந்த விஷயங்களில் சிக்கிக்கொள்வதில்லையோ அவன் சுக துக்கங்களில் பாதிக்கப்படாதவனாய் கர்ப்ப வாசத்தின் சம்பந்தம் அற்றவனாக ஆகிறான். பின்னர் அவன் எந்த ஸ்திதியில் இருந்தாலும் உருக்கொண்ட பரப்ரஹ்மமே ஆவான்
பாவ்ராவின் கவலை மறந்தது. நோய் நீங்கியது. அதிலிருந்து வருடம் நான்கு முறை வந்து தரிசனம் செய்து போகலானார்.

Monday, June 29, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 34


ஜூப்லி ஹாலில் ஒருமுறை எல்லாரும் அமர்ந்து ரேடியோ கேட்டுக்கொண்டு இருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்தது. அதில் பங்கேற்றவர்கள் என்று ஒரு பட்டியல் வாசிக்கப்பட்டது.
அப்போது பகவான் சொன்னார் ரேடியோ பாடறது! பேசறது! யார் யார் பேசினான்னு பேரெல்லாம் சொல்லறது. ஆனா ரேடியோக்குள்ள யாருமில்லே! அதேப்போலத்தான் இதுவும். (தன் மார்பை தொட்டுக்காட்டி) இது பேசறது. ஆனா ரேடியோ மாதிரிதான். உள்ளே யாரும் ஆசாமி இல்லே! சாமிதான் இருக்கறது. என் இருப்பு என்னன்னா ஆகாசம் மாதிரி நிர்மலமா சுத்தமா இருக்கறது!”

ஒருமுறை பகவான் தக்‌ஷிணாமூர்த்தியைப் பற்றி சொல்லலானார். சனகாதி முனிவர்கள் நால்வர் முதல்லே தக்‌ஷிணாமூர்த்தியைப் பார்த்தப்போ ஒரு ஆலமரத்துக்குக் கீழே ஒரு இளைஞனா உக்காந்திருந்தார். அவரை பார்த்தவுடன் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அவரை அணுகினா. மூணு ப்ரதக்‌ஷிணம் பண்ணினா. பிறகு நமஸ்காரம் பண்ணி பாதத்துக்கு பக்கத்துல உட்கார்ந்து அவாளோட சந்தேகங்களை கேட்க ஆரம்பிச்சா. உள்ள பொருள்ன்னா என்ன? அதை எப்படி அடையறதுங்கறதுதான் அவா எல்லாருக்கும் கேள்வி.
தக்‌ஷிணாமூர்த்தியும் மிகுந்த கருணையாலே வாத்சல்யத்தோட அவாளோட பக்குவத்தைத் தெரிஞ்சு அவா கேட்ட சந்தேகங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டே போனார். சொல்லச்சொல்ல சந்தேகங்கள் அதிகம் ஆகிக்கொண்டே போச்சே தவிர அடங்கினபாடா இல்லே!
தக்‌ஷிணாமூர்த்தி சரின்னு கருணையையும் வாத்சல்யத்தையும் மறைச்சுக்கொண்டு பேசாம மௌனமா இருந்துட்டார். சிஷ்யாளும் கொஞ்ச நேரத்துல மௌனத்துல கரைஞ்சுட்டாஎன்ற போது அங்கிருந்த முருகனார் தக்‌ஷிணாமூர்த்தி பேசினதா எந்தப் புராணத்துலேயும் சொல்லவே இல்லையேஎன்று கேட்டார்.
பகவான் உறுதியான குரலில் இப்படித்தான் உண்மையிலேயே நடந்ததுஎன்றார். முருகனார் புரிந்து கொண்டார்.

ஒருமுறை காலை பழைய ஹாலில் பகவான் உட்கார்ந்து இருந்தார். எல்லாரும் மௌனமாக அமர்ந்து இருந்தார்கள். அப்போது டக் டக் என்று கைத்தடி சத்தம் கேட்டது. உயரமான கண் தெரியாத முஸ்லிம் ஒருவர் உள்ளே நுழைய முயற்சி செய்துகொண்டு இருந்தார். பக்தர் ஒருவர் உதவிக்குப் போனார். உள்ளே அழைத்து வந்தார். வந்தவர் பகவான் எங்கே இருக்கிறார் என்று கேட்டார். அவரை பகவான் முன் கொண்டு சென்று அமர்த்தி இப்ப பகவான் முன்னே உட்கார்ந்து இருக்கீங்க என்றார்கள். அவர் பகவானை நமஸ்கரித்து விட்டு தான் பெஷாவரில் இருந்து வருவதாகவும் அங்கே ஒரு பிரசித்தியான மதரஸாவில் தான் மௌல்வி என்றும் சொன்னார். பகவானைப்பற்றி யாரோ படிக்கக்கேட்டு உடனே பகவானை தரிசிக்க ஆவல் மிகுந்தது. பகவானே தனக்கு ஆன்மீகத் தந்தை என்று தோன்றியது. உடல் குறையையும் பொருட்படுத்தாமல் உடனே கிளம்பினார். அடுத்த ரயிலை பிடித்தார். பல ரயில்கள் மாறி திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். இந்த கதையை அவர் சொன்னதும் உதவியவர் அவரிடம் பகவானிடம் எதுவும் கேட்க வேண்டுமா?” என்று கேட்டார்.
அவர் ஒண்ணுமில்லை. பகவானை பார்க்க ஆசையாக இருந்தது. பார்த்தாச்சு. இப்ப அவர் சொல்கிறாப்போல செய்யப்போறேன். அவ்வளவுதான்!” என்றார்.
பகவான் கண்களில் கண்ணீர் கசிந்தது!

Saturday, June 27, 2015

உள்ளது நாற்பது - 36தன்னை யழித்தெழுந்த தன்மயா னந்தருக்
கென்னை யுளதொன் றியற்றுதற்குத் - தன்னையலா
தன்னிய மொன்று மறியா ரவர்நிலைமை
யின்னதென் றுன்ன லெவன்.
தன்னை அழித்துஎழுந்த தன்மய ஆனந்தருக்கு
என்னை உளதுஒன்று இயற்றுதற்கு - தன்னை அலாது
அன்னியம் ஒன்றும் அறியார் அவர்நிலைமை
இன்னது என்றுஉன்னல் எவன்.

அகங்காரமாகிய தன்னை நாசமாக்கி எழுந்த எப்போதும் தன் மயமாக விளங்கும் ஆனந்த ஸ்வரூபருக்கு செய்வதற்கு என்று என்ன காரியம் இருக்கிறது? அவர் தம் ஸ்வரூபத்தையன்றி பிற எதையும் அறியார். அவருடைய ஸ்திதியை இன்னது என்று அறிவதெப்படி?

अहङ्कृतिं यो लसति ग्रसित्वा किं तस्य कार्यं परिशिष्टमस्ति ।
किञ्चिद्विजानाति स नात्मनोऽन्यत् तस्य स्थितिं भावयितुं क्षमः कः ॥ ३३ ॥
அஹங்க்ருʼதிம்ʼ யோ லஸதி க்³ரஸித்வா கிம்ʼ தஸ்ய கார்யம்ʼ பரிஶிஷ்டமஸ்தி |
கிஞ்சித்³விஜானாதி ஸ நாத்மனோ()ந்யத் தஸ்ய ஸ்தி²திம்ʼ பாவயிதும்ʼ க்ஷம: : || 33 ||
 

Friday, June 26, 2015

அடியார்கள் - தேவராஜ முதலியார் , சாட்விக்


தேவராஜ முதலியார் ஒரு நாள் மத்தியானம் பகவானிடம் கை விசிறியால விசிறிக்கொண்டே கேட்டார்: “பகவானே ஒரு மனுஷனோட வாழ்கையில அவன் எந்த நாட்டில எந்த குடும்பத்தில பிறப்பான், என்ன தொழில் செய்வான், யாரைக் கல்யாணம் பண்ணிப்பான் எப்போ மரணம் ந்னு எல்லாமே நிர்ணயிச்சு இருக்கு ந்னு கேள்விப்படறேன். அதெல்லாம் அவனோட பூர்வ கர்மாவால நிச்சயிக்கப்பட்டிருக்குன்னு சொல்றா. ஆனா சின்ன சின்ன விஷயங்களும் இப்படித்தான் நிச்சயிக்கப்பட்டிருக்கா? உதாரணமா இப்ப விசிறிண்டு இருக்கேன். இப்ப விசிறியை கீழே வைக்கிறேன். இப்ப இந்த நாள் இந்த நேரத்துக்கு நான் விசிறியை கீழே வைப்பேன் என்கிறதும் நிச்சயிக்கப்பட்டிருக்கா? “
பகவான் சொன்னார்: “நிச்சயமா! இந்த உடம்பு எதை செய்யணும் எதை அனுபவிக்கணும் என்கிறது அது வரும்போதே நிச்சயிக்கப்பட்டுதான் இருக்கு! இதை சொன்னா போதும்! பக்குவி உடனே ஞானமடைஞ்சுடுவான்! மத்தவா தர்க்கம் பண்ணுவா.
சிந்தை அறியார்க்கு ஈது போதிப்பதல்லவே செப்பினும் வெகு தர்க்கமாம் .

ஒரு முறை தேவராஜமுதலியார் பகவானை கேட்டார் பகவானே, ஆத்ம முன்னேற்றம் கொஞ்சம் கொஞ்சமா வருமா... இல்லை உடனடியா வந்துடுமா?”
இருட்டான குகைக்குள்ளே நீர் டார்சை எடுத்துண்டு போறீர்... குகையில இருக்கும் இருட்டு கொஞ்சம் கொஞ்சமா மறையுமா இல்லை உடனடியா மறையுமா?” என்றார் பகவான்!

மேஜர் சாட்விக் ஆரம்ப காலங்களில் கிரிபிரதக்‌ஷிணம் செய்வார். பகவான் அருணாசலனேத்தான் என்று திட நம்பிக்கை பெற்ற பின் பழைய ஹாலை இரவு நேரங்களில் சுற்றி வருவார். ஒரு நாள் இரவு அப்படி சுற்றிவரும்போது யாரோ உம், உம்என்று முனகுவது கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். பகவாந்தான் அப்படி முனகிக்கொண்டு இருந்தார்!
அடுத்த நாள் மதிய உணவு முடிந்தபின் பகவான் ஓய்வாக இருக்கும்போது சாட்விக் அவரிடம் போய் கள்ளமில்லாமல் அவருடைய சந்தேகத்தை கேட்டார். “பகவானே ஞானிகளுக்கு சரீர பிரக்ஞை இராது என்கிறார்களே? ஆனா நேத்து நீங்க முனகினதை கேட்டேன். அது எப்படி பகவானே?”
இரண்டு நாளா உடம்புக்கு ஜுரம். அது ஏதோ முனகறது. அதுக்கு என்னை என்ன பண்ண சொல்லறேள்? அது அதோட தர்மத்தை செய்யறது. நாம உடம்பில்லையே?” என்றார் பகவான்.
சாட்விக் ஆசிரமத்துக்கு வந்து சில வருடங்கள் ஆயின. அவருக்கு தன் சாதனை சரியாக போகவில்லை என்று வருத்தம். புலம்ப ஆரம்பித்துவிட்டார். ஒண்ணுமே நல்லா நடக்கலே. த்யானம் பண்ண முடியலே. பகவான்கிட்டே சொன்னா யாருக்கு தியானம் பண்ண முடிலேன்னு பாரு என்கறார். நான் ஊருக்கே திரும்பி போகப்போறேன்... இப்படி கண்டவர்களிடம். புலம்பிக்கொண்டு இருந்தார். ஒரு நாள் பகவானிடமே தன் புலம்பலை ஆரம்பித்தார். மௌனமாக கேட்டுக்கொண்டு இருந்த பகவான் புலம்பி முடித்தபிறகு திரும்பி சாட்விக்கை ஒரு பார்வை பார்த்தார்! சாட்விக்கின் சப்தநாடிகளும் ஒடுங்கி விட்டது. ஓடிப்போய் தன் அறையில் புகுந்து கொண்டார். வெளியே வரவே இல்லை. இரண்டு நாட்கள் கழித்து குளிக்கும்போது திடீரென்று ஞானம் உதித்தது! இடுப்புத்துணியுடன் அப்படியே நேரே பகவான் இருந்த இடத்துக்குப்போனார். ”அவ்வளவுதானா பகவானே? அது இவ்வளோ எளிசா?” (Is that all bagavan? Is it so simple?). பகவானும் ஆமாம் சாட்விக்! அது அவ்வளவு எளிசானது!” என்றார். (yes chadvik, it is all. It is so simple!)
 

Thursday, June 25, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 33

 

பகவானின் தேகம் நோய்வாய்ப்பட்டது. டாக்டர்கள் சத்தான ஆகாரத்தை பரிந்துரைத்தார்கள். வழக்கம் போல பகவான் காதில் போட்டுகொள்ளவில்லை. யாரோ பகவான் தினமும் சப்பாத்தி, பால், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டால் தேவை என்றார்கள். பகவான் அவ்வளவு வசதியான போஜனம் எல்லாம் நமக்கு முடியாது. நமக்கு சாது போஜனம்தான்என்றார். "உடம்பு சரியில்லாவிட்டால் அப்படி சாப்பிடலாம். மகாத்மா காந்தியும் விசேஷ உணவுதான், அரவிந்தரும் அப்படித்தான், ஆரோக்கியத்துக்காக எடுத்துக்கலாம் பகவானே! எங்களுக்காக ஒரு ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக்குங்களேன் என்றார் ஒரு அன்பர்.
ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் என்ன விலை?”
என்ன நாலு அணா இருக்கும்!”
இல்லே நாலணா இருக்காது. நமக்கு 200 டம்ளர் ஜூஸ் வேணும். உங்களை எல்லாம் பாக்க வெச்சுட்டு நாம சாப்பிடறதா? சரி, அப்படியே ஆனாலும் 200 டம்ளர் ஜூஸுக்கு தினசரி 50 ரூபா நமக்கெல்லாம் கட்டாது!”
மீண்டும் அடுத்த நாள் இந்த விஷயம் ஆரம்பித்தது. நெய் தடவிய சப்பாத்தியும் பால் ஒரு டம்ளரிலும், ஆரஞ்சு ஜூஸ் ஒரு டம்ப்ளரிலும் கொண்டு வரப்பட்டு பகவான் அருகில் வைக்கப்பட்டது. பகவான் அதை திரும்பிக்கூட பார்க்கவில்லை. கொண்டு வந்து வைத்தவாளே சாப்பிடட்டும் என்றார்.
அப்போது அங்கிருந்த பக்தை பகவான் எங்களுக்காக அந்த சோஃபாவிலே உட்கார்ந்து கொண்ட மாதிரி, எங்களுக்காக இதை சாப்பிடணும்!” என்றார்.
அவ்வளவே. பகவான் பதில் பேசாமல் உடனே தரையில் அமர்ந்து கொண்டார்.
யாரும் இதை எதிர்பார்க்கவில்லை! அந்த பக்தை அழ ஆரம்பித்துவிட்டார். “பகவானே ஏதோ தெரியாம பேசிட்டேன்!” என்று அரற்றினார்.
யாருக்கு எப்படி பகவானை திருப்பியும் சோஃபாவில் உட்கார வைப்பது என்று தெரியவில்லை. அப்போது வந்த ஒரு நெடு நாள் பக்தர் பகவானை அலாக்காக தூக்கி சோஃபாவில் உட்கார வைத்துவிட்டார். பகவான் எந்த எதிரிப்பும் தெரிவிக்கவில்லை! திரும்பவும் தரையில் உட்கார எத்தனிக்கவும் இல்லை. அத்துடன் அந்த பிரச்சினை தீர்ந்தது. விசேஷ உணவு பிரச்சினையும் தீர்க்கப்பட்டது!

க்ருஷ்ண ப்ரேம் தீவிர வைஷ்ணவர். வெளி நாட்டவர். ஒரு முறை பகவானிடம் பகவானே, சர்வம் வாசுதேவ மயம் ஜகத் ந்னு நினைக்கறதுதானே உயர்ந்த ஸ்திதி?” என்று கேட்டார்.
பகவான் ஆமோதிப்பது போல தலையை ஆட்டினார். “ஆமாமாங். அது மேலான ஸ்திதிதான். வைஷ்ணவ சம்பிப்ரதாயத்தோட அடிப்படையே அதுதான். ஆனாலும் பாக்கறதெல்லாம் வாசுதேவமயம்ன்னு நினைக்கறது யார்? நாம்தானே?
நாம் பாக்கற உலகமா சொல்லறது, நாங்கல்லாம் வாசுதேவன்னு? நாம் பூமி, மரம், செடி கொடியை எல்லாம் வாசுதேவமயமா பார்க்க பிரியப்படறப்போ நம்மையே ஏன் அப்படி பார்க்கக்கூடாது?
எல்லாத்தையும் வாசுதேவ மயமா பார்க்கிறவா யார்ன்னு பார்த்தா நீயேதான் அந்த வாசுதேவன்னு தெரிஞ்சுப்பே. அப்புறம் விசேஷமா சர்வம் வாசுதேவமயம் ஜகத்ன்னு பார்க்க அவசியம் இருக்காது. பாக்கிறவன் வாசுதேவன்னா பார்க்கிறதெல்லாம் வாசுதேவமயம்தான். இதைத்தான் த்ருஷ்டீம் ஞானமயீம் க்ருத்வா... ந்னு ஆச்சாரியார் எளிமையா சொல்றார்.”
இப்படிச்சொல்லி பின் மெதுவான குரலில் யானும் நீ, அதனன்றி எம்பிரானும் நீ, இராமனே என்றார். அப்போது கண்களில் கண்ணீர் ததும்பியது. சமாளித்துக்கொண்டு மலையை பார்க்கலானார்.
   

Wednesday, June 24, 2015

உள்ளது நாற்பது - 35


நானா ரெனமனமுண் ணாடியுள நண்ணவே
நானா மவன்றலை நாணமுற - நானானாத்
தோன்றுமொன்று தானாகத் தோன்றினுநா னன்றுபொருள்
பூன்றமது தானாம் பொருள்.


நான்ஆர் எனமனம் உள்நாடி உளம்நண்ணவே
நானாம் அவன்தலை நாணம்உற - நான் நானாத்
தோன்றும் ஒன்றுதானாக தோன்றினும் நான்அன்றுபொருள்
பூன்றம்அது தானாம் பொருள்.


மனமானது நான் யார் என்று விசாரித்து இதயத்தில் அழுந்த அந்த மனதின் 'நான்' என்று கிளம்புகின்ற தலை சாய்ந்துவிடும். அதே கணத்தில் உடலே நான் என்னும் அஞ்ஞானத்தை அழித்துக்கொண்டு தானாகவே ஒரு சத்திய வஸ்து 'நான் நான்' என்று இடைவிடாமல் தோன்றும். இப்படி தோன்றினாலும் அது இப்போது எழுந்த புதிதான ஒன்று அல்ல. எப்போதுமே இருக்கும் ஆதி அந்தமில்லாத கால வரை இல்லாத பூரண வஸ்துவே ஆகும். அதுவே உண்மையான தான் ஆகும்.

गवेषणात्प्राप्य हृदन्तरं तत् पतेदहन्ता परिभुग्नशीर्षा
अथाहमन्यत्स्फुरति प्रकृष्टं नाहङ्कृतिस्तत्परमेव पूर्णम्३२

³வேஷணாத்ப்ராப்ய ஹ்ருʼ³ந்தரம்ʼ தத் பதேத³ஹந்தா பரிபுக்³னஶீர்ஷா |

அதா²ஹமன்யத்ஸ்பு²ரதி ப்ரக்ருʼஷ்டம்ʼ நாஹங்க்ருʼதிஸ்தத்பரமேவ பூர்ணம் || 32 ||

Tuesday, June 23, 2015

அடியார்கள் - குஞ்சுஸ்வாமி- 2ராமக்ருஷ்ணஸ்வாமியின் தம்பி வாசுவுக்கு யோக சாதனையில் உஷ்ணம் ஏற்பட்டு மூளையில் தாக்கி எப்போதும் ஈஸ்வரா! நாராயணா!’ என்று அரற்றிக்கொண்டு தூக்கமில்லாமல் சிரமப்படுவதாக ஆசிரமத்துக்கு கடிதம் வந்தது.
பகவான் ராமக்ருஷ்ணஸ்வாமியையும் குஞ்சுஸ்வாமியையும் போய் வருமாறு சொன்னார். அப்போது கைங்கர்யத்துக்கு இந்த இருவர் மட்டுமே இருந்தார்கள். ராமக்ருஷ்ணஸ்வாமியிடம் ஒருவர் ஊருக்கு போய் வர மட்டுமே பணம் இருந்தது. மேலும் இந்த மாதிரி சமாசாரங்கள் பற்றி ராமக்ருஷ்ணஸ்வாமிக்கு ஒன்றுமே தெரியாது. இதனாலும் குஞ்சுஸ்வாமி மட்டுமே போய் வருவதாக முடிவாயிற்று. அன்று பிற்பகல் மூன்று மணிக்கு ஒரு அன்பர் நிறைய பூரிகளை செய்து எடுத்து வந்தார். ஆசிரமத்தில் பகவானுக்கும் மற்றவர்களுக்கும் பரிமாறினார். பகவான் வழக்கமாக இரண்டுக்கு மேல் எடுத்துக்கொள்ள மாட்டார். ஆனால் அன்று அந்த அன்பர் வைத்த ஆறு பூரிகளையும் பேசாமல் ஏற்றுக்கொண்டார்! எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். பரிமாறி முடித்ததும் பகவான் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை அழகாக பொட்டலாமாக கட்டி குஞ்சுஸ்வாமியிடம் கொடுத்தார்.
“”பாவம்! அவன்கிட்ட ரயிலுக்குத்தான் பணமிருக்கு. சாப்பிட என்ன பண்ணுவான்?” என்றார்.
பிற்காலத்தில் இதை நினைவு கூறுகையில் குஞ்சுஸ்வாமி தேம்பித்தேம்பி அழுவார்.


குஞ்சுஸ்வாமி பலாக்கொத்துக்கு சென்றபின் ஒரு நாள் பகவானிடம் தன் இயலாமையை சொன்னார். ”பகவானே, எந்த நேரமும் ஆத்மாவிலே இருக்க முடியலே!”
பகவான் ஆனந்தமடைந்தார்.
இந்த கவலை தேவையில்லை. காலை தூங்கி எழுந்தவுடனே கொஞ்சம் விசாரம் பண்ணனும். அப்புறமா மத்த வேலைகளை கவனி. உன்னைத் தேடி எந்த வேலை வரதோ அதை பொறுப்பா செய். எல்லா வேலைகளுக்கும் ஆதாரம் ஆத்மாவே. மறுபடி தூங்க போகும் முன்னே கொஞ்சம் விசாரம் பண்ணு. அப்படியே தூங்கிடு. மொத்த தூக்கமும் ஆத்மாகாரமாவே இருக்கும். திரும்ப காலை எழுந்தவுடனே விசாரம் பண்ணு. தூக்கத்தில் ஏற்பட்ட சுகம் தெளிவாகும். பின்னே வேலைகளை கவனி. இப்படி இருக்கறதுதான் எப்பவும் ஆத்மாவிலேயே இருக்கறது.
நாம்தான் மூணு நிலையிலும் மாறாத இருப்புன்னு தெரிஞ்சுக்கறதே எந்த நேரமும் ஆத்மாவிலே இருக்கேன் என்கிறதுக்கு பொருள். அதை விட்டுட்டு நான்எப்பவும் ஆத்மாவிலே இருக்கேன்னா அகந்தைதான் மேலே சூக்‌ஷுமமா கிளம்பும். அதை பிடிக்கப்போனா அது காணாம போயிடும். அப்புறம் இந்த கேள்விக்கே அர்த்தம் இருக்காது.”
கொஞ்ச நேரம் பகவான் குஞ்சுஸ்வாமியை பார்த்தபடி இருந்தார். “குஞ்சு! தூக்கத்திலேயும் மனசு சிந்தனை எதுவும் இல்லாத சமாதி போதும் மட்டும் நீ ஆத்மாவா இல்லே! மனசு விபரீதமா எதையும் எண்ணும்போதும் கூட நீ ஆத்மாவாத்தான் இருக்கே! இனிமே நீ புதுசா எந்த நேரமும் ஆத்மாவா இருக்கப்போறேன்னு ஒண்ணுமே கிடையாது!” என்றபின் மௌனமானார்.
   

Monday, June 22, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 32பகவானிடம் கேள்வி கேட்டால் எப்போது பதில் வரும் என்றே தெரியாது! சில சமயம் உடனடியாக; சில சமயம் பதிலே வராமலும் போகும். இதில் யாரும் அவர் போக்கை நிர்ணயிக்க இயலாது!
நீண்ட தூரத்தில் இருந்து வந்த ஒரு பக்தர் பகவானிடம் பகவானே மனம் அடங்கறதுக்கான உபாயம் எல்லாம் பண்ணிட்டேன். ஆனா ஒரு முன்னேற்றமும் தெரியலே. என் மனம் அடங்குமா பகவானே?” என்று கேட்டார்.
பகவான் மௌனமாகவே இருந்தார்.
சற்று நேரம் கழிந்து மீண்டும் சாஸ்திரங்கள் மனவடக்கம் இல்லாம ஆன்மீகத்துல முன்னேற்றம் ஏற்படாதுன்னு சொல்லறதே? நான் சிரத்தையாத்தான் பண்ணறேன் என்றார்.
அப்போதும் மௌனமே.
இன்னும் சற்று கழித்து ஆத்மீகத்துல முன்னேற்றமே இல்லை என்கிறது ரொம்ப வருத்தமா இருக்கு; நீங்கதான் ஆசீர்வாதமா ஏதேனும் சொல்லணும் என்றார்.
இதற்கும் பகவான் அசையவே இல்லை.
ஒன்றரை மணி நேரம் கடந்தது. பகவான் வழக்கமாக வெளியே செல்லும் நேரம்.
பக்தரை கடந்து போகும் போது அவரைத் திரும்பிப் பார்த்து போகப்போகத் தெரியும்என்றார்!

ஒரு முறை பகவான் பக்தர்கள் புடை சூழ அமர்ந்திருந்தார். அப்போது ஒரு பக்தர் விடை பெறும் போது பகவானே! நாங்க எல்லாரும் ஆத்மானுபவத்துக்குத்தான் இங்கே வரோம். உங்க அருளாலே எல்லாருக்கு அது ஏற்படட்டும்.” என்று வேண்டி விடை பெற்றார்.
அவர் சென்ற பின் பகவான் எல்லாரும் ஆத்மானுபவத்துக்குத்தான் இங்கே வரா. ஆனா அது எப்படி இருக்கும்ன்னு லவலேசம் தெரிஞ்சாலும் நம்மள சுத்தி ஈ காக்கா இருக்காது என்றார்.
அன்று இரவு அவரது சேவகர் பகவானே? ஆத்மானுபவம் அவ்வளோ பயங்கரமா இருக்குமா? அது எப்படி இருக்கும்ன்னு எங்களுக்கு காட்டினா ஈ காக்கா சுத்தி இருக்காதுன்னு சொன்னீங்களே?” என்று கேட்டார்.
ஆத்மானுபவம் இன்னதுன்னு தெரியாமத்தான் சுத்தி சுத்தி வரா. அது எல்லோருக்கும் எப்பவும் இருக்கிற சாமான்யமான இருப்புன்னு தெரிஞ்சா ஈ காக்கா சுத்தி இருக்காதுன்னு சொன்னேன்!” என்றார் பகவான்!

ஆசிரம நிர்வாகத்தில் இருந்த சிலர் ஒரு மாதப்பத்திரிகையை ஆசிரமத்தில் இருந்து வெளியிட விரும்பினார்கள். திட்டம் தயார் ஆனது. ஒப்புதலுக்காக பகவானை அணுகினர்.
அந்தப்பத்திரிகையிலே என்ன இருக்கும்?” என்று கேட்டார் பகவான்.
நம்ம ஆசிரமத்து செய்திகள். இந்த மாசம் யார் யார் பகவானைப் பார்க்க வந்தா; அவா என்ன கேட்டா, பகவான் என்ன பதில் சொன்னார், இதெல்லாம் இருக்கும். உலகத்துல எல்லாரும் படிப்பா பகவானே!”
! அப்ப நான் பேசவே இல்லைன்னா அதில என்ன போடுவா? உங்க பத்திரிகையில் வரணும் என்கிறதுக்காக நான் பேசிண்டே இருக்கணுமா? ஏற்கெனெவே பிடிச்சு ஜெயில்ல போட்டுட்டேள். பேஷ் பேஷ், புது தண்டனையா கண்டு பிடிச்சுண்டே இருக்கேளா?”
முயற்சி கைவிடப்பட்டது.
 

Saturday, June 20, 2015

உள்ளது நாற்பது - 34

 
நானென்று வாயா னவிலாதுள் ளாழ்மனத்தா
னானென்றெங் குந்துமென நாடுதலே - ஞானநெறி
யாமன்றி யன்றிதுநா னாமதுவென் றுன்னறுணை
யாமது விசாரமா மா.
நான் என்று வாயால் நவிலாது உள் ஆழ்மனத்தால்
நான்என்று எங்குஉந்தும் என நாடுதலே - ஞானநெறி
யாம்அன்றி அன்றுஇது நானாம்அது என்றுஉன்னல்துணை
யாம்அது விசாரம் ஆமா.


உடலை நான் என்று எண்ணாமல் இருப்பதுடன் வார்த்தையாலும் சொல்லாமல் இருந்துகொண்டு நான் என்று அகந்தை எங்கிருந்து எழுகிறது என்று விசாரித்தலே ஞான மார்க்கமாகும். இப்படி இல்லாமல் நான் உடலல்ல; அந்த ஆன்மாவே என்று ஒரு இயல்பை ஆன்மாவுக்கு கற்பித்துக் கொண்டு த்யானித்தல் ஞான விசாரத்துக்கு ஒரு துணையாக இருக்கலாமே அன்றி அது ஞான விசாரமாகாது.


मौनेन मज्जन्मनसा स्वमूल- चर्चैव सत्यात्मविचारणं स्यात् ।
एषोऽहमेतन्न मम स्वरूप- मिति प्रमा सत्यविचारणाङ्गम् ॥ ३१ ॥

மௌனேன மஜ்ஜன்மனஸா ஸ்வமூல- சர்சைவ ஸத்யாத்மவிசாரணம்ʼ ஸ்யாத் |
ஏஷோ()ஹமேதன்ன மம ஸ்வரூப- மிதி ப்ரமா ஸத்யவிசாரணாங்க³ம் || 31 ||


 

Friday, June 19, 2015

அடியார்கள் - குஞ்சுஸ்வாமி-1குஞ்சுஸ்வாமிக்கு சிறுவயதிலேயே வேதாந்த பாடம் சொல்லிக்கொடுத்தவர் மலையாளம் குப்பாண்டி ஸ்வாமிகள். அவர்தான் பகவானைப்பற்றியும் அவரிடம் சொன்னவர். ஒரு முறை பகவானை தரிசிக்க வந்தார். தரிசனம் முத்து கிளம்பும் போது குஞ்சுஸ்வாமியின் கையை பிடித்து பகவான் கையில் வைத்து இவனுடைய தகப்பனார் ரொம்ப நல்லவர். பையன் பெரிய ஞானியாகணும்ன்னு என்கிட்டே ஒப்படைச்சார் இவன் அதுக்கு தகுதியானவந்தான். ஆனா என்னால முடியலை. சில காரணங்களால யாத்திரை போயிட்டேன். இனி நீங்கதான் இவனுக்கு அடைக்கலம்.அவனை கைவிடாம காப்பாத்தணும்என உருக்கமாக வேண்டிக்கொண்டார்.
அன்றையில் இருந்து குஞ்சுஸ்வாமி ஆசிரமவாசியானார்.
ஆரம்ப காலங்களில் ஆசிரம நிர்வாகம் தண்டபாணிஸ்வாமி கையில் இருந்தது. அவரும் பகவானும்தான் சட்டினிக்கு அரைப்பார்கள், சேர்ந்தாற்போல சில நாட்கள் அரைத்ததில் பகவானுக்கு கைகளில் கொப்பளங்கள் வந்துவிட்டன. குஞ்சுஸ்வாமியும் மற்றவர்களும் தண்டபாணிஸ்வாமியிடம் இப்போதைக்கு துவையல் சட்டினி எல்லாம் வேண்டாம் என்று சொன்னார்கள். பகவானிடமும் நீங்கள் இனி இந்த அரைக்கும் வேலைகளை செய்ய வேண்டாம். செய்தால் நான் சாப்பிட மாட்டேன்என்று குஞ்சுஸ்வாமி மனம் வருந்தி சொன்னார்.
ஆனால் அடுத்த நாளும் புளிச்ச கீரையே சாப்பாட்டில் அமைந்தது! பகவானே அரைத்தார். ஆகையால் குஞ்சுஸ்வாமி துவையலை போட்டுக்கொள்ளவில்லை. இதை யாரோ பகவானிடம் போட்டுக்கொடுத்து விட்டார்கள்.
அடுத்த வேளை உணவுக்கு உட்கார்ந்த பகவான் குஞ்சுஸ்வாமியை கூப்பிடச் சொன்னார். “என்ன ஓய்? நான் சாப்பிடலாமா? “ என்று கேட்டார்.
குஞ்சுஸ்வாமிக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்தார். பகவான் ஆமாம்! இவா சொல்லறதை எல்லாம் நான் கேட்கணும். இல்லைன்னா இவா சாப்பிட மாட்டா! இவா உத்திரவு படித்தானே நான் நடக்கணும்? வரப்ப எல்லாரும் சாதுவாத்தான் வரா. நாள் போகப்போக அதிகாரம் பண்ண ஆரம்பிச்சுடறா. இவா சொல்கிறபடிக்கு ஸ்வாமி ஆடணும். ஸ்வாமிக்கு ஒண்ணுமே தெரியாதில்லையா!” என்றார்.
குஞ்சுஸ்வாமி கண்கலங்கி அழுதார் அடுத்த இரண்டு நாட்கள் பகவான் குளிக்கப்போகலாமா? உக்காரலாமா? என்பது போல எதை எடுத்தாலும் குஞ்சுஸ்வாமியை உத்திரவு கேட்பதாகவே இருந்தார்.
குஞ்சுஸ்வாமி இனி தான் அங்கே இருக்க இயலாது என்று நினைத்தார், பகவானிடம் நாந்திருப்பதி போறேன் என்று சொன்னார். பகவான் எதுவும் பேசவில்லை.
பிற்பகல் பகவான் கிரிபிரதக்‌ஷிணத்துக்கு சிளம்பினார். ராமக்ருஷ்ணஸ்வாமி குஞ்சுஸ்வாமியிடம் எங்களோட கிரிபிரதக்‌ஷிணம் வந்துட்டு அப்படியே ரயிலுக்கு போயேன் என்றார். குஞ்சுஸ்வாமியும் தன் கொஞ்ச உடமைகளை மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு உடன் சென்றார். பகவான் அன்றைக்கு மிக மிக மெதுவாகவே நடந்தார். முந்திச்செல்வது முறையல்ல என்று எல்லாருமே அவர் பின்னே மெதுவாக நடக்க வேண்டியதாயிற்று.
குபேர லிங்கம் தாண்டும்போது ஆறரை மணி ரயில்வண்டி போவதை பார்த்து பகவான் உன் வண்டி போறது பார். சீக்கிரம் பறந்து போ! போ!” என்றார். எல்லாரும் சிரித்தார்கள். குஞ்சுஸ்வாமியை சமாதானப்படுத்தி ஆசிரமத்துக்கு கூட்டி வந்தார்கள். இரவு உணவு முடிந்த பின் தண்டபாணிஸ்வாமி குஞ்சுஸ்வாமியை பகவானிடம் கூட்டி வந்து பகவானுக்கு கோபம் வரும்படி நடந்ததுக்கு மன்னிப்பு கேக்கறான்.” என்றார். பகவான் அவனிடம் எனக்கு என்ன கோபம்? அவன் என்ன தப்பு செஞ்சான்? கையிலே கொப்பளத்தை பார்த்து மனசு கஷ்டப்பட்டு சாப்பிடலே. இதுல கோபிக்க என்ன இருக்கு? நான் கோபிச்சுண்டேனாம்; அவன் திருப்பதிக்கு புறப்பட்டானாம்! மஹா புத்திசாலித்தான்!
இவன் இங்கேயே சாப்பாட்டை பிடிக்காம சாப்பிடுவான். காரம் தாங்காம குழம்பு ரசத்துல எல்லாம் தண்ணி ஊத்திண்டு மருந்து மாதிரி சாப்பிடுவான். திருப்பதிக்கு போனா இவனுக்கு என்ன கிடைக்கும், என்ன சாப்பிடுவான்?
அப்புறம் இவன் குரு எங்கிட்ட வந்து இவன் எங்கேன்னு கேட்டா என்ன செய்வேன்? என் கையிலே பிடிச்சு கொடுத்து கைவிடக்கூடாதுன்னு ஒப்படைச்சு போயிருக்காரே? என்ன பதில் சொல்லுவேன்? இவன் என்னடான்னா திருப்பதி போறானாம் திருப்பதி!” என்று பேசி முடித்தபோது பகவான் ஒரு காலும் தன்னை கைவிட மாட்டார் என்று குஞ்சுஸ்வாமிக்கு புரிந்தது!

   

Thursday, June 18, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 31ஒரு முறை ஒரு பக்தர் பகவானிடம் பகவானே! ஆத்மாவை உணரணும்ன்னு சொல்றாங்களே, அது எங்கே இருக்கு? அதை எப்படி உணரறது?” என்று கள்ளமில்லாமல் கேட்டார். பகவானுக்கு ஒரே ஆனந்தம்!
இப்போ என்கிட்டே ரமணாஸ்ரமம் எங்கே இருக்கு? அதுக்கு எப்படி போறதுன்னு நீ கேட்டா என்ன பதில் சொல்லறது?
நீயும் நீ பாக்கற எல்லாமும் ஆன்மாதான். அதை எப்பவும் உணர்ந்துகொண்டேதான் இருக்கே! ஆனா அது தெரியாம ஆத்மா எங்கே இருக்குன்னு தேடறதும் அதை உணர முயற்சி செய்யறதும் பண்டரிபுரம் பஜனை மாதிரிதான்.
பஜனை ஆரம்பிக்கும் போது எல்லாரும் கால்ல சதங்கை கட்டிண்டு ஒரு பித்தளை விளக்கை ஏத்தி வீட்டு நடுவில வெச்சுட்டு அதை சுத்தி சுத்தி வந்து பஜனை ஆரம்பிப்பா. பண்டரிபுரம் ரொம்ப தூரத்துல இருக்கு; யாத்திரை பண்ணுவோம் வாங்கன்னு பாடுவா. ஆனா விளக்கை சுத்தி சுத்திதான் வருவா. ஒரு அடி கூட முன்னே போகாட்டாலும் யாத்திரை போறோம்ன்னுதான் பாடுவா. இப்படியே விடிய விடிய பஜனை நடக்கும். பொழுது விடியும் போது இதோ பண்டரிபுரம் தெரியறது; இன்னும் கொஞ்சம் தூரம்தான்ன்னு பாடுவா. பொழுது விடிஞ்சதும் பண்டரிபுரம் வந்துட்டோம். இதோ பண்டரிபுரம்; இதோ பாண்டுரங்கன்னு பாடி விளக்குக்கு நமஸ்காரம் பண்ணி முடிச்சுடுவா.
ஆத்மா விஷயத்துலேயும் இப்படியேதான்! ஆத்மாவை எப்பவுமே தரிசிச்சுண்டே ஆத்மா எங்கே, இன்னும் அடையலைன்னு பஜனை பாடறோம்! அஞ்ஞான இருள் நீங்கி ஞானம் புலரும்போது, அது இங்கேயே இருக்கறதுதான்; அது நானேதான் ந்னு முடிச்சுடுவோம்!”
இப்படி சொல்லி முடிக்கும்போது பகவானின் முகத்தில் அளவில்லா ஆனந்தம் பொங்கிக்கொண்டு இருந்தது!

ஒரு நாள் சிரத்தையுடைய சாதனை செய்து வந்த ஒரு பக்தர் பகவானை பக்தியுடன் நமஸ்கரித்து கேட்டார்: “பகவானே எந்த நேரமும் மனசை ஆத்மாவிலேயே வெச்சிருக்கறதுதான் ஆத்ம விசாரம்ன்னு பகவான் சொல்லறது இல்லையா? இது என்னைப்போல லௌகீக வாழ்கையில இருக்கறவாளுக்கு எப்படி சாத்தியமாகும்? ஒரு பக்கம் ஆபீஸ் பொறுப்பு இன்னொரு பக்கம் குடும்ப பொறுப்பு, இதிலேயே நாளின் பெரும் பாகம் போயிடறதே? ஆத்ம விசாரம் பண்ணவே நேரம் கொஞ்சம்தான் கிடைக்கும்; இதில இடைவிடாம ஆத்மாவில மனசை வெச்சுண்டு இருக்கறது சிரம சாத்தியம் என்று கூட இல்லை; முடியவே முடியாது! அப்ப எங்களுக்கெல்லாம் வழியே இல்லையா?” இதை கேட்கும் போது அவர் குரலில் ஆதங்கம் தொனித்தது!
பகவான் மிக்க கருணையுடன் மெதுவான குரலில் பேச ஆரம்பித்தார் நீங்க வீட்டை விட்டு ஆசிரமம் வரதுக்கு கிளம்பினீங்க. வழியில உங்களோட நண்பரை சந்திக்கறீங்க. அவரோட க்‌ஷேம லாபங்களை விசாரிக்கறிங்க. அப்புறம் ஆசிரமத்துக்குத்தானே வறீங்க? அவரோட போகலையே? அப்படித்தான் இதுவும்.
காத்தால எழுந்தவுடனே மனசு அமைதியா இருக்கும். அப்போ அதுக்கு அது யார்ன்னு நினைவு படுத்தணும். தூக்கம் முடிந்து அது அப்பதான் வெளியே வந்தது என்கிறதால அதுக்கு தூக்கத்தோட சுகத்தை மறுபடி மிக சுலபமா நினைவுப்படுத்த முடியும். அதாவது மனசை தியானத்துல விசாரபரமா ஈடுபடுத்தணும். இப்படி காத்தாலே எழுந்த உடனே விசாரம் செய்யறது நீங்க ஆசிரமத்துக்கு கிளம்பற மாதிரி. பிறகு நமக்கான வேலை எல்லாத்தையும் கவனிக்கணும். காத்தாலே செய்த தியானத்தோட தொடர்பு தைல தாரையா இருக்கும். அது நமக்குத்தெரியுமோ தெரியாதோ அது விஷயமில்லை. வேலை தானா நடக்கும். இதான் வழியில நண்பனை பார்த்து விசாரிக்கறது.
மறுபடி இரவு தூங்கும் முன்னே கொஞ்ச நேரம் விசாரபரமா தியானத்துல இருக்கணும். இதுதான் சினேகிதன்கிட்டே சொல்லிக்கொண்டு ஆசிரமம் வந்து சேரறது.
இப்படித்தான் நாளெல்லாம் தியானத்துல இருக்கணும்.
காத்தாலே தூங்கி எழுந்தததிலே இருந்து இரவு தூங்கறது வரைதான் வாழ்க்கை. இப்படி இருந்தா வாழ்க்கையே தியானமாயிடும்.
இதோட பரிபாகத்திலே மனம் தியானத்துல இருந்தாலும், எதையாவது நினைச்சுக்கொண்டு விவகாரத்துல இருந்தாலும் ஆத்மாவிலேயேதான் நாம இருக்கோம் என்கிற தெளிவு வரும்.
மனதை சதாகாலமும் ஆத்மாவிலே வைத்து இருப்பதற்குப் பேர்தான் ஆத்ம விசாரம்ன்னு நான் சொல்வதோட அர்த்தம் இதுதான். இந்த தெளிவுதான் ஆத்ம விசாரம்!”
 

Wednesday, June 17, 2015

உள்ளது நாற்பது - 33


 
எழும்பு மகந்தை யெழுமிடத்தை நீரில்
விழுந்த பொருள்காணவேண்டி - முழுகுதல்போற்
கூர்ந்தமதி யாற்பேச்சு மூச்சடக்கிக் கொண்டுள்ளே
யாழ்ந்தறிய வேண்டுமறி.
எழும்பும் அகந்தை எழும்இடத்தை நீரில்
விழுந்த பொருள் காணவேண்டி - முழுகுதல்போல்
கூர்ந்த மதியால் பேச்சு மூச்சு அடக்கிக்கொண்டு உள்ளே
ஆழ்ந்துஅறிய வேண்டும் அறி.


நீரில் விழுந்த பொருளை காண்பதற்கு எப்படி பேச்சு மூச்சடக்கி முழுகி தேடுவோமோ அதுபோல நானென்னும் அகந்தை எழும் இடத்தை காண பேச்சு மூச்சடக்கி இதயத்தின் உள்ளே ஆழ்ந்து முழுகி நுட்பமான மதியால் அறிய வேண்டும்.


कूपे यथा गाढजले तथान्त- र्निमज्ज्य बुद्ध्या शितया नितान्तम् ।
प्राणं च वाचं च नियम्य चिन्वन् विन्देन्निजाहङ्कृतिमूलरूपम् ॥ ३० ॥

கூபே யதா² கா³ட⁴ஜலே ததா²ந்த- ர்னிமஜ்ஜ்ய பு³த்³த்⁴யா ஶிதயா நிதாந்தம் |
ப்ராணம்ʼ ச வாசம்ʼ ச நியம்ய சின்வன் விந்தே³ன்னிஜாஹங்க்ருʼதிமூலரூபம் || 30 ||


 

Tuesday, June 16, 2015

அடியார்கள் - ராஜா ஐயர்


ராஜா ஐயர் போஸ்ட் மாஸ்டர். ஓர் இரவு கனவொன்று கண்டார். அப்போது அவர் போஸ்ட் மாஸ்டர் இல்லை. யாரோ யோகி சோஃபாவில் அமர்ந்து இருக்கிறார்கள். அவரைச் சுற்றி பிரகாசமாக இருந்தது. அவர் அருகே பங்கா இருந்தது. அவர் ராஜா ஐயரை பங்கா இழுக்கச்சொன்னார். அவ்வளவே; கனவு கலைந்து போயிற்று!
சிறிது நாட்கள் கழித்து ராஜாஐயர் பகவானை தரிசிக்க வந்தார். அப்போது பகவான் சோஃபாவில் அமர்ந்து இருந்தார்.
பகவானை நமஸ்கரிக்க அவர் போய் உணவு முடித்து வரச்சொன்னார்.
ராஜாஐயரும் உணவருந்த போனார். அப்போது தாம் கனவில் கண்ட யோகி பகவாந்தானோ என்று மனதில் தோன்றியது. உணவு முடித்து ஹாலுக்கு வந்தார். உடனே பகவான் இந்த பங்காவை கொஞ்சம் இழுஎன்றார்.
பொதுவாக பகவான் யாரை இப்படி வேலை சொல்லுவதில்லை!
இரண்டு நிமிடங்கள் ஆனதும் போதும் என்று சொல்லிவிட்டார்.
ராஜாஐயருக்கும் பகவான் கனவில் கண்டது தன்னையே என விளக்கவே இந்த வேலையை சொன்னதாக தோன்றியது.
பகவான் சேவகராக தன்னை ஏற்றுக்கொண்டதாக கருதி தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

ராஜாஐயர் ஆசிரமத்தில் தங்க வேண்டுமென்றால் ஏதேனும் சேவை செய்தாக வேண்டுமென்று சின்னஸ்வாமி திட்டவட்டமாக சொல்லிவிட்டார். ராஜாஐயருக்கோ எந்த வேலையும் செய்யாமல் முழு நேரமும் பக்தி செலுத்திக்கொண்டு இருக்கவே விருப்பம் இருந்தது.
பகவானிடம் உத்திரவு கேட்பதற்காக நடந்ததை கூறினார். பகவான் காலை இட்லி வேக வையேன்!” என்றார். பகவான் நான் சொல்லித்தரேன்என்று சொல்லி இட்லிக்கு மாவரைப்பது எப்படி என்பது முதல் எல்லாவற்றையும் ஒரு வாரம் சொல்லித்தந்தார். பின் இட்லியை வேகவைக்கச் சொல்லித்தந்தார், “நாளையிலேந்து நீயே செய்யணும்என்றார் பகவான்.
அடுத்த நாள் ராஜாஐயர் பதட்டத்துடன் ஓடி வந்தார். “பகவானே, இட்லியை முழுசா எடுக்க முடியலை! பிஞ்சு பிஞ்சு வரது!”
பகவான் நிதானமாக முத ஏடு இட்லியை அக்னிக்கு கொடுக்கணும்ன்னு சொன்னேனே? அத மறந்துட்டியா? அதான்! போய் அக்னிகிட்டே நாளையிலிருந்து முத ஏடு இட்லியை உனக்கு மறக்காம கொடுத்துடறேன்னு சொல்லு! எல்லாம் சரியாயிடும்!”
பகவான் சொன்னது போல அக்னியிடம் வேண்டிக்கொண்டு, அடுத்த ஏடு இட்லிகளை அருமையாக வைத்து எடுத்தார் ராஜா ஐயர்!

Monday, June 15, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 30ராஜா ஐயருக்கு சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். நேரம் காலம் இல்லாமல் அவ்வப்போது சமையலறையில் நுழைந்து எதையாவது - சமைத்ததோ சமைக்காததோ- வாங்கி சாப்பிடுவார்.
இதை பார்த்த பக்தர் ஒருவர் இது பற்றி பகவானிடம் குறை கூறினார்.
ஏன் நீயும் போய் சாப்பிட வேண்டியதுதானே??”
என்னாலே முடியாது. நான் மத்த நேரம் கிச்சனுக்குப் போக முடியாது.
அப்ப உன் பிரச்சினை அவர் எப்பவும் எதையாவது சாப்பிடறார் என்கிறது இல்லே; உன்னாலே முடியாதாதை அவர் செய்யறார் இல்லியோ..... அதான் பிரச்சினை!


ஒரு முறை வடநாட்டில் இருந்து வந்த ஒரு பக்தரிடம் குதிரைவண்டிக்காரன் இரு மடங்கு தொகையைக்கேட்டான்.
ஆசிரம சேவகர் க்ருஷ்ணஸ்வாமி தலையிட்டு வழக்கமான தொகையை வாங்கிக்கொள்ளும்படி சொன்னார். அவன் பிடிவாதமாக மறுத்தான். கடைசியில் ஒரு தொகைக்கு பேரம் படிந்து பக்தர் கிளம்பினார். திரும்பிய க்ருஷ்ணஸ்வாமி பகவானிடம் நடந்ததை விவரித்து பகவானே! எவ்வளவோ சொல்லிப்பாத்தேன், கேக்கவே மாட்டேன்னுட்டான்!” என்று அங்கலாய்த்தார்!
பகவான் புன்னகையுடன் கேட்டார்: “நீ மட்டும் நான் சொன்னதை கேக்கறியா?”

பகவானை தரிசிக்க வட இந்திய வக்கீல் ஒருவர் வந்தார். இவர் ஒரு க்ருஷ்ண பக்தர். முன்னரே இரண்டு வாரங்கள் தங்க ஏற்பாடுகள் செய்து இருந்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கினார். ஏனோ அவருக்கு ஆசிரம சூழ்நிலை பிடிக்கவில்லை. பகவானின் மௌனம் விளங்கவில்லை. அவரது அறைக்கு பக்கத்தில் தங்கி இருந்தவர் டங்கன் கிரின்லீஸ். இருவரும் இரவு உணவுக்குப்பின் நிலவொளியில் அமர்ந்து உரையாடுவர்.
வக்கீல் என்னோட இந்த பயணம் சுத்தமா பிரயோஜனமே இல்லாம போச்சு. இங்கே ஒரு ஆரத்தி, ஒரு பஜனை, ஒண்ணுமே இல்லை. மகரிஷியும் மத்தவங்களும் சும்மா உக்காந்து இருக்காங்க; வீணா பொழுதை போக்கறாங்க.” என்றார்.
டங்கன் கிரின்லீஸ் பகவான் அத்வைத ஸ்வரூபம். இதுதான் எல்லா வேததோட முடிவும். வேதங்கள் விவரிக்க முடியாம திரும்பற இடத்திலேதான் பகவானோட மௌனம் ஆரம்பிக்குது. இதை உணர்ந்து தெரிஞ்சுக்கணும். நிறைய காலமாகும். அவசரப்பட்டு முடிவு பண்ணாதீங்க! இன்னும் நாள் இருக்கே. பொறுமையா இருங்க.’ என்றார்.
வக்கீலோ என்ன மௌனமோ எனக்குப்புரியலே! அதுலே எனக்கு பக்தி வரலை. இங்கே வரதுக்குப்பதில் ப்ருந்தாவனம் போயிருக்கலாம். அங்கே க்ருஷ்ணன் இருக்கான். அவனிடம் உருகி அவன் தரிசனத்துக்கு காத்துகிட்டு இருப்பேன். இந்த பயணத்தால் ப்ரயோஜனம் இல்லே. பக்தியோட ரசம் அனுபவிச்சாத்தான் தெரியும். உங்ககிட்ட பக்தி இல்லேஎன்றார்.
ஒருவர் மற்றவருடைய நிலை புரியாமல் இருக்க விவாதிக்க ஒன்றுமில்லாமல் போனது!
மீதி நாட்களும் இப்படியே கழிந்தன. வக்கீல் உணவுக்கு மட்டும் ஆசிரமத்துக்குப்போனார். பகவானை சந்திப்பதை தவிர்த்தார். கிளம்பும் நாள் வந்தது. உற்சாகமானார். தன் நண்பரிடம் நான் உங்க மகரிஷிகிட்டேந்து தப்பிச்சுட்டேன்! நேரா பிருந்தாவனம்தான் போறேன். அங்கே ஆடிப்பாடி க்ருஷ்ணனுக்காக ஏங்கி பொழுதை கழிப்பேன்என்றார்.
பகவானை புரிந்து கொள்ளாமல் போகிறாரே என்று கிரின்லீஸ் க்கு வருத்தம் இருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. “போய் வாங்க!” என்றார்.
பகவானிடம் சொல்லிக்கொள்ளக்கூட இல்லை. கிளம்பிவிட்டார்.
ஆனால் அவர் புகைவண்டி நிலையத்துக்கு செல்ல ஏற்பாடு செய்து இருந்த குதிரை வண்டி வரவில்லை! வேறு ஏற்பாடு செய்து போய் சேர்ந்தால வண்டி வந்து, கிளம்பிவிட்டு இருந்தது. அடுத்த வண்டி மறுநாள்தான். வேறு வழியில்லாமல் வருத்தத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பினார் வக்கீல்.
டங்கன் கிரின்லீஸ் க்கு மகிழ்ச்சி. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் வக்கீலை சமாதனப்படுத்தினார். இன்னும் ஒரு நாள்தானே? விடுங்க என்றார்.
பின் என்ன இருந்தாலும் நீங்க சொல்லிக்காம ஊருக்கு கிளம்பினது சரியாப்படலை. அவரைப்பத்தி உங்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லாம இருக்கலாம். அவரைப்பத்தி என்ன வேணா சொல்லுங்க. போகட்டும். அவர் அவரோட இயல்புல இருக்கார். அது உங்களுக்கு பிடிக்கலை என்கிறதால ஒண்ணும் பண்ண முடியாது. என்ன இருந்தாலும் நாம அவரோட விருந்தினரா தங்கி இருக்கோம். போகும் போது சொல்லிக்கொண்டு போவதே மரியாதைஎன்றார். இது சரிதான் என்று வக்கீலுக்குப்பட்டது.
அடுத்த நாள் மாலை கிளம்பும் நேரம் வந்தது. மரியாதை நிமித்தமாக ஆரஞ்சுகள் வாங்கி ஒரு பையில் எடுத்துக்கொண்டு விடை பெற ஓல்ட் ஹாலின் வாசலில் நின்றார். பகவான் வழக்கம்போல மலைக்குப் போக வெளியேவந்தார். வக்கீலின் அருகில் வந்தவுடன் ஒரு நிமிடம் அவரைப்பார்த்துக்கொண்டு நின்றார்.
வக்கீலின் கால் அடியில் பூமி நழுவியது! பழப்பை கீழே விழுந்தது. பழங்கள் உருண்டன. அடியற்ற மரம் போல் பகவானின் காலடியில் கீழே விழுந்தார. ‘க்ருஷ்ணா க்ருஷ்ணாஎன்று அரற்றினார். கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது.
பகவான் சரி போ!” என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்துவிட்டார்.
பகவானைப்பார்த்து வக்கீல் க்ருஷ்ணா, உன்னை தெரிஞ்சுக்காம போய்டேனே! உன்னையே திட்டினேனே?!” என்று கதறினார்.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஒருவர் வந்து குதிரை வண்டி வந்தாயிற்று என்று சொன்னார். வக்கீல் இருந்த நிலையில் அவரை கைத்தாங்கலாக அழைத்துச்செல்லா வேண்டி இருந்தது. போகும் வழியில் டங்கனை பார்த்தார். “என் கிருஷ்ணனை பாத்துட்டேன்! இதுவே போதும். மீரா ஏன் இவ்வளோ பிரியமா இருக்கான்னு இப்பதான் புரியுது! வாழ்கையோட பலன் கிடைச்சாச்சு! நான் வீட்டுக்குப்போறேன்!” என்று அழுதார். அவரைக்கட்டிக்கொண்ட டங்கன் முதன் முறையாக பக்தியில் அழுதார்!