Pages

Tuesday, April 30, 2013

ப்ரார்த்தனை


பூஜையின் முடிவில் ப்ரார்த்தனை செய்வது உண்டு அல்லவா? பலருக்கும் பல வேண்டுதல்கள் இருக்கும். அவற்றை வேண்டும் எனக்கேட்பதில் தவறே இல்லை

 இருந்தாலும் பல வருஷங்களாக என்னால் இதை செய்யவே முடியாமல் இருக்கிறது. ஓரிரு முறைகள் செய்திருப்பேன்; அவ்வளவே.
நமக்கு சரியாக வேண்டிக்கொள்ளத்தெரியாதுன்னு நம் பெரியோர்களுக்குத்தெரியும். ஆகவே அவர்களே எழுதி வைத்து விட்டார்கள். நான் பூஜை முடித்து அதன் அங்கமாக சொல்வது இதுவே.

அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பா4வேன ரக்ஷ ரக்ஷ மஹேஶ்வ
அனாயாஸேன மரணம்ʼ வினாதை³ன்யேன ஜீவனம்ʼ
தே³ஹி மே க்ரிபயா ஶம்போ⁴ த்வயி ப⁴க்திம்ʼ அசஞ்சலாம்

என்ன பொருள்?

நான் உன்னையே சரணடைகிறேண். உன்னைத்தவிர வேறு யாரையும் இல்லை. ஆகவே மஹேஶ்வரா, கருணை கொண்டு என்னை காப்பாற்றுவாய்.

உன்னிடம் அப்படி என்ன கேட்கிறேன்
 
பிறந்தவர் எல்லாரும் ஏதோ ஒரு நாள் இறந்தே போக வேண்டும். அதை விட இயற்கையானது என்ன இருக்கிறது? ஆனால் எப்படி இறந்து போக வேண்டும் என்று கேட்க முடியும் இல்லையா? நோய்ப்பட்டு, இழுத்து பிடித்துக்கொண்டு, தானும் கஷ்டப்பட்டு பிறரையும் கஷ்டப்படுத்தி, சேமிப்பு எல்லாவற்றையும் கரைத்து, தலையெடுத்து வரும் குழந்தைகளின் கனவுகளை சிதைக்கும் படி அவர்களுக்கு செலவு வைத்துக்கொண்டா போக வேணும்?? வேண்டாம், வேண்டாம். இன்றைக்கு படுத்தேன். நாளை காலை எழுந்திருக்கவில்லை என்பது போல போய் சேரவேணும். ஆயாசம் இல்லாமல்.

சரி, அந்த நாள் வரும் வரை? செல்வத்தில் திளைக்க வேண்டும் என்றா கேட்கிறேன்? அது உன்னை மறக்க வைத்து விடுமே? வேண்டாம் வேண்டாம்! அப்படிப்பட்ட செல்வமே வேண்டாம். அதற்கு என்று வறுமையில் கஷ்டப்பட வைத்துவிடாதே! வறுமை இல்லை என்ற நிலையில் வைத்துவிடு போதும்! என் ஜீவனம் வறுமையில்லாமல் இருக்கட்டும்.

அத்தகைய இந்த வாழ்வு எதற்கு? உன்னிடம் சஞ்சலப்படாமல் பக்தி வைக்கத்தான்!
பலரையும் பார்க்கிறேன். இன்றைக்கும் இந்த சாமி பின்னால் ஓடுகிறார்கள். நாளை இன்னொரு சாமி இன்னும் வரப்ப்ரசாதி என்று யாரும் சொன்னால் அங்கே ஓடுகிறார்கள். கோவில் கோவிலாக சுற்றுகிறார்கள். அப்படியும் த்ருப்தி வருவதில்லை! இன்னும் சிலர் ஏதேனும் வேண்டிக்கொள்கிறார்கள். அது நடக்கவில்லை என்றால் சலிப்பு வந்து விடுகிறது. தெய்வம் இருக்கிறதா என்றே கூட சந்தேகம் வருகிறது! இப்படி எல்லாம் சலித்துக்கொண்டு இராமல் நிலையான பக்தி வேண்டும். கருணை கூர்ந்து அதையும் அருள்வாயாக!

 

Friday, April 19, 2013

ஹாப்பி ராம நவமி!


சில மாதங்கள் முன் ஒரு பெரியவரிடம் கேட்ட கதை. அயோத்தி நாட்டில் ஒரு ஏழை ப்ராம்ஹணர் இருந்தார். (அந்த காலத்து கதைகள் முக்காலே மூணு வீசம் இப்படித்தான் ஆரம்பிக்கும்!) குடிசை போட்டுக்கொண்டு எளிய வாழ்க்கை. அவர் பாட்டுக்கு வேதங்கள், சாஸ்த்ரங்கள் அத்யயனம் செய்து கொண்டு, சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தார். பொருள் சம்பாதிக்க வேண்டும் என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல்..... தினசரி ஜீவனம் ஓடிக்கொண்டு இருந்தாலும் நாளையை பற்றிய எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல்.... அவர் பொறுத்த வரை நிம்மதியாக இருந்தாலும் அவரது மனைவி நிம்மதியாக இல்லை. "இந்த ஆண்களுக்கு எங்கே இருக்கிறது பொறுப்புணர்ச்சி? இத்தனை குழந்தைகள் இருக்கின்றனவே அத்தனயும் கடை தேற வேண்டாமா? கவலையே இல்லாம இருக்கிறாரே இந்த மனுஷன்! என்ன செய்யலாம்" என்று சிந்தனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஊரில் பரப்பரப்பாக பேச்சு எழுந்தது. தசரதர் ராமனை காட்டுக்கு போகச்சொல்லி விட்டாராம். அவரும் தன் உடமை எல்லாவற்றையும் தானம் செய்து விட்டு காட்டுக்கு போகப்போகிறாராம்! பட்டாபிஷேகத்துக்கு நாள் குறித்து இருக்கும் போது இப்படி ஒரு திருப்பம்!
இந்த ஸ்திரீக்கும் 'கொக்குக்கு மீன் மீதே குறி' என்பது போல மக்கள் பேசிக்கொண்டதில் ஒன்று நன்றாக மனதில் பதிந்தது. ராமர் அவரது சொத்தை தானம் செய்துவிட்டு.... ஆஹா! நம் வறுமை நீங்க இதோ ஒரு உபாயம் கிடைத்துவிட்டது! உடனே போய் தன் கணவனின் கவனத்தை அவரது சாஸ்த்ர படனத்தில் இருந்து இழுத்தார்.
"ஓய் ப்ராம்ஹணா! நீர் பாட்டுக்கு குடும்பத்தின் கவலை ஏதும் இல்லாமல் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறீரே! வரிசையாக ஏழு பெண்கள் திருமணத்துக்கு நிற்பதை பாரும். கல்யாணத்தை வெறும் கையாலா செய்ய முடியும்? போய் ஏதேனும் பொருள் சம்பாதிக்கும் வழியை பாரும்! ராமர் காட்டுக்கு போகிறாராம். தன் சொத்தை எல்லாம் தானம் செய்துவிட்டு போகப்போகிறாராம். போய் கொஞ்சமாவது வாங்கிக்கொண்டு வாருங்கள்!"

ப்ராம்ஹணனுக்கோ ப்ரதிக்ரஹம் வாங்குவதில் சம்மதம் இல்லை. யாரிடம் ப்ரதி க்ரஹம் வாங்கினாலும் அவரது பாபங்களையும் சேர்த்துதானே வாங்கிக்கொள்கிறோம்? அத்தனையும் இல்லா விட்டாலும் ஒரு பகுதி பாபமாவது? அதை எப்படி தீர்ப்பது? கொடுப்பது ராமரே ஆனாலும் மனசு ஒப்ப மாட்டேன் என்கிறதே? ஆனாலும் மனைவி சொல்வதிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது?
கணவனுக்கும் மனைவிக்கும் நடந்த சம்வாதத்தில் மனைவியின் கட்சியே ஜெயித்தது!

இந்த ப்ராம்ஹணரும் ராமர் இருக்கும் இடத்தை அடைந்தார். வேத ப்ராம்ஹணனாச்சே! ராமரும் வரவேற்றார். என்ன வேண்டும் என்று கேட்டார். ப்ராம்ஹணருக்கோ கேட்க நா எழவில்லை!
ராமருக்கு விஷயம் புரிந்துவிட்டது. இவரது கோலத்தை பார்த்தாலே இவரது ஏழ்மை புரிந்துவிட்டது. காசுக்கு ஆசைபடாத ப்ராம்ஹணனாக இருக்க வேண்டும். சொத்தை தானம் செய்யும் செய்தி கேட்டு வந்திருக்க வேண்டும். ஆனால் ப்ரதிக்ரஹம் வாங்க கூச்சப்பட்டுக்கொண்டு நிற்கிறார்.
இங்கேதான் ராமரின் மேன்மை வெளிப்பட்டது. வலுக்கட்டாயமாக  தானம் கொடுத்து அவரை சங்கடப்படுத்தாமல் மெதுவாக பேசலானார். "ப்ராம்ஹணரே, என் சொத்து அத்தனையும் ஏறத்தாழ தானம் செய்துவிட்டேன். என் பசுக்கள் மட்டுமே இன்னும் எஞ்சியவை. இதோ அரண்மனையின் வெளியே மேயும் கூட்டம்தான் அவை. ஒரு போட்டி வைக்கப்போகிறேன். யாரேனும் இந்த கழியை  இங்கிருந்து வீசினால் அவருக்கு இங்கிருந்து அந்த கழி வீசப்படும் இடம் வரை உள்ள பசுக்களை பரிசாக அளிக்கப்போகிறேன்! முயற்சி செய்து பார்க்க விருப்பமா?"
ப்ராம்ஹணருக்கு பரம சந்தோஷமாகிவிட்டது! பெறுவது பரிசல்லவா? தானம் இல்லையே? கௌபீனத்தை இறுக்கிக்கட்டிக்கொண்டு ஓடி வந்து கழியை வீசி எறிந்தாராம். அது சரயு நதிக்கு அப்பால் போய் விழுந்ததாம்! ராமர் அவரை நமஸ்கரித்து "இங்கிருந்து கழி விழுந்த இடம் வரை உள்ள பசுக்கள் உங்களுடையது. ஓட்டிக்கொண்டு போங்கள்!" என்றாராம்!
 --
பெரியவர் சொன்ன கதைக்கு கொஞ்சமே கொஞ்சம் கண், மூக்கு எல்லாம் வைத்து இருக்கிறேன்.
ஹாப்பி ராம நவமி!

 

Saturday, April 13, 2013

கோளாறான எண்ணங்கள் - குழந்தைகளுக்கான காயத்ரி.

 
குழந்தைகளுக்கான காயத்ரி.
புத்தி.... இந்த புத்தி என்கிறது எல்லாருக்கும் இருக்கிறது. சிலருக்கு மிகவும் கூர்மையாக இருக்கிறது. சிலருக்கு மழுங்கி இருக்கிறது. ஆனாலும் எல்லோருக்குமே புத்தி இருக்கிறது. புத்தி கெட்டு போச்சு, புத்தி கெட்டவனே, ஏண்டா உனக்கு இந்த கெட்ட புத்தி என்கிற ரீதியில் பலதும் கேள்விப்பட்டிருப்போம். இந்த கெட்ட புத்தி என்கிறது என்ன?
முதலில புத்தி என்கிறது என்ன?
மனசு புத்தி இரண்டுமே ஒண்ணுதான்... ஒரு சின்ன வித்தியாசம் தவிர.
மனசு இங்கும் அங்கும் அலை பாய்வது. இது சரியா, தப்பா? இப்படி செய்யலாமா அப்படி செய்யலாமா? இந்த ரீதியில நிக்காம இங்கும் அங்கும் போய்கொண்டு இருக்கும். புத்தி அப்படி இல்லை. அது ஸ்திரமானது. நிச்சயமானது. இதான் சரி, இதான் செய்யப்போகிறேன் என்று சலனமில்லாமல் இருப்பது.

புத்தி கெட்டுப்போச்சு என்கிறதை இரண்டு விதமா பார்க்கலாம். ஏதேனும் ஒன்று தொலைந்து போய்விட்டால் அது கெட்டுப்போச்சு என்கிறோம். புத்தி செயலுக்கு வராமல் ஒரு காரியம் செய்ததாக தோன்றினால், உனக்கு புத்தி கெட்டுப்போச்சா என்று கேட்கிறோம். அதுக்கு புத்தி தொலைந்து போச்சா என்றே பொருள்.
இன்னொரு பக்கம் புத்தி நல்லது செய்யுமானால் அது நல்ல புத்தி கெட்டது செய்யுமானால் அது கெட்ட புத்தி என்று சொல்லலாம். இதில் எது நல்லது எது கெட்டது என்பது விவாதப்பொருளாகி விடுகிறது. இருந்தாலும் பொதுவாக நல்லது செய்வது, கெட்டது செய்வது என்பதில் பெரிய மாற்றுக்கருத்து இராது. நமக்கும் மத்தவங்களுக்கும் நல்லது செய்ய தூண்டுகிறதுதான் நல்ல புத்தின்னு வெச்சுக்கலாம்.

காய்த்ரி என்ன சொல்கிறது? “... எங்கள் புத்தியை தூண்டுவாராக!” அதுக்கு முன்னால சொல்கிறது சூரியனைக்குறித்தா, ஸவிதா என்கிற தேவதையை குறித்தா, பரப்பிரம்மத்தை குறித்தா என்றெல்லாம் இப்ப யோசிக்க வேண்டாம். இறையை நம் புத்தியை நல்ல வழியில் செலுத்த வேண்டிக்கொள்கிறோம். இபப்டியா அப்படியா என்று மன அளவில் அல்லாடாமல், நல்ல வழியில் புத்தி போனாலே நம் பல பிரச்சினையான விஷயங்களுக்கும் தீர்வை நாம் கண்டு பிடித்துவிடலாம்.

தெரிந்தோ தெரியாமலோ பல காலமாக இதையே நாம் குழந்தைகளுக்கு உபதேசம் செய்து வருகிறோம். இன்னும் செய்கிறோமோ என்பது கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. போகட்டும். யோசித்துப்பார்த்தால் இதுவே காயத்ரியின் சாரமாகவே இருக்கிறது. காயத்ரியே வேதங்களின் சாரம். இதுவோ காயத்ரியின் சாரம், நமக்கு புரியும் அளவில்! அதனால் நாமும் நம் குழந்தைகளுக்கு இதையே பயிற்றுவிக்கலாம் என வேண்டிக்கொள்கிறேன்.

அது என்ன என்று கேட்கிறீர்களா?உம்மாச்சி, நல்ல புத்தி கொடு.”

Thursday, April 11, 2013

கோளாறான எண்ணங்கள் - திடீர் ஞானம் (எனக்குத்தான்!)


திடீர் ஞானம் (எனக்குத்தான்!)
சாதகன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகிறான். ஏதோ ஒரு ஸ்டேஜில் அவனுக்கு சில விஷயங்கள் கைகூடுகிறது. சிலது செய்ய முடிகிறது.
சமுதாயத்தில் பலரும் இவனை ஆஹா ஆஹா என்று கொண்டாடுகின்றனர். “கவலைப்படாதே, நல்லா முடிஞ்சுடும்னார். முடிஞ்சுடுத்தே!” , “பையன் பாஸ் பண்ணட்டும்ன்னு ஆசீர்வாதம் பண்ணார். பாஸ் ஆயிடுத்து”, “பொண்ணுக்கு கல்யாணமே ஆகலை; ஆசீர்வாதம் பண்ணார். சட்டுன்னு பிக்ஸ் ஆயிடுத்துன்னா பாத்துக்கோங்களேன்” ... இப்படி பல வேரியண்ட்ஸ் இருக்கலாம். அப்போது சாதகனுக்கே தன் மீது ஒரு அசட்டு நம்பிக்கை வந்துவிடுகிறது. தன்னால் பல விஷயங்கள் முடியும் என்று தோன்றுகிறது.

இப்படியே தொடருமானால் சாதனை கெட்டுப்போய் விடுகிறது. சக்திகளும் காணாமல் போய் விடுகின்றன. ஆனால் ஒரு பேர் வாங்கியாச்சே! இன்னும் பாலோயர்கள் அதிகமாகிக்கொண்டுதான் இருப்பார்கள்! காரியம் நடக்காதவர் மத்தவங்ககிட்ட சொல்ல மாட்டாங்க. காரியம் ஆகிவிட்டவர்கள் - அது தற்செயலோ, அவரவர் முயற்சியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் - தம்பட்டம் அடிப்பார்கள். இன்னாருடைய கருணை தனக்கு இருக்கிறதுன்னு சொல்லிக்கணுமே! அதுல ஒரு கெத்து இருக்கு! இதை தன்னால்தான் முடிந்தது என்று அந்த 'சாதகனும்' நம்ப ஆரம்பித்துவிடுகிறான். மமதை ஏறிக்கொண்டே போகிறது. தான் ஈஶ்வரன் என்றே நம்பி அப்படியே தன் 'அடியார்கள்' அழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பும் வந்துவிடுகிறது!

அஹம் ப்ரஹ்மாஸ்மி என்பது வேத வாக்கியம். மஹா வாக்கியம் என்பார்கள். இந்த மஹாவாக்கியங்கள் நான்கு. நாலும் ஒரே விஷயத்தைத்தான் வேறு வேறு வழியில் சொல்லுகின்றன. இவை நான்கு வேதங்களின் உபநிஷத்துகளில் ஒவ்வொன்றாக இருக்கின்றன. இந்த நான்கில் ஒன்றை குரு சிஷ்யனுக்கு தகுந்த நேரத்தில் உபதேசம் செய்து இதையே மனனம் செய்து வரச்சொல்லுவார். அதனால்தான் இவற்றூக்கு மஹாவாக்கியங்கள் என்று பெயர்.
இந்த அஹம் ப்ரஹ்மாஸ்மி ஐ சிலர் டேக் (tag) ஆகக்கூடப்போட்டுக்கொள்கிறார்கள்.
ஒருவன் தானே ஈஶ்வரன் என்று சொல்லிக்கொள்வதற்கும் அஹம் ப்ரஹ்மாஸ்மி என்று சொல்லிக்கொள்வதற்கும் என்ன வித்தியாசம்? இது இன்னும் அரொகென்ட் ஆக தெரியவில்லை?
மேம்போக்காக பார்த்தால் அரொகென்ட்தான். ஆனால் விளைவை பாருங்கள்!
தான் ஈஶ்வரன் என்று சொல்லிக்கொள்வதால் ஒருவன் ஈஶ்வரன் ஆகிவிடுவதில்லை. ஈஶ்வரனுக்காக டெபெனெஷன் ஐ பார்த்தால் ஒரு ஜீவன் ஈஶ்வரன் ஆகவே முடியாது!


அவித்யை, அஸ்மிதை, ராகம், துவேஷம், அபிநிவேஷம் ஆகிய ஐந்தாலும்; தர்மம், அதர்மம் இவற்றாலும்; தர்ம பலன்களான ஜன்மம், ஆயுள், போகம் இவற்றாலும்; சித்தாரூடமான சம்ஸ்காரங்களாலும்; முக்காலத்திலும் சம்பந்தம் பெறாதவனும், ஜீவனை விட வேறானவனும் ஆனவன் ஈஶ்வரன்.

முக்காலத்திலும்ன்னு சொல்லி இருக்கு இல்லையா? அதனால ஒரு காலத்தில் சாதாரணமாக இருந்த ஜீவன், பிற்காலத்தில் ரொம்ப முன்னேறி ஈஶ்வரனுக்கு நிகரான சக்திகளை பெற்றாலும் ஈஶ்வரனாக முடியாது!

ஒரு உயர்வு நவிற்சியாக அப்படி சிலரை சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையாகாது.
ஆனால் மமதையால அப்படி தன்னை நினைக்கிறவங்களுக்கு மத்தவங்க தன்னிடம் இப்படி இப்படி நடந்துக்கணும் என்று எதிர்பார்ப்பும் வந்து விடுகிறது! அதுக்கு அப்புறம் அதுக்கு தகுந்தபடி நடந்துக்கவும் செய்யறாங்க!

மாறா அஹம் ப்ரஹ்மாஸ்மி ன்னு சொல்லிக்கறவங்களை பார்க்கலாம். இப்படி நினைக்க நினைக்கவே அந்த திசையில் அவங்க முன்னேறுவாங்க!
ப்ரஹ்மம் எப்படி இருக்கும்?


"நித்தியம் பூரணம் ஏகம் பரமார்த்தம் பரப்பிரமம் நிதானம் சாந்தம் சத்தியம் கேவலம் துரியம் சமம் திருக்கு கூடஸ்தன் சாட்சி போதம் சுத்தம் இலக்கியம் சநாதனம் சீவன் தத்துவம் விண் சோதி ஆன்மா முத்தம் விபு சூக்குமம் என்று இவ்வண்ணம் விதிகுணங்கள் மொழியும் வேதம்.”
"அசலம் நிரஞ்சனம் அமிர்தம் அப்பிரமேயம் விமலம் அநுபாதேயம் அசடம் அநாமயம் அசங்கம் அதுல நிரந்தரம் அகோசரம் அகண்டம் அசமநந்தம் அவிநாசி நிர்குண நிட் கள நிரவயவம் அநாதி அசரீரம் அவிகாரம் அத்துவிதம் என விலக்காம் அநேகம் உண்டே.”

ப்ரம்மம் பூரணமானது, சாந்தமானது, சத்தியமானது, நிச்சலனமானது, அமிர்தமானது, அகண்டமானது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இப்படி இருக்க ஒருவர் நினைத்தால் அவர் முன்னேறுவது நிச்சயமே!

ஆக நான் ப்ரம்மம் ன்னு ஒருத்தர் தாராளமா சொல்லிக்கலாம். ஆனா தான் ஈஶ்வரன்னு நினைக்ககூட கூடாது!

அந்தக்கரணத்தின் வெளிப்பாடு...

 
துக்கம் என் வருகிறது? இந்த சரீரம் இருப்பதால் வருகிறது. அதாவது இந்த சரீரம் இருக்கும் வரை துக்கம் வந்து கொண்டுதான் இருக்கும். சரீரம் ஏன வந்தது? தீர்க்க வேண்டிய கர்மாக்கள் இருப்பதால் சரீரம் வந்தது. தீர்க்க வேண்டிய கர்மாக்கள் ஏன் வந்தன? ராக த்வேஷங்களால் வந்தன.
மனம் என்று பொதுவாக நாம் சொன்னாலும் அது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று அந்தக்கரணத்தின் நான்கு வெளிப்பாடுகள்.
ராக த்வேஷங்கள் இதன் வளர்ச்சிதான். அது 16 வகைப்படும்.

ராகம் என்பது ஸ்த்ரீ விஷயமாக விஷய சுகத்தில் உண்டாகும் எண்ணம்.
த்வேஷம் தனக்கு கெடுதல் செய்த ஒருவனுக்கு மறு கெடுதல் செய்யும் எண்ணம். அதாவது பழிக்குப்பழி என்கிறோமே அது.
வீடு, வயல் போன்ற சொத்துக்களை விரும்பி சம்பாதிக்கும் எண்ணம் காமம்.
மேல் சொன்னதை அடைய தடை செய்பவரிடம் உண்டாவது கோபம் என்னும் வெறுப்புணர்ச்சி.
தான் சம்பாதித்ததில் கொஞ்சம் கூட யாருக்கும் கொடுக்கக்கூடாது என்னும் 'நல்ல' எண்ணம் லோபம்.
தனக்கு சொத்து இருக்கிறது என்ற கர்வத்தில் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்று பகுத்தறிவே கெட்டுப்போவது மோஹம்.
எனக்கு சொத்து இருக்கிறது எதுதான் என்னால் செய்ய முடியாது என்ற எண்ணம் மதம்.
யாரேனும் தனக்கு சமமாக சொத்து வைத்திருந்தால் அதை சகிக்க முடியாமல் இருப்பது மாத்ஸர்யம்.
ஏதேனும் கஷ்டம் வந்தால் இந்த கஷ்டம் அவனுக்கு வராமல் எனக்கு வருவானேன் என்கிற எண்ணம் ஈர்ஷ்யை.
ஏதேனும் சுகம் வந்தால் இது எனக்கு மட்டும் வராமல் அவனுக்கும் வந்திருக்கிறதே என்கிற எண்ணம் அசூயை.
இந்த தர்மம் செய்வதால் எனக்கு புகழ் கிடைக்கும் என்று நினைப்பது டம்பம்.
எனக்கு சமம் உலகிலேயே யாருமில்லை என நினைப்பது தர்ப்பம்.
எல்லாவற்றிலும் பிடிவாதம் என்பது அஹங்காரம்.
இது வரை பார்த்தவை முனைந்து குறைக்க / விட வேண்டியவை.
அடுத்து யாரும் செய்தே ஆக வேண்டிய சில விஷயங்கள். உண்பது, மல ஜலம் கழிப்பது முதலானவை இச்சை.
குரு, நல்லவர்கள், தேவதைகளிடம் அதிக ப்ரீதி வைப்பது பக்தி.
வேதாந்த வாக்கியத்திலும், யாகம் முதலான காரியங்களிலும், குருவின் உபதேசத்திலும் நம்பிக்கை கொள்வது சிரத்தை.
இவற்றை எல்லாம் ஏன் விசாரிக்க வேண்டும்?

Wednesday, April 10, 2013

கர்மாக்களின் வகைகள்


கர்மா மனம், சொல், உடம்பு ஆகியவற்றால் செய்யப்படுகிறது.

மனதால் செய்யப்படும் கர்மாக்களில் ..
இறைவனை குணங்களுடன் - இந்த ரூபம், இந்த சக்தி என்பது போல – உபாசிப்பது; இப்படிப்பட்ட குணங்கள் ஏதும் இல்லாமல் உபாசிப்பது. பக்தி, வைராக்கியம் (பற்றின்மை) இவற்றை ஒட்டிய எண்ணங்கள், பர லோகம் குறித்த சிந்தனைகள் ஆகியன புண்ய கர்மாக்கள். உலக விஷயங்களை அனுபவிப்பதிலேயே நாட்டம், மற்றவர்களுக்கு கெடுதல் செய்யும் எண்ணம், வேதம் சாஸ்திரங்கள் நம்பத்தகுந்தவை அல்ல என்னும் எண்ணம், தர்மம் அதர்மம் ஏதும் இல்லை என்னும் எண்ணம் - இவை பாப கர்மாக்கள். இந்த எண்ணங்கள் பலதும் கலந்து இருப்பது மிஸ்ர - கலந்த – கர்மாக்கள்.

சொல்லால் செய்யப்படும் கர்மாக்களில் வேத அத்யயனம், சாத்திரங்கள் வாசித்தல், கீதா பாராயணம், ஸ்ஹஸ்ரநாமங்கள் ஜபம், பஞ்சாக்ஷரம் முதலான மந்திர ஜபங்கள், பகவந்நாம சங்கீர்த்தனம், பரோபகாரம் செய்வதற்கான சொற்கள், உண்மை பேசுதல், ஹிதமாக பேசுதல் போன்றவை புண்ணியமானவை. வேத சாத்திரங்களை நிந்தித்தல், தேவதா நிந்தனை, பொய் பேசுதல், புறம் சொல்லல், கடுமையான பேச்சு, ஏளனம் செய்தல் - இவை பாப கர்மாக்கள். வேதாத்யயனம், பூஜை செய்தல், மேற் சொன்ன புண்ணிய சொற்கள் இவற்றின் நடுவில் பிறரை நிந்தனை செய்தல், பொய், பரிஹாஸம், லோக சம்பந்தமான சொற்கள் இவை கலந்த கர்மாக்கள்.

புண்ய தீர்த்த ஸ்னானம், குரு, தேவதை இவர்களை வணங்குதல், தேவதா பூஜை, நமஸ்காரம், சாதுக்களை தரிசித்தல், த்யாகம், உலக நன்மைக்காக சஞ்சரித்தல் - இவை சரீரத்தால் செய்யப்படும் புண்ய கர்மாக்கள். பிறரை ஹிம்சித்தல், பரஸ்த்ரீ சங்கம், திருட்டு, துஷ்ட சகவாசம் ஆகியவை காயிக பாப கர்மாக்கள். அன்னதானம் செய்ய மற்றவர்களுக்கு தொல்லை கொடுத்தல், கோவில் கட்ட பிறர் சொத்தை அபகரித்தல், தண்ணீர் பந்தல் ஏற்படுத்தி, அதற்கு உழைத்தவனுக்கு கூலி கொடுக்காமல் இருப்பது போன்றவை புண்ணியம் பாபம் கலந்தவை.

இவற்றை அவ்வப்போது விசாரிக்க வேண்டும். அதாவது நம் செயல்கள் இவற்றில் எங்கே அமைகின்றன என்று பார்க்க வேண்டும்.

வாழை மரம் வளர்ப்பதில் முக்கிய பலன் வாழைப்பழம் பெறுவது என்றாலும், இடையில் வாழைப்பூ, வாழை இலை ஆகியன பெறுவது இடையில் ஏற்பட்ட பலன் போல....
முன் சொன்ன விசாரணயால் இவ்வளவு செய்தாலும் ஆத்மா இவை எவற்றுடனும் சம்பந்தப்படாமல் இருக்கிறது என்று திடமாக அறிவது முக்கிய பலனாகும். இடையில் புண்ணிய காரியங்களையே செய்து வர வேண்டும், அப்படி முடியாவிட்டால் கலந்த கர்மாவாக இருக்க வேண்டும். பாப கர்மாக்களை ஒரு போதும் செய்யக்கூடாது என்று உணர்ந்து செயல் படுவது இடைப்பட்ட பலனாகும்.

 

Monday, April 8, 2013

மறு பிறவி.

 

நம்ம எல்லாருக்கும் - ம்ம்ம் அனேகமா எல்லாருக்கும் - அடுத்த பிறவி இருக்கும். அது எப்படி அமையும்?
நாம் செய்கிற பாப புண்ணியங்களுக்கு தக்கப்படி அமையும்.
புண்ணியம் மட்டுமே செய்கிறவங்க தேவர்களா பிறவி எடுப்பாங்க. இப்ப சூரியன் என்கிற தேவனை நாம் பார்க்கிறோம் வழி படுகிறோம்ன்னா அதுக்கு அவர் இதுக்கு முந்தைய பிறவியில நிறைய புண்ணியம், தபஸ் எல்லாம் செய்ததே காரணம். அதனால இவருக்கு மத்தவங்க வழிபாடும், அவர்களுடைய வேண்டுகோள்களை நிறைவேற்றி வைக்க சக்தியும் இருக்கு.
இதுலேயும் ஒரு க்ரடேஷன் இருக்கு. ரொம்ப ரொம்ப புண்ணியம் செய்தவங்க தேவர்களிலேயே தலைவனான ஹிரண்ய கர்ப்பனாக பிறவி பெறுவாங்க. நிறைய புண்ணியம் செய்தவங்க இந்திரன் முதலான பிறவி பெறுவாங்க. கொஞ்சமா புண்ணியம் செய்தவங்களுக்கு கந்தர்வர்கள், யக்ஷர்கள் போன்ற பிறவி பெறுவாங்க.

பாபம் செய்தவங்க?
மத்தவங்களுக்கு துன்பம் தர ஜன்மாவா எடுப்பாங்க. அதுதானே வாசனை?
தாவரங்கள், புழு, பூச்சி போன்ற ப்ராணி ஜன்மம் கிடைக்கும்.
நிறைய பாபம் செய்தவங்க எடுக்கிற பிறவி மத்தவங்க அடிக்கிற உதைக்கிற ஜன்மமா இருக்கும். கொசுவை அடிச்சு நசுக்கி கொல்லாதவங்க சிலரே இருப்பாங்க. பூரானை பார்த்தாலும் பலரும் அடிச்சுட்டே அடுத்த காரியம் பார்ப்பாங்க. இதே போல அட்டை, பாம்பு, தேள், ஆந்தை ன்னு பலதும். விஷ முள் செடி, முள் மரம் ன்னு இருக்கும். அதை எல்லாம் பார்த்தாலும் ஜனங்க அவற்றை வெட்டியோ எரிச்சோ அகற்றுவாங்க.
மத்திய அளவில் பாபம் செய்தவங்க தாவர வகையில் மா, பலா, வாழை, தென்னைன்னும்; ப்ராணிகள் வகையில் க்ராம பசுக்களான எருமை, நாய், பன்றி, கழுதை, ஒட்டகம் போல பிறவி பெறுவாங்க. இதுக்கெல்லாம் கூப்டு சோறும் போடுவாங்க, கல்லாலேயும் அடிப்பாங்க, இல்லையா?
கொஞ்சமே பாபம் செய்தவங்க பசு மாடு, குதிரை, அரச மரம், துளசி, வில்வ மரம் போல மதிப்பு பெறுகிற தாவர, மிருக ஜன்மங்கள் பெறுவாங்க.

அது சரி, எல்லா காரியமுமே பாபம் அல்லது புண்ணியம்ன்னு இருக்குமா என்ன?
அப்படி இருக்காதுதான். பல காரியங்களில பாபம் புண்ணியம் கலந்தே இருக்கும். ஒரு சாராருக்கு சுகமும் இன்னொரு சாராருக்கு கஷ்டமும் கொடுக்கிறதா பல காரியங்கள் இருக்கும். அதே போல புண்ணியம் மட்டுமே செய்கிறவங்களோ, பாபம் மட்டுமே செய்கிறவங்களோ கிடையாது. எல்லாம் பாபம் / புண்ணியம் ரெண்டுமே கொஞ்சமோ / நிறையவோதான் செய்து கொண்டு இருக்கிறோம்

இப்படி கலப்படியான கர்மாக்கள் செய்கிறவங்களுக்கு மனித ஜன்மம் கிடைக்கும். இதுலேயே புண்ணியம் அதிகமாக செய்தவங்களுக்கு ஆத்ம சிந்தனை, வேதாந்த சிரவணம், நிஷ்காம்ய கர்மானுஷ்டானம், சத்குருவை அடைதல் போன்ற ஆத்ம அபிவிருத்தி செய்து கொள்ளக்கூடிய பிறவி கிடைக்கும்.

மத்திய அளவு கலந்த கர்மா செய்தவர்களுக்கு தன் சொந்த தர்மத்தை அனுசரிக்கவும், காம்ய கர்மாக்களை செய்தல் போன்ற மத்திய தர வாழ்க்கைக்கு அனுகூலமான பிறவி கிடைக்கும்.
நிறைய பாபம் கொஞ்சமே கொஞ்சம் புண்ணியம் செய்திருந்தால் சமுதாயம் புறக்கணிக்கிற வேடுவன், திருடன், கொலைகாரன், சமூக விரோதி போன்ற ஜன்மாவாக கிடைக்கும்.

இது சமீபத்தில் லகு வாசுதேவ மனனத்தில் படித்து, பின் யோசித்தது.

Friday, April 5, 2013

கோளாறான எண்ணங்கள் - கொஞ்சம் ஆபத்தான பதிவு!


கொஞ்சம் ஆபத்தான பதிவு!
இந்த பதிவு கொஞ்சம் மேம்பட்ட சிந்தனை உடையவர்களுக்கு. மற்றவர்களுக்கு சரிப்படலாம்; இல்லாமலும் போகலாம்; சில விரும்பத்தகாத விளைவும் உண்டாகலாம். அதனால் முதல்லேயே இப்படி ஒரு எச்சரிக்கை!
எல்லாம் அவன் செயல்ன்னா கெட்ட விஷயங்களும் நடக்குதே அதுவும் அவன் செயலா? 'அப்படித்தான்' ன்னா அவன் என்ன இறைவன்? கருணையாளன்னு எல்லாம் சொல்லவே முடியாதே?
நாத்திகவாதிகளும் குதர்க்கவாதிகளும் அப்பப்ப முன் வைக்கிற வாதம் இது.

முதல்ல எல்லாம் அவன் செயல் என்கிறது சரிதானா என்று பார்க்கலாம்.

நாம் இப்ப வாதம் பண்ணுகிற லெவல்ல - சரியில்லை.
நாம் செய்கிற காரியங்களுக்கு நாமேதான் பொறுப்பு. ஒருத்தனை அடித்து விட்டு "நான் செய்யலை; கடவுள்தான் செய்தார்" ன்னா எந்த கோர்ட்டும் அதை ஒத்துக்காது. தண்டனை கொடுக்கத்தான் கொடுக்கும்.
ஒரு சூழ்நிலையை இறைவன் உருவாக்கி வைக்கிறான். எப்படிப்பட்ட சூழ்நிலை? அது நம்முடைய முன் ஜன்ம கர்மாக்கள் என்ன பாக்கி இருக்கோ, அதுல இந்த ஜன்மாவில என்ன அனுபவிக்கணும்ன்னு இருக்கோ அதுக்கு அனுகூலமான சூழ்நிலையை அமைச்சுக்கொடுப்பான். இப்ப மீதி நம் செயலை பொருத்து இருக்கு. நம்ம வாசனையை பொருத்து இருக்கு. அது முன் ஜன்மாக்களில பழகின வழியில போகத்தூண்டும். புத்தி செயல்பட்டா அதுக்கு மாறாகவும் போக முடியும். நல்ல சிந்தனையோட சரியா செயல்பட்டா நல்லதே நடக்கும். இல்லை கெட்ட சிந்தைனையோட செயல்பட்டா கெட்டது நடக்கும். இல்லை மிக்ஸ்ட் ஆகவும் போகலாம்.

முன்னேயே ஒரு பதிவில எழுதியபடி ஒரு மாடு முளையில கட்டி வெச்சு இருக்கு. அது எவ்வளவு மேய முடியும்? கயிறு அனுமதிக்கும் அளவுக்கு மேய முடியும். ஆனால் அப்படி அந்த பரப்பில இருக்கறதை முழுக்க மேயுமா இல்லையா என்கிறது அதோட சாய்ஸ்! பழக்கத்தால் இவ்வளோன்னு மேயலாம். இல்லை பசியால இவ்வளோன்னு மேயலாம். இல்லை சும்மா இருக்கலாம்!

இதேப்போலத்தான் அமைகிற சூழ்நிலையில ஒருத்தர் எவ்வளோ பெறலாம் என்பது ஒரு லிமிட்டுக்குள்ள அவங்களோட சாய்ஸ்!

ஆனா இதிலேயே சிலர் எனக்குன்னு ஒண்ணுமில்லை; எல்லாம் உன் செயல்ன்னு பலமா தோன்றி உண்மையா சரண்டர் செய்துட்டாங்கன்னா - இங்கே கவனிக்கணும், உண்மையான சரண்டர் பத்தி பேசறேன்; சும்மா உதட்டளவுக்கு சொல்கிற சரண்டர் இல்லை.- அதுக்கப்பறம் அவரை பொருத்தவரை நடக்கிற எல்லாமே கடவுளோட காரியமாத்தான் இருக்கும். அதாவது ஒண்ணு அவரோட கர்மாவை தீர்க்கிறதா இருக்கும் அல்லது சரியாகவே இருக்கும். ஏதா இருந்தாலும் உண்மையா சரண்டர் பண்ண ஆசாமி கவலையே பட மாட்டார். "கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்" ன்னு இறை நினைவுடன் சும்மாவே இருப்பார்! அப்படி இல்லாமல் "ஏன் என்னை கைவிட்டீர்" ன்னு புலம்பறவங்க முழுசா சரண்டர் செய்தவங்க இல்லை.

இன்னொரு லெவல்ல அது சரிதான்! அதாவது எல்லாம் அவன் செயல்தான்!
நடக்கிறது எல்லாமே அவன் செயல்தான்! இன்னைக்கு நான் கஷ்டப்படறேன்னாலும் அது அவன் செயல்தான்; சுகப்பட்டாலும் அது அவன் செயல்தான்!

இதைப்பத்தி பேசிகிட்டு இருக்கறப்ப ஒரு சகா கேட்டார். ஒரு குழந்தையை கொன்னு போடறான். அது சரிதானா? அது கெட்ட செயல்தானே? அதுவும் கடவுள் செய்ததுதானா?

ரைட்! அது கெட்ட செயல்தான். அதுக்கு அந்த ஆசாமிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

இந்த மாதிரி கொடுமைக்கு அவனுக்கு மரண தண்டனை கொடுக்கணும்.

அதுதான் நடந்து இருக்குன்னு வெச்சுக்கலாமா?

எப்படி?

முன் ஜன்மத்தில இந்த ஆசாமி ஒரு குழந்தையா இருந்து, கொலையான குழந்தை ஆசாமியா இருந்து இதே போல கொன்னு இருந்தா?

இந்த மாதிரி சமாசாரங்கள்தான் 'தொந்தம்' என்கிறது. இப்ப கெட்ட விஷயம் ஒண்ணு உதாரணமா பார்த்தோம். இதே போல நல்லதும் இருக்கலாம். ஒருத்தர் இன்னொருத்தருக்கு நிறைய பொருள் உதவி செய்து இருந்தா, அடுத்த ஜன்மத்தில அது ரிவர்ஸ் ஆக வாய்ப்பு இருக்கும். முன்னே சொன்னது பாபம் ன்னா இப்ப இது புண்ணியம். இரண்டுமே நம்மை இன்னொரு பிறவில ஆழ்த்துகிற விலங்குதான். ரா.கி இதை பொன் விலங்கு என்பார்! இரும்பா இருந்தாலும் பொன்னா இருந்தாலும் விலங்கு விலங்குதானே?!

சரி சரி எல்லாத்துக்கும் அவனே பொறுப்புன்னா ஏன் கெட்டது நடக்கணும்?

இங்கதான் கொஞ்சம் டேஞ்சர்! சரியா புரிஞ்சுக்கணும்.
'நல்லது', 'கெட்டது' நாமா உருவாக்கிக்கொண்டது. மேன் மேட் கான்சப்ட்! அல்லது மனிதனுக்காக கடவுள் உருவாக்கிக்கொடுத்த கான்சப்ட். (வேறு வழியில்லை! ரிஷிகள் மூலமா சாத்திரங்களில நல்லது கெட்டது சொல்லி இருக்கே!)
இறைவனைப்பொறுத்த வரை அவன் சாம்ராஜ்யத்தில் ஒரு செயல், அதுக்கான எதிர் செயல்.... இதை நடத்திக்கொண்டே போவதுதான். அல்லது அதுக்கான சூழ்நிலையை அமைச்சு கொடுப்பதுதான். இதில் நல்லதும் இல்லை; கெட்டதும் இல்லை. ந பாபம், ந புண்யம்!
இறைவன் ஒரு ஜட்ஜ். கொஞ்சம் கருணைக்கு பாத்திரமா இருந்தா, அதாவது வேற நிறைய புண்ணிய காரியங்கள் செய்து இருந்தா, கொஞ்சம் கன்டோன் பண்ணி கொஞ்சம் கேன்சல் பண்ணி தண்டனையை குறைக்கலாமே தவிர, தண்டனை இல்லாமல் செய்வது நீதி ஆகாது. அதனால் நம்மோட செயல்களுக்கு எதிர்வினை நடத்தவே நடத்துவான்.

பின்ன இது ஒரு விஷஸ் சைக்கிள் ஆகாதா? நான் அவனை அடிக்க அடுத்த ஜன்மத்தில் அவன் என்னை அடிக்க அடுத்த ஜன்மத்தில..... ஆமாம் ஆகும். அதுக்குத்தான் வேற வழி சொல்லி இருக்கேன்.... வேற பதிவில.....