Pages

Showing posts with label டீக்கடை பெஞ்ச் கதைகள். Show all posts
Showing posts with label டீக்கடை பெஞ்ச் கதைகள். Show all posts

Thursday, September 13, 2018

டீக்கடை பெஞ்ச் கதைகள் -14





'ஹும்!' என்று முனகிக்கொண்டே டீக்கடையில் உட்கார்ந்தான் அந்த இளைஞன். 'ஏன் தம்பி, என்ன ஒரு மாதிரி இருக்கே?' என்று கேட்டுக்கொண்டே சூடான டீயை கொடுத்தார் கடைக்காரர். 'ஒண்ணுமில்லே !'என்று சொல்லிகொண்டு டீயை உறிஞ்சினான் இளைஞன்.
சற்று நேரத்தில் தானாகவே பேச ஆரம்பித்தான்.
'இன்னைக்கு பிள்ளையார் சதுர்த்தி. வீட்டுல பொண்சாதிக்கு உடம்பு சரியில்ல. வெறும் நாலு கொழுக்கட்ட தவிர ஒண்ணும் செய்ய முடியல. மத்த வேலை எல்லாம் நா கவனிக்க வேண்டி இருந்ததால பூசையும் ஒழுங்கா செய்ய முடியலை. இப்ப ஒத்தர் அவரோட இடத்துக்கு அழைச்சுப்போனார். அங்க என்ன விரிவா பூஜை பண்ணாங்க. எவ்ளோ பூ! எவ்ளொ அருகபுல்! எவ்ளோ இலை.. வகைவகையா. எவ்ளோ நைவேத்தியம்! இதெல்லாம் பாத்துட்டு நாமும் இருக்கோமேன்னு தோணிச்சு.'
களுக் என்று சிரிப்புச்சத்தம் அருகில் கேட்டது.
திரும்பிப்பார்த்தான். 'நாதாம்பா!' என்றார் பெரியவர். கடைக்காரர் கொடுத்த டீயை வாங்கி உறிஞ்சிகொண்டே பேச ஆரம்பித்தார்.

'உனக்கு ஒரு கதை சொல்லவா?'
'உம் உம்! கதை எப்பவுமே இஷ்டம்தானே?'
'தாமிரபரணி கரையோரம் ஒரு சின்ன கிராமம். அங்கே வயசான ஒரு பாட்டி இருந்தா. தனியாத்தான் இருந்தா. தள்ளாமையும் வந்தாச்சு. பிள்ளையார் சதுர்த்தி வந்தது. ஊரெல்லாம் கொண்டாட்டம். இவளுக்கோ தள்ளாமை; ஒண்ணுமே செய்ய முடியலையேன்னு வருத்தம். எப்பவுமே சமைக்கிற ஒரு பிடி சோறை பகவானேன்னு நிவேதனம் செஞ்சுட்டுத்தான் சாப்பிடுவா. இன்னைக்கு ஒண்ணும் விசேஷமா செய்ய முடியலே. இந்த வருத்ததோடயே தாமிரபரணில குளிக்கப்போனா. குளிச்சு கரையேறினப்பறம் அரச மரத்தடில இருந்த பிள்ளையாரை பாத்தா. உனக்கு ஒண்ணுமே இன்னைக்கு செய்ய முடியலியேன்னு வருத்தத்தோட சொன்னா. அங்கே யாரோ விட்டுப்போன ஒரு மண்கலயம் கிடந்தது. அதை எடுத்து நல்லா சுத்தம் பண்ணி ஆத்துத்தண்ணிய மொண்டு பிள்ளையார்கிட்ட வெச்சா. பகவானே! என்னால் முடிஞ்சது இவ்ளோதான்னு சொல்லிட்டு வீட்டுக்கு போயிட்டா.

'இப்ப பிளையார் நிறைய இடங்களில நிவேதனம் பண்ண விதவிதமான பக்‌ஷணங்கள், கொழுக்கட்டை, இட்லி, சுண்டல்ன்னு நிறைய சாப்டு களைப்பாயிட்டார். தாகம் எடுத்தது. சுத்தி முத்தி பாத்தார். இவ்வளோ நிவேதனம் நடந்தாலும் தண்ணி மட்டும் யாரும் நிவேதனம் செய்யலையாம். அப்பதான் பாட்டி தண்ணி கலயத்த வெச்சுட்டுப்போனா. பிள்ளையாருக்கு ஒரே சந்தோஷம்! எடுத்து மடக் மடக்குன்னு குடிச்சார். ஏவ்ன்னு ஏப்பம் விட்டார். பாட்டிக்கு தானா அவரோட அருள் கிடைச்சுடுத்து.'

'அப்ப இப்படி விஸ்தாரமா பூஜை செய்யறது, நிவேதனம் எல்லாம் தேவை இல்லையா?'

'தேவை இல்லைன்னு நான் சொல்லலையே? யார் யாரால என்ன முடியுமோ அவ்வளவு செய்யட்டும். பகவான் என்ன செஞ்சேன்னு மட்டும் பார்க்கிறதில்லை. உன்னால் என்ன முடியும், உனக்கு இருக்கிற லிமிடேஷன் என்ன, உன் மனசு எப்படி இருக்குன்னுதான் பார்க்கிறார்.'

இளைஞன் யோசித்தான். என்னால் முடிஞ்சத இன்னைக்கு பண்ணேன் என்று நினைத்தான். ஆறுதலாக இருந்தது.

திரும்பிப்பார்க்கவில்லை. அவர் அங்கே இன்னும் இருக்க மாட்டார் என்று தெரியும்!

Friday, September 9, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 13





“அப்ப கொல்லறது தப்பில்லங்கறீங்களா?”
இளைஞன் பெரியவரை பார்த்து கேட்டான்.
நிதானமாக டீயை உறிஞ்சியவர் முகத்தில் ஒரு சிறு புன்னகை.
”அது நேரம், சந்தர்பம், ஆளை பொறுத்தது!”
“என்ன சொல்றீங்க? அதெப்படி பொறுத்தது? புரியலையே!”
“உன் குழந்தை நடக்கிறப்ப ஒரு எறும்பை மிதிச்சுது; அது செத்துப்போச்சு. குழந்தையோட தப்பா?”
“உம்... இல்லைதான்”
“நீயே வண்டி ஓட்டிகிட்டு இருக்கே. ஒரு நாய்க்குட்டி குறுக்கே திடுதிப்புன்னு வந்துடுத்து; நிறுத்தப்பாத்து மோதிட்டே. அது செத்து போச்சு. அது உன் தப்பா?”
“ஹும்ம்ம்ம்ம்”
“அதான் சொன்னேன். இதுக்கு ஒரு பொதுவான பதில் இருக்க முடியாது. தேசம் காலம் சூழ்நில பொருத்து மாறும். பனி மட்டுமே இருக்கிற ஐஸ்லாந்து மாதிரி ஊர்ல என்ன சாப்பிடுவாங்க? அங்கே கிடைக்கற மீன் முதலான அசைவ உணவுதான் இருக்கும். வேற வழி? இவங்க பாபம் செய்யறதா சொல்ல முடியுமா? ”
“செடி கொடிகளுக்கும் உசிரு இருக்கே? அதை சாப்பிடறது?”
“வெண்டக்கா, கத்திரிக்காயை பிச்சா செடி சாகறதில்லையே!”
“சரி, கீரை? அதை முழுக்க பிச்சுத்தானே சாப்பிடறோம். அது போல கிழங்குகள். கொய்யாக்காவை நல்லா அரைச்சு சாப்டா எத்தனை எத்தனை விதைகள் சாகுது!”
“இதுல எல்லாம் பாபம் இல்லையான்னு கேட்டா, ஆமாம் இருக்கு. இப்ப காணாமப்போய்கிட்டு இருக்கற அக்னிஹோத்ரம் என்கிற கர்மாவை செய்யறவங்க இஷ்டி ந்னு ஒரு ஹோமம் ஒவ்வொரு பாட்டிமைக்கும் செய்வாங்க.”
“தசரதர் செஞ்சாரே புத்ர காமேஷ்டி அது மாதிரியா? ”
“அட! ஆமாம். சரியா பிடிச்சுட்டே, புத்திர காம இஷ்டி - குழந்தையை விரும்பி செய்கிற இஷ்டி அதான் அது! இது ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமிக்கும் அப்பறம் வரது. அதுல நெல்லை கொண்டு வந்து குத்துவாங்க, அரிசியாகும்; அதை திருப்பி மாவாக்க இடிப்பாங்க. இந்த நெல் முளைக்காம இப்படி செஞ்சிட்டதால இது ஒரு பாபம்ன்னு சொல்லி இதுக்கு ப்ராயச்சித்தம் செய்வாங்க! குடும்பஸ்தன்னா இருந்தா இப்படி பாபம் செய்யறதை தவிர்க்க முடியாது!
“ப்ரம்மச்சாரி பத்தி விஷயம் இல்லே. அவன் மாணவன்; கத்துக்கறப்ப தவறுகள் நடக்கும். க்ருஹஸ்தன் பாவம், அவன் செய்யக்கூடிய பல விஷயங்களும் ஏதோ ஒரு வகையில் ஜீவ ஹிம்சை செய்யத்தான் செய்யும். இதை ஒத்துகிட்டு இதுக்குன்னு பிராயச்சித்தங்கள் விதிச்சு இருக்காங்க பெரியவங்க, அதுக்கு வைஶ்வதேவம்ன்னு பேரு.
இதெல்லாம் வழக்கு ஒழிஞ்சுகிட்டு இருக்கு. க்ருஹஸ்தன் இல்லாம உலகம் இயங்காதே! அதனால ப்ராயச்சித்தங்கள் சொல்லி இருக்கு.”
“அது சரி! நீங்க பாட்டுக்கு எல்லாம் பாபம்; ப்ராயச்சித்தம் பண்ணு ந்னு சொல்லிட்டா எப்படி? யாரும் கடுமையா அஹிம்சை கடைபிடிக்க வேண்டாமா?”
“சரிதான். இப்பவும் கடுமையா அஹிம்சை கடை பிடிக்க வேண்டியது சந்நியாசிகள்தான்.
இவங்களுக்கு முதன்மையான தர்மம் அஹிம்சைதான். இவங்க எந்த அக்னி காரியத்திலேயும் சம்பந்தப்படக்கூடாது. இவங்க ஹோமங்கள் செய்யக்கூடாது. சமைச்சு சாப்பிடக்கூடாது. இப்படி பல கட்டுப்பாடுகள்.”
“ஜைன துறவிகள் உயிர் கொல்லாமைந்னு செய்யறது எல்லாம் கேள்விப்பட்டு இருப்பியே?
தெருவில நடக்ககூட பெருக்கிண்டே நடப்பாங்க.
“அந்த காலத்து காட்டில ஜபம் செய்யற துறவிகள் தினசரி மூணு முறை ஆறுக்கு போய் குளிப்பாங்க. இன்னைக்கு காலை போறார். வழில மரத்துலேந்து ஒரு பழம் கீழே விழுந்து இருக்கு. அதை எடுத்து சாப்பிடலாம் இல்லே? மாட்டார். அது வேற யாருக்கும் தேவைப்படலாமே? அடுத்த தரம் அடுத்த தரம்… அடுத்த நாள் மாலை வர அது அங்கேயே இருந்தா அதை எடுத்து சாப்பிடுவார்.
“எது கொல்லப்படுது என்கிறதுலேயும் விஷயம் இருக்கு. அந்த காலத்து யாகங்களில காட்டு மிருகங்கள் நாட்டு மிருகங்கள்ன்னு வகைப்படுத்துவாங்க. நாட்டு மிருகங்கள் என்பது கிராமங்களில் வளர்க்கப்படுவது. இவைதான் பலி கொடுக்கப்படும். காட்டு மிருகங்கள் அழியும் (endangered species ஆகும்) வாய்ப்பு இருக்கு; அதை நெருப்பால தலை மூணு தரம் சுத்தி காட்டுக்குள்ள விரட்டி விட்டுடுவாங்க.”
“என்னென்னவோ சொல்றீங்க. இப்ப நான் என்ன செய்யணும்? சொல்லுங்க!”
”அத நீயேதான்பா முடிவு செய்யணும்! நீ எங்கே நிக்கப்போறே? கொசு கடிச்சா ரிப்லெக்ஸ்ல அடிப்பியா, மெதுவா ஊதி விரட்டுவியா இல்ல கடிச்சுட்டு போகட்டும்ன்னு விடப்போறியா? இல்லை கொசு பேட்டை எடுத்து தேடி தேடி அடிக்கப்போறியா?
வீட்டில ஆடு கோழின்னு வளத்து கொன்னு சாப்பிடப்போறியா? கடையில் வாங்கி சாப்பிடுவியா? இல்லை அசைவமே தொடபோறதில்லையா?
முழு அஹிம்சையில இருந்து ப்ராக்டிகல் அஹிம்ஸை வழியா ஹிம்ஸை வரை தேர்வு இருக்கு. நீயேதான் முடிவு செய்யணும்! ஏதானாலும் நீ முடிவு பண்ணு கடைபிடி. உன் வீட்டு மனுஷாளுக்கு இது நல்லதுன்னு சொல்லலாம். அல்லது வந்து கேட்கிறவங்களுக்கு சொல்லலாம். மத்தபடி வலிஞ்சு யார்கிட்டேயும் இப்படி இருன்னு சொல்லப்போனாத்தான் வம்பு! அது சரியில்லை. யோசி! ”
இளைஞன் யோசிக்கலானான்.


Tuesday, August 30, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 12





மிகுந்த குழப்பத்துடன் அமர்ந்திருந்தான் அந்த இளைஞன்.
”என்னப்பா அப்படி குழப்பம்?” என்று கேட்டவாரே டீக்கடைகாரருக்கு ஜாடை காட்டினார் பெரியவர்.
நீண்ட மூச்சு விட்டான் இளைஞன்.
”அடுத்த வாரம் குல தெய்வத்தோட கோவிலுக்கு போகணும். அத நினைச்சு குழப்பமா இருக்கு.”
“அட! இதுல என்ன குழப்பம்?’
“எங்க வீட்டுப்பழக்கம் அங்கே போய் கிடா வெட்டி படைச்சுட்டு வரது.”
“சரிதான். போய் வாயேன்?”
“என்ன இவ்வளோ சுலபமா சொல்லிட்டீங்க? அது பாபம் இல்லையா? எங்க தாத்தா எல்லாம் அசைவம் சாப்டுகிட்டு இருந்தாலும் எங்க அப்பா சைவத்துக்கு மாறிட்டாரு. எங்க வீட்டில அசைவம் சமைக்கறதும் இல்லே; சாப்பிடறதும் இல்லே! கிடா வெட்டறது பாபம் இல்லையா?”
கடைக்காரர் கொடுத்த டீயை சற்று நிதானமாகவே உறிஞ்சினார் பெரியவர்.
“இல்ல!”
“என்னது? இல்லையா? என்னங்க பெரியவர் நீங்க போய் இப்படி சொன்னா…...”
“என்ன தப்புன்னு நீ சொல்லேன்!”
“உசிரு போயிரும்!”
“ஆமா!”
“என்ன ஆமா? அது தப்பில்லையா?”
“ஆமா, உங்க வீட்டில நாய் வளக்கறயோ?”
“ஆமா”
அதுக்கு சாப்ட என்ன போடறே?”
“சோறு மட்டும்தான்”
“அது மாமிசம் சாப்டாதா?”
“போடறதில்லே! போட்டாக்கூட சாப்டாது!”
“பூனை வளக்கறயோ?”
“இல்ல. ஆனா ரெண்டு பூனைங்க அது பாட்டுக்கு வரும் போகும். ஏதாவது எப்பவாவது யாரான்னா போட்டா தின்னுட்டுப்போகும்”
”அது அசைவம் சாப்பிடுமோ?’
“சாப்பிடுமே! வீட்டில இருக்கற எலி எல்லாத்தையும் அதுக பிடிச்சிட்டு போய் சாப்டும். அதுக்குத்தானே வீட்டுக்குள்ள அனுமதிக்கறோம்.”
“சரி. சிலர் - ரொம்பவே அரிதா - புலி சிங்கம் வளப்பாங்க. அவங்க மிருகங்கள் மேல ரொம்பவே அன்பு செலுத்தறவங்க. எதேனும் ஜூ ல வேலை பாத்துகிட்டு இருக்கலாம்.”
“ஆமா. அந்த மாதிரி சிலர் பத்தி பத்திரிகைல படிச்சு இருக்கேன்.”
“அவங்க அந்த புலிக்கோ சிங்கத்துக்கோ என்ன போடுவாங்க? தயிர் சாதமா?”
உரக்கச்சிரித்தான் இளைஞன். “தயிர் சாதமா? ஹாஹ்ஹாஹ்ஹா! நிச்சயமா இல்லே. மாமிசம்தான் போடுவாங்க.”
“ஏன்?”
”அதுங்களுக்கு அதுதான் பழக்கம்.”
“அதே மாதிரிதான் உங்க குல தெய்வத்துக்கும் பழக்கம்!”
திகைத்துப்போய் அமர்ந்திருந்தான் இளைஞன்!
“நம்ம கற்பனை ப்ரம்ம லெவலுக்கு போகலை. நம்ம கால் இந்த பூமிலத்தானே இருக்கு? அப்ப இந்த பூமியோட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நடக்கணும். இந்த குல தெய்வங்கள் காவல் தெய்வங்கள் எல்லாம் எங்கும் நிறைந்த, முக்காலத்திலும் இருக்கும் சர்வ சக்தி வாய்ந்த கடவுள் இல்லை. தேவதைகள். இவங்க நம்ம மாதிரி இன்னொரு படைப்பு. இவங்களுக்கு கோப தாபங்கள் உண்டு. அதனால கருணை வாய்ந்த தெய்வம் ஏன் இப்படி கேக்குதுன்னு கேள்வி கேக்க முடியாது! இவங்களுக்கு நம்மை விட அதிக சக்தி உண்டு. ஒவ்வொரு தேவதையையும்வழி பட ஒவ்வொரு ரூல்! தேவதைகளை நம்பி அவற்றுக்கான சட்ட திட்டங்களை கடை பிடிச்சுத்தான் வழிபாடு செய்யணும். குல வழிபாடுகளை அவ்வளோ சுலபமா விட்டுடக்கூடாது. இன்னைக்கு நிறைய பேருக்கு வர பிரச்சினைகள் எல்லாம் முன்னோர்களுக்கு சரியா திதி கொடுக்காததாலேயும் குல தெய்வ வழிபாடு செய்யாததாலேயும்தான் வருது. நீயும் அதுல மாட்டிக்காதே”

சற்று நேரத்தில் இளைஞனின் திகைப்பு நீங்கி அவன் சுற்றும் முற்றும் பார்க்கும் போது பெரியவர் எப்போதோ கிளம்பி விட்டு இருந்தார்.

Tuesday, July 19, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 11






கோபத்துடன் டீயை உறிஞ்சிக்கொண்டு இருந்தான் அந்த இளைஞன். பக்கத்தில் யாரோ வந்து உட்கார்ந்ததை உணர்ந்தான். அது அந்த பெரியவராகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஏனோ உதாசீனமாகவே இருந்தான்.
அக்கம் பக்கம் இருக்கும் எல்லா கோவில்களில் இருந்தும் பாட்டுச்சத்தம் காதை பிளந்து கொண்டு இருந்தது. ஒரு இடத்தில் இருந்து கதை சொல்லுவது கேட்டது. அதில் அங்கங்கே ஒருவர் ஆமா என்று சொல்லிக்கொண்டு இருந்தார். நடுவில் கதையை இடைமறித்து ஆங்காங்கே இருக்கும் பக்த கோடிகள்… என்று அறிவிப்பு வந்தாலும் அந்த ஆமா நிற்கவில்லை!
"ஜபத்துக்கு ரொம்பவே இடைஞ்சலா இருக்கோ?” என்று மென்மையான குரல் கேட்டது, இளைஞன் சற்று ஆச்சரியத்துடன் திரும்பிப்பார்த்தான். இவருக்கு எப்படித்தெரியும்?
பெரியவர் வெறுமே புன்னகை பூத்தார்.
“ஆமா!”
“இந்த காலகட்டத்துல இப்படி இருக்கறது சகஜம்தான்.”
“எப்படி இருக்கறது?”
“ஜபம் செய்யறோமே, அதுக்கு இந்த பாட்டு சத்தம் எல்லாம் இடைஞ்சலா இருக்கேன்னு நினைக்கிறது.”
“ம்! ரொம்பவே தொந்திரவா இருக்கு. ரொம்ப நாள் முயற்சி செஞ்சு இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சம் மனசு குவியுது. இப்ப இது வேற!”
“பரவாயில்ல.”
“எது பரவாயில்ல? ஜபம் பண்ண முடியாம இருக்கறதா?”
“ஆமாம். ஏன் இந்த பாட்டு தப்புன்னு நினைக்கிறே?”
“பாட்டு? பாட்டு எங்கே இருக்கு? வெறும் சத்தம்தான் அதிகமா இருக்கு! அதுல ஒரு கருத்தோ ஒரு ராகமோ இல்லியே?”
பெரியவர் சிரித்தார். “ஆமா. ஆனா அது ஒரு பத்து வருஷம் முன்னால. இப்ப கொஞ்சம் கொஞ்சமா மாறிப்போச்சே! அதோ கேளூ! ”
’குறையில்லை தாயே… மீனாட்சி நீயே’ என்று பாடல் கேட்டது. முடிந்த சுருக்கிலேயே மகமாயீஈஈஈஈ என்று இன்னொரு பாடல் ஆரம்பித்தது.
“ஒவ்வொத்தருக்கு ஒவ்வொரு டேஸ்ட். இப்படித்தான் வகை வகையா இருக்கும். மொத்தத்தில இது இப்ப நல்லாத்தான் ஆகிகிட்டு இருக்கு; அதாவது உனக்கு பிடிச்ச மாதிரி நல்லா!”
என்னதான் பண்ணச்சொல்லறீங்க?”
“பாட்டுல வரதும் கடவுள் பேருதானே? உன் வழக்கமான ஜபத்தை விட்டுட்டு இதையேத்தான் பாலோ பண்ணிப்பாரேன்! என்ன தப்பு? அதுவும் கடவுள் பேருதான். இதுவும் கடவுள் பேருதான். என்ன ராமான்னு சொல்லறதை விட்டுட்டு மகமாயி ந்னு சொல்வாங்க. அவ்ளோதான்.”
“அப்ப்டி சொல்லறீங்க?”
சிந்தனையில் ஆழ்ந்த இளைஞன் ஒரு முடிவுக்கு வந்து பேச யத்தனித்த போது அவர் அருகில் இருக்க மாட்டார் என்று தோன்றியது. அதே போல் இல்லை! 

Monday, April 18, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 10



பெருங்குழப்பத்துடன் டீக்கடைக்கு வந்து சேர்ந்தான் அந்த இளைஞன். சுட்டெரிக்கும் வெயில்தான். ஆனாலும் டீக்கடைக்கு வருவோர் பெருமளவில் வந்து கொண்டுதான் இருந்தார்கள். டீக்குடிக்கத்தான் அங்கே போக வேண்டும் என்று யார் சொன்னது!
ஆச்சரியமாக ”ஐஸ் டீ குடிக்கிறீங்களா சார்?” என்று டீக்கடைக்காரர் கேட்டார்.
கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்த்த இளைஞன் தலை அசைத்தான்.
ஜிஞ்சர் லெமன்?
மீண்டும் தலை அசைப்பு..
டீயை உறிஞ்சியபடி அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தான் இளைஞன்.
“ஹும், ஒண்ணுமே புரியலை. எதுக்கு இந்த சாமிங்க எல்லாம் கையில் கத்தி கபடான்னு வெச்சுகிட்டு இருக்குங்க? கருணையே வடிவம் கடவுள்ன்னா எதுக்கு அதெல்லாம்? அந்தப்பய கேட்ட கேள்விக்கு பதிலே சொல்ல முடியலியே என்னால? சாமி! உனக்கு நா பூஜ பண்ணறேன்; உண்டில காசு போடறேன்; மொட்ட அடிச்சுக்கறேன் - நீ எனக்கு இத இப்படி செஞ்சுதான்னு கேக்கறது வியாபாரம் இல்லையான்னு கேக்கறான். அதுவும் சரிதானேன்னு தோணுது.
இப்படி எல்லாம் இருந்தா அது என்ன சாமி?”
“நல்ல சாமி”” என்று பக்கத்தில் இருந்து குரல் வந்தது!
திடுக்கிட்டுக்கொண்டு குரல் வந்த திசையை நோக்கினான்.
பெரியவர் சிரித்துக்கொண்டே பேப்பரை மடித்தார். நம்ம தொகுதில….. கட்சி சார்பா நல்லசாமி போட்டிப்போடறாராம்!” என்றார்.
“ஓ! நான் நினைச்சுகிட்டு இருந்ததுக்கு பதில் வந்ததோன்னு நினைச்சேன்!”
“அப்படி என்ன நினைச்சுகிட்டு இருந்தேப்பா?”
சொன்னான்.
”ம்ம்ம்ம்.. நல்ல கேள்விதான். இது எல்லாம் உனக்கே தோணித்தா இல்ல, யாரும் உன்ன கேட்டாங்களா?”
”ஒரு ஆசாமி கூட ஆர்க்யூமெண்டு!”
”ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ! விவாதம் எல்லாம் நல்லதுதான். ஆனா ஆரம்ப நிலையில இல்லே. விவாதம் என்கிற பேர்ல குழப்ப நிறையவே ஆசமிங்க இருக்காங்க. கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்!
ரொம்பவே முன்னேறின ஆசாமிக்கு கடவுள் ஒத்தரே கூட தேவையில்லை! நாம அந்த நிலைக்கு நேரா போக முடியுமா? நீ என்ன படிச்சே?”
“பிஎஸ்சி”
“நேரா காலேஜ் போயிட்டையா ஸ்கூல் படிச்சு போனியா?”
ஸ்கூல்ல படிச்சுட்டுத்தான். ஸ்கூலுக்கு எல்கேஜி யூகேஜின்னு எல்லாம் படிச்சுட்டுத்தான் போனேன்!”
“நல்லது! உடனடியா ஆன்மீகத்தில மேல் லெவலுக்கு போக முடியாது என்கிறது அது போலத்தான்.” கீழ் மட்டத்தில சில பல விஷயங்களை புரிஞ்சுகிட்டுத்தான் மேல் லெவலுக்குப் போகணும்.
”ஒண்ணுமே எதிர் பார்க்காம பக்தி செய்யறது உசந்த லெவல்! கீழ் மட்டத்தில நம்ம நிலமை என்ன? ஏதாவது வேணும்; அல்லது எதை குறிச்சோ பயமா இருக்கு. சாமிகிட்ட பக்தி செய்யறவன் என்ன செய்வான்? சாமியை கும்புட்டு இப்படி வேணும்ன்னு கேப்பான். அப்ப அவன் பாக்கிற சாமி உருவத்தில என்ன தெரியுது? அனேகமா நாலு கை தெரியும். ஒண்ணு அபயம்ன்னு காட்டற கை.... பயப்படாதே நா இருக்கேன்! இன்னொண்ணு வர ஹஸ்தம் என்கிற கொடுக்கும் கை. மீதி ரெண்டு கையில ஏதாவது ஆயுதம் இருக்கும். இந்த ஆயுதத்தாலே உன்னை கஷ்டப்படுத்தறதை விரட்டிடுவேன்; கவலைப்படாதே!” ந்னு சொல்லறா மாதிரி இருக்கும். அதானே சாமி கும்பிடறவனுக்கு வேண்டியது?”
“இப்படியே கொஞ்ச நாள் போன பிறகு பக்தன் சாமி இத கொடு அத செய்யறேன்; அதக்கொடு, இத செய்யறேன் ந்னு கேப்பான். இது வணிகம் மாதிரி இருக்கு இல்லே? ஆமாம். வியாபாரமேதான்! ஆனா நேர்மையான வியாபாரம்தானே? அதுல என்ன தப்பு? இருந்தாலும் கடவுளோட நோக்கம் உன்னை இப்படியே வெச்சு இருக்கறது இல்லே. அடுத்த படியா எதையும் எதிர் பார்க்காம பக்தி செய்யணும். எனக்கு வேணும்ன்னு கேக்காம மத்தவங்களுக்கு நல்லது செய்யறதுல நாட்டம் இருக்கணும். இப்படி முன்னேறணும். ஆனா லோகத்தில பலரும் அப்படி இல்லே என்கறது வருத்தமான விஷயம்தான். ஆனா என்ன செய்யறது? இந்த ஸ்டேஜை தாண்டித்தான் பலரும் போயாகணும்!”
இப்படி பலரும் ஆன்மீகத்தில முதல் சில படிகளில இருக்கறவங்க. இவங்களை வெச்சா ஆன்மீகத்தை எடை போடணும்?”
கண்களை மூடிக்கொண்டு பெரியவர் சொன்னதை அசை போட்ட இளைஞன் கண்களை திறந்து பார்த்த போது……
 

Wednesday, April 13, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 9


மாலை நேரம். மெல்ல இருட்ட ஆரம்பித்து இருந்தது. டீக்கடையில் டீயை உறிஞ்சியபடி இளைஞன் பராக்கு பார்த்துக்கொண்டு இருந்தான். எதிர் சாரியில் அவன் பார்வை படிந்தது. அங்கிருந்து 'சட் பட்' என்று தொடர்ந்து சத்தம் வந்து கொண்டு இருந்தது. பார்வையை மறைத்துக்கொண்டு இருந்த ஒரு நபர் எழுந்து போக சத்தம் வந்த இடம் தெரிந்தது. அங்கே ஒரு அம்மணி கொசு பேட்டை வைத்துக்கொண்டு டி-20 கிரிக்கெட்காரர் மாதிரி ருத்திர தாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தார்.
இளைஞனின் சிந்தனை விரியலாயிற்று. இது என்ன? கொலை. ஆனா கொல்லாம இருக்க முடியுமா என்ன? அது நம்பளை கடிச்சு வியாதி வரதே! சிக்கன்குனியா டெங்குன்னு ஏதேதோ ஆயிரம் சொல்லறாங்களே? ம்ம்ம்ம்? அது சரி! கொசு கடிக்கற எல்லாருக்கும் வியாதி வரதா? இல்லையே! எத்தனையோ எளிய குடும்பங்களில கொசுவை விரட்ட வழி இருக்கா என்ன? அவங்க கொசு கடில அவஸ்தை படறாங்க; ஆனா பலருக்கும் வியாதி வரலையே! அது வரதுக்கு கர்மா இருந்து இதை ஒரு வாய்ப்பா வெச்சுக்கொண்டு வரும் போலிருக்கு!

கொலையைத்தவிர வேறு ஒண்ணுமில்லை. ஏதோ வேலை செஞ்சு கொண்டு இருக்கோம். கொசு கடிக்கிறது. யோசிக்காமலே ரிப்லெக்ஸ் ஆக்‌ஷனா அத அடிக்கறோம். சில சமயம் அடி பட்டு சாகிறது. பல சமயம் தப்பி விடுகிறது. நாமும் வேலையை தொடர்ந்து செய்யறோம். கொஞ்ச நேரத்திலேயே திரும்பவும் கொசுக்கடி. அதே கொசு. அல்லது முன்னே கொசு அடிபட்டு செத்திருந்தா புதுசா வேற கொசு. என்ன செஞ்சாலும் கொசுக்கடியில் இருந்து தப்ப முடியலை.
ரூம்ல ரிபெல்லர், ஸ்ப்ரேன்னு என்ன செஞ்சு விரட்டி இருந்தாலும் டாய்லெட்டில் உட்காந்துட்டு வரும் ஓரிரு நிமிஷத்திலேயே அது வந்து கடிச்சு தீர்த்துடறது!
இப்ப இந்த கொசுவை கொன்னா புது கர்மா வந்து பிடிச்சுக்குமா? இல்ல நாம அடிச்சுகொல்லறதுதான் கர்மாவை தீக்கிறதா? புரியலையே! ம்ம்ம்ம்?
நாம அறியாம அடிச்சு அது செத்தா அதோட கர்மாவை தீர்த்துக்கறதுன்னு வெச்சுக்கலாமா? அப்படித்தான் போலிருக்கு!
கொசு விரட்டி வெச்சா? டிவி விளம்பரத்துல என்னதான் க்ராபிக் கொசு செத்து விழுந்தாலும் நிஜத்துல எல்லாம் மயக்கமா விழுது அல்லது கிட்ட வராம பறந்து போயிடுது. இது கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கு. ஆனா இந்த பேட்டை வெச்சுண்டு அடிச்சா? அதை தேடி தேடி கொல்லறா மாதிரின்னா இருக்கு? ம்ம்ம்ம்? இது புதுசா கர்மாவை சேர்க்கும்ன்னுதான் தோணறது!
குழப்பமா இருக்கே? சரியா, தப்பா?
"சரிதான்பா !" என்ற குரல் கேட்டது. இளைஞர் திரும்பி பார்த்த போது பெரியவர் பத்தடி தள்ளி கூட்டத்தில் கரைந்து கொண்டு இருந்தார்!

Monday, April 11, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 8


“அட! என்ன இந்த நேரத்துக்கு வறீங்க? வாங்க வாங்க!”
”உறவினர்களில ஒத்தர் இறந்துட்டாரு. போய் வழி அனுப்பிட்டு வரேன்.”
“ரொம்ப சோர்வா இருக்கீங்க?”
“ஆமா. அதுக்குத்தான் மதிய நேரம் மணி ரெண்டானாலும் ஒரு டீ குடிக்கலாம்ன்னு….. காலையிலேந்து டாய்லெட்டே கதின்னு கிடந்தேன்.”
“அட! என்னாச்சுங்க?”
“காலை டிபன் சாப்பிட ஆரம்பிக்கறப்பத்தான் போன் வந்தது. போன் பேசிகிட்டே சாப்டு முடிச்சுட்டேன். ஆபீசுக்கு லீவு போட சில ஏற்பாடெல்லாம் செஞ்சுட்டு கிளம்பிகிட்டு இருந்தேன். அப்பத்தான் வயித்தை முறூக்கிகிட்டு… யப்பா! செம வலி. டாய்லெட்டுக்கு ஓடினேன். வயித்தாலை போச்சு. அப்பறமா இன்னும் ரெண்டு மூணு தரம். அப்பவே சோர்ந்து போயிட்டேன். பொண்டாட்டி சொல்றா, சாவு சேதி கேட்டுட்டும் சாப்டேனாம். அதனால குத்தம்ன்னு சொல்றா. அப்படிக்கூட உண்டானா?”
“தெரிலீங்களே! நா கேள்விப்பட்டதில்ல.”
“நமக்குத்தெரியாத விஷயம் உலகத்தில நிறைய இருக்கு!” குரலைக்கேட்டு திரும்பிப்பார்த்தான் இளைஞன். அதே பெரியவர்தான். சோர்வைத்தாண்டி கொஞ்சம் உற்சாகம் தொற்றிக்கொண்டது!
காசை கொடுத்து டீயை வாங்கிக்கொண்டவர் இளைஞன் அருகில் அமர்ந்தார்.
”மாயா லோகம்ன்னு சொல்லுவாங்க இதை. ஆயிரத்தெட்டு என்ன கோடி சட்டதிட்டங்கள்… அதுல பலதும் நமக்குத்தெரியாது; பலதும் புரியாது. தெரிஞ்ச சிலதை வெச்சுகிட்டு நமக்கு எல்லாம் தெரியும்ன்னு நினைச்சுக்கிறோம்.”
“உதாரணம் காட்டுங்களேன்!”
”அதோ பார்!”
எதிர் சாரியில் இருந்த ஒரு வீட்டில் ஒருவர் வந்து மதில் சுவர் மேல் ஒரு உருண்டை சோறு வைத்துவிட்டு, காக்காக்காக்கா என்று குரல் கொடுத்துவிட்டு, ஓடி வந்த பூனையை விரட்டி விட்டு உள்ளே போனார்.
“திதி கொடுக்கறார் போலிருக்கு. இதுல என்ன?”
“ஆமாம். அப்பா, தாத்தா, தாத்தாவோட அப்பான்னு மூணு தலை முறைக்கு பிண்டம் வைப்பாங்க. வேடிக்கை பாரு!”
காகம் ஒன்று வந்து உட்கார்ந்தது. ஓரடி தூரத்தில் சோற்று உருண்டை இருந்தாலும் அதை கொத்தவில்லை. கா கா என கத்தியபடி இருந்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் சென்றன. இன்னும் கொத்தவில்லை. ம்ம்ம்ம் இப்படி ஆனா திதி கொடுத்தவர் ச்ரத்தையா கொடுக்கலைம்பாங்களே என்று நினைத்தான் இளஞன். அப்போது ஒரு காகம் பறந்து வந்து உடகார்ந்தது. சரி வந்தாச்சு என்று நினைத்தால் அதுவும் கா கா என்று கத்த ஆரம்பித்தது! இதென்னாடா இது? பசியே இல்லாத காக்காவா வருது என்று நினைத்தான், மெஸ்மரைஸ் ஆனது போல அந்த காட்சியை விட்டு வேறு எதையும் பார்க்கத்தோன்றவில்லை. இன்னும் ஐந்து நிமிடங்கள் சென்றன. உடல் முழுதும் கருமையான அண்டங்காக்காய் ஒன்று பறந்து வந்தது. உட்காரவில்லை. பறந்து கடக்கிற போக்கில் சட்டென்று ஒரு கொத்து கொத்திச்சென்றது. உடனே மற்ற இரு காகங்களும் கொத்த ஆரம்பித்தன! சாப்பிட்டு சில நாள் ஆனது போல விரைவாக உண்டன! பிரமிப்புடன் பார்த்து கொண்டு இருந்தான் இளைஞன். எந்த வரிசையில் சாப்பிட வேண்டும் என்று கூடவா விதி இருக்கும்?” ”ஏன் சார்” என்று திரும்பி பார்த்த போது பெஞ்சில் காலியான டீ க்ளாஸ் மட்டுமே இருந்தது!

Thursday, March 24, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 7


இந்த மாயை மாயைங்கிறது என்னங்க?
என்னன்னு நினைக்கிறப்பா?
இல்லாத ஒண்ணை இருக்கறதா நினைக்கிறது…
சரிதான்.
நீங்க நான் இந்த டீக்கடை எல்லாம் மாயையா?
புன்முறுவல் மட்டுமே பதிலாக வந்தது.
எப்படி நாம பாக்கிற ஒண்ணு, தொடற ஒண்ணு, மோந்து பாக்கிற ஒண்ணு மாயையா இருக்க முடியும்?
தோ பாரு!
டீக்கடை பக்கத்தில் புதிதாக ஒரு தற்காலிக கடை உருவாகி இருந்தது. மண்ணை பிசைந்து பிள்ளையார் பொம்மைகளை உருவாக்கிக்கொண்டு இருந்தது ஒரு எளிய குடும்பம்.
களி மண் மிதித்து பக்குவமாக்கி வைக்கப்பட்டு இருந்தது. ஒரு அச்சில் அதை அடைத்து அமுக்கி வெளியே எடுத்து வைத்துக்கொண்டிருந்தான் பொம்மைக்காரன். அவனது பெண்சாதி அதை எடுத்து மாவு பூசி அழகாக அடுக்கி வைத்துக்கொண்டு இருந்தாள். இந்த அழகை சில நொடிகள் பார்த்தனர்.
அந்த வழியாக இரண்டு பெண்கள் பேசிக்கொண்டே போனார்கள். இது என்னடி புது டிசைன்ல செயின்? ரொம்ப அழகா இருக்கு! மற்றவள் பெருமையுடன் சொன்னாள்: ஆமாண்டி! முன்னேயே என்கிட்ட ஒரு பழைய காசு மாலை இருந்தது இல்ல? அத அழிச்சு பண்ணது!

இளைஞன் கவனத்தை பெரியவர் திருப்பினார். இதோ வரிசையாக அடுக்கி வைச்சிருக்கே, அது என்ன?
இதென்ன கேள்வி? அது பிள்ளையார்!
பார்த்துக்கொண்டே இருக்கும் போது ஒரு சிலையை எடுக்கும்போது அது விண்டு விழுந்தது, அந்த பெண் விழுந்ததை எடுத்துக்கொடுக்க அவன் அதை பிசைந்து வைத்து இருந்த மண்ணோடு வீசி எறிந்தான்.
பெரியவர் சிரித்தார். கொஞ்ச நேரம்முன்னே பிளையாரா இருந்தது, இப்ப என்ன?
ஏன் மண்ணு?
ஆமா, மண்ணா இருந்தது பிள்ளையாரா ஆச்சு, இப்ப திருப்பி மண்ணாயிடுத்து இல்ல?
ஏன் நடுவிலேயும் அது மண்ணாத்தான் இருந்திச்சு?
ஆமா, அப்படித்தான். ஆனா நீ தானே அது பிள்ளையார்ன்னு சொன்னே? சரி விடு. போன வாரம் மும்பை போயிருந்தேன். என் நண்பர் ஒத்தர் ந்யூக்ளியர் பிஸீக்ஸ்ல ஆராய்ச்சி செய்யறாரு. அவர்கிட்ட பேசிகிட்டு இருந்தப்ப அவர் சொன்னாரு, புதுசா ஒரு எலமெண்ட் கண்டு புடிச்சாங்களாம்.
அட, அப்படியா?
ஆமாம் ரெண்டு எலமெண்ட்களை மோத விட்டு உருவாக்கினாங்களாம்; அது 0.000000035 வினாடி இருந்திச்சாம்!”
இளைஞன் சிரித்தான். ”அதுக்கு அது இல்லாமலே இருக்கலாம்.”
ம்ம்ம் சரி, ப்ரபஞ்சத்தோட வயசு என்னன்னு தெரியுமா?
ம் நானும் சயன்ஸ் படிச்சிருக்கேனே? ஏறத்தாழ 14 பில்லியன் வருஷமாவது இருக்கும் என்கிறாங்க.
அந்த 14 பில்லியன் வருஷத்துல நூறு வருஷம் எவ்வளோ?
பிசாத்து! ஒண்ணுமே இல்லே!
நாம வாழற வாழ்க்கை அதிக பட்சம் நூறு வருஷம்ன்னு வெச்சுக்கலாமா? இப்ப சொல்லு பிரபஞ்சத்தோட ஒப்பிடா நாம வாழறது ஒண்ணுமே இல்லைதானே?
பேச்சற்றுப்போனான் இளைஞன்.
இதோ இங்க பிள்ளையாரா கொஞ்ச நேரம் இருந்த மண் நமக்கு பிள்ளையாரா தெரிஞ்சது. அதான் மாயை. காசு மாலையா இருந்தது தங்கமாகி திருப்பி இன்னொரு செய்ன் ஆயிடுத்து. இதுல எது நிரந்தரம்? எது தற்காலிகம்? தங்கமே எப்பவும் இருக்கு. செய்ன், காசு மாலை என்கிறதெல்லாம் மாயை.
பிரபஞ்சக்கணக்குலே கொஞ்சமே கொஞ்ச நேரம் இருக்கற நாம ஏதோ எப்பவும் இருக்கறதாவும் இதை செய்யறதாவும் அதை செய்யறதாவும் நினைக்கிறோமே, அது மாயை.
எது முன்னே இருந்ததோ இப்ப இருக்கோ அப்புறமும் இருக்குமோ அதுவே மாயை அல்லாதது. இந்த மூணு காலத்தில ஏதேனும் ஒரு காலத்திலாவது இல்லாம போகுமானால் அது தற்காலிகம்தானே? சயண்டிஸ்ட் உருவாக்கின மூலகம் மாதிரி. அதனால அது மாயை. இப்படித்தான் ஆன்மீக கணக்கு.
இதை ஆங்கிலத்துல இல்யூஷன்னு மொழி பெயர்த்ததாலேயோ என்னவோ வந்த வினை மாயைன்னா இல்லாததுன்னு நிறைய பேர் நினைக்கறாங்க.
பிள்ளையாரா இருந்தது கொஞ்ச நேரமே. ஆனா மண்ணா முன்னேயும் இருந்தது. நடுவிலேயும் இருந்தது; இப்பவும் இருக்கு. மண்ணே சத்தியம். பிள்ளையார் சிலை மாயை. அதே போல தங்கம் மட்டுமே எப்பவும் இருக்கு. அதுவே சத்தியம். அது செய்னா தெரியறதோ அல்லது காசுமாலையா தெரியறதோ மாயை.
சரி, இப்ப நாம இருக்கோம். ஏதோ ஒரு நாள் இல்லாம போயிடுவோமா இல்லையா? அப்ப எது சத்தியம்?
இளைஞன் யோசிக்க ஆரம்பிக்க பெரியவர் மெதுவாக எழுந்து போனார்.