Pages

Showing posts with label அண்ணா. Show all posts
Showing posts with label அண்ணா. Show all posts

Friday, March 2, 2012

அண்ணா - 7


சுமார் பத்து வருஷத்துக்கும் மேலாக ஏறத்தாழ படுத்த படுக்கையாகவே இருந்து வந்திருக்கிறார். பின் வருஷங்களில் மாஹா மாயையின் சக்தியையும் உணர வைத்தார்! அப்படி இருந்த 'ஞானி' யா இப்படி இருக்கிறார், பேசுகிறார் என்று நினைக்கும் அளவுக்கு! சின்னக்குழந்தையாகவே ஆகிவிட்டார். வயிற்றில் கட்டி இருப்பதாக நிச்சயமாக நம்பினார். எல்லா மருத்துவ பரிசோதனைகளும் செய்து ஒரு பிரச்சனையும் கண்டு பிடிக்க முடியவில்லை! இப்படியும் அப்படியும் இருப்பார். ஞானி போலவும் பேசிக்கொண்டு இருப்பார். சாதாரணமாகவும் இருப்பார். குழந்தையாகவும் இருப்பார்! இவருடைய எஞ்சிய பிறப்பில் அனுபவிக்க வேண்டிய கர்மாக்களை அனுபவித்து தீர்த்தார் என்று எண்ணுபவர்கள் உண்டு. பலவித உபாதைகள் இருந்தன.

கடிதத்தில் எனக்கு இருக்கிறதை ஹாரஸ்கோப் உள்பட எந்த ஸ்கோப்பாலும் கண்டு பிடிக்க முடியாது என்று ஒரு முறை எழுதினார்.

புதிதாக யாரையும் பார்க்க மறுத்தார். யாரும் வருவதையும் தவிர்க்கும்படி கூறினார். கடைசி சில வருஷங்களில் அவரை அதிகம் பார்க்கவில்லை. வருஷம் 2-3 முறை சென்னை செல்லும்போது போய் பார்த்து நமஸ்காரம் செய்வதோடு சரி.

ஆரம்பத்திலேயே ஒன்றும் அதிகமாக உணவு உட்கொண்டவரில்லை. போகப்போக இதன் அளவும் குறைந்து கொண்டே போனது. கடைசி ஓரிரு வருஷங்கள் வெறும் திரவ ஆகாரம் என்றே கூட சொல்லலாம். இதை முழுங்கக் கூட கஷ்டப்பட்டார். கடைசி சில நாட்கள் ஒன்றுமே இல்லை. வேறு வழியாக உணவு செலுத்தப்படுவதையும் மறுத்தார்.

ஆனால் உடலில் சக்தி இல்லாமல் போகவில்லை. கடைசி வாரத்தில் மட்டும் ஒருவருக்கு 7 கடிதங்கள் எழுதி இருக்கிறார். அவற்றில் ஒன்று 37 பக்கங்கள்! ஒன்றில் மந்திரோபதேசம்!

சிவ ராத்திரிக்கு அடுத்த நாள் கடைசியாக பார்க்க நானும் என் மனைவியும் சென்று இருந்தோம். முகத்தில் இருந்த தேஜஸ் கொஞ்சமும் குறையவில்லை என்று தோன்றியது! ஒரு வருஷம் முன்னால் "நான் போன பிறகு கொடுக்க வேண்டும்" என்று சொல்லி வைத்து பத்திரப்படுத்தி இருந்த கவர் ஒன்றை அவரது உதவியாளரில் ஒருவர் கொண்டு வந்து கொடுத்தார். அதில் என் மனைவியின் முகவரி எழுதி உள்ளே அவரது போட்டோ ஒன்று இருந்தது!

என் வாழ்கையில் மஹா பெரியவாளை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால் அவரது உபதேசங்களை எழுதியவரது ஆசீர்வாதங்களை பெற்றேன்! வழிகாட்டுதலை பெற்றேன்! இதற்கு கைமாறு என்ன செய்ய இயலும்?

-நிறைந்தது-

Thursday, March 1, 2012

அண்ணா -6


என் கதையையும் இங்கே சொல்ல வேண்டி இருக்கிறது!
தெய்வத்தின் குரலை படிக்க ஆரம்பித்து மனம் மாறிப்போனேன். எப்படி இருக்க வேண்டும் என்று பரமாச்சாரியார் சொல்லி, "நானும் யாரானா கேக்க மாட்டாளான்னு கரடியா கத்திண்டு இருக்கேன். கேட்கிறவாதான் கம்மி" என்று சொல்லி இருந்தது மனதை வெகுவாக பாதித்தது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவர் சொன்னபடி நடக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். சந்தியாவந்தனம் ரெகுலர் ஆயிற்று. பின் கோபால்ஜி சொல்லி தினசரி ஆயிரத்தெட்டு காயத்ரி ஜபம் என்று துவங்கியது. தெய்வத்தின் குரலே எனக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்ததால் அண்ணாவை சென்று பார்த்து பேசத்துவங்கினேன். கடிதத்தொடர்பும் ஆரம்பித்தது. அவருடைய வழிகாட்டுதலிலேயே பல அனுஷ்டானங்கள் துவக்கினேன். இந்த சமயத்தில் பலதும் என் மனைவிக்கு உகப்பாக இல்லை. டாக்டராக இருந்துகொண்டு எதுக்கு இதெல்லாம் என்று நினைப்பு. நான் சொன்னால் கேட்க மாட்டார். சண்டை சச்சரவு வரும். அண்ணாவுக்கு அப்பீல் அனுப்புவேன். அண்ணா சமாதானமாக என் மனைவிக்கு கடிதம் எழுதுவார்; அல்லது போனில் பேசுவார். அப்புறம் சரி என்று என் மனைவி ஒத்துக்கொள்வார்.
இப்படியேத்தான் ஔபாசனம், அக்னி ஹோத்ரம் ஆகியவை ஆரம்பித்து தொடர்ந்து நடத்த வும் முடிந்தது. எதற்கு இதை இங்கே சொல்கிறேன் என்றால் புத்தகம் மூலம் கர்மா செய்ய புத்தியை தூண்டியது மட்டுமில்லாமல் அதை செய்யவும் எல்லா உதவிகளையும் செய்தார் என குறிப்பிடவே.
அண்ணாவை சந்திக்கும் எல்லாருமே அண்ணா தன் மீது மட்டுமே இவ்வளவு அன்பு பாராட்டுகிறார் என்று நினைப்பார்கள்! அவரவருக்கு தகுந்த மட்டத்தில் பேசிக்கொண்டு இருப்பார். பெரிய ஆன்மீக விஷயங்களில் இருந்து அக்கப்போர் வரை நபரை பொருத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கும்.
சிலர் அவருடன் பேசும் போது தனக்கு இருந்த உடல் உபாதைகள் நீங்கியதாக சொல்வார்கள். நல்ல தலைவலியில் இருந்தேன், போய்விட்டது, ஆஸ்த்மாவில் அவதி பட்டுக்கொண்டு இருந்தேன் போய் விட்டது என்பர். எனக்கோ அண்ணாவை சந்திக்கும் ஒவ்வொரு சமயமும் மைக்ரேன் அதிகமாகிவிடும். கிளறிவிட்டு தீர்க்கிறார் என்று நினைத்துக்கொள்வேன்.
எனக்கு சாதாரணமாகவே மஹா கோபம் வரும். தப்பு என்று தெரிந்தாலும் அடக்க முடியாது. இதை எப்படி நீக்கலாம் என்று ஆலோசனை கேட்டேன். "திருக்களர் போய் அங்கே துர்வாசருக்கு சுப்ரமணியர் தரிசனம் கொடுத்து கோபத்தை நீக்கின ஸ்தலத்தில் ஈஸ்வரனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வா" என்று சொன்னார். உடனடியாக செய்யாவிட்டாலும் கோபம் பெரும்பாலும் போய்விட்டது. தெரியாத்தனமாக "அதான் பெரும்பாலும் போய்விட்டதே, திருக்களர் போகணுமா?” என்று கேட்டேன். ஆமாம் என்றார். அப்படியே போய் வந்தோம். பின்னால்தான் இதை ஒரு வ்யாஜ்யமாக வைத்துக்கொண்டு கோபத்தை தொலத்தவர் யார் என்று புரிந்தது!
ஒரு வருஷம் இளையாத்தங்குடியில் சதஸ் நடந்த பிறகு இவருக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. இவருடைய எழுத்துத்தொண்டை நினைவு கூறும் வகையில் இவருக்கு கையில் தங்கத்தில் ஒரு தோடா போட்டார்கள். ஜஸ்டிஸ் அருணாசலம் தலைமை தாங்கினார் என்று நினைவு. நான் போகும்போது நிகழ்ச்சி துவங்கிவிட்டது. நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் இவரை பார்க்க முடிந்தது. "நல்ல காலம் நீ வந்திருக்கே! இதை எவ்வளவு தங்கம் இருக்குன்னு பாத்து கொஞ்ச கூட போட்டு பணம் அனுப்பு. இவாளுக்கு எப்படியாவது திருப்ப வேணும்!” என்று சொல்லி தோடாவை என் கையில் கொடுத்துவிட்டார். அதை மதிப்பு போட்டு பணத்தை அனுப்பிவிட்டு தோடாவை என் கையில் போட்டுக்கொண்டுவிட்டேன்! அப்புறம்தான் எழுத்தாளன் ஆனேன் போலிருக்கு! :-)
அவர் தனக்கு எந்தவித சக்தியும் இருப்பதாக காட்டிக்கொள்ளவே இல்லை. அம்பாளிடம் ப்ரார்த்தனை செய்கிறேன். அவள் அனுக்கிரம் பண்ணினாலும் பண்ணுவாள் என்பார். அப்படி 'அனுக்ரஹம்' நடந்த கதைகள் ஏராளம்!

Wednesday, February 29, 2012

அண்ணா -5

 
கடும் விரதங்கள் இருந்துவந்த சிவிஆர் ஒரு நாள் குடலில் துளை விழுந்து சிகிச்சை பலனில்லாமல் மறைந்தார். வருஷக்கணக்கில் வெறும் காபி மட்டும் அருந்தி வந்த அவரது அன்னையும் மறைந்தார். (மிகக் கொஞ்சமாக சாப்பிடுவார். அவரது வயிற்றில் பல புண்கள் வந்து ஆறி வயிறே சுருங்கிப்போயிற்று)
தந்தை சம்பாதித்து வைத்த வீட்டை விற்று, சகோதரியின் பங்கு போக மீதி வேத பாடசாலைக்கும் இன்னும் சில விஷயங்களுக்கும் சமர்பித்துவிட்டார். (இதைப்போலவேதான் ஆர் எழுதிய வைத்த உயிலுக்கு வேலை இல்லாமல் போனது. இருந்ததை எல்லாம் டிஸ்போஸ் பண்ணிவிட்டதால் உயிலை ஒரு வருஷம் முன் கிழித்துப்போட்டுவிட்டாராம்!) இதன் பின் பல முறை இடம் பெயர வேண்டி இருந்தது. எங்கும் நிலை கொள்ளவில்லை. கடைசியில் லக்ஷ்மி காலனியில் அவரது சகோதரியின் கணவர் கட்டிய அபார்ட்மென்ட் குடியிருப்பிலேயே ஒரு அபார்ட்மென்ட் இல் செட்டில் ஆனார்.
விசிறி சாமியார் என்கிற யோகி ராம் சுரத் குமார் அவர்களின் தொடர்பும் ஏற்பட்டது. அவரைப்பற்றிய புத்தகங்களும் வெளிவந்தன. இப்போது வீடு வீடாக மாறிக்கொண்டு அவஸ்தைப்பட்டுக்கொண்டு இருந்த அண்ணாவுக்கு அவர் ஒரு உதவியாளரை அனுப்பினார். அந்த ப்ரம்மசாரியை கூப்பிட்டு பணித்த போது அவர் நான் இங்கேதான் சேவை செய்ய வந்திருக்கிறேன் என்றார். அதற்கு ராம்சுரத் குமார் "செர்விங் ரா.கணபதி ஈஸ் செர்விங் தெ யூனிவெர்ஸ்" என்று சொல்லி அனுப்பினார்!
சங்கீத ஞானம் மிக்கவர். முன்பெல்லாம் அவ்வப்போது ஏதேனும் ஒரு பாட்டை ஹம் செய்து கொண்டு இருப்பதை கேட்டு இருக்கிறோம். சில க்ருதிகளும் உருவாக்கி இருக்கிறார் என்று சமீபத்தில் தெரிய வந்தது! பக்த மீரா குறித்த தொடரில் பல பாடல்களை தமிழாக்கம் செய்திருக்கிறார்.
பகவான் ரமணரைப்பற்றியும் பல சுவையான விஷயங்கள் எழுதி இருக்கிறார். கல்கி, அமுதசுரபி போன்ற இதழ்களின் தீபாவளி மலர்களில் இவரது கட்டுரை கட்டாயம் இருக்கும் என்ற காலகட்டம் பல வருஷங்கள் இருந்தது.
கடைசியாக வெளி வந்தது மஹா பெரியவாள் ஓப்பனாக எல்லாருக்கும் செய்த மந்திர உபதேச கட்டுரைதான் என்று நினைக்கிறேன்.
என் கதையையும் இங்கே சொல்ல வேண்டி இருக்கிறது!

Monday, February 27, 2012

அண்ணா- 4


இவரது அப்பா சி.விஆர் ஆசார சீலர். ரெவின்யூவில் இருந்து ரிடையர் ஆகிய பின் சிகை வைத்துக்கொண்டு தினசரி சந்த்யாவந்தனம், பூஜை, நிறைய காயத்ரி ஜபம் என்று இருந்தவர். திடீரென்று ஒரு நாள் ஒரு சிற்பி வந்து 18 கை துர்கை சிலையை கொடுத்து போனார். ஏதோ உந்துதலில் அதை செய்ததாகவும், அதை செய்த பின் துர்கை கனவில் வந்து இன்ன ஊரில் இன்ன இடத்தில் இதை சேர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் அது இந்த இடம்தான் என்று கண்டு கொண்டு சேர்ப்பிக்க வந்ததாகவும் சொல்லி சிலையை கொடுத்து போனார்.

எனக்குத்தெரிந்து சிவிஆர் அம்பத்தூரில் இருந்தார். தோட்டம் போட்டு பூச்செடிகள் வளர்த்து தினசரி பூக்களை கொய்து மணிக்கணக்கில் பூஜை செய்வார். (ஏனோ என் மீது ஒரு அபிமானம். மெடிக்கல் காலேஜ் சீட் எனக்கு கிடைக்க இவர் காயத்ரி ஜபம் செய்தாராம். கிடைத்து விட்டது. இது பல வருஷங்கள் சென்று என் பெரியப்பா சொல்லித்தான் தெரியும்.) இவருக்குப்பின்னால் பூஜை செய்ய அவரது சகோதரனிடம் கொடுத்துவிட்டார். அண்ணா நைஷ்டிக பிரம்மசாரியாக இருந்ததால் அவரிடம் கொடுக்கவில்லை.

திடீரென்று புட்டபர்த்தி பாபாவிடம் அண்ணாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. காஞ்சீபுரம் அடிக்கடி போய் கொண்டு இருந்தவர் பாபாவை தேடி போக ஆரம்பித்தார். இது அவரது நண்பர்கள் பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் அவர் அசரவில்லை. பலரும் அத்ருப்தியை வெளிப்படுத்தியதால் பெரியவாளிடமே நேரடியாக இது தப்பா என்று கேட்டுவிட்டார். பெரியவாள் தவறில்லை என்று சர்டிபிகேட் கொடுக்க இவருடன் அபிப்ராய பேதம் கொண்டவர்கள் மௌனமாயினர்! இதை தொடர்ந்து ஸ்வாமி போன்ற படைப்புகள் வரலாயின. தொடர்ந்து உறவினர் பலரும் கூட பாபா பக்தர்கள் ஆயினர். (என்னைத்தவிர்த்து!) அண்ணாவின் வீட்டிலும் விபூதி கொட்டுவது, மாலை சுற்றுவது என்று வினோதங்கள் நிகழலாயின!
 

Friday, February 24, 2012

அண்ணா -3



சதாசிவம் -எம்.எஸ் தம்பதியினரின் ஆதரவு கிடைத்தது.
எம்.எஸ் சம்ஸ்க்ருத பாடல்களையோ அல்லது ஸ்லோகங்களையோ பாடும் முன் இவரிடம் பாடிக்காட்டி உச்சரிப்பை சீர் செய்து கொள்ளுவார். இவருக்குமே சங்கீத ஞானம் நிறையவே உண்டு.
கல்கியில் வேலை பார்த்தார். பல தொடர்கள் பலத்த வரவேற்பை பெற்றன. காற்றினிலே வரும் கீதம் போன்ற தொடர்கள் நான் பள்ளிசிறுவனாக இருந்த போது வந்துக்கொண்டு இருந்தது நினைவிருக்கிறது. எல்லோரும் வியாழக்கிழமைக்காக காத்திருந்து விரும்பிப்படிப்போம். என்னமா எழுதறாண்டா இந்த கணபதி! ஒண்ணுமே புரியலை என்பார் என் எளிய உறவினர் ஒருவர்!

அருள் வாக்கு என்ற பெயரில் மஹா பெரியவா வின் சொற்கள் கல்கியில் இடம் பெற்றன. பின்னால் இவையும் இன்னும் பல விஷயங்களும் புத்தக வடிவாயின. தெய்வத்தின் குரல் என்ற பெயரில் இந்த தொடர் வெளியீடுகள் பலத்தை வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தின.

தெய்வத்தின் குரல் ஒரு ஆச்சரியமான கம்பைலேஷன். பிள்ளையாரைப்பற்றி எழுதுகிறார் என்றால் ஒரு கட்டுரையில் ஒரு கால கட்டத்தில் பெரியவாள் சொன்ன விஷயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. முதல் சில வரிகள் 1948, அடுத்த சில வரிகள் 1954 இல் உபன்யாசத்தில் சொன்னது, அடுத்து சில வரிகள் 1935 இல் எங்கோ சொன்னது என்று இருக்கும். ஆனால் எல்லாமே ஒன்றாக கோர்ந்து சரியாக விஷயத்தை சொல்லி வரும்.  

இதைப்பற்றி அவரிடம் கேட்ட போது அவர் சொன்னது: “ அதை நான் எழுதலைடா. உட்கார்ந்து எழுத ஆரம்பித்தால் அப்படியே தாரையாக வரும். எழுதிகொண்டே போவேன். சட் என்று நின்று போனால் அவ்வளவுதான். ஒண்ணுமே ஓடாது. இதை அதை படித்துக்கொண்டு இருப்பேன். ரெபரன்ஸ் பார்த்துக்கொண்டிருப்பேன். யார்கிட்டேயாவது போன் பண்ணி விசாரிச்சிண்டு இருப்பேன். என்ன பண்ணினாலும் திருப்பி அதுவா வரும் போதுதான் வரும். எழுதியதுதான் இந்த கை. உண்மையில் எழுதியது பெரியவாதான்.”

அண்ணா -2


மஹா பெரியவாளுடன் இவரது தொடர்பும் அப்படித்தான். அந்த கதையை இவர் எழுதி இருப்பதை படிக்க வேண்டும்! சன்னியாசியாம், மடமாம், எல்லாம் சும்மா என்ற ரீதியில் எண்ண ஓட்டத்துடன் பெற்றோர் வற்புறுத்தலுக்காக இவரும் போனார். எல்லோரும் வரிசையில் நின்று தர்சனம் செய்து நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு இருந்தனர். வரிசை பாட்டுக்கு நகர்ந்து கொண்டிருக்க பெரியவாளின் பார்வையோ கணபதி மேலேயே இருந்தது! இவர்கள் முறை வந்த போது இவரது தந்தை கொண்டு போயிருந்த பொருளை வினயத்துடன் சமர்ப்பித்தார். தம்பதிகள் வணங்கி ஆசீர்வாதம் பெற்றனர். குங்கும பிரசாதமும் பெற்றனர். ஆனால் பெரியவா பார்வையோ இவரைவிட்டு அகலவில்லை. பெற்றோர் செய்தது போலவே இவரும் நமஸ்காரம் செய்துவிட்டு வந்துவிட்டார். கூடியிருந்த எல்லாரும் யார் நீங்க? இந்த பையன் யார்! ஏன் பெரியவா இபப்டி இவனையே பார்த்துக்கொண்டிருந்தார் என்று ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டி இருந்தனர்.
இவருக்கு அப்போது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இரண்டு நாட்களில் ஏன் என்று புரியாமலே அவர் நினைவாகவே இருக்க ஆரம்பித்தார். அவரில்லாமல் தான் இல்லை என்ற நிலையே வந்துவிட்டது. பின் காலத்தில் பெரியவாளுடன் பல மணி நேரம் விஸ்தாரமாகவும் அந்தரங்கமாகவும் பேசும் பாக்கியமும் ஏற்பட்டது. 

சகஜமாக பேச்சு வார்தை நடந்ததுக்கு ஒரு சாம்பிள்:
பெரியவா: எல்லாரும் என்னை பெரியவா பெரியவா ன்னு சொல்லறா. ஏன்? ஒரு வேளை பெரிய வாய் என்கறது பெரியவா ஆயிடுத்து போல இருக்கு. 
ஸ்ரீ க: நிஜம்தான் போல இருக்கு
பெரியவா: உனக்கு பெரியவாயா இருக்கும் போலிருக்கே! எப்படி?
ஸ்ரீ க: நீங்க.... மஹா வாக்கியங்களை உபதேசம் செய்யற வாய் அதனாலே பெரிய வாய்தானே?
பெரியவா: உனக்கு பெரிய வாய்தான்டா!
சற்று நேரம் கழித்து: பின்ன ஏன் பெரிய வாள் ன்னும் பலர் சொல்லறா!
ஸ்ரீ க: நீங்க பெரிய வாளும்தான்! எங்களோட காமம் க்ரோதம் ன்னு எல்லாத்தையும் அறுத்து எறியறதால....

மஹா பெரியவாள் ஆதி சங்கரரின் வாழ்கை சரிதத்தை எழுதும்படி பணித்தார். “எனக்கு ஒண்னும் தெரியாதே! எப்படி எழுதுவேன்?” என்றார்.
"அம்பாளை நினைச்சு கொண்டு எழுத ஆரம்பி; அம்பாள் பேனாவில் மசி ஊற்றுவா. அது தானா எழுதும்!” என்றார் மஹா பெரியவா. இப்படித்தான் 'ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர' எழுதலாயிற்று.

Wednesday, February 22, 2012

அண்ணா



அண்ணா
காஞ்சி மஹா ஸ்வாமிகளின் பல உபதேசங்களை எழுத்து வடிவில் கொண்டு வந்து மகத்தான சேவையை செய்த ஸ்ரீ. ரா. கணபதி இரு தினங்களுக்கு முன் உடலைவிட்டுவிட்டார். பல வருஷங்களாகவே பெரும்பாலும் படுக்கையில் கழிக்க வேண்டிய நிலையில் இருந்த அவர் சமீபகாலமாக உணவு உட்கொள்வதை குறைத்துக்கொண்டே வந்தார். சுமார் இரு வாரங்களாக உணவு எதுவுமே எடுத்துக்கொள்ளவில்லை. எந்த மருத்துவ சிகிச்சையையும் பலமாக மறுத்தார். குறிப்பாக ஐவி வழியாக க்ளூக்கோஸ், சலைன் ஏற்ற வேண்டாம் என்று சைகையில் சொன்னார்.
 சிவராத்திரி மாலை டாய்லெட் போய் வந்து எல்லா ஜன்னல் கதவுகளையும் திறந்து வைக்கச்சொன்னார். வழக்கம் போல படுத்தவாறே ஜபங்கள் ஓடிக்கொண்டு இருந்தன. அவரது தமக்கை, இது வரை அவருக்கு சேவை செய்து வந்த தொண்டர்கள் ஆகியோர் அறையில் குழுமி இருந்தனர். சுமார் மாலை 7-25 க்கு கண்களை திறந்து அறை சுவற்றில் இருந்த படங்களை தலையை திருப்பி வரிசையாக பார்த்துக்கொண்டு வந்தார். பகவான் ரமணரின் படத்தில் ஆரம்பித்து ஷீரடி சத்ய பாபா, ராம் சுரத் குமார், புட்டபர்த்தி சாய் பாபா போன்றோர் படங்கள், வகை வகையாக அம்பாள் படங்கள் எல்லாவற்றிலும் அவரது பார்வை சற்று சற்று நிலைத்தது. பின் அதே வரிசையில் பின் திரும்பி எல்லாப் படங்களையும் பார்த்தார். பகவான் ரமணரின் படத்தில் பார்வை நிலைத்தது. பின் கண்களை மூடிக்கொண்டார். அமைதியாக உயிர் பிரிந்தது. பிள்ளையார் சதுர்த்தி அன்று பிறந்தவர் சிவராத்ரி அன்று தன் உலக பயணத்தை முடித்துக்கொண்டார்.
அண்ணா என்று அன்புடன் பலராலும் அழைக்கப்பட்ட ரா. கணபதி என்ற தொண்டனை மஹா பெரியவாள் அழைத்துக் கொண்டார்.
ராம க்ருஷ்ண மடத்தை சேர்ந்த 'அண்ணா' விற்கு பின் அண்ணா என்றால் பலரும் இவரையே குறிப்பதாக பொருள் கொள்வர். நடுவில் ஒரு முறை இவரை அத்தான் என்ற உறவு முறையில் விளித்து கடிதம் எழுதிய போது 'தொண்டுக்கிழம் முதல் குஞ்சு குளுவான் வரை எல்லாருக்கும் நான் அண்ணாதான். அப்படியே எழுது' என்று பதில் வந்தது!
இவரது தந்தையாருக்கு சொந்த ஊர் சிதம்பரம். பெயர் சி.வி. ராமசந்திரன். இவரது தாய் கடலூர். ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி. (எனக்கு சொந்த அத்தை) பலரும் இவரை மஹா ஒல்லியான எலும்பும் தோலுமான உருவத்தையே பார்த்திருக்கிறார்கள். ஆனால் சின்ன வயதில் "குண்டு குஸ்க்" என்று இருந்த குழந்தை!
இன்டர் படித்துக்கொண்டு இருந்த போது காசநோய் தாக்கியது. அப்போது குலைந்து போன உடல்நலம் திரும்பி வரவே இல்லை.
பிஏ லிட்ரேசர் முடித்தார். இதற்குள் வட பழனி ஆண்டவன் இவரை ஆட்கொண்டு விட்டான். கோவிலுக்கு போவதில் ஒரு ஈர்ப்பும் இல்லாத இவரை பெற்றோர் வற்புறுத்தி வட பழனி கோவிலுக்கு அழைத்துப்போக தரிசன மாத்திரத்தில் உள்ளம் துள்ள அப்படியே ஆட்கொள்ளப்பட்டார்.
மெய்ல் பத்திரிகையில் ரிப்போர்டராக பணியாற்றி இருக்கிறார். மாநகராட்சி தலைமைக்கு தேர்தல் நடந்து கொண்டிருந்தது. நிருபர்கள் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள குழுமி இருக்கிறார்கள். சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் ரிசல்ட் வந்ததால் மறு எண்ணிக்கை கேட்கப்பட்டு அதை ஏற்று மறு எண்ணிக்கையும் துவங்கியது. இவருக்கு ஏற்கெனெவே மூச்சிரைப்பு (ஆஸ்த்மா என்று குறிப்பிட்டு இருக்கிறார்.) கொஞ்சம் தாக்குப்பிடித்து ரிசல்ட் வந்ததும் ரிபோர்ட் பண்ணிவிட்டு வீட்டுக்குப்போக உத்தேசித்து இருந்தவர் மறு எண்ணிக்கை என்றதும் ஆயாசப்பட்டுப்போனார். எப்படி வேண்டுமானாலும் போகட்டும், இனிமேல் தாங்காது என்று வடபழனி முருகா பார்த்துக்கொள் என்று வேண்டியபடி வீட்டுக்குத்திரும்பினார். பால் சாதம் கொஞ்சம் சூடாக சாப்பிட்டு படுத்து உறங்கி விட்டார். காலை எழுந்த பின்னரே இரவு செய்த காரியத்தின் முழு தாக்கம் உணர முடிந்தது. எல்லாரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் தேர்தல் ரிசல்டை கொடுக்காமல் போய்விட்டோமே! நேராக ப்ரஸுக்கு போனார்.
"தேர்தல் ரிசல்ட்..”
“அது நேத்தே வந்தாச்சே சார்! ப்ரிண்ட்ல ஏத்தியாச்சு!”
ஓஹோ, எதோ நியூஸ் ஏஜென்சி ரிபோர்ட்டாக இருக்கும்.
"ஏஜென்சி ரிபோர்ட்டா?”
ப்ரூபை பார்த்து விட்டு, இல்லையே சார், நம்ம ஸ்டாஃப் ரிபோர்ட்தான் என்றார் ப்ரஸ் ஆசாமி. "அட, நியூஸை யார் பைல் செய்தது? நியூஸ் ரிப்போர்ட்டை பார்த்தால் தெரிந்துவிடும். எப்படியும் நாம் நம் வேலையை செய்யாததற்கு பாட்டு வாங்க வேண்டும்" என்று நினைத்தவாரே அலுவலகத்துக்குள் நுழைந்தார்.
கண்ணில் பட்ட நபர் "ஏன் சார்! அவ்வளவு லேட்டா வேலை செய்திருக்கீங்க. ஆஃப் எடுத்துக்கறதுதானே?” என்று கேட்டவாரே போனார்.
லேட்டா வேலைச் செய்தேனா! ஒன்றும் புரியவில்லை.
அடுத்து பார்த்தவர் இரவுப் பணி ஆசிரியர். "ஏன் சார்! நேத்து உங்களுக்கு அந்த நேரத்தில் டாக்ஸி கிடைத்ததா? ப்ரஸுக்கு செய்தியை அனுப்பிவிட்டு ஆபீஸ் கார் கூப்பிட்டு உங்களை கொண்டு விடச் சொல்லலாம்ன்னு பாத்தா அதுக்குள்ள போய்விட்டிங்களே?” என்றார். பின்னாலேயே "களைப்பா இருக்குமே ஆஃப் எடுத்துக்கொள்ளுங்களேன்" என்றார். "ஆமாம், அப்படி சொல்லிவிட்டு போகத்தான் வந்தேன்!” என்று ஏதோ சொல்லிவிட்டு, வட பழனி ஆண்டவனே காப்பாத்தினாய், ந்யூஸ் ரிப்போர்டில் யார் பெயர் இருக்கும் என்று இனி பார்க்க வேண்டியதில்லை என்று நினைத்துக்கொண்டே கிளம்பினார்.