Pages

Friday, December 14, 2012

என் உலகம் என் கையிலா? 2


பாவம், அவங்களுக்கு ஏன் எரிச்சல் நாம் கொடுக்கணும்ன்னு சில நல்லவங்க கேள்வி! நல்லா இருங்கப்பா!
இப்படி செய்யத்தான் பதஞ்சலி சொல்றார்

எப்படி இருந்தாலும் உதாசீனம் என்கிறது ஒரு மிக சக்தி வாய்ந்த ஆயுதம்
நம்பிக்கை வரலை சிலருக்கு! இல்லையா?
தினசரி வாழ்கையில இருந்து ஒரு உதாரணம் பார்க்கலாம். குழந்தை விளையாடிக்கொண்டு இருக்கு. அப்பா கூப்பிடறார். இனியா, நீ தனியா என்ன விளையாடுற? ஸ்கூலுக்கு நேரமாச்சு கிளம்பு! (இனியன் யார் பையன்பா? ஓ குசும்பர் பையனா? ச்சும்மா ஒரு எகன மொகன க்கு போட்டது, மன்னிச்சூ!)
இப்ப அப்பா கூப்பிடறதை கேட்டு பையன் வந்துட்டா ஒண்ணும் பிரச்சினை இல்லே. அப்படி இல்லாம, பதிலே சொல்லாம, விளையாடிகிட்டே இருந்தா எரிச்சல் வருமா வராதா? ஹா! அதான் விஷயம். இன்னிக்கு வெள்ளிக்கிழமைப்பா, ஸ்கூல் லீவுன்னு பல்பு கொடுத்தாக்கூட பரவாயில்லை. பிரச்சினை வராது. இதோ வரேன், வர மாட்டேன் போ எல்லாம் கூட ஓகே. அது அடுத்து உரையாடலை தொடரும்.

உதாசீனம்தான் எதிராளிக்கு இன்னும் எரிச்சல் மூட்டிவிடுவது. சூடான பதில் இல்லை. சூடான பதில் இருந்தா பின்னால் வாக்குவாதம் வரும். அதானே எதிராளி எதிர்பார்க்கிறது? அப்படி இல்லாம அவங்களை கடுப்பேத்தறதுக்கு உதாசீனம்தான் வழி.
(மேலே சொன்ன உதாரணத்தோட இன்னொரு வடிவம்தான் தன்னை போதுமான அளவு கவனிக்காத பெற்றோரை குழந்தைகள் அவங்களுக்கு பிடிக்காததை செய்து கவனத்தை ஈர்ப்பது. டீப் சைக்காலஜி சமாசாரம். இப்ப அதுக்கு போக வேண்டாம்.)

ஒரு சின்ன உதாரணத்தைத்தான் பார்த்தோம். நாம் எப்படி இருக்கப்போகிறோம் என்பது நம்மகிட்டத்தான் உண்மையில இருக்கு. இதைத்தான் சொல்ல வரேன்.
ஆகவே நமக்கு ஆளுமையில இருக்கிற பல விஷயங்களை நாமே தீர்மானிக்கலாம். தெய்வாதீனமா இருக்கற விஷயங்களில நாம் அதிகமா ஒண்ணும் செய்ய முடியாது. ப்ரார்த்தனை செய்யலாம். சில கர்மாக்களை செய்யலாம்.
மற்ற விஷயங்களில பலதும் நம்ம ஆதீனத்தில இருக்கு என்பதை நாம புரிஞ்சுக்கலை என்பதே காட்ட நினைக்கும் விஷயம்.
நிறைய பேருக்கு நிதானமா யோசிச்சு செயல்படுகிற பழக்கம் இல்லை. பெரும்பாலும் ஒரு ரிஃப்லெக்ஸாத்தான் செயல்படுகிறோம். இன்ன இன்ன செயலுக்கு இன்ன இன்ன எதிர்வினைன்னு சார்ட் போட்டு வெச்சிருக்கோம். அப்படி ஏன் வந்ததுன்னு திருப்பி யோசிக்கக்கூட மாட்டோம்! திட்டினியா திருப்பித்திட்டு. கேவலமா பேசினானா திருப்பி கேவலமா பேசு. இந்த ரீதியில கண்ணுக்குக்கண் ன்னு செயல்படுகிறோம். சரிதானா? இதுல என்ன லாபம் இருக்கு? விவாதங்கள் பலதையும் பார்க்கிறேன். ஒரு விவாதத்தால யாரும் விஷயம் புரிஞ்சுகொண்டு நடத்தையை மாத்திகிட்டதா பார்க்க / கேட்க்கக்கூடவில்லை! பரஸ்பரம் சேற்றை அள்ளி வீசறதும்..... விடுங்க.

ரைட். அப்ப என் உலகம் என் கையில்தான் பெரும்பாலும் இருக்கு. என் அம்மாவோ, அப்பாவோ, பையனோ, பெண்ணோ, மனைவியோ, மேலதிகாரியோ (அதாவது மத்த மேலதிகாரி), யாரானாலும் அவங்க கூட நான் எப்படி நடந்து கொள்வேன் என்பதை நான்தான் தீர்மானிப்பேன். அதை அவங்க தீர்மானிக்கிறாங்கன்னா நம்ம வாழ்கையை நாம் இன்னும் நம் கையிலே எடுத்துக்கலைன்னு பொருள்.

இப்படி சொல்கிறதாலே 'மத்தவங்க என்ன வேண்ணா சொல்லிட்டுப்போகட்டும். நான் கண்டுக்க மாட்டேன், நான் செய்கிறதைத்தான் செய்வேன்' ன்னு அர்த்தமில்லை.
குறிப்பா நான் சொல்கிற இந்த விஷயம் வளர்ந்த மனிதர்களுக்குத்தானே ஒழிய வயதில சின்னவங்களுக்கு இல்லை. பெரியவங்க ஒரு விஷயம் சொன்னா அதை கேட்டு, அதன் படி நடக்கிறது அவங்க கடமை.
நாமும் ச்சும்மா வீணுக்கு நான் என் வழிலதான் போவேன் என்கிறதும் சரியில்லை. மாற்றுக்கருத்துக்கு நாமும் உடன்படலாம், சில காரணங்களுக்காக. இவன் கரிவாயன், இப்படிச்சொல்லிட்டானே, போகட்டும் அப்படியே செய்வோம் முதல் இவர் அனுபவஸ்தர், சொன்னா சரியா இருக்க வாய்ப்புகள் அதிகமிருக்கு வரை பல வகை காரணங்கள் இருக்கலாம்.

இது ரெண்டும் இல்லாம பராதீனமும் இருக்கு. ......

Thursday, December 13, 2012

என் உலகம் என் கையிலா? - 1


என் உலகம் என் கையிலா?
சில நாட்கள் நடந்த கோளாறான சிந்தனைகளின் விளைவு! ஹும் படிச்சுடுங்க, நான் பாவம்!

கடந்த சில நாட்களா... சரி சரி உங்களுக்கு புரிஞ்சுடுத்து.
இந்த உலகம் உலகம் ன்னு சொல்லறாங்களே அது எது? நான் இருக்கிறதா நினைக்கிறதா, நீங்க இருக்கிறதா நினைக்கிறதா இல்லை அதுவா இருக்கிறதா?

முன் காலத்திலே 'கடவுள் ஒரு நாள் உலகைக்காணத் தனியே வந்தாராம்' ன்னு ஒரு பாட்டு உண்டு. அதில உலகம் எப்படிப்பா இருக்குன்னு கேப்பார். ஒருத்தன் வாழ்வே இனிமை ம்பான். இன்னொருத்தன் அதுவே கொடுமை ம்பான். இப்படி பாட்டு போகும்.

ஒரே உலகம் ஒத்தருக்கு இனிமையாவும் இன்னொருத்தருக்கு கொடுமையாவும் எப்படி இருக்க முடியும்? அது அப்படித்தான் இருக்கு என்கிறது நிதர்சனம். அப்படி இல்லைன்னு சொல்ல முடியாது.

ஒத்தர் அப்பாடா என்ன வெய்யில் என்கறார். இன்னொருத்தர் அதைப் பத்தியே ஒரு சிந்தனையும் இல்லாம வெயில்லே நடந்து போறார். சின்னப்பசங்க வெயிலான்னு ஆச்சரியமா சொல்லிட்டு அவங்க பாட்டுக்கு கிரிக்கெட் ஆடறாங்க! எலும்பும் தோலுமா மூட்டு வியாதிகளோட இருக்கற கிழம் ஒண்ணு அப்பாடா, சொகமா இருக்குனு கூடச்சொல்லலாம்!

அப்ப உலகம் ஒவ்வொருத்தர்கிட்டேதான் இருக்கு. அவரவர் மனசில இருக்கிறது போலவேத்தான் இருக்கு.

இந்த மனசு... , இந்த மனசுதான் பல விஷயங்களுக்கும் காரணம். வாழ்கையை கொடுமையாக்கவும் இதால முடியும்; இனிமையா ஆக்கவும் இதால முடியும்.
இப்படி ரொம்பவே ஜெனரலைஸ் செய்யறத்துக்கு முன்னாடி சில விஷயங்களை … ஹிஹிஹி... மனசில ஏத்திப்போம்!
காத்து அடிக்குது, வெயில் அடிக்குது, மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது (அட, நிசமா மழையே காணோம்ன்னாலும் கற்பனையிலதான் கொஞ்சம் கொட்டட்டுமே!) இதெல்லாம் நடக்கலைன்னு சொல்ல முடியாது. அது நம்மை பாதிக்காதுன்னு சொல்லவும் முடியாது. மழை இல்லைன்னு சொல்லி வெளியே போய் நனையாம திரும்பி வர முடியாது! ச்சும்மாவான்னா ஒரு கறபனையை வளத்துக்கொண்டு அது படி இருக்குன்னு சாதிச்சா.... பைத்தியக்காரன் பட்டம் சீக்கிரம் வந்துடும்!
இந்த இயற்கை சமாசாரங்கள் எல்லாம் தெய்வாதீனம். அதீனம் ன்னா ஆளுகை. அதுலேந்துதான் ஆதீனம் வந்தது.  சரி சரி, டைக்ரஸ் ஆக வேணாம்கிடக்கட்டும்.

என்ன சொன்னேன்? இயற்கை சமாசாரங்கள் எல்லாம் தெய்வாதீனம். இயற்கையா மழை பெய்யுது; பெய்யாம இருக்கு. நம்மால ஒண்ணும் பெரிசா செய்ய முடியலை. அதுவே மழை வேணும்ன்னு தெய்வத்தை வேண்டிக்கொண்டு சில கர்மாக்கள் செய்தா சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மழை பெய்யுது. இப்படி சில விஷயங்கள் நம் ஆளுகைக்கு உட்படாம தெய்வங்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கு. இதை இப்ப இந்த பதிவுல விட்டுடுவோம்.

மீதி பல விஷயங்கள் நம் ஆளுகையில இருக்கு. கொஞ்சம் விவரமா பார்க்கலாம்.
சில வருஷங்கள் முன்னே ஒரு அம்மா என்கிட்ட பொலம்பிகிட்டு இருந்தாங்க. 'சில பேர் என்னை வேணும்ன்னு எரிச்சலூட்டறாங்க' என்பதே அதில முக்கிய விஷயம். கடைசியா என்ன செய்யட்டும் ன்னு கேட்டாங்க. இப்படி பொலம்பறதே கூட ஒரு மாதிரி ரிலீஃப்தான். இருந்தாலும் அவங்ககிட்ட கேட்டேன்..
அவங்களோட குறிக்கோள் என்ன?
நான் எரிச்சலாகணும்...
சரி, அவங்களோட குறிக்கோள் நிறைவேறக்கூடாதில்லையா? அதானே நீங்க விரும்பறது?
ஆமாம்.
சரிதான். எப்படி அது நிறைவேறாம இருக்கும்?
.. புரியலை.....
அதாவது அவங்க நீங்க எரிச்சலடையணும்ன்னு நினைச்சு சில விஷயங்கள் சொல்லறாங்க அல்லது சில வேலைகள் செய்யறாங்க.
ஆமாம்.
அவங்க நோக்கம் நிறைவேறக்கூடாதுன்னா நீங்க என்ன செய்யணும்?
அதானே உங்ககிட்டே கேட்டுக்கிட்டு இருக்கேன்!
அவங்க நோக்கம் நிறைவேறக்கூடாதுன்னா நீங்க எரிச்சலடையக்கூடாது.
ஆமாம், அது எப்படி முடியும்?
அது எப்படி முடியாது? எரிச்சலடைகிறது யார்? அவங்களா, நீங்களா? அது யார் ஆதிக்கத்தில இருக்கு?
எரிச்சலடைய வேண்டியது நான்தான். அது எப்படி எரிச்சலடையாம இருக்க முடியும்?
அது உங்க கண்ட்ரோல்லதானே இருக்கு!
அவங்க ப்ரொவோக் பண்ணறாங்களே?
ஆமாம். அப்படித்தான் சொன்னீங்க. உங்களுக்கு எது எரிச்சல் மூட்டும்ன்னு நல்லா ஸ்டடி பண்ணி வெச்சு இருக்காங்க. எதை சொன்னா உங்களுக்கு கோபம் வருது, எதை செய்தா கோபம் வருது...
ஆமாம். அதை எல்லாம் வேணும்ன்னு அவங்க செய்யறாங்க.
வேணும்ன்னு செய்யறாங்களோ அல்லது அது அவங்க இயல்போ, கிடக்கட்டும். நீங்க பதிலுக்கு கோபப்படாம எரிச்சல் அடையாம இருந்தாதான் அவங்களை தோற்கடித்ததா ஆகும்.

இந்த ஆர்க்யூமெண்ட் எல்லாம் கேட்டுட்டு அவங்க எரிச்சல் ஆகாம இருந்ததுதான் விசேஷம். ரொம்ப கண்ட்ரோல் செய்திருப்பாங்க போலிருக்கு.

அதுக்கு நான் என்ன செய்யணும்?
கொஞ்சம் யோசிக்கணும். அவங்க சொன்னது உண்மையா? உதாரணமா " நீ ஒரு முட்டாள்" ன்னு சொல்கிறாங்க. சாதாரணமா நம்ம எல்லாருக்குமே இதை கேட்டா கோபம் வரும். திட்டினது மேலதிகாரி (இல்லை, தங்கமணி ன்னு தனியா வேற சொல்லணுமா? அதான் மேலதிகாரின்னு சொல்லியாச்சில்லே?) மாதிரி இருந்தா மனசில திட்டிட்டு வெளிவே வந்துடுவோம். இல்லைன்னா சண்டை போடுவோம். இந்த சண்டையத்தான் தவிர்கப்பார்க்கிறோம். யோசிக்கலாம், அவங்க சொன்னது உண்மையா? ஆமாம்ன்னா உண்மைய சொன்னதுக்காக யாரையும் கண்டனம் செய்ய முடியாது. இல்லை பொய் ன்னா, என்ன செய்யலாம்ன்னு யோசிக்கணும். இவங்க சொல்கிறது பொய், உண்மைத்தன்மையை யாராலும் மாத்த முடியாது; சொல்லிட்டு போகட்டும்; எனக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. இப்படி யோசிக்க தோணியாச்சுன்னா அவங்க சொல்கிறதை பொருட்டாவே எடுத்துக்கொள்ள வேண்டாம். ஓஹோ அப்படியா ன்னு சிரிச்சுகிட்டே நகர்ந்துட்டா அவங்க எரிச்சல் ஆயிடுவாங்க!
(இன்னும் வரும்)

Friday, November 30, 2012

மழை பெய்ய ப்ரார்த்தனை!






Description: http://agnihot3.googlepages.com/tata.jpg

தமிழ் நாட்டில் மழை இல்லாமல், காவிரியில் இருந்து வர வேண்டிய நீரும் வராமல் எல்லோரும் கஷ்டப்படுவது எல்லாரும் அறிந்ததே. நிலத்தடி நீரையும் பயன்படுத்த முடியாமல் மின் வெட்டு இருக்கிறது.  அரசியல் மூலம் இதற்கு தீர்வு ஏற்பட முடியுமா என்பது சந்தேகமே. மூன்று புயற்சின்னங்கள் உருவாகியும் 25% கூட நீர் தேவை பூர்த்தி ஆகவில்லை, மேலும் மழை இல்லாவிட்டால் பயிர்கள் கருகிவிடும்.  நாம் இருக்க வேண்டிய படி இருப்பதில்லை. இயற்கையை எப்படி குறை சொல்வது?

இயற்கையையோ, கர்நாடகத்தையோ திட்டிக்கொண்டு இராமல் நம்மால் இதற்கு என்ன செய்ய முடியும் என்று யோசிப்பதே நல்லது. இதை குறித்து வலையில் தேடிய போது கிடைத்த சில விவரங்களை பகிர்ந்து கொள்கிறேன். தங்களால் இயன்றதை செய்து தெரியப்படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன்.

http://vaidhikasri.blogspot.in/2010/04/blog-post_2558.html

மழை பெய்விக்க பல வழிகள் இருக்கின்றன, அக்னிஹோத்ரிகள் காரீரி இஷ்டி என்பதைச்செய்தால் மழை பெய்யும் என்கிறது ச்ரௌதம், 
அது 40 நாள் சமாசாரம். பெருத்த செலவும் ஆகும் காரியம். செய்யக்கூடியவர்களும் அரிது. சாத்தியக்கூறு மிகக்குறைவே.

வேதம் கற்றவர்கள் பர்ஜன்ய சாந்தி (வருண ஜபம்) செய்தால் மழை பெய்யும் என்கிறது ஸ்ம்ருதி,
 
இதற்கு கொஞ்சம் வாய்ப்பு இருக்கிறது. முயன்று பார்க்கலாம்.

மஹாபாரதத்தில் விராடபர்வா பாராயணம் செய்தால் மழைபெய்யும் என்கிறது புராணம்,
 
வட மொழி வல்லுனர் யார் வேணுமானாலும் செய்யலாம். முடியாவிட்டால் தமிழிலேயும் பாராயணம் செய்யலாம்.

நீர் நொச்சி ஸமித்தால் கணபதி ஹோமம் செய்தால் மழை பெய்யும் என்கிறது தந்த்ர சாஸ்திரம்,

ஒரு ராகத்தைப் பாடினால் மழை பெய்யும் என்கிறது ஸங்கீத சாஸ்த்ரம்,
 
அமிர்த வர்ஷணி. கீழுள்ள சுட்டிகள் ஒன்று காட்டும் பக்கத்தில் விவரம் இருக்கிறது.

ஆலயங்களில் நந்திக்கு ஜலம் கட்டுதல் போன்றவற்றைத் தெரிவிக்கிறது ஆகம சாஸ்திரம்,

ஆழ்வார்களின் பாடல்களை பதிகங்களை பாடுவதால் மழைபெய்யும் என்கின்றன தமிழ் வேதங்கள்,
கீழே கொடுத்துள்ளேன்.
இவைகள் அனைத்துமே மழைபெய்யச்செய்யும் சக்திவாய்ந்தவை, அவரவரின் சக்திக்குத் தக்கவாறு மழைக்காக மேற்கூறியவற்றைச் செய்யலாம்,

இவை எதுவும் தெரியாதவர்கள், அவரவர் வீட்டிலோ ஆலயங்களிலோ இந்த வருஷம் உரிய காலத்தில் தேவையான அளவு மழை பெய்ய வேண்டும் என்று மனமுறுகி பகவானிடம் ப்ரார்த்தனை செய்யலாம். இதற்கு பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

உபதேசம் பெற்றவர்கள் மழை வேண்டி தினசரி ஆயிரத்தெட்டு காயத்ரி ஜபம்  செய்யலாம்.

வைணவர்களுக்கு:

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்;
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில்
ஆழிபோல்மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

விளக்கம்:- கடல் போன்ற பெருமை படைத்த கண்ண பெருமானே! நீ எதையும் மறைத்து வைக்காதே! கடல் நீரை முகந்து மேலே எழுந்து செல். திருமாலின் மேனி போல உருவத்தில் கருமை கொள். எழில் நிறைந்த பத்மநாபன் சக்கரம் போல மின்னி, வலம்புரி சங்கு போல் முழங்கு. பெருமானின் வில்லில் இருந்து எழும் அம்பு மழை போல உலகம் வாழவும் நாங்கள் மகிழ்ந்து மார்கழி நீராடவும் காலம் தாழ்த்தாமல் மழை பொழிவாய்!   

http://tinyurl.com/cb3cy8e

 http://temple.dinamalar.com/news_detail.php?id=13184
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் திருப்புன்கூர் என்னும் சிவத்தலம் உள்ளது. இக்கோயிலுக்குரிய நிபந்தங்களில் முக்கியமான குறிப்பு ஒன்று உள்ளது. மழை பெய்ய12 வேலி நிலமும்(84ஏக்கர்) மழை நிற்க 12 வேலி நிலமும் காணிக்கையாக ஒரு அடியார் இக்கோயிலுக்கு எழுதி வைத்துள்ளார். இத்தலம் குறித்து சுந்தரர் பாடியருளிய தேவாரத்தில் இக்குறிப்பு காணப்படுகிறது. 

http://tinyurl.com/bm7voak

வையக முற்று மாமழை மறந்து
    வயலில் நீரிலை மாநிலந் தருகோம்
உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன
    ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
    பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும்
செய்கை கண்டுநின் திருவடி யடைந்தேன்
    செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

என்பது அத்தேவாரப் பாடல்.
{வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, இவ்வூரிலுள்ளவர், ` உலகமுழுதும் நிரம்பிய மழையின்மையால் வயலில் நீர் இல்லையாயிற்று ; மிக்க நிலங்களை உனக்குத் தருவோம் ; எங்களை உய்யக்கொள்க ` என்று வேண்ட, ஒளியைக் கொண்ட வெண்முகிலாய்ப் பரந்திருந்தவை, அந் நிலைமாறி, எங்கும் பெய்த பெருமழையால் உண்டாகிய பெரு வெள்ளத்தை நீக்கி, அதன் பொருட்டு அவர்களிடம் மீட்டும் பன்னிரு வேலி நிலத்தைப் பெற்றருளிய செயலையறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள். }

மழை பெய்யவும் நிற்கவும் இங்கு சிறப்பு வழிபாடும் வழக்கில் இருக்கிறது. அதற்கு திருப்புன்கூர் பதிகம் முழுவதும் பாராயணம் செய்யுங்கள். குறைந்த பட்சம் இப்பாடலை மட்டுமாவது ஓதி வாருங்கள். மாதம் மும்மாரி பெய்து வளம் சுரக்கும்.

திருவாவடுதுறை பக்கதில் உள்ள சாத்தனூர் என்னும் க்‌ஷேத்திரத்தில் ஒரு மகிமை இருக்கிறது. அதை விவரமாக இங்கே காண்க: 

http://aadalvallan.blogspot.in/2012_08_01_archive.html

கைலாசநாதர் கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு ஆலங்கட்டி விநாயகர் என்ற பெயர் வந்த கதை சுவாரஸ்யமானது.மழை இல்லாமல் கஷ்டப்படும் காலத்தில், கோமுகத்தையும், முன் புறத்தையும் அடைத்து விட்டுப் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்வார்கள். பிள்ளையார் மூழ்கும் நேரத்தில் அடைப்பு உடைந்து நீர் வெளியேறிவிடும். மனம் தளராமல் மீண்டும் அடைத்துவிட்டு, அபிஷேகத்தைத் தொடருவார்கள். எங்கிருந்தோ மேகங்கள் திரண்டு வந்து மழை கொட்டித் தீர்த்து விடும். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்த காஞ்சி காமகோடி பெரியவர்கள், இந்த அதிசயத்தைப் பார்த்துவிட்டுப் பரவசமடைந்தார்களாம். ஆலங்கட்டி மழை யாகப் பெய்ததால்  பிள்ளையாருக்கு ஆலங்கட்டி விநாயகர் என்று பெயர் வைத்து விடும்படி சொன்னார்களாம். அதன்படியே இன்றும் அப்பெயராலேயே, விநாயகப் பெருமான் அழைக்கப் படுகிறார்.

மழை பொழிய ஆண்டவனை வேண்டுவோம். வேறு வழியில்லை.


Description: http://agnihot3.googlepages.com/saint.jpg


Wednesday, November 21, 2012

ரொம்பவே கோளாறான எண்ணங்கள்

 
சமீபத்தில் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருந்தபோது சில விஷயங்கள் கவனத்துக்கு வந்தன. ஒரு அம்மணி வித்தியாசமான சிகித்சை கொடுக்கிறார். ஒருவரின் ஆழ் மனத்தின் நிலையை அறிய அவரை ஒருவித தூக்கத்தில் ஆழ்த்துகிறார். அதிலிருந்து நபரின் நடப்பு மனம் சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறார். பேட்டியில் அவர் சொன்னது சுவாரசியமாக இருந்தது. அவரிடம் வரும் முக்காலே மூணு வீச நபர்கள் குடும்பத்தில் இறுக்கம் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு என்பதற்கே வருகிறார்கள். ஆழ் மனத்துடன் தொடர்பு கொண்டு விசாரிக்கும் போது கொஞ்சம் கோளாறான சமாசாரம் தெரிகிறது. இப்போது மனைவியாக இருப்பவர் முந்தைய ஜன்மத்தில் கணவனாக இருந்து இப்போதைய கணவன் மனைவியாக இருந்து அவளை படுத்திய கொடுமைகளை இப்போது கணவன் செய்ய பழி தீர்க்கப்படுகிறது.

ஒண்ணும் புரியலையே?

இப்போதைய மனைவி முந்தைய ஜன்மத்தில் கணவன்.

இப்போதைய கணவன் முன் ஜன்மத்து மனைவி.

முன் ஜன்மத்திலே கணவன் மனைவியை கொடுமை படுத்தினார். கர்மாவை சேர்த்துக்கொண்டார்.

இப்போது அந்த கணவன் மனைவியாக இருந்து அதன் எதிர் வினையை அனுபவிக்கிறார்.

அப்பாடா! புரிஞ்சுதா?

உதாரணத்துக்குத்தான் சொன்னேன். இது மனைவி கணவனை கொடுமை செய்ததாகவும் இருக்கலாம்.

அது சரி, ஏன் போன ஜன்மத்துல அந்த கணவன் மனைவியை கொடுமை படுத்தினார்? அதுக்கும் இதே காரணம்தான். போன ஜன்மத்துக்கு முன் ஜன்மத்தில இவர் மனைவியா இருந்து...புரியுது இல்லே?

இது ஒரு விஷஸ் சைக்கிள்.

ஒத்தர் ஒருவரை கொடுமைப்படுத்துவதும் அவர் திருப்பி அடுத்த ஜன்மத்தில இடம் மாறி கொடுமை படுத்துவதும் அதுக்கு அடுத்த ஜன்மத்தில் இவர் திருப்பி கொடுமை படுத்துவதும்... எங்கேயாவது இது முடியணும்.

அந்த பெண்மணி என்ன சிகித்சை கொடுக்கிறாங்கன்னு தெரியலை!

இதை கேட்ட பிறகு வழக்கம் போல நம்ம மூளை கோளாறா வேலை செய்ய ஆரம்பிச்சது. முன் ஜன்மத்து சமாசாரம் இப்பவும் நம்மை துரத்தறது தெரிஞ்சதுதான். அதை வாசனை என்பாங்க. ஒரு விஷயத்தை செய்ய செய்ய அதுவே பழகிபோய் சும்மாவான அதையே செய்ய தூண்டிக்கொண்டு இருக்கும். ஒத்தரோட சண்டை போட்டுகிட்டே இருக்கிறதும், சும்மா சும்மா குத்தம் கண்டுபிடிக்கிறதும் இந்த வகையை சேர்ந்ததுதான். பழகிப்போன விஷயம். லேசில விடாது. ஜன்ம ஜன்மமா பின் தொடரும். இருந்தாலும் புத்தியை பயன்படுத்தி இதை கட்டுக்கு கொண்டு வரலாம். நம்ம புத்திக்கு தெரிஞ்சேதானே இது நடக்குது? ம்ம்ம்ம் …. மனசு சலனங்களுக்கு இடம் கொடுக்க இது நடக்கும். மாறாக புத்தி என்கிற நிலைக்கு மனசை கொண்டு வர நல்லது கெட்டது ஆராய்ஞ்சு அது செயல்படும். அதனால இதைப்பத்தி யோசிச்சு இது வேண்டாம், நிறுத்தணும்ன்னு முன்னேயே தீர்மானமா முடிவு பண்ணிட்டா புத்தி அந்த செயலை நடக்க விடாது.

இரண்டாவதா கர்மா என்கிற முன் ஜன்ம வினைகளுக்கு எதிர்வினை இப்ப கிடைக்கிறப்ப அந்த அம்பை எய்த ஆசாமியை நொந்து பிரயோசனமில்லை. இப்ப நமக்கு கிடக்கிற பூச்செண்டுகளுக்கும் செங்கற்களுக்கும் நாமேதான் காரணம். தீதும் நன்றும் பிறர் தர வாரா....

இது இரண்டும் புத்தி பூர்வமா புரிஞ்சாச்சுன்னா அடுத்து ஒரு பயிற்சிக்கு போகலாம். அமைதியா ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து உட்கார்ந்து பயிற்சியை தொடங்கலாம். போன ஜன்ம சமாசாரம் எதுவும் நமக்கு தெரியாது. அதனால அதை ஒட்டு மொத்தமா அப்புறம் பார்க்கலாம். இந்த ஜன்மத்தில நடந்ததை நினைவுக்கு கொண்டு வரலாம். நினைவு இருக்கிற சின்ன வயசிலேந்து... சின்ன வயசுல நம்ம அடிச்ச ஆயாலேந்து.... ஒவ்வொண்ணா முடிந்த வரை ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நினைவுக்கு முழுக்க கொண்டு வருவோம். மறந்திருந்தோம்ன்னா பரவாயில்லை. பலதுக்கும் நாம அப்ப செய்த குறும்புகளோ தவறுகளோதான் காரணம்ன்னு இப்ப தெரியும். சிரிப்பே கூட வரும்! ரைட், ஆனா அந்த சமயத்துல நமக்கு என்ன ஆத்திரம் கோபம் வந்தது? என்ன செய்யறேன் பார் ன்னு சொல்லிட்டு இயலமையோட சும்மா இருந்திருப்போம். அதை நினைவுக்கு கொண்டு வந்த பின்னால இதையும் நினைவுக்கு கொண்டு வரலாம்: “முன்னாலே நான் செய்த செயல்களே - கர்மாவே- அந்த துன்பத்துக்கு காரணம். ஆகவே இந்த நபரை நான் மன்னித்துவிடுகிறேன்.”

மனப்பூர்வமா மன்னிச்சுடுவோம்.

மனப்பூர்வமா செய்தோமா என்கிறது பின்னால இந்த விஷயத்தை நினைவுக்கு கொண்டு வந்தா உணர்ச்சிவசப்படாம "ஆமா, அப்படி நடந்தது" ன்னு சொல்வதில இருக்கும்! இப்படியே ஒவ்வொரு விஷயமா நினைவுக்கு டெலிபரேட்டா கொண்டு வந்து மன்னிச்சு விட்டுடுவோம்.

அதே போல நாம செய்த தவறுகளை நினைவுக்கு கொண்டு வந்து மனசார மன்னிப்பு கேட்டுடுவோம். பாதிக்கப்பட்ட நபர் உயிரோட இல்லைன்னாலும் பரவாயில்லை. அந்த தவறுகளுக்கு எப்படியும் எதிர்வினை வரும். அதை ஏற்றுக் கொள்கிறேன்ன்னு சொல்லி விடுவோம்.

இதெல்லாம் ஒரே செஷன்ல முடியலைன்னாலும் பரவாயில்லை. ஒரே நேரத்தில பல உணர்ச்சி வசப்படற சமாசாரங்கள் தாங்க முடியாம இருக்கலாம். தொடர்ந்து பல செஷன்ஸ்ல முடிக்கலாம்.

அப்படி செய்த பின்னே....

ஸ்லேட்டை துடைச்சாச்சு! இனி மனசு லேசாக இருக்கும்! வாழ்கையை அமைதியா எதிர் கொள்ளலாம்!

விதியா மனித முயற்சியா? -3-

 
ஸ்வாமி: இது தெரியாது என்பதனால் நாம் ஆணியை பிடுங்க முயற்சி செய்யாமல் இருக்கிறோமா? அல்லது முயற்சி செய்து தேவையான அளவு பலத்துடன் இழுப்புக்களை அதிகரித்து பிடுங்கப்பார்க்கிறோமா?

சீடன்: நிச்சயமாக யதார்த்தவாதிகளாக நாம் பின்னால் சொன்னதைத்தான் செய்வோம்.

அதேதான். அதே வழியை உங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் செய்யுங்கள். முடிந்த வரை செயல் படுங்கள். உங்கள் மனத்திண்மை இறுதியில் வெல்ல வேண்டும்.

முடிந்த வரை முயற்சி செய்தும் அடைய முடியாத பல விஷயங்கள் இருக்கின்றனவே?

அங்கேதான் தவறு செய்கிறீர்கள். எதோ ஒன்று இருக்கிறது என்றால் அதன் இயல்பு அதை அனுபவிக்க முடிவது. உண்மையில் பெற முடியாதது என்று ஒன்றுமே இல்லை. ஆனால், இந்த கால கட்டத்தில் நம் குறைவுள்ள திறன் முதலியவற்றால் இப்போதைக்கு சிலது அடைய முடியாமல் போகலாம். ஒரு விஷயம் கிடைப்பது கிடைக்காதது என்பது அதை சார்ந்தது அல்ல. அது நம் கிடைக்க நாம் செய்யும் முயற்சி, நம் திறனை பொருத்தது.

முயற்சியில் வெற்றியோ தோல்வியோ கிடைப்பது அதன் முடிவில்தான் தெரிகிறது. இப்போதைக்கு நமக்கு இருக்கும் திறனை வைத்துக்கொண்டு ஒரு விஷயத்தை அடைய முயற்சி எடுக்கலாமா வேண்டாமா, எடுக்கலாம் எனில் எவ்வித முயற்சி வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்வது?

உங்கள் கேள்வி நியாயமானதே! நமது தர்ம சாத்திரங்களின் முழு நோக்கமே உங்கள் கேள்விக்கு விரிவாக விடை அளிப்பதுதான். அவை நம் திறனை, தகுதி ஆகியவற்றை ஆராய்ந்து இன்னின்ன செயல்களுக்கு உங்களுக்கு அதிகாரம் இருக்க்றது என்று சொல்கின்றன. இந்த செயல்களும் ஏராளமாக இருக்கின்றன. அதே போல மனிதர்களின் தகுதி திறன் ஆகியவையும் மிகவும் வேறுபடுகின்றன. மதத்தின் முக்கிய நோக்கமே மனித முயற்சி என்பதை வரைப்படுத்தி செயல் செய்பவருக்கு குறைந்த தீமையும் அதிக பலனும் கிடைக்கும் வகையில் திருப்பி விடுகிறது. இப்படிப்பட்ட வரை செய்யப்பட்ட செயல் ஸ்வதர்மம் எனப்படுகிறது. மதம் மனிதனின் முயற்சிகளை கட்டிப்போடவில்லை. அவனை சுதந்திரமாக செயல்பட விடுகிறது. அதே சமயம் எது அவனுக்கு நல்லது எது அவனுக்கு கெட்டது என்பதை சொல்லுகிறது. அதன் பின் அவன் எதை செய்வானோ அதற்கு அவனே பொறுப்பு. விதி மேல் பழியை போட்டுவிட்டு தப்பிக்க முடியாது. அது அவனே உருவாக்குவது. கடவுள் மீதும் பழி போட்டு தப்பிக்க முடியாது. அவர் செயல்களுக்கு பலனை அளிப்பவர், அவ்வளவுதானே? உங்கள் எதிர்காலத்தை நீங்களேதான் நிர்ணயிக்கிறீர்கள். அதை நல்லதாக அமைத்துக்கொள்வதோ அல்லது வீணாக்குவதோ உங்கள் கையில்தான் இருக்கிறது. இதுவே உங்கள் உரிமையும் பொறுப்பும் ஆகும்.

இது எனக்குப் புரிகிறது. ஆனால் என்ன செய்வது? நான் என் ஸ்வாதீனத்தில் இல்லை. உதாரணமாக ஒரு செயல் கெட்டது என்பது எனக்குத்தெரிகிறது. அதே சமயம் அதை செய்யும்படி பலமாக தூண்டப்படுகிறேன். அதே போல ஒரு விஷயம் நல்லது என்று புத்திக்குத் தெரிகிறது; ஆனால் அதை செய்ய முடியாதவனாக இருக்கிறேன். ஆகவே ஏதோ ஒரு சக்தி என்னை சுதந்திரமாக என் விதியை நான் நிர்ணயித்துக்கொள்ள செயல் பட விடாமல் தடுப்பதாக தோன்றுகிறது. அது ஊழ் வினையைத்தவிர வேறு ஏதாக இருக்கக்கூடும்?