Pages

Wednesday, November 30, 2011

நீ இப்படித்தான் இருக்கணும்....


 நாம எப்படி இருக்கணும் நினைக்கிறதை விட மத்தவங்க எப்படி இருக்கணும்ன்னு சொல்கிறவர்களே அதிகமா இருக்காங்க! எந்த பஸ், பதிவு பாத்தாலும் இதுவே அதிகமா இருக்கு.
ஏன் இப்படி?
அட்வைஸ் எப்பவுமே சுலபம்; கடைப்பிடிக்கறதுதான் கஷ்டம்!
அதனால எப்பவும் அட்வைஸ் வாரிவழங்கறோம். நாம என்ன செய்யணும்ன்னு யோசிக்கிறதில்லை. அது கஷ்டமாச்சே!
முகம் தெரியாத ஆளைக்கூட ஒரு கட்டம் கட்டி இப்படித்தான் இருப்பார்ன்னு ஒரு கற்பனையை வளத்துக்கிறோம். அந்த கற்பனைக்கு எதிரா நிதர்சனம் இருந்தா அதை ஜீரணிக்க முடியறதில்லை. வலை உலகத்திலே இதோட தாக்கம் அதிகமாகவே இருக்கு. ஒருவர் தன்னை எப்படி காட்டிக்க நினைக்கிறாரோ அப்படியேத்தான் மத்தவங்களும் நினைக்க வேண்டி இருக்கு. உண்மையா இல்லையான்னு யார் கண்டார்கள்?

கொஞ்சம் நல்ல பையனா இருக்கறது ரொம்பவே கஷ்டம்.

ஆரம்பத்தில நல்ல பையன்னா கிண்டல் வரும். பெரிய இவரு... ன்னு எல்லாம். நாளாக ஆக நாம் அப்படியே நிலைச்சு விட்டா "சரி, இந்தப்பய உருப்பட மாட்டான், இப்படித்தான் இருப்பான்"னு ஒரு புள்ளி குத்திடறாங்க. இப்படி புள்ளி குத்தினப்பறம் கொஞ்சம் இப்படி அப்படி நகந்தா போச்சு! நீ இப்படி பண்ணலாமா?ன்னு ஆட்சேபணை வரும்!

ஏண்டான்னு கேட்டா இல்லை இல்லை நீ இப்படித்தான் இருக்கணும் ன்னு அட்வைஸ் வரும்!

யாருமே எப்போதுமே ஒரே மாதிரி இருக்கிறதில்லை. நாளுக்கு நாள்- ஏன் ஒரே நாளிலே கூட மணிக்கு மணி- மாறிட்டேத்தான் இருக்கிறோம். இந்த மாற்றம் என்கிறது நல்லதுக்குத்தான் இருக்கணும்ன்னும் ஒண்ணுமில்லை. ஹாஸ்டல்லே இருந்தப்பக் கூட மத்தவங்களை பொருட்படுத்தாம சந்தியாவந்தனம் செய்து கொண்டு இருந்தவரை 10வருஷம் கழிச்சு பார்த்தப்ப ஷாக்தான் மிஞ்சினது!

மாற்றமே இயற்கை. இந்த மாற்றத்தை நல்லதா இருக்கப் பண்ணுவதுதான் நாம் செய்யக்கூடியது. அப்ப அதை வளர்ச்சின்னு சொல்லலாம்.

சரி நம்மைப் பொருத்தவரை அப்படி செய்துடலாம்; மத்தவங்க சமாசாரம் என்ன?

எப்பவும் ஒவ்வொருத்தரையும் இருக்கிறபடியே பார்த்து பழகறதே உத்தமம்.

குழப்புதா?

ஒத்தர் இப்படின்னு வெளிக்காட்டிக்கொள்கிறார். சரி, அப்படியே இருக்கட்டுமே? மத்தபடி தெரிய வராத வரைக்கும்! அப்படியே நம்பச்சொல்லலை. நம்பிக்கைக்கு கேள்வி வராத வரை அதைப்பத்தி யோசனை வேண்டாம்.
ஆனா நம்ம மனசு அப்படி இருக்கறதில்லை. இவர் இப்படின்னு ஒரு கணிப்பு, ஒரு வட்டம் வரைஞ்சு உள்ளே போட்டுவிடும். அதுதான் அதோட இயற்கை குணம். அப்படி ஒரு வரைகோட்டுப் படமாவது இல்லாம அதால வேலை செய்ய முடியாது. சொல்லவே தேவை இல்லாமல் இந்த மாதிரி கணிப்புகளும் அநேகமா இருக்கும். ஐம்பது பேர் இருந்தா ஐம்பத்தோரு கணிப்பு இருக்கும்! அத்தனையிலும் எது உண்மைக்கு கிட்டே வருதுன்னு பாத்தா சொல்லறது ரொம்ப கஷ்டம். அனேகமா எல்லாமே தப்புதான்.
ஏன் தப்பு?
மனிதன் மாறிகிட்டே இருக்கறதால தப்பு.
இதுக்குத்தான் உள்ளதை உள்ளபடி பார்க்கணும்ன்னு சொன்னது.
இவர் இன்ன மாதிரி சமயத்துல எப்படி நடந்துப்பார்ன்னு சில சமயம் நமக்கு தெரிய வேண்டி இருக்கு. ஏன்னா நம்மோட நடத்தையை அதை வைத்து நிர்ணயிக்க வேண்டி இருக்கு. உதாரணமா, இவர்கிட்டே இன்ன உதவி கேட்கணும்; எப்போ எப்படி பேசினால் அது வெற்றிகரமா முடியும்? அவர் ஜம்முன்னு சாப்டு, பீடா போட்டுகிட்டு இருக்கறப்பவா? பூஜை முடிச்சு வரப்பவா? ஆபீஸ் வேலை எல்லாம் முடிச்சு அப்பாடான்னு நிம்மதியா வீட்டில இருக்கறப்பவா? இதை முடிவு செய்ய அவரைப்பத்தின இமேஜ்தான் உதவும்.
அனேகமா இப்படி நடந்துப்பார், இப்படி பேசினா சரிப்படும்ன்னு புத்தி ஒரு திட்டம் போடும். இப்படி திட்டம் போடறப்பவே இந்த 'அனேகமா' என்கிறதை நல்லாவே நினைவு வைத்துக்கொள்ளணும்! அதாவது அப்படி நடக்கலேன்னாலும் ஆச்சரியப்படக்கூடாது!

நாம மாறிகிட்டே இருக்கோம்ன்னு நல்லா புரிஞ்சவங்களுக்கு இது புரியும். இல்லைன்னா "அவளா சொன்னாள்? இருக்காது, அப்படி ஒன்றும் நடக்காது, நடக்கவும் கூடாது.... நம்ப முடியவில்லை" ன்னு பாடிகிட்டே இருக்க வேண்டியதுதான். இன்ன தேதிக்கு இவர் இப்படி இருக்கார். சரி அடுத்து என்ன செய்யலாம் ன்னு யோசிக்கிறவங்களுக்கு அதிகம் பிரச்சினை இராது.
சுருக்கமா சொல்ல "இப்படித்தான் நடக்கும்ன்னு எதிர்பார்க்காதீங்க! நடந்தா நல்லது, இல்லைன்னா அடுத்ததை பார்க்கலாம்.”
கீதையும் இதைத்தான் சொல்லித்தோ? எங்கேயோ ஆரம்பிச்சு ரிலேட்டடா வேற எங்கேயோ போயிடுத்து. போகட்டும். அதானே உரத்த சிந்தனை?!

Tuesday, November 29, 2011

எப்படி இருக்கணும்?


அரபு ஆன்மீக பெரியவர் சாடி சொன்ன கதை.
ஒரு மனிதன் காட்டின் வழியே போய்க்கொண்டிருந்தான். அங்கே ஒதுக்குப்புறத்தில் ஒரு நரியை பார்த்தான். அதற்கு இரண்டு கால்கள் இல்லை. இது எப்படி உயிர் வாழ்கிறது என்று அதிசயித்தான்.
அப்போது இரையை வாயில் கவ்வியபடி ஒரு புலி வந்தது. மனிதன் பதுங்கிக்கொண்டான். புலி இரையை கீழே போட்டுவிட்டு வயிறார சாப்பிட்டுவிட்டு மீதியை நரிக்கு விட்டுவிட்டுப் போய்விட்டது. நரி இந்த மீதியை உண்டு பசியாறியது.
இதை பார்த்த மனிதன் "எனக்கு பெரிய உண்மை புரிந்துவிட்டது; யார் எங்கிருந்தாலும் ஆண்டவன் உணவிடுகிறான். நானும் இந்த நரி போல் சும்மா இருப்பேன். எனக்கும் உணவு கிடைக்கும்" என்று நினைத்தான்.
ஒரு மரத்தடியில் சும்மா படுத்துக்கிடக்கலானான். பசி கொடுமையால் தவித்தான். உணவேதும் கிடைக்கவில்லை. விடாப்பிடியாக சும்மாவே கிடந்தான்.
பின் பசி பொறுக்காமல், “கடவுளே, ஏன் எனக்கு உணவிடவில்லை?” என்று கத்தினான். அசரீரி கேட்டது: “முட்டாளே! ஏன் நரி போல இருக்க நினைக்கிறாய்? புலி போல இரு!”

Monday, November 28, 2011

பஞ்சதஶீ, 1-8


இயமாத்மா பராநந்த³​: பரப்ரேமாஸ்பத³ம்°யத​: | 
மா ந பு⁴வம்° ஹி பூ⁴யாஸமிதி ப்ரேமாத்மநீக்ஷ்யதே || 8|| 

இந்த பேரறிவே ஆத்மா ஆகும். இது பரம ஆநந்தத்தில் இருக்கிறது. ஏனெனில் இது அன்பின் இலக்காக இருக்கிறது. சாதாரணமாகவே மனிதர் யாவரும் தன் மீது அன்பு கொண்டுள்ளனர். தான் முடிவில்லாமல் இருக்க வேண்டும்; எப்போதும் இருக்க வேண்டும் என்று யாவரும் நினைக்கின்றனர். 
 

ஏன் இன்னும் உரை?


ஒரு இறை அடியார் ஒரு ஊருக்கு வந்து சேர்ந்தார். முதலில் அவரது உரையை கேட்க பெரிய கூட்டம் கூடியது. நாளாக ஆக கூட்டம் குறைந்து யாரும் வருவதே நின்று போயிற்று.

இருந்தாலும் அவர் தன் தினசரி பிரசங்கத்தை நிறுத்தவில்லை.

இதை கவனித்த ஒரு யாத்ரி அவரை கேட்டார். ஏன் இன்னும் உரை நிகழ்த்துகிறீர்கள்? யாரும் வருவதில்லையே? இறை அடியார் சொன்னார், “முதலில் நான் மக்களை மனம் மாற்ற உரை ஆற்றினேன். இப்போது அவர்கள் என்னை மனம் மாற்றாமலிருக்க உரை ஆற்றுகிறேன்!”

"யார் கூட இருக்கோம்ன்னு ஜாக்கிரதையா இருக்கணும்ப்பா!"

Thursday, November 24, 2011

பஞ்சதஶீ 1 - 7


மாஸாப்³தா³யுக³கல்பேஷு க³தாக³ம்யேஷ்வநேகதா⁴ | 
நோதே³தி நாஸ்தமேத்யேகா ஸம்°விதே³ஷா ஸ்வயம்°ப்ரபா⁴ || 7|| 

மாதம், வருடம், யுகம், கல்பம், இறந்த காலம், எதிர் காலம் எல்லா காலத்திலும் அறிவு இருக்கவே இருக்கிறது. அது உதிப்பதுமில்லை; அஸ்தமிப்பதுமில்லை. எப்போதும் தானே ஒளிர்வதாக இருக்கிறது. 

Wednesday, November 23, 2011

கதை - மீண்டும்


கொஞ்ச நேரம் யோசித்து எழுதியது. யோசிக்க யோசிக்க இன்னும் தோன்றலாம்!
-------------
ஒரு பெரிய பண்டிதர் ஆன்மீக குரு ஒருவரை தேடி வந்தார்.

"நீங்கள் நூல்களில் இல்லாத பெரிய விஷயங்களைக்கூட காட்டிக்கொடுக்கிறீர்களாமே?”

குரு புன்னகைத்தார். (பெரியவர்கள் பல விஷயங்களை வெளியில் காட்டிக்கொள்வதில்லை.)

பண்டிதர் விடவில்லை. "எனக்கு நீங்கள் கட்டாயமாக ஏதேனும் காட்டிக்கொடுக்க வேண்டும்.” (ஒரு குருவிடம் பாடம் கேட்கும் முறை இதுவல்ல.)

"சரி, இப்போது மழைக் காலமில்லையா? இன்று மழை வரும் போல இருக்கிறது. மழை பெய்யும் போது மைதானத்தில் சென்று கைகளை உயர தூக்கிக்கொண்டு நில். ஏதேனும் புரியலாம்.”

(ஏனிப்படி செய்யசொன்னார்? இயற்கையோடு இயைந்து வாழ கற்க வேண்டும். சொல்லுவதை செய்கிறாரா என சோதிக்கவும் இருக்கலாம்.)

அடுத்த நாள் பண்டிதர் வெகு கோபமாக வந்தார்.

"என்ன ஆயிற்று?”
"நீங்கள் சொன்னது போல மழையில் நேற்று மாலை நின்றேன்.”
"ம்?”
"முழுக்க நனைந்து போனேன். எல்லாரும் சிரித்தார்கள். நான் என்னை ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!”
(ஆன்மீகத்தில் கவனம் செலுத்தவேண்டுமானால் முதலில் கரும்பலகையை துடைக்கவேண்டும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை சரி செய்து கொள்ளவேண்டும். படிப்பது எல்லாம் ஒருவனை ஞானியாக்காது. இது வரை கற்றதெல்லாம் ஆன்மீகத்துக்கு உதவாமல் போகலாம் என்று புரிய வேண்டும். )
"பரவாயில்லையே? முதல் நாளே பெரிய விஷயம் புரிந்துவிட்டதே!”
(ஆன்மீகத்தை புரியாதவன் கற்றும் கற்றவனல்ல. )

Tuesday, November 22, 2011

பஞ்சத³ஶீ 1 -6


ஸபோ³தோ⁴ விஷயாத்³பி⁴ந்நோ ந போ³தா⁴த் ஸ்வப்ந போ³த⁴வத் |
ஏவம்° ஸ்தா²ந த்ரயே'ப்யேகா ஸம்°வித்தத்³வத்³தி³நாந்தரே || 6||

சுசுப்தியில் அறிவு என்பது அஞ்ஞானத்தில் இருந்து வேறானது. ஆனால் கனவில் அது தனித்து நின்று கனவை காண்பது போல தன்னிலிருந்து வேறானது அல்ல. ஆகவே அறிவானது கனவு முதலிய முக்காலத்திலும் இருக்கிறது. 

 

பஞ்சதஶீ 1 -39


லிங்க³பா⁴நே ஸுஷுப்தௌ ஸ்யாதா³த்மநோ பா⁴நமந்வய​: | 
 வ்யதிரேகஸ்து தத்³பா⁴நே லிங்க³ஸ்யாபா⁴நமுச்யதே || 39|| 

அதே போல ஆழ் உறக்க சுசுப்தியில் சூக்ஷ்ம சரீரம் உணரப்படுவதில்லை; இருந்தாலும் ஆத்மா என்பது அதை அறிகிறது.
 

Monday, November 21, 2011

கதை


ஓம்!

அந்தோனி டி மெல்லோ! எவ்வளவு பேர் இந்த பெயரை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று யோசிக்கிறேன். அதிகம் இராது.

மும்பையில் 1931 இல் பிறந்த இவர் தான் எழுதிய புத்தகங்களால் பிரபலமானார். ஜெசூய்ட் பாதிரியாராக பணியாற்றினார். கிறிஸ்துவ பாதிரியார் என்றாலும் இவர் உண்மையான ஆன்மீகத்தை தேடியவர். அதனால் கத்தோலிக கட்டுப்பாடுகளை இவர் மீறினார். கிறிஸ்துவ வட்டாரங்களில் சர்ச்சைக்கு உரியவராகவே விளங்கினார். இவரது விமர்சனங்கள், எழுத்துக்களுக்கும் எமக்கும் சம்பந்தமில்லை என்று கத்தோலிகர்கள் விலக வேண்டி இருந்தது. இதற்கு காரணம் இவர் ஒரு தாய்லாந்து புத்த துறவியால் ஈர்க்கப்பட்டு அவருடைய உபதேசங்களை கேட்டதுதான்.

இவரது உரைகளைப் போலவே இவரது எழுத்துக்களும் மிகப்பிரபலம். ஒரு காலகட்டத்தில் யாரைப்பார்த்தாலும் ஒரு குட்டிக்கதை கேட்பார்; அல்லது சொல்லுவார். கேட்பவர் பல சமயம் சிரித்துவிட்டு போவர். ஆனால் யோசித்தால் அதில் சில ஆழமான கருத்துக்கள் இருக்கும். அவை சாதாரணமாக நாம் ஆன்மீகம் என்று நினைப்பதை தாண்டியவை. ஆன்மீகத்தில் பல நிலைகள் இருப்பதால் சில நிலைகளில் இருப்பவருக்கு அவை உவப்பாக இல்லாமல் போகலாம். அங்கேதான் இவருடைய சாமர்த்தியத்தை காண்கிறேன். குட்டிக்கதை - பெரும்பாலும் சிரிக்க வைக்கக்கூடியவை - கதையாகவும் பார்க்கலாம் அல்லது யோசிப்பவர்க்கு தீனியாகவும் இருக்கலாம்.

இவரது கதைகள் பற்றி இவரே சொல்வதை படியுங்கள்! “எப்படி படிப்பது? மூன்று வழிகள் உள்ளன.
முதலாவது ஒரு கதையை படியுங்கள். அப்புறம் அடுத்த கதையை படியுங்கள். நன்றாக பொழுது போகும்!
இரண்டாவது ஒருகதையை இருமுறை படியுங்கள். அதை அசை போடுங்கள். வாழ்கையில் பொருத்துங்கள். இறையியல் விளங்கும். பலருடன் சேர்ந்து யோசித்தால் சத்சங்கம் கிடைக்கலாம்.
மூன்றாவது கதையைப்பற்றி அசை போட்ட பின் மீண்டும் படியுங்கள். உள்ளே ஒரு அமைதியை கொண்டு வாருங்கள். கதை உள்ளே நிறையட்டும். வார்த்தைகள், நினைப்புகளை தாண்டி.... அதை நாள் முழுவதும் உணருங்கள். மறை பொருள் தெரிய வரலாம். அது உங்கள் இதயத்தோடு பேசட்டும், உங்கள் புத்தியுடன் அல்ல. இதற்குத்தான் இந்த கதைகள் எழுதப்பட்டன....

உதாரணத்துக்கு கடைசியாக இட்ட கதையை பார்க்கலாம்.  ஆமாம், சமீப காலமாக இந்த பதிவுகளில் எழுதிவரும் பலகதைகள் இவருடையதை தழுவி எழுதியதே! சிலது அப்படியே, சிலது சின்ன மாற்றங்களுடன்..... கதையை இரண்டாம் முறை படித்தோர் என்ன தோன்றுகிறது என்று எழுதுங்கள். (பெரிய ஆன்மீக கருத்து என்றில்லை. வித்தியாசமாக மேற்போக்கான கதையை தாண்டியதாக இருந்தாலே போதும். .)

எனக்குத்தோன்றியதை சில நாட்களில் எழுதுகிறேன். வணக்கம்.

Wednesday, November 16, 2011

ரெவலேஷ!ன்


ஒரு பெரிய பண்டிதர் ஆன்மீக குரு ஒருவரை தேடி வந்தார்.
"நீங்கள் நூல்களில் இல்லாத பெரிய விஷயங்களைக் கூட காட்டிக் கொடுக்கிறீர்களாமே?”
குரு புன்னகைத்தார்.
பண்டிதர் விடவில்லை.
"எனக்கு நீங்கள் கட்டாயமாக ஏதேனும் காட்டிக் கொடுக்க வேண்டும்.”
"சரி, இப்போது மழைக் காலமில்லையா? இன்று மழை வரும் போல இருக்கிறது. மழை பெய்யும் போது மைதானத்தில் சென்று கைகளை உயர தூக்கிக் கொண்டு நில். ஏதேனும் புரியலாம்.”
அடுத்த நாள் பண்டிதர் வெகு கோபமாக வந்தார்.
"என்ன ஆயிற்று?”
"நீங்கள் சொன்னது போல மழையில் நேற்று மாலை நின்றேன்.”
"ம்?”
"முழுக்க நனைந்து போனேன். எல்லாரும் சிரித்தார்கள். நான் என்னை ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!”
"பரவாயில்லையே? முதல் நாளே பெரிய விஷயம் புரிந்துவிட்டதே!”

Tuesday, November 15, 2011

என் மகன்...


ராபி ஆப்ரஹாம் ஆதர்ச வாழ்கை வாழ்ந்த உத்தமர். இந்த உலகை விட்டு போக வேண்டிய நேரம் வந்தபோது அவரது ஊரே திரண்டு வந்து வழி அனுப்பி வைத்தது. கடவுளிடம் இருந்த தாங்கள் பெற்ற அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் ஆப்ரஹாமே காரணம் என்பது அவர்கள் எண்ணம். அந்த அளவு நல்ல மதிப்பை அவர் பெற்றிருந்தார்.

 போன இடத்திலும் பலத்த வரவேற்பு! தேவதைகள் ஒன்றாக வந்து மலர் தூவி வரவேற்றன. இசை,ஆட்டம், பாட்டம்...
ஆனால் ஆப்ரஹாமோ கைகளை கட்டிக்கொண்டு சோகமாக அமர்ந்திருந்தார்.

தீர்ப்பு கூறும் நேரம் வந்தது. ஒரு இருக்கையில் அமர வைக்கப்பட்டார். உடனே எல்லையில்லா அன்பு அவரை சூழ்வதை உணர்ந்தார். மென்மையான அன்பான ஒரு குரல் அவருக்கு கேட்டது.
 மகனே, ஏன் வருந்துகிறாய்?
கடவுளே, இங்கு கிடைத்த வரவேற்புக்கு நான் அருகதை அற்றவன். நான் ஆதர்ச வாழ்கை வாழ்ந்ததாக சொல்கிறார்கள். ஆனால் நான் ஏதோ தப்பு செய்திருக்க வேண்டும். ஆதர்ச வாழ்கையை நான் வாழ்ந்து காட்டியும் என் மகன் என்னைவிட்டு பிரிந்து போய் தான் ஒரு கிறிஸ்துவன் என்று சொல்லிக்கொண்டான்.
கடவுள் சொன்னார், மகனே உன் வேதனை எனக்குப்புரிகிறது. எனக்கும் அப்படித்தான், ஒரு மகன் இருந்தான்.....

 

Monday, November 14, 2011

புத்தா!


அந்த ஹிமாலய துறவி கண்ணை திறந்த போது புத்த மட தலைமைத்துறவி அவருக்காக காத்திருப்பதை கண்டார்.
வாருங்கள், உங்களுக்கு நான் என்ன செய்யகூடும்?
பெரிய பிரச்சினை. எங்கள் மடாலயம் ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளில் கூட பிரபலமாக இருந்தது. எல்லா அறைகளும் நிறைந்து இருந்தன. எப்போதும் துறவிகளின் மந்திரங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.. இப்போதோ அந்த இடம் வெறிச்சோடுகிறது. புதிதாக யாரும் வருவதில்லை. இருப்பவர்களும் உம் என்று இருக்கிறார்கள்; மெதுவாக கழட்டிக்கொள்கிறார்கள். என்ன பாபம் செய்தோம், இப்படி ஒரு நிலை வர?

துறவி சொன்னார், அறியாமை என்ற பாபமே!

என்ன அறியாமை? உங்களில் ஒரு புத்தா மறைந்து இருக்கிறார். சாதாரண ஆசாமி போல வேஷம் போட்டு இருக்கிறார். அவரை நீங்கள் யாரும் அறியவில்லை.

அவர் யார் சுவாமி?
அதற்குள் துறவி மீண்டும் த்யானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

குழப்பத்துடனேயே புத்த மடத்துறவி திரும்பினார். திரும்பும் வழி எல்லாம் ஒரே சிந்தனை! நம் மடத்தில் புத்தாவா? யாராக இருக்கும்? அவரா? இவரா? ஒன்றும் முடிவுக்கு வர முடியவில்லை. அவரிடம் இந்த குற்றம் இருக்கிறது, இவரிடம் அந்த குற்றம் இருக்கிறது. ஆனால் சாதாரண ஆசாமி போல வேஷமென்றல்லவா சொல்லிவிட்டார்? குற்றமும் ஒரு வேஷமாக இருக்கலாமே?

மடாலயம் முழுதும் இந்த விஷயம் கசிந்துவிட்டது. எல்லோருமே யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவரா, இவரா? ஒரு விஷயம் நிச்சயம். புத்தர் வேஷம் போட்டு இருப்பதால் நிச்சயம் அவரை கண்டுபிடிக்க முடியாது.

அன்றிலிருந்து ஒருவரை ஒருவர் பார்க்கும் பார்வையே மாறிப்போனது! இவர் புத்தாவாக இருக்கலாமே! மற்றவர்களிடம் மரியாதை, அன்பு, கரிசனத்துடன் நடந்து கொள்ள ஆரம்பித்தனர். சீக்கிரமே அந்த இடம் மாறிப்போனது. அன்பு பெருகிய அந்த இடத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. புதியதாக பல இளந்துறவிகள் சேர ஆரம்பித்தனர். மடாலயத்தின் பழைய பெருமை மீண்டும் ஓங்கியது!

Friday, November 11, 2011

அவரவர் பார்வை.....


அவரவர்களுக்கு ஒரு பார்வை இருக்கிறது. அதை பொறுத்துப்போவதே நல்லது...

ஒரு ரயில் நிலையத்தில் ஒரு கொலை நடந்தது. ரயில் பெட்டியில் ஏறிய ஒருவரை பின்னாலேயே ஒருவன் சென்று கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டான். போலீஸார் விசாரித்தனர். கொலையை நேரில் பார்த்தவர் யாரும் இல்லை -ஸ்டேஷன் மாஸ்டரைத்தவிர. ஆகையால் அவரை ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதித்தர சொன்னார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் எழுதினார்: ரயில் வண்டி நம்பர் 556, 2 ஆம் ப்ளாட்பாரத்தில் 5 நிமிஷம் தாமதமாக வந்து சேர்ந்தது. நான் ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டு கண்காணித்துக்கொண்டு இருந்தேன். அப்போது 5566 நம்பர் கோச்சில் சிவப்பு சட்டை அணிந்த ஒரு நபர் ஏறினார். அவரைத்தொடர்ந்து கருப்பு டீஷர்ட் அணிந்த நபர் ஒருவர் ஏறினார். இவர் தன் இடுப்பில் இருந்து கத்தியை எடுத்து சிவப்பு சட்டை நபரை பல முறை குத்தினார். பின் ரயில்வே விதிகளுக்கு புறம்பாக அடுத்த பக்கம் தண்டவாளத்தில் இறங்கி சென்று இவ்வாறு சட்டத்தை மீறியவராக நடந்து கொண்டார்...
---
சர்சை தீயிட்டு கொளுத்தியதாக ஒரு கனவான் மீது வழக்கு போடப்பட்டது. பத்திரிகைகளூக்கு அவர் பேட்டி கொடுத்தார். சர்ச் எரிந்து போனதுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். அப்படி செய்வது என் நோக்கமல்ல. யாரோ அதில் கார்டினல் இருப்பதாக தவறான செய்தி கொடுத்தார்கள்.....

Thursday, November 10, 2011

ந மம!


இன்றைக்கு அன்னாபிஷேகம் என்று மதுரையம்பதி அண்ணா - மௌலி ஒரு பதிவு இட்டார். அதை பார்த்ததும் சில சிந்தனைகள் எழுந்தன. எவ்வளவு தீர்க சிந்தனையுடன் சில பழக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன!

இன்றைக்கே பெங்களூரில் வசிக்கும் என் நண்பர் ஒருவர், ஔபாசனம் செய்து கொண்டு இருப்பவர் - ஆக்ரேயண ஸ்தாலீபாகம் செய்ததாகவும் வீட்டு பூஜையில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்ததாகவும். தகவல் அனுப்பினார்.

லால்குடியில் என் பையர் இன்று ஆக்ரேயண இஷ்டியும் ஆக்ரேயண ஸ்தாலீபாகமும் செய்தார். (நான் ஒருத்தன்தான் ஒண்ணும் செய்யலை! :-(

ஐப்பசி மாத பௌர்ணமிக்குத்தான் இவையும் செய்யப்படுகின்றன.
என்ன தாத்பர்யம்?
நமக்கு புதிதாக கிடைத்ததை பகவானுக்கு காட்டிவிட்டு எடுத்துக்கொள்ளும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. தீபாவளிக்கு புது துணியா, எண்ணை குளியல் முடித்து ஸ்வாமிக்கு நம்ஸ்காரம் செய்தே எடுத்துக்கொள்கிறோம். தினசரியே சமைத்த உணவை பகவானுக்கு 'கை காட்டிவிட்டு' உண்ணுகிறோம். இந்த சமயத்தில் - ஐப்பசி மாத பௌர்ணமி தினத்துக்குள் கார் அரிசி நிலத்தில் விளைந்தது அறுவடையாகி களஞ்சியத்துக்கு வந்து சேர்ந்து இருக்கும். இந்த புது அரிசியை உடனே சமைத்து சாப்பிடாமல் பகவானுக்கு அர்ப்பணிக்கிறோம்.

ஔபாசனம் செய்பவரானால் ஆக்ரேயண ஸ்தாலீபாகம் செய்கிறார். இதில் பழைய அரிசி, புது அரிசி இரண்டையும் சோறாக்கி ஹோமம் செய்கிறார். இஷ்டியிலும் அப்படியேதான். இரண்டு அரிசியையும் மாவாக்கி புரோடாசம் என்கிற மாவு உருண்டையாக்கி ஹோமம் செய்கிறோம். இந்த இரண்டுமே இப்போது அருகிவிட்டது இல்லையா? மூன்றாவதாக மேற்சொன்ன இரண்டும் செய்யாதவர்கள் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள்.

வீட்டில் சிவ பூஜை வைத்துக்கொள்ளாதவர் கோவிலில் செய்கிறார்கள். அன்னத்தை பின்னால் பிரசாதமாக வினியோகம் செய்து விடுவர். மேலே சொன்ன எல்லாவற்றிலுமே தாத்பர்யம் ஒன்றே!
ந மம!
என்னுடையதில்லை.
பகவானே நீயாக உவந்து இதை எனக்கு கொடுத்து இருக்கிறாய். இதில் என் முயற்சி மிகச்சிறிதே! இது என்னுடையதில்லை, உன்னுடையதே! இப்படி ஒரு மனோ பாவம் வர வேண்டும். இதற்குப்பின் அந்த அன்னத்தை பிரசாதமாக எடுத்துக்கொள்கிறோம்.

அக்னியில் இடுவதானால் பிரச்சினை இல்லை. அது அக்னியால் ஜீரணிக்கப்படும். ஆஹுதி செய்தி மீந்ததை ப்ரசாதமாக எடுத்துக்கொள்வோம். கோவிலில் வினியோகம் ஆகிவிடும். வீட்டில் செய்தால் என்ன செய்வது? யாருக்காவது கொடுத்துவிடுவதே மிகசிறந்தது. பிரசாதமாக கொஞ்சம் வைத்துக்கொள்ளலாம்.

"நீ தினசரி பூஜை என்கிறாயே, நிவேதனம் என்கிறாயே, அப்புறம் நீதானே சாப்பிடுகிறாய்? நிவேதனம் செய்தது கொஞ்சமாவது குறைந்ததா? கடவுள் இருந்து அவர் இதை சாப்பிட ஆரம்பித்தால் யாரும் நிவேதனம் செய்ய மாட்டீர்கள்." இப்படி சிலர் கேலி செய்வதுண்டு. நிவேதனம் என்றால் சாப்பிட வைப்பது அல்ல. காட்டுவது. கண்டு அருளப்பண்ணுதல் என்பர் ஸ்ரீ வைஷ்ணவர்கள். இது பலருக்கும் - ஆன்மீக நண்பர்கள் உள்பட- தெரியவில்லை. அதனால் நிவேதனம் செய்யும் போது சாப்பிட ப்ராணாஹுதி செய்வது போலவே செய்கிறார்கள்.

தினசரி நிவேதனமே இதே தாத்பர்யம்தான். என்னுடையதில்லை, உன்னுடையது. இப்படி செய்தால் உணவில் உள்ள குற்றங்களை பகவான் நீக்கி விடுவான் என்பது நம்பிக்கை. காயத்ரி ஜப யக்ஞத்தில் சமைக்க வந்த ஒருவர் சொன்னது: சாதாரணமாக சமைத்தால் அது சுமார் 4 மணி நேரம் கழித்து ருசி மாற ஆரம்பித்துவிடும். ஆனால் அதை நிவேதனம் செய்து இருந்தால் ருசி மாறாமல் அப்படியே இருக்கிறது என்பது என் அனுபவம்!

சரி, ஏன் இந்த ந மம? நாம் என்ன கொண்டு வந்தோம் பிறந்த போது? இந்த காற்றும், நீரும், மண்ணும் அவன் கொடுத்தவை. இவற்றை வைத்து கொஞ்சம் மாற்றி உபயோகிக்கிறோம். அவ்வளவே. ஆகவே இந்த உண்மையை அவ்வப்போது நினைவூட்டிக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் நமது மமதை போகும் - கர்வம் நீங்கும். அது நல்ல ஆன்மீக முன்னேற்றத்தை தரும். ஆகவே நாம் சொல்வோம், ந மம!

Monday, November 7, 2011

ரொம்ப கரெக்ட்....


ஒரு சிறு நகரம்... ஒருவருக்கு டிரக்டரி தகவல் வேண்டி இருந்தது. அதற்காக 105 டயல் செய்தார். ஒரு பெண்ணின் குரல் பதில் அளித்தது. “நீங்க அதுக்கு 106 டயல் செய்யணும்.”
106 டயல் செய்து தகவலை பெற்ற போது கொஞ்சம் சந்தேகம். குரல் அதே மாதிரி இருக்கே?
“மன்னிக்கணும். கொஞ்ச நேரம் முன்னே இந்த தகவலுக்காக 105 டயல் பண்ணேன். அப்ப பேசினது நீங்கதானே?”
“ஆமாம், இந்த பெண்மணி இன்னிக்கு லீவு. அதனால நானே ரெண்டு வேலையும் பாக்கிறேன்!”
-
ரொம்ப கரெக்டா இருக்கிறதும் சரியா?

Friday, November 4, 2011

குருட்டுத்தனமான நம்பிக்கை


சார்ஜென்ட் பாடம் எடுத்துக்கிட்டு இருந்தார்.
மாணவர்களை கேட்டார்: "ஏன் துப்பாக்கியோட பின் பக்கத்தை வால்நட் மரத்தில செய்யறாங்க?"
ஒத்தர் சொன்னார், "அது உறுதியான மரம்"
"தப்பு"
"அது இன்னும் எலாஸ்டிக்கா இருக்கும். துப்பாக்கி பின்னால உதைக்கும் போது அதிகமா தாக்கம் இருக்காது." இன்னொருத்தர்.
"தப்பு"
"அது இன்னும் பள பளன்னு இருக்கும்!"
"தப்பு"
அப்புறம் எல்லாரும் தெரியலைன்னு ஒத்துக்கிட்டாங்க.
சார்ஜென்ட்: "நீங்க இன்னும் நிறைய கத்துக்க வேண்டியது இருக்கு, பசங்களா! அதை வால்நட் மரத்துல செய்யற காரணம் என்னன்னா அப்படித்தான் ரெகுலேஷன் புத்தகத்துல போட்டு இருக்கு!"
--
குருட்டுத்தனமாக நம்பிக்கை  இருக்கக்கூடாது!