Pages

Monday, June 20, 2022

காஶி யாத்திரை - 21 காஶி - 4மாலையில் திடுதிப்பென ஒரு திருப்பம்!

திருப்பம்தான் ஆனா ஒன்னும் கெட்டதாக நடக்கவில்லை. சும்மா ஒரு சுவையை கூட்ட அப்படி எழுதினேன்! ஹிஹிஹி!
கங்கா ஆரத்தி இன்னும் இரண்டு நாள் கழித்து தான் திட்டமிடப்பட்டிருந்தது. திடுதிப்பென்று யார் என்ன முடிவு எடுத்தார்கள் என்று தெரியவில்லை என்னிடம் வந்து ஏழு மணிக்கு கங்கா ஆரத்தி பர்க்கப் போகிறோம், முடிந்தால் வாருங்கள். இல்லையானால் ரூமிலேயே படுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். போனமுறை அப்பா அம்மாவுடன் வந்தபோது சப்தரிஷி பூஜை பார்த்தேன். ஆனால் இந்த கங்கா ஆரத்தியை பார்க்கவில்லை. இனிமேல் எங்கே திருப்பியும் வரப் போகிறோம், அதனால் உடம்பு முடியவில்லை என்றாலும் போய்விட்டு வந்து விடலாம் என்று முடிவு எடுத்து போனேன். இது வேறு யாருடையதோ படகு. அந்த வாட்ச்மேன் பையனுடையது இல்லை. நான் முதலில் கங்கா ஆரத்தி கரையிலிருந்து பார்ப்போம் என்று நினைத்தேன். கற்பனையே இல்லை. கடைசியில் பார்த்தால் நிறைய பேர் கங்கையிலிருந்து தான் பார்க்கிறார்கள். அதுதான் நன்றாகவும் இருக்கும் போலிருக்கிறது. தூரத்திலிருந்து ட்மர் டமர டம் சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது. முன்னேயே கங்கையில் குளிக்க போகும் போதெல்லாம் ஏதோ ஒரு படகு தாண்டிப் போகும். அதில் மிகவும் சத்தமாக ஏதோ பாட்டு ஒலித்துக்கொண்டிருக்கும். ஏழு எட்டு பேர் நடனமாடிக் கொண்டே செல்வார்கள். இப்போது பார்த்தால் அதே தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் 100 மீட்டர் தள்ளி படகில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கேயே சத்தமாக கேட்கிறது என்றால் அங்கே பக்கத்தில் எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை. உயரமாக கட்டின மேடையில் பண்டாக்கள் நின்றுகொண்டு கங்கைக்கு கற்பூர ஹாரத்தி காட்டுகிறார்கள். எல்லா பக்கமும் திரும்பி திரும்பி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். சுமார் அரை மணி நேரம் அது நடந்துகொண்டே இருந்தது. ஏதோ பாட்டு தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. ஐந்து நிமிடம் பார்த்துவிட்டால் அதற்குமேல் ஒன்றும் புதிதாக இருக்காது.
இங்கே இந்த படகுகள் பற்றி சொல்லவேண்டும். போனமுறை வந்தபோது பார்த்து ரசித்து வியந்த ஒரு விஷயம் சைக்கிள் ரிக்‌ஷாக்கள். என்னதான் மோசமான போக்குவரத்து ஆக இருந்தாலும் குறுக்க நெடுக்க என்ன வந்தாலும் கொண்டாலும் அமைதியை இழக்காமல் ஒரு இன்ச் வித்தியாசத்தில் வண்டியை கடத்திக் கொண்டு போவார்கள். ஒருவேளை இடித்தால் கூட ஒன்னும் சச்சரவு இராது. அதேபோல இந்த படகுகளும். எல்லாமே கரையில் கரையை ஒட்டி தான் நிற்க வேண்டும். அப்போதுதான் ஜனங்கள் தண்ணீரில் இறங்காமல் கரையில் இறங்க முடியும். ஆகவே ஏற்கனவே இங்கே இருக்கிற படகை விலக்கிவிட்டு தம் படகை நெருங்கி கரையில் நிற்க வைப்பதை சர்வசாதாரணமாக செய்கிறார்கள். விதி மிகவும் எளிதாக இருக்கிறது. நீ இறக்கிவிட்டு விட்டாயா, உன் வேலை முடிந்ததா நகரு. அவ்வளவுதான். அதற்கு நீயே செய்யாவிட்டால் நான் செய்வேன். சர்வ சாதாரணமாக மற்ற படகில் ஏறி அதை தள்ளி கொள்ளுவது இடித்து நகர்த்துவது எல்லாம் செய்கிறார்கள். யாரும் எங்கும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. யார் கண்டார்கள் படகுகளின் சொந்தக்காரர் ஒருவராகவே இருக்கலாம். எப்படி இருந்தாலும் நமக்கு பிரச்சினை இல்லாமல் நடக்கிறது. அவரவர் படகை நிறுத்தும் துறை இல்லாமல் மற்ற துறைகளில் நிறுத்தினால் அங்கே ஒரு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. அது 30 ரூபாயோ என்னவோ. நினைவில்லை.
அதேபோல இந்த பிராமணர்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுகிறார்கள். பஞ்சகட்ட சிரார்த்தம் செய்வதற்கு வரும் பிராமணர்கள் ஐந்து கட்டமும் முடிந்து விட்டதென்றால் சர்வ சாதாரணமாக மற்ற படகில் இருக்கும் பிராமணர்களை கூப்பிட்டு ஆசீர்வாதம் செய்ய சொல்கிறார்கள். அவர்களுக்கு தட்சணையும் கொடுக்கிறார்கள். அதே போல தானும் மற்ற படகுகளுக்கு போகிறார்கள். கடைசியில் பார்த்தால் அங்கே யாராக இருப்பார்கள் கூப்பிட்டு கொள்ளலாம் என்று கணக்குப் போடுகிறார்கள் என்று தெரிந்தது.
நல்லது கங்கா ஆரத்தி முடிந்தது படகுக்காரன் மீண்டும் சிவாலயா கட்டத்துக்கு கொண்டு வந்துவிட்டார். ரூமுக்கு திரும்பி ஏதோ சாப்பிட்டுவிட்டு தூங்கினோம்.


 

 

Sunday, June 19, 2022

#காஶி_யாத்திரை - 20 காஶி -3
19 ஆம் தேதி. இன்றைக்கு மணிகர்ணிகா தீர்த்த ஶ்ராத்தம்.
வாத்தியார் காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கலாம் என்று சொல்லியிருந்தார். நானும் அதற்கு தகுந்தார்போல் தயாராகிவிட்டேன். ஆனால் ஆளை காணவில்லை. 9 மணி ஒன்பதே கால் ஒன்பதரை என்று போய்க் கொண்டே இருந்தது. அலுத்துப்போய் நான் ரூமுக்கு போகிறேன் வாத்யார் வந்தால் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு ரூமுக்கு போய் படுத்துக்கொண்டேன்.
பெண்கள் சமையலறையில் கொஞ்சம் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்கள். நானுமே ஔபாசன அக்னியில் சரு வைப்பதற்கு சிரமப்பட்டேன். முக்கால் மணி நேரம் போல் ஆகிவிட்டது. இதுதான் பலருக்கு கஷ்டமாக இருக்கிறது. (வாத்தியார்கள் உள்பட!) வழக்கம்போல் குக்கரில் சமைத்ததை ஔபாசன அக்னியில் காட்டினோமோ ஹோமம் செய்தோமா என்று இருக்கிறார்கள். ஏனோ என்னால் இப்படி இருக்க முடியவில்லை.
காலையில் கஞ்சி கொடுத்திருந்தார்கள். வயிற்றுப்போக்கு இருக்கும்போது பால் சாப்பிடுவது அதை இன்னும் அதிகமாகும். ஒன்றும் சாப்பிடாமலும் இருக்க முடியவில்லை. குடும்ப சொத்தான சர்க்கரை வியாதி இருக்கிறது! ஆத்ம ரக்ஷணம் முதலில் என்பதால்…
சரு வைத்து முடித்துவிட்டு மாற்றம் செய்ய ஸ்நானம் செய்ய கங்கைக்கு கிளம்பிவிட்டேன். பின்னாலேயே அரவிந்தரும் வந்து வாத்தியார் வந்துவிட்டார் என்று சொன்னார். ‘ரொம்ப நல்லது! கிளம்பிவிட்டேன். கங்கைக்கு போய் குளித்து விட்டு வந்து விடுகிறேன் மாத்யான்ஹிகம் முடித்து வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு மேலே போய் விட்டேன். ரூமில் குளிப்பதை விட கங்கையில் குளிப்பது இன்னும் சிலாக்கியம் அல்லவா. போய் குளித்து மத்தியானம் செய்துவிட்டு திரும்பி வந்தாள் ஒரு காரியமும் நகரவில்லை. அந்த வாத்தியார் திரும்பி போய் விட்டார் போலிருக்கிறது. வேறு யாரையும் காணோம். கொஞ்ச நேரத்தில் வாத்தியார் திரும்பியும் வந்தார். அவருக்கு என்னமா அவசரமே இல்லை. ஐயரிடம் ஏதோ அளவளாவிக் கொண்டிருந்தார். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பிராமணர்கள் வந்தனர். பத்து மணி போல ஆரம்பிக்கலாம் என்று பார்த்தோம். பத்தரை ஆகிவிட்டது. சரி போகட்டும் அவர்கள் வரட்டும் முதலில் தர்ப்பணத்தை செய்வோம் என்று தர்ப்பணத்தை செய்தோம். தீர்த்த சிரார்த்தத்தில் தர்ப்பணம் தான் முதலில். அதற்குப் பிறகுதான் மேலே. தர்ப்பணம் செய்து முடித்து பார்த்த போது இன்னும் இரண்டு பேர் வரவேண்டியிருந்தது. வாத்தியார் நானே போய் பார்த்துக் கொண்டு வருகிறேன் என்று கிளம்பிவிட்டார். என்னடா இது என்று இருந்தது. அவர் போன சற்று நேரத்தில் அவர் பார்க்கப் போன இரண்டு பேரில் ஒருவர் வந்துவிட்டார். வாத்தியாரை எதிரில் பார்த்தேன் என்று அவர் சொன்னதால் அப்பாடா ஒரு குழப்பம் இல்லாமல் போயிற்று என்று நினைத்துக் கொண்டோம். அந்த கடைசி பிராமணரும் வந்து சேர்ந்தார்கள். எல்லோரும் சங்கல்பம் செய்யும் இடத்திற்கு வந்து ஆரம்பிக்கலாம் என்றார்கள். என்னது வாத்யாரை காணோம்; ஆரம்பிக்கலாம் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டேன். வாத்தியார்தான் ஆரம்பியுங்கள் இதோ வந்து விடுகிறேன் என்று சொன்னார் என்று ஒருவர் சொல்ல சரி நான் ரெடி என்றேன். அவரே சங்கல்பம் செய்து வைத்தார். வரணம் போன்ற உபசாரங்கள் நடந்து கொண்டிருக்கும்போது வாத்தியாரும் வந்துவிட்டார்.
துரு ருசி என்று 2 விஶ்வேதேவர்கள், பித்ரு வர்க்கம் ஒருவர், மாத்ரு வர்க்கம் ஒருவர், ஸபத்னீக மாதாமஹ வர்க்கம் ஒருவர், உபய வம்ச காருண்ய பித்ருக்கள் என ஒருவர். ஶ்ராத்த ஸம்ரக்‌ஷக மஹா விஷ்ணு என ஒருவர். இதெல்லாம் என் ஶ்ராத்தம் குறித்த தொடரில் விளக்கமாக சொல்லி இருக்கிறேன்.
தீர்த்த ஶ்ராத்தம் என்பதால் பல விஷயங்கள் இல்லையானாலும் நபர்கள் அதிகம் என்பதால் சிரமம் அதிகம்.
இந்த நிலை கால்களை கழுவி விடும் நேரத்தில் கொஞ்சம் பிரச்சனை இருந்தது. காரிடார் போல இருக்கும் இடத்தில்தான் செய்யவேண்டும் என்றார். இங்கேயே இன்னும் கொஞ்சம் தள்ளி போனால் ஒரு மரத்தடி கொஞ்சம் இடம் இருக்கிறது. இங்கேதான் துணிகளை உலர்த்தி இருந்தோம். அப்போது எனக்கு அது தெரியவில்லை. இந்த இடத்தில் செய்திருக்கலாம். இருந்தாலும் வாத்தியார் சொல்லும்படி கேட்க வேண்டியது அவசியம் என்பதால் விஶ்வேதேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நடுவில் துண்டை போட்டேன். பகவத் சங்கல்பம் - தரையின் சாய்வு ஒரு மாதிரி இருந்ததில் நீர் வெவ்வேறு பக்கம் ஓடிவிட்டது. விகிரான்னம் கிடையாது, அபிஶ்ரவணம் இல்லை. மாசிகங்களில் சொல்லும் புருஷ ஸூக்தம் கூட இல்லை. வாயஸ பிண்டம் வைத்தேன். கொண்டு போட காக்கா இல்லை! என்ன செய்வது என்றால் அதையும் தீர்த்தத்திலேயே போட்டுவிடலாம் என்றார்கள். போக்தாக்கள் சாப்பிட்ட மிகுதி, வைத்த சருவின் மிகுதி எல்லாம் அப்படியே. யார் என்ன செய்தார்கள் என்று நினைவில் இல்லை. நாம் சாப்பிட்ட மிகுதியை அங்கிருந்த ஒரு டப்பாவில் போடச்சொன்னார்கள்.
இதெல்லம் நாய் தோண்டி எடுக்க முடியாதபடி ஒரு அடி ஆழம் தோண்டி புதைக்க வேண்டும். இங்கே அதற்கு வசதி இல்லை. நாராயணா!
போக்தாக்களை வழி அனுப்பிவிட்டு பிண்ட ப்ரதானம் செய்தேன். 17 பிண்டங்கள். பிழிய வேண்டிய வஸ்தம் எல்லாம் காய்ந்தே போயாயிற்று. ப்ரம்ஹ யக்ஞம் முடித்து சப்பிட உட்காரும் போது மணி நாலரை! ப்ரயாக்ராஜ்தான் லேட் என்று நினைத்தேன். இங்கே அதைவிட லேட்! அப்பாடா என்று படித்தேன். நல்ல வேளை மாலை அக்னிஹோத்திரம் கிடையாது.
இப்படியாக பார்வண ரூப தீர்த்த ஶ்ராத்தம் முடிந்தது.
மாலையில் திடுதிப்பென ஒரு திருப்பம்!

 

Saturday, June 18, 2022

காஶி யாத்திரை - 19 காஶி -2
 
காசியில் இரண்டாவது நாள். காலையில் ஔபாசனம் செய்து அக்னி ஹோத்திர பக்‌ஷ ஹோமம் செய்தேன். அதாவது அரவிந்தன் செய்தார். வாத்தியாரின் சிஷ்யருக்கு தெரிந்தவர் ஒருவர் வீட்டில் வில்வ மரம் ஒன்றை வெட்டி இருக்கிறார்கள். அந்த சிஷ்யர் அங்கே போய் அதை கைப்பற்றி துண்டு போட்டு விறகு கட்டுகளாக்கி வாத்தியார் வீட்டில் போட்டுவிட்டார். வீடு கொஞ்சம் பெரியது. அதனால் சேமித்து வைக்க முடிந்தது. வில்வம் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமப்படுகிறது. பற்றிக்கொண்டுவிட்டால் நெடு நேரம் நன்றாகவே எரிகிறது. விராட்டி கொஞ்சம் பிரச்சினை. அதை சரியாக தட்டையாக தட்டி வைக்கவில்லை போலிருக்கிறது. கிடைத்தது எல்லாம் 2 இஞ்ச் தடிமனுக்கு சரியாக வடிவம் இல்லாமல்… மாடு போடுவது அப்படியே இங்கிருக்கும் சூட்டில் காயந்துவிடும் போலிருக்கிறது. அதை அப்படி கொண்டு வந்து சேமித்து விடுவார்களோ! எப்படியோ! இருப்பதில் மெலிசு ஒரு செ.மீ! உடைக்க சிரமப்பட்டோம். இருந்தாலும் ஒரு வழியாக பற்றிக்கொண்டால் விரைவில் போட்ட அரிசியை சாம்பலாக்கிவிடுகிறது. அது சௌகரியமாக இருந்தது. அப்படி சாம்பலான பின்பே ஸமித்தில் அக்னியை ஆரோபணம் செய்து வைத்துக்கொள்ள முடியும்.
வீட்டில் ஔபாசன அக்னியை ஒரு தட்டியில் தவிடு/ சாம்பல் போட்டு அதில் விராட்டி துண்டுகளை வைத்து பராமரிப்போம். இங்கே அதற்கு வசதி இல்லாமல் ஒவ்வொரு வேளைக்குமே ஸமித்தில் அதை ஆரோபணம் செய்து கொண்டு அடுத்த வேளைக்கு மூட்டிய அக்னியில் இந்த ஸமித்தை வைத்து பின் ஔபாசனம் தொடருவதாக போயிற்று. அதே போல அக்னி ஹோத்ர அக்னியும் ஆத்ம சமாரோபணம்.

இங்கே குரங்குத்தொல்லை இருக்கிறது. கதவை திறந்து வைக்காதீர்கள் என்று வீட்டார் எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தார்கள். சந்தியா வந்தனம் செய்ய பால்கனிக்குப்போனால் கொஞ்ச நேரத்தில் வந்துவிட்டது. அது பாட்டுக்குப்போகட்டும் என்று விட்டுவிட்டேன். எல்லாம் நன்றாகத்தான் போயிற்று ஒரு குட்டி வரும் வரை. அதுவும் ஒதுங்கித்தான் போயிற்று. நான் பாட்டுக்கு ஜபத்தில் இருந்தேன். என்ன சிக்னல் போயிற்றோ, அம்மா குரங்கு கர்ர்ர்ர் என்று கத்திக்கொண்டே பாய்ந்து என் பக்கவாட்டில் மோதி விழுந்து எழுந்து நகர்ந்து விட்டது.
நா உன் குட்டியை ஒண்ணும் பண்ணலையேடா என்று அதனுடன் பேசிக்கொண்டே சந்தியை முடித்தேன்.

அது முடிந்து மணிகர்ணிகா ஸ்நானம் செய்வதற்காக சங்கல்பம் எட்டரை மணிக்கு என்று வாத்தியார் சொல்லியிருந்தார். ஒன்பது மணிக்கு ஆரம்பித்தோம். பிராமணர்கள் வருவதற்கு சற்று நேரம் ஆகியது. ஒரு ஒன்பது பத்து பிராமணர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொரு வேதத்திலும் ஒவ்வொரு சாகையிலும் ஒவ்வொருவர் ஏற்பாடு செய்து இருந்தார் வாத்தியார். (இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று ஒன்றுமில்லை. ) ரிக் வேதத்தில் ஷாகல ஶாகா, சுக்ல யஜுர் வேதத்தில் மாத்யந்தின, காண்வ ஶாகைகள். எதோ ஒரு குஜ்ராத் வேரியேஷன் - சம்ப்ரதாயம் என்று ஒன்று ஞாபகம். க்ருஷ்ண யஜுர் வேதத்தில் தைத்ரீயம் மட்டும் என்று நினக்கிறேன். ஸாம வேதத்தில் கௌதும, ராணாயனீய காசி சம்ப்ராதாயம்; ஜைமினீய ஶாகை, அதர்வணத்தில் பிப்பலாத ஶாகை, சௌனக ஶாகை.
இப்படியாக பல கிளைகளில் பயிற்சிபெற்ற வித்வான்கள் வந்திருந்து ஆசீர்வாதம் செய்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆசீர்வாதம் செய்கையில் அவரவருடைய ஶாகையில் ஒரு பஞ்சாதி சொல்லி ஆசீர்வாதம் செய்தார்கள்.
அதற்கு முன் நவக்ரஹ ப்ரீதி, வைஷ்ணவ ஶ்ராத்தம் என்று சொல்லி ஆளுக்கு 200 கொடுக்கச்சொன்னார். செய்தோம். க்ருத ஶ்ராத்தம் முன்னேயே வீட்டில் செய்துவிட்டோம். ஆகவே இங்கே செய்யவில்லை.
இதன் பிறகு மணிகர்ணிகா கட்டுக்கு படகில் சென்றோம். படகு அந்த மடத்தின் வாட்ச்மேனுடையது. அவர் போகும் வழியில் சொல்லிக்கொண்டே போனார். ‘இந்த இடம் ஆனந்த வனம். இங்கே பல அதிசயங்கள் உண்டு. கருடன் பறக்காது. பல்லி கத்தாது. மாடு முட்டாது. பூக்கள் மணக்காது. பிணம் எரியும் போது நாறாது. மனித வியர்வை நாறாது’… ஆமாம். மாடு முட்டுவதில்லை. வளர்க்கத்தடை என்று இருந்தாலும் பலதும் சாதுவாக சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. கடைசியில் சிவாலயா கட்டத்தில் ஒரு படகில் கொண்டு விட்டார். என் பையன் தான் உங்களைப் பார்த்துக் கொள்ளுவான் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
மணிகர்ணிகா கட்டத்திற்கு போனோம். ஶிவ பெருமான் தக்‌ஷன் யாகத்தை தொடர்ந்து தீக்குளித்த சக்தியின் உடலை துண்டுகளாக வெட்ட அவை அங்கங்கே விழுந்தன. இந்த இடத்தில் தேவியின் காதணி விழுந்தது.  
பக்கத்தில் ஶ்மசானம் இருக்கிறது. குவியல் குவியலாக விறகு! 
 
கீழேயே அழகான சாய்ந்த கோவில் இருக்கிறது. இது ரத்னேஸ்வர் மஹாதேவர் கோவில். வடமேற்காக 9 டிகிரி சாய்ந்து இருக்கிறது. உயரம் 12 மீட்டர். கர்ப க்ருஹம் நீருக்குள் உள்ளது. கோவிலின் முக்கால்வாசி பாகம் நீருக்குள்தான் இருக்கிறது. கங்கையில் ப்ரவாகம் என்றால் மூழ்கியேகூட விடும். ஆனாலும் சேதம் அதிகமில்லாமல் இருக்கிறது.
பக்கத்தில் மணிகர்ணிகா குண்ட் என்னும் கிணறு இருக்கிறது. படிகள் மிகவும் உயரமானவை செங்குத்தானவை. இந்த மணிகர்ணிகா கட்டத்தில் கங்கையில் ஸ்நானம் செய்தோம். செய்து முடிக்க நேரமாகிவிட்டது. ஆகவே ஸ்நானம் முடிந்து பையரும் மருமகளும் மட்டும் போய் ப்ரோக்‌ஷித்துக்கொண்டு எங்களுக்கு தீர்த்தம் கொண்டு வந்தனர்.

பக்கத்தில் 13 கட்டங்கள் தள்ளி பிந்துமாதவர் இருக்கிறார். பிந்து மாதவர் காட் என்றும் பஞ்ச கங்கா காட் என்றும் பெயர். அங்கேயேதான் மேலே பிந்து மாதவர், லக்‌ஷ்மி நாராயணர் கோவில் இருக்கிறது. வழியிலேயே இரண்டு மூன்று சிறு கோவில்கள் இருக்கின்றன. ஒரு மசூதியைக் கூட பார்த்தேன். பிந்து மாதவரை சேவித்துவிட்டு வரும்போது அங்கேயே வலது பக்கத்தில் ஒரு சிறிய சன்னதியில் ஒரு சிவலிங்கம் வைத்து இருக்கிறார்கள் பெரிய அண்டாவில் தண்ணீர் வைத்துக் கொண்டு அபிஷேகம் செய்வதற்காக ஒரு சிறு சொம்பில் முகர்ந்து கொடுக்கிறார். நாம் நேரடியாக அபிஷேகம் செய்யலாம். ஏறத்தாழ எல்லா வட இந்திய கோவில்களிலும் நாமே செய்வதாக தான் இருக்கிறது. செய்து முடித்த பின் கையை நீட்டுகிறார். நல்ல ஐடியாதான் என்று நினைத்துக் கொண்டேன். போகட்டும்.


ஆகவே மாத்யான்ஹிகத்தையும் அங்கேயே செய்துவிட்டு ரூமுக்கு திரும்பினோம்.
மாலை டீ நேரத்துக்கு கொஞ்சம் மடத்தை சுற்றிப்பார்த்தேன். நாங்கள் தங்கி இருந்த அறை வெங்கடராம ஐயர் அலையஸ் ராம் பாபு அவர்கள் உபயம் என்று அறிந்து அவருக்கு மானசீகமாக நன்றி சொன்னேன்.
 
இரண்டு இளைஞர்கள் வேதம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஒருவர் நன்கு சொன்னார். மற்றவருக்கு கொஞ்சம் தடங்கியது. அவ்வப்போது கொஞ்சம் பாடமாகவே கேட்டார். கற்கும் பருவம் போலிருந்தது. முடிந்ததும் பேச்சு கொடுத்தேன். ‘காலையில்தான் வயிற்றுப்பிழைப்பு இருக்கவே இருக்கிறது. ஆனால் தினசரி இந்நேரத்துக்கு இங்கே வந்து பாடம் சொல்லுகிறோம்’ என்றார்கள். வாழ்த்தினேன்.
பின்னால் பையரிடம் பேசிக்கொண்டு இருந்த போது திருப்பதி ஸ்கீமாக இருக்கும் என்றார். எப்படி இருந்தாலும் நல்லதே.
மாலையில் சப்தரிஷி பூஜை என்று திட்டமிட்டு இருந்தார்கள். மனைவியும் மருமகளும் அரவிந்தனை அழைத்துக்கொண்டு போய் வந்தார்கள்.

உடல்நிலை கருதி நான் எங்கும் போகவில்லை.


  
 

Friday, June 17, 2022

காஶியாத்திரை - 18 காசி -1
காசியில் இரண்டாம் நாள் … முதல் நாள் என்று கூட சொல்லலாம், வெறும் அனுஷ்டானத்துடன் வேலைகள் முடிந்தன. பிரதமை ஆதலால் ஸ்தாலீபாகம் செய்தேன். அரவிந்தன் அக்னிஹோத்திரம் காலையில் செய்தான். மாலையில் பக்‌ஷ ஹோமம் செய்தான். அதாவது அந்த கிருஷ்ண அல்லது சுக்ல பக்ஷத்திற்கு முழுக்க சேர்த்து ஒரே ஹோமம் ஆக செய்துகொள்ள ஒரு அனுமதி இருக்கிறது. அதற்கு யாயாவர தர்மம் என்று பெயர்.
பகலில் என்ன செய்தேன் என்று இப்போது நினைவுக்கு வரவில்லை. நிச்சயமாக எங்கும் சுற்றவில்லை.
இதற்குள் என்னுடைய உடல்நிலை கொஞ்சம் பிரச்சனையாக துவங்கிவிட்டது. எனக்கு எப்போதுமே இந்த வயதுக்கான மலச்சிக்கல் கொஞ்சம் உண்டு. பிரயாகையில் முதல் நாள் இரண்டாம் நாள் கொஞ்சம் சுலபமாகவே போயிற்று. வாரணாசிக்கு வந்து சேர்ந்த பிறகு இது வயிற்றுப்போக்கு ஆகிவிட்டது. முதல் இரண்டு மூன்று நாட்கள் ஏதோ இந்த ஊர் பால் ஒத்துக் கொள்ளவில்லை என்று நினைத்து அதை தவிர்த்து வந்தேன். இரண்டு நாள் பார்த்துவிட்டு மருந்து சாப்பிட ஆரம்பித்தேன். அதற்கு கொஞ்சம் குறைந்ததே தவிர விடவில்லை. கடைசியில் இது கடலூருக்கு வந்து விட்டு என் சர்ஜனை கன்சல்ட் செய்ததில் அவர் அதெல்லாம் இப்போது வேலை செய்வதில்லை என்று சொல்லி வேறு மருந்து கையில் கொடுத்து சாப்பிட சொன்னார்; அதை முழுசாக ஐந்து நாட்கள் சாப்பிட்ட பிறகுதான் நின்றது. மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லையா என்றால் அவர்களுக்கும் இருந்தது போலிருக்கிறது. ஆனால் தாக்கம் குறைவாக இருந்திருக்கிறது. நான்தான் கோளாறான ஆசாமி ஆயிற்று ஆயிற்றே சக்கரை வியாதி வேறு சேர்ந்து கொண்டது.

இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. ஒருபக்கம் மருத்துவத்தில் ஏதோ தீராத இன்பெக்சன் என்று நினைத்தாலும் இன்னொரு பக்கம் வேறு விஷயம், ஶ்ராத்தத்தில் அது முடித்து மற்ற எல்லாம் முடித்து சாப்பிடும் வரை நிர்ஜலமாக நிர் ஆகாரமாக இருக்க வேண்டும் என்பதே விதி. பலருக்கும் இதுவும் இந்த காலத்தில் முடிவதில்லை. எனக்கோ சர்க்கரை வியாதி இருப்பதால் வேறு வழியும் இல்லை. இதனால் மருந்தை தவிர்த்துவிட்டு சர்க்கரை போட்ட காப்பி இரு முறை ஶ்ராத்தம் ஆரம்பிக்கும் முன் குடித்து விடுவேன். அதே தான் இங்கேயும் செய்துகொண்டிருந்தேன்.

பகவானின் சங்கல்பம் என் வயிறு காலியாக இருக்க வேண்டும் என்பது போல இருக்கிறது. காலையில் என்ன சாப்பிட்டாலும் ஒரு அரை மணி நேரத்தில் காலியாகிவிடும். பிறகு சிரார்த்தத்துக்கு கிளம்பும்போது மீண்டும் பிரச்சனை வராமல் இருப்பதற்காக ஒரு மணிநேரம் முன் அதைத் தடுப்பதற்கு மருந்து சாப்பிட்டுவிட்டு போய்விடுவேன். இப்படியே மிகுதி நாட்கள் அனைத்தும் கழிந்தன.
அடுத்த நாளிலிருந்து கர்மா ஆரம்பித்தது.
 

Thursday, June 16, 2022

காஶி யாத்திரை - 17வந்தே பாரத் சொகுசு எல்லாம் அத்தோட போச்சு. வெளியே வந்து வெய்யிலில் காஞ்சது எல்லாத்தையும் எதார்த்தத்துக்கு கொண்டு வந்தது. எஇன்று சூரியன் மறையும் நேரம் 6 20. ஆகவே அக்னிஹோத்திரம் ஔபாசனம் செய்வதற்காக கிளம்ப வேண்டியிருந்தது. கங்கையில் போய் குளிக்கலாம் என்று கிளம்பினேன். சங்கர மடம் இருக்கிற இடம் அனுமன் காட். காட்ல ஒரு கல்வெட்டு பார்த்தேன். ‘இந்த காட் க்கு ராமேஸ்வரம் காட் என்றுதான் பெயர். இங்கே பக்கத்தில் இருக்கும் அனுமார் கோவில் பிரபலமாகிவிட்டது என்பதால் அனுமன் காட் என்று பெயர் மாறிவிட்டது’ என்று கல்வெட்டில் பார்த்தேன்.

இந்த குறுகலான சந்துகள் எல்லாம் கீழே கல் பதித்தவை. அதில் ஒரு சௌகரியம் இருக்கிறது. ரோடு சரியாக இருக்கும் வரை விட்டுவிட்டு மேடு பள்ளமானால் திருப்பியும் கற்கலை கெந்தி சமன் செய்து போட்டுவிடலாம். ஏனென்றால் கங்கை தண்ணீர் ஏற ஏற இந்த மண் அதை உறிஞ்சி கொள்ளளவில் அதிகமாகும் என்பதால் இந்த சமநிலை இருக்காது. கடலூரில் இருந்து தஞ்சாவூர் போகும் வழியில் ஒவ்வொரு முறையும் கவனிப்பேன். தஞ்சை மாவட்டம் வந்துவிட்டது என்பது சுலபமாக தெரிந்து விடும். எஸ் போல் வளைந்து வளைந்து ரோடு போக ஆரம்பிக்கும். அதேபோல் சமமாக இருக்காது. குண்டும் குழியுமாக இருக்கும். இந்த மண்ணின் ஈரம், தண்ணீர் மட்டம் அடிக்கடி பாதிக்கப் படுவதால் இந்த சமநிலை இருப்பது கடினம். அதற்கு சரியாக திட்டமிட்டு பாதை போட வேண்டும் அதை யார் செய்யப்போகிறார்கள். கிடைத்த காசை வாங்கிட்டு…. அது தான்.
 
செருப்பு போட்டுக்கொள்ளாமல் கிளம்பிவிட்டேன். பிரயாகையில் மேனேஜ் செய்தோமே என்று ஒரு நினைப்பு. மேலும் கங்கையில் ஸ்நானம் செய்ய போகும்போது போட்டுக் கொண்டு போவதா என்று ஒரு நினைப்ப. நான் போன பாதை தவறு. வழி கேட்ட போது கங்கைக்கு போக நேராக இந்தப்பக்கம் போய்க்கொண்டே இருங்கள். தெரு முட்டு வரும். கொஞ்சம் இடது பக்கம் திரும்பி நடந்து வலது பக்கம் திரும்பிப்போனால் போய்விடலாம் என்று சொன்னார்கள். ஆனால் இந்த இடத்தில் ஒரு எச்சரிக்கை கொடுத்தார்கள். இந்த இடத்தில் படித்துறை இருக்கின்றது. ஆகவே இங்கே பாசி படிந்து இருக்கும் என்பதால் உங்களுக்கு இது உசிதமல்ல. இன்னும் வலது பக்கம் போனால் சிவாலயா காட் என்று இருக்கிறது. அது சரியாக இருக்கும் என்று சொன்னார்கள். எங்கே மண்ணாக இருக்கிறதோ அங்கே பாசி இல்லை என்பதால் நாம் சின்னச்சின்ன படியாக வைத்து போய்விடலாம். பழக்கமில்லாவிட்டால் நாம் எதிர்பாராமல் படியில் பாசி வழுக்கும். அவர்கள் சொன்னபடியே நான் நேராக போய் கொஞ்சம் இடது பக்கம் திரும்பி - கர்நாடகா காட் கட்டிடத்தை ஒட்டி பாதை போகிறது - அதேபோல் அனுமன் காட் க்கு போய் விட்டேன். இங்கேதான் முன்னே சொன்ன அந்த கல்வெட்டை பார்த்தேன். நான் சாயங்காலம் ஆகிவிட்டதே வெயில் குறைந்துவிட்டது என்று நினைத்தாலும் அங்கே இருந்த கற்கள் அத்தனையும் நன்றாக சூடாகவே இருந்தன. ஆகவே கால் பாதிப்பு இருக்கவே இருந்தது. அங்கே இங்கே இருக்கும் நிழல்களில் போய் நிற்பதாகவும் கொஞ்சம் பாதிப்பு குறைந்ததும் அடுத்த நிழலை நோக்கி போவதாகவும் போயிற்று.
 
போன தரம் வந்த பிறகு இந்த முறை கங்கை மிகவும் மாறியிருக்கிறது. வாரணாசி எம்.பி. பல விஷயங்களை மாற்றி இருக்கிறார். எல்லாம் நல்லதுக்கு என்று சொல்ல முடியாது. சிலர் குறைகளை தெரிவித்தனர். உதரணமாக வீட்டில் மாடு வைத்துக்கொள்ள முடியவில்லை; தடை செய்துவிட்டார்கள் என்று வாத்தியார் குறை பட்டுக்கொண்டார். எல்லோரையும் த்ருப்தி படுத்த முடியாதுதானே?
 
இருந்தாலும் மனிதன் போகுமிடம் மோசமாகி விடும் என்ற பொதுவிதிப்படி கொஞ்சம் குப்பை இருக்க தான் இருந்தது. என்னதான் அங்கே குப்பை தொட்டிகள் வைத்திருந்தாலும் ஜனங்கள் துணி சோப்புகள், சோப்பு, ஷாம்பூ உறைகள், கொஞ்சம் துணி என்று பல குப்பைகளை போட்டு தான் இருந்தார்கள். கங்கை அவற்றை கரையில் சேர்த்துவிட்டு போய் விடுவாள்.
முதல் நாள் இது பற்றி சரியான கற்பனை வராமல் அடுத்த நாள் காலை மறந்து போய் குளித்து, அடுத்த நாள் மாலை நினைவில் வைத்து ஒரு வேலை செய்ய ஆரம்பித்தேன். குளிக்க இறங்கும் முன்னால் கொஞ்சமாவது குப்பை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு அதற்கப்புறம் குளிப்பதற்கு தண்ணீரில் இறங்குவதாக ஆரம்பித்தேன். 3 4 நாட்களில் இந்த இடம் சுத்தமாகி விட்டது. இந்த மாதிரி செய்தால் மகத்தான புண்ணியம் என்று அங்கே ஒரு அறிவிப்பு பலகை வைக்கலாம். உள்ளூர்வாசிகள் கண்டுக்கொள்ளாவிட்டாலும் வருகிற யாத்ரிகர்களில் 25% செய்தாலே கங்கை ஓஹோ என்று ஆகிவிடும்.
 
தண்ணீர் குவாலிட்டி எக்கச்சக்க இம்ப்ரூவ்மென்ட். தண்ணீர் வெகுவாக நன்றாகவே இருக்கிறது. இந்த டீசல் படகுகள் தாண்டி போகும்போது அந்த டீசலின் தாக்கம் கொஞ்சம் தெரிகிறது. நாலு நாட்களுக்குப் பின்னால் வாரணா காட் போகும் போது இண்டியன் ஆயில் மிதக்கும் சிஎன்ஜி ப்ராஜக்ட் ஆரம்பித்து இருப்பதை பார்த்தேன். இன்னும் எல்லாம் மாற்ற ஆரம்பிக்கவில்லை போலிருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் மாறூகிறார்களோ அவ்வளவு நன்றாக இருக்கும்.
புதியதாக போகிறவர்களுக்கு குறிப்பு: கங்கையில் தயக்கமில்லாமல் இறங்குவதற்காக அங்கே இருக்கும் பல படகுகளில் ஒன்றை பிடித்த படியே கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இறங்கலாம். 6 இன்ச்சுக்கு அடி எடுத்துவைத்தால் போதுமானது. ஒரு பத்தடி சென்ற பிறகு குளிக்க கூடிய ஆழம் வந்துவிடுகிறது.. இரண்டாம் நாள் இப்படி ஜாக்கிரதையாக போன பிறகு அடுத்த நாளிலிருந்து ஒரு தைரியம் வந்து பிடித்துக் கொள்ளாமல் போய் குளிக்க முடிந்தது. 
 
 

 

வாத்தியார் வீட்டுக்குப்போய் ஔபாசனம் செய்தேன். எனக்கான மாலை அக்னிஹோத்திரம் அரவிந்தன் செய்தார். பசும்பால்தான் எங்கள் வழக்கம். அவர்களுக்கு அந்த கற்பனை இல்லை. பல மாட்டுப்பால் கலந்தால் அது உசிதமில்லை. பையர் இப்படிச்சொல்லி வைத்திருந்தும் அது கிடைக்கவில்லை. பால் கேட்டு வாங்க வாத்தியாரின் சிஷ்யர் போய்விட்டார். வெகுவாக தாமதமானது. யாத்திரையில் பல சொதப்பல்களில் இதுவும் ஒன்று. ரைட் என்று அடுத்து என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய வேண்டியதுதான். ஆகவே நான் அரிசியில் செய்யச்சொன்னேன். அது அரவிந்தனுக்கு பழக்கமில்லை. நானே ஓரிரு முறைதான் அப்படி செய்திருக்கிறேன். சொல்லிக்கொடுத்து செய்யச்சொன்னேன். பையர் காத்திருந்து வரவில்லை என்று நெய்யில் செய்தார். வாத்தியார் வீட்டிலேயே சாப்பாடு ஏற்பாடு இருந்தது. சாப்பிட்டுவந்து படுத்தேன். அடுத்த நாள் காலை அக்னிஹோத்திரத்துக்காக சூரியோதய நேரம் பார்த்தால் 5-20! தூக்கிவாரிப்போட்டது. ம்ம்ம் எப்படியானாலும் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டியதுதான் என்று படுத்தேன். அசதியில் தூங்கினேன்.

Tuesday, June 14, 2022

காஶி யாத்திரை - 16 - ப்ரயாக்ராஜ் -4


அடுத்த நாள் காலை ஔபாசனத்தை முடித்தேன். கோவில்களில் தரிசனம் முடித்து 12 - 20 க்கு வந்தே பாரத் ரயிலை பிடிக்க வேண்டும். சீக்கிரமாக சிற்றுண்டி முடித்து இரண்டு ‘டக் டக்’ பிடித்துக்கொண்டு கிளம்பினோம். டக்டக் என்பது 6 பேர் கொஞ்சம் நெருக்கி உட்காரக்கூடிய டெம்போ மாதிரி ஏதோ ஒன்று. தொத்தல் வண்டியில் வாத்தியார் முந்தின மாலையே காசிக்கு கிளம்பிவிட்டார். பையர் எந்த வரிசையில் கோவில்கள் என்று ஏதோ மனதில் வைத்திருந்தார். முதலில் வேணி மாதவர் கோவில். 
 


அடுத்து நாக வாசுகி கோவில். ப்ரயாக் கோவில்களில் ‘ப்ராசீன’ என்று ஒரு அடைமொழியை சேர்த்தே பெயர் பலகைகள் உள்ளன. ஏனோ! வாசுகி நாகம் ப்ரயாகின் காவல்தெய்வம். கோவிலில் இருந்து கங்கையை பார்க்க….. அடடா! எவ்வளவு விஸ்தீர்ணம்! 
 

அடுத்து முள் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரை பார்த்தோம்.
 

ஸத்ய மஹரிஷி ஆஸ்ரமம், 
 

 பரத்வாஜர் ஆஸ்ரமம் பார்த்துவிட்டு வேறு திசையில் பயணம். 
 

ஶ்ரீ ஆதி ஶங்கரர் விமான மண்டபம். மூன்று அடுக்காக உள்ளது. ஏறத்தாழ தமிழ் நாட்டு கோவில்களில் இருக்கும் அனைத்து தெய்வங்களும் இங்கே உள்ளன என்றே நினைக்கிறேன். சுற்றிப்பார்க்க வெகு நேரம் ஆகியது. 
 
 
கோட்டையில் ஒரு அக்‌ஷய்ய வடம் இருக்கிறது. கோட்டை இப்போது இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த இடத்தை மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு திறந்து விட்டு இருக்கிறார்கள். செக்யூரிடி செக் உண்டு. ரேம்பில் ஏஏஏஏறி போனால் அக்‌ஷய வடத்தை கிட்டே பார்க்கலாம். மேலே போக ஹனுமத் சமேத சீதாராமர், க்ருஷ்ணன் என்று சிறு சந்நிதிகள். இன்னும் சற்று தள்ளி சிவப்பு கம்பளம் விரித்து ஏதோ ஒரு சமயத்தில் பெரிய கியூ வரிசை நீண்டுகொண்டே இருந்தது. ஆனால் ஒருவழியாக ஆகிவிட்டேன். பையர் பார்த்துக் கொண்டு வருகிறேன் என்று முன்னே போனார். போய் விட்டு திரும்பலாம். பார்க்க ஒன்றும் பெரியதாக இல்லை என்றார். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. 
 
 

திரும்பும் போது கடைசியாக அனுமார் கோவிலை பார்க்க வேண்டும். இங்கே படுத்து படுத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் ஏதோ விசேஷமான நாள் என்பதால் கூட்டமோ கூட்டம் பயங்கர கூட்டம். ஆகவே மனதில் அவரை நினைத்துக்கொண்டே வெளியிலிருந்தே ஒரு கும்பிடு போட்டுவிட்டு இருப்பிடத்துக்கு திரும்பினோம். அடுத்து சாப்பிட்டுவிட்டு ஸ்டேஷனுக்கு போக வேண்டியதுதான். கொஞ்சம் அவசரப் படுத்தினேன். ஆனால் நேரமிருக்கிறது போய்விடலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த செல் மொபைல் சிக்னல் சரியாக இல்லை. அதான் எந்த விபரமும் சரியாக பார்க்க முடியவில்லை. கட்டிடங்கள் எல்லாம் இரண்டு மாடி. மிகவும்  குறுகலான தெருக்கள். இப்படி இருக்கையில் சிக்னல் கிடைக்காததே ஆச்சரியம் இல்லைதான். ஆனால் மொட்டை மாடிக்கு போனாலும் சிக்னல் விட்டுவிட்டுத்தான் இருந்தது.

அவசரமாக சாப்பிட்டுவிட்டு இரண்டு டக்டக் பிடித்துக் கொண்டு கிளம்பினோம். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் பத்து நிமிடங்கள் கழித்து பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதனால் சரியான நேரத்துக்கு போவோமா என்று திக் திக்கென்று இருந்தது. கிளம்பும் முன்னரே பையன் மொபைல் சிக்னல் இல்லாததால் அந்த உள்ளூர் வாத்தியாரை வந்தேபாரத் இங்கே எங்கு வந்து நிற்கும் என்று கேட்டார். அவரது எப்போதுமே முதலாம் ப்ளாட்பாரத்தில்தான் வரும் என்று செம கான்பிடன்ஸோடு சொன்னார். பிறகு உங்களுக்கு டிக்கெட் கிடைத்ததா என்ன என்று ஆச்சரியமாக கேட்டார்.
ஸ்டேஷன் அருகில் வந்துவிட்டாலும் நெருக்கடியில் அதன் முகப்பிற்கு போக 10 நிமிடம் பிடித்தது. ஒரு வழியாக வந்து சேர்ந்தோம். ட்ரெய்ன் வர இன்னும் ஐந்து நிமிடம் தான் இருந்தது. அரவிந்தன் - அதாவது ஒரு சிஷ்யர் - மொபைலில் பார்த்துவிட்டு அதை அரை மணி நேரம் லேட்டாக வருகிறது என்று சொன்னார். அப்பாடா என்று ஒரு பெருமூச்சு விட்டோம். உள்ளே போனால் வந்தே பாரத் ஆறாவது பிளாட்பார்ம் என்று தெரிந்தது. அதாவது அடுத்த கோடி. எஸ்கலேட்டர் எதுவுமில்லை. நீண்ட நெடிய ராம் இருந்தது. அது நடந்து நடந்து நடந்து ஒரு வழியாக ஆறாவது பிளாட்பாரத்திற்கு போய் சேர்ந்தோம். இப்படி ஒரு பிரீமியர் ரயில் வந்து நிற்கும் பிளாட்பார்மில்  சரியான கூரைநிழல் கூட இல்லை.பையர் போய் அங்கிருந்த ஆபீஸில் விசாரித்ததில் 'ஆமாம் இங்கேதான் வரும். எப்போதுமே வந்தே பாரத் இங்கே தான் வரும்' என்று சொன்னார். மிகவும் என்ன இன்னொருவரோடு அழகா இன்னொ அந்த இருக்க இருக்கிறது. தெரிந்திருந்தால் இந்த கூட்ட நெரிசலில் மாற்றிக் கொள்ளாமல் அந்தப் பக்கமே வந்து சேர்ந்திருக்கலாம். எல்லாம் அவனுடைய திருவிளையாடல் .
 
 

ஒருவழியாக ரயில் வந்து சேர்ந்தது. எதிர்பார்த்த திசைக்கு எதிர் திசையில் வந்தது கொஞ்சம் தமாஷாக இருந்தது. சும்மா சொல்லப்படாது. அருமையான ரயில். இருக்கைகள் அருமை. இதமான ஏசி. என்ன ஒன்று, முந்தைய ஆசாமி சாப்பிட்டு விட்டு இறங்கி போயிருக்கிறார். அதை இன்னும் சரியாக சுத்தம் செய்யாமல் வைத்திருந்தார்கள். ரயில் சர்வ சாதாரணமாக 120 கிலோமீட்டர் வேகத்தை பிடிக்கிறது. அப்படி இருந்தாலும் உள்ளே கொஞ்சமே கொஞ்சம்தான் பக்கவாட்டு ஆட்டம் மட்டும் இருக்கிறது. சத்தம் இல்லை. வேறு என்ன வேண்டும்? இரண்டு மணி நேரத்தில் வாரணாசி வந்துசேர்ந்தோம். வெளியே வந்தால் மொட்டை வெயில். வாத்தியார் ஒரு வண்டியை ஏற்பாடு செய்து இருந்தார். அந்த ட்ரைவர் நம்பருக்கு போன் பண்ணினால் எடுக்கவே இல்லை. பையர் வாத்தியார் நம்பருக்கு போன் செய்தார். அவரும் பேசுகிறேன் என்று டிரைவரிடம் பேசி இருப்பார் போலிருக்கிறது. கொஞ்ச நேரத்தில் மீண்டும் பையர் டிரைவரிடம் பேச அவர் இதோ வந்து கொண்டிருக்கிறேன் என்றார். என்ன ஆயிற்று என்றால் எங்களுக்கு பிரயாகையில் நடந்தது போலவே இங்கும் நடந்திருக்கிறது. நாங்கள் எட்டில் இருந்து ஒன்னாம் நம்பர் பிளாட்பார்முக்கு ரேம்ப்பில் வந்து இறங்கினால் அவரோ எட்டாம் நம்பர் பிளாட்பாரத்தில் காத்து இருக்கிறார்! அவர் வரும் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. வேறு வழி? அவர் ஏதோ ஒரு இடத்தை குறிப்பாக சொல்லி அங்கே வந்து நில்லுங்கள் நான் இதோ வந்து விடுகிறேன் என்றார். அங்கே பெரிசாக நிழலும் இல்லை ஒன்றும் இல்லை. செம வெய்யில் காய்ந்து கொண்டிருக்கிறது. நாம் பாட்டுக்கு வந்து இறங்கினோமா, ஒரு டாக்சியை பிடித்தோமா, அட்ரஸ் சொல்லி போய் சேர்ந்தோமா என்று இருந்திருக்கலாம். வண்டி சமாசாரத்தில் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தாலும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாததால் வெளியே சொல்ல முடியவில்லை. உங்கள் ஊகத்துக்கு விட்டுவிடுகிறேன். ஒருவழியாக வந்து சேர்ந்த ஒரு இன்னோவா காரில் நாங்கள் 6 பேரும் ஏறிக்கொண்டு சங்கர மடத்திற்கு வந்து சேர்ந்தோம். சங்கரமடம் இருக்கும் வீதி குறுகலானது. அதைப்போலத்தான் காசியிலேயே பல வீதிகள் குறுகலானவை. வண்டி வாசலுக்கே வரமுடியாது. ஒரு 50 மீட்டர் தள்ளியே பிரதான சாலையில் நிறுத்திவிட்டார்கள். நாங்கள் இறங்கி உள்ளே போனோம். பையர் மடத்தின் அலுவலகத்துக்குப் போய் பேசிவிட்டு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையின் சாவியை வாங்கிக்கொண்டு வந்தார். அறையில் போய் விழுந்தோம்.