Pages

Monday, March 31, 2008

வழி-2



பலனை எதிர்பாக்காதேன்னா அனேகமா யாருமே அப்படி செய்ய மாட்டாங்க. யாரா இருந்தாலும் எதோ ஒரு பலன் - விளைவு நடக்கும்ன்னுதானே வேலை செய்யறோம். அத எதிர் பாக்காதேன்னு சொன்னா யார் வேலை செய்வாங்க?
ஒரு வேலையை செய்யலாம், செய்யாம விடலாம் அல்லது வேற மாதிரி செய்யலாம். அதுக்கு உனக்கு அதிகாரம் இருக்கு! ஒரு போதும் பலன்ல அதிகாரமில்ல.
பலன் இப்படிதான் இருக்கணும்னு சொல்கிறத்துக்கு நமக்கு அதிகாரம் இல்ல. ஏன்னா பலன் நம்ம மட்டுமே பொருத்தது இல்ல. நேரம், இடம், நாம் செய்யற வேலைல பங்கு இருக்கிற மத்தவங்க எப்படி என்ன செய்யறாங்க இதெல்லாம் வருது இல்லையா?

நாம நல்லா படிச்சு பரீட்சை எழுதலாம். அதை திருத்தறவருக்கு அது சரியா போய் சேரனும். அவர் அப்ப நல்ல மூட்ல இருக்கனும். ஏதாவது பக்கத்தை பாக்காம விட்டுடக்கூடாது. மார்க் கூட்டி போடறது சரியா இருக்கனும். அத சரியா கணினில பதியனும். நம்ம மார்க் வந்து சேரத்துக்குள்ளே இப்படி எவ்ளோ விஷயம் இருக்கு?

எதுவுமே இப்படித்தான் இருக்கணும்ன்னு நினைக்கிறப்போதான் நமக்கு பிரச்சினை வருது. நடக்குமோ நடக்காதோன்னு தூக்கம் கெட்டு போகுது. நடக்கலேனா என்ன செய்யறதுன்னு ரொம்ப யோசனை செய்ய ஆரம்பிக்கிறோம். நினைச்சபடி நடக்கலைனா அதுக்கு தடையா இருந்தது எதுவோ, அது மேல கோபம் வருது. அதப்பத்தி ஒண்ணும் செய்ய முடியலைனா விரக்தி வருது.

நம்மால முடிஞ்ச வரை செஞ்சோம். அப்புறம் அவன் விட்ட வழின்னு யார் நினைக்கிறாங்களோ அவங்க அவ்வளவு கஷ்டப்பட மாட்டாங்க. மனசு அமைதியா இருப்பதாலே அவரால வேலையை நல்லாவே செய்ய முடியும்.

முன் காலத்துல இந்த கர்மாங்கிறதை அவரவர் ஜாதிக்கு ஏற்பட்ட கர்மான்னு சொன்னாங்க. அதுவும் முக்கியமா யாகங்கள், ஹோமங்கள், பூஜைகள் இதையே சொன்னாங்க. அது ஒரு காலம். அப்பல்லாம் ஒருத்தர் வேலையை வேறு ஒருத்தர் செய்ய மாட்டாங்க. மத்தவங்க வேலையை பறிச்சு கொள்ளக் கூடாதுன்னு ஒரு கட்டுப்பாடு. இப்ப பல வருஷங்களா இது அடிபட்டு போயாச்சு. மகாபாரத காலத்துலேந்தே ஜாதி கலப்பு ஏற்பட்டு போயாச்சு. பல வேலைகள் காணாமப்போச்சு. பல புது வேலைகள் வந்தாச்சு. அதனால இப்ப இத எப்படி எடுத்துக்கிறது?
பகவான் எதோ ஒரு வேலைல இப்ப நம்மள கொண்டு வெச்சிருக்கான் இல்லையா அந்த கர்மான்னு எடுத்துக்கணும்.

நாம செய்யற வேலையை சிறப்பா செய்யனும். முழு ஈடுபாட்டோட திறமையோட, கவனத்தோட செய்யனும். எந்த பலன் கிடைச்சாலும் சரி, இது பகவான் நமக்கு கொடுத்தது ன்னு எடுத்துக்கணும். அது நாம் நினைச்சதுக்கு மேலே இருக்கலாம்; நாம் நினைச்சபடியே இருக்கலாம்; குறைவா இருக்கலாம்; இல்லை வேற மாதிரியே இருக்கலாம். எதானாலும் அதை அப்படியே ஏத்துக்கணும்.

இது கர்மா வழி.

அடுத்து எந்த வழி?
கடலூர் பண்ணுருட்டி வழியா சென்னை.

Friday, March 28, 2008

வழி1-2



4. அப்படிப்பட்ட அறிவு எல்லாருக்கும் இல்லை. தனக்கு மீறின சக்தி இருக்குன்னு எல்லாரும் அனுபவத்தாலே ஒத்துக்கிறது சுலபம். அதுக்கு கடவுள்ன்னு ஒரு பேர் கொடுத்து வழி படறது சுலபம். கடவுளுக்கும் நமக்கும் இருக்கிற தொடர்பை மனசு சொல்றபடி நிர்ணயம் பண்ணுவது சுலபம். இப்படியே போகிற போது நாம் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிடுவோம்.

ஆனா எனக்கு தெரிஞ்ச யாரும் இப்படி முன்னேறக்காணோமே?

கொஞ்சம் கம்மிதான். ஆனா இல்லாம இல்லை. நாம் பாக்கிறதும் இல்லை. இப்ப சாதாரணமா இருக்கிறது பக்தி இல்லை. பயம்/ ஆசை. முன்னே எல்லாம் கடவுள் தப்பு பண்ணா தண்டிப்பாரோ ங்கிற பயம் இருந்தது; இது கொஞ்சம் கொஞ்சமா போயிடுச்சு. தப்பு பண்ணிட்டு கோவிலுக்கு போய் நிறைய பூஜை எல்லாம் பண்ணி பாவத்தை தொலைச்சுடலாம்னு நினைக்கிறாங்க. அதே போல ஆசை அதிகமாயிடுச்சு. எனக்கு நிறைய காசு வேணும், பதவி வேணும், குழந்தைக்கு ஸ்கூல்ல இடம் கிடைக்கணும், நிறைய மார்க் வாங்கணும் - இப்படியே ஆசை வளந்துகிட்டே போகுது.

இது தப்பா?

தப்பில்லை. ஆசைக்காகதான் முதல்ல கடவுள்கிட்ட வராங்க. இது கொஞ்ச நாள்லேயே ஆசைப்பட்டு இது வேணும் அது வேணும்னு கேக்காத பக்தி ஆகணும்.

இந்த பக்தி வகைவகையா இருக்கா?

இப்ப நான் சொல்றேன். நீங்க கொஞ்சம் நில்லுங்க! (எனக்கு கால் வலிக்குது :-)) பக்திய பத்தி விரிவா இப்ப பேச ஆரம்பிச்சா அது போய்கிட்டே இருக்கும். அதனால மத்தது பத்தி கொஞ்சம் பேசிட்டு திருப்பி வரலாம் சரிதானா?

அடுத்த வழி பாண்டிச்சேரி- ஈசிஆர் வழியா!

வழி-௨

அதுக்கு கர்ம யோகம் ன்னு பேர் வெச்சிருக்காங்க. கர்மான்னா வேற ஒண்ணுமில்லை- வேலை அவ்ளோதான். அதாவது ஒத்தர் செய்யற வேலை வழியாவே தன்னை புரிஞ்சுக்கிறது. இதுலேயும் கடவுள் வராரு. செய்யற வேலையை ஒழுங்கா செய்யுடா; உன்னோட சாமர்த்தியமெல்லாம் காட்டி முடிஞ்சவரை நல்லா செய்யனும். அப்புறம் அத கடவுளுக்கே அர்ப்பணம்ன்னு சொல்லி விட்டுடு. அப்படி செஞ்சா பலன் இப்படி இப்படிதான் இருக்கணும்ன்னு நினைக்க மாட்டே. சுருக்கமா இதுதான் கர்ம யோகம்.

ஓஹோ! கீதைல இததானே சொன்னதா சொல்றாங்க? “கர்மாவை செய். பலனை எதிர்பார்க்காதே

அப்படி நிறைய பேர் சொல்றாங்க. ஆனா அப்படி கிருஷ்ணன் சொல்லவே இல்ல.

பின்னே?

அவன் சொன்னதெல்லாம் “ கர்மாவ செய்ய மட்டுமே உனக்கு அதிகாரம் இருக்கு. பலன் இப்படிதான் இருக்கணும்கிறதுல எப்பவுமே அதிகாரம் இல்ல.”

என்ன பெரிய வித்தியாசம்?

நாளன்னைக்கு பாக்கலாம்!

Tuesday, March 25, 2008

வழி 1



இப்ப சிதம்பரத்திலேந்து சென்னை போகணும்.
சுலபமா பாண்டிச்சேரி போய் ஈசிஆர் வழியா போகலாம்.
பாண்டிச்சேரி பெர்மிட் இல்லாத டாக்ஸியா? கடலூர், பண்ணுருட்டி போய் திண்டிவனம் வழியா போகலாம்.
அல்லது பாண்டிச்சேரி போய் திண்டிவனம் போய் போகலாம்.
எப்படி போனாலும் சேருகிற இடம் சென்னைதான்.

அத போல இந்த எல்லா வழிகளும் போய் சேருகிற இடம் ஒண்ணேதான்.

1. பக்தி வழி:
நம்ம எல்லாருக்கும் நல்லா தெரிஞ்சவழிதான் இது. நம்மை மீறிய, எல்லாம் வல்ல சக்தியை கடவுள் ன்னு ஒரு பெயர் கொடுத்து சொல்றோம். அவருக்கு எந்த பேர் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதுக்குன்னு ஒரு தனி வழி பாட்டு முறை இருக்கலாம். அந்த கடவுளுக்கு ஒரு புராண கதை இருக்கலாம். நெறைய கோவில்கள் இருக்கலாம். நடைமுறைகள், திருவிழாக்கள், பூஜைகள், தேரோட்டங்கள் ...பெரிய கடல் இது!

நில்லுங்க! நில்லுங்க!
என்னங்க?
நீங்க என்ன சொல்லி ஆரம்பிச்சீங்க? நம்மை நாமே அறிஞ்சுக்கிறதுதானே?
ஆமா.
நம்மை நாமே புரிஞ்சுக்கனுமா இல்லையா? அதுதாங்க ஆன்மீகம்.” அப்படின்னுதானே ஆரம்பிச்சீங்க?
ஆமான்யா ஆமா!
பின்ன இப்ப கடவுள் அப்படின்னு ஆரம்பிச்சா என்ன அர்த்தம்?
நாம்தான் கடவுள்னு அர்த்தம்!
என்னது?
ஆமாம். நாமும் கடவுளும் ஒண்ணுதான். நாம பிரம்மத்தின் வேற வேற வெளிப்பாடுதான்.
தலைய சுத்துதே!
அதுக்குத்தான் லெவல் ஜம்ப் பண்ணக்கூடாதுங்கிறது. நீங்க சொல்லவச்சுட்டீங்க.
நீங்க சென்னை போகணும்னு சொன்னீங்க. சரின்னு நான் பாண்டிச்சேரி பக்கம் வண்டிய திருப்பறேன். இது ஒரு வழிங்க. இது எப்படி இருக்குன்னு பாருங்க. பிடிச்சா வச்சுப்போம். இல்லாட்டா... அடுத்த வழி சரி படுதான்னு பாப்போம்.
பிரம்மம் என்கிற புரிதல் மட்டம் வேற. அது ஞான யோகம். மனிதன் கடவுள் ங்கிற மட்டம் வேற. அது பக்தியோகம். ஒண்ணாங்கிளாஸ் படிச்சுட்டுதான் ரெண்டாங்கிளாஸ் போகணும். கோவில்ல, ஒரு சிலைல, படத்துல, கடவுளை பாக்க ஆரம்பிச்சு மெதுவா முன்னேறி எல்லா உயிர்களிலும் கடவுளை பாக்க ஆரம்பிச்சு பின்னால எல்லாத்துலேயும் பாக்க ஆரம்பிச்சா சரியான முன்னேற்றம் னு சொல்லலாம். இதுவே மேலே மேலே போய் நாமும் எல்லாமும் ஒண்ணுன்னு கொண்டுவிடும்.

சரி அப்படினா ஏன் பக்தி யோகம்? எல்லாரும் ஞானத்துக்கு போனா என்ன?

Sunday, March 23, 2008

நான் யார்?


2. நான் யார்?

இந்த கேள்விக்கு விடை காண முயற்சி பண்ணுவதே ஆன்மீகம்.
நான் இந்த உடம்புதானேங்க, இதென்ன கேள்வி அப்படீங்கிறீங்களா?

காலம் காலமாக நம் பேச்சு பழக்கத்தில் இருக்கிறது பெரும்பாலும் சரியாகவே இருக்கும். சாதாரணமாக என்ன சொல்லுறோம்? இது என் பென்சில் ,இது என் புத்தகம். அப்போ பென்சிலும் புத்தகமும் நான் இல்லை. நான் வேற என் பென்சில்/ புத்தகம் வேற. அதே போல என் கால் என் கை என்கிறோம். என் உடம்பு வலிக்குது என்கிறோம். அப்ப நாம் வேறு நம் உடம்பு வேறதானே?

ஒருவர் இறந்து போகிறார். நாம துக்க படுகிறோம். அவர் இருந்தார் இப்ப இல்லை என்கிறோம். ஆனால் அந்த உடம்பு இங்கேதானே இருக்கு? உயிர் பிரிஞ்சு போளதால “அவர்” போயிட்டார் என்கிறோம். அப்ப “அவர்” அந்த உடம்பு இல்லை. போன உயிர் என்றது எது? அது எங்கே போச்சு?

ஒரு வேளை மனசுதான் நாமா? “நான் நினைக்கிறேன், அதனால் இருக்கிறேன்” என்று சில அறிஞர்கள் சொல்றாங்க. மனசு புத்தி என்று ரெண்டாக சொன்னாலும் ரெண்டும் ஒரே விஷயத்தின் வேறு வேறு பக்கம்தான். உணர்வுகள் மேலோங்கி சலனப்பட்டால் அது மனசு. சலனமில்லாமல் செயல்படுவது புத்தி.

நாம் தூங்கும் போது என்ன ஆகிறது. மனதின் செயல் என்ன?
தூக்கத்தில ரெண்டு நிலைகள். ஒன்று கனவு காண்கிற நிலை. இதை சொப்னம் என்கிறோம். இதில் மனசு ஏதேதோ நினைக்கிறது. நனவில் நடக்க முடியாத பல விஷயங்களை நடப்பதாக நினக்கிறோம். அப்போதைக்கு அது நிரம்பவே நிஜமாகவே தோணுது. கனவுதான் என்ற உணர்வோட யாரும் கனவு காணலை. அப்படி ஒரு வேளை உணர்ந்தா அது ஒரு தற்காலிகமான விழிப்புதான். காண்கிற விஷயம் சலனமானதால புத்தியும் இல்ல.

ரெண்டாவது ஆழ்ந்த தூக்கம். இதுல கனவு இல்ல. அதனால மனசும் செயல்படல. காண்கிற, அறிகிற விஷயம் இல்ல. அதனால புத்தியும் இல்ல.

இந்த சமயம் நாம இருக்கிறோமோ இல்லையோ? நாம் இல்லைன்னா எங்கே போனோம்? எங்கிருந்து திரும்பி வந்தோம்?
தூங்கி எழுந்து “ஒண்ணுமே தெரியாம சுகமா தூங்கினேன்” அப்படின்னு சொல்றோமே அந்த சுகம் அனுபவிச்சது யார்?

இருக்கோம்ன்னா மனசு நாம இல்ல. அப்ப நாம் யார்?
உடம்பு மனசு/புத்தி அல்லாத ஏதோதான்.

இந்த மனசு அல்லாத புத்தி அல்லாத உடம்பு அல்லாத நம்மை தெரிஞ்சுகிறது எப்படி?

அதற்கு நம் பெரியவங்க ஒரு நாலு வழி போட்டு கொடுத்துருக்காங்க.

ஏன் நாலு இருக்கணும்னு கேட்டா மனுஷன் குணங்கள் வேற வேற. புத்தி கூர்மை வேற வேற. சிலரால ரொம்ப யோசிக்க முடியாது. சிலரால சும்மா உக்காந்து ஆராய்ச்சி செய்ய முடியாது. நிறைய பேரால மனச அடக்க முடியாது. மூச்சு பிடிக்க முடியாது.
அதனால நாலு வழிகள்.
நமக்கு தகுந்தா போல ஒரு வழியை தேர்ந்து எடுத்துக்கலாம்.
எல்லாமே கடேசில போற இடம் ஒண்ணுதான். அது எப்படின்னா.....

Thursday, March 20, 2008

விஞ்ஞானத்துக்கு எல்லாம் தெரியுமா?


1.

சீரியஸா உள்ளே போகும் முன் ஒரு விஷயத்தை பாத்து விட்டு போனால் கொஞ்சம் நல்லது. நமக்கு புரிதல் கொஞ்சம் சுலபமா இருக்கும்.

விஞ்ஞானத்தின் வரையெல்லை:

சாதாரணமாக ஆன்மீகம் பத்தி பேச்சுவரும்போது சிலர் சொல்லுவது என்ன என்றால் "நான் விஞ்ஞானத்தைதான் நம்புவேன். நீங்க சொல்ற ஆன்மீகத்துக்கு என்ன விஞ்ஞான ஆதாரம் இருக்கு?" என்பதுதான். இதை நாம் கொஞ்சம் யோசனை செய்து பாக்கணும். என்ன யோசனை?

விஞ்ஞானத்துக்கு எல்லாம் தெரியுமா?

சுமார் 105 வருஷம் முன்னால ஆகாய விமானம் கிடையாது. அப்போ மனிதன் பறக்க முடியும்னு சொன்னவங்களை கேலி செஞ்சாங்க. 1903 ல முதல் ஆகாய விமான பறத்தல் நடக்கும்வரை “இது விஞ்ஞான பூர்வமாக முடியாது” அப்படிதானே சொன்னாங்க? இப்ப? ஆகாயம் என்ன, விண் வெளியிலேயே பறக்கிறோம்.
விஞ்ஞானம் ஒரு விஷயம் இருக்குன்னு நிரூபிக்க முடியும். ஒரு கம்பியில் ஒரு கருவியை பொருத்தி இதோ பார் மின்சாரம் பாய்கிறது ன்னு சொல்லலாம்.
ஆனால் விஞ்ஞானம் ஒரு விஷயத்தை இல்லைன்னு நிரூபிக்கவே முடியாது. இது ஒரு சங்கடம். அந்த அந்த காலகட்டத்தில் இருக்கிற கருவிகளை வைத்துதானே பாக்கிறோம்? விஞ்ஞானம் வளர வளர புதிய கருவிகள் வந்து இதுவரை தெரியாததெல்லாம் இப்போ இருப்பதா சொல்லுதுங்க. வரலாற்றை பார்த்தா ஒரு காலகட்டத்தில் இல்லாததா நினைச்சதெல்லாம் பின்னால இருப்பதா நிரூபிச்சு இருக்காங்களே!

இன்றைய விஞ்ஞானத்துக்கு எல்லாம் தெரியும்னா புதிய கண்டுபிடிப்புகளே வரமுடியாது. ஏன்னா நாளை வரக்கூடியது எல்லாம் இல்லைனு இப்பவே தெரியுமே? ஓட்டை வாதம்னு நினைக்கிறீங்களா? தலைய பிச்சுக்க தோணுதா? விஞ்ஞானத்துக்கு இப்பவே எல்லாம் தெரியும்னு நினச்சா இப்படித்தான் தப்பா முடிவு வரும்.

விஞ்ஞானத்துக்கு நிறையவே தெரியலாம். ஆனால் எல்லாம் தெரியமுடியாது. எல்லாம் தெரிஞ்சுக்க வேன்டிய உபகரணங்களோ உணரக்கூடிய சக்தியோ நமக்கு இல்லாம இருக்கலாம். எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் வரும் வரை நிறைய விஷயங்கள் தெரியாமல் இருந்தது இல்லையா? வரும் காலத்தில என்ன என்ன கண்டுபிடிப்புகள் வந்து நம்மை ஆச்சரியத்துல ஆழ்த்துமோ தெரியாது. அப்போ இப்ப கிடையாதுங்கிற பல விஷயங்கள் இருப்பதா தெரிய வரலாம். ஆக கேள்விக்கு என்ன விடை?

விஞ்ஞானத்துக்கு எல்லாமே தெரியாது என்பதே விடை.

கடவுள் இருக்கிறார் என்பது வெறும் நம்பிக்கைதான் என்கிறார்கள். கடவுள் இல்லை என்பதும் நம்பிக்கைதான். என்ன ஆதாரம் இருக்கு? இப்ப இருக்கிற விஞ்ஞான உபகரணங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால இல்லாமலே போகாது என்பதத்தான் இப்ப தெரிஞ்சு கொண்டோமே. கடவுள் இருப்பதா ஆதாரம் இல்லை; அதனால ஆதாரம் வரும் வரை நான் நம்ப மாட்டேன் என்று சொல்கிறதுல அர்த்தம் இருக்கு. கடவுள் இல்லை, இல்லவே இல்லைன்னு சொல்கிறதுல அர்த்தம் இல்லை.

ஆன்மீகவாதி அனுபவத்தால் கடவுளை பாத்தாலும் பாத்து விடலாம்; உணர்தாலும் உணரலாம். நம்பிக்கை திடப்படும். விஞ்ஞானத்தை மட்டுமே நம்புகிறவர்கள் எப்போதுமே நம்பிக்கையில்தான் இருக்க வேண்டும்.
இரண்டு நாள் கழித்து அடுத்ததை பாப்போம்!
வரட்டா?

ஏன் இந்த பெயர்?


இந்த பக்கங்களுக்கு வந்ததுக்கு நன்றி!

இந்த பதிவுகள் ஆன்மீகத்தில் கொஞ்சம் தெரிஞ்சு கொண்டு மேல தெரிஞ்சு கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்குதான். அல்லது உணர்வுகளை தள்ளி வச்சு புத்தி பூர்வமா யோசனை செய்ய முயற்சி செய்யரவங்களுக்குத்தான்.
முடிந்தவரை எளிதா புரிய வைக்கிற முயற்சில நான் தோத்துப்போனா தயங்காம கேளுங்க. புரியலைன்னு தெரிஞ்சு கேட்கிறவங்க தெரிஞ்சு கொள்ள வாய்ப்பு இருக்கலாம். கேட்காட்டா புரியாமலே இருப்போம்.

ஏன் இந்த பெயர்?

சில பேர் ஏன் இப்படி பெயர் வெச்சு இருக்குன்னு நினைக்கலாம். கண்ணபிரான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் னே எழுதி இருக்கார்.
ஆங்கிலத்துல for dummies என்கிற புத்தகங்கள் பிரபலம். மிக எளிதாக பலருக்கும் புரியும்படி கொஞ்சம் நகைச்சுவையோடவே எழுதுவாங்க. ஒவ்வொரு புத்தகம் எழுதறது வேற வேற நபரா இருந்தாலும் இதே மாதிரிதான் இருக்கும். கணினி சமாசாரத்துக்கு ஆரம்பிச்சது இப்ப சொடோகு வரை வளந்து இருக்கு. டம்மீஸ்.காம் போய் பாருங்க!

இதுதான் எனக்கு எளிதா எழுத ஒரு ஊக்கம். அப்படி எழுதறேனா இல்லையா என்பதை மத்தவங்கதான் சொல்லணும்! குறைஞ்ச பட்சம் முயற்சி பண்ணுகிறேன்.
டம்மீஸ் என்கிறதால இது மத்தவங்களை இழிவு படுத்தறதில்லை. தயவு செய்து அப்படி யாரும் நினைக்க வேணாம். அது என் நோக்கம் கிடையாது.
டம்மீஸ் அப்படினே பேர் வைக்கலை. ஏன்னா அது எதாவது காப்புரிமை அது இதுன்னு அனாவசிய சிக்கல்ல கொண்டு விடுமோ, ஏன் வம்புன்னுதான். அதனால பேரை கொஞ்சம் மாத்தி இருக்கேன்.
சரி அப்ப உள்ளே போகலாமா?