Pages

Friday, November 30, 2012

மழை பெய்ய ப்ரார்த்தனை!


Description: http://agnihot3.googlepages.com/tata.jpg

தமிழ் நாட்டில் மழை இல்லாமல், காவிரியில் இருந்து வர வேண்டிய நீரும் வராமல் எல்லோரும் கஷ்டப்படுவது எல்லாரும் அறிந்ததே. நிலத்தடி நீரையும் பயன்படுத்த முடியாமல் மின் வெட்டு இருக்கிறது.  அரசியல் மூலம் இதற்கு தீர்வு ஏற்பட முடியுமா என்பது சந்தேகமே. மூன்று புயற்சின்னங்கள் உருவாகியும் 25% கூட நீர் தேவை பூர்த்தி ஆகவில்லை, மேலும் மழை இல்லாவிட்டால் பயிர்கள் கருகிவிடும்.  நாம் இருக்க வேண்டிய படி இருப்பதில்லை. இயற்கையை எப்படி குறை சொல்வது?

இயற்கையையோ, கர்நாடகத்தையோ திட்டிக்கொண்டு இராமல் நம்மால் இதற்கு என்ன செய்ய முடியும் என்று யோசிப்பதே நல்லது. இதை குறித்து வலையில் தேடிய போது கிடைத்த சில விவரங்களை பகிர்ந்து கொள்கிறேன். தங்களால் இயன்றதை செய்து தெரியப்படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன்.

http://vaidhikasri.blogspot.in/2010/04/blog-post_2558.html

மழை பெய்விக்க பல வழிகள் இருக்கின்றன, அக்னிஹோத்ரிகள் காரீரி இஷ்டி என்பதைச்செய்தால் மழை பெய்யும் என்கிறது ச்ரௌதம், 
அது 40 நாள் சமாசாரம். பெருத்த செலவும் ஆகும் காரியம். செய்யக்கூடியவர்களும் அரிது. சாத்தியக்கூறு மிகக்குறைவே.

வேதம் கற்றவர்கள் பர்ஜன்ய சாந்தி (வருண ஜபம்) செய்தால் மழை பெய்யும் என்கிறது ஸ்ம்ருதி,
 
இதற்கு கொஞ்சம் வாய்ப்பு இருக்கிறது. முயன்று பார்க்கலாம்.

மஹாபாரதத்தில் விராடபர்வா பாராயணம் செய்தால் மழைபெய்யும் என்கிறது புராணம்,
 
வட மொழி வல்லுனர் யார் வேணுமானாலும் செய்யலாம். முடியாவிட்டால் தமிழிலேயும் பாராயணம் செய்யலாம்.

நீர் நொச்சி ஸமித்தால் கணபதி ஹோமம் செய்தால் மழை பெய்யும் என்கிறது தந்த்ர சாஸ்திரம்,

ஒரு ராகத்தைப் பாடினால் மழை பெய்யும் என்கிறது ஸங்கீத சாஸ்த்ரம்,
 
அமிர்த வர்ஷணி. கீழுள்ள சுட்டிகள் ஒன்று காட்டும் பக்கத்தில் விவரம் இருக்கிறது.

ஆலயங்களில் நந்திக்கு ஜலம் கட்டுதல் போன்றவற்றைத் தெரிவிக்கிறது ஆகம சாஸ்திரம்,

ஆழ்வார்களின் பாடல்களை பதிகங்களை பாடுவதால் மழைபெய்யும் என்கின்றன தமிழ் வேதங்கள்,
கீழே கொடுத்துள்ளேன்.
இவைகள் அனைத்துமே மழைபெய்யச்செய்யும் சக்திவாய்ந்தவை, அவரவரின் சக்திக்குத் தக்கவாறு மழைக்காக மேற்கூறியவற்றைச் செய்யலாம்,

இவை எதுவும் தெரியாதவர்கள், அவரவர் வீட்டிலோ ஆலயங்களிலோ இந்த வருஷம் உரிய காலத்தில் தேவையான அளவு மழை பெய்ய வேண்டும் என்று மனமுறுகி பகவானிடம் ப்ரார்த்தனை செய்யலாம். இதற்கு பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

உபதேசம் பெற்றவர்கள் மழை வேண்டி தினசரி ஆயிரத்தெட்டு காயத்ரி ஜபம்  செய்யலாம்.

வைணவர்களுக்கு:

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்;
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில்
ஆழிபோல்மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

விளக்கம்:- கடல் போன்ற பெருமை படைத்த கண்ண பெருமானே! நீ எதையும் மறைத்து வைக்காதே! கடல் நீரை முகந்து மேலே எழுந்து செல். திருமாலின் மேனி போல உருவத்தில் கருமை கொள். எழில் நிறைந்த பத்மநாபன் சக்கரம் போல மின்னி, வலம்புரி சங்கு போல் முழங்கு. பெருமானின் வில்லில் இருந்து எழும் அம்பு மழை போல உலகம் வாழவும் நாங்கள் மகிழ்ந்து மார்கழி நீராடவும் காலம் தாழ்த்தாமல் மழை பொழிவாய்!   

http://tinyurl.com/cb3cy8e

 http://temple.dinamalar.com/news_detail.php?id=13184
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் திருப்புன்கூர் என்னும் சிவத்தலம் உள்ளது. இக்கோயிலுக்குரிய நிபந்தங்களில் முக்கியமான குறிப்பு ஒன்று உள்ளது. மழை பெய்ய12 வேலி நிலமும்(84ஏக்கர்) மழை நிற்க 12 வேலி நிலமும் காணிக்கையாக ஒரு அடியார் இக்கோயிலுக்கு எழுதி வைத்துள்ளார். இத்தலம் குறித்து சுந்தரர் பாடியருளிய தேவாரத்தில் இக்குறிப்பு காணப்படுகிறது. 

http://tinyurl.com/bm7voak

வையக முற்று மாமழை மறந்து
    வயலில் நீரிலை மாநிலந் தருகோம்
உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன
    ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
    பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும்
செய்கை கண்டுநின் திருவடி யடைந்தேன்
    செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

என்பது அத்தேவாரப் பாடல்.
{வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, இவ்வூரிலுள்ளவர், ` உலகமுழுதும் நிரம்பிய மழையின்மையால் வயலில் நீர் இல்லையாயிற்று ; மிக்க நிலங்களை உனக்குத் தருவோம் ; எங்களை உய்யக்கொள்க ` என்று வேண்ட, ஒளியைக் கொண்ட வெண்முகிலாய்ப் பரந்திருந்தவை, அந் நிலைமாறி, எங்கும் பெய்த பெருமழையால் உண்டாகிய பெரு வெள்ளத்தை நீக்கி, அதன் பொருட்டு அவர்களிடம் மீட்டும் பன்னிரு வேலி நிலத்தைப் பெற்றருளிய செயலையறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள். }

மழை பெய்யவும் நிற்கவும் இங்கு சிறப்பு வழிபாடும் வழக்கில் இருக்கிறது. அதற்கு திருப்புன்கூர் பதிகம் முழுவதும் பாராயணம் செய்யுங்கள். குறைந்த பட்சம் இப்பாடலை மட்டுமாவது ஓதி வாருங்கள். மாதம் மும்மாரி பெய்து வளம் சுரக்கும்.

திருவாவடுதுறை பக்கதில் உள்ள சாத்தனூர் என்னும் க்‌ஷேத்திரத்தில் ஒரு மகிமை இருக்கிறது. அதை விவரமாக இங்கே காண்க: 

http://aadalvallan.blogspot.in/2012_08_01_archive.html

கைலாசநாதர் கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு ஆலங்கட்டி விநாயகர் என்ற பெயர் வந்த கதை சுவாரஸ்யமானது.மழை இல்லாமல் கஷ்டப்படும் காலத்தில், கோமுகத்தையும், முன் புறத்தையும் அடைத்து விட்டுப் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்வார்கள். பிள்ளையார் மூழ்கும் நேரத்தில் அடைப்பு உடைந்து நீர் வெளியேறிவிடும். மனம் தளராமல் மீண்டும் அடைத்துவிட்டு, அபிஷேகத்தைத் தொடருவார்கள். எங்கிருந்தோ மேகங்கள் திரண்டு வந்து மழை கொட்டித் தீர்த்து விடும். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்த காஞ்சி காமகோடி பெரியவர்கள், இந்த அதிசயத்தைப் பார்த்துவிட்டுப் பரவசமடைந்தார்களாம். ஆலங்கட்டி மழை யாகப் பெய்ததால்  பிள்ளையாருக்கு ஆலங்கட்டி விநாயகர் என்று பெயர் வைத்து விடும்படி சொன்னார்களாம். அதன்படியே இன்றும் அப்பெயராலேயே, விநாயகப் பெருமான் அழைக்கப் படுகிறார்.

மழை பொழிய ஆண்டவனை வேண்டுவோம். வேறு வழியில்லை.


Description: http://agnihot3.googlepages.com/saint.jpg


Wednesday, November 21, 2012

ரொம்பவே கோளாறான எண்ணங்கள்

 
சமீபத்தில் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருந்தபோது சில விஷயங்கள் கவனத்துக்கு வந்தன. ஒரு அம்மணி வித்தியாசமான சிகித்சை கொடுக்கிறார். ஒருவரின் ஆழ் மனத்தின் நிலையை அறிய அவரை ஒருவித தூக்கத்தில் ஆழ்த்துகிறார். அதிலிருந்து நபரின் நடப்பு மனம் சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறார். பேட்டியில் அவர் சொன்னது சுவாரசியமாக இருந்தது. அவரிடம் வரும் முக்காலே மூணு வீச நபர்கள் குடும்பத்தில் இறுக்கம் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு என்பதற்கே வருகிறார்கள். ஆழ் மனத்துடன் தொடர்பு கொண்டு விசாரிக்கும் போது கொஞ்சம் கோளாறான சமாசாரம் தெரிகிறது. இப்போது மனைவியாக இருப்பவர் முந்தைய ஜன்மத்தில் கணவனாக இருந்து இப்போதைய கணவன் மனைவியாக இருந்து அவளை படுத்திய கொடுமைகளை இப்போது கணவன் செய்ய பழி தீர்க்கப்படுகிறது.

ஒண்ணும் புரியலையே?

இப்போதைய மனைவி முந்தைய ஜன்மத்தில் கணவன்.

இப்போதைய கணவன் முன் ஜன்மத்து மனைவி.

முன் ஜன்மத்திலே கணவன் மனைவியை கொடுமை படுத்தினார். கர்மாவை சேர்த்துக்கொண்டார்.

இப்போது அந்த கணவன் மனைவியாக இருந்து அதன் எதிர் வினையை அனுபவிக்கிறார்.

அப்பாடா! புரிஞ்சுதா?

உதாரணத்துக்குத்தான் சொன்னேன். இது மனைவி கணவனை கொடுமை செய்ததாகவும் இருக்கலாம்.

அது சரி, ஏன் போன ஜன்மத்துல அந்த கணவன் மனைவியை கொடுமை படுத்தினார்? அதுக்கும் இதே காரணம்தான். போன ஜன்மத்துக்கு முன் ஜன்மத்தில இவர் மனைவியா இருந்து...புரியுது இல்லே?

இது ஒரு விஷஸ் சைக்கிள்.

ஒத்தர் ஒருவரை கொடுமைப்படுத்துவதும் அவர் திருப்பி அடுத்த ஜன்மத்தில இடம் மாறி கொடுமை படுத்துவதும் அதுக்கு அடுத்த ஜன்மத்தில் இவர் திருப்பி கொடுமை படுத்துவதும்... எங்கேயாவது இது முடியணும்.

அந்த பெண்மணி என்ன சிகித்சை கொடுக்கிறாங்கன்னு தெரியலை!

இதை கேட்ட பிறகு வழக்கம் போல நம்ம மூளை கோளாறா வேலை செய்ய ஆரம்பிச்சது. முன் ஜன்மத்து சமாசாரம் இப்பவும் நம்மை துரத்தறது தெரிஞ்சதுதான். அதை வாசனை என்பாங்க. ஒரு விஷயத்தை செய்ய செய்ய அதுவே பழகிபோய் சும்மாவான அதையே செய்ய தூண்டிக்கொண்டு இருக்கும். ஒத்தரோட சண்டை போட்டுகிட்டே இருக்கிறதும், சும்மா சும்மா குத்தம் கண்டுபிடிக்கிறதும் இந்த வகையை சேர்ந்ததுதான். பழகிப்போன விஷயம். லேசில விடாது. ஜன்ம ஜன்மமா பின் தொடரும். இருந்தாலும் புத்தியை பயன்படுத்தி இதை கட்டுக்கு கொண்டு வரலாம். நம்ம புத்திக்கு தெரிஞ்சேதானே இது நடக்குது? ம்ம்ம்ம் …. மனசு சலனங்களுக்கு இடம் கொடுக்க இது நடக்கும். மாறாக புத்தி என்கிற நிலைக்கு மனசை கொண்டு வர நல்லது கெட்டது ஆராய்ஞ்சு அது செயல்படும். அதனால இதைப்பத்தி யோசிச்சு இது வேண்டாம், நிறுத்தணும்ன்னு முன்னேயே தீர்மானமா முடிவு பண்ணிட்டா புத்தி அந்த செயலை நடக்க விடாது.

இரண்டாவதா கர்மா என்கிற முன் ஜன்ம வினைகளுக்கு எதிர்வினை இப்ப கிடைக்கிறப்ப அந்த அம்பை எய்த ஆசாமியை நொந்து பிரயோசனமில்லை. இப்ப நமக்கு கிடக்கிற பூச்செண்டுகளுக்கும் செங்கற்களுக்கும் நாமேதான் காரணம். தீதும் நன்றும் பிறர் தர வாரா....

இது இரண்டும் புத்தி பூர்வமா புரிஞ்சாச்சுன்னா அடுத்து ஒரு பயிற்சிக்கு போகலாம். அமைதியா ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து உட்கார்ந்து பயிற்சியை தொடங்கலாம். போன ஜன்ம சமாசாரம் எதுவும் நமக்கு தெரியாது. அதனால அதை ஒட்டு மொத்தமா அப்புறம் பார்க்கலாம். இந்த ஜன்மத்தில நடந்ததை நினைவுக்கு கொண்டு வரலாம். நினைவு இருக்கிற சின்ன வயசிலேந்து... சின்ன வயசுல நம்ம அடிச்ச ஆயாலேந்து.... ஒவ்வொண்ணா முடிந்த வரை ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நினைவுக்கு முழுக்க கொண்டு வருவோம். மறந்திருந்தோம்ன்னா பரவாயில்லை. பலதுக்கும் நாம அப்ப செய்த குறும்புகளோ தவறுகளோதான் காரணம்ன்னு இப்ப தெரியும். சிரிப்பே கூட வரும்! ரைட், ஆனா அந்த சமயத்துல நமக்கு என்ன ஆத்திரம் கோபம் வந்தது? என்ன செய்யறேன் பார் ன்னு சொல்லிட்டு இயலமையோட சும்மா இருந்திருப்போம். அதை நினைவுக்கு கொண்டு வந்த பின்னால இதையும் நினைவுக்கு கொண்டு வரலாம்: “முன்னாலே நான் செய்த செயல்களே - கர்மாவே- அந்த துன்பத்துக்கு காரணம். ஆகவே இந்த நபரை நான் மன்னித்துவிடுகிறேன்.”

மனப்பூர்வமா மன்னிச்சுடுவோம்.

மனப்பூர்வமா செய்தோமா என்கிறது பின்னால இந்த விஷயத்தை நினைவுக்கு கொண்டு வந்தா உணர்ச்சிவசப்படாம "ஆமா, அப்படி நடந்தது" ன்னு சொல்வதில இருக்கும்! இப்படியே ஒவ்வொரு விஷயமா நினைவுக்கு டெலிபரேட்டா கொண்டு வந்து மன்னிச்சு விட்டுடுவோம்.

அதே போல நாம செய்த தவறுகளை நினைவுக்கு கொண்டு வந்து மனசார மன்னிப்பு கேட்டுடுவோம். பாதிக்கப்பட்ட நபர் உயிரோட இல்லைன்னாலும் பரவாயில்லை. அந்த தவறுகளுக்கு எப்படியும் எதிர்வினை வரும். அதை ஏற்றுக் கொள்கிறேன்ன்னு சொல்லி விடுவோம்.

இதெல்லாம் ஒரே செஷன்ல முடியலைன்னாலும் பரவாயில்லை. ஒரே நேரத்தில பல உணர்ச்சி வசப்படற சமாசாரங்கள் தாங்க முடியாம இருக்கலாம். தொடர்ந்து பல செஷன்ஸ்ல முடிக்கலாம்.

அப்படி செய்த பின்னே....

ஸ்லேட்டை துடைச்சாச்சு! இனி மனசு லேசாக இருக்கும்! வாழ்கையை அமைதியா எதிர் கொள்ளலாம்!

விதியா மனித முயற்சியா? -3-

 
ஸ்வாமி: இது தெரியாது என்பதனால் நாம் ஆணியை பிடுங்க முயற்சி செய்யாமல் இருக்கிறோமா? அல்லது முயற்சி செய்து தேவையான அளவு பலத்துடன் இழுப்புக்களை அதிகரித்து பிடுங்கப்பார்க்கிறோமா?

சீடன்: நிச்சயமாக யதார்த்தவாதிகளாக நாம் பின்னால் சொன்னதைத்தான் செய்வோம்.

அதேதான். அதே வழியை உங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் செய்யுங்கள். முடிந்த வரை செயல் படுங்கள். உங்கள் மனத்திண்மை இறுதியில் வெல்ல வேண்டும்.

முடிந்த வரை முயற்சி செய்தும் அடைய முடியாத பல விஷயங்கள் இருக்கின்றனவே?

அங்கேதான் தவறு செய்கிறீர்கள். எதோ ஒன்று இருக்கிறது என்றால் அதன் இயல்பு அதை அனுபவிக்க முடிவது. உண்மையில் பெற முடியாதது என்று ஒன்றுமே இல்லை. ஆனால், இந்த கால கட்டத்தில் நம் குறைவுள்ள திறன் முதலியவற்றால் இப்போதைக்கு சிலது அடைய முடியாமல் போகலாம். ஒரு விஷயம் கிடைப்பது கிடைக்காதது என்பது அதை சார்ந்தது அல்ல. அது நம் கிடைக்க நாம் செய்யும் முயற்சி, நம் திறனை பொருத்தது.

முயற்சியில் வெற்றியோ தோல்வியோ கிடைப்பது அதன் முடிவில்தான் தெரிகிறது. இப்போதைக்கு நமக்கு இருக்கும் திறனை வைத்துக்கொண்டு ஒரு விஷயத்தை அடைய முயற்சி எடுக்கலாமா வேண்டாமா, எடுக்கலாம் எனில் எவ்வித முயற்சி வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்வது?

உங்கள் கேள்வி நியாயமானதே! நமது தர்ம சாத்திரங்களின் முழு நோக்கமே உங்கள் கேள்விக்கு விரிவாக விடை அளிப்பதுதான். அவை நம் திறனை, தகுதி ஆகியவற்றை ஆராய்ந்து இன்னின்ன செயல்களுக்கு உங்களுக்கு அதிகாரம் இருக்க்றது என்று சொல்கின்றன. இந்த செயல்களும் ஏராளமாக இருக்கின்றன. அதே போல மனிதர்களின் தகுதி திறன் ஆகியவையும் மிகவும் வேறுபடுகின்றன. மதத்தின் முக்கிய நோக்கமே மனித முயற்சி என்பதை வரைப்படுத்தி செயல் செய்பவருக்கு குறைந்த தீமையும் அதிக பலனும் கிடைக்கும் வகையில் திருப்பி விடுகிறது. இப்படிப்பட்ட வரை செய்யப்பட்ட செயல் ஸ்வதர்மம் எனப்படுகிறது. மதம் மனிதனின் முயற்சிகளை கட்டிப்போடவில்லை. அவனை சுதந்திரமாக செயல்பட விடுகிறது. அதே சமயம் எது அவனுக்கு நல்லது எது அவனுக்கு கெட்டது என்பதை சொல்லுகிறது. அதன் பின் அவன் எதை செய்வானோ அதற்கு அவனே பொறுப்பு. விதி மேல் பழியை போட்டுவிட்டு தப்பிக்க முடியாது. அது அவனே உருவாக்குவது. கடவுள் மீதும் பழி போட்டு தப்பிக்க முடியாது. அவர் செயல்களுக்கு பலனை அளிப்பவர், அவ்வளவுதானே? உங்கள் எதிர்காலத்தை நீங்களேதான் நிர்ணயிக்கிறீர்கள். அதை நல்லதாக அமைத்துக்கொள்வதோ அல்லது வீணாக்குவதோ உங்கள் கையில்தான் இருக்கிறது. இதுவே உங்கள் உரிமையும் பொறுப்பும் ஆகும்.

இது எனக்குப் புரிகிறது. ஆனால் என்ன செய்வது? நான் என் ஸ்வாதீனத்தில் இல்லை. உதாரணமாக ஒரு செயல் கெட்டது என்பது எனக்குத்தெரிகிறது. அதே சமயம் அதை செய்யும்படி பலமாக தூண்டப்படுகிறேன். அதே போல ஒரு விஷயம் நல்லது என்று புத்திக்குத் தெரிகிறது; ஆனால் அதை செய்ய முடியாதவனாக இருக்கிறேன். ஆகவே ஏதோ ஒரு சக்தி என்னை சுதந்திரமாக என் விதியை நான் நிர்ணயித்துக்கொள்ள செயல் பட விடாமல் தடுப்பதாக தோன்றுகிறது. அது ஊழ் வினையைத்தவிர வேறு ஏதாக இருக்கக்கூடும்?

Tuesday, November 20, 2012

இயல்பாக வாழுங்கள்!


அலுவலகம் செல்லும் மனிதர் ஒருவர் இருந்தார். அவர் வாழ்கை நிம்மதியாகவே போய்க்கொண்டு இருந்தது. தினசரி குறித்த நேரத்துக்கு அலுவலகம் கிளம்புவார். சற்று தூரத்தில் இருந்தாலும் நடந்தே அலுவலகம் போவார். சரியான நேரத்துக்கு போய்விடுவார்.  இதே போல் பல மாதங்கள் நடந்து வந்தது.

ஒரு நாள் அலுவலகத்துக்கு போய்க்கொண்டு இருந்த போது வழியில் பேருந்து நிறுத்தத்தில் இருவர் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அதில் ஒருவர் மற்றவரிடம் சொன்னார், " அதோ போகிறாரே அவர் தினசரி இதே வழியாக அலுவலகம் போகிறார். அவர் இங்கே கடந்து போகும் போது கடிகாரத்தை எட்டே முக்கால் என்று சரி செய்து வைத்துக்கொள்ளலாம். அவ்வளவு துல்லியம்!" இது நம் நண்பர் காதில் விழுந்தது. ஆஹா, இப்படி பேசிக்கொள்கிறார்கள் பார் என்று பெருமை பட்டுக்கொண்டார்.
அடுத்த நாளும் அவர்கள் இருந்தார்கள். "பார்த்தாயா, நேற்று நான் சொன்னது சரிதானே?!" என்று பேசிக்கொள்வது காதில் விழுந்தது. இப்படியே சில நாட்கள் சென்றன.

 ஒரு நாள் வீட்டில் இருந்து கிளம்ப 5 தாமதமாகிவிட்டது. ஐயோ தாமதமாகிவிட்டதே என்ற பதட்டம் தொற்றிக்கொண்டது. கவலையுடன் அவசர அவசரமாக ஓட்டமும் நடையுமாக எட்டே முக்காலுக்கு பேருந்து நிறுத்தத்தை கடந்த பின்னரே பதட்டம் தணிந்தது! நாளடைவில் நேரத்தை பார்ப்பதும் தாமதமாகிவிடுமோ என்று கவலைப்படுவது வழக்கமாகிப்போனது. சீக்கிரத்தில் இது ஒரு அப்ஸஷன் ஆகி ரத்த அழுத்த நோய் வந்து வைத்தியரிடம் போக வேண்டி இருந்தது!

 

Monday, November 19, 2012

விதியா மனித முயற்சியா? -2-

 
ஸ்வாமிகள்: மாற்றாக நீங்கள் முழுக்க முழுக்க மனித முயற்சியில் ஈடு பட வேண்டும்.

சீடன்: அதெப்படி?

நான் சொன்னபடி, ஊழ் வினை என்பது உங்களுடைய முன் ஜன்மங்களில் மனித யத்னத்தால் செய்தவற்றின் விளைவு. உங்கள் மனித முயற்சியை பயன்படுத்தியதால் அதன் விளைவாக சிலது ஏற்பட்டது. அது இப்போது தொடர்கிறது. இப்போது உங்கள் முயற்சியை செய்தால் முன் ஜன்ம வினை கெடுத்க இருந்தால் குறைத்துக்கொள்ளலாம். முன் ஜன்ம வினை நல்லதாக இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம். எப்படி இருந்தாலும் முன் ஜன்ம வினையின் கெடுதலை குறைக்கவோ அல்லது சந்தோஷத்தை அதிகப்படுத்திக்கொள்ளவோ உங்கள் சுய முயற்சியை இப்போது செயலாக்க வேண்டும்.

ஆனால் அப்படி சுய முயற்சி எவ்வளவுதான் நன்கு செய்யப்பட்டாலும் அடிக்கடி தோல்வியில் முடிகிறதே? ஊழ் வினை விளையாடி முயற்சியின் விளைவை தோற்கடித்துவிடுகிறது.

ஊழ் வினை என்பதன் அர்த்தத்தை மறந்துவிட்டு இப்படி பேசுகிறீர்கள். அது ஏதோ வெளியிலிருந்து புதிதாக உள்ளே வந்து செயலாற்றுவதல்ல. மாறாக அது உங்கள் உள்ளேயே இருக்கிறது.

இருக்கலாம். ஆனால் அதன் இருப்பு நம் முயற்சிக்கு அது தடை போடும்போதுதான் தெரிகிறது. அது என்ன என்று தெரியாத போது எப்படி நம் முந்தைய செயலை ஒழித்துக்கட்டுவது?

ஆன்மீகத்தில் மிகவும் முன்னேறிய சிலரைத்தவிர முன் ஜன்மம் என்பது ரகசியமாகவே இருந்து வருகிறது. ஆனால் அது தெரியாமல் இருப்பதே பல சமயம் நல்லதாக இருக்கிறது. ஏனென்றால் இந்த ஜன்மாவிலும் கடந்த எண்ணற்ற ஜன்மாக்களிலும் நாம் செய்தனவும் அவற்றின் செயல்பட காத்திருக்கும் விளைவுகளையும் நாம் அறிந்தோமானால் நாம் அசந்து போய் அவற்றை நீக்கவோ, அவற்றை தாண்டி எதையும் சாதிக்கவோ உற்சாகம் இல்லாமல் போய் விடுவோம். ஏன், இந்த ஜன்மத்திலேயே பலவற்றையும் நாம் மறந்துபோகிறோம். இந்த மறதி கடந்த காலத்தில் நாம் செய்ததையே நினைத்துக்கொண்டு இராமல் இருக்க இறைவன் உவந்து நமக்கு அளித்த நன்கொடை. அதே போல நம் உள்ளிருக்கும் தெய்வீக சக்தியே நம்பிக்கையுடன் ஒளிர்கிறது; நாம் நம்பிக்கையுடன் நம் மனித யத்னத்தை செய்ய உதவுகிறது. கடந்த காலத்தை மறப்பது, எதிர் காலத்துக்கு நம்பிக்கையுடன் இருப்பது என்னும் இந்த இரண்டு வரங்களையும் நாம் சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது.

கடந்த காலத்தை நாம் அறியாதது மனித முயற்சிக்கு சோர்வூட்டாமல் செயலை ஊக்குவிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரத்தில் பல சமயம் அந்த செயல்களுக்கு ஊழ் வினை என்பது மிகப்பெரிய தடையாக இருப்பதை மறுக்க முடியாது.

ஊழ் வினை மனித முயற்சிக்கு தடைகளை ஏற்படுத்துவதாக சொல்வது அவ்வளவு சரியில்லை. மாறாக அது நம் முயற்சிகளை எதிர்ப்பதன் மூலம் குறித்த பலனைப் பெற இப்போது மனித முயற்சி எவ்வளவு தேவை என்பதை தெரிவிக்கிறது. சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட பலனுக்கு ஒரு குறிப்பிட்ட செயல் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால அதை எவ்வளவு தீவிரமாக எந்த அளவு எவ்வளவு முறை செய்ய வேண்டும் என்பது தெரிவதில்லை. முதல் முறை அது வெற்றி அடையவில்லை என்றால் நாம் முன் ஜன்மத்தில் அதற்கு எதிராக வேலை செய்திருக்கிறோம் என்று அறிந்து கொள்ளலாம். அதை முதலில் சரி செய்து விட்டு அதற்கு எதிராக ஈடாக இப்போது நாம் செயலாற்ற வேன்டும் என்று தெரிகிறது. ஆகவே நாம் தடையாக நினைப்பது இப்போது செய்ய வேண்டிய செயலின் அளவையும் தரத்தையும் நிர்ணயிக்க உதவுகிறது.

இது மனித முயற்சியை செய்த பிறகுதானே தெரிகிறது? துவக்கத்திலேயே நம் செயலை சரியாக நடத்த எப்படி உதவும்?

அது துவக்கத்தில் நம்மை வழி காட்ட வேண்டாம். துவக்கத்தில் தடை எதுவும் இருக்கும் என்று நீங்கள் அனுமானித்துக்கொண்டு மனத்தடையை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை.
நம் மனித முயற்சிக்கு தடை ஏதும் இல்லை என்ற மனப்பாங்குடன் அளவற்ற நம்பிக்கை, உற்சாகத்துடன் துவங்குங்கள். ஒரு வேளை வெற்றி கிடைக்கவில்லை என்றால் முன் ஜன்மத்தில் நாம் இப்போது செய்ய முயற்சித்த வேலைக்கு எதிராக வேலை செய்து இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளுங்கள். ஆகவே இப்போது முன்னிலும் அதிகமாக இரட்டிப்பு உற்சாகத்துடன் விடாப்பிடியாக முயற்சியை செய்ய வேண்டும். தடையாக இருப்பது முன்னே நாமே செய்த செயலே என்பதால் அதை சரி செய்வதும் நம்மால் இயலும். அப்படியும் தோல்வியே கிட்டியது என்றாலும் நாம் நிராசைப்பட தேவையில்லை. ஏனெனில் நம் முயற்சியின் விளைவே ஊழ் வினை என்பதால் அது நம் முயற்சியை விட பலமாக இருக்கவே முடியாது. தோல்வி என்பது தற்போதைய முயற்சி முந்தைய ஜன்ம முயற்சிக்கு எதிராக வேலை செய்ய போதுமானதாக இல்லை என்பதயே காட்டுகிறது. வேறு வழியில் சொல்லப்போக இரண்டு தனித்தனி விஷயங்களாக ஊழ் வினைக்கும் மனித முயற்சிக்கு போராட்டம் என்பது இல்லை. நமது முந்தைய செயல்களின் தீவிரத்துக்கும் தற்போதைய செயல்களின் தீவிரத்துக்கும் இடையேதான் பிரச்சினை.

அப்படியே இருந்தாலும் ஒரு திசையில் நாம் செய்யும் நடப்பு செயலுக்கு பின்தானே அது தெரிய வருகிறது


கண்ணுக்கு புலனாகாத அத்ருஷ்டம் என்று சொல்லப்படும் விஷயம் எல்லாவற்றிலும் அப்படித்தான் இருக்கும். உதாரணமாக ஒரு மரத்தூணில் ஒரு ஆணி அடிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் அதை பார்க்கும் போது ஒரு இன்ச் மட்டுமே அது வெளியே தெரிகிறது, மற்றது மரத்துக்குள் போய்விட்டது. எவ்வளவு அது உள்ளே போயிருக்கிறது என்பது நமக்கு புலப்படாத விஷயம். அது அத்ருஷ்டம். தூணை நன்கு வார்னிஷ் போட்டு சாயம் ஏற்றியிருந்தால் அது எத்தகைய மரம் என்றூம் கூட நமக்குத்தெரியாது. அதுவும் அத்ருஷ்டமே. சரி, இப்போது நீங்கள் அந்த ஆணியை பிடுங்க வேண்டும் என்றால் எத்தனை முறை அதை இழுக்க வேண்டும், எவ்வளவு சக்தியுடன் இழுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்ல முடியுமா?

அதை எப்படி நிர்ணயிக்க முடியும்? ஆணி எவ்வளவு உள்ளே போயிருக்கிறதோ அதற்கு ஏற்றாற்போலத்தான் இழுக்க வேண்டிய எண்ணிக்கையும் சக்தியும் இருக்கும்.

உண்மைதான். அது எவ்வளவு உள்ளே போயிருக்கிறது என்பது முன்னே அது எத்தனை முறை அறையப்பட்டது, ஒவ்வொரு முறையும் எவ்வளவு பலத்தை பயன்படுத்தி அறையப்பட்டது என்பதை பொருத்தது. மேலும் மரம் அதை எப்படி தாங்கியது என்பதையும் பொருத்தது.

உண்மைதான்.

அதை பிடுங்க வேண்டி இழுப்பது எவ்வளவு முறை என்பது அது உள்ளே செல்ல எவ்வளவு முறை அறையப்பட்டது ,என்ன பலத்துடன் அறையப்பட்டது என்பதை பொருத்தது.

ஆமாம்.

இப்போது நாம் பார்க்கும் போது இது எதுவும் எவ்வளவு என்று தெரியவில்லை. ஆகவே அது கடந்த காலத்துடையது; அத்ருஷ்டமானது.

ஆமாம்.

இது தெரியாது என்பதனால் நாம் ஆணியை பிடுங்க முயற்சி செய்யாமல் இருக்கிறோமா? அல்லது முயற்சி செய்து தேவையான அளவு பலத்துடன் இழுப்புக்களை அதிகரித்து பிடுங்கப்பார்க்கிறோமா

விதியா மனித முயற்சியா? -4 -

 
நீங்கள் இரண்டு வெவ்வேறு விஷயங்களை ஒன்றாக நினைத்து குழப்பிக்கொண்டு இருக்கிறீர்கள். ஊழ் வினை என்பது நீங்கள் ஏதோ ஒரு சக்தி என்று சொல்வதிலும் வேறானது. உதாரணமாக புதிய கருவி ஒன்றை பயன்படுத்துகிறிர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதலில் மிகுந்த ப்ரயாசையுடன் தட்டுத்தடுமாறிக்கொண்டு பயன்படுத்துவீர்கள். அடுத்த முறை அதை பயன்படுத்தும் போது இன்னும் கொஞ்சம் சுலபமாக அதிகம் தட்டுத்தடுமாறாமல் பயன்படுத்துவீர்கள். அடிக்கடிப்பயன்பதிய பின் வெகு சுலபமாக சிரமம் இல்லாமல் பயன்படுத்துவீர்கள். அதாவது எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் பயன்படுத்துகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு எளிதாக பயன்படுத்துவீர்கள். அடிக்கடி பயன்படுத்த நன்றாக கற்றபின் அதை பயன்படுத்த எண்ணமும் தோன்றும். முதல் முறையாக ஒருவன் திருடும்போது பயந்து கொண்டே மிகப்பிரயாசையுடன் திருடுகிறான். அடுத்த முறை பயமும் பிரயாசையும் குறைந்துவிடும். வாய்ப்புகள் அதிகமாகும்போது திருடுவது பழக்கமாகிவிடுகிறது. சர்வ சாதாரணமாக பிரயாசை அதிகமில்லாமலே திருடுவான். இந்த பழக்கம் தேவையே இல்லாவிட்டாலும் அவ்வப்போது திருடவும் அவனை தூண்டுகிறது. இதைத்தான் வாசனை என்கிறார்கள். உங்கள் இஷ்டத்துக்கு எதிராக செயல்படத்தூண்டுவது இந்த வாசனைதான். இதை நீங்களேதான் உருவாக்கினீர்கள். இது ஊழ் வினை அல்ல. செய்த செயலுக்கு தப்ப முடியாமல் கிடைக்கும் பலன் - துன்ப, இன்பம் என்ற உருவில் கிடைக்கும் தண்டனையோ அல்லது வெகுமதியோ- அதைத்தான் ஊழ் வினை என்கிறோம். அடிக்கடி செய்யும் செயல்கள் மனதில் ஒரு சுவையை, ஒரு சௌகர்யம், ஒரு இயல்பை அடிக்கடி மீண்டும் செய்யும் தன்மையை உண்டு பண்ணிவிடுகிறது. இதுவே வாசனை. ஊழ் வினை கடந்த கால செயல்களுக்கு தப்ப முடியாத வெகுமதி அல்லது தண்டனை என்பதால் அதை தவிர்க்க முடியாது. ஆனால் வாசனையை மனித முயற்சியை சரியாக செய்தால் எளிதாக கட்டுப்படுத்தலாம்.

ஆனால் அப்படிப்பட்ட வாசனைகளும் எண்ணற்றனவாக இருக்கின்றனவே, எப்படி அத்தனை வாசனைகளையும் கட்டுப்படுத்துவது?

வாசனைகளின் முக்கிய இயல்பு எப்போதும் வெளிப்பட்டுவிட முயற்சி செய்வதே. நல்லதோ கெட்டதோ எல்லா வாசனைகளின் இயல்பும் இதுதான். வாசனா சரித் என்னும் இந்த நதியில் நல்லது கெட்டது என்று இரண்டு ப்ரவாகங்கள். முழு நதியையும் அணைபோட்டு நிறுத்தப்பார்த்தால் அது ஆபத்தாக முடியலாம். அதனால் சாத்திரங்கள் அப்படி செய்யச்சொல்லவில்லை. அவை நல்ல வாசனை ப்ரவாகத்துடன் இழுத்த இழுப்பில் போ, கெட்ட வாசனை ப்ரவாகம் இழுத்தால் எதிர்த்து போராடு என்கின்றன. ஒரு வாசனை கிளம்புகிறது என்பது நமக்கு தெரிந்தே நடக்கிறது. அதனால் அது நம்மை ஆள்கிறது என்று சொல்ல முடியாது. நமக்கு புத்தி இருக்கும் வரை அதை ஆதரிக்கலாமா இல்லையா என்று முடிவெடுக்கும் திறன் நமக்கு இருக்கிறது. பயிற்சியால் உங்கள் வாசனைகள் எல்லாவற்றையும் நல்லதாகவே செய்து தவறான வழியில் செலுத்தும் கெட்ட வாசனைகளை ஏறத்தாழ முற்றிலும் நீக்கிவிட்டால் அதன் பின் நல்ல வாசனைகளால் செலுத்தப்படுவதையும் உங்கள் மனித முயற்சியால் நீக்குவதை சொல்ல சாத்திரங்கள் காத்திருக்கின்றன. மெல்ல மெல்ல எந்த வாசனையாலும் உங்களை பாதிக்க முடியாத நிலைக்கு போய்விடலாம். அந்த நிலையில் உங்கள் மனம் சுத்த ஸ்படிகம் போல ஆகிவிடும். குறிப்பிட்ட செயலை செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் ஏதும் இல்லாமல் இருப்பீர்கள். இப்படி கர்மா ஏதும் இல்லாததால் கர்ம வினையும் ஏதும் அண்ட முடியாது. ஊழ் வினை, வாசனை இரண்டுமே காணாமல் போகும். சுதந்திரம் எப்போதும் பூர்ணமாக இருக்கும். அதுவே மோக்ஷம் எனப்படும்.